“திவ்யா என்னதிது!”
கண்கள் சிவந்து நின்ற தங்கையை வேந்தன் செல்லமாகக் கடிய, கரைகடக்க எத்தனித்த கண்ணீர் கட்டுக்குள் நின்றது. பதில் பேசாமல் மனம் வெதும்பி நின்றாள் பெண். பார்த்தவனுக்கும் நெஞ்சம் இளகியது.
வளிய வளிய சந்தோஷமும், நாணமுமாக தொடங்கிய நாள். ஒவ்வொரு நிகழ்வுகளும் நினைவுப் பெட்டகத்தில் போட்டு வைக்க வேண்டியது. இந்நேரம் கேலியும் கிண்டலுமாக மறு வீடு சென்றிருக்க வேண்டும். பிறந்த வீட்டு சீருக்கிணையாக, பிறந்தவீட்டு நினைவுகளோடு, விரும்பாத பிரிவை விரும்பியே ஏற்று, ஆயிரம் கனவுகளோடும், இனம்புரியா தவிப்போடும் புக்ககம் திரும்பியிருக்க வேண்டும்.
இப்பொழுது என்னவென்றால் புகுந்த வீட்டாரை எதிர்கொள்ளவே பயந்தாள் பெண். இதன் பின் விளைவுகளை எண்ணி.
சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து வாழ்த்தியருள எனத்தான் பத்திரிகை அடித்து அழைப்பு விடுக்கிறோம். வாழ்த்த வந்தவர்கள் கிடைத்த சந்தர்ப்பத்தில் தங்கள் வீட்டில் பெண்ணெடுக்காத ஆற்றாமையை இவள் காதுபடவே சாடை பேசி குளிர்காய்ந்து சென்றிருக்க,
பத்து சொல்லுல ஒரு சொல்லு நச்சு சொல்லு என பாக்யத்திற்கும் மனம் அலைக்கழிக்க, அடுத்து எந்த சடங்கும் குலசாமியக் கும்பிட்ட பிறகுதான் என ஊன்றி நின்றுவிட்டார். பெண் வீட்டாரும் மறுத்துப் பேசும் நிலைமையில் இல்லை. பிரச்சினை செய்தது பெண் வீட்டு சொந்தங்களாயிற்றே.
“இப்ப என்ன? இன்னைக்கி வர்றது மூனாம் நாள் வரப்போற. அவ்வளவு தானே? கல்யாணத்துக்கு முன்னாடி எவ்ளோ தெளிவா பேசின. இப்ப என்னாச்சு திவி? இப்ப கிளம்பிப் போனாலும் மறுபடியும் திரும்ப லேட்டாகும். விளக்கு வச்சபின்னாடி பிறந்த பிள்ளைய வீட்டவிட்டு அனுப்ப மாட்டோம்னு அம்மாவும் சொல்லுவாங்கதான. அப்படி அம்மா சொன்னதா நெனச்சுக்கோ. எதையும் மண்டையில ஏத்திக்காத.”
தானும் ஆதரவாகப் பேசுகிறேன் என தழைந்து பேசினால் தங்கை மேலும் துவண்டு விடுவாள் என தெரிந்து சற்று கண்டிப்பு காட்டினான் குரலில்.
பிரச்சினைக்கு வெளியில் இருந்து சிந்திப்பது எளிது. அதுவே பிரச்சினைக்குள் இருந்து யோசிக்கும் பொழுது மனம் அல்லாடத்தானே செய்யும். அடுத்தவர்களுக்கு ஒன்னுன்னா எளிதாக தீர்வு சொல்லுவோம். நமக்குன்னு வரும்போது குழம்பி நிற்போம். அந்த நேரத்திலும் தெளிவாக யோசிப்பவர்கள் தான் தனித்துவம் பெறுகிறார்கள். பதட்டமும் குழப்பமும் இருக்கும் பொழுது முடிவை ஒத்திவைப்பது உத்தமம். அதைத்தான் வேந்தனும் தங்கைக்கு அறிவுறுத்தினான்.
“மாப்பிள்ளையும் பிள்ளைய தனியா விட்டுட்டு போயிட்டாருடா.” கூடவே தாமரையின் அங்கலாய்ப்பு வேறு. பெற்றவளுக்கு பிள்ளையின் சிறு கவலையும் பெரிதாகத்தானே தெரியும்.
“அம்மாஆ!” என அலுங்காமல் குரலை உயர்த்தினான். தங்கையே பயந்து, குழம்பி நிற்கும் பொழுது அதை தூண்டிவிடுவது போல என்ன பேச்சிது.
மறு வீடு செல்லவில்லை என முடிவாகவும், இருப்பவர்களுக்கு அங்கேயே மதியச் சாப்பாடு ஏற்பாடு செய்யவும், மண்டபத்தின் கணக்கு வழக்கு முடிக்கவும் மதியழகன் சென்றுவிட்டான்.
நீங்களாவது சொல்லுங்களேன் என இறைஞ்சுதலோடு பார்த்த திவ்யாவின் பார்வையை எதிர்நோக்க முடியாமலும் தான். யாருக்கென்று பேசுவான். எடுத்தவுடன் பொண்டாட்டிக்கு சாதகமாகவும் பேசமுடியாது. அம்மாவையும் மறுதலிக்க முடியாது. பாக்யம், மகளை அழைத்துக் கொண்டு மீதமிருந்த சமையல் பொருட்களை எடுத்துவைக்க கிளம்பிவிட, திவ்யா தனித்து நின்றாள்.
மாணிக்கம் இன்னும் நடந்து கொண்டிருந்த சொச்ச பந்தியை இறுதிவரை நின்று கவனித்துக் கொண்டார். யாரும் சாப்பிடாமல் சென்றுவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க, அம்மையப்பன் சீர் வரிசைகளை கடைப் பையன்களை வைத்து வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தார் சம்பந்தி வீடு கொண்டுபோய் சேர்க்க.
“மொத நாளே நமக்கும் இந்த ஊருக்குமான ராசி பேசுது.” வித்யாவதி பற்றாக்குறைக்கு தன்பங்குக்கு விசிறி விட, உதவிக்கிருந்த கடைப் பையனை வேந்தன் அழைத்தான். சித்தியை பஸ் ஏற்றிவிடச் சொல்லி அனுப்பிவைத்தான்.
“சித்தி, தம்பிக அங்க தனியா இருப்பானுக. நீங்க கிளம்புங்க!”
தன் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து எண்ணிக்கூட பார்க்காமல் கத்தையாக சித்தி கையில் திணிக்க, மறுபேச்சு பேசாமல் கிளம்பிவிட்டார். மாமன் இருந்தால் கொடுத்துதான் அனுப்பிவைப்பார் எனத் தெரியும். அவரும் அண்ணனிடம் வாங்காமல் இடத்தை காலி செய்யமாட்டார்.
இந்த மாதிரி பேச்சுக்கள்தான் பாக்கியத்தையும் பயமுறுத்தியது. முதல் நாளே இப்படியா என ஆளாளுக்கு ஒன்று பேச, பெண்கள் மனது எப்பொழுதும் மற்றவர்கள் வாய்க்குப் பயப்படுவது தானே. ஏதாவது அவச்சொல் விழுந்துவிட்டால் என மனம் அடித்துக்கொள்ளும். இந்த மாதிரி நேரங்களில் குலசாமிக்கு கும்பிடு போட்டால்தான் அவருக்கு மனது நிம்மதியாகும்.
தங்கையை கைபிடித்து அழைத்துவந்து கலைந்து கிடந்த சேர்களில் ஒன்றில் அமரவைத்து அண்ணன்மார் இருவரும் எதிரில் அமர்ந்து கொண்டனர்.
“ஏதாவது சாப்டயா?” என கேட்க, மறுப்பாக தலையசைத்தாள். காலையில் மாப்பிள்ளை வீடு சென்ற பொழுது சம்பிரதாயமாக சாப்பிட்ட பாலும், பழமும். மதியம் சாப்பிட அமர்ந்தும் முடியவில்லை. பாதிச்சாப்பாட்டில் எழுந்துவிட்டாள்.
“அதா… திவிக்குட்டிக்கு மூளை வேலை செய்யல” என செழியன் கிண்டல் செய்ய, அண்ணனை முறைத்துப் பார்த்தாள்.
“திவி! சகுனம், சாங்கியம்னு மத்தவங்க பேசறத காதுல போட்டுக்காத. அஞ்சு வெரலும் ஒண்ணுபோலவா இருக்குனு அம்மா அடிக்கடி சொல்லுவாங்கதான. அத நெனப்புல வச்சுக்கோ. சொந்தபந்தம்னா அப்படித்தான்.” வேந்தன் பக்குவமாய் எடுத்துச் சொல்ல,
“என்னப் பொருத்தவரைக்கும் நல்ல சகுனம்தான். வந்த எடத்துல வச்சே அண்ணே கல்யாணம் பேசிட்டாரு பாரு. நைன்டீஸ் மாப்பிள்ளைக்கு எப்ப பொண்ணு கெடச்சு, அடுத்து எனக்கு எப்ப முடியும்னு நானே பயந்துட்டுருந்தேன். ஆனாபாரு கெட்டதுலயும் ஒரு நல்லது.” செழியன் தங்கையின் சிந்தனையைக் கலைக்க,
“அடப்பாவி! நானே எம்மாமியார் என்ன பேசுவாங்களோன்னு பயந்துட்டுருக்கேன். நீ என்னடான்னு உன் ரூட்டு கிளியரானதுல சந்தோஷப்படுற?”
“பாத்தியாண்ணே! அதுக்குள்ள அவங்க மாமியாராம். தாலி கழுத்துல ஏறி முழுசா ஒரு நாள்கூட ஆகல. அதுக்குள்ள அவங்க குடும்பம்னு ஆயாச்சு. நாமெல்லாம் இனி யாரோதான்” தங்கையை வார,
மதியழகனும் காலையில் சகதர்மினி உரிமை பெற்றவளின் மலர்ந்த முகத்தைப் பார்த்துக் கொண்டே வந்தவன், அவனும் அவளுக்கருகே இருந்த சேரில் அமர்ந்தான். அவனது கையில் கப்பில் இன்று பந்திக்கு செய்த ஃப்ரூட் கேசரி இருக்க,
“திவ்யா சரியா சாப்பிடல” என அவளிடம் நீட்டினான். அண்ணன்களின் பார்வை மைத்துனனை மெச்சிக் கொண்டது.
“எப்படியோ, உங்க தங்கச்சிய சிரிக்க வச்சுட்டீங்க போல. இவ மொகத்த பாக்க முடியாமதான் கணக்கு வழக்க முடிக்கப் போயிட்டேன்” என்றான் ஆற்றாமையோடு.
“அவ்ளோ மோசம் ஒன்னும் இல்லியே. ஆயிரக்கணக்குல பார்லருக்கு கொடுத்து பட்டி டிங்கரிங் எல்லாம் பாத்துருக்கே.” செழியன் தங்கையை மேலும் கீழுமாக பார்த்தவாறு சொல்ல,
“என்னம்மா! மாப்பிள்ளைய மொதநாளே இப்படி பயமுறுத்திருக்க?” வேந்தனும் தம்பியோடு கை கோர்க்க,
“அண்ணே நீயும்மா?” என கழுத்தை சாய்த்து சிணுங்கினாள் பெண். தலையில் கைவைத்து செல்லமாக ஆட்டினான். சாப்பிடு என தலையசைத்தான்.
வேந்தன் மதியழகனைப் பார்க்க, அவனது பார்வையைப் புரிந்தவன், “கவலப்படாதீங்க, பொண்டாட்டிய பூட்டின அறைக்குள்ள மட்டும் சமாதானப்படுத்துறவன் நானில்ல. அதே சமயத்துல சபையில வச்சு எங்கம்மாவையும் என்னால விட்டுக் கொடுக்க முடியாது. எங்க அப்பாவே எங்கம்மா பேச்சுக்கு மறுபேச்சு பேசமாட்டாங்க. இங்க நாங்கன்னு சொன்னா அது திவ்யாவையும் சேத்துதான். இன்னைக்கி நடந்ததுக்கு எங்கம்மா எது சொன்னாலும் நாங்க தலையாட்டித்தான் ஆகணும்.” தனது எண்ணவோட்டத்தை மறைக்காமல், அதே சமயத்தில் தெளிவாகவும் சொல்ல அவர்களுக்கும் புரிந்தது.
“இங்கேயும் மதுரை தானா? எங்க வீட்லயும் மீனாட்சி ஆட்சிதான்.” வேந்தன் மலர்ந்து சிரிக்க,
“அப்படி இருந்தாதான் ஆம்பளைங்க நாம வீட்டுக்கவலையில்லாம வெளிய தொழில பாக்கமுடியும். எப்பவும் குடும்பம்னு வரும் பொழுது ஒருத்தர் கைல லகான் இருக்கறது நல்லது. தலைக்குத்தலை நாட்டாமை பண்ணா அது குடும்பம் கிடையாது. அதே சமயத்துல எங்கம்மா அந்தக்கால மாமியார் கிடையாது. எங்கம்மா கடைப் பக்கமே வரமாட்டாங்க. ஆனா முத்துவுக்கும் எல்லாம் தெரியணும்னு கடைக்கி அனுப்பி வைப்பாங்க. நாம ஒன்னும் ஒன்னாந் தேதியானா மாசச்சம்பளம் வாங்குற ஆளுமில்ல. ஒன்பதுலருந்து அஞ்சு மணி வரை வேலையுமில்ல. உங்க தங்கச்சியும் அதப் புரிஞ்சு நடந்துக்கிட்டா எங்க வீட்டோட அடுத்த மீனாட்சி அவதான்.”
மதியழகன் மறைபொருள் காட்ட, வேந்தன் அர்த்தத்தோடு தங்கையைப் பார்க்க புரிந்ததற்கான புன்னகை அவள் முகத்தில்.
“மச்சா! சாச்சுப்புட்டீங்க மச்சா!” செழியன் கேலி செய்ய இறுக்கம் சற்று தளர்ந்து அந்த இடம் கலகலத்தது இளவட்டங்களால்.
“அவசரமா போனீங்களே… என்னாச்சு?” மதியழகன் விசாரிக்க, விமல் மங்கையர்க்கரசிக்கு தாலிகட்ட வந்ததை மட்டும் வேந்தன் கூற,
“அவங்க வீட்ல பொண்ணெடுக்கலைங்கறத இப்படி காமிச்சுட்டாங்க. அவங்க பொண்ணப் பத்தி இப்ப தெரிஞ்சுருக்கும். நாம நாசுக்கா சொன்னப்ப புரியல.”
“அண்ணே! அப்ப மாமாவையும், அண்ணியையும் பேக் பண்ணி ஊருக்கு அனுப்பிட்டுதான் வர்றியா?” தன்னைவிட சிறியவள் ஆனாலும் உறவுமுறை வைத்தே, செழியன் ஆர்வமாக,
“இந்நேரம் கெளம்பிருப்பாங்கடா. இன்னும் ஃபோன் வரல. மாமா ஃபோன் பண்ணா கார் அனுப்பனும்” என பேசிக் கொண்டிருக்க, சற்று நேரத்தில் கணபதியும் வேந்தனுக்கு அழைத்தார்.
“ஆயுசு நூறுடா.”
“யாருக்கு வேந்தன். மாமனுக்கா? இல்ல… மாமன் பொண்ணுக்கா? இருந்தாலும் செம ஸ்பீடு. வந்த எடத்துல கல்யாணமும் பேசி பொண்ணையும் பேக் பண்ணியாச்சு. பாய்ன்ட் டூ பாய்ன்ட்டு கூட பஸ் நிக்கல. நான் ஸ்டாப் தான்.”
இருவருக்கும் சகவயது என்பதால் இயல்பாக பெயர் சொல்லியே அழைத்தான். கேலியோடும் சிரிப்போடும் மதி, மைத்துனன் பதவியை கையிலெடுக்க, வேந்தனும் வெடிச்சிரிப்பை மட்டுமே பதிலாக்கியவன், காரை அனுப்பச் சென்றான். ரெங்கநாநன் வீடு தெரிந்த ஒருவரை டிரைவருடன் காரில் அனுப்பி வைத்தான்.
சகஜமாக தன் அண்ணன்களோடு கலந்தவனை, வைத்த கண் வாங்காமல் புதுப்பெண் பார்த்து வைத்தாள். இதுவரை இருந்த மனநிலையில் வானிலை மாற்றம் நிகழ, பட்டு வேட்டி, சட்டையில் கம்பீரமாக காட்சியளித்தவனை ரசிக்கும் மனநிலைக்கு வந்திருந்தாள் பெண்.
தாடையைத் தடவுவது போல் வாயை கைவைத்து மறைத்தவன், “இப்படி பப்ளிக்கா சைட் அடிக்காதம்மா. எப்படியும் மூனாம் நாள் மறுவீடு போயிட்டு வர்ற வரைக்கும் வாய்ப்பில்ல ராஜானு கோடாங்கி அடிக்காமயே குறி சொல்லுது.” மெதுவாக மனைவியிடம் கிசுகிசுக்க,
“சோனமுத்தா போச்சா?” செழியனின் மெசேஜ் ரிங்டோன் டைமிங்கில் குரல் கொடுக்க, மதியழகன் திரும்பிப் பார்த்த பார்வையில், அசடு வளிய தனிமை கொடுத்து அண்ணன்காரன் நாசுக்காக ஒதுங்கிக் கொள்ள, புதுப்பெண் முகம் சிவந்து பார்வையைத் தாழ்த்திக் கொண்டாள்.
வண்டியில் சீர்வரிசைகளை ஏற்றி மாப்பிள்ளை வீடு கொண்டு சேர்த்தனர். பெரிய சித்தப்பா குடும்பத்தையும், செழியனையும் தங்கையோடு கணவன் வீட்டிற்கு அனுப்பிவிட்டு, இன்னொரு சித்தப்பா குடும்பமும், இவர்களும் தேனி கிளம்பினர்.
வரும் வழியில் வேந்தன் பெரியகுளத்தில் இறங்கிக் கொள்வதாகக் கூற, அப்பொழுதுதான் தாமரைக்கு தம்பி தன் மகளை அழைத்துவந்ததே தெரியும். தன் மகள் நினைப்பில் இருந்தவரிடம் இதைப் பற்றி வேந்தன் கூறவில்லை.
அவருக்கும் அளவில்லா சந்தோஷம். தானும் தம்பி மகளைப் பார்க்க வருவதாகக் கூற, சித்தப்பா குடும்பத்தை தேனி அனுப்பி விட்டு, இவர்கள் கார் பெரியகுளம் வந்தது.
சற்று முன்தான் அவர்களும் வந்து கதவு திறந்து உட்கார்ந்திருக்க, இவர்களும் வந்து சேர்ந்தனர்.
பெண்ணில்லாத வீட்டிற்கான அத்தனை லட்சணங்களையும் கொண்டிருந்தது வீடு. அடுக்கியிருந்த மாதிரியும் இருந்தது. அடுக்காத மாதிரியும் இருந்தது. வீடு கூட்டிப்பெருக்கிய மாதிரியும் இருந்தது. பெருக்காத மாதிரியும் இருந்தது. சில பொருட்கள் நாங்கள் குத்தவைத்த இடத்தைவிட்டு நகர்ந்தே பலவருடங்கள் ஆயிற்று என குறைபடித்தன.
‘பேத்தி அதிகமா சுத்தம் பாப்பாளே. எப்படி இங்கன இருப்பா?’ மாரியம்மாள் மனதிற்குள் மாய்ந்து போனார்.
அவர் மகளைக் கட்டிக் கொடுத்தபொழுது இருந்ததற்கும் இப்பொழுதும் நிறைய மாற்றங்கள் வீட்டில். உட்கார்ந்து பாத்திரம் கழுவும் இடத்தில் நின்று கொண்டு கழுவும் வகையில் சிங்கும், தண்ணீர் குழாய் இணைப்பும் இருந்தது. அப்பொழுது அமர்ந்து சமைக்கும் வகையில் விறகு அடுப்பு. இப்பொழுது கேஸ் அடுப்பு மேடை போட்டு அமர்ந்திருந்தது. என்று நின்றுகொண்டே சமைக்க ஆரம்பித்தோமோ அன்று வந்தது நமக்கெல்லாம் முழங்கால் வலி.
வரும் பொழுதே வேந்தன் நடந்தவைகளை மறைக்காமல் பெற்றவர்களிடம் கூறிவிட்டான் வெளியே தெரிய வேண்டாம் என்ற உத்தரவோடு. தாமரைக்கு அதிர்ச்சியும், ஆற்றாமையும் தம்பி மகளை நினைத்து.
இவர்கள் மூவரும் வீட்டிற்குள் வர, கணபதிதான் மூவரையும் வரவேற்றார். டீ போட்டுக் கொண்டிருந்தார். இவர்களுக்கும் சேர்த்து எடுத்துவந்தார். தாமரை தம்பி மகளை ஐந்து வயதில் பார்த்தது. வைத்த கண் வாங்காமல் பார்த்தார்.
“எப்படிம்மா இருக்கா உங்க சங்கம்பழம்?”
மங்கையைப் பார்த்து மலைத்து நின்ற அம்மாவிடம், குனிந்து ரகசியமாகக் கேட்க,
“பெரியகுளத்து செந்தூரம் மாதிரி இருக்காடா. அதான் அந்தப்பய கொத்திட்டுப் போக வந்திருக்கான்.”
மனம் கட்டுக்குள் அடங்கவில்லை தம்பி மகளைப் பார்த்து தாமரைக்கு. குமரியின் தோற்றத்தில், மகனைவிட அம்மாதான் மயங்கி நின்றார்.
அப்பொழுதே மங்கையின் கண்கள் சிவந்து ஜிவுஜிவுத்திருந்தது. மங்கைகக்கு இந்த வீட்டின் நினைவுகள் கழுவாத புகைப்படம் (நெகட்டிவ் மாதிரி. 2k கிட்ஸ் அதிகம் பார்க்காதது) மாதிரி நிழலாடியது. வந்தவர்களை கண்டுகொள்ளவில்லை. மாரியம்மாள் தான் பேசி நலம் விசாரித்தார். மண்டபத்தில் செல்வி நடந்து கொண்டதற்கு வருத்தமும் தெரிவித்தார்.
விமல் கொடுத்த அதிர்ச்சி, வெகு நேரம் தண்ணீரில் நின்றது, தனக்கு விருப்பமில்லை எனினும், மாமன் குடும்பத்தை எண்ணி இங்குவர முடிவெடுத்தது, இந்த வீடு அவளுக்குள் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் தாக்கம் என ஒரே நாளில் தன் வாழ்வில் நடந்த மாற்றங்களை சுவீகரிக்க முடியாமல் மனம் அலை மேல் படகாய் அலைக்கழிக்க, அப்பொழுதே உடல் குளிறெடுக்க ஆரம்பித்தது. கைகளை இறுக்கிக் கட்டிக் கொண்டாள்.
பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்க, “வீடு சுத்தம் பண்ணனும் தாமரை. இவளுக்கு இப்படி இருந்தா பிடிக்காது. என்னால முடியாது. ஆள் வருவாங்களா?”
“வரச்சொல்லலாம் அத்த. நாளைக்கே ஏற்பாடு பண்ணலாம். வேந்தன் இங்கனதான் இருப்பான்.” தாமரை சொல்ல, மங்கை ஒரு கணம் தன் அம்மாச்சியைப் பார்த்தாள்.
‘சுத்தம், அப்ப இவ ரூம்ப விட்டு வெளியவே வரமாட்டாளே?’
“தம்பி இங்கனதான் இருக்குமா?” அவர் தயங்கிக் கேட்டதிலேயே அர்த்தம் புரிய,
“சீக்கிரம் நாள் பாத்து கல்யாணம் முடிச்சறலாம் அத்தை. இப்பதானே திவ்யாவுக்கு முடிச்சுருக்கு.”
இப்பொழுதுதான் கணபதி குறுக்கே வந்தார். “அக்கா, ஒன்னும் அவசரமில்ல. பொண்ணு வேந்தனுக்குதான். ஆனா அரசி சம்மதிச்சா மட்டும்தான். இப்பவே சொல்லிட்டேன். அப்பறம் உரிமையிருக்குனு மொரண்டு பண்ணக்கூடாது. சபையில வச்சு சொல்ல முடியாமத்தான் இப்ப சொல்றேன்.”
மகளின் மனம் என்னவென்று அவருக்கு புரியாத நிலையில் யாருக்கும் வாக்கு கொடுக்க விரும்பவில்லை. பட்டுத் தெறித்தார் போல் தன மனதில் பட்டதை கூறிவிட்டார்.
“எங்க, உம்மகள எம்மகன வேண்டாம்னு சொல்லச்சொல்லு பாக்கலாம்!” எப்பவும் போல் தாமரை உரிமைக்கு குரல் கொடுக்க,
“நான் படிக்கணும்.” இது மட்டும்தான் மங்கை உதிர்த்த வாய் முத்துக்கள்.
“படிப்ப முடிக்கட்டும் தாமரை. நடக்கும்போது பாத்துக்கலாம். இப்ப கெளம்பலாம். இருட்டிருச்சு. விசேஷ வீட்ல ஆளில்ல.” ரெங்கநாதன் கிளப்ப, வேந்தன் இங்கிருந்து இவர்கள் தேவைகளை கவனிப்பதாகக் கூறினான். தங்கை மறுவீடு வரும் அன்று வருவதாக அனுப்பிவைத்தான்.
இரவுச் சாப்பாடு கடையில் வாங்கி வந்தான். இட்லியும் தோசையும். மங்கைக்கு அப்பொழுதே சாப்பாடு இறங்கவில்லை. தள்ளிமுள்ளி சாப்பிட்டு எழுந்து கொண்டாள். வேந்தன் புழங்கிய அறை சுத்தமாக இருக்க, இன்று மட்டும் தங்கிக் கொள்ள சொல்லிவிட்டு இவன் வெளியே ஹாலில் படுத்துக் கொண்டான். சாமி அறை தவிர புழக்கமில்லாத மற்ற இரண்டு அறைகளும் திறந்தே பல மாதங்கள் இருக்கும் என தூசி படிந்த தாழ்ப்பாள் சொல்லியது.
பாதி இரவில் மாரியம்மாள் அவசரமாக வந்து வேந்தனை எழுப்பினார். மங்கைக்கு காய்ச்சல் கொதிக்க ஆரம்பித்திருந்தது, அடி ஆழத்தில் புதைக்கப்பெற்ற பழைய நினைவுகள் கிளறப்பட்டதாலும்.
அவசரமாக எழுந்து வந்தவன் தலையைத் தொட்டுப் பார்த்தான். கொதித்தது. உடல் குளிரில் வெடவெடக்க, கையைப் பிடித்து உள்ளங்கையை தேய்க்க முயல, இயலாத நிலையிலும் கையை உதறித் தள்ளினாள். அந்நிலையிலும் வேந்தனை நெருங்க அனுமதிக்கவில்லை பெண். விமல் நடந்து கொண்டதன் தாக்கம் என நினைத்தான். ஏதோ பிதற்ற புரியவில்லை.
“அப்பாயி ஏதோ சொல்றா, என்னானு கேளுங்க” என்றான் பதட்டமாக.
“உடம்பு சரியில்லைனா பயத்துல அப்படித்தான் ஒளருவா தம்பி. மந்திரிச்சா சரியாப் போகும்.” மாரியம்மாள் கூற, அவனே கைகளில் ஏந்திக்கொண்டு காரில் ஏற்றி மருத்துவமனை செல்லும் வரைக்குமே சுயநினைவு இல்லை.
கையில் ஏந்தும் பொழுதுதான் தெரிந்தது தலைமுடியின் ஈரம். அந்நிலையிலும் அவன் தொட்டவுடன் உடல் விறைத்து இருக்கிக் கொள்ள, தூக்க தடுமாறினான். கைக்குள் அடங்காமல் ஏதேதோ பிதற்றினாள். இன்று விமலோடு போராடும் பொழுது கத்திய வார்த்தைகள் முதற் கொண்டு.
அதில் அவன் அறைகுறையாகக் கேட்டது, “டேய் எளா” எனும் வார்த்தைகளும். சட்டென நிலை தடுமாறி நின்றுவிட்டான்.
சுய நினைவில் அவள் அழைக்கவில்லையென சூடம் அணைத்து சத்தியம் செய்வான். ஒரு கணம் மனம் அதிர்ந்து அடங்கியது அவனுக்கும். அவள் மனதின் ஆழத்தில் தான் இருப்பது தெரிய மனதின் மூலையில் சுருக்கென ஒரு இதம் கலந்த வலி.
‘உன்ன ஜெயிக்க நெனச்சுதான் தாலி கட்ட வந்திருக்கான்.’ மாமன் வார்த்தைகள் காதுக்குள் ஒலிக்க,
‘அவன ஜெயிக்க நெனச்சுதானே உறவு கொடுத்த உரிமையில் நீயும் பெண் கேட்டாய்.’ தொண்டையில் சிக்கிய முள்ளாய் உள்மனம் உறுத்த, வெட்கிப்போனான் ஆண்மகன்.
