தன்முன் நீண்ட தண்ணீர் பாட்டிலை தரையில் மடங்கி அமர்ந்திருந்தவள் நிமிர்ந்து பார்த்தாள்.
“எந்திரி! முகம் கழுவு!”
“…”
“எம்மேல நம்பிக்கை இல்லையா?”
“நான் சொல்றது புரியுதா இல்லையா? நீ கிட்டவந்தாலே” என நிறுத்தியவள் ஊற்றெடுத்த கண்களில் நிராசையோடு அவனை ஏறிட்டுப் பார்க்க,
“பிரச்சினை இல்லாதவங்கனு யாருமே இல்ல. அதே மாதிரி தீர்க்கமுடியாத பிரச்சினைனும் எதுவுமில்லை. சாவியில்லாம பூட்டு செய்யறதில்ல. மொத எந்திரிம்மா!”
“இவ்ளோ சொல்றே, என்ன நடந்துச்சுனு கேக்க மாட்டியா?” தொண்டையடைக்க கேட்க,
“தேவையில்லாத ஆணி. சில பூட்டுகள திறக்காம சாவியோட தூக்கிப் போட்டர்றது நல்லது. உனக்கு என்ன வேணா நடந்திருக்கட்டும். உனக்கு அப்ப அஞ்சு இல்லேன்னா ஆறு வயசுதான். இவ்ளோ நாளைக்கு நீயே மறந்திருப்ப. ஆனா, அதத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள்தான் உன்ன மறக்கவிடாம பண்ணிருக்கு. ஒருவேள அம்மா, அப்பான்னு மத்தபிள்ளைக மாதிரி ஒரு நார்மல் லைஃப் வாழ்ந்திருந்தா இந்தளவுக்கு உனக்கு அதன் பாதிப்பு இருந்திருக்காதோ என்னவோ?”
கிளிப்பிள்ளைக்கு சொல்வது போல் பொறுமையாக எடுத்து சொன்னான். அவள் இளமனதில் பதியம் போட்ட விஷச்செடியை இது ஒன்னும் பெரிய விஷயமில்லை என வேரோடு தோண்டி எடுத்து வெளியே போட தன்னாலான முயற்சியை கையிலெடுத்தான். அவன் சொன்னமாதிரி அதைத் தொடர்ந்து அம்மா வீட்டை விட்டு சென்றது, மாமா வீட்டில் உதாசீனம், நிராகரிப்பு, அம்மாவைப் போல பேரெடுத்துறாத போன்ற சுடுசொற்கள் அந்த நினைவுகளை விட்டு வெளியேறவிடாமல் அவளை மனதளவில் முடக்கிப்போட்டுவிட்டது.
வேந்தனும், அன்புக்கு ஏங்கும் குழந்தை பருவத்தில் ஏற்படும் சைல்ட்ஹுட் ட்ராமா (childhood trauma) எனும் பிரச்சினை என்றளவில் தான் நினைத்திருந்தான். ஆனால் இப்படி ஒரு பூதம் கிளம்பும் என்று எதிர்பார்க்கவில்லை. மீண்டும் விளக்கம் கேட்டு அதை மீண்டும் மீண்டும் நினைவு படுத்திப்பார்ப்பதில் யாருக்கு என்ன லாபம். வேதனைதான் மிஞ்சும். அதன் தாக்கம் அவளுக்கு மனதளவில்தான். உடலளவில் இல்லை. மீண்டும் கீறிவிடும் எண்ணமில்லை. இப்பொழுது தேவை காயத்திற்கு மருந்து. அது அன்பு மட்டுமே. இவளிடம் அது மட்டும் செல்லுபடியாகாது. கொஞ்சம் பிடிவாதம் பிடிக்கும் குழந்தை. கண்டிப்பும் அவசியம். இதுவரை யாரிடமும் பிடிவாதம் பிடித்தோ, தன் கோபத்தை உரிமையாகக் காட்டாத ஏக்கம். உரிமையுள்ள இடத்தில் வெளிப்படுகிறது.
கோபமும் அன்பின் வெளிப்பாடு தானே. முகம் தெரியாதவர்களிடம் கூட சிரித்துப் பேசமுடியும். கோபத்தை உரிமையிருக்கும் இடத்தில் மட்டுமே காட்டமுடியும். தப்பு செஞ்சா குழந்தைய அடிக்கிறோமே… வன்மத்தாலா? அது தப்பு பண்ணிறக்கூடாதுங்கற அன்பும் அக்கறையும் தானே?
“அரசி!” பாட்டிலை இடக்கைக்கு மாற்றியவன் இப்பொழுது வலக்கையை அவள் முன் நீட்டினான். கை பிடிக்காமலே எழுந்தாள். கைகூட பிடிக்க மாட்டாளாமா? சுள்ளென உச்சிமண்டை காய்ந்தது.
தண்ணீரை வாங்கி முகத்தில் அடித்துக் கழுவினாள். துப்பட்டா கொண்டு முகம் துடைத்தவள், தண்ணீரை அப்படியே வாய்க்குள் சரித்தாள். அதற்குள் அவனுக்கு மாமனிடமிருந்து அழைப்பு வர, அழைப்பை ஏற்றான்.
“எங்கடா மாப்ள இருக்கீங்க?”
“ஏன் மாமா?”
“நம்ம கார் ரோட்ல நிக்கிதுன்னு நம்ம பஸ் டிரைவர் ஃபோன் பண்ணாப்ல. ஏதாவது பிரச்சினையாடா?” அந்த வழியாக சென்ற அவர்கள் பஸ் டிரைவர் யாரோ பார்த்த வேலை.
“மாமா! கார் ரோட்ல நிக்காம நம்ம வீட்டு மொட்ட மாடியிலயா நிக்கும்.” கடுப்பாக கேட்க,
“கார்ல ஏதும் பிரச்சினையானு கேட்டேன்டா? அதுக்கு ஏன் இப்படி வள்ளுனு விழுகுற?”
“அதெல்லாம் ஒன்னுமில்ல மாமா. சும்மா காலாற இறங்கி நிக்கிறோம். உம்ம பிள்ளைய கடத்திட்டெல்லாம் போகல. ஃபோன வையும்!” என்றவன்,
“குதிருக்குள்ள உக்காந்து பாப்பீரு போல” என வாய்விட,
“அடி செருப்பால! மாமங்கிட்ட பேசற பேச்சாடா?”
“இப்ப நீரு மட்டும் எப்படி பேசறீரு. மருமகன்கிட்ட பேசற மாதிரியா இப்ப பேசினீரு? அந்நியத்துல பொண்ணு கட்டியிருந்தா மரியாதையாவது கெடச்சிருக்கும்.” அவனையும் மீறி வார்த்தைகள் சலிப்பு தட்டிவிட,
கவலை தோய்ந்த குரலில், “ஏன்டா! ஏதோ மாதிரி பேசற? ரெண்டு பேத்துக்கும் ஏதாவது பிரச்சினையாடா? நான் குடும்பமா வாழலதான். அதுக்குனு பொண்டாட்டி கூட வாழாதவன் இல்லையே? நானும் பாத்துட்டுதானே இருக்கேன்.”
சரியாக மருமகனின் நாடி பிடிக்க சுதாரித்துக் கொண்டான். தடுக்கி விழுந்தவரது கவனம் முழுவதும் தன் பிள்ளைகள் தடுக்கி விழுந்துவிடக் கூடாதென்றுதானே சுதாரிப்பாக இருக்கும்.
குரலை உயர்த்தியவன், “இதத்தான் இப்ப சொன்னேன். எங்க வாழ்க்கைய நாங்க பாத்துக்கறோம். பொடனிக்குப் பின்னாடியே நிக்காதீரும். மொத உம்ம பிள்ள படிப்பு முடியட்டும். வருஷம் முடியறதுக்குள்ள பேரனோ, பேத்தியோ பெத்து கொடுத்தாதான் நீரு பிஸியாவீரு. சும்மா இருந்தா இப்படித்தான் கண்டதையும் யோசிக்கச் சொல்லும்.” மகளிடம் காட்ட முடியாததை மாமனிடம் காட்டினான்.
“இப்ப அப்பாவ எதுக்கு வையிறீங்க. எதுனாலும் எங்கிட்ட பேசுங்க. அவரே மேலுக்கு முடியாதவரு.”
மகள் தன்னைத் தாங்கிப்பேசியது ஃபோனில் கேட்க பெருமை தாங்கவில்லை கணபதிக்கு.
“அப்பாவ சொன்னா மட்டும் மூக்குமேல கோவம் வருமே? அவரு எனக்கு மாமனுங்கூட. நாங்க எப்படி வேணா பேசிக்குவோம். ரெண்டு பேரும் சேந்துக்கிட்டு நல்லா வச்சு செய்றீங்கடி. இப்பல்லாம் மக மேலதான் பாசம் பொத்துக்கிட்டு வருது. நானெல்லாம் யாரோதான்.” தன் ஆதங்கத்தை கொட்ட, அவன் சொன்ன தொனியில், மனம் ஆற்றமாட்டாமல்,
“டேய்… மாப்ள!” என பதறியவர் குரல் தழுதழுத்தது. நெற்றியைத் தேய்த்தவன் சற்று நிதானித்து,
“மாமா! நாங்க வர லேட்டாகும். இன்னைக்குதானே வெளிய கூட்டி வந்திருக்கேன். வெளியவே பிள்ளைய கூட்டிப் போகலைனு நீருதானே குறை படிச்சீரு. சாப்பிட ஹோட்டல் கூப்பிட்டா கூட உம்ம மக வரமாட்டேங்குறா.” குரலை வெகுவாகத் தழைந்து மாமனிடம் மகள் மீது குற்றப்பத்திரிக்கை வாசிக்க,
“அந்தப்பிள்ளைக்கு ஹோட்டல் சாப்பாடு சேராதுலடா. பொறுமையா பேசி கூட்டிப் போயிட்டுவாடா. சூதானமா போயிட்டு வாங்க“ என்றார் தன்மையாக. இழுத்து மூச்சுவிட்டவன்,
ஃபோனை அணைத்துவிட்டு,
“போலாமா?” என்றான்.
மறுபடியும் கிளினிக்கா எனும் யோசனையில் “எங்க?” என,
“இப்படியே பயத்தோட எத்தனை நாளைக்கு வாழப்போற? மாமா இருக்கேன்டி. உன்னைய இப்படியே விடமுடியாது. சின்ன பிள்ளைக மருந்து குடிக்கலைனா மூக்கப்புடிச்சு ஊத்தறதில்ல? அது மாதிரிதான். ஒரு தடவை போய்த்தான் பாப்போமே? இப்ப என்ன, என்கூட சேந்து வாழ முடியாது. அவ்வளவுதானே?” என கேட்க,
அவசரமாக, “நான் எப்ப அப்படி சொன்னேன்?” என பதறினாள். அவளது பதட்டத்தைக் கண்டு முகம் புன்னகை பூசிக்கொள்ள,
“அரைவேக்காடு, நீயே விட்டுப்போகணும்னு நெனச்சாலும் நான் விடமாட்டேன். கட்டில் மட்டுமே வாழ்க்கையில்லடி. அதுக்காக நாம சந்நியாசம் வாங்கி போகலாம்னு சொல்லல” என்றவனை, ‘அதானே பாத்தேன்’ என்பதுபோல் பார்க்க,
”உன்ன ரொம்ப புடிக்கும் மாமான்னு கண்ணீரோடு சொன்ன பொண்ண விட்டுப்போக நானென்ன கேணயனா? என்னைக்குனாலும் சாகத்தானே போறோம்னு சாப்பிடாம இருக்கோமா? இல்ல, சாப்பிடறதாலேயே சாகாம இருக்கப்போறோமா? என்னைக்கு அம்மா வயித்துல கருவா உருவானோமோ அன்னைக்கே நாம கோடிக்கணக்கான பேர முந்திட்டு ஜெயிச்சுருக்கோம் மங்கா. நாமெல்லாம் கோடியில ஒருத்தர்டி. இதெல்லாம் என்ன ஜுஜிபி. எதுனாலும் ஒரு கை பாக்கலாம் வாடி. உன் இளா மாமா இருக்கேன்.”
அவன் தெம்பு சொன்னவிதத்தில் அவளுமே சற்று மனம் இலேசாக சிரித்துவிட்டாள். நாம் உயிர்கொள்ளும் பொழுதே கோடான கோடி உயிரணுக்களை ஜெயித்து விட்டுதானே அம்மா கருப்பைக்குள் சூல் கொள்கிறோம். அங்கேயே நாம் வெற்றி பெற்றுவிட்டோம். ஒரு தடவை வெற்றிக்கோப்பை வாங்கிவிட்டால் அதோடு போட்டி முடிந்துவிடுமா என்ன? அடுத்த போட்டிக்குத் தயாராக வேண்டியதுதானே?
அதனால் போராட்டம் நமக்கு புதிதல்ல. போராட்டக் களங்கள்தான் புதிது. சில நேரங்களில் போராட்டம் நமக்குள்ளே, நம்மை நாமே போராடி ஜெயிக்க வேண்டியிருக்கிறது.
காரில் இருவரும் ஏறிக் கொள்ள இந்த முறை கார் மீனாட்சியம்மன் கோவிலை நோக்கிச் சென்றது.
பூஜைக்கு தேங்காய், பழம் வாங்கிக் கொண்டவன், அவளுக்கும் பூ வாங்கிக் கொடுக்க, மறுக்காமல் வாங்கி வைத்துக் கொண்டாள். தோள்வழி வளிந்த பூச்சரத்தோடு அவளைப் பார்ததவன் கண்கள் அவளை விட்டு அகலமறுக்க, அவளும் அவனைத்தான் ஏறிட்டாள். அவன் பார்வை என்ன உணர்த்தியதோ சட்டென பார்வையை தழைத்துக் கொண்டாள். புதன் கிழமை என்பதால் கோவிலில் கூட்டம் குறைவாகவே இருந்தது. மாதரசியின் தரிசனம் மனதிற்கு நிறைவாக இருக்க, அலைப்புற்ற மனம் சற்று அமைதி அடைந்ததுபோல் இருந்தது இருவருக்குமே.
கோவில் பிரகாரத்தில் சற்று நேரம் அமர்ந்து எழுந்தனர்.
வெளியே வந்தவர்கள் தேங்காய் பழத்தை கவரில் போட்டு வாங்கிக் கொண்டனர். முதலிலேயே கோவிலுக்கு வந்து அமைதியாக எடுத்துச் சொல்லி கூட்டிப் போயிருக்கலாமோ என இப்பொழுது தோன்றியது. சொன்னால் புரிந்து கொண்டிருப்பாள். சொல்லாமல் கொள்ளாமல் நேரடியாக அங்கே அழைத்துச் செல்லவும், எனக்கென்ன மனநிலை பாதிப்பா என்ற எண்ணத்தில் உலையாகக் கொதித்து, பாலாக பொங்கிவிட்டாள்.
மதியம் சாப்பாட்டு நேரமும் நெருங்கிவிட்டது. மருத்துவமனைக்கு அழைத்து மீண்டும் வேறோரு அப்பாயின்மென்ட் புக் செய்தான். அது மூன்று மணிக்கு என மெசேஜ் வந்தது. அதற்கு இன்னும் நேரமிருக்க, ஹோட்டல் அழைத்து வந்தான்.
“என்ன சாப்பிடற. பிரியாணி சொல்லவா?”
“கோயிலுக்கு போயிட்டு பிரியாணியா?” என்றாள்.
“அதான் போய்ட்டு வந்தாச்சுல. இனி சாப்பிடலாம்” என்றவன் இருவருக்கும் சொல்ல,
“என்னால அவ்ளோ சாப்பிட முடியாது. வேஸ்ட்டாயிரும். எனக்கு வேற ஏதாவது ஆர்டர் பண்ணுங்க!”
“மாமா எதுக்கு இருக்கேன். நாங்கெல்லாம் முழுக்கோழிய ஒருமிக்க திங்கிறவிங்க. ஆனா, ஒரு வெடக்கோழி ரொம்ப நாளா ஆட்டங்காட்டுது.”
“ஆரம்பிச்சாச்சா…”
“இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே? அதென்ன, சந்திரமுகியா மாறினா மட்டும்தான் மாமான்னு கூப்பிடுவியா?” எனக் கேட்க அமைதியாகிவிட்டாள்.
“அன்னைக்கும் சொன்ன?” என ஆரம்பிக்க,
“ஐயா சாமி! ஏதோ தெரியாத்தனமா சொல்லிட்டே. பேச்ச விடுவீங்களா?” என சிரித்துவிட்டான்.
“நீ இப்ப கூப்பிட்டதச் சொல்லல. அன்னைக்கி முதன்முதலா வீட்டுக்கு வந்தப்ப காய்ச்சலோட சுயநினைவு இல்லாம கூப்பிட்ட. அதுவும், டேய்… இளான்னு கூப்பிட்ட. அது மாதிரி எப்ப கூப்புடுவே.”
“டேய் ன்னா!” என அதிர்ந்து பார்க்க,
“ம்ம்ம்!”
“அப்படியெல்லாம் கூப்டிருக்க மாட்டேன்” என்றாள் மூக்கைச் சுருக்கி.
“சுய நினைவில்லைனா கூப்பிடுவ போல” என பேசிக்கொண்டிருக்க ஆர்டர் செய்த பிரியாணி வர, தட்டில் பாதியளவு போட்டுக் கொண்டு மீதியை அவன் பக்கம் தள்ளி வைத்தாள்.
*****
“குட், த்ரீ சிட்டிங்ஸ்லயே நல்ல இம்ப்ரூவ்மென்ட் மங்கா.”
“தாங்க்ஸ் டாக்டர்.”
“அத உங்க மாமாவுக்கு சொல்லுங்க” என மருத்துவர் சொல்ல, அருகில் அமர்ந்திருந்தவனை கண்களில் சிரிப்பு மின்ன திரும்பிப்பார்த்தாள். அவளை அப்படிப் பார்க்க மனம் முழுக்க சந்தோஷம் நிரம்பித் தழும்பியது.
அன்று அழைத்து வந்ததிலிருந்து அவள் அடித்த கூத்தை எண்ணி இன்றும் சிரித்துக் கொண்டான். பதினைந்து நாட்கள் இடைவெளிகளில் மூன்றாம் முறை அழைத்து வந்திருந்தான்.
முதன் முறை அவளை சமாதானப்படுத்தி, கோவிலுக்கு அழைத்து சென்று, அடுத்து சாப்பிட வைத்து கிளினிக் அழைத்து வந்தான். வந்தவள், அவனிடம் ஆயிரம் சந்தேகம் கேட்டாள். தலையச்சுத்தி வயர மாட்டி ஏதாவது டெஸ்ட் பண்ணுவாங்களா? படத்துல வர்ற மாதிரி கண்ணு முன்னாடி பெண்டுலம் மாதிரி ஆட்டி மயக்கத்துல வச்சு கேள்வி கேப்பாங்களா? கரண்ட் ஷாக் வைப்பாங்களா என தொணதொணக்க,
“என்னமோ நான் அடிக்கடி வந்தமாதிரி கேக்குற? நானும் இப்பதான் வர்றேன். ஆன்லைன்ல பாத்துதான் அப்பாயின்மென்ட் புக் பண்ணேன். உள்ள போனா தெரியப் போகுது” என அதட்ட வாயை மூடிக் கொண்டாள். இருந்தாலும் உள்ளுக்குள் பயம்தான். படபடப்பாகவே அமர்ந்திருந்தாள்.
ஆனால் அவள் நினைத்த மாதிரி எதுவும் நடக்கவில்லை. பேச மட்டுமே செய்தார். ஆனால், வேந்தனை வெளியே போகச் சொல்லிவிட்டார் நாற்பதுகளில் இருந்த அந்த மருத்துவ பெண்மணி.
பின்னே… போனதிலிருந்து அவர் மங்கையிடம் கேட்ட கேள்விக்கெல்லாம் முந்திரிக் கொட்டையாட்டாம் முந்திக்கொண்டு இவன் பதில் சொன்னால், அவனை சிறிது நேரம் வெளியே இருக்கச் சொல்லிவிட்டார்.
அவளிடம் பேச்சுக் கொடுக்க, அவள் தயங்கி தயங்கி அறையும் குறையுமாக சொல்ல, அவர் மருத்துவ அனுபவமும், வயதும் பிரச்சினை என்னவென்று புரிந்தது. இதைவிட மோசமான எத்தனையோ பேரை பார்த்தவர்.
அவளை அனுப்பிவிட்டு அவனை மட்டும் வரச் சொன்னார்.
“என்ன டாக்டர். ஓ.சி.டி.யா, சைல்ட் ஹூட் ட்ராமாவா?” என கேட்க, அவனது ஆர்வக்கோளாறைப் பார்த்தவர்,
“கூகுளாக்கும்?” என்றார் நக்கலாக.
“ஆமா டாக்டர். அவ நடந்துக்கிட்டது அப்படித்தான் இருந்தது.”
“ஓ… அப்படியே அதுலயே ட்ரீட்மென்ட்டும் பாத்துக்க வேண்டியதுதான?”
“என்ன டாக்டர், இப்படி சொல்றீங்க?” என்றான் அசடு வளிய.
“அவங்களும் அப்படித்தான் நெனச்சுருக்காங்க. தனக்கு இருக்குற பிரச்சினைய கூகுள் செஞ்சு பாத்ததுல, அப்சசிவ் கம்பல்ஷன்னு நெனச்சுக்கிட்டு அதுக்கு தகுந்தமாதிரி அவங்க மைன்ட் செட் ட்யூனாகியிருக்கு. சில பல வியாதிகளுக்கு ஒரே மாதிரி சிம்டம்ஸ்தான் காமிக்கும். டாக்டர்ஸ்தான் கண்டுபிடிச்சு சொல்லணும். இவங்களுக்கு இருக்குற பிரச்சினை சைல்ட் அப்யூஸ்ஸால வர்றது. என்ன நடந்ததுன்னு சரியா மைன்ட்ல இல்ல. ஆனா, அதனோட தாக்கம் அதிகம். எப்பவுமே கற்பனைக்கு வீரியம் அதிகம். அம்மாவ மாதிரி நம்மையும் பண்ணிருந்தாங்கற கற்பனையிலதான் இந்த பாதிப்பு. அதோட நீங்க சொன்ன சைல்ட்ஹுட் ட்ராமாவும் சேர்ந்ததால பிரச்சினை அதிகமாயிருக்கு.”
“தேவையில்லாத தாட்ஸ், கெட்ட கனவு, தேவையில்லாத பயம் இந்த மாதிரி. நமக்கெல்லாம் வண்டில போகையில லாரி எதுக்க வந்தா ஒதுங்கணும்னு தோணும். இவங்களுக்கு நம்ம மேல வந்து மோதப் போகுதுன்னு தோணும். நெகடிவ் தாட்ஸ், நமக்கு யாருமே இல்லைனு இன்செக்யூரா ஃபீல் பண்றது, இதெல்லாம் நீங்க சொன்ன ஓ.சி.டிக்கும் பொருந்தும். சைல்ட் ஹுட் ட்ராமாக்கும் பொருந்தும். எங்களுக்கு தான் என்ன பிரச்சினைனு தெரியும்.”
அவர் சொன்ன விளக்கத்தில் இனி காதை மட்டும் தீட்டுவது என முடிவுக்கு வந்தவன் அவர் சொல்வதை கவனமாக கேட்க ஆரம்பித்தான். அவர் சொன்னதில் ஒன்று புரிந்தது. ஏன் காரோ, பஸ்ஸோ வேகமாகப் போனால் அவளால் சகஜமாக இருக்க முடியவில்லை என்பது.
“அவங்ககிட்ட பேசினவகையில தெரிஞ்ச ஒரே நல்ல விஷயம் அவங்க உங்கள விரும்பி கல்யாணம் பண்ணிருக்காங்க. இந்த மனநிலையில இருக்குறவங்க பிடிக்காம கல்யாணம் பண்ணிருந்தா ரெண்டு பேர் வாழ்க்கையும் நரகமாகியிருக்கும். சாதாரணமானவங்களுக்கே வியர்வையும், எச்சிலையும் சகிச்சுக்க தனியொரு மனநிலைக்கு வரணும். இவங்களுக்கு நேரம் எடுக்கும். சொல்றது புரியும்னு நினைக்கிறேன்” என அவர் நிறுத்த,
“புரியுது டாக்டர்!” என்றான் தெளிவாக.
“ஆனா, நீங்க இவ்ளோ நாளா மொத்தமா ஒதுங்கியிருக்கீங்க. மொத்தமா ஒதுங்கி நிக்கிறதவிட, கொஞ்சம் கொஞ்சமா மூவ் பண்ணலாம். உன்னை மீறி எதுவும் செய்யமாட்டேனு நம்பிக்கை கொடுக்கலாம்.”
அவர் பேசிக்கொண்டே போக யார் கவுன்சிலிங் வந்தது என அவனுக்கே சந்தேகம் வந்தது. மொத்தத்துல அவங்கள சுத்தியிருக்குறவங்க அவங்கள புரிஞ்சு நடந்துக்கிட்டா போதும் என்பதைத்தான் சுற்றி சுற்றி அவனுக்கும் சொல்லி அனுப்பினார்.
அதற்கான முதல் ஸ்டெப்தான் வண்டியில் போகும் பொழுது தோளை பிடித்துக் கொள்ளச்சொன்னது. என்ஃபீல்டின் பின்னால் அமர்ந்தவளை கண்ணாடி வழியாகவே முறைத்துப் பார்த்தான். அவள் பாவம் போல் பார்க்க, முகத்தை விறைப்பாக வைத்துக் கொண்டு ஆக்சிலேட்டரை முறுக்கினானே ஒழிய வண்டி மட்டும் நகர்ந்தபாடில்லை. மெதுவாக பட்டும் படாமல் தோள்மீது கை வைக்க, இப்பொழுது திரும்பி பார்த்தே முறைத்து வைத்தான்.
“ப்ளீஸ்…” என சிணுங்க, கை இன்னும் ஆக்சிலேட்டரை முறுக்கிக் கொண்டுதானிருந்தது.
“நாளைக்கு பாத்துக்கலாமே. ஒரே நாள்ல எல்லாம் பண்ண சொன்னா எப்படி?” என கெஞ்ச,
“எல்.எல்.ஆர் போடவே இவ்ளோ நாளாயிருக்கு. நீ என்னைக்கி எட்டுப் போட்டு, லைசென்ஸ் வாங்கி, வண்டியோட்டங்குள்ள எனக்கு வயசாகிரும்டி.” இடுப்பை வளைத்துப் பிடிப்பாள் என எதிர்பார்த்தவன், தோளில் கை போட்டதே அவளுக்கு பெரிய காரியமாகப்பட, போனால் போகுதென்று, அலுத்துக் கொண்டே பெரிய மனது பண்ணி வண்டியை டாப் கியர் போட்டு தூக்கினான். எடுத்த வேகத்தில் பூப்பந்து வந்து முதுகில் மோதியதில், வாய் தன்னால் விசிலடித்து புன்னகைக்க அவன் மனமும் டாப் கியரில் பறந்தது.
மல்லியப்பூ பூத்திருக்கு
அது மழையில் நனஞ்சிருக்கு
வருஷமெலாம் காத்திருக்கு
ஒரு வண்டுக்குத் தவமிருக்கு
மழை விழுந்த நேரத்திலே
என் மாராப்பு விழுந்திருச்சு
மாராப்பு சேலைக்குமா
அந்த மசக்க வந்திருச்சு
இப்பதான் தோள்ல கை போட்டிருக்கா. இவன் இப்படியே ஸ்டெப் பை ஸ்டெப்பா வந்து, என்னைக்கு பேரம்பேத்தி பெத்துக் கொடுத்து இவன் கணபதிய பிசியாக்குறது. அவனுக்குள் தூங்கும் மனசாட்சி தலையை தூக்கிப் பார்த்து கொட்டாவி விட்டு, ஸ்டாப்பிங் வந்தா எழுப்பிவிடுங்க என மீண்டும் படுத்துக் கொண்டது.
