2
“அக்கா! இந்தக் கணக்கு மட்டும் ஆன்சரே வரல.”
“ஏன்டா ப்ளஸ் பண்ண வேண்டிய எடத்துல மைனஸ் பண்ணி வச்சா எப்படிடா வரும்?”
“போங்கக்கா… பக்கம்பக்கமா படிக்கச் சொன்னாக்கூட படிச்சுறலாம்… ஆனா இந்தக் கணக்கு மட்டும் வரவே மாட்டேங்குது.” என அங்கலாய்த்துக் கொண்டவன் சதீஷ்.
ஆதியாவைச் சுற்றி பலதரப்பட்ட வயதிற்குட்பட்ட பிள்ளைகள் பதினைந்துபேர் அமர்ந்திருந்தனர். அவர்களின் ஹோம்வொர்க்கைப் பார்த்து என்னென்ன செய்ய வேண்டும் என சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
“ஏம்மா! நீயே அலுப்பா வந்திருப்ப. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கக் கூடாதா?” இது சண்முகம்.
”இல்லை அங்கிள் கொஞ்ச நேரம்தான். சதீஷ் இந்த வருஷம் டென்த் இல்லையா? ஏற்கனவே ஐயா கணக்குல புலி. கொஞ்சம் கேப் விட்டாப்போதும். ஒன் ப்ளஸ் ஒன் என்னனு கேட்டா முழிப்பான்.”
“சரிம்மா… சீக்கிரம் முடிச்சுட்டுப்போய் ரெஸ்ட் எடு. இவங்களை எல்லாம் சன்டே புடிச்சு உக்காரவை!”
“ஐயோ! அப்பா அந்த ஒரு நாளாவது எங்களை ஃப்ரியாவிடச் சொல்லுங்க.” என சதீஷ் அலுத்துக் கொள்ள,
“ஆமாஆஆ…” என அனைவரும் கோரசாகக் கத்த,
“அப்படினா அக்கா சொல்றத சீக்கிரம் முடிக்கப் பாருங்க! நான் அம்மாகிட்ட சொல்லி சாப்பாடு எடுத்து வைக்கச் சொல்றேன்.” என்று கட்டளையாகக் கூறிய சண்முகம் சாப்பாட்டு ஹால் நோக்கி சென்றார்.
அங்கிருந்த பதினைந்து பிள்ளைகளும் சண்முகம் பெறாமல் பெற்ற பிள்ளைகள். திருமணம் முடிந்து சில வருடங்களாகியும் பிள்ளைச் செல்வம் கிடைக்காத நிலையில் சொந்தங்கள் இரண்டாம் திருமணத்திற்கு வற்புறுத்த,
“ரெண்டாவதா ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு, என்பொண்டாட்டிக்கும் வரப்போற பொண்ணுக்கும் என்னால வஞ்சனை பண்ணமுடியாது. எங்களுக்கு பொறக்கலைனா என்ன? நாங்க தத்தெடுத்து வளத்துட்டுப் போறோம்.” என முடிவாகக் கூறிவிட்டார்.
“யாருக்கோ… எங்கேயோ… எப்படியோ… பிறந்த பிள்ளையை எல்லாம் இந்த வீட்டு வாரிசாக ஏத்துக்க முடியாது.” என பெற்றோரும் உடன் பிறந்தோரும் கூறிவிட, தன் பங்கு சொத்தைப் பிரித்து வாங்கிக் கொண்டு தன் மனைவியோடு வெளியேறிவிட்டார்.
அப்படி வந்தவர் முதன்முதலாக பொறுப்பேற்றுக் கொண்ட குழந்தைதான் சதீஷ். சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் அவர்களுக்கு தலைச்சன்பிள்ளை. அதன்பின் ஒவ்வொன்றாக மொத்தம் பதினைந்து பிள்ளைகள். முறைப்படி தன் பிள்ளைகளாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதற்காக யாரிடமும் உதவி என்று சென்றதில்லை. பிள்ளைகளையும் அதற்கு மேல்சேர்த்துக் கொள்ளவில்லை. தானும் கஷ்டப்பட்டு பிள்ளைகளையும் கஷ்டப்பட விடக்கூடாது என்பது அவர் எண்ணம். தனக்கென ஒரு குடும்ப அமைப்பை உருவாக்கிக் கொண்டார்.
“நாம பெத்திருந்தாகூட ஒன்னோ ரெண்டோதான் பெத்திருப்போம். ஆனா…இப்பப்பாரு. எத்தனை குழந்தைங்க. பதினாறும் பெற்று பெருவாழ்வு மாதிரி.” என மனைவியிடம் பெருமை பேசுவார்.
“எங்கே? அதுல ஒன்னு குறையுதே!” எனக் கேட்கும் மனைவியிடம்,
“பதினாறாவது குழந்தை தான்டி நீ. என்னோட கடைக்குட்டி, செல்லக்குட்டி.” என்று காதலும் பேசுவார்.
யாருமற்றவர்கள் என்று எவருமில்லை. அன்பு செய்யத் தெரியாதவர்களே ஆதரவற்றோர்.
“ஆதிம்மா! உன்னை ஆன்ட்டி கூப்பிடுறா. போய் என்னனு கேளு! நான் இவங்களைப் பாத்துக்கிறே.”
இப்படியே விட்டா, ஆதியா நகரமாட்டாள் எனத் தெரிந்து அவளை உள்ளே அனுப்பி விட்டார்.
“என்ன ஆன்ட்டி கூப்பிட்டிங்களா?”
“ஆமாம்மா! இந்த சாப்பாடெல்லாம் எடுத்து வைக்கணும்.” என்றார் தன் கணவரின் எண்ணம் புரிந்தவராக.
சற்று நேரத்தில் பிள்ளைகளும் வந்துவிட சாப்பாட்டு வேலையை முடித்தனர்.
சிறிது பெரிய பிள்ளைகளும் சதீஷின் உதவியோடு சிறுசிறு வேலைகளை செய்து ஒதுங்க வைத்தனர்.
லஷ்மியின் உதவிக்கு இரு முதியவர்களும் உண்டு. சற்று வயதானவர்கள் என்பதால் இரவில் சீக்கிரம் சாப்பாடு கொடுத்து படுக்கைக்கு அனுப்பி விடுவார்.
எல்லோரும் படுக்கைக்குத் தயாராக ஆதியா தோட்டத்துப் பக்கம் வந்தாள். எவ்வளவு அலுப்பாக இருந்தாலும், தோட்டத்துப் பக்கமாக வந்து பவளமல்லியின் செடியின் கீழ் அமர்ந்தாலே அன்னை மடியின் இதம் அவளுக்கு.
ரெண்டு கிரவுண்ட் இடத்தில் தங்கள் தேவைக்கு மட்டும் வீட்டைக்கட்டிக் கொண்டு மீதி இடம் முழுவதும் தோட்டமாக்கி இருந்தார் ஆதியாவின் அம்மா.
அவர் நட்ட பவளமல்லிச் செடி பெரிதாகி பூத்து குலுங்க ஆரம்பித்ததும், அதைச் சுற்றி உட்காரும் அளவிற்கு திட்டு ஒன்றை ஆதியாவின் அப்பா போட்டுவிட்டார்.
அவர்கள் இருந்த வரையிலும் இரவு உணவு வேளைக்குப் பின், சிறிது நேரமேயானாலும் அங்கு அமர்ந்து மூவரும் கதை அளப்பது வழக்கம்.
பொழுது சாயும் அந்திமாலையில் மொட்டாக இருக்கும் பவளமல்லி, இருள் கவிழ மொட்டவிழ்ந்து இதமாக மணம் பரப்பும். காலையில் மரத்தைச் சுற்றி பவளத்தையும், முத்தையும் கலந்து கொட்டினாற் போல் சிதறிக்கிடக்கும்.
செடிநட்டவரும், திட்டமைத்தவரும் இல்லாத பொழுதும், ஆதியா அங்கு வந்து அமர்ந்தாலே பெற்றோரின் இதம், பவளமல்லி யின் நறுமணத்தில்.
அது மட்டுமா!?
பவளமல்லியின் வாசனையில் இதமாகக் கண்மூடியவளின் காதோரம் சற்று கரகரத்த குரலில், “தியா…” எனும் இதமான அழைப்பு. கண்ணோரம் சூடான நீர்த்துளி. இதழோரம் அவன் முத்தத்தின் ஈரம் இன்றும்.
கன்னத்தில் முத்தத்தின் ஈரம்
அது காயவில்லையே
கண்களில் ஏன் அந்தக் கண்ணீர் அது யாராலே…
************
“என்னம்மா… என்ன சொல்றான் உன் மகன்?”
“என்ன மாமா இது? புதுசா உன் மகன். எப்ப இருந்து இந்த மாதிரி பேச்சு?”
“அப்புறமென்னம்மா? நான் அந்தக் கம்பெனிய வாங்கப் போறேனு சொன்னதிலிருந்து மூஞ்சியத் தூக்கி வச்சுகிட்டுத் திரியறான்!”
“அதுக்காக வாங்காம விட்டிங்களா?”
மாமனாரும், மருமகளும் டைனிங் ஹாலில் விவாதித்து கொண்டிருக்க,
தாத்தா சத்யப்பிரகாஷ்க்கும், தாய் மங்கையர்கரசிக்குமான சம்பாஷனையைக் கேட்டவாறே மாடியிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்தான் சூர்யபிரகாஷ்.
“என்னம்மா! என்ன சொல்றாரு உங்க மாமனாரு?” என்ற மகனிடம்,
“என்னடா தம்பி! பேச்செல்லாம் புதுசா இருக்கு?” என்று கண்டிப்பு காட்ட,
“இப்ப இவர் மட்டும் என்ன சொன்னாராம்? உன் மகன் எங்கேனு தானே கேட்டாரு?” என்று பேரனும் வீம்பு காட்ட,
“ஒத்த புள்ளையா போயிட்டானே, கூடப் பிறந்ததுகளோடு சண்டை போட்டு வழக்கு தீக்குற பிரச்சினை நமக்கில்லையேனு நினைச்சா… தாத்தாவுக்கும், பேரனுக்குமே வழக்கு தீக்கமுடியலை.” மங்கையர்க்கரசி நொடித்துக் கொண்டார்.
“ரொம்ப நன்றிம்மா.”
“எதுக்கு மாமா?”
“அவனோட சேத்து என்னைய சின்னப் பிள்ளையாக்குனதுக்கு,” என்று குதூகலிக்க,
அம்மாவைப் பார்த்தவன் புருவத்தால், “பாத்தீங்களா?” என்று சைகை செய்ய, இருவர் முகத்திலும் புன்னகை.
“சின்னப் பையன்ற நினைப்புல தானே அந்தக் கம்பெனிய வாங்கி நடத்தலாம்னு முடிவு பண்ணிட்டீங்க.”
“என்னடா சொல்லுற. எனக்கு என்ன அவ்ளோ வயசா ஆயிருச்சு?”
“உங்களுக்கும் உங்க ஃப்ரெண்டுக்கும் ஒரே வயசு தானே. அவரை டாக்டர் ஓய்வெடுக்க சொல்லவும் தானே, அவர் பிசினஸைக் கைமாத்தி விடுறாரு. நீங்க மட்டும் எப்படி நடத்துவீங்க?”
“ஏன்டா! நீ உதவ மாட்டியா?”
தாத்தா ஒரு விசயத்தை பொறுப்பெடுத்துக் கொண்டார் என்றால், அதில் பேரனின் பங்களிப்பு இல்லாமலிருக்காது தான். ஆனால் இதற்கு மேல் ஏன் அவரை வருத்திக் கொள்ள வேண்டும் என்பதாலேயே அவன் மறுப்பு தெரிவிப்பது.
“தாத்தா! நான் பொறுப்பெடுத்துக்கறது இருக்கட்டும். நம்ம பிசினஸே கவனிக்க நேரமில்லாம ஓடிட்டு இருக்கோம். இதுல அந்தக் கம்பெனி வாங்கித்தான் ஆகப்போறது என்ன?”
“இப்ப நீ சொன்னியே. நிக்க நேரமில்லாம ஓடிட்டு இருக்கோம்னு, அதுக்கு மூலாதாரமே அந்தக் கம்பெனிதான்டா! அதுதான் எங்களோட முதல் விதை. இன்னைக்கு கோவையில, ஆர்.எஸ்.புரத்துல. ஹைசொஸைட்டி வாழ்க்கை வாழறோம்னா அதுக்கு மூலகாரணமே அந்தக் கம்பெனி தான். எனக்கும் அவனுக்கும் தலைச்சன் பிள்ளை மாதிரி. அதுல லாபம் வருதோ இல்லையோ? இன்னொருத்தருக்கு விட்டுத் தரமுடியாது. உனக்கும் உன் அம்மாவுக்கும் வேணும்னா அதைப்பத்தி தெரியாம இருக்கலாம். ஆனா உன் அப்பாவுக்கு நல்லா தெரியும். அவனிருந்திருந்தா நான் இவ்வளவு விளக்கம் சொல்ல தேவை இருந்திருக்காது! என் குரல் கமர கூறியவரை, சூர்யா எழுந்து சென்று தோளோடு அணைத்துக் கொண்டான்.
“ஐயோ தாத்தா! இந்த அழுகாச்சி மூஞ்சி நமக்கு செட்டாகாது. ஃபார்ம்க்கு வாங்க.”
மங்கையர்க்கரசியும் கண்கலங்க…
“உங்களை வெளியேத்தின கம்பெனியாச்சேனு தான் நாங்க யோசனை பண்ணினோம். ஆனா நீங்க அதுமேல இவ்வளவு ஈடுபாட்டோட இருக்கும் பொழுது நாங்க எப்படி மறுத்து பேசமுடியும் சொல்லுங்க!”
சற்று தளர்ந்த நிலையில் கூட அவர்களால், அவரைப் பார்க்க முடியாது. எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அசராமல் தூணாக குடும்பத்தைத் தாங்கியவர்.
“எங்கப்பா என்கூட இருந்தாலே யானைபலம்!” என்று தன் கணவர் அடிக்கடி சொல்லக் கேட்டவர்.
இதையேதான் தன் மகனைப் பார்த்து சத்யபிரகாஷும் சொல்வார்.
அப்படிப்பட்ட மகனையே திடீரென இழந்த நிலையில், தொழில் எதிரிகள் அந்த பலவீனமான நிலையைப் பயன்படுத்தி வீழ்த்த நினைத்த வேளையிலும்,
தசரதனையே வீழ்த்திய புத்திரசோகம் தன்னை வீழ்த்துமுன்,
மருமகளையும், பேரனையும் மனதில் கொண்டு நிமிர்ந்தவர். தன் தொழில் வட்டாரத்தில் சிங்கமாய்த் திகழ்ந்தவர். தன் பேரனையும் அதேபோல் உருவாக்கியவர்.
சத்யபிரகாஷின் குடும்பமும் சாதாரண குடும்பமல்ல. அவினாசியில் தோப்பு, வயல், அரிசிமில் என்று வாழ்ந்த பாரம்பரியமான குடும்பம்தான்.
சத்யபிரகாசும் கமிஷன் மண்டி வைத்து நல்ல வருமானம் தான்.
அந்தப்பக்கம் அடிக்கடி திரைப்பட படப்பிடிப்பு நடைபெறும். திரைப்படத்துறையை சேர்ந்தவர், இவரின் அப்பாவிற்கு பழக்கமாக, அவர் காட்டிய சினிமா ஆசையில், சத்யபிரகாஷின் எதிர்ப்பையும் மீறி, ஆழம்தெரியாமல் காலைவிட்டார்.
ஆனானப்பட்டவர்களே இத்துறையில் திணறும் பொழுது, அம்மாயச்சுழல் அவரை எளிதாக சுழற்றிக் கொண்டது.
சத்யபிரகாஷின் குடும்பமும் வாழ்ந்துகெட்ட குடும்பம் பட்டியலில் இடம் பிடித்தது.
சொத்துமுழுதும் இழந்தநிலையில் அவரின் அப்பாவும் உயிரைவிட, இதற்கு மேல் யாரிடமும் வேலை கேட்கவும், உதவி கேட்கவும் கௌரவம் இடம் கொடுக்கவில்லை.
அப்பொழுதுதான் மகன் ரவிபிரகாஷும் கல்லூரியில் சேர்ந்த முதல் வருடம். அத்தகைய கையறு நிலையில் தான், உடுக்கை இழந்தவன் கையாக வந்தார்… பள்ளி தோழரும், குடும்ப நண்பருமான இராமநாதன்.
பணமாக உதவி செய்தால் சத்யப்ரகாஷ் ஏற்றுக் கொள்ள மாட்டார் எனத் தெரியும்.
எனவே தான் சத்யபிரகாஷை, ஒர்க்கிங் பார்ட்னராகக் கொண்டு இருவரும் தொழில் தொடங்கினர்.
என்றுமே சத்யபிரகாஷ் உழைக்க தயங்கியதில்லை. ஏற்கனவே கமிஷன் மண்டி நடத்திய அனுபவம் கைகொடுத்தது.
எங்கெங்கு நேரடியாக சென்றால் குறைந்த விலைக்கு பொருட்களை கொள்முதல் செய்யலாம் எனத் தெரிந்தவர்.
இராமநாதன் அலுவலக உள்வேலைகளைப் பார்த்துக் கொள்ள, சத்யபிரகாஷ் வெளியே சுற்றி திரிந்தார். நெல், மஞ்சள், வேர்க்கடலை, எள் முதலியவற்றை விவசாயிகளிடம் சென்று நேரடியாக கொள்முதல் செய்தார். இடைத்தரகர்கள் இல்லாததால் விவசாயிகளுக்கும் நல்ல லாபமே!
உள்நாட்டில் மட்டுமே செய்து கொண்டிருந்த மொத்த வியாபாரம் வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யும் அளவிற்கு வளர்ந்தது.
எப்பொழுதும் லாபத்தில் இருவருக்குமே சரிபங்குதான். இராமநாதன் பிள்ளைகளுக்கு இது உறுத்த ஆரம்பித்தது. முதலீடு போட்டவர்க்கும், வெளியே சுற்றி எங்கெங்கு பொருள் கிடைக்கும் என்று தரகுவேலை பார்ப்பவர்க்கும் சமபங்கு லாபமா என கேள்வி கேட்கத் தொடங்கினர்.
பரம்பரை சொத்தில் சொகுசாக வாழ்ந்தவர்களுக்கு, ஒரு நிறுவனத்தின் வெற்றிக்கு பணமுதலீடு மட்டுமே போதாது! உழைப்பும் அவசியம் என்பது புரியவில்லை.
அப்பொழுதுதான் வெளி மாநிலங்களில் இருந்தம் மிளகு, ஏலம், கிராம்பு என மசாலா பொருட்களை கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்ய ஆரம்பித்திருந்தனர்.
அலுவலகத்திற்கு அவ்வப்பொழுது வந்து சென்ற இராமநாதன் பிள்ளைகளும்,
“வெறும் பயலுக்கு வந்த வாழ்வைப் பார்?” என்று சாடைபேச ஆரம்பித்தனர்.
நண்பனுக்காக சத்யபிரகாஷும் பொறுமைகாத்தார். நண்பனின் நிலையறிந்த இராமநாதனும், அவர் சுயமரியாதை மற்றும் சுயகட்டுப்பாட்டை இழக்குமுன் தானே அனுப்பி விடுவது உத்தமம் என, அவரது பங்கை பிரித்துக் கொடுத்து அனுப்பிவிட்டார்.
நல்லோர்க்கு அழகு சொல்லாமல் செல்வது. தனக்குதவிய நண்பனுக்கும், அவர் பிள்ளைகளுக்கும் இடையில் தன்னால் பிரச்சினை வரவேண்டாமென்று விலகிவிட்டார்.
அப்பொழுதுதான் ரவிபிரகாஷும் கல்லூரி முடித்திருந்த சமயம். தந்தையின் அனுபவமும், மகனின் உழைப்பும், இவர்களுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகியது.
இருவரும் ஒருவருக்கொருவர் யானைபலம். மகன் ரவிபிரகாஷின் ஆசைக்கிணங்க டெக்ஸ்டைல்ஸ் துறையிலும் தடம்பதித்தனர்.
மகனுக்கு திருமணம் செய்து அழகு பார்த்தார். மிகவும் மனவுறுதி படைத்தவர்.
“எங்கப்பா தைரியம் யாருக்கும் வராது.” என்று ரவிபிரகாஷ் தன் மனைவியிடம் பெருமை பேசுவார்.
அப்படிப்பட்டவர் கண்கலங்க மருமகளுக்கும், பேரனுக்கும் அதைத் தாங்கமுடியா நிலை.
“இப்ப என்ன தாத்தா? நாம போய் அடுத்தவாரம் என் பெரியப்பாவை பாக்குறோம். நலம் விசாரிக்கிறோம்.
பிரகாஷ் அன்ட் க்ரூப்ல அவரையும் சேக்குறோம்.”
“அது யாருடா… எனக்குத் தெரியாம உனக்கு பெரியப்பா?”
“நீங்கதானே தாத்தா சொன்னீங்க. அந்தக் கம்பெனிதான் உங்க தலச்சன் பிள்ளைனு. அப்படினா எனக்கு பெரியப்பா தானே?”
“அட படவா! என்னையே கலாய்க்கிறயா நீ?” எனக் கேட்க, அங்கு சற்றுமுன் நிலவிய இறுக்கம் தளர்ந்து மகிழ்ச்சி திரும்பியது.

Nirmala vandhachu 😍😍😍
Welcome dear 🥰
ThThank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Intersting ma
♥️♥️♥️♥️♥️
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
[1557]sxmn6 | Đăng nhập tải app và chơi nổ hũ đổi thưởng,Truy cập sxmn6 để đăng nhập và tải app nhanh chóng. Khám phá game nổ hũ đổi thưởng hấp dẫn, học cách chơi baccarat online và nạp tiền qua Momo dễ dàng. visit: sxmn6
Best VIP experience I have had in a long time. The rewards are generous and the customer support is top notch. Keep it up slotmaxvip2!