“வாங்கம்மா... எப்படியிருக்கீங்க. இந்தப் பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு.”
வெள்ளை வேட்டி சட்டையில், நெற்றியில் சந்தனம் குங்குமத்துடன் மங்களகரமாக கல்லாவில் அமர்ந்திருந்தவர் கை குவித்து வரவேற்க,
“நல்லாருக்கேம்ப்பா… தங்கமென்ன ஒரு காசு ரெண்டு காசா விக்குது. நாளைக்கு ஒரு வெல ஏறுது. இதுல எங்கிட்டு அடிக்கடி வாறது. வெள்ளியெல்லாம் மேலதான.” வாடிக்கைப் பழக்கத்தில் நலம் விசாரித்துக் கொள்ள,
“நகை எதுவும் பாக்கலியா?”
“இன்னும் அதுக்கு காலநேரம் கூடிவரலப்பா. மொழங்கால் வலியோடு படியேற வைக்கிறியே.” தன் முழங்கால் அவதியை நினைத்து அலுத்துக்கொள்ள,
“கீழ எடுத்தாறச் சொல்லவா?”
“வேண்டா… வேண்டா… நீ ஏவாரத்தப் பாரு. நான் மேல ஏறிக்கிறேன்.” முழங்காலைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறினார்.
வாடிக்கையாக நகை வாங்குபவர். தலைமுறைகளாக மாரியம்மாள் குடும்பமும் ஒரே கடைவீதியில் கடை வைத்திருக்கும் பழக்கவழக்கத்தில் சகஜமாகப் பேசினார் மாணிக்கம்.
“வாங்க பாட்டி” என வரவேற்றான் வெள்ளி நகைகள் பிரிவில் இருந்த மதியழகன்.
“பேராண்டி. சௌக்கியமா?” என விசாரித்தவர், அருகில் நின்ற மங்கையிடம், “இவந்தான் பத்மாவுக்கு பாத்த மாப்பிள்ளை” என கிசுகிசுத்தார்.
மங்கையும் அவனைப் பார்த்தாள். பளிச்சென்ற சிரிப்புடன் வெள்ளை சட்டை, டெனிம் ப்ளூ ஜீன்சில் வியாபாரக் கலையோடு இருந்தான்.
“என்ன பாக்குறீங்க பாட்டி?”
“கொலுசுதாம்ப்பா.”
“எடுத்து காமிம்மா.” அங்கிருந்த விற்பனை பெண்களில் ஒருவரை கை காண்பிக்க, அங்கே சென்றனர். முன்னால் போடப்பட்டிருந்த ஸ்டூலில் மூவரும் அமர்ந்து கொண்டனர். கார்த்திகாவின் கண்கள் கண்ணாடிக் கதவிற்குள் தொங்கிய கொலுசுகளை ஆர்வமாகப் பார்வையிட்டது.
கிராமங்களைப் பொறுத்தவரை வெள்ளி என்றாலே கொலுசு, மிஞ்சி, அரைஞாண் கொடி, குழந்தைக்கு மருந்து கொடுக்கும் சங்கு இவைகள்தான் பிரதானம். வெள்ளித்தட்டு, கிண்ணம், டம்ளர் போன்ற ஆடம்பரப் பொருட்கள் எல்லாம் வாங்குவது அரிதுதான். அத்தியாவசியப் பொருட்களுக்குத் தான் முதலிடம். ஆடம்பரம் எல்லாம் அதற்கடுத்து தான். அதனால் தான் சொந்த வீடு, கார் என வைத்துக் கொண்டு, லட்சக்கணக்கில் வங்கிக்கடனும் வைத்திருக்கும் பட்டணத்தாரைவிட, ஊருக்குள் கூலி வேலைக்குச் செல்லும் பாட்டி லட்சக்கணக்கில் வட்டிக்கு விட்டிருக்கும். ஒங்கொப்புறான சத்தியமா இது உண்மைங்க. கேட்டா சாவு முதலுக்குனு சொல்லும். சிறுவாட்டுக் காசு சேக்கறதுல நம்மூர் பெண்களை அடிச்சுக்க முடியாது. இல்லைனா தலை வெடிச்சுறும்.
“திருகாணி மாடலா, கொக்கி மாடலா பாட்டி?” விற்பனை பெண் கேட்க,
“நெறய முத்து வச்சு, சங்கிலியோட கொத்தமல்லி கொலுசு காமிம்மா” என கேட்க,
அவர் கேட்ட மாதிரி நிறைய சலங்கை கட்டிய கொத்தமல்லி கொலுசை எடுத்து ட்ரேயில் வைத்து காண்பிக்க,
மங்கை, “யாருக்கு அம்மாச்சி?” என,
“இந்த வயசுல நாம்போட்டா நல்லாவா இருக்கும்?” எனக் கேட்க, கார்த்திகா சிரித்தாள்.
“வெளையாடாதீங்க அம்மாச்சி. அப்படியே ஒரு கரகமும் வாங்கிக் கொடுங்க. இந்த ஜால்ரா கொலுசுக்கு பொருத்தமாருக்கும்” என்றாள் சன்னக் குரலில்.
“ஏன் மங்கா?”
“காலேஜ் போட்டுப்போற மாதிரி சின்னதா எடுக்கச் சொல்லுங்கம்மாச்சி.”
“ஓம்பேச்சக் கேட்டு போனதடவ அப்படி பில்லுபோல எடுத்துதான் அந்து போச்சு. நல்லா கெட்டியா காலு நெறய போட்டாதானே பொம்பளப்புள்ளைக்கி லட்சணமா இருக்கும்.”
“அம்மாஆஆச்சி” என அடித்தொண்டையில் அரற்ற,
“சரி…சரி… புள்ள கேக்குற மாதிரி எடும்மா” என அலுத்துக் கொண்டார்.
“உங்க காலம் மாதிரி இல்ல பாட்டி. இந்தக் காலத்துப் புள்ளைக கொலுசு போடுறதே பெருசு. அதுல உங்க காலத்து கொலுசெல்லாம் போடுவாங்களா?” என மெல்லிய கொலுசுகள் அடங்கிய ட்ரேயை எடுத்து மேலே வைத்தாள்.
தனக்குப் பிடித்ததை தேடி எடுத்து துண்டாக வைத்தாள் மங்கா. மெல்லியதாக இருக்க, இதுவா என்பது போல் மாரியம்மாள் பார்த்துவைத்தார். இருந்தாலும் பேத்தியின் விருப்பம் என விட்டுவிட்டார். பத்து நிமிடத்தில் வேலை முடிந்தது. ஆனால் கார்த்திகா எல்லா மாடலையும் எடுத்துப் பார்த்தாள். இன்னும் சிறுமி என்பதால் நிறைய சலங்கை வைத்ததையே தேடிக்கொண்டிருந்தாள்.
நம்ம தமிழ்நாட்டு கொலுசுகளெல்லாம் திருகாணி மாடல்தான். பெரும்பாலும் கையால் செய்யப்படுபவை. நாம எடுக்கும்போது ஒரு அளவுல இருக்கும். காலில் போடப்போடத்தான் துவண்டு வரும். பாம்பே மாடல் எனப்படும் கொக்கி மாடல் கொலுசுகள் எல்லாம் மெஷின் கட்டிங். ஒரு காலத்தில் தண்டையெனும் காலணி ஆண், பெண் இருபாலரும் அணியும் பழக்கம் இருந்தது. இப்பொழுதும் மிஞ்சி மட்டும் கல்யாணத்தின் போது சாஸ்த்திரத்திற்காக ஆண்களுக்கும் போடப்படுகிறது.
*****
இளவேந்தன் டீ கடையில் நின்றவாறே கடையை நோட்டம் விட்டுக்கொண்டிருந்தான். முன்பக்கம் சிறியதாகத்தான் இருந்தது. தலைமுறையாக நடத்தப்படும் கடைபோல தெரிந்தது. அன்றைய காலகட்டத்திற்கு பெரியதாக இருந்திருக்கும். இன்று இடம் போதவில்லை. கடையில் அந்நேரத்திற்கும் கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
விஷம் போல் விலையேறும் தங்கத்தை, சித்திரை முடிந்து வைகாசியில் பல முகூர்த்தங்கள் வரிசைகட்டியிருப்பதால் நகை வாங்க வாடிக்கையாளர்கள் நிறைந்து தான் இருந்தனர். எம்புட்டு வெல வித்தாலும் செய்யற சீர செஞ்சுதானே ஆகணும்.
கைராசிக்கடை என பெயர் வாங்கியதால் தலைமுறை கடந்த வாடிக்கையாளர்கள் இருந்தனர். நகைக்கடையைப் பொறுத்தவரை ராசி என நம்பிவிட்டால் மக்கள் அடுத்த கடை தேடமாட்டார்கள். கிராமத்து மனிதர்களைச் சொல்லவே வேண்டாம். அண்ணே, அக்கா, பெரியம்மா, தங்கச்சி, பாப்பா என முறைவைத்தே வாடிக்கையாளர்களை காலங்காலமாக தக்கவைத்துக் கொள்வார்கள்.
ஒரே தளத்தில் இருந்த தங்கமும், வெள்ளியும் காலமாற்றத்தில் இடப்பற்றாக்குறையால் மேல் தளத்திற்கு வெள்ளி நகைகளை மாற்றி வைத்திருந்தனர்.
இதையெல்லாம் கண்ணுற்றவாறே உள்ளே வந்தான். உட்கார இடமில்லை. அதை கண்டுகொள்ளவில்லை. நகையெடுக்க வந்திருந்தால்தானே இடம் தேடுவான்.
“வாங்கண்ணே… என்ன பாக்கணும்.” விற்பனை பையன் கேட்க,
“மொதல்ல அவுங்களுக்கு காமிங்க.” தனக்கு முன் நின்றவர்களை கை காண்பித்தான்.
நகைக் கடை. கூட்டம் வேறு. மேல் தளத்தில் இருந்து சிசிடிவியில் இரண்டு தளங்களையும் கவனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் மதியழகன். வந்தவர்கள் நகை பார்த்துக் கொண்டிருக்க, வேந்தன் மட்டும் கடையை ஆராய்ந்து கொண்டிருந்தான். அவனுக்குப் பின் வந்தவர்களுக்கும் வழிவிட்டு நின்று கொண்டான். வரும் வழியில் மற்ற கடைகளையும் கவனித்தான். பெரிய விசாலமான புதிய கடைகளில் கூட இந்தளவிற்கு கூட்டமில்லை.
டீக்கடையில் விசாரித்த வகையில் நல்லவிதமாகவே சொன்னார் கடைக்காரர். இந்த ரூட்டில் பஸ் ஓட்டும் ஓட்டுனரிடமும் விசாரித்திருந்தான்.
வெகுநேரமாக நகை எதுவும் வாங்கும் முகாந்திரமில்லாமல் ஒருவன் கடைக்குள் நிற்க, வித்யாசமாகப் பட்டது மதியழகனுக்கு.
சற்று நேரத்தில் வேந்தனே மேலே ஏறி வந்தான். வெள்ளி பிரிவிலும் பரவலாக ஆட்கள் இருந்தனர்.
இதுவரை சிசிடிவியில் கண்ணுற்றவன், இப்பொழுது நேரிடையாகவே வேந்தனை கவனிக்க ஆரம்பித்தான். தோற்றம் மதிப்பாகத்தான் இருந்தது. சந்தேகப்படும்படியில்லை. கருப்பு கலரில் பேண்ட்டும், இளந்தங்காய் பச்சையில் முழுக்கை சட்டை அணிந்து முழங்கைக்குக் கீழ் மடித்து விட்டிருந்தான்.
பார்வையைச் சுழற்றியவன் கண்கள் ஒரு இடத்தில் நிலைகொண்டது. மாரியம்மாவும், பேத்திகளும் கொலுசு பார்த்துக் கொண்டிருந்தனர். அடர் நீல வண்ண சுடிதார்க்கு அன்று இவன் அவசரமாக எடுத்துக்கொடுத்த பிங்க் கலர் துப்பட்டாதான் அணிந்து வந்திருந்தாள். விமல் வந்ததில் அவசரமாக வெளியேற நினைத்தவள், கைக்கு கிடைத்ததை எடுத்து அணிந்து வந்திருந்தாள்.
அவர்களுக்கு அடுத்து இரண்டு சேர்கள் தள்ளி அமர்ந்து கொண்டான். அதன் பிறகாவது தன்னை யாரென்று நினைத்துப் பார்த்திருப்பாளா என்ற எண்ணம் ஓடியது. சுத்தமா மறந்துட்டா போல. எப்படி நினைவிருக்கும். இவனே சிறுவயதில் அத்தையோடு இந்த ஊருக்கு இரண்டு மூன்று தடவை வந்திருக்கிறான்தான். ஆனால், அவர்கள் வீடு எந்த தெரு என்று கூட நினைவில் இல்லை. ஊரும் நிறைய மாறியிருந்தது. அப்படியிருக்க அவளுக்கு மட்டும் எப்படி தன்னை நினைவிருக்கும். கேட்டால் அத்தை மகன், மாமன் மகள் என்ற இரத்த உறவு வேறு. சிரித்துக் கொண்டான் உள்ளுக்குள்.
மெலிதான கொக்கி மாடல் கொலுசு போதுமென மங்கா எடுத்துக்கொள்ள, கார்த்திகா ஆவலாக ஒவ்வொரு கொலுசாக எடுத்து காலில் வைத்துப்பார்த்து மங்காவிடம் காண்பித்தாள்.
“உனக்கு எது போட்டாலும் நல்லாருக்கும் கார்த்தி” என சிறுமியின் தலையை ஆட்டி சிரித்தாள்.
பேத்தி வைத்துப் பார்ப்பதை ஆசையாக மாரியம்மாளும் பார்த்தார். மகன் வயிற்றுப் பேத்தியாயிற்றே. நாளை தீப்பந்தம் பிடிக்கும் பேத்தியல்லவா? என்றும் வேறுபாடு காட்டியதில்லை பேரன், பேத்திகளுக்குள்.
“அப்பாயி, இத மாத்தணுமா, கழட்டவா?” என காலில் இருந்ததை கார்த்திகா கழற்றப்போக,
“புதுசாத்தான இருக்கு. அத மாத்த வேண்டாம்” என்றார்.
“அப்ப எனக்கு எடுக்கலையா?” காலில் இருப்பதை கழற்ற வேண்டாம் என்றதும் தனக்கு எடுக்கவில்லை போல என சட்டென சிறுபிள்ளை முகம் வாட,
“புதுசும் எடுத்துக்க பாப்பா. பழசும் வச்சுக்கோ” என்றார். சந்தோஷம் தாங்கவில்லை சிறுமிக்கு.
‘எட்டாவது முடிச்சுட்டா. கூடிய சீக்கிரம் செலவு வப்பா. எடுத்து வச்சா அன்னைக்கினு இத புதுசா போட்டுக்கலாம்’ என முன்யோசனை ஓடியது மாரியம்மாவிற்கு.
மாலை நேரம் என்பதால் பூஜை முடித்து, வாடிக்கையாளர்களுக்கு கேசரியும், பெண்களுக்கு பூவும், குங்குமமும் கொடுக்கப்பட்டது. இரண்டு ஜோடி கொலுசுகளுக்கும் பில் போடச் சொல்லிவிட்டு பிரசாதத்தை சாப்பிட்டு கொண்டிருந்தனர். சுகர் இருப்பதால் தனக்குக் கொடுத்ததையும் கார்த்திகாவிடமே கொடுத்தார். கீழே கூட்டமாக இருந்ததால் பில்போட நேரமாகும் எனத் தெரிய, அங்கேயே அமர்ந்து கொண்டனர்.
“மங்கா, சின்னதா ஒரு மூக்குத்தி பாக்கலாமா?” என்றவரை முறைத்துப் பார்த்தாள்.
“ஒத்தக்கல்லு வச்சு போட்டுக்க. ஒன்னைய என்ன அந்தக்காலம் மாதிரி பேசரியா போடச்சொன்னே. எத்தன நகை போட்டாலும் மூக்கு மொளுக்குனு இருந்தா எடுப்பாவே இருக்காது மங்கா.” வெகுநாட்களாக பேத்திக்கு மூக்கு குத்த தாஜா பண்ணிக்கொண்டிருந்தவர், இப்பொழுதும் அதைப்பண்ண,
“இதுக்குதான் வரமாட்டேன்னு சொன்னே. ஆளவிடு அம்மாச்சி. விட்டா புல்லாக்கு, ஒன்னப்பத்தட்டெல்லாம் குத்தச் சொல்லுவ” என அலுத்துக் கொண்டாள்.
வேந்தன் முன் இவர்கள் ஒதுக்கிவைத்த ட்ரே இருக்க, அதிலிருந்த கொலுசை எடுத்துப் பார்ப்பதுபோல் பார்த்துக் கொண்டிருந்தான். தாமரை சிறுவயதில் இந்த மாதிரி கொலுசுதான் போட்டிருந்தார். பிள்ளைகள் பெரிதாக, சிறியதாக போட ஆரம்பித்து, மகள் வயதிற்கு வந்தவுடன் சுத்தமாக கழற்றிவிட்டார்.
அது அப்படித்தான். வயது வந்த பெண் வீட்டில் இருந்தால் அம்மாவிற்கு அலங்காரங்கள் குறைந்துவிடும். அதனால்தான் பொண்ணு பொறக்குறதுக்கு முன்னாடி பூட்டி அழகு பாத்துக்கணும்னு ஒரு சொலவடை உண்டு ஊர்ப் பக்கம். அதுவும் மருமகன் எடுத்துவிட்டால் இன்னும் சுத்தம். சடை பின்னி போடக்கூடாது. பின் குத்தி சேலை கட்டக்கூடாது. ப்ளவுஸ் கூட மேட்சிங்கா போடக்கூடாதுனா பாத்துக்கோங்க. இந்தக்காலத்துலயுமான்னு கேட்காதீங்க. இன்னும் ஊர்ப் பக்கம் இப்படித்தான். காலம் மாறிப்போச்சுன்னு சொன்னாலும், முன்னவிட்டு பின்னாடி பேசுவாங்க.
அவனுக்கும் கொலுசைப் பார்க்க அம்மா போட்டிருந்தது ஞாபகம் வந்தது. அதற்குள் இன்னொரு விற்பனை பெண் வந்து, “கொலுசு காமிக்கவாண்ணே” என கேட்க, வந்ததுக்கு ஏதாவது வாங்கணும் போலயே என யோசித்தான்.
இவன் தயங்கிக் கொண்டிருக்க, ஒரு விற்பனை பையன் வேந்தனிடம், “அண்ணே, உங்கள உள்ள வரச்சொன்னாங்க” என அழைத்தான்.
“என்னையா தம்பி” எனக்கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ள,
“ஆமாண்ணே, ஒங்களத்தான்” என அழுத்திச் சொல்லவும், யாரென்ற யோசனையோடு எழுந்து சென்றான்.
“வாங்க” என எழுந்து நின்று வரவேற்றவன் கை நீட்டினான். வேந்தனும் கைகொடுக்க, இறுகப் பற்றிக் குலுக்கியவன் அமரச் சொன்னான். அதற்குள் அறையை ஒரு முறை சுற்றிவந்தன வேந்தனின் கண்கள். அலுவலக அறை போலும். கடையின் முன் பகுதியைத் தடுத்து வெளியே தெரியாமல் உள் பக்கமாக இருந்தது. உள்ளே பாதுகாப்புப் பெட்டகம் இருந்தது.
“சொல்லுங்க… என்ன வேணும். உங்களப் பாத்தா நகையெடுக்க வந்தமாதிரி தெரியலயே.” சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தான் மதியழகன்.
வேந்தன் கேள்வியாகப் பார்க்க, “நீங்க கடைக்குள்ள வந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாச்சு. யார்கிட்டேயும் எதுவும் கேக்கல. நகை பாத்த மாதிரியும் தெரியல.”
“கூட்டம் குறையட்டும்னு வெய்ட் பண்ணேன்” என்றவன், அவனது கண்ணோட்டத்தை மெச்சிக் கொண்டான். நம்ம இவங்கள நோட்டம்விட வந்தா, இவன் நம்மல நோட்டம் விட்டிருக்கான் என.
“உண்மையச் சொல்லுங்க ப்ரோ. கஸ்ட்டமர் யாருன்னு தெரியாமலா இத்தன வருஷம் ஏவாரம் பண்றோம்” என சிரிக்காமல் கேட்க,
‘ப்ரோவா… முறையே மாறுதே’ என உள்ளுக்குள் சிரித்துக் கொள்ள, முகத்திலும் அது பளிச்சிட்டது.
முதலில் அவனது தோற்றத்தை மதிப்பிட்டான். ஃபேட்டோவில் பார்த்ததைவிட சற்று நிறம் கம்மிதான். மண்வாகு. வெள்ளைச் சட்டை, ப்ளூ ஜீன்சில் கச்சிதமான உடல்கட்டோடு, கம்பீரமாகத் தெரிந்தான். நகைக்கடைக்காரன் என்றாலும் கழுத்தில் ஒரு மெல்லிய செயின், வலக்கையில் வெள்ளியில் காப்பு, விரலில் ராசிக்கல் மோதிரம். இடக்கையில் வாட்ச். தங்கையின் அருகில் மனம் அவனை கற்பனை செய்து பார்க்க, பொருத்தம் பக்காவாகத் தோன்றியது.
வேந்தன் பார்வை கடையை மட்டுமில்லாமல், தன்னையும் ஆராய்வதை உணர்ந்தான் மதியழகன், வியாபாரியாயிற்றே. இருவரும் ஒருவரை ஒருவர் எடைபோட்டுக் கொண்டிருக்க, சட்டென கதவு திறந்து உள்ளே நுழைந்தான் விமல். அவனை எதிர்பார்க்காத மதியழகன்,
“வாங்க விமல்” என அவனையும் எழுந்து வரவேற்று அமரச் சொன்னான்.
“நான் விருந்தாட வரல. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்” என கோபத்தில் படபடத்தான் வந்ததும் வராததுமாக. சுற்றிலும் யார் இருக்கிறார்கள் இல்லை என்றெல்லாம் பார்க்கவில்லை.
“முதல் மரியாதை படம் ஏதும் பாத்தீங்களா? எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்னு வந்து நிக்குறீங்க. முதல்ல உக்காருங்க விமல்” அவனை சிரித்துப் பேசி ஆசுவாசப்படுத்த முயன்றான் மதி.
“மாமன் மச்சான் மாதிரி இந்த கேலி கிண்டல் எல்லாம் நம்மகிட்ட வேண்டாம் மதி” என்றவன் அப்பொழுதுதான் இன்னொருவன் அங்கிருப்பதைக் கவனித்தான்.
யோசனையாக, “நீ விநாயகம் பஸ் கண்டக்டர் தானே?” என்றான். வேந்தன் பதில் சொல்லாமல் மென்சிரிப்பொன்றை உதிர்க்க, விமல் அவனை கண்டுகொள்ளவில்லை. அந்நியன் முன் தன் குடும்ப விபரம் பேசுகிறோம் என்ற சிந்தனையும் இல்லை.
“எதுக்கு முடிவாகப் போற கல்யாணத்த வேண்டாம்னு சொன்னீங்க?” எனக் கேட்க, வேந்தன் பார்வை கூர்மை பெற்றது.
“அதான் பொருத்தமில்லைனு சொன்னோமே விமல்.”
“பொருத்தமில்லையா? இல்ல… எங்களவிட வசதியான எடம் பாத்துட்டீங்களா?” என பேச்சின் தொனி நக்கலாக மாற, அப்பொழுதும் மதியழகன் சிரித்த முகமாகவே பதில் சொன்னான்.
“நீங்க எப்படி வேணும்னாலும் எடுத்துக்கோங்க விமல். எங்க வீட்ல பெரியவங்க முடிவுதான் என் முடிவு.”
“அப்ப பெரியவங்கதான் காசுக்கு ஆசப்பட்டாங்களா? கூடக்கொறச்சு வேணும்னா கேக்க வேண்டியதுதான. நாங்களும் செய்வோம்ல. அதுக்கெதுக்கு சாதகம் மேல பழியப் போடணும்.” எகத்தாளமாகக் கேட்க, சட்டென முகம் இறுகியது மதிக்கு.
“விமல்… தேவையில்லாம பேசாதீங்க.” குரலில் கண்டிப்பு காட்டினான். தன் வீட்டு பெரியவர்களைப்பற்றி தரக் குறைவாகப் பேசவும் மதியழகன் முகமும் கோபத்தைக் காட்டியது. ‘ஏதோ கூடுதல் வரதட்சணைக்கு ஆசைப்பட்ட மாதிரியில பேசுறான்’ என எண்ணியவன், மூன்றாம் மனிதன் உடனிருக்க கோபத்தை அடக்கி பேச்சில் கண்ணியம் காட்டினான்.
“கொஞ்சமாவது பொறுப்பான அண்ணனா நடந்துக்கோங்க விமல். உங்க அவசரப் புத்தியப் பாத்தாலே தெரியுது” என அத்தோடு நிறுத்திக் கொள்ள,
“என்ன தெரியுது. இதவிட பெரிய எடமா எந்தங்கச்சிக்கு முடிச்சுக் காட்டுறே.”
“மொத அதச்செய்ங்க. ஆனா, அப்பவாவது உங்க தங்கச்சியோட விருப்பம் என்னானு கேட்டுட்டுப் பண்ணுங்க விமல். எங்க வீட்டுப் பொண்ணுகிட்ட குறையில்லைனா, வேண்டாம்னு சொன்னவங்ககிட்டப்போயி இப்படி வலிய மல்லுக்கு நிக்கமாட்டேன்” என மறைமுகமாக கோடி காட்ட, அவனுக்கெங்கே அதெல்லாம் புரிந்தது. வந்தான்… பேசினான்… போயிட்டான்… எனும்படி அவசரமாக வந்தவன் ஆத்திரமாக சவால் விட்டு விறுவிறுவென வெளியேறிவிட்டான்.
ஐந்து நிமிடத்தில் மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருந்தது. ஃபோனில் அழைத்தவன் டீ எடுத்து வரச் சொன்னான்.
வேந்தனும் எதுவும் பேசவில்லை. விமலின் தங்கைக்கு இவனைப் பேசியிருக்கிறார்கள் எனப் புரிந்தது. டீ எடுத்து வர, வேந்தனிடம் ஒன்றை எடுத்துக் கொடுத்தான்.
அவன் வாங்கிக் கொள்ள, “என்ன முடிவு பண்ணிருக்கீங்க?” என்றான் மதியழகன்.
“எதப்பத்தி…” என முகம் யோசனையாக,
“மாப்பிள்ளை விசாரிக்கதானே வந்தீங்க. உங்க தங்கச்சிய எனக்குக் கொடுக்கறதப் பத்தி என்ன முடிவு பண்ணிருக்கீங்க.” பட்டென கேட்டான் தேர்ந்த வியாபாரியாக. வேந்தன் சபாஷ் போட்டான் மனதிற்குள்.
“எப்படி கண்டுபிடிச்சீங்க?”
“வெளிய உங்களப் பாத்தப்ப எங்கயோ பாத்த மாதிரி இருக்கேனு யோசிச்சேன். இப்ப விமல் வந்து விநாயகம் பஸ் கண்டக்டர் தானேனு கேட்கவும் புரிஞ்சுது. அந்த வீடியோ நானும் பாத்தேன்.”
“ஓ… ஆனா கண்டக்டரான்னு தானே கேட்டாப்ல?”
“என்னங்க… நம்ம ஊர அடுத்து ஒரு பஸ்ஸ மரிச்சு பிரச்சினை நடந்திருக்கு. சோஷியல் மீடியா வரைக்கும் வந்துருக்கு. யாரு எவருன்னு விசாரிக்க மாட்டோமா? அப்பா வேற விநாயகம் பஸ்காரவங்க பொண்ணு சாதகம் கொடுத்திருக்காங்கனு சொன்னாரு. நாலு நாள்ல நீங்கவந்து நோட்டம் விடுறீங்க. ஒன்னும் ஒன்னும் ரெண்டு தானே” என சிரிக்க, வேந்தனால் மெச்சாமல் இருக்க முடியவில்லை. தன்னைச் சுற்றி மட்டுமல்லாமல், தன் ஊரைச்சுற்றி நடப்பதையும் அறிந்து வைத்திருக்கிறான். ஆனால் விமல் தன் வீட்டில் என்ன நடக்கிறதென்று கூட பார்ப்பதில்லை போல. கவனித்திருந்தால் சித்தியிடம் சொன்னதற்காக அம்மா ஏன் அவ்வளவு கோபப்பட்டார் என யோசித்திருப்பான்.
கிட்டத்தட்ட மூவருக்கும் ஒரே வயதுதான் இருக்கும். வீடியோ வைத்தே இவன் கண்டக்டர் மட்டுமல்ல ஓனரும் இவன்தான் என்பதை கண்டு வைத்திருக்கிறான் மதியழகன்.
“விநாயகம் பஸ் கம்பெனி எங்களுக்கு மட்டும் சொந்தமில்லை. மாமாவும் இருக்காரு” என்றான் முதலிலேயே தெளிவாக.
“தெரியும்… வீட்ல பேசினப்ப, ரெங்கநாதன் சார் சொந்தம்னு தெரிஞ்சது. சின்னமனூர்ல பாத்திரக்கடை, பஸ் கம்பெனினு அப்பா எல்லா விபரமும் சொன்னாரு. இப்பக் கூட ரெங்கநாதன் ஃபேமிலி நம்ப கடையிலதான் இருக்காங்க.”
“நானும் பாத்தேன்.”
“நீங்க அந்தப் பொண்ண பாத்ததப் பாத்துதான், ஒரு வேள சைட்டடிக்க வந்தீங்களோனு நெனச்சேன்” என்றான் சிரிப்போடு. இவன் நகை எதுவும் எடுக்காமல் மேலே வர, என்ன வாங்க எனத்தெரியாமல் வந்திருப்பான் போல. அதனால்தான் வெள்ளி எதுவும் பார்க்கலாம் என வந்திருக்கிறான் என மதியழகன் யோசிக்க, இங்கு வந்தும் எதுவும் பார்க்காமல் மங்கையைப் பார்த்துக் கொண்டிருக்க, அவன் கவனத்தை கலைக்கவே விற்பனை பெண்ணிடம் கண் காண்பித்தான். அவளும் வந்து கொலுசு வேண்டுமா எனக் கேட்க, இவன் தயங்கியது மதியழகனுக்கு சந்தேகத்தை விளைவிக்க, உள்ளே அழைத்துவிட்டான்.
‘என்னடா நடக்குது இங்க. நான் இவன நோட்டம் விட வந்தா இவன் என்னைய நோட்டம் விட்டுருக்கான்’ என நினைத்தவன் வாய்விட்டே சிரித்தான்.
“அதிகமா பொண்ணுக வர்ற எடம் இல்லையா? அதான் கொஞ்சம் உன்னிப்பா கவனிக்க வேண்டியிருக்கு.”
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல… நானே போன வாரம்தான் அரசியப் பாத்தேன். அவளுக்கு நான் யாருன்னே தெரியாது. இந்த லட்சணத்துல இருக்கு. நீங்க என்னடான்னா…” என இழுத்தவன், சட்டென நிறுத்திவிட்டு,
“ஓ… அதுக்குதான் ஆஃபீஸ் ரூம் கூப்ட்டுவிட்டீங்களா? அது தெரியாமத்தான் வந்து உக்காந்திருக்கேனா” என போலியாய் அரண்ட பாவனையில் கேட்க, மதியும் சிரித்துவிட்டான்.
“எங்க வீட்லயும் பெரியவங்க சொல்றதுதாங்க. ஆனா, நான் சொன்னா மறுக்க மாட்டாங்க. நான் முடிவு பண்ணிட்டேன். பொருத்தமெல்லாம் கூடிவந்து என் தங்கச்சிக்கும் உங்களப் பிடிச்சா நீங்கதான் எங்கவீட்டு மாப்ள.” இருவரும் நறுக்குத் தெறித்தாற்போல் பேசிக்கொண்டனர்.
“பரவாயில்ல பேர் சொல்லியே கூப்பிடுங்க” என்றவன்,
“இப்பதான் ஒருத்தன் வந்து கத்திட்டுப் போறான். காசப்பாத்து மனசு மாறிட்டோம்னு. அப்பறம் எப்படி…”
“உள்ளூர்க்காரன் வந்து சம்பந்தம் கைவிட்டுப் போச்சுன்னு இவ்வளவு தூரம் நேர்லயே வந்து ஆத்திரப்பட்டுப் பேசிட்டுப் போறான்னா அதுலயே தெரிஞ்சுக்கிட்டேன். அதுவுமில்லாம அந்தப் பொண்ண வேண்டாம்னு சொன்னதுக்கு சாதகம் காரணமில்லைங்கறது நீங்க அவன்கிட்ட பேசுனதிலயே தெரிஞ்சது. ஆனா நீங்க சொன்னத கோபத்துல கவனிச்சாப்லயா என்னானுதான் தெரியல. பாவம் அந்தப் பொண்ணு” எனச் சொல்ல, சபாஷ் போடுவது இப்பொழுது மதியழகன் முறையாயிற்று.
உள்ளூர்க்காரன் நன்கு தெரிந்துதான் சம்பந்தம் பேசியிருப்பான் எனக் கணித்து, தான் சொன்ன ஒரு வார்த்தையைக் கொண்டே அந்தப் பெண்ணிற்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்பதை புரிந்து கொண்டதை நினைத்து மெச்சாமல் இருக்க முடியவில்லை. அதுவும் தன் தங்கைக்கு பிடித்தால் மட்டும்தான் என்றது தங்கையின் விருப்பமில்லாமல் இவ்வளவு தூரம் வரமாட்டான் என்பதையும் உறுதிப்படுத்தியது.
“பொம்பளப்புள்ள வெவகாரம் பாருங்க. நாசுக்காதான் சொல்லவேண்டியிருக்கு. எங்க வீட்லயும் ஒரு பொண்ணு இருக்குல்ல.”
“தெரியும்… படிக்கிறாங்கள்ல” என்றான். மாப்பிள்ளைக்கு ஒரு தங்கையும் அவள் கல்லூரி படித்துக் கொண்டிருக்கிறாள் என்பதும் தெரியும்.
“ஆமா… வெளிய உங்ககிட்ட கொலுசு பாக்குறீங்களானு கேட்ட பிள்ளைதான்” என இவன் எங்கே அவளைக் கவனித்தான்.
இவனும் டீ குடித்துவிட்டு எழுந்து கொள்ள, இருவருமே எழுந்து வெளியே வந்தனர்.
இப்பொழுது அவன் தங்கையைப் பார்த்தான். விடுமுறை நாட்களில் அவளும் இங்கு வருவது வழக்கம்தான்.
முதன் முதலாக நகைக்கடை வந்ததற்கு சும்மா போவானேன் என, அவளிடமே சென்று கையில் எடுத்துப் பார்த்த கொலுசிற்கு பில் போடச்சொன்னான். பார்த்துக் கொண்டிருந்த மதியழகன் மனமும் ஒரு கணக்குப் போட்டுப்பார்த்தது.
“கீழ போங்க. பில் அங்கதான்” என்றாள்.
இருவரும் கை கொடுத்து விடைபெற, அண்ணனிடம் யார் என சைகையில் முகம் தூக்கி வினவ, மறுப்பாக தலையசைத்து விட்டு சென்றுவிட்டான்.
படியில் இறங்கிச் சென்றவன் ஒரு உந்துதலில் பக்கவாட்டில் திரும்பிப் பார்க்க, மங்கையும் கண்ணெடுக்காமல் இவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
