13
“மாமாஆ…” என ஓடி வந்து மாமனின் அருகே பொத்தென ஷோபாவில் அமர்ந்த அக்கா மகளை,
“இப்ப தான் எந்திரிச்சு வர்றியா பாப்பா.” என வாஞ்சையாகத் தலை வருடிக் கொடுத்தான் வெங்கடேசபாண்டியன். அப்பொழுதுதான் படுக்கைவிட்டு எழுந்து முகம் கழுவி வெளியே வந்தாள் அமிர்தா.
“என்ன மாமா? காலையிலேயே பாசமலர் ஞாபகம் வந்துருச்சா. எந்திரிச்சு மூஞ்சியக் கழுவுன உடனே இங்க வந்தாச்சு போல? ம்மாஆ… யாரு வந்திருக்காங்க பாத்தீங்களா?” என அடுப்படியில் இருந்த அம்மாவிற்கும் குரல் கொடுக்க,
“அதெல்லாம் பாத்தாச்சு… பாத்தாச்சு.” என்று சொல்லிக் கொண்டே தம்பிக்கு காஃபியோடு வெளியே வந்தார் கௌரி.
“அதானே… உடன்பிறப்பு அங்க வீட்டவிட்டு கெளம்பின உடனே உங்களுக்கு இங்க கவுளி கத்தி இருக்குமே?”
“இப்ப உனக்கு என்னடி வேணும். இன்னும் கெளம்பாம வம்பளந்துட்டு இருக்க?” என மகளை அதட்டிக் கொண்டே காஃபியை தம்பி கையில் கொடுக்க,
“எனக்கும் காஃபி வேணும்.” என்றாள்.
“பல்லு தேச்சியா?”
“அதெல்லாம் காஃபி குடிச்சுட்டு தேச்சுக்கறேம்மா.” என மகள் கழுத்தைச் சாய்த்து சிணுங்க,
“எரும… பல்லு தேச்சுட்டு வந்தா தான் காஃபி.”
“எந்த எரும ம்மா பல்லு தேய்க்குது?”
“எந்த எருமடி எந்துருச்ச உடனே காஃபி குடிக்குது.”
“மாமா… அம்மா உங்கள எருமைங்கறாங்க.” என காஃபிக் குடித்துக் கொண்டிருந்த மாமனிடம் கூற,
“அவன எங்கேடி சொன்னே. உன்னத்தானே சொன்னேன்.”
“எருமையோட மாமா யாரும்மா?”
“அடிக் கழுத…”
“மாமா… இப்ப எருமையிலிருந்து கழுதைக்கு புரொமோஷன் ஆயிட்டோம்.” என தம்பியை அக்காவோடு கோர்த்துவிட, அக்கா மகளின் கிண்டலில் மாமன்காரனுக்கு சிரிப்பு வந்தது.
“எந்திரிச்சு குளிக்கப் போறீயா, கரண்டிய எடுக்கவா?” என தனது அவதாரத்தை கௌரி மாற்ற,
“இதோ போறேன். மனுஷி செத்த நேரம் நிம்மதியா இருந்திறக் கூடாது. இந்த அம்மாக்களே இப்படித்தான்.” என அலுத்துக்கொண்டே, தந்தையின் தலை கண்டதும், குளிக்க எழுந்து சென்றாள்.
“வாப்பா…” என்றவாறு மனோகரும் வீட்டிற்கு வந்த மச்சினனை வரவேற்க, மாமனைக் கண்டதும் மரியாதைக்காக எழுந்த வெங்கடேசனை, அமரச் சொல்லிவிட்டு தானும் அமர்ந்து கொண்டார். குடும்ப நலம் விசாரித்து விட்டு பொதுவான விஷயங்களை இருவரும் பேசிக் கொண்டு இருந்தனர்.
வெங்கடேசனும் வண்டியூரில் சிறிய அளவில் டீக்கடையும், ஹோட்டலும் நடத்திக்கொண்டு இருக்கிறான். அது அவன் அப்பா நடத்தியது. அவர் இறந்த பிறகு பார்க்க ஆளில்லாமல் கடையை வாடகைக்கு விட்டனர். இவன் வளர்ந்து ஆளான பிறகு இவனே எடுத்து நடத்த ஆரம்பித்து விட்டான். மற்றபடி கொடுக்கல் வாங்கல் தொழிலும் கைவசம் உண்டு. அதன் காரணமாகவே அதிகாலையிலேயே காய்கறி மார்க்கெட் பக்கமாக வந்தவன் அப்படியே அக்கா வீடடில் ஒரு மிதி மிதித்துவிட்டுப்போக வந்திருக்கிறான்.
இவர்கள் பேசிக் கொண்டு இருக்க, அதற்குள் குளித்து கிளம்பி வந்தவள்,
“மாமா… அம்மாச்சி, அத்தை எல்லாம் எப்படி இருக்காங்க. அப்புறம் ரெண்டு வாலுகளும் எப்படி இருக்காங்க? லீவு விட்டதும் வர்றேனு சொல்லுங்க.” என மாமன் குடும்பத்தையும், மகன்களையும் நலம் விசாரிக்க,
“நீயே அறுந்த வாலு. என் தம்பி பிள்ளைகள வாலுங்கறீயா?” என தம்பி பிள்ளைகளுக்காக மகளிடம் கௌரி வக்காளத்து வாங்க,
“நான் அறுந்த வாலுன்னா, உங்க தம்பி பிள்ளைக ரெண்டும் ரெட்ட வாலுக.” என அம்மாவிற்கு பதில் கொடுத்தாள். வெங்கடேசனுக்கு இரண்டும் மகன்கள்.
பேச்சுவாக்கில் மாமனை சற்று உற்றுப் பார்த்தவள்,
“ம்மா… நேத்து கோயில்ல பாத்தேனு சொன்னேனே. என் ஃப்ரென்டும் அவளோட அண்ணனும். அவங்க கூட கிட்டத்தட்ட மாமா மாதிரியே இருந்தாங்க ம்மா. நேத்தே… எங்கேயோ பாத்த மாதிரி இருக்கேனு யோசிச்சேன். இப்ப மாமாவப் பாக்கவும் தான் டக்குனு தோணுச்சு ம்மா.” எனக் கூற,
“யாரக்கா பாப்பா சொல்றா?” என்றான் வெங்கடேசன்.
“அப்புறம் சொல்றேன்டா. நீ இன்னும் கெளம்பலியா?” என மகளை விரட்ட,
“நீங்க என்ன தங்கமலை ரகசியமா பேசப் போறீங்க. என்னமோ பண்ணுங்க.” என சலித்து கொண்டே எழுந்து சென்றாள். இன்னும் துருவிக் கேட்டாள் அடுத்து உண்மையிலேயே கரண்டி வரும் எனத் தெரியும். பெரியவர்கள் பேசும் போது குறுக்கே வந்து கேள்வி கேட்டால் இவ்வளவு தான் அவளுக்கு மரியாதை என்பதும் தெரியும். இதனால் தான் கௌதம் எதிலும் மூக்கை நுழைப்பதில்லை. ஆனால் இவளுக்கு தான் வாய் சும்மா இருக்காதே.
சாப்பிட்டு முடித்து கல்லூரி கிளம்பியவள், மாமனிடம் சொல்லிக் கொண்டு கிளம்ப, தனது பாக்கெட்டில் இருந்து ஐநூறு ரூபாயை எடுத்து மாமன் கொடுக்க,
“மாமா… எனக்குத் தனியா கொடுங்க. அக்கா என் பங்கத்தராது. அதுவே ஆட்டையப் போட்டுறும்.” என கௌதம் தன் பங்கிற்கு வர,
“அதெல்லாம் தருவா. போடா.” என கௌரி மகனை விரட்ட, முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு கிளம்பினான். இருவரும் வெளியேற,
“யாரக்கா பாப்பா சொன்னா?” என்றான் வெங்கடேசன்.
“நேத்து கோயில்ல நம்ம பாண்டியனப் பாத்துருக்குதுகடா. நான் வேற தூரத்து சொந்தம்னு வாய விட்டுட்டே. அதுல இருந்து சும்மா நொய்நொய்ங்குறா.” என அங்கலாய்க்க,
“அம்மாவுக்கும் அவன் நெனப்பு தான்க்கா. போனபாடும் இல்லாம எந்திருச்ச பாடும் இல்லாம படுக்கையில கெடந்து அல்லாடுது. அவுககிட்டப் போயி பேச முடியுமா?” என ஆதங்கப்பட, கௌரிக்கும் துக்கம் தொண்டை அடைத்தது.
“என்னடா பண்றது. கூடப் பொறந்தவங்க மூனு பேரு இருந்தும் அவன விட்டுட்டோம்டா.” என்றார் குரல் கமற.
“அப்ப இருந்த நம்ம குடும்ப நெலவரம் அப்படி க்கா. உங்க ரெண்டு பேத்தையும் கரையேத்த வேண்டி இருந்தது. நானும் சின்னப் பையன் வேற. அப்ப தான் பத்தாவது படிச்சேன். அப்பாவத் தவிர அம்மாவுக்கும் வெளி உலகம் தெரியாது. திடீர்னு அவரும் நம்மல விட்டுப் போகவும், நட்டாத்துல விட்ட மாதிரி தவிச்சுப் போயிட்டோம். என்ன பண்றதுனு தெரியல. வேறென்ன பண்ண முடியும் சொல்லு. இப்ப என்ன… ராஜாவாட்டம் இருக்கான்ல க்கா.” என தங்களது குடும்ப இயலாமையை அவன் ஆதங்கமாக வெளிப்படுத்தினாலும், சப்பைக்கட்டாகத் தனக்குத் தானே ஆறுதலும் சொல்லிக் கொண்டான். மலர்க்கிரீடத்தின் ஊடே முள்ளும் இருப்பதுண்டு எனத் தெரியாமல்.
“அவன் அப்படியே நம்ம அப்பா மாதிரி டா.” என்ற கௌரியின் குரலில் சிறுபிள்ளையின் துள்ளல்.
“ஆமாக்கா… நானும் சமீபத்துல வசூலுக்குப் போகும் போது மார்க்கெட் பக்கமாப் பாத்தேன். ஆளு நல்லா வாட்டசாட்டமா ஜம்முனு இருக்கான்.”
“கேசவமூர்த்தி சித்தப்பாவுக்கு கைகால் விழுந்துருச்சுனு கேள்விப் பட்டதும், காதுல கேட்டுட்டு எப்படிப் பாக்காம இருக்கறதுன்னு ஹாஸ்பிடல் போனேன்டா. அங்க தான் அவனைப் பாத்தேன். சின்ன வயசுல ஏதாவது விசேஷம்னா மஞ்சுளா சித்தி அவன கூட்டி வருவாங்க. என்ன நெனச்சாங்களோ தெரியல… கொஞ்ச நாளுக்கப்புறம் எங்கேயும் கூட்டி வந்தது இல்ல. அன்னைக்கி ஹாஸ்பிடல்ல பாத்துட்டு, அப்படியே அசந்துட்டேன்டா. நீயாவது அப்பா ஜாடை தான். ஆனா அவன் அப்படியே அப்பாவோட ஜெராக்ஸ் மாதிரி இருந்தான்டா. அதே வளத்தி, கை காலெல்லாம் சாட்டை மாதிரி நீளமா… இப்பக்கூட பாரேன் அவனைப் பத்தி பேசும்போது உடம்பெல்லாம் புல்லரிக்குதுடா.” என்று தனை மறந்து கௌரி தம்பி பாசத்தில் சிலாகிக்க, வெங்கடேசனுக்கும் கண்கள் சிவந்து விட்டது. தான் ஆடவிட்டாலும் தன் சதை ஆடும் தானே.
“என்னப் பாத்ததும் சித்தி அவன அங்க இருக்க விடல வெங்கட்டு. ஏதோ காரணம் சொல்லி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. எங்கே அவனப் பிரிச்சுருவோமோங்கற பயம் அவங்க கண்ல தெரிஞ்சுது. அவன் மேல சித்தி உசுரையே வச்சுருக்காங்கடா.”
“இங்கேயும் தாங்க்கா… தூக்கிக் கொடுத்துட்டு ஒரு உசுரு அல்லாடுது. கொடுத்த வாக்குக்கு கட்டுப்பட்டு அமைதியா போறோம். ஆனா சித்ரா அக்கா நம்மல மாதிரி இல்ல க்கா. அது புனேல இருக்குறதால அடிக்கடி வர முடியறதில்ல.” என தனது இரண்டாவது அக்காவைப்பற்றி கூற,
“அவ வந்தா மட்டும் என்னடா பண்ண முடியும்?”
“இந்நேரம் அவன இழுத்துட்டு வந்து அம்மா கண்ணுலயாவது காமிச்சுருக்கும். நம்மல மாதிரி எல்லாம் யோசிச்சுட்டு இருக்காது.” என பெருமூச்சு விட்டவன், அதற்குள் மனோகரும் அலுவலகம் கிளம்பி வர, தம்பியையும் உடன் சாப்பிட அழைத்தார் கௌரி. வேலை இருப்பதாகக் கிளம்பி விட்டான். மனதில் பாரம் ஏறியாதாலோ என்னவோ சாப்பிடத் தோன்றவில்லை. சக உதிரத்தில் உதித்த சகோதரன் அல்லவா. ஒன்றாக ஒரே வீட்டில் வளராவிட்டாலும் பிறந்த பாசம் விட்டுப் போகுமா என்ன?
நாளைக்கு குடும்ப நிலவரம் என்ன என யோசிப்பவர்களுக்கு வேண்டாம் வேண்டாம் என குழந்தை வரம் கிடைப்பதும் உண்டு. பாலும், தேனும் ஆறாய் ஓடும் வீடுகளில் ஒரு வாரிசுக்காக கோவில் கோவிலாகச் சென்று தவமிருப்பவர்களும் உண்டு. பெற்ற ஈரம் காயும் முன் குப்பைத் தொட்டியில் வேண்டாத பொருளாய் குழந்தை வீசிச் செல்லப்படுவதும் உண்டு.
ஒரு காலத்தில் பிரசவம் முடிந்ததும் ஆண் குழந்தையா பெண் குழந்தையா எனக் கேட்கப்பட்டது. அடுத்து அதோடு சேர்த்து பிரசவம் ஆப்ரேஷனா, சுகப்பிரசவமா எனக் கேட்கப் பட்டது. இன்று இன்னும் கொஞ்சம் ஒரு படி முன்னேறி விவசாயத்தில் இயற்கை விவசாயம், செயற்கை விவசாயம் என வந்தது போல், குழந்தை உற்பத்தியும் இயற்கை முறையா, செயற்கை முறையா எனக் கேட்கும் அளவிற்கு முன்னேற்றம் கண்டுள்ளோம்.
ஆண், பெண் காதலின் கூடலில், பள்ளியறையில் இருளில் நிகழ வேண்டியது, அறிவியல் கூடத்தில் பலரின் கூட்டு முயற்சியாக நடந்தேறுகிறது. இனி சாதகத்தில் பிள்ளைகளின் ராசி, நட்சத்திரத்தோடு இதுவும் குறிப்பிடப்படும் என எதிர்பார்க்கலாம்.
இது யார் மனதையும் காயப்படுத்தும் நோக்கில் குறிப்பிடப்படவில்லை. விஞ்ஞான வளர்ச்சி குழந்தை இல்லை என ஏங்குபவர்களுக்கு எந்த அளவிற்கு வரமாக இருக்கிறதோ, அதே அளவிற்கு எதனால் இயற்கையில் இத்தனை பிறழ்ச்சி என்ற ஆதங்கத்தின் வெளிப்பாடு இது.
ஒரு காலத்துல தெருவுக்குத் தெரு பொட்டிக் கடையப் பாத்த மாதிரி, இப்ப எல்லாம் முக்குக்கு முக்கு ஃபெர்டிலிட்டி சென்டர்களைப் பார்க்கும் பொழுது இதைக் கேட்காமலும் இருக்க முடியவில்லை. பொருள் உற்பத்தியில் மட்டுமல்லாமல் உயிர் உற்பத்தியிலும் விஞ்ஞானம், வியாபார முன்னேற்றம் கண்டுள்ளது.
இயற்கையாக, இயல்பாக, இஷ்ட்டத்தோடு நடந்தேற வேண்டிய ஒன்று இத்தனை சிக்கலாகிப் போன காரணம் தான் என்ன. வாழ்க்கைமுறை மாற்றமா? உணவுமுறை மாற்றமா?
யாருக்கோ எங்கோ பகல் என்பதற்காக நாம் இங்கு இரவில் விழித்து வேலை செய்கிறோம். தூக்கமும், கூடலும் பகலில் என ஆகிப்போயிற்று. சிஸ்டத்தில் வேலை செய்ய தொடங்கியபின் நமது வாழ்க்கை சிஸ்டமே மாறிவிட்டது.
அடுத்து உணவு முறை. மண்ணை மலடாக்கி, மறுஉருவாக்கம் செய்யப்பட்ட விதைகளை விதைத்து உண்ணும் நாம் மட்டும் எப்படி இருப்போம்.
வீட்ல கோழி வளர்த்து அடை கூட்டிவைத்த, போன தலைமுறைகளுக்கு எல்லாம் ஒன்று நினைவிருக்கும். அடையில் குஞ்சு பொறிக்காத ஊழையாகிப் போன முட்டையை சின்னப் பிள்ளைகளுக்குத் தர மாட்டாங்க. அந்த முட்டைகள் எல்லாம் சேவலோடு இணை சேராமல் போடப்பட்ட, கரு உருவாகாத முட்டைகள். பெண்கள் மாதிரி தான்… முட்டையிடும் பருவம் வந்ததும், கோழிக்கு தன்னால் முட்டை உருவாகிவிடும். ஆனால் சேவலோடு இணைசேர்ந்து போடும் முட்டை மட்டுமே குஞ்சு பொரிக்கும். மற்றவை எல்லாம் மலட்டு முட்டைகள்.
இன்றும் பெண்கள் வயதிற்கு வந்தால் வீட்டில் சேவலோடு வளர்க்கப்படும் நாட்டுக்கோழி முட்டை கிடைக்காதா எனத் தேடுகிறோம். ஏனெனில் அது மட்டுமே சேவலோடு இணை சேர்ந்து கருக்கூடிய முட்டை. அப்ப கடையில் விற்கப்படும் கோழிப்பண்ணை முட்டைகள் எல்லாம்…
அன்று பிள்ளைகளுக்குக் கொடுக்கப்பட்ட ஒவ்வொரு உணவிலும் உயிர் இருந்தது. உயிர் உருவாக்கம் இயற்கையாய் நடந்தேறியது. ***********
“அமிர்தா… சட்டுனு பாக்காதே. கேஷுவலாப் பாரு. கேன்டீன்ல இருக்கிறவன் பார்வையே சரியில்ல. நேத்தும் அவன் உன்னைய இப்படித்தான் பாத்தான்.” என மெதுவாகக் கூற, அவன் யாரைச் சுட்டுகிறான் எனத் தெரிந்தவளுக்கு என்னவென்று சொல்லத்தெரியாத உணர்வு அடிநெஞ்சில் அடிக்கரும்பாய் தித்தித்தது. எனினும் வெளிக்காட்டிக் கொள்ளாமல்,
“அப்படீங்கற… வா! என்ன ஏதுன்னு கேட்டுறலாம்! இதை இப்படியே வளரவிடக் கூடாது. இன்னைக்கி நம்ம போடுற போட்டுல, வேற எந்தப் பிள்ளையையும் ஏறெடுத்துக்கூட பாக்கக் கூடாது.” என மேஜையைத் தட்டிக் கொண்டு எழுந்தாள்.
இன்று வழமை போல் நண்பர்களுடன் கேன்டீன் வந்தவளை முன்தினம் போல் இல்லாமல் உரிமையோடு இவன் பார்த்துக் கொண்டிருக்க, இன்றும் தீபக் தான் அதைக் கவனித்தான். நேற்று ஏதோ அழகான பொண்ணுன்னா நாலு பேரு சைட் அடிக்கத்தான் செய்வார்கள் எனும் எண்ணத்தில் விட்டு விட்டான். இன்றும் அவன் அதே பார்வை பார்க்க, அதுவும் இவளை மட்டும் தான் பார்ப்பதாகத் தோன்ற, அதை அமிர்தாவிடம் கூறி எச்சரித்தான். அதைக் கேட்டு அவள் சிலிப்பிக் கொண்டு எழ,
“ஏய்… நாமலே இப்ப தான் ஜாயின் பண்ணி இருக்கோம். அழகா இருந்தா பசங்க பாக்கதான் செய்வாங்க. சீனியர்ஸ் யார்கிட்டயாவது சொல்லலாம். அவங்க தட்டி வைப்பாங்க.” என்றான் பயத்தோடு.
அவள் எழுந்த வேகத்தைப் பார்த்து இவள் எங்கே வம்பை விலைக்கு வாங்கிவிடுவாளோ என்ற பயம் வந்தது அவனுக்கு. அவனோ ஆறடிக்கு ஆஜானுபாகுவாக இருக்க, இப்பொழுதுதான் பள்ளி முடித்து வெளி வந்த விடலைகள் இவர்கள். அவன் முன்னால் செல்லத் தயங்கினர். ஆனால் அவள் அதையெல்லாம் கண்டு கொள்வதாக இல்லை. எழுந்த வேகத்தில் அவனிடம் வந்தாள்.
ஆர்டர் கொடுக்க வந்ததாக எண்ணிக் கொண்டு ருத்ரன் என்னவென்று பார்க்க,
“என்ன… உங்க பார்வையே சரியில்லையாம்ல. கொஞ்சம் அழகா இருந்தா போதுமே. வச்ச கண்ணு வாங்காம பாக்க வேண்டியது.” என வந்ததும் வராததுமாக எகிறிக் கொண்டு கேட்க,
“அழகாவா… யார் அது. கொஞ்சம் தள்ளு. உனக்குப் பின்னாடி அப்படி யாரும் நிக்கிறாங்களான்னு பாக்குறேன்.” என தலையை நீட்டி அவள் பின்னால் தேட, அவள் பார்வை அனல் வீசியது.
“யாரு, அந்த முட்டக்கண்ணே உன்னை உசுப்பி விட்டானா? நீ அழகா இருக்கேனு. அவனுக்கு பார்வைக் கோளாறு. கண்ண செக்பண்ணி கண்ணாடி போடச் சொல்லு. நான் பாத்தா அவனுக்கென்ன?” என்றான். இவன் பார்வையைப் பார்த்துவிட்டு தீபக் இவளிடம் கிசுகிசுத்ததைத் தான் பார்த்தானே.
“என் ஃப்ரென்ட்ஸ பத்தி தப்பா பேசாதீங்க.” என விரல் நீட்டி எச்சரிக்க,
“விரல் நீட்டிப் பேசாதே. அது எனக்கு பிடிக்காது. வேணும்னா சின்னப்பிள்ள மனசு நோகக்கூடாதுனு, நீயும் கொஞ்சம் அழகுதான்னு, போனாப் போகுதுன்னு ஒத்துக்குறேன்.” என வாய்தான் மேம்போக்காகக் கூறியதே ஒழிய, இளமஞ்சள்நிற காட்டன் சுடிதாரில் வந்தவளைப் பார்த்தவன் பார்வை, மேலிருந்து கீழாக அளவெடுத்தது.
முன்னால் எடுத்துப் போடப்பட்ட, தளரப்பின்னிய இடை தொட்ட ஒற்றை ஜடை, இருக்கா இல்லியா என உற்றுப் பார்க்கும் அளவிற்கு நெற்றியில் கடுகளவிற்கு சிறு பொட்டு, கோலவிழிகளுக்கு லேசான மைதீற்றல், வினாக்குறி நாசியில்… புல்லின் நுனி பனித்துளியாய் ஒற்றைக்கல் மூக்குத்தி, பலாச்சுளை இதழ்களுக்கு செர்ரிப்பழ லிப்கிளாஸ், மயில் கழுத்தில் மெல்லிய செயின்.
பார்த்துக் கொண்டிருந்தவனுக்கும் நுனிப்புல்லில் அமர்ந்த தும்பியாய் மனம் சிறகடிக்க… நாள் முச்சூடும் சோறு தண்ணி இல்லாமல் இப்படியே பார்த்துக் கொண்டே இருக்கலாம் எனத் தோன்ற… பார்வை கழுத்தைத் தாண்டி கீழிறங்கியது.
அவள் தன்முன் இருந்த கேன்டீன் மேடை மீது இரண்டு கைகளையும் கோர்த்துவைத்து சாய்ந்து நின்றிருக்க, முன் அங்கங்கள் அழுத்திக் கொண்டிருக்க, சுதாரித்து பார்வையைத் திருப்பிக் கொண்டவனது முகம் சட்டென கடுகடுத்தது.
அவனது ரசனையான பார்வை தன்னை அளவெடுப்பதைப் பார்த்தவளது பொன்மஞ்சள் கன்னங்கள் சூடேறி காதோரம் செம்மை காண… இதே பார்வையை வேறொருவன் பார்த்திருந்தால் இந்நேரம் எரிச்சல் மண்டியிருக்கும் எனத் தோன்றியது. ஆனால் இவன் பார்ப்பதைக்கண்டு தானும் ரசிப்பதைக் கண்ணுற்றவளுக்கு, சட்டென அவனது பார்வை மாற்றத்தைக் கண்டு, என்னவென்று புரியாமல் புருவம் வளைத்து வினாத்தொடுக்க,
“ஷால் போடுற பழக்கம் எல்லாம் இல்லியா?” என சுள்ளெனக் கடித்தான். சட்டென சுதாரித்துக் கொண்டவள் லஜ்ஜையாக தன்னை குறுக்கிக்கொண்டு நின்றாள். அடுத்து அவன் முகம் பார்க்கவும் சங்கட்டமாக,
“அதெல்லாம் ஓல்டு ட்ரெண்ட்னு, ஷால் போட்டா பிள்ளைக கேலி பண்றாங்க.” என்றவள் குரல் உள்வாங்கியது அவன் பார்வை எங்கு சென்றிருக்கும் என அறிந்து.
கல்லூரி வந்த புதிதில் இவள் துப்பட்டோவோடு வந்ததைப் பார்த்த நவநாகரீக யுவதிகள் இவளைக் கேலி செய்ய, வீட்டிலிருந்து போட்டு வரும் துப்பட்டாவை கல்லூரி வந்ததும் பேக்கில் வைத்துக் கொள்வாள். துப்பட்டா இல்லாமல் வெளியே வந்தால் கௌரி மகளை அடி பிண்ணி எடுத்துவிடுவாரே. ஏற்கனவே மகளின் பூரித்த அழகு அவருக்கு வயிற்றில் புளியைக் கரைக்கும். வக்கிரப் பார்வையிலிருந்து மகள் தப்பிக்க வேண்டுமே. கழுகுப் பார்வைகளை இனம் கண்டு கொள்வாளா மகள் எனும் பயம் எப்பொழுதும் உண்டு.
என்னதான் செல்லம் கொடுத்து வளர்த்தாலும் சில விஷயங்களில் கெடுபிடி தான் மகளிடம். இன்னும் மகள் விளையாட்டுத் தனத்தை விட்டபாடில்லை. தம்பியிடம் அடித்துப் பிடித்து சண்டை போடுவதும், தந்தையின் கழுத்தைக் கட்டிக் கொண்டு கொண்டு செல்லம் கொஞ்சுவதும் என, விபரம் புரியாமல் நடந்து கொள்ளும் மகளுக்கு எப்பொழுது தான் பக்குவம் வருமோ என்ற பதைபதைப்பு எப்பொழுதும் உண்டு. இதில் அந்நிய ஆணின் பார்வையை எப்படி புரிந்து கொள்வாளோ என்ற எண்ணமும் உபரியாக வந்து அவ்வப்போது பயமுறுத்தும். இவனது சிடுசிடுத்த முகம் அவளுக்கு அம்மாவை நினைவூட்ட,
“ஏன் இதுமட்டும் போடுறீங்க. அப்படியே அவுத்துப் போட்…” என கோபமாகக் கூற வந்தவன் வார்த்தை எல்லை மீறுவதை உணர்ந்து அடக்கிக் கொண்டான்.
முன்தினம் பார்த்து அடையாளம் கண்டு கொண்டவளிடம் ஒரே நாளில் எந்த உரிமையில் அவளிடம் அதிகாரம் எடுத்துக் கொள்கிறோம் என நினைத்தவன், தங்கை தேன்மொழிக்கும் இதைத் தானே சொல்லி இருப்போம் என மனம் ஒத்து ஊதியது. ரோட்டுல எத்தன பேரு இதுமாதிரி போறாங்க. அவங்களப் பாக்கும் போதெல்லாம் வராத கோபம் இவளிடம் மட்டும் ஏன் என கேள்வி கேட்டது மனம். தனது உடமை காட்சிப் பொருளாவது போல் ஒரு எண்ணம்.
அவனுக்கு பள்ளியில் தங்கை உடன் இவளைப் பார்த்தவரை மனதில் எந்தச் சலனமும் இல்லை. ஆனால் நேற்று ஒரே நாள் பார்வையில் ஓராயிரம் மாற்றங்களை அவனுக்குள் விதைத்திருந்தாள் பாவை.
கோவிலில் அவனைப் பார்த்த பொழுது… கை அடிக்கடி சரியாக இருந்த தாவணி முந்தானையையும், இடைவெளி தெரிந்த இடுப்புப் பகுதியையும் அனிச்சையாக சரி செய்ய, அவளது கூச்சம் அவனைக் கொக்கி போட்டது.
அடிக்கடி கண் அவனையும் மீறி அவள் பின்னால் சென்றதை கட்டுப்படுத்த முடியாமல் தவித்து தான் போனான்.
‘தங்கச்சியோட ஃப்ரெண்ட். அவளையும் அந்த மாதிரி தான் பாக்கணும். உன் தங்கச்சிய ஒருத்தன் இப்படி பாத்தா சும்மா விடுவியா. பொளந்து கட்டிற மாட்ட. ஊரான் வீட்டுப் பொண்ணுனா கண்ணு எங்க வேணாலும் போகுமா!’ என தனக்குத் தானே வாக்குவாதம் நடத்திக் கொண்டு பிரம்மப்பிரயத்தனப்பட்டு கட்டுக்குள் வந்தவனை, ஆட்டோவில் ஏறியவள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு, கண்களைச் சுருக்கி வாயை மட்டும் அசைத்து சத்தம் இல்லாமல், மன்னிப்புக் கேட்ட பாவனையில், கட்டவிழ்த்த மூங்கில் கட்டாய் கட்டுப்பாடுகள் எல்லாம் கட்டவிழ, கண்ணாலே அவனைச் சிறை செய்தாள் கன்னி. சிறை செய்தவளை சிறை எடுக்கத் துடித்த மனது அவளோடே போனது. ஆட்டோ கிளம்ப தலையை மட்டும் நீட்டி எட்டிப் பார்த்தவள், சிறு சிரிப்போடு தலையை ஆட்டி விடைபெற…
ஒரு கல் ஒரு கண்ணாடி…
உடையாமல் மோதிக்கொண்டால் காதல்…
ஒரு சொல் சில மௌனங்கள்…
பேசாமல் பேசிக்கொண்டால் காதல்…
என தன்னால் பாட்டு மண்டைக்குள் ஓடியது முன்தினம்.
முன்தினம் பார்த்தேனே…
பார்த்ததும் தோற்றேனே…
சல்லடைக் கண்ணாக… நெஞ்சமும் புண்ணானதே…
இத்தனை நாளாக… உன்னை நான் பாராமல்…
எங்குதான் போனேனோ
நாட்களும் வீணானதே…
என்று இன்றும் அவளைப் பார்த்ததும் மனதிற்குள் ரீங்காரம் கேட்டது. இவனது பார்வையைப் பார்த்து விட்டு நண்பன் அவளைத் தூண்டி விட, இவனிடம் வந்து பொறிந்தவளைத்தான், விளாசிக் கொண்டு இருக்கிறான்.
இவனது சிடுசிடுப்பில் சங்கோஜமாகத் தன்னைக் குறுக்கிக் கொண்டு நிற்க,
“உங்க மாமா உனக்கு தாவணி வாங்கிக் கொடுத்து சீர் செஞ்சாங்களா இல்லியா?” என கோபமாகக் கேட்க, இப்ப எதுக்கு இந்தக் கேள்வி என யோசித்தவள்,
“அதெல்லாம் செவன்த் படிக்கையிலயே அத்தை, மாமா எல்லாம் தாவணி எடுத்துக் கொடுத்து சீர் செஞ்சாங்க.” என்றாள் அவன் முகத்தைப் பார்க்காமல்.
“ஒரு பிள்ளைக்கி செவன்த் படிக்கையிலேயே, தாவணி வேணும்னு எடுத்துக் கொடுத்தவங்க கேனயனுங்க. இன்னைக்கி ஷால் போட்டா கேலி பண்ற ஃப்ரென்ட்ஸ் புத்திசாலிக. ம்ம்ம்.” என அதட்டியவன், அவள் முகம் சுணங்குவதைக் கண்டு, சிறு பெண்ணிடம் அதிகமாகத்தான் பேசிவிட்டோமோ என சற்றுத் தணிந்தான். இது சற்று அதிகப்பிரசங்கித் தனமாகத தோன்ற,
“நாங்க காட்டுவோம். நீங்க கண்ண மூடிக்கோங்கன்னா எப்படி ம்மா? நாங்க எல்லாம் பாவம் இல்லியா? இந்த விஷயத்துல வீக்கர் செக்ஸ்தான் நாங்க. பிறப்பு அப்படி. அக்கா தங்கச்சிய அப்படிப் பாப்பீங்களான்னு விதண்டாவாதம் பண்ணக் கூடாது. இப்ப நான் ஒன்னு கேக்கவா?” என சற்று குரல் தழைந்து பேச,
“ம்ம்ம்… கேளுங்க?” என்றாள்.
“உன்னோட ஃபேவரிட் சினிமா ஜோடி யாரு?” எனக் கேட்க, இதென்ன வேண்டாத கேள்வி எனப்பார்க்க,
“சும்மா தான்… சொல்லு.” என்றான். அவளும் தனக்குப் பிடித்த ஜோடியைக் கூறினாள். அவர்கள் ரீலில் மட்டுமல்ல ரியல் ஜோடியும் கூட.
“அவங்களோட ரொமான்ஸ் லைஃப இமேஜின் பண்ணிப் பாக்க முடியுமா உன்னால?” எனக் கேட்க, சற்று யோசித்தாள்.
“ம்ம்ம்… முடியும்.” என்றாள் சிறிது சங்கோஜத்துடன்.
“ஆனா, அதுவே நம்மைப் பெத்தவங்க, கூடப் பொறந்தவங்க ரொமான்ஸ, படுக்கையறைய இமேஜின் பண்ண முடியுமா?” எனக் கேட்டு முடிப்பதற்குள்,
“சீச்ச்சீ… அதெப்படி முடியும்?” என சட்டென முகம் சுழித்து மறுத்தாள்.
“அது மாதிரி தான். சினிமா ஜோடிய இமேஜின் பண்ண முடியுமான்னு கேட்டதும், அவங்க ரியல் ஜோடியாகவே இருந்தாலும், இப்பவே இமேஜின் பண்ணி பாத்தே தானே. ஆனா அடுத்து சொல்ல வந்தத முழுசாக்கூட உன்னால கேக்க முடியல. தங்கச்சிக்கு தூக்கத்துல ட்ரெஸ் ஏறியிருந்தா, சரிபண்ணிவிடத் தோணும். ஆனா அதே அக்கறைய வெளிய பாக்குற பொண்ணுக கிட்ட காட்டணும்னு எதிர் பார்க்க முடியாது. அது அவனோட ஹார்மோன் தேவை. அழகான பொண்ணப் பார்த்தாலோ, கவர்ச்சி காமிச்சாலோ மனம் தடுமாறத்தான் செய்யும். அப்பதான் உலகத்தில் உயிர் உருவாக்கம் நடக்கும். இது எங்களுக்கு இயற்கை விதித்த விதி. மாத்த முடியாது.” என பிரசங்கமே பண்ண ஆரம்பித்து விட்டான்.
பெண்ணியவாதிகள் கொடிப்பிடிக்கக் கூடாது. நிதர்சனம்னு ஒன்னு இருக்கு. அத்து மீறும் ஆண்கள் செய்வது சரின்னு சொல்ல வரல. இயற்கைனு ஒன்னு இருக்கு. நாங்கள் பண்பட்டவர்கள், நாகரீகம் தெரிந்தவர்கள், கல்வி கற்றவர்கள் எனவும், உறவு முறைகளைக் கொண்டும் சில விஷயங்களை கட்டுப் படுத்தலாமே ஒழிய அடக்க முடியாது.
காலம் காலமாக நியதிகளும், கட்டுப்பாடுகளும், தேவைக்குத் தகுந்த மாதிரி தளர்த்தப்பட்டும், இறுக்கப்பட்டும்தான் வந்திருக்கின்றன. ஒரு இடத்தில் விபச்சாரம் தவறு எனக் கூறும் சட்டம் தான் வேறொரு இடத்தில் அதை சட்டப்பூர்வமாக்கி இருக்கிறது. ஒரு காலத்தில் சரி எனப்பட்டது, காலமாற்றத்தில் தவறு என ஒதுக்கப்பட்டுள்ளது. தவறு எனப்பட்டது சரி என ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
கையில் இருக்கும் கைபேசியில் பத்து, இருபது வினாடிகளில் வரும் ரீல்ஸ் போதும் உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு உணர்வுகளை கொந்தளிக்கச் செய்ய. இது குழந்தைகள் கையில் கத்தியைக் கொடுத்துவிட்டு வெட்டிறாம சூதானமாப் புடிச்சுக்கோ என்பது மாதிரியான கதை தான். இதில் சென்சாரே செய்யப்படாத ஓடிடி திரைப்படங்கள், சீரிஸ் வேறு.
குழந்தைகள் என்ன கவர்ச்சியா காமிக்கிறாங்க? அவர்களிடம் அரங்கேறும் அக்கிரமங்களுக்கு யார் பொறுப்பு என்றால், இது தென்னைமரத்தில் தேள் கொட்ட பனை மரத்தில் நெறி கட்டிய கதை தான். கொந்தளித்த வக்கிரங்களை கொட்டுவதற்கு, பலிகெடா ஆவது எப்பொழுதும் எதிர்ப்பைக் காமிக்க இயலாத பிஞ்சுகள் தான். இதில் ஆண் குழந்தை, பெண்குழந்தை என்ற பேதமில்லாமல் போய்விட்டது இன்று.
பசிக்கு அடுத்த படியாக மனிதன் உணர்ந்த உணர்வு காமம். வயிற்றுப் பசி அவன் உயிர் வாழ. அடுத்த பசி உயிர் உருவாக இயற்கை கொடுத்த வரம். வரங்கள் சாபமாவது தான் இங்கு வழமையாயிற்றே.
தங்கச்சிக்கு தூக்கத்தில் ஆடை சரிபண்ணி விடுபவன் மனைவிக்கும் அதையே செய்தால் அவன் சிஸ்டத்தில் கோளாறு என அர்த்தம். அதையே மாற்றி செய்தால் அவனே கோளாறு என அர்த்தம்.
அவனையே பார்த்துக் கொண்டு இருக்க,
“நேத்து கோயில்ல மட்டும் அத்தன தடவ தாவணிய சரி பண்ணின. இப்ப எங்க போச்சு அந்தக் கூச்சம் எல்லாம்.” எனக் கேட்க, இந்த அளவிற்கு தன்னைக் கவனித்தானா என அவள் யோசித்தாள். ஆனால் அந்தத் கூச்சமும் வெட்கமும் அவனுக்கானது என்பதை எப்பொழுது இருவரும் உணர்வது.
“என்ன… இதையெல்லாம் சொல்ல நீ யாருன்னு கேக்குறியா?” என்றான்.
“ம்ஹூம்…” என இடவலமாகத் தலையசைக்க,
“தேனுக்கும் இதையே தான் சொல்லியிருப்பேன்.” என்றான்.
“தேன்மொழிய நெனச்சா பாவமா இருக்கு.” என சிரித்துக் கொண்டே கூற, அவனுக்கும் அந்த சிரிப்பு தொற்றிக் கொண்டது. தனக்கே இத்தனை கூறுபவன், தங்கைக்கு எத்தனை கூறுவான் என்றிருந்தது. அவன் அவள் மேல் காட்டும் உரிமையில் உள்ளுக்குள் உற்சாகம் ஊற்றெடுத்தது.
“என்ன வேணும்?” என ஆர்டர் கேட்க,
“எனக்கு எதுவும் வேணாம். இதுக்கு தான் வந்தேன்.” என கையில் இருந்த ஐநூறு ரூபாயை நீட்டினாள். நேற்று கோவிலில் கொடுத்த காசை திருப்பிக் கொடுத்தாள்.
“இப்ப இத கொடுத்தே ஆகணுமா?” எனக் கேட்க,
“கண்டிப்பா… கடன் அன்பை முறிக்கும். பூக்கடைக்காரர் அன்புனா பரவாயில்ல… முறிஞ்சா முறிஞ்சுட்டுப் போகுதுன்னு விட்டுறலாம். ஆனா இது அப்படி இல்லயே.” எனறாள் அதே சிரிப்போடு.
“ஏன்… இது மட்டும் என்ன அப்படியொரு ஸ்பெஷல்.” என்றான் குறும்போடு.
“ஏன்னா… இது என் ஃப்ரென்ட் தேன்மொழி அண்ணனோட அன்பாச்சே. அதனால முறிக்க விரும்பல.” என்றவளை கண்கள் ஆராய்சிப்பார்வை பார்க்க, அவளும் அசராமல் எதிர்ப்பார்வை பார்த்து நின்றாள்.
முகத்தை புதர்மண்டியது போல் இருப்பதாக கேலி செய்ததாலோ என்னவோ இன்று தாடியை அழகாக ட்ரிம் செய்து மீசையை ஒழுங்கு படுத்தியிருந்தான். நார்மல் அரைக்கை டீசர்ட்டில் தான் இருந்தான். ஆனால் அதையே மடித்து விட்டிருக்க முறுக்கேரிய தசையில் ஒருகணம் பார்வை படிந்து மீண்டது. வழக்கம்போல் கண்களின் குறுஞ்சிரிப்பு குமரியை சுண்டி இழுக்க… இடம், பொருள், ஏவலோடு வெட்கத்தையும் மறந்து அவனை ரசித்துக் கொண்டிருந்தது கன்னி மனது.
அவனிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவளைப் பார்த்தவர்களுக்கு இவள் அறியாதவனிடம் பேசுவது போல் இல்லை. பழக்கப்பட்டவனிடம் பேசுவது போல் இருக்க புரியாமல் பார்த்துக் கொண்டு இருந்தனர் நண்பர்கள்.
நேற்று கோவிலில் கொடுத்த அதே ஐநூறு ரூபாயையே இவனிடம் நீட்டினாள்.
“அம்பது ரூபாய்க்கு ஐநூறு ரூபாய் நீட்டினா எப்படி? எங்கிட்டயும் சில்லறை இல்ல.” எனக் கூற,
“உங்ககிட்ட எப்படி இருக்கும். கல்லாவுல பாருங்க. இருக்கும். எடுத்துட்டு மீதியக் கொடுங்க.” என்றாள் சட்டமாக.
“கல்லாவுல போட்டு எடுத்துக் கொடுத்தா, அந்தக் காசு அவனுக்குல போகும். எனக்கு எப்படி வரும்.” என்றான்.
“அப்படி ஒன்னு இருக்கோ.” என இவள் யோசிக்க, இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தவன்,
“வேணும்னா நான் சில்லறை தரவா?” என்றான் கல்லாவில் அமர்ந்திருந்த மணிகண்டன்.
ருத்ரன் அவனை திரும்பிப் பார்த்த பார்வையில், உனக்கேன் இந்த வேண்டாத வேலை எனும் கேள்வி தொக்கி நிற்க, பார்வையின் அர்த்தம் புரிந்தவன், சும்மா பேருக்காக ட்ராவை இழுத்துப் பார்த்துவிட்டு, இங்கும் சில்லரை இல்லை எனக் கூற, ‘அது.’ எனும்படி நண்பனை மனதிற்குள் மெச்சிக் கொண்டான்.
“சரி… அப்ப நாளைக்கி எடுத்துட்டு வர்றேன்.” என நகர,
“எதுவும் வாங்கலியா?” எனக் கேட்டான்.
“இன்னைக்கி என் ஃப்ரென்டோட பெர்த் டே. அவளோட ட்ரீட்.” எனக் கூற, இவனுக்கும் பணத்தை வாங்க விருப்பமில்லை, அவளுக்கும் கணக்கை முடித்துக் கொள்ள விருப்பமில்லை என்பது அப்பட்டமாகத் தெரிந்தது இருவருக்கும்.
டேபிளுக்குத் திரும்பியவளை நண்பர்கள் குழாம் கொலை வெறியோடு பார்க்க, அசடு வழிய சிரித்து வைத்தாள். அவன் தனக்குத் தெரிந்தவன் எனவும், பள்ளியில் தனக்கு சீனியர், உடன் படித்த தோழியின் அண்ணன்… பார்த்து நான்கு வருடம் ஆனதால் சட்டென அடையாளம் தெரியவில்லை எனவும் கூற, “கடைசியில் நாங்க தான் இனா வானாவா?” என அவர்கள் இவளை வறுத்து எடுத்தனர்.
தினமும் பார்வைப் பரிமாற்றங்களோடு, அவர்களே அறியாமல் பரிபாஷைகளும் தொடர்ந்தது. அது எந்த அளவிற்கு எனில் நண்பர்களே இவர்கள் பார்வைகள் சந்தித்துக் கொண்டால், “ஓஹோ…ஓ” என ஓ போடும் அளவிற்கு வந்து நின்றது.
நண்பர்கள் சந்தேகத்தோடு துளைத்தெடுத்தால் தங்களுக்குள் எதுவும் இல்லை. பழைய பழக்கம் மட்டும் தான் என ஊரறிந்த ரகசியத்திற்கு இல்லை என மறுத்து சப்பைக்கட்டு கட்டினாள்.
அவன் அதற்கும் ஒருபடி மேலே போய், “தேன்மொழியோடு பாத்த புள்ளடா. நீ நினைக்கிற மாதிரி எதுவும் இல்ல பங்கு.” என நண்பனுக்கு சமாதானம் சொல்ல,
“அதுவும் பாக்க தான்டி போறேன். வெள்ளரிப்பழத்துக்கு எத்தனை நாளைக்கி பூணு போடுறேன்னு நானும் பாக்குறேன். பழுத்துட்டா தன்னால வெடிக்கப்போகுது.” என அவனும் வெடிக்கும் சமயம் பார்த்து இருந்தான்.
இருவரின் மனமும் இருவருக்கும் தெள்ளெனத் தெரிந்தது. அதை வெளிப்படுத்திக் கொள்ளத்தான் இருவருக்கும் விருப்பமில்லை. ஒருவருக்குள் மற்றொருவர் ஒழிந்து கொண்டு விளையாடும் கண்ணாமூச்சி விளையாட்டு சுவாரஸ்யம் கூட்ட…
பிரிக்கப்படாத பரிசுப் பொட்டலத்தில், உள்ளே பரிசு நிச்சயம் எனத் தெரிந்தும், ஒரு குறுகுறுப்பில், சந்தோஷத்தில் பிரிக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பது போல்… இருவரும் அந்த மாய உணர்வை அனுபவித்துக் கொண்டு இருந்தனர். கடைசிவரை பிரிக்கப்படாமலே போகும் எனத் தெரியாமல்.

Beautiful
[1892]7p777 Official Login | সেরা স্লট গেম ও দ্রুত টাকা উত্তোলন,7p777 অফিসিয়াল লগইন করে সেরা স্লট গেম উপভোগ করুন। আকর্ষণীয় অনলাইন ক্যাসিনো বোনাস এবং সহজ অ্যাপ ডাউনলোড সুবিধা পেতে আজই জয়েন করুন। visit: 7p777
[5896]je77 Official Login | সেরা অনলাইন ক্যাসিনো ও দ্রুত টাকা উত্তোলন,je77 অ্যাপ ডাউনলোড করে সেরা অনলাইন ক্যাসিনো গেম এবং স্লটস খেলার নিয়ম জানুন। দ্রুত টাকা উত্তোলনের সুবিধায় আজই লগইন করে যাত্রা শুরু করুন। visit: je77
Such a fantastic atmosphere and the game selection is top notch. It feels like a real casino experience right from my phone. Visit jilipark22casino
The game variety is insane! I spent the whole weekend exploring different titles and I am hooked. Give br777games a try if you love gaming.
I’ve been looking for a reliable spot like this for a while. The interface is super smooth and everything loads fast. Definitely worth checking out! vnzxx88
Finally found a safe link to get the app running on my phone. Installation was a breeze and it works perfectly. Highly recommend lucky33download for everyone.