வேலுண்டு வினையில்லை
குன்றத்திலே குமரனுக்கு
கொண்டாட்டம்
அங்கே குவிந்ததம்மா
பெண்களெல்லாம்
வண்டாட்டம் கொண்டாட்டம்
தெய்வயானை திருமணமாம்
திருப்பரங்குன்றம்
தெருமுழுதும் பக்தர்களின்
ஆனந்தமன்றம்
தங்கம் வைரம் பவளம் முத்து
தவழும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள்
வாங்கிக் கொண்டாள்
முருகப் பெருமானை
முக்கண்ணன் மகன், துதிக்கையன் தம்பி பன்னிருங்கரத்தானை கொண்டாடி பேருந்தில் பாடல் ஒலிக்க, ஒரே சட்டத்திற்குள் குடிகொண்ட சாமிகளின் படத்தின் மூலையில் ஊதுபத்தியைக் குத்திவிட்டு,
“போலாம் ரைட்” என விசில் கொடுத்தான் நடத்துனர் பொறுப்பில் இருந்த இளவேந்தன். ஓட்டுநர் பேருந்தை கிளப்ப, அதிகாலை முதல் பயணத்தைத் துவக்கியது தனியார் பேருந்து. வத்தலக்குண்டு பேருந்து நிலையத்திலிருந்து சொற்ப பயணிகளுடன் வெளியேறியது விநாயகம் ரூட்பஸ். உசிலம்பட்டி, மதுரை, திண்டுக்கல், தேனி, பெரியகுளம், கொடைக்கானல் என அனைத்து பேருந்து வழித்தடங்களுக்கும் நடுநாயகமாக விளங்குமிடம் வத்தலக்குண்டு பேருந்துநிலையம். முன்னொரு காலத்தில் வெற்றிலை கொடிக்கால் விவசாயம் பெரும்பான்மையாக நடந்த பகுதி என்பதால் வெற்றிலைக்குன்று மருவி வத்தலக்குண்டு என ஆகிவிட்டது மஞ்சளாறு பாயும் இந்த ஊர்.
அடுத்து காளியம்மன் கோவில் நிறுத்தத்தில் பேருந்து நிற்க, அது காய்கறி கடைவீதியும் என்பதால் அந்நேரத்திற்கு வாழை இலை, வாழைத்தார், தேங்காய், காய்கறிகள் ஏலம் பரபரப்பாக இருந்தது.
“அண்ணே லோடு ஏத்தணும்! கொஞ்சம் வெயிட் பண்ணுங்க!”
பேருந்தின் பின்பக்கம் ஓங்கி தட்டி சப்தமெழுப்பிவிட்டு, லோட் மேன் உள்ளே எட்டிப்பார்த்து குரல் கொடுத்தவன், பின்பக்க படிக்கட்டில் காக்கி உடையில், கக்கத்தில் தோல்பையும், இடக்கையில் டிக்கெட் கட்டுகளுடன், சுண்டு விரலில் விசிலை மாட்டியபடி நின்றவனை பார்த்துவிட்டு,
“மொதலாளி சவுக்கியமா… என்ன நீங்க வந்திருக்கீங்க?” அவனை நலம் விசாரிக்க,
“பங்குனி உத்திரம் ஸ்பெஷல்ண்ணே. எல்லா வண்டியும் பழனி போயிருக்கு. மாத்தி விட ஆள் இல்ல.”
“அதுசரி, நாமதானே பாக்கணும். மாமா எப்படி இருக்காரு.”
“நல்லாருக்காருண்ணே. சீக்கிரம் ஏத்துங்க. டைம் இல்ல. ரொம்ப நேரம் நிக்க முடியாது” என சொல்லிக் கொண்டிருக்க, அடுத்தடுத்து ஆட்களும் ஏற, அனைவரையும் உள்ளே போகச் சொல்லி குரல் கொடுத்தான். இலைக்கட்டு, வாழைத்தார் எல்லாம் மேலே ஏற்றிவிட்டு, கயிறு கொண்டு வரிந்து கட்டி விட்டு கீழே இறங்கிக் கொண்டான் லோட் மேன்.
“உள்ள எடமிருக்கு, பிள்ளைக எல்லாம் உள்ள போங்கம்மா. டேய், படியவிட்டு மேல ஏறு. ஏறமுடியலைனா அடுத்த பஸ்ல வா. படியில நிக்காத.” படியில்நின்ற இளவட்டங்களை பார்த்து அதட்டல் போட,
எவ்வளவோ பாத்துட்டோம் இதெல்லாம் எங்களுக்கு சாதாரணம் என்பது போல் சட்டைக் காலரை மேலே தூக்கிவிட்டு, ஒற்றைக் கையில் கம்பியைப் பிடித்து தொங்கிக்கொண்டு படியில் நிற்க, அவனும் கண்டு கொள்ளவில்லை. அவர்கள் கைகளிலும் பெயருக்கு ஒரு நோட்டுப் புத்தகம்.
“டேய் மேல ஏறிடலாம்டா, அண்ணே வந்திருக்காரு.” அருகில் நின்றவன் படியில் நின்றவனிடம் கிசுகிசுக்க,
“யாருடா அண்ணே?”
“கண்டக்டர் தான்டா!”
“கண்டக்டர்க்கெல்லாம் அவ்ளோ சீன் இல்ல. நீ வேணா உள்ள போடா!” என்றான்.
“அடுத்த ஸ்டாப்ல பிள்ளைக ஏறுவாங்க. லேசா ஒரசுனாலும் நொனங்க போட்ருவாருடி.”
“நம்மகிட்டயேவா, இந்த ரூட்ல பஸ்ஸு ஓட வேண்டாமா?”
“இன்னைக்கு கட்டம் உனக்கு அமோகமா இருக்குடியே மாப்ள!” என அவன் உள்ளே நகர்ந்து நின்று கொண்டான். பின் படிக்கட்டு அருகில் கம்பியில் சாய்ந்து பயணசீட்டு கொடுத்தவன் காதில் அத்தனையும் விழுந்தது.
அது மதுரை செல்லும் ரூட் பஸ் என்பதால் கல்லூரி மாணவர்களும், வேலைக்கு செல்பவர்களும் ஏற இப்பொழுதே பேருந்து நிரம்பியது.
வத்தலக்குண்டை விட்டு வெளியேற அவனும் கூட்டத்துள் முன்னேறி டிக்கெட் போட ஆரம்பித்தான். மதுரை செல்வதற்குள் கூட்டம் தள்ளிச்சாயும். இன்னும் வெயில் உரைக்காத காலை நேரம் என்றாலும் பங்குனி மாத சூரியன் பந்தம் கொளுத்திக் கொண்டு உதித்தான். வெயிலின் உக்கிரம் அப்பொழுதே தெரிய ஆரம்பித்தது.
பொத்திவச்ச மல்லிகை மொட்டு
பூத்துருச்சு வெக்கத்தவிட்டு
பேசி பேசி ராசியானதே
மாமன் பேர சொல்லி சொல்லி
ஆளானதே ரொம்ப நாளானதே…
பஸ் பயணத்திற்கே உரிய பாடல் இனிமையாக ஒலித்து பேருந்து பயணத்தை இதமாக்கியது. அது என்னமோ தெரியலீங்க, சில பாட்டெல்லாம் மைக் செட்ல போட்டு காத்தோட கலந்துவரணும். சில பாட்டெல்லாம் திருவிழாக் கூட்டத்தோட கேட்டாதான் ஜெகஜோதியா இருக்கும். சில பாடல்கள் இரவு நேர தனிமையில காதோட கேக்கணும். சில பாடல்கள் பஸ் பயணத்துல கேட்டாதான் குதூகலமா இருக்கும்.
மல்லிக மொட்டு
மனச தொட்டு
இழுக்குதடி மானே
வளையல் மெட்டு
வயச தொட்டு
வளைக்குதடி மீனே
மந்தாரச்செடி ஓரத்திலே
மாமன் நடத்துற பாடத்துலே
மானே மருதாணி பூசவா…
நிலக்கோட்டை நால்ரோடு நிறுத்தத்தில் பஸ் நின்றது. ஷேர் ஆட்டோக்களிலும் இரண்டு சக்கர வாகனங்களிலும் பூ மூட்டைகளோடு வந்திறங்கிய பூ விவசாயிகளால் காலை நேரம் பரபரப்பாக இருந்தது. மலர்ச்சந்தைக்கு பெயர்போனது நிலக்கோட்டை சந்தை. தென் தமிழகத்தின் இரண்டாவது பெரிய மலர்ச்சந்தை இது. சுற்றுவட்டார விவசாய கிராமங்களிலிருந்து ஒட்டுமொத்த பூவும் இங்குதான் வரும்.
டிக்கெட் போட்டுக்கொண்டே, “பூவெல்லாம் ஒரு வாரமா நல்ல வெல போலண்ணே.” பூ விவசாயம் செய்யும் ஓட்டுநரிடம் கேட்க,
“உத்திரத்துக்கு நல்ல ரேட்டு போச்சு தம்பி.”
“அப்பறமென்ன… ரொம்ப செழிம்புதான?”
“எங்க… உங்க அத்தாச்சிகாரி கண்ணுலயே காச காட்டமாட்டேங்குறா. பூ வரவு செலவெல்லாம் அவளோடுதான். ரெண்டு பொட்டப்புள்ளைக இருக்குனு அரணாக்கயித்தல காச சுருட்டி வச்சாலும் உருவிட்டு விட்டுர்றா” என அலுத்துக் கொள்ள, கேட்டுக் கொண்டிருந்த பயணிகளும் சிரிக்க,
“அப்படியிருந்தா தானண்ணே குடும்பவண்டி ஓடும். இந்த வண்டிக்குதான் ப்ரேக் உங்க கால்ல. குடும்ப வண்டி ப்ரேக் அத்தாச்சிகிட்டனு சொல்லுங்க.” வேந்தனும் சேர்ந்து சிரிக்க,
“அதென்னமோ நெசந்தான். ப்ரேக்கவிட்டு கால எடுக்க மாட்டேங்குறா” என பேசிக்கொண்டிருக்க,
இந்த பேருந்தை கடந்து பின்னால் வந்த பேருந்து ஓங்கி ஒலியெழுப்பி விட்டு முந்திச்செல்ல, குனிந்து பார்த்தவன்,
“என்னண்ணே… இவன் இந்நேரத்துக்கு போறான். நமக்குப் பின்னாடி முக்காமணி நேரங்கழிச்சுதானே இவன் வரணும்.” ஓட்டுநரை பார்த்து கேட்க,
“ஆமாப்பா… அதுவும் ஒரு கவர்மெண்ட் பஸ் போன பின்னாடி தான் வரணும். ஆனா எங்க அதெல்லாம் ஃபாலோவ் பண்றாய்ங்க. நமக்குப் பின்னாடியே வந்தர்றாய்ங்க.”
“ஏன் எங்கிட்ட சொல்லல?”
“எதுக்கு வம்புனுதான். முன்னாடியே போனா மட்டும் அள்ளிக்கட்டிறவா போறாய்ங்க?”
“அதுக்குன்னு அசால்ட்டா விடமுடியுமா. சொல்லவேண்டாமா?” கூட்டத்துள் நாகரீகம் கருதி வயதுக்கு மரியாதை கொடுத்து தணிந்த குரலில் கேட்டாலும் அவனது கோபம் அப்பட்டமாகத் தெரிந்தது.
இவன் மாமனிடம் ஏற்கனவே சொல்லியாகிவிட்டது. அவர்தான் இது வேந்தனுக்கு தெரியவேண்டாம் என்றார் என்பதை இவனிடம் எப்படி சொல்வதென மருகினார். அதற்குள் கூட்டமும் ஏற, பஸ்ஸை எடுக்க, அவனும் டிக்கெட் போடுவதில் கவனமானான்.
கொடியிலே மல்லிகைப்பூ
மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா
துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே
பவளமல்லி தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ளே கூச்சம்…
பஸ் சிலுக்குவார்பட்டியில் நிற்க, மல்லிகை பூ பந்துகள் நிரம்பிய கூடையுடன் பெண்கள் ஜன்னலோரம் மொய்க்க, ஓட்டுனரும் பூ வாங்கிக் கொண்டார் சாமி படத்திற்கு. சிலுக்குவார்பாட்டியை கடக்க, இவர்களை முந்திச்சென்ற பாலாஜி பேருந்து பழுதாகி ஓரமாக நின்றிருந்தது. அதில் இருந்தவர்கள், பின்னால் வந்த பேருந்திற்கு கை காட்ட, நிற்காமல் அதே வேகத்தில் செல்ல, இளவேந்தன் விசிலை அழுத்தி ஊதினான். சட்டென வேகத்தைக் குறைக்க முடியாமல் சற்று தூரம் சென்றே நின்றது விநாயகம் பஸ். நின்றிருந்தவர்கள் ஓடிவர,
“ஏன்ண்ணே… நிப்பாட்ட வேண்டியதுதான?”
“அவிங்க பஸ்ஸு. நீங்க எதுவும் சொல்லுவீங்கனுதான் தம்பி நிப்பாட்டல.”
ஏற்கனவே முந்திச்சென்ற கோபத்தில் இருக்கிறான். இதில் பஸ்ஸை நிப்பாட்டி அந்த பஸ் ஆட்களை ஏற்றினால் எதுவும் சொல்வானோ என நினைத்து, நிற்காமல் செல்ல,
“ஆளுகளுமா அவிங்க ஆளுக? எல்லாரும் காலேஜ், வேலைக்குனு போறவங்கண்ணே” என்றவன், கீழே இறங்கிக் கொண்டான். ஏற்கனவே கூட்டம் நிரம்பியிருக்க, பஸ்ஸை பக்கவாட்டில் தட்டி முடிந்தவரை எல்லாரையும் உள்ளே நகரச் சொன்னான். இடமிருந்தவரை ஏறிக்கொள்ள, மீதிபேர் அடுத்த பேருந்தை எதிர்பார்த்து நின்று கொண்டனர்.
“மங்கா, வாடீ நாமளும் இந்த பஸ்லயே போயிறலாம்.” ஓரமாக ஒதுங்கி நின்றவளை ஆர்த்தி அழைக்க,
“நீ வேணா போ ஆர்த்தி. இந்த பஸ் ரிப்பேர் பண்ணதும் வர்றேன்.”
“அதுக்கு லேட்டாகும் மங்கா. இப்பதான் மெக்கானிக்கு ஃபோன் பண்ணிருக்காங்க. நிலக்கோட்டையிலிருந்து வரணும். இன்னைக்கி எக்ஸாமிருக்கு. லேட்டா போகமுடியாது.”
“எக்ஸாம் எழுதலைனாலும் பரவாயில்ல. ஆனா இந்த பஸ்ல வரல. நீ போ, என்னால உனக்கும் லேட்டாகிறப்போகுது.”
“ஏன்டீ அலும்பு பண்ற? பஸ் கெளம்ப போகுதுப்பா.” ஆர்த்தி அவசரப்படுத்த, சில நிமிடங்கள் நின்று பார்த்துவிட்டு, அந்த பேருந்தும் நகர ஆரம்பித்தது.
பைக்கில் மெக்கானிக்குடன் வந்தவனைப் பார்த்தாள். அதுவரை அமைதியாக நின்று கொண்டிருந்தவள், தன் தோழியையும் இழுத்துக் கொண்டு பஸ்ஸை நோக்கி ஓட, பஸ் நகர ஆரம்பித்தவுடன் முன் படிக்கட்டில் ஒரு காலை வைத்தவன், இவர்கள் ஓடி வருவதைப் பார்த்துவிட்டு பக்கவாட்டில் தட்டினான். கண்ணாடி வழியாகப் பார்த்த ஓட்டுனரும் வேகத்தைக் குறைக்க, பின் படிக்கட்டில் ஓடிப்போய் இருவரும் ஏறிக்கொண்டனர்.
“மங்கா!”
பைக்கில் வந்தவன் ஓங்கி அழைக்கும் சப்தம் காற்றோடு போனது.
“எரும, நிக்கும்போதே ஏறியிருக்கலாம்லடி. எதுக்குடி இழுத்துட்டு வந்த. விழுந்து கிழுந்து தொலச்சுருந்தா மானம் போயிருக்கும்.”
மூச்சுவாங்க கோபமாக திட்டி கொண்டிருந்தவளை என்ன வேணா பேசிக்கோ என சட்டை செய்யாமல், பின்னால் கண்ணாடி வழியாக குனிந்து பார்க்க, பைக்கில் வந்தவன் யாருடனோ போனில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அவன் யாருக்கு அழைத்திருப்பான் என்பதை அறிந்தவள் சந்தோஷமாகத் திரும்பினாள்.
எப்படியும் மெக்கானிக்கை விட்டுவிட்டு இவளை கல்லூரி அழைத்துச் செல்லத்தான் வந்திருப்பான் எனத்தெரியும். பேருந்து பழுதானது தெரிந்து, அதற்குதான் இவனை அனுப்பி வைத்திருப்பார்கள்.
“எதுக்குடி இப்படி பண்ண? நிக்கும்போதே மரியாதையா வந்து ஏறியிருக்கலாம்ல.”
“இன்னைக்கு நாம வீட்டுக்குப் போறவரைக்கும் ஒரு ஆளுக்கு டென்ஷன் ஏத்தி விட்டுருக்கோம்ல. அதுலு நமக்கு ஒரு குதூகலம்.”
“உங்க அத்தையச் சொல்றியா? வீட்டுக்குப் போன பின்னாடி நடக்கப்போறத நெனச்சுப் பாத்தியா?”
“ப்ச்ச்… அது என்னைக்கும் நடக்குறதுதான. பழகிப்போச்சு ஆர்த்தி.” வெறுமையாக சொல்ல, அதைப்பார்த்த ஆர்த்திக்கு தான் தாங்க முடியவில்லை.
“படிக்கிட்டயே நிக்காம மேல ஏறி வாங்கம்மா!”
இவர்கள் படியருகே நிற்பதைப் பார்த்து குரல் கொடுத்தான். இவர்களும் கூட்டத்துள் நுழைந்து மேலே கம்பியைப் பிடித்து நின்று கொண்டனர். இரண்டு பேருந்து ஆட்களும் ஏறியதில் கால் வைக்கக் கூட இடமில்லை.
“காசக் கொடுத்துவிடுங்க” என பின்னாலிருந்தவர்களைப் பார்த்து குரல் கொடுக்க, சிலர் தனக்கு முன்னிருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு டிக்கெட் வாங்கிக் கொண்டனர். இவர்களுக்கு முதுகில் தொங்கிய பேக்கை முன்னுக்கு இழுக்கக் கூட முடியவில்லை.
மங்கையர்க்கரசி ஏறியவுடன், படியில் நின்றவன் இவள் பின்னாலே ஒட்டிக்கெண்டு நகர,
“வேண்டாம்டா!” என அருகிலிருந்தவன் எச்சரித்தான்.
“இந்த மாதிரி ஃபிகரெல்லாம் அசமாத்தாதான் மாட்டும்டா மாப்ள. பாலாஜி பஸ்ல போகும்போது எத்தனதடவ இவளப் பாத்திருக்கேன். இன்னைக்கி தான்டா சிக்கியிருக்கா” என இவளுக்குப் பின்னால் ஒட்டி நின்று கொண்டான். ஈரக்கூந்தலிலிருந்து வந்த மல்லிகைப்பூ வாசனை அவனை கிருக்குப்பிடிக்க வைத்தது.
“என்னடியிது கருமம். பேக் வரமாட்டிங்குது. இழுத்தா அந்துறும்போல. கம்பியப்புடுச்சு நிக்கறதே பெருசு. இதுல கைய விட்டுட்டு எங்க காசெடுக்கறது.” ஆர்த்தி எரிச்சல் பட,
“விடுப்பா, எறங்கும்போது பாத்துக்கலாம்.”
“எனக்கென்ன அப்பன் வீட்டு பஸ்ஸா, இல்ல மாமன்வீட்டுப் பஸ்ஸா?” என்றவளை கொலைவெறியோடு பார்க்க,
“இல்ல, உனக்குதான் டிக்கெட் எடுத்துப் பழக்கமில்லைல. அதச் சொன்னேன். சாமியாடிறாத” என தணிந்துவர,
“நின்னுட்டுப் போயும்தான் பழக்கமில்லை. இந்தக் கூட்டத்துல மூச்சுமுட்டுது. எனக்கென்னமோ ஒருவடியா மணத்தப்பெறட்டிட்டு வருது” என்றவள் இடது கையால் வாயோடு சேர்த்து மூக்கைப் பொத்தினாள்.
“யாத்தே! மங்கா கூட்டத்தப் பாத்தயில்ல! புளிமூட்டையாட்டம் அடஞ்சிருக்குப்பா. கொஞ்சம் தம்கட்டுடி. வாடிப்பட்டி போகவும் எடம் கெடைக்குதா பாப்போம். சடைய எடுத்து மோந்து பாத்துக்கோடி” என பதறினாள்.
பேருந்தில் ஏறியவுடன் அவளுக்கென இருக்கும் முன் இருக்கையில் தோழியோடு சட்டமாக உட்கார்ந்துதான் பழக்கம். ஒரு நாளும் நின்று சென்றதில்லை. நெல்லுக்குப் பாய்ந்தது புல்லுக்கும் என்பதுபோல் ஆர்த்தியும் நின்றதில்லை. அதனால்தான் மதுரை கல்லூரி என்றாலும் ஆர்த்தி வீட்டிலும் செல்ல அனுமதித்தனர். இருவரும் படிப்பது மென்பொருள் பொறியியல் மூன்றாமாண்டு.
இன்று இத்தனை நெருக்கடியில் மூச்சு முட்ட, இரவெல்லாம் கண்விழித்து தேர்வுக்குப் படித்ததில், காலையிலும் சரியாக சாப்பிடாமல் வந்ததில் பித்தம் சேர்ந்து வெறும் வயிறு குடலைப்பிரட்ட ஆரம்பித்தது. நல்ல நாள் என தலைக்கு குளித்து ஈரத்தோடு பின்னியது வேறு. இதில் பின்புறம் ஏதோ அசௌகர்யமாக உணர்ந்தவளால் நகரவும் முடியவில்லை. பின்னால் நின்றவன் மீதிருந்து வந்த சிகரெட் நாற்றத்தோடு ஏதோ வித்தியாசமான நாற்றமும் கலந்துவந்ததில் தலைவலியோடு வயிற்றைப் பிரட்டியது.
இவர்கள் ஏறியதில் இருந்து இவள் மீது ஒரு கண் வைத்திருந்தவன், கூட்டத்தை ஊடுருவி டிக்கெட் போட்டுக் கொண்டு வந்தான். பின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டு வந்தவனைக் காணவில்லை. அவனும் மதுரைக்கு டிக்கெட் வாங்கியதாகத்தான் ஞாபகம். எங்கே எனத் தேட, அவன் மங்காவின் பின் பக்கம் நெருங்கி நிற்பது தெரிந்தது. கூட்டத்தை விலக்கிக் கொண்டுவந்தான்.
இவளை முன்னால் நகரச் சொன்னான். அவன் வந்ததில் சற்று இடம் ஒதுங்க அங்கே நகர்ந்து நின்று கொண்டாள்.
“தள்ளிப்போடா” என்றான் அடக்கப்பட்ட குரலில்.
“நீங்க தானண்ணே உள்ள வா உள்ள வான்னு கூப்புடறீங்க. இப்ப தள்ளிப்போகச் சொல்றீங்க. ஒரு நெலையில நில்லுங்கண்ணே” என்றவன் மீது கஞ்சா புகையின் நாற்றம். அவனாலே சகிக்க முடியவில்லை.
“இப்ப நீ தள்ளி நிக்கல, உனக்கு நிக்க காலிருக்காது. கண்டக்டரா இருக்கதால உனக்கு நல்ல நேரம்னு நெனச்சுக்க.”
“இல்லைனா மட்டும் என்ன பண்ணுவீங்க?”
“இப்ப ஒரசமட்டும்தான் முடிஞ்சது. ஒன்னுக்கு கூடப் போகமுடியாது.”
“நீங்க மட்டும் டிக்கெட் போடுற சாக்குல அங்கிட்டுக் இங்கிட்டும் போய்க்கிட்டு ஒரசலாம். நாங்க எடமில்லாம ஒட்டி நின்னா தப்பா தெரியுது.”
“டேய்! செவுலு பேந்துரும். தேவையில்லாம பேசாத. தள்ளிப்போடா!” என நாக்கை மடித்துக் கொண்டு ஒற்றை விரல் காட்டி மிரட்ட, அதற்குள் வாடிப்பட்டி வந்துவிட, கூட்டம் சற்று இறங்க, அவளும் வாயைப் பொத்திக்கொண்டு அவசரமாக கீழே இறங்கினாள்.
“மங்கா!” என ஆர்த்தியும் இறங்கிக் கொள்ள, குப்பைத் தொட்டியோரம் சென்றவள் வாயிலெடுத்தாள். அவசரமாய் ஆர்த்தி பேக்கிலிருந்த தண்ணீரை எடுத்து கொடுக்க, வாய் கொப்பளித்து, முகம் கழுவியவள், முகம் துடைக்க துப்பட்டா நுனியை எடுக்க,
“ச்சை!” என ஏதோ அசூயையாக உணர்ந்தவள், கை வழவழத்ததில் மீண்டும் ஓங்கரித்துக் கொண்டு வந்தது.
அதற்குள் அவளை உரசிக்கொண்டுவந்து நின்ற பைக்கைப் பார்த்தாள். முறைத்துக் கொண்டு நின்றான் விமல். வேகமாக பின்தொடர்ந்து வந்திருக்கிறான் எனத் தெரிந்தது.
“என்னாச்சு!” என்றான் வேகமாக இறங்கிக்கொண்டே. இளவேந்தனும் பஸ்ஸைவிட்டு இறங்கியிருந்தான். ஆனால் அவர்களிடம் செல்லவில்லை.
“தெரில… ஏதோ அருவருப்பா இருக்கு.” முகச்சுழிப்போடு கையை தண்ணீர் ஊற்றி மீண்டும் மீண்டும் கழுவிக்கொண்டிருந்தாள்.
ஒதுங்கி நின்றிருந்தவன், வேகமாக அப்பொழுதுதான் திறந்து கொண்டிருந்த ஜவுளிக்கடைக்குள் நுழைந்தவன்,
“துப்பட்டா ஒன்னு கொடுங்க!” அவசரமாக கேட்க,
“பொறுப்பா… இப்பதான் தெறக்கறேன். இன்னும் பத்தி, சூடம் காட்டல.”
“பஸ்ஸ எடுக்கணும் ண்ணே. சீக்கிரம் கொடுங்க!” என அவசரப்படுத்தியவனின் கண்டக்டர் தோற்றத்தைப் பார்த்துவிட்டு, அவரும் என்ன கலர் என கேட்க,
“ஏதாவது ஒன்னு கொடுங்க.”
“கருப்பா… வெள்ளையா… எல்லா சுடிதாருக்கும் பொதுவான கலர் இது ரெண்டும்.”
“ரெண்டும் வேண்டாம். ரோஸ் இல்லைனா பச்சையில கொடுங்க” என,
இளஞ்சிவப்பில் முறுக்கிய துப்பட்டாவை கொடுக்க,
“என்னண்ணே, கயிறு மாதிரி இருக்கு” என்றான் புரியாமல்.
“அட, அப்படித்தாம்ப்பா இருக்கும். ஒலச்சா துப்பட்டாவரும்” என்றவரிடம் பாக்கெட்டிலிருந்து அவசரமாக ஐநூறு ரூபாயை கொடுத்தவன், சில்லறை வாங்காமல் திரும்ப,
“தம்பி பாக்கி சில்லறை?”
“பூஜ போடாம ஏவாரம் ஆரம்பிச்சீங்கள்ல. அதனால லாபம்தான் உங்களுக்கு. வச்சுக்கோங்க” என்றவன், இவளிடம் வந்து துப்பட்டாவைக் கொடுத்து அவள் போட்டிருந்ததை கழட்டிக் தரச்சொன்னான்.
மூவரும் கேள்வியாகப் பார்க்க,
“டைம் இல்ல. பஸ்ஸ எடுக்கணும். சீக்கிரம் அந்த தடுப்புக்கு பின்னால போய் மாத்திட்டு வா!” கோபமாக அதட்ட,
அதற்குள், “ஏம்ப்பா கண்டக்டர், அந்தப்பிள்ள அடுத்த பஸ்ல வரட்டும். நீ வாப்பா. காத்து வராம கூட்டத்துக்குள்ள மூச்சுவிட முடியல.” பஸ்ஸிலிருந்தவர்கள் குரல் கொடுத்தனர்.
திரும்பி அவளைப் பார்த்த பார்வையில் பாலூட்டும் அறை மறைவில் சென்று மாற்றிவந்தாள். அவள் கையிலிருந்ததை வெடுக்கெனப் பிடிங்கி வேகமாக குப்பைத் தொட்டியில் விசிறி எறிந்தான்.
‘இப்ப என்ன நடந்துச்சுனு இம்புட்டுக் கோவம்” என மங்கா யோசிக்க,
“எந்த ***பய அது?” விமல் ஆக்ரோசமாக பஸ்ஸை நோக்கி வேகமாகச் செல்ல,
“ஏன், தமுக்கு ஒன்ன எடுத்துட்டு போறீங்களா? அந்தப்பிள்ளைக்கே புரியல, விடுங்க” என அடிக்குரலில் கூற, அவன் வேகமும் சற்று மட்டுப்பட்டது.
“என்னடி நடந்துச்சு?”
ஆர்த்தி கேட்க, தெரியவில்லை என தோளைத் குலுக்கினாள் மங்கையர்க்கரசி.
“போய் ஏறுங்க!” என்றான்.
“மங்கா, எங்கூட வா! மறுபடியும் உனக்கு கூட்டம் ஆகாது. காலேஜ்ல விட்டுர்றேன்.” விமல் அழைத்தான். கூட்ட நெரிசலை நினைத்துப் பார்க்க, மீண்டும் அந்த சிகரெட் நாற்றம் வயிற்றைப் பிரட்ட, பைக்கில் செல்ல முடிவெடுத்தவள், ஆர்த்தியை பஸ்ஸில் போகச் சொன்னாள்.
விமலின் பின் வண்டியில் இரண்டு பக்கமும் கால் போட்டு அமரப் போனவளைப் பார்த்தவன் முகம் அதிருப்தியை காட்ட, கர்ம சிரத்தையாக விமலிற்கும், அவளுக்கும் இடையில் பேக்கை வைக்க, சற்றே மனம் போனால் போகிறதென்று சமாதானம் ஆனது. அந்த வண்டியிலும் அப்படி அமர்ந்தால்தான் வசதிப்படும். மாடுபூட்டாத கட்டவண்டி மாதிரி பின்னால் தூக்கிக் கொண்டிருக்கும். அருகில் இருந்த கடையில் எலுமிச்சம்பழம் ஒன்றை வாங்கி கையில் திணித்துவிட்டு பஸ்ஸில் ஏறியவன் ஓங்கி விசில் கொடுக்க, பஸ் கிளம்பியது.
மல்லிகையே மல்லிகையே…
தூதாக போ…
துள்ளி வரும் தென்றலையே…
நீ சேர்த்து போ…
நோய் கொண்டு நான்…
சிறு நூலாகிறேன்…
தேயாமலே…
பிறை போல் ஆகிறேன்…
தாங்காது…
இனி தாங்காது…

Mam nanum batlagundu than mam
But ippo irukarathu madurai enga oruku pona mari irunthathu
நானும் படிச்சதெல்லாம் வத்தலக்குண்டு தாம்மா🥰
St Thomas middle school nu இருந்தது. இப்போ girls ஹைஸ்கூலா இருக்கு.
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
[4560]viptaka23 Official Login | বিকাশ পেমেন্ট ও সেরা স্লট গেম,viptaka23 অফিসিয়াল সাইটে লগইন করে সেরা অনলাইন স্লট গেম খেলুন। বিকাশ পেমেন্টের মাধ্যমে দ্রুত লেনদেন এবং আকর্ষণীয় বোনাস অফার পেতে আজই অ্যাপটি ডাউনলোড করুন। visit: viptaka23
Really impressed with the bonus offers they have for new members. It gave me a great head start. If you are looking for value, give idharta328 a try.
Just had a massive win last night! The thrill on this site is unmatched and the graphics are top notch. phbigwinph is definitely my new favorite spot.