மல்லி 7 

“ஊரு உலகத்துல ஒவ்வொருத்தியையும் நாம்பேசுனதுக்கு இப்ப என் வீட்லயே வந்து விடியுது. இந்தாடீ… இப்ப எந்திரிச்சு வர்றியா இல்லையா. பேர திருப்பிப்புடுச்சாதான் நீ அடங்குவ.” இரவு வெகுநேரமாகியும் சாப்பிடாமல் அறைக்குள் அடைந்துகிடந்த மகளை அதட்டி அழைக்க, அழுத முகமாய் எழுந்து வந்தவளை முறைத்துப் பார்த்தார் செல்வராணி. 

“இதுக்கெல்லாம் மசியற ஆள் நானில்ல. வெளிய போன ஆம்பளைக வீட்டுக்கு வர்ற நேரமாச்சு. மூஞ்சிய உர்ருனு வைக்காம கழுவிட்டு சிரிச்ச மொகமா இரு. சந்திசிரிக்க வச்சுறாத” என,

மறுபேச்சு பேசாமல் முகம் கழுவி வந்தாள் பத்மபிரியா. வீட்டிற்கு முன்னே இருந்த சிமெண்ட் தண்ணீர்த் தொட்டியில் பூ பைகளை முக்கியெடுத்து ஓரமாக வைத்துக் கொண்டிருந்தார். கை வேலை செய்யும் வேகம் சொல்லியது மனதின் கொதிப்பை. இவை எல்லாம் பார்சல் செய்து லாரிகளில் பல ஊர்களுக்கு அனுப்பப்படும்.

“ஊர் சிரிச்சவ மக எல்லாம் குனிஞ்ச தல நிமிராம போயிட்டு வர்றா. நாம்பெத்தது பேரு வாங்கிக் கொடுத்துரும் போலயே. போனதுதான் போன. நம்ப சாதியில் போக வேண்டியதுதானடி.” தூக்கிச் சொருகிய சேலையும், அள்ளிமுடிந்த கொண்டையுமாக, கை வேலை பார்த்துக் கொண்டே, வாய் மூடாமல் மகளை வறுத்தெடுக்க,

“ஏம்மா… நீ கத்தறது தெருவரைக்கும் கேக்குது.” அதட்டியபடியே உள்ளே விமல் வர, என்னத்தக் கேட்டானோ தெரியலயே என பதக்கென்றது செல்வராணிக்கு. 

டீவி கூட போடாமல், வழக்கத்திற்கு மாறாக கையில் ஃபோனுமில்லாமல் உட்கார்ந்திருந்த தங்கையைப் பார்த்தான். முகம் அழுது வடிந்திருக்க, இந்த சம்பந்தம் தட்டிப் போனதில் தங்கை கவலையாக இருப்பதாக எண்ணியவன்,

“இப்ப எதுக்கு நீ இப்படியிருக்க. இவிங்க இல்லைனா வேற மாப்பிள்ளையே இல்லையா? கூடிய சீக்கிரம் இதவிட பெரிய எடமா பாக்கலாம். அவிங்ககிட்டயே சவால் விட்டு வந்திருக்கேன்.” வீராவேசமாய்ப் பேச,

“ஆத்தாடி“ என நெஞ்சில் கைவைத்து நிமிர்ந்தார் செல்வராணி. பத்மபிரியாவும் விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள்.

“என்னடா சொல்ற. எங்க போன… யார்கிட்ட பேசுன?” படபடக்க,

“நகைக்கடை போயி, மதிகிட்டயே சொல்லிட்டு வந்துட்டே. உங்களவிட பெரிய எடம் பாக்குறேன்னு” என தொட்டித் தண்ணீரை மொண்டு காலில் ஊற்றிய படியே சொல்ல,

பத்மாவுக்கு குலை நடுங்கியது. இவன் என்ன பேசினான். அவன் என்ன பதில் சொன்னான் எனத் தெரியவில்லையே. உன் தங்கச்சிக்குதான் விருப்பமில்லையென உண்மையைச் சொல்லியிருப்பானோ என்ற பயத்தில் அடிவயிறு கவ்விப்பிடித்தது. 

இன்றுதான் கல்யாணம் முடிவானதும் தட்டு மாற்றும் முன் கைபேசி எண்கள் மாற்றிக் கொள்ளப்படுகிறதே. 

ஏதோ ஒரு குருட்டு தைரியத்தில் வீட்டில் பேச தைரியமின்றி அவனுக்கே ஃபோனில் அழைத்து தனக்கு இதில் விருப்பமில்லை என சொல்லிவிட்டாள். 

மதியழகனும் வீட்டில் பேசி, சாதகம் பொருந்தவில்லை என சொல்லிவிடுங்கள் என பெற்றவர்களிடம் சொல்லிவிட்டான். அவளைப் பற்றி சொல்லவில்லை. அதன் பின்தான் சொந்தக்காரர் மூலமாக திவ்யாவின் சாதகம் வாங்கப்பட்டது.

மகளின் நடத்தையில் சந்தேகப்பட்டுதான் சீக்கிரம் கல்யாண ஏற்பாட்டை ஆரம்பித்தார் செல்வராணி. வரும் சம்பந்தமெல்லாம் தட்டிப்போக காரணம்தான் புரியாமல் இருந்தது. இப்பொழுதுதான் மகள் மீது சந்தேகம் வந்து ஃபோனை பிடிங்கி வைத்துக் கொண்டார். வீட்டு ஆண்களுக்குத் தெரிந்தால், அதுவும் சாதிவிட்டு சாதி எனத் தெரிந்தால் மகளை வெட்டிப் போடவும் தயங்காத கூட்டம் என செல்வராணி அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்க, மகன் செய்த காரியம், இன்னும் ஆத்திரத்தின் உச்சிக்கு எடுத்துச்சென்றது. 

“ஏன்டா இப்படி வலிய போயி மானத்த வாங்கிட்டு வந்திருக்க, கூறு கெட்டவனே” என வளர்ந்து கெட்டவனை அடிக்க முடியாத பாட்டிற்கு தாளித்துக் கொட்டினார். 

       *******

வேந்தன் தேனி செல்லாமல் மாமன் வீட்டில் பெரியகுளத்திலேயே தங்கிக் கொண்டான். அதனால் இங்கு வந்து விசாரித்தது பற்றி இன்னும் வீட்டில் கலந்து பேசவில்லை. ஃபோனில் மட்டும் அம்மையப்பன் சாதகம் பொருந்தி வந்ததாக தகவல் சொல்ல, மகனும் தான் நேரில் விசாரித்தைச் சொல்ல, வீட்டிற்கு வந்தபிறகு மேற்கொண்டு பேசிக் கொள்ளலாம் என மகனிடம் கூறியிருந்தார். 

வேந்தன் வந்து சென்ற இரண்டு நாட்களில் செழியனும் நிலக்கோட்டை வந்தான்.

“இதென்னங்க சில்வர் செய்ன்ல இவ்ளோ பெரிய டாலர். ஆனா வித்யாசமா இருக்கு. இத கழுத்துல போட்டா நல்லாவா இருக்கும்?” செழியன் கையில் எடுத்து ஆட்டிப் பார்த்ததைப் பார்த்தவள், தலையில் அடிக்காத குறையாக, “அதை வைங்க மொதல்ல. நீங்க எதுவும் எடுக்கவந்த மாதிரி தெரியல” என சிடுசிடுத்தாள்.

“கஸ்ட்டமர்கிட்ட இப்படித்தான் பேசுவாங்களா? இது என்னானு கேட்டா விளக்கம் சொல்லணும். தெரியாம எப்படி வாங்கறது. இது தெரியாம நீங்க எப்படி சேல்ஸ் கேர்ளா இருக்கீங்க?”

“கையில ஃபோன் இருக்கா?”

“ம்ம்ம்… இருக்கே.” தன் கையிலிருந்த ஃபோனை ஆட்டிக் காண்பித்தான்.

“கூகுள் இருக்கா?”

“ம்ம்ம்..”

“அதுல கூகுள் லென்ஸ்ல இத ஃபோட்டோ எடுத்துப்பாருங்க. நான் சொல்றதவிட நல்லா விளக்கமா இந்த ஹிப் செயின் பத்தி போட்டுருப்பான்” என, 

“ஹிப் செயினா. ஆனா சின்னதா இருக்கு?” என புருவம் சுருக்கியவன், அதை அவள் சொன்னமாதிரி ஃபோட்டோ எடுத்து கூகுளில் பார்த்தவன் முகம் அடுத்து அவளை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அசடு வழிந்தது. செழியன் என்னவென்று விளக்கம் கேட்டது, அரச இலையோடிருந்த பெண் குழந்தைகளுக்குப் போடும் அரைஞாண் கொடியை. 

அவளிடம் விளக்கம் கேட்டு அசடு வழிய, 

“இது கூடத் தெரியாதா? முன்னப்பின்ன குழந்தைக போட்டுப் பாத்ததில்லையா?” சிடுசிடுத்தாள் விற்பனை பெண்.

“எனக்கு இன்னும் ஒரு தடவகூட கல்யாணம் ஆகலீங்க.” 

“அதுக்கு…”

“எதுக்குங்க எதுக்கெடுத்தாலும் கோபப்படுறீங்க. இப்ப எங்கிட்ட அண்டா, குண்டா பத்தி கேட்டா நல்லா தெரியும். எவ்வளவு தண்ணி பிடிக்கும், எத்தனை படி அரிசி வேகும்னு வெளக்கமா சொல்லுவேன். நகை பத்தி கேட்டா என்ன தெரியும்? ஆனா… உங்களுக்கும்தான் கல்யாணம் ஆகலைனு தெரியுது. அப்பறம் எப்படி இதப்பத்தி தெரியும்?” என்றவனை அவள் பார்த்த பார்வை, லூஸாப்பா நீ என கேட்க,

“நீங்க சொன்ன மாதிரி நான் சேல்ஸ் கேர்ள்ங்க” என்றாள் சலிப்பாக.

“கரெக்ட்… நாம்பாட்டுக்கு வேடிக்கை பாத்துட்டுப் போயிருப்பேன். நீங்கதான் அது வேணுமா, இது வேணுமான்னு கேட்டீங்க. வந்ததுக்கு ஏதாவது வாங்குவோமேனு பாத்தேன். ஆனா, சும்மா சொல்லக் கூடாதுங்க. நல்லாவே கஸ்ட்டமர டீல் பண்றீங்க. பேசாம எங்கூட வந்துர்றீங்களா?”

“என்னாது… ஒடம்பு எப்படியிருக்கு?” என சீற, 

“ஐயோ… தப்பால்லாம் இல்லீங்க” என பதறியவன், 

“எங்களுக்கும் பாத்திரக்கடை இருக்கு. இப்படி ஒரு சேல்ஸ் கேர்ள் இருந்தா ரொம்ப ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்” என்றவன் இறுதியாக குரல் தாழ்த்தி அவள் முன் குனிந்து,

“இங்க எவ்வுளவு தர்றாங்க?” என ரகசியம் போல் கேட்க, அவளுக்கும் இவனது செய்கை சுவாரஸ்யம் கூட்ட,

“அதெல்லாம் ஒன்னுமில்லீங்க. சாப்பாடு போட்டு துணியெடுத்துத் தர்றாங்க.”

“இதுக்கா இவ்வளவு மெனக்கெட்டு வர்ற கஸ்ட்டமர விடாம புடுச்சு சேல்ஸ் பண்றீங்க?” எனக் கேட்க கண்களை மூடி ஆமென ஆமோதித்தவள்,

“என்னங்க பண்றது வயித்துப்பாடுன்னு ஒன்னு இருக்குல்ல?” 

“என்னம்மா… இந்தக் காலத்துலயும் இப்படி ஏமாளியா இருக்க?” என்றான் சட்டென ஒருமையில். 

“கடன் பட்டுருக்கேங்க. அதுக்காக வேல பாத்துதானே ஆகணும்.”

“ஓ… கடனுக்காக வேலபாக்குறியா? பேரு என்னம்மா…”

“முத்துப்பேச்சிங்க… உங்க பேரு?” என கேட்டவளை மேலும் கீழும் பார்த்தவன்,

“ம்ம்ம்… முத்துக்கருப்பன்” என நக்கல் தெறிக்க கூறிவிட்டு,

“தப்புதாம்மா… வயசுப்பிள்ளைகிட்ட பேரு கேட்டது” என அவ்விடத்தை விட்டு நகர்ந்துவிட்டான்.

“என்னங்க, எதுவும் வாங்கலியா?”

“கல்யாணம் ஆகட்டும்மா. குழந்தை பொறந்து, அதுவும் பொம்பளப்புள்ளயா பொறந்தா இங்கயே வந்து வாங்கிக்கறே” என சொல்லிச்செல்ல வாய்விட்டு சிரித்தாள். 

அன்று வேந்தனும் தேனி வந்திருந்தான். 

குடும்ப உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. அனைவருக்கும் மனம் திருப்தியாக, வரும் வாரத்தில் பெண் பார்க்கும் படலம் வைத்துக் கொள்ளலாம் என ஏற்பாடு செய்யப்பட, தாமரைக்கு ஊர் மட்டுமே உறுத்தலாக இருந்தது. அதுக்காக நல்ல சம்பந்தத்தை விட வேண்டுமா எனவும் மனம் யோசித்தது. 

தம்பியையும் நினைத்துப் பார்த்தார். அவனுக்கு அந்த ஊர் எந்தளவுக்கு சங்கட்டமென. தாய்மாமனாக கணபதிதானே மேடையேற வேண்டும். இதுவரை எதிலும் கலந்து கொள்ளாத தங்கையையும் அழைக்க வேண்டும். ஏதோ வீட்டோடு விசேஷம் என்றால் அழைக்கத் தேவையில்லை. மகளின் திருமணம். தனக்கென இருக்கும் இரத்த உறவு தம்பியும், தங்கையும் தான். அழைக்காமல் இருக்க முடியாது. தாமரை தன் யோசனையில் இருக்க, அம்மையப்பன் முகமும் ஏதோ யோசனையில் இருப்பதாகப் பட்டது. கணவரின் முகம் பார்த்தவர், கல்யாணப் பேச்சில் இவருக்கு எதுவும் மனசு ஒட்டவில்லையோ என மனம் அடித்துக் கொண்டது.  படுக்கைக்கு வந்தும் வெற்றிலைப் பெட்டியை தேடவில்லை. தாமரையே எடுத்துக் கொடுத்தார்.

“எந்த கோட்டையப் பிடிக்க இந்த யோசனை?”

“இப்பதான் பாப்பா பொறந்த மாதிரி இருக்கு. அதுக்குள்ள கல்யாணம்னா நம்பவே முடியலல்ல?” என மகளதிகாரம் படிக்க,

“இதுக்கு தானா? நாங்கூட என்னமோ ஏதோன்னு பயந்துட்டே” என ஆசுவாசப்பட,

“நம்ப வீட்ல செல்லமா வளந்த பிள்ள. போற எடத்துல எப்படியோ?”

“ஆமா… நீங்க மட்டும்தான் புள்ளய செல்லமா வளத்தீங்க. எங்களையெல்லாம் கொட்டிக் கொட்டியே வளத்தாங்களாக்கும். ஏன் நாங்கெல்லாம் பொறந்த வீட்டவிட்டு வந்து வாழல. இவருதான் அலுவுசமா புள்ளயக் காட்டிக்கொடுக்கப் போறாரு” என நொடித்துக் கொண்டாலும், கணவனின் மனநிலை புரியாமல் இல்லை. 

அவருக்குள்ளும் அந்த எண்ணம் தான். கைக்குள்ளேயே வளர்ந்துவிட்ட மகள்.‌ நினைத்த நேரத்தில் எழுந்து, பிடித்ததை செய்து, அம்மாவிடம் கோபித்து, அப்பாவிடம் செல்லம் கொஞ்சி, அண்ணன்களோடு மல்லுக்கட்டி என பிறந்த வீட்டில் இருந்த சுதந்திரம் போற வீட்டில் கிடைக்குமா? அவளுக்கென்று ஒரு குடும்பம்,‌ அதைச் சார்ந்த பொறுப்புகள் என வரும்பொழுது எப்படி சமாளிப்பாள் என்ற கவலை பெண்ணைப் பெற்றவர்களுக்கு. எத்தனை வளர்ந்தாலும் பெற்றவர்களுக்கு பிள்ளை சிறுமிதானே.

“அதுக்குனு கட்டிக்கொடுக்காம இருக்க முடியுமா? அதெல்லாம் எம்மக சமாளிச்சுருவா?” என தனக்குத்தானே ஆறுதல்பட்டுக் கொண்டாலும் தாமரையின் குரலும், முகமும் மாறித்தான் இருந்தது. இந்த மாதிரி நேரங்களில் அம்மாக்களுக்கு மட்டும் எங்கிருந்து  தைரியம் வருமெனத் தெரியாது. ஒரு வேளை சொந்த அனுபவம் பேசும் போல.

ஆனால் ஒரு ஆணிற்கு பெண்ணை தாரமாக கைபிடிக்கும் பொழுது வரும் கர்வம், பெற்ற பெண்ணை தாரைவார்த்துக் கொடுக்கும் பொழுது வருவதில்லல. அப்பாக்கள் அழுவார்கள் என்பதை மகள்கள் அறியும் தருணம் அது. என்னவோ இப்பொழுதே மகள் தங்களுக்கு சொந்தமில்லை என்ற எண்ணம் வந்துவிட்டது இருவருக்கும். 

*****

“அடப் பாவிங்களா? அதுக்குள்ள பேக் பண்ண முடிவு பண்ணிட்டீங்க. நானும் ஒரு வருஷமாவது ஆகும்னு நெனச்சேனே.” பெற்றோர்கள் உள்ளே சென்றுவிட, திவ்யா அண்ணன்களைப் பிடித்துக் கொண்டாள்.

“எதுக்கு, என் தலை வழுக்கையாகுற வரைக்குமா. அதெல்லாம் செல்லாது… செல்லாது… நான் ஏற்கனவே அரணாக்கொடி அட்வான்ஸ் புக்கிங் பண்ணி வச்சுட்டேன். உன்ன கெளப்பிட்டு, அண்ணனுக்கு பாத்து ரெடி பண்ணிட்டு, எனக்கு வர்றதுக்குள்ள எனக்கு முடி கொட்டாம இருக்கணும்னு வேண்டிக்க.” 

“நீயெல்லாம் நல்லா வருவடாண்ணா. இன்னும் காலேஜே முடியல. அதுக்குள்ளயா?” என தங்கை முகம் சுணங்க,

“ஏய்… லூசு… எப்படியும் வைகாசிக்கு மேலதான் பாப்பாங்க… அதுக்குள்ள காலேஜ் முடிஞ்சுறும். கவலப்படாத” சின்னவன் கிண்டல் செய்ய, வேந்தனுக்கு தங்கையின் மனம் புரிந்தது. பெண்களுக்கு கல்யாணம் என்றதும் சந்தோஷம் ஒரு பக்கம் என்றால் பிறந்த வீட்டை பிரிய வேண்டுமே என்ற எண்ணம்தானே முன் நிற்கும்.‌ பெண்ணின் உணர்வைப் புரிந்தவனாய்.

“செழியா… பேசாம இரு.“ தம்பியை அதட்டியவன், 

“திவி… நீ இங்க இருந்த மாதிரியே அங்கேயும் இருக்கலாம். மாப்பிள்ளையப் பொறுத்தவரை எந்தப் பிரச்சினையும் இல்ல. சொந்த பந்தங்கள் முன்னபின்னதான் இருக்கும். எந்த சூழ்நிலையிலும் மதி உன்ன விட்டுக்கொடுக்க மாட்டாப்ல. தைரியமா இரு. அண்ணனுங்க நாங்க இருக்கோம்” என, புது உறவுக்குள், புதிய சூழ்நிலையை எதிர்கொள்ளப்போகும் தங்கையின் கைபிடித்து ஆறுதல் கூற, தெம்பாக உணர்ந்தாலும் பெண்ணவள் கண்கள் தன்னால் கலங்கியது. 

“அண்ணா, தைரியமா இருன்னு சொல்ல வேண்டியது மாப்பிள்ளைக்கி. இவளுக்கு இல்ல. அப்பறம் இந்த அழுகாச்சி சீனெல்லாம் கல்யாணத்தன்னைக்கி வச்சுக்கலாம்.” செழியன் கேலி பேசி தங்கையை இலகுவாக்க, திவ்யாவும் மனம் இலேசாகி சந்தோஷமாகவே கல்யாண நாளை எதிர்நோக்க தயாரானாள். 

காதல் திருமணம் என்பது வேரு. ஒருத்தரை ஒருத்தர் பேசிப் பழகி புரிந்து கொண்டிருப்பர். (அப்படின்னு நம்புவோம் மக்களே!)

ஆனால் பெரியவர்கள் பேசி முடிக்கும் திருமணங்களில் பெருமளவு தயக்கம், பயம், பதட்டம் எல்லாம் பெண்ணிற்கு இருக்கும். அதைப் புரிந்து கொண்ட அண்ணன்கள் தங்கைக்கு தெம்பு சொல்ல,

“வேணாம்னா பொறுமையா அடுத்த வருஷம் பாக்கலாமா? நீயும் ஒரு வருஷம் வீட்லருந்து வீட்டு வேலையெல்லாம் பழகிக்கோ. இந்த மாப்பிள்ளை வேண்டாம்னு சொல்லிரலாம்.” 

விளையாட்டாகவே தங்கை மனதை வேந்தன் ஆழம் பார்க்க, அண்ணன்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கண்சிமிட்டி சிரித்துக் கொண்டனர். ஒரு கணம் மனம் சந்தோஷப்பட்டாலும், வேணும் வேண்டாமென இருமனதாய் தவித்துப் போனாள் பெண்.‌ சட்டென முகம் வாடியது. அவளுக்குதான் மாப்பிள்ளையைப் பிடித்திருக்கிறதே. 

அண்ணனும் தம்பியும் மாற்றி மாற்றி வந்து வேவு பார்த்ததில், ‘அப்படி என்ன சின்னத்தம்பி குஷ்பூ ரேஞ்சுக்கு பில்டப் பண்றானுக. நாமலும் பார்ப்போமே’ என காலேஜ் வாசலுக்கே வந்து நின்றிருந்தான் மதியழகன். 

  *****

“என்னம்மா இன்னும் தூங்கலியா?” மகன் வீடு வரும் நேரத்திற்கு மாத்திரையைப் போட்டு தூக்கத்திலிருப்பவர் இன்னும் சோஃபாவில் அமர்ந்திருக்க, அம்மா ஏதோ பேசத்தான் காத்திருக்கிறார் எனப் புரிந்தது. 

“ரெங்கா… கொஞ்சம் பேசணும்ப்பா” என்றார் மாரியம்மாள். 

“என்னம்மா… எதப்பத்தி?” சாப்பிட்ட கையை மேல் துண்டால் துடைத்துக்கொண்டே வந்து  பக்கத்தில் அமர்ந்தார்.

“கடைவிட்டா வீடு, வீடுவிட்டா கடைனு இருக்க. வீட்ல வயசுவந்த பிள்ள இருக்கறது நெனப்பிருக்கா இல்லயா?”

“என்னம்மா பண்ணச் சொன்னீங்க?” அவர் எதைப்பற்றி பேச வருகிறார் எனப் புரியாமல் இல்லை.

“என்னப்பா பட்டும்படாம கேக்குற. நாலு எடத்துல சொல்லிவைக்க வேண்டாமா? அப்ப தானே சாதகம் வரும்.”

 “இன்னும் ஒரு வருஷம் படிப்பு இருக்குல்லம்மா?”

“இப்பருந்தே பாத்தா தான? பொம்பளப்புள்ள காரியம். நாலு எடத்துல விசாரிக்கணும்ல.”

“எதுக்கு கையில வெண்ணெய வச்சுக்கிட்டு நெய்யிக்கு அலையணும். அதான் தெனமும் ஒருத்தன் வீட்டுக்கு காவடி எடுக்குறானே. அவனவிடவா நல்ல மாப்பிள்ளை வேணும்.”

‘அவன நீதான் மெச்சுக்கணும்.’ மனதிற்குள்தான் அலுத்துக் கொண்டார் மாரியம்மாள். அம்மாவும் மகனும் பேச ஆரம்பித்தவுடனே அங்கு வந்துவிட்டார் செல்வி. எதுக்கு ஒழிவு மறைவென மாரியம்மாவும் கண்டு கொள்ளவில்லை. 

இப்பொழுது மருமகளிடம் வாய்கொடுக்கும் நிலையில் அவரில்லை. முதலில் பேத்தி காரியம்தான் அவருக்கு முக்கியம். 

மாரியம்மாவிற்கு விமலுக்கு கொடுப்பதில் எந்த தயக்கமும் இல்லை. அவசரப் புத்திக்காரன் என்பதைத் தவிர. ஆனால் செல்வராணியும், தமிழ்ச்செல்வியுமே போதும் தன் பேத்தியை தேளாய்க்கொட்ட. எண்ணச்சட்டிக்குப் பயந்து அடுப்புல விழுந்த கதை தான் ஆகும். பேத்தி தமிழ்ச்செல்வியிடம் பட்டதே போதும். மேலும் உள்ளூர் சம்பந்தம் விருப்பமில்லை. என்னென்ன பேசியிருப்பார்கள் அக்காவும் தங்கையும் சேர்ந்து தங்கள் குடும்பத்தைப் பற்றியும், மகளைப் பற்றியும். புதைகுழி எனத் தெரிந்தும் பேத்தியை தள்ளுவானேன்.

“நல்ல நல்ல பொண்ணுகளுக்கே வந்த சம்பந்தம் தட்டிப் போகுது. இவளுக்கு மட்டும் என்ன வரிசையில வந்து நிக்குதாக்கும். போனாப் போகுதுனு எங்க அக்கா மகனுக்கு கட்டுனாத்தான் உண்டு. இவ ஆத்தா வாங்கிக் கொடுத்த பேருக்கு யாரு வருவா?” 

இதற்குதான் மாரியம்மாள் பயப்படுவது. ஊசியாய்க் குத்தும் பேச்சை ஒரு நாளும் தன் பேத்தியால் தாங்கிக் கொள்ளமுடியாது. எதையும் மனம் விட்டு பேசுபவள் இல்லை பேத்தி. இவர்களோடு சரிக்கு சரி நிக்க முடியாது. தாய்க்கு வாச்சதுதான் தலைமைகளுக்குனு சொல்றமாதிரி, தான் மகள்பட்ட வேதனை பேத்திக்கு வேண்டாம் என நினைத்தார். 

“அப்படியொன்னும் எம்பேத்திக்கு இங்க யாரும் பாவப்பட்டு வாழ்க்கை கொடுக்க வேண்டாம். அந்தளவுக்கு அவ ஒன்னும் வக்கத்துப்போல. எம்மக வாழ்க்கைய சீரழிச்ச மாதிரி எம்பேத்தி வாழ்க்கைய விடமுடியாது.‌”

“அவனுக்கென்ன கொறச்சல்ங்கறே.‌ சீம சித்திராங்கிக்கு சீமையிலருந்தா வரப்போறான். எப்ப பாரு வயித்தவலின்னு இப்பவே உப்பு ஒரப்பில்லாம பத்தியச்சோறு சாப்றா. கூட்டம் கும்பலுக்குள்ள போயிட்டுவந்தா ஏதோ தீட்டுவீட்டுக்குப் போயிட்டுவந்தவ மாதிரி தலமுழுகுறா. இதெல்லாம் தெரிஞ்சும் விமல் கட்டிக்க சம்மதிச்சான்னா, அவனுக்கு கொடுக்க ஒங்களுக்கு கசக்குதா?” என இருவரும் ஆரம்பிக்க, 

“இப்ப ரெண்டு பேரும் நிறுத்தறீங்களா? வீட்டுக்கு வந்தா மனுஷ நிம்மதியா இருக்க முடியுதா?”

“இப்ப என்ன, என்னாலதான் உங்க நிம்மதி போச்சா?” செல்வி எகிற.

“பெத்த மகங்கிட்ட நல்லது கெட்டது பேச முடியுதா?” மாரியம்மா அங்கலாய்க்க,

“ரெண்டு பேரும் போங்க. எத, எப்ப பண்ணனும்னு எனக்குத் தெரியும். மொதல்ல மங்கா படிப்பு முடியட்டும்.” அம்மாவையும், மனைவியையும் அதட்டி உள்ளே அனுப்பிவைத்த ரெங்கநாதனுக்கு தலை வலித்தது. அன்றுதான் சிறுவயது. ஊரார் பேச்சைக்கேட்டு விபரமில்லாமல் தங்கை வாழ்க்கையில் அவசரப்பட்டு விட்டோம். அதனால் பட்ட அவமானங்கள்தான் அதிகம். மங்கையின் வாழ்விலும் அவசரகதியில் முடிவெடுக்க விரும்பவில்லை ரெங்கநாதன். தாயில்லாத பிள்ளைக்கு தாய்மாமன்‌ பொறுப்பு அதிகம் தானே.

இவர்கள் வெளியே பேசியது உள்ளே படுத்திருந்த மங்கைக்கு கேட்கத்தான் செய்தது. புலம்பலோடு அம்மாச்சி வந்து படுத்ததும் தெரிந்தநு. அம்மாச்சிக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை எனத்தான் தோன்றியது அவளுக்கு. இவர்கள் பேசியதை வைத்து வருத்தமோ, கவலையோ, அலுப்போ, சலிப்போ கணிசம் தன்னை நினைத்து சுய பச்சாதாபம் கூட வரவில்லை அவளுக்கு. படிப்பு முடியட்டும் என மாமன் சொல்லியதே ஆறுதலாக இருந்தது இப்போதைக்கு. 

இறுக கண்ணை மூடித் தூங்க முயன்றாள். விழித்திரை மூடினாலும் அகத்திரை திறந்து கொள்கிறதே. அதற்கு எங்கே பூட்டு சாவி தேடுவது. கிடைத்திருந்தால் மனக்கதவை இறுகப்பூட்டி சாவியை எப்பொழுதோ தலையைச் சுற்றி தூக்கி எரிந்திருப்பாள்.‌  

என் விதி அப்போதே தெரிஞ்சிருந்தாலே

கர்ப்பத்தில் நானே கலைந்திருப்பேனே

தலை எழுத்தென்ன

என் மொதல் எழுத்தென்ன

தலை எழுத்தென்ன

மொதல் எழுத்தென்ன சொல்லுங்களே…

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top