மல்லி 5

“எதுக்கு இவ மூஞ்சியில் முள்ளக்கட்டுன மாதிரி இருக்கா?”

“உங்க மருமகதான.  நீங்களே கேக்க வேண்டியதுதான அம்மாச்சி.”

“எதுக்கு, தெருவோடு போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறுறதுக்கா? 

“அந்த மாரியாத்தா நீங்கதானே?”

“நாஞ்சொன்ன மாரியாத்தா வேற. நீ பண்ண காரியத்துக்கு இப்பதான் ஒரு வாரமா பேஞ்ச அடமழ ஓஞ்சிருக்கு. இத வேற‌கேட்டு செடி மழ ஆரம்பிக்கவா” என மாரியம்மா சிலிப்பிக்கொண்டார். 

ஏற்கனவே மங்கையர்க்கரசி விநாயகம் பஸ்ஸில் ஏறிய தினத்திலிருந்து ஒரு வாரமாக அதைவைத்தே தொண்டைத்தண்ணி வற்ற பேசி, அவரே அலுத்து இப்பொழுதுதான் ஓய்ந்திருக்கிறார் செல்வி. வழக்கம்போல அம்மாச்சியும், பேத்தியும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அதுவே அவரை மேலும் வெறுப்பேற்றியது. “கழுதையா கத்துறே. அசஞ்சு கொடுக்கறாளுகளா பாரு” என பொங்கித் தீர்த்துவிட்டார். 

ஞாயிறு என்பதால் மங்கையர்க்கரசி வீட்டில் இருந்தாள். எதற்கு இந்த இரண்டு நாட்கள் கல்லூரி விடுமுறை விட வேண்டும். அன்றும் கல்லூரி வைத்தால் நன்றாக இருக்கும் என எண்ண வைத்துவிடுவார் தமிழ்ச்செல்வி. 

அன்றுதான் ஒரு வாரமாக சேர்த்து வைத்த துணிகளை துவைத்துக் கொள்வாள். வாஷிங் மெஷினில் போட பிடிக்காது. வேலைக்கு வரும் விஜயாவைக்கூட துவைக்க விடமாட்டாள். அவளே துவைத்தால் தான் அவளுக்கு முழு திருப்தி. துணி என்று மட்டும் இல்லை. அவளது அறையிலும் ஒவ்வொன்றும் அவளே அடுக்கி ஒதுங்க வைத்து, நேர்த்தியாக இருக்க வேண்டும். சற்று கலைந்திருந்தாலும், இடம் மாறியிருந்தாலும் பிடிக்காது. சாப்பிடும் தட்டுக்கூட மாறக்கூடாது. 

“ரொம்பத்தான் சுத்தம் பாக்குறா. சின்ன பிள்ளையில இவ இருந்த இருப்பு தெரியாதாக்கும்” என அதற்கும் அலுத்துக் கொள்வார். 

துப்பட்டாவை துவைக்க எடுத்த பொழுது அந்த நாளும் நினைவு வந்தது. எந்த துணிச்சலில் அன்று அந்த பஸ்ஸில் ஏறினேன் என நினைத்துக் கொண்டாள். அந்த பஸ்ஸை ரோட்டில் பார்க்கும் பொழுது கூட தனக்கும் அதற்கும் சம்பந்தம் இருப்பதை ஒருநாளும் நினைத்துக் கூடப் பார்த்ததில்லை. 

மாமன் பிள்ளைகளும் இவளது அறைக்குள் பெரிதாக வர மாட்டார்கள். ஒரே வீட்டில் வளர்ந்தாலும் பெரிதாக ஒட்டுதலில்லை என்பதைவிட ஒட்டவிடவில்லை.

 “அவளோட சேந்தா அவ பழக்கமெல்லாம எம்பிள்ளைகளுக்கும் தொத்திக்கும்” என பிள்ளைகளை சேரவிட்டதில்லை. 

ஐந்து வயதிலிருந்து இங்குதான் வளர்கிறாள். மங்கை இங்கு வரும்பொழுது தீபன் கைக்குழந்தை. அவள் வந்த இரண்டு வருடங்கழித்து கார்த்திகா பிறந்தாள். சின்ன குழந்தை என்றாலே அனைவருக்கும் பிடிக்கும்தானே. அதுவும் பெண் பிள்ளைகளுக்கு கேட்கவே வேண்டாம். பெண்பிள்ளைகள் விளையாடத் தொடங்கும் பொழுதே பொம்மைக்கு அலங்காரம் பண்ணித்தானே ஆரம்பிக்கின்றன. எட்டு வயதிலிருந்த மங்கைக்கும் பொம்மை போல தெரிந்தாள் கார்த்திகா. 

குளிக்க வைத்து படுக்கையில் போட்டுவிட்டு, தமிழ்ச்செல்வி உள்ளே சென்றுவிட, குழந்தைக்கு அலங்காரம் பண்ணுகிறேன் என பவுடர், கண்மை என அப்பி விட, பவுடர்‌ மூக்கிலேறி குழந்தை அவஸ்த்தைப் பட்டுப் போனது. 

“கொழந்தைய கொல்லப் பாத்திருக்கா” என வெளியே தெரியாமல் தொடையில் நிமிண்டிவிட சிவந்த இளந்தோலில் நன்றாகக் கன்றி கருத்துவிட்டது. அப்பொழுதெல்லாம் மாமியாரிடம் பயம் இருந்தது தமிழ்ச்செல்விக்கு. மறுநாள் பேத்தியை குளிக்க வைக்கும் பொழுதுதான் மாரியம்மா கவனித்தார். அதிலிருந்து பேத்தியை தன் கைக்குள்ளேயே வைத்துக் கொண்டார். அந்தப் பேத்திதான் ஒசத்தி என அதற்கும் அங்கலாய்ப்பார். 

மூன்று பேரும் சேர்ந்து சிறிது நேரம் டிவி பார்த்தால் கூட அவகிட்ட உங்களுக்கென்ன பேச்சு என பிள்ளைகளை அதட்டுவார். தன் பிள்ளைகளுக்கு சேரவேண்டியதை இவள் பங்கு போடுவதாக எண்ணம். தன் பிள்ளைகள் இந்த வீட்டிற்கு உரிமையாளர்கள். இவள் ஆதரவிற்காக ஒண்டிக் கொண்டிருப்பவள் என்று வேற்றுமை பாராட்டியே பிள்ளைகள் மத்தியிலும் பிரிவினையை வளர்த்துவிட்டார். 

சிறுவயதில் ஒன்றாக விளையாடும் பொழுது பிள்ளைகள் அடித்துக் கொள்வதும் பின்பு சேர்ந்து கொள்வதும் சகஜம்தானே. அதையே பெரிய சண்டையாக்கிவிடுவார் மாமியாரிடம். அதனாலே மாரியம்மாவும் இவளை ஒதுக்கியே வளர்த்துவிட்டார். 

பெற்றவர்கள் ஆதரவு இல்லாமல் மாமன் வீட்டில் வளரும் குழந்தைக்கு, அம்மாச்சியிடம் என்னென்ன சலுகைகள் கிடைக்குமோ அது அத்தனையும் மங்கையர்க்கரசிக்கு தாராளமாகவே கிடைத்தது. அதே போல் அதற்கிணையாக அத்தையின் புறக்கணிப்பும், குத்தல் பேச்சுக்களும், உதாசீனமும் ஒரு பிடி அதிகமாகவே கிடைத்தது. நாளடைவில் பழகிவிட்டது. அவளுக்கே வளற‌வளற இது தன் வீடு இல்லையென மனதில் பதிய ஆரம்பித்தது. 

அதற்காக அவளும் சும்மா இருக்க மாட்டாள். எதைச் செய்தால் தமிழ்ச்செல்வி காண்டாவாரோ அதை கமுக்கமாக செய்துவிட்டு அமைதியாக இருந்து கொள்வாள். அப்படி ஒன்றுதான் பிடிக்காது எனத் தெரிந்தும் விநாயகம் பஸ்ஸில் ஏறியது. 

ஆரம்பத்தில் தனக்கு மட்டும் ஏன் என்ற கேள்வி கழிவிரக்கமாக எழுந்து, காலப்பொக்கில் எனக்கென்ன என்ற எண்ணமாக உருமாறியது. என்னதான் அம்மாச்சி பாசமாகப் பார்த்துக் கொண்டாலும், பெற்றவளைப் போல வருமா? அந்த வயதில் அம்மா எங்கே என தனிமையில் பலமுறை யோசித்திருக்கிறாள். அழுதிருக்கிறாள். ஏங்கியிருக்கிறாள். 

தூக்கத்தில் அலறி எழுந்திருக்கிறாள். பத்து வயதைக் கடந்தும் கூட படுக்கையை பலமுறை நனைத்திருக்கிறாள். அந்த மாதிரி நேரங்களில் பேத்தி பயந்துவிட்டதாக மாரியம்மா கோவில், மசூதியென அழைத்துச் சென்று மந்திரித்து வருவார். 

அப்பா பாசம் அவளுக்கு நினைவில் இல்லை. 

பெற்றவளைக் கொண்டு குத்தல் பேச்சுக்கள் பேசும் பொழுதெல்லாம் அழும் பேத்தியை, “இவ பேசுனதுக்கெல்லாம் அழக்கூடாது மங்கா. வைராக்கியமா வாழ்ந்து காட்டணும். அழுதா இன்னும் எளக்காரமா போகும் இவளுக்கு” என மாரியம்மா சொல்லிச் சொல்லியே தனக்குள் இறுகிப் போனாள் மங்கையர்க்கரசி. நன்றாகப் படிக்க வேண்டும். யார் தயவுமில்லாமல் சொந்தக்காலில் நிற்க வேண்டும். அந்த வீம்பு மட்டுமே அவளிடம் இப்பொழுது. 

அழுத்தக்காரி, ஊமக்கோட்டான், அமுக்கினி என அதற்கும் பெயர் வைத்தார். 

பிள்ளைகளுக்கும் தேர்வு முடிந்து கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டது. மாமன் பிள்ளைகள் தீபனும், கார்த்திகாவும் வீட்டில் தான் இருந்தனர். தீபன் பத்தாவது தேர்வு எழுதியிருந்தான். எளந்தாரிப் பருவத்தை தொட்டுவிட்ட நினைப்பில் இப்பொழுதெல்லாம் அதிகமாக வீடு தங்குவதில்லை.

பாத்திரக் கடையை அடைத்துவிட்டு இரவு வரும் கணவனிடமும் தன் ஆதங்கத்தைக் கொட்ட முடியவில்லை. ஏற்கனவே பஸ் வேறு பழுதாகி செலவு வைத்ததில் பயங்கர டென்ஷனில் இருந்தார் ரெங்கநாதன். சின்ன ரிப்பேர் எனினும் பெரிய செலவு வைத்தது. பழக்கமில்லாத தொழிலில் கால்வைத்து பஸ் கம்பெனியைப் பொறுத்தவரை அவருக்கு லாபமும் இல்லை நட்டமும் இல்லை. பெருமைக்காக வீம்புக்கு நடத்திக் கொண்டிருக்கிறார். பாத்திரக்கடைதான் பிரதானம் என்பதால் நேரடியாகவும் பஸ் கம்பெனியை கண்காணிக்க முடியவில்லை. கை மாற்றி விடலாம் என்றாலும் கௌரவம் தடுத்தது.

தான் எதிர்பார்த்து போன தகவல் முழுமையாக அவருக்குக் கிடைக்காத ஆதங்கத்தில், அக்கா வீட்டிற்கு சென்று வந்ததிலிருந்து கடுகடுவென மூஞ்சியத் தூக்கி வைத்திருந்தார் தமிழ்ச்செல்வி. செல்வராணியும் தங்கையிடம் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. அவரே நொந்து போயிருந்தார். அக்காவிற்கு மங்கையை தன் மகனுக்கு முடிப்பதில் விருப்பமில்லை எனத் தெரிந்தும் விமலின் மனதில் ஆசையை வளர்த்து விட்டிருக்கிறார். 

“சித்தி…” என குரல் கேட்க,

“ஆயுசு நூறுடா. உன்னத்தான் நெனச்சுட்டுருந்தேன்.” சிரித்து வரவேற்றார் விமலை. 

“மழ வரப்போகுது. அதிசயமா உங்க அத்தக்காரி சிரிச்சுட்டா.” அருகில் அமர்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்த பேத்தியிடம் கமுக்கமாக சொல்ல, 

“கம்முனு இரு அம்மாச்சி. நீ வேற” என அடக்கினாள்.‌

“ஏன் சித்தி?” என கேட்டுக் கொண்டே, நான்கு மணி வெயிலில் வியர்த்து விறுவிறுத்து வந்தான் விமல். 

சட்டைப் பட்டன்களில் இரண்டை கழற்றிவிட்டு, காலரைத் தூக்கிவிட்டு ஆயாசமாக ஃபேனுக்கடியில் சோஃபாவில் பொத்தென அமர்ந்தான். 

“என்னடா… பூவெல்லாம் போட்டு வர்றியா?” 

“ஆமா சித்தி… வெயிலு பொளந்துகட்டுது” என்றவன்,

“மங்கா… தண்ணி கொண்டா. இந்தா பூ” என கையிலிருந்த  பூக்கவரை அதிகாரமாய் அவளிடம் நீட்ட,

“கொண்டா பேராண்டி. நாளைக்கி வருஷப் பொறப்புக்கு பூ வாங்கணும்னு நெனச்சுட்டே இருந்தே. நீயே கொண்டாந்துட்ட.” பிடுங்காத குறையாக மாரியம்மாள் வாங்கிக் கொண்டார்.

ஏற்கனவே அவன் வந்தவுடன் உள்ளே செல்ல எழுந்தவள், வேண்டா வெறுப்பாய் தண்ணீர் எடுக்கச் செல்ல, பின்னாலே மாரியம்மாவும் சென்றார்.

விமல் குடும்பம் பூ மொத்த வியாபாரம் செய்கின்றனர். காலையிலும், மாலையிலும் சந்தைக்கு வரும் பூக்களை சில்லறை வியாபாரிகளிடம் இருந்து வாங்கி, வீட்டிலிருக்கும் பெண்களிடம் கொடுத்து சரமாகக் கட்டி ஏற்றுமதி செய்கின்றனர். வீட்டிலிருக்கும் பெண்களுக்கு இது கைத்தொழில் மாதிரி. கல்யாணம், காதுகுத்து, திருவிழா என எந்த விசேஷம் என்றாலும் உதிரிப் பூ வாங்கிக் கொடுத்தால் போதும். கட்டித் தந்துவிடுவார்கள். அதற்கென்றே சந்தையிலும் ஆள் இருப்பார்கள். வீட்டிலிருக்கும் பெண்களும் கட்டித் தருவார்கள். எந்த வீட்டுக்குப் போனாலும் நாலுவீட்டுக்கு ரெண்டு வீட்ல பெண்கள் பூ கட்டிக் கொண்டிருப்பார்கள். வீடே மணத்துக்கெடக்கும். 

இப்பொழுது ஏற்றுமதி கம்பெனிகளும் மொத்தமாக உதிரிப் பூக்கள் வாங்கிக் கொடுத்து சரமாகக் கட்டி வாங்கி ஏற்றுமதியும் செய்கின்றனர். விமல் குடும்பமும் அதைத்தான் செய்கின்றனர். இது இல்லாமல் மாலைக் கடையும் சந்தைக்குள் உண்டு. 

விமலும் உதிரிப் பூக்களை வாங்கி வீட்டு வீட்டிற்கு சென்று போட்டுவிட்டு வருகிறான். மாலையில் சென்று கட்டியதை வாங்கி வருவான். குளிர் பெட்டிகளில் போட்டு மதுரைக்கு அனுப்பி அங்கிருந்து ஃப்ளைட்டில் பல நாடுகளுக்கும் செல்கிறது. சென்னை, கோவை என லாரிகளிலும் ஏற்றி அனுப்பி வைப்பார்கள். 

“பொண்டாட்டி மாதிரி வந்தவுடனே அதிகாரத்த பாரு. எல்லாம் உங்க அத்தக்காரி கொடுக்கற எடம்” என பொறிந்து கொண்டே, 

“அவனுக்கு நான் தண்ணி காட்டுறே” என மங்கையின் கையிலிருந்த தண்ணீர் செம்பை அவர் வாங்கிக் கொண்டார். 

மாரியம்மா தண்ணீர் எடுத்து வர, “வீட்டுக்கு வந்தவன வான்னு கேக்கத்தான் வாய் வலிச்சுருச்சு. தண்ணி கூட கொண்டார முடியாதா?” 

“ஒருநாளைக்கு மூனுதடவ வர்றவன என்னத்த வான்னு கேட்டுக்கிட்டு” வாய்க்குள் தான் முனங்கினார் மாரியம்மா.

“வேகாத வெயில்ல வந்திருக்கான் பேராண்டி. பேரனுக்கு நான் தண்ணி காட்டுறே… இல்லயில்ல தண்ணி தர்றே” என செம்பை நீட்ட,

“கெழவிக்கு குசும்ப பாத்தியாடா?”

“விடு சித்தி. நம்ம அப்பாயிதான. பேரங்கிட்ட நையாண்டி பேசாம யாருகிட்ட பேசப் போகுது?”

“அப்படி சொல்ரா பேராண்டி. எனக்கு தெரியும். நா எது சொன்னாலும் எம்பேராண்டிக்கு ரோஷமே வராதுன்னு” என இடக்காகப் பேச, அப்பொழுது அவருக்கு தெரியவில்லை ஒருத்தனை தேவையில்லாமல் சீண்டி விடுகிறோம் என்று. 

விமல் வரும்பொழுதெல்லாம் ஏதாவது சாடைமாடையாகப் பேசுகிறார். அவனும் கேலியாக எடுத்துக் கொள்வதாக நினைத்துக் கொள்கிறார். மங்கையை மனதில் வைத்துதான் அவன் பொறுத்துப் போகிறான் என்பது தெரியவில்லை. அவள் தனக்கு இல்லை எனும்பொழுது இதே எண்ணம் எப்படி மாறும் என்று தெரியாது. சாம்ராஜ்யங்களே சரிந்திருக்கின்றன பெண்களுக்காக.

“பூவெல்லாம் வெல எப்படிடா?”

“சித்திரத் திருவிழா வரைக்கும் நல்ல வெலதான் சித்தி. ஓவர் ரேட்டு. அதவிடுங்க… எதுக்கு வீட்டுக்கு வந்தீங்களாம்?” என சித்தியிடம் வந்த விபரம் கேட்டான்.

மதியம் வீட்டிற்கு சாப்பிடப் போனவனை செல்வராணி பிடித்துக் கொண்டார. தங்கையே ஆனாலும் தன் மகள் விஷயம் வெளியாவதில் அவருக்கு விருப்பமில்லை. தங்கையிடம் காட்ட முடியாத கோபத்தை மகனிடம் காண்பித்தார். 

மாமியார் இன்னும் அங்கேயே நிற்க, எப்படி இவனிடம் பேசுவது என்று யோசனை. 

“மங்கா கடைக்குப் போகணும்னா. நாங்க கெளம்பறோம்” என மருமகளின் எண்ணம் புரிந்து நகர்ந்துவிட்டார். 

உள்ளே வந்து, “அக்கா மகளப்பத்தி பேசுனா நமக்கு தெரிஞ்சு போகும்னு மலுப்புறா. பத்மா கல்யாணம் தட்டிப் போச்சுல. அத விசாரிக்கதான் அக்கா வீடு போயிருக்கா?”

“இதெல்லாம் ஒங்களுக்கு எப்படி அம்மாச்சி தெரியுது?”

“அவளுக்கு முன்ன வாக்குப்பட்டு இந்த ஊருக்கு வந்தவ நானு. அவளுக்கு ரெண்டு பேரு இருந்தா எனக்கு நாலு பேரு இருக்க மாட்டாங்க. அவளுக்கு தெரியரதுக்கு முன்னாடியே எனக்கு தகவல் வந்துருச்சு.” 

“தெரிஞ்சுகிட்டு தான் கேட்டீங்களா?” என்றாள். இருவருக்கும் கிட்டத்தட்ட ஒரே வயதுதான். பத்மா இந்த வருடம் டிகிரி முடிப்பதால் கல்யாணப் பேச்சை ஆரம்பித்து விட்டனர். 

“நீ பாத்துக்கிட்டே இரு. இவ உன்னப் பேசுன பேச்சுக்கெல்லாம் அவதான் பதிலடி கொடுக்கப்போறா” என பொடிவச்சு மாரியம்மா பேச மங்கைக்கு ஒன்றும் புரியவில்லை. 

“அவ வயசுதானே ஒனக்கும். அந்த நெனப்பிருக்கா இவளுக்கு. உங்க மாமனும் கடை விட்டா வீடு, வீடு விட்டா கடைன்னு இருக்கான். பாக்கலாம் எப்பதான் உங்கல்யாணப் பேச்ச எடுப்பான்னு.”

“இப்ப அது ஒன்னுதான் கொறச்சல். போ அம்மாச்சி.” சலித்துக் கொண்டாள். திருமணம் என்றாலே எட்டிக்காயாய் கசந்தது மங்கைக்கு. 

“உனக்கென்னடி கொறச்சல். பேருக்கேத்த மாதிரி அரசியாத்தான் வாழ்வ.”

“மொத படிப்பு முடிக்கணும். வேலைக்குப் போகணும்.” 

“இப்ப கடைக்கு கிளம்பு… போயி கொலுசு மாத்திட்டு வரலாம்.”

“அவசியம் போனுமா அம்மாச்சி?” என குழைய,

“என்ன வயசுப்புள்ள நீ. நல்ல நாளும் பொழுதுமா காலு வெறுச்சுனு இருந்தா நல்லாவா இருக்கு” என அதட்டி கிளம்பச் சொன்னார். அவரை பொறுத்து வரை பேத்திக்கு அனைத்தும் நிறக்க இருக்க வேண்டும். எந்தக் குறையும் வைக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். 

மாமியார் உள்ளே சென்றவுடன், “பத்மா விஷயம் பேசத்தான்டா வீட்டுக்குப் போனேன். உங்கம்மா ஒழுங்கா பதில் கொடுக்கல. ஏன் சாதகத்தை திருப்பி அனுப்புனாங்கனு தெரியுமா?” என்றார் குரலை வெகுவாகக் தணித்து ரகசியம் போல.

“அதான் பொருத்தமில்லைனு சொன்னாங்களே சித்தி?”

“நீயும் உங்கம்மா மாதிரி அதையே நம்பிட்டுரு. நம்பலவிட பெரிய எடம் தகையும் போல. அதான் நம்ப பத்மா சாதகத்தை தட்டிகழிச்சுருக்காங்க.” 

“நம்பலவிட பெரிய இடமா? யாரு சித்தி அது. உங்களுக்கு யாரு சொன்னது?” சித்தி சொல்வதில் எந்தளவிற்கு உண்மையென ஆராய ஆரம்பித்தான்.

“நம்பிக்கையான ஆளுதான் சொல்லுச்சு. ஆளாடா முக்கியம். நல்ல எடம். பத்மாவுக்கு முடிஞ்சுட்டா, அடுத்து ஒனக்கும், மங்காவுக்கும் முடிச்சர்லாம்னு பாத்தே. எங்க, இவதான் விடியா மூஞ்சியா இருக்காளே?” என அதற்கும் மங்காவை கரித்துக் கொட்ட, விமல் அதெல்லாம் கண்டுகொள்ளவில்லை. 

அவனைப் பொருத்தவரையில் மங்கை கிணற்றுத்தண்ணீர். என்றைக்கானாலும் மங்கா அவனுக்குத்தான் என்பதில் உறுதியாக இருந்தான். ஆனால் அவனுக்குள் வேறொன்று ஓடியது.

அதெப்படி சாதகம் பொருந்தி வந்து இதோ முடிந்துவிடும் என நினைத்திருக்க, அடுத்து கொஞ்சம் பெரிய இடம் வந்ததும் தட்டிக் கழிப்பார்களா என்ற எண்ணமே சுற்றிக்கொண்டு இருந்தது. 

இவர்கள் சாதகம் பார்த்து, ஃபோட்டோ பார்த்து பிடித்த பின்புதான் பெண் பார்க்கவே சம்மதித்தனர். உள்ளூர் வேறு. இரண்டு குடும்பமும் பழக்கம் என்று சொல்லமுடியாது. ஆனால் வியாபாரிகள் என்ற வகையில் மரியாதையான, ஆண்களுக்குள் நன்கு அறிமுகமான குடும்பமே. மாப்பிள்ளையைப் பற்றியும் இருவருக்கும் கிட்டத்தட்ட சம வயது என்பதால் விமலுக்கும் நன்றாகத் தெரியும். பொறுப்பானவன். படிப்பு முடித்து தங்கள் நகைக்கடையில் தான் அப்பாவோடு சேர்ந்து கவனித்துக் கொள்கிறான். ஒரு தங்கை மட்டுமே. இன்னும் திருமணமாகவில்லை. படித்துக் கொண்டிருக்கிறாள் என்பதும் தெரியும். 

தங்கைக்கு நல்ல பொருத்தமான, வசதியான, மதிப்பான குடும்பம் அமைந்ததில் விமலுமே சந்தோஷத்தில் தான் இருந்தான். முன்ன பின்ன என்றாலும் கேட்கும் சீர் செய்து முடித்துவிடும் எண்ணத்தில் தான் இருந்தனர். அவர்களும் வீடுவரை வந்து பார்த்துவிட்டு சென்ற பிறகு, தங்கையின் சாதகம் பொருந்தவில்லை என்றது இவனுக்கும் உறுத்தலாகவே இருந்தது. அதைவிட இது கௌரவப் பிரச்சினையாக பட்டது. தங்கை மனதில் ஆசை வளர்த்திருப்பாளோ. தங்கையை கவனித்த வரையில், பத்மபிரியாவின் முகமும் சோர்ந்து இருப்பதாகத்தான் பட்டது. சாதகம் பொருந்தவில்லை என்றால் சரியென விட்டுவிடலாம். ஆனால் பெரிய இடம் வந்ததால் தட்டிக் கழித்ததாக சொன்னதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ‘யார் நம்மளவிட ஒசந்த இடம் அதையும் தான் கேப்போமே.’ ஆத்திரக்காரனாக அவசர புத்தியில் நேரில் கேட்டு விடுவதென முடிவெடுத்தான். 

மாரியம்மாவும், மங்கையும் கிளம்பி வெளியே வந்தனர். நைட்டியில் இருந்தவள் சுடிதார் அணிந்து வந்தாள். எப்பொழுதும் துப்பட்டாவை இரண்டுபக்கமும் பின் குத்திதான் பழக்கம். தலை வெறுமையாகத்தான் இருந்து. தான் கொடுத்த பூவை வைக்கவில்லை என்பதை விமல் கவனித்தான்.

“கொலுசு அந்து போச்சு. போயி மாத்தி எடுத்துட்டு வர்றோம். நல்ல நாளும் பொழுதுமா வயசுப்புளள காலு சும்மா இருந்தா நல்லாருக்காது.” மருமகள் எங்கே என கேட்கும் முன் மாரியம்மாவே நகைக்கடை செல்வதாக தகவல் சொன்னார். 

“அப்ப உங்க பேத்தியையும் கூட்டிப் போங்க. அவளுக்கும் பழசாப்போச்சு” என நான்கு மாதங்களுக்கு முன்புதான் எடுத்த புது கொலுசை மாற்றச் சொன்னார். மாரியம்மா எதிர்பார்த்தது தான். 

தமிழ்ச்செல்விக்கு இவர்களோடு மகளை அனுப்ப வேண்டும். கொலுசு தான் எடுக்கப் போகிறார்களா? நகை எதுவும் பேத்திக்கு எடுக்கிறாரா எனத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு தான் மகளை வேவு பார்க்க அனுப்புகிறார் எனத் தெரியாதா என்ன? 

ஆனால் மாரியம்மா எது செய்தாலும் மகனுக்கு முதல் அறிக்கை தாக்கல் செய்துவிடுவார் என்பது தமிழ்ச்செல்விக்கு தெரியாது. மகனிடம் சொல்லாமல் எதையும் செய்யமாட்டார். பூர்வீக நிலத்திலிருந்து வரும் குத்தகை பணம் மாரியம்மா கைவசம் தான் வரும். அதில் தான் மகனை எதிர்பார்க்காமல் மங்கையின் படிப்பிலிருந்து அனைத்தையும் கவனித்துக் கொள்கிறார். 

தமிழ்ச்செல்வியும் லேசில் விடமாட்டார். அவளுக்கு எது வாங்கினாலும் தன் பிள்ளைகளுக்கும் வாங்க வேண்டும் என நிற்பார். அதனாலே எது வாங்கினாலும் மூன்றாகத்தான் வாங்குவார். 

கார்த்திகாவையும் கிளம்பச் சொல்லி உடன் அழைத்து சென்றனர். 

கடைவீதி வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரம் தான் என்பதால் மூவரும் நடந்தே வந்தனர். வழியெல்லாம் தெரிந்தவர்கள் முகம் தெரிந்தால் நின்று பேசி கதையளந்துவிட்டுதான் நகர்ந்தார் மாரியம்மா. அதற்கே பொழுது போய்விட்டது. 

இவர்கள் நகைக்கடைக்குள் நுழைய, கடைவீதியில் நகைக்கடைக்கு எதிர்ப்புறமிருந்த டீக்கடையில் டீ குடித்துக் கொண்டு நின்றிருந்தான் இளவேந்தன். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top