6
“நல்லாருக்கு… ரொம்ப நல்லாருக்கு!”
“இப்ப எதுக்கு உம் பெரியாத்தா, சாமத்துல வர்ற கோடாங்கி மாதிரி விடியமுன்ன குடுகுடுப்பை அடிக்கிறா?”
“என்னமோ தெரியல அப்பத்தா! அண்ணே இப்ப வெளிய போயிட்டு வந்தாங்க. அவங்க கையில ஏதோ கவர் இருந்துச்சு. அதப்பாத்து தான் உங்க மருமக குறி சொல்லிட்டுருக்காங்க!”
“இந்நேரத்துக்கு எங்க போயிட்டு வந்தான்? அவளுக்கு காபி கொடுத்தீங்களா?”
“இல்ல… அண்ணே இன்னும் பால் கறந்து தரல!”
“ஏன்டீ… இன்னைக்கும் அவன எதிர்பாத்தா எப்படி? உன்ற வீட்டுக்காரன எழுப்பி விட வேண்டியது தானே?”
“கல்யாண அலைச்சல்ல அசந்து தூங்குறாங்க அப்பத்தா. அதான் எழுப்பல!” என்றாள் அப்பத்தாவின் முகம் பார்க்காமல்.
முன் தினம் முறுக்கிக் கொண்டிருந்த மனைவியைத் தூங்கவிடாமல், விடிய விடிய சமாதான உடன்படிக்கையில் ஈடுபட்டவன், அதிகாலையில் தான் கண்ணசந்தான் என்றா சொல்லமுடியும்.
மதனும், தனசேகரனும் கல்யாண வேலையாக அலைய, ஜெகனுக்கு கடை வேலைகள் இழுத்துக் கொண்டது.
இவர்கள் பேசிக்கொண்டிருக்க, சற்று நேரத்தில் மதனும் வந்துவிட்டான்.
“பாத்திரத்தை எடு பவி!” என்றான்.
“என்னப்பு… பேத்தி எந்திரிச்சாச்சா?”
“ம்ம்ம்…” கொட்டினான்.
“குளிச்சுட்டு சீக்கிரம் வரச்சொல்லு சாமி. இன்னைக்கி அந்தப் பிள்ளைதான் பொங்கல் வைக்கோணும்! நாளைக்கு தானே மறுவீடு. அப்போ… இன்னைக்கு நம்ம குலசாமி கோயிலுக்கும் போயிட்டு வந்திருங்க! ஒரு வேலை முடியும்ல?”
அடுத்துடுத்து பார்க்க வேண்டிய வேலைகளை பெரியநாயகி ஒப்புவித்து, “ஒரு வாரம் போகட்டும் அப்பத்தா” என்றான்.
“ஏன்டா… அப்புறம் அந்த வேலையிருக்கு, இந்த வேலையிருக்குன்னு உன்ன புடிக்கவே முடியாதே.”
“அதெல்லாம் பாத்துக்கலாம். பொங்கல நீங்களே வச்சுருங்க!”
“இத்தனை வயசுக்கு பொங்கல் வைக்கத் தெரியாமையாடா உன் வீட்டுக்காரம்மாவ வரச்சொல்றே? வீட்டுக்கு வந்த மருமக முதன் முதலா பொங்கல் வச்சு சாமிக்குப் படைக்கணும்டா!”
‘அதுசரி…’ என வாய்க்குள் முனங்கியவன்,
“உங்க பேத்தியால இன்னைக்கி முடியாது அப்பத்தா!” வெளிவராத குரலில் எங்கோ பார்த்து சொல்ல,
பெரியநாயகியும், பவித்ராவும் ஒருத்தரையொருத்தர் அர்த்தத்தோடு பார்த்துக் கொள்ள, அவர்கள் கண் சாடை புரியாமல் குழம்பி நின்றான்.
அடுத்த கணம் சட்டென அவனுக்குள் பொறிதட்ட, ‘அய்யய்யே! ஏதோ வில்லங்கமா யோசிக்குறாங்க போலயே?’ எனப் பதறியவன் மனமோ, ‘எப்படி இவங்ககிட்ட சொல்றது?’ என உள்ளுக்குள் யோசனை ஓடியது.
“அவ கோயிலுக்கெல்லாம் போகக் கூடாது அப்பத்தா!” என்றவன் அவர்கள் அடுத்து கேள்வி கேட்கும் முன், “பவி… பால் பாத்திரத்தை எடுத்தியா?” என்றான் அவசரமாக.
வழக்கம்போல் பால் கறக்கும் பாத்திரத்தை எடுத்துக் கொடுக்க, வாங்கிக் கொண்டு வீட்டின் பின்பக்கமாகச் சென்றுவிட்டான்.
“வந்த மொத நாளே, வீட்டுக்கு வந்த மருமக குளிச்சு, விளக்கேத்த முடியல. வெளங்கிறும்!” ஹாலில் அமர்ந்திருந்த வாசுகி சலித்துக் கொள்ள, சற்றுமுன் எதற்கு உடுக்கையடித்தார் என்பது இப்பொழுது புரிந்தது இருவருக்கும்.
சற்றுமுன் வெளியிலிருந்து வந்தவனைப் பார்த்தவர், ‘இந்தேரத்திற்கு எங்க போயிட்டு வர்றான்’ என யோசிக்க, மதன் வாங்கிச் சென்ற பையில், பேப்பரில் சுற்றி இருந்ததைப் பார்த்தே அதன் சதுர வடிவத்தை வைத்து என்ன வாங்கிச் செல்கிறான் எனக் கண்டுகொண்டார் வாசுகி.
“ஏன் வாசுகி… இதென்ன உன்னையும், என்னையும் கேட்டுக்கிட்டா வரும்? நீ தானே முகூர்த்தத்துக்கு தேதி குறிச்சு வாங்கின? அப்பக் கேக்கலையா? ஆகாத மருமகளா பாக்காத. நீ கொண்டு வந்த மருமகதான்.” இடிக்காத குறையாக மருமகளை குட்டி விட்டுச் சென்றார்.
மகனுக்காக அவர் தானே சல்லடை போட்டு பெண் தேடினார். அவர் ஆசையாக மகனுக்காக தேர்ந்தெடுத்த பெண் தானே. ஆனால் மதனின் மனைவியாக அவர் பார்க்கும் பார்வை இப்பொழுது மாற்றம் பெற்றிருந்தது.
“இப்ப என்ன… ஒரு வாரம் கழிச்சுப் பொங்கல் வச்சுக்கலாம்” என்றவர், பேத்தியிடம், “நீ சமையலைப் பாரு! இன்னைக்கி அந்தப் புள்ள ரெஸ்ட்டெடுக்கட்டும்!” என்றார்.
“மொத நாளே இடங்கொடுக்காதீங்க. அப்புறம் தலையில ஏறி உக்காருவாளுக இந்தக்காலத்து பிள்ளைக!” வாசுகி பொடுபொடுத்தார்.
“இதுமாதிரி எனக்கு யாரும் அன்னைக்கு சொல்லிக் கொடுக்காம விட்டுட்டாங்க. தம்பி மகதானேன்னு நான் கொடுத்த எடம் தான், இவ எம்மகன் தலையில ஏறி உக்காந்திருக்கா?” சத்தமில்லாமல் பேத்தியிடம் கிசுகிசுக்க பவித்ராவிற்கு சிரிப்பு தான் வந்தது இவர்கள் இருவரையும் பார்த்து.
இதையே பவித்ராவோ, அவளது அம்மா, சீதாலட்சுமியே கூட அக்காவைப் பற்றி சொல்லிவிட முடியாது. மருமகளை விட்டுக்கொடுக்க மாட்டார் பெரியநாயகி. இதுதான் ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயாதுன்னு சொல்றது போல என நினைத்தவளுக்கு நம்ம அம்மாவுக்கும் இப்படி ஒரு மாமியார் ஏன் கிடைக்கவில்லை எனத் தோன்றியது.
கிடைக்காமல் என்ன? இவர் தானே சீதாலட்சுமிக்கும் மாமியார் ஆகவேண்டியது. இடையில் எல்லாம் மாறிவிட்டது. இப்பொழுதும் தம்பி மகளாக சீதாலட்சுமியையும் தாங்கிக் கொள்கிறார் தான். மருமகள் என வந்துவிட்டால் வாசுகிதான் முதலில்.
அதற்குள் மாதங்கியின் அத்தை சுகந்தி எழுந்து வந்தார்.
“வாம்மா… புது இடம். நல்லா தூங்கினியா?”
“தூங்குனோம்மா… என்ன இவ்ளோ சீக்கிரம் எல்லாரும் எழுந்துட்டீங்க?”
“அஞ்சு மணினா எல்லாரும் முழிச்சிருவோம்” என்றார். இவர்கள் எல்லாரும் அங்கிருக்க, அங்கே மாதங்கியைத் தேடியது சுகந்தியின் கண்கள். அதைக் கண்டு கொண்டவர்,
“குளிச்சிட்டு வருவா. வாசுகி கூட உக்காந்து பேசிட்டிரும்மா. பால் கறந்து வந்ததும் காபி போடலாம்!”
“கறந்த பாலா? பாக்கெட் பாலெல்லாம் வாங்க மாட்டீங்களா?”
“வீட்ல எப்பவும் மாடு நிக்கும். மொதல்ல சொசைட்டிக்கும் பால் கறந்து ஊத்துனோம். முன்ன மாதிரி இப்ப வச்சுப் பாக்கமுடியல. எல்லா மாட்டையும் நம்ம தோப்புல வேலை பாக்குறவங்களுக்கே ஆளுக்கொன்னா கொடுத்துட்டோம். பேத்திக்கு ஒருமாட்டுப் பாலா கொடுக்கணுமேன்னுதான், ஒரு மாடுமட்டும் கொட்டத்துல நிக்குது. வீட்டளவுக்கு நாங்களே கறந்துக்குவோம்!” என்றார்.
மதன் மாட்டுக் கொட்டம் சென்றதும், மாடு இவனைப் பார்த்து கலீரென சலங்கை ஒலிக்க, கழுத்தை ஆட்டி வரவேற்றது. அடித்தொண்டையில் குரலெடுத்து பரிவாகக் கத்தியது. மடி கனத்திருந்தது.
“சாரி… பட்டம்மா! கொஞ்சம் லேட்டாயிருச்சு. அஞ்சே நிமிஷத்துல உம் பாரத்தை கொறச்சுர்ரேன்.”
மாட்டுடன் பேச்சு வார்த்தை நிகழ்த்திக் கொண்டே பின்புறம் பாசமாகத் தடவிக்கொடுத்தான். கன்றுக்குட்டியை அவிழ்த்துவிட, துள்ளிவந்து தாயின் மடியை முட்டி மோதியது. ஒரு சில நிமிடங்கள் இருவரையும் கொஞ்சி குலாவ விட்டவன்,
“போதும்! அப்புறம் குடிச்சுப்பியாம்!”
கன்றுக்குட்டியை இழுத்து பசுவின் முன் கட்டிவிட்டு, பக்கத்தில் இருந்த தொட்டியில் தண்ணீர் மொண்டு மடியில் சலீரென அடித்துக் கழுவினான். கொட்டத்தில் தொங்கிய விளக்கெண்ணெய் பாட்டிலை எடுத்தவன், கையில் ஊற்றிக்கொண்டு, மண்டியிட்டு, குதிங்காலை இருக்கையாக்கி அமர்ந்தவன், முழங்காலுக்கிடையில் பாத்திரத்தை இறுக்கிப் பிடித்து, காம்புகளில் எண்ணெய் தடவி கறக்க ஆரம்பித்தான்.
இசைக்கருவியில் லயம் சேர்ப்பது போல், மெதுமெதுவாக விரல்களின் வேகம் கூட்ட, லாவகமாக பால் கறக்கும் சத்தம் துளியும் ஸ்ருதி மாறாமல் ஒலித்தது. நுரை ததும்பிப் பொங்கிய பால் பாத்திரத்தோடு எழுந்தவன், கன்றுக்குட்டியை அவிழ்த்துவிட மீண்டும் தாயின் மடி முட்டிமோதியது.
அவனது கழுத்தில் பசு முகம் வைத்து மோத, சற்று முன் தோன்றிய அழுத்தம் அடங்கி மீசைக்கடியில் புன்னகை அரும்பியது அவனுக்கும். கழுத்தில் தடவிக் கொடுக்க வாஞ்சையோடு கத்தியது பாரம் இறங்கிய ஆசுவாசத்தோடு.
ஈரத்தலையை துவட்டியவாறு, சன்னலருகில் நின்றவள் கண்களில் அத்தனையும் காட்சியாகியது. அவன் மாட்டோடு பேச்சு வார்த்தை நடத்துவது நன்றாகக் கேட்டது.
சன்னலோரமாக நின்றிருந்தவள் முகம் வேதனை சுமந்திருந்தது. அப்படி பேசியிருக்கக் கூடாதோ? சட்டென முகத்தில் அடித்தைப் போல் பேசியது இவளுக்கே பிடிக்கவில்லை. இது அவளது சுபாவமும் இல்லையே. அம்மா மாதிரி அடங்கிப் போய்விடக்கூடாதே என்ற பயம். அவளை அப்படி மறுக்கு வைத்தது. மேஜை மீது கேட்பாரற்றுக் கிடந்த கேட்பரீஸ் சில்க் ஹார்ட் இவளைப் பார்த்து சிரித்தது.
அவன் காலையில் தன்னை எழுப்பியதை நினைத்தாலே மனம் கேளிக்கையாய் கைகொட்டி சிரித்தது. அவமானம் பிடிங்கித் தின்றது.
புது இடத்தில் அப்படியென்ன தன்னையறியாமல் தூக்கம் என தன்னைத்தானே மானசீகமாக தலையில் குட்டிக் கொண்டாள். வெகு நேரமாகத் தூங்காமல் அசைந்தால் எங்கு தூங்கவில்லை என கண்டு கொள்வானோ என ஒரு பக்கமாகவே படுத்திருந்தது வேறு. விடியும் முன் தான் அவளையும் மீறி கண்ணசந்திருந்தாள்.
‘பார்த்த உடனே என்ன நெனச்சிருப்பான். இப்படியா அடக்க ஒடுக்கமில்லாம தூங்குவ?’
‘அய்யோ…’ என மனம் ஓங்காரமாய் ஓலமிட்டது.
விளக்கைப் போட்டவன் பார்வை கட்டிலில் விழ, ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை. ஒரு காலை மடக்கி ஒரு காலை நீட்டி தலையணையை அணைத்துக் குப்புறப் படுத்திருந்தவள் சேலை கணுக்கால் தாண்டி முழங்காலுக்கு முன்னேறியிருந்தது. வழவழவென பச்சை நரம்போடிய, குருத்தோலை நிறம். பளீரென கண்ணைப் பறித்தது. கணுக்கால் வரை அடர் சிவப்பில் கல்யாண மெகந்தி. கொடியாய் தங்கக் கொலுசு பாதம் தழுவிக் கிடந்தது.
சட்டென தொண்டை வரண்டு, முகம் வியர்த்துவிட, பார்வையை அகற்ற முடியாமல் கண்களிரண்டும் அழிச்சாட்டியம் பண்ண, பட்டென விளக்கை அணைத்து விட்டான். நெஞ்சு தடதடத்துவிட்டது ஒரு நொடியில். புருவம் மத்தியில் விரல்வைத்து அழுத்தி தன்னை சமன் படுத்தி மீட்டுக் கொண்டவன்,
இவளை இப்பொழுது எழுப்பியாக வேண்டுமே. வெள்ளை நிறப் படுக்கையில் அவன் பார்த்தது, ரோஜா இதழா, வேறு ஏதாவதுமா என்ற சந்தேகம் வேறு. சந்தனக்கலர் புடவையிலும் தெரிந்ததே.
விளக்கைப் போட்டும் அசையாமல் அசந்து தூங்குபவளை எப்படி எழுப்புவது? பெயர் கூடத் தெரியாதே. என்னடா மதனா, உனக்கு வந்த சோதனை? வெளிய சொன்னா வெட்கக் கேடு. ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சுருச்சு. பொண்டாட்டி பேரு தெரியல!’ என யோசனை ஓட,
‘எதேஏஏ! எனக்குத் தெரியாம எப்போ!’ என்றது மனசாட்சி.
‘ஷாக்க கொற. ஒரு நைட் முடிஞ்சிருச்சுனு சொல்றதுக்குப் பதிலா ஃபர்ஸ்ட் நைட்ன்னு சொல்லிட்டே. இது ஒரு குத்தமா?’
‘பின்ன இல்லையா? அதுல எவ்ளோ அர்த்தமிருக்கு’ (எங்களுக்குத் தெரியாம எப்போன்னு ரீடர்ஸ் கேக்க மாட்டாங்க)
‘அர்த்த வெங்காயமெல்லாம் அப்பறம் பாக்கலாம். இப்ப இவள எழுப்பணுமே? பேர் கூடத் தெரியலயே?’ என்றவன் பார்வையில் பால் சொம்பு பட, இருட்டில் தட்டுத்தடுமாறுவது போல் பால்செம்பின் மீதிருந்த டம்ப்ளரை தட்டிவிட்டான்.
தடாலென சத்தத்தில் பட்டென பதறி எழுந்தாள். எழுந்த வேகத்தில் அடிவயிறு வேறு சுருட்டி இழுத்துப் பிடித்து கொண்டது. நிமிர முடியவில்லை. அடி வயிற்றைப் பிடித்து குறுக்கி அமர்ந்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் தன்னிடம் நிகழ்ந்த மாற்றம் புரிந்தது. மனம் பதறியது. இன்னும் ஒரு வாரமிருக்கே? அதுக்குள்ளேயா? இப்ப என்ன பண்றது?’
பயமும், படபடப்புமாக ‘நேற்றிரவு, அவன் ரூமுக்குள்ள வந்ததும், உனக்கு கலக்குன கலக்குன, குடலுகுந்தாணியெல்லாம் வெளிவந்திருக்கும். இது வராதா? இப்ப என்ன பண்றது? மொதமொதன்னு இதையெல்லாமா எடுத்து வைப்ப? அதான் ஒரு வாரமிருக்குல? அங்க போய் வாங்கிக்கலாம்” என பெரியவர்கள் சொன்னதைக் கேட்டது எவ்வளவு மடத்தனமெனப் புரிந்தது.
மங்கலாக விடிவிளக்கு மட்டுமே எரிய, எப்படி விளக்கைப் போடுவது. எங்கே ஸ்விட்ச் என்று கூடத் தெரியாதே. முதலில் இது அவள் வீடு இல்லை என்பது புரியவே சில கணங்கள் தேவைப்பட்டிருக்க, நேற்றிரவு அணைத்த ஸ்விட்ச் எங்கிருக்ககறதென எப்படி நினைவிற்கு வரும்.
இவள் எழுந்தும் அசையாமல் அமர்ந்திருக்க, விளக்கைப் போட்டான். அதற்கே அவளுக்கு விலுக்கென உடல் குலுங்கியது. திருவிழாவில் தொலைந்த குழந்தை மாதிரி பேந்த பேந்த முழித்து வைத்தாள்.
இவன் எப்பொழுது எழுந்தான் என யோசனை ஓட, முகத்தில் ஈரம் சொட்ட நிற்பது தெரிந்தது.
‘அச்சச்சோ! அவன் எழுந்து லைட்டைப் போட்டிருந்தால் எந்த கோலத்தில் படுத்திருந்தோமோ தெரியலையே. ச்சே… ச்சே… இப்பதான் லைட்டைப் போடுவானா இருக்கும். தனக்குத்தானே சமாதானமும் செய்து கொண்டாள்.
இருந்தாலும் மனம் ஒப்புக்கொள்ள மறுத்தது. அவளது வாயில் சுண்டுவிரல் நகம் படாதபாடு பட்டது. அவள் படுக்கும் லட்சணம் தான் அவளுக்கே தெரியுமே. அதற்கே பூங்கோதை இவளை நைட்டி கூடப் போடவிடமாட்டார். இரவு பேண்ட்டும், டாப்பும் தான். எழுந்து வரும்பொழுதே குளித்து சுடிதார் மாற்றிவிட்டு தான் அறையை விட்டு வெளியே வரவேண்டும் என்பது வாசுதேவன் உத்தரவு.
நேற்று கட்டியிருந்ததோ சேலை. சேலை என்றவுடன் தான் நினைவு வந்தது. அச்சச்சோ புதுச்சேலை! அதுவும் பட்டுச்சேலை. ஸ்டெயினாகி இருக்குமே? என்ன பண்றது.
இது தெரிஞ்சா பெரியவங்க ஏதாவது அபசகுணம் அது இதுன்னு சொல்லுவாங்களா?
நல்ல நாள் பெரிய நாளன்று, தப்பித் தவறி பூங்கோதை வீட்டிற்கு தூரமாகிவிட்டாலே, ஜெகதாம்பாள் இவளது அம்மாவைப் பேசும் பேச்சு காது கொடுத்து கேட்க முடியாது. அதற்குப் பயந்து கொண்டே வெள்ளிக்கிழமை மாதாந்திரம் வரும் என்றால் கூட முன் கூட்டியே மாத்திரை வாங்கிப் போட்டுவிடுவார் பூங்கோதை.
புது இடம் வேறு. இவர்கள் வீட்டுப் பழக்கவழக்கம் என்னவென்று தெரியாதே. வெளியே போகலாமா? ரூமுக்குள்ளேயே இருக்க வேண்டுமா? முதலில் குளிக்க வேண்டுமே. தேவையானதும் இல்லையே. யார்கிட்ட கேட்பது. சுண்டுவிரல் விடுத்து இப்பொழுது மோதிர விரல் சிக்கியது.
எழுந்து அமர்ந்தவளின் முகத்தில் தெரிந்த ஆயிரத்தெட்டு அபிநயனங்களில், அவள் என்ன யோசிக்கிறாள் என்பது சுத்தமாகப் புரியவில்லை இவனுக்கு.
அவளுக்கிருந்த குழப்பத்தில் அங்கே ஒரு ஜீவன் தன்னையே ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருப்பது கூடத் தெரியவில்லை. முதலில் பாத்ரூம் செல்லலாம் என எழுந்தவள், நிமிர்ந்து பார்க்க, கையைக் கட்டிக் கொண்டு அவன் அவளையே பார்த்து நிற்பது தெரிந்தது. லேசாக மனம் படபடக்க, தைரியத்தைக் கூட்டி நிமிர்ந்து பார்த்தாள்.
“ஏதாவது வேணுமா?” என்றவனை யோசனையாகப் பார்க்க,
“இல்ல… உனக்கு ஏதாவது தேவைப்படுதான்னு கேட்டேன்!” என்றான்.
‘நமக்குத் தேவையிருப்பது இவனுக்கு எப்படித் தெரியும்!’
“எந்திரிச்சு ரொம்ப நேரமா யோசனையிலயே இருக்குறியே. அதான் கேட்டேன்” என்றவன் வெளி செல்லத் திரும்ப,
“எனக்கு வேணும்!” என்றாள், வாலுமில்லாமல், தலையுமில்லாமல் அவசரமாக. இவனிடம் எப்படி கேட்பது என்று நினைத்தவளுக்கு, இவனை விட்டால் இப்போதைக்கு வேறு வழியில்லையே? எனத் தோன்ற,
“இந்நேரத்துக்கு கடையெல்லாம் திறந்திருப்பாங்களா?” என்ற சந்தேகத்தை முன் வைத்தாள்.
“உனக்கு என்ன வேணும்னு தெரிஞ்சா தானே எந்தக்கடை திறந்திருக்கும்னு சொல்லமுடியும். டீக்கடையெல்லாம் இந்நேரம் ஓபன் பண்ணிருப்பாங்க!” என்றான். நேரம் அதிகாலை ஐந்தை நெருங்கிக் கொண்டிருந்தது. மளிகைக்கடையெல்லாம் திறக்க, ஆறுமணிக்கு மேலாகுமே!
“என்ன வேணும்? சொன்னா தானே தெரியும்?” என்றவனிடம் தயங்கி தயங்கித் தன் தேவையைச் சொல்ல,
“இவ்ளோ தானா? ட்வென்டி ஃபோர் ஹவர்ஸ் மெடிக்கல் ஒன்னு இருக்கு. வாங்கிட்டு வர்றேன். நீ போய் குளி” அவனுக்குத் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளாமல், இயல்பாகச் சொல்லிவிட்டு வெளியே போய்விட்டான்.
இவளுக்கு தான் தர்மசங்கடமாகப் போயிற்று.
இதுவே வாசுதேவன் என்றால் வாய்ப்பே இல்லை. அதற்கு மேல் ஜெகதாம்பாள். ஆம்பளைகிட்ட எதெதை சொல்லிவிடறதுன்னு வெவஸ்த்தை இல்லை. ஒருத்திக்கு மூனு பேரு பொம்பளைக இருக்கீங்கல்ல. முன்கூட்டியே வாங்கி வச்சுக்கத் தெரியாதா என ஆடித்தீர்த்திருப்பார்.
தனது பேக்கை எடுத்தவள், அதிலிருந்த சோப், பிரஷ்ஷை எடுத்துக் கொண்டு குளியலறை சென்றாள். சேலையை இலேசாக அலசிப் போட்டவள், மற்ற துணிகளையும் துவைத்து விட்டாள்.
அவள் குளித்து வெளியே வர, அவனும் அதற்குள் வந்துவிட்டான்.
குளித்து, ஈரத்தலையோடு, காதோரம் ஈரம் சொட்ட, அடர் பிங்க் நிறப் புதுப் புடவையில் இருந்தவளைப் பார்த்தவனுக்குள் ஏதோ ரசாயான மாற்றங்கள் அவனையும் மீறி.
மனதிற்குள் குளிர்ச்சியாய் ஒரு இதம்பரவ, இதுவரை அவன் அனுபவித்திராத உணர்வது. பார்வையை மாற்ற முடியவில்லை. ஹார்மோன்கள் குதியாட்டம் போட, இதயதாளம் லயம் தப்பியது. சற்று சிரமப்பட்டுதான் போனான் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர. இன்னும் உணர்வுகளைக் கையாளும் பக்குவம் வரவில்லை.
“துணியெல்லாம் எங்க போடணும்?” அவள் கேட்ட பிறகே, சுயம் உணர,
“பக்கெட்லயே வச்சுரு. விடிஞ்சதும் வீட்டுக்குப் பின்பக்கம் கொடியிருக்கு போட்டுக்கலாம்!”
“இல்ல… சில்க் சேரி வீணாயிரும். இப்பவே போடணும்! அதுவுமில்லாம வெயில்ல போட முடியாது!”
“பால்கனில போடு. முதல்ல இதைப்பிடி!” என்றவன் கையில் நீட்டியதைப் பார்த்தவள் கேள்வியாய் புருவம் சுருக்கினாள். ‘நம்ம என்ன கேட்டோம். இவன் என்ன வாங்கி வந்திருக்கான்?’ என புசுபுசுவென கோபம் வந்தது.
‘பெரிய மன்மதராசா. ரோஸும், சாக்லேட்டும் கொடுத்து ப்ரபோஸ் பண்றாரு’ என உள்ளுக்குள் குமுறியவளுக்கு, அவனை ஏறிட்டுப் பார்த்தால் ஆமாம் மன்மதனே தான் என பட்டயமே எழுதித் தருவாள். அவள் தான் தற்சமயம் அவனை கவனிக்கும் மனநிலையில் இல்லையே! ஆனால் அவன் அவளை மட்டும் தான் கவனித்துக் கொண்டிருந்தான். கோபத்தில் முகம் சிவப்பது நன்கு தெரிந்தது.
‘மதனு… உன் நிலமை கவலைக்கிடம் தான்டா!’
மற்றொரு கவரில் அவள் கேட்டதும் இருந்ததைப் பார்த்தவள்,
“எனக்கு அதுதான் வேணும். இது வேண்டாம்!” முகம் பார்க்காமல் கூறியவள் குரல், வெறுப்பைத் தாங்கியிருந்தது.
“ஏன், சாக்லேட் பிடிக்காதா?” என்றான்.
சாக்லேட் மட்டுமா இருக்கிறது. கூடவே ஒரு ரோஜாப்பூவும்.
“முதன் முதலா உனக்காக, நீ கேட்டு நான் வாங்குற பொருள். நாப்கினா இருக்க வேண்டாமேன்னு தான் கூடவே சாக்லேட் வாங்கினேன். இந்நேரத்துக்கு பூக்கடை எதுவும் இல்ல. இது நம்ம வீட்ல பூத்திருந்தது. நேத்து மொட்டா இருந்தது. இப்ப மலந்திருச்சு! அதான் பறிச்சிட்டு வந்தேன். பிடிக்கலைனாலும் பரவாயில்ல… ஃபர்ஸ்ட் இதை வாங்கிக்கோ.”
அவள் முன் நீட்ட, அவனது குரலில் கொடுத்த அழுத்தத்தில், இவனால் தான் தன் படிப்பு நின்றது. அவசரமாக திருமணம் பார்க்கப்பட்டது என்பதை சுத்தமாக மறந்து கை தன்னால் நீண்டது. அந்தக் குரல் ஏதோ செய்தது. சற்றே கரகரத்த, அழுத்தமான, ஆளுமை நிறைந்ந குரல். வாங்கியே ஆகவேண்டும் என்பது போல்.
உடனே உள்ளுக்குள் ஒரு அபாய மணியடித்தது. உங்க அம்மா ஆரம்பத்துலயே உங்க அப்பாக்கு அடங்கிப் போன மாதிரி நீயும் ஆரம்பத்துலேயே அடங்கிப் போயிறாதே மாது. எதற்கும் வளைஞ்சு கொடுத்துறாதே. இப்பவே நிமிர்ந்தா தான் உண்டு. இல்லைனா காலத்துக்கும் உங்க அம்மா கதிதான் உனக்கும்!’ என உள் மனம் எச்சரிக்க,
“எனக்கு சாக்லேட் பிடிக்காது. அதைக் கொடு” என வெடுக்கென இடது கையில் அவன் வைத்திருந்த கவரைப் பிடிங்கிக் கொண்டு குளியலறை திரும்பிவிட்டாள்.
தோளைக் குலுக்கி விட்டு, பக்கத்தில் மேஜை மீது வைத்துவிட்டு வெளியே சென்றுவிட்டான்.
தன் தேவையை முடித்து வெளிவந்தவள் தான் அவனிடம் அப்படி பேசியதை எண்ணி உழன்று கொண்டிருந்தாள். ஒரு சாக்லேட் தானே. வாங்கியிருக்கலாம் இல்லையெனில் நாசுக்காக மறுத்திருக்கலாம் எனத் தோன்றியது. அப்பொழுது அவளது அத்தை சுகந்தி உள்ளே வந்தார். இவளது முகம் சோபையிழந்திருந்தது.
“மாது… எல்லாரும் எந்திரிச்சு வெளியே வந்துட்டாங்க. நீ இன்னும் உள்ளேயே இருந்தா என்ன நினைக்கமாட்டாங்க?” என்றார்.
“பீரியட்ஸ் வந்திருச்சு அத்தை! வெளியே வரலாமா, இல்லையான்னு தெரியல! அதான் உள்ளேயே இருக்கேன்!” என்றாள் வறுத்தம் தோய்ந்த குரலில் உற்சாகமின்றி. அது சுகந்திக்கு வேறு அர்த்தம் கொடுத்தது.
“நான் கூட மாப்பிள்ளை மாறிப்போச்சே. எப்படிப்பட்ட குடும்பமோன்னு நெனச்சேன் மாது. ஆனா எல்லாரும் நல்லபடியாத் தெரியறாங்க. மாப்பிள்ளை படிக்கல. அது ஒன்னுதான் குறை. ஆசைப்பட்ட வாழ்க்கை கிடைக்கலையேன்னு கிடைச்ச வாழ்க்கைய விட்டுறாதே!” என்ற அத்தையை கொலை வெறியோடு பார்த்தாள்.
நான் யார் மீது ஆசைப்பட்டேன். என்னமோ நேர்ல பாத்த மாதிரி. இவர்களாக ஒன்றை கற்பனை செய்து கொண்டால் அதற்கு நானா பொறுப்பு. எல்லாம் என் தலையெழுத்து என கண்கள் கலங்கிவிட்டது.
இவருக்கு ஜெகதாம்பாள் மூலமாகக் கிடைத்த தகவலின் படி, தம்பி மகள் யாரையோ காதலிக்கிறாள். திருட்டுக் கல்யாணம் வரை சென்றுவிட்டாள். வெளியே தெரிந்தால் சொந்த பந்தங்கள் முன் தலைகுனிவாகப் போகுமென்றுதான் இந்த அவசரக்கல்யாணம் என்பது தான்.
சுகந்தியின் மகன் விகாஸ், தான் வந்து அழைத்துச் செல்வதாகவும், கிளம்பி இருக்கச் சொல்லியும் சுகந்திக்கு சற்றுமுன் ஃபோன் செய்திருந்தான்.
மாதங்கி அறையை விட்டு வெளியே வந்துவிட்டால் அவளிடம் தனியாகப் பேசமுடியாதென, அறைக்கு வந்தவர், கிளம்பும் முன் அத்தை முறைக்கு அவளுக்கு நாலு நல்ல வார்த்தை சொல்லுவோம் என சொல்லப்போக, ஏதோ எடுக்க வந்தவன் காதில் சுகந்தி பேசியது தெளிவாக விழுந்தது.
‘ஆசைப்பட்ட வாழ்க்கை என்றால் படித்த, ஐடி மாப்பிள்ளை, பெங்களூர் ஜாகையை எதிர்பார்த்திருந்ததா. அது கிடைக்காத வருத்தமா? அதனால் தான் நான் வாங்கி வந்த சாக்லேட் கூட பிடிக்கவில்லை போல எனத் தோன்ற சடுதியில் முகம் கருத்துவிட்டது.
சற்று தாமதித்து உள்ளே வர, சுகந்தி வெளியே சென்றுவிட்டார். கண்ணீரை மறைக்க சுவர் புறமாகத் திரும்பிக் கொள்ள, முகம் காட்டக் கூட பிடிக்கவில்லை போல என நினைத்தவன், எடுக்க வந்ததை மறந்து அப்படியே திரும்பி விட்டான்.
