மாமா! மாப்ளே! 13

“ஹேய்… என்னடீ இது?”

“பாத்தா தெரியல?”

“தெரியறதுனாலதானே கேக்குறேன். இவனை வச்சுக்கிட்டு உனக்கு இந்த ஆசையெல்லாம் தேவையா?”

“எல்லாம் உங்க மக பாத்த வேலைதான். தங்கச்சிகளும் தம்பிய நாங்க பாத்துக்கறோம்னு சொன்னாளுக. ஒரு மணி‌ நேரம் வச்சிருந்தா போதும்” என்று முகம் சுருக்கினாள். 

“நல்லாத்தான் இருக்கு!” என்றான் ஒரு மாதிரி குரலில். அவள் அமர்ந்திருந்த கோலம் அப்படி.

நேரம் நள்ளிரவை நெருங்கியது. வந்தவர்கள் எல்லாம் சாப்பிட்டு முடித்து, உள்ளூர்க்காரர்கள் எல்லாம் காலை திருப்பூட்டுக்கு வரலாம் என கிளம்பியவர்கள் கிளம்ப, வெளியூரிலிருந்து வந்தவர்களுக்கு படுக்க ஏற்பாடு‌ செய்து கொடுத்து, கடைசியாக விசேஷ வீட்டுக்காரர்களும் சாப்பிட்டு முடியவே நேரம் பதினொன்றை நெருங்கியது. 

அதற்கு முன்பே மணமக்களை‌ சாப்பிட வைத்து, சிறிது நேரமாவது தூங்கி எழுந்தால் தான்‌ நன்றாக இருக்குமென அவரவர் அறைக்கு அனுப்பி வைத்துவிட்டு, இறுதிவரை இவனும் பார்த்தியும்தான் மேற்பார்வை பார்த்தனர். உணவுக்கூடம் சுத்தம் செய்யும் வரை இருந்தவர்கள் காலை பந்திக்கான ஆயத்த வேலைகள் தொடங்கவும்தான் அறைக்கு வந்தான். 

கலையரசிதான் தணிகைவேலிடம் சொல்லி இருவரையும் ஓய்வெடுக்க அனுப்பி வைக்கச் சொன்னார்.‌ 

மூன்று நாட்களாகவே நல்ல அலைச்சல்தான் இவனுக்கும் பார்த்திக்கும். தணிகைவேலுக்கு அலைச்சல் வைக்க வேண்டாமென எல்லா காரியத்தையும் தண்டபாணியே எடுத்துச் செய்ய, புது மாப்பிள்ளை இரண்டு நாட்களுக்காவது வீட்டோடு இருக்கட்டும், வண்டியில் வெளியே எங்கும் செல்ல வேண்டாம், ஒருத்தர் கண் போல ஒருவர் கண் இருக்காது என அய்யம்மாள் சொல்லிவிட்டார். 

சீனியும் பார்த்தசாரதியும் சேர்ந்துதான் இப்பொழுது வரை பார்த்துக் கொண்டனர். 

மருமகன் மீது இன்னமும் மனத்தாங்கல் தான் கலையரசிக்கு. குடும்பம் பட்ட அவமானமும், மகள் பட்ட கஷ்ட்டமும் கொஞ்சமா நஞ்சமா. முகத்துக்கு நேராக கேட்டவர்கள் எத்தனைபேர். முதுகுக்கு பின்னால் பேசியவர்கள் எத்தனை பேர். 

இருந்தாலும் மூன்று நாட்களாக மச்சான் கல்யாணத்தை‌ முன் நின்று எடுத்துச் செய்யும் மருமகன் மீது புலங்காகிதம் தான் மாமியாருக்கு. வெளியே காண்பித்துக்  கொள்ளவில்லையே ஒழிய உள்ளுக்குள் பூரிப்புதான். மகள் வாழ்க்கையை எண்ணி ரவ்வும் பகலும் கலங்காத நாளில்லை. தங்கையை எண்ணித்தானே தண்டபாணியும் இத்தனை நாட்களாக தனித்து‌ இருந்தான்.

இன்று மகனை மணக்கோலத்திலும், மருமகன் பொறுப்பான மச்சானாக முன்னின்று எடுத்துச் செய்வதைப் பார்த்ததிலும் கண்கள் நிறைந்துவிட்டது. 

அறைக்குள் வந்தவன், பழனி கைகள் இரண்டையும் தொடையில் விரித்து வைத்தபடி அமர்ந்திருக்க, பக்கத்தில் குகன் உறங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். கை, கால்களைப் பரப்பி, பால் குடிக்கும் நினைவில் கனவிலும் அதரங்கள் சப்புக்கொட்ட தூங்குபவனை பார்த்தவனுக்கு புன்னகை விரிந்தது. 

அமிர்தா, மண்டபத்தில் தாம்பூலப் பை போட்டுக் கொண்டிருந்த சித்திகளோடு ஐக்கியமாகிவிட்டாள். அங்கேயே தூக்கத்திற்கு தலை சாமியாட பொதிக்காச்சலம் வந்து தூக்கிச் சென்று தன்னுடன் படுக்க வைத்துக்‌ கொண்டார். தணிகைவேல், பொதிகாச்சலம் மற்றும் பெருமாள்சாமி அனைவருக்கும் முன்னமே ஒரு அறையை ஒதுக்கி கொடுத்து ஓய்வெடுக்க அனுப்பி வைத்துவிட்டனர். 

“கசகசங்குது பழனி. குளிச்சாதான் கொஞ்ச நேரமாவது தூங்க முடியும்.” சட்டைப் பட்டனைக் கழட்டியபடியே குளியலறைக்குள்  சென்றுவிட்டான். தண்ணீர் சத்தம் கேட்டது. ஏதோ ஒரு‌ பாடலை முணுமுணுத்தபடி‌ குளித்துக் கொண்டிருந்தான். 

அடுத்து பத்து நிமிடத்தில் பழனி முழங்கை கொண்டு கதவைத் தட்ட ஆரம்பித்தாள். 

“என்னடீ” உள்ளிருந்தபடியே குரல் கொடுத்தவன்,

“மாமனுக்கு முதுகு தேச்சுவிடப் போறீயா?” என்று கேட்க,

“நாலு மாசமா தனியா இருந்ததுல கருப்பட்டிக்கு கொழுப்பு கூடிப்போச்சு. சீக்கிரம் வெளியே வாங்க” என அவசரப்படுத்தினாள். 

இவளது அவசரத் தொனியில், மேனியில் நீர் வடிய துண்டை மட்டும் இடுப்பில் இறுக்கிக் கட்டியபடி வெளியே வந்தான்.  

“அண்ணன் கல்யாணம்னு வெளுத்துக் கட்டிட்டியா? வயிறு சரியில்லையா?” என்றவனை முறைத்துப் பார்த்தாள்.‌ 

“கை கழுவணும்” என்றாள் அவஸ்த்தையாய்.

“ஏன்… இன்னும் காயல.”

“பரவாயில்ல… தள்ளுங்க. மனுஷியோட அவஸ்த்தை புரியாம” என்றாள் இன்னும் வழி மறித்து நின்றவனைப் பார்த்து.

“குகன் எழுந்துட்டானா?” படுக்கையை எட்டிப் பார்க்க,

“அய்யோ தள்ளுங்க!” என்று பல்லைக் கடிக்க, 

“சொன்னாதானே புரியும்!” அவனும் சுள்ளெனக் கடிக்க,

“கழுத்துக்கு பின்னால முதுகுல முணுமுணுங்குது. ஏதோ ஊருற மாதிரி இருக்கு” என்று‌ கழுத்தை குறுக்கி தோளில் தேய்த்து கொண்டு சொல்ல நமட்டுச்‌சிரிப்பு அவனிடம். 

கைகளை விரித்து வைத்திருந்தவள் முழங்கை வரை மருதாணிக் கோலம். 

இவள் வேண்டாமென மறுக்க அமிர்தா தான், சித்திகள் எல்லாம் வைக்கிறார்கள் என அம்மாவை பிடிவாதமாக இழுத்துச் சென்றாள். தங்கைகள் குகனைப் பார்த்துக் கொள்வதாகச் சொல்ல, அவளுக்கும் ஆசைதான். கட்டாயத்தில் வைத்து கொண்டாள். இப்பொழுது குகன் தூங்குகிறான். மகன் எழுந்தால் தெரியும் மருதாணி சங்கதி. 

ஈரம் வடிந்த தலைமுடியை மேலேற்றி வழித்துவிட்டபடி, எங்கே எனக் கேட்டுக் கொண்டே அவளைச்‌ சுற்றிக் கொண்டு பின் பக்கம் வந்தான். 

தோள் வழிந்த மல்லிச்சரத்தை சடையோடு தூக்கி முன்னால் போட்டான். ஈரக்கை பட்டதில் சட்டனெ மேனி புல்லரித்து மெலிதாக குலுக்கியது. முதுகை ஆராய்ந்தவன் பார்வை, பளீரென பளிங்கு முதுகில் ஜாக்கெட்டின் அதளபாதாளத்தில் தடுமாறி நின்றது. அபாயகரமான வெட்டு ஜாக்கெட்டில். இவ்வளவு நேரமும் மல்லிச்சரம் தான் முக்கால்வாசி முதுகை மறைத்திருந்தது. மூச்சுக்காற்று சூடேற கண்களில் ரசனை விரிந்தது. 

மகன் பிறந்த கையோடு கலையரசி இவளை இங்கு அழைத்து வந்த பிறகு இன்று தான் இவ்வளவு நெருக்கத்தில் பார்க்கிறான். இவர்களைப் பார்க்க அடிக்கடி ஊருக்கு வந்து சென்றாலும், பிள்ளை பெற்றவளுக்குத் துணையாக கலையரசி கூடவே இருந்தார். முதல் குழந்தை தான் அயல் தேசத்தில் பெரியம்மா உதவியில் அவளாக பார்த்துக் கொண்டாள். பெற்றவள் உயிரோடு இருந்தும் மகள் தனியாக தவித்தாளே என்ற குற்ற உணர்வு. இந்தக் குழந்தைக்கு சகலமும் கலையரசிதான். கூடவே குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சையும் செய்திருக்க மகளை அங்கிங்கு நகரவிடவில்லை. உள்ளங்கையில் வைத்து தாங்காத குறை.

குழந்தை பெற்றவளை கீழே வைத்துக் கொள்ள, இவன் வந்தாலும் மாடியறையில்தான் படுக்கை.

நான்கு மாத காலத்திற்கு இந்த தனிமையும், நெருக்கமும் இன்றுதான் வாய்த்திருக்கிறது. இத்தனை நாட்களாக உறங்கிக் கொண்டிருந்த உணர்வுகள் மெல்ல விழித்துக் கொண்டது. மெலிதாக விசிலடித்தான். இன்னும் சற்று அணைந்து நின்றான்.

“ஃப்ரூட்டி… உனக்கு நடு முதுகுல ஒரு மச்சம்டீ!”

“இப்ப அதுதான் முக்கியம்! என்ன ஊறுதுன்னு முதல்ல பாருங்க. ஏதாவது பூச்சியா இருந்து அலர்ஜியாகி மேலெல்லாம் தடிச்சுறப்போகுது.” அவசரப்படுத்தினாள். 

“இதுதான்டீ முக்கியம். ரெண்டு‌ புள்ள பொறந்துருச்சு. ஆனா முதுகுல இருக்குற மச்சம் தெரியல பாறேன்!” குரலில் சல்லாபம் தெறிக்க,

“கருப்பட்ட்ட்டி!” அடிக்குரலில் பல்லைக்‌ கடித்தாள். 

“இங்கேயா?” சுட்டுவிரல் கொண்டு வலது தோளில் தொட்டு கேட்டான். 

“ஐயோ… அங்க இல்ல” என்றாள் முதுகை நெழித்தபடி. 

“அப்பறம்… இங்கயா?” வலது தோளிலிருந்து நடு முதுகுக்கு பட்டும்படாமல் பயணித்தது சுட்டு விரல்நுனி. 

“இல்ல்ல்ல..” என்றாள் கடுப்பான குரலில்.

அதற்குள் குளிர்ந்த உடல் இவனுக்குள் தகிக்க ஆரம்பித்தது‌. முதுகு வழிந்த மல்லிச்சரம் வேறு உன் இதழ் ஒத்தடம் படவேண்டிய இடத்தில் நான் என கண்சிமிட்டி கேலி செய்தது. 

“என்ன பண்றீங்க?” என்றாள் பல்லிடுக்கில். அவளுக்கு முனுமுனுப்பின் அவஸ்த்தை. எறும்போ எதுவோ ஒன்று ஊரும் உணர்வு. எட்டாத முதுகில் எக்கி சொறிய முடியாத எரிச்சல்.

“முதுகுல இல்ல… தோளுக்கு மேல வந்துருச்சு!” என்று‌ கழுத்தை மேலும் அண்ணார்ந்து குறுக்க, ஈர மார்பில் தலை மோதியது. உணர்வுப் பிரளயம் அவனுக்குள். 

இளம் பச்சைக்கலரில் ஒரு சென்டிமீட்டர் அளவில் மெல்லிய புழு ஒன்று அவள் தோளில் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. அவள் வைத்திருந்த மல்லிச்சரத்தில் இருந்து வந்திருக்க வேண்டும்.‌ அதை முதலிலேயே கண்டு கொண்டான். இருந்தும் தேடுபவன் போல் பாவ்லா செய்தவன் இதழோரம் கள்ளச்சிரிப்பு குமிழ் விட்டது.. 

விரல் அப்படியே புழுவைவிட மெல்ல ஊர்ந்து இடது காதோரம் வந்தது. குறுகுறுப்பில் காதோர பூனை முடிகள் சிலிர்த்து நின்றது. மீண்டும் விரல் நுனி பின் கழுத்தை வட்டமிட, அப்பொழுதுதான் அவனது தீண்டல் வேறொரு கதை சொன்னது மங்கைக்கு. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவனது விரல் நுனி வருடல் மேனியில் தாக்கத்தை உண்டு பண்ணியது. மெல்லிய சிலிர்ப்பு மேனியெங்கும் பாய, இருக்கும் இடமறிந்து சட்டென சுதாரித்தவள் முழங்கை கொண்டு விலாவில் இடித்தாள். 

“தள்ளுங்க… கொஞ்சம் விட்டா போதுமே… நானே கை கழுவிட்டு வந்து பாத்துக்கறேன்!” சிடுசிடுக்க, 

“இன்னும் குகன் எந்திரிக்கலடி. இவ்வளவு நேரம் வச்சும் வேஸ்ட்டா போயிறும். இப்ப பாக்க எப்படி இருக்க தெரியுமா?” தாய்மையின் பூரிப்பும், கலையரசியின் கை மருந்து, பத்தியச்சாப்பாட்டிலும், வெயில் முகம் அவ்வளவாகப் பார்க்காத மேனியில்‌ புது மினுமினுப்பு. தாபம் கொஞ்சிய அவன் பேச்சும், பார்வையும் அவளுக்குள்ளும் அனல் மூட்டியது.

சட்டென திரும்பி கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டாள். பூச்சரத்தோடு சடை ஒருபுறம் தோள்தழுவி கிடக்க, சேலை முந்தானை நலுங்கி, பின் கழுத்தைவிட முன் கழுத்து இறக்கும் இன்னும் அபாயம் கூட்ட  அவளுக்கே ஒரு மாதிரியாக இருந்தது. முந்தானையைக் கூட சரிபண்ண முடியாத நிலை. 

கண்ணாடியில் அவளைப் பார்த்துக்கொண்டே பின்னே வந்து நின்றவன் கோலம் அதற்கு மேல். திமிறித்திரண்ட மேனி முழுதும் ஈரம் முத்துச் சரம் கோர்த்து நின்றவனது தோற்றம் பார்த்தவளுக்கும் தொண்டை வரண்டது. 

பின்னாலிருந்து இடையோடு சேர்த்து கட்டிக் கொள்ள, சில்லென்ற உடம்பு  சூடேற்றியது. “ஃப்ரூட்டி” என காதோரம் குரல் இழைய, சூடான மூச்சுக்காற்று செவி தீண்ட, கைகள் செயலிழந்த நிலை. இத்தனை நாட்களின் பிரிவின் தவிப்பு அவனது இறுக்கிய அணைப்பில் அப்பட்டமாகத் தெரிந்தது. அவளுக்குதான் அவனை நேர் கொண்டு பார்க்கமுடியவில்லை. அவளது கன்னத்தோரம் கதகதத்தது. குப்பென உணர்வுப் பிரவாகம் கிளர்ந்தது. 

அவளை முன்புறமாகத்‌ திருப்பினான்.  “ஃப்ரூட்டி” என்றவன் இடையணைத்து, முன் கழுத்தில் முகம்‌ புதைக்க, இறுக்கிக் கட்டிக்கொள்ள முடியாத அவஸ்த்தை அவளுக்குள். கைகள் விரித்தபடியே‌ இருக்க இன்னும் அவனுக்கு அது தோது செய்து கொடுத்தது போலாயிற்று. அவள் மேனியின் புதுவித தாய்மை வாசம் அவனை கிறங்கடித்தது. இதழ்கள் கன்னத்தை முற்றுகையிட்டு மேலும் முன்னேறி இறுக்கி அணைத்து இதழ் கொய்ய முனைய,

“ஷ்ஷ்ஷ்” வலியில் சிறு முனகல் அவளிடம். நெஞ்சை அழுத்திய பாரம் வலி கொடுக்க, தாய்மை சொல்லிய சேதியில், கிளர்ந்த உணர்வுப் பிரவாகம் பொங்கிய பாலில் தண்ணீர் தெளித்தது போல் சட்டென அடங்கியது. மருதாணிக் கையோடு அவனை விளக்கி நிறுத்தினாள். 

‘என்னடீ’ மிட்டாய் பிடுங்கிய சிறுபிள்ளை போல் பாவமாய் பார்த்தான். 

“ஒன்னுமில்ல” என்றவள் அவசரமாக குளியலறை‌ சென்று கைகளை தேய்த்துக் கழுவி வந்தாள். 

தூங்கும் மகனைத் தூக்கி மடியில் போட்டுக் கொள்ள, 

சீனி, “அவன் தான் தூங்குறான்ல. பசி வந்தா தானா எந்திரிப்பான்ல!” 

“ம்ஹும்… இன்னைக்கி பகலெல்லாம் ஆள் மாத்தி ஆள் தூக்கினதால சரியா தூங்கல. சளி‌ மருந்து வேற கொடுத்ததால இப்போதைக்கி எந்திரிக்க மாட்டான்!” என்றாள் மாராப்பிற்குள் மகனை‌ மறைத்து. 

“அதுக்குன்னு தூங்குறவனத் தூக்கி பால் கொடுக்கணுமா? அப்படியென்ன…” ஏதோ கேட்க வந்தவன் புருவம் யோசனையில் சுருங்க, ஏதோ புரிய பாதியில் நிறுத்திக் கொண்டான். 

அங்குமிங்கும் அலைந்ததில் மகனை சரியாக கவனிக்க முடியவில்லை. தங்கைகளும் இவன் அழுதால் ஏதாவது வேடிக்கை காட்டி இவளிடம் கொண்டுவராமல் வைத்துக் கொள்ள, இவளுக்கு தான் நெஞ்சில் பாரமேறிய உணர்வு. 

கை மருதாணி அவ்வளவாக சிவக்கவில்லை. கனகாம்பரக் கலரில் தான் சிவந்திருந்தது. 

கண்ணாடி மேஜையில் சாய்ந்தபடி‌ கைகளைக் கட்டிக் கொண்டு இவர்களையே பார்வை பார்த்திருக்க, கண்களைச் சுருக்கியவள் பார்வை‌ இறைஞ்சியது. வெகு நாட்கள் கழித்து ஆசையாக நெருங்கியவனை தள்ளி வைத்த ஏக்கம். 

ஆணுக்கு உடம்பும் மனசும் ஒன்னுதான். காதலின் வெளிப்பாடு அவனுக்கு கூடல். ஆனால் பெண்ணுக்கு அப்படியல்ல. உடம்பும் மனசும் தனித்தனியாகப் பயணிக்கும். இரண்டும் ஒரு புள்ளியில் ஒன்று சேர்ந்து இயைந்து இயங்கினால் மட்டுமே ஒத்திசைந்த இனிமையான நாதம் பிறக்கும். இல்லையென்றால் அபஸ்வரம்தான். படுக்கையில் படுத்து நாளைக்கு என்ன குழம்பு என்ற ஒரு சிந்தனை போதும் காதலில் கூடி காற்றில் மிதப்பவளை சட்டென தரையிறக்க. அதன் பிறகு அவள் சிந்தனை முழுவதும் குழம்பு, பொறியல், பிள்ளைகள், வீட்டு வேலை என நூல்பிடித்து சென்று விட, இங்கே காதல் பட்டம் தரையிறங்கி விடும். 

அருகே வந்து தோளோடு அணைத்து நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தான். சற்று முன் கொடுத்த முத்தம் அவனது தாபத்தை சொல்லியது. ஆனால், இது அவளது தாய்மைக்கான உதட்டு ஒத்தடம். இவன்‌ மனைவியை ஒட்டி நிற்க, மடியில் படுத்திருந்தவன் பிஞ்சுப் பாதம் பால் குடித்தபடியே தூக்கத்திலும் அவனை எட்டி உதைத்தது.  

“இவன் தான்டீ எனக்கு வில்லன். உங்க அண்ணனோ அம்மாவோ இல்ல.” முகத்தில் புன்னகை மிளிற மறுபடியும் உள்ளே சென்றவன் வேகமாக தண்ணீரை எடுத்து தலையோடு ஊற்றி விட்டு வெளியே வர கலகலத்த சிரிப்பு பெண்ணிடம்.

*****

“நல்லா ‌பண்றடா?” 

“அப்பறம் மச்சான்னு‌ எதுக்கு இருக்க?”

“டேய்… புதுப் பொண்டாட்டி பக்கத்துல நிக்கிறா. அவளக்கூட என்னால பாக்க முடியல. உங்க அப்பா மூஞ்சிதான் கண்ணு முன்னாடி வருது! என்னோட கல்யாணம்னாலே ஏதாவது ரகளை பண்ணனும்ல.”

“தண்டபாணி கல்யாணம்னா ஊரே பேசணும்ல?” என்றவனை முறைத்து பார்த்தான் தண்டபாணி. பேசின வறைக்கும் போதாதா? 

இவன் இங்கு நொந்து கொண்டிருக்க, பார்த்தசாரதி கண்கள் கீழே அமர்ந்திருந்தவர்கள் கூட்டத்தில் ஒருத்தியை மட்டும் ரசனையாய் வட்டமிட்டது. அவளது பார்வையும் சாடைமாடையாக இவன் மீதுதான். 

“டேய்… டேய்…இருந்தாலும் உனக்கு ரொம்ப துணிச்சல் தான்டா. நான் இங்க புலம்பறேன். நீ என்னடான்னா ஜாலியா சைட் அடிச்சுட்டிருக்க!” 

“அடுத்து ஃபேமிலி ஃபோட்டோ எடுக்கப்போறோம். இப்ப பாரு எங்கப்பா மூஞ்சி போற போக்க!” என்று‌ சிரிப்பவனை கடித்துக் குதறும் ஆத்திரம் புதுமாப்பிள்ளை கண்களில். 

மங்கள வாத்தியங்கள் முழங்க, சாரலாய் அட்சதை மழை பொழிய, மங்கலநாணை மங்கையவள் மணிக்கழுத்தில் பூட்டியவன் சிறிது நேரம் கூட அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை. 

பெருமாள்சாமி அங்கே யாருடனோ கத்திக் கொண்டிருந்தார். யார் என்று எட்டிப்பார்க்க, தணிகைவேலிடம் தான் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார். 

“அதெப்படி அவங்கள கல்யாணத்துக்கு அழைக்க போச்சு. ஆகாதுன்னு தள்ளி வச்சாச்சுல” தோளில் கிடந்து துண்டை கையில் பிடித்தபடி ஆட்டி ஆட்டி பேசிக் கொண்டிருந்தார். 

வேறொன்னுமில்லீங்கோ… அவரது ஒன்றுவிட்ட தங்கச்சி குடும்பத்தோடு வந்திருக்கிறார்.‌ அதாவது கலையரசி மாதிரியே அவரும் ஒரு சித்தப்பா மகள். வேறொரு மதத்துப் பையனை வீட்டிற்கு தெரியாமல் காதல் திருமணம் செய்து கொண்டதால் இவர்கள் பக்கத்து சொந்தங்கள் எல்லாம் அவரை ஒதுக்கி வைத்துவிட்டனர். 

எந்த நல்லது கெட்டதுக்கும் அழைத்ததில்லை. இது வரை எங்கிருந்தார்கள் என்று கூட யாரும் கண்டு கொண்டதில்லை. மதம் தான் வேறு. இனம் ஒன்றுதான். சில தலைமுறைகளுக்கு முன் மதம் மாறியவர்கள். 

அவர்களைக் கண்டாலே இவருக்கு ஆகாது. தண்டபாணி திருமணத்திற்கு தணிகைவேல் பத்திரிகை அனுப்பி வைத்திருக்க, இத்தனை வருடங்கள் கழித்து பிறந்த வீட்டு சொந்தம் அழைத்ததில் மனம் மகிழ்ந்து குடும்பத்தோடு கிளம்பி வந்திருந்தனர். அவர்களுக்கு ஒரு மகனும், திருமண வயதில் ஒரு மகளும். 

இப்போ புரிஞ்சிறுக்குமே இது யார் பாத்த வேலைன்னு. நானே… இது நானே என பாடாத குறையாக பார்த்தசாரதி பார்த்த வேலையேதான். தணிகைவேல் சார்பில் பத்திரிகை அனுப்பி வைத்தது அவனே தான்.

கலையரசியே இவர்களை எதிர்பார்க்கவில்லை. யார் என ஒரு கணம் யோசித்தார். சிறுவயதில் ஒன்றாக வளர்ந்தவர்கள்தான். சட்டென அடையாளம் தெரியவில்லை. அந்தளவிற்கு ஆளே மாறிப் போயிருந்தார் பாக்யலஷ்மி. பணச்செழுமை தோற்றத்தில் நன்றாகவே தெரிந்தது. அவர் முதலில் அதிர்ந்து, அதை முகத்தில் காட்டாமல் சட்டென சுதாரித்து, “வா பாக்யா!” என வரவேற்றார். 

இது இவருக்கு பிடிக்கவில்லை. எப்படி அவர்களை அழைக்கலாம் என்ற கோபம் பெருமாள்சாமிக்கு. வந்தவர்களுக்கு முகத்தை காட்டவா முடியும். 

வந்தவர்கள் மணமக்களை வாழ்த்திவிட்டு குடும்பமாக ஃபோட்டேவிற்கு நிற்க, அவர்களுடன் மாப்பிள்ளை தோழன்‌ போல் பார்த்தசாரதியும் இணைந்து கொண்டான். 

*****

“என்னடீ உங்க குடும்பம். இப்ப போய் பஞ்சாயத்து கூட்டிட்டிருக்காங்க. கொஞ்சம் கூட வெவஸ்த்தை இல்லாம. உங்க நொண்ணனும் மத்தியஸ்த்தம் பண்ண உக்காந்துட்டாப்ல. இதெல்லாம் காலையில பேசிக்க கூடாதா?” 

மண்டபத்தில் ஆரம்பித்த பேச்சு. மணமக்கள் மலையேறி சாமி தரிசனம் முடித்து, மறுவீடு வந்து பால் பழம் சம்பிரதாயம் முடித்து, இதோ பொழுதும் போய்விட்டது. இன்னும் தீர்ந்தபாடில்லை.

“நான் இவனுக்கு பொண்ணு பேசி‌ முடிச்சுட்டேன். இலக்கியாவோட மாமா பொண்ணுதான்.” என்றார் வீம்பாக. 

முதலில் அதிர்ச்சி தான் இலக்கியாவிற்கு. அவர்கள் குணம் தெரிந்ததால் சாதாரணமாக எடுத்துக் கொண்டாள். ராகவன் இதை பெரிதாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அவர்கள் நோக்கம் அரசல் புரசலாக தெரிந்தாலும் அவன் கவனம் முழுவதும் இப்போதைக்கி அக்கா கல்யாணத்தில்தான் இருந்தது. 

கலையரசி சித்தப்பா மகளிடம் சாதகம் பார்க்கலாம் என்றுதான்‌ சொல்லி வைத்திருந்தார். ஆனால் மகன் காதலிக்கும் பெண் யாரெனத் தெரிந்தவுடன் முடிவே பண்ணிவிட்டார்.‌ இலக்கியா மாமன் மகள் தான் பெண் என்று. 

தண்டபாணி குடும்பத்தார் எல்லாம் ஹாலில் கூடியிருக்க, இது அவர்கள் குடும்ப விஷயம் என ராகவன் முதன் முதலில் இங்கு வந்த பொழுது தங்கியிருந்த அறையிலேயே இப்பொழுதும் தங்கிக் கொண்டான். 

மூன்றாம் நாள் மறுவீடு விருந்துக்கு அழைத்து வரச் சொல்லி விட்டு சுகந்தி மாமா குடும்பத்தோடு செங்கல்பட்டு சென்றுவிட்டார். விருந்திற்கான ஏற்பாடெல்லாம் பார்க்க வேண்டுமே. 

“நல்ல வேளை. உன் தம்பி தப்பிச்சான்” என்று அருகிலிருந்த இலக்கியாவிடம் ரகசியமாகச் சொல்ல, 

“அப்போ… பார்த்தி அண்ணா மாட்டிக்கிட்டா பரவாயில்லயா?” அவளும் சன்னக்குரலில் கேட்க,

“அவன் ஏற்கனவே வேறொரு‌ இடத்துல மாட்டிக்கிட்டான். இங்க சிக்கமாட்டான்” என்று சிரிக்க, பார்த்தவர்களுக்கு ஏதோ புதுசா கல்யாணமானவங்க ரகசியமா பேசிக்கறாங்கனு நினைக்கிற மாதிரி தான் இருந்தது. உங்க ஜட்ஜ்மென்ட் தப்புனு யார் சென்றது. 

“இன்னும் நேரம் இருக்கு. நீங்க வாங்க. நாம ரூம் ரெடி பண்ணுவோம்!” பழனி அவனை மாடிக்கு அழைத்துச் சென்றாள். 

“எனக்கென்னமோ இந்தப் பஞ்சாயத்து இப்போதைக்கி முடியாது. ரூம் ரெடி பண்ணி நம்மலே செலபிரேட் பண்ணிறுவோம்.” கண்சிமிட்டி சரசமாக சொல்ல, 

“உங்கள வச்சுக்கிட்டு ஒன்னுமே பண்ணமுடியாது. நீங்க கீழயே இருங்க. நான் தங்கச்சிகள யாரையாவது கூப்புட்டுக்கிறேன்.”

“அடியேய்… அறியாப் பசங்கள வச்சுக்கிட்டா இதெல்லாம் பண்ணுவ. எனக்கு ஒரு ஐடியா. இவங்க ரெண்டு பேத்தையும் வேற எங்கையாவது பேக் பண்ணுவோமா? திருவிழாக்கூட்டம் மாதிரி இருக்கு. இங்க எப்படிடீ?” 

கீழே பார்த்தி குடும்பம், பாக்யலஷ்மி குடும்பம், இவர்களை வெகுநாள்‌ கழித்துப் பார்த்தவர்கள் நலம் விசாரிக்க வந்த ஆட்கள் என வீடே நிறைந்திருந்தது. இப்பொழுதும் பொங்கல் வைக்கும் சருவத்தில் தான் எல்லோருக்கும் டீ போட்டுக் கொண்டிருந்தார் கலையரசி.  

“அதெல்லாம் இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாரும் கெளம்பிருவாங்க. இல்லைனாலும் அம்மாச்சி கெளப்பிருவாங்க.” பேசிக்கொண்டே இருவரும் மாடி அறைக்கு வந்தனர். மேலே குளியலறையோடு சேர்த்து புதிதாக எடுத்துக் கட்டியது. 

சீர் கொடுத்த புது கட்டில் மெத்தை எல்லாம் தயாராக விரிக்கப்பட்டிருந்தது. 

“பழனி… இதெல்லாம் நமக்கு நடக்கவேயில்லடீ!” கழுத்தில் தொங்கிய பூச்சரத்தோடு பாவமாய் முகத்தை வைத்து அவளிடம் முறையிட,

“எதெல்லாம்…” என்றவள் கேட்ட தோரணையே வேற மாதிரி என்றது. 

“இதோ இதெல்லாம் தான்” அலங்கரிக்கப்பட்ட கட்டிலைக் காட்டியவனை வெட்டவா குத்தவா என இடுப்பில் கைவைத்து முறைத்துப் பார்த்தாள். 

“ஃப்ரூட்டி… கொடைக்கானல் பக்கம் தானே… ஒரு ட்ரிப் போய்ட்டு‌ வரலாமா?” கண்களில் சில்மிஷம் கொஞ்ச அவன் கேட்க,

“இருங்க… உங்க மச்சான்கிட்டயும், மாமியார்கிட்டயும் கேட்டுச் சொல்றேன்!” என்றவுடன் கையிலிருந்த பூச்சரத்தை கட்டிலில் போட்டுவிட்டு, 

“தெய்வமே!” என கையெடுத்துக் கும்பிட,

“அது… அந்த பயம் இருக்கணும்!” என்றாள் கெத்தாக. இன்னும் இவன் மாமியார்க்கும், மச்சானுக்கும் பயப்படுவதைப் பார்த்து சிரித்தாள். பயம் என்பதைவிட தப்பு செய்துவிட்ட குற்றவுணர்வு. தன்னால் இவர்கள்‌ பட்ட அவமானத்தை நினைத்து. 

இருவரும் சேர்ந்து மணமக்களுக்கான அறையை அலங்கரிக்க, இந்த மாதிரி தமக்கு நடக்கவில்லையே என்ற ஏக்கம் நம்ம சீனியப்பனுக்கு. இருக்கும் தானே!

“உனக்கு சிரிப்பா இருக்கு. இவங்க மறுவீடு போகும் போது நாமலும் கெளம்பறோம். அங்க இங்கனு அலையறதுல அம்மு படிப்பு கெடுது!”  

“வேலைக்காரிக்கு பிள்ளை சாக்குன்னு சொல்லுவாங்க. என்னை சென்னை கூட்டிப்போக அம்மு படிப்பு ஒரு சாக்கு. அம்மாகிட்ட கேக்கணும். இப்போ விடறாங்களோ இல்லையோ?”

“அவங்க விட்டாலும் நீ வரமாட்ட போலயே. அம்மா வீடு நல்லா சொகுசு கண்டு போச்சுடீ!” அதென்னவோ உண்மைதான். 

இவர்கள் அலங்கார வேலையை முடிக்க, கீழே இவர்கள் எப்பொழுது பஞ்சாயத்தை முடித்து மணமக்களை மாடிக்கு அனுப்பி வைக்க. 

1 thought on “மாமா! மாப்ளே! 13”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top