நெஞ்சம் மறப்பதில்லை 19

எப்பொழுது என்று அனைவரும் காத்திருந்த நேரமும் வந்தது. கண்களைத் திறந்திருந்தான்… சூர்யபிரகாஷ். அவன் கண்விழித்ததை மருத்துவருக்கு அறிவிக்க செவிலி சென்றுவிட,

தானிருக்கும் அறையைச்சுற்றி பார்வையை ஓட்டியவன், தன்னைச் சுற்றியிருந்த உபகரணங்கள் மூலம் மருத்துவமனை என்பதை மூளை கிரகிக்க சற்று நேரம் பிடித்தது. என்ன நடந்தது என்று யோசித்தவனுக்கு, விபத்து நடந்ததும், தான் காரிலிருந்து தூக்கி எறியப்பட்டதும் நினைவுக்கு வந்தது. ஆழ்ந்த மயக்கமா, அல்லது அறுவை சிகிச்சையின் பலனோ ஏதோ ஒன்று அவனின் நினைவுகளை மீட்டிருந்தது. 

மருத்துவர் வந்து சோதிக்க, அதுவரை அமைதியாகவே இருந்தான். அவனின் தாயையும், நண்பனையும் மட்டும் முதலில் உள்ளே அழைத்தார்.

உலகிலுள்ள அனைத்து தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு மங்கையர்க்கரசி உள்ளே வந்தார்.

அமைதியாகவே அமர்ந்திருந்தான்.

 “தம்பி! எப்படிப்பா இருக்க?” தளுதளுத்த அன்னையின் குரலை காதில் வாங்கியவன், சற்று யோசித்து,

“ம்மா! தாத்தா எங்கேம்மா? என்றான்.

மகன் மீண்டுவிட்ட சந்தோஷம் அன்னையின் முகத்தில்.

மீண்டும் யோசித்தவன், தாயின் அருகிலிருந்த நண்பனைப் பார்த்து, “டேய் விஷ்வா! ஆக்சிடன்டான இன்னொரு கார்ல‌ இருந்தவங்களுக்கு என்னடா ஆச்சு?” என்று கேட்க, என்ன சொல்வதென்று மருத்துவரைப் பார்க்க, அவர் கண்ணால் அமைதி காட்டினார்.

“எல்லாம் என்னாலதான்டா. நான் மட்டும் அந்த குடிகாரன் டாக்சியில ஏறாம இருந்திருந்தா அவங்களுக்கும் ஆக்சிடன்ட் ஆகியிருக்காது. அவங்களுக்கு மட்டும் ஏதாவது ஆகியிருந்தா என்னாலயே என்னை மன்னிக்க முடியாதுடா.” என பேசிக்கொண்டிருக்க, அதிகமாக யோசித்ததினால் பின் மண்டையில்  மின்னலென ஒருவலி உணர்ந்தவன், “ஸ்ஸ்ஸ்….” என பின் தலையைத் தடவினான்.

“மிஸ்டர் சூர்யா! இப்போதைக்கு ரிலாக்ஸா இருங்க. இப்பதான் உங்களுக்கு சர்ஜரி பண்ணியிருக்கு. ரொம்ப ஸ்டிரெயின் பண்ணாதீங்க.” என்றார்.

“எனக்கு தலையில மட்டும்தான் அடிபட்டுச்சா? கால்லயும் அடிபட்ட மாதிரி இருந்தது. ஆனா கால் நல்லாயிருக்கே?” என்றான்.

“இப்பதானே சொன்னேன். ஓவரா தின்க் பண்ணாதீங்க சூர்யா!” என்றார் மருத்துவர்.

நண்பனைப்பார்த்தவன்”டேய்… மச்சா! ஆஸ்ட்ரேலியா போனவன் வர ஒரு மாசத்துக்கு மேல ஆகும்னு சொன்னே! அதுக்குள்ள எப்படா வந்த?”

வாங்க விஷ்வா என மரியாதை கொடுத்து விலகி நின்றவன், அவனை பழைய மாதிரி அழைத்தது அவனுக்கு தன் நண்பன் மீண்டுவிட்டதை உறுதிப் படுத்தியது.

ஆனால் இன்னும் அவன் ஆதியாவை பற்றியோ, சண்முகம் குடும்பத்தை பற்றியோ விசாரிக்கவில்லை. அவன் இருந்த வேகத்திற்கு முதலில் ஆதியாவைப் பற்றி தான் விசாரித்திருக்க வேண்டும். ஆனால் அதற்குரிய அறிகுறி எதுவும்‌ அவன் முகத்தில் இல்லை.

“நீங்க ரெஸ்ட்டெடுங்க சூர்யா. மெதுவாகப் பேசிக்கலாம்!” என்றார் மருத்துவர்.

மூவரும் வெளியே வர, இறை கொண்டு வரும் தாய்ப்பறவைக்காக, ஆவலாகக் காத்திருக்கும் பறவைக்குஞ்சென, அவர்களுக்காக காத்திருந்த ஆதியாவின் முகத்திலிருந்த ஆர்வத்தைப் பார்த்த மங்கையர்க்கரசிக்கோ என்ன சொல்வதென்று புரியவில்லை.

“டாக்டர்! அவன் இவங்களைப்பத்தி ஒன்னுமே கேக்கலியே?” என்றான் விஷ்வா.

“நானும் அதைத்தான் யோசிக்கிறேன். அவரைப் பொறுத்தவரைக்கும் இப்ப ஆக்சிடன்ட்டாகி அட்மிட் ஆனதாத்தான் நினச்சுக்கிட்டு இருக்காரு. வேணும்னா இவங்களையும் அவர் பாக்கட்டும். அவருடைய ரியாக்ஷன வச்சு, அவருடைய தற்போதைய நிலமை என்னன்னு பாக்கலாம்.” என்றவாறு அவர்களையும் மீண்டும் உள்ளே அழைத்துச் செல்ல,

இவர்களைப் பார்த்தவன் முகத்தில் எந்த சலனமுமில்லை. 

“இவங்க யாரும்மா?” 

வார்த்தை இதயம் கீறுமா. இரத்தமின்றி கீறியது ஆதியாவிற்கு.

அவன் கேட்டது என்னவோ இரண்டே வார்த்தைகள் தான். ஆனால் அவ்வார்த்தைகளின் தாக்கம் அனைவர் முகத்திலும் எதிரொலித்தது. கும்பலாக நின்று இருந்ததினால் ஆதியா பக்கம் அவன் பார்வையே செல்லவில்லை.

“உனக்கு ஆக்சிடன்ட் ஆனப்ப ஹெல்ப் பண்ணவங்கடா.” என்று விஷ்வா கூற,

“சார்! இன்னொரு கார்ல் இருந்தவங்க என்ன ஆனாங்க சார். நல்லா இருக்காங்கள்ல?” என்றான் வேகமாக சண்முகத்தைப் பார்த்து. தற்பொழுது அவனது கவனமெல்லாம் இன்னொரு காரில் இருந்தவர்களுக்கு என்னவாயிற்று என்பதுதான். அவர் மங்கையர்க்கரசியைப் பார்க்க, அவர் கண்ணால் வேண்டாம் என்று சைகை செய்தார்.

“அவங்களைப்பத்தி தெரியலப்பா. அவங்கள வேற ஹாஸ்பிடல் கொண்டு போயிருப்பாங்களா இருக்கும்.” என்று மங்கையர்க்கரசியே பதில் கூறினார்.

“டேய் சூர்யா! உனக்கு வேற எதுவும் ஞாபகமில்லையா?” என விஷ்வா கேட்க,

“எதைப்பத்தி கேட்குற விஷ்வா? சூரத் போனதைப்பத்தி கேக்குறியா? அதை முடிச்சுட்டு தான், நேரா நான் அவினாசி வந்தட்டேனே. இந்த தடவை நான் வேற எந்த ப்ளானும் பண்ணலைடா. தாத்தாவுக்கு பெர்த்டே சர்ப்ரைஸ் கொடுக்கணும்கறதுக்காக, நான் ட்ரிப்போறதா சொல்லிட்டுப் போனேன்டா.” என்று அவன் பேசிக்கொண்டிருக்க, ஆதியா அங்கிருந்து வெளியேறினாள்.

மருத்துவர் அறையில் அனைவரும் கூடியிருக்க, “டாக்டர் இப்ப அவன் மனநிலைமை என்ன?” என்று விஷ்வா கேட்க,

“சூர்யாவைப் பொறுத்தவரைக்கும் இப்பதான் ஆக்சிடன்ட்டாகி அட்மிட்டாகியிருக்கார். இடையில இவங்க வீட்ல இருந்ததெல்லாம் ஞாபகம் வரல. கொஞ்சம் கொஞ்சமா ஞாபகம் திரும்பலாம். வராமலும் போகலாம்.” என்றதைக் கேட்டவன்,

“டாக்டர் அவன் கல்யாணம் பண்ணியிருக்கான்! ஞாபகம் வரலைன்னா எப்படி?” என்றான் விஷ்வா.

“உடனே நாம ஞாபகப்படுத்த முடியாது. பிரைன்‌ ரொம்ப சென்சிடிவ் பார்ட். ஏன்னா‌ இப்பதான் சர்ஜரி நடந்திருக்கு. எல்லாம் ஹீல் ஆனதுக்கப்புறம் தான் அடுத்து இதற்கான தெரபி ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்க முடியும்.” என்றார். 

இவர்கள் பேச்சை ஆதியா அமைதியாகவே கேட்டுக் கொண்டிருந்தாள். அனைவரும் வெளியே வந்தனர்.

“ஆதியா பயப்படாதேம்மா. கண்ணன்கிட்ட நடந்ததை சொன்னா புரிஞ்சுப்பான்மா. கண்டிப்பா உன்னை ஏத்துப்பான்மா.” என்ற லஷ்மியை விரக்தியாகப் பார்த்தாள்.

“ஆதியா! நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.” என மங்கையர்க்கரசி கூறினார்.

அவளும் என்னவென்று பார்க்க,

“ஆதியா! நீதான் சூர்யாவோட மனைவி. அதுல எந்த மாற்றமும் இல்லை. அவன் எந்தளவுக்கு உன்னை விரும்பியிருந்தா யாரையும் கேட்காம தாலி கட்டியிருப்பான். ஆனா இப்ப அந்த ஞாபகம் கொஞ்சம்கூட இல்ல. காதலும், கல்யாணமும் எவ்ளோ பெரிய விஷயம். அதுவே அவனுக்கு இப்ப நினப்புல இல்ல.” என்று கூறியவரிடம்,

“அதுக்காக என்ன பண்ண சொல்றீங்கம்மா. நாம தான் எடுத்துச் சொல்லி புரிய வைக்கணும்.” என்று சண்முகம் ஆவேசப்பட,

“கொஞ்சம் பொறுமையா சொல்றதைக் கேளுங்கண்ணா! ஆதியாவைப்பத்தி சொன்னா அவளோட பெத்தவங்கள பத்தியும் சொல்ல வேண்டிவரும். ஏற்கனவே தன்னால தான் ஆக்சிடன்டாச்சுனு நினைச்சுட்டு இருக்கான். என்ன நடந்ததுன்னு நமக்குத் தெரியலை. அவங்க இப்ப உயிரோடவே இல்லைனு தெரிஞ்சா, அந்த ஸ்ட்ரெசும் சேந்துக்கும். தன்னால தான் ரெண்டு உயிர் போயிருக்குனு தெரிஞ்சா மேலும் மன அழுத்தம் அதிகமாகும். அதுக்கும் மேல காதல், கல்யாணம் எல்லாத்தையும் ஞாபகப்படுத்தி அவனை ரொம்ப அழுத்தத்துக்கு உள்ளாக்க வேண்டாம்னு நினைக்கிறேன்.” என்றவர்,

ஆதியாவிடம், “எனக்கு என் பையன் இப்படியே வேணும்மா. சில விஷயங்களை காலத்தின் முடிவுக்கு விட்டுறுவோம். அவசரப்பட்டு முடிவெடுத்து, அதிகமா குழம்பிட்டான்னா, யாருக்கும் இல்லாம ஆகிருவானோனு பயமாயிருக்கும்மா.” என்றார்.

அவருக்கு எங்கே தன் மகன் மீண்டும் அம்னீசியாவிற்கு சென்று விடுவானோ என்கிற பயத்தோடு, ஞாபகங்களை மீட்டெடுப்பதற்காக அதிகமாக யோசித்து வேறுமாதிரியாக குழம்பிவிடுவானோ என்ற பயமும் சேர்ந்து கொண்டது. அதனாலேயே எதையும் வலுக்கட்டாயமாக ஞாபகப்படுத்த வேண்டாம் என்றதும். அவளுக்கும் ஒரு தாயாக அவரது கவலை புரிந்தது. ஆனால் தன் காதல் எங்கே போனதென்ற ஏக்கம் பிறந்தது.

“ஆன்ட்டி, நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் ஒன்னும் ஆகாது. அவன் மனநிலை சரியில்லாம என்ன செய்யறோம், எங்கே இருக்கோம்னு தெரியாத நிலைக்குப் போகல. செலக்டிவ் அம்னீஷியாவுல தான் இருந்தான். சூர்யா சொன்னா புரிஞ்சுப்பான். தேவையில்லாம பயப்படுறீங்க.” என்று விஷ்வா கூற, 

இவ்வளவு நேரமும் அமைதியாக இருந்தவள்,

“வேண்டாம் விஷ்வா!” என்றாள்.

“எது வேண்டாம் சிஸ்டர்?” என்றான் கோபமாக. அவன் கோபத்தை மங்கையரக்கரசியிடம் காட்ட முடியாதவனாக.

“அவங்க உங்களை மரியாதையா கூப்பிட்டப்ப எப்படி இருந்தது விஷ்வா?” என்றாள் விரக்தியாக.

“யாரோ மூனாம் மனுஷன் கூப்பிடுற மாதிரி இருந்தது. அதுக்கு…?” என்று புருவம் சுருக்கியவனை,

“இப்ப என் நிலைமையும் அது தான். எல்லோரும் நடந்தை சொல்லி என்னை அவங்க ஏத்துக்கலாம். ஒன்னு தாலி கட்டிட்டோமேனு கடமையேனு ஏத்துக்கணும். இல்லைனா என்னோட பேரன்ட்ஸ் இறப்புக்கு தானும் ஒருவகையில் காரணம் ஆகிட்டோமேன்னு பரிதாபத்துல ஏத்துக்கணும்,” என்றவளிடம்,

“நீங்க என்ன சொல்லவர்றீங்க சிஸ்டர்.” என்றான்.

“கடமைக்காக வாழ்ற வாழ்க்கை எனக்கு வேண்டாம் விஷ்வா! என்னோட காதல் வேணும். கண்டிப்பா ஒருநாள் வெளி வரும். இப்ப கொஞ்சம் ஆழ் மனசுல புதைஞ்சு இருக்கு. உணரும்போது நான் அவங்க கூட இருப்பேன்.” என்றவள்,

“அத்… ஆன்ட்டி! நான் கண்ணனை நேர்ல பாக்குற வரைக்கும் தான் என்னால வைராக்கியமா இருக்க முடியும். அதனால முடிஞ்ச வரைக்கும் நான் தள்ளியே இருந்துக்கறேன். நீங்களும் தான். அவங்களே என்னைத் தேடி வருவாங்க.” என்று மங்கையர்க்கரசியிடம் கூறியவள்,

“வாங்க அங்கிள் போகலாம்!” என்று சண்முத்திடம் கூறிவிட்டு வெளியே சென்று விட்டாள்.

இவ்வளவு காலமாக விதி ஆடிய விளையாட்டிற்கு தாகசாந்தியாக அவர்களது காதலைப் பருகி இளைப்பாறியது. 

ஏனோ காதலில்லா வாழ்க்கையை அவளால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அவளுக்கு உயிரோடு வாழும் வாழ்க்கையைவிட… உயிர்ப்போடும் வாழ வேண்டும் என ஆசை கொண்டவள். உயிர்வாழ காற்றும் தண்ணியுமே போதும். அன்பு, பாசம், காதல், கொஞ்சம் ஊடல், கொஞ்சும் கூடல், வெறுப்பு, கோபம் என அனைத்துமான உணர்வுகளோடும் வாழவேண்டும் என எண்ணியவள். கடமைக்கான வாழ்க்கையில் இதை எதிர்பார்க்க முடியாது. வீட்டுல நீயும் இருக்க… நானும் இருக்கேன். நீ சாப்பிட்டியா… நான் சாப்பிட்டேன். அவ்வளவு தான் என்றிருக்கும். தன் பெற்றொரின் அந்நியோன்யமான வாழ்க்கையைப் பார்த்து வளர்ந்தவள். அதே மாதிரி வாழ ஆசைப்பட்டவள். அவனும் தன் வாழ்க்கையை உயிர்ப்பிக்க வந்தவனாகவே எண்ணினாள். அதே உயிர்ப்பை அவன் தன் மீது காட்டும் ஒவ்வொரு அக்கறையிலும், கோபத்திலும் கண்டவள். இப்பொழுது யாரோ எனப் பார்க்கும் அந்நியப் பார்வையை சந்திக்கும் சக்தி அவளுக்கு இல்லை. நேற்று இரவு வரை அவளை காதலோடு தாபமாகப் பார்த்த பார்வை எங்கே. இன்று யாரெனக் கேட்கும் வார்த்தைகள் எங்கே. 

கரியென அவனது மன ஆழத்தில் புதைந்த காதல், காலமாற்றம் எனும் அழுத்தம் கோண்டு ஒருநாள் வைரமென உறுதிப்பெற்று வெளிவந்து ஜொலிக்கும் என உறுதி கொண்டு, அவளுக்காக அவளவன் வருவான் என்ற நம்பிக்கையோடு வீடு வந்தாள்.

அவளது கண்ணன் நின்றிருந்த தோட்டம், சமையல்கூடம், மொட்டைமாடி என எங்கும் அவன் நினைவுகளே வியாபித்திருக்க, ஆதரவு தேடி எப்பொழுதும் போல் பவளமல்லி திட்டிற்கு வந்துவிட்டாள்.

ஆதியா வீட்டிற்கு வந்து அழுவாள் என அனைவரும் எதிர்பார்த்திருக்க, அவளோ பெற்றொரின் இழப்பின் போது, துடைக்கும் கரங்களில்லை என தனக்குள் உறைந்து போனாளோ, அதேபோல் அணைக்கும் கரங்கள் அருகில் இல்லையென பாறையாக இறுகிப் போனாள். 

இன்னொரு இழப்பை ஏற்க அவளுக்கு சக்தி இல்லை எனத் தெரிந்து தாலிகட்டியவனோ, அவளது திடம் அனைத்தையும் உறிஞ்சுக் கொண்டு அவளை வெறுமையாய் விட்டுச் சென்றான்.

அழுவதற்கும் தெம்பு வேண்டும்.

தனதறைக்குள் வந்தவளுக்கு, அவனில்லாத வீடும், மனம்போலவே வெறுமையாய். 

ஆயர் பாடியில் கண்ணனில்லையோ

ஆசை வைப்பதே அன்பு தொல்லையோ

பாவம் ராதா….

யமுனையாற்றிலே 

ஈரக்காற்றிலே

கண்ணனோடுதான் ஆட

பார்வை பூத்திட

பாவை பார்த்திட

பாவை ராதையோ வாட…

4 thoughts on “நெஞ்சம் மறப்பதில்லை 19”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top