நெஞ்சம் மறப்பதில்லை 20

“ஆதியா! இன்னைக்கி சூர்யா சர் வர்றாருப்பா! இவரென்ன கெஸ்ட் ரோல் மாதிரி அப்பப்ப வர்றாரு?” தனது கேபினில் அமர்ந்தவாறே நந்தினியின் அறிவிப்பை காதில் வாங்கினாலும் ஆதியா நிமிர்ந்தும் பார்க்கவில்லை.

அலுவலகத்திற்குள் நுழைந்தவன், அனைவரின் காலை வணக்கத்திற்கும், சிறு புன்னகையுடன் தலை அசைவை பதில் ஆக்கியவன் தோற்றம், நான் எதிலும் பெர்ஃபெக்டாக்கும் என்று காட்டியது. லேப்டாப் பேக்கை மார்பின் குறுக்காக போட்டுக்கொண்டு, ஃபார்மல் சூட்டில், தேர்ந்த மாடல் போல் கால் வீசி நடந்து வந்தான்.

அவளவன் வருகை அவளுக்கு தெரியாதா என்ன? இனிமேல் இந்த அலுவலகம் பக்கமே வரக்கூடாதென்று முடிவு எடுத்தவன் ஒருவாரம் கழித்து இன்று மீண்டும் வந்திருக்கிறான்.

கண்களில் கண்ணாடியை உள்ளே வந்தும் கழட்டவில்லை அவன். கண்ணாடியினூடே அவன் பார்வை ஆதியா இருந்த கேபினுக்கு தான் தாவியது. ஆலிவ்க்ரீன் காட்டன் சுடிதாரில், அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் கர்மமே கண்ணாக இருந்தாள். இல்லையில்லை இருப்பதாகக் காட்டிக் கொண்டிருந்தாள்.

அவன் செல்வதையே பார்த்துக் கொண்டிருந்த நந்தினி, “ஆதி! இவரே இவ்ளோ ஹேன்ட்சம்மா இருக்காரே? ஒய்ஃப் எப்படியிருப்பா? ஆமா… முதல்ல இவருக்கு கல்யாணமாயிருச்சா?” என தனது வழக்கமான வேலையை அவளிடம் காண்பிக்க,

“ஆரம்பிச்சிட்டியா? ஏன்‌? ஜாதகம் வேணுமா?” என ஆதியா கேட்க,

“எதுக்கு?”

“இல்ல… பொண்ணுகிண்ணு பாத்துச் சொல்லப்போறியோ என்னவோன்னு கேட்டேன்.”

“நல்ல ஐடியா ஆதி! இப்ப இதுதான் நல்ல பிஸினஸ்‌ தெரியுமா? ஜாதகம் கொடுத்தாலே கமிஷன். அதுக்கு பின்னாடி பொண்ணு பாக்க ஒன்னு, கல்யாணம்‌ முடிவாச்சுனா ஒன்னுனு அததுக்கு தனித்தனியா கமிஷன் தெரியுமா?”

“என்ன நந்தினி அனுபவமா?”

“ஆமாப்பா! இப்பதான்‌ என் தங்கச்சிக்கு பாத்துகிட்டு இருக்கோம்.”

“ஓ! அதான் சூர்யா சாரை பாத்ததும் மாப்பிள்ளை நினைப்பு வந்திருச்சாக்கும்.”

“அவங்க தகுதிக்கெல்லாம் நாம பாக்க முடியுமா? பணம் பணத்தோடுதான் சேருங்கற மாதிரி பாப்பாங்க. அரசி மசாலாவுக்கு ஈக்வலா ஒரு அரசன் மசாலா இல்ல பாப்பாங்க.”

“ஏன்? நாமெல்லாம் ஈடாகமாட்டோமா?” என்று கிண்டலாக ஆதியா‌ கேட்க,

“அதெல்லாம் ஆகாயக்கோட்டை ஆதி. தகுதின்னு ஒன்னு வேண்டாமா?”

‘இப்படி கேட்டவளைத்தான் இழுத்துட்டுப் போயி தாலி கட்டியிருக்காங்க.’ என்று நினைத்தவள் உள்ளூர சிரித்துக் கொண்டாள்.

“நந்து… அவங்களைப்பாத்தா அப்படியெல்லாம் நினைக்கிற மாதிரி தெரியலையே…” என்று‌ இழுத்தவளை,

“ஆதி! நீ நிறைய நாவல் படிப்பியா?” என நந்தினி கேட்டாள்.

அவள் யோசனையாக, “ஏன்…!” என இழுக்க,

“ஏன்னா… அதுல தான்‌ இந்த மாதிரி கதையெல்லாம் எழுதுவாங்க. பிஏ வை லவ்பண்றது, வீட்டுல வேலை பாக்குற பொண்ணை லவ்பண்றதுனு வரும்.” என்றாள் நந்தினி.

“ஏன் இந்த மறதிக்கேசு கதையெல்லாம் படிச்சது இல்லையா? படிச்சிருந்தா முடிவு என்னனு சொல்லு. தெரிஞ்சுக்கலாம்.” என்றவளை தனது கேபினிலிருந்து ரோலர் சேரை இழுத்தவாறு எட்டி பார்த்தவள்,

 “இனிமே தேடிப்பாக்குறேன்.” என்றாள்.

தனது அறைக்கு சென்றவன் மனம் மீண்டும் மீண்டும் அவளையே தேடியது. அன்று அவளை சந்தித்துவிட்டு வீடு சென்றவன், என்ன முயன்றும் அவனால் அவள் முகத்தை மனக்கண் விட்டு அகற்ற முடியவில்லை. எங்கும் நிறை பரப்ரம்மம் போல், எதிலும் மனம் ஈடுபட முடியாமல் அவள் நினைவே ஆட்கொண்டது. தன்மேலே அவனுக்கு கோபம் வந்தது. அதெப்படி? அடுத்தவன் மனைவி மீது இந்தளவுக்கு மனம் ஈடுபடலாம் என்ற‌ ஆதங்கம் வேறு. அந்த அளவிற்கா தனது மனம் தரம் தாழ்ந்து விட்டது என்ற நினைப்பே அவனை வேதனைப்படுத்தியது.

இதுவரை ஏதோவொரு வெறுமை உணர்வு ஊவாமுள்ளாய் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது. எதையோ இழந்த உணர்வு அவனுக்குள் ஆட்டிப்படைக்க, இழந்ததும் எதுவென்றே தெரியாமல் தவித்தவனுக்கு, அவளது முகம் அவ்வெறுமையைப் போக்கியது. இதுநாள் வரை மூளைக்குள் இறுக்கிக் கட்டிய கயிறென இறுக்கிப் பிடித்த ஏதோ ஒன்று பட்டென்று விடுபட்ட உணர்வு அவளைப் பார்த்ததில் இருந்து.

‘சூர்யா! இது நல்லதுக்கில்ல! தேவை இல்லாம மனசை அலைபாய விடாதே. அவளென்ன அவ்ளோ பெரிய அழகியா? அடுத்தவன் பொண்டாட்டினு கூட தெரியாம இம்ப்ரஸ் ஆகறதுக்கு.’ என்று மனசாட்சியிடம் கேள்வி கேட்க,

அது, ‘ஆமாம்.’ என்றது.

‘என்ன பெரிய அழகி! கண்ணு கொஞ்சம் பெருசா இருக்கு. அதனால அழகாத்தெரியுது. ஒத்தக்கல்லு மூக்கியத்தோட மூக்கு கொஞ்சம் முத்தம் கேக்குற மாதிரியிருக்கு. உதடு கொஞ்சம்… இந்த கவிஞர்கள்லாம் சொல்ற மாதிரி ஆரஞ்சு சுளைமாதிரி இருக்கு. ஆனா பின்ங்க் கலருல இருக்கு. கலரு கொஞ்சம் மஞ்சளும் இல்லாம சந்தனக்கலரும் இல்லாம ரெண்டுங்கெட்டானா இருக்கு. உடம்பு கொஞ்சம், ஜீரோசைஸ் ஃபிகர்னு இல்லாம பூசுனமாதிரி இருக்கறதுனால, மத்தது எல்லாம் எடுப்பா கொஞ்சம் தாராளமா இருக்கு.’ என்று சொல்லிக்கொண்டே போக,

‘டேய்…டேய்…‌ கொஞ்சம் கொஞ்சம்னே கொஞ்சுற அளவுக்கு பாத்திருக்கியேடா! நீ சொல்றதை எல்லாம் பாத்தா அடுத்தவன் பொண்டாட்டியப் பாத்த மாதிரி தெரியலியே. உன் பொண்டாட்டியப் பாத்த மாதிரியே இல்ல, மேலேயிருந்து கீழேவரை பாத்திருக்கே.’ என்று துப்பாத குறையாக மனசாட்சி கேள்வி கேட்டது.

அதை அடக்க வழிதெரியாமல் நண்பர்களை அழைத்துக் கொண்டு பார்ட்டிக்கும் சென்று வந்தான். இரவு வெகுநேரம் கழித்து வந்தவனை மங்கையர்க்கரசியின் பார்வை வித்யாசமாகப் பார்த்தது. இப்பொழுது எல்லாம்‌ மகனை சற்று உண்ணிப்பாய் கவனிக்கிறார். அவருக்கு தான் தெரியுமே. ஆதியா நாதன் ஆஃபிஸில் தான் வேலை பார்க்கிறாள் என்று. அவளை சந்தித்த பின் மகனின் மனநிலை என்னவென்று கூர்ந்து கவனிக்கிறார். 

மனதை அலைபாயவிடாமல் இருக்க எப்பொழுதும் ஏதாவது ஒரு வேலை இருப்பது போல் ஏற்பாடு செய்து கொண்டான். ஆனாலும் இரவு என்று ஒன்று வருமே. குளிர்நிலவும், வாடைக்காற்றும் தன்னியல்பு மாறி எதிர்மறையாக வேலை செய்து நெடுநல்வாடையாகிப் போகும் என்றா நினைத்தான்.

 விஷ்வாவிடம் இதுபற்றி பேசலாம் என்றால், அவன் மனசாட்சியைவிட கேவலமாகத் திட்டுவானே என்று எண்ணிக் கொண்டான். அடக்க நினைப்பது தான் ஆணவம் கொண்டு ஆடும். எனவே அதை கடக்க நினைத்தான். அவளை நினைக்கக் கூடாது என்று எண்ணியே எந்நேரமும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம் என்பதை அறிந்தான். இனிமேல் இங்கு வரக்கூடாது என்றவனது, வைராக்கியம் பிரசவ வைராக்கியமாக மாறி அடுத்த வாரத்திலேயே அவனை அலுவலகம் வரச் செய்தது.

எதைத் தின்றால் பித்தம் தீரும் என்று அலுவலகம் வந்தவனுக்கு, அவள் நிமிர்ந்தும் தன்னைப் பார்க்கவில்லை‌ என்பதே கோபத்தை உண்டாக்கியது. ‘அப்படியென்ன சின்சியரா வேலை பாக்குறாங்களாமா?’ என்று நினைத்தவன் அவளை இன்டர்காமில் உடனே அழைத்தான். 

அனுமதிகேட்டு உள்ளே வந்தாள்.

“குட்மார்னிங் சார்.” என்றவளை நிமிர்ந்துகூட பார்க்காமல், தனது கைபேசியில் பார்வையைப் பதித்திருந்தான்.

“விஷ் பண்ணனும்கற மேனர்ஸ் எல்லாம் தெரியுமா?” என்றான் நிமிர்ந்து பார்க்காமலேயே..

“சார்…” என்றாள் குழப்பமாக.

“அப்ப… நான் வரும்போது கவனிக்கலியோ?” என்றான்.

இப்படியெல்லாம் சில்லியாக வேலை பார்ப்பவர்களிடம் கேள்வி கேட்பவன் கிடையாது. அவள் பார்வை தரிசனம் கிடைக்காத கோபம் அவனுக்கு.

“சார்… உங்க தாத்தா தான் உங்க சின்சியாரிட்டிய வேலைல மட்டும் காமிங்கனு சொன்னாங்க.” என்றாள்.

“அவரு அந்தக்கால மனுஷன். பெருந்தன்மையா சொல்லியிருப்பாரு.” என்றான்.

‘இவரு கேக்கறது தான் அந்தக்கால மனுஷங்க மாதிரி இருக்கு.’

என்று நினைத்தவள், “சாரி சார்.” என்றாள்.

அப்பொழுது கதவு தட்டப்பட,

“யெஸ்.” என்றான்.

கதவைத்திறந்து கொண்டு ராகவன் உள்ளே வந்தான்.

“குட்மார்னிங் சார்.” என்றான்.

“மார்னிங் ராகவன். உட்காருங்க!” என்றவன், “நீங்களும் தான்.” என்றான், இன்னும் நின்று கொண்டிருந்த ஆதியாவைப் பார்த்து.

“குட்மார்னிங் ஆதி!”

ராகவன் அவள் பக்கமும் பார்வையை ஓட்டியவாறே கூற, சரியாக இருந்த துப்பட்டாவை சரிசெய்து கொண்டே சிறு தலையசைவைப் பதிலாக அளித்தாள். ராகவனின் ஆதி என்ற அழைப்பில் முகம் இறுகியதென்னமோ சூர்யாவுக்கு தான். அவனது முகமாற்றத்தைப் பார்த்தவாறு அமர்ந்தவள், ‘ஒருவேளை நம்ம தலைய மட்டும் அசைச்சதால இதுக்கும் மேனர்ஸ் இல்லைனு திட்டுவாரோ?’ என நினைத்தாள்.

“சார்… இன்னைக்கி போகவேண்டிய லோடோட டீடெய்ல்ஸ். அப்புறம் இருக்கிற ஸ்டாக் டீடெய்ல்ஸ்ம் இருக்கு. இன்னும் நமக்கு ஆட்கள் தேவைப்படுறாங்க சார். நீங்க வந்தபின்னால ஆர்டர்ஸ் அதிகமாகியிருக்கு. பேக்கிங் ஆளுங்க கம்மியா இருக்காங்க சார்.” என்றான் ஃபைல்களை அவனிடம் நீட்டியவாறே.

அதை ஆதியாவிடம் கொடுத்தவன், “இதையெல்லாம் சிஸ்டம்ல ஏத்திருங்க! அப்புறம் ஆள் எடுக்கவும் ஏற்பாடு பண்ணிருங்க.” என்றான்.

“ஓகே ராகவன். நீங்க போகலாம்.” என்றான் அவன் பார்வை மீண்டும் அவள் மீது படிவதை விரும்பாதவனாய்.

“ஓ.கே.சார்.” எனக் கூறிக் கொண்டு ராகவன் வெளியேற,

அவன் சென்றவுடன், “சார்! இதுக்கும் திட்டாதீங்க. அவருக்கெல்லாம் தலையை மட்டும் ஆட்டினதே பெரிய விஷயம். அதுக்கும் மேனர்ஸ் எங்கேனு கேக்காதீங்க!” என்றாள் வேகமாக.

“இப்ப நான் அதைப்பத்தியே கேக்கலியே. இவரு இப்படித் தான் எல்லோருடைய பேரையும் சுருக்கி கூப்பிடுவாரா?” புருவம் சுருக்கி சூர்யா கேட்க,

“ஏன் சார்? சுருக்கக் கூடாதா?” காரணம் அறியும் ஆவல் அவளுக்குள் குறுகுறுப்பாக.

“அது உரிமைப்பட்டவங்க மட்டும் தான் அப்படிக் கூப்பிடணும். மத்தவங்க மரியாதை கொடுத்து கூப்பிடணும்.” என்றான்.

ராகவன் தன்னை அவ்வாறு அழைத்தது பிடிக்கவில்லையோ என்று நினைத்தவளுக்கு அந்த நினைவே தித்திப்பாயிருக்க,

‘ம்க்கும். இதுக்கேவா? ஓவரா இமாஜின் பண்ணாதே!’ என்று மனசாட்சி தலையில் தட்டி நினைவூட்டியது.

“அடுத்த வாரம் ஆடிட்டிங் இருக்குனு தெரியும்ல? ஆனா இன்னும் நிறைய ஃபைல்ஸ் டேலி பண்ணாம இருக்கே.” என்றான் தனது லேப்டாப்பில் பார்வையை ஓட்டியவாறே.

“அதுக்குள்ள முடிச்சுறலாம் சர்.” என்றாள்.

“எப்படி முடிப்பீங்க? நிமிரக்கூட நேரம் இல்லைங்கற மாதிரி வேலை பாக்குறீங்க. ஆனா இன்னும் இவ்ளோ பென்டிங் இருக்கு. ஆனா மத்தவங்களுக்கு தலையை மட்டுமாவது ஆட்டணும்னு தெரிஞ்சிருக்கு. ம்ம்ம்.”

‘இப்ப இவரோட பிரச்சினை என்ன? இவருக்கு விஷ் பண்ணாததா? அவனுக்கு தலையாட்டினதா? இல்ல… வேலை பென்டிங் இருக்கறதா? சந்தைக்கு போணும். ஆத்தா வையும்ங்கற ரேஞ்சுலயே முதலிலிருந்து ஆரம்பிக்கறாரே.’ என்று மண்டை காய்ந்தாள்.

அவளிடம் பதில் இல்லாமலிருக்க, நிமிர்ந்து பார்த்தவன், “எக்ஸ்ட்ரா டைம் எடுத்தாவது இன்னும் ரெண்டு நாள்ல முடிச்சிருங்க.” என்றான்.

“யெஸ் சார்.” என்று எழுந்தவளிடம்,

“அடுத்தவங்களை அதிக உரிமை எடுத்துக்க விடாதீங்க, உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்.” என்றான்.

‘அதுக்கு எத்தனை தடவை சொன்னாலும் புரியாது. இவரு என்னடான்னா ஒரு தடவைக்கே காண்டாகுறாரு.’ என்று நினைத்தவள், சட்டென

‘ஆஹா! எங்கேயோ லைட்டா புகையுதே. தான் ஆடாட்டாலும் தன் தசையாடும்கற மாதிரி, பொண்டாட்டி நினைப்பு இல்லைனாலும், அடுத்தவன் பார்வை படும்போது பொறாமை வருதே.’ என்று சந்தோஷப்பட்டாள்.

“பொதுவாகச் சொன்னேன்.” என்றான், அந்த சந்தோஷத்தை நீட்டிக்க விடாமல்.

“நோட்டீஸ் போர்டுல போட்டுறவா சார்?” என்றாள் அவளும் கடுப்பாகி.

அவன் புரியாமல் பார்க்க, “இப்ப நீங்க பொதுவாகன்னு சொன்னதை எல்லாரும் தெரிஞ்சுகிட்டுமேனு கேட்டேன்.” என்றாள். 

தன்‌ மீது அக்கறை காட்டுகிறான்‌ என்று அவள் நினைத்திருக்க, அவன் பொதுவாக என்று கூறியதும் மிளகாயின் நெடியாக கோபம் மூளைக்குள் சுருசுருவென ஏறியது. பொண்டாட்டியாக்கும்.

அதே கோபத்தோடு வெளியே வந்தவள், தன் எரிச்சலைக் கணினி தட்டச்சுப் பலகையில் தடதடவென காண்பித்தாள்.

அனைவரும் அலுவலக நேரம் முடிந்து கிளம்ப, “ஆதி! கிளம்பலயா?” நந்தினியின் குரல்.

“இல்லப்பா! இன்னும் கொஞ்சம் டேலி பண்ண வேண்டியது இருக்கு!” எனக் கூற,

“நான் வேணும்னா இருக்கவா? வேலை முடியவும் கிளம்பலாம்!”

“ஏன் நந்து? இன்னைக்கு தான் வீக் என்டுனு அண்ணன் உனக்காக வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. நீ என்னடான்னா எனக்காக வெயிட் பண்றேன்கறே?” எனக்கேட்டு ஆதியா சிரிக்க,

“இல்லப்பா.‌ நீ தனியா இருக்கியேன்னு‌ பாத்தேன்.”

“நீ கிளம்பு நந்து.‌ இந்த ஒரு ஃபைல் தான். சீக்கிரம் முடிச்சுட்டு நானும் கிளம்பிறுவேன். மீதியை நாளைக்குப் பாத்துக்கலாம்.”

“அப்ப சரி.‌ நான் கிளம்பறேன்.” என்று நந்தினி கிளம்பி விட்டாள்.

தன் வேலையில் கவனமாக இருந்தவளை ராகவனின் குரல் கலைத்தது.

“என்ன ஆதி! இன்னும் கிளம்பலையா? கீழே உங்க ஸ்கூட்டியைப் பாத்தேன்.” என்றான். 

அவளது வண்டியைப் பார்க்கிங்கில் பார்த்தவன், ஆதியா தனித்து இருப்பாள் என எண்ணிக் கொண்டு வந்தான். 

ஆனால் எம்.டி. அறையில் சூர்யா இருப்பதும் கண்ணாடிக் கதவுவழி தெரிந்தது. இவள்‌ இன்னும் கிளம்பவில்லை எனத் தெரிந்து அவனும் கிளம்பவில்லை. ஆர்வக் கோளாறில் ராகவனுக்கு, ஆதியாவின் ஸ்கூட்டி தெரிந்தது பார்க்கிங்கில் நின்றிருந்த சூர்யாவின் கார் தெரியவில்லை. சந்தர்ப்பம் தேடி வந்தவனின் வேகம் எம்.டி. அறையைப் பார்த்ததும் குறைந்தது.

வேலை முடிய தனது‌ மேஜையை ஒதுங்க வைத்தவாறு எழுந்தவள், கதவு வழியாக சூர்யாவின் பார்வை தங்களையே கவனிப்பது தெரிய,

“நீங்க இன்னும் கிளம்பாம என்ன பண்றீங்க ராகவன்?” என்றாள் சற்றே சிரித்த முகமாக.

“இப்ப தான் மிளகாய் லோடு வந்தது. அதை சரிபார்த்து குடவுன்ல இறக்கிட்டு வர்றேன்.” என்றவன், அவளின் மில்லி மீட்டர் சிரிப்பிற்கே, தனது பல்வரிசை அத்தனையும் காட்ட, ஆதியாவோ அவனை நான்காம் நாள் விருந்தாளியைப் போல் வேண்டா வெறுப்பாகப் பார்த்து வைத்தாள்.

உள்ளிருந்து பார்த்தவனுக்கோ, அவளது மூளைக்குள் அவன் ஏற்றிய மிளகாய்க்காரம், இப்பொழுது அவன் கண்களில் காந்தியது.

அவனும் விரைவாக தனது பேக்கை எடுத்துக் கொண்டு வெளிவர, மூவருமே சேர்ந்தே வெளியேறினர். 

பார்க்கிங்கில் தனது காரின் அருகில் சென்றவன்,‌ ஆதியா தனது ஸ்கூட்டியைக் கிளப்பும் வரை‌ சற்று நிதானித்தான். 

ஸ்கூட்டியில் சாவி நுழைத்து முடுக்க, அது என்னவோ செல்ஃப் ஸ்டார்ட் ஒர்க் ஆகாமல் மக்கர் பண்ணியது. சரி கிக்கரில் ஸ்டார்ட் செய்யலாம்‌ என முயற்சி செய்ய அதுவும் அவளிடம் சில உதைகள் வாங்கியும் போக்குக் காட்ட, கவனித்துக் கொண்டிருந்த சூர்யா, அவளையே நோட்டம் விட்ட ராகவனை முந்திக் கொண்டு ஆதியாவின் அருகில் வந்தான். ராகவனும் சற்று நெருங்கினான். 

சூர்யா அருகே வரவும் அவளும் வண்டியை விட்டு ஒதுங்கிக் கொண்டாள். 

“இவ்ளோ பழைய மாடல் வண்டினு தெரியுதுல்ல. சர்வீஸ்க்கு விட்டு வச்சா என்ன? இதைக் கூடக் கவனிக்காம உங்க ஹஸ்பன்ட் என்ன பண்றார்?” எனக் கோபமாகக் கேட்டான். 

அவனுக்கு அவள் மாற்றான் மனைவி என்பதைத் தன்‌மனதில் ஆழப்பதிய வைக்க வேண்டியுள்ளது. அவள் நினைப்புதான் அவனுக்குள் பத்து தலை இராவணனாய் தலை விரிக்கிறதே.

இது அவளது அம்மாவின் வண்டி. ஸ்கூட்டி ஈ.எஸ். அன்னையின் நினைவாக வைத்துள்ளாள். பேட்டரி வீக்காகி செல்ஃப் ஸ்டார்ட் ஒர்க் ஆகாமல் மக்கர் பண்ணியது. சூர்யா உடனிருந்த வரை அவன்தான் அவளது வண்டியை சர்வீஸ் பார்த்து வைப்பான். 

சூர்யா கேட்டவுடன், அருகில் நின்ற ராகவன், “அவங்க ஹஸ்பன்ட் தான் வெளிநாட்டுல இருக்காரே சார். அதனாலதான் வண்டி சர்வீசுக்கு விடாம வீணாப் போய்கிட்டு இருக்கு.” கூறியவன் இதழில் இழிவாய் ஒரு இழிப்பு.

அவன் கூறியதன் உள் அர்த்தத்தை உள்வாங்கியவனோ, ராகவனை முறைத்துக் கொண்டே ஒரே உதை உதைக்க வண்டி உடனே ஸ்டார்ட் ஆகியது. 

அவளிடம் வண்டியைக் கொடுத்தவன், “நீங்க கிளம்புங்க.” என்றான் சற்று சீரலாய்.

அவன்‌ கண்களில் தெரிந்த கோபம் சற்று அவளைப் பயமுறுத்தினாலும், அடுத்தவன் தன்னை நெருங்குவதை விரும்பாத, அவனது உள்மன உணர்வைப் புரிந்து கொண்டவள்,

கண்ணன் மடிசேரும் காலம் தொலைவில் இல்லை எனத் தெரிந்து கொண்டவளாய் உல்லாசமாய்க் கிளம்பினாள். 

அருகில் நின்ற ராகவன் தோள் மீது கை போட்டவன், “மிஸ்டர் ராகவன்… இது லேடீஸ் அதிகமா வேலை பாக்குற கம்பெனி. பேசும் போது வார்த்தையை பாத்துப் பேசுங்க. எழுத்துப் பூர்வமா கம்ப்ளைன்ட் வந்தா தான்னு இல்ல. ஏதாவது தப்பா தெரிஞ்சா தனிப்பட்ட முறையிலும் ஆக்ஷன் எடுக்க வேண்டியிருக்கும். இது உங்களுக்கு ஃபர்ஸ்ட் வார்னிங்.” என்று பொறுமையாகக் கூறியவன் அவன் தோளில் தட்டிக் கொடுத்து விட்டு சென்றான். 

கூறியது என்னவோ பொறுமையாகத்தான். ஆனால் அதில் அவன் கொடுத்த அழுத்தம் வேறொரு அர்த்தம் கொடுத்தது.

இந்த மாதிரி ஆட்கள்‌ எங்கும் இருப்பார்கள். உடனே வேலைவிட்டு நீக்கினால் இதே வேலையை இன்னொரு இடத்தில் தொடரப் போகிறார்கள். இவ்விடத்திற்கு வரும் இன்னொருவனும் இதே வேலையைச் செய்ய மாட்டான் என்பது என்ன நிச்சயம். அதற்காக எதற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா. அதனாலயே ராகவனை எச்சரித்து ஆனுப்பினான். சாம, பேத, தான, தண்டம் என சொல்லி வைத்திருக்கிறார்களே. எனவே பொறுமையாகவே எச்சரித்துச் சென்றான்.

4 thoughts on “நெஞ்சம் மறப்பதில்லை 20”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top