மல்லி 16

“குட்டிம்மா!” கணபதி அழைக்க, துவைக்க துணிகளை அள்ளிக்கொண்டு கொல்லைப்புறம் வந்தவள் என்ன என்பது போல் நின்றாள். இங்கிருந்தவரை மகளை மடியில் வைத்து செல்லம் கொஞ்சியதெல்லாம் கிடையாது. ஆனால் குட்டிம்மா என செல்லப்பெயர் மட்டும் இத்தனை வருடம் கழித்து. எப்படி மனைவி மீதிருந்த ஆசையைக் காட்டத் தெரியவில்லையோ, அதே மாதிரி மகள் மீதிருந்து பாசத்தையும் வெளிப்படுத்த தெரியவில்லை. 

நாம் வாழ்நாளில் சந்திக்கும் வெகுசராசரி மனிதன். மனைவி கனவுகளின் உச்சம் என்றால் இவர் நிதர்சனத்தின் பிரதிபலிப்பு. மிகைப்படுத்துதல் இருந்தால் தான் கற்பனை சுவைக்கும். கவிதைக்கு பொய் அழகு என்றுதானே சொல்லப்பட்டிருக்கிறது. நிதர்சனத்திற்கு அந்தப் பொய்யும், மிகைப்படுத்தலும் உப்பு போல அளவோடு இருந்தால் தான் சுவைக்கும். கற்பனைக்கும், நிதர்சனத்திற்குமான புரிதல் இல்லாமல் தான் பல இடங்களில் தடுமாறி நிற்கிறது தாம்பத்யம். ஏட்டுச் சுரைக்காய் எப்படி கறிக்கு உதவாதோ,‌ அப்படித்தான் நாம் பார்ப்பதும், படிப்பதும் நிதர்சனமாகாது.‌ இன்று சமூக வலைத்தளங்கள் கனவை விதைத்து கவலையை அறுவடை செய்கின்றன. 

“ஒனக்கு ஏதாவது வாங்கணுமா? ரெண்டு நாள் லீவுதான. அத்த வீட்டுக்கு போயிட்டு வரலாமா?” கணபதி கேட்டதற்கு, அவள் யோசனையாகவே நிற்க,

“விருந்துக்கே உங்க அத்தை வரச்சொன்னாங்க. நாம போகல, லீவுதான. போய்ட்டு வரலாமா?”

 தயங்கியே கேட்டார். ஏனோ இன்னும் அதிகாரமாக மகளிடம் உரிமை கொண்டாட வரவில்லை. ஏதாவது பிடிக்காததை செய்து மகள் மீண்டும் மாமன் வீட்டுக்கு சென்றுவிட்டால் என்ன செய்வதென்று பயம்தான். 

“எனக்கு காலேஜ் அசைன்மென்ட் இருக்கு. முடிக்கணும்.” என்றவள் துணிகளை ஊறவைக்க சென்றாள். அதற்கு மேல் கணபதியும் மகளிடம் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை. 

இரண்டு வார்த்தை சேர்ந்தாப்பில் பேசுவதே அதிசயம். கேட்டால் கேட்டதற்கு பதில். இன்னும் தானாக வாய்திறந்து அப்பாவிடம் எதுவும் கேட்டதுமில்லை. பேசியதுமில்லை.

மாரியம்மாள் வந்து ஒரு மாதமாகிவிட, மகன் பேரன், பேத்திகளும் கண்ணுக்குள் நிற்க, பார்க்கும் ஆசை வந்தது. சனி,‌ ஞாயிறு‌ பள்ளி விடுமுறை என்பதால் அவர்களை பார்த்துவரச் சென்றுவிட்டார். 

கார்ப்பரேஷன் குழாய் தண்ணீர்தான். வரும்பொழுது கீழ் தொட்டியை நிரப்பிக் கொள்ள வேண்டும். கீழ் தொட்டியிலிருந்து மேல் தொட்டிக்கு ஏற்றிக்கொள்வர். 

குழாயைத் திறக்க தண்ணீர் வரவில்லை. மோட்டார் போடாமல் இருக்க, மேல்தொட்டி காலியாகி இருந்தது. துணியை அங்கேயே போட்டுவிட்டு மோட்டார் போட வந்தாள். ஃபோனில் இன்றைக்கு தனக்கு வர தோதுப்படாதென அக்காவிடம் பேசிக் கொண்டிருப்பது கேட்டது. எதிர் முனையில் சடைத்திருக்க வேண்டும். 

“எனக்கென்ன இங்க வேலையில்லையா? சாப்பாடெல்லாம் நான் பாத்துக்கறேன். வைக்கா!” என அதட்டுவதும் கேட்டது. 

மகள் வந்ததிலிருந்து அக்கா வீடு செல்லவில்லை. ஒரு மாத காலமாயிற்று. முற்றிலுமாக மதுவை தவிர்த்துவிட்டார் என சொல்லமுடியாது. மகளுக்குத் தெரியாமல் அளவாக வைத்துக் கொள்கிறார். 

தினமும் காலை, மாலை என கல்லூரி நேரத்திற்கு இரண்டு ட்ரிப்பும் வேந்தன் தான் போகிறான். காலையில் வண்டியில் வந்து அழைத்துச் செல்வான். நடக்கும் தூரமில்லை என்பதால், மாலை கணபதி கூப்பிட்டுக் கொள்வார். 

ஆம்னி பேருந்துகளுக்கு ஷெட் பெரியகுளம் என்றாலும் ரூட் பஸ்களுக்கு ஷெட்டும், அலுவலகமும் வத்தலக்குண்டு தான். பஸ் கம்பெனி தொடங்கும்பொழுது அங்கே வைத்தது. அதை மாற்றவில்லை. 

துணியை ஊற வைத்தவள், வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்துவிட்டாள். அவளுக்குதான் வைத்தது வைத்த இடத்தில் இருக்க வேண்டுமே. இந்த ஒரு மாதத்தில் இடம் மாறிய அனைத்தையும் ஒதுங்க வைத்தவள் அடுப்படி வர, நெஞ்சில் கைவைத்து அதிர்ந்து நின்றவிட்டாள். ஆண் மட்டும் புழங்கும் அடுப்படி எப்படி இருக்கும். 

இங்கு ஆக்கித்தந்ததைத்தான் சாப்பிட்டோமா என, அங்கிருந்த பாத்திரங்களையும், எண்ணெய்ப் பிசுக்கேறிய ஸ்டவ்வையும் பார்த்தவளுக்கு உடல் ஜிம்மென புல்லரித்தது. இன்று தானே அடுப்படிக்குள் வருகிறாள். 

முதல் வேலையாக அடிப்பிடித்த, அப்பத்தா காலத்து பாத்திரங்களை எல்லாம் ஓரங்கட்டினாள். எண்ணெய்ப் பிசுக்கு படிந்து, துருப்பிடித்த ஸ்டவ் முதற்கொண்டு, மசாலா டப்பாக்கள் வரை எல்லாவற்றையும் பழைய சாமானுக்குப் போட மூட்டை கட்டி வைத்தாள். எதற்கெனத் தெரியாமலே இடம் பிடித்திருந்த பித்தளை பாத்திரங்களையெல்லாம் பரண் ஏற்றமுனைய, எட்டவில்லை. மகள் வேலை செய்வதை பார்த்துக் கொண்டிருந்தவர், 

“அத கீழயே வச்சுரு குட்டிம்மா! நான் அப்பறமா மேல ஏத்திக்கிறே” என கூற, ஓரமாகக் கூட வைக்கவில்லை. வெளியே கொண்டுவந்து வைத்துவிட்டாள். சோப்புத் தண்ணீர் கலந்து தரை முழுதும் தெளித்து ஊறவிட்டாள். அவள் வந்த பொழுது ஆள்விட்டு சுத்தம் செய்தது. அதற்குள் எண்ணெயாக்கி வைத்திருந்தார். 

சிமெண்ட் தரைதான். ஒரு பெண் புழங்கியிருந்தால் தன் வசதிக்கு தகுந்தவாறும், காலமாற்றத்திற்கு ஏற்றவாறும் அடுப்படியை  அப்டேட் செய்திருப்பாள். ஆண்கள் தானே, எதுவும் தெரியவில்லை என்பதைவிட தேவைப்படவில்லை. இருப்பதைக் கொண்டு ஒப்பேற்றியுள்ளனர்.

கனகம் இறந்த பிறகு ஒண்டிக்கட்டையான மாமனை தனியே விடாமல் பெரும்பாலும் தேனிக்கே அழைத்துச் சென்றுவிடுவான். அம்மையப்பனுக்கு பயந்தாவது அதிகமாக போதையேற்றாமல் அளவோடு வருவார் என்று. அப்படியே இங்கிருந்தாலும் தூங்கும் நேரம் மட்டும்தான் வருவதே. அதனால் வீட்டு பராமரிப்பு என்பதே இல்லாமலே போய்விட்டது. 

அத்தை செல்வி மற்ற விஷயங்களில் எப்படியோ, வீட்டை பராமரிப்பதில் கில்லாடி. அன்னபூரணி புழங்குமிடம் என எப்பவும் அடுப்படி பளிச்சென இருக்கும். இவளுக்கு விபரம் தெரிந்து, மாமன் வீடும் சிமெண்ட் தரையிலிருந்துதான் டைல்ஸ்க்கு மாறியது. ஆனால் இங்கு வசதியிருந்தும் அப்படியே இருந்தது. 

வலதுபக்கம் மூன்று அறைகள், இடதுபக்கம் மூன்று அறைகள் நடுவில் அகன்ற வராண்டா என சொல்லப்படும் பட்டாசாளை கொண்ட பெரிய காரை வீடு. அப்படியே முன் வாசலுக்கு நேர் எதிர் பின்வாசல். மாட்டுக் கொட்டகையாக இருந்தது இப்பொழுது கொல்லைப்புறம். அங்கெல்லாம் சதுரவடிவ பட்டியக்கல்லே பதிக்கப்பட்டருந்தது. அதைத்தான்டி ஒரு ஆள் மட்டத்திற்குமேல் கருங்கல்லாலான ஒன்றரையடி அகலத்தில் சுற்றுமதில். இப்பொழுது தலை தெரியுமளவிற்கு சுற்றுமதில் குறைந்துவிட்டது. இல்லையில்லை தெரு உயர்ந்துவிட்டது.

அந்தக்கால வீதிகள் எல்லாம் மாட்டு வண்டி செல்லும் அகலம்தான். அதனால் முன் வாசல் ஒரு தெரு என்றால் பின்வாசல் மற்றொருதெருவில் இருக்கும்.  

மச்சு வீடு. மச்சு முழுவதும் சிவப்பு ஓடு பதித்த தரை. மாடியில் ஒவ்வொரு அறையின் நடுவிலும் வட்டமாக ஒரு துளை இருக்கும். அந்தக்காலத்தில் நெல், சோளம், கம்பு போன்ற தானியங்கள் மாடியில் காயவைத்தால் அதன் வழியாகத்தான் தள்ளி, கீழிருந்து கோணியில் பிடித்துக் கொள்வர். 

வலது பக்கம் முதல் அறைதான் சமையலறை. இடதுபக்கம் மாடிப்படி. எப்பொழுதும் தரையில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம்தான் என்பதால் சாப்பாட்டு மேஜை என்று எதுவுமில்லை. முன்வாசலில் தேக்காலான கனத்த ஒற்றைக்கதவு. கதவில் இத்தனை வருடங்களுக்குப் பிறகும் பித்தளை குமிழ்கள் அப்படியே மெருகு குலையாமல் இருந்தன. மேல் கூரையில் ஒரு ஆள் கட்டிப்பிடிக்கும் அளவிற்கு பெரிய பெரிய உத்திரக்கட்டைகள் எனப்படும் குறுக்குக்கட்டைகள். புரிய மாதிரி சொல்லணும்னா பீம்(Beam). அதில் தொட்டில், ஊஞ்சல் போட ‘ய’ வடிவ கொக்கிகள். மொத்தத்தில் புதுமை எனும் அரிதாரம் பூசாத, பழமை மாறாத வீடாகவே இருந்தது. 

சின்ன சின்ன மராமத்து வேலைகள் பார்த்து இந்தப் பழமையை அப்படியே மீட்டெடுக்கும் ஆசை வந்தது அவளுக்கு. இவளுக்கு இந்த மாதிரி விண்டேஜ் கலெக்ஷன் என சொல்லப்படும் பழைய பொருட்கள் மீது ஆர்வம் அதிகம். தேடி வாங்க முடியாது. ஆனால் நம் வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை பாதுகாப்போமென எடுத்து வைத்துக் கொள்வாள். இந்தக் காலத்துல தண்டட்டி யாரு போடப்போறா என மாற்ற இருந்த தனது கொள்ளுப்பாட்டி தண்டட்டியைக்கூட மாரியம்மாளிடமிருந்து வாங்கி வைத்துக்கொண்டாள். இப்பொழுது கூட எல்லாவற்றையும் வெளியேற்றியவள் மரத்தாலான அஞ்சறைப் பெட்டி, ‌ இருபத்தியொரு குழி கொண்ட பனியாரச்சட்டி, பித்தளை பூண் போட்ட சேர்படி, நெல் அளக்கும் மரக்கால், வெண்கலக் கும்பா எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டாள். குக்கர் வந்த பிறகு அரிசி அளப்பதெல்லாம் டம்ளர் கணக்குதானே. 

காலையிலேயே வேலை ஆரம்பித்துவிட பசிக்க வேறு செய்தது. சமையல் மேடை, தரையெல்லாம் தேய்த்துக் கழுவி நிமிரவே மணி பத்தைத் தொட்டது. இனி துணி வேறு துவைக்க வேண்டும். ஒவ்வொன்றையும் திரும்ப திரும்பக் கழுவினாள். அவளுக்கே திருப்தியான பிறகுதான் நிமிர்ந்தாள். அதற்கே ஒரு டேங்க் தண்ணீர் காலி. மீண்டும் வெளியே வந்து மோட்டார் போட்டாள். ஐநூறு லிட்டர் கொள்ளளவு கொண்ட சின்டெக்ஸ் டேங்க்தான். கணபதிக்கும் விளங்கவில்லை. இதற்கே இவ்வளவு தண்ணீர் செலவழியுமா? முன்ன பின்ன செத்துருந்தாதான சுடுகாடு தெரியும் என நினைத்தார். 

அதற்குள் அவளும் வியர்த்து விறுவிறுத்து நிற்க, சாப்பாட்டோடு வேந்தன் வந்துவிட்டான். மகள் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் ஃபோன் செய்துவிட்டார் அக்காவிற்கு. மகள் வீட்டு வேலை செய்வதைப் பற்றி பெருமை பீத்ததான், வேறெதற்கு! 

சனிக்கிழமை அம்மையப்பன் வீட்டில் வழக்கம்போல எண்ணெய்க்குளியலோடும் நாட்டுக்கோழி குழம்போடும் தான் விடிந்தது. 

இட்லியும் குழம்பும்தான் எடுத்து வந்தான். 

பசியில் கைகால் நடுங்க ஆரம்பித்துவிட்டது அவளுக்கு. அவசரமாக குளித்து வந்தாள். அதற்குள் கணபதி எல்லாம் எடுத்து வைத்து தயாராக இருந்தார். மகள் குளித்துவர அவளுக்கும் எடுத்து வைக்க தட்டை எடுக்க, தட்டை வாங்கியவள் மீண்டும் ஒருமுறை கழுவி வந்தாள். சற்றுமுன் அவள் தான் எல்லாம் கழுவி வைத்தாள். மகளுக்கு கரிசனையாய் பார்த்து பார்த்து கறியை எடுத்துப் போட்டார். பொறுமையாகத்தான் சாப்பிட்டாள். கணபதி சீக்கிரம் சாப்பிட்டு எழுந்து கொண்டார்.

வேந்தன், கைப்பிடி போன குக்கர், மூடியில்லாத மிக்ஸி ஜார் முதற்கொண்டு அடுப்படியில் இருந்தெல்லாம் மூட்டை கட்டி வெளியே இருந்ததைப் பார்த்தான். 

“எல்லாம் வெளிய போயாச்சே. எதவச்சு சமைக்கறது?” 

“எல்லாம் புதுசா வாங்கணும்.” 

“சரி… கிளம்பு. நம்ம கடைக்குப் போகலாம். அடுப்படிக்கு என்னென்ன தேவையோ நீயே பாத்து வாங்கு.” 

“அதெல்லாம் எனக்கு வாங்கத் தெரியாதே?”

“நீ கடையில வந்து பாரு. எதெல்லாம் தேவைப்படும்னு தோணுதோ அதையெல்லாம் எடுத்து வை. அம்மாவுக்கு ஃபோன் பண்ணி கேட்டுக்கலாம்” என சொல்ல அவளுக்கும் சரியெனப்பட்டது. 

ஊறவைத்த துணியை துவைத்துவிட்டு கிளம்பலாம் என துவைக்க சென்றாள். ஊறவைத்ததென்னவோ ஒரு வார துணிதான். அதற்கே மீண்டும் அரை டேங்க் தண்ணீர் காலியாகியிருக்கும். அலசி அலசி தண்ணீரை கவிழ்த்தாள்.

அதற்குள் பழைய இரும்பு கடைக்காரனை வேந்தன் வரவைத்தான். பாத்திரக்கடையில் மாற்ற வேண்டியதை எடுத்து வைத்துக் கொண்டு மற்றதெல்லாம் எடைக்குப் போட்டான். 

துணி காயப் போடும்பொழுது ஒரு துணி கீழே விழுந்துவிட, மீண்டும் எல்லா துணிகளையும் எடுத்து அலசி காயப்போட்டாள். இத்தனைக்கும் கீழே சிமெண்ட் தரையில்தான் விழுந்தது. எடுத்து உதறிப் போட்டாலே போதும். ஆனால் கொடியில் கிடந்த விழாத துணிகளையும் எடுத்து சேர்த்து அலசிப் போட்டாள். மீண்டும் ஒருமுறை குளித்து கிளம்பினாள்.

சற்று அதிகமாக குழாயைத் திறந்தாலே, பொம்பளப்பிள்ள தண்ணீர் சிறுத்துப் புழங்க வேண்டும், அப்பதான் கையில காசு தங்குமென அம்மா, தங்கையை அடிக்கடி திட்டுவது வேந்தனுக்கு நினைவில் வந்துபோனது. 

தண்ணீரில் சிக்கனமாக இருக்கும் பெண்கள் எல்லாவிதத்திலேயும் சிக்கனமாக இருப்பார்கள் என சொல்வதுண்டு. அப்ப ஆம்பளைங்களுக்கு என வரிந்து கட்டக்கூடாது. வீட்டில் தண்ணீர் அதிகம் புழங்குவது பெண்கள்தான். அதற்காகவும் சொல்லியிருக்கலாம். தண்ணீரின் அவசியமறிந்தும் சொல்லியிருக்கலாம். 

நீரின்றி அமையாது உலகு என உணர்ந்து சொன்னவர்கள் நாம். நீரை உயிர் காக்கும் அமிழ்து என்றார் வள்ளுவர். எது ஒன்றும் வீட்டுப் பெண்களிடமிருந்து தான் ஆரம்பமாக வேண்டும். அது அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்படும். 

இன்று பல நீரோடைகள் சாக்கடையானதற்கு முக்கிய காரணம் மக்கள் தொகை மட்டுமல்ல. அதிகப்படியான நீர்ப்புழக்கமும் தான். அன்று குளித்தல், துவைத்தல் எல்லாமே கிணறு, ஆறு, குளம் தான். ஊருக்கே பொதுவாக ஒரே ஒரு கிணறுதான் ஊரணியாக இருக்கும். இன்று வீட்டு வீட்டுக்கு இருபது அடிக்கு ஒரு ஆழ்துளைக்கிணறு போட்டு நீரை உறிஞ்சுகிறோம். கொஞ்ச நாள்ல வெறும் காத்துதான் வருதுனு சடச்சுக்கிறோம். 

அன்று வீட்டில் தண்ணீர் புழக்கம் குறைவு. ஆனால் இன்று அடுப்படியிலேயே, பாத்திரம் கழுவ ஒரு குழாய், கைகழுவ தனியாக ஒரு குழாய். குளியலறையில் குளிக்க ஒரு குழாய், முகம் கழுவ ஒரு குழாய். குழாயைத் திறந்தால் அருவி மாதிரி தண்ணீர் கொட்டவேண்டும். அந்தத் தண்ணீர் எல்லாம் எங்கு போகும். சாக்கடையாக நீர்நிலைகளில் தானே கலக்கும்.

 கால மாற்றத்தில் நமக்கு கிடைத்த சாதகங்களைவிட, இயற்கைக்கு நடந்த பாதகங்கள் தான் அதிகம். இன்னைக்கு ஆறு, குளம்னு தேடிப்போக முடியாதுதான். ஆனால் பல கிணறுகள், ஏறி, குளங்கள் தூர்ந்து காணாமல் போய்விட்டனவே. நாம் சிறுவயதில் பார்த்த பல நீரோடைகள் இன்று சாக்கடையாக ஓடுகின்றன. குளங்கள் சாக்கடை தேங்கும் குட்டையாகிவிட்டன. தொழிற்சாலைக் கழிவுநீரால்  இல்லை. வீடுகளிலிருந்து வரும் கழிவுநீரால் மட்டுமே. 

அவளின் செய்கை அதிகப்படியெனத் தோன்றியது வேந்தனுக்கு. மறுபடியும் குளித்து வந்தவளை, 

“இப்பதான குளிச்சுட்டு வந்த? எவ்ளோ தண்ணி செலவழிப்ப” என கேட்டதற்கு பசியில் அவசரமாக குளித்து வந்ததாகவும், துவைத்ததில் மீண்டும் வியர்த்துவிட்டதாகக் கூறினாள். இந்த வெயிலுக்கு அதுகூட ஏற்றுக்கொள்ளும்படியாகத்தான் இருந்தது. ஆனால் ஒரு துணி விழுந்ததற்கு, ஒரு வாலி துணியையும் மறுபடியும் யாராவது அலசுவார்களா? 

“டேய்! எம்புள்ள வந்த பின்னாடிதான் வீடு வீடாட்டம் இருக்கு. நீ என்னடான்னா தண்ணிய கணக்கு பாக்குற?”

“உங்க மக பொழங்குற தண்ணிக்கு, கும்பக்கரை அருவியத்தான் நம்ம வீட்டுக்கு திருப்பிவிடணும்” என்றவன் சிந்தனை  தடைபட்டது மங்கையின் முகம் பார்த்து. 

வேந்தன் வந்தது அவனது என்ஃபீல்டில். கல்லூரி செல்லும் போது என்றால் குறுக்கே பேக்கை வைக்கலாம். இப்ப என்ன செய்வது என யோசித்து நின்றாள். அவளே முடிவெடுக்கட்டும் என அவனும் கைகட்டி வேடிக்கை பார்த்தான். ஓடும் தண்ணீரில் முகம் பார்ப்பது போல் குழப்பமாக பல பரிமாணம் காட்டியது அவள் முகம்.

“வீட்டுக்கு வரும்போது, வாங்குன சாமானெல்லாம் எப்படி கொண்டு வர்றது?” ஆகப்பெரிய சந்தேகம் கேட்டாள்.‌

“அதுக்கு?” என புருவம் சுருக்க,

“கார்ல போகலாம்” என மகள் முடிக்கவில்லை. அதற்குள்,

“ஆமாடா மாப்ள. அக்கா என்னையும் வரச் சொல்லுச்சு. நான் தேனில எறங்கிக்கறேன். நீங்க ரெண்டு பேரும் கடைக்கு போய்ட்டு வாங்க.” மாமனும் உடன் கிளம்பி வர,

‘உங்க யோசனையில தீய வைக்க. இவ எப்படி வண்டியில எம்பின்னாடி உக்காந்து வர்றானு பாக்கலாம்னு பாத்தா கார்ல போகலாம்னு சொல்லியாச்சு. யோவ் மாமா! நான் பூனைய மடில கட்டிட்டு சகுனம் பாக்குறேன்னு நல்லா தெரியுதுய்யா. வேந்தா! மக சுரைப்பழம்னா, அப்பா விருசம்பழமா இருக்காருடா. இவங்கள வச்சுக்கிட்டு எப்ப நீ கரைசேரப்போறியோ? சொக்கா! இப்படி தருமி மாதிரி தனியா புலம்ப வச்சுட்டீரே?’ தனக்குள் நொந்து கொண்டு வண்டியை அங்கேயே விட்டுவிட்டு காரை எடுத்தான். 

கணபதி முன்னால் ஏறிக் கொள்ள, மங்கை பின்னால் அமர, மாமனை அவன் திரும்பிப் பார்த்த பார்வையில், 

“என்னடா மாப்ள?” வெள்ளந்தியாய்க் கேட்டாரே பார்க்கலாம், மறுப்பாக அவன் தலையை ஒரு மார்க்கமாக உருட்டியதில், மங்கைக்கே சற்று இதழ் வளைந்தது குறும்பாக. சட்டென மின்னலின் வெளிச்சம் ஒரு நொடி. அத்தி பூத்தார் போல் இன்று தான் அவள் சிரிக்க பார்க்கிறான். இதுவும் நல்லதுக்கே என நினைத்தான், கண்ணாடியில் அவளை பார்த்துக் கொண்டே. 

அவன் பார்ப்பது தெரிய மீண்டும் சுருங்கிக் கொண்டாள்.‌ மீண்டும் கண்கள் வெறுமை சூழ பார்வையை வெளிப்புறம் திருப்பினாள். வீதிகளை கடந்து சாலையைத் தொட்டதும் கார் வேகமெடுக்க, முடிந்தவரை முன்பக்கமாக பார்வையை செலுத்தவில்லை. 

முன்னால் இருந்த ஆண்கள் இருவருக்கும் வேகம் சர்வசாதாரணம். மங்கையால் தான் நிலைகொள்ள முடியவில்லை. எதிரே ஒரு லாரி வேகமாக வர, இறுகக் கண்களை மூடிக் கொண்டாள். விர்ரென அது கடந்த சப்தம் காதில் விழுந்தபிறகுதான் கண்களைத் திறந்தாள். மறந்தும் பார்வையை சாலையில் வைக்கவில்லை. உள்ளும் புறமும் பார்வை அல்லாட, ஃபோனை எடுத்துப்பார்க்க ஆரம்பித்துவிட்டாள். ஆனால் படபடப்பு மட்டும் அடங்காமல் இதயம் எகிறியது. வேகமென்றால் பயமோ என சற்று வேகத்தைக் குறைத்தான் கண்ணாடி வழியாக அவளை அவதானித்தவன். பஸ்ஸிலும் அவள் முகம் அடிக்கடி இறுகுவதை முன்னால் இருக்கும் பெரிய கண்ணாடியில் கவனித்திருக்கிறான். 

“என்னடா மாப்ள கட்டவண்டியா ஓட்டுற. அடிச்சு ஓட்டுடா” என கேலி செய்ய, அதற்குள் தேனி வந்துவிட, கணபதி இறங்கிக் கொண்டார். சின்னமனூர் பாத்திரக்கடை சென்றனர் இருவரும். கடை முன் அவளை இறக்கிவிட்டவன், உள்ளே போகச் சொல்லிவிட்டு, காரை ஓரமாக நிறுத்தி இறங்கினான்.‌ அதற்குள் தெரிந்தவர் எதிர்ப்பட்டு இவனோடு பேச ஆரம்பிக்க, அங்கே சற்று தாமதமாகியது. 

உள்ளே வந்தவளுக்கு எங்கே ஆரம்பிப்பதென தெரியவில்லை. கீழே எல்லாம் பித்தளைப் பாத்திரங்கள். மேல் தளம்தான் எவர் சில்வர் போன்ற வீட்டுக்குத் தேவையான பொருட்கள். அதற்கு மேல் தளம் எலக்ட்ரிக் பொருட்களும், ஃபர்னிச்சர்களும். 

கல்லாவில் செழியன்தான் இருந்தான். அம்மையப்பன் அவர்களது பிரத்யேக அறைக்குள் சாப்பிட சென்றிருந்தார். கல்லாவில் இருந்ததனால் அத்தை மகன் இளையவனாகத்தான் இருக்கும் என்பது இவளது யூகம். வேந்தன் முகஜாடையும் தெரிந்தது. அவனுக்குதான் மங்கையை அடையாளம் தெரியவில்லை. 

“வாங்கம்மா! என்னம்மா பாக்குறீங்க?” என்றான் பொதுவாக. அவன் யாரோ என நினைத்துப் பேசியது இவளுக்கு சுவாரஸ்யம் கூட்டியது. மெதுவாக இறுக்கம் தளர்ந்து குறும்பு எட்டிப் பார்க்க, அத்தை மகனிடம்,

“பாத்திரக்கடையில என்னத்த பாப்பாங்க. பாத்திரம் தான்.” 

“அதுசரி, நாங்கூட சேலை பாப்பாங்களோனு நெனச்சேன். நீங்க முழிச்சுட்டு நிக்கறதப் பாத்தா ஃபேன்ஸி ஸ்டோர் போகவேண்டியவங்க கடைமாறி வந்துட்டீங்களோனு தோணுச்சு. ஃபேன்ஸி ஸ்டோர் பக்கத்துலம்மா.”

“ஏன் பொண்ணுகன்னா ஃபேன்ஸி ஸ்டோர்தான் போவாங்களா?” 

“வயசுப் பொண்ணுகன்னா அங்கதான் போவாங்க. நீங்க எப்படி, வயசுப் பொண்ணா? இல்ல கெழவியா?” அவள் எகத்தாள பதிலில் இவனும் நக்கலாகவே பதில் கொடுக்க,

“அப்ப கெழவிகதான் இந்தக் கடைக்கு வருவாங்கனு சொல்லுங்க. வயசுப் பொண்ணுக வரமாட்டாங்க. நான் கெழவியா, கொமரியாங்கறத பின்னால ஒருத்தர் வருவாரு. அவர்கிட்ட கேட்டுக்கோங்க.”

“ஏம்மா! இப்ப என்ன வாங்க வந்தீங்க? அதச் சொல்லுங்க மொதல்ல!”

“ஏன், ஏதாவது வாங்கணும்னாத்தான் வரணுமா?”

“கடைக்கி வேற எதுக்கு வருவாங்க?”

“நீங்க வந்துருக்கீங்களே. பாத்திரம் வாங்கவா வந்தீங்க?”

“ஏம்மா, பொழுது போகாம சுத்திப் பாக்க வந்தீங்களா? இல்லைனா டூர்னு உள்ளூரச்சுத்திக்காட்டி யூ ட்யூப்ல வீடியோ போடுற ஆளா?” என அவன் சற்றே எரிச்சலாக, போதும் என நிறுத்திக் கொண்டவள், 

“சமையல் பாத்திரமெல்லாம் எங்க இருக்கு?” என.

“மேல போங்கம்மா!” என்றவன் ஒரு விற்பனை பெண்ணை கூடவே இருக்கும்படி உடன் அனுப்பி வைத்தான்.

 ‘நல்லா பசி நேரத்துல வந்து சேருதுக பாரு. சரியான திருக்கோசு புடுச்ச பொண்ணா இருக்கும் போல. யாரு மாட்டுனதுன்னு தெரியலையே?’ தனக்குள் பேசிக் கொண்டிருக்க, வேந்தன் கடைக்குள் வந்தான். 

“வாண்ணே! இன்னைக்கி வர்ற மழை உனக்குதான். அதிசயமா கடைக்கு வந்திருக்க?” அண்ணன் கடைக்குவந்த ஆச்சர்யம் அவனுக்கு. அதிகமாக இந்தப்பக்கம் வரமாட்டான். 

“எங்கடா அவ?” என்றான் கடைக்குள் பார்வையை சுழலவிட்டு.

“யாருண்ணே?”

“உங்க அண்ணிக்காரிதான்.” அவன் கேட்ட பிறகுதான்,‌ வந்தது மாமன் மகள் என்றே புரிந்தது. 

“அட! அந்தக் கெழவி புருஷன் நீதானா?” என்றான் பளிச்சென சிரித்து.

“என்னடா ஒளர்ற. யாருடா இங்க கெழவி?” 

“மேல போயிருக்காங்க. ஆனாலும் வாய் ஓவர்தான்ணே.”

“அவளுக்கா! பேசவே கூலி கேப்பாளேடா?” 

“சும்மா பேசுனதே இம்புட்டா. அப்ப கூலி கொடுத்து பேசச் சொன்னா உன்னைய வித்துருவாங்க?” 

“அவளாவது பேசறதாவது?” என்றவன் மேலே சென்றான். 

விற்பனை பெண்ணை துணைக்கு வைத்துக் கொண்டு, என்ன எடுப்பதென தெரியாமல் நின்றாள். 

“நீ போம்மா! நான் பாத்துக்கிறேன்.” என அனுப்பிவிட்டான். அவள் பார்த்து கொண்டே நிற்க,

இது வேலைக்காகாதென அம்மாவிற்கு அழைத்துவிட்டான். வீட்டிற்கு சென்ற கணபதி ஏற்கனவே அக்காவிடம் சொல்லியிருப்பார் போல. வீட்டில் கால் வைத்ததில் இருந்து மகள் பெருமைதான் தமக்கையிடம். மகள் வீட்டு வேலை செய்ததில் தலைகால் புரியவில்லை கணபதிக்கு. 

“என்னடா! எல்லாம் எடுத்தாச்சா?” என்றார் எடுத்தவுடன்.

“உங்க தம்பி மக வேடிக்கை மட்டும்தான் பாக்குறா. ஒன்னும் தெரியல” என அம்மாவிடம் குறைபடிக்க, அவனை முறைத்தவள், வேகமாக பத்து லிட்டர் குக்கர் ஒன்றை எடுத்து வைத்தாள். 

“ம்மா! பத்து லிட்டர் குக்கர் எடுத்துருக்கா. ஊருக்கே சமைக்கப்போறா போல.”

“அவளுக்கு என்னடா தெரியும்? நான் சொல்லச் சொல்ல நீ எடு.” என குக்கரிலிருந்து, மிக்ஸி, சம்படம் என ஒவ்வொன்றாக சொல்ல எடுத்து வைத்தான்.  

“ம்மா! சீரா வாங்குறோம். இவ்ளோ சொல்றீங்க.?”

“அத நீ உன் மாமங்கிட்ட வாங்கு! இது இப்போதைக்கு வீட்டுக்குத் தேவையானது மட்டும் தான்.”

“இப்பதான் தெரியுது. ஏன் அப்பா உங்கள கடை பக்கமே வரவிடமாட்டேங்கிறார்னு.”

“உங்க அப்பா நான் சொன்னா போதும்.  எடுத்துட்டு வந்துருவார்டா. உன்னய மாதிரியே மத்த ஆம்பளைங்க நெனச்சா நமக்கு ஏவாரம் எப்படிடா ஓடும்.” 

“உங்க வீட்டுக்காரர் பெருமைய அப்பறம் பேசுங்க. இப்ப இதெல்லாம் எடுத்துட்டு போகணுமே?” அம்மாவும் மகனும் சகஜமாக பேசிக் கொள்வதையே கண்ணிமைக்காமல் பார்த்தாள். 

“அதெல்லாம் நாளைக்கு நம்ம டெலிவரி வண்டியில அனுப்பிக்கலாம். செழியன்ட்ட துண்டா எடுத்து வைக்கச் சொல்லிட்டு ரெண்டு பேரும் வீட்டுக்கு வாங்க. நைட்டே திவ்யாவும், மாப்பிள்ளையும் வர்றோம்ன்னு ஃபோன் பண்ணியிருக்கா உன் தங்கச்சி. ஒரு மாசம் கழிச்சுவர்றாங்க. அவளையும் கூட்டிவா.” தாமரை ஆணையிட, தாய் சொல்லைத் தட்டாத தனயனாக, அவளை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டான் மங்கையின் வேந்தன்.  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top