17
“ஜானு…”
“…”
“ஜானு… இப்ப பொண்ணு தானே பாக்க வர்றாங்க. பேசியா முடிச்சுட்டாங்க. உன் சம்மதம் கேப்பாங்கல்ல. அப்ப பிடிக்கலைன்னு சொல்லிறு… ப்ளீஸ்…”
“அதெல்லாம் ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி. இப்ப அப்படியில்ல. அவங்களே முடிவு பண்ணிட்டாங்க. நாளைக்கு உறுதியாச்சுனா பூ வச்சுருவாங்க!”
“ப்ளீஸ் ஜானு. பயமுறுத்தாதம்மா.”
“நான் பயமுறுத்துறேனா? நானே பயந்துபோய் கிடக்கேன். நீங்க என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது. நாளைக்கு யாரும் என்னை பொண்ணு பாக்க வரக்கூடாது! யார் முன்னாடியும் என்னால போய் நிக்கமுடியாது.” எதிர் முனை அழுகைக்குத் தாயாராவது தெரிந்தது.
அவளது கலக்கம் இவனையும் தொற்றிக் கொண்டது. இதுவரை பெண்தானே பார்க்க வருகிறார்கள். பார்த்துக் கொள்ளலாம் என தைரியமாக இருந்தான். ஆனால் இவள் சொல்வதைப் பார்த்தால் எல்லாம் முடிவு பண்ணி விட்டார்கள் போலவே.
“அழாத ஜானு. எனக்கும் கஷ்ட்டமாருக்கு. ஒரே நாள்ல நான் என்ன பண்ண முடியும்?”
“யோவ்… ஒரு நாளா? அஞ்சு வருஷம்.” அழுகைக்கான முகாந்திரம் போய் இப்பொழுது குரலில் கோபம் துளிர்த்தது.
அவளும் எத்தனை நாள் தான் படிப்பை காரணம் காட்டி சமாளிப்பது. இந்த வருடத்தோடு படிப்பும் முடிகிறது. முன்பானால் பணி உயர்வு வரட்டும் என்றான். அதற்கும் சரியெனக் காத்திருந்தாள். இப்பொழுது பணி உயர்வும் வந்துவிட்டது. கார் கூட வாங்கிவிட்டான். இடம் வாங்க முன் பணமும் கொடுத்து வைத்திருக்கிறான். இந்த வயதில் இதுவே அதிகம். இன்னும் செட்டிலாக என்ன வேண்டும் என்ற கேள்வி அவளுக்கு.
ஆனால் ராகவனுக்கோ தன்னிறைவாக தன்னிடம் இருப்பதைக்காட்டிலும் ஜானகி குடும்பத்தினரிடம் அதிகப்படியாக இருப்பதே அவனை தயங்கச் செய்கிறது. ஆண் வாரிசு இல்லாத சொத்து. கணக்குப் போட்டு பெண்ணை மயக்கிவிட்டான் என பேசவும் வாய்ப்பிருக்கிறது.
“மெசேஜ் பண்ணது, கால் பேசினதுன்னு எல்லாமே நான் தான் முதல்ல பண்ணினேன். ஆனா, நீங்க என்னடான்னா பொண்ணு கேக்க கூட இவ்ளோ தயங்குறீங்க. நாளைக்கு வேற ஒருத்தன் என்னைப் பாக்க வர்றானேங்குற சின்ன பொசசிவ்னஸ் கூட உங்ககிட்ட இல்ல!” வெகுண்டவள் குரல் தளுதளுத்தது.
“ஜானு… எனக்கும் அதை நெனச்சா நெருப்புல நிக்கிற மாதிரித்தாம்மா இருக்கு. எப்படியும் இந்த முறை மாமாகிட்டப் பேசுறேன்” என்றவன் தண்டபாணி தன்னை நோக்கி வருவதைப் பார்த்து,
“ஜானு, மாமா வர்றாங்க. நான் அப்பறம் பேசுறேன்!” அவசரமாக அழைப்பை துண்டிக்க…,
“யோவ்…யோவ்… வெள்ளப்பனியாரம். சிக்குற அன்னைக்கி இருக்கு உனக்கு!” கொலை வெறியோடு சூளுறைத்தது எதிர்முனை.
“இங்க என்ன மாப்ளே பண்ற? அங்க முடியிறக்க உன்னைத் தேடுறாங்க பாரு!” முடியெடுக்க தாய்மாமனைத் தேட அங்கு ராகவனைக் காணாமல் தண்டபாணியே மச்சானைத் தேடிக்கொண்டு வந்துவிட்டான். கூட்டத்தைவிட்டு விலகி நின்று அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தான்.
நேரில் பேச முடியாதே. நேற்று மாலை இவன் பழனி வந்ததிலிருந்து வெறும் பார்வை பரிமாற்றம் மட்டுமே இருவருக்குள்ளும். அதில் இவன் கெஞ்சுவதும் அவள் முறைத்ததும் தான் அதிகம். அதுவும் யார் பார்வையிலும் பட்டுவிடுமோ என பயந்து பயந்து. ஒன்றிரண்டு கூட்டமா. எதுக்குதான் இப்படி கூட்டத்தை கூட்டுறாங்களோ. தனியா ஒருவார்த்தை பேச முடியல. உள்ளூர அலுத்துக் கொண்டான். அவன் கவலை அவனுக்கு. நீயும் இந்த வீட்லதான் ராகவா பெண்ணெடுக்க ஆசைப்படுற. அதை மனசுல வச்சு பேசு. உள்மனம் எச்சரித்தது.
“இதோ வர்றேன் மாமா!” என்றவன் மனமேயில்லாமல் மாமனைப் பின்தொடர்ந்தான். அங்கு எட்டத்தில் நின்றவள் பார்வை அவனை எரித்தது. கண்களாலே மன்னிப்பை யாசித்தான்.
அவனுக்குத் தைரியம் இல்லாமல் இல்லை. ஒரு வேளை அக்காவை கட்டிக் கொடுக்காமல் இருந்திருந்தால் துணிந்து பெண் கேட்டிருப்பானோ என்னவோ! பெண் கொடுத்த வீடு என்பதால் தான் பெண் கேட்க அத்தனை தயக்கம். அட லூசே! உங்க அக்காவ கல்யாணம் பண்ணி கொடுத்ததாலதான் அவ உனக்கு முறையே. அதை மறந்துட்டு பேசாதே என்றது மனசாட்சி.
முதன் முதலாக அவனுக்கு மெசேஜ் போடுவதில் ஆரம்பித்து ஃபோனில் பேசியது வரை எல்லாம் முன்னெடுத்தது ஜானகியே. எப்படி நம்பர் கிடைத்தது என்றெல்லாம் கேட்கவே தேவையில்லை. கலையரசி தொட்டு எல்லாரிடமும் இவனது கைபேசி நம்பர் இருக்கிறது. அதனால் நம்பர் எடுப்பது ஒன்றும் அத்தனை சிரமமில்லை. இவள் தான் பேசிப் பேசியே அவனது தயக்கத்தை உடைத்திருந்தாள். ஒவ்வொரு தடவையும் இவன் அவளது குறுஞ்செய்திகளுக்கும், கைபேசி அலைப்பிற்கும் பதிலளிப்பவனாகவே தான் இருந்தான். இவனாக ஒரு பொழுதும் அழைத்ததில்லை. குட்மார்னிங் தொடங்கி குட்நைட் சொல்லி முடிப்பது அவள்தான். சாப்டீங்களா, என்ன பண்றீங்க, எங்க இருக்கீங்க போன்ற ஒன்னுக்கும் உதவாத பேச்சுக்கள் தான்.
தொடர்ந்து இரண்டு நாட்களாக அவளிடமிருந்து குறுந்தகவலோ, அழைப்போ எதுவுமே வராமலிருக்க சில மணி நேரங்கள் தான் அவனால் சாதாரணமாக கடக்க முடிந்தது. அதன் பிறகு அவனுக்கு வேலை ஓடவில்லை. நொடிக்கொரு தரம் கைபேசி திரையைத்தான் பார்வை தொட்டு மீண்டது.
அப்பொழுது அவன் வேலை பார்த்தது செங்கல்பட்டு மாவட்டத்தில். எந்த அழைப்பு வந்தாலும் அவளோ எனத்தான் எண்ணம் ஓடியது. மாலைக்குள் தவித்துப் போனான் என்றுதான் சொல்ல வேண்டும். அவனே அறியாமல் அவனது ஆழ்மனதை அவள் ஆக்கிரமித்திருக்கிறாள் என்பதை அவன் உணர்ந்த தருணம் அது. இவன் தான் அந்தஸ்து பேதம் எனும் பொய்த்திரை போட்டு மனதை மூடி வைத்திருந்திருக்கிறான்.
மறுநாளும் எந்த மெசேஜும் வராமலிருக்க இவனே அழைத்துவிட்டான். அன்றுதான் இவனே முதன் முறையாக அவளை அழைத்தது. ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என வந்தது. சற்று நேரம் கழித்து அழைக்க மீண்டும் அதே பதில். அன்று முழுவதும் இதையே தான் நூறு முறையாவது கேட்டிருப்பான். அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை. உடன் தங்கியிருக்கும் நண்பர்கள் எண் கூட வாங்கி வைக்கவில்லையே என தன்னையே நொந்து கொண்டான்.
அவளுடைய எண்ணையே இவனாக வாங்கவில்லை, அவள் தான் முதலில் அழைத்தது என்பது அப்பொழுது எங்கே உரைத்தது. வேலை முடிந்து வந்தவனுக்கு அதற்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. அவள் பழனி சென்றிருக்கிறாளா, திண்டுக்கல்லில் ஹாஸ்டலில் தான் இருக்கிறாளா என்றுகூட தெரியாமலே உடனே கிளம்பிவிட்டான். விடியும் முன் ஹாஸ்டல் முன் வண்டியில் வந்து நிற்பவனைப் பார்த்து அதிர்ந்தவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.
ஆம்! அவனது வண்டியில்தான் வந்திருந்தான். பஸ், ட்ரெயின் என எதையும் யோசிக்கவில்லை. தூரத்தைக் கூட கணக்கில் கொள்ளாமல் சட்டென வண்டியில் கிளம்பிவிட்டான்.
தூக்கமில்லாமல் வண்டி ஓட்டி வந்ததில் சிவந்த கண்களோடு தலை கலைந்து நின்றவனைப் பார்க்க இவளுக்குதான் படபடத்து வந்தது. இவ்வளவு அதிகாலையில் வந்திருக்கிறான் என்றால் என்னவோ ஏதோ என பயந்துவிட்டாள். அவளது அலைபேசிதான் இரண்டு நாட்களாக செயலிழந்து விட்டதே.
ஃபோனில் தகவல் சொல்ல முடியாததால் நேரில் இவனை அனுப்பி வைத்திருக்கிறார்களோ. போகும் வழியில் தன்னையும் அழைத்துப் போக வந்திருக்கிறானோ? தாத்தாவுக்கா, ஆச்சிக்கா… வீட்டில் வேறு யாருக்காவதா என கற்பனை கண்டமேனிக்கு ஓடியது. படபடப்பில் கைகால் கூட நடுங்கியது. ஒரு நிமிடத்தில் அவளை பதட்டத்தின் உச்சியில் ஏற்றி வைத்தான்.
“ஏன் கால் பண்ணல?” அவளைப் பார்த்தவுடன் கேட்டது அதைத்தான். புரியாமல் பார்த்தாள்.
“ரெண்டு நாளா ஏன் மெசேஜ், கால் எதுவும் பண்ணல. உனக்கு எதுவும் இல்லையே?” என்று படபடத்தவனை அட லூசே என்பதுபோல் பார்த்து வைத்தாள்.
பின்னே குத்துக் கல் போல் கண்முன் நிற்பவளைப் பார்த்து உனக்கு எதுவும் இல்லையே எனக் கேட்டால். ஃபோன் பண்ணாததற்கா இப்படி அடித்துப் பிடித்து காலையிலேயே ஹாஸ்டல் முன் வந்து நிற்கிறான் என்று நினைத்தாலும் ஒரு பக்கம் மனம் கும்மாளம் போட்டது.
இத்தனை நாட்களாக இவளே ஃபோன் செய்த போது அவன் பதில் மட்டுமே பேசிக் கொண்டிருக்க, நமக்கு மட்டும் தான் அவன் மீது ஆசையோ என்று கூட சந்தேகம் வந்தது. நாம் தான் வெக்கம்கெட்டு வலிய போகிறோமோ என்று கூட சிலசமயம் தன்மானம் தலைதூக்கியது. ஆனால் அது அப்படியில்லை என இப்பொழுது கண் முன் வந்து நிரூபித்தான். அவனுக்குள்ளும் தன்னுடைய தாக்கம் இருப்பதை பெண் உணர்ந்த தருணம் அது.
“ஃபோன் தண்ணில விழுந்துருச்சு. சர்வீஸ் கொடுத்திருக்கேன்” என்ற பிறகுதான் ஆசுவாசமானான்.
“உன் ஃபோன் தானே தண்ணில விழுந்துச்சு. ஃப்ரெண்ட்ஸ் கிட்ட வாங்கிப் பேசியிருக்கலாம் தானே?” என்று கேட்க, அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தவள், “எதுக்காம்” என்றாள் அசட்டையாகவே.
இப்பொழுது அவனே தேடி வந்ததில் சற்று சீண்டிப்பார்க்க தோன்றியது. எத்தனை நாட்களாக நழுவிக் கொண்டிருந்தான். சிக்கினடீ மாப்ளே! உள்மனம் குத்தாட்டம் போட்டது.
அதானே… எதுக்காம்… ஃபோன் எடுக்கவில்லை என்றால் என்ன ஆகிவிட்டது. அதற்காக ஏன் இவ்வளவு பதட்டப்பட வேண்டும். இவ்வளவு தூரம் இரவு என்பது கூட புத்தியில் உரைக்காமல், அதுவும் வண்டியில் இவளைத் தேடி ஏன் வரவேண்டும். தனக்குதானே கேள்வி எழுப்ப, அந்த பதட்டம் அவள் இரண்டு நாட்களாக இவனிடம் பேசாததால் வந்த பதட்டமல்ல என்பது மட்டும் திண்ணமாக புரிந்தது. அவளது குரலை கேட்காததால் வந்த பதட்டம். அவளுக்கு என்னவோ ஏதோ என்ற பயம் கொடுத்த பதட்டம்.
அதன் பிறகு தூக்கம் கெட்டு வந்தவனைப் பார்க்க இவளுக்கு தான் ஒரு மாதிரியாகிவிட்டது. அவனை காத்திருக்கச் சொல்லிவிட்டு, அறைக்கு சென்று இரவு உடையை மாற்றி வந்தாள். அது ஹாஸ்டல் மாதிரி இல்லாமல் வீடு மாதிரி தான் இருந்தது. தோழிகள் நான்கு பேர் சேர்ந்து வாடகைக்கு எடுத்து தங்கியிருக்கிறார்கள். அவர்களே சமைத்தும் சாப்பிட்டுக் கொள்வதுண்டு. பெண்கள் இருக்கும் அறைக்கு அவனை அழைத்துப் போக முடியாதென வெளியே அழைத்து சென்றாள். காஃபி வாங்கிக் கொடுத்து, அறையெடுத்து தங்கி ஓய்வெடுத்துவிட்டு தான் வண்டியை எடுக்க வேண்டுமென பிடிவாதமாக அறை எடுத்து தங்கவைத்தாள்.
அன்றே அவளது கை பேசியும் சர்வீஸ் முடித்து கைக்கு வந்தது. அறையெடுத்து சற்று நேரம் தூங்கி ஓய்வெடுத்து கிளம்பியவனை, தொடர்ந்து பயணிக்க விடாமல் ஆங்காங்கே நிறுத்தி இளைப்பாற விட்டு வழி நெடுக அவளது குறுந்தகவல்கள் தான் வழிநடத்தியது.
வரும் பொழுது இருந்த பதட்டம் கடந்து, இப்பொழுது மனமெங்கும் இனம்புரியா ஒரு பரவசத்துள்ளல். ஏதோ ஆரம்பகட்ட ஈர்ப்பில் சிறுபிள்ளைத் தனமாகப் பேசுகிறாள். விபரம் தெரிந்து தெளிந்துவிடுவாள் என்று நினைத்திருந்தவனுக்கு, இரண்டு நாட்கள் அவள் ஃபோன் பண்ணவில்லை என்றதும் இரவு என்றும் பாராமல் வண்டியில் வந்த தன்னுடைய செயலை நினைத்து தான் சிறுபிள்ளைத் தனமாக இருந்தது. தலை கோதி தனக்குதானே சிரித்துக் கொண்டான். முத்திரிச்சு என்றது மனசாட்சி. நிதானமாகவே வண்டியைச் செலுத்தி மனம் கொள்ளா சந்தோஷத்தோடு அந்த நீண்ட பயணத்தை உல்லாசபயணம் போலவே அனுபவித்து வந்து சேர்ந்தான்.
அடுத்து அவனுக்கு பதவி உயர்வோடு வேலை மாற்றம் கிடைத்தது திண்டுக்கல் தான் என்றாலும் ஒரு முறை கூட நேரில் சந்திக்க முயற்சி செய்ததில்லை. அதுதான் மூன்று மாதத்திற்கொரு முறை இவர்கள் பக்கம் ஏதாவதொரு விசேஷம் வந்து விடுமே. தண்டபாணி திருமணம் முடிந்து பார்த்தி திருமணம். அடுத்து அவன் மனைவிக்கு வளைகாப்பு. அடுத்தடுத்து இலக்கியா வளைகாப்பு, குழந்தைக்கு முதல் முடி எடுக்க, அடுத்து ஏதாவது இவர்கள் வழியில் நல்லது கெட்டது என எந்த விசேஷம் என்றாலும் என்னால் அலைய முடியாதென, இவன் பக்கத்தில் இருப்பதால் சுகந்தி இவனைத்தான் போகச் சொல்லிவிடுவார்.
அதனால் எப்படியும் ஜானகியை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். அதனால் தனியாக சந்திக்க இருவருமே மெனக்கெட்டதில்லை. இப்படியே நான்கு வருடம் ஓடிப்போயிற்று.
இப்பொழுது அவர்கள் இருக்குமிடம் சரவணப்பொய்கை.
சென்னையில் நகை, துணிமணியெல்லாம் எடுத்து அம்மாவிடம் கொடுத்துவிட்டு திண்டுக்கல் வந்துவிட்டான்.
தண்டபாணி குடும்பம் சுகந்தியோடு இரண்டு நாட்களுக்கு முன்பே பழனி வந்துவிட, சீனி குடும்பம் ஒரு நாள் முன்புதான் வந்திறங்கினர். ராகவன் நேற்று இரவுதான் பழனி வந்து சேர்ந்தான். அப்பொழுதே வீடு நிறைந்திருந்தது.
“என்ன மாப்ளே! தாய்மாமனே இப்ப தான் வர்றே.” யாரோ வரவேற்று இவனை கேள்வியும் கேட்டார்கள். இவனுக்கு தான் யாரென்று தெரியவில்லை. வேலையிருந்ததாக பதில் சொன்னான்.
“போங்க் ஆஃபிசருக்கு நாலு மணிக்கு மேல என்ன வேலை. இங்க இருக்க திண்டுக்கல்லருந்து வர இம்பூட்டு நேரமா?” என்று கேட்டு,
“எல்லாம் மாப்ளே முறுக்கு” என்று கேலி வேறு செய்தார்கள். ‘அட போங்கய்யா! முறுக்காவது, அதிரசமாவது’ உள்ளுக்குள்ளே அலுத்துக் கொண்டான். வேலை முடிந்து கிளம்பித்தானே ஆறு மணிக்கெல்லாம் வந்து நிற்கிறான்.
அங்குதான் ஜானகியும் இருந்தாள் அண்ணன் மகன் புவனேஷோடு விளையாடிக் கொண்டு. அங்கு எப்படி ராகவன் செல்லமோ, இங்கு வந்துவிட்டால் ஜானகிதான் அவனது செல்லம். அவளை வால்பிடித்துக் கொண்டேதான் திரிவான்.
ராகவன் மடியில் புவனேஷை அமர்த்தி முடியெடுக்க அமைதியாக இருந்தான். அந்த சுகத்தில் அவனுக்கு கண்கள் கூட சொருகியது. முடியெடுத்து முடிய அவனை குளிக்க வைக்க இலக்கியா சென்றுவிட,
அடுத்து பூமிகாவிற்கு எடுப்பதற்குள் எல்லாரையும் ஒரு வழி பண்ணிவிட்டது ஒரு வயது குழந்தை.
“அண்ணி நீங்க போங்க. நான் இவனை குளிக்க வைக்கிறேன்” என வந்தவளிடம்,
“ம்ஹும்… அம்மாதான் குளிக்க வைக்கணும்” என புவனேஷ் அடம்பிடிக்க,
“நீ போய் பாப்பாவைப் பாரு ஜானு” என்று அனுப்பி வைக்க,
“அத்தைன்னு வருவேயில்ல. அப்ப வச்சுக்கிறேன்டா உன்னை” என்று அவனை இருபக்கமும் கன்னத்தைப் பிடித்து ஆட்டிவிட்டே சென்றாள்.
ராகவன் மடியில் குழந்தையிருக்க, கத்தி பட்டுவிடாமலிருக்க அழுதாலும், அசையவிடாமல் இவளும் சேர்ந்து அழுத்திப் பிடித்துக் கொண்டாள். ராகவன் கையோடு சேர்த்து தான்.
ஒரு வழியாக முடியெடுத்து முடிப்பதற்குள் இருவருக்கும் வியர்த்து விருவிருத்துவிட்டது.
இருவரையும் குளிக்க வைத்து தலையில் சந்தனம் அப்பி, புதுத்துணி உடுத்தி அனைவரும் மண்டபம் வந்து சேர்ந்தனர். அங்கு வைத்துதான் காது குத்தும், விருந்தும்.
காது குத்தி முடிய அவரவர் செய்முறைகளை நகையாகவோ பணமாகவோ செய்தனர்.
சுகந்தி, “ஜானு, அந்த காப்பரிசி எடுத்து எல்லாருக்கும் கொடுத்துறுமா” என்றார். ஊறவைத்த பச்சரிசியில் வெல்லம், எள்ளு, பொடியாக நறுக்கிய தேங்காய்ச் சில் கலந்த காப்பரிசியும் மாமன் வீட்டு சீர்வரிசையில் முக்கிய இடம்பெறுமே.ஈ
அனைவருக்கும் கொடுத்து வந்தவள் ராகவனும் அங்கிருக்க, கொடுக்காமலே கடந்து சென்றுவிட்டாள்.
“ஜானு, மாப்பிள்ளைக்கி கொடுக்கல பாரு!” பக்கத்தில் யாரோ அழைத்து சொல்ல,
“உங்க மாப்பிள்ளைகிட்ட கேட்டாத்தான் கிடைக்கும்னு சொல்லுங்க சித்தப்பா!” வெடுக்கென சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டாள்.
*****
மண்டபத்திலிருந்து வீடு திரும்பியிருந்தனர். கலையரசி, வழக்கம் போல் மண்டபத்திலிருந்து எடுத்து வந்ததை, இரவுக்கு தங்கள் தேவைக்கு வைத்துக் கொண்டு, மீதியை அக்கம் பக்கம் பட்டுவாடா பண்ண ஆரம்பித்தார்.
சின்னவள் மட்டும் காது குத்தியதில் நைநையென இலக்கியா இடுப்பை விட்டு இறங்கவேயில்லை.
தண்டபாணி பிள்ளைகள், பார்த்தி பிள்ளைகள், சீனி பிள்ளைகள் மற்றும் விசேஷத்திற்கு வந்த நண்டு சிண்டுகள் என வீடே நிறைந்திருக்க ஒரே காட்டு கத்தல்தான் ஓடியாடி விளையாடுகிறேன் எனும் பெயரில். அலுப்பில் வந்த பெரியவர்கள் சற்று நேரம் கூட கண்ணசர முடியவில்லை.
பெருமாள்சாமிக்கு தன்னை மீறி திருமணம் செய்து கொண்டானே என்ற கோபம் இன்றளவும் மகன் மீது ஒரு ஓரத்தில் கொஞ்சமே கொஞ்சம் ஒட்டிக் கொண்டுதானிருக்கிறது. மகனை தண்டிப்பதாக எண்ணிக் கொண்டு மகனிடம் பேசாமல் ஒதுங்கியிருந்தார்தான். ஆனால் பேரன் பேத்திகள் ஊருக்கு வந்துவிட்டால் அதெல்லாம் போன இடம் தெரியாது. அவர்கள் தான் அவரது உலகம் என்பதுபோல் மாறிவிடுவார்.
சகலைகளும், மச்சான்களும், மச்சினிகளும் பின்வாசலில் குழுமியிருக்க கலகலப்பிற்கு பஞ்சமேது. கேலியும், சிரிப்பும், கும்மாளமும் தான். பழனி அனைவருக்கும் டீ எடுத்து வந்தாள். அவள் டம்ப்ளர்களில் ஊற்றி வைக்க, ஜானகி அனைவருக்கும் எடுத்து கொடுத்தாள்.
“என்ன பழனி… நாளைக்கு என் கொளுந்தியாவ பொண்ணு பாக்க வர்றாங்க. அந்தப் பிள்ளைகிட்ட போய் வேலை வாங்குற?” சீனி நையாண்டி செய்ய,
“இந்த டீ எடுத்து கொடுக்கறதுல உங்க கொளுந்தியா களைச்சு போயிறுவாளாக்கும். அவ்வளவு அக்கறை இருந்தா நீங்க எடுத்து கொடுக்க வேண்டியதுதானே?”
“கொளுந்தியாளுக்காக இதுகூட செய்ய மாட்டேனா? என்ன கொளுந்தியாளே மாப்ள ஃபோட்டோ பாத்தியா? புடிச்சுருக்கா?” சீனி கொளுந்தியாளை வம்பிழுக்க,
உண்மையாகவே இந்த திருமணத்தில் ஆர்வமிருப்பவளாக இருந்தால், “போங்க மாமா!” என வெட்கத்தில் சிணுங்கியிருப்பாள். அவள் தான் மாப்பிள்ளை யார் என்றுகூட கேட்டு தெரிந்து கொள்ளவில்லையே.
ராகவனும் அங்கிருக்க, “பாத்தேன் மாமா. மாப்ள சூப்பரா இருக்காங்க. எனக்கு ரொம்ம்ப்ப்ப புடிச்சிருக்கு!” என அழுத்தம் கொடுத்து சொன்னாள் ராகவனை பார்த்தவாக்கில். பார்த்தவனுக்கும் உள்ளுக்குள் கோபம் கிளர்ந்தது.
“அப்போ நாளைக்கே பேசி முடிச்சறலாமா? எல்லாரும் இருக்கும் போதே பேசி முடிச்சறலாம்” என்றான்.
அதை அனுசரித்து தானே எல்லாரும் இருக்கும் பொழுதே பெண் பார்க்கும் படலத்தை ஜானகி அப்பா ஏற்பாடு செய்திருந்தார்.
ஆளாளுக்கு ஒரு பக்கம் இருக்கிறார்கள். அடிக்கடி வரமுடியாது. எப்படியும் காது குத்திற்கு எல்லாரும் வந்துதானே ஆகவேண்டும். அதனாலே இப்பொழுது பெண் பார்க்கும் ஏற்பாடு செய்யப்பட்டது.
“பெரியவங்க எது செஞ்சாலும் எனக்து முழு சம்மதம் மாமா? ஒரேடியா இந்த வாரமே கல்யாணத்தையும் முடிச்சுட்டாக் கூட எனக்கு சம்மதம் தான். நீங்களும் சும்மா சும்மா அலைய வேண்டாம் பாருங்க!” உண்மையை சொல்கிறாளா பகடி செய்கிறாளா என பிரித்தறிய முடியாவண்ணம் இருந்தது அவள் பேசியவிதம்.
“கொளுந்தியா எல்லாத்துக்கும் ரெடிதான் போல?” என்று கேலி பேசி சிரிக்க,
அதுவரை பொறுமை காத்தவன், பட்டென எழுந்துவிட்டான். அதற்கு மேல் அவனுக்கு அங்கே இருப்பு கொள்ளவில்லை. ராகவனை வெகுவாக சீண்டிவிட்டது ஜானகி பேச்சு.
“என்ன ராகவா? அதுக்குள்ள எழுந்துட்ட?”
“ஒன்னுமில்ல பாஸ்!” என்றவனிடம்,
“நான் கூட நீ எந்திரிச்ச வேகத்தைப் பார்த்து அவசரமா எங்கேயும் கிளம்பப் போறீயோன்னு நெனச்சேன்! நாளைக்கும் லீவுதானே ராகவா? நாளைக்கு தான் மறுவிருந்து” என்றான்.
அவன் விருந்து சாப்பிடும் மனநிலையிலா இருக்கிறான். சட்டென அவனுக்குள் ஒரு வேகம் பிறக்க, தண்டபாணியிடம் திரும்பினான்.
“மாமா உங்கிட்ட கொஞ்சம் பேசணும்!” அவனை நேருக்கு நேராகப் பார்த்து சொன்னான்.
சீனி, தண்டபாணி மற்றும் பார்த்தி குடும்பம் தவிர விசேஷத்திற்கு வந்த இன்னும் சிலரும் அங்கு கூடியிருந்தனர்.
“எதுவா இருந்தாலும் நாளைக்கு பேசலாம் மாப்ளே!” என்றான்.
“இல்ல மாமா. இப்பவே பேசணும்.”
“அப்படியென்ன முக்கியமான விஷயம் ராகவா?” சீனியும் என்னவென்று கேட்க,
“எனக்கு ஜானகியப் பிடிச்சிருக்கு மாமா. அதனால நாளைக்கு பொண்ணு பாக்க வர்றவங்கள வரவேண்டாம்னு சொல்லிருங்க.” தீர்க்கமாகச் சொன்னவனை சுற்றிலும் இருந்தவர்கள் வித்யாசமாகப் பார்த்தனர்.

Nirmala vandhachu 😍😍😍
Welcome dear 🥰🍫
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Epavum pola ivandan vanga poran ..pone ivanuku than parthurpangalo.
யார் கண்டது… பாக்கலாம்மா… பொண்ணு யாராக்குன்னு…😉😂
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
ivan tan mapillai?
😉😉😁🫣
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Ennavo Raghavanukku theriyama plan panni irukkankalo?
nice epi
ராகவா உனக்கு தான் அதிர்ச்சி காத்திருக்கு போல ,மாப்பிள்ளை நீ தானே ராசா.😂
🤫🤫🤫🤫🤫🫣🫣🫣🫣😂
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫