மாமா! மாப்ளே! Final.1

18

அவன் அத்தனை தூரம் போகும் என்று நினைக்கவில்லை. இப்போது எல்லாம் கைமீறி போய்விட்டதாகத் தோன்றியது. 

அத்தனை பெரிய விசயம் இல்லை தான் என்றாலும் சிறிய விசயமும் இல்லை.

அப்போது அலைபேசி ஒலிக்க அதை ஒருவித தவிப்புடனே எடுத்து காதில் ஒற்றினான்.

“போச்சு! போச்சு! மானம் போச்சு! மரியாதை போச்சு! எல்லாரும் இன்னைக்கி என்னைய வச்சு செய்யப் போறாங்க. அம்புட்டு சொந்தமும் கீழே நமக்காக வெயிட் பண்ணிகிட்டு இருக்கும்.” 

“அதிலும் அவளோட சித்தி, சித்தப்பா புள்ளைக எல்லாம், சிக்கினான்டா சிவனாண்டிங்கற ரேஞ்சுக்கு நம்மளை வச்சு  கெடா வெட்டப் போகுதுங்க… எல்லாம் இவளால வந்தது.” தன்னால் புலம்பிக் கொண்டேதான் அலைபேசியில்  அழைப்பை ஏற்றான் ராகவன்.

எதிர் முனையில், “எங்கே இருக்கீங்க?” என அதட்ட,

“இங்க மொட்ட மாடியில தான்‌ இருக்கேன்” 

“கீழே வாங்க, எல்லோரும் நமக்காகத் தான் வெயிட் பண்ணிட்டிருக்காங்க.”

“எனக்கு கீழே வரவே ஒரு மாதிரியா இருக்கு ஜானு. எல்லாம் உன்னால தான்.”

“ஐயே, ரொம்பப் பண்ணாதீங்க… இறங்கி வாங்க…” என்று மன்றாடிக்‌ கொண்டிருந்தாள் இரண்டு நாட்களுக்கு முன் அவன் சரிபாதியான சகதர்மினி.

“எப்படி டீ இறங்கி வர்றது? “

“தோடா… மாடிப்படி வழியாகத்தான். இது தெரியாமயா மாடி ஏறிப் போனீங்க.”

“உன் மொக்கை ஜோக்கை ரசிக்கற நிலமையில‌ நான் இப்ப இல்லடீ…” என்று சலித்துக் கொண்டவனிடம்,

“வேற எதை… எப்போ… எப்படி… ரசிப்பீங்களாம்?” ஒவ்வொன்றாக நிறுத்தி நிதானமாக அவள் கேட்ட தொனியில் இருந்த மாற்றத்தைக் கண்டவனும் புது மாப்பிள்ளை மோடுக்குப் போக, 

 “ஏன்டீ… நீ வேற நேரங்காலம் தெரியாம மனுஷனைப் படுத்தற…” என்று  குழைந்தவன் குரலில் அத்தனை கிறக்கம். இரவின் நினைவுகள் இப்பொழுதும் அவனை சூடேற்றிப் பார்த்தது. பதட்டம் மறைந்து சிறு புன்னகை இழையோடியது இதழ்களில். 

“ஏங்க, உங்களுக்கு மட்டும் தான் கீழே போக சங்கட்டமா இருக்கா… ஏன் எனக்கில்லையா?” அவளும் குழைய,

“இல்ல ஜானு! பெரியவங்க எல்லாம் என்ன நினைப்பாங்க? அப்படி என்ன சின்னப் புள்ள இருக்கறது கூடத் தெரியாம… அப்படினு நினைக்க மாட்டாங்களா? அதுவும் உன் சித்தி, சித்தப்பா புள்ளைக எல்லாம் மாமனை வச்சு செய்யுங்களே.”

அவன்‌ பயம் அவனுக்கு. ஒன்றா‌ இரண்டா மச்சினிச்சிகள். ஒரு கூட்டமே‌ இருக்கு. அவனென்ன சாதாரண காரியமா செய்து வைத்திருக்கிறான். அதுவும் சிறு பையன் முன்பு. ராதவா இன்னைக்கி செத்தடா என்றது உள்மனம். 

“அதுக்காக கீழே போகாம இருக்க முடியுமா? இப்பவே லேட்டாயிருச்சு. எல்லாரும் நமக்காகத் தான் வெயிட் பண்ணிட்டிருப்பாங்க. வாங்கப்பா…” கெஞ்சாத குறையாக அழைத்துக் கொண்டிருந்தாள்.

“ஏய் ஜானு! நீ சாப்பாட்டை  நம்ம ரூமுக்கே எடுத்துட்டு வந்துறேன்!” என வேகமாகக் கூற,

“அது இன்னும் மோசம். சாப்பிடக்  கூட வராம ரூமுக்குள்ளயே இருக்காங்கப்பானு… உங்க மச்சான், கொழுந்தியாளுகளுக்கு  எல்லாம் பேசறதுக்கு நீங்களே ரூட்டுப் போட்டுக் கொடுக்கறீங்க.” என்றவுடன்,

“ஐயோ! வேணாம் இதோ வர்றேன்.”

என்று கூறியவன் கைபேசியை அணைத்து விட்டுக் கீழே இறங்கி வந்ததான். 

அறைக்கு வந்தவனைப் பார்த்து, ஜானகி நமட்டுச் சிரிப்பு சிரிக்க,

“எம்பொழப்பு உனக்கு சிரிப்பா சிரிக்குதுல?” என்று தன்னவளிடம் கேட்க,

“ஐயே! என்னப்பா நீங்க. புதுசா கல்யாணம் ஆனவங்க வாழ்க்கையில இதெல்லாம் சாதாரணமப்பா.” கல்மிஷமாய் கண்சிமிட்டி  அவனை மேலும் கடுப்பேற்றிவிட்டு அவள் வாய்விட்டு சிரிக்க,

“அதில்லை ஜானு… சின்னப் பையன் மனசுல இந்த மாதிரி சம்பவங்கள் பதியலாமா? அது தான் ஒரு மாதிரியா இருக்கு.” என்றவன் முகத்தில் சிந்தனைக் கோடுகள். 

“அவன் இன்னும் மழலை மாறாத சின்னப்புள்ள. இன்னைக்குப் பாத்ததை நாளைக்கு மறந்துறுவான். வாங்க போகலாம்! இல்ல… மறுபடியும் நம்மளைத் தேடி வந்துருவான். என்னைவிட்டு இருந்தாலும் உங்களை விட்டு இருக்கமாட்டான்னு தெரியும்ல”  என்று கூறியவள், ராகவனை அழைத்துக் கொண்டு கீழே சென்றாள்.

அட! நடந்தது இது தாங்க! பெருசா எல்லாம் ஒன்னும் இல்லைங்க. கொஞ்சம்  ரீவைன்ட் பண்ணுவோம். அதாங்க ஃப்ளாஷ் பேக்.

ஜானகியைப் பிடித்திருப்பதாக நேரடியாக தண்டபாணியிடமே சொல்ல, அங்கிருந்தவர்கள் இவனை வித்யாசமாகப் பார்க்க, ஜானகிக்கோ உள்ளுக்குள் உதரலெடுத்து. 

பெண் கேட்க சொன்னாள் தான் . அது சீனியிடமோ, தண்டபாணியிடமோ தனியாகப் பேசி அவர்கள் மூலமாக அப்பாவிடம் கேட்டிருந்தால் முறையாக இருந்திருக்கும். அவளும் அப்படித்தான் நினைத்திருந்தாள். ஆனால் தடாலடியாக இப்படி எல்லார்‌ முன்பும் கேட்பான் என்று எதிர்பார்க்கவில்லை. அண்ணன் முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது.

“தம்பி என்ன சொல்றாப்ல?” அங்கிருந்த பெரியவர் ஒருவர் வினவ,

“மாப்பிள்ளை விளையாடுறார் பெரியப்பா!” என்றான் தண்டபாணி சமாளிப்பாக. 

“என்னமோ ஜானகியப் புடிச்சுருக்கு. ஆனா, பொண்ணு பாக்குறத நிப்பாட்டுங்கன்னு சொல்றாப்லயே. ஒன்னும் விளங்கலையே? ஒரு வேளை இவங்களுக்குப் புடிக்காம நடக்குதா?” அவர் புரிந்து கொண்டது ஜானகிக்கு பிடித்தும், இவனுக்கு விருப்பமில்லாமலும் நடக்குது போல என்று. 

“அதெல்லாம் இல்ல பெரியப்பா. ரெண்டு பேருக்கும் புடிச்சுதான் நடக்குது.” தண்டபாணி அவரை சாமாதானப்படுத்த முயற்சி செய்ய,

“இது ஏதோ சரியாப்படல தண்டபாணி. நாளைக்கு ஒப்புத்தாம்பூலம் வச்சுகிட்டு இந்த தம்பி என்னமோ விசேஷத்த நிப்பாட்டுங்கன்னு சொல்லுது. ஏம்பா… உங்க மாமன் உன்கிட்ட கேக்கும் போது சொல்ல வேண்டியதுதானே. எனக்கு இந்தப் பொண்ணு வேண்டாம்னு. இப்போ வந்து சொல்ற. எங்க வீட்டுப் பொண்ணு என்ன அவ்வளவு எளக்காரமாப் போச்சா. எல்லாம் இந்த ஏழுமலையச் சொல்லணும். நம்ம வழில எத்தனை மாப்பிள்ள‌ இருக்க, அண்ணே மகன் சொன்னான் மாப்பிள்ளை சொன்னாருன்னு அவங்க இஷ்டட்த்துக்கு விட்டா இப்படித்தான்!” இவன் பெண்பார்க்கும் விசேஷத்தை நிறுத்தச் சொல்ல, இவனுக்கு இஷ்டமில்லாமல் நடக்குது போல என தவறாகப் புரிந்து கொண்டு அவர் பாட்டிற்கு பேசிக் கொண்டே போக,

இவர்கள் சம்பாஷனையைப் பார்த்த ராகவனுக்குதான் ஒன்னும் புரியவில்லை. பொண்ணு பாக்குறதாத்தானே சொன்னாங்க. ஒப்புத்தாம்பூலமா? அப்போ முடிவே பண்ணிட்டாங்களா? இவங்க இஷ்ட்டத்துக்கு என்னத்த விட்டாங்க. இவங்க யாருக்காக பொண்ணு பேசினாங்க. ஒரு மண்ணும் புரியல. தலையைப் பிய்த்துக் கொள்ளாத நிலை. 

“இல்ல மாமா. ஜானகிக்கு இதுல விருப்பம் இல்ல! நீங்க வேணா இப்போ கேட்டுப் பாருங்க!” ராகவன் தன் பிடியில் நிலையாய் நிற்க,

“அட ஏன்டா நீ வேற’ தண்டபாணி உள்ளுக்குள் சலித்துக் கொள்ள,

“செத்த நேரம் சும்மா இரேன்டா” சீனி அவனை அடக்க,

“இல்ல பாஸ். அன்னைக்கே உங்கிட்ட பேச வந்தேன். நீங்க தான் கேக்கல. எனக்கு ஜானகியப் புடிச்சுருக்கு பாஸ்!” என்றான்‌ மீண்டும் தொங்கிப்போன முகத்தோடு. 

இவன் பேச்சைக் கேட்ட பெரியப்பாவிற்கு தான் தலை சுற்றியது. பிடிச்சிருக்குங்குறான். ஆனா விசேஷத்தை நிறுத்த சொல்றான். என்னடா நடக்குது இங்க. அவர் குழப்பத்தை பார்த்த தண்டபாணிக்கு இதற்கு மேல் மறைக்க முடியாது எனத் தோன்ற, 

“பெரியப்பா நீங்க போங்க. மாப்பிள்ளைகிட்ட நான் பேசிக்கிறேன்!” அவரை ஒரு வழியாக சமாதானம் பண்ணி அனுப்பி வைத்துவிட்டு, இவனைப் பார்த்து முறைத்தான். 

“என்னமோ போங்க. இந்தக்காலத்து பிள்ளைகளுக்கு எதுலயும் சீரியஸ்னெஸ் இல்ல!” ஒட்டுமொத்த தலைமுறையையும் சாடிச் சென்றார். 

“உன்னை வச்சுக்கிட்டு ஒரு சீக்ரெட் மெய்ன்டெய்ன் பண்ண முடியல. எல்லாம் சொதப்பியாச்சு. ஜானகிக்கு பாத்திருக்குற மாப்பிள்ளை பேரு ராகவன். பேங்க் மேனேஜர். இப்போ சொல்லு. விசேஷத்த நிறுத்திறலாமா?” என்றவன் இப்பவும் ராகவனைப் பார்த்து முறைத்தான் தான். 

‘அப்போ மாப்பிள்ளையே நான்தானா?’ இன்பமாக அதிர்ந்தவன் துள்ளிக்குதித்து எழுந்து நின்றேவிட்டான். 

தலைகால் புரியவில்லை. தலை நிறைய ஐஸ் கட்டிகளைக் கொட்டியது போல் குளிர்ந்து போனான். கால்கள் தரை பாவவில்லை. காற்றில் மிதந்தான். அசடு வழிய எல்லாரையும் பார்க்க, எல்லார் முகமும் புன்னகை பூசியிருந்தது. 

என்ன‌ செய்கிறோம் என்று கூடத் தெரியாமல், “மாமாஆஆஆ” என ஆர்ப்பரித்தவன் சட்டென தண்டபாணியைத் தூக்கி சுற்றிவிட்டான் சந்தோஷ களிப்பில். ஆறடி‌ ஆண்மகனை அலேக்காகத் தூக்கி சுற்றியதில் தண்டபாணிக்குதான் வெட்கமாகப் போயிற்று இவன் செய்கைகயைப் பார்த்து‌.

“டேய்… மானத்த வாங்காத. அவரை இறக்கி விர்றா!” இலக்கியா அதட்டிய பிறகே மாமனை‌ கீழே விட்டான். 

“இதுக்கு நீயும் உடந்தையா?” அக்காவை செல்லமாகக் கடிந்தவன், 

அடுத்து, “பாஸ்ஸ்ஸ்ஸ்” என உற்சாகம் பீறிட சீனியை நோக்கி வர, இரண்டு கைகளையும் அகலவிரித்து தூக்கு என்பது போல் அசராமல் சீனி நிற்க, “எதுக்கு பாஸ் இந்த விஷப்பரீட்சை. மலையெல்லாம் தூக்க முடியாது” என இறுக்கிக் கட்டிக் கொண்டான். இந்த ஐந்து வருடங்களில் சீனி மேலும் உடம்பை ஏற்றி வைத்திருந்தான். 

“நீங்க கூட சொல்லல பாஸ்!” சிறுபிள்ளை போல் முகத்தை வைக்க,

“நீ பேச வந்தன்னைக்கே தெரியும்டா. ஜானகி பத்திதான் பேச வர்றேன்னு. அதனாலதான் பிடிகொடுக்கல! ஆனா… உனக்காக எல்லாம் பொண்ணெடுத்த வீட்ல பேச முடியாதுன்னு மறைமுகமா சொன்னேன். அப்பவே சுதாரிச்சிருந்தா எதைப் பேச முடியாதுன்னு யோசிச்சிருப்ப! எங்க… நீதான் ஜானகி கிறுக்குல திரிஞ்சியே?”

“எப்படி பாஸ் தெரிஞ்சது!” ரகசியமாக கேட்க, 

“அதான் உன் மொகரையிலயே எழுதி ஒட்டியிருக்கே. ஜானகிய பொண்ணு பாக்க வர்றாங்கனு தெரிஞ்சதுலருந்து கவுண்டமணி சொன்னமாதிரி உன் மூஞ்சி எருமச்சாணி அப்பின மாதிரி தானே இருக்கு. இருந்தாலும் நாலு வருஷமா யாருக்கும் தெரியாம மெய்ன்டெய்ன் பண்ணியிருக்கீங்க‌. சரியான அழுத்தக்காரன் தான்டா நீ. என்கிட்ட கூட சொல்லல!” சீனி உரிமையாக கோபித்துக் கொள்ள, 

“சாரி பாஸ்… வீடி கட்டிட்டு பொண்ணு கேக்கலாமேனு இருந்தேன்” என்றான். 

“ஏன்… இன்னும் கொடைக்கானல்ல ரெசார்ட ஏதாவது வாங்கிட்டு கேக்கலாம்னு இருந்திருக்க வேண்டியதுதானே. தேவைங்கறது நம்ம மனசப் பொறுத்தது ராகவா. பத்தாதுன்னா எதுவுமே பத்தாதுதான்” என்றான். தேவைகள் என்பது முடிவிலி. நீண்டு கொண்டே தான் போகும். 

உண்மையில் இவர்கள் விவகாரத்தை கண்டு பிடித்தது சீனியோ, தண்டபாணியோ இல்லை. ஜானகி அம்மா பத்மாதான். படிப்பு முடிந்ததும் பிடிவாதமாக ஏழுமலை மகளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க, ஒவ்வொரு மாப்பிள்ளையையும் ஃபேட்டோ கூட பார்க்காமல் இவள் தட்டிக்கழிக்க, பெற்றவருக்கு எங்கோ இடித்தது. தாய் அறியாத சூலா. மகள் கைபேசியை ஆராய திருட்டுத்தனம் வெளிப்பட்டது. அதில் அவன் அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் எல்லாமே, “இன்னும் கொஞ்ச நாள் ஜானு, இன்னும் கொஞ்சம் ஸ்டெடியாகிட்டு மாமாகிட்ட பேசுறேன்” என்று ஒவ்வொரு‌ முறையும் தவணை கேட்டே அனுப்பியிருந்தான். 

நேரிடையாக தண்டபாணியைப் பிடித்துக் கொண்டார் பத்மா.

“உங்க சித்தப்பாவுக்கு தெரிஞ்சா என்ன பண்ணுவார்னு தெரியாது தண்டபாணி. உன் மச்சான்கறதால தான் உங்க சித்தப்பாகிட்ட இன்னும் விஷயத்தை சொல்லல. நீயே உன் மச்சானை கண்டிச்சு வச்சுக்கோ. கூடிய சீக்கிரம் ஜானகிக்கு கல்யாணத்தை முடிக்கப் பாக்குறேன்!” என்று சொல்ல,

முதலில் தண்டபாணிக்கும் அதிர்ச்சியே ராகவனா என்று. அவனை அந்தக் கோணத்தில் நினைத்தும் பார்க்கவில்லை. இன்னும் சின்ன பையனாகத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கும் வயது முப்பதை எட்டிப் பிடிக்க போவது தெரியவில்லை. 

“இதை சித்தப்பாகிட்ட கொண்டு போகாதீங்க சித்தி. ஜானகிகிட்டயும் உங்களுக்கு தெரிஞ்ச மாதிரி காட்டிக்க வேண்டாம். நான் பாத்துக்கறேன்” என்று முடித்துக் கொண்டான். 

தண்டபாணி, சீனியிடம் ஒரு விஷயத்தை முதன் முதலாத கலந்தாலோசிக்க விழைந்தான் என்றால் அது இவனைப் பற்றியும், இவர்கள் கல்யாணத்தைப் பற்றியும் தான். 

சீனிக்கு ரெட்டிப்பு சந்தோஷம். ஜானகிக்கு இவன் பொருத்தமானவனே. தேடினாலும் இப்படி ஒருத்தன் கிடைப்பது அரிது. 

தண்டபாணிக்கும் முழு சம்மதம்தான். பின்னே மச்சானுக்கு அடங்கிய மாப்பிள்ளை ஆயிற்றே. என்ன ஒன்று காதல் விவகாரம் சித்தப்பாவிற்குத் தெரியாமல் கொண்டு செல்ல வேண்டும். 

தண்டபாணி, சீனியிடம் முன்பே சொல்லிவிட்டான். “நாமாக கேட்டாலாவது சித்தப்பா சம்மதிக்க வாய்ப்பிருக்கிறது. காதல் என்று தெரிஞ்சதோ ஒரேடியாக மறுத்துவிடுவார்” என பேசி வைத்துதான் மச்சானுக்கு சித்தப்பாவிடம் தங்கையைப் பெண் கேட்டான். 

இருவரும் ஏழுமலையிடம் பேசினர். வசதி பற்றாக்குறை என்று முதலில் மறுத்தார்தான். “சொத்துதான் நம்மகிட்ட இருக்குல்ல சித்தப்பா. தேடினாலும் இப்படி மாப்பிள்ளை கிடைக்காது.” 

ராகவனுக்கு நான் கியாரண்டி என தண்டபாணியே மாப்பிள்ளைக்கு உத்திரவாதம் கொடுத்தபிறகு அவரிடம் மறுபேச்சு இல்லை. என்றைக்கானாலும் சொத்து பெண் பிள்ளைகளுக்கே. அவனது வேலை, ஒழுக்கம்,‌ இன்னும் வாழ்க்கையில் அவன் தொடப்போகும் உயரம் என எல்லாம் கணக்குப்பார்த்து மகனும், மருமகனும் ஒருமித்து ராகவனுக்கு பெண் கேட்டதில் அவருக்கும் சம்மதமே. 

இலக்கியாவிற்கே சித்தப்பா சம்மதம் கிடைத்தபிறகுதான் சொன்னான். “ராகவனா!!” அவளுக்கும் அதிர்ச்சிதான். 

காதுகுத்திற்கு எல்லாரும் வருவார்கள். அப்பொழுதே ஒப்புத் தாம்பூலம் என்று பேசிக்கொண்டனர்.‌ 

மச்சானிடம் விளையாடிப் பார்க்கலாம் என்றுதான் அவனிடம் சொல்லவில்லை. இரண்டு நாட்களாக ஜானகி முறைப்பதும், இவன் கண்களால் இறைஞ்சுவதும் இவர்களுக்கெல்லாம் வேடிக்கையாத்தான் இருந்தது. கண்டும் காணாமல் ரசித்தனர்.

“இதெல்லாம் ஓவர்ங்க. பாவம்‌ என் தம்பி. அவன்கிட்டயும் சொன்னா சந்தோஷப் படுவான்ல” இலக்கியா தம்பிக்கு பாவம் பார்க்க, 

“ஏன்டீ…‌அஞ்சு வருஷமா லவ் பண்ணிட்டு இன்னும் என் தங்கச்சியத் தவிக்க விடறான். ரெண்டு நாள் உன் தொம்பி தவிச்சா ஒன்னும் கொறஞ்சுற மாட்டான். இதெல்லாம் மாமன்‌ மச்சான் விளையாட்டு. நீ கண்டுக்காத. கல்யாணத்துக்கப்பறம்‌ பொண்ணெடுத்தவன்னு அவனுக்குதான் கொம்பு‌ மொளச்சிறும்.” 

“ஏன், நீங்க அப்படித்தான் இருக்கீங்களா? இல்ல… சீனி அண்ணன் உங்ககிட்ட அப்படித்தான் நடந்துக்கறாரா?” நொடிப்பாய் இலக்கியா கேட்டதற்கு பதில் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். இரண்டு மச்சான்களுக்கும் தண்டபாணி சிம்ம சொப்பனம்தான். 

எப்படினாலும் நாளை மறுநாள்‌ தெரியத்தானே போகிறதென்று சொல்லவில்லை. 

“அப்போ உங்க தங்கச்சியிடமும் சொல்லக்கூடாது!” என்று சொல்லிவிட்டாள். இது நாத்தனார் விளையாட்டென்று. இதில் பழனியும் இவளோடு கூட்டு. 

ஆனால் சொந்த பந்தங்களுக்கு ராகவன் தான்‌ மாப்பிள்ளை என்று அரசல் புரசலாகத் தெரியும். 

அதனால் தான் தாமதாமாக வரும்பொழுதே மாப்பிள்ளை முறுக்கோ என கேலி செய்தனர். பொதுவாக எல்லாருமே இவனை மாப்பிள்ளை என அழைத்து கேலி செய்து பேசுவதால் இவனுக்கு வித்யாசம் தெரியவில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே இவன் சகோதர முறை வரும். நாளை மறுநாள் ஜானகியைப் பெண்பார்க்க வருகிறார்கள் என்பதே அவன் சிந்தையை நிறைத்திருக்க அவர்கள் பூடகமாகப் பேசியதெல்லாம் இவனுக்கு எங்கே புரிந்தது. 

“ப்ரோ…” அடுத்து பார்த்தி பக்கம் திரும்ப, அவன் மகளை மடியில் வைத்திருக்க, பிள்ளையைத் தூக்கி பக்கத்தில் கொடுத்துவிட்டு, அவனையும் இறுக்கிக் கட்டிக் கொள்ள, 

“ப்ரோ… என் கொளுந்தியாளுக்கும் கொஞ்சம் மிச்சம் வைங்க ப்ரோ.. என்னாலயே மூச்சுவிட முடியல! என் கொளுந்தியால நெனச்சா பாவமாத்தான் இருக்கு” ரகசியமாக காதில் சொல்லவும் தான் அப்படியொருத்தி அங்கிருக்கும் நெனப்பே வந்தது. 

அடடா… என அவனை‌ விடுத்து ஜானகியைப் பார்க்க அவள் கண்கள் கலங்கியிருந்தது‌. ஏதோ கனவு கண்டு விழித்தவள் போல் முழித்துக் கொண்டிருந்தாள். நடப்பதெல்லாம் நிஜமென நம்ப மறுத்தது மனம். நாளை பெண் பார்க்க வருகிறார்கள் இவன் என்னவென்றால் ஒரு முடிவும் எடுக்காமல் இருக்கிறானே என எத்தனை தவித்து போனாள். இவனை பேசச் சொல்லியதற்குப் பதிலாக அண்ணனிடம் நாமே பேசியிருக்கலாம் என இப்பொழுது தோன்ற, தைரியமா பேசியிருப்பியா என மனசாட்சி கேள்வி கேட்க, சத்தியமா முடியாது என்பதுதான் பதிலாக வந்தது. ராகவனிடம் துணிச்சலாக ஆசையைச் சொல்லும் போது இருந்த தைரியம் வீட்டில் சொல்வதற்கு வரவில்லை. 

ராகவன் அவளையே பார்த்திருக்க, சட்டென வீட்டிற்குள் சென்றவள் மாடிப்படியேறி விட்டாள். பெண்ணிற்கு வெட்கம் போல என்றுதான் நினைக்கும்படி இருந்தது அவளது செயல். ராகவனுக்குதானே தெரியும் கோபத்தில் போகிறாள்‌ என்று. 

மாமனைப் பார்க்க, முதுகைத் தட்டிக் கொடுத்து, போ என கண்ணால் உத்தரவு கொடுக்க, அடுத்து சீனியைப் பார்த்தான்.

“போயேன்டா… கொளுந்தியா போற வேகத்த பாத்தா அடி நிச்சயம்னு தெரியுது. இப்ப இருந்தே கால்ல விழ ட்ரெய்னிங் எடு!” என்று சொல்லி சிரிக்க சிட்டாகப் பின்னால் ஓடி படியேறினான்.

மாடியில் கைகளைக் கட்டிக் கொண்டு வெறித்து நின்றாள். அந்தி மயங்கும் மாலை நேரம்‌. செஞ்சாந்து பூசிக் கொண்டு அடிவானம் சிவந்திருந்தது. இன்னும் மின் விளக்குகள் ஒளிறாரமலிருக்க, மேல் திசையின் அடி வானச் சிவப்பில் பழனி மலையும் செம்மை பூசி நின்றது. மொட்டை மாடியில் கிளை பரப்பியிருந்த மாமரத்தில் கூடடையும் பறவைகளின் கிறீச்சிடலும், காற்று சீண்டி விட சிணுங்கும் தென்னை ஓலைகளின் சலசலப்பும். 

பழனி மலை மீது பார்வையைப் பதித்திருந்தாள் ஜானகி.

“உனக்கு முன்னாடியே தெரியுமா ஜானு?” இரண்டிரண்டு படிகளாகத் தாவி படியேறி வந்த வேகத்தில் மூச்சு வாங்க முகம் கொள்ளா சிரிப்போடு கேட்க, பட்டெனத் திரும்பிப் பார்த்தாள். பார்வையில் தீப்பொறி பறந்தது.

“ஆத்தீ’ என அல்லு விட்டது இவனுக்கு. 

“எனக்குத் தெரிஞ்சுருந்தா மொதல்லயே இந்த மாப்பிள்ளை பிடிக்கலைன்னு எங்கப்பாகிட்ட சொல்லிருப்பேன். நீங்க அப்படித்தானே சொல்லச் சொன்னீங்க? ஒன்னும் பிரச்சினையில்ல. நாளைக்கி கேக்கும்போது நீங்க சொன்ன மாதிரியே சொல்லிர்றேன்!” கடைசி வரை இவனாக பெண் கேட்கவில்லையே என்ற கோபம் அவளுக்கு மூக்கு நுனியில் நின்றது. 

“சொல்லு ஜானு! பிடிக்கலைனே சொல்லிரு” என்றவனை அதிர்ந்து பார்த்தாள். அப்படியே தலையில் கல்லைத் தூக்கிப் போடும் அளவிற்கு ஆத்திரம் கிளர்ந்தது. அவனை முறைத்து நிற்க,

“உனக்கேத்தவன் நான் இல்ல ஜானு. மாமாகிட்டப் பேசக்கூட தைரியமில்ல. என் தங்கச்சிய கேக்க உனக்கென்ன தகுதியிருக்குன்னு கேட்பாரோனு பயம். இன்னைக்கி விசேஷத்துல கூட பாத்தயில்ல. அத்தை சீரோட ஒப்பிடும்போது தாய்மாமனா நான் செஞ்ச சீர்தான் கம்மி. இதுவரைக்கும் உன்னப் புடிச்சுருக்குன்னு கூட நான் வாய்விட்டு சொன்னதில்ல. அவங்களா கண்டுபிடுச்சு பொண்ணு கேக்கலைனா நானா கேட்டிருப்பேனான்னு கூடத் தெரியாது. உன்னை, உங்க அப்பாவைவிட நல்லா வசதியா வச்சுக்கணும்னு மட்டும் தான் தோணிச்சு. நாளைக்கு உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை பாக்குறப்போ, நம்ம வீட்டுக்காரர் குறஞ்சுட்டதா நீ நெனச்சுறக் கூடாதுல்ல. அதுக்குதான் ஓடிட்டிருக்கேன் ஜானு” என்று தன்னிலை விளக்கம் கொடுக்க அவளுக்குள் அப்படியொரு கோபம் கனன்றது. இவள் கேட்டாளா ஆஸ்த்தி வேண்டுமென்று. 

“எத்தனை சொன்னாலும் உங்களை திருத்தவே முடியாது. உங்களுக்கிருக்கிற தாழ்வு மனப்பான்மைய நெனச்சு இப்பதான் எனக்கு பயமாயிருக்கு. வாழ்நாள் முழுக்க ஒருத்தருக்கு முட்டுக் கொடுத்துட்டே இருக்க முடியாது. அண்ணனுக்கும், மாமாவுக்கும் உங்க மேல இருக்குற நம்பிக்கை கூட உங்க மேல உங்களுக்க இல்லயில்ல.” ஆவேசமாகக் கேட்டவளிடம், 

தன்மையான குரலில், “இது தாழ்வு மனப்பான்மை இல்ல ஜானு. உம்மேல வச்சுறுக்குற அளவுகடந்த பிரியம், ஆசை, காதல் எப்படி வேணாலும் சொல்லலாம். உன்னையாம் ஆம்பளையா மதிச்சு உன் பின்னாலேயே ஒருத்தி சுத்துறாளே. அவளுக்காக நீ என்ன பண்ணிட்டேன்னு என் மனசாட்சி தினமும் கேட்கும். இப்போ காதல் பெருசாத் தெரியலாம். ஆனால் கல்யாணத்துக்கு பிறகு காசும் வேணும் ஜானு. எங்க அம்மாகிட்ட அஞ்சு ரூபா தேவைக்கு கேட்கக்கூட அவங்ககிட்ட இருக்கோ என்னமோன்னு நானும் அக்காவும் எவ்வளவு தயங்கி இருக்கோம் தெரியுமா? அந்த நிலமை உனக்கோ, நம்ம பிள்ளைகளுக்கோ வரக்கூடாது ஜானு. அதுக்கு தான் இப்ப இருந்தே ப்ளான் பண்றேன்!” அவன் சொன்ன விதத்தில் ஒன்று மட்டும் அவளுக்கு நன்றாகப் புரிந்தது. தான் பட்ட கஷ்ட்டம் தன் பிள்ளைகள் படக்கூடாது என நினைக்கும் ஒட்டுமொத்த சமூக வியாதிதான் இவனுக்கு. இதற்கு மருந்தே கிடையாது. 

இத்தனை வருடங்களில் இன்று தான் தன் மீதிருக்கும் பிரியத்தை அவன் வாயால் சொல்லக் கேட்கிறாள். முகம் புன்னகை பூக்க,

“என்னை எங்க அப்பாவை விட வசதியா வச்சுக்க வேண்டாம். அவரை விட ஒருபடி மேல சந்தோஷமா வச்சிருந்தா போதும். அது உங்ககிட்ட எனக்கு கிடைக்கும்ங்கற நம்பிக்கை எனக்கிருக்கு!” என்றவளை வாரி கட்டிக் கொள்ள கைகள் பரபரத்தாலும் தன் கட்டுக்குள் நின்று கண்கள் பனிக்க பார்த்திருந்தான். 

இத்தனை நாட்களாக எப்படி பெண் கேட்பது என அலைக்கழிந்தவன், நினைத்தது நிறைவேறியதில் உணர்ச்சி வயப்பட்டிருப்பது அவன் கண்களில் தெரிந்தது. சற்று நேரம் பறவைகளின் கிறீச்சிடல் மட்டுமே அவ்விடத்தை நிறைத்திருந்தது. 

கை பேசி அழைத்து அவர்களது மோன நிலையை கலைக்க, எடுத்து பார்த்தான். தண்டபாணி தான் அழைத்திருந்தான். “போதும் மாப்ளே! கீழ வாங்க!” என்றழைக்க,

“அதானே… அஞ்சு நிமிஷம் கூட தனியா விடமாட்டாரே” கைபேசியை அணைத்து விட்டுதான் புலம்பினான். பின்னே காதுபட சொல்லமுடியுமா என்ன? 

“போலாமா?” பார்வையாலே கேட்க, சம்மதமாக அவள் முன்னே செல்ல, கையைப் பிடித்து நிறுத்தியவன், “உன் நம்பிக்கையைக் காப்பாத்துவேன் ஜானு” என்றவனிடம், எனக்கு தெரியும் என்பது போல் சிறு‌ புன்னகையை உதிர்த்துவிட்டு இறங்க, அவள் பின்னால் இறங்கி வந்தான். 

அவள் முன்னால் சென்றுவிட, இவனது சிவந்த கண்களைப் பார்த்துவிட்டு, “என்ன ப்ரோ.. அடி பலமோ?” பார்த்தி கேட்க. மீண்டும் அவனைக் கட்டிப் பிடித்து முத்தம் வைக்க வர, 

“அடச்சே! மாமனுக்கும், மச்சானுக்கும் இதே வேலையாப் போச்சு!” என்று அன்றொரு நாள் தண்டபாணி முத்தம் கொடுத்ததை நினைத்து கன்னத்தை துடைத்துக் கொண்டான் பார்த்தி. 

************

[ஃபைனல் எபி இன்று மாலை மக்களே.‌ எழுத எழுத ஃபினிஷிங் டச் வரமாட்டேங்குது. ஆரம்ப சீனெல்லாம் எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கேன்னு கேக்காதீங்க. கதை தொடங்கும் போதே இந்த சீன் ரகவனுக்குன்னு முடிவு பண்ணிட்டேன். நம்ம கதை தானே. அதான் உரிமையோட எடுத்து போட்டுட்டேன் 🫣😉]

8 thoughts on “மாமா! மாப்ளே! Final.1”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top