19
மறுநாள் பொழுது அனைவருக்கும் சந்தோஷமாகவே விடிந்தது. அதுவும் ராகவனுக்கு டபுள் தமாக்கா எனும்படி தன் காதல், கனவு எல்லாம் கைகூடி வரும் நாள். சந்தோஷம் என்பதையும் தாண்டி அதுக்கும் மேல. மனசெல்லாம் ஏதோ ஒரு வகையான இனம்புரியா பரபரப்பு. கண்கள் எந்நேரமும் கனவில் மிதந்தன. ஏதாவது ஒரு பாடலை உதடுகள் சீழ்க்கை அடித்துக் கொண்டேயிருந்தது. விடிந்ததிலிருந்து கண்ணாடி முன்தான் நிற்கிறான்.
தாய்மாமனுக்கு பதில் மரியாதைக்கு தண்டபாணி எடுத்துக் கொடுத்த புது பேன்ட், சட்டையே போட்டுக் கொண்டான். பாட்டில் பச்சையில் முழுக்கை சட்டையும், மணல் கலர் பேண்ட்டும் அவன் உயரத்திற்கும், நிறத்திற்கும் எடுப்பாக இருந்தது. சட்டையை முழங்கை வரை மடித்துவிட்டுக் கொண்டே, ‘சும்மாவே வெள்ளப்பனியாரம்னுதான் கூப்பிடுவா. இப்போ பாத்தா கடிச்சே தின்றுவா.’ கண்ணாடியில் பார்த்து தனக்குதானே பேசிக் கொண்டான்.
உள்ளே வந்த இலக்கியா தட்டில் வைக்க, பீரோவிலிருந்து சேலையை எடுக்கும் போது தான் பார்த்தான். அதுவும் இவனுடைய உடை கலரிலேயே அரக்குப் பச்சையில், சேலை முழுவதும் தங்க கலர் ஜரிகை போட்ட மென்பட்டுச் சேலை. இருவருக்கும் உடை கூட ஒரே நிறத்தில் முன்பே பார்த்துதான் எடுத்திருக்கிறார்கள். நமக்கு தான் ஒன்றும் தெரியவில்லை என்று தெரிந்தது.
“அக்கா… நீ கூட என்கிட்ட மறச்சுட்டல்ல” முன்தினம் மறந்ததை இப்பொழுது நினைவுபடுத்தி அக்காவிடம் சண்டைக்குத் தயாராக,
“பொண்ணுக்கு சேலை கூட உன்னைக் கேட்டு தானடா எடுத்தேன். உன்னை மாதிரி மொடா முழுங்கி நானில்ல. நீ தான் அஞ்சு வருஷமா என்கிட்ட சொல்லல. நியாயமா பாத்தா நான் தான்டா உன்கிட்ட சண்டை போடணும்!” இலக்கியா தன் பங்கிற்கு அவனைப் பேச,
“முதல்லயே சொல்லியிருந்தா நல்ல சேலையா பாத்து எடுத்திருக்கலாம்! பார்டர் சின்னதா இருக்கு!” அலுத்தபடி எங்கோ பார்த்து சொல்ல,
“அன்னைக்கி உங்கிட்ட காட்டி கேட்கும் போது கண்ண மூடிட்டா இருந்த. இப்ப என் செலக்ஷனுக்கு என்னடா கொறச்சல்.” இலக்கியா எகிறிக் கொண்டு வர, வாயில் கைவைத்து அமைதியாகிவிட்டான். ஜானகிக்கு பெண் பார்க்கும் பொழுது கட்டுவதற்கு என சொல்லவும் அந்த சேலையை மேலோட்டமாகக்கூட பார்க்கவில்லை.
ஏற்கனவே என்னிடம் ஏன் சொல்லவில்லை என்ற கோபத்தில் இருப்பவளிடம் இப்போதைக்கு நயந்து போவதுதான் உத்தமம் என மனசாட்சி அறிவுறுத்த அடிபணிந்தான். தட்டுவரிசைகளை எடுத்துக் கொண்டு வெளியே போய்விட்டாள்.
கண்ணாடி முன்பே நின்றவனை அழைக்க சீனி உள்ளே வர, “பாஸ், இந்த கூலர் ஓகேவா“ கண்களில் குளிர் கண்ணாடியை மாட்டியவாக்கில் கேட்க,
“டேய், ஒரு சுவருதான்டா குறுக்க. அடுத்த வீட்டுக்கு போறதுக்கு இவ்ளோ அல்டாப்பு ஓவர்டா.” சீனி அழாத குறையாக அலுத்துக் கொள்ள.
“பாஸ்… இந்த சீனுக்கு நான் தான் ஹீரோ. அதை மறந்துட்டு பேசுறீங்க. நீங்க எல்லாரும் சப்போர்டிவ் ஆக்டர்ஸ். நோ டயலாக்ஸ். ஒன்லி ஃபேஸ் ரியாக்ஷன். அதுவும் ஓரமா நின்னுட்டு” என்றவனிடம்,
“நீ நடத்துடா தம்பி!” என்று வாய்விட்டு சிரித்தான்.
“பாஸ்” என்று ஆச்சர்யமாகத் திரும்ப,
“ஒய்.. ஓவர் ரியாக்ஷன்?”
“என்னைய தம்பீஈஈன்னு சொல்லி நெஞ்சத் தொட்டுட்டீங்க பாஸ்!”
“டேய்… இது சென்டிமென்ட் சீன் இல்ல. ஓவர் ஆக்ஷன் பண்ணி சீன கெடுத்துறாத. சீக்கிரம் கெளம்பி வா! அங்க கொளுந்தியா வெய்ட்டிங்” சிரித்தபடியே சீனி வெளியே செல்ல, மீண்டும் ஒரு முறை கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டுதான் வெளியே வந்தான்.
அடுத்த வீடுதான் ஜானகி வீடு. பொது சுவர் தான் மூன்று அண்ணன், தம்பி வீடுகளுக்கும். சொந்த பந்தங்கள் ஜானகி வீட்டில் ஒன்றுகூட, பெண் பார்க்கும் படலம் சிறப்பாக நடந்தேற, “பொண்ண நல்லா பாத்துக்கோங்க மாப்ளே!” யாரோ கேலி பேச,
“ஏன், உங்க மாப்ள பொண்ண முன்ன பின்ன பாத்ததில்லையா?” கூட்டத்தில் யாரோ பதில் கொடுக்க,
“நீயும் மாப்பிள்ளைய நல்லா பாத்துட்டு பிடிச்சிருக்கான்னு சொல்லு ஜானு. ஒன்னும் அவசரமில்ல. பிடிக்கலைனா வேற நல்ல்ல்ல மாப்பிள்ளை பாக்கலாம்.” பழனி, ராகவனைப் பார்த்துக் கொண்டே நக்கலாக கேட்க,
ஜானகி, ராகவனை நிமிர்ந்து பார்த்தாள். என்ன சொல்ல போகிறாளோ என இவனுக்குதான் படபடத்தது. அவன் கொடுத்த ஐடியா தானே மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று சொல்லிவிடு என்று. விளையாட்டாகக் கூட பிடிக்கவில்லை என்று சொல்லிவிடக் கூடாதே என மனம் வெகுவாக எதிர்பார்த்தது.
ஜானகி, கண்களில் குறும்போடு ‘என்ன சொல்ல’ என்பது போல் புருவம் உயர்த்த, தெய்வமே எனும் தோரணையில் கையெடுத்து கும்பிட்டே விட்டான்.
நமட்டுச் சிரிப்போடு, “பிடிச்சுருக்கு” என்றாள். அப்பொழுதுதான் இவனுக்கு உயிரே வந்தது.
“பாஸ்! இப்பவே கண்ணைக் கட்டுது பாஸ்! எப்படித் தான் சமாளிக்க போறேனோ?” பழைய ராகவனாக சீனியிடம் புலம்ப,
“ரொம்ப எல்லாம் யோசிக்க கூடாது ராகவா! லைஃப்னா அப்படித்தான் இருக்கும். அப்படியே ஒரு ஃப்ளோல போகணும்.”
சீனியின் பேச்சிற்கு, “செத்த மீன் தான் ஃப்ளோல போகும்!” போற போக்கில் பழனி கவுன்டர் போட்டு போக,
“பாத்தயில்ல… அய்யம்மா பேத்திங்கறத எப்படி நிரூபிக்கிறான்னு. நீ நாட்டுக்கே ராஜானாலும் பொண்டாட்டிக்கு கூஜா தூக்கினா தான், மஜாவா உன் பொழப்பு ஓடும்.”
“தெய்வம் பாஸ் நீங்க!” சரணாகதி போல் தலைக்கு மேல் கைகுவித்து தலைவணங்க இவனது செய்கையைப் பார்த்து அந்த இடமே கலகலத்தது.
இவர்கள் இருவரும் சேர்ந்து விட்டால் தண்டபாணி கூட சற்று பொறாமையாகத்தான் பார்ப்பான். சீனியிடம் நெருங்கிய அளவிற்கு தண்டபாணியிடம் ராகவனால் நெருங்க முடியவில்லை. அக்கா கணவர் என்ற மரியாதை கூட காரணமாக இருக்கலாம். ராகவனை முன்பே தெரியும் என்றாலும் அவனது கலகலப்பை இன்றுதான் ஏழுமலை பார்த்தார்.
சீனியுடன் இருக்கும் போது மட்டுமே ராகவனது வேறொரு முகம் வெளிப்படும். இரண்டு பேருக்கும் அப்படியொரு கெமிஸ்ட்ரி. அந்தஸ்த்து பேதமெல்லாம் அங்கே குறுக்கிடாது. சில பேருடன் இருக்கும் பொழுது மட்டும் தான் நமது இயல்பை நாமே அறியாமல் வெளிக்கொணரும் சந்தர்ப்பம் வாய்க்கும். சில பேருக்கு அத்தகைய சந்தர்ப்பங்கள் வாய்க்காமலே போவதுண்டு. அவர்ளுக்குள் அவர்களே அறியாமல் ஒழிந்திருக்கும் இன்னொரு முகம் வெளிவராமலே போவதுமுண்டு. சிலநேரம் சூழ்நிலைகள் நம்மை இறுக்கமாக்கி விடும் பொழுது ஒரு சிலருடன் இருக்கும் போது மட்டும் இறுக்கம் தளர்ந்து நம்மை அறியாமல் வெளிப்பட்டு விடுவோம்.
இந்த இயல்பு தன்மை ராகவனோடு இருக்கும் போது ஜானகிக்கும் வெளிப்படும். நம்மை நமக்கே தெரியாமல் வெளிக்கொணரும் நபர் வாழ்க்கைத் துணையாக அமைந்துவிட்டால் அதைவிட சந்தோஷம் ஏது. ராகவனைப் பார்த்தவருக்கு மகள் சந்தோஷமாக இருப்பாள் என்ற நம்பிக்கை வந்தது.
கேலியும் கிண்டலுமாக விசேஷம் நல்லபடியாக முடிந்தது. அடுத்து வந்த முகூர்த்தத்திலேயே திருமணம் பேசி முடித்தனர். அதற்கு இன்னும் இருபது நாட்களே இருக்க, பிள்ளைகளை அங்குமிங்கும் ஏன் அலைக்கழிக்க வேண்டும். ஒரேடியாக திருமணம் முடிந்து சென்னைக்கு போகலாம் என கலையரசி சொல்லிவிட பொண்டாட்டி, பிள்ளைகளை இங்கே விட்டுவிட்டு சீனியும், தண்டபாணி மட்டுமே சென்னை திரும்பினர்.
சுகந்தியும் மகனோடு திண்டுக்கல் வந்துவிட்டார். ஆண் வாரிசு இல்லாததால் வீட்டில் முதல் திருமணத்தை பழனியிலேயே வைக்க ஏழுமலை முடிவு செய்ய, அவனுக்கும் சரியெனப் பட்டது. இவர்கள் வழி சொந்தங்கள் தான் அதிகம். ஆனால் திருமணச் செலவு என்னுடையது என ராகவன் தன்னிலையில் நின்றுவிட்டான். ஒரு வழியாக சரிபாதி என பேசி முடித்தனர்.
இலக்கியா, தன் பெயரில் இருந்த வீட்டை தம்பி பெயருக்கு மாற்றி கொடுத்தாள். ராகவன் மறுத்ததற்கு இது நாத்தனார்க்கு தன்னுடைய சார்பாக பிறந்த வீட்டு சீர் என ஒரேடியாக முடித்துக் கொண்டாள். அவனால் மறுத்து பேச முடியவில்லை. அதன் பிறகு திருமண வேலைகள் தடபுடலாக நடந்தேறியது.
இதோ திருமணமும் முடிந்து, செங்கல்பட்டு சென்றவர்கள், மூன்றாம் நாள் மறுவீட்டு விருந்திற்கு பழனி வந்திருக்கின்றனர்.
இவர்கள் குடும்பத்தைப் பற்றி அறிந்ததுதானே. குடும்பம் பெரிய ஜனக்கட்டு கொண்ட குடும்பம்.
இன்று காலையிலிருந்தே விருந்திற்கான வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. பறப்பன, நடப்பன, நீந்துவன அனைத்தும் குழம்புச் சட்டிக்குள் குதியாட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றன.
இன்று காலை எழுந்தவன், குளித்து முடித்து வந்து கண்ணாடியில் தன் முகம் பார்த்து விசிலடித்தவாறே தலை சீவிக் கொண்டிருந்தான். கதவு திறக்கும் சத்தம் கேட்டுத் திரும்பினான்.
ஈரக்கூந்தலில் முல்லைச்சரம் சூடி, முந்தானையை இழுத்து இடுப்பில் சொறுகிக் கொண்டு, இளஞ்சிவப்பு நிற ஷிஃபான் புடவையில் பனியில் நனைந்த ரோஜாவாக, கையில் காஃபியுடன் புது சோபை மிளிற நின்றவளைப் பார்த்தவன் கைகள் தலை சீவாமல் அப்படியே நின்றது. புதுப்பெண் கண்களிலும் மையல் குடி கொண்டது.
தயக்கம் கடந்து, தடை கலைந்து, முற்றும் துறந்து, தட்டுத்தடுமாறி மோகக்கடலில் மூச்சுமுட்ட முயங்கி முக்குளித்து முத்தெடுத்தது நினைவிலாட விசிலடித்தபடியே இரவின் சொச்ச ஆர்வத்தில் வேகமாக அவள் அருகில் வந்தான். கையிலிருந்த காஃபியை வாங்கி அருகிலிருந்த மேஜை மீது வைத்தவன் அக்கம் பக்கம் பார்க்காமல் கட்டியணைத்து முத்தம் வைக்க, அவள் பின்னாலிருந்து, “மாமாஆ…” என்றொரு மழலைக்குரல். மூன்று வயதேயான அக்கா மகன் புவனேஷ்.
அவனது வீட்டில் அவனுடன் இருந்தது அவனது அம்மா மட்டுமே. மணமக்களோடு சென்ற தண்டபாணி குடும்பமும் மறுநாளே கிளம்பி விட, புதுமணத் தம்பதிகள் என்ற இங்கிதம் உணர்ந்த சுகந்தியும் விடுப்பு எடுக்காமல் வேலைக்கு சென்றுவிட, அவன் காதல் செய்ய சுற்றும்முற்றும் பார்க்க வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது. முப்பொழுதும் சங்கமமே.
அதே போல் இங்கும் அவன் நடந்து கொள்ள, ஜானகிக்குப் பின் அவளது சேலையைப் பிடித்துக் கொண்டே நின்றிருந்த புவனேஷைக் கவனிக்க மறந்தான்.
மாமனின் செயலைக் கண்டவனோ… “ஐய்ய்ய்… மாமா, அத்தையக் கத்திப் புச்சு முத்தா குத்தாங்க…” என்று கத்திக் கொண்டே ஹாலுக்கு ஓட… அங்கே இளசுகள் முதல் பெருசுகள் வரை அமர்ந்து ஆளுக்கொரு வேலையாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். இவனுக்கு தான் முகத்தை எங்கு கொண்டு வைப்பது எனத் தெரியவில்லை.
இவனும் அவன் பின்னாலே ஓட… அதற்குள் அவன், தண்டபாணி மடிக்குத் தாவி ஏறியவன், ” ப்பா… மாமா இப்தி கத்திப் புச்சு அத்தக்கி முத்தாக் குத்தாங்க.” என்று டெமோக் காட்டிக் கொண்டிருந்தான். அதைப் பார்த்த ராகவனோ யாரும் பார்க்கும் முன்னரே நழுவி, படியேறி மொட்டை மாடிக்கு சென்று விட்டான்.
அவனுக்கு எப்படி எல்லோர் முகத்திலும் விழிப்பது என்ற சங்கோஜம். ‘ச்சே… என்ன நினைப்பாங்க? சின்னப் பையனை வச்சுக்கிட்டா இதெல்லாம் பண்ணுவாங்க… என்னதான் புதுசாக் கல்யாணம் ஆனவங்கனாலும், ஒரு நாசுக்கு வேணாமான்னு நினைக்க மாட்டாங்களா?’ என்று தனக்குத் தானே புலம்பிக் கொண்டிருந்தான்.
இன்று சிறு பிள்ளைகளை வைத்து நடைபெறும் டிவி நிகழ்ச்சிகளில் கூட அவர்கள் வரம்பு மீறிப் பேசுவதும், அதைக் குடும்பமாக உட்கார்ந்து ரசிப்பதும் பார்க்கவே காலக் கொடுமைடா சர்வேஷா என்று தான் சொல்ல வேண்டும். எல்லாம் மீடியா படுத்தும் பாடு.
குழந்தைகளுக்கு கண்டது தான் காட்சி. நல்லது கெட்டது தெரியாது. நம்முடைய வாய்ச் சொற்களை விட செயல்கள் தான் அவர்களை வழி நடத்துபவை. அப்படிப்பட்ட சிறு பிள்ளை முன் அவ்வாறு நடந்து கொண்டோமே என்பது தான் அவனுடைய மனக் கலக்கத்திற்குக் காரணம். இவ்வாறு சங்கடப்பட்டுக் கொண்டிருந்தவனைத்தான் மலையிறக்கி, சாப்பிடக் கீழே அழைத்து வந்தாள் ஜானகி.
கூட்டம் அதிகம் என்பதால் கீழேயே எல்லோருக்கும் பந்தி போடப்பட்டது. சாப்பிடக் கீழே இறங்கி வந்தவனைப் பார்த்து,
“என்ன மாமா… காலையிலயேவா?” எனக் கொழுந்தியாள் முறையில் இருந்த ஒருத்தி ஆரம்பிக்க…
‘இந்தா ஆரம்புச்சுட்டாளுகல்ல. இனி இவளுகளுக்கு கவுண்ட்டர் கொடுத்தே ஓய்ஞ்சு போகணுமே’ என்று ஆனந்த சலிப்பு சலித்துக் கொண்டவன்,
“என்ன காலையிலயேவா?” எனக் கேட்க,
“அதான் மாமா! அது!” கண்ணடித்து அவளும் கேட்க,
“எதான் மாமா? எது?” என்றான் அவனும் கண்சிமிட்டி.
“சரித்தான்! மாமா எல்லாத்துக்கும் ரெடியாகித்தான் வந்திருக்காங்க போல…”
“என்ன… மாமா ரெடியாகித்தான் வந்திருக்காங்க போல…” என்றான் அவனும் சளைக்காமல்.
“ஐயோ! மாமா… ஆளை விடுங்க!”
“என்ன… ஆளைவிடுங்க?”
“ஐயோ மாமா…நான் பரிமாறப் போகணும்” என்று ஓடியே போய்விட்டாள்.
“யாருகிட்ட” என்றவாறு சட்டைக் காலரைத் தூக்கிவிட்டவன், சிரித்துக் கொண்டே அனைவருடனும் சாப்பிட அமர, பெண்கள் பரிமாறிக் கொண்டிருந்தனர். புவனேஷ் ஓடி வந்து மாமன் மடியில் அமர்ந்தான்.
“டேய்! எப்பவும் எம்மடியில தானே உக்காருவே. இன்னைக்கு மாமாவைப் பாத்ததும் அங்கே போய்ட்ட. அத்தை வேண்டாமா?” என்று ஜானகி அண்ணன் மகனிடம் பொய்க் கோபம் காட்ட,
“ம்ம்… மாமாத்தா…என்ன மாதியே உன்க்கு கத்திப் புச்சு முத்தா குத்தாங்க. நீ ஹேப்பி ஆய்ட்ட. அதா மாமாக்கு சாக்கி கொண்டாந்த. முத்தா குத்தா சாக்கி குக்கணும்ல.” என்றவாறு தன் உள்ளங்கையில் வைத்திருந்த பிசுபிசுத்த சாக்லேட்டை அவனிடம் நீட்டினான்.
அத்தையிடம் முத்தம் கொடுத்து ஏமாற்றி சாக்லேட் வாங்கும் பழக்கம் அவனுக்கு. இப்போ மாமாதானே அத்தைக்கு முத்தம் கொடுத்தாங்க. அப்போ அவங்களுக்கு சாக்லேட் கொடுக்கணும் தானே? சிறுபிள்ளை நியாயமாக யோசித்தது.
மழலையின் மொழி கேட்ட ராகவனுக்கோ என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிந்தது. குழந்தைகளைப் பொருத்தவரை முத்தம் என்பது அன்பின் வெளிப்பாடு மட்டுமே என்பதைக் கண்டு கொண்டான். அர்த்தம் வேறில்லை. அவ்வளவே!
*****
“அம்மா… கொஞ்சம் இங்க வாங்களேன்!” கலையரசியை அழைத்த பழனி குரலில் அத்தனை பதற்றம்.
“ஏன் பழனி… வேலையா இருக்கேன். உங்க அண்ணிய வரச்சொல்லவா?” சமையல்கட்டிலிருந்த சன்னல் வழியாகவே பின்வாசலில் இருந்த மகளுக்கு குரல் கொடுத்தார்.
“நீங்க வாங்கம்மா!” என்று அதட்டி அழைக்க, “என்னாத்துக்கு கூப்பிடறாளோ? இன்னும் ஊர்ப்பட்ட வேலையிருக்கு. இலக்கியா இதப் பாததுக்கோ!” புலம்பியபடியே கை வேலையை இலக்கியாவிற்கு மாற்றிவிட்டு பின்வாசல் வந்தார்.
காலை விருந்து முடிந்திருந்தது. வெங்காயம் உரிக்க, தேங்காய் துருவ என மதிய விருந்திற்கான ஆயத்த பணிகளில் இருந்தனர் வீட்டுப் பெண்கள்.
பழனி, உடைகளைத் துவைக்க பின் வாசல் வந்திருந்தாள். எல்லாம் கல்யாணத்திற்கு உடுத்திய புதுத்துணிகள். இரண்டு நாட்களாக அங்குமிங்கும் அலைந்ததில் துவைக்க முடியவில்லை. மெஷினில் போட வேண்டியதைப் போட்டுவிட்டு, கையில் துவைக்க வேண்டிய துணிகளை ஊறவைத்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு துணியாக உதறி சோப்பு தண்ணீரில் ஊறவைத்தவள் ஒரு உடையை மட்டும் ஊற வைக்கும் முன் சந்தேகமாகப் பார்த்தாள். அது காலையில் அமிர்தா குளிக்கும் முன் கலைந்தது.
மகள் ஏதோ கறையாக்கி வைத்திருப்பதாக நினைத்துக் கொண்டு தனியாக அந்த இடத்தில் சோப்பு போட்டு தேய்க்க, சட்டென தாய்மை விழித்துக் கொண்டது. உடனே ஊறவைத்த அவளது உள்ளாடையையும் எடுத்து சோதித்தாள். அடிவயிற்றில் கப்பென இறுக்கிப் பிடித்தது. பயமா, அதிர்ச்சியா, சந்தேஷமா பிரித்தரியமுடியாமல் எல்லாம் கலந்துகட்டிய உணர்வு. படபடத்து வந்தது. மகளுக்கு பதினொரு வயதுதானே ஆகிறது.
“என்ன பழனி” கேட்டுக் கொண்டே வந்த அம்மாவிடம் தன் சந்தேகத்தை சொல்ல, சட்டென கலையரசி முகம் பூரித்தது.
“அவ அத்தையவிட்டு பாக்க சொல்லு!” என்றார் ஆர்வமாக.
அமிர்தாவை அழைக்க பிள்ளைகளோடு விளையாடிக் கொண்டிருந்தவள் ஓடி வந்தாள். இவளுக்கு தான் மகளைப் பார்க்க கண்கள் பொங்கிக் கொண்டு வந்தது. இன்னும் சிறுபிள்ளை. தனக்குள் நடந்த மாற்றத்தைக் கூட உணரமுடியா இளங்குறுத்து.
இந்தக் காலத்து உணவும், பழக்கவழக்கங்களும் இயற்கையை மாற்றித்தான் வைத்திருக்கிறது. தோற்றம் அவள் அப்பாவைப் போல் வளத்திதான் என்றாலும் பதினொரு வயதுதானே என்ற ஆற்றாமை பெற்றவளுக்கு.
இலக்கியா, அமிர்தாவை அழைத்து பக்குவமாக அவளைப் பயமுறுத்திவிடாமல் விஷயத்தை சொல்லி கேட்க… அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் எல்லாருக்கும் விஷயம் பரவி விட்டது.
அப்பொழுதுதான் சாப்பிட்டு முடித்து அனைவரும் சாவகாசமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். உடனே வீடு பரபரப்பாகி விட்டது.
மூத்த தலைமுறையினர் யாரும் இவர்களை எதுவும் கலந்தாலோசிக்கவெல்லாம் இல்லை. இவர்கள் பரபரப்பை பார்த்து அமிர்தா தான் மிரண்டு விட்டாள். பள்ளியில் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் தான். அதை நடைமுறையில் பார்க்கும் பொழுது பயந்துவிட்டாள்.
அமிர்தா கண்கள் வேகமாகத் தேடியது அவளது சீனிப்பாவைத்தான்.
“அம்மு சின்ன பொண்ணு. இதெல்லாம் பண்ண வேண்டாம்னு சொல்லு பழனி!” பெரியவர்கள் தண்ணி ஊற்ற, குச்சு கட்ட, வீட்டுக்கு அழைக்க என இப்பொழுதே நாள் பார்க்க ஆரம்பிக்க,
“அது நம்ம சென்னையில இருந்திருந்தா பண்ணியிருக்கலாம். இங்க பெரியவங்க சொல்றதுதான். மொதல்ல மாமாவுக்கு விஷயத்தை சொல்லுங்க. அங்க கூட்டி வர்றதான்னு கேளுங்க. மாமன் மச்சான் வீட்ல பேத்திக்கு விசேஷம் வைக்க ஒத்துக்குவாரா?”
“என்னடீ இவ்வளவு யோசிக்கிற?” சீனி இந்தளவிற்கு யோசிக்கவில்லை.
“பின்ன… நம்ம பிள்ளை விசேஷம். நம்ம வீட்லதானே வைக்கணும்.” இன்னும் காந்திமதி பட்டும்படாமல் இருக்கும் பொழுது இவனுக்கும் அங்கே வைக்க விருப்பமில்லை.
“இங்கேயே மண்டபம் புடிச்சு சிம்பிளா வச்சுக்கலாம்” என்று சொல்லிவிட இது போதாதா கலையரசிக்கு. பேத்தியை கொண்டாடி தீர்த்துவிட்டார். சாங்கியத்திற்கு தான் உலக்கையை குறுக்கே போட்டு தள்ளி வைத்தது. அதன் பிறகு மூன்றாம் நாள் குச்சு கட்டி, ஒன்பதாம் நாள் தலைக்கு தண்ணீர் ஊற்றி வீட்டிற்கு அழைப்பதென முடிவாகியது. அன்று மாலையே மண்டபத்தில் விசேஷமென பேசி முடித்தனர்.
தண்டபாணி பிள்ளைகள் காது குத்திற்கு வந்தவர்கள், ராகவன் திருமணத்தை முன்னிட்டு இங்கேயே தங்கிவிட, மீண்டும் அமிர்தா விசேஷத்தை முன்னிட்டு இன்னும் ஒரு வாரம் பழனியிலேயே எல்லா குடும்பமும் தங்க வேண்டிய நிலமை. இதில் பாதிக்கப்பட்டது புது மாப்பிள்ளை ராகவன் தான். திருமணத்திற்கென எடுத்த ஒரு வார விடுப்பும் தனிமை கிடைக்காமல் வீணானது.
மறுவீட்டு விருந்து முடிந்து ஐந்தாம் நாள் திண்டுக்கல்லில் இவர்களை குடியமர்த்தி வருவதாக இருந்தது. இப்பொழுது அமிர்தா விசேஷத்தை முன்னிட்டு அது ஒத்தி போடப்பட்டது.
“யாரோ சொன்னாங்க. எனக்கு தான் பக்காவா ரொமான்ஸ் சீன் வைப்பாங்கனு?” சீனி அவன் தவிப்பைப் பார்த்து கேலி செய்ய,
“சில பேரோட கொள்ளிக் கண்ணுக்கு பவர் சாஸ்தி பாஸ். அப்பவே வாய் வச்சாங்க. வாய் முகூர்த்தம் பளிச்சிருச்சு!” ராகவனும் விடாமல் பதில் கொடுத்தான்.
முதலில் பயந்த அமிர்தா பழனி மகளிடம் தன்மையாக பேசிய பிறகு அவளைச் சுற்றிதான் விசேஷமே என்பது புரிய அந்த சூழ்நிலையை அனுபவிக்க ஆரம்பித்துவிட்டாள். இங்கு அவளுடன் விளையாட நண்டு சிண்டுகள் அதிகம்.
சென்னை சென்றுவிட்டால் வீடு விட்டால் பள்ளி. பள்ளி விட்டால் வீடு என போரடிக்கும். தினமும் அவளுக்கு அக்கம் பக்கமிருக்கும் மாமன் வீடு, அத்தை வீடுகளிலிருந்து கறி விருந்து ஆக்கிப் போட்டுக் கொண்டே இருந்தார்கள். மூத்த தலைமுறை தான் அதைத் தொடாதே.. அங்கே போகாதே என சொல்லிக் கொண்டே இருந்தது.
கலையரசியும் காலையிலேயே வெந்தயக்களி, உளுந்தங்களி என்று தினமும் கிண்டி கொடுத்து விடுவார்.
இதெல்லாம் சென்னையில் இருந்திருந்தால் நடக்க வாய்ப்பில்லை. இங்கு சொந்த பந்தங்கள் ஆளுக்கொரு யோசனையாக அதைக் கொடு, இதைக் கொடு என்று எதையாவது செய்து எடுத்து வந்தோ அல்லது வாங்கி வந்தோ கொடுத்துக் கொண்டே இருந்தனர். மகளை சாக்கிட்டு பழனியே ஒரு சுத்து பெருத்துவிட்டது போலிருந்தது சீனிக்கு.
“அடியேய்… நீதான்டி வயசுப் புள்ளையாட்டம் ஒரு மார்க்கமா இருக்க!” சீண்டி சிவக்க வைத்து வாங்கிக் கட்டிக் கொள்வான்.
தாய்மாமன் சீர் ஊர் சுற்றிவர, விமர்சையாகவே நடந்தேறியது அமிர்தா மஞ்சள் நீராட்டுவிழா. சின்ன பெண் என்பதால் சேலை கட்டாமல் பட்டு பாவாடை சட்டையே எடுத்திருந்தான் மாமன்காரன். எனினும் மகள் பேயரைச் சொல்லி உயர்தர பட்டு சேலை வாங்காமல் விடவில்லை பழனியும்.
பொதிகாச்சலமும் ஒரே பேத்திக்கு சென்னையிலிருந்தே நகை, துணிமணி என எடுத்துவந்து ஜமாய்த்துவிட்டார். இத்தனை வருடங்களில் பேத்தி விசேஷத்திற்கு வந்த காந்திமதியும் முகம் சுழிக்காமல் பட்டும் படாமல் கலந்து கொண்டார்.
நல்லபடியாக விசேஷம் முடிந்து குடும்ப புகைப்படம் எடுக்க அனைவரும் மேடையேறினர். வேலாயுதம் நடமாட்டம் கூட இல்லாமல் மிகவும் தளர்ந்துவிட்டார். தண்டபாணி தான் தூக்கி வந்து அமரவைத்தான். அய்யம்மா, வேலாயுதம் நடுநாயகமாக வீற்றிருக்க, பெரியவர்கள் அனைவரும் பின்னால் நிற்க, பேரன் பேத்திகளை முன்னால் வரிசையாக உட்காரவைத்த ஃபோட்டோ கிராஃபர்தான் இத்தனை கூட்டத்தையும் ஒரு சட்டத்திற்குள் அடைக்க வெகுபாடு பட்டு போனார். அதே மாதிரி அப்பா வழியில் பொதிகாச்சலம், காந்திமதியோடும், அம்மா வழியில் கலையரசி, தணிகைவேலோடும் அவர்களை நடுநாயகமாக உட்கார வைத்து எடுத்துக் கொண்டனர்.
அங்கேயே பெரிய பூசணிக்காய் வாங்கி சுற்றி உடைத்துவிட்டுதான் பேத்தியை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
பொதிகாச்சலம் மண்டபத்திலிருந்தபடியே காந்திமதியை அழைத்துக் கொண்டு சென்னை கிளம்பிவிட்டார். சென்னக்கு வந்தபிறகு பேத்தியைப் பார்த்துக் கொள்கிறோம் என்று. இப்பொழுது ரஞ்சனி இருப்பது ஆஸ்திரேலியா. மிகவும் பக்குவப்பட்டுவிட்டாள். அங்கேயே இந்தியர் வாழ் பகுதியில் இந்திய பொருட்கள் விற்பனை அங்காடியை மகளுக்காக அமைத்துக் கொடுத்துவிட்டார். சீனிதான் நேரில் சென்று தங்கைக்காக எல்லா ஏற்பாடும் செய்து கொடுத்து வந்தான். அங்கேயே ஆஸ்திரேலியா குடியுரிமம் பெற்ற தமிழரை திருமணமும் செய்து கொண்டதாக தகவல் அனுப்பி வைத்தாள். காந்திமதியும், பொதிகாச்சலமும் ஒரு முறை நேரில் சென்று பார்த்து வந்தனர். மகள் வாழ்க்கை குறை சொல்லும்படி இல்லை என்ற சந்தோஷம்.
மறுநாள் அவரவர் குடும்பத்தோடு அவரவர் இருப்பிடம் நோக்கி வளசை வந்த பறவைகள் போல் கிளம்பி விட்டனர். தண்டபாணி பிள்ளைகள் காதுகுத்திலிருந்து, அடுத்து ராகவன், ஜானகி திருமணம், அமிர்தா விசேஷமென கிட்டத்தட்ட ஒரு மாதமாக தன் பிள்ளைகளாலும், பிள்ளைகள் பெற்ற பிள்ளைகளாலும் நிறைந்திருந்த வீடு இப்பொழுது வெறுச்சோடி விட்டது கலையரசிக்கு. எல்லாரையும் வழியனுப்பி விட்டு வீட்டிற்குள் செல்லவே மனமில்லாமல் வாசலிலேயே உட்கார்ந்து விட்டார்.
“இன்னும் ஒரு மாசம் தான் கலை. அடுத்து ஸ்கூல் சம்மர் லீவு விட்டுறுவாங்க. எல்லாம் வந்து சேந்துருவாங்க. இப்பயாவது என்னை கவனி!” தணிகைவேல் உள்ளிருந்து குரல் கொடுக்க, ஏதோ முணங்கிக் கொண்டே எழுந்து உள்ளே சென்றார். அடுத்து பேரன் பேத்திகள் வீட்டிற்கு வரும் கோடை விடுமுறையை அவர்களை விட ஆவலாக எதிர்பார்த்து. என்ன முணங்கியிருப்பார் என்று தணிகைவேலுக்கு நன்றாகத் தெரியும். சின்ன பிள்ளைகளுக்கு எல்லாம் சின்ன பிள்ளை நீங்க என்று சடைத்திருப்பார்.
கூடிக் களிக்க சொந்த பந்தம் தேவைப் படாவிட்டாலும் உரிமையோடு சண்டை போடுவதற்காகவாவது நாலு சொந்தபந்தம் வேணும்ங்க. ஏன் என் பெயரை பத்திரிகையில் முன்னால் போடவில்லை என கேட்பது வேண்டுமானால் அர்த்தமற்றதாகத் தெரியலாம். ஆனால், அதில் நான் உனக்கு முக்கியமானவன் இல்லையா எனக் கேட்கும் உரிமை மறைமுகமாக தொக்கி நிற்கிறது.
பழனிக்கு சேலை இல்லாமல் இல்லை. எவ்வளவு விலை உயர்ந்த புடவை வேண்டுமானாலும் கட்டியவன் வாங்கி கொடுப்பான். இருந்தும் மகளை சாக்கிட்டு அண்ணனிடம் புடவை கேட்பது நீ எனக்கு செய்யமாட்டாயா எனும் அண்ணனிடம் தனக்கிருக்கும் உரிமையை நிலைநாட்டுவது.
தாய்மாமன் சீர் என்பது அவன் மட்டுமல்ல. உனக்கு இத்தனை சொந்த பந்தங்கள் இருக்கிறோம். எதற்கும் கலங்காதே என சிறுபிள்ளைக்கு உணர்த்துவது.
என்னங்க பெரிய சொந்த பந்தம். ஒன்னு கூடினாலே சண்டையும் சச்சரவும் தானேன்னு கேக்குறவங்களுக்கு ஒன்னு சொல்றேங்க. உரிமை இருக்கறவங்க மட்டும் தான் சண்டை போடுவாங்கங்க. மறுபடியும் சொல்றேன் சண்டை போடவாவது நாலு சொந்த பந்தம் வேணும்ங்க.
இதுவரை சீனி, தண்டபாணி, ராகவன் குடும்பத்தோடு பயணித்த அனைவருக்கும் மாமன் மச்சான் சார்பில் நன்றி மக்களே!
வாழ்க! வளமுடன்!
தங்கள் மேலான கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்த்து என்றென்றும் அன்புடன் 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻
SM ஈஸ்வரி 🥰🥰🥰🥰🥰

Nirmala vandhachu 😍😍😍
Welcome dear 🥰🍫
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Nalla irrukku ma 💐💐💐
Thank youuuuuu so much nimmi ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫
Excellent writing…epdi than ipdi ezhudhreengalo theriyala..ena soli paratanu theriyala…rombave niraiva Iruku…serious ah neenga psychology la piniringa….ella zoneum ungaluku romba iyalba easy ah iruku…
Ellaam ungala maathiri anbu vasakarkaloda support thaan manju ma.
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Nam veetu visheshangaley neril parthu nadappathu pol irunthathu, arumaiyum saralamumana yezuthu nadai, beautiful Writerji , kathai kalam megavum arumai, waiting for you another new story, come soon ma
எல்லாம் நடைமுறையில் நாம பாக்குறதுதானேம்மா…
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
கதை மிகவும் அருமை எஸ் எம் ஈஸ்வரி அவர்களுக்கு வாழ்த்துகள்🎉🎊
❤️❤️❤️❤️❤️
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
excellent excellent ka.
❤️❤️❤️❤️❤️
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
அழகான கதை ❤️
நிறைவான முடிவு❤️
❤️❤️❤️❤️❤️
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
அருமையான கதை 💕💕💕💕💕💕💕
மாமன் மச்சான்ஸ் அலப்பறை பாண்டிங் செம 🥰🥰🥰🥰💖💖💖💖 நிறைவான எண்டிங்… 😍😍😍
❤️❤️❤️❤️❤️
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
🥰🥰🥰🥰 ரொம்ப நல்லா இருந்தது…. 🍎🍎🍒🍒🍒❤️❤️❤️😘😘😘
❤️❤️❤️❤️❤️
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Super roo super.sema story.
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫