“குட்மார்னிங் அங்கிள்.” குரல் கேட்டு நிமிர்ந்தவர் சண்முகம். ஐம்பதுகளைக்கடந்த பண்பட்ட முகம்.
“குட்மார்னிங் ஆதியா! கிளம்பியாச்சா?” என்று கேட்க,
“ஆமா அங்கிள்! ரொம்ப நேரம் வெயில்ல நிக்காம சீக்கிரமா செடிகளுக்குத் தண்ணி விட்டுட்டு உள்ள போங்க. பிள்ளைகள்லாம் வெயிட் பண்றாங்க பாருங்க.”
“சரிம்மா. நீ சாப்டியா? லன்ச் எடுத்துக்கிட்டயா?”
“எடுத்துக்கிட்டே அங்கிள். இந்த ஒரு வாரம் மட்டும் பாத்துக்கோங்க. அடுத்த வாரத்துல இருந்து எப்பவும் போல போனாப்போதும். இந்த வாரம் மட்டும்தான் சீக்கிரமா போக வேண்டியிருக்கும்.”
“நான் பாத்துக்கிறே. நம்ம பிள்ளைக எல்லாம் சமத்து. நீ பத்திரமாப் போயிட்டு வாம்மா.”
“பை அங்கிள்.” எனக் கூறியவள் தனது ஸ்கூட்டியை நோக்கிச் சென்றாள்.
ஆதியா! அரிவைப் பருவத்தின் இறுதியில் இருப்பவள்.
புயலென சுழட்டியடிக்காமல் தென்றலென வருடும் இதமான அழகு. எப்பொழுதும் புன்னகை தவழும் முகம்.
ஒரு ஏற்றுமதிக் கம்பெனியில் அக்கவுண்டன்ட். அடுத்த வாரத்தில் கம்பெனி இன்னொருவருக்கு கை மாறுகிறது. அதனால் வேலை அதிகமாக இருப்பதால் நேரம் காலம் பார்க்காமல் கிளம்பி அலுவலகம் செல்ல வேண்டியுள்ளது.
இன்று செய்ய வேண்டிய வேலைகளை திட்டமிட்டுக் கொண்டே ஸ்கூட்டியை பார்க்கிங்கில் விட்டுவிட்டு அலுவலகம் நோக்கி சென்றாள்.
சுத்தம் செய்பவர் மட்டும் வந்து, தனது பணியைச் செய்து கொண்டிருந்தார்.
“என்ன சாந்தி அக்கா? வேலையல்லாம் ஜரூரா நடக்குது போல?”
“ஆமாம்மா. ஏம்மா… முதலாளி மட்டும்தானே மாறுறாங்க? என்னமோ கம்பெனியே மாறுற மாதிரி வேலை வாங்குறாங்க.? சலிப்பாய்க் கேட்க,
“என்னக்கா பண்றது? புதுசா ஒப்படைக்கிறவங்க கிட்ட எல்லாம் கரெக்டா ஒப்படைக்கணும்ல.” என பேசிக்ககொண்டே கம்யூட்டரை இயக்கி தன் வேலையில் கவனமானாள்.
ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.
“ஹாய் ஆதியா! குட்மார்னிங்!” இது நந்தினி. இந்த அலுவலகம் சேர்ந்ததில் இருந்து ஆதியாவிற்கு இருக்கும் ஒரே நெருங்கிய தோழி.
குரல் கோட்டு நிமிர்ந்தவள் புன்னகை முகத்துடன் பதில் வணக்கம் சொல்ல, “உன்னோட இந்த சிரிச்ச முகத்தைப் பாத்துட்டு வேலை ஆரம்பிச்சா இந்த நாள் இனிய நாளா இருக்கும்.” என்க,
“ஏம்மா? அப்ப எங்க முகத்துல எல்லாம் முழிச்சா நல்லா இருக்காதா?” என சாந்தி கேட்க,
“ஐய்யோ! அக்கா! உங்க முகத்துல முழிச்சா இன்னும் ரொம்ப்ப்ப்ப… நல்லா இருக்கும்.” என ரொம்பவில் அழுத்தம் கொடுத்துக் கூறியவளைப் பார்த்து,
“நீ பொழச்சுக்குவ.” எனக்கூறி விட்டு சென்று விட்டார்.
“ஆதியா! என்ன சாந்தியக்கா கடுப்பா இருக்காங்க போல?”
“ஆமா. வேலை அதிகமா இருக்காம்.”
“அப்பறம்… சம்பளம் சும்மாவா தருவாங்க? இவ்ளோ நாளா மேம்போக்கா வேலை பாத்தாங்கள்ல கொஞ்ச நாளைக்கு நல்லா வேலை பாக்கட்டுமே. அதுக்கப்பறமா வர்ற புது எம்.டி யோட பாடு. ஆமா… ஆதி! புது எம்.டி பத்தி ஏதாவது தெரியுமா?” அடுத்து வரவிருக்கும் எம்.டி. பற்றிய ஆவலில் விசாரிக்க,
“இல்லப்பா. ஆனா நம்ம எம்.டியோட பழைய பார்ட்னர்னு நினைக்கிறே.”
“ஐய்யே… அப்ப ஓல்டியா?” என்றவள் ஆதியா பார்த்த பார்வையில்,
“புரியுது! ஏன் கல்யாணம் ஆயிட்டா சைட்டடிக்கக் கூடாதா? ஆம்பளைங்க மட்டும் தான் கல்யாணத்துக்கப்புறமும் சைட்டு, ஜாலினு இருப்பாங்களா? எனக் கூற
“உன்னைத் திருத்த முடியாது.” என்றவளிடம்,
“ஏம்ப்பா… ரசிக்கறது தப்பா?” என நந்தினி அப்பாவியாய் முகத்தை வைத்துக் கொண்டு கேட்க.
“நீ என்னமோ பண்ணு. யாரு வந்தா நமக்கென்ன? நாம நம்ம வேலையை மட்டும் பாப்போம்.” எனக் கூறிவிட்டு அவரவர் வேலையில் கவனமாயினர். இதுதான் ஆதியா. தானுண்டு… தன் வேலையுண்டு என அனாவசியமாக எதிலும் தலையிட மாட்டாள்.
சட்டென சலசலப்பு அடங்க, இராமநாதன் உள்ளே நுழைந்தார். அனைவரின் வணக்கத்திற்கும் சிறு தலையசைவைப் பதிலாகத் தந்து விட்டு தன்னறை நோக்கி சென்றார்.
இராமநாதன். கம்பெனியின் எம்.டி.
உடல் நிலை காரணமாக மருத்துவர்கள் கட்டாயம் ஓய்வு எடுத்தே ஆக வேண்டும் எனக்கூறி விட, பிள்ளைகளும் வெளிநாட்டில் செட்டிலாகிவிட, தனது கம்பெனியை விற்க முடிவு செய்து விட்டார்.
தனது அறையில் வந்து அமர்ந்தவர் முகத்தில் ஒரு வெறுமை படர்ந்தது. தனது மகிழ்ச்சி, வருத்தம், வெற்றி, தோல்வி என அனைத்தையும் கொண்டாடிய இடம். தனது வீட்டில் இருந்ததைவிட அதிக நேரங்களை செலவழித்து இங்கு தான்.
இராமநாதன் தன் நண்பருடன் சேர்ந்து ஆரம்பித்த கம்பெனி இது. தனது பிள்ளைகளால் தன் நண்பனின் சுயமரியாதைக்குப் பங்கம் வரும் எனத் தெரிந்தவுடன், தானாகவே முன்வந்து அவரது பங்குகளைப் பிரித்துக் கொடுத்து அனுப்பிவிட்டார்.
பழைய நினைவுகளில் இருந்து மீண்டவர் இன்டர்காமில் ஆதியாவிற்கு அழைப்பு விடுத்தார்.
அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே வந்தவள், “குட்மார்னிங் சர்.” என்க,
“வாம்மா! உக்காரும்மா! எல்லா டீடெயில்ஸ்ம் ரெடிபண்ணிட்டியா?” என கேட்க,
“ரெடியா இருக்கு சார். நம்மகிட்ட இருக்கிற ஸ்டாக்கோட விபரம், வரவேண்டிய ஸ்டாக்கோட டீடெய்ல்ஸ், பெண்டிங் அமௌண்ட், நாம கொடுக்க வேண்டிய அமௌண்ட், எக்ஸ்போர்ட்டான விபரம் எல்லாம் கம்ப்யூட்டர்ல போட்டு வச்சுட்டேன் சார். உங்களுக்கும் அனுப்பிட்டேன் செக் பண்ணிக்குங்க.”
“உன் வேலைய செக் பண்ணவேண்டிய அவசியமில்லை. இருந்தாலும் உன் திருப்திக்காக பாத்துர்றேன்.”
பதில் சொன்னவரின் முகத்தைப் பார்த்தாள். அதில் தெரிந்த வெறுமை அவளை என்னமோ செய்தது.
“ஏன் சார்? கவர்மென்ட்ல வேலை பாக்குறவங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயசுக்கு மேல ஓய்வு கொடுத்து அனுப்பிடறாங்க. நீங்க என்னடான்னா எழுபது வயசுல ஓய்வெடுக்க சொன்னா வயலின் வாசிக்கறீங்களே.”
ஆதியா வேலைக்கு சேர்ந்து குறுகிய காலமேயானாலும், வேலையில் அவளுக்கு இருந்த ஆர்வமும் பணிநேர்த்தியும், அமைதி ததும்பும் முகமும் அவள் மீது அவருக்கு ஒரு பிரியத்தைத் தோற்றுவித்தது. அதனால் அவளிடம் சற்று சகஜமாகப் பேசுவார்.
“ஏம்மா… எழுபது எல்லாம் ஒரு வயசா?”
“இல்லவே இல்ல சார். வயசுங்கறது உடம்புக்குதான். மனசுக்கு இல்ல.” எனத் தலையை ஆட்டிக் கூறியவள் அவர் பார்த்த பார்வையில்,
“புரியுது சார். புதுசா ஏதாவது சொல்லி மொக்கை வாங்கறதைவிட எல்லோரும் சொல்றதையே நாமளும் சொல்லிட்டுப் போயிறுவோம் சார். அப்புறம், ஓய்வுனா ஏன் நாம சும்மா இருக்கிறதுனு எடுத்துக்கணும். நமக்குப் புடிச்ச விஷயங்களை செய்யறதுக்கான நேரம்னு எடுத்துக்க வேண்டியதுதானே சர்.”
அவள் கூறியதைக் கேட்டு சிரித்தவர், கம்பெனியை விட்டுட்டுப் போறோம்னு ஒரு பக்கம் கவலையா இருந்தாலும், என் நண்பனுக்கே கொடுக்கறதுல ஒரு பக்கம் சந்தோஷம்மா. அவனும் நானும் சேர்ந்து தான் இந்தக் கம்பெனியை ஆரம்பிச்சோம்.” என தனக்குத்தானே ஆறுதல் போல கூறிக்கொள்ள,
“அவ்ளோதான் சார். ஒரு விஷயம் நடந்தா அதுல இருக்கிற நல்லதை எடுத்துப்போம். நமக்குப் பிடிச்ச ஒன்னு நமக்குப் பிடிச்சவங்ககிட்ட இருக்குனு சந்தோஷப்பட்டுக்க வேண்டியது தான்.” எனக் கூறிவிட்டு எழுந்து கொண்டாள்.
“சரிம்மா. உன்கிட் பேசினப் பின்னாடி மனசு கொஞ்சம் பரவாயில்லை. நீ போய் வேலையப்பாரும்மா.”
“ஓகே சார். மனசப் போட்டுக் குழப்பாம உங்க உடம்பப் பாத்துக்கங்க.” என்று கூறியவள் தன் இருக்கைக்குத் திரும்பினாள்.
பிரிவு என்பது மிகவும் கொடுமையானது. அது உறவாக இருந்தாலும் சரி உடமையாக இருந்தாலும் சரி. சில சமயங்களில் மாற்றங்களை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
காத்திருப்போம்… மாற்றம் எத்தகைய மாற்றத்தைக் கொண்டு வருகிறது என்பதற்காக.

Nirmala vandhachu 😍😍😍
Welcome dear 🥰
Thank youuuuuu so much ma 🥰🍫
Nice
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
I feel like I have actual luck on this platform. The rewards are generous and the overall vibe is just very welcoming. krsevenluckcasino