24
“இந்தா, இதையாவது குடி அமிர்தா. மேடையில நிக்கும் போது மயங்கி ஏதும் விழுந்துறாத. குட்டிம்மாவ எங்கிட்ட கொடு.”
“இதெல்லாம் வேண்டாம் மாமா. நான் தெம்பாதான் இருக்கே.”
“அதான் உன் மூஞ்சியப் பாத்தாலே தெரியுதே. கண்ணெல்லாம் கெடங்கு விழுந்து போயிருக்கு. இதுல அலைச்சல் வேற. நானே பாத்துக்கறேன்னாலும் கேக்குறியா? பிள்ளையாவது அம்மாகிட்டயாவது, அக்காகிட்டயாவது கொடுக்கலாம்ல அமிர்தா” என அதட்ட,
“நான் யார்கிட்டேயும் தர்றதா இல்ல மாமா. இவளக்கூட சமாளிச்சுருவே. இவளுக்கு ஏதாவது ஒன்னுனா உங்கள சமாளிக்கறதுதான் எனக்கு பெரும்பாடா போகுது. பயந்தே சாகுறீங்க” என அவனது பலவீனத்தை பகிரங்கப்படுத்தினாள் மனாட்டி.
“அதெல்லாம் அப்போ. அதான் என்னோட பலமா இப்ப நீயிருக்கியே. அந்த பலத்த பலப்படுத்த வேண்டியது என்னோட பொறுப்பு. மேடைக்கும் பிள்ளையோட வந்து நிப்பியா. இத்தன நாளா பாத்தவங்களுக்கு பாக்க தெரியாதா?”
“அத நீங்க சொல்றீங்களா? எல்லாரையும் வறுத்து எடுத்தது அதுக்குள்ள மறந்துபோச்சா?”
”அதையே திரும்ப திரும்ப சொல்லாத அமிர்தா. அன்னைக்கிருந்த நிலமை அப்படி. இதக்குடி முதல்ல. ரொம்ப கெறக்கமா தெரியுறடி” என இடுப்பில் பிள்ளையை வைத்துக் கொண்டே சுற்றிக்கொண்டு இருந்தவளிடம், பால் டம்ளரைக் கொடுத்துவிட்டு பிள்ளையை வாங்கிக் கொண்டான் ருத்ரன்.
அவர்களைக்கடந்த உறவுக்காரப் பெண்மணி ஒருவர், “ஓம்பிள்ளையா ருத்ரா. அப்படியே அமராவதி மாதிரியே இருக்கா. நல்லா நடக்குறாளா?” என விசாரிக்க, ருத்ரன், அமிர்தாவின் முகம் பார்த்தான்.
“அதெல்லாம் நல்லா நடக்குறா பெரியம்மா” என அமிர்தாவே பதில் கூற,
“நீ பெத்த பிள்ளையாட்டம் பாத்துக்கோம்மா. தாயில்லாப்பிள்ள” என அங்கலாய்க்க,
“உங்கள மாமா சாப்பிட தேடிட்டு இருந்தாரு பாருங்கத்தை” என ருத்ரன் அவரது பேச்சை திசைமாற்றி விட,
“எங்க போனாலும் இந்த மனுஷன் செத்த நேரம் தனியா விடமாட்டாரு.” கூப்பிடாத கணவருக்கு அர்ச்சனைகளை வழங்கிக்கொண்டே போக, இருவரும் சிரித்துக் கொண்டனர்.
தேன்மொழி நிச்சயதார்த்தம், மற்றும் காயத்ரி கல்யாணத்திலேயே இந்த மாதிரி பேச்சு இவர்களுக்குப் பழகிவிட்டது. அவர்களது அனுதாபத்தைக் காண்பிப்பதாக உறவுகள் தங்கள் காழ்ப்புணர்ச்சியையும் சேர்த்தே காட்டிச் சென்றனர்.
அதிலும் ஆதினி ஒருவருடம் முடிந்தும் நடக்காமலிருக்க ருத்ரன், அமிர்தா கல்யாணத்திற்கு வந்த சொந்தங்கள் எல்லாம், “இன்னும் நடக்கலயா!” எனக்கேட்டே ஒரு வழி பண்ணியதோடு, அவர்களே கைதேர்ந்த மருத்துவர் போல ஆளுக்கொரு கைவைத்தியமும் கூற, சிலர் கேரள வைத்தியம் முதற்கொண்டு சிறந்த எலும்பு மருத்துவர் யார் என்பதுவரை ஆலோசனை கூறிச்சென்றனர்.
சிலபிள்ளைகள் எட்டு மாதத்திலேயே எட்டு வைக்கும். சிலது பத்து மாதம். சில பிள்ளைகள் ஒருவருடம், ஒன்றரை வருடம் கழித்துக்கூட நடக்கும். ஆனால் வந்தவர்களெல்லாம் ஆளுக்கொன்றாகக் கூற, ருத்ரனுக்கு மகள் நடப்பாளா என்ற சந்தேகமே வந்துவிட்டது.
நல்லா இருக்கறவன்கிட்ட தொடர்ந்து பத்து நாளைக்கி என்னப்பா உடம்பு சரில்லையானு கேட்டாலே, பத்தாவது நாள் தன்னைப்போல் படுக்கையில் விழுந்துவிடுவான். விசேஷ வீடுகளில் இது சகஜம்.
அதுவும் இவர்கள் கல்யாணத்தன்றே அனைவரையும் மகள் கதிகலங்க வைக்க, அவனைத் தேற்றுவதற்குள் அமிர்தா தான் ஒருவழியாகிவிட்டாள். இப்பொழுது ஒரு இடத்தில் நிக்காமல் ஓடும் பிள்ளையை பிடித்து வைக்க முடியவில்லை.
இன்று தேன்மொழி மற்றும் அழகரின் திருமண வைபோகம். தங்கையின் திருமணத்திற்கு மண்டபத்தையே தேவலோகமாக மாற்றியிருந்தான் ருத்ரபாண்டியன்.
சக்கர நாற்காலியில் கேசவமுர்த்தியும் அருகே மஞ்சுளாதேவியும் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். மேடையில் தேன்மொழியும், அழகரும் கல்யாணக் கோலத்தில் ஐயர் சொல்லிய மந்திரத்தை கிளிப்பிள்ளையாக சொல்லிக்கொண்டிருக்க, கண்குளிர மகளை கல்யாணக் கோலத்தில் கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர்.
அதற்குள் மணமக்களின் பெற்றோரை மேடைக்கு அழைக்க, அமிர்தாவிடமிருந்து பிள்ளையை பிடுங்கி மஞ்சுளாவின் கையில் கொடுத்துவிட்டு, “அம்மா பாத்துப்பாங்க வா!” என மனைவியை கைபிடித்து இழுக்காத குறையாக மேடை ஏறினான். தம்பியிடமும் ஆயிரம்முறை பத்திரம் சொல்லிவிட்டு தான் மேடை ஏறினாள். இப்பொழுதுதான் நடக்க ஆரம்பித்திருக்கும் பிள்ளை, ஓரிடத்தில் நிக்காமல் குடுகுடுவென ஓடுவதும், ஓடிய வேகத்தில் விழுந்து எழுவதும் சகஜமாயிருக்க பிள்ளையை சமாளிப்பது இன்று கௌதமின் பொறுப்பாகிவிட்டது.
கல்யாணம் முடிந்து ஒரு மாதமே ஆன புதுமணத்தம்பதிகள் இவர்கள். அண்ணனாக ருத்ரனும் பட்டுவேட்டி சட்டையில் வந்திருக்க, அமிர்தாவும் வாடாமல்லி கலர் பட்டுச்சேலையில் இன்னும் புதுப்பெண் மெருகு குலையாமல் மிளிர்ந்தாள்.
பாதபூஜைக்கு ஒரே தாம்பூலத்தட்டில் சேர்ந்துநிற்க, தள்ளாடியவளை தோளில் அணைவாக கைபோட்டு பிடித்துக் கொண்டு முறைத்துப் பார்த்தான்.
“தட்டு சின்னது மாமா. நீங்க அங்க கவனிங்க” என வாய்க்குள்ளேயே அவனை அதட்டினாள். இருவருக்கும் தேன்மொழி பாதபூஜை செய்ய, அட்சதைதூவி ஆசிர்வாதம் செய்தனர். அதே போல் அழகரும் தன் பெற்றோருக்கு செய்ய அகிலாண்டம் யாருக்குவந்த விருந்தோவென கடனே என கணவரோடு வந்து நின்றார். என்ன இருந்தாலும் பழைய பவுசு குறையவில்லை அகிலாண்டத்திற்கு.
அடுத்து கன்னிகாதானம். பெற்றவர்கள் ஸ்தானத்தில் நின்று, அழகரின் பெற்றவர்கள் கைமேலே அழகரின் கைவைத்து தன் தங்கையின் கையை எடுத்து வைக்க, அவனையும் அறியாமல் கண்களில் கண்ணீர் கரகரவென வடிந்தது அண்ணன்காரனுக்கு. தன் வாழ்க்கைக்காக வீம்பாக இருந்து, அண்ணன் உறவையே குத்தகைக்கு கொண்டுவந்த தனக்கு தந்தை ஸ்தானம் கொடுத்து நின்ற தங்கையை நினைத்து நெஞ்சம் விம்ம அவனால் கட்டுப்படுத்த முடியாமல் உடைந்துவிட்டான். அண்ணனைப் பார்த்து தங்கைக்கும் கண்கள் தளும்ப,
“மாமா, நானென்ன உங்க தங்கச்சிய ஏழுகடல், ஏழுமலை தாண்டியா தூக்கிட்டுப் போகப்போறே. நீங்க வடக்குவீதின்னா, நாங்க தெக்குவீதி. இதுக்கு போயி ரெண்டுபேரும் இந்த அலும்பு பண்றீங்களே?” என இருவரையும் கேலிபேசி நிலமையை சகஜமாக்க முயல,
“நல்லா கேளுங்கண்ணே. என்னமோ இவருமட்டும் தான் தங்கச்சிய கட்டிக்கொடுக்குற மாதிரி. ஏன் நாங்க எல்லாம் வரல” என அமிர்தாவும் அழகரோடு சேர்ந்து கொண்டாலும், அக்கணம், கணமாகவே கழிந்தது ருத்ரனுக்கு. அடுத்து திருப்பூட்டு நிகழ்ந்தது. நாத்தனார் முறைக்கு மூன்றாவது முடிச்சை காயத்ரி போட்டுவிட, அட்சதை சாரல்தூவ திருமணம் இனிதே நடந்தேறியது.
அடுத்து அவன் பந்தியை கவனிக்க செல்ல, மணமக்கள் கீழே வந்து கேசவமுர்த்தி மற்றும் மஞ்சுளாதேவியிடம் ஆசீர்வாதம் வாங்கினர்.
பந்தியை கவனித்துக் கொண்டிருந்தவன், அமிர்தா வாயைப் பொத்திக்கொண்டு கைகழுவும் ஏரியாப்பக்கம் ஓடுவதைப் பார்த்தவன் வேகமாக அங்குவர, அவள் வாயிலெடுத்துக்கொண்டிருந்தாள். வந்து தலையைப் பிடித்துக் கொண்டான்.
வாய்கொப்பளித்து, முகம் கழுவிக்கொள்ள, தன்னிடமிருந்த கர்சீஃப் எடுத்து கொடுக்க முகம் துடைத்துக்கொண்டாள்.
“ஒன்னுமே சாப்பிடாமா எப்படி வாந்தி மட்டும் வருது” என சிடுசிடுத்தான்.
“எல்லாம் உங்களால தான் மாமா. ஏற்கனவே நைட்டெல்லாம் மண்டபத்துல சரியா தூங்கல. நான்தான் பால் வேண்டாம்னு சொன்னேன்ல. தூக்கமில்லாம வெறும் வயித்துல பாலக்குடிக்கவும் பிரட்டிட்டு வந்துருச்சு. பித்தவாந்தி தான்.”
“நானென்ன பிள்ள வாந்தினா சொன்னேன். நீயென்ன குந்தியா. புருஷன் தொடாம வாந்தி எடுக்கறதுக்கு” என சுள்ளென விழுந்தவனை முறைத்துப் பார்த்துவிட்டு,
“இப்படி தத்துப்பித்துனு பேசாதீங்க மாமா. சாமிகுத்தும் வந்துறப்போகுது.”
“ஆ…ஊ…ன்னா இதொன்ன சொல்லிரு.”
“நம்ம பிள்ளைக்கு தான மாமா.”
“சரி… சரி… வந்து ஜூஸாவது குடி” என கடிந்து கொண்டு அழைத்துச் சென்றான்.
ஒருவழியாக பந்தி முடிந்து வீட்டு ஆட்களும் சாப்பிட்டு முடித்து சற்று ஓய்ந்து உட்கார்ந்தனர்.
மணமக்கள் மாப்பிள்ளை வீடு கிளம்ப, குறுக்கே ராகுகாலம் வந்ததால் புதுஜோடிகளும், பழைய ஜோடிகளும் ஒன்றாக உட்கார்ந்து அரட்டையடித்துக் கொண்டிருந்தனர்.
சோர்வாகத் தெரிந்த காயத்ரிக்கு பழச்சாற்றை எடுத்துவந்து விக்னேஷ் கொடுக்க, முறைமைக்கார இளவட்டங்களுக்கும், மற்ற ஜோடிகளுக்கும் இன்று பேசு பொருள் இந்த ஜோடிதான். இப்பொழுது காயத்ரிக்கு ஐந்தாவது மாதம். ஆனிமாத கடைசி முகூர்த்தத்தில் விக்னேஷ், காயத்ரி திருமணம் முடிய, அடுத்து ஒரு வாரத்தில் ஆடிமாதம் பிறக்க, இருவரையும் பிரித்து வைத்துவிட்டனர். தலை ஆடி முடிந்து கணவன் வீடு வந்தவள் மசக்கையோடு மல்லுக்கட்ட, மனைவியோடு மல்லுக்கட்ட முடியாத சோகத்தில் விக்னேஷ்.
நல்லநேரம் ஆரம்பிக்க புதுஜோடி மாப்பிள்ளை வீடு கிளம்பினர். அவர்களை அனுப்பிவைத்துவிட்டு மண்டப கணக்குவழக்குகளை முடித்துக் கொண்டு இவர்களும் கிளம்ப ஆயத்தமாக, அறைக்குள் தங்களது பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளிடம் ஜூஸ் டம்ளரைக் கொண்டுவந்து வலுக்கட்டாயமாகக் கொடுத்து குடிக்கச்சொன்னான்.
“பால் தான் வயித்தப்பிரட்டும். ஆரஞ்சு ஜூஸ் தான் குடி” அதட்டிக் கொடுத்தவனிடம் மறுக்காமல் வாங்கி குடித்தாள்.
“க்கா… ஐஸ்க்ரீம் கேட்டு அழறா. என்னால சமாளிக்க முடியல” அலுத்தவாறே பிள்ளையை தூக்கிக் கொண்டு கௌதம் அக்காவிடம் வந்தான்.
“உன்னைய யார்ரா அந்தப்பக்கம் இவள கொண்டு போகச் சொன்னது.”
“கால்ல சக்கரத்தக் கட்டுன மாதிரி ஒரு எடத்துல நிக்க மாட்டேங்கிறா. சுண்டெலி மாதிரி ஓடுறா. நானென்னமோ வேணும்னே கூட்டிப்போன மாதிரி சொல்ற. இவளுக்காக நான்கூட ஐஸ்க்ரீம் எடுத்துக்கல தெரியுமா?”
“மாமா… நீங்க மத்ததெல்லாம் முடிச்சுட்டு வாங்க. இங்க இருந்தா இவள வச்சு சமாளிக்க முடியாது. மத்தவங்க சாப்பிடறதப் பாத்து இவளும் அடம்புடிப்பா. இப்பதான் தேறியிருக்கா. மாப்பிள்ளை வீடு போனவங்க மறுவீட்டுக்கு வருவாங்க. நான் அங்க போயி கவனிக்கனும்.” என ருத்ரனிடம் கூறிவிட்டு, பொறுப்பான மருமகளாக தம்பியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டாள்.
இவர்களும் வீடு வந்துசேர, சிறிது நேரத்தில் மணமக்களும் மறுவீடுவந்தனர். ஆரத்தியெடுத்து வரவேற்றாள். மணமக்களுக்கு பாலும்பழமும் கொடுத்துக்கொண்டிருக்க அதற்குள் ருத்ரனும் வந்துவிட்டான்.
விரதம் இருக்கும் வீடு என்பதால் மணமக்கள் இங்கே தங்கமுடியாது என மீண்டும் அழகர் வீட்டிற்கே கிளம்பினர்.
சக்கர நாற்காலியில் இருந்த அப்பாவின் முன் வந்து அமர்ந்தவள் உடைந்து அழ, கேசவமூர்த்திக்கும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஒன்றும் புரியாமல் அத்தையின் கழுத்தைக்கட்டிக் கொண்டு கண்களை துடைத்துவிட்ட அண்ணன் மகளைத்தூக்கிக் கொண்டு கதறிவிட்டாள். பிறந்ததில் இருந்து கைக்குள்ளேயே வைத்து வளர்த்த பாசம் விட்டுப்பிரிய முடியவில்லை.
“அண்ணா… எனக்கு எந்த சீரும் வேண்டாம். இவள மட்டும் எனக்கு கொடுத்துர்றியா?” அண்ணன் மகள் மீது கொண்ட பாசத்தில் மிட்டாய் கேட்கும் சிறுபிள்ளையாய் தொண்டை அடைக்க கேட்க,
அமிர்தா, “அதெல்லாம் முடியாது தேனு. வேணும்னா ஒன்னு பண்ணலாம். உங்க அத்தை மாதிரி, உனக்கு பொம்பளப்பிள்ள பிறந்தாக்கூட இவள கட்டி கொடுக்கிறேன்னு பேசி வச்சுக்குவோம்” என கூற, தேன்மொழியும் சிரித்துவிட்டாள்.
தங்கையை சீரும் சிறப்புமாக புகுந்தவீடு அனுப்பிவைத்தான்.
***************
துணிமட்டும் விரித்து தரையில் அமிர்தா படுத்திருக்க, அவள் மார்பு மீது பிள்ளை அசந்திருந்தது. இன்று முழுவதும் பகலில் தூங்கவில்லை. கல்யாணமண்டபத்தில் ஆட்களைக் பார்த்துவிட்டு பயங்கர குஷியாகி விட்டாள். அந்த அலுப்பிற்கு வீட்டிற்கு வந்து சுடுதண்ணீரில் குளிக்க வைத்து, சாப்பாடு கொடுக்க, அமிர்தாவை இழுத்துக் கொண்டுவந்து, அவளையும் படுக்கச்சொல்லி மேலே படுத்துக்கொண்டாள். சற்று நேரத்தில் இருவருமே கண் அசந்தும் விட்டனர்.
வெளி வேலைகளை முடித்துக்கொண்டு வந்தவன், அலுங்காமல் பிள்ளையைத் தூக்கி கட்டிலில் படுக்க வைத்தான். அமிர்தாவைப் பார்க்க ஈரத்தலையோடு படுத்திருந்தாள். பிள்ளையைத் தூக்கியதில் அவளுக்கும் தூக்கம் கலைய,
“சாப்பிட்டீங்காளா மாமா?” என கேட்டாள்.
“ம்ம்ம்… தெனமும் ரெண்டு தடவ தலைக்கு ஊத்தி நீயும் ஏதாவது இழுத்து வையி. அப்ப இருக்கு உனக்கு” என மனைவியிடம் பல்லை கடித்துக்கொண்டு கூற,
“நானென்ன டெய்லியுமா ரெண்டு வேள தலைக்கு குளிக்கிறே. இன்னைக்கி அலஞ்சது கசகசன்னு இருந்துச்சு மாமா. பொம்பளைகளுக்கு கண்ட நேரத்துல தலைக்குளிச்சு பழக்கம்தான். இப்ப விரதம்கவும் தான தலைக்கு ஊத்தியிருக்கே.”
“அதுக்குன்னு கட்டில்ல கூட படுக்கக் கூடாதா. அப்படி எந்த சாமியும் நம்மை வருத்திக்கிட்டு தான் கும்பிடணும்னு சொல்லல. தரை எவ்வளவு சில்லுனு இருக்கு பாரு. ஈரத்தலையோட அப்படியே படுக்குற. உன்னையச் சொல்லித் திருத்தமுடியாது. பட்டதான் புத்தி வரும்.” அவளை திட்டிக்கொண்டே, தலையணை எடுத்து மகளுக்கு இருபுறமும் அணைவாக வைத்துவிட்டு படுக்க மாடியறைக்கு சென்று விட்டான்.
கவிச்சி இல்லாமல் சாப்பாடு இறங்காது இவளுக்கு. மூனுவேளை தான் சாப்பாட்டு வேளை என்பதெல்லாம் இவளது அகராதியிலேயே இல்லை. ஆனால் இப்பொழுதெல்லாம் ஒரு நேரத்து விரதத்தோடு இருப்பவள் மீது சாமி காரியம் என்றாலும் கோபம் கட்டுக்கடங்காமல் வருகிறது ருத்ரனுக்கு.
இதைக் கேட்டுக் கேட்டு இவளுக்கும் அலுத்துவிட்டது. வேண்டுதல் வைத்து கையில் காப்புக்கட்டி வந்தநாளில் இருந்து இதே பல்லவிதான் இவனிடம்.
அந்த நாளை நோக்கி நினைவுகள் பின்னேக்கி சென்றது இருவருக்கும்.
இவர்களது பரிசச்செய்தி அகிலாண்டத்தின் காதுகளுக்கு எட்ட, உடனே அண்ணன் வீடுதேடி வந்துவிட்டார் வில்லங்கம் பண்ண.
“என் மகளுக்கு நான் போட்ட நகையெல்லாம் வேணும். எப்படினாலும் என் ரெண்டாவது மகதானே வந்து ஆளப்போறான்னு இத்தன நாளா விட்டுவச்சேன்” என நடுக்கூடத்தில் அமர்ந்துகொண்டு சட்டமாகக் கேட்க, ருத்ரன் அம்மாவைப் பார்த்தான். மஞ்சுளாதேவி ஒன்றுவிடாமல் எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தார். எல்லாவற்றையும் சரிபார்த்து வைத்துக் கொண்டார்.
“இன்னொரு விஷயம். இந்த சொத்த எல்லாம் என் பேத்திக்கு எழுதி வைங்க. அடுத்து வர்றவ பிள்ளைக்கெல்லாம் என் பேத்தி சொத்துல பங்கு இல்ல. அவ வந்து ஆம்பளப்பிள்ள பெத்தா, எம்பேத்திய அம்போனு விட்டுருவீங்க” என அதிகாரமாகக் கேட்க,
“உங்களுக்கு அப்படித்தான் எங்க அப்பா செஞ்சாங்களா அத்தை. சரிபங்கு பிரிச்சு கொடுத்தாங்கள்ல. அதுக்குமேல சீரும் செஞ்சாங்கள்ல” என ருத்ரன் அழுத்தமாகக் கேட்க,
“என் கதை வேற. நான் இந்த சொத்துக்கு உரிமைக்காரி. ஆனா வர்றவளுக்கு பிறக்குற பிள்ள அப்படியா? அதுக்குமா சரிபங்கு கொடுக்க முடியும். என் பேத்தி மட்டும்தான் மொத்த சொத்துக்கும் வாரிசு” என வாரிசுரிமைச் சட்டம் பேசினார்.
“அத்தை, இது ஒன்னும் நீங்களோ உங்க அண்ணனோ பாடுபட்டு சேத்த சொத்து இல்ல. பரம்பரை சொத்து. பேரன் பேத்திகளுக்கு தான் சேரும். அந்தக்காலத்துல நில உச்சவரம்பு சட்டத்தையும் மீறி இன்னும் இவ்வளவு சொத்து இருக்குனா, நம்ம சந்ததிக்கு வேணும்னு எவ்வளவு கஷ்ட்டப்பட்டு இந்த சொத்தெல்லாம் காப்பாத்தி இருப்பாங்கன்னு நல்லாத் தெரியுது. அப்படியிருக்கையில யாருக்கும் விட்டுக்கொடுக்க மனசுவராதுதான். என்னப் பொருத்தவரைக்கும் நீங்களோ, அப்பாவோ, நானோ இந்த சொத்துக்கு வாரிசு இல்ல. வெறும் கார்டியன் மட்டும் தான். உங்க மனசு எனக்கு நல்லா புரியுது. கோடிக்கணக்கான சொத்த தத்து எடுத்தவன் அனுபவிக்கறதான்னு மனசு ஏத்துக்க மாட்டேங்குது. என்னோட பிள்ளைகளுக்கு சொத்து சேக்க எனக்குத் தெரியும். காசு சேக்குறது எவ்வளவு கஷ்ட்டம்னு எனக்கும் தெரியுது அத்தை. ”
“ஆனா அதுக்காக என் வாழ்க்கையவே பணயம் ஆக்கியிருக்கீங்க. பெத்த பொண்ணுனு கூட பாக்காம அமராவதி உசுரோட விளயாண்டிருக்கீங்க. இப்ப வந்து பேத்திபேருல சொத்த எழுதிக் கேக்குறீங்களே, அப்ப எந்த அர்த்தத்துல இந்த நகையெல்லாம் கேட்டீங்க. அமராவோட நகை முறைப்படி என் பிள்ளைக்கி வரவேண்டியதுதானே” என்று கேட்க பதில் சொல்ல முடியவில்லை அகிலாண்டத்திற்கு.
“நீங்க அடிக்கடி சொல்ற வார்த்தை, எங்க குடும்ப ரெத்தமா இருந்தா இப்படி பண்ணுமாங்கறது தானே. நானும் காலத்துக்கும் உங்களுக்கு பிறந்த வீட்டு உறவு வேணும்கறதுக்காக மட்டும்தான் நீங்க பேசுனதுக்கெல்லாம் பல்லக்கடிச்சுட்டு பொறுத்து போனேன். நீங்க இப்படியே வெட்டிவிட்டு பேசிட்டிருந்தீங்கன்னா, நாளைக்கு நீங்க பெத்தபிள்ளைகளே உங்கள மதிக்கமாட்டாங்க. காயத்ரி விஷயத்துலயே அது உங்களுக்கு புறிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்.” என நிறுத்த,
இதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த தேன்மொழி, “அத்தை, நீங்க இன்னும் சொத்துபத்தி மட்டுமே பேசுனீங்கன்னா, எனக்கு இந்த சொத்துல சல்லிபைசா வேண்டாம்னு, என் பங்க அண்ணனுக்கே எழுதிவச்சுட்டு வந்துருவேன். எனக்கு என்ன செய்யனுமோ எங்க அண்ணனுக்கு தெரியும்” என ஒரு குண்டைத்தூக்கிப்போட, அண்ணன் மேல் உள்ள பாசத்தில், இவ்வளவு நாளாக கல்யாணத்திற்கே சம்மதிக்காதவள் இதையும் இவள் செய்துவிட்டால் என்னாவது என்ற பயமும் வந்து ஒட்டிக்கொண்டது. ’எல்லாம் பிறந்த வீட்ல இருக்குறவரைக்கும் தான் அண்ணே, அப்பானுட்டு இருப்பாளுக. அதது புள்ள குட்டினு வந்துட்டா மாறிக்குவாளுக’ என தன்னைப் போலவே தன் அண்ணன் மகளையும் நினைத்தவர், இப்போதைக்கு ஆறப்போடுவோம், நம்ம பெத்ததுகளே நம்மபக்கம் இல்ல’ என அகிலாண்டத்தின் மனம் எச்சரிக்க,
ஒருவழியாக தற்சமயம் அகிலாண்டத்தை வாயடைக்க வைத்து, தேன்மொழி நிச்சயத்தையும், காயத்ரி திருமணத்தையும் நடத்தி முடித்திருந்தான். அதற்குள் அமராவதியின் நினைவு நாளும், பிள்ளைக்கு பிறந்த நாளும் வர, அதுவரை இவர்களது பரிசதேதியை தள்ளி வைத்தனர்.
காலையில் மனைவிக்கு திதி கொடுத்துவிட்டு, மாலையில் பிள்ளையின் பிறந்த நாள் கொண்டாட்டம். இரண்டிற்கும் பொதுவாக ஆதரவற்றோர் இல்லத்தில் அன்னதானதிற்கு ஏற்பாடு செய்திருந்தான்.
அடுத்த மாத முகூர்த்தத்தில் இவர்களது திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது.
விடிந்தால் ருத்ரன், அமிர்தவல்லி திருமணம். இவனுக்கு தான் இது இரண்டாவது. ஆனால் அவளுக்கு அப்படியில்லை என்பதால் எல்லாம் அவளது விருப்பம் கேட்டே நடத்திக்கொண்டிருந்தான். பல வீடியோக்களைப் பார்த்து அவளுக்கு பிடித்த வெட்டிங் தீமை செலெக்ட் செய்து கொடுத்திருக்க, அதைவிட சிறப்பாக அவளது கற்பனையை அவள் கண்முன் கொண்டுவந்திருந்தான்.
தென்ன ஓலையில் செய்த பச்சைக்கிளி கோர்த்த சம்பங்கி பூகொண்ட தோரணம், மேடையின் பின்புறம் முழுதும் அலங்கரிக்க, சிவப்புக்கம்பளம் விரிக்கப்பட்ட, நான்கு கால் மண்டபம், திருமலை நாயக்கர் மஹாலின் மினியேச்சராக காட்சியளித்தது.
“அண்ணா, எனக்கு இதவிட பெஸ்ட்டா இருக்கணும்” என தங்கை அப்பொழுதே அண்ணனிடம் அச்சாரம் போட்டுவைத்தாள்
“என்ன தேனு, எனக்கு போட்டியா” என தோழியிடம் சிரித்துக்கொண்டே கேட்க,
“ஆமா, இப்ப நான் உனக்கு நாத்தனாவாக்கும்” என கெத்து காட்டினாள்.
“உங்க அம்மா எனக்கு அம்மாச்சினா நீ எனக்கு என்ன முறை தெரியுமா?” என உதட்டிற்குள் சிரித்துக் கொண்டே கேட்க,
“என்ன முறை?” என்றாள் புரியாமல்.
“எங்க அம்மா உனக்கு அக்கா முறை. நீ எனக்கு சித்தி முறை. நான் உனக்கு மகளாக்கும்” என நக்கலாகாக் கூற,
“நீ முதல்ல அம்மாச்சினு கூப்பிடறத நிறுத்து. அது எங்கம்மாவ வயசாக்காமிக்குது. அத்தைனு கூப்பிடு.” என கட்டளையிட,
“இல்லைனா மட்டும் உங்க அம்மா என்ன கொஞ்சும் குமரியாக்கும்” என இவர்களது செல்லச்சண்டை பார்த்து மஞ்சுளாவும், கௌரியும் சிரித்துக் கொண்டனர். காலையில் முகூர்த்தத்திற்கு சீக்கிரம் எழ வேண்டுமென, பெரியவர்கள் சற்று உறங்கப்போக, மசக்கையில் துவண்டுகிடந்த நாத்தனாரை பார்த்துவர பக்கத்து அறைக்கு தேன்மொழி சென்றுவிட்டாள்.
மணமகள் அறையில் பிள்ளையை தூங்க வைத்துவிட்டு வெளியே வந்தாள் அமிர்தா. இன்னும் மேற்பார்வை பார்த்துக்கொண்டு இருந்தவனை ஃபோனில் அழைத்தாள். அழைப்பை ஏற்றவாறே மேலே திரும்பிப் பார்த்தான்,
“விடிஞ்சா உங்களுக்குதான் கல்யாணம். அதாவது நெனப்பிருக்கா” என கோபமாகக் கேட்க, திரும்பிப் பார்த்தவன் சிரித்தான்.
”அழகர் அண்ணனும், பெரிய மாமாவும் பாத்துப்பாங்க. கொஞ்ச நேரம் தூங்குங்க மாமா. ஃபோட்டோல எல்லாம் ஃபேஸ் டல்லடிக்கும்.”
“இப்ப மேடம் மட்டும் என்ன பண்றீங்க?உங்க முகம் டல்லடிக்காதா?”
“இப்பதான் குட்டிமா தூங்குனா. லேசா உடம்பு வேற சுட்டுச்சு” என கூற, அடுத்த கணம் மேலே வந்திருந்தான். கட்டிலில் படுத்திருந்த மகளைத் தொட்டுப்பார்க்க உடம்பு சூடு நார்மலாக இருந்தது. அப்பொழுது தான் காய்ச்சலுக்கான மருந்தை தேன்மொழி கொடுத்திருக்க காய்ச்சல் குறைந்திருந்தது.
“எப்ப இருந்து காய்ச்சல் அடிக்குது. ஏன் எங்கிட்ட சொல்லல” என அமிர்தாவை கடிந்து கொள்ள,
“தெரியல மாமா. அம்மாச்சிதான் மருந்து ரெடியா வச்சுருந்தாங்க. இப்ப சரியாயிருச்சு. இதுக்கு போய் இப்படி பயப்படுறீங்க” என கூற, அங்கு வந்த கௌரியும்,
“வளர்ற பிள்ளைக்கி சளி, காய்ச்சல் எல்லாம் சதாரணம் பாண்டியா. கனுக்கால் அளவு பிள்ள வளக்கனும்னா முழங்கால் அளவு காசு செலவழியும்னு சொல்லுவாங்க. இப்ப நல்லா தூங்கறாள்ல. நீயும் செத்த தூங்கி எந்திரிப்பா” என தம்பிக்கு ஆறுதலாகக் கூறிவிட்டு செல்ல, மனம் என்னவோ சஞ்சலமாகவே இருந்தது அவனுக்கு. கல்யாணத்திற்கு வந்தவர்கள் ஒரு வருடமாகியும் இன்னும் நடக்கலியா என விசாரித்தது வேறு மனதை உருத்திக் கொண்டு இருந்தது.
அவனது முகம் தெளியாமலிருக்க, “மாமா… இப்படி எதுக்கெடுத்தாலும் மனசப் போட்டு உழப்பாதீங்க. வேணும்னா உங்க திருப்திக்கு இவளுக்கு ஒரு கம்ப்ளீட் செக்கப் பண்ணிறலாம்” என கட்டிலில் அவனுக்கு அருகில் அமர்ந்து கைகளைப் பிடித்துக் கொண்டு கூற, சற்று மனம் சமாதானம் அடைந்தது. கட்டிலில் ஆழ்ந்த உறக்கத்தில் கை காலை பரப்பி, சற்று வாய்திறந்து படுத்திருந்த மகளை ஆதுரமாகத்தழுவி வந்தது இவனது பார்வை.
“தூங்குற பிள்ளைய இப்படி பாக்காதீங்க மாமா. கண்ணுபடும்.”
“இதெல்லாம் உனக்கு யாரு சொல்றது. கெழவி மாதிரி பேசுற” என சற்றே சிரித்தவன், அவளையும் படுக்கச்சொல்லிவிட்டு சென்றான்.
இவர்களுக்கான பொழுது புலர்ந்தது.
தங்ககலர் பார்டர்கொண்ட வெண்முத்துக்கலரில் பட்டுடுத்தி, அதற்கு இணயான முத்து ஆபரணங்களை பூட்டி, அலங்காரத் தேராக மணக்கோலத்தில் மகள் வர, கௌரிக்கே தன்மகள் மீது வைத்தகண்ணை எடுக்கமுடியவில்லை. இத்தனைக்கும் இந்த புடவை எடுக்கும் பொழுது அவருக்குப் பிடிக்கவிலை. மதுரைக்காரவுகளுக்கு, மாம்பழக்கலர், அரக்குப் பச்சை,அரக்கு சிவப்பு, வாடாமல்லி கலரில் இருந்தால் தான் அது பட்டுச்சேலை. மகள் முத்து கலரில் எடுக்க, ”என்னடி இது கலரு. குருடான்னு இருக்கு. பளிச்சுனு எடு” என அதட்ட,
அவள் முகம் சுணங்குவதைப் பார்த்து, “அக்கா, அவளுக்கு பிடுச்சத எடுக்கட்டும். அவ தானே கட்டப் போறா” என அக்காவிடம் வக்காலத்து வாங்கினான். இப்பொழுது அந்த புடவையில் மகளைப்பார்த்தவருக்கு திருப்தியாக இருந்தது. அதே கலரில் பிள்ளைக்கும் பட்டுபாவாடை சட்டை தைத்து போட்டுவிட்டிருந்தனர்.
மனம்போல் மாங்கல்யம் எனும்படி, மங்கை பருவத்தில் வேர்விட்டு, மடந்தை பருவத்தில் துளிர்விட்ட காதல் அரிவை பருவத்தில் கை சேர்ந்தது கன்னிக்கு.
அகத்தின் அழகு முகத்தில் என்பது போல, இரவு முழுதும் தூங்கவில்லை எனினும் மனம் நிறைந்த சந்தோஷம் முகத்தில் பொங்கி வழிய சற்றும் சோர்வின்றி பட்டு வேட்டி சட்டையில் மணமகனாக கம்பீரமாக வீற்றிருக்க,
வேதம் ஒலிக்க, மேளம் முழங்க, அட்சதை சாரல் தூவ, பெரியவர்களின் ஆசியோடு, புதுமஞ்சள் வாசம் வீசும் ஈர மஞ்சள் கயிற்றை மங்கையின் கழுத்தில் கட்டினான் மணவாளன்.
நூறு வருஷம்
இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
பேரு விளங்க இங்கு வாழனும்
சோல வனத்தில்
ஒரு சோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடனும்
ஒண்ணுக்கொண்ணு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும் மொத்தத்திலே
கட்டழக அம்மாடி என்ன சொல்ல
நூறு வருஷம்
இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்
பேரு விளங்க இங்கு வாழனும்

Yappa oru vazhiya kalyanam mudinchiduchi
ஆமாமா… இவங்கள சேத்து வைக்க நான் பட்டபாடு எனக்குதானே தெரியும் 😂😂😂😂😂
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
[1095]g777 Official Login | সেরা অনলাইন স্লট ও দ্রুত বিকাশ পেমেন্ট,g777 এর অফিসিয়াল লগইন করুন এবং সেরা স্লট গেমগুলো উপভোগ করুন। দ্রুত বিকাশ পেমেন্ট ও সহজ নিয়মাবলি সহ অ্যাপটি ডাউনলোড করে আজই খেলা শুরু করুন। visit: g777
Great experience overall. The registration process was a breeze and the games load instantly. I’m sticking with bat499 from now on.
I’ve been playing here for a few weeks now and the payouts are surprisingly fast. Definitely one of the most reliable spots for gaming right now. Check out pisogamecasino for a great experience!
Really impressed with the customer support here. They answered my questions in minutes. Great service and great games at phjili368.