29
“மேகி… பிண்ணிட்டடீ… என்னமாப் பேசுற?”
“எல்லாம் நீங்க சொன்னதுதான். எங்களுக்காக நாங்க தானே பேசணும்னு!”
“பேசு… பேசு…” என்றான் சோஃபாவில் அமர்ந்து கொண்டே.
இவன் வந்ததைப் பார்த்ததுமே, ஜெகதாம்பாள் உள்ளே எழுந்து சென்றுவிட்டார். வாசுதேவனும் மருமகனுக்குரிய சம்பிரதாய வரவேற்பை வழங்கிவிட்டு உள்ளே சென்றுவிட,
“என்னடீ இது! ஆளாளுக்கு வயசுப்பொண்ணு மாதிரி உள்ளே போய் உக்காந்துக்கிட்டாங்க!” என்று கேட்டுக் கொண்டிருக்க,
“வாங்க தம்பி!” என்று எழுந்து வந்து வரவேற்ற பூங்கோதையும், நைட்டியில் மருமகன் முன் நிற்க சங்கடப்பட்டே, மீண்டும் உள்ளே சென்றுவிட்டார். பூங்கோதை, சேலை கட்டமுடியாமல் இலகு உடையிலேயே இருக்க, அவரது சங்கடம் உணர்ந்தே பெரும்பாலும் இங்கு தங்குவதை மதன் தவிர்த்துவிட்டான்.
வந்தவனுக்கு ஜுஸ் எடுத்துவந்தாள். தம்பிக்கும் கொடுக்க, அக்கா அடித்த கோபத்தில், வாங்காமல் உம்மென அமர்ந்திருந்தான்.
“விடு மதி! நானும் மிதுனும் பைக்ல போலாம்னு நெனச்சேன். எங்க, உன் தம்பிதான் கோபத்துல இருக்கானே. நான் மட்டும் போய் ஐஸ்க்ரீம் சாப்பிட்டு வர்றேன்!” என்று எழுந்து கொள்ள, வேகமாக வெளியே ஓடிப்போய் செருப்பை மாட்டிக்கொண்டு நின்றவனைப் பார்த்து சிரித்தான்.
“இதென்னங்க, லஞ்சம் கொடுத்து சமாதானம் பண்றது? அவன் தப்பு அவனுக்குப் புரியணும்!” என்றாள் கோபமாக.
“சின்னப்பையன் மதி! சொன்னாப் புரிஞ்சுப்பான்!”
அக்காவிடம் அடி வாங்கிய மச்சினனை ஐஸ்க்ரீம் கடைக்கு அழைத்துச் சென்றவன், வண்டியில் இருவரும் ஊர் சுற்றிவிட்டு இரவு சாப்பாட்டு நேரத்திற்குதான் வீடு திரும்பினர்.
வந்தவுடன், “அக்கா, சாரிக்கா! இனிமே எதையும் தூக்கி அடிக்க மாட்டேன். சாப்பாட்ட வேஸ்ட் பண்ண மாட்டேன்! ப்ராமீஸ்” என்று சொல்ல, மதனைப்பார்த்தாள்.
எப்படி என்பது போல் கெத்தாக புருவம் தூக்கி சிரிக்க,
“யாராயிருந்தாலும் பேசியே மயக்குற ஆளாச்சே” என்று வாய்க்குள் முணங்கிவிட்டு அடுக்களை சென்றவள் தோசைக்கல்லை அடுப்பில் போட்டாள். தோசை ஊற்றிவைக்க, கை, கால், முகம் கழுவிவந்தான்.
“ஆமா… நாளைக்கு நம்ம வீட்டுக்கு வர்றியா?” என்றான் சாப்பிட்டுக் கொண்டே.
“இதென்ன கேள்வி? வர வேண்டாமா? நான் வந்து பதினஞ்சு நாளைக்கு மேலாச்சு!”
“வேண்டாம்னு சொல்வேனா? ராகினி தனியா சமாளிச்சுக்குவாளா?” என்றவன், தட்டில் தோசையை வைத்துவிட்டுத் திரும்பியவளின் கைபிடித்து இழுத்து, தனிந்த குரலில், “தனியாப் படுக்க பயமாத்தான்டீ இருக்கு! என்னமோ மந்திரிச்சு வச்சுட்ட!” என்றான் விஷமச்சிரிப்போடு.
முகம் சிவந்து, புன்னகை பூசிக்கொள்ள, “ராகினிக்கு இன்னையோட செமஸ்ட்டர் முடிஞ்சுதுங்க. நாளையிலிருந்து லீவுதான்” என்றாள்.
“என்ன எம்பேரு அடிபடுது?” கேட்டுக்கொண்டே ராகினியும் வர, சட்டென மதனை விட்டு விலகி நின்றாள்.
“நான் எதுவும் பாக்கலக்கா!” கேலி செய்து கொண்டே எதிர்புற நாற்காலியில் உட்கார,
“இதால ஒன்னு போட்டேன்னாத் தெரியும்!” என்று கையிலிருந்த தோசைக் கரண்டியை ஓங்கியவள், அவளுக்கும் தோசை ஊத்தவா எனக் கேட்டாள்.
“நானும் மாமா சாப்பிட்டு முடிச்சதும் வரலாம்னு எவ்ளோ நேரமா வெய்ட் பண்றது. தோசை அடுத்தடுத்து ஊத்துறியே ஒழிய, தட்டுலயே காணோமே?” என்றாள் எட்டிப் பார்த்து.
“அடிப்பாவி… மாமா சாப்பிடறதையே பாத்துட்டிருக்கியா?”
“மதி… நாளைக்கி உன் தங்கச்சி வீட்டுக்குப் போனா சோறு கட்டி எடுத்துட்டுப் போயிரணும்போல. இப்படி கணக்குப் போடுறா?” என்றான் சிரிப்போடு.
“மாமா சாப்பிட்டு முடிக்கட்டும்க்கா! எனக்கொன்னும் அவசரமில்ல” என்றாள் நக்கல் தொனியில்.
“ராகினி! நான் சாப்பிட்டு முடிச்சதும்தான் நீ சாப்பிடணும்னா மாவு இருக்காது. இப்பவே நீயும் சாப்பிட்டுக்கோ!” என்று சிரிக்க,
மாதங்கி, “பேசாம சாப்பிடுங்க!” என வாய்க்குள் அதட்டினாள்.
“பரவாயில்ல மாமா! நீங்க சாப்பிடுங்க. விட்டா உங்க பொண்டாட்டி என் காலடி மண்ணெடுத்து உங்களுக்கு சுத்திப் போடுவா போல. யானை சாப்பிடும் போது சிந்தி சிதறுறதே பல நூறு எறும்புகள் சாப்பிட்டு உயிர் வாழுமாம். அப்படி சிந்தி சிதறுறது இந்த எறும்புக்கு போதும் மாமா!” என்று பாவமாய் முகத்தை வைக்க,
“பேச்சோட பேச்சா மாமனை யானைங்கற!” என்று பதிலுக்கு சிரித்தான்.
“ச்சே… ச்சே… நீங்க கூட இருந்தா யானை பலம்னு சொல்லவந்தேன் மாமா!” என்றாள்.
“ம்ம்ம், நீ பொழச்சுக்குவ. மதி, உன் தங்கச்சி என்ன சொல்லவர்றானு புரியுதா? அவ லவ்வுக்கு சப்போர்ட் பண்ணச் சொல்றா!”
“எதுனாலும், அவ படிப்பு முடிஞ்ச பின்னாடிதாங்க!”
“போச்சுடா! அக்கா சுத்த போர் மாமா. எப்படி வச்சு சமாளிக்கறீங்க?” என்று கேட்க,
“க்க்கும்…” என நொடித்து விட்டுப் போனவளைப் பார்த்து, சத்தமாக வாய்விட்டு சிரித்தான் மதன்.
‘முதல்ல படிப்பு… அப்பறம்தான் மத்ததெல்லாம்…” என்று இடையில் தலையணை வைத்தது யாரென அவளுக்குத்தான் தெரியுமே?
“பேசாம சாப்பிடுடீ. மதியம் வச்ச சோறு இருக்கு. வேணுமாடீ!”
“அதை எனக்கு கொடு மதி. எனக்கு தோசை போதும்!”
“பரவாயில்ல மாமா. நான் சோறு சாப்பிட்டுக்கறேன். அப்பறம் மாமனார் வீட்ல பழைய சோறு போட்டாங்கனு சொல்லவா?”
“அதுக்காக எல்லாம் இல்ல. உங்க அக்காவுக்கு கால் வலிக்கும்ல. எவ்வளவு நேரம் நிப்பா?”
“பார்றா… ரொம்ப கரிசனம் தான்!”
“எம் பொண்டாட்டி மேல நான்தானே கரிசனப்படணும்.” மாமனும், கொழுந்தியாளும் நக்கல் பேசிக்கொண்டே இரவு உணவு வேளை கலகலப்பாக முடிந்தது.
தேங்காய் லோட் வருவதாக தோப்பிற்குக் கிளம்பினான். அப்பொழுதே மணி இரவு பத்து. காலையில் இருவரும் சேர்ந்து போகலாமே என்றாள்.
“சங்கர் ஊர்ல கோவில் திருவிழா மதி! நாலுபேரும் அங்க போய்ட்டாங்க. லோட் கணக்குப்பாத்து இறக்க ஆளில்ல” என்றவன், காலையில் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறிவிட்டுக் கிளம்பினான்.
வாசல் வரை வந்தாள். செருப்புப் போட்டுத் திரும்ப கால் இடறியது.
“ஏங்க! ஒரு நிமிஷம் உள்ளவந்து உக்காருங்க. தண்ணி குடிச்சுட்டு கிளம்புவீங்கலாம்!” என்று பதறியவளைப் பார்த்து,
“இந்தக் காலத்துலயுமா இதெல்லாம் பாக்குற?” என்று கேலி பண்ணி சிரித்தான்.
அவளும் இப்படி அம்மாவைப் பார்த்து கேலி செய்தவள்தான். ஆனால், இன்று ஏனோ மனம் அடித்துக் கொண்டது. ஏதோ ஒரு சஞ்சலம் உள்ளுக்குள். காரணம்தான் தெரியவில்லை. அதற்குள் லாரி தோப்பிற்குள் வந்துவிட்டதாக ஃபோனில் அழைப்பு வந்தது. தேங்காய்களை இறக்கச் சொல்லிவிட்டுத் திரும்ப, அவள் முகம் சுரத்தையின்றி இருக்க, ஏனோ அப்படியே விட்டுச் செல்லவும் அவனுக்கு மனமில்லை.
பார்க்கிங் ஏரியாவில் விளக்கெல்லாம் அணைத்து இருளாக இருக்க, மாடிப்படி மறைவில் அவளை இடையோடு சேர்த்து அணைத்தவன், அழுந்த இதழொற்றி எடுத்தான். அப்போதைக்கு அவளுக்கும் அது தேவையாயிருக்க மார்போடு ஒன்றிக் கொண்டாள்.
பிரிவு அவனுக்கு மட்டும்தானா? அவளுக்கும் தானே? என்னதான் மருத்துவமனை, ஆப்ரேஷன் என இருந்தாலும், வீட்டிற்கு வந்ததும் இரவின் தனிமை அவளையும் சுடத்தான் செய்தது. ஒரு வாரமாக அவன் கைகளுக்குள் கிடைத்த அரவணைப்பை உள்ளமும், உடலும் வெகுவாகத் தேடியது.
“மேகி! வந்ததும் ஆரஞ்ச் ஜுஸ் டம்ப்ளர்ல கொடுத்தியா… குடிச்ச மாதிரியே இல்லடி!” என்றவன் குரல் கழுத்தோரம் கூசியது. அவள் முகம் சிவப்பதை அந்த இருளிலும் அவனால் உணர முடிந்தது.
“நாளைக்கு காலையிலயே வர்றேன். கிளம்பியிரு!” என்றவன், சிரித்த முகமாக வெளியேற, அலைப்புற்ற மனம் அப்பொழுதுதான் ஆசுவாசம் கொண்டது ஒற்றை முத்தத்தில்.
தெருவில் பைக் வெளிச்சம் மறையும் வரை பார்த்து நின்றாள். கேட்டை பூட்டிவிட்டு உள்ளே திரும்பினாள்.
படி மறைவிலிருந்து ராகினி வெளிப்பட, விலுக்கெனப் பயந்து பின் வாங்கியவள்,
“நான் தாக்கா!” என்ற ராகினியின் குரலில்,
“எரும… லூசு… அறிவிருக்கா? இருட்டுக்குள்ள என்னடீ பண்ற? ஒரு நிமிஷம் ஹார்ட்டே நின்னு போச்சு.” பயத்தில் நெஞ்சைப் பிடித்தவள், வாய்க்கு வந்ததைத் திட்ட,
“இதை நான்தான் சொல்லணும். எவ்ளோ நேரம் ஒருத்தி மூச்சப் புடுச்சு நிக்கிறது. தொட்டி மறைவு, படி மறைவுன்னு புருஷன், பொண்டாட்டிக்கு சின்னதாச் சந்து கெடச்சுறக்கூடாது. உடனே சிந்து பாடவேண்டியது!”
“பேச்ச மாத்தாதடீ. இந்நேரத்துக்க இங்க என்ன பண்ற!”
“ம்ம்ம்… நாங்களும் டவுட் க்ளியர் பண்ணோம்!”
“அர்த்த ராத்திரியில நீ க்ளியர் பண்ற டவுட் என்னான்னு இப்பதானே தெரியுது. உனக்கு குளிர் விட்டுப்போச்சு ராகி! அப்பாக்கு என்னைக்கு உண்மை தெரியுதோ, அன்னைக்கு இருக்கு உனக்கு பெல்ட் அடி!” என்று தங்கையை வசை பாட,
“அதெல்லாம் மாமா பாத்துக்குவார்க்க. நீ வா!” என்று அவளுக்கு முன் உள்ளே சென்றுவிட்டாள்.
“டேய்… அங்க போறது மதன் மாதிரி இல்ல!”
“அவனேதாண்ணே!”
“இந்நேரத்துக்கு எங்கடா வந்துட்டுப் போறான்.”
“கருங்கல்பாளையம் தாண்ணே அவன் பொண்ணெடுத்துருக்கறது! அங்கிருந்து வருவானா இருக்கும்”
“எது, அண்ணன் கட்டவேண்டிய பொண்ண இவன் கட்டுனதாச் சொன்னாய்ங்களே!”
“ஆமா… அதேதான்!”
“டேய்… இந்நேரத்துக்கு தனியாப் போறான்டா. இதவிட்டா இப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்காது! நம்ம கூட்டாளிகள வரச்சொல்லு. இன்னைக்கி இவன ஒருவழி பண்ணாத்தான் என் ஆத்திரம் தீரும்!” என்று போதையில் கண்கள் சிவக்க கருவினான்.
ஈரோடு நான்குவழிச் சாலையில் ஒதுக்குப்புறமாக, மது அருந்திக் கொண்டிருந்த பவித்ராவின் பெரியப்பா மகன்கள் இருவரும், மதன் தனியாக வண்டியில் செல்வதைப் பார்த்து, தங்களுக்குள் திட்டம் போட்டனர்.
தனக்கு ஒரு கண்ணு போனாலும், அடுத்தவனுக்கு ரெண்டு கண்ணும் போக வேண்டுமென நினைக்கும் ரகம். விட்டிருந்தால் மொத்தச் சொத்தையும் கடன் கொடுத்தவர்களே முழுங்கி ஏப்பம் விட்டிருப்பர். இவர்கள் தலையிட்டதால் தான், தனசேகரன், இடும்பனுக்குப் பயந்து கொண்டு இப்பொழுது இருப்பதாவது மிஞ்சியதே என்ற எண்ணமில்லை. இவனால் தானே பவித்ராவிற்கும் பங்கு பிரித்துக் கொடுக்கும்படியாகிவிட்டதே எனும் ஆத்திரம்.
ஆத்திரமும், ஆவேசமும் போதையோடு கைகோர்க்க, மதன் பைக்கைப் பின் தொடர்ந்து வந்தனர். சற்று தூரம் சென்றவுடன், இன்னும் இருவர் வந்து, அவர்களோடு சேர்ந்து கொண்டனர். இவன் ஒருவன். அவர்கள் நால்வர்.
மனைவிக்கு கொடுத்த முத்தத்தின் ஈரம் காயாமல், இதழ்களில் நெழிந்த புன்னகை குறையாமல், முகத்தில் மந்தகாசம் மின்ன, அவளும் தன்னைத் தேடும் ஆண்மையின் கர்வம் உள்ளூர ஊற்றெடுக்க, காற்றில் அலைபாய்ந்த தலைமுடியை இடக்கையால் கோதியபடி, மெலிதாக விசிலடித்துக் கொண்டே, ஒற்றைக் கையால் நிதானமாக பைக்கை ஓட்டி வந்தான். அவன் பைக்கை முந்திக் கொண்டு இருவர் சென்றனர். குறிப்பிட்ட இடைவெளியில் முன்னும், பின்னும் இரண்டு பைக்குகள் தொடர்வது முதலில் அவன் கவனத்தில் பதியவில்லை.
ஆள் அரவமற்ற, வெளிச்சம் குறைந்த பகுதிக்கு வந்ததும், முன் சென்றவர்கள் வண்டி மதன் வண்டிக்கு குறுக்கே வந்தது.
நிலைதடுமாறியவன், சட்டென வேகத்தைக் குறைத்தான். அதற்குள் நால்வரும் சுற்றி வளைத்து விட்டனர். அப்பெழுதுதான் வெகு நேரமாகவே இரண்டு பைக்குகள் தன் முன் செல்வதே உரைத்தது. பின்னாலும் இரண்டு பைக். விபரீதம் உரைத்தது மதனுக்கு. இன்னும் கொஞ்ச தூரம் சென்றால் தோப்பு வந்துவிடும். லோட் இறக்கவந்த ஆட்கள் இருப்பார்கள். இருட்டில் ஒத்தையில் இவர்களை, எதிர் கொள்வது மடத்தனம் என்பது புரிந்தது. நால்வரும் கையில் என்ன வைத்திருப்பார்கள் எனத் தெரியாது. இதென்ன சினிமாவா? ஐம்பது பேர் சுற்றி நின்றாலும் ஒவ்வொருத்தராக வந்து ஹீரோகிட்ட அடிவாங்க.
கிட்டத்தட்ட அவனது எல்லைக்குள் வந்துவிட்டான். பிரதான சாலையிலிருந்து உள்ளே திரும்பினால், இவர்களது தோப்பின் முகப்பு வாயில்.
மீண்டும் வண்டியை வேகமெடுப்பதா, இவர்களை எதிர்ப்பதா என யோசிப்பதற்குள், பின்னாலிருந்து ஒருவன் வண்டியை இடித்தான். வேகமெடுப்பதே உத்தமம் எனத் தோன்றியது. வண்டியை முறுக்கி, முன்னால் சென்றவன் ஒருவனை இடித்துத் தள்ளிவிட்டு, வேகமெடுக்க, அதற்குள், கம்பி கொண்டு ஒருவன் தலையிலடிக்க, நிலை தடுமாறி விழுந்துவிட்டான்.
நால்வரும் சுற்றி வளைத்துக் கொண்டனர். அதில் ஒருவன் கையில் கத்தி. இருட்டில் முகம் தெரியவில்லை.
கத்தியைப் பார்த்த, பெரியப்பா மகன் ஒருவன், “டேய்… கத்தி எதுக்குடா எடுத்துட்டு வந்தீங்க? சும்மா நாலு தட்டு தட்டித் தூக்கிப் போடுவோம்டா. கத்தியை உள்ள வைடா!” என்று கத்தினான். கொலைமுயற்சியில் சிக்கிவிடுவோம் எனப் பயந்து அதட்ட, அவர்கள் குரல் இன்னாரெனக் காட்டிக் கொடுத்தது. அதுவரை ஏதோ, கழுத்து, கையில் இருக்கும் நகைக்காகப் பின் தொடரும் குடிகாரக்கும்பல் என்றே நினைத்தான். இப்பொழுதுதான் பவித்ரா பெரியப்பா மகன்கள் என்றே தெரிந்தது.
இவர்கள்தான் எனத் தெரிந்ததும், எதிர்த்து தாக்கத் துணிந்தான். இருந்தும் சிறிது நேரத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. அவர்கள் போதையின் மூர்க்கத்தில் இருந்தனர். அதில் ஒருவன், கத்தியை வீச, அந்த இருளிலும் கண்கள் அதைக் கண்டு கொண்டு, வயிற்றை சட்டென உள்வாங்கியும், அடிவயிற்றில் கோடு போட்டது.
இரத்தம் கசிய ஆரம்பித்தது. பின் மண்டையில் ஒருவன் தாக்க, அரை மயக்கத்திற்கு சென்றுவிட்டான்.
“டேய்… போதும்! அடிக்காதீங்கடா! இங்க ஒரு கெணறு இருக்கும். அதுல தூக்கிப் போடுங்க. இருட்டுக்குள்ள வழிதடுமாறி விழுந்த மாதிரி இருக்கட்டும். இதுவும் இவனுங்க கெணறுதான். நல்ல ராசியான கெணறு. ஏற்கனவே ஒருத்தனக் காவு வாங்கியிருக்கு!” என்று முடிவெடுத்து,
நால்வரும் சேர்ந்து கையைக் காலைப்பிடித்து, பராமரிப்பின்றி செடி, கொடிகள் மண்டிப்போய்க் கிடந்த, பாழுங்கிணற்றுக்குள் தூக்கிப் போட்டனர்.
முதலில் தோப்பிற்குள் தான், உள்தங்கி இந்தக் கிணறு இருந்தது. நான்கு வழிச்சாலை போட்டதில், கிணற்றோரமாக சாலை அமைந்துவிட்டது.
தனசேகரன் பங்கில் இருப்பது. வாடைக்கும், கோடைக்கும் வற்றாத கிணறுதான். ஆனால் அதிலிருந்து பலவருடங்களாக நீர் எடுப்பதில்லை. கவனிப்பதுமில்லை. செடி, கொடிகள் வளர்ந்து மேவி, அங்கு கிணறு இருப்பதே கவனித்துப் பார்த்தாலன்றி, புதிதாக வருபவர்களுக்குத் தெரியாது.
நீருக்குள் மூழ்க ஆரம்பித்தவன், நினைவுகள் மெல்ல மயங்க ஆரம்பிக்க, அவனுக்குள் மூழ்கிப் போன நினைவுகள் மெல்ல மேலெழும்பின.
