மதன மாளிகையில் 31

31

மதன் எங்கே என்ற வாசுகியின் கேள்விக்கு, “அவன் தோப்பு வீட்ல இருப்பான் அத்தை!” என்றான் ஜெகன். 

“ஏன் வாசுகி, இப்ப அவனையும் ஃபோன் போட்டு‌ பயமுறுத்தப் போறீயா? என்னைக்குமில்லாம ஏன் இன்னைக்கி இப்படிப் பண்ற? உன்னால மாசமா இருக்குற புள்ளையும் தூக்கம் கெட்டு நிக்குது பாரு!” பவித்ராவைக் காட்டி தனசேகரன் கேட்க,

“இல்லீங்க… அருண் போன அன்னைக்கும் எனக்கு இப்படித்தான் படபடன்னு வந்துச்சு. அருண் உசுரக்கொடுத்து காப்பாத்தினது அவனைத்தான? அந்த உசுருக்குதான் என்னமோ ஏதோன்னு பெத்த மனசு சொல்லுதுங்க! ஜெகன் நீ அவனுக்கு ஃபோன் போடு!” என்றார் விடாப்பிடியாக. 

பெத்த மகன்‌ என்று தனசேகரன் சொன்னதும், கிரி நன்றாக இருப்பது தெரிந்து மனம் ஆசுவாசப்பட்டாலும், உள்ளுணர்வு வாசுகியை நிம்மதியடைய‌விடவில்லை. அப்போ இன்னொரு‌ உயிர் மதனிடம்தானே இருக்கிறது. அவனுக்கு ஏதும் ஆபத்தோ என அவரையுமறியாமல் உள்மனம்‌ எச்சரித்தது. 

வாசுகி கேட்டதும், அந்த நாள் ஜெகன் நினைவிலும் வந்துபோக, வாசுகியின் பதட்டம் அவனுக்கும் சற்று கலவரமூட்டியது. 

ஜெகனும் மதனுக்கு அழைக்க, தொடர்பு எல்லைக்கு அப்பால் என்றது அழைப்பு. அழைப்பு சென்றாலாவது மீண்டும் மீண்டும் அழைக்கலாம். ஒரேடியாக தொடர்பு எல்லைக்கப்பால் என்றால் என்ன செய்வது. 

அடுத்து நரேனுக்கு அழைத்தான். 

“பங்கு தோப்புலதான் மாம்ஸ் ‌இருப்பான். என்ன இந்நேரத்துக்கு தேடுறீங்க. வீட்ல யாருக்கும் எதுவுமில்லையே?” என்று சந்தேகமாகக் கேட்க, என்ன சொல்வது எனத் தெரியவில்லை. நடுநிசியைத் தாண்டிவிட்டது. எது சொன்னாலும் நம்பமாட்டார்கள் எனத்தெரிந்து, 

“ஆமாடா… அம்மத்தாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியல. அவன் வந்தா ஹாஸ்பிடல் கூட்டிப் போவானேனுதான் கேட்டேன்.” உண்மை நிலவரம் என்னவென்று தெரியாமல் அவர்களையும் கலவரப்படுத்து வேண்டாமென வாய்க்கு வந்ததைச் சொல்லி சமாளித்தான்.

“பத்து மணிக்கெல்லாம் தேங்கா லோட் வருதுன்னு, சிஸ்ட்டர் வீட்லருந்து கிளம்பப் போறதா சொன்னான் மாம்ஸ். இருங்க… லோட் இறக்க வந்தவங்களுக்கு ஃபோன்‌ போட்டுக் கேக்கலாம். அவன் ஃபோன் ஸ்விட்ச் ஆஃபோ என்னவோ?” என்றவன் அழைப்பைத் துண்டித்தான்.

லோட் இறக்க வந்தவர்களுக்கு அழைத்து விசாரிக்க, அவன் கிளம்பி வருவதாகச் சொன்னதாகவும், ஆனால், தோப்பிற்கு வரவில்லை என்றும் கூறினர். நாளை வந்து கணக்குப் பார்த்துக் கொள்ளலாமென லோட் இறக்கிவிட்டு வந்துவிட்டதாகக் கூற, அதை அப்படியே ஜெகனிடம் கூறியவன், 

“என்ன மாம்ஸ்… எதுவும் பிரச்சினையா?” கேள்வி மீண்டும் அழுத்திக் கேட்கப்பட்டது.

“தெரியலைடா… பத்து நிமிஷத்துல கூப்பிடுறேன்” என்றவனுக்கு, ஒரு வேளை மாமனார் வீட்டிலிருந்து கிளம்பாமல் கருங்கல்பாளையத்திலேயே தங்கியிருந்தால் என்றொரு சந்தேகம். நேரமோ இரண்டு மணி. ஆழ்ந்து தூங்கும் நேரம். இந்நேரத்திற்கு எப்படி அழைத்து விசாரிப்பது‌? 

நண்பர்களும் மீண்டும், மீண்டும் மதன் எண்ணிற்கு அழைப்பு விடுத்தனர். ஸ்விட்ச் ஆஃப் என்றது.

சங்கர் “என்னடா?” என்று கேட்க,

“மாம்ஸ் என்னமோ மென்னு‌ முழுங்குறார்டா. எனக்கு சரியாப்படல. வாங்கடா தோப்புக்குப் போகலாம்!” அதற்கு மேல் அவர்களாலும் ஆடலும்‌ பாடலும் நிகழ்ச்சியில் லயிக்க முடியவில்லை. உடனே கிளம்பி விட்டனர். 

இந்நேரத்திற்கு மாதங்கிக்கு அழைத்து எப்படிக் கேட்பதென்ற குழப்பம். ஒருவேளை அவன் அங்கிருந்து கிளம்பியிருந்தால் அவளையும் கலவரப்படுத்தியது போல் ஆகுமே?

பெரியநாயகி, சாமி அறைக்குள்‌ சென்று, விளக்கை ஏற்றி, மஞ்சள் துணியில் காசு முடிந்து வைத்துவிட்டு வந்தார். ஒரே நம்பிக்கை… மதன், மாதங்கி வீட்டில் தங்கியிருக்க வேண்டும் என்பதுதான். அதை தெரிந்து கொள்ள‌‌முடியமால் அர்த்த ராத்திரி வேளை தடைபோட்டது. 

ஆளுக்கொரு சிந்தனையில் இருக்க, ஜெகன்‌ முதலில் தோப்பிற்குச் சென்று பார்த்து வருவதாகக் கிளம்ப, தானும் உடன் வருவதாக தனசேகரும் கிளம்பினார். 

அவர் உள்ளே சென்று சட்டையணிந்த வருவதற்குள், யாரென்று‌ தெரியா எண்ணிலிருந்து தனசேகரனுக்கு அழைப்பு வந்தது. 

சட்டென அனைவருக்குள்ளும் பதட்டம் தொற்றிக் கொண்டது. அழைப்பை ஏற்க, “தனசேகரன் சார்ங்களா?” என்றுதான் கேள்வி முதலில்.

“சொல்லுங்க!” என்றவருக்கும் குரலும், கையும் நடுங்கியது.‌ 

அவர் பதட்டத்தைப் பார்த்தவன், ஃபோனை வாங்கி ஜெகனே பேசினான். 

“அவங்க மருமகன்தான் பேசறேன். நீங்க யாரு?” என்றான் படபடப்பை மறைத்துக் கொண்டு. 

“பட்ரோலிங் கான்ஸ்டபிள் பேசுறேனுங்க” என்றவுடன் ஜெகன் உடல் விரைத்தது.

“இங்க ரோந்து வந்தோம். நம்ம தோப்புக்கிட்ட பைக் ஒன்னு விழுந்து கெடக்குதுங்க. வண்டியில இருக்குற ஆர்.சி புக்ல மதன்கைலாஷ்னு இருக்குதுங்க. அட்ரஸ்ல நம்ப வீட்டுப் பிள்ளைனு தெரியவும்தான் உங்களுக்குப் போட்டேனுங்க” என்றார். கூகுளில் அவர்கள் கார்மென்ட்ஸ் பெயரைப்போட்டு ஃபோன் நம்பரை எடுத்திருந்தார்.

“அவனுக்கு என்னாச்சு?” என்றுதான் உடனே கேட்டான். அவன் கேட்ட அவசரகதியே வீட்டினர் அடிவயிற்றில் புளியைக் கரைக்கப் போதுமானதாக இருந்தது.

“வண்டி மட்டும்தானுங்க கெடக்குது. ஹெட் லைட்டெல்லாம் நொருங்கியிருக்குதுங்க. யாராவது நேர்ல வாங்க. ஸ்டேஷனுக்கும் சொல்லிருக்கு. இன்ஸ்பெக்டர் வந்துட்டிருக்காங்க!” 

“மாமா!” என்று பதட்டமாகத் திரும்ப,

“பன்னாரியாத்தா… எம்பேரன எங்கிட்ட கொண்டுவந்து உசுரோட சேத்துரு. உனக்கு அக்னிச்சட்டி‌ எடுக்குறேன்!” அடிவயிறு‌ பதற, இரு கையேந்தி உடனடியாக வேண்டுதல் வைத்தார்‌ பெரியநாயகி நெஞ்சடைக்க. 

வாசுகி அப்படியே ஒடிந்து விழுந்துவிட்டார். கண்கள் அவரையும் மீறி‌ தாரைதாரையாக கண்ணீர் சொறிந்தது. பவித்ராவும், சீதாலட்சுமியும் அதே நிலை.

தனசேகரன் உடனே இடும்பனுக்கு அழைத்துவிட்டார். 

ஜெகனும், தனசேகரும் அதிரடியாகக் கிளம்ப,‌ பெண்கள் தாங்களும் வருவதாக அழுது‌ ஆர்ப்பாட்டம் செய்தனர். 

“ஏம்மா, மாசமா இருக்குற புள்ளய இந்நேரத்துக்கு இழுத்தடிக்கச் சொல்றீங்களா? போய் பாத்துட்டு ஃபோன் பண்றோம்மா!” இருக்கிற‌ பதட்டத்தில் பவித்ராவை காரணம் காட்டி சுள்ளென்று கடிந்தார். சஷ்ட்டிகாவும் கூட தூக்கம் கலைந்து அரைத்தூக்கத்தில் அழ ஆரம்பித்துவிட்டாள். 

“அம்மத்தா! வண்டிதான் கெடக்குதாம். இந்நேரத்துக்கு எல்லாரும் போக வேண்டாம். பாத்துட்டு ஃபோன்‌ பண்றோம்!” 

தனக்குள் எழுந்த பதட்டத்தையும் மறைத்துக் கொண்டு, பெண்களை சமாதானம் செய்து ஒரு‌வழியாக வீட்டில் விட்டுக்கிளம்பவே போதும் போதுமென்றானது. 

இவர்கள் வந்து சேர, அதற்கு முன் நண்பர்கள் நால்வரும் வந்துவிட்டனர். இடும்பனும், பரிமளமும் கூட வந்திறங்கினர்.

“உங்களைப் பயமுறுத்த வேண்டாம்னு தான், இரத்தக்கறையச் சொல்லல. வந்து பாத்துக்கட்டும்னு விட்டுட்டோம்ங்க. ஆனா, நாங்க தேடின வரைக்கும் எங்கேயும் பாடி‌ இல்லீங்க” என்று கான்ஸ்டபிள் சொல்ல,

“சார்! முதல்ல பாடின்னு சொல்றதை நிறுத்துங்க!” ஜெகன் கோபமாகக் கத்தியது இருளின் அமைதியைக் கிழித்தது. 

பட்டெனத் தூக்கம் கலைந்து எழுந்தவளுக்கோ, முகமெல்லாம் வியர்த்து நெஞ்சம் படபடத்தது. நெஞ்சைக் கரித்துக் கொண்டு வர, எழுந்து சென்று முகம் கழுவிவந்தாள். ஃபோனை எடுத்துப் பார்க்க மணி நான்கு. தோப்பிற்கு சென்றதும் ஃபோன் செய்வதாக கூறிச்சென்றவன் அழைக்கவே இல்லை. வாட்ஸ் அப் தகவலும் இல்லை. வழக்கமாக இது அவன் எழுந்துவிடும் நேரம்தான்.

அழைக்கலாமா, வேண்டாமா‌‌ என ஒரு கணம் யோசித்தவள், துங்கினால் எழுப்பிவிட்டது ‌போலாகுமே‌ என்று, ‘ஏன் கால் பண்ணல’ என்று கேட்டு வாட்சப்பில் மெசேஜும், உடன்‌ கோப இமோஜிகளையும் அனுப்பிவிட்டு, அடுக்களை சென்று சுடு தண்ணீர் வைத்துக் குடித்தவளுக்கு… நெஞ்செரிச்சல் சற்றே மட்டுப்பட்டது போல் இருந்தது. 

மீண்டும் வந்து படுக்கையில் விழுந்தவளுக்கு தூக்கம் தூரப் போயிற்று. காலையில் வருவதாகச் சொல்லிச் சென்றவனை, இப்பொழுதிலிருந்தே மனம் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டது. 

இதே போல் மறுவீடு வரும் அன்று, பிறந்தவீட்டிற்கு வரும் ஆவலாதியில் தூக்கம் வராமல் புரண்டது நினைவிற்கு வர, அவளையும் அறியாமல் இதழில் சிரிப்பு விரிந்தது. குறுகிய காலத்திற்குள் தனக்குள் நிகழ்ந்த மாற்றத்தை எண்ணியவள்‌ மனம், அந்த மாற்றத்தை உருவாக்கியவனை நினைத்து, ‘ஆள்மயக்கி!’ எனச் செல்லமாக வைதது. 

தூக்கம் வராமல் நேரத்தை நெட்டி முறித்தவள், அந்நேரத்திற்கே குளித்து, உடைமாற்றித் தயாராக ஆரம்பித்துவிட்டாள். அவளுக்கே அவளது செய்கை வேடிக்கையாகவும், சிரிப்பாகவும் இருந்தது.

‘மதி… இப்படி மாறிட்டியேடீ. அவன்தான் உனக்கு வசிய மை வச்சுட்டான் போல‌!’ மனசாட்சி இடித்துரைத்தது 

நேரத்தைக் கடத்தி, ஆறுமணி வாக்கில் வெளியே வர, அடுப்படியில் இருந்த ராகினி அக்காவின் கோலம் பார்த்து, கேலி, கிண்டல் என ஓட்டியெடுத்துவிட்டாள். 

வாசலில் கார் சத்தம் கேட்க, ஆர்வமாகத் துள்ளாத குறையாக ஓடிவந்தாள். 

“மன்னவன் வந்தானடி‌…”  ராகினியின் கேலிப் பாடல் பின் தொடர்ந்தது. 

வெளியே வந்தவளுக்கு, மதன் பைக்கில் வராதது வருத்தம் என்றால், இறங்கி வந்த நரேனைப் பார்த்து, சட்டென முகம் சுருங்க, புருவங்கள் முடிச்சிட்டது. 

“வாங்க ப்ரோ! அவங்கள எங்க?” 

“பங்குதான் டயர்டா இருக்குனு அனுப்பிச்சான் சிஸ்ட்டர்.‌” என்றான் முகத்தை முயன்றளவிற்கு இயல்பாக வைத்துக் கொண்டு. 

“அப்படினா எனக்கு கால் பண்ணி சொல்லிருப்பாங்களே?” என்று ஃபோனை எடுத்து ஆராய்ந்தாள். 

“கால் பண்ணானாம். நீங்க தூங்கிட்டிருந்திருப்பீங்க போல. எடுக்கலைன்னு சொன்னான்!” 

“இல்லையே… என் கையிலயேதானே இருக்கு!” அவள் எங்கே தூங்கினாள். 

பார்வை நரேன் முகத்தையே சந்தேகமாக ஆராய்ந்தது. இவளும் மதன் எண்ணிற்கு அழைக்க இவளது தொடர்பு எல்லைக்குள்ளும் அவன் இல்லை.

“ஏன் ஃபோன் நாட் ரீச்சபில்னு வருது?”

“அது, நைட்டு சார்ஜ் போட மறந்துட்டான் போல!” சமாளிப்பாக கூற,

“அப்பறம் எப்படி எனக்கு கால் பண்ணிருப்பாங்க?”

‘கிரிமினல் வக்கீலாப் போயிருக்க வேண்டிய புள்ள. மடக்கி, மடக்கி எத்தனை கேள்விடா சாமி! சொதப்பிறாதே நரேன்’ தனக்குள் நூறாவது முறையாக சொல்லிக் கொண்டான்.‌

“என்ன இருந்தாலும் பங்கு பங்குதான் சிஸ்ட்டர். என்னை நம்பி அனுப்பி வச்சுருக்கான். ஆனா, நீங்க என்னை நம்பமாட்றீங்க பாத்தீங்களா?” சென்டிமென்ட்டாகத் தாக்க, இதற்குமேல் என்ன பேச முடியும்? இருந்தாலும் அவளைத் தனியே அனுப்பாமல், பூங்கோதை ராகினியையும் உடன் கிளம்பிப் போகச் சொன்னார். 

அவள் நரேனை நம்பலாம். பூங்கோதை நம்ப வேண்டுமென என்ன அவசியம் வந்தது. மகளைத் தனியாக அனுப்பாமல் ராகினியையும் அனுப்பிவைக்க, கார் தோப்பிற்குச் செல்லும் சாலையில் செல்லாமல் ஈரோடு சென்றது. 

ஏன் அவன் வரவில்லை? அப்படியென்ன அலுப்பு? இரவு அவ்வளவு ஆசையாகச் சொல்லிச் சென்றானே? என பலவித எண்ண ஓட்டங்களில் இருந்தவள், கார் செல்லும் திசையைக் கவனிக்கவில்லை. 

ராகினிதான், “அக்கா, கார் வேற வழில போகுது!” என்றாள்.

அதை கண்ணாடி வழியாகப் பார்த்தவன், அவள் கேள்வி கேட்கும் முன், “டவுன்ல ஒரு சாமான் வாங்க வேண்டியிருக்கு சிஸ்ட்டர். பங்குதான் வாங்கிட்டு வரச்சொன்னான். வாங்கிட்டுப் போயிடலாம்” என்று சமாளித்தவன், அடுத்த கேள்வி வருவதற்குள், ‘அடிச்சு ஓட்ரா நரேன்’ என்று காரின் வேகத்தைக் கூட்டினான். 

கார் நிறுத்திய இடத்தைப் பார்த்தவளுக்கு மனம் படபடவென அடித்துக் கொண்டது. கை, கால்கள் வெடவெடத்துவிட்டது. 

“அக்கா” என்று கையை அழுத்திப் பிடித்தாள்‌ ராகினி. அவள் முகத்திலும் கலவர முடிச்சுக்கள்.

“உண்மையச் சொல்லுங்க ப்ரோ? யாருக்கு என்னாச்சு?”‌ மருத்துவமனை வாயிலில் கார் நிற்க, பார்த்தவள் முகம் வெளிறி‌விட்டது சடுதியில்.

“இறங்குங்க சிஸ்ட்டர்” என்றான் கதவைக்கூடத் திறக்க‌ சிந்தையில்லாமல் உட்கார்ந்திருந்தவளிடம் கதவைத் திறந்துவிட்டு. 

இறங்கி உள்ளே நடந்து வருவதற்குள் கால்கள் துவண்டுவிட்டது அவளுக்கு. ராகினி கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். இரவு‌ அவன் ஃபோன்‌ செய்யாதது, அழைக்க வராதது, நரேன் வந்தது என ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து அவள் கற்பனைக் குதிரையின் கடிவாளத்தை அறுத்துவிட்டு தறிகெட்டு ஓடச் செய்தது. 

“அம்மத்தா நல்லா இருக்காங்கதானே? பெரிய அத்தைக்கு ஒன்னுமில்லையே?” அவருக்கு என்னாச்சு என்ற கேள்வியைத் தவிர்ப்பதற்காகவே கேள்விகள் மாற்றி கேட்கப்பட்டது நரேனிடம். 

அவசரசிகிச்சைப் பிரிவின்‌ முன்‌னிருந்த வராண்டா இருக்கையில் பெரியநாயகியும், வாசுகியையும்‌ பார்த்தவள், அவசரமாக மற்றவர்களையும் ஆராய, அனைவரும் அங்கிருந்தனர், அவள் கண்கள் தேடுபவனைத் தவிர. இதயம் தன் துடிப்பை அதிகரித்தது. 

இருட்டில் முடிந்தவரை‌ அக்கம் பக்கம் புதர்களில் எல்லாம்‌ தேடியவர்கள், மதன் கிடைக்காமல் சோர்ந்து போயினர். 

“சார், இங்கதான் இருக்கணும்னு‌ இல்ல. வேறெங்கையாவது கடத்திட்டு கூடப் போயிருக்கலாம்.‌ இல்லைனா வேறெங்கையாவது அடிச்சுப் போட்டிருக்கலாம்” கான்ஸ்டபிள் தன் சந்தேகத்தைக் கூற, 

“எங்க வீட்டுப் பிள்ளை மேல கை வைக்கிற துணிச்சல் இங்க யாருக்கு இருக்கு?” இடும்பன் குரல் கோபத்தை அப்பட்டமாகக் காட்டியது. 

அதற்குள் கீழ்திசையில் வெளுக்க ஆரம்பித்து, மெலிதாக வெளிச்சக்கீற்றுப் பரவ ஆரம்பித்தது. வீட்டிலிருந்து மாற்றி மாற்றி அழைத்த வண்ணமிருந்தனர். அவர்களுக்கு பரிமளம் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். 

“வண்டி கிடக்குது, சுத்துப் ‌பக்கம் எங்கேயும் நம்ம பிள்ளையக் காணோம்மா” என்றவருக்கும் தொண்டை அடைத்தது. 

பதில் சொல்ல முடியாமல், “தகவல் கெடச்சதும் சொல்றேன். யாரும் கூப்பிடாதீங்க” ஜெகன் காட்டுக்‌ கத்தாய்‌ கத்தினான் பவித்ரா அழைப்பிற்கு.

“மாம்ஸ்,‌ நம்மைவிட அவங்கதான் ரொம்ப பயந்திருப்பாங்க. இந்நேரத்துக்கு பவி சிஸ்ட்டருக்கு இவ்வளவு டென்ஷன் ஆகாது. நம்மகூட இருந்தா தைரியமா இருப்பாங்க‌. நான் வேணா‌ போய்‌ கூட்டி வந்துறவா.” சங்கர் மெதுவாக ஜெகனிடம் கேட்க,

“ஏதாவது பண்ணுங்கடா! இத அந்தப்பிள்ளைக்கி எப்படிடா தெரியப்படுத்தறது? எந்நேரமும் கூடவே தானடா இருப்பீங்க. இன்னைக்கி மட்டும் எங்கடா போய்த்தொலஞ்சீங்க!” மதனுக்கு என்னவாயிற்று என்று தெரியாத ஆற்றாமையும், இயலாமையும் ஜெகனிடம் கோபமாக வெடித்தது.

அதற்குள் கார் சாவியை வாங்கிக் கொண்டு சங்கர் கிளம்பிவிட்டான். 

விடிந்துவிட்டதில், மற்றவர்களும் வண்டியை எடுத்துக் கொண்டு ஆளுக்கொரு திசையில் பறந்தனர். அவனது கைபேசி சிக்னல், ஃபோன் ஆஃப் ஆகும்வரை அந்த இடத்தைவிட்டு வேறு இடம் நகரவில்லை எனக் காட்டியது. அதனால், அங்கேயே தேடிக்கொண்டிருந்தனர். சற்று நேரத்திற்கெல்லாம் வீட்டிலிருந்த பெண்களை அழைத்துக்கொண்டு சங்கர்‌ வந்துவிட்டான். 

“ஏதாவது தகவல் கெடச்சுதாப்பு” கேட்டுக் கொண்டே பெரியநாயகி அவசரமாக இறங்கி வந்தார். 

“இல்ல அம்மத்தா… ஆளுக்கொரு பக்கமாப் போயிருக்காங்க!” என்று பெரியநாயகிக்குப் பதில் சொன்னவன், வாசுகி இறங்க உதவி செய்தான். 

அந்த இடம் மீண்டும் பல வருடங்களுக்கு முன் இட்டுச் சென்றது வாசுகியை. அருண் இறந்த பிறகு இந்த இடத்திற்கே வரவில்லை. கிணறும் பாழடைந்து விட்டது. எட்டு வைக்கவே சிரமப்படும் கால்கள் தன்னால் கிணற்றை நோக்கித்தான் போனது. 

வாசுகி கால்கள் தடுமாற, ஜெகன், “அத்தை பாத்து!” என வேகமாகச் சென்று தாங்கிக்கொண்டான். 

“ஜெகன், உள்ளே பாத்தீங்களாப்பா?” என்றவர் குரலில் அத்தனை நடுக்கம். அவருக்கு தூக்கத்தில் ஒலித்து குரல் கிணற்றுக்குள்ளிருந்து ஒலிப்பது போல்தான் கேட்டது. 

நால்வழிச்சாலை போடப்பட்டு அந்த இடமே முற்றிலுமாக மாற்றமடைந்திருந்ததால், வாசுகி கேட்ட பிறகுதான் கிணறு இங்குதானே என்ற எண்ணமே வந்தது அனைவருக்கும். புதர் மண்டிப்போய், கைபிடிச்சுவரெல்லாம் இடிந்து விழுந்து, கிணறு இருந்ததற்கான அடையாளமே  தெரியவில்லை. 

கவனித்துப் பார்க்க, செடி கொடிகள் ஒடிந்து, மடங்கிக் கிடப்பது தெரிந்தது. நொடியும் தாமதிக்கவில்லை. கல், முள் என்று எதையும் பார்க்கவில்லை ஜெகன். அவன் அவசரத்திற்கு கால் சறுக்கியது. பொருட்படுத்தவில்லை.‌ செடிகளைக் களைந்துவிட்டு, எட்டிப் பார்த்தான் ஜெகன். 

“டேஏஏய்… மதன்!” அடிவயிற்றிலிருந்து பீறிட்ட ஜெகனின் அலறல் கிணற்றுச் சுவற்றில் பட்டு எதிரொலிக்க, தோப்பே கிடுகிடுத்தது. அடுத்த நொடி அந்த இடமே கலவர பூமிபோல் காட்சியளித்தது.

“எஞ்சாமிக்கு ஒன்னுமில்ல கண்ணு. பயப்படாதே! எம்பேரன் சாமியா இருந்து உம்புருஷனைக் காப்பாத்திட்டான். பன்னாரியாத்தா தயவுல அவனுக்கு வந்த கண்டம் விலகிப் போயிருச்சு!”

பதட்டத்தோடு உள்ளே வந்தவளை, எதிர் கொண்டு, அவள் என்னவென்று கேட்கும் முன், கண்டேன் சீதையை என்றது போல், மதனுக்கு ஆபத்து இல்லை என்ற செய்தியை முதலில் கடத்தினார் பெரியநாயகி. 

‘அப்படீன்னா’ என்று உள்மனம் கேள்வியெழுப்ப, இத்தனை நாழிகையாகத் தாக்குப்பிடித்த பதட்டம் விடுபட, அடுத்த நொடி மயங்கியிருந்தாள். ராகினி அவசரமாக அக்காவைத் தாங்கிக் கொண்டாள். உடனே அம்மாவிற்கு அழைத்து தகவல் சொன்னாள். 

பிள்ளைக்கு ஒன்று என்றால் எங்கிருந்துதான் தெம்பு வருமோ இந்த அம்மாக்களுக்கு‌. நிமிர முடியாமல் இழுத்துப் பிடித்த வயிற்றையும் மீறி, அடுத்த ஐந்தாவது நிமிடம் கிளம்பி காரில் ஏறியிருந்தார் பூங்கோதை. 

கிளம்பும்‌ முன், “உன் வாய்க்கு போற எடத்துல சீப்படத்தான் போறேன்னு, உங்க வாய்ல விழுந்துதான் என் பிள்ளைக்கு இந்த நிலமை. அவ வாழ்க்கைக்கு மட்டும் ஏதாவது ஆச்சு, நான் மனுஷியாவே இருக்கமாட்டேன்!” ஜெகதாம்பாளை‌ எச்சரித்துவிட்டுத் திரும்பியவர் பார்வை வாசுதேவனைப் பார்க்க உங்களுக்கும் தான் என்று சொல்லாமல் சொல்லியது.

“அவன்தான் சொல்றான்லடா”

“அவன் சொன்னா, நாங்க நம்பிருவோமா? எங்கள என்ன கேனையன்னு நெனச்சானா? இத்தனை வருஷமா இல்லாம இன்னைக்கி என்ன புதுசாத் திருட வந்தானுங்களா? அங்க கெணறு இருக்குறது இருட்டுல தெரியாமப் போச்சாக்கும்? இதை யாராவது காதுல பூவச்சிருப்பான். அவன்கிட்ட போய் சொல்லச்சொல்லுங்க. இதை யார் பண்ணிருப்பாங்கனு நல்லா தெரியும் மாம்ஸ்! பங்கு மொதல்ல எந்திரிச்சு வரட்டும். அவிங்களுக்கு இருக்கு!”

“டேய்! போயி அவனவன் வேலைய மட்டும் பாக்கோணும். அதைவிட்டுப்போட்டு வேற ஏதாவது ஏடாகூடமாக் கேள்விப்பட்டேன், தோல உரிச்சுப்புடுவேன்!” ஜெகன் நால்வரையும் விரல் நீட்டி எச்சரிக்க,

“நீங்க கார்மென்ட்ஸ் நடத்துறதுக்குப் பதிலா, லெதர் பிஸினஸ் பண்ணலாம்!” முணங்கிக் கொண்டே நால்வரும் செல்ல,

“என்னடா வாய்க்குள்ள மொணங்கறீங்க?”

“ஒன்னுமில்ல!”

“அங்க எங்கடா போறீங்க?”

“எங்கேயும் இல்ல.‌ இங்கதான் உக்காரப்போறோம்!” சலிப்பாய் சொல்லிவிட்டு மருத்துவமனை வராண்டாவில் போட்டிருந்த வரிசைச் சேர்களில் அமர்ந்தனர். 

“சொன்னதெல்லாம் நெனப்பிருக்குல்ல. பொட்டாட்டம் வாலச் சுருட்டிட்டு இருக்கணும்!” மீண்டும் ஒருமுறை அவர்களை எச்சரித்துவிட்டே சென்றான். 

யார் செய்திருப்பார்கள் என்று சந்தேகத்திற்கு இடமின்றி எல்லோருக்கும் ஊர்ஜிதமாகத் தெரிந்தாலும், இவன்தான் வாயே திறக்கமாட்டேன் என்கிறானே? 

போதையில் வந்தவர்கள், கழுத்தில் கிடந்த செயினுக்காகப் பின் தொடர்ந்ததாகவும், அதில் நடந்த கைகலப்பில் தான் கத்திக்குத்து என்றும், அடித்துக் கேட்டாலும் நான் இதைத்தான் சொல்வேன் என்பது போல் திரும்பத்‌திரும்ப ஓட்டின‌ படத்தையே ஓட்டுகிறானே. உடம்பு நன்றாக இருந்தால் இவர்களுக்கு இருக்கும் ஆத்திரத்திற்கு அடித்துக் கூட கேட்பார்கள்.‌ அதற்கும் வாய்ப்பில்லை. 

வயிற்றில் தையல் போடப்பட்டு கண்கள் மூடி படுக்கையில் கிடந்தான் மதன்.

***** 

“என்னடீ… எல்லாரையும் பயமுறுத்திட்ட போல?”

“நீங்க பயமுறுத்தினதை விடவா?” ஜுஸ் பிழிந்து கொண்டே கேட்க, சிரிப்பு மட்டுமே அவனிடம். இந்தச் சிரிப்பை பார்ப்பதற்குள் எத்தனை தவித்துப் போனாள். உயிர் போய் உயிர் வந்தது.

கத்தி மேலாகக் கிழித்திருந்ததில் காயம் ஆழமில்லை என்றாலும், தண்ணீருக்குள் தூக்கிப் போட்டதில், இரத்தம், உறையாமல் அதிகமாக வெளியேறியிருந்தது. 

அதனால் இரத்தம் ஏற்றவேண்டியதாய்ப் போயிற்று. அஜய்‌, நரேன் இருவரது இரத்தமும், மதன் இரத்தப்பிரிவோடு  ஒத்துப் போக அவர்களே கொடுத்தனர். 

கடந்த ஐந்து நாட்களாக மருத்துவமனை விட்டு யாரும் நகரவில்லை. நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று நண்பர்களும், ஜெகனும் எவ்வளவோ சொல்லியும், இரவு கூட மாதங்கி வீட்டிற்குச் செல்ல மறுத்துவிட்டாள். 

அன்றிரவு, தன்னோடு‌ பிடித்து வைத்திருந்தால் இந்த விபத்தே நிகழ்ந்திருக்காதோ என்ற எண்ணம். இனியும் அவனைத் தனித்து விடுவதாக இல்லை. 

இன்றுதான் டிஸ்சார்ஜ். 

மதன், மாதங்கியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். என்ன பார்வை என்பது போல் அவளும் பார்த்துவிட்டு, ஜூஸை‌ டம்ளரில் ஊற்றிக் கொடுத்தாள். 

“என்ன பண்றதா ஐடியா?” என்றாள்.

“இப்போதைக்கு ஒன்னும் முடியாது. டம்பளர்ல தான் குடிச்சாகணும். வீட்டுக்குப் போய்தான் யோசிக்கணும்!” என்றவன் பார்வை சென்ற திக்கைப்‌‌ பார்த்தவள், 

“கண்ண நோண்டிறுவேன். அவிங்கள என்ன பண்றதா ஐடியா?” என்றாள் அழுத்தி.

“யாரை?”‌ என்றான்‌ ஜுஸை முன்னபின்ன குடித்திராதவன்‌ போல் டம்ப்ளரை விட்டுப் பார்வையை எடுக்காமல்.‌

“ஒன்னும்‌ தெரியாத மாதிரி கேக்கக்கூடாது. சொத்து விவகாரத்துக்கே ஊர் பூரா போஸ்ட்டர் அடிச்சு ஒட்டி ஒரண்டையக் கூட்டின ஆளாச்சே? இப்ப கொலை பண்றளவுக்கு வந்திருக்கானுங்க. சும்மா இருக்க மாட்டீங்களே?” 

“யார் கொலை பண்ண வந்தா?” விட்டேத்தியாகக் கேட்க, 

பழம் நறுக்கிய கத்தியை வேகமாக எடுத்தவள், “இப்படியே‌‌ சொருகிறுவேன். அவிங்கள மாதிரி அரைகுறையாச் சொருக மாட்டேன்!” என்றவள் கோபம் பார்த்து வாய்விட்டு சிரித்தவன், 

“கத்தியும் எடுப்பாள் பத்தினி!” என்றான். 

“எல்லார்கிட்டயும் சொன்னதையே எங்கிட்டயும் சொல்லக்கூடாது. அடுத்த நிமிஷம் என்ன பண்ணுவீங்களோன்னு பக்கு பக்குன்னு இருக்கு!” என்றவள் வாடிய முகத்தைப் பார்த்தவனுக்கும் மனம் கனத்துப் போயிற்று. ஒரு வாரமாயிற்று அவள் கண்ணயர்ந்து. எவ்வளவு பயந்திருக்கிறாள் என்பதை அவள்‌ கோபமே காட்டிக் கொடுத்தது. 

அவளை‌ இழுத்து பக்கத்தில் உட்காரவைக்க, முகத்தைத் திருப்பிக் கொண்டாள். உதடு பிரிக்காமல் நமட்டுச் சிரிப்பு சிரிக்க, தன் நிலமை இவனுக்கு கேலியா இருக்கா என்ற ஆற்றாமையில் அவள் கண்கள் தன்னால் கலங்கியது. 

“அம்மணிக்கு எம்பூட்டு கோபம் வருது?” என்று நாடியைத் தொட்டுத் திருப்ப கையைத் தட்டிவிட்டாள். 

“பின்ன என்னங்க? நீங்க பதிலுக்கு ஏதாவது பண்ணப்போக, பதிலுக்கு அவங்க ஏதாவது பண்ண, நித்ய கண்டம் பூர்ண ஆயுசுன்னு என்னால எப்பவும் பதட்டமாவே இருக்க முடியாது!” என்றாள் தொண்டையடைக்க. அவளது பயம் சொல்லாமலே புரிந்தது‌. 

ஆழ்ந்து மூச்செடுத்தவன், விளையாட்டுத் தனத்தை விடுத்து, “நான் எதுவும் பண்ணப்போறதில்லைடீ. பெரியப்பாவும், இடும்பன் மாமாவும்‌, என் வாயையும், கையையும் கட்டிப் போட்டாங்க. அடிச்சுக் கேட்டாலும், யார்கிட்டேயும் வாயே திறக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாங்க மதி! ஆனா, ஏதாவது பண்ணிருவோமோங்குற பயத்துலயே‌, அவிங்கள பதட்டத்துலயே வைக்கப் போறோம். இப்ப பதிலுக்கு உடனடியா ஏதாவது பண்ணிட்டா, அவிங்களுக்கும் பயம் விட்டுப்போகும். ஆனா, அடிபட்டுத் தப்பிச்ச பாம்பு எப்பக் கொத்தும்னு ஒரு பயம் இருந்துட்டே இருக்கும் பாத்தியா, அதுதான் அவிங்களுக்கு நாம கொடுக்குற தண்டனை” என்று சொல்ல நம்பாத பார்வை பார்த்தாள். 

“நம்புடீ. பொண்டாட்டியே புருஷனை‌ நம்பலைனா எப்படி? ஆனா, பெரியப்பாவும், மாமாவும் என்ன பண்ணுவாங்னு தெரியாது. நான் அதுக்கு பொறுப்பில்ல” என்று கைகளைத் தூக்கினான்.‌ அதானே பார்த்தேன்… ஆக மொத்தம் சும்மா விடப்போவதில்லை என்பது போல் முகத்தை வெட்டினாள். 

மதன்‌ கண்‌விழித்ததுமே, உள்ளே‌ வந்த தனசேகரும், இடும்பனும்‌ நடந்ததை கேட்டுத் தெரிந்து கொண்டனர். எவ்வளவு தைரியம் என உள்ளுக்குள் ஆத்திரம் பொங்கியது. போனால் போகுதென்று கடன்காரர்களிடமிருந்து சொத்தைக் காப்பாற்றிக் கொடுத்தால், நம்மையே பல்லப் புடிச்சு பதம்பார்ப்பார்களா? காலத்திற்கும் தலையெடுக்க முடியாதவாறு அடிக்க வேண்டும் என முடிவெடுத்தவர்கள், இதை யாரிடமும், முக்கியமாக இவன் நண்பர்களிடம் சொல்லக் கூடாதென, மதனிடம் உறுதி‌ வாங்கிக் கொண்டனர். ஆத்திரத்தில் அவர்கள் ஏதாவது செய்யப்போக அவர்கள் எதிர்காலமும் வீணாகிவிடும். 

எப்படியும் இவர்கள் ஏதோ செய்யப்போவது உறுதி.‌ ஆனால் வெளியே தெரியப்போவதில்லை என்று மட்டும் அவளுக்குப் புரிந்தது.

கோபமாக இருந்தவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அப்பொழுது நர்ஸ் உள்ளே வர, படுக்கைவிட்டு எழுந்துகொண்டாள்.‌ அவனது பிபி, டெம்ப்ரேச்சர் என நார்மல் செக்கப் செய்தார். நர்சிடம் ஏதோ ரகசியமாகச் சொல்ல, மாதங்கியை பார்த்து புன்னகைத்துவிட்டுச் சென்றார்.‌

“என்ன சொன்னீங்க? என்னைப் பார்த்து சிரிச்சுட்டுப் போறாங்க!”

“என்ற வூட்டம்மணி ரொம்ப கோபமா இருக்காங்க. அவிகள சிரிக்க வைக்க, ஏதாவது மருந்திருந்தா எடுத்துட்டு வாங்கனு சொன்னேன். எடுத்துட்டு வரப் போயிருக்காங்க!” என்றான்.

அடுத்த பத்து நிமிடத்தில் வந்தவர், கையிலிருந்த கிட்டை மாதங்கியிடம் கொடுத்துவிட்டுச் சென்றார்.

வாங்கியவள்‌ கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தன. 

அவளுக்கே நினைவில் இல்லை. ஆனால், இவன் நினைவில் வைத்திருக்கிறான். ஒரு வாரம்தானே தள்ளிப் போயிருக்கிறது. 

அவன் முகத்தைப் பார்க்க, “சிரிக்க வைக்திற மருந்து. டெஸ்ட் பண்ணிட்டு வந்து சொன்னா‌ நானும் சிரிப்பேன்!” என்றான் கண்சிமிட்டி. 

உள்ளே சென்றவள் அடுத்த பத்தாவது நிமிடம், பூரிப்பாக வெளியே வந்தாள். 

“எப்படீங்க!” என்றவளின் ஆச்சர்யமே காட்டிக் கொடுத்தது. 

“நம்ம கணக்கு எப்பவும் தப்பாதுங்க அம்மணி. நீங்க மயங்கி விழுந்தீங்கனு சொன்னப்பலேர்ந்தே சந்தேகம்தான். நானும் இந்த ஒரு வாரமா கவனிச்சுட்டேதானே இருக்கேன். காலையில எந்திரிச்சதும், நெஞ்சைக் கரிக்குதுன்னு நீங்க சுடுதண்ணி வாங்கி குடிக்கறதை. எம்மேலயே கவனமா‌ இருந்ததால மார்னிங் சிக்னஸ் அம்மணிக்குத் தெரியல!”

“ரொம்பக் கஷ்ட்டம். பொண்டாட்டிய‌ இவ்ளோ‌ உத்துக் கவனிக்கக் கூடாது!” என்றவள் முகம் சந்தோஷத்திலும், நாணத்திலும் பூரணச்சந்திரனாய்‌ ஒளிவீசியது. 

அடுத்த நொடி முகம் சுறுங்க, கை நீட்டி அழைத்தான். பக்கத்தில் அமர்ந்தவள் கையை எடுத்து அழுத்திப் பிடித்துக் கொண்டான். முகம் வாட்டத்தைக் காண்பிக்க, என்னவெனப் புருவம் உயர்த்தினான்.‌

“இல்ல… குழந்தை உருவான நேரம் அப்பாவை ஹாஸ்பிடல்ல படுக்க வச்சுருச்சுனு சொல்லிருவாங்களோன்னு பயமா இருக்குங்க!” என்றவள் குரல் உள்ளிறங்கியது. 

“நீ ஏன் மதி அப்படிப் பாக்குற? பிள்ள உண்டான நேரம் அப்பாவோட போன உசுர காப்பாத்திக் கொண்டு வந்திருக்குணும் சொல்லலாம்ல! எதுவுமே நாம பாக்குற கண்ணோட்டத்துல தான் மதி இருக்கு! இந்த நேரத்தை என்ஜாய் பண்ணாம என்ன‌டீ இது?” என்று சற்றே கடிய,

“சாரிங்க” என்றாள் உடனே.

“எல்லாம் ஸாரியோட மகிமை” என்று சொல்லி கண்சிமிட்ட, நாணச்செம்மை அவள்‌ முகமெங்கும். 

மருத்துவமனை விட்டு அழைத்துப் போக ஜெகன் வந்தான். உடன் நால்வரும். 

“ஏன்டா, நான்‌ என்ன வெளிநாட்டு சுற்றுப்பயணம்‌ முடிச்சு வர்ற அரசியல்வாதியாடா. வரவேற்க வந்த மாதிரி எல்லோரும் வர்றீங்க? தோப்புல வேலையெல்லாம் யாருடா பாக்குறது?”

“உனக்கு அவனுங்க வயித்துல கோடு போட்டிருக்கக் கூடாது பங்கு. வாயில போட்டிருக்கணும். ஒரு நாள் தனியா விட்டுப் போயிட்டோம்.‌ அதுக்கு வேணும்ங்கற அளவுக்கு அனுபவிச்சாச்சு. இனிமே பாத்ரூம் கூட உன்னையத் தனியா அனுப்பறதா இல்ல!” என்று வாய் கேலி பேசினாலும், 

அன்று‌ அவர்கள் பட்டபாடு அவர்களுக்குத்தானே தெரியும். மயங்கிய நிலையில் கிணற்றுக்குள்ளிருந்து தூக்கிய மதனை, உயிர் இருக்கிறதா என சோதித்துப் பார்ப்பதற்குள் எல்லோருக்குமே உயிர் போய்‌ உயிர் வந்தது. 

“பங்கூ!” 

அவனை அந்த நிலையில் பார்த்த நால்வரின் ஓலம், வழியில் நின்று பார்த்தவர்கள் மனதையெல்லாம் கசக்கிப் பிழிந்தது. நான்கு பேரும் அவன் மீது விழுந்து கதறிவிட்டனர்.‌ 

“இதுநாள் வரைக்கும் சும்மா பேச்சுக்குதான் பங்குனு கூப்பிட்டோம். இப்ப உண்மையாவே ரெத்த சொந்தம் வேற. இனிமே ஒரு நிமிஷங்கூடத் தனியா விடமுடியாது பங்கு!” என்றான் நரேனும், அஜயும். 

வீட்டிற்கு வர, வாசுகிதான் ஆரத்தி எடுத்து வரவேற்றார். 

பெரியநாயகி சாமி அறைக்கு அழைத்துச் சென்று விபூதி பூசி அழைத்துவந்தார். 

“அப்படியே உங்க பேத்திக்கும் பூசுங்க அப்பத்தா” என்றான். 

மாதங்கிக்கும் பூசி விட்டவர், “அங்க எப்ப சாமி‌ போகலாம்‌. உன்னை, இங்க தனியா விடமுடியாது!” என்று பேரனிடம் கேட்க, 

“இனிமே இங்கதான் அப்பத்தா. நான் மட்டும் இல்ல. பெரியப்பா, பெரியம்மா, நீங்க எல்லோருமே இங்கதான். இந்த வீட்டு வாரிசு இந்த வீட்லதான் பிறக்கணும்!” என்றவன் முகமும், கண்களும் விகசித்து சிரிக்க,

“என்ன கண்ணு சொல்ற!” என்றவர் முகம் நொடியில் மலர்ந்தது. 

“ஆமா‌ அப்பத்தா… உங்க பேத்தி மாசமா இருக்கா! பெரியம்மா ஆசைப்பட்ட மாதிரி அருண்‌ அண்ணா மறுபடியும் இந்த வீட்ல வந்து பொறக்கப்போறான்!” என்றவன் கண்கள் வாஞ்சையாக வாசுகியின் முகம்பார்த்தது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top