“என்ன தம்பி?” இறங்குபவர்கள் விபரம் கேட்க,
“டிக்கெட் எடுக்கலண்ணே. நீங்க எறங்குங்க!” இறங்கியவர்களுக்கு வழிவிட்டு அவனை உள்ளே இழுத்துக் கொண்டான்.
“நான்தான் டிக்கெட் எடுத்தேனே. அதுக்குன்னு ஆம்பளப்பைய சட்டையில கை வைப்பியா?” என்றவன் கண்கள் போதையில் மிதந்தது. பழுப்பேறிய கண்களில் தெரிந்தது பால்குடி மறந்ததிலிருந்து கஞ்சா குடிக்கப் பழகியிருப்பான் போல.
“சட்டையப் புடுச்சதுக்கே உனக்கு மானம்போகுதா? அப்ப நீ பண்ண காரியத்துக்கு என்னடா பண்ணலாம்? மதமதன்னு ஒடம்புல கறியேத்தி வச்சுருக்கயில்ல. அதான் தெனவெடுத்து திரியுற. ஒன்னையெல்லாம் மந்தையில வச்சு ஒடையடிச்சு விடணும்டா?” சொன்னதென்னவோ கேலியாகத்தான் தெரிந்தது. ஆனால் அதன் உக்கிரம் உச்சத்தில் இருந்தது.
“ஓ… அதுவா! அதுக்கே அவ வாந்தி எடுத்துட்டா.”
ஒரு ஓரமாக வாயை இழுத்து கேவலமாக இளிக்க, இன்று அவனுக்கு வாக்கில் சனி போல. அடுத்து நொடி அவன் சிரிப்பு தொலைந்து போயிற்று. நடந்ததை நிதானிக்கும் முன் கண் இருட்டிக் கொண்டு வாய் உப்புக் கரித்தது.
ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்குள் திரும்பும் பொழுதே ஓடும் பஸ்ஸிலிருந்து இறங்க முற்பட்டவனை பின்பக்கம் சட்டையோடு இழுத்துப் பிடித்திருந்தான் இளவேந்தன். பயணிகள் முழுவதும் இறங்கிவிட பஸ்ஸிற்குள் வைத்தே, காலுக்கடியில் விசும்பவிடாமல் கிடுக்கிப்பிடித்து நையப் புடைத்துவிட்டான். வண்டியைத் திருப்பி அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு அறிபறியாக ஓடிவந்தார் ஓட்டுனர்.
“தம்பி விடுங்க. செத்துத் தொலஞ்சுறப் போறான்” என்றவர், வேந்தனை தன் பக்கமாக இழுத்துக்கொள்ள முயற்சி செய்துகொண்டே,
“என்னடா பண்ண?” என கேட்க, அதற்குள் உதடு கிழிந்திருந்தது.
“டிக்கெட் எடுக்கலண்ணே. கேட்டா தெனாவெட்டா பேசுறான். காலையிலேயே கஞ்சா வேற. இந்த நாதாரியெல்லாம் காலேஜ் போயி என்னத்தக் கிழிக்கப்போகுதோ?” என்றவன் ஆத்திரம் இன்னும் அடங்கவில்லை அவன் செய்த காரியத்தை நினைத்து. அவனை அங்கேயே சுண்ணாம்பு காளவாயில் ஏற்றும் ஆத்திரம் அவனுக்குள்.
டிக்கெட் எடுக்காததற்கா இப்படி அடித்திருக்கிறான் என்பதை அவரால் நம்ப முடியவில்லை. பிள்ளைகளிடம் ஏதோ கை வரிசையைக் காட்டியிருக்க வேண்டும். இல்லையென்றால் வாடிப்பட்டியில் அவ்வளவு நேரமாக பஸ் நின்றிருக்காது. ரெண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக அதற்கு மேல் அவனிடம் விளக்கம் கேட்கவில்லை. தனது விநாயகம் பஸ் சர்வீசில் பெண்பிள்ளைகள் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பவன். அதற்காகவே அடிக்கடி எல்லா ரூட்டிலும் ஆட்களோடு ஆளாக பயணம் செய்பவன்.
அவனிடமிருந்து வேந்தனைப் பிரித்து இழுத்துவிட,
“யாருன்னு தெரியாம மேல கை வைக்கிற. உன் பஸ்ஸு எப்படி இந்த ரூட்ல ஓடுதுன்னு பாக்கறே” என எகிறிவிட்டு இறங்கி ஓடிவிட்டான்.
“தம்பி, வாங்க ஒரு டீயப் போடுவோம். மொத ட்ரிப்லயே வந்து ஏழரையக் கூட்டுறாய்ங்க.” ஓட்டுனர் அழைக்க, அதற்குள் பயணிகளும் ஏற ஆரம்பிக்க, விரல்களை மடக்கி நீட்டி உதறிக் கொண்டான். அவனை குத்தியதில் புறங்கையில் பல் பட்டிருந்தது. இருவரும் டீக்கடை சென்றனர். டீக்கடையில் தண்ணீர் வாங்கி கை, முகத்தைக் கழுவியவன், அதே ஈரத்தில் தலையைக் கோதிக் கொண்டான். தோளில் கிடந்த சிறுதுண்டில் முகத்தை துடைத்தான்.
கடையில் முன்னால் வைக்கப்பட்டிருந்த டப்பாவில் சுண்ணாம்பை எடுத்தவர் அவன் கையில் இரத்தம் கசிந்த இடத்தில் தடவிவிட்டார்.
“பாம்ப விட மனுஷபய பல்லுதான் கெட்ட சாதிக்கழுத. ஏதொன்னுக்கும் ஒரு டிடி போட்டுருங்க தம்பி” என சிரித்துப் பேசி அவனை இலகுவாக்கியவர், இருவருக்கும் டீ சொன்னார்.
வழியில் பாலாஜி பேருந்து பழுதாகி நிற்க, இவர்கள் பேருந்தும் வேகமாகக் கடக்க, அவளும் இறங்கி நிற்பதைப் பார்த்துவிட்டு தான் வேகமாக விசில் கொடுத்தான். முடிந்தவரை ஆட்கள் ஏறிய பின்பும் அவள் வராமலிருக்க, அவளுக்காகவே இரண்டு நிமிடம் விசில் கொடுக்காமல் தாமதித்தவன், அவள் வருவதற்கான அறிகுறி தெரியாமல் போக, பேருந்து கிளம்பிய பின் ஓடி வந்தவளைப் பார்த்து அகராதி புடுச்சவளா இருப்பா போல என வசைபாடிவிட்டுதான் வண்டியை தட்டி நிறுத்தினான். பின்பக்கமாக ஏறிக்கொள்ள, கூட்ட நெரிசலில் அவள் முகம் காட்டிய அசௌகரியமான பாவனையில் அவளை நோக்கி வந்தான்.
அவள் அவசரமாக கீழிறங்க, இவனும் இறங்கி அவளிடம் செல்ல முற்பட விமலைப் பார்த்தவன் தூரத்தில் நின்று கொண்டான். துப்பட்டாவை முகம் துடைக்க எடுத்தவள், அருவருப்பில் உதற, என்னவென்று கவனித்தவனுக்கு கோபம் கண்ணைக்கட்ட, கண்டக்டராக இவன் வந்தது அந்த கயவாளியைப் பெற்றவர்கள் செய்த புண்ணியம். மதுரை வரும்வரை கோபத்தை இழுத்துப் பிடித்து வந்தவன், அவன் இறங்கும் முன் உள்ளே இழுத்து தன் ஆத்திரம் தீர அடித்தும் ஆங்காரம் தீரவில்லை. மற்ற பெண்கள் என்றாலே அவனை தடுப்பது கடினம். அவனது மொசக்குட்டி மீது எனும் போது அவனால் ஆத்திரத்தை அடக்க முடியவில்லை.
சூடாக டீ குடித்துவிட்டு, சிகரெட் வாங்கியவன், ஓட்டுனரிடமும் ஒன்றை நீட்டினான். கடையில் கயிறு கட்டி தூக்கில் தொங்கிய லைட்டரில் பற்றவைத்து புகையை உள்ளிழுத்த பின்பே சற்று ஆசுவாசப்பட்டது மனம். வெயிலுக்கு அசந்தவன் இல்லை. ஆனால் இன்று ஏனோ உள்ளும் புறமும் அதீத வெக்கையாக இருந்தது.
டீக்கடையில் செய்தித்தாளை வாங்கிய ஓட்டுனர், “எலெக்ஷன் முடியறவரைக்கும் உருப்படியா ஒரு நியூசும் இருக்காது” மேலோட்டமாக பார்வையை ஓட்டிக் கொண்டே தனக்குள் பேசிக்கொண்டார்.
“அண்ணே! நாம்போயி டிக்கெட் போடுறே. நீங்க பாத்துட்டு வாங்க!”
பாதி சிகரெட்டை கீழே போட்டு மிதித்து நசுக்கியவன், பேருந்தில் ஏறியிருந்தவர்களுக்கு டிக்கெட் போட சென்றுவிட்டான்.
எத்தனை வருடங்கள் இருக்கும் அவளைப் பார்த்து என யோசித்தவனுக்கு கிட்டத்தட்ட ஏழு வருடங்களுக்கு முன் இவனது அம்மாச்சியின் இறப்பின் போது பார்த்தது. அதுவும் கடைசி நேரத்தில் வந்து மகன்வழி பேத்தி முறைக்கு தலையில் எண்ணெய் வைத்து தண்ணீர் ஊற்றியதோடு சரி.
“இருக்கறது ஒரே பேத்தி. இறுதிக் காரியத்துக்காவது வரச்சொல்லுங்கப்பா” என அங்காளி பங்காளிகளின் வற்புறுத்தலில் தான் அவளது அம்மாச்சியோடு வந்திருந்தாள். பார்வையிலே குமரியம்மா பழக்கத்திலே குழந்தையம்மா என மழலை மாறாத முகம், ஆனால் நானும் குமரியாக்கும் என்றது தோற்றம். அங்கே யாரையும் அவளுக்கு தெரியவில்லை.
கேதத்துக்கு வந்தவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் அதிகம் விசாரித்தது அவளைத்தான். காட்சிப் பொருளாக அவளையும் பார்த்துச் சென்றனர். அவளது ஐந்து வயதில் போனவள். பதினைந்து வயதில் வந்திருந்தாள். கணபதியும் அன்றுதான் மகளைப் பார்க்கிறார்.
பதினைந்து வயது பெண்ணிற்கு என்ன புரிந்ததோ, அப்பத்தாவை காடு கொண்டு சேர்ப்பதற்குள் தனது அம்மாச்சியை அழைத்துக் கொண்டு கிளம்பிவிட்டாள்.
அவளது நினைவு வர அத்தை கல்யாணியின் நினைவும் வேந்தனுக்குள் நிழலாடியது. மாமன் கணபதியை கல்யாணம் செய்து வரும்பொழுது கல்யாணிக்கு பதினேழு கூட பூர்த்தியாகவில்லை. முற்றாத இளங்குறுத்து. இளவேந்தனுக்கு ஐந்து வயதிருக்கும். ஆஜானுபாகுவான முரட்டு மாமனுக்குப் பக்கத்தில் பதினாறு வயதில் இருந்த சிறுபெண்ணை பார்க்க அவனுக்கு அவ்வளவு பிடித்தது. அவன் அம்மா, சித்தியெல்லாம் அழகு என்றாலும் அந்த மண்வாகிற்கே உரிய கருப்பழகிகள் தான்.
ஒருகாலத்தில் சினிமாவில் கோலோச்சிய வசந்த மாளிகை வாணிஸ்ரீ, கே.ஆர்.விஜயா, டி.ஆர்.ராஜகுமாரி, மனோரமா எல்லாம் கருப்பழகிகள் தான். என்று கறுப்பு வெள்ளை சினிமா வண்ணம்பூசியதோ அன்று வந்தது வெள்ளைத்தோலுக்கு மவுசு.
அந்தக் கல்யாணக்கூட்டத்திலேயே கல்யாணி பளீரென தனித்துத் தெறிந்தாள். கழுத்திலிருந்த மாலையே அவளை கால்வரை மறைத்திருந்தது.
வாசலில் வைத்து மணமக்களுக்கு ஆரத்தியெடுக்க, ஓடிப்போய் அத்தை கையைப் பிடித்துக் கொள்ள, கேளிக்காற பெண்கள் கேலிபேசியதில் இவனுக்கு வெட்கம் வந்தது இன்றும் நினைவிருக்கிறது. இப்பொழுது நினைத்தாலும் மாமனுக்கு அத்தை அதிகப்படி என நினைக்கத் தோன்றும். அழகு, அறிவு, அந்தஸ்த்து என அனைத்திலும் ஒருபடி மேல்தான் கல்யாணி. பள்ளி கல்விகூட முழுமையாக முடிக்காதவள். ஆனால் அவ்வளவு அழகாக வேந்தனுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பாள்.
பத்து வயது வரை அம்மாச்சி வீட்டில்தான் வேந்தன் வளர்ந்தான். இரண்டு வயதாகியும் பால்குடி மறக்காமல், போன இடம். வந்த இடமெல்லாம் உக்காரும்மா என சேலைத் தலைப்பைப் பிடித்திழுத்து, தாமரையின் மானத்தை வாங்கியதில், இரண்டாவது குழந்தையும் உருவாகிவிட, பால்குடி மறக்கடிக்க அம்மா வீட்டில் விட்டு வைத்தனர். அம்மையப்பனுக்கு அதில் துளியும் விருப்பமில்லை. “நானெல்லாம் மூனு வயசு வரைக்கும் குடிச்சுருக்கேன். எங்க அப்பா அஞ்சுவயசுவரைக்கும்னு சொல்லியிருக்காரு. என் பிள்ளைக்கி அதுக்குள்ள மறக்கடிக்கனும்கற.”
“நீங்க எல்லாம் காத வளச்சுத்தொட்டு பள்ளிக்கூடம் போனீங்க. இப்ப அப்படியா சேக்கமுடியும். அடுத்த வருஷம் அவன் ஸ்கூல் போக வேண்டாமா?” என அவரை அடக்கியவர், மகனை அம்மா வீட்டில் விட்டு வைத்தார். அவரது தங்கை வித்யாவிற்கும் அப்பொழுது திருமணமாகவில்லை. அடுத்தடுத்து ஆணும், பெண்ணுமாக மூன்று குழந்தைகளாகிவிட, பத்து வயதுவரை வேந்தன் அம்மாச்சி வீட்டில்தான் வளர்ந்தான். அதனாலேயே மாமனின் செல்ல மருமகன் அவன். அவனுக்கும் மாமன் எப்பவும் ஒசத்திதான்.
இன்று அவளைப் பார்க்க அந்த வயதில் அத்தை கல்யாணியைப் பார்த்தது போலவே இருந்தது.
அதன் பிறகு சென்ற வருடம் வீரபாண்டி திருவிழாவில் பார்த்தது. இளவேந்தன் குடும்பமும், அவளது தாய்மாமன் ரெங்கநாதன் குடும்பமும் பங்காளிகள் என்பதால் இருவருக்கும் குலதெய்வம் வீரபாண்டி கௌமாரியம்மன். தொழிலும் பாத்திர வியாபாரம் தான் இரண்டு குடும்பத்திற்கும். சின்னமனூரில் பெரிய பாத்திரக்கடை அம்மையப்பன் குடும்பத்தினருடையது.
வருடம் தவறாமல் மங்காவின் அம்மாச்சி மாரியம்மாள் பூச்சட்டி எடுப்பது வழக்கம்.
அந்த வருடம் வேந்தனின் அப்பாவிற்கு கண் அறுவைசிகிச்சை செய்திருந்ததால், இவனது அம்மாவும் ஆயிரங்கண் பானை வாங்கிவைப்பதாக திருகண்ணீஸ்வரருக்கு வேண்டுதல் வைத்திருந்தார்.
முல்லை ஆற்றங்கரையில் ஏதேச்சையாகத் தான் சந்தித்துக் கொண்டனர். தெரியாத்தனமாக ஒரே நாளில் கோவிலுக்கு வந்துவிட்டனர் இரண்டு குடும்பமும். தெரிந்திருந்தால் வந்திருக்க மாட்டார்கள். அவர்கள் மிதித்து செல்லும் கால்தடத்தில் கூட இவர்கள் மிதித்துச் செல்லமாட்டார்கள்.
இவர்களைப் பார்த்துவிட்டு அன்றும் இவளது அத்தை தமிழ்ச்செல்வி ஏதோ சாடை பேசிவிட்டுத்தான் சென்றார்.
சித்திரை மாதம். வெயில் ஏறுவதற்குள் வேண்டுதலை முடித்துவிட வேண்டுமென, ஆற்றங்கரையில் பூச்சட்டி எடுக்க தீ வளர்த்துக் கொண்டிருக்க, அந்த அதிகாலை வேளையில் ஆற்றில் குளிக்க தயங்கித் தயங்கி கால் வைத்து தண்ணீரில் இறங்கியவள், உள்ளே முங்கியெழ, குளிரில் கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு அவள் பற்கள் கிட்டித்ததை நினைக்கையில் இதழோறம் சிறு புன்னகை அன்று நடந்ததை நினைத்து.
கம்பத்திற்கு மஞ்சள் தண்ணி ஊற்றும் போது, மஞ்சள் வண்ண ஈர சுடிதாரில் பார்த்தான். ஈரக்கூந்தலை நுனியில் முடிந்து மல்லிச்சரம் வைத்திருந்தாள். மூன்றாம்பிறை பூரணத்துவம் அடைந்திருந்தது. மாமன் பிள்ளைகளோடு, உடன் இந்த மெய்க்காப்பாளன் விமலும். எங்கு போனாலும் வால்பிடித்து வந்துவிடுவான் போல.
இவனது தாய்மாமனுக்குதான் அன்றும் மகளைவிட்டு கண்ணை அகற்ற முடியவில்லை. கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தார் கூட்டத்துள் மகள் தலை மறையும் வரை.
சிலருக்கு வாழ்க்கை கையில் மந்திரக் கோலை கொடுக்கும். சிலருக்கு ஊன்றுகோல். சிலருக்கு தன் கையே தனக்குதவி என கையை ஊன்றி கர்ணம்பாய விட்டுவிடும்.
கையில் கிடைத்த மந்திரக் கோலின் மகிமை தெரியாமல், லாப நோக்கம் கருதிய திருமணமே என்றாலும், அதன்பிறகும் கணபதி, அம்மாவின் கைபொம்மையாகவே ஆட்டுவிக்கப்பட்டதின் விளைவு, மகளை எட்ட நின்று கண்கள் நிரப்பிக் கொள்ளும் நிலை கணபதிக்கு.
அதன் பிறகு இன்றுதான் தாய்மாமன் மகளைப் பார்க்கிறான். அதுவும் இந்த ரூட்டிற்கு ஆளில்லாமல் கண்டக்டராக வரப்போய். அவளுக்கு தன்னை தெரிந்திருக்குமா. நினைவிருக்குமா என்றுகூட தெரியவில்லை.
பைக்கில் வந்து உரிமையாக அழைத்துப் போனவன் யார் என பலவாறாக மனதிற்குள் யோசனை ஓட, ஓட்டுனரும் வந்து ஒலியெழுப்ப, சிந்தனை களைந்தவன், விசில் கொடுக்க, பஸ் மீண்டும் தனது பயணத்தைத் துவக்கியது.
*****
“முடியலைனா வீட்டுக்கு திரும்பிறலாம் மங்கா!” அவளை கல்லூரியின் முன் இறக்கிவிட்டு விமல் கேட்க,
“இப்ப பரவால்ல” என்றாள்.
“ஜுஸ் ஏதாவது வாங்கிவரவா?”
“வேண்டாம். உன்னுடைய விசுவாசத்த கச்சிதமா காட்டிட்ட போல?” அவள் எதைப்பற்றி கேட்கிறாள் எனப் புரிந்தவன்,
“நான் சொல்லலைனாலும் பாத்தவங்க யாராவது சொல்லத்தான் போறாங்க. அதான் நானே சொல்லிட்டேன். எக்ஸாம் முடிஞ்சதும் ஃபோன் பண்ணு.”
“அதுக்குள்ள பஸ் சரியாகாதா?”
“அதெதுக்கு உனக்கு? நானே கூட்டிப் போறேன். என்னைக்குமில்லாம அந்த பஸ்ல ஏறிட்ட. ரொம்ப தைரியம் தான் உனக்கு. என்னப்பாத்ததும் தான வீம்புக்கு ஏறின?”
“ஆமா, எப்படியும் நீ சொல்லுவேனு தெரியும். அதான், போற வரைக்கும் பொறுமித்தள்ளட்டம். அம்மாச்சிய நெனச்சாதான் பாவமா இருக்கு. இன்னைக்கு அதுக்கு காது வலியெடுத்துக்கும்” என இலேசாக இதழ் பிரிய சிரித்தவளை, கண்ணகற்றாமல் பார்க்க,
“ஓய்! என்ன அப்படி பாக்குற?”
“நீ சிரிச்சா ரொம்ப அழகா இருக்க” என, சட்டென தனக்குள் சுருங்கிக் கொண்டாள்.
இவனது நோக்கம் புரியாமலில்லை. எதற்காக அத்தை இவனுக்கு இவ்வளவு இடம் கொடுக்கிறார் என்றும் தெரியாமலில்லை. அத்தை தமிழ்ச்செல்வியின் அக்கா மகன் விமல். ஆண்கள் படிக்கும் கல்லுரியில் கூட தன்னை சேர்க்கக்கூடாது, அவர்கள் பஸ் தவிர வேறு பஸ்ஸில் போகக்கூடாது, ஃபோன் உபயோகிக்கக் கூடாது என தனக்கு தோணும் போதெல்லாம் தவணைமுறையில் நித்தம் ஒரு கண்டிஷன் போடும் அத்தை தான் இவனை வீடு வரை வரவிட்டிருக்கிறார். சித்தி வீடு என்ற நினைப்பில் மட்டும் அவன் வரவில்லை எனபது மேடை ரகசியம்.
“இந்த வெயில்ல மறுபடியும் வண்டில வந்தா தலைவலிதான் வரும். நான் பஸ்லயே வந்துர்றே. ஆர்த்தி கூட இருக்காள்ல. அப்படியே ஒரே நாள்ல யாரையும் கரெக்ட் பண்ணி ஓடிப்போயிற மாட்டேன்னு உங்க சித்திகிட்ட சொல்லிரு” என்றவள், அதற்குள் ஆர்த்தியும் வந்துவிட, அவளோடு சேர்ந்து உள்ளே சென்றாள்.
அது பெண்கள் கல்லூரி. அதனால்தான் அங்கே அவளை சேர்த்தது. இவ்வளவு தூரம் அவன் பின்னால் அமர்ந்து வந்ததே பெரிய விஷயம். மீண்டும் அவனுடன் வண்டியிலா என நினைக்க சத்தியமாக முடியாதென தோன்றியது. இத்தனைக்கும் கண்ணியமாகத்தான் ஓட்டி வந்தான்.
அவன் கண்ணியம் தவறும் நாளும் ஒன்று வருமென்று அன்று பேதையவள் அறியவில்லை.
“என்னடி, உன்னோட பாடிகார்ட் என்ன சொல்றாப்ல.”
“எப்பவும் போலதான்.”
“ரொம்ப டேமேஜ் பண்ற. பாத்துடி” எச்சரித்தவள்,
“காலையில சாப்பிடலயா?”
“கொஞ்சமா சாப்டேன். அதுக்குள்ள வயித்த வலிச்சது. லேட்டாகவும் போதும்னு வச்சுட்டு வந்துட்டேன்.”
“அல்சர் இருக்குல்ல. சாப்பிடாம வந்தா இன்னும் தான் பிரச்சினை. இப்ப பாரு வாமிட் பண்ணி பாதியில இறங்க வேண்டியதாப்போச்சு. எக்ஸாம் டயத்துல ரிஸ்க் எடுக்காதடி.” அக்கறையோடு சற்று கண்டித்தும் சொல்ல,
“ஒரப்பா இருந்துச்சுப்பா. சாப்பிட்டதும் வயித்தவலி வந்துருச்சு” என்றதோடு முடித்துக் கொண்டாள்.
பாதியில் வைத்துவிட்டு கையைக் கழுவியதற்கும் அத்தையிடம் பாட்டு கிடைத்ததை சொல்லவில்லை.
“அவளுக்குதான் காரம் ஆகாதுல்ல. ஒரப்ப கம்மியா வச்சாதான் என்ன?” மாரியம்மா மருமகளை கேள்வி கேட்க,
“அவ ஒருத்திக்காகன்னு எல்லாரும் உப்பு ஒரப்பில்லாம சாப்பிட முடியுமா? எப்ப பாரு இதையே சொல்லவேண்டியது. கல்லத்தின்னாலும் செரிக்கிற வயசுல அப்படி என்னதான் நோவோ” என அலுத்துக் கொள்ள,
“என்னமோ நீதான் தெனமும் செஞ்சு கொடுக்குற மாதிரி அலுத்துக்கற. வயசுப் பிள்ளைக்கு நோவு கீவுன்னு ஓம்பாட்டுக்கு கதகட்டாத.”
“இல்லைனா மட்டும். எப்ப பாரு ஏதாவது ஒன்னு சொல்லிட்டுதான் இருக்கா” என தமிழ்ச்செல்வி வாய்க்குள் முனங்க,
“இன்னைக்கு விசயா வரல. இல்லைனா ஒன்னய யாரு கேக்கப்போறா?” என்றார்.
சமையலுக்கும், எடுபிடி வேலைகளுக்கும் ஆள் உண்டு. இவளுக்கு காரம் ஆகாதென தாயில்லா பிள்ளையாச்சே என விஜயாவும் சற்று அக்கறையாகவே பார்த்து செய்வார். அவரது சொந்தத்தில் விசேஷம் என இன்று ஒருநாள் வேலைக்கு வரவில்லை. அதற்குள் இத்தனை அக்கப்போர்.
இவள் ஏழு மணிக்கெல்லாம் கிளம்பியாக வேண்டும். இவர்கள் பஸ்தான் என்றாலும் சரியான நேரத்திற்கு சென்றால்தானே. இன்று ஒருநாள் வெள்ளன எழுந்து சமைத்த காண்டு அத்தையின் பேச்சில்.
காலையில் இவர்கள் கச்சேரியைக் கேட்க முடியாமலே ரெங்கநாதன் எழுந்து வாக்கிங் என்ற பெயரில் வெளியே சென்றுவிடுவார். பெரும்பாலான குடும்ப ஆண்கள் வரிசையில் இந்த வயதிலும் அம்மா, மனைவி என இரண்டு பக்கமும் அடிவாங்கும் பாவப்பட்ட மத்தளம். இவர்களுக்கும் பத்தாவது படிக்கும் ஆணும், எட்டாவது படிக்கும் பெண்ணும் உண்டு.
“இன்னும் என்ன சின்னப்பிள்ளையா. செஞ்சு ஊட்டிவிட. நாளைக்கு போற எடத்துல கட்டுறவனா ஆக்கிப் போடுவியான். அவளா செஞ்சு சாப்புடத்தெரியாதா?”
“ஏன்… வந்த எடத்துல நீயா எங்க எல்லாத்துக்கும் வடிச்சுக் கொட்டுற.”
“நான் கொண்டுவந்த சீர் செனத்திக்கு ராணி மாதிரிதான் இருப்பேன். ஆக்கிப் போட்டு ஊழியம் பண்ணனுமோ?”
“எம்பேத்தி மட்டும் என்ன சும்மாவா போவா. அவளும் அரசியாத்தான் வாழ்வா?”
“ஏன், இங்கருந்து அனுப்பனதெல்லாம் பத்தாதா? இவளுக்கும் செய்யணுமா? இதென்ன பிள்ளகுட்டி இல்லாத அனாமத்து சொத்தா? வாங்க வேண்டிய எடத்துல வாங்குங்க.”
“என்னமோ உங்கைய அறுத்துக் கொடுக்கற மாதிரி பேசுற? என் புருஷவீட்டு ஆஸ்தி இருக்கு. என் பேத்திக்கு செய்யப்போறேன். ஒன்னய யாரும் கேக்கல” என்றவர் பேச்சில் என் பேத்திக்கு செய்வேன் என்ற வீம்பு தெரிந்தது.
என்னதான் தடுத்தாலும் பேத்திக்கு செய்வதை மாரியம்மா செய்யத்தான் போகிறார். அதை ஏன் வெளியே விடுவானேன். இருக்கவே இருக்கிறான் அக்கா மகன் என தமிழ்ச்செல்வி கணக்குப் போட்டு வைத்திருக்கிறார்.
“இவ மட்டும் உங்க பேத்தினா, அப்ப நான் பெத்து வச்சுருக்க ரெண்டையும் தவுட்டுக்கா வாங்கிட்டு வந்தேன்.”
என இவர்கள் காலையிலேயே ஆரம்பிக்க, சலிப்போடுதான் சாப்பிடாமல் வந்துவிட்டாள்.
மாரியம்மாவும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
கணவர் இருந்தவரை பேத்தியைப் பேச இடம் கொடுக்காமல் மருமகளை கட்டுக்குள் வைத்திருந்தார் தான். இப்பொழுது சட்டென மருமகளை எடுத்தெறிந்து பேசவும் முடியவில்லை. பேத்தி சாப்பிடாமல் பட்டினியாக போகிறாளே என்ற ஆதங்கத்தில் இன்று பேசிவிட்டார்.
பேத்தியை கரை சேர்க்க மகன் தயவு தேவையே. காசுபணமிருந்தால் காரியம் தானாக நடந்துவிடுமா. எடுத்துச் செய்ய ஆள் வேண்டாமா. இவர்கள் தானே முன் நிற்கவேண்டும் என நயந்து போகிறார்.
நிலக்கோட்டை தாண்டி இவளும், ஆர்த்தியும் பஸ்ஸில் ஏறிக் கொள்வர். முன் சீட்டு இவர்களுக்கெனவே காலியாக வரும். பாலாஜி பஸ் சர்வீஸ் இவளது தாய்மாமன் ரெங்கநாதன் உடையது. அது இல்லாமல் நிலக்கோட்டை கடைவீதியில் மூன்று மாடியில் பாத்திரக்கடையும் இருக்கிறது. அதுதான் இவர்களது பாரம்பரிய தொழில். பஸ் சர்வீஸ் இடையில் ஆரம்பித்தது. விநாயகம் பஸ் சர்வீஸ்க்கு போட்டியாக.
*******
“இந்தா மறுபடியும் ஏழரையக் கூட்டிட்டாய்ங்கள்ல. வாங்கடி மாப்பிள்ளைகளா! மொய் வாங்காம போகமாட்டாய்ங்க போல.”
தனக்குத் தானே பேசிக்கொண்டு, கையில் கம்பி, கல் சகிதமாக வாடிப்பட்டியைத் தாண்டி பஸ் மறிக்கப்பட, அவர்களைப் பார்த்த ஓட்டுனர் வெகு தொலைவிலேயே பஸ்ஸை நிறுத்திக் கொண்டார்.
“இந்த வண்டி தான்டா. மறிங்கடா!” பஸ்ஸை நோக்கி வந்தது அந்தக் கும்பல்.
