மல்லி 15

“பஸ் மட்டும் தான்டி மாறியிருக்கு. உனக்கான விஐபி சீட் எப்பவும் ரெடியா இருக்கு.” 

“ரொம்ப முக்கியம். ஏன் உனக்கும் தான் இந்த சீட்டு பெரியகுளத்துலருந்து காலியா வந்துச்சு.” 

“ஏஞ்சொல்லமாட்ட? நானும் நீயும் ஒன்னா. நீ மொதலாளியம்மா. வழக்கம்போல நெல்லுக்கு பாயறது புல்லுக்கும் பாயுது. உனக்காக ஒருத்தர் டிரைவர் வேலயே பாக்க வந்துருக்காரு. ஆனா ஒன்னுடி, எங்க போனாலும் உனக்கு பாடிகார்ட் மட்டும் கன்ஃபர்ம்” என ஆர்த்தி அவளை கேலி செய்ய, ‘விமலும் தன்னை வேவு பார்க்கத்தானே பின்னாலேயே நாய் மாதிரி சுற்றிவருவான்’ என முகம் சுணங்க, அதைக் கண்டவள், 

“ஹேய் மங்கா! நான் அந்த அர்த்தத்துல சொல்லல. அவன் உன் பின்னாடி வந்தான்னா, உங்க அத்தை சொல்லி வந்தான். ஆனா அண்ணன் அப்படியில்ல. உங்க அத்தை சொத்துல பங்கு கேட்டதும், பொண்ணும் எனக்குத்தான், சொத்தும் எனக்குதான்னு என்ன கெத்தா பொண்ணு கேட்டாரு தெரியுமா? யாராலையும் மறுத்துப் பேசமுடியல.” 

அது தானே இவளையும் கண்ணில் விழுந்த துரும்பாக உறுத்திக்கொண்டு இருக்கிறது. சொத்து கைவிட்டுப் போகக் கூடாது என்றுதானே இவனும் பெண் கேட்டான். ஆஸ்த்திதானே முன் நின்றது. ஆசையில்லையே? உறவு என்பதால் முன்னுரிமை இவனுக்கு. இவர்கள் மத்தியில் நான் யார்? என் வாழ்க்கை என்ன இவர்களுக்கு கிள்ளுக்கீரையா? பெற்றவள் இருந்தால் இப்படித்தான் என்னை பந்தாடுவார்களா?’ என அன்னைக்கான ஏக்கம் இப்பொழுதும் அவள் மனதில் வெற்றிடத்தை உண்டு பண்ண, இழுத்து மூச்சுவாங்கி அதை நிரப்பியவள். 

“அவங்க பஸ்ஸு… அவங்க ஓட்டுறாங்க” என்றால் பட்டும் படாமல்.

“என்னப்பாத்து சொல்லு. என் கண்ணப்பாத்து சொல்லு. இத்தன நாளும்தான் அவங்க பஸ்ஸு. அது தெரியாமையா இருக்கு. அவங்க பஸ்ஸாம்ல அவுங்கு பஸ்ஸு.” 

ஆர்த்தி நொடிப்பாய் முகம் திருப்பிக் கொண்டாள். இத்தனை நாட்களும்தான் அவர்கள் பேருந்து. ஆனால் இன்றுதானே ஓட்டுனராக வந்திருக்கிறான். ஏதாவது விசேஷ நாட்களில் ஆள் பற்றாக்குறை என்றால் மட்டுமே நடத்துனராகவோ, ஓட்டுனராகவோ வருவான். அப்படி வந்த பொழுதுதான் முதன் முதலாக மாமன் மகளை சந்தித்தான். இன்று அவளுக்காகவே சாரதி அவதாரம் எடுத்திருக்கிறான். 

இன்று கல்லூரி செல்ல அதிகாலை நான்கு மணிக்கே எழுந்து கிளம்ப ஆயத்தமாக, கணபதி வேந்தனுக்கு அழைத்துவிட்டார். மாரியம்மாள் இன்னும் எந்திரிக்கவில்லை. அப்படியே எழுந்தாலும் அடுப்படி வரமாட்டார். அவர்கள் வீட்டிலேயே அடுக்களை சாம்ராஜ்யத்தை மருமகள்வசம் ஒப்படைத்து பலவருடங்கள் ஆகிவிட்டது. 

மகளுக்கு தனக்குத் தெரிந்தவகையில் அந்நேரத்திற்கே கணபதி சமைக்க தொடங்கிவிட்டார். தாமரை சாப்பாடு கொடுத்துவிடாத நாட்களில் மாமனும் மருமகனும் அவர்களுக்கு தெரிந்தவகையில் ஏதாவது சமைத்து சாப்பிடுவது தான். ஓஹோன்னு இல்லைனாலும், மோசமாகவும் இருக்காது இருவர் கைப்பக்குவமும்.

வெங்காயம், பச்சைமிளகாய் தாளித்து, அதில் தக்காளி வதக்கி, குக்கரில் வைத்த சோற்றைப் போட்டு கலவை சாதமாக பிரட்டி எடுத்தார். உருளைக்கிழங்கு வறுத்து வைத்தார். 

நிலக்கோட்டையிலிருந்து என்றால் இன்னும் தாமதமாக எழுந்து பொறுமையாகக் கிளம்பலாம். பெரியகுளத்திலிருந்து எனும் பொழுது சீக்கிரம் கிளம்ப வேண்டியிருந்தது. ஒரே பஸ் தான். மாறவேண்டியதில்லை. எனினும் முதல்நாள். எவ்வளவு நேரமாகும் என தெரியவில்லை. பழக்கமில்லாத ரூட்டு வேறு. 

கணபதி வேந்தனுக்கு அழைத்துச் சொல்ல, அந்நேரத்திற்கே காக்கி உடையில் வந்துவிட்டான். 

“என்னடா காக்கி ட்ரெஸ்ல வந்திருக்க” என்றவரிடம்,‌ முதல் ட்ரிப்பிற்கு தான் போவதாகச் சொல்ல அவருக்கும் அப்பாடா என உள்ளுக்குள் நிம்மதி. 

அந்த விமல், கிரித்திரியம் புடுச்ச பய. ஏதாவது மகளிடம் வம்பு செய்தால் என்ன செய்வது என்ற பயம் உள்ளுக்குள் இருந்தது. வேந்தனுக்கும் அதே யோசனைதான்.‌ 

அடிபட்ட பாம்பு.‌ கொத்தாமல் விடாது. மீண்டும் ஒரண்டை இழுத்தால் என்ன செய்வது.‌ 

இவர்கள் அடித்த அடியில் அவன் படுக்கைவிட்டு எழுந்திரிக்கவே பல மாதங்கள் ஆகுமெனத் தெரியவில்லை. 

வந்த முதல் நாளே காய்ச்சல் என மருத்துவமனை கொண்டு சேர்த்தவன், உடனிருந்து கவனித்துக் கொண்டான். பிடுங்கிப் போட்ட கொடியாய் படுக்கையில் வதங்கிக் கிடந்தாள். பலவீனம் மட்டும்தான் என்பதால் குளுக்கோஸ் ஏற்றி, காய்ச்சல் குறைவதற்கான ஊசி போட விடிவதற்குள்ளேயே தெளிச்சல் கண்டது முகம். அன்று முழுவதும் மருத்துவமனையிலேயே இருக்கட்டும் என கணபதி கூறிவிட்டார். மகள் வீடு திரும்புவதற்குள் ஆள்விட்டு வீட்டை சுத்தம் செய்தார் கணபதி. வெள்ளையடிக்காத குறை ஒன்றுதான். ஒன்றுக்கு இரண்டாக ஆட்களை விட்டு, தானும் ஊடமாட வேலை செய்து ஒரே நாளில் வீட்டையே தலைகீழாக மாற்றிவிட்டார் மகளுக்காக. 

பூட்டியிருந்த ஒரு அறையை மகளுக்கென ஒதுக்கினார். மாமன் கடையிலிருந்து ஃபேன்,‌ கட்டில், மெத்தை, ஏசி முதற்கொண்டு அத்தனையும் அறையில் இடம் பிடித்தது ஒரே நாளில். வீட்டில் இருந்தது பழைய மாடல் டிவி தான். தூங்கும் முன் சிறிது நேரம் செய்தி பார்ப்பார். அதற்கு எந்த டீவியாயிருந்தால் என்ன. ஆனால் மகளுக்காக ஸ்மார்ட் எல்ஈடி டீவி சுவற்றில் இடம் பிடித்தது. 

ஆண்கள் மட்டும் என்பதால் குளியலறை வீட்டுக்கு வெளியேதான். 

இப்பொழுது பின்னால் இருக்கும் காலியிடத்தில் குளியலறை கட்டி, மகள் அறைக்குள் இருக்கும் சுவற்றின் ஒரு மூலையில் இடித்து குளியலறையோடு இணைக்க ஏற்பாடு செய்கிறார். 

“என்ன இருந்தாலும் பொறக்குறப்ப கூடவே இருக்குற காதைவிட, அடுத்து மொளைக்கிற கொம்புக்குதான் மவுசுனு காட்டிட்டீரே. இத்தன நாளா நானும்தான உம்ம கூட இருந்தேன். வயசுப் பையன் எனக்கும் ராத்திரி ஒத்தையில வெளிய எந்திரிச்சுப் போக பயமாத்தானே இருந்துச்சு.” 

இப்பொழுதும் மாமனிடம் தன்னைவிட மகள்தானே ஒசத்தி என கேட்டு சிறு பிள்ளையாய் வம்பு செய்ய, சற்று பொறாமையும் கூடத்தான். மாமன் கைக்குள்ளேயே வளர்ந்தவன் ஆயிற்றே.

“மானத்த வாங்காதடா. நீ எந்திரிக்கும் போதெல்லாம் என் தூக்கத்தை தானே கெடுத்த. இதெல்லாம் நாளைக்கி உனக்குதானடா?” சிறுபிள்ளைக்கு கிலுகிலுப்பை ஆட்டுவது போல் சமாதானம் செய்தார். 

“நடத்துங்க… நடத்துங்க…” சலுகையாக சடைத்துக் கொண்டான்.

மங்கையை மருத்துவமனையிலிருந்து அழைத்து வந்துவிட்டவன், மறுநாள் தங்கை மறு வீடு வருவதால் உடனே கிளம்பிவிட்டான். 

வயதுப் பிள்ளை இருக்கும் வீட்டில் அவனிருந்தால் தன் மகளின் தனிமை பாதிக்கப்படும் என அவனை தேனிக்கே அனுப்பிவிட்டாலும், எப்பொழுது அவளது ஆழ் மனதில் தான் இருப்பது தெரிந்துவிட்டதோ, இனி அவளை தனித்துவிடும் எண்ணமெல்லாம் அவனுக்கு நெல்முனையளவு கூட இல்லை. இதோ அதிகாலையிலேயே வந்து நின்றான்.

அவளைப் பார்க்காத வரை எப்படியோ. ஆனால் பார்த்த பிறகு முப்பொழுதும் மாமன் மகள் கற்பனைதான். 

முன்பு பஸ்ஸிலும், அடுத்து நகைக்கடையில் பார்த்த பொழுதும் மாமன்‌மகள் என்றுதான் பார்த்தான். விமல் பெண் கேட்ட பொழுதும் எனக்கடுத்துதான் யாராக இருந்தாலும் என உறவு கொண்டுதான் உரிமைப் போர் தொடுத்தான். 

ஆனால் அவளது “எளா…” எனும் அழைப்பு அவனை புரட்டிப் போட்டது. உறவு தாண்டிய ஏதோ ஒன்று அவனை அலைக்கழித்தது. ஐப்பசி மாத அடைமழையின் இடைவிடாத தவளைச்சத்தமாய் நெஞ்சுக்குள் ஓயாத ஓலம். இதுவரை அனுபவித்திராத உணர்வது. முதுகில் உப்பு மூட்டை தூக்கி சுற்றித்திரிந்த அவனது மொசக்குட்டியை மீட்டுத் தந்திருந்தது அந்த ஒற்றைச்சொல். 

இப்பொழுதுதான் அன்று விமல் பின்னால் வண்டியில் அமர்ந்து சென்ற பொழுது ஏன் தனக்கு அத்தனை கோபமென்று புரிந்தது. தன் கைப்பொருளை அவன் தட்டிச் சென்றதால் வந்த கோபமது.

தாமரை மறுநாள் விருந்திற்கு தம்பியையும், தம்பி மகளையும் அழைப்பு விடுத்தார். சட்டென புது சொந்தங்களுடன் மகள் ஒட்டுவாளா என்கிற சந்தேகம். அம்மையப்பன்‌ தம்பிகள் குடும்பமும் அங்கு இருக்கும். அவர்கள் முன் தன் மகள்‌ வேடிக்கை பொருளாவதையும் விரும்பவில்லை. திவ்யா திருமணத்தில் நடந்ததைப் பற்றி பேச்சு வரலாம். அக்காவிற்கும் இரண்டு பக்கமும் பேசமுடியாமல் போகும். சிறிது நாள் போகட்டும், இந்தப் பிரச்சினையின் சூடு தணியட்டும் என, 

இவரே அரசிக்கு இன்னும் உடம்பு சரியாகவில்லை என முடித்துக் கொண்டார். இருந்தும் வழக்கம்போல் விருந்துச் சாப்பாடு இரண்டு டிஃபன் கேரியரில் அவர்கள் பஸ்ஸிலேயே வந்துவிட்டது. பேருந்து நிறுத்தம் சென்று கணபதியே வாங்கிவந்தார். 

காய்ச்சல் வந்து, நாக்குச் செத்த வாய்க்கு கோழிக்குழம்பும், மிளகு ரசமும் உனக்கையாக இருக்க, ஒரு பிடி சோறு சேர்த்தே இறங்கியது மங்காவிற்கு. அல்சர் பிரச்சினையும் மறந்து ருசித்து சாப்பிட்ட பேத்தியை மாரியம்மாள் ஆச்சர்யமாகப் பார்த்தார். அங்கேயும் அடிக்கடி அசைவம் செய்தாலும், அல்சர் என காரமான எதையும் தொட்டுக் கூட பார்க்க மாட்டாள். ஆனால் இங்கு காய்ச்சலோடும் அளவு மீறி சாப்பிட்டாள்.‌ 

மூன்றாம் நாள் மறு வீடு வந்த மணமக்களை, மாப்பிள்ளை வீட்டார் சம்மதத்தோடு  அங்கிருந்தே, ஹனிமூன் பேக்கேஜ் போட்டு  மூணாறு அனுப்பி வைத்தனர். 

மூணாறின் பசுமையும், குளுமையும் இவர்களை இருகரம் விரித்து அணைத்துக் கொள்ள, மூன்று நாள் இடைவெளியை, இடைவேளையின்றி ஈடுசெய்து கொண்டான்‌ மதியழகன்.‌ மூன்று நாள் கழித்து தேனிலவு முடித்து வந்தவர்களுக்கு கறி விருந்து, சினிமா என புதுமணத்தம்பதிகளுக்கான தனித்துவமான‌ நேரமாக ஓட, அவர்களை கவனித்து தங்கையை முறைப்படி புகுந்த வீட்டில் விட்டுவரவே பத்து நாட்கள் ஓடிப்போயிற்று. 

“கடைக்கிப்போயி பத்து நாளாச்சும்மா. ஆர்டர் கொடுத்த நகையெல்லாம் நாளைக்கு வருதாம். உங்க மருமகன் போய்தான் கணக்கு பாத்து வாங்கணும். காலையில வெள்ளன கிளம்பணும்மா.” முதல் நாளே புருஷன் வீடு செல்ல, பரபரப்பாக பெட்டியைக் கட்டிவைத்த தங்கையைப் பார்த்த அண்ணன்மார்க்கு புரியாத ஆச்சர்யம்.

இந்தப்பிள்ளையா, அன்று தங்களோடு மறு வீடு அனுப்பாததற்கு கண்ணைக் கசக்கிக் கொண்டு நின்றது என வாயில் கை வைக்காத குறை. தங்கை தங்கள் கைவிட்டு பிரிந்துவிட்டாள் என வெசனப்படுவதா, கணவன் வீட்டோடு ஒன்றிவிட்டாள் என சந்தோஷப்படுவதா எனத் தெரியவில்லை அந்த பாசப் பறவைகளுக்கு. தாமரை வழமை மாறாமல் மகளுக்கு பிறந்து வீட்டிலிருந்து பொட்டலம் கட்டினார். எத்தனை நூற்றாண்டு கண்டாலும் இந்த வழமை மட்டும் என்றும் மாறாது. 

இந்த பத்து நாட்களும் மங்கையின்‌ சோர்ந்த முகமே கண்ணுக்குள் ஆட, வேந்தனுக்கும் தேனியில் நிலைகொள்ள முடியவில்லை. அவளைப் பார்த்த எல்லா சந்தர்ப்பங்களிலும் அவளை ஏதாவதொரு பிரச்சினையோடு தான் பார்த்தான்.‌ முதன்‌முதலாத அவர்கள் பஸ்ஸில் ஏறிய போதும் சரி, அடுத்து ரெங்கநாதன் வீட்டில் சந்தித்த போதும் சரி. அதன் பிறகு இங்கு வந்தும் காய்ச்சலோடுதான் விட்டுவந்தான்.‌ 

அவளைக் கவனித்த வரையில் அவளை இவனால் கணிக்க முடியவில்லை. சந்திரவதனத்தில் நிலவின் கலங்கம் போல் ஏதோ ஒன்று அவள் முகத்தில். காய்ச்சலில் கண் அயர்ந்து கிடந்தவளை ஆராய்ந்தது. கண்களைச்சுற்றிய மெல்லிய கரும்படலம், அவளது நிறத்திற்கு பளிச்சென தெரிந்தது. ஒன்று சரியான தூக்கமின்மையாக இருக்க வேண்டும். இல்லையெனில் அதிகப்படியான சிந்தனையாக இருக்க வேண்டும்.‌ ஆழ்ந்த தூக்கத்திலும் தாடை இறுக, புருவங்கள் முடிச்சிட்டே இருந்தன. நீவி விட மனம் பரபரத்தாலும், அவளுக்குள் என்ன குழப்பம் என இவன் குழம்பித் தவித்தான். 

இன்று கல்லூரி கிளம்பி வந்தவளைப் பார்த்தான். மழையில் நனைந்த பன்னீர் பூ போல பளிச்சென இருந்தாள். கத்திரி பூ கலரில் சுடிதாரும், சந்தன கலரில் துப்பட்டாவும் அணிந்திருந்தாள். மெரூன் கலரில் சிறு பொட்டு. மெலிதாக திருநீர் கீற்று. மை பூசியறியாத கோளவிழிகள். 

வெளியே வந்ததும் அவனை நிமிர்ந்து பார்த்தது என்னவோ ஒரு கணம் தான்.‌ இருந்தாலும் கட்டியிழுத்தது காளையின் மனதை. இடை தாண்டிய பின்னலின் நுனியில் இன்னும் ஈரம் சொட்டியது. அத்தை ஜாடை எனினும் மாமனைப் போல் நல்ல வளர்த்தி. இந்த உயரத்திற்கு இன்னும் கொஞ்சம் சதை பிடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தான். அப்பொழுதுதான் இவன் பக்கத்தில் நிற்கும் பொழுது ஜோடிப் பொருத்தம் சரியாக இருக்கும். 

ஆனால் இவள்தான் கிள்ளிச் சாப்பிடும் ரகமாக இருக்கிறாளே. 

இவன் சனிக்கிழமை எண்ணெய்க் குளியல் முடித்தால், நல்லெண்ணய் மிதக்க முழு வெடக்கோழியை மிச்சம் வைக்காமல் முடிப்பவனாயிற்றே.

இன்னும் மணி ஏழுகூட ஆகவில்லை. கணபதி சாப்பிடச் சொல்ல, இந்நேரத்திற்கு சாப்பிட முடியாதென மறுத்துவிட்டாள். மகளிடம் டிஃபன் பாக்சை நீட்ட மறுபேச்சின்றி வாங்கிக் கொண்டாள். செலவுக்கு பணம் கொடுக்க,‌ வாங்குவாளா என யோசனையில் இருக்க, அவளோ மறுக்காமல் வாங்கிக் கொண்டாள். 

“அரசி!” வேந்தன் தான் அழைத்தான். இன்று தான் பெயர் சொல்லி அழைக்கிறான். ஒரு கணம் முகம் மலர்ந்து, இமைக்கும் நொடிக்குள் தொட்டாச்சிணுங்கியாய் சட்டென சுருங்கியது. அவனது பார்வையில் அந்த நொடி தப்பவில்லை. நிமிர்ந்து மட்டும் தான் இவனைப் பார்த்தாள். அழுத்தமான பார்வைதான் என்னவென்று கேட்டது. 

“தலைய காயவச்சுட்டு கெளம்பு. இப்பதான உடம்பு சரியாச்சு.‌ மறுபடியும் காய்ச்சல் வரணுமா?” 

“டைம்மில்ல.” ஒற்றைச் சொல் பதிலாத முடித்துக் கொண்டாள்.

“அதெல்லாம் நேரமிருக்கு. நான்தான பஸ் ஓட்டப்போறேன்.‌ எனக்குத் தெரியாதா?”

அதற்குள் மாரியம்மாவும் எழுந்து வர,

“தம்பி சொல்லுதுல மங்கா. தலைய ஒனத்து” என்றார். 

“இன்னைக்கு முதல் நாள் அம்மாச்சி. எவ்வளவு நேரமாகும்னு தெரியாது. சீக்கிரம் போகணும்.”

“உனக்குதான் தெரியாது. எனக்குமா தெரியாது? நல்லா துவட்டிட்டு வா.” விடாப்பிடியாக நிற்க,

“ம்ப்ச்ச்… நான் என்ன பண்ணனும்னு நீங்க சொல்லவேண்டாம்.” சலித்துக் கொண்டே பேக்கை எடுத்து தோளில் போட்டாள்.

“சொன்ன பேச்சு கேக்க மாட்டியா?” குரல் உயர்த்த, முகம் சுருக்கிப் பார்த்தாள். நான் ஏன் கேக்கணும் என்றது பார்வை. 

‘இவ என்ன? எதையும் கண்ணாலதான் கேப்பாளா?’  

“தலைய காயவைக்க சொன்னேன்!” மீண்டும் அழுத்திச் சொல்ல, 

“இதென்ன துணியா? கொடில போட்டு காயவைக்க. அதெல்லாம் தன்னால காஞ்சுக்கும்.” பேக்கை தோளில் போட்டுக் கொண்டு அவனுக்கு முன்னால் வெளியேறிவிட்டாள். 

“அவ அப்படித்தான் தம்பி. பிடிவாதம் புடிச்சா மாத்த முடியாது” மாரியம்மாள் கூற, அவள் பின்னாலே வெளியே வந்தவன். 

“வழி தெரியுமா?” என்றான். முழித்து நின்றாள். 

வீட்டைவிட்டு வெளியே சென்றால் தெற்கு வடக்கு தெரியாதே. பஸ் ஸ்டான்டிற்கு எந்தப் பக்கமென தெரியாமல் எப்படி செல்வது. முதல்நாள் வந்ததே கருக்கலில்தான். அதுவும் காரில் வந்து வாசலில் இறங்கியது. ஆஸ்பத்திரி சென்றதும் சுயநினைவின்றி நடு இரவில். எந்தப் பக்கம் என்று கூட தெரியாது. வீடே கிழக்கு வாசலா, மேற்கு வாசலா என இன்னும் நெகாத்தெரியவில்லை. இதில் பஸ் ஸ்டான்டு எப்படிச் செல்வது. 

இருந்தாலும் வீம்பாக,

“மதுரைக்கி வழி வாயில. யாரையாவது கேட்டா சொல்லப்போறாங்க” என, 

“எந்த ஊருக்குனாலும் வழி வாய்லதான். யாரையோ கேக்குறதுக்கு எங்கிட்ட கேக்கலாம்ல. நானே சொல்றேன்” என வலிய முன் வந்தவன், 

வலது கையை நீட்டி, “இப்படியே வாசலவிட்டு இறங்கி, சோத்துக் கைப்பக்கமா நேரா போனா ஒரு பிள்ளையார் கோவில் வரும். முதல் நாள்ங்கறதால அவருக்கு ஒரு உக்கியப் போட்டுட்டு, அப்படியே அவருக்கு இடது பக்கமா இருக்குற வீதியில் போனா ஒரு தண்ணி டேங்க் வரும். அங்கிருந்து நொட்டாங் கைப்பக்கமா போனா, அங்க ஒரு பால்வாடி வரும். அங்க இருந்து ரைட் சைடு போனா…” என அவளிடம் இடது வலது என கையை ஆட்டி ஆட்டி காமிக்க, கேட்டதற்கே தலை சுற்றியது. திருதிருவென முழித்து நின்றவளை பார்க்க சிரிப்பு வந்தது. அடக்க முயன்றும் முடியாமல் சிரித்தும் விட்டான். இவன் பொய் சொல்கிறானோ என சந்தேகமாகப் பார்க்க, 

“வேணும்னா என்கூட வா! நானும் அங்கதான் போறேன். பஸ் ஸ்டான்ட் நடக்குற தூரமில்ல. அப்படியே உன்னையும் விட்டுர்றேன்” என அழைக்க, வழி தெரிந்து கொள்வோம் என அவனோடு கிளம்பினாள். 

வாசலில் அவனது ராயல் என்ஃபீல்டு க்ளாசிக்,  கம்பீரமாக நிற்க, அவன் பின் அமர யோசனையோடு நின்றாள். 

பின்னாலே வந்த மாரியம்மாள், “நேரமாகுதுன்னு சொன்ன… இப்ப என்ன யோசனை. ஏறு மங்கா!” அதட்டல் போட, வேறு வழியில்லாமல் பேக்கை இருவருக்கும் நடுவில் வைத்து இருபுறமும் கால் போட்டு அமர்ந்து கொண்டாள்.

“இதென்ன கைப்புள்ள கோடா. இதத்தாண்டி நீயும் வரமாட்ட. நானும் வரக்கூடாது அப்படித்தானே?” எனக் கேட்க, 

ஆமாம் என்பது போல் அமர்ந்திருக்க, கூடிய சீக்கிரம் மாமன் தோள்ல கிளி மாதிரி உக்கார வைக்கிறேன் என சபதம் எடுத்துக் கொண்டான். மனதிற்குள் தான். வாய்விட்டு சொல்லி வாங்கிக் கட்டிக் கொள்ளும் அளவிற்கு தைரியமில்லை. 

வழியைக் கவனித்தவளுக்கு ஒரு நாளில் புரியாதெனத் தோன்றியது. இவர்கள் வீடு தலைமுறைகள் கடந்த பழையவீடென்பதால், ஊர்க் கோடியில் இருந்தது. வீதிகளுக்குள் இடது வலது என சுற்றித்தான் பேருந்து நிலையம் வந்தான். மதுரை செல்ல வேண்டிய பேருந்தை ஷெட்டிலிருந்து எடுத்து வந்து பேருந்து நிலையத்தில் நிறுத்தியிருந்தனர். 

“என்ன தம்பி! நீங்க வந்துருக்கீங்க?” வழக்கமாக செல்ல வேண்டிய ஓட்டுனர் கேட்க,

“அடுத்த ட்ரிப் நீங்க போங்கண்ணே. இந்த ட்ரிப் நான் போறேன்.”

“இன்னைக்கி மட்டுமா? இல்ல… தெனமுமா தம்பி. ஏன்னா நாங்களும் இதே ரூட்ல ரூட்டப் போட்டவிங்கதான் “ என சிரித்தார். இதே ரூட்டில் பள்ளிக்கு வந்த பெண்ணைத்தான் அவரும் காதலித்து கல்யாணம் செய்துள்ளார். 

“அனுபவம் பேசுதோ. ஒரே ஆளுகங்கவும் தப்பிச்சீங்க. இல்லைனா அண்ணே சங்கதி அன்னைக்கே தெரிஞ்சுருக்கும்.” பதிலுக்கு இவனும் நையாண்டி பேசிவிட்டு ஓட்டுனர் இருக்கைக்கு முன் வழியாக ஏறினான். 

உள்ளே ஏறியவள், ஏதோ ஒரு இருக்கையில் அமர்ந்திருக்க, 

“இங்க வந்து உக்காரு.” ஓட்டுனர் இருக்கைக்குப் பின் இருக்கைக்கு அழைத்தான். 

“இங்கேயே இருக்கேன்” என்றாள் வீம்பாக. 

“போகப்போக கூட்டம் ஏறும். இங்க வந்தா… ஆர்த்தி பிள்ளையும் உங்கிட்ட வந்து உக்காந்துக்கும். நீ அங்க உக்காந்தா அந்தப்பிள்ள கூட்டத்த விலக்கிட்டு வர முடியாது.” என விளக்கம் கொடுக்க, அதுவும் சரித்தான் என முன் சீட்டிற்கு எழுந்து வந்தாள். 

வண்டியில் வரும் பொழுதே ஆர்த்திக்கு ஃபோன் செய்ததை கவனித்தானே. ஆர்த்தியும் நிலக்கோட்டையில் இவளோடு ஏறிக் கொண்டாள். 

சிலுக்குவார்பட்டி வர, பூ விற்பனை செய்பவர்கள் வண்டியை சூழ்ந்து கொள்ள, ஒரு பூப்பந்தை வாங்கியவன் பின் பக்கமிருந்த மங்கையிடம் திரும்பி நீட்ட, 

“நான் பூ வக்கிறதில்ல” என்றாள் பட்டென. 

“அன்னைக்கி வச்சுருந்தியே” என்றான் முதல்நாள் பார்த்த ஞாபகத்தில்.

“அன்னையிலருந்து தான் வெளிய எங்க போனாலும் வைக்கிறதில்ல” என்றாள் முகம் சுழித்து.  

“மங்கா, பூ வேண்டாம்னு சொல்லாத. எனக்கெல்லாம் இப்படியொரு அத்தை மகன் இல்ல.” ஆர்த்திக்கு அத்தனைக்கிடையிலும் தனக்கு ஒரு முறை மாமன் இல்லையே என்ற அங்கலாய்ப்பு. 

“மூடிட்டு வர்றியா?” அவளை அதட்ட,

“இது உனக்கில்ல. மேல அன்னாந்து பாரு. சாமிப்படம் இருக்கா. அதுக்கு போட்டுவிடு” என கொடுக்க, ஆர்த்தி உதடு மடித்து நமட்டுச் சிரிப்பு சிரித்தாள்.

“இந்த அவமானம் உனக்கு தேவையா? ஒழுங்கா கொடுத்தப்பவே வாங்கியிருக்கலாம்ல? இப்ப பாரு சாமிக்கு போயிருச்சு. என்னைய ஏன் மொறைக்கிற. எந்திரிச்சு சாமிக்கு போடு.” ஆர்த்தி நக்கலோடு சொல்ல, 

“ஒருத்திக்கு தான் இவ்ளோ பூ வாங்குறாங்களா?” என கேட்க, 

“வாங்குனா உனக்கு மட்டும்தான் வாங்குவாங்களா? கூட நானொருத்தி இருக்கேன்ல. என்ன விட்டுட்டு நீ மட்டும் வைப்பியா? அந்த யோசனைகூட உனக்கில்ல. நாம என்ன கொஞ்சமாவா பூ வைப்போம். பூ முதுகு மறைய வச்சுதானே பழக்கம். இப்ப பாரு உனக்குமில்லாம எனக்குமில்லாம சாமிக்கு போயிருச்சு” என வடை போச்சே லுக் ஆர்த்தி கொடுக்க, மறுபேச்சின்றி எழுந்து சாமி படத்திற்கு மாலையாகப் போட்டுவிட்டாள். 

மாமன் ஒரு நாள்

மல்லிகைப்பூ கொடுத்தான்

என் மாமன் ஒரு நாள்

மல்லிய பூ கொடுத்தான்

அடி ஆத்தி இது எதுக்கு நான்

நான் யோசனை பண்ணி பாத்தேனம்மா

அவன் வாங்கிக்க சொல்லி தந்தானம்மா

என்னதுக்குன்னான் ஏதுக்குன்னான்

சின்னபுள்ள நான் பச்சை புள்ளை நான்

வாசத்திலே மதி மறந்து

வாங்கிக்கிட்டனாம் வச்சிக்கிட்டேனாம்

மல்லிய பூ வாசம்

என் மாமன் மேல வீசும்

மாமன் ஒரு நாள்

மல்லிய பூ கொடுத்தான்

மாங்கா தோப்போரம்

நான் மறுநா போனேனாம்

தேங்கா பூவாட்டம்

நான் சிரிச்சிகிட்டிருந்தேனாம்

அடி ஆத்தாடி என்னோரமா

என் மாமன் வந்தான் அங்கே

ஒரு மாங்கா தந்தான் திங்க

என்னதுக்குன்னான் ஏதுக்குன்னான்

சின்னபுள்ள நான் பச்சை புள்ளை நான்

ஆசையிலே என்ன மறந்து

வாங்கிக்கிட்டனாம் தின்னுபுட்டேனாம்

மாமன் தந்த மாங்கா

நல்ல மல்கோவா தாங்க…

பாடல் ஒலிக்க ஆர்த்தி வாய்விட்டு சிரித்தாள். 

“எதுக்குடி இப்படி பஸ்ஸே திரும்பிப் பாக்குற மாதிரி சிரிக்குற?”

“அடியேய்! அண்ணே ஒனக்குதான் பூ வாங்கிருக்காங்க. நீ உன் முட்டக்கண்ண உருட்டிப் பாக்கவும் எதுக்குடா வம்புண்ணு சாமிக்கு போடச் சொல்லிட்டு உனக்கு மறைமுகமா பாட்டு போட்டுட்டாங்க.” ஆர்த்தி வாய்விட்டு சிரிக்க, அவளை நார் நாராக கிழித்து தொங்கவிடும் ஆத்திரத்தோடு பார்த்து வைத்தாள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top