30
“அருண் அண்ணா… அருண் அண்ணா… கிரி என்னை அடிக்க வர்றான்!” கத்திக் கொண்டே ஓடிவந்தான் மதன்.
“டேய்… விர்றா! எப்பப் பாரு அவன்கிட்ட வம்பிழுத்துக்கிட்டு!”
மதனைத் துரத்திவந்த கிரிதரனை சத்தம் போட்டான் பதினேழு வயது அருணகிரி.
இந்த வருடம் பள்ளிப் படிப்பை முடித்திருந்தனர் அருணும், ஜெகனும். கோடை விடுமுறைக்கு ஜெகன், மாமா வீட்டிற்கு வந்திருந்தான்.
நால்வரும் ஒன்றாகவேதான் சுற்றுவது.
எப்பொழுதும் மதனை வம்பிழுத்து அவனை சீண்டிப் பார்ப்பதே கிரியின் அன்றாடக் கடமை. ஏதொன்றிலும் இருவருக்கும் ஏழாம் பொருத்தம். மதன் அப்பாவைப் பற்றி வாசுகி வெறுப்பாகவே பேச, கிரியின் மனதிலும் அதுவே பதிந்து போனது. நம் குடும்பத்திற்கு ஆகாதவர் மகன் என்ற எண்ணம். அவனுக்கும் அந்த வீட்டிலிருந்த உரிமையும், பெற்றவர்கள் இல்லையென, அப்பத்தா, தாத்தாவிடம் அவனுக்குக் கிடைத்த அதிகப்படியான சலுகையும் அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மூத்த தாரம், இளையதாரத்துப் பிள்ளைகள் போல் எப்பொழுதும் ஒரு காழ்ப்புணர்ச்சி மதன் மீது கிரிக்கு.
அன்றும் இருவருக்குள்ளும் ஏதோ ஒரு சண்டை. இங்கு வந்த புதிதில் கிரிக்குப் பயந்து அடங்கிப் போவான். வருடங்கள் செல்ல, இப்பொழுது மதனும் எதிர்க்கத் தொடங்கிவிட்டான்.
மறு பிழைப்பு பிழைத்து வந்தவனென பெரியநாயகி, பேரனுக்குத் தயிரும், நெய்யுமென ஊட்டம் கொடுத்து வளர்த்ததில் பரம்பரை உடல்வாகும் சேர்ந்துகொள்ள, வயதுக்கு மீறிய வளர்ச்சி மதனிடம்.
ஒவ்வொரு பருவத்திற்கும், பிள்ளைகள் ஒரு வளர்த்தி வளரும் எனச் சொல்வதுண்டு. அப்பொழுதுதான் தொண்டைக்கட்டு உடைந்து, குழந்தைத் தன்மை மறைந்து, கையும், காலும் வலுவாக, நரம்புகள் முறுக்கேற, நெடு நெடுவென வளரும் பருவம் மதனுக்கு. பின்னாலிருந்து பார்த்தால் மதனுக்கும், அருணுக்கும் வித்யாசமே தெரியாது. பெரியப்பா, சித்தப்பா மகன்களுக்குள் அப்படியொரு உருவ ஒற்றுமை.
“அம்மத்தா இவனுக்கு மட்டும் மாட்டுப்புண்ணாக்கு போட்டு வளக்குறாங்க போலடா. அதுக்குள்ள இவனுக்கு மீசை மொளச்சிருச்சு!” பதின் வயதிற்கே உரிய, தோற்ற ஒப்பீட்டில், ஜெகன் கூட பலசமயங்களில் மதனைக் கேலி செய்வதுண்டு. அத்தை மகன் கேலியில் முகம் சிவக்கும் மதனுக்கு.
“டேய்! நீ பொம்பளப்புள்ளயா பொறந்திருக்கலாம். நான் பொண்ணுத்தேடவேண்டிய அவசியமே இருந்திருக்காது” மாமன் மகனை கேலி செய்து மேலும் சிவக்க வைப்பான்.
“நாங்களும் உனக்கு மாமன் மகனுகதான்டா. என்னமோ அவனையே கொஞ்சுற?” பொறாமையில் பொசுங்குவான் கிரி.
எப்பொழுதும் கலாட்டாவும், விளையாட்டுமாகப் பொழுது போகும் இவர்களுக்கு.
அன்றும் தோப்பில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர் நால்வரும். அருணும், மதனும் ஒரு டீம். ஜெகனும், கிரியும் ஒரு டீம். விளையாடும் பொழுதே மதனுக்கும், கிரிக்கும் அவுட் ஆனதை ஒத்துக் கொள்ளாமல் சண்டை வந்துவிட்டது. கைகலப்பு வரை போயிற்று. இருவரும் கட்டி உருண்டனர். மதனின் கிடுக்கிப்பிடியிலிருந்து கிரியால் விசும்பக்கூட முடியவில்லை. ஜெகனும், அருணும்தான் பிரித்துவிட்டனர்.
“சின்னப்பயகிட்ட தோத்துட்டு சண்டை போடுற. அவன் பிடியக்கூட அசைக்க முடியல. வெக்கமாயில்ல.” விளையாட்டு போல்… ஜெகன், கிரியைக் கேலிசெய்ய அந்தக் கோபத்தில், கையிலிருந்த பேட்டால் மதன் பின் மண்டையில் ஓங்கி அடித்துவிட்டான்.
“அம்மாஆஆ…” என அலறியவாரே தலையைப் பிடித்து தரையில் சுருண்டுவிட்டான் மதன். தலை கிறுகிறுத்து விட்டது அப்பொழுதே. அவன் நிலையைப் பார்த்த அருண், கிரியை ஓங்கி அறைய, ஜெகனும் கண்டமேனிக்குத் திட்டிவிட்டான். மதனை தூக்கி உட்கார வைத்து, பின் மண்டையை அழுத்தி தேய்த்துவிட்டான் அருண்.
தலை விண்ணெனத் தெறித்தது. தலை சுற்றுவது போலிருந்தது. இதைச் சொன்னால் இருவரும் இன்னும் கிரியைத் திட்டுவார்கள் என சொல்லாமல் விட்டுவிட்டான்.
நால்வரும் விளையாண்டு, சண்டை போட்டுக் கட்டிப் புரண்டதில், வியர்வையில் புழுதி அப்பிக்கிடக்க, கிணற்றில் குளிக்கலாமெனக் கிளம்பினர். அண்ணனிடம் அடிவாங்கிவிட்ட கோபம் இன்னும் தீரவில்லை கிரிக்கு.
மதன் தவிர மற்ற மூவருக்கும் நீச்சல் தெரியும். அருணும், மதனுக்கு வருடாவருடம் நீச்சல் கத்துக் கொடுக்க முயற்சி செய்கிறான். சென்னையிலிருந்து வந்த புதிதில் கிணற்றருகே கூட செல்லப் பயந்தான். அந்தக் கிணறே அவனைப் பயமுறுத்தும். இடுப்பளவு சுற்றுச் சுவரெழுப்பிய, பெரிய வட்டக்கிணறு. நல்ல ஆழமும், அகலமும் கொண்ட கொங்குமண்டலக் கிணறு.
இத்தனை வருடத்தில் கிணற்றுப் படியில் இறங்கும் அளவிற்குதான் பயம் தெளிந்திருக்கிறான். அப்பொழுதும் உள்ளிறங்கி குளிக்கமாட்டான். பம்ப் செட்டில்தான் குளிப்பான். இந்த வருடம்தான் கொஞ்சம் பயம்விட்டு அருணோடு சேர்ந்து அரைகுறையாக நீச்சல் அடிக்கப் பழகியிருக்கிறான். அப்பொழுதும் பயத்தில் தண்ணீரைக் குடித்துவிடுவான்.
நால்வரும் கிணற்றருகே வர, மதன் வழக்கம் போல் படியில் இறங்கி, கடைசிப் படியில் அமர்ந்து கொண்டான். மற்ற மூவரும் ஓடி வந்து உள்ளே குதித்தனர். மதிய வெயிலுக்கும், இவ்வளவு நேரம் விளையாடிய அலுப்பிற்கும் நேரம் போனதே தெரியாமல் நீச்சலடித்து தண்ணீரில் மூழ்கிக் கிடந்தனர்.
பசிக்கிறது, வீட்டிற்குப் போகலாமென ஜெகன் முதலிலேயே மேலே ஏறிவிட்டான். இவர்கள் விளையாட்டைப் பார்த்த ஆர்வத்தில் மதன், பயம் மறந்து காலை கிணற்றுக்குள் தொங்கப்போட்டு அமர்ந்திருந்தான். அருணும் மேலே ஏறிவிட, தண்ணீருக்குள் மூழ்கியபடியே வந்த கிரி, சரட்டென தலை தூக்கி, மதன் கால்களைப் பிடித்து உள்ளே இழுத்துவிட்டான்.
இதை எதிர் பார்க்காத மதன், “அருண் அண்ணா” எனக் கத்திக் கொண்டே உள்ளே விழுந்திருந்தான். திடீரென உள்ளே இழுத்துவிட்ட பயத்தில் தெரிந்த அரைகுறை நீச்சலும் மறந்து போயிற்று. பாதிப்படிவரை ஏறியிருந்த அருண், மதன் சத்தம் கேட்டுத் திரும்ப, அவன் முகம் மட்டுமே தண்ணீருக்கு மேலே தெரிந்தது. அடுத்த நொடி மூழ்கிப் போனான். பார்த்த உடனே அருண் குதித்துவிட்டான். கிரி மேலே ஏறிச் சென்றுவிட்டான்.
ஜெகன், “அவிங்கள எங்கடா?” எனக் கேட்டான்.
“ரெண்டு பேரும் கடப்பாறை நீச்சல் பழகுறாங்க” என்று சொல்லி சிரித்தான்.
“என்னடா சொல்ற?”
“மதன் உள்ளே விழுந்துட்டான். இவனும் குதிச்சுட்டான்” என்றான்.
“டேய், மதனுக்கு நீச்சல் தெரியாதேடா!” என்று அவசரமாக கிணற்றை எட்டிப் பார்க்க, தண்ணீர் வளையம் மட்டுமே தெரிந்தது.
“உள்ளே விழுந்தாதானே நீச்சல் பழகுவான். அதான் இழுத்து விட்டேன்” என்றான், சிறிதும் தான் செய்த காரியத்தின் வீரியம் உணராமல்.
“போடாங்” என்று வாய் வரை வந்த கெட்ட வார்த்தையை தனக்குள் அடக்கிக் கொண்டு கிணற்றையே எட்டிப் பார்க்க, இருவரும் மேலே வருவதற்கான அறிகுறி தெரியவில்லை.
அருண்தான் மதனின் இறுக்கிய பிடியில் சிக்கியிருந்தானே? அருண் உள்ளே குதித்ததும், மதன் பயத்தில் அவன் கழுத்தை வளைத்துப் பிடித்துக் கொண்டான்.
தண்ணீரில் மூழ்கியவர்களை காப்பாற்ற வேண்டுமானால் முதலில் தலை முடியைப் பிடித்துதான் தூக்க வேண்டும். நம் கையோ, கழுத்தோ சிக்கியதென்றால், நம்மையும் சேர்த்து உள்ளிழுத்து விடுவார்கள். இங்கும் அதுதான் நடந்தது.
மதனுக்கு சிக்கியது அருணின் கழுத்துதான். நன்கு வளைத்து இறுக்கிக் கொண்டான். கிட்டத்தட்ட இருவரும் ஒரே உயரம், எடை. நீருக்குள் எடை தெரியாதென்றாலும், பயத்தில் இறுக்கிப் பிடித்த மதன் கையைப் பிரித்து எடுக்க முடியவில்லை அருணுக்கு. ஏற்கனவே தலையில் கிரி அடித்தது, திடீரென நீருக்குள் இழுத்துவிட்டதில், வயிறுமுட்ட தண்ணீரைக் குடித்தது என அரைமயக்க நிலைக்கு சென்றுவிட்டான் மதன்.
இருவரும் மேலே வராமலிருக்க, ஜெகனுக்கு பயம் வந்தது. அவனும் உள்ளே குதித்துவிட்டான். கிரிக்கு, அப்பொழுதுதான் அவன் செய்த காரியத்தின் வீரியம் புரிந்தது. உடல் நடுங்க ஆரம்பித்துவிட்டது. ஓடிப் போய் யாரையாவது கூப்பிடும் சிந்தை கூட இல்லை.
உள்ளே குதித்த ஜெகனுக்கு, மதன் தலை சிக்க, முடியைப் பிடித்து இழுத்தான். அருணோடு ஒட்டியிருந்தவனை இழுக்க முடியவில்லை. அவனை விட்டுப் பிரித்தால்தான், அருணும் மேலே வரமுடியும் எனத் தெரிய, அருண் கழுத்திலிருந்து, மதன் கைகளைப் பிரித்து, தலை முடியைப் பிடித்து இழுத்துவந்தான். அதற்குள் மதன் முற்றிலுமாக மயங்கியிருந்தான்.
தண்ணீருக்கு மேலே இழுத்து வந்தவன், அண்ணார்ந்து பார்த்தான். கிரி கிணற்றையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“யாரையாவது கூட்டி வாடா!” ஜெகன் கத்தியது கிணற்றுச் சுவற்றில் எதிரொலித்தது. அப்பொழுதுதான் உதவிக்கு அழைக்க வேண்டுமென்ற சுரணையே கிரிக்கு வந்தது. தண்ணீருக்குள் எடை தெரியாமல் இழுத்து வந்தவனால், மயங்கியவனைத் தூக்கி படி மீது போட முடியவில்லை. அவனும் சிறுவன் தானே. இந்தளவிற்கு முயன்றதே பெரிய விஷயம். அப்பொழுதுதான் கவனித்தான். அருண் இன்னும் மேலே வரவில்லை என்பதை.
மதனுக்குதான் நீச்சல் தெரியாது. அருணுக்குத் தெரியும் என்பதால் மதனை மட்டும் மேலே இழுத்துவந்தான். ஆனால், பயத்தில் மதனின் பிடி அருணின் கழுத்தை இறுக்கியதில், மூச்சு முட்டி, அருணும் மயக்கமடைந்திருக்க, மதன் பிடித்திருந்த, பிடியை ஜெகன் தளர்த்தியவுடன் அருண் மூழ்க ஆரம்பித்துவிட்டான்.
ஜெகனுக்கு பயத்தில் தொண்டை உலர்ந்து போயிற்று. மதனை விட்டுவிட்டு அவனால் மீண்டும் மூழ்கித் தேடவும் முடியாது. நல்ல ஆழமான கிணறு வேறு.
“அருண்… அருண்…” எனத் தொண்டை கிழியக் கத்தினான். அவனையுமறியாமல் கண்ணீர் வழிய ஆரம்பித்தது. பயம் நெஞ்சைக் கவ்வியது.
“விளையாடதே அருண்! மதனை இழுத்துட்டு வந்துட்டேன்டா. மேல வாடா! பயமாருக்கு அருணு” பயத்தில் ஜெகன் அழவே ஆரம்பித்துவிட்டான்.
அதற்குள் வீட்டில் இருப்பவர்கள், தோப்பில் வேலை பார்த்தவர்கள் அனைவரும் ஓடி வந்தனர். நீச்சல் தெரிந்த அனைவரும் உள்ளே குதித்தனர். முதலில் மதனையும், ஜெகனையும் மேலே தூக்கினர்.
நேரம் கடந்ததே ஒழிய அருண் கிடைக்கவேயில்லை. நேரம் செல்லச் செல்ல, அனைவருக்கும் பயம் பீடித்துக் கொண்டது. இனி உயிரோடு கிடைக்கும் வாய்ப்பு கம்மி என்றே அனைவருக்கும் தோன்ற ஆரம்பித்துவிட்டது.
வாசுகியும், பெரியநாயகியும் கிணற்றுக்குள் பார்த்து அருண் பெயரைச் சொல்லி, கத்திக் கொண்டே இருந்தனர்.
ஒருவன் மயங்கிக் கிடக்க, இன்னொருவன் உயிரோடு இருக்கானா இல்லையா என்றே தெரியாத நிலை. அதற்குள் போலீஸ், தீயணைப்பு துறை எனத்தகவல் பறக்க, அவர்களும் வந்துவிட்டனர். ஆம்புலன்சில் வைத்தே மதனுக்கு முதலுதவி நடந்தது.
தீயணைப்புப் படையினர் வந்துதான், கிணற்றின் அடியில் சேற்றுக்குள் சிக்கியிருந்த அருண் உடலை மேலே எடுத்துவந்தனர்.
சற்று முன்புவரை தங்களோடு சிரித்துப்பேசி, ஓடியாடி விளையாடியவன், இக்கணம் உயிரோடு இல்லை என்பதை மூவருக்கும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏதோ கெட்ட கனவு போல் இருந்தது. ஆனால், அதுதான் உண்மை என முகத்தில் அறைந்தது தங்கள் முன் கிடந்த, சேறு பூசிய அருணின் சடலம். சிறுவர்களுக்கு உடல் வெடவெடத்து நடுங்கியது.
காலையில் தன் கையால் சாப்பிட்டு வீட்டைவிட்டு வெளியே சென்ற மகன். மதியத்திற்கெல்லாம் சடலமாகப் பார்த்த வாசுகி அப்படியே மயங்கிவிட்டார்.
போலீஸ் சிறுவர்களை விசாரணை செய்தது.
ஜெகன், இவர்களுக்கு முன் மேலேறிவிட்டதால், கிரி மேலே வந்து தன்னிடம் கூறியதை அப்படியே கூறினான். மதனும், மயக்கம் தெளிந்து, கிரி உள்ளே இழுத்துவிட்டதைத்தான் கூறினான்.
விளையாட்டு என்றாலும், வழக்குப் பதிவு செய்யப்பபடும் பட்சத்தில், இது கொலை முயற்சி என்ற அடிப்படையில் கிரிக்கு தண்டனை கிடைத்து, சிறுவர் சிறை செல்ல வாய்ப்பிருக்க, இடும்பன் வழக்குப் பதிய வேண்டாமெனக் கூறிவிட்டார்.
ஒருவன் இறந்து, இன்னொருவன் சிறையில் என்பதை தனசேகருக்கும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கென சிலபல உள் வேலைகள், பெரிய மனிதர்களைக் கொண்டு உடனடியாக நடந்தன.
இது எதுவும் மயக்கமாக இருந்த வாசுகிக்கும், வீட்டுப் பெண்களுக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டனர். சிறுவர்களிடமும் யாரும் வெளியே சொல்லக் கூடாதென கூறிவிட்டனர். இந்த உண்மை வெளிப்பட்டால், கிரி ஜெயிலுக்கப் போவான் என்றளவிற்கு மதனுக்குப் புரிய, அவனும், ஜெகனும் வாய் திறக்கவில்லை.
கிணற்றில் விழுந்த சிறுவன், தீயணைப்புத் துறையினரால் சடலமாக மீட்கப்பட்டான் என்பது மட்டுமே செய்தியாக வெளிவந்தது. அதுவும் செய்தித்தாளில் ஒரு ஓரமாக வெளியே தெரியாதளவிற்கு.
சிறிது நேரம் மட்டுமே அருணின் உடல் வாசலில் கிடத்தப்பட்டிருந்தது. அவசரமாக இறுதிக் காரியத்தை முடித்துவிட்டனர்.
மதனைக் காப்பாற்ற குதித்ததால் தான் அருண் இறந்தான் என்ற கோபம் வாசுகி மனதில் நன்கு பதிந்து போயிற்று.
மதனுக்கு அதன் பிறகுதான் மனதளவில் அந்தச் சம்பவம் பாதிப்பை உண்டாக்கியது. அருண் உள்ளே குதித்து, இவனை இழுக்க, தான் அவன் கழுத்தை இறுக்கிப் பிடித்தது வரை அவன் நினைவில் நன்கு பதிந்து போனது. இறந்து மேலே தூக்கிப் போட்டிருந்த அருணின் சடலமும் இப்பொழுது பயத்தை உண்டு பண்ணியது. அது இவனாக இருந்திருக்க வேண்டியது என்ற நினைவே அவனைத் தூங்கவிடாமல் செய்தது. கண்ணை மூடினால் உடல் தூக்கிப் போட்டது. பயத்தில் தூக்கம் என்பதே இல்லாமல் போயிற்று சிறுவனுக்கு.
பெரியநாயகிக்கும் பயம் வந்தது. இவனுக்கும் எதுவும் ஆகிவிடுமோ என்ற எண்ணம் மேலோங்கியது. அதற்கு ஏற்றார் போல் வாசுகிக்கும், மகனின் நினைவு அலைக்கழிக்க,
சின்ன மகனும், தலைச்சன் பேரனும் போன துக்கத்தில் சிறிதுநாட்களில் சிவகைலாசமும் இறந்துவிட, சொத்துப் பிரிந்ததில் குணசேகரன் பங்கில் வீடு அமைந்துவிட்டது. வாரிசு என்ற முறையில் வீடு மதனுக்குச் சென்றுவிட, இந்த வீட்டில் இருக்க மாட்டேன் எனப் பிடிவாதமாக ஈரோட்டிற்கு செல்ல முடிவெடுத்தார் வாசுகி.
எல்லோருக்கும் ஒரு மாற்றமாக இருக்கட்டும் என்றுதான், தோப்பு வீட்டை விட்டு ஈரோட்டில் இருக்கும் வாசுகியின் பிறந்த வீட்டிற்கு குடிபெயர்ந்தனர். பேரனைத் தனித்துவிட பயந்த பெரியநாயகியும் மதனை அதன் பிறகு பள்ளிக்கு அனுப்பவில்லை. தன் கைக்குள்ளேயே வைத்துத் கொண்டார்.
“எனக்கு நல்லாத் தெரியும்ங்க… கிரிக்கு தான் ஏதோ ஆபத்து. பெத்த மனசு பொய் சொல்லாது!” திரும்பத் திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்தார் வாசுகி.
“நீதான் அவனுக்கு ஒரு ஃபோன் போடு சேகரா. அவதான் அவ்வளவு தூரம் சொல்றால்ல. எனக்கும் மனசு அடிச்சுக்குதுப்பா.” பெரியநாயகியும் தனசேகரனிடம் மன்றாடிக் கொண்டிருந்தார்.
வாசுகியின் அரற்றலில் அனைவருமே எழுந்து வந்துவிட்டனர். நேரம் நடுநிசியைக் கடந்துவிட்டது. தனசேகரன் வீம்பாக நிற்க,
ஜெகன், “நான் கால் பண்றேன் மாமா” என்று அவனே கிரிக்கு அழைப்பு விடுத்தான். இரண்டு முறை முழு அழைப்பு சென்றும், அழைப்பு ஏற்கப்படவில்லை. அதற்குள் வாசுகிக்கு உடல் வியர்க்க ஆரம்பித்துவிட்டது.
பவித்ரா அவசரமாக பிபி மாத்திரையைக் கொண்டுவந்து கொடுத்தாள். வாசுகி மறுக்க, அதட்டியே போடவைத்தாள்.
மூன்றாம் முறை அழைப்பு ஏற்கப்பட, “இவ்ளோ நேரம் என்னடா பண்ணினே?” பதட்டத்தில் கோபமாகக் கத்தினான்.
“மீட்டிங் போய்ட்டிருந்தது ஜெகன். இந்நேரத்துக்குப் பண்ணியிருக்க. அங்க நைட்டாச்சே. யாருக்கும் எதுவும் இல்லையே!” என்றான் கூலாக.
“நீ முதல்ல வீடியோ கால்ல வா! அத்தை ரொம்ப பயந்திருக்காங்க. உன்னைப் பாக்கணுமாம்” என்று சொல்ல,
“இப்ப முடியாது ஜெகன்” என்றான்.
“டேய்… அங்க உனக்கு என்னமோ ஏதோன்னு அத்தை ரொம்பப் பயப்படுறாங்க. நீ முகத்தைக் காட்டினாத்தான் நிம்மதியா இருப்பாங்க!”
“ஜெகன், நான் இப்ப பப்ல இருக்கேன். இதெல்லாம் வீடியோ கால்ல அம்மாகிட்டக் காட்டமுடியாது. நீ வேணா தனியா வா!” என்றான் அடக்கிய குரலில். எல்லோருக்கும் கேட்க வேண்டுமென ஸ்பீக்கரில் தான் போட்டிருந்தான். அதைக் கேட்டதும் ஜெகன் தாடை இறுகியது.
“அங்க உன் மகன் பகல்ல குடிச்சுட்டு கூத்தடிக்கிறான். நீ இங்க என்னடான்னா சாமத்துல எங்க தூக்கத்தைக் கெடுக்குற! மாசமா இருக்குற பிள்ளையையும் பயமுறுத்திட்டிருக்க.” தனசேகரன் மகன் மீதிருந்த கோபத்தை வாசுகி மீது காட்டினார்.
இருந்தும் தனியே அறைக்குள் சென்று வீடியோ காலில் கிரியைப் பார்த்து பேசிவிட்டே வந்தான் ஜெகன்.
“அத்தை, அவன் நல்லாதான் இருக்கான். பயப்படாதீங்க!” என்று சொன்னாலும் வாசுகியால் சமாதானமாக முடியவில்லை. அந்தக் குரல் இன்னும் காதுக்குள் ஒலித்துக் கொண்டிருந்தது.
“சீக்கிரம் வாம்மான்னு அருண் கூப்பிட்டான் ஜெகன்!” என்றவர் குரல் தழுதழுத்தது.
“நீ பெத்த மகன் அங்க நல்லாத்தான் இருக்கான். மத்த எல்லாரும் உன் கண்ணு முன்னாடிதானே இருக்கோம். இன்னும் யாரை நெனச்சுப் பயப்படுற?” என்று கேட்க, ஒரு சில நிமிடங்கள் ஆழ்ந்த அமைதி அவரிடம். அனைவரையும் ஒருமுறை அவரது கண்கள் வலம் வந்தன.
நீ பெத்த மகன் என்பதே வாசுகி மனதில் ஓடிக் கொண்டிருந்தது. அம்மா என அழைத்த குரல் யார் என மீண்டும் மீண்டும் நினைவுப் படுத்த, தனக்குள் ஒலித்த குரலை ஆழ்ந்து நினைவு கூர்ந்தவருக்கு, குரல் கிணற்றுக்குள்ளிருந்து ஒலித்தது போலிருக்க,
“மதன் எங்கே ஜெகன்?” என்றவர் விருட்டென எழுந்து நின்றார்.

I’ve tried a few platforms lately but this one really stands out. The loading speed is impressive and the interface is super friendly. Definitely my new go-to spot! phjilibey