ஜானகி ஏதோ சொல்ல சுரத்தையின்றி தலையை மட்டுமே ஆட்டிச் சென்றவளைப் பார்த்தவனுக்கு இப்பொழுதே அவளுடன் பேச வேண்டும் போல் இருந்தது.
சுகந்தியும் மாமா குடும்பத்தாரைப் பார்க்க மாடிப்படியேற, இலக்கியா பின்னே செல்ல முற்பட்டவனை, ஈவன்ட் மேனேஜ்மென்ட் ஆள் ஒருவன் வந்து அழைத்தான்.
“அண்ணா, ஒரு தடவை வந்து எல்லாத்தையும் சரி பாத்துருங்கண்ணா” என்று அழைக்க அங்கு சென்றான். மண்டப வாயிலின் ஒருபக்கம் ஐஸ்க்ரீம், பாப்கார்ன், பஞ்சுமிட்டாய் எல்லாம் இருக்க, சிறுவர்கள் கூட்டம் அங்கு மொய்த்தது.
வருபவர்களுக்கு மெஹந்தி வைக்கவும் இரண்டு பெண்களை ஏற்பாடு செய்திருந்தான். தங்கைகள் எல்லாம் மெஹந்தி வைத்துக் கெண்டிருக்க, பேத்தியுடன் பொதிகாச்சலமும் அங்கு நின்றிருந்தார். அமிர்தாவை அப்பா பொறுப்பில் விட்டிருந்தான் சீனி. ஏனோ தனித்து பிள்ளையை எங்கும் விடுவதில்லை.
இவனைப் பார்த்து புன்னகைத்தார். வீட்டிற்கெல்லாம் வரவில்லை. நேராக மண்டபத்திற்கே வந்திருந்தார்.
“வாங்க மாமா!” என்றான் இயல்பாக. அவருக்குதான் இயல்பாக இவனுக்கு பதிலிருத்த முடியவில்லை.
“வர்றேம்ப்ப்பா!” என்றவருக்கு ஏனோ மாப்பிள்ளை என முறை சொல்ல வரவில்லை.
“மாமா… எப்படியிருக்கு?” என்று இரண்டு கைகளையும் விரித்தபடி, முகமெல்லாம் புன்னகையோடு அமிர்தா ஓடி வந்தாள். மருதாணி வைத்த சந்தோஷம் அவள் முகத்தில்.
“எங்க அம்முக்குட்டி மாதிரியே அழகா இருக்கு” என்று அவள் உயரத்திற்கு குனிந்து கன்னத்தில் முத்தம் வைத்தான்.
“அம்மு… மறு கன்னத்திலும் வாங்கிக்கோ. ஏன்னா… இன்னைக்குதான் உனக்கு… நாளையிலருந்து இது உங்க அத்தைக்கு!” அங்கு கூடியிருந்த முறைப் பெண் ஒருத்தி கேலி செய்ய, வெடிச்சிரிப்பு பெண்களிடம்.
“அம்மாட்ட காட்டப்போறேன்” என்று உள்ளே ஓடினாள்.
சிரித்தபடியே அவருக்கு தலையை அசைத்து உத்தரவு வாங்கிக்கொண்டு உள்ளே வந்தவன், நேராக சென்றது மணமகள் அறை நோக்கி தான்.
அவளிடம் பேசி சமாதானம் செய்யலாம் என்ற எண்ணத்தில்தான், யார் பார்த்தால் என்ன, விடிந்தால் எனது மனைவியாகப் போகிறவள் என்ற உரிமையில் கதவைத் தட்டிவிட்டான். அவன் எல்லை எதுவெனத் அவனுக்குத் தெரியும். (இந்த க்ரெடிட் எல்லாம் வாசக அன்பர்களையே சேரும். அவனை நல்லவன்னு சொல்லியே கெடுத்து வச்சிருக்காங்க.)
அம்மாவை எதிர் பார்த்தவள் முகம் இவனைப் பார்த்ததில் முதலில் திகைத்தது. மண்டபத்திற்குள் வந்ததில் இருந்து பாவையின் பார்வை இவனைத் தேடி அலைபாய்ந்தது என்னவோ உண்மைதான். ஆனால் சட்டென தன் முன் வந்து நிற்க நெஞ்சுக்குழியில் படபடப்பு. கண்கள் வெளியே பார்வையை ஓட்டினாலும், இவனை அருகில் கண்டதில் ஆசைக்கும் அச்சத்திற்கும் நடுவில் சிறு தடுமாற்றம். இப்போது இவரை உள்ளே அழைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் கதவை முழுதாக திறக்காமல் அவள் நிற்க,
இவன் தான் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தான். சட்டென ஒதுங்கி கதவிற்குப் பின் சுவரோடு ஒட்டிக் கொள்ள, உள்ளே வந்தவன் மறுபடியும் கதவை சாத்த, அச்சோ என்றது மனம்.
அம்மாவோ அல்லது ஜானகி சொன்ன அழகுநிலையப் பெண்ணோ வந்துவிட்டால் என்ன நினைப்பார்கள் என்ற கலக்கம் உள்ளுக்குள். அவனுக்கு அது மாதிரி எதுவும் இல்லை போல. அறைக்குள் பார்வையைச் சுழற்றினான். இன்னும் சற்று நேரத்தில் கட்டவேண்டிய பட்டுப் புடவை கட்டிலில் கிடந்தது. அதன் மீது இவன் அமிர்தாவிடம் கொடுத்தனுப்பிய பூங்கொத்து. அன்று பூ வைக்க இவர்கள் எடுத்துச் சென்ற புடவையே. மேடையில் வைத்து தானே பரிசப் புடவை கொடுப்பார்கள்.
சுழன்ற பார்வை அவள் மேல் நிலைத்தது. சில கணங்கள் அவளையே பார்த்திருந்தான். இவளுக்கு தான் அவனது பார்வையை எதிர்கொள்ள முடியவில்லை. ஏசி அறையிலும் அவளுக்கு வியர்வைப் பூக்கள் உதட்டின் மேல். அங்குமிங்கும் பார்வை அலைபாய்ந்தது. அவளது தடுமாற்றம் புரிந்து குறுஞ்சிரிப்போடு பார்வையை மாற்றினான்.
இலக்கியா அமைதியாகவே இருக்க, தொண்டையைச் செறுமி அமைதியைக் கலைத்தவன்,
“ஃபோன்ல மட்டும் தான் தைரியம் வரும்போல?” அவளை இலகுவாக்க பேச்சைத் தொடர, அவன் அன்று காற்றில் அனுப்பிய முத்தத்தைப் பற்றி பேசுகிறான் எனப் புரிந்தவளுக்கு கன்னக்கதுப்பு சூடேறியது. மானசீகமாக தலையில் தட்டிக் கொண்டவளுக்கு அவனை நிமிர்ந்து பார்க்கவே லஜ்ஜையாகப் போயிற்று.
“பெரியம்மா பேசினதை மனசுல வச்சுக்காத… விசேஷ வீட்ல யாராவது, ஏதாவது சொல்லத்தான் செய்…” என்று முடிக்கும் முன்,
“உங்களுக்கு அவங்கள ரொம்பப் புடிக்குமா?” குரல் கிணற்றுக்குள் இருந்து வருவது போல் வந்தது.
தண்டபாணிக்கு புருவங்கள் முடிச்சிட்டது. யாரைக் கேட்கிறாள் என்று புரியவில்லை. பேசிக் கொண்டிருந்தது அம்மாவும், பெரியம்மாவும். இதில் யாரைப் பிடித்திருக்கிறதா என கேட்கிறாள்.
“அவங்க எங்க பெரியம்மா… அவங்கள புடிச்சா என்ன புடிக்காட்டி என்ன?”
“நான் அவங்களச் சொல்லல!” தொண்டையடைத்து, கண்கள் சிவந்தது.
‘ஒரு வேளை அமிர்தாவோ. இப்ப முத்தம் கொடுத்ததைப் பார்த்துவிட்டு கேட்கிறாளா? சேச்சே… சின்னபிள்ளை கூடவா… இருக்காது’ என குழப்பமாக அவளைப் பார்த்தவன்,
அழுகை வரும் அளவிற்கு அப்படி யார் என்ற யோசனையோடு, “அப்பறம்…” என புரியாமல் புருவம் நெறித்துக் கேட்க, அவளுக்கு தயக்கம். இதை எப்படி எடுத்துக்கொள்வானோ என்ற அச்சம்.
“யாரை பிடிக்குமான்னு கேட்ட?”
“…”
“சொல்லப் போறீயா இல்லையா?” சற்றே குரலை உயர்த்த,
“அதான் அண்ணியோட நாத்தனார்” என்றவள் குரல் உள்ளிறங்க, இவள் என்ன கேட்கிறாள் என சுத்தமாகப் புரியவில்லை.
அண்ணியோட நாத்தனார் யார் என்பதே முதலில் அவனுக்கு சட்டென உரைக்கவில்லை. யாரது என சில கணங்கள் மூளையைக் கசக்கிய பிறகுதான் பழனியுடைய நாத்தனார் என்பதே புரிந்தது. எதுக்கு இப்போ ரஞ்சனியைப் பத்தின பேச்சு என்றிருந்தது அவனுக்கு.
அடுத்து அவள் கொடுத்த விளக்கத்தில் அவனையும் மீறி சட்டென வாய்விட்டு சிரித்துவிட்டான். கண்களில் குறும்பும், கேலியும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது. அவன் சிரிப்பதைப் பார்த்து சிறுபிள்ளையாய் முகம் சுருக்கினாள்.
பெரியம்மா பேசியதைக் கேட்டு மனம் சங்கடத்தில் இருப்பாளே… கண்கள் வேற கலங்கிச் சிவந்திருந்ததே, சமாதானம் பண்ணலாம் என நினைத்து இவன் வந்தால், இவள் என்னடாவென்றால் பெரியம்மா ரெண்டு பத்திக்குப் பேசியதும், அதற்கு பதிலாக அம்மாவிடம் இவன் ஒரு பத்திக்கு பேசியதெல்லாம் இவளுக்கு ஒரு பொருட்டே அல்ல.
இவன் இடையில் ஒரே ஒரு வரி… பழனி நாத்தனார்க்கு பரிந்து அம்மாவிடம் பேசியதுதான் புத்திக்குள் வண்டாய் குடைகிறது. பழனிக்கு நாத்தனார் என்ற வகையில் தான் இவன் பேசியது.
இத்தனை நடந்தபிறகும் அவளைப் பற்றி ஒரு வார்த்தை பேசியதற்கே பொருக்கமாட்டாமல் இவன் பரிந்து பேசுகிறானே. அந்தளவிற்கு அவள் மேல் விருப்பம் இருந்ததோ என்ற அலைக்கழிப்பு இவளுக்குள். மணமேடை வரை வந்தவள் மீது ஆசை இருக்காதா என்ற எண்ணம் அவளுக்கு.
இவனுக்கு தான் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டே சிரித்தான்.
“அச்சோ… ஏன் இப்படி சிரிக்கறீங்க. வெளியே யாராவது கேட்டா என்ன நினைப்பாங்க?” என்றாள் அடக்கிய குரலில்.
அவளது பயம் இவனுக்குள் சுவாரஸ்யத்தை உண்டு பண்ண,
“ஆமா… புடிச்சா தானே கல்யாணத்துக்கு சம்மதிக்க முடியும்” என்றவன் அவள் முகத்தையே உற்றுப் பார்த்தான். வேப்பங்காயைக் கடித்தது போல் முகம் அஷ்டகோணலாக மாறியது. உதடு மடித்து சத்தமில்லாமல் சிரித்தான் அவள் முகம் போன போக்கைப் பார்தது.
“கொடைக்கானலுக்கெல்லாம் போனீங்க தானே?” அதற்குள் அவளுக்கு அழுகையே வரும் போல. அவன் முகத்தையே பார்க்கவில்லை. பார்வை உள்ளங்கை மருதாணியையே ஆராய்ந்தது.
“ஆமா… ஃபோட்டோ ஷுட் கூட பண்ணினோமே” என்றான் அதே பாவனையில்.
கேட்டவளுக்கு கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது.
இவனுக்கு அழுவதா சிரிப்பதா எனத் தெரியவில்லை.
ஏழு வருடங்களுக்கு முன் நடந்தது. அதை நினைத்து இப்பொழுது கண்ணீர் சிந்துபவளை என்ன செய்வது. அவளது அழுகை பிடிக்கவில்லை. ஆனால் அழுகைக்கான காரணம் பிடித்திருந்தது.
“லயா!” என்றான் இளகிய குரலில்.
“இப்பவும் புடிச்சிருக்கு!” கண்களில் கர்வம் பொங்க சொன்னவனை புரியாமல் ஏறிட்டுப் பார்த்தவள் கண்களில் மட்டற்ற கோபம்.
“உன்னோட இந்த பொசசிவ்னஸ் புடிச்சிருக்கு.” கைகளை கட்டிக்கொண்டு கதவில் சாய்ந்து நின்றபடி கூறியவனைப் பார்த்தவள் கண்களில் கண்ணீர் பொங்கினாலும், சட்டென கோபம் குறைந்து அழுகைக்கும் சிரிப்பிற்கும் இடையில் இதழ்பிரியா குறுநகை ஒன்று எட்டிப் பார்த்தது. புறங்கை கொண்டு கன்னத்தை துடைத்துக் கொண்டாள்.
“பெரியவங்க பாத்து சொன்னது. அவங்களுக்குப் புடிச்சா நமக்கு ஓகேன்னு தான், பழனியும் நானும் சம்மதம் சொன்னோம். ஏற்கனவே ஒருத்தன மனசுல வச்சுக்கிட்டு எனக்கு சம்மதம் சொன்ன பொண்ணு மேல ஆசை இருக்கும்னு எப்படி நெனச்ச. பழனிக்காகத்தான் அவங்க கூட மறுபடியும் பேச்சு வார்த்தையே.” எத்தனை வருடங்கள் கடந்தாலும் அன்றைய நாள் அவமானத்தில் அவனது முகம் சுருங்க, அது பொறுக்கமாட்டாமல்,
“சாரி… ஏதோ ஒரு யோசனையில கேட்டுட்டேன். நீங்க இவ்ளோ ஃபீல் பண்ணுவீங்கனு எதிர்பாக்கல. ப்ளீஸ்…” என்று பார்வையால் இறைஞ்ச,
“இப்பவும் எனக்கான காதல் இந்த லயாவோட கண்லதான் தெரியுது. அன்னைக்கி ரயில்வே ஸ்டேஷன்ல பார்த்த அதே பார்வை. அதனாலதான் தட்டி தூக்கிட்டோம்ல” என்று காலரைத் தூக்கிவிட்டு சொல்ல, செல்ல முறைப்பு அவளிடம். பட்டென சிரித்துவிட அதே தெற்றுப்பல் சிரிப்பு எப்பவும் போல் அவனை வசீகரித்தது.
“அப்போ பெரியம்மா பேசினது உனக்கு வருத்தமில்லையா?” வாஞ்சையாகக் கேட்க,
“அதெல்லாம் எனக்கு வருத்தம் இல்ல. நீங்க தான் அதுக்கு சரியான பதில் கொடுத்தீங்களே?” என்று சொல்ல மெலிதாக சிரித்தான்.
சுகந்தியைப் போலவே இவளுக்கும் அவன் பேசியதே ஆறுதலாக இருக்க, யார் என்ன பேசினால் நமக்கென்ன என்ற முடிவுக்கு வந்திருந்தாள்.
ஆனால் அவன் இடையில், ரஞ்சனி பற்றி பேசியதைத்தான் எளிதாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
அவனுக்கு இப்பொழுது ரஞ்சனியை நினைத்து பச்சாதாபம் தானே ஒழிய வேறெதுவும் இல்லை.
“அப்போ எதுக்கு கண் கலங்குச்சாம்?”
“அது சும்மா… நேத்திலருந்து கலங்கிட்டுதான் இருக்கு!” என்றாள் ஒப்புக்கு.
காலையில் பெண் அழைப்பிற்கு மாப்பிள்ளை வீட்டார் வந்து இறங்கியதிலிருந்தே, அம்மாவையும் தம்பியையும் பார்க்கும் பொழுதெல்லாம் கண்கள் அவளையும் மீறி பொங்கிக் கொண்டு தான் வந்தது. இன்னும் சில மணி நேரங்கள் தான் பிறந்தவீட்டு உரிமை என்ற எண்ணம் வந்து தொண்டையடைத்தது.
ராகவனும் அதற்கேற்றார்போல் இரண்டு நாட்களாகவே, அவளை ஏதாவது சொல்லி சீண்டிக் கொண்டே இருந்தான். அவள் கண் கலங்குவதைப் பார்த்த பிறகு தான், பின்னாடியே வந்து மன்னிப்பு கேட்டான். அவனை சுற்றலில் விட்டே சமாதானமானாள்.
ஆனால், சாமி கும்பிட்டு பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிவிட்டு, வீட்டை விட்டு கிளம்பும் முன் ஒரு மூச்சு எல்லோரையும் அழவைத்து விட்டுதான் படியிறங்கினாள். இவளே தேவலாம் என்றிருந்தது ராகவன் அக்காவைப் பிரிய முடியாமல் அழுதது. அவனைப் பார்த்துதான் அக்கம் பக்கத்தினர் கூட கண் கலங்கினர்.
“நாங்க கல்யாணம், காதுகுத்துனு எந்த சொந்தக்காரவங்க விசேஷத்துக்கும் போனதில்ல. அம்மா, அப்பா ரெண்டு பேரும் இல்லாததால ரெண்டுபக்க சொந்தமும் பெருசா என்னைக் கண்டுக்கல. சித்தி வீட்டுப் பக்கம் ஏதாவது விசேஷம்னா அவங்க மட்டும் போய்ட்டு வருவாங்க. அவங்கள சித்தின்னு சொன்னாலே கோபம் வரும்!” என்றாள் புன்னகையோடு இப்பொழுது அவனை நன்றாக நிமிர்ந்து பார்த்து.
“நானும் முதல் தடவை பாத்தப்போ உனக்கு அக்கா மாதிரி இருக்காங்களேன்னு தான் நெனச்சேன்” புன்னகையோடு கூற,
“ஹலோ! இப்போ என்ன சொல்ல வர்றீங்க. அம்மா இளமையா இருக்காங்களா. இல்ல நான் முத்தின கத்திரிக்காய் மாதிரி இருக்கேனா?” நீங்க சொன்னதுக்கு ரெண்டு அர்த்தம் இருக்கு!” இப்பொழுது அவன் மீது கோபப்பட அடுத்த காரணம் கிடைக்க, முதல் காரணம் முக்காடு போட்டுக் கொண்டது.
இடுப்பில் கையூன்றி கேட்டவளைப்பார்த்தவனுக்கு சிரிப்பு தான் இப்பொழுதும்.
அவளது கவலைக்கான காரணம் பெரியம்மா பேசியதல்ல எனத்தெரிந்துவிட, “நான் கெளம்புறேன்” என்று வெளிசெல்ல திரும்பி கதவில் கை வைத்தவனை சட்டென கையைப் பிடித்து பின்னுக்கு இழுத்து நிறுத்தினாள்.
கிட்டத்தட்ட இருவரும் முட்டிக் கொள்ளும் நிலை. மிக அருகில் அவளது பூ முகம் பார்த்தவனுக்குள் இனம்புரியா உணர்வுப் பேரலை. சட்டென சுதாரித்து கையை எடுத்துக் கொண்டவள்,
“அங்கே பல்லி” என கண் காட்டினாள்.
அவன் கை வைத்திருந்தால் கை மேல் விழுந்திருக்கும். சட்டென இழுத்த அரவத்தில் அது எங்கோ ஓடி ஒழிந்தது.
“ச்சே… ஒரு ரொமான்ஸ் சீன் மிஸ்ஸிங்” என்றான் குறும்பாக.
அவள் புரியாமல் புருவம் குறுக்க,
“இதுவே நீயாயிருந்தா, வீல்னு கத்தி, துள்ளிக் குதிச்சு என் மேல விழுந்து, கட்டிப் புடிச்சு, அப்படி இப்படின்னு ஒரு ரொமான்ஸ் சீன் கிரியேட் பண்ணிருக்கலாம்” அவன் பாவமாய் முகத்தை வைத்து சொன்ன விதத்தில் இவளுக்கு சிரிப்பு வர,
“ஹலோ பாஸ்! இன்னும் எத்தனை நாளைக்கு தான் பல்லி, கரப்பான் பூச்சி தயவுல ரொமான்ஸ் பண்ணுவீங்க. சொந்தமா ஏதாவது யோசிங்க பாஸ்” என்றாள் குரலில் குறும்பு கொப்பளிக்க.
“ஹலோ மேடம்! கரப்பான்பூச்சி இல்லைனா சினிமா, கதைகள்ல எல்லாம் ரொமான்ஸ் கிரியேட் பண்ணவே முடியாது!”
“பொண்ணுக நாங்க சொன்னோமா? பல்லி, கரப்பான் பூச்சியெல்லாம் எங்களுக்கு பயம்னு!”
“அப்போ அதெல்லாம் உனக்கு பயமில்லயா?”
“ப்ச்ச்… ப்ச்ச்…” கண்களை மூடி மறுப்பாக தலையசைத்தவளிடம், சட்டென மூச்சுக் காற்று உரசும் தூரத்தில் ஒட்டி நின்றான். கண்களைத் திறந்தவளுக்கு கண் முன் அவன் முகம் பார்க்க, கப்பென மூச்சே நின்றுவிட்டது. அதிர்ச்சியில் அகன்று விரிந்த விழிகளில் அப்பட்டமாக அச்ச ரேகை ஓடியது. அவனது இதயத்துடிப்பும் அவளுக்கே கேட்டது. அவளைப் பயமுறுத்த ஒட்டி நின்றானே ஒழிய, அதன் பிறகுதான் தான் செய்த காரியத்தின் வீரியம் புரிந்தது. மூச்சுக் காற்று அனலடிக்க, பட்டென சுதாரித்து விலகியவன், அவசரமாக திரும்பி கதவில் கை வைத்தான்.
சட்டை காலரைப் பிடித்து இழுத்து நிறுத்தினாள். என்னவென்று பார்த்து நின்றவன் தாவாயில் எக்கி இதழ் பதிக்க, இவனுக்குதான் இதயம் அமளிதுமளி பட்டது.
அவள் இழுத்ததில் மீண்டும் பல்லியோ என்ற எண்ணத்தில் அவள் மீது மோதிவிடாமல் இருக்க, கைகளை பக்கவாட்டில் தூக்கி நின்றவனுக்கு, இப்பொழுது கைகளை இறக்கும் சுரணை கூட இல்லை. பாதம் காற்றில் மிதந்தது.
“இது எதுக்கு தெரியுமா? நம்ம சொந்தமெல்லாம் இனிமே அவங்களுக்கும் சொந்தம் தானம்மான்னு அத்தைகிட்ட, எங்களுக்காக பேசினதுக்கு. எங்களுக்கு ஃபோன்ல மட்டுமில்ல. நேர்லயும் தைரியம் தான்” என்றவள் குரல் தளுதளுத்தாலும், அதில் சரசமும் சரிவிகிதத்தில் விரவியிருந்தது.
அப்படியென்றால் பெரியம்மா பேசியதும் இவளை பாதித்திருக்கிறது. தெரிந்தால் வருத்தப்படுவேன் என எனக்காக அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என மறுத்து மலுப்பியிருக்கிறாள்’ என்பது புரிந்தது.
தன்னிலைக்கு வந்தவன், குனிந்து அவள் பிறை நுதலில் இதமாக இதழ் பதித்தான். அண்ணாந்து விழிகள் அவனையே பார்த்திருக்க, அவனது மூச்சுக்காற்று நெற்றி வியர்வை உலர்த்தியது.
புன்னகையோடு ஆறுதலாக கன்னத்தை தட்டிவிட்டு கதவைத் திறந்து வெளிவர, ராகவன் கதவைத் தட்ட கை ஓங்கியபடி எதிரில் நின்றான். முதலில் திகைத்தவன் அவனை நிலைப்படுத்திக் கொள்ளவேண்டி, மச்சானது கன்னத்தை செல்லமாக நிமிண்டிச் சென்றான்.
அதிர்ந்து அவன் அருகில் வந்த மற்ற இரண்டு மச்சான்களும் ஆளுக்கொரு பக்கம் ராகவனது தோளில் கை போட்டு, “இதென்னடா ராகவா… சத்யராஜ் மாதிரி புஜுக்… புஜுக்… பண்ணிட்டு போறாப்ல!” என்று கேட்டு சிரிக்க, அக்காவிற்கு வராத வெட்கம் கூட ராகவனுக்கு வந்தது.
அடுத்த சிறிது நேரத்திற்கெல்லாம் அழகு நிலையப் பெண் அவளை சிறகில்லா தேவதையாக அலங்கரித்து மேடைக்கு அழைத்துவர, பார்த்தவன் றெக்கையில்லாமல் வானத்தில் மிதந்தான். நல்ல நேரத்தில் சம்பந்திகள் தட்டு மாற்றிக் கொண்டு, நிச்சயப்பட்டு மேடையில் வைத்து வழங்கப்பட, வெள்ளிநிற சரிகை வேலைப்பாட்டுடன் கூடிய, இளம் நீல நிற பார்டர் வைத்த இளம் தளிர் பச்சைநிறப் பட்டுப்புடவையை மாற்றிக்கொண்டு மறுபடியும் மேடையேறியவளை கண்கள் மின்ன பார்த்து வைத்தான்.
செஞ்சாந்து குழம்பெடுத்து
தீட்டி வைத்த சித்திரமே
தென்பாண்டிக் கடல் குளித்து
கொண்டு வந்த முத்தினமே
தொட்டாலும் கை மணக்கும்
தென்பழனிச் சந்தனமே
தென்காசித் தூரலிலே
கண் விழித்த செண்பகமே
பெண்ணாக பிறந்த பல்லாக்கு நீயோ
ஈரேழு உலகில் ஈடாக யாரோ
நெஞ்சோடு கூடு கட்டி கூவும் குயிலோ…
பாத கொலுசு பாட்டு பாடி வரும் பாடி வரும்…
மோதிரம் மாற்றி நிச்சயம் முடிந்தது.
வந்தவர்கள் பந்திக்குச் செல்ல, சாப்பிட மறுத்து அங்கே ஒருவர் பிரச்சினை பண்ணிக் கொண்டிருந்தார்.
என்னவென்று பார்த்தியும், சீனியும் அங்கு விரைய, “என்னை மேடைக்கே கூப்பிடல்ல. நானும் ஒரு வகையில அவனுக்கு தாய் மாமாதான்” என்று சண்டைக்குத் தயாராக…
“எத்தனை மாமனுங்கடா? இந்த சடங்கு சம்பிரதாயமெல்லாம் எவன்டா கண்டுபிடிச்சது?” வெளியே சொல்லமுடியாமல் அலுத்துக்கொண்டான் பார்த்தி.
ஒரு வழியாக அவரை சமாதானம் செய்து, பந்திக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கே பழனியை சாப்பிட விடாமல் இலையோடு சேர்த்து இலையிலிருந்த பதார்த்தங்களை எல்லாம் பதம் பார்த்துக் கொண்டிருந்தான் அவளது தவப் புதல்வன்.
பழனியிடம் சென்று மகனை தூக்கிக் கொண்டான். இலையில் இருந்த இனிப்பை இலேசாக பிட்டு மகன் வாயில் வைக்க எச்சில் ஒழுக சப்புக் கொட்டினான்.
மணமக்களை மேடையில் வைத்து பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார் ஃபோட்டோ கிராஃபர். இதுதான் இவர்களுக்கான ப்ரீ வெட்டிங் ஷுட்.
*****
“எப்படியாவது அந்த பையன பேசி முடிங்க. உங்க மனம்கோனாம கமிஷன் கிடைக்கும்.”
இலக்கியாவின் தாய்மாமன் மனைவி, கலையரசியின் சித்தப்பா மகளிடம் கோரிக்கை வைத்தார்.
பூ வைத்த அன்றே, அங்கிருந்த இலக்கியாவின் மாமன் மகளைப் பார்த்து சாதகம் கொடுக்கவா என விசாரித்தார். இவர்கள் தான் பேங்க் ஆஃபிசர் ராகவனுக்கு அப்பொழுது அடி போட்டார்களே. இங்கு வந்து நேரில் பார்த்தபிறகு, இவளுக்கே இப்படியாப்பட்ட இடம் கிடைத்திருக்கிறது என்றால் நம்ம மகளுக்கும் இவர்கள் வழியில் பார்த்தால் என்ன எனத் தோன்றியது.
ராகவனுக்கு சொந்த வீடு கூட இல்லை. இப்போதைக்கு அரசாங்க உத்யோகம் ஒன்று தான் பிரதானம். அதுவும் சம்பளம் படிப்படியாகத்தான் உயரும். இங்கு வந்து பார்த்தபிறகு அவர்களுக்கு மனம் மாறிவிட்டது.
உறவுமுறை பற்றியெல்லாம் விசாரித்து தெரிந்து கொண்ட பிறகுதான், நல்ல வாட்டசாட்டமாக வசதி வாய்ப்புகளோடு பார்த்தசாரதி இவர்கள் கண்ணில் பட்டான்.
கலையரசியின் சித்தப்பா மகளை அணுகினர்.
பெருமாள்சாமியிடம் விபரத்தை கூற, “இலக்கியா சொந்தமா” என சற்றே இழுத்தார்.
அவரைப் பொறுத்தவரை அவர்கள் வசதிக்கு இந்த சம்பந்தம் கொஞ்சம் கீழதான். அவர்களுக்கு ஒத்துப் போயிற்று. நமக்கென்ன என நினைத்திருந்தார்.
இவர்கள் நல்ல வசதி, அந்தக்காலத்துலேயே இலக்கியா அம்மாவிற்கு வீடு சீர் கொடுத்துள்ளார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள் என்று இரண்டு மூன்று பிட்டுகளை அய்யாசாமியிடம் சாரி பெருமாள்சாமியிடம் சேர்த்து போட்டார். தரகு வேலை பார்ப்பவர்களுக்கு வாய் சாமர்த்தியம் தானே.
மகனது காதல் விவகாரம் தெரிந்தவர், எங்கே அவனாக முடிவெடுக்கும் முன் நாம் பேசிவிடுவோம் என, சாதகம் கேட்டு சரி கொடுத்தார்.
அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் மக்களே!

Nirmala vandhachu 😍😍😍
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்🎉🎊
வாழ்த்துக்கள் மா 💐 மிக்க நன்றி மா 🥰🍫
Welcome dear 🥰
Thank you Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Next update eppo ma
இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்ல கஷ்ட்டமா இருக்கு நிம்மி மா. சாய்ஸ்ல விட்டுறவா 😉😂
Permission granted ma😌😌😌😉😉😉
Superb
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Nan solala,Ivan Adhuku ellam seri patu vara matanu…..romba nala payana valathurkanga.
இப்படியே கட்டிக்கப் போறவகிட்டயும் கண்ணியம் பாக்கட்டும். இவனைக் நல்லவன்னு சொல்லி கெடுக்கறது உங்கள மாதிரி ஆளுங்கதான்😉😉🤣🤣😏😏
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Athellam summa poondu vilayaduvan enga thanga katti…
பாக்கதானே போறோம்… 😏😏😏😏😏😏