மதன மாளிகையில் 7

7

“டேய்…‌என்னடா இவன்!” புல்லட் சத்தத்தில் திரும்பிப் பார்த்த அஜய், மதனைப் பார்த்து புருவம் சுருக்கி கேட்க,

“உன் கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாடா?” என்றான் நரேன்.

அஜய், “தங்கச்சிய கவனிக்கறதும் அதிமுக்கியக் கடமைடா மாப்ளே!” என்றான். 

மதன், “யார்‌ தங்கச்சிய?” எனக்கேட்டான், வலதுகாலை பின்னால் தூக்கிப்போட்டு வண்டியை விட்டு இறங்கிக்கொண்டே.

“இவனுக்கு கொழுப்பப் பாத்தீங்களாடா! யாரோட தங்கச்சியாம்ல. உன்னைய என்ன, எல்லாரோட தங்கச்சியையும் கவனிக்கவாடா நேந்து விட்டுருக்கு?” என்றவனிடம், 

“வேலையப் பருங்கடா!” என்றான் சட்டையைக் கழற்றி, தென்னை‌மரத்தில் அடித்திருந்த ஆணியில் மாட்டிக் கொண்டே. மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இவனை என்ன செய்தால் தேவலாம் என்றிருந்தது அவர்கள் பார்வை.

நேற்றிரவு இங்கிருந்து சென்றதே லோடுகளை அனுப்பிவிட்டுத் தாமதமாகத்தான். அதில் விடிந்தும் விடியும்‌ முன் தோப்பில் வந்து நின்றால் என்ன அர்த்தம். திருமணம் நடந்த சூழல் அனைவருக்கும் தெரியும் தான். அதற்காக இப்படியா? 

இது வழக்கமாக மதன் தோப்பிற்கு வரும் நேரம் தான். தூங்க மட்டுமே அதுவும், அப்பத்தாவிற்காக அந்த வீட்டிற்கு செல்வான். கஷ்ட்டமோ, நஷ்ட்டமோ, துக்கமோ, சந்தோஷமோ எதுவாக இருந்தாலும் அவனுக்கு பொழுது விடிவது இந்தத் தோப்பு வீட்டில்தான். 

பல தலைமுறைகள் கண்ட வீடு. இப்பொழுது புழக்கமில்லாததால், ஆங்காங்கே காரைமட்டும் பெயர்ந்து சிதிலமடைந்திருக்கிறது. வெள்ளைக்காரன் காலத்தில், பர்மா தேக்கு கொண்டு பார்த்து பார்த்து இழைத்த, ரெட் ஆக்சைட் போடப்பட்ட வழவழத்த சிவப்பு தரை. அந்தக்காலத்துலேயே வாசல் நடுவில் வட்டவடிவில் தாமரைக்குளமும், அதன் நடுவில் நீரூற்றும்‌. இந்த வீடு கட்டி முடித்த பொழுதே ஊர் ஆட்கள் எல்லாம் பொருட்காட்சி போல் வீட்டை வந்து பார்வையிட்டுச் சென்றனர். மீண்டும் புனரமைக்கவே பல லட்சங்கள் தேவைப்படும். 

நிலம் பிரிக்கும் பொழுது இவன் பங்கு நிலத்தில் வீடு அமைந்துவிட்டது. அது தான் வாசுகிக்கும் ஆத்திரம். ஆனால், தனசேகரன் பங்கு நிலத்தில் இந்த வீடு அமைந்திருந்தால் நிலத்தோடு சேர்ந்து வீடும் சாலை போடுவதற்காக இடிக்கப்பட்டிருக்கும் என்பது வேறு கதை. வீடு தப்பியதே என்பது புரியவில்லை வாசுகிக்கு. 

ஆள் வைத்து அடிக்கடி சுத்தம் செய்து விடுவான் தான். என்ன இருந்தாலும் ஆட்கள் புழங்குவது ‌போல் வருமா? 

“டேய்… சங்கரெல்லாம் கல்யாணம் முடிஞ்சு ஒரு வாரமா இந்தப் பக்கம் தலையே காட்டல. நீயென்னடான்னா மறுநாளே விடியுமுன்னே வந்து நிக்கிற!” என்றவனைப் பார்த்து, வாயில் கை வைத்து சைகை செய்ய, 

“ஆ… ஊ…ன்னா இதொன்னப் பண்ணிர்றா” என்றான் அங்கலாய்ப்பாக. 

“லோடு வருதுன்னு ஃபேன் வந்துச்சுடா! அதான் கிளம்பி வந்துட்டேன்” என்றவன் மனதிற்குள், 

‘அவ முன்னாடி போனாலே முகத்தை திருப்புறவள என்னத்தக் கவனிக்கறது?’ ஆற்றாமையாக எண்ணினாலும், அவளைக் கவனிக்கும் விதத்தில் கவனித்து விட்டுதான் வந்தான். 

அவள் சட்டென முகத்தைத் திருப்பியது இவனை அவமானப்படுத்தியது போலிருக்க, அவனாலும் அதற்கு மேல் அங்கிருக்க முடியவில்லை. உதாசீனம் ஒன்றும்‌ அவனுக்குப் புதிதல்ல. வாசுகியும் அதைத்தானே செய்கிறார். 

ஆனால், ஏனோ இவள்‌ முகம் திருப்பியது மட்டும் முகத்தில் அறைந்தது போல் இருந்தது. ஒரு வேளை பெற்றவர்களுக்கு அடுத்து தனக்கென, அவனது அனுமதியின்றியே அவன் வாழ்க்கைக்குள் வந்துவிட்ட உறவு என்பதாலா? மனைவி என்ற அங்கீகாரமா? ஏதோ ஒன்று அவளை தனக்கானவள் என எண்ண வைத்தது. 

அதனால் தான் அவளது நிராகரிப்பை மனம் வெறுக்கிறது போல. வீட்டில் யாரிடமும் சொல்லாமல் பவித்ராவை மட்டும்‌ தனியாக அழைத்து தேங்காய் லோடு வந்திருப்பதாகச் சொல்லிவிட்டு வந்தான். அப்பத்தாவிற்குத் தெரிந்தால் விடவே மாட்டார். இவன் வெளியே வர, அப்பொழுதுதான் பரிமளா, தன் கணவரோடு உள்ளே வந்தார். 

முன் தினம் மணமக்களை பிறந்த மகளாக, ஆரத்தி எடுத்து அழைத்துவிட்டு இரவு தங்கள் வீட்டிற்குச் சென்றுவிட்டனர். 

மச்சான் முறைக்குதான் வீட்டோடு மகன் இருக்கிறானே. 

அவர்கள் ஏதாவது கேட்க வாயைத்திறக்கும் முன், அத்தையும், மாமனையும் வரவேற்றவன், அவர்களை உள்ளே போகச் சொல்லிவிட்டு இவன் கிளம்பி தோப்பிற்கு வந்து விட்டான். 

அஜய், நரேன், கோபி மூவரும் அப்பொழுதுதான் எழுந்து டீக்கடை சென்று டீ குடித்து வந்தனர். மூவர் முகமும் நண்பனை நினைத்து கவலை மேகம் சூழ்ந்தது. அவர்களும் எல்லோரையும் போல, போகப் போக சரியாகும் என எண்ணி மனதைத் தேற்றிக் கொண்டனர். 

அஜய், மதனுக்கு இரண்டு இளநீரை வெட்டி எடுத்து வந்தான். டீ, காஃபி பழக்கம் மதனுக்கு அரவே கிடையாது. ஒரு காலை மடக்கி வண்டியில் வைத்து, சாய்ந்து நின்றவன் இளநீரை வாங்கிக் கொண்டான். 

பெற்றவர்களை இழந்து, பத்து வயதில் அவன் இங்கு வந்து சேர்ந்ததிலிருந்து, அவன் தாத்தா சிவகைலாசம், பழக்கிவிட்டது‌. காலையில் எழுந்தவுடன் இளநீர் குடிக்கும் பழக்கம். 

அப்பொழுது அவன் உடல் இருந்த நிலமைக்கு இளநீரும், பழச்சாறு மட்டும் தானே ஆகாரமாக இருந்தது. எது சாப்பிட்டாலும் உள்ளே தங்காது. உடனே இரத்தத்தோடு வெளியேறி விடும். அந்தளவிற்கு அவனது உணவுக்குழாய்  புண்ணாக ரணப்பட்டுக்‌ கிடந்தது.

 வாய்க்கு ருசியாக, விதவிதமாக சாப்பிட்டு வளறவேண்டிய வயதில் வெறும் இளநீரும், பழச்சாறும், மோர் சாதம் மட்டுமே ஆகாரம் என வளர்ந்தவன். அவன்‌ சாப்பிட்டவுடன் வயிற்று வலி எடுத்து துடித்த பொழுதெல்லாம், பேரனை‌ நினைத்து இரத்தக் கண்ணீர் விடாத குறைதான் பெரியநாயகிக்கு. 

வீடு முழுவதும் பாலாறும், தேனாறும் ஓடினாலும் பேரனால் ஆசையாக அள்ளிச் சாப்பிட முடியவில்லையே என உள்ளுக்குள் ஆற்றுப் போவார். இந்த மட்டிற்காவது பேரன் உயிரோடு பிழைத்து தங்களிடம் வந்து சேர்ந்தானே என மனதைத் தேற்றிக் கொள்வார் சிவகைலாசம். அப்படியே‌ சாப்பிட்டுப் பழகியதால் இன்னுமே கூட காரம் மதனுக்கு ஆகாது. 

“அன்னைக்கி என்ன கருமத்தடா கொடுத்தீங்க. இன்னும் வயிறு எரியுதுடா?” என்றான். 

“எங்களுக்கும் தான்டா எரியுது. அன்னைக்கு நீ குடிச்சதைவிட, வேஸ்ட் பண்ணது தான்டா அதிகம். இதுவே நீ காசு போட்டு வாங்கிருந்தா இப்படி பண்ணியிருப்பியா?” எனக் கேட்டவனிடம், 

“நானெதுக்குடா அதெல்லாம் காசு போட்டு வாங்கப் போறேன்?” என்றான்.

கோபி, “அதானே… வாங்கிட்டாலும். இருந்தாலும் இவ்வளவு பிசினாறித்தனம் ஆகாதுடா. குடும்பம்னு‌ வந்துட்டா செலவு வரத்தான் செய்யும். அதான் இந்த வயசுலயே நல்லா சம்பாதிக்கிறியே? அப்பறமென்னடா? தாத்தா சொத்தே நாலு தலைமுறைக்கு வரும்.”

“இருக்குங்கறதுக்காக கை நீளக்கூடாது கோபி. இப்ப நம்மகிட்ட இருக்கறத வச்சு கணக்குப் போடக்கூடாது. நாளைக்கு நம்மகிட்ட இது இல்லைனா‌ என்னாகும்கற பயம் கொஞ்சமாச்சும் வேணும். எங்கப்பா எனக்கு கத்துக் கொடுத்த பாடம்டா!” விரக்தி கலந்த குரலில் வேதனையோடு சொன்னவனிடம் இதற்கு மேல் பேச முடியாது என அமைதியாகிவிட்டான். 

அஜய்‌ வெட்டிக் கொடுத்த இளநீரை குடித்தவாறே எண்ணங்கள் எங்கெங்கோ சுற்றி வந்தது. 

ராஜா வீட்டு கன்றுக் குட்டியாக, பணக்கஷ்ட்டம் என்ற‌ பதத்திற்கு பதவுரை தெரியாமலே வளர்ந்தவர் குணசேகரன். வேளைக்கு ஒரு சாப்பாடு, நாளைக்கு ஒரு உடை, ஃபோன் செய்தால், அடுத்த நொடி பேங்க் அக்கவுண்டில் பணம் என கை குளிர செலவழித்து பழக்கப்பட்டவர். 

வீட்டிற்கு இளைய ஆண் பிள்ளையாக, செல்லமாக வளர்ந்தவருக்கு, பெரியவர்களை எதிர்த்து செய்த, காதல் திருமணம் நிறையவே கற்றுக் கொடுத்தது என்று சொல்லலாம். ஆண்கள் கையில் பணப்புழக்கம் குறையும் பொழுது, அவர்கள் குணமே தலைகீழாக மாறி விடும் என்பதற்கு சிறந்த உதாரணம் குணசேகரன். சம்பாத்யம் இருந்தால் தானே தாம்பத்யம் ருசிக்கும்.  

கண்ணை மூடிக் காணும் கனவிலும், கற்பனையிலும் எல்லாம் சுகமே. கண்ணம்மாவை நினைத்து உருகிய அளவிற்கு ஏன்‌ முண்டாசுக் கவிஞனால் செல்லம்மாவை நினைத்து உருக முடியவில்லை. கண்ணைப் பொத்தி,  விளையாட்டு காட்டிக் கொஞ்சும் கண்ணம்மா அரிசி, பருப்பு கேட்டதில்லையே. செல்லம்மாவை நினைத்தவுடன் அரிசி, பருப்பு கேட்டதுதானே நினைவிற்கு வரும். பாட்டெங்கே வரும்?

காணி நிலமும், நான்கு தென்னைமரமும் இருந்து, பக்கத்தில் பத்தினிப் பெண் இருந்தால் தான்‌ சுவைக்கும்‌. வாடகை வீடும், மளிகைக்கடையில் மாதாந்திர வரவு, செலவு கணக்கும் வைத்திருப்பவனுக்கு பத்தினிப் பெண் சுவைப்பதில்லை. 

எல்லாருக்கும் கல்யாணத்திற்கு முன் கண்ணம்மாவாக இருக்கும் காதலிகள், கல்யாணத்திற்கு பின்… மனைவிகள் செல்லம்மாவாகத்தான் தெரிவார்கள் என்பது தான் உலக நிதர்சனம். உள்ளம் கள்வெறி கொள்ளாது. கள்ளுக்கடை தான் தேடச் சொல்லும். 

ஆரம்பத்தில் தேனாய் இனித்த காதல் குணசேகரனுக்கு… கொஞ்சம் கொஞ்சமாக வேம்பாய்க் கசக்க ஆரம்பித்த தருணங்கள். பத்து வயது சிறுவனுக்கு வீட்டில் நடப்பது புரிந்தும் புரியாத நிலை.

“என்னப்பு… கண்ணாலமாம்ல… ஆத்தாளுக்கு சேலை எடுத்துக் கொடுக்காம கண்ணாலம் கட்டிக்கிட்டியே!” பக்கத்தில் பரிவாகக் கேட்ட குரலில் சிந்தனை கலைந்தவன், ஆழ்ந்து மூச்செடுத்து தன்னை மீட்டுக் கொண்டான். 

“இப்ப என்னாத்தா… சேலை தானே வேணும். எடுத்துக்கலாம்!” என்றான் பளிச்சென விரிந்த புன்னகையோடு. 

“அந்நியன் மாதிரி சட்டு சட்டுனு ரியாக்ஷன மாத்துறான்டா” என்றான் இவ்வளவு நேரமாக அவனைப்‌பார்த்துக் கொண்டிருந்த அஜய் பக்கத்தில் இருந்த நரேனிடம். 

“ஏ‌ ராசா… புள்ளகுட்டியோட நல்லாருப்பே!” அவன் வளத்திக்கு எட்ட முடியாமல் காற்றில் கன்னம் வழித்து நெட்டி முறித்தார் சுப்பாத்தாள். 

“க்க்கும்… இன்னும் செத்த காலம்பரவே எந்திரிச்சு தோப்புக்கு வரச்சொல்லு ஆத்தா. புள்ளகுட்டி தன்னால வரும்!” அங்கலாய்த்தது கோபி. 

நரேன், “கொஞ்சம் குனிஞ்சு கொடேன்டா… ஆத்தா கஷ்ட்டப்படுதுல்ல?” என, 

“ஏஞ்சாமி என்னைக்கும் தலை குனியக் கூடாது!” என்றார்.‌

“வரும்போது டீவில ஏதும் கே.எஸ்.ரவிக்குமார் படம் பாத்துட்டு வர்றியா‌ ஆத்தா! டயலாக்கெல்லாம் பயங்கரமா வருது?” அஜய்‌ கேலி செய்தான். 

“சாமி, அவுங்க தாத்தாவாட்டம். அந்தக்காலத்துல, ஊருக்குள்ள அவங்க தாத்தா சாரட் வண்டி பூட்டி வந்தார்னா, பொம்பளைக கண்ணு பூரா அவுங்க மேலதான்!” பஞ்சடைத்த கண்கள் ஒளிற சிரித்தார் இப்பொழுதும். 

“அடேய் மதனு! இது நம்ம பெரியநாயகி ஆத்தாளுக்குத் தெரியாமப் பாத்துக்கோடா. செத்தும் மனுஷன் நிம்மதியா இருக்க முடியாது. ஆத்தா ராக்கெட்ல போயாவது உண்டு இல்லைனு தாத்தன ஒரு கை பாத்துரும்!” 

நரேனின் கேலியில் மதன் கூட சற்று இறுக்கம் தளர்ந்து வாய்விட்டு சிரித்துவிட்டான். சிரிக்கும் நண்பனை வாஞ்சையாகப் பார்த்து நின்றனர் மூவரும்.‌

அதென்னமோ விட்ட குறை, தொட்ட குறை போல சுப்பாத்தாளுக்கும், மதனுக்கும் ஒரு பந்தம். இவனைப் பார்த்தவுடன் அவருக்கு, இவன் ‌தாத்தா ஞாபகம்‌ வந்துவிடும். ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று தடவையாவது சாங்கியம் மாதிரி சொல்லாவிட்டால் அவருக்கு தூக்கம் வராது. 

இவரும், இவர் கணவரும் இங்கு தான் பண்ணைக்கு இருந்தனர். அவர் கணவர் மறைவிற்குப் பின், பிள்ளைகள் கைவிட்டு, சாப்பாட்டிற்கே கஷ்ட்டப்பட்டவரை, இவன் தான் தோப்பில் விழும் தென்னை மட்டையில், விளக்குமாறு கிழித்து விற்க ஏற்பாடு செய்து கொடுத்தான். வீட்டையும் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து விடுவார். இவர் விஷயத்தில் காசு கணக்குப் பார்க்க மாட்டான். 

தோப்பில் போடப் பட்டிருந்த, சிமென்ட் களம் முழுவதும் கொப்பரைகள் காய்ந்து கொண்டிருந்தன. அதே மாதிரியான இன்னொரு களத்தில் உடைத்த தேங்காய்கள் உலர்ந்து கொண்டிருந்தன. அவை காய்ந்ததும், சிரட்டையில் இருந்து கொப்பரைகள் பிரித்து எடுக்கப்படும். ஒரு ஓரமாக கொட்டாங்குச்சிகள் மலைபோல் குவிந்து கிடந்தன. 

பெண்களும் வேலைக்கு வந்துவிட்டனர்.

முன்தினம் உரித்துப் போட்ட தேங்காய்களை உடைத்து உலர வைப்பது, உலர்ந்த தேங்காய் பருப்புகளைப் பிரித்தெடுப்பது இவர்கள் வேலை. 

“இன்னைக்கி வந்து சிரட்டையெல்லாம் எடுத்துட்டுப் போகச் சொல்லுங்கடா!‌”

“சரிடா!” என்றான் அஜய். சிரட்டைகள் எரித்து கரியாக்கி, கொசுவத்தி தயாரிக்க விற்பனை செய்யப்படும் 

எப்பொழுதும் வெயிலுக்கு முன் தேங்காய் உரிக்க ஆரம்பித்துவிடுவர். சாப்பாட்டிற்குப் பிறகு உடம்பு கொஞ்சம் மதமதப்புத் தட்டிவிடும். சற்றே ஓய்வு. அதன் பிறகு மட்டைகளை ஓரங்கட்டுவது, காய்ந்த கொப்பரைகளை பேக் பண்ணுவது போன்ற மற்ற வேலைகள் இருக்கும். 

ஒரு பக்கம் மட்டையிலிருந்து நார் பிரித்து எடுக்கும் வேலை நடக்கும். 

அததற்குரிய ஆட்கள் வர, வேலை தடையில்லாமல் நடந்து கொண்டிருந்தது. 

கருவியில் தேங்காயை குத்தி, வாழைப்பழம் உரிப்பது போல் தேங்காய் மட்டைகளை உரித்துப் போட்டனர் அனைவரும். 

எதிர் வெயிலில், உடலில் வியர்வை மின்ன, திரண்ட புஜம் மேலும் கீழும் ஏறியிறங்க, பரபரவென வேலை நடந்து கொண்டிருந்தது. வழக்கம் போல் தன்னை வேலையில் ஈடுபடுத்திக் கொண்டாலும், வழக்கத்திற்கு மாறாக சிந்தனையில் பெண்ணவளே ஆக்கிரமித்திருந்தாள். 

மாதங்கி, அவளது அத்தையிடம், “வெளியே வரலாமா… இல்லையான்னு தெரியலத்தை” என்றதை காதில் கேட்டவன், தங்கையிடம் வந்து அவளது சங்கடத்தை யாருமறியாமல் கூற,

“நான் பாத்துக்கிறேண்ணா! புது இடம்ல. அப்படித்தான் இருக்கும். அத்தை வீட்லயே எனக்கு முதல் நாள் ஒன்னும் புரியல. அவங்களுக்கு இடமும் புதுசு‌. ஆட்களும் புதுசு” என ஆறுதலாதப் பேசியவள் மாதங்கியைப் பார்க்க அறைக்குள் சென்றாள்.‌

அப்பொழுதுதான் படுக்கையை ஒதுங்க வைத்துக் கொண்டிருந்தாள். பூவெல்லாம் எடுத்து கவரில் போட்டு ஓரமாக வைத்தவள், போர்வையை பாத்ரூமில் ஊறவைத்து வெளியே வந்தாள்.‌ பவித்ரா கதவைத் திறக்க, மதன் என நினைத்துத் திரும்பியவள், இவளைப் பார்த்ததும் புன்னகைத்தாள். 

“என்ன மாதங்கி… எப்ப வெளியே வர்றதா உத்தேசம்? நங்கையா தரிசனம் பார்க்க நாங்க எல்லாம் வெயிட்டிங்!” கேலி போல் இயல்பாகக் கேட்டாள்.

“இல்ல அண்ணி… வரலாமா என்னானு‌ தெரியல. அதான்…” என சங்கட்டமாக இழுத்தாள்.

“இதுல என்ன இருக்கு. நானெல்லாம் எங்க அத்தை வீட்லயே அந்தப்பயம் பயந்தேனாக்கும். இத்தனைக்கும் எல்லாரும் ஒன்னுக்குள்ள ஒன்னு. சின்ன வயசுலருந்து பாத்தவங்க‌. எனக்கே மொத நாள் அப்படி இருந்துச்சு. உனக்கு இடமும் புதுசு. ஆட்களும் புதுசு. அப்படித்தான் இருக்கும்!” புது இடத்தில், வந்த முதல் நாளே அவளது பதட்டம் உணர்ந்தவளாக, பவித்ரா இயல்பாகப் பேசி அவளை சகஜமாக்கினாள். 

“உங்க வீட்ல இருக்குற மாதிரியே நீ ஃப்ரியா இருக்கலாம்” என்றதும், 

‘எங்க வீட்ல இருந்த மாதிரியா… சுத்தம்! அதைத்தொடாதே, இதைத்தொடாதே… அங்க உட்காரதே, இங்க உட்காராதே, எங்க காலத்துல எல்லாம் வீட்டுக்குள்ளயே வரமாட்டோம். பின் வாசல் தான். இந்தக் காலத்துல எல்லாம் மாறிப்போச்சுனு பாட்டா படிக்குமே. ஜெகதாம்பாள சமாளிக்கறதுக்குள்ள போதும் போதும்னு போகுமே’ என உள் மனம் அலறியது. 

ஈரத்துணி இருந்த வாளியை கையில் எடுத்துக் கொண்டு, இருவரும் வெளியே வந்தனர்.

“கொடு மாதங்கி… நான் காயப்போட்டு வர்றேன். உனக்கு எடம் தெரியாது!” என பவித்ரா கை நீட்ட,

“அதுக்குன்னு நெதமும் நீயே காயப் போடுவியா? எடத்தைக் காமி பவி!” என்றார் சோஃபாவில் அமர்ந்திருந்த வாசுகி. 

வாசுகி சொன்ன தோரணையே, ஜெகதாம்பாள் வெர்ஷன் டூ என்ற நினைப்பு வந்தது மாதங்கிக்கு. 

பெண் பார்க்க வந்த பொழுதும், பூ வைத்து நிச்சயம் முடித்த பொழுதும் தன்னிடம் சிரிக்க சிரிக்கப் பேசிய வாசுகிக்கும், இப்பொழுது பார்க்கும் வாசுகிக்கும் ஆறு அல்ல நூறு வித்யாசம் என மனம் கணக்குப் போட்டது. சட்டென புதியவள் முகம் மீண்டும் சுருங்கி விட்டது. 

“எங்கேனு சொல்லுங்க அண்ணி!” என்றவள் குரல் சுரத்தையின்றி உள்ளே போனது. 

“வெளியே போயி, ரைட் சைடு திரும்பினா பின்வாசல் வழியா மாட்டுக் கொட்டம் வரும். அங்க தான் கொடி கட்டியிருக்கு!” என்றாள். காலையில் அவள் சன்னல் வழியாகப் பார்த்த இடம் என்று புரிந்தது. 

“சரிங்கண்ணி” என்று வெளியே செல்ல முற்பட, 

“மொதல்ல காபியப் பிடி! பக்கெட்ட அப்படி ஓரமா வை!” என்றவாரே, பெரியநாயகி இரண்டு காஃபி டம்பளர்களோடு அடுக்களைவிட்டு வெளியே வந்தார். 

“என்ன ஆத்தா! நீங்க போயி இதெல்லாம்? நானே வந்து எடுத்துப்பேன்” என்றாள் பதட்டமாக. 

அவளுக்கு வீட்டுக்குப் பெரிய மனுஷி, தனக்கு எடுத்து வருவதா என்ற பயம். இப்பொழுதுதான் வாசுகி சட்டென முகத்திலடித்தது போல் பேசினார். இதற்கும் ஏதாவது சொல்லிவிட்டால் என நினைத்தவளுக்கு இப்பொழுதே கண்கள் கலங்குவது போல் ஆயிற்று.

 புதுப் பெண் மனம், புது இடத்தில் இப்படித்தான் ஒவ்வொன்றுக்கும் பயம் கொள்ளும்‌. அதையே அடிபிறழாமல் மாதங்கி மனமும் தொட்டதெற்கெல்லாம் பயம் கொண்டது. அப்பொழுதுதான் பரிமளாவும், இடும்பனும் வெளியே சென்ற மதனிடம் பேசிவிட்டு உள்ளே‌ வந்தனர். 

மருமகளுக்கே அவர்தான் காஃபி எடுத்து வந்தார் என்பதை மாதங்கி அப்பொழுதுதான் கவனித்தாள். இவள் கையில் ஒரு டம்ப்ளரும், வாசுகியிடம் ஒன்றும்‌ கொடுத்தார். பவித்ரா அத்தைக்கும், மாமனுக்கும் எடுத்து வர, வாங்கிக் கொண்டு அத்தை சுகந்தியின் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள். சீதாலட்சுமி அடுக்களையில் இருந்தார்.

எல்லாரையும் ஒரு முறை சுற்றிவந்த கண்கள், இதுல அவனோட அம்மா, அப்பா எங்கே எனத் தேடியது. 

முன் தினம் அத்தனை பேர் இருந்ததினால் அவள் கவனத்திற்கு வரவில்லை. தனசேகரனையும், வாசுகியையும் முன்பே தெரியும். மற்றவர்களைப் பார்த்திருந்தாலும் இன்னாரென்ற உறவு முறை எதுவும் தெரியாது. ஒரு முறைதான் பார்த்தவர்கள் யாரும் மனதில் பதியவில்லை புதியவளுக்கு. 

இப்பொழுதுதான் மாப்பிள்ளை மாறிவிட்டதே. அப்ப என்னுடைய மாமனார், மாமியார் யார் என யோசனை ஓடியது. பரிமளாவும், இடும்பனும் தான் அவனது அப்பா, அம்மாவா என மனம் யோசித்தது.

அவனுக்கென்னடான்னா கட்டினவ பேரே தெரியல. இவளுக்கென்னடான்னா கட்டினவனோட பெத்தவங்க யாருன்னே தெரியல. இந்த வட்சணத்துல இருக்கு இதுக பொழப்பு. சர்வேஷ்வரா…. 

“நான் சொல்லல. உங்க வீட்டாளுக நல்ல மாதிரி!” சுகந்தி மெதுவாகக் கூற,

‘ஒரே நாள்ல உங்க வீட்டாளுகளா?’ என்று அத்தையைப் பார்த்தாள். 

சஷ்டிகா அழும் சத்தம் கேட்க, பவித்ரா பிள்ளையைத் தூக்க, அறைக்குள் சென்றாள். பிள்ளை சத்தத்தில் புரண்டு படுத்தான் ஜெகன். 

“எந்திரிங்க…” என கணவன் முதுகில் ஒரு அடியைப் போட்டவள், அவனை அடுத்து தூங்கி எழுந்து உட்கார்ந்த பிள்ளையைத் தூக்க எட்டி கைநீட்ட, கையை பிடித்திழுத்து அவளையும் முன்னால் போட்டுக் கொண்டான். 

“ஆத்தீ…” எனப் பதறி விழ, அம்மா விழுந்ததில் பிள்ளைக்கு அழுகை நின்று சிரிப்பு வந்தது. 

“என்னதிது… நேத்து கல்யாணமானது அண்ணனுக்கு. நமக்கில்ல. எந்திரிங்க முதல்ல! நீ என்னடீ… நான் விழுந்தது உனக்கு சிரிப்பா இருக்கா?” அதட்டியவாறே, பிள்ளையையும் இழுத்து மேலே போட்டுக் கொண்டாள்.

“ஒரே அலுப்புடீ!” என்றான் இருவரையும் அணைத்துப் பிடித்துக் கொண்டே.

“கல்யாண வேலை பாத்ததெல்லாம் அண்ணனும், பெரியப்பாவும். அலுப்பு உங்களுக்கா?”

“நான் அந்த அலுப்ப சொல்லலடீ. நம்ம செகன்ட் புராஜக்டுக்கான ஆரம்பகட்ட வேலைல வந்த அலுப்பு” என, கண் சிமிட்டியவன், 

“உடம்பெல்லாம் வலிக்குதுடீ. கொஞ்சம் புடிச்சு விடேன்” என்றான் உடம்பை முறுக்கிக் கொண்டு. 

“புடிச்சு விட்டா போச்சு!” என்றவள் பிள்ளையை‌ அவன் மீது உட்கார வைத்தவள், தலையணையை‌ எடுத்து அடிக்க, அப்பன்‌ அடி வாங்கியதில, 

“ம்மா… நானு…” என கை கொட்டி சிரித்தது அவனது பிள்ளை. 

“நேத்து என்ன சொன்ன?” என்றான் கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு. 

“எத்தனையோ சொல்லிருப்பேன். எதுன்னு நினைக்கிறது?” என்றாள் முகம் கோணி. 

“உம் பொறகாலயே திரிஞ்சேன்னு சொல்லல?”

“உண்மையத் தானே சொன்னேன். காலேஜ் போகையில தினமும் என் பின்னாடியே வந்தது யாராம்? மறந்துருச்சா”

“ஏன்டீ… நீ பாக்குற பார்வையோட அர்த்தம் புரியாமலா உன் பின்னாடியே வந்தேன். நானாவது நீ காலேஜ் படிக்கும் போது உம்பின்னாலயே வந்தேன். ஆனா நீ… ஸ்கூல் படிக்கும் போதே என்ன சைட்டடிச்ச தானே?” உண்மையைப் போட்டு உடைக்க, முகம் சிவந்தவள்,

“இவர சைட் அடிச்சுட்டாலும். ஏதோ அத்தை மகனாச்சேனு போகும் போதும், வரும் போதும் சும்மா பாத்திருப்போம். உடனே சைட்டடிச்சதா அர்த்தமா? ஓவர் கான்ஃபிடன்ட்‌ உடம்புக்கு ஆகாதுங்கோ!” என்றாள் வீம்பை விட்டுக் கொடுக்காமல். 

“எனக்கா… உனக்கு தான்டீ ஓவர் கான்ஃபிடன்ட். என்னமோ உன்னப் பாக்க வந்ததாவா நெனச்ச? உங்கூடவே வருவாளே யாரது… கலரா, வளத்தியா, அவ பேரு கூட…”

“விஷாலி…”

“ஹா… அவதான். அவளப்பாக்க வந்தா, நீ உன்னைப் பாக்க வந்ததா நெனச்சுக்கிட்ட.”

“இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல. அவ ஃபோன் நம்பர் வாங்கித்தரவா? அவ புருஷன டைவர்ஸ் பண்ணிட்டு செகன்ட் மேரேஜ்க்கு மேட்ரி மோனில பதிஞ்சு வச்சுருக்கா.”

“ஏன்டீ, போன வருஷம் தானே கல்யாணம் ஆச்சு?” அதிர்ந்து கேட்க,

“ஆமா… டைவர்ஸுக்கு அப்ளை பண்ணின கையோட, மேட்ரி மோனில பதிஞ்சுட்டா. நம்பர் வேணுமா?”

“ஏன்டீ, உனக்கிந்த கொலவெறி.”

“நாங்க எல்லாம் நளாயினி வம்சமாக்கும்!”

“நளாயினியும் வேண்டாம். கண்ணகியும் வேண்டாம். நீ சைட்டடிச்சத ஒத்துக்கோ. நான் உன்னப் பாக்கதான் வந்தேங்கறத ஒத்துக்கறேன்!” 

இவர்கள் இருவரும் சர்வதேச ஒப்பந்தம் போட்டுக் கொண்டிருக்க, இரண்டு வயது சஷ்ட்டிகா, கட்டிலை விட்டு இறங்கி, கதவைத் திறந்து போட்டு வெளியே சென்றதை கவனிக்கவில்லை. 

பேத்தி தூங்கியெழுந்து வெளியே வர, அவளைத் தூக்க வந்தவர், கதவு திறந்து கிடக்க, இவர்கள் இருந்த கோலம் பார்த்தவர், 

‘கூறுகெட்ட பய’ என தலையில் அடித்துக் கொண்டு, ஒருக்களித்திருந்த கதவை இழுத்து, சத்தமில்லாமல் சாத்திவிட்டுப் போனார். 

*****

இரவு படுக்கைக்கு வந்தவள் மேஜை‌ மீதிருந்த கவரைப் பார்த்தாள். ஜவுளிக்கடை பை மாதிரி இருக்க, எடுத்துப் பிரித்துப் பார்க்க, நைட் பேண்ட்டும், பைஜாமாவும் இரண்டு செட் இருந்தது. அதனோடு ஒரு துண்டுச் சீட்டும். 

எடுத்துப் படித்துப் பார்க்க, இப்பொழுது மாதங்கி முகம் குப்பென வியர்த்து விட்டது. 

‘அடப்பாவி… அப்போ நமக்கு முன்னாடியே எழுந்து லைட்டைப் போட்டிருக்கான்! 

‘கடவுளே! கடவுளே!’ என மனம் அரற்ற,‌

இது அவன்‌ சொல்லவேண்டிய டயலாக் என்றது மனசாட்சி.

2 thoughts on “மதன மாளிகையில் 7”

  1. ஹாய் ஈஷ் அக்கா 🙋🏻‍♀️

    இனி கடவுள கூப்புட்டா என்ன கூப்பிடாட்டி என்ன, மாதும்மா it’s too late 🫣

    1. Welcome Moni dear 🥰🍫
      Mathuvum moni ma mathiri too late.. 😉😏🥰

      Thank youuuuuu so much moni ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top