12
“இப்படி எம்புள்ளைய சொல்லிக் காட்டணும்னு எத்தன நாளா அண்ணி நெனச்சுட்டு இருந்த?” என அகிலாண்டம் கேட்க அய்யோ என ஆனது மஞ்சுளாவிற்கு.
வயதில் மூத்தவர், அண்ணன் மனைவி என்றெல்லாம் என்றும் அகிலாண்டம் மரியாதை கொடுத்ததும் இல்லை. மஞ்சுளாதேவியும் எதிர்பார்த்ததும் இல்லை.
அமராவதி எழுந்து வேலை செய்திருந்தாலும் என் பிள்ளைகிட்டத்தான் வேலை வாங்க வேண்டுமா என அதற்கும் ஒரு குறைப்பாட்டு பாடியிருப்பார் அகிலாண்டம். மஞ்சுளாதேவி எது சொல்லியிருந்தாலும் அதில் ஒரு குறை கண்டு பிடித்திருப்பார். அதை எண்ணிக் கொண்டே தேன்மொழியை மட்டும் தான் அழைத்தார். காயத்ரியைக் கூட முதலில் அழைக்கவில்லை. அமராவதி தானும் வருவதாக தேன்மொழியோடு எழுந்திரிக்கவும் தான் காயத்ரியை மஞ்சுளா தேவி அழைத்தது.
“அவ குறைய சொல்லணும்னு இல்ல அகிலா. மத்தவங்க ரெண்டு பேருமே எடுத்து வைக்கட்டுமேனு தான் சொன்னேன்.” என சற்று தழைந்து பேச,
“எங்க அண்ணே படுக்கையில விழுந்ததுக்கே எங்களுக்கு இந்த நெலம. நாளப்பின்ன இந்த வீட்ல என்ன மரியாதை கிடைக்கும்னு நல்லா தெரிஞ்சு போச்சு.” என நீலிக்கு கண்ணீர் நெற்றியில் எனும்படி கண்ணீர் வடிக்க ஆரம்பிக்க,
“மொழங்காலுக்கும் மொட்டத் தலைக்கும் முடிச்சுப் போடாத அகிலா.” என அதட்டியவர்,
“நான் வேணும்னா அமராகிட்ட மன்னிப்பு கேட்டுக்குறே.” என மஞ்சுளாதேவி ஆதங்கமாகக் கூற,
“அம்மாஆ…” என ருத்ரன் குரலை உயர்த்தினான். அவர் எந்த எண்ணத்தில் வேண்டுமானாலும் சொல்லி இருக்கலாம். அதற்காக சிறுபிள்ளையிடம் மன்னிப்பு என்பது பெரிய வார்த்தை. ஏற்கனவே அத்தை, அம்மாவை மரியாதை இல்லாமல் பேசுவதையே அவனுக்குப் பொறுத்துக் கொள்ள முடியாது. அது ஆரம்பத்தில் இருந்தே அப்படித்தான் என்பதால் விட்டுவிட்டான்.
ஆனால் மன்னிப்பு என்ற வார்த்தையைக் கேட்டும் அமராவதி அழுத்தமாகவே அமர்ந்திருக்க, ருத்ரன் குரலை உயர்த்தினான். அதற்குள் அழகர்,
“ஏம்மா… நீங்களும் நம்ம வீட்ல இதையே தானம்மா சொல்றீங்க. அக்காவ… அதுவா ஏதாவது வேல செய்ய விட்டுருக்கீங்களா. வேலக்காரவுங்க செய்யணும். இல்லைனா காயத்ரி செய்யணும். இங்க அத்தையும் அதையே தான ம்மா சொன்னாங்க.” என மஞ்சுளாவிற்கு ஏற்றுக் கொண்டு பேச இவன் அமைதி காக்க வேண்டியதாயிற்று. ருத்ரன் வாயைத் திறக்கும் முன் அவன் முந்திக் கொண்டான்.
அமராவதிக்கு பிறக்கும் போதே காலில் சற்று பிசகல். இடது கால் பாதம் மட்டும் சற்று திருப்பிக் கொண்டு சற்றுத் தாங்கி நடப்பாள். சிறுவயதில் பெரிதாக தெரியாத குறை வளற வளற அவளது நடையில் நன்கு வித்தியாசம் தெரிந்தது. இடதுகால் உயரம் கம்மியாக இருப்பதால் அதை ஈடுகட்ட உயரமான காலணி அணிந்திருப்பாள்.
வந்த இடத்தில், வீட்டுக்குள் என்பதால் போடாமல் கழற்றி வைத்திருக்க, அதைக் கொண்டே மஞ்சுளாதேவியும் அவளுக்கு நடக்க சிரமமாக இருக்கும் என்ற எண்ணத்தில் ஏதேச்சையாகக் கூறப் போக அது அவளது குறையை சுட்டிக் காட்டுவது போல் அமைந்து விட்டது.
குறை என்பது உடலில் இருக்கும்வரை பிரச்சினை இல்லை. அது மனதில் பதியும் பொழுதுதான் விசுவரூபம் எடுக்கிறது.
இது ஒரு பிரச்சினை இல்லை. உன்னால் எல்லோரையும் போல சாதாரணமாக நடக்க முடியும் என மனதளவில் அவளது குறையைப் போக்க எண்ணாமல், அவளது குறையை கருத்தில் கொண்டே அவளை பொத்திவைத்து வளர்த்து விட்டார் அகிலாண்டம். மற்ற இரண்டு பிள்ளைகளை விட இவள் மீது அதீத அக்கறை காட்ட, அது அமராவதி அன்னையைச் சார்ந்தே வாழும் சவளைப் பிள்ளையாக்கியது.
பச்சாதாபப் பார்வையில் எதிலும் அக்காவிற்குப் பிறகுதான் உங்களுக்கு என்று அமராவதிக்கு முன்னுரிமை கொடுக்க, சிறுபிள்ளையில் இருந்தே எதுவும் தனக்கு தான் முதலில் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் வளரத் தொடங்கிவிட்டது.
எது வாங்கி வந்தாலும் அமராவதிக்குப் பின்னரே காயத்ரிக்கு கொடுக்கப்பட, தனக்குப் பிடித்ததை எடுத்துக் கொண்டு தான் தங்கைக்கே கொடுப்பாள்.
எப்பொழுதும் தட்டுவது துள்ளும். தடவிக் கொடுப்பது தூங்கி விடும்.
பிள்ளைகளை தடவிக் கொடுத்துக் கொண்டே இருக்கக் கூடாது. தட்டிக் கொடுத்தும் வளர்க்க வேண்டும். அதிகச் செல்லமும், அளவுக்கு மீறிய அக்கறையும் காட்டி வளர்க்கப்படும் குழந்தைகள் தான், சிறு தோல்வியோ, ஏமாற்றமோ, அவமானமோ நேரிடும் பொழுது, அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவதாக ஆய்வுகள் சொல்கிறது.
அதுவும் இன்றைய நியூக்ளியர் ஃபேமிலி காலகட்டத்தில் குழந்தைகளுக்கான மனநல ஆலோசனை எனும் வார்த்தைகளை சர்வ சாதாரணமாகத் கேட்க முடிகிறது. யு.கே.ஜி. போற பிள்ள சொல்லுது ஸ்ட்ரெஸ்ஸா இருக்கே… டிஸ்டர்ப் பண்ணாதீங்க. எனக்கு மூடு சரியில்லைனு.
பிள்ளைகள் சேட்டை செய்தால் வாத்தியார்கிட்ட சொல்லிறுவோம்னு மிரட்டியது ஒரு காலம். இன்று பிள்ளைகளைப் பார்த்து ஆசிரியர்கள் மிரளும் காலமாகி விட்டது.
கண்ண மட்டும் விட்டுருங்க, மொழங்காலுக்கு கீழ எங்க வேணாலும் அடிங்க. அப்ப தான் உருப்படுவான் என்றது போய், என் பிள்ளை மேல கை வைக்க நீ யாருன்னு கேட்டா எங்க இருந்து உருப்படும்.
அடிச்சு வளர்க்காத பிள்ளையும், ஒடிச்சு வளர்க்காத முருங்கையும் ஒன்னு. கொஞ்சம் வேகமாக் காத்தடிச்சா கூடத்தாங்காது. ஒடிந்து விடும்.
இங்கு அமராவதியும் தடவிக் கொடுத்தே வளர்க்கப்பட, அவளால் தங்கைக்குக் கூட எதையும் விட்டுக் கொடுக்கவும் முடியாது. பகிர்ந்து கொள்ளவும் முடியாது.
அழகர் பேசவும் அகிலாண்டமும் பிரச்சினை வளர்க்காமல் சற்று அடங்கிப் போனார்.
அப்பா இந்த நிலையில் இருக்கும் பொழுது, தான் வாய் திறந்தால், பிறந்த வீட்டிற்கு வந்திருக்கும் அத்தைக்கு மனம் விட்டுப் போகும் என அப்பாவின் நிலையில் இருந்து அத்தைக்காக யோசித்தான். கேசவமூர்த்தி தங்கைக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் தான் தெரியுமே.
ஆனால் பேசவேண்டிய நேரத்தில் பேசியிருக்க வேண்டும் என அவன் புரிந்து கொள்ளவே பலவற்றைக் காவு கொடுக்க வேண்டியிருந்தது.
அகிலாண்டத்தின் கணவருக்கும் அழகரின் எண்ணம் தான் மனதிற்குள் ஓடியது. ஆனால் அழகர் கூறியதை அவர் கூறியிருந்தால் அகிலாண்டம் அவரை அண்ணன் வீடு என்று கூடப் பாராமல், உண்டு இல்லை என ஆக்கியிருப்பார்.
அரசியலில் குதிக்கிறேன் என்று, எப்பொழுது இரண்டு முறை எம்.எல்.ஏ. தேர்தலில் நின்று, தேர்தலிலும் தோற்று, பணத்தையும் தோற்றாரோ அன்றிலிருந்தே மனைவியிடம் மரியாதை ஒரு மாற்று குறைந்து தான் போயிற்று அவருக்கு. இழந்த பணத்தை சம்பாதித்து விட்டார் என்பது வேறு விஷயம். ஆனால், எம்.எல்.ஏ மனைவியாக ஜம்பமாக வலம் வரலாம் என்ற அகிலாண்டம் கட்டிய மனக்கோட்டை மணல்கோட்டையாய் சரிந்துவிட, மனைவியிடம் மரியாதை குறைந்து போயிற்று.
சட்டென சூழ்நிலை இறுக்கம் கொள்ள,
“மருமகளே… சாப்பாட்ட எடுத்து வை ம்மா. மாமாவுக்கு பசிக்குது. சுகர் பேஷன்ட் பாரு. பசி தாங்காது.” என ரகுராமன் சூழ்நிலையைக் கையில் எடுக்க,
தேன்மொழியும், காயத்ரியுமே எடுத்து வைத்தனர்.
“ம்மா… நீங்க அப்பாவுக்கு சாப்பாடு எடுத்துட்டு போங்க. அவருக்கு மருந்து கொடுக்கணும்.” என மஞ்சுளாதேவியை கஞ்சியைக் எடுத்துக் கொண்டு அப்பாவின் அறைக்கு போகச் சொன்னான் ருத்ரன்.
நாத்தனாரின் கணவரும் வந்திருக்க, வந்தவர்களுக்கு பரிமாறாமல் சென்றால் நன்றாக இருக்காதே என தயங்கி நிற்க,
“ம்மா… மூனு பொண்ணுக இருக்கோம். நாங்க பரிமாறிக்கறோம். அப்பாவப் பாருங்க. இன்னைக்கு அவருக்கு தான் பிறந்தநாள்.” என தேன்மொழியும் கூற, சிறிது நேரத்தில் இன்று என்ன விசேஷம் என்பதே மறந்து போயிற்று அவருக்கு.
மகன் பேச்சைத் தட்டாமல் கணவனை கவனிக்கச் சென்று விட,
“மாப்ள… இன்னைக்கி நம்ம பரிமாறலாம். இவங்க எல்லாம் சாப்பிடட்டும்.” என்றவன், எழுந்து அனைவருக்கும் தட்டு எடுத்து வைக்க, அழகரும் சேர்ந்து பரிமாற ஆரம்பித்து விட்டான்.
அமராவதி எப்பொழுதும் அளவு சாப்பாடு தான். உடலை கச்சிதமாக வைத்திருக்க மெனக்கெடுபவள். காலில் இருக்கும் குறை தவிர தன்னிடம் வேறு எந்தக் குறையும் தெரியக் கூடாதென எண்ணுபவள்.
“என்ன அமரா… இந்தச் சாப்பாடு எந்த மூலைக்கு. நல்லா சாப்பிடு.” என ருத்ரன் மேலும் பரிமாற,
“இல்ல ருத்ரா… அதிகமா வெயிட் போட்டா நடக்க சிரமப் படணும்.” என்றாள். சற்று மூத்தவள் என்பதால் சிறுபிள்ளையில் இருந்தே பெயர் சொல்லித்தான் கூப்பிடுவது.
“அப்படினு யாரு சொன்னது. நீ ஏன் எப்ப பாத்தாலும் அதையே புடிச்சுட்டுத் தொங்குற. ஏற்கனவே காத்தடிச்சா பறக்குற மாதிரி தான் இருக்க. நல்லா சாப்பிடு. பொண்ணுக கொஞ்சம் பூசினா மாதிரி இருந்தா தான் அழகு.” என அவளையும் இயல்பாக்கி, அதட்டிச் சொல்ல அவனது அக்கறைப் பேச்சு சர்க்கரையாய் இனிக்க மறுக்காமல் சாப்பிட்டாள்.
இந்த வார்த்தையை சொல்லாமல் இருந்திருக்கலாம் என பின்னாளில் ருத்ரன் பலமுறை யோசித்ததுண்டு.
இவர்கள் சாப்பிட்டு முடிக்க, அழகரும், ருத்ரனும் சாப்பிட அமர, பரிமாறுவதாக அமராவதி முன்னுக்கு வந்தாள். அனைத்தும் டேபிளில் தங்களுக்கு முன்னே இருந்தாலும் மறுப்பு சொல்லவில்லை இருவரும்.
ருத்ரனும், அழகரும் சாப்பிட ஆரம்பிக்க, கணவருக்கு சாப்பாடும், மருந்தும் கொடுத்துவிட்டு, வெளிவந்த அம்மாவையும் அழைத்து தன்னோடு சாப்பிட உட்கார வைத்துக் கொண்டான்.
கணவர் படுக்கையில் விழுந்த பிறகு அவரது சாப்பாடும் அரைச் சாப்பாடாகிப் போனது. எனவே அன்னையை அருகில் அமரவைத்துப் பார்த்து பார்த்து எடுத்து வைத்தான்.
மஞ்சுளாதேவி வெளிவர, அகிலாண்டம் கணவரோடு அண்ணனின் அறைக்குச் சென்றார்.
ரகுராமன் மைத்துனனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களோடு சில ஆறுதல் வார்த்தைகளைக் கூற, அண்ணனைப் பார்த்து கைகளைப் பிடித்து கொண்டு மீண்டும் ஒருமுறை கண்ணீர் விட்டார் அகிலாண்டம்.
ராஜதோரணையோடு நன்றாக இருந்தவர் தான். சட்டென ஒரு நாள் இடதுபக்க பக்கவாதத்தில் விழுந்து விட்டார். ராஜவைத்தியம் அவரைக் கொஞ்சம் தேற்றி வைத்திருக்கிறது. இன்னும் வாய் சரியாகப் பேச வரவில்லை.
“அண்ணே, சீக்கிரம் இவங்க கல்யாணத்த முடிக்கணும் ண்ணே. ருத்ரா என்னமோ தங்கச்சிக்கு மொதல்ல முடிக்கணும்னு சொல்றாப்டி. ஆனா… அமராவுக்கு வயசாகிட்டுப் போகுதுல்ல ண்ணே.” என அண்ணனிடம் முறையிட,
“அகிலா… அவரே இப்படி இருக்கும் போது, இப்ப போய் கல்யாணப் பேச்ச எடுக்கலாமா? ருத்ரனும் ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டாமா?” என ரகுராமன் குறுக்கிட,
“ஆமா… ருத்ரா சம்பாதிச்சு வந்து கொடுத்து தான் எங்க வீடு நெறயணுமாக்கும். இருக்கறத கவனிக்கவே இங்க ஆளில்ல. இதுல ஓட்டல் தொடங்குறே அது இதுன்னு சொல்லிட்டுத் திரியறாப்ல. வெத ஒன்னு போட்டா சுறை ஒன்னா மொளைக்கும். எல்லாம் குடும்ப வாகு.” என தங்கையின் பேச்சைக் கேட்ட கேசமூர்த்திக்கு முகம் அசூயை காட்டியது. ஏனோ அப்பேச்சு அவருக்கு ஒப்பவில்லை.
முன்பெல்லாம் அவருக்கும் அதே எண்ணம் தான் ருத்ரன் மீது. ஆனால் படுக்கையில் விழுந்த பிறகு தான் மகனைப் பற்றி புரிந்து கொண்டார் என்பதை விட மனம் அவன்பால் சென்றது எனச் சொல்லலாம்.
தான் படுத்த பிறகு தன்னைக் கவனிப்பதாகட்டும், துக்கத்தில் உழன்ற அம்மாவையும், தங்கையையும் நான் இருக்கிறேன் என தாங்கிப் பிடிப்பதாகட்டும், தொழிலையும் விவசாயத்தையும் கண்ணும் கருத்துமாக எடுத்து நடத்துவதாகட்டும் என எதிலும் குறையில்லாமல் செய்தான்.
இந்த வயதில் தான் என்ன செய்தோம் என நினைத்துப் பார்த்தவருக்கு, பரம்பரைப் பணமும், அதிகாரமும் இருந்த மிதப்பில் கோயில் காளையாட்டம் சுற்றித் திரிந்தது தான் நினைவிற்கு வந்தது. என் பிள்ளையாக இருந்திருந்தால் அவனும் அதைத்தான் செய்திருப்பான். ருத்ரனின் பொறுப்பு அவனது பிறப்பு என உணர்ந்து கொண்டார்.
மருத்துவமனை விட்டு வீடு வந்ததில் இருந்து குழந்தையைப் போல அவன் தான் அவரைக் கவனித்துக் கொள்கிறான். தனியாக ஆட்கள் இருந்தாலும், “அவங்க கடமைக்கு செய்வாங்க ம்மா. அப்புறம் நான் எதுக்கு மகன்னு இருக்கேன்.” எனக் கேட்க அவ்வார்த்தைகள் சுருக்கென தைத்தது கேசவமூர்த்திக்கு. என்றாவது தந்தை நிலையில் இருந்து அவனுக்காக யோசித்திருப்போமா என சிந்தனை ஓடியது.
இன்று அகிலாண்டம் திருமணப் பேச்சை எடுக்கவும் மகனாக நினைத்து அவருக்குள்ளும் சிறு சஞ்சலம். அவன் உடம்பில் ஓடுவது யாருடைய இரத்தமாக இருந்தால் என்ன. இப்பொழுது ருத்ரன் என் மகன் என ஓங்கிச் சொல்ல வேண்டும் என வாய் துடித்தது. அவனின் விருப்பம் கேட்க வேண்டுமே என மனம் பதைத்தது. வாய்விட்டுப் பேச முடியவில்லை.
ஆனால் இங்கு அவனது விருப்பு வெறுப்பிற்கு இடமேயில்லையே. இது ஏற்கனவே எழுதப்படாத ஒப்பந்தம் ஆயிற்றே.
“அகிலா… நீ பொண்ணக் கொடுக்கனும்ங்கற நெனப்பு இருந்தா உம் மனசுல இருக்குற இந்த நெனப்ப மாத்திக்க. நாளைக்கி ருத்ரா நம்ம வீட்டு மாப்பிள்ளை.” என மனைவியை கண்டிக்க,
“ஆமா… பொல்லாத மாப்பிள்ள. ஓடுனவனுக்கு ஒன்பதுல குரு. உக்காந்தவனுக்கு அட்டமத்துல சனிங்குற மாதிரி எங்க சொத்த திங்கணும்னு யார் யாருக்கோ எழுதி வச்சுருக்கு. இந்த தேன்மொழி மட்டும் மொதல்லயே பொறந்திருந்தா யாரோ வந்து இங்க நாட்டாமை பண்ண வேண்டிய அவசியம் இருந்துருக்காது. அம்மாவுக்கு ஒன்னுனா என்னமா கோபம் வருது. என்னமோ சுமந்து பெத்தவள பேசின மாதிரி.” என வார்த்தைகள் நஞ்சு தடவி வந்தன.
மஞ்சுளாதேவியை பேசும் பொழுது, அவன் அரற்றிய ஒற்றை வார்த்தையிலேயே அவனின் கோபத்தைப் பார்த்து ஒரு கணம் அரண்டு தான் போனார் அகிலாண்டம்.
இப்பொழுது அங்கலாய்க்க, கேசவமூர்த்தியின் பார்வை தங்கையை கேள்வி கேட்டது.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல ண்ணே.” என நடந்ததைக் கூறியவர்,
“நீங்களும் இப்படி இருக்கும் போது அவங்களுக்கு ரொம்ப எடம் கொடுக்கக் கூடாது ண்ணே. தலையாரி இல்லாத ஊருக்கு தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்னு ஆகிருவாங்க. அப்பப்ப இப்படி தட்டி வைக்கணும் ண்ணே.” என தனது அதிகாரத்தை அண்ணன் வீட்டிலும் நிலை நிறுத்த முற்படுவது அப்பட்டமாகத் தெரிந்தது.
நமக்கென்று இருக்கும் உண்மையான உறவுகளைப் புரிந்து கொள்வது நமக்கு ஒரு கஷ்டமோ நஷ்டமோ வரும் பொழுதுதானே. இதுவரை கேசவமூர்த்திக்குமே மனைவி, மகன் என்று பெரிதாக மரியாதை எல்லாம் இல்லை. மனைவி என்பவள் கட்டிலுக்கும், சமையல்கட்டிற்கும் மட்டுமே என்பது தான் அவரது எண்ணம்.
கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் கௌரவத்திற்காகவாவது குரங்கு மாதிரி வைப்பாட்டி வேணும், என வாதம் செய்யும் பரம்பரை. ஆனாலும் முன்னோர்கள் அளவிற்கு ஆடவில்லை எனினும் ஆடாமலும் இல்லை. குழந்தைகள் வரும் வரை இலைமறை காய்மறையாக வெளியே தெரியாமல் வைத்துக் கொண்டார்.
ஆனால் கட்டினவளுக்கும், காசுக்காக வருபவர்களுக்கும் உள்ள வித்யாசம் புரிந்து கொள்ள அவர் பக்கவாதத்தில் விழ வேண்டியிருந்தது.
இரத்தம் சூடாக இருக்கும் வரைக்கும் தான் மனுசப்பய ஆட்டமும் பாட்டமும். இந்தப் புத்தி கைகால் விழுகறதுக்கு முன்னே வந்திருக்கலாம் என படுக்கையில் விழுந்தப் பின்னாடி தானே தெரியுது.
மனைவியையும், மகனையும் மட்டம் தட்டிப் பேசும் தங்கையின் பேச்சு அவருக்கு ஒப்பவில்லை எனினும் மறுத்துப் பேசும் நிலையில் அவரது உடல் நிலையும் இல்லை. சூழ்நிலையும் இல்லை.
இதற்கு எல்லாம் தானும் ஒரு காரணம் தானே. கொண்டவன் கொடுக்கும் மரியாதை தானே மற்றவர்கள் மரியாதையையும் பெண்ணிற்கு பெற்றுத் தரும். கொண்டவன் துணை இருந்தா கோட்டை ஏறி கொடி நாட்டலாமாம்.
அமராவதிக்கு ருத்ரன் என்பது ஏற்கனவே முடிவு செய்த ஒன்று. அந்த முடிவை எடுத்த பிறகே அகிலாண்டமும் சிலவற்றிற்கு சம்மதித்தார். ஆனால் முடிவு செய்ததை அவனிடம் சொல்லாதது தான் இவர்கள் செய்த மிகப் பெரிய தவறு.
அத்தை மகன், மாமன் மகள்களுக்கிடையே
கேலியாக சிறுவயதில் பேசியது தான். இவ தான் உன் பொண்டாட்டி. இவன் தான் உன் புருஷன் என்று.
அது அமராவதிக்கு மனதில் பதிந்த விட்டது. ருத்ரனுக்கோ மறந்தே விட்டது. மூத்தவள் என்ற எண்ணமோ ஏதோ ஒன்று அவனுக்கு அமராவதியிடம் ஈடுபாடு வரவில்லை. மற்றபடி கால் குறையைத் தவிர, அத்தை மகளும் மனதைக் கிள்ளும் அழகி தான். தன்னை எதிலும் சிறப்பாகக் காட்டிக் கொள்ள வேண்டும் என மெனக்கெடுபவள்.
இங்கு வரும் பொழுதெல்லாம் அவன் தங்கையிடமும், அன்னையிடமும் காட்டும் அலாதி பிரியத்தைப் பார்த்தவள். அதே பிரியம் அவனிடம் இருந்து தனக்கும் வேண்டும் என தனியா ஆசை கொண்டவள்.
ஏன் இன்னும் இவளுக்கு கல்யாணம் பேசவில்லை என ருத்ரன் பலமுறை யோசித்ததுண்டு. ஒரு வேளை அவளது பிரச்சினை கொண்டு தள்ளிப்போவதாக தனக்குத் தானே கற்பிதம் செய்து கொண்டான்.
அண்ணனிடம் பேசிவிட்டு, அறையைவிட்டு அகிலாண்டமும் அவரது கணவரும் வெளியே வந்தனர்.
அதற்குள் இவர்களும் சாப்பிட்டு முடிக்க, அனைத்தையும் தங்கையோடு சேர்ந்து ருத்ரனே ஒதுங்க வைத்தான்.
“நாங்க கெளம்புறோம் ம்மா.” என ரகுராமன் கூற, பூஜையறை சென்றவர், நாத்தனாருக்கு புடவையோடு குங்குமமும், பூவும் கொடுத்து வழியனுப்பி வைத்தார்.
****************
“என்னடா… இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்க. இன்னைக்கி வெள்ளிக்கிழமையாச்சே. கோயில்ல கூட்டம் இல்லியா?” என கோவிலில் இருந்து சீக்கிரம் வீடு திரும்பிய பிள்ளைகளிடம் கௌரி கேட்க,
“அதெல்லாம் செம கூட்டம். ஆனா நாங்க தான் விஐபி தரிசனத்துல நேரா போயிட்டமே.” என கௌதம் கூற,
“விஐபி தரிசனமா?” என கேள்வியாகப் பார்த்தார்.
“ஏம்மா… எங்களப் பாத்தா விஐபி மாதிரி இல்லியா?” என்றாள் அமிர்தா.
“கோயில் ட்ரஸ்ட்டியோட பொண்ணு அக்காவுக்கு ஃப்ரென்ட்டும்மா. அவங்களும் அவங்க அண்ணனும் வந்திருந்தாங்க. அவங்களோட போனோம் மா.” என விளக்கம் கொடுத்தான்.
“யாருடா அந்த ட்ரஸ்ட்டி?” என தனக்குள் எழுந்த சந்தேகத்தோடு, அதிராத குரலில் அலுங்காமல் கௌரி கேட்க,
“அவர் பேரு கேசவமூர்த்தி மா. இன்னைக்கி அவருக்குப் பிறந்த நாளாம். அவரோட மகனும், மகளும் வந்திருந்தாங்க. நாங்க எல்லாரும் ஒரே ஸ்கூல் தாம்மா.” என்ற பதிலைக் கேட்டவர், சட்டென, “பாண்டியனப் பாத்தீங்களா?” என முகம் கொள்ளா சந்தோஷத்தோடு படபடப்பாக தனை மறந்து கேட்க,
“அவங்கள உங்களுக்குத் தெரியுமா?” என மகள் அம்மாவை விட ஆச்சர்யமாக எதிர்க் கேள்வி கேட்க, சட்டென நிதானித்துக் கொண்டார். மகள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் கௌரி மௌனியாகிவிட,
“எப்படீம்மா அவங்கள உங்களுக்குத் தெரியும்?” என மீண்டும் அழுத்திக் கேட்க,
“அவங்க நமக்கு தூரத்து சொந்தம் டீ. சும்மா கேள்வி கேக்காம உள்ள போய் ட்ரெஸ்ஸ மாத்து.” என மகளை விரட்ட,
“தூரத்து சொந்தம்னா எம்பூட்டுத் தூரம்மா? அவங்க நமக்கு என்ன உறவு ம்மா.” என மகள் உறவு முறை அறிந்து கொள்ள விடாப்பிடியாக ஆர்வம் காட்ட,
“ம்ம்ம்…. ஒனக்கு தாத்தன் முறை. போதுமா. பெரிய எடத்துல எல்லாம் என்னான்னா என்னாங்கறதோட தான் வச்சுக்கணும். அப்ப தான் நமக்கு மரியாதை. போய் வேலையப் பாரு.” என மகளை அதட்டியவர் இன்னும் இங்கு நின்றால், கேள்வியால் துளைத்தெடுப்பாள் என எண்ணிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
தனிமையில் கணவனிடம் இதைப் பற்றி பேச, அவர் ஏற்கனவே தனக்குத் தெரியும் என அசட்டையாகக் கூறினார்.
“ஏன் எங்கிட்ட சொல்லல?” என,
“ஸ்கூல்ல சேத்த அன்னைக்கே தெரியும். உங்கிட்ட சொன்னா எதுக்கு வம்பு, ஸ்கூல மாத்துங்கனு சொல்லுவ. அங்க அட்மிஷன் கெடைக்க என்ன பாடுபட்டேனு எனக்கு தானே தெரியும். அதனால தான் சொல்லல. இது என்ன மூடு மந்திரமா. என்னைக்காவது ஒரு நாள் தெரிஞ்சு தானே ஆகும்னு நானும் விட்டுட்டே. இப்ப மட்டும் என்ன புதுசா அக்கற அவன் மேல.”
“என்னங்க இப்படிக் கேக்குறீங்க. நீரடுச்சு நீர் விலகுமா? அப்ப விபரம் புரியல. இந்த வயசுல நமக்கு தம்பியான்னு கூச்சமா இருந்துச்சு. ஸ்கூல்ல, ஊருல எல்லாம் கேலி பேசவும் எங்களுக்கு எல்லாம் ஒரு மாதிரியா இருந்துச்சு. ஆனா இப்ப மனசு கெடந்து அடுச்சுக்குதுங்க.” என்றவர் கண்களில் கண்ணீர்க் கோடுகள்.
ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் புனையப்படாத புதினம். எதிர்பாராத எண்ணற்ற திருப்பங்கள் கொண்டது. இது நான் சொல்லலீங்க. வாழ்க்கையப் படிச்சவங்க சொன்னது. நாளை நம் வாழ்க்கை நமக்கு என்ன வைத்திருக்கிறது என்று யாருக்குத் தெரியும்.
நீ நினைத்ததெல்லாம் நடந்து விட்டால், பிறகு நான் எதற்கு என விதி கைகொட்டி சிரிக்கும் காலமும் வரும்.
ஒவ்வொருத்தர் மனநிலை ஒவ்வொரு விதமாக இருக்க, இங்கே ஒருத்தியின் மனநிலை மட்டும் வேறுவிதமாய்.
படுக்கையில் விழுந்தவளுக்கு இன்று கல்லூரி மற்றும் கோவிலில் நடந்ததே மனக்கண்ணில் ஓட, என்றோ அறியா வயதில் ஆழ் மனதில் விழுந்து விதைக்கு, இன்று சாரல் அடிக்க, விதை வேர்விட ஆரம்பித்தது. துளிர்க்கும் முன்பே கிள்ளப்படும் என அறியாமல்.
மாலையில் யாரோ மனதோடு பேச
மார்கழி வாடை மெதுவாக வீச
தேகம் பூத்ததே ஓ ஓ ஓ
மோகம் வந்ததோ
மோகம் வந்ததும் ஓ ஓ ஓ
மௌனம் வந்ததோ
நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது
வருவான் காதல் தேவன் என்று
காற்றும் கூற
வரட்டும் வாசல் தேடி இன்று
காவல் மீற
வளையல் ஓசை ராகமாக
இசைத்தேன் வாழ்த்துப்பாடலை
ஒரு நாள் வண்ண மாலை சூட
வளர்த்தேன் ஆசைக்காதலை
நெஞ்சமே பாட்டெழுது
அதில் நாயகன் பேரெழுது…

Superb, Akilandam romba thaan aduranga
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
[8449]Jetbaz Official Login | বিকাশ দিয়ে সেরা অনলাইন ক্যাসিনো গেম খেলুন,jetbaz অফিসিয়াল লগইন করে সেরা অনলাইন ক্যাসিনো বোনাস বুঝে নিন। সহজেই অ্যাপ ডাউনলোড করে স্লট গেমের নিয়ম জানুন এবং আজই জয়েন করুন। visit: jetbaz
[3581]bet1777 Official Login | বিকাশ দিয়ে অনলাইনে ক্যাসিনো গেম খেলুন,bet1777 অ্যাপ ডাউনলোড করে সহজেই স্লট গেম খেলার নিয়ম জানুন। বিকাশ দিয়ে নিরাপদ লেনদেনের মাধ্যমে সেরা ক্যাসিনো অভিজ্ঞতার জন্য আজই জয়েন করুন। visit: bet1777
I’ve tried a few sites this month but this one is definitely the smoothest. Fast payouts and the interface is super easy to navigate. Highly recommend pkbet2888 for anyone looking for a reliable spot.
Finally a site that feels fair and honest. The bonuses for new players are actually decent and easy to claim. Give phgg7770 a try
I have tried quite a few mobile apps for betting and this one actually stands out for its reliability. No crashes during live matches and the customer support team is always quick to help out. It really feels like they listen to what the community wants. Give it a shot if you want a smoother experience ck444comloginapp