25
“மாமா… நம்ம பிள்ளைக்கு ஒன்னுமில்ல. தைரியமா இருங்க மாமா” என அவனது கைகளை தன்பிடிக்குள் வைத்துக்கொண்டு ஆறுதல் கூறியவளுக்குள்ளும் அடிவயிறு பயத்தில் கவ்விப்பிடித்தது. ஒரு வேளை தாங்கள் நினைத்ததுபோல் இருந்துவிட்டால் என ஒரு கணம் உதித்த எண்ணத்தை தலையை உலுக்கி உதறினாள். மருத்துவமனை வராண்டாவில் குடும்பமே குழுமியிருந்தது. உள்ளே ஆதினிக்கு சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.
ருத்ரனோ இறுகிப்போய் அமர்ந்திருந்தான். கிட்டத்தட்ட ஒருவருடத்திற்கு முன் நடந்த இதேபோல் ஒரு மருத்துவமனை சூழல் நினைவில் வந்துபோனது. கைகளில் ஒரு வயதுக்குழந்தை மூச்சுவிட முடியாமால் துடித்தது கண்முன் வந்துவந்து போக, நெஞ்சு வெடித்தது அப்பனுக்கு. ஒருவேளை அப்படியும் இருக்குமோவென ஒரு ஊகம் நல்லபாம்பாய் தலைவிரிக்க பயத்தில் நெஞ்சடைத்தது.
இன்னும் இருவரும் மணக்கோலத்தில்தான் இருந்தனர். கல்யாணம் முடிந்து மாப்பிள்ளை வீடு சென்றுவிட்டு, மறுவீட்டிற்கு பெண்வீடு வந்திருந்தனர். வழக்கமான பால்பழம் சம்பிரதாயம் முடிந்தது. மதியவிருந்து அங்கேயே ஏற்பாடு செய்திருந்தார் கௌரி. அலுப்பில் பிள்ளை தேன்மொழி மடியிலேயே அசந்திருந்தது.
“உள்ள படுக்க வைப்பா” என அமிர்தாவின் அறைக்கு அழைத்துச் சென்றாள். கட்டிலில் படுக்கவைக்க அப்பொழுதே உடம்பு சுட்டது பிள்ளைக்கு.
“மண்டபத்துல ஐஸ்கிரீம் சாப்பிட்டுருப்பானு நினைக்கிறேன். பேத்தி கைய நீட்டிட்டா போதும். உடனே எடுத்துக் கொடுத்துறவேண்டியது. வீட்டுக்குப் போனதும் டாக்டருகிட்ட கூட்டிப் போகணும்” என பேசிக்கொண்டே பிள்ளைக்கு தலையணையை அணைவாக வைத்துவிட்டு இருவரும் வெளியே வந்தனர்.
பேத்தியை தன்பக்கம் இழுக்கவென, தேன்மொழி காய்ச்சல் என எவ்வளவோ சொல்லியும் அகிலாண்டம்தான், “என் பேத்திக்கு இல்லாததா” என ஐஸ்கிரீம் எடுத்துக் கொடுத்திருந்தார்.
ஏற்கனவே நடந்த விஷேசங்களில், ஐஸ்க்ரீம், சாக்லேட் என சாப்பிட்டதில், பிள்ளைக்கு சளி தொந்தரவு ஆரம்பித்திருந்தது. வீட்டில் கைவசம் எப்பொழுதும் இருக்கும் மருந்துகளை கொடுக்க சற்று மட்டுப்பட்டிருந்த, சளிப்பிரச்சினை மீண்டும் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது தலை தூக்கியது.
அடுத்தடுத்து தொடர்ந்து விஷேசங்களும், சிறுபிள்ளையென அவள் கைநீட்டிய பொழுதெல்லாம் ஐஸ்க்ரீம், குளிர்பானம் என எடுத்துக் கொடுக்க மார்புச்சளி கட்டியது. அவ்வப்போது காய்ச்சலும் வர அதற்கான மருந்தைக் கொடுத்தால் குறைவதுமாக இருக்க இவன் கவனத்திற்கு வரவில்லை.
விருந்து முடிய, வண்டியில் ஏற்ற சீர்வரிசைகளை கௌரி எடுத்து வைத்துக்கொண்டிருக்க, கௌதம் வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தான்.
“இப்ப இதெல்லாம் யாரும்மா பொழங்குறா? பித்தளை அண்டா குண்டானு அடுக்குறீங்க. பரண்லதான் தூங்கப்போகுது.”
“நீ என்னமோ பண்ணு. குடுக்கறது எங்க கடமை” என வண்டியில் ஏற்ற, துணி பேக்கை எடுக்க தனது அறைக்கு வந்தாள். பேப்பரில் சுருட்டி கட்டிவைக்கப்பட்டிருந்த புதுத் தலையணை, ஜமுக்காளத்தைப் பார்த்தவள் சிரித்துக் கொண்டே,
“ஏம்மா, இந்தக் காலத்துலயும் இந்த தலகாணி, ஜமுக்காளம் வாங்கியிருக்கீங்க. நல்லா சிவப்புகலரு ஜிங்குச்சா, மஞ்சக்கலரு ஜிங்குச்சா, பச்சக்கலரு ஜிங்குச்சானு இருக்கு” என கேட்க,
“இதுதான அமிர்தா கல்யாண ஜமுக்காளம். நம்ம வழக்கத்த மாத்தமுடியாதுல” என்றார்.
“கொடுக்கறதுதான் கொடுக்கறீங்க. கொஞ்சம் பெருசா கொடுத்தாதான் என்னவாம். ஒருத்தரே இதுல புரண்டு படுக்க முடியாது.”
“அதனாலதான்டி இது கல்யாண ஜமுக்காளம்” என மகளுக்கு விளக்கம் சொல்லமுடியாமல் முடித்துக்கொண்டு வெளியேறினார்.
என்னதான் கால ஓட்டத்தில் கல்யாண முறைகளில் இருந்து சீர்வரிசை, உணவுவகை வரை எத்தனையோ மாற்றமும், ஏற்றமும் பெற்றிருந்தாலும் இன்னும் வழமையாக வழங்கப்படும் சில சீர்வரிசைகள் மட்டும் மாறவில்லை. அதில் ஒன்றுதான் கல்யாண ஜமுக்காளம் எனப்படும் பச்சை, சிவப்பு, கத்திரிபூ கலர், வெள்ளை என அனைத்து வண்ணமும் வரிசைகட்டிய பவானி ஜமுக்காளமும், பச்சை, சிவப்பு, மஞ்சள் மற்றும் கத்திரிப்பூ கலர் என வெல்வெட் துணியில் தைக்கப்பெற்ற இலவம்பஞ்சு தலையணையும் இன்றளவும் மாற்றம் பெறவில்லை. இப்ப மணமக்கள் பெயர்போட்டு நெசவு செஞ்சு தர்றாங்க.
இன்று பகட்டிற்காக கப்பல் மாதிரி கட்டில் என கிங்சைஸ் பெட் சீராக வழங்கப்படுகிறது. அதனால்தானோ என்னவோ நாளடைவில் தம்பதிகளுக்கிடையில் இடைவெளி அதிகமாகிவிடுகிறது. ஆனால் கல்யாண ஜமுக்காளம் இருவர் மட்டுமே இறுக்கிப்படுக்கும் அளவுதான் இருக்கும். ஒற்றைத் தலையணைதான் சீராக கொடுக்கப்படும். போர்வை சீர்வரிசையில் வராது. இங்கு ஒருவருக்கொருவர் தான் போர்வை.
எப்பொழுதும் பகலில் உடனிருப்பதும், அதாங்க வொர்க் ஃப்ரம் ஹோம், நைட் சிஃப்ட் என இரவில் விலகியிருப்பதுமே இத்தலைமுறையினரின் விரிசலுக்கு காரணம். பகலில் பெண்ணிற்கு கிடைக்க வேண்டிய தனிமையும், இரவில் கிடைக்க வேண்டிய அரவணைப்பும் கிடைப்பதில்லை. பெண் தனிமையில் தான் தனக்கான உலகத்தில் சஞ்சரிக்கிறாள். ஆண் எப்பொழுதும் வேட்டை, போர் என பாதுகாப்புக் கருதி குழுவாக இருந்தே பழக்கப்பட்டவன். பெண் அதே பாதுகாப்பு கருதி தனிமைப்படுத்தியே பழக்கப்பட்டவள். கொரொனா காலத்தில் வீட்டிலிருந்த ஆண்களைவிட, தனிமை கிடைக்காத பெண்கள் தான் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகியது. பெண்கள் அளவிற்கு தனிமையை எதிர்கொள்வது ஆண்களுக்குக் கடினம்.
மகளைத் தூக்க அறைக்குள் வந்தவன் அவளைப் பார்த்து கள்ளச்சிரிப்பு சிரித்தான்.
“இப்ப உங்க அக்கா என்ன ஜோக்கா சொல்லிட்டுப் போறாங்க, சிரிக்கறீங்க.”
“நீ நல்லா சமைப்பேனு நெனச்சேன். ஆனா இப்பதான் தெரியுது, உனக்கு ஸ்டவ்வே பத்தவைக்கத் தெரியாதுன்னு.”
“உங்களுக்கு தெரியும்ல.”
“என்னாது?”
“பத்தவைக்கறது”
“ம்ம்ம்… தெரியும்னுதான் நினைக்கிறேன்.”
“அப்பறமென்ன, யாரோ ஒருத்தருக்குத் தெரிஞ்சா பத்தாதா மாமா” என அப்பாவிபோல் கேட்டவளைப்பார்த்து சிரிப்பை அடக்க மாட்டாமல் தலையை ஒரு மார்க்கமாக உருட்டினான்.
“ஆனா எனக்கு நல்லா சாப்பிடத் தெரியுமே. அதுக்கு தானே ஹோட்டல்காரர கட்டியிருக்கு. விதவிதமா சாப்பிடலாம்ல.”
“ம்ம்ம்… சாப்பிடலாம்… சாப்பிடலாம்” என்றவனை, மேலுதட்டைக் கடித்தவாறு நமட்டுச்சிரிப்போடு, ஒரு கண்ணைமட்டும் சுருக்கி தலைசாய்த்துப் பார்க்க, அவளது பேச்சின் கள்ளத்தனம் அபொழுதுதான் புரிந்தது அவனுக்கு.
“அப்ப… நீ பேசினதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு தெரிஞ்சு…தான் பேசியிருக்க” என இழுக்க.
“ஏன் தெரியாது, அம்மா அரையும்குறையுமா சொல்லும் போதே பாதி புரிஞ்சுது. நீங்க நக்கலா சிரிச்சதுல மீதியும் புரிஞ்சுது. எவ்வளவு தூரம் வர்றீங்கனு பாத்தேன்” என சொல்லி முடிக்கும் முன் ஒரே எட்டில்,
“இவ்வளவு தூரம் வந்தா போதுமா” என பட்டும் படாமல் மூச்சுக்காற்று உரசும் தூரத்தில் வந்து நின்றான். சட்டென திரும்பி வாசல் பார்த்தவளுக்குள் அவளையும் மீறி சிறு நடுக்கம் பரவியது மேனியில். மணக்கோலம் மாறாமல் மன்னவன். அலங்காரம் கலைக்கப்படாத கோயில் சிலையாக காரிகை. நேருக்கு நேராக நின்றவன் பார்வை பாவையின் முகத்தில் நிலைக்க, அவனது பார்வையின் தாக்கத்தை தாங்க முடியாமல் கண்கள் அங்குமிங்கும் அலைபாய, மேலுதட்டில் முத்துக்கோர்த்தது வியர்வைப்பூ. குறுகுறுத்தது பார்த்தவனுக்குள். கைகளை பின்னால் கட்டிக்கொண்டு மேனிபடாமல் அவளது முகம் நோக்கி மெதுவாகக் குனிய, பெருமழையின் பேரிரைச்சல் அவளுக்குள். பட்டென கண்களை இறுக மூடிக்கொண்டாள். குளக்கரை உரசும் அலையாய் சிறு இதழொற்றல் ஒன்றை வருடும் மயிலிறகாய், இரண்டாம் வகை முத்தத்தை இதழ்களில் மென்மையாக ஒற்றியெடுக்க, சிறு தீப்பொறி ஒன்று இளமைக்காட்டிற்குள் விழ மெதுவாக மோகக்காய்ச்சல் கண்டது இருவருக்குள்ளும். ஆணி அடித்தது போல் கைகளை இறுக மூடிக்கொண்டு பெண்ணவள் அசையாமல் நிற்க, மென்னகையோடு அவளைவிட்டு விலகினான்.
தூங்கும் மகளைத் தூக்கிக்கொள்ள, பிள்ளையின் உடம்பு இப்பொழுது கொதித்தது. “என்ன இவ்ளோ காய்ச்சல் அடிக்குது. பாக்கலியா?” என பதறி கேட்க, மோகவலை அறுபட சட்டென சுயத்துக்கு வந்தாள்.
“வீட்டுக்குப் போனதும், ஹாஸ்பிடல் போணும்னு தேனு சொன்னா மாமா. ரொம்பவா அடிக்குது” என அவளும் அருகேவந்து தொட்டுப்பார்த்தவள், “ஆமா மாமா, போகும்போதே ஹாஸ்பிட்டல் போய்ட்டுப் போலாமா?” எனக் கேட்க, தங்கள் கோலத்தைப் பார்த்தவன்,
“வீட்டுக்குப் போய்ரலாம். ட்ரெஸ் மாத்திட்டு அழகர கூட்டிட்டு போய்ட்டு வர்றேன்” என இருவரும் வெளியே வந்தனர். சீர்வரிசைகளோடும், கண்ணீரோடும் மகளை வழியனுப்பி வைத்தனர்.
காரை அழகர் ஓட்ட, முன் சீட்டில் பிள்ளையை வைத்துக் கொண்டு தேன்மொழியும், பின் சீட்டில் மணமக்களும் அமர்ந்திருந்தனர். கார் ஏசியின் குளுமையில் பிள்ளைக்கு சற்று மூச்சு வாங்க ஆரம்பிக்க, சிறிது நேரத்தில் கைகால் வெட்டியிழுக்க ஆரம்பித்தது. மடியில் பிள்ளையை வைத்திருந்தவள் பதறிப்போய் பர்க்க, அதற்குள் கண்கள் மேலே சொருகியது பிள்ளைக்கு.
“அண்ணாஆஆ… குட்டிம்மா…” என அவள் அலறிய அலறலில் கார் சட்டென ஸ்தம்பித்து நின்றது. அவசரமாக முன் சீட்டிற்கு வந்தவன், காற்று வேகத்தில் காரை செலுத்தி அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டுவந்து சேர்த்திருந்தான்.
மகளை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துவிட்டு, உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான். அதற்குள் அம்மா தங்கையென யாரையும் விட்டுவைக்காமல் சகட்டுமேனிக்கு விளாசித்தள்ளியிருந்தான்.
அங்குவந்த அகிலாண்டம், “வந்த முத நாளே மகராசி எம்பேத்திய படுக்கையில தள்ளிட்டா” என எத்தனை பட்டாலும் புத்திவராமல் விஷத்தைக் கக்க,
“அழகரு, உங்க அம்மாவ இங்க இருந்து தயவுசெஞ்சு வெளிய போகச்சொல்லிரு. வயசானவங்கள கழுத்தப்புடிச்சு தள்ளின பாவம் எனக்கு வேண்டாம். நானும் மூனாந்தரமா அவங்க லெவலுக்கு இறங்கறதுக்குள்ள அனுப்பிரு” என பல்லைக் கடித்துக்கொண்டு கூற, அழகரே அம்மாவை தள்ளாத குறையாக வீட்டிற்கு அனுப்பிவைத்தான்.
நேரம் கடந்தது. அமைதி அழுத்தமாக இருந்தது. மருத்துவர் வெளியே வர, அனைவரும் பதைபதைப்போடு அவர் முகம் பார்த்தனர்.
“சளி அதிகமானதாலதான் வீசிங் வந்திருக்கு. பாடி டெம்ப்ரேச்சர் அதிகமானதால ஃபிட்ஸ் வந்துருச்சு. ஃபீவர் குறஞ்சுட்டா சரியாயிரும். இப்போதைக்கு நெபுலைசர் வச்சிருக்கு. இன்னைக்கு நைட்டு ஆப்சர்வெஷன்ல இருக்கட்டும். நாளைக்கு நார்மல் வார்டுக்கு மாத்திறலாம்” என பிள்ளையின் உடல் நிலையை விளக்க அப்பொழுதுதான் அனைவருக்கும் மூச்சு சற்று ஆசுவாசப்பட்டது. இருந்தும் அப்பனின் முகம் தெளியவில்லை.
“வேறெந்த பிரச்சினையும் இல்லையா டாக்டர்” என சந்தேகமாகக் கேட்டான்.
“ஏன், நீங்க என்ன பிரச்சினைய எதிர்பாத்தீங்க?” எனக்கேட்ட மருத்துவரிடம் பெற்றவள் உடல் நிலையை விளக்க,
“அம்மாவுக்கு ஹார்ட் ப்ராப்ளம் இருந்தா பிள்ளைக்கும் வரணும்னு அவசியம் இல்ல மிஸ்டர் ருத்ரன். நெஞ்சுசளி கட்டியிருக்கு. நிமோனியாவோட ஸ்டார்ட்டிங் ஸ்டேஜ்கறதால வீசிங் அவ்வளவுதான். நீங்க பயப்படுற அளவுக்கெல்லாம் இல்ல. கொஞ்சம் எதிர்ப்பு சக்தி கம்மியா இருக்கு” என்று கூறினார்.
என்னதான் மருத்துவர் கூறினாலும், மனது மேவாமல் அடுத்தடுத்து மகளுக்கு அனைத்து பரிசோதனைகளையும் செய்து முடித்துதான் வீட்டிற்கு அழைத்து வந்தான். வலது காது, இடது காது எனத் தனித்தனியாக மருத்துவரை பார்க்கவில்லையே ஒழிய, இதய நிபுணர் முதல், எலும்பு மருத்துவர் வரை காண்பித்து பாசிட்டிவ் ரிப்போர்ட் வாங்கியபிறகே மனம் சமன்பட்டது அப்பனுக்கு.
வீடு திரும்ப ஒரு வாரம் ஆயிற்று. அப்பன்காரன் மகளை விட்டு விலகாமல் பிள்ளையே கதி என இருக்க அவ்வப்பொழுது ஹோட்டல் சென்று அமிர்தாவும், அழகரும் கவனித்துக் கொண்டனர். பிள்ளையும் அப்பனையே அதிகம் தேடியது.
இந்த பத்து நாட்களில், பிள்ளை தேறிவிட்டாள். அப்பன்காரன் தான் மிகவும் ஓய்ந்து தெரிந்தான். வீட்டிலும் எப்பொழுதும் மகளுடனே. கொடுத்த மருந்துகளின் வீரியமோ என்னவோ எட்டுவைக்க ஆரம்பித்தாள்.
ஒரு வெள்ளிக்கிழமை காலையில் கோவில் சென்ற அமிர்தா கையில் காப்புகட்டி, ஈரச்சேலையோடு வந்தாள்.
“என்ன அமிர்தா இது?” என தேன்மொழி அதிர்ச்சியாக, அடுத்த மாதம் வரும் குலதெய்வத் திருவிழாவில் பூக்குழி இறங்கப்போவதாகக் கூறினாள்.
“எதுக்கு அமிர்தா இவ்வளவு பெரிய வேண்டுதல். அதுவும் இந்த வருஷமே செலுத்தணுமா. அடுத்த வருஷம் கூட பாத்துக்கலாம்ல” என திருமணம் முடிந்த பத்தாம் நாளே கையில் கங்கணம்கட்டி வந்த மருமகளிடம் மஞ்சுளா ஆதங்கப்பட,
“பிள்ளைக்கு நாம நெனச்சமாதிரி ஒன்னுமில்லைனா பூக்குழி எறங்கறதா வேண்டினது அம்மாச்சி. அதுக்கு தோதா சாமிகும்பிடும் வருதுல்ல. வேண்டுதல தள்ளிப்போட வேண்டாம்” என்றவள் ஈரச்சேலையை மாற்ற அறைக்குள் சென்றாள்.
அவள் பின்னாலேயே வந்தவன், “யாரக்கேட்டு வேண்டுதல் வச்ச?” எனக் கடிந்தான். இதென்ன சாதாரணமா. விரதமெல்லாம் இருக்க வேண்டாமா. இவளால் முடியுமா என யோசனை ஓடியது. அதுவும் பால்குடம், காவடி இந்த மாதிரி வைத்திருக்கலாமே. பூக்குழியென்ன லேசுப்பட்ட காரியமா என ஆத்திரம் வந்தது.
“இது என் பிள்ளைக்காக வேண்டுதல் வச்சது. அவள ஹாஸ்பிடல்ல சேத்த அன்னைக்கே வேண்டிக்கிட்டேன் மாமா.”
“பிள்ள மேல இருக்குற பாசத்த தீமிதிச்சுதான் நிரூபிக்கணும்னு அவசியம் இல்ல அமிர்தா” என சற்று காட்டமாக,
“ஹோஓ… எங்களப்பாத்தா தீக்குளிச்சு நிரூபிக்கிற சீதாதேவி பரம்பரை மாதிரி தெரியுதா. எரிச்சு நிரூபிக்கிற கண்ணகி பரம்பரையாக்கும். கடவுளே கண்முன்னால வந்தாலும் குற்றம் குற்றமேனு சொன்ன மண்ணு இது.”
“கிழிச்சீங்க… அவன் பூம்புகார்ல வேறோரு பொண்ணு பின்னால போனப்பவே சிண்டப் பிடுச்சுக் கேட்டுருந்தா மதுரை வரைக்கும் வந்து எரிக்க வேண்டிய அவசியமே வந்திருக்காதுல” என கோபமாகக் கேட்க,
கை வளையல்களில் பார்வையைப் பதித்திருந்தவள் அதை முன்னும் பின்னும் நகர்த்திக் கொண்டே “அப்ப நானும் உங்களை சிண்டப்புடுச்சு கேக்கலாம்ல மாமா?” என நிதானமாகக் கேட்டவளை புரியாமல் ஏறிட்டான்.
“இந்த பத்து நாளா நானும் உங்கள கவனிச்சுட்டுதானே இருக்கேன். ஏன் என்ன விட்டு ஒதுங்கிப் போறீங்க” என்றாள் அவனை நிமிர்ந்தும் பாராமல்.
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லடி. குட்டிம்மா என்னை அதிகமா தேடுறா. அதனாலதான்” என சற்றே தடுமாறினான்.
“உங்களுக்கு சொல்லக் கஷ்ட்டமா இருந்தா நானே சொல்லவா. மறுபடியும் உங்களுக்குள்ள ஒரு குற்ற உணர்ச்சி. அமரா மாதிரியே பிள்ளையையும் கவனிக்காம விட்டோமோன்னு உருத்துதுல்ல மாமா. அதனாலதான் பிள்ளையவிட்டு நகர மாட்டேங்கறீங்க. அவ காய்ச்சலோடு கட்டில்ல கிடந்தப்ப, அதக்கவனிக்காம என்கிட்ட அன்னைக்கி அப்படி நடந்துக்கிட்டது உங்கள சங்கடப்படுத்துது, இல்லையா மாமா?” எனக்கேட்க, தன் மனநிலையை பிட்டுப்பிட்டு வைப்பவளிடம் பேசும் திராணியற்று உள்ளுக்குள் வெதும்பி நின்றான்.
“நாமளும் சாதாரண ஆசாபாசமுள்ள மனுஷங்கதான் மாமா. தெய்வங்களே இந்த விஷயத்துல தடுமாறியிருக்காங்க. கல்யாண ஜோர்ல நீங்களும் பிள்ளைய கவனிக்கல. எங்கே என்கிட்ட வந்தா பிள்ளைய மறந்துருவோமோனு பயம் வந்துருச்சு. அதனால தான் ஒதுங்கிப் போறீங்க. கரெக்டா. அந்த அளவுக்கா நான் உங்கள மயக்கி வச்சுருக்கேன்” என்றவள் குரலில் இருந்த வெறுமைத்தொனி அவன் மனதை இறுக்கிப்பிழிந்தது.
“ஆமானு சொல்றதுல எனக்கு எந்த சங்கோஜமும் இல்ல அமிர்தா. நமக்குள்ள எதுவுமே நடக்கலைனாலும் என் பொண்டாட்டிகிட்ட நான் மயங்கிக் கிடக்கேன்தான். நீ என் கண்முன்னால வந்தாலே எனக்கு சகலமும் மறந்துருதுதான். ஆனா, பிள்ளையப் பாத்துட்டு உன்னைய ஒதுக்கி வைக்கற அளவுக்கு சுயநலவாதி இல்ல அமிர்தா. அவ பூரணமா குணமாகுற வரைக்கும் தள்ளியிருக்கலாம்னு நெனச்சேன். நம்ம வாழ்க்கைய தொடங்கும் போது மனசுக்குள்ள எந்தவித அலைக்கழிப்பும் இருக்கக் கூடாதுனு நெனச்சேனே ஒழிய நீ நினைக்கிற மாதிரி இல்லடி” என்றவன் வார்த்தைகள் தவித்து வந்தன.
“கல்யாணமாகிட்டா புருஷன் பொண்டாட்டிக்கிடையில கட்டில் சமாச்சாரம் மட்டும்தானா மாமா. அதுக்காக மட்டும் தான் நெருங்கி வரணுமா. ஒருவேள நானும் ஆதினி மாதிரி உங்கள அதிகமா தேடுறேனோ என்னவோ மாமா. அதனாலதான் எனக்கு இப்படியெல்லாம் தோணுது போல.”
“எனக்கு நீயும் ஆதினியும் வேற வேற இல்லடி.”
“இல்ல மாமா… ஆதினி உங்க பலவீனம். நான் உங்க பலமா மட்டும்தான் இருக்க விரும்பறேன். இந்த விரதம் பிள்ளைக்காக மட்டும் இல்ல. அதிகமா உங்களத் தேடுற எனக்காகவும்தான். நீங்களும் பிள்ளையா பொண்டாட்டியானு ரெண்டுக்கும் நடுவுல தவிக்க வேண்டாம் பாருங்க. நான் உங்க மேல வச்ச ஆச ஒன்னும் இன்னைக்கி நேத்து வந்ததில்ல மாமா. உங்களுக்கு நெனப்பிருக்கா இல்லையானு தெரில. என்னைக்கி என் கைபுடிச்சு வளையல் போட்டீங்களோ அன்னைக்கி வந்தது. என் புருஷன் என்கிட்ட மயங்கிக்கெடக்குறார்னு நெனச்சு என்னால சந்தோஷப்பட முடியல மாமா. நான் உங்களுக்கு பலமாத்தான் இருக்க விரும்புறேனே ஒழிய. பலவீனமா மாற விரும்பல” என்றவள் கண்கள் சிவப்பேறியது.
அவள் தன்னை எவ்வளவு தேடியிருக்கிறாள் எனப்புரிய உள்ளுக்குள் குமைந்து போனான். தனக்காகவே காத்திருந்து கரம் பிடித்தவள். கேசேர்ந்த சொர்க்கத்தை தவிக்க விட்டது தெரிந்து அவனுக்கே தன்னை நினைத்து வெறுப்பு மேலிட்டது.
“எனக்குள்ள ஏன் இத்தனை தடுமாற்றம்னு புரியல அமிர்தா. முன்ன நான் இப்படி இல்ல. ஒரு வயசு வரைக்கும் பெத்தவங்கனு நெனச்சவங்க பெத்தவங்க இல்ல. பெத்தவங்க மாதிரி. அந்த அதிர்ச்சிய உள்வாங்கிக்கறதுக்குள்ள, பெத்த அம்மா உயிரோடதான் இருக்காங்கங்கற அடுத்த அதிர்ச்சி. மஞ்சுளாம்மாவுக்கு மனசு விட்டுப்போகுமோனு அவங்க இழப்புக்கு கூட என்னால அழமுடியல. உள்ளுக்குள்ளேயே அடக்கி வச்சுக்கிட்டே. அதுல இருந்து மீண்டு வர்றதுக்குள்ள, ஆசைப்பட்ட பொண்ணையே இழக்கவேண்டிய கட்டாயம். நமக்கு வாச்சது இவ்வளவுதான்னு, வாழ ஆரம்பிச்சா அதுலயும் தோல்வி, ஏமாற்றம். எனக்கானது எதுன்னே எனக்குப் புரியல அமிர்தா. எதெல்லாம் எனக்கு உரிமைனு நெனச்சேனோ அது எல்லாமே எனக்கு உரிமை மாதிரிதான். பெரிய பிள்ளைக விளையாடும் போது அடம்பிடிக்கிற சின்னப்பிள்ளைகள ஒப்புக்குச்சப்பாணியா ஆட்டத்துல சேத்துப்பாங்கள்ல. அந்த மாதிரிதான் எல்லா எடத்துலயும் இருந்துருக்கேனு தெரிஞ்சப்ப எனக்குள்ளேயே அழுதுருக்கேன். ஆம்பள பாரு வாய்விட்டு அழும் பக்கியம் கூட எங்களுக்கில்ல. அகிலாண்டம் அத்தை பேசும் போதெல்லாம், நீங்களும் ஆச்சு, உங்க சொத்தும் ஆச்சுனு பிள்ளையத் தூக்கிட்டு வெளியேறிரலாம்னு எத்தனையோ தடவ நெனச்சிருக்கே. அப்ப எல்லாம் அம்மா முகமும், தேன்மொழி முகமும் கண்ணுமுன்னால வரும். அவங்களுக்காக எதவேணாலும் பொறுத்துப் போகலாம்னு தோணும். வியாபாரத்துல எத்தனை சறுக்கல்களை வேணும்னாலும் ஈசியா தாண்ட முடிஞ்ச என்னால, குடும்பத்துக்குள்ள சில தளைகள தாண்ட முடியல. ஆனா எனக்கே எனக்கான உறவுனு வந்தது நம்ம குட்டிம்மாதான். அவளுக்கு ஒன்னுனா என்னால யாருக்கும் நியாயமா இருக்க முடியலடி. கண்ணக்கட்டி காட்டுல விட்டமாதிரி தவிச்சுப் போயிர்றே. எனக்கு நீங்க ரெண்டு பேருமே ரெண்டு கண்ணுதான் அமிர்தா. அதுல ஒரு கண்ணுல வெண்ணை, ஒரு கண்ணுல சுண்ணாம்புனு வைக்கமுடியாதுடி” எனக் கலங்கியவனை,
இத்தனை கஷ்ட்டங்களையும் தனக்குள் போட்டு தனியாக தவித்துக் கொண்டிருக்கிறான் எனத்தெரிய, “மாமா…” என தாவி அணைத்துக் கொண்டவளுக்கும் கண்ணீர் மடை உடைத்தது. சற்று நேரம் அப்படியே இருவரும் கட்டிக் கொண்டு நிற்க, அந்த அணைப்பு இருவருக்குமே அப்போதைக்கு தேவையாக இருந்தது. எல்லா நேரங்களிலும் அணைப்பு மோகத்திற்கு இட்டுச் செல்வதில்லை. அலைக்கழித்து ஓய்ந்துவரும் மனதை இளைப்பாறச்செய்வதும் உண்டு.
“அமிர்தா, காப்பு கட்டியிருக்கு” என்றான் மெள்ள.
“இருக்கட்டும், இது ஆதினிய கட்டிப்போம்ல அது மாதிரி தான்” என்றாள். அவளை நிமிர்த்தி கண்களைத் துடைத்துவிட்டவன்,
“உன்னளவுக்கு நான் உன்ன காதலிக்கலியோனு நினைக்கும் போது எனக்கே அசிங்கமா இருக்குடி. உன்ன ரொம்ப நோகடிச்சுருக்கேன். சாரிடி. ஆனா உன்னோட ஒட்டுமொத்தக் காதலுக்கும் சொந்தக்காரன்னு நினைக்கும் போது நாந்தான் இந்த உலகத்துலயே அதிர்ஷ்ட்டசாலின்னு திமிராவும் இருக்கு அமிர்தா” என்றவன் குனிந்து நெற்றியில் பிள்ளை முத்தமொன்றைப் பதித்தான்.
”மாமா, காப்புக் கட்டியிருக்கு” என சிரிக்க, இதுவும் ஆதினிக்கி குடுக்குற முத்தவகையில தான் சேரும். இதுக்காகவெல்லாம் சாமி கண்ணக்குத்தாது. ஆனா உன்னால முடியுமாடி? விரதமெல்லாம் இருந்துருவியா?” என கனிவாக கேட்க,
“அதப்பத்தி நீங்க கவலைப் படாதீங்க மாமா. நான் ஒரு விஷயத்துல வீம்பா மனசு வச்சுட்டேனா அதுல இருந்து பின் வாங்க மாட்டேன்.”
“அதுதான் எனக்குத் தெரியுமே. தேன்மொழி கல்யாண வேலையெல்லாம் வேற தலைக்குமேல கெடக்குடி.” என அப்பொழுதுதான் வேற்று கிரகத்திலிருந்து இறங்கியவன்போல கவலைப்பட,
“பார்றா, அதுக்குள்ள பிள்ளைப்பைத்தியம் தெளிஞ்சிறுச்சு.” என நையாண்டி செய்தாள்.
“என்னையும் என் பிள்ளயையும் பாத்துக்கதான் என் அல்லிராணி வந்துட்டாளே. இனி நான் என் கடமைய கவனிக்கலாம்” என சிரிக்க, அலைந்து திரிந்து கூடுவந்துசேர்ந்த பறவையின் ஆசுவாசம் இருவர் முகத்திலும்.
பழைய நினைவுகளோடு புரண்டு படுக்க, பக்கத்தில் ஆள் இல்லாமல் தூக்கம் கலைந்த பிள்ளை கட்டிலைவிட்டு இறங்க முயற்சி செய்ய, கீழே படுத்திருந்தவள் வேகமாக எழுந்து கை நீட்டி சிரிக்க, தாவி வந்து மேலேவிழுந்தது.
“ஆத்தாடீ” என பிள்ளையோடு படுக்கையில் சாய்ந்தாள். அணைவாக கை போட்டுக்கொள்ள மேலே படுத்துக்கொண்டு தன் தூக்கத்தை தொடர்ந்தது பூஞ்சிட்டு.

Ruthran avanoda mana porattangal sollum idam arumai
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
[8241]555rr Official Login | অনলাইনে ক্যাসিনো গেম ও দ্রুত বিকাশ পেমেন্ট,555rr-এ আজই লগইন করে সেরা স্লট গেম নিয়ম জানুন এবং অ্যাপটি ডাউনলোড করে নিন। দ্রুত বিকাশ পেমেন্টের মাধ্যমে সহজ লেনদেনের অভিজ্ঞতা নিন। এখনই যোগ দিন। visit: 555rr
Finally found a way to get the app running without any glitches. The installation was a breeze and the experience is top notch. Check out 567winappdownloadapk if you want a seamless mobile setup.
Honestly this platform just clicks with how I like to play. Fair game algorithms, quick cash out options and a team that actually reads the feedback section. Glad I stumbled across it today. pejonbetcasino
I’ve been looking for a reliable way to access my account and this site is definitely the smoothest. Super fast loading and no glitches. Highly recommend zb777login to everyone.