மல்லி 25

“உனக்கு இதுதான் முக்கியம்ல. படிப்பு முடியட்டும்னதெல்லாம் சும்மா. நீயும் ஆம்பளதானே. எத்தனை நாளைக்கு சும்மா இருக்கமுடியும்?” குரலில் இளக்காரம் தொட்டு மீழ,

“மங்காஆ!” என்றவனின் ஆத்திரக் குரல் கோபத்தின் உச்சத்தை தொட்டுவந்தது. 

“இப்படி என்ன கூட்டிவந்து அசிங்கப்படுத்தியிருக்க வேண்டாம். எங்கிட்டயே கேட்டிருக்கலாமே? அதான் தாலிகட்டியிருக்கியே? உனக்குதான் எல்லா உரிமையும் இருக்கே?” என நிறுத்தியவள்,  

வார்த்தைகளில் விஷம் தடவி, “படுன்னு சொன்னா, பல்லக்கடிச்சுட்டு படுத்திருக்கப்போறேன்” என்றவள் வார்த்தைகள் கத்தியின்றி இரத்தமின்றி மன்னவன் மனதை கூறுபோட்டுப் பார்க்க, 

“அடிச்சேன்னா பல்லுகில்லெல்லாம் கொட்டிரும் ராஸ்க்கல். ஏதோ சொல்லாம கூட்டிவந்தது தப்புங்கறதால தான் இவ்வளவு நேரம் நீ பேசினதெல்லாம் பொறுத்துட்டுப் போனேன். கல்யாணமாகி எத்தன மாசமாச்சுடி. ஒன்னா ஒரே ரூம்ல ஒரே கட்டில்லதானே படுத்துருக்கோம். என்னைக்காவது என் பார்வை மாறியிருக்கா. விரல் நுனியாவது உம்மேல பட்டிருக்கா?” ஆத்திரமாக ஆரம்பித்தவன்,

நைந்த குரலில், “உன் பார்வையில நான் அவ்வளவு கீழ்த்தரமா போய்ட்டேன்ல. இதுக்கு நீ என்ன முச்சந்தியில நிக்கவச்சு செருப்பால அடிச்சுருக்கலாம்? ஆதங்கத்தில் முடித்தவன், வார்த்தைகளில் மிதமிஞ்சிய அவமானமும் வலியும். என்ன வார்த்தை பேசிவிட்டாள். அவனும் என்ன விரும்பியா அழைத்துச் சென்றான். அவள் உள்ளுக்குள் படும் அவஸ்த்தையை பொறுக்கமாட்டாமல்தானே அழைத்துச் சென்றான். 

“அம்மாச்சியும் இப்படித்தான், பயந்துருக்கேன், யாரோ எனக்கு செய்வினை வச்சுட்டாங்க,‌ கழிப்பு கழிக்கணும்னு கண்ட எடத்துக்கலாம் கூட்டிப் போயி என்ன அசிங்கப்படுத்துச்சு. நீ ஒருபடி மேலே போயி டாக்டர்கிட்ட கூட்டிப் போயிருக்க. படிச்சவன் இல்லையா? அத்தை என்ன பேய் புடிச்சவன்னு சொல்லிச்சு. நீ பைத்தியம்னு சொல்ற. அவ்வளவுதான் வித்யாசம்.” 

எந்த உணர்ச்சியும் இல்லாமல் வெறுமையாக சொன்னவளை கண்களில் வேதனை தாங்கிப் பார்த்தான். அவள் வலி அவனுக்கும் வலிதானே. 

திருமணமான இத்தனை நாட்களில் தானுண்டு தன் வேலையுண்டு எனத்தான் இருவரும் இருந்தனர். அல்லது இருப்பதாக காட்டிக் கொண்டனர். 

திருமணம் முடித்து கல்லூரி கிளம்பும் பொழுதே வண்டியில் அமர்ந்தவள் குறுக்கே பேக்கை வைக்க, அவன் திரும்பிப் பார்த்த பார்வையில் தன்னால் பேக்கை முதுகில் போட்டுக்கொண்டாள்.

“சின்னபிள்ள மாதிரி கூடவே வர்றது, நீங்களும் என்ன வேவு பாக்க வர்றமாதிரி இருக்கு” என என்று சொன்னாளோ அந்த வார்த்தை அவனை ஊசியாக குத்தினாலும், அவளது மனநிலையை புரிந்து கொண்டு அன்றிலிருந்து பஸ் ஓட்டச் செல்வதில்லை. பஸ் ஏற்றி விடுவதோடு சரி.

வார விடுமுறை நாட்களில் தங்கை வீடு, மற்றும் சித்தப்பா வீடுகளுக்கு விருந்திற்கு சென்று வந்தனர்.‌ பிரிக்கப்படாத புதையல் போல் அவளை அருகில் வைத்துப் பார்ப்பதும் ஒரு புதுவித அனுபவமாக அதையும் அனுபவித்துக் கொண்டுதான் இருந்தான். காலையில் அடுப்படியில் மட்டும் அவன் சீண்டலோடு வேலை நடக்கும். அதுவும் வாயளவில் மட்டுமே. கணபதி அடுப்படி பக்கம் எட்டிக்கூட பார்ப்பதில்லை. 

“நல்லா வாக்கப்பட்டு வந்தேன்” என நொந்து கொள்வான். தோளில் துண்டும் கையில் கரண்டியுமாக. பின்னே அவளை சமைக்கவிட்டு நாக்கிற்கு துரோகம் பண்ண அவன் தயாராக இல்லை. 

ஆனால் கிளம்புவதற்குள் அடுக்களையை ஒதுங்க வைத்துவிட்டுதான் செல்வாள்.‌ அவளால் முடிந்தது அதுமட்டும் தான். அவள் சமைக்கத் தயார்தான். இவர்கள் சாப்பிட தயாராக இல்லை. பாதி நாட்கள் குழம்பு தேனியிலிருந்து பெரியகுளத்திற்கு பஸ் ஏறி வந்துவிடும் என்பதால் பெரிதாக கண்டுகொள்வதில்லை.

எப்பொழுதும் இயல்பாக இருப்பவள் சில நாட்களில் மட்டும் மனதளவில் மிகவும் உழன்று தவிப்பது தெரிந்தது. அன்று‌ சரியாக தூங்கமாட்டாள். அந்த மாதிரி நாட்களில் பல் அரைபடுவது அவனுக்கே கேட்கும்.‌ வயிற்றுவலியென சரியாக சாப்பிடமாட்டாள். எதற்கெடுத்தாலும் எரிந்து விழுவாள். இல்லையென்றால் அமைதியாக இறுகிப் போவாள். 

அவன் கவனித்த வகையில் மாதவிலக்கு நாட்களும் ஒழுங்கில்லை. திருமணத்தின் போது அவளிடம் தேதி கேட்கப்பட அப்பொழுதே தனக்கு சரியாகத் தெரியாது என்றுதான் சொன்னாள். இரண்டு மூன்று மாதம் கழித்து வந்தாலும் வயிற்றுவலியால் கல்லூரி செல்ல முடியாதளவிற்கு மிகவும் அவஸ்த்தைப்பட்டாள். தாமரையிடம் கேட்டதற்கு சில பெண்களுக்கு அப்படித்தான் இருக்கும், குழந்தை பிறந்தால் சரியாகிவிடும் என்றார். 

அந்த மாதிரி நாட்களில்தான் பயந்திருப்பதாக மாரியம்மாள் மந்திரிக்க, சாங்கியம் கழிக்க என பேத்தியை அழைத்துச் செல்வார். 

கணபதி, மருத்துவமனையில் இருந்த பொழுதே இவளும் சாப்பிட முடியாமல் இருக்க, அங்கேயே அவளை மருத்துவரிடம் காண்பித்திருந்தான். மீண்டும் அங்கே அழைத்துச் செல்ல எண்டோஸ்கோப் முதற்கொண்டு எடுத்தாயிற்று. பிரச்சினை என்னவென்றுதான் தெரியவில்லை. அவளுக்கு நாள்பட இந்த பிரச்சினை இருப்பதை அறிந்த அந்த மருத்துவர் கொடுத்த ஆலோசனைதான் எதற்கும் சைக்ரியாட்ரிஸ்ட்டைப் பாருங்கள் என்றது. அவன் கூகுள் செய்தவரை அவனுக்கும் அந்த சந்தேகமே. 

எந்த ஒரு‌ உடல் வியாதிக்கும் புறக்காரணிகள் மட்டுமே காரணமாக முடியாது. அகக்காரணிகளும் முக்கிய காரணம். உடம்பு ‌சரியில்லைங்கறது நம்மல பொறுத்தவரை காய்ச்சல், தலைவலி, வயிற்றுவலி, நெஞ்சுவலி… இப்படி.‌ ஆனால் காரணமேயில்லாத எந்த ஒரு வலிக்கும் நாள்பட்ட மன அழுத்தம்தான் காரணம் என்பது நாம் அறியாத அல்லது ஒத்துக்கொள்ள மறுக்கும் ஒன்று. 

தென்னமரத்துல தேள் கொட்டின பனைமரத்துல நெறி கட்டுமானு கேப்போம்ல. உடம்பை பொறுத்தவரை கட்டும்ங்க. சளிப்பிரச்சினையே இல்லாத வரட்டு இருமலுக்கோ, கூச்சத்தோடு சேர்ந்த மின்னல் வெட்டியது போன்று பரவும் இடுப்புவலிக்கோ, வயிற்றில் வரும் அல்சர் பிரச்சினைக்கோ, தீராத தோல்வியாதிக்கோ, மலச்சிக்கலுக்கோ மன அழுத்தமும், தன்னம்பிக்கை இல்லாத பயமும்தான் காரணம் என்பதை உணர மாட்டோம். பதட்டமோ,‌ பயமோ இதயம் படபடத்தாலும், அட்ரீனல் அதிகமாக சுரந்து அடுத்து கலக்குவது அடிவயிறு தானே. 

நம்ம நாட்டுவைத்திய முறையில் ஒரு பழமொழி உண்டு. நோய்க்கும் பாக்கணும், பேய்க்கும் பாக்கணும்கறது. நோய்க்கு என்பது உடல் நோய். பேய்க்கு என்பது மனநோய். பேய்னு ஒன்னு தனியா எல்லாம் இல்லீங்க. சாமியோ, பூதமோ ரெண்டுமே நம்ம மனசுதான். 

நாட்டு மருந்து கொடுக்கறவங்க முதல்ல வேப்பிலை மந்திரிச்சு திருநீறு பூசிட்டுதான் மருந்து கொடுப்பாங்க. முதல்ல நோயுற்ற மனதிற்கு தேவை நம்பிக்கை. சாமி இருக்கு, பயப்படாத என்ற நம்பிக்கையை மனதில் தூண்டிவிட்டு அடுத்துதான் வியாதிக்கு மருந்து கொடுப்பாங்க.

 ஒரு நோய்க்கு உடலை பலப்படுத்துவதை விட, சரியாகிவிடும் என்ற மனதைரியம் தானே முக்கியம். என்னப்பா, உடம்பு சரியில்லையானு ஊர் முழுக்க நலம் விசாரிச்சே ஒரு பயில்வான நோஞ்சானாக்கின கதை எல்லாரும் கேட்டிருக்கிறோம் தானே.

(சின்ன வயசுல வயித்தவலின்னு சொன்னா வீட்ல இருக்குற வயசான கட்டைக, நம்மல கூப்பிட்டு உனக்கு வலிச்சா எனக்கென்ன? எனக்கு வலிச்சா உனக்கென்னனு, சேல முந்தானையால விளையாட்டா மந்திரிச்சு, சரியாப்போச்சு! போன்னு சொன்னத எத்தனை பேர் நம்பியிருக்கோம்) மெத்தப்படித்த மேதாவிகளுக்கு இது எப்படி குணமாகும் என ஆராயத் தோணும். நம்பிக்கை அதானே எல்லாம். இதையே சைக்கலாஜிக்கல் ட்ரீட்மென்ட் என ஆங்கிலத்தில் சொன்னால் ஓகே என நம்பும். 

இன்றைய காலகட்டத்தில் சைக்கலாஜிக்கல் ட்ரீட்மென்ட். அன்று?

அதற்குதான் மந்திரிக்கிறது, பேய் ஓட்டறது போன்ற உளவியல் ரீதியான மருத்துவம் வழமையில் உண்டு. போலிகளால் அது மதிப்பிழந்துவிட்டது. 

மன அழுத்தத்தால் மூலையோடு முடங்கி, உள்ளுக்குள்ளேயே அடங்கி, ஒடுங்கி கிடக்கும் உணர்வுகளை உடுக்கைச் சத்தம் மாதிரி வேறு எந்த ஒரு வாத்தியத்தாலும் தட்டியெழுப்ப  முடியாது. ஆங்காரமாக ஆடவிட்டு அழுத்திக் கிடக்கும் உணர்வுகளை வடித்தெடுக்க முடியாது. 

சாமி ஆடுறவங்களையோ, பேயாடுறவங்களையோ நல்லா கவனிச்சா தெரியும். முதலில் உணர்வுகள் அழுகையாகத்தான் வெளிப்படும். மெள்ள மெள்ள ஆங்காரம் எடுக்கும். அடக்கிய கோபமோ, தாபமோ, ஏக்கமோ வெடித்துக் கிளம்பும். வாய்விட்டு சிரிச்சா நோய் விட்டுப் போச்சுங்கற மாதிரி, மனசு விட்டு அழுதுட்டாலே மனநோய் போயிரும்ங்க. அழுத்தக்காரி அழ மாட்டானு சொல்வோம்ல. அந்த அழுத்தத்துல எவ்ளோ இருக்குற அவங்களுக்கு மட்டும் தான் தெரியும். இன்னைக்கு எழவு வீட்ல அழறதுக்குகூட கௌரவம் பாக்குறாங்க. 

ஆக மொத்தம் சாமி, பூதம் ரெண்டுமே நமக்குள்ள இருக்கும் ஒரே உணர்வுதாங்க. கொட்டுச்சத்தத்துக்கு கையத்தூக்கி ஆடினா சாமி. உடுக்கை சத்தத்துக்கு தலையைச் சுழற்றி ஆடினா பேய். இரண்டுமே அடக்கப்பட்ட உணர்வுகளின் வெளிப்பாடு. நூலிழையில் வேறுபடும். இன்று கார்ப்பரேட் சாமிகளும் இதைத்தானே செய்கின்றன… ஆடவிட்டு பாக்கறது. 

இப்ப சாதாரணமா வயசுப் பிள்ளைககிட்ட பாக்கறது ஒழுங்கற்ற மாதவிடாய். ஆடிப்பட்டம் தேடி விதை. பருவத்தே பயிர் செய். பருவம் தப்பிய மழை வெள்ளாமைக்குதாவது. இந்த மாதிரி பழமொழிகள் உணர்த்துவதென்ன. பருவம் எந்தளவு முக்கியம் என்பதுதானே. 

புல் பூண்டு முதற்கொண்டு எல்லா உயிரினங்களுக்கும் மலரும் பருவம்னு ஒன்னு இருக்கு. இளங்குறுத்துக்கள் மொட்டுவிட்டு மலரும் பருவம் பதின் பருவம். புரியாத பல புதுவித அனுபவங்களை பயத்தோடு அனுபவிக்கும் பருவம். அறிந்தும் அறியாமல் சில விஷயங்களை அறிந்து கொள்ளத் துடிக்கும் துடிப்பான பருவம். தனக்குள் நடக்கும் மாற்றங்களுக்கு ஏன், எதற்கு என விடை தேடி, தெரியாமல் அலைப்புறும் பருவத்தில் தான், பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு, அடுத்து கல்லூரி, வேலை, கல்யாணம் என மொட்டுக்களின் வாயை விரிய விடாமல் அழுத்தம் கொடுத்து ஊசிநூல் கொண்டு தைத்து பருவத்தடை செய்கிறோம். 

இதில் ஆண்குழந்தை, பெண் குழந்தை என்ற பேதமின்றி சில வக்கிரம் பிடித்த மிருகங்கள் ஆங்காங்கே நடத்தும் பாலியல் வன்கொடுமைகள் வேறு அவர்களை பருவக்கொலை செய்துவிடுகிறது. 

அப்படி ஒரு சிக்கலில் மாட்டித்தான் வெளிவர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறாள் மங்கை. 

கையில் இருந்த சாக்லேட் ருசியில் தனக்கு என்ன நடக்கிறது எனப் புரியாமல் இருந்தவள், வளர்ந்து பருவம் தொடங்க என்ன நடந்தது என புரிய ஆரம்பிக்க, தன் கண்முன் நடந்த அம்மாவின் பலாத்கார முயற்சியும், நினைவுக்கு வரும் பொழுதெல்லாம் அவ்விடத்தில் தன்னை பொருத்திப் பார்த்து மன உளைச்சலுக்கு உள்ளானவளுக்குள் நடந்ததோ உணர்ச்சிக்கொலை. ஆண், பெண் சேர்க்கை என்றதும் பயம் என்பதையும் தாண்டி அருவருக்கத்தக்க ஒரு ஒவ்வாமை நிரந்தரமாக அவளிடம் குடி கொண்டுவிட்டது. 

இதை வேந்தன் உணர்ந்தது, எப்பொழுதெல்லாம் சிறுபிள்ளைகள் பாலியல் வன்கொடுமை என செய்தி கண்ணில் படுகிறதோ அப்பொழுதெல்லாம் அவள் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாவது தெரிந்தது. உடனே அறைக்குள் முடங்கிவிடுவாள். அந்த செய்தி கேட்காத வகையில் காதில் ஹெட்செட் எடுத்து மாட்டிக் கொள்வாள். மறுநாளே அல்சர் பிரச்சினை தலைதூக்கும். இதை இப்படியே வளறவிடக்கூடாதென்று தான் மனநல மருத்துவரிடம் அழைத்து வந்தான். 

உடம்பில் ஒரு பிரச்சினை என்றால் மருத்துவரை பார்ப்பது போல், மூளைக்கும் ஒரு பிரச்சினை என்றால் மனநல ஆலோசனை பெறுவதென்பது இன்றளவும் எளிதான‌ காரியமில்லை.‌ இன்று‌ இருவரும் கோவிலுக்கு செல்வதாக சொல்லிவிட்டுத்தான் மதுரைக்கு அழைத்து வந்தான். வந்தபிறகு தான் அவளுக்கே எங்கு வந்திருக்கிறோம் என்றே‌ புரிந்தது. 

இத்தனைக்கும் அது மருத்துவமனை இல்லை. வீட்டோடு கூடிய கிளினிக். மினி பங்ளா அமைப்பில்தான் இருந்தது. பெயர்ப்பலகை பார்த்துதான் கண்டுகொண்டாள்.‌ எள்ளும் கொள்ளும் முகத்தில் வெடிக்கப் பார்த்தவள் வேகமாக வெளியேறிவிட்டாள். 

எவ்வளவோ அழைத்தும் திரும்பிக் கூட பார்க்கவில்லை. வேகமாக கார் கதவைத் திறக்க, லாக்கில் இருக்க திறக்க முடியாமல் போக விறுவிறுவென நடையைக் கட்டினாள். உள்ளத்தின் கொந்தளிப்பு நடையின் வேகத்திலும், கைவீச்சிலும் தெரிந்தது. 

காரை எடுத்தவன், அவளை உரசிநிறுத்தி கதவைத் திறந்துவிட, ஏறாமல் நின்றாள்.

“சீனாக்காம ஏறு மங்கா!” என அதட்ட, வேறுவழியின்றி ஏறிக்கொண்டாள். ஊரைக் கடந்ததும் சாலையோரமாக காரை நிறுத்தி இறங்கினான். உடன் இறங்கியவள்தான் வார்த்தையெனும் வாள்கொண்டு அவன் இதயம் கீறிப் பார்த்தாள். இருவரது பார்வையும் தொலைவில் வெறித்துக் கெண்டிருந்தது. காரில் சாய்ந்து நின்றவன், ஓய்ந்து நின்றவளிடம், 

“உன்னைய இப்படி பாக்க முடியலடி. நீயா சொல்லுவேனு நானும் இத்தனை நாளா பொறுத்துப் பாத்தேன். இன்னும் எம்மேல உனக்கு நம்பிக்கை வரல போல. உன் கண்ல கடலளவு ஆசையும் தெரியுது. அதே சமயம் நான் ஏதேச்சையா கிட்ட வந்தாலே மிரள்ற. அது எனக்கு எவ்ளோ அவமானமா இருக்கு தெரியுமா? ஏதோ என்னை பொறுக்கி மாதிரி ஃபீல் பண்ண வைக்கிற. சாதாரணமா ஒரு‌ புருஷன் முதல் தடவ நெருங்கறப்ப வர்ற பயம் மாதிரி தெரியல. அதுல ஒரு தாபம் தெரியும். ஆனா உன் கண்ல வெறும் பயம் மட்டும்தான் தெரியுது. அதனாலதான் இங்க வந்தாலாவது ஏதாவது பேசுவியோனு நெனச்சேன். வீட்லயே சொன்னா கத்துவ. மாமாவுக்கும் தெரிய வரும்னுதான் சொல்லல. ஆனா, என்ன வெறும் சதைக்கு அலையறவன் ரேஞ்சுக்கு பேசிட்டயில்ல?” வேதனையின் உச்சம் தொட்டு விழுந்த வார்த்தைகளின் ரணம் அவளையும் கீறிப்பார்த்தது இப்பொழுது.‌ 

அவளுக்கு மட்டும் ஆசையில்லையா? கண்களில் காதலைத் தேக்கி அவன் பார்வை அவளை வருடும் பொழுதெல்லாம் தவித்துப் போகிறாள். அவன் வலிய கரங்களுக்குள் சிறைப்பட்டு, நெஞ்சத்தில் மஞ்சம் கொண்டு, உருகி, கறைந்து காணாமல் போகத்தான் உள்ளம் ஏங்குகிறது. ஆனால் உடனே ஒரு ஒவ்வாமை வந்து ஒட்டிக்கொள்கிறது. அதன் பிறகு மனம் அவன் மீது லயிக்க மறுக்கிறது. வெட்டவும் முடியாமல் ஒட்டவும் முடியாமல் பெண்ணவள் இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்துப் போகிறாள். 

“எனக்கு மட்டும் உங்கூட வாழனும்னு ஆசையில்லையா? உன்ன, எனக்கு ரொம்பப் புடிக்கும் மாமா! நீ தள்ளிப்படுக்கும் போதெல்லாம் மனசு எவ்வளவு வலிக்கும் தெரியுமா? ஆனா, நானும் எவ்வளவோ முயற்சி பண்றே. என்னால முடியலயே? அத நெனச்சாலே அருவருப்பா இருக்கே? நான் என்ன பண்றது?” 

சிறு குழந்தை போல் கண்களில் கண்ணீர் பொங்க கேட்பவளை இழுத்து அணைத்துக் கொள்ள துடித்தது மனம். அதற்கு அவள் மனம் ஒத்துழைக்க வேண்டுமே. அருகில் நெருங்கினாலே முகம் அசூயை காட்ட, எப்படி நெருங்குவது? 

இத்தனை நாட்களில் இன்றுதான் மாமா என அழைக்கிறாள். ஆசையை மனம் விட்டு சொல்கிறாள். ஆனால் அதை அனுபவிக்கும் நிலையில் அவனும் இல்லை. அவளும் இல்லை. 

கண்கள் கலங்கி சிவப்பேற வேறுபுறம் பார்வையைத் திருப்பிக் கொண்டான்.‌ எதிர்க்காற்று முகத்தில் அறைய, கண்ணீர்த்துளி காற்றோடு பறக்க, அடுத்து அவள் பேசிய வார்த்தைகள் நெஞ்சில் அறைந்தது. அதிர்ந்து திரும்பினான்.

“எல்லாம் அந்த படுபாவியால. இன்னும் கல்யாணி, கல்யாணின்னு என் காதுக்கிட்ட சிகரெட் வாசனையோட அவன் மூச்சுக்காத்து கேக்குது மாமா! எங்கம்மாவ நெனச்சுக்கிட்டு என்னை அவன்” என சாலையென்றும் பாராமல் முகத்தைமூடி வெடித்தாள் பெண்.‌ 

கைகள் இறுக, கண்கள் இரத்தவரிகொள்ள, அவளை அணைத்து ஆறுதல் சொல்ல இயலாத தனது கையாலாகத்தனத்தை நினைத்து காரை ஓங்கி குத்தினான். வல்லூறு ஒன்று வீட்டிற்குள்ளேயே தன் மொசக்குட்டியை வட்டமிட்டிருந்தது தெரியாமல் இருந்ததை நினைத்தும் கூனிகுறுகிப் போனான் அன்று அவனும் சிறுவன் என்பதை மறந்து. 

ஆனால் மாமன் அவனுக்கு கொடுத்த தண்டனையை நினைத்து இன்று ஆறுதல் பட்டுக்கொண்டான். மகளிடமும் அவன் நடந்து கொண்டது தெரிந்திருந்தால் அவர் கையாலேயே கண்டதுண்டமாக வெட்டி வீசியிருப்பார். 

பக்கத்துவீட்டு சிறுபிள்ளையிடம் தன் வக்கிரத்தை காட்டிய சென்றாயனை ஊரே தேடிக்கொண்டிருக்க, அப்பொழுதுதான் வேந்தனும், மாமனிடம் கல்யாணியிடம் அவன் நடந்து கொண்டதைச் சொன்னான். 

ஊரார் கையில் அவன் சிக்கும் முன் கணபதி கையில் சிக்கியிருந்தான். ஆத்திரம் தீர அவனை அடித்து நொறுக்கியவர், “நீயே கயித்துல தொங்கிறு. இல்ல, ஊர் ஆளுகளே உன்ன உரிச்சு தொங்கவிட்டுருவாங்க. கண்டிப்பா போலீஸ் கையில உன்ன சிக்கவிடமாட்டேன்” என மிரட்டி அவனையே தன்னால் கயிற்றில் தொங்கவைத்தார். அந்த குற்ற உணர்ச்சியில்தான் அவனது மகன்கள் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டது. 

2 thoughts on “மல்லி 25”

  1. [2762]edmtogel: Login Resmi Link Alternatif & Situs Slot Gacor Hari Ini,edmtogel menyediakan akses login resmi dengan berbagai pilihan slot gacor. Nikmati kemudahan daftar casino online dan deposit pulsa tanpa potongan. Gabung sekarang! visit: edmtogel

  2. [822]Sultan189: Login Resmi Situs Slot Gacor dan Casino Online Terpercaya,Sultan189 menyediakan akses login resmi untuk main slot gacor dan casino online deposit pulsa. Download APK sekarang dan nikmati kemudahan bermain baccarat online. visit: sultan189

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top