மல்லி 31

“அரசி!”

“ம்ம்ம்…” என்றாள் வேந்தனின் இடுப்பைக் கட்டிக்கொண்டு.

“வெளியே எல்லாரும் வெயிட் பண்றாங்கடி.”

“எனக்கு பயமாருக்கு மாமா” என அண்ணார்ந்து பார்த்தவளை, 

“பயப்படறவ பண்ற காரியமாடி இது” கண்சிமிட்டி சீண்டலாய் கேட்க,

“நானா பண்ணேன்?” குரலில் அனலடித்தது. சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டான்.

“இல்லடி ஆத்தா! எல்லாம் நான்தான் பண்ணினேன். இப்ப நீ பண்ணவேண்டியத மட்டும் பண்ணிட்டு வா. இது நான் பண்ணமுடியாது.” 

“எனக்கு நம்பிக்கையில்ல மாமா. லாஸ்ட் டேட் எப்பனுகூட எனக்கு ஞாபகமில்ல. இர்ரெகுலர் பீரியட்ஸ் வேற. வாமிட் பண்றது என்ன எனக்கு புதுசா. அவங்கதான் புரிஞ்சுக்காம பேசறாங்கனா” மூக்கின் நுனி சிவந்து, கண்கள் கலங்கி, வாந்தி எடுத்ததால் கசங்கிய முகமாக இருந்தவளைப் பார்க்க அவனுக்கும் ஒரு மாதிரியாகிவிட்டது. 

“இப்ப என்ன டெஸ்ட்தானே? எதுவாயிருந்தாலும் ஓகேதான். நல்லதே நெனச்சு போ. நல்லதே நடக்கும்.” தன்மையாகப் பேசி குளியலறைக்குள் அனுப்பி வைத்தான். அவனுக்குமே ஆசைதான். எதிர்பார்த்து ஏமாந்துவிடக்கூடாதே என ஆசையை ஒத்திவைத்தான். 

திவ்யாவிற்கு வளைகாப்பு போட்டு அழைத்து வந்து ஒரு வாரமாயிற்று. பிரசவம் வரை தாங்களும் இங்கிருப்பதாக மங்கையும், வேந்தனும் இங்கே வந்துவிட்டனர். ஒரு வாரமாக கலகலப்பாக பொழுது போயிற்று. மதியழகனும் இன்று‌ மனைவியைப் பார்க்க வந்துவிட்டான். 

இரண்டு நாட்களாக மங்கையிடம் ஏதோ ஒரு சோர்வு. இன்று காலை எழுத்திலிருந்து எதை சாப்பிட்டாலும் வாந்தி வேறு. 

திவ்யாதான் தனக்கு எழுந்த சந்தேகத்தில் எப்பொழுது தேதியென மங்கையிடம் கேட்க அவளுக்கு சரியாக நினைவில்லை. 

ஏதொன்றுக்கும் செக் பண்ணி பார்த்து விடுவோமென, கிட் வாங்கிவரச் சொன்னாள். 

மங்கைக்கு நம்பிக்கை இல்லை. எல்லார் முகத்திலும் தெரிந்த ஆர்வத்தைப் பார்த்து உள்ளுக்குள் மனம் பிசைந்தது. கடவுள் மீது பாரத்தைப் போட்டு, குளியலறை சென்றாள். உள்ளே சென்று இருபது நிமிடங்களுக்கு மேலிருக்கும். 

‘இவ்ளோ நேரமா?’ சந்தேகத்தில் உள்ளுக்குள் பயம் வர, வேகமாக கதைவைத் தட்டினான். 

கதவைத் திறந்து வெளியே வந்தவள் வேந்தனைக் கட்டிக்கொண்டு அப்படியொரு அழுகை.  

இப்பொழுதெல்லாம் சந்தோஷமென்றாலும், துக்கமென்றாலும் சட்டென‌ உணர்ச்சிவசப்பட்டு உடைந்து விடுகிறாள். அவள் தனக்குள் இறுகாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதே அவளிடம் நல்ல மாற்றம் என வேந்தன் எண்ணிக்கொண்டான். 

“பரவாயில்லம்மா, இப்ப என்ன நமக்கு வயசா போச்சு. கல்யாணமாகி இன்னும் ஒரு வருஷம் கூட ஆகல. இப்பதான் வாழவே ஆரம்பிச்சுருக்கோம். அதுக்குள்ள என்ன? இனிமே தீயா வேல செய்வோம்டி.” முதுகை தடவிக் கொடுத்து ஆறுதல் சொல்ல, கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து பார்த்தவள் சட்டென மலர்ந்து சிரித்தாள். 

“மக்கு மாமா… இந்தாங்க!” என கிட்டை கையில் வைக்க, அதைப் பார்த்தவன் கண்களில் ஆச்சர்யமும் சந்தோஷமும்.

“எப்புர்றி!” என அவளை ஆச்சர்யமாகப் பார்க்க, 

“ம்ம்ம்” என முறைத்துப் பார்த்தாள். 

“இல்ல,அதுக்குள்ள எப்படின்னு.” கெத்தை விடாமல் முகம்மலரக் கேட்டவன், 

“இதுக்குமா அழுவாங்க. இவ்ளோ நேரம் உள்ள என்னடி‌ பண்ணே. பயந்துட்டேன்.” குரலில் சற்று கடுமையேற,

“எனக்கும் பாத்ததும் நம்ப முடியல மாமா. அதான் கொஞ்ச நேரம் நல்லா உத்துப் பாத்துட்டுருந்தேன். அழுகையா வந்துச்சு.” மீண்டும் டேமைத் திறக்க, 

“போதும்டி, வா வெளியே போலாம்” என வெளியே அழைத்து வந்தான்.

அவள் அழுத முகமும், வேந்தனின் மலர்ந்த முகத்தையும் வைத்து யாருக்கும் எதுவும் கணிக்க முடியவில்லை. 

திவ்யாவிடம் வந்து கையில் கொடுக்க, வாங்கிப் பார்த்தவள்,

“மாமா! உங்க குட்டிம்மாவுக்கு ஒரு குட்டிமா வரப்போகுது.” குரலில் தெறித்த குதூகலம் எல்லார் முகத்திலும் பிரதிபலித்தது. 

“வாழ்த்துக்கள் மச்சான்!” என மதியழகனும்,

“வாழ்த்துக்கள் அண்ணா, வாழ்த்துக்கள் மதினி!” என செழியனும் கைகொடுத்து வாழ்த்தினர். 

அப்பாவின் முகத்தை ஆசையாகப் பார்த்தாள்‌மகள். 

சந்தோஷத்தில் துள்ளிக்குதிப்பார் என எதிர்பார்க்க, குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்துவிட்டார்.

“போச்சுடா! அப்பாவும், மகளும் இருக்கறவரைக்கும் நம்ம வீட்டுக்கு தண்ணி பஞ்சமே வராதும்மா.” 

மருமகனின் கிண்டலில், மேல் துண்டால் கண்களைத் துடைத்துக் கொண்டார். 

“இல்லடா மாப்ள! நாம செத்த அன்னைக்குதான்டா நாம பொழச்ச பொழப்போட லட்சணம் தெரியும். கடைசி நேரத்துல நம்ம தலமாட்டுல நிக்க நாலு சொந்த பந்தமாவது வேணும்டா. ஒண்டிக்கட்டையான நமக்கெல்லாம் யாரு வரப்போறானு அப்பப்ப நெனச்சுக்குவேன். ஆனா, இப்ப எனக்கும் நெய்ப்பந்தம் பிடிக்க பேரன் பேத்தி வரப்போகுது.” என்றவருக்கு கண்ணீர் மட்டும் நிற்கவில்லை.

“அப்ப, எங்க மேல எல்லாம் நம்பிக்கை இல்ல. அப்படித்தானே?” செழியன் உரிமையாக கோபித்துக் கொள்ள, 

“அப்படியில்லடா மாப்ள! காலம்போற போக்குல பெத்தவங்களப் பாக்கறதே இன்னைக்கெல்லாம் பெரிய காரியமாப்போச்சுடா. நாளைக்கு அவங்கவங்க குடும்பங்குட்டினு ஆனப்பின்னாடி ஒருத்தரையும் குத்தம் சொல்ல முடியாதுடா.” நடைமுறை எதார்த்தம் பேச,

“இப்ப எதுக்கு அதைப்பத்தி பேசிக்கிட்டு. வேந்தா, ஹாஸ்பிடல் கூட்டிப் போயிட்டு வந்துரு!” அம்மையப்பன் சூழ்நிலையை இயல்பாக்க, சாப்பிட்டுவிட்டு போகலாம் என்றார் தாமரை. 

கேலியும் கிண்டலுமாக போனது காலை உணவுவேளை. சாப்பிட்டு அறைக்குள் வந்தவள் கண்ணாடி முன் நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். பின்னால் வந்தவன் இடையோடு சேர்த்து கட்டிக்கொண்டான். பின் கழுத்தில் சூடாக மூச்சுக்காற்று உரச, பின்னால் சாய்ந்து கொண்டாள்.‌ 

“மொசக்குட்டிக்கு என்ன பண்ணுது?” தோளில் முகம் பதித்து கேட்க, 

“நிஜமா என் வயித்துக்குள்ள பாப்பா இருக்கா‌ மாமா!” ஆச்சர்யம் அவள் விழிகளில். 

“இன்னும் என்னடி உனக்கு சந்தேகம்” என்றவன் கைகள் அவளது வயிற்றை மென்மையாக வருடிக் கொடுத்தது. 

“தெரியல…. என்னால எந்த ஒரு சந்தோஷத்தையும் முழுசா அனுபவிக்க முடியல மாமா. மறுபடியும் அந்த டாக்டரப் பாப்போமா?” 

எதிர்பார்ப்புகளை மனசுக்குள் தேக்கி தேக்கி நிராசையாகிப் போனதன் விளைவு, உண்மையான சந்தோஷத்தையும் ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது. இதுவும் கனவாகிப்போகுமோ என்றொரு‌ பயம் அடிமனதில் ஆழத்தில் முனுக்கென துளிர்க்கிறது.  

“நம்புடி! நம்மதான் நமக்கு டாக்டர். நம்ம பலமும் பலவீனமும் நமக்கு தான் தெரியனும். நடந்ததையே நெனச்சு பழசெல்லாம் மனசுல போட்டு உழட்டக்கூடாது. இப்ப இருக்கிறது நிஜம்னு நம்பு. என்னனாலும் எங்கிட்ட தயங்காம மனசு விட்டு பேசும்மா. அதுவுமில்லாம இந்த நேரத்துல இப்படித்தான் இருக்குமாம்” என்றவன் கண்ணாடி வழியாக கண்களில் மென்மை பூக்க பார்த்தான்.‌ அவன் கழுத்தோடு கைசேர்த்து வளைத்துக் கொண்டவள்,

“அன்னைக்கி அம்மாச்சி வீட்டுக்கு நீங்க வந்தது, இங்க என்னை கூட்டிவந்தது, நமக்கு கல்யாணம் நடந்தது, நம்ம வாழ்க்கை தொடங்கினது, இப்ப இந்த பாப்பா வரைக்குமே கனவு மாதிரியே இருக்கு மாமா. ஏன்னா, இதெல்லாம் நம்ம வாழ்க்கையில நிஜத்துல நடக்க வாய்ப்பேயில்லைனு ஏற்கனவே உங்ககூட கனவுல வாழ்ந்து பாத்துட்டேன். தூங்கும் போதுகூட அடிக்கடி முழுச்சு நீங்க பக்கத்துல இருக்கீங்களானு பாத்துப்பேன். இதெல்லாம் கனவா நிஜமானு. இப்ப நிஜத்துல நடக்குது. மனசு நம்ப மாட்டேங்குது” என்றவளை வேகமாகத் திருப்பி ஆவேசமாக இறுக்கிக் கட்டிக் கொண்டான். அவள் காதல் விஸ்வரூபம் காட்ட அதன் முன் இவன்‌ சிறுத்துவிட்டாதத் தோன்ற, 

“மொசக்குட்டி! நம்புடி!” என்றவன் குரல் கரகரத்தது. 

“உன் இளா மாமா நிஜத்துல உன் கூடத்தான் இருக்கேன். இப்படி ஒரு தேவதை நமக்காக காத்துட்டிருக்கானு தெரியாம நான்தான் உன்ன கண்டுக்காம முட்டாளா இருந்திருக்கேன். சின்ன வயசுல உப்பு மூட்டை தூக்கி சுத்தினதைத்தவிர, அப்படி நான் உனக்கு என்ன பண்ணினேனு எனக்கே  தெரியல. சாரிடி” மென்மையாக நெற்றியில் இதழ் ஒற்றியெடுத்தான். அவன் கண்களும் கலங்கி சிவந்திருக்க, 

“என்ன மட்டும் கிண்டல் பண்ணீங்க. இப்ப இதுக்கு பேரு என்னவாம். உங்களுக்குமா மூட் ஸ்விங் ஆகுது?” புருவம் உயர்த்தி கேட்க, 

“அதுவா கண்ணு வேர்த்துருச்சு. உங்கூட இருந்தா நமக்கும் மூளை வேலை செய்ய மாட்டேங்குது. சீக்கிரம் கிளம்பு. ஹாஸ்ப்பிட்டல் போய், என் குட்டிம்மாவுக்கு எத்தனை நாளாகுதுனு பாக்கணும்.” அடிவயிற்றை தொட்டுக் காண்பித்து அவசரப்படுத்த, நாணமும் கொஞ்சம் எட்டிப்பார்த்தது. சிரித்த முகமாக கிளம்பி வெளிவந்தனர். 

சாமியறையில் விளக்கேற்றி திருநீறு எடுத்து பூசிவிட்ட தாமரை, “செக்கப் முடிச்சுட்டு மாமா வீட்டுக்கே கூட்டிப் போயிறு வேந்தா” என‌,

“ஏம்மா?” என்றான். 

“எதிரெதிர் சூல் ஆகாதுடா. திவ்யா குழந்தை பிறக்கவும் இங்க வந்திருங்க. இன்னும் ரெண்டு வாரம்தான. அப்பறம்… இப்போதைக்கு யாருக்கும் இதச்சொல்ல வேண்டாம். நமக்குள்ள இருக்கட்டும். கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என தாமரை சொல்ல, அவர் சொல்வதும் சரியெனப்பட்டது எல்லோருக்கும். 

“அக்கா சொல்றதும் சரிதான். குழந்தை பிறக்கவும் வந்து பாத்துக்கலாம். நீ மட்டும் வந்து போடா.” 

கணபதியும் உடன் கிளம்ப, மூவரும் மருத்துவமனை வந்தனர். வேந்தனை கார் ஓட்டவிடவில்லை. அவனை பின்னால் மகளோடு உட்காரச் சொல்லிவிட்டார்.

“மாமா! சைக்கிள்காரனெல்லாம் சைடு வாங்குறான் மாமா.” 

“போகட்டும்டா! பொறுமையாத்தான் போகணும். குட்டிம்மா இருக்குல்ல.”

“இப்ப எந்த குட்டிம்மாவச் சொல்றீங்க?”

“எனக்கு எப்பவும் என் குட்டிம்மாதான்டா. நான் சொன்னது உன்னோட குட்டிம்மாவ.”

மருத்துவமனை வரவும், “இதுக்கு நான் நடந்தே வந்திருப்பேன்.” காரை விட்டு இறங்கியவன் அலுத்துக் கொள்ள,

“அது உன்னிஷ்டம்டா மாப்ள.” அலட்டிக்காமல் சொல்ல மங்கை சிரித்துவிட்டாள். 

கர்ப்பத்தை உறுதி செய்துவிட்டு, வீட்டிற்கும் அழைத்து சொல்லிவிட்டு பெரியகுளம் வந்துசேர்ந்தனர். எவ்வளவு நாட்கள் எனத்தெரிய அடுத்த முறை ஸ்கேன் செய்து கொள்ளலாம் என சொல்லிவிட்டார். தேர் போல காரை அலுங்காமல் உருட்டிக்கொண்டுவந்து வீடு சேர்த்தார். 

“இன்னும் என்னென்ன கொடுமையெல்லாம் அனுபவிக்கனுமோ தெரியல?” 

அவன் வாய் முகூர்த்தம் பலித்தது. மசக்கையில் மகள் படுத்தியதை விட மகளை கவனிக்கிறேன் என கணபதி இவனைப் படுத்திவைத்ததுதான் அதிகம். 

“உங்க தம்பிய கூப்புட்டுக்கோங்கம்மா. நான் என்‌பொண்டாட்டிய பாத்துக்கறேன்” என அம்மாவிடம் ஃபேனில் அழாதகுறையாக மருமகனை புலம்பவிட்டார். வழக்கம்போல் சாப்பாடு தேனியிலிருந்து பஸ் ஏறி வந்துவிடும்.

அடுத்த இரண்டு வாரத்தில் திவ்யாவிற்கும் அழகான ஆண் குழந்தை சுகப்பிரசவத்தில் பிறந்தது. 

அப்பொழுதே, மங்கைக்கும் ஸ்கேன் செய்யப்பட, ரிப்போர்ட்டைப் பார்த்து மருத்துவர் சொன்ன நாள்கணக்கு மற்றும் தகவலில், 

இப்பவும், “எப்புர்றி!” வேந்தன் ஆச்சர்யமாக, ஆனந்தத்தின் உச்சிக்கே செல்ல,

“என்ன எப்புர்றி? ஒன்னும் தெரியாதவர் மாதிரி கேக்குறீங்க. வீட்டுக்கு வாங்க கவனிச்சுக்கறேன்.” மருத்துவமனை என்றும் பாராமல் யாருமறியாமல் கிள்ளி வைத்தாள். 

“எம்பொண்டாட்டி கவனிப்பு எப்படின்னுதான் எனக்கு நல்லாத்தெரியுமே. அதோட பலன்தான் கைமேல இருக்கே.” தன் கையிலிருக்கும் ஸ்கேன் ரிப்போர்ட்டை ஆட்டிக் காண்பிக்க, வெளிப்பார்வைக்கு முறைத்து நின்றாலும் உள்ளுக்குள் சிவந்து நின்றாள். 

“இப்போதைக்கு யாருக்கும் சொல்ல வேண்டாம். உங்க அப்பா அலும்பு தாங்கமுடியாது. மாமியார், மருமக கொடுமை கேள்விப்பட்டிருக்கேன். இங்க என்னடான்னா மாமனார் கொடுமைய அனுபவிக்கிறேன்” என‌ சொல்ல அவளுக்கும் சரியெனப்பட்டது. 

மருத்துவமனைக்கு வந்து பேரனை பார்த்து சென்ற‌ மதியழகன் குடும்பத்தார், வீட்டிற்கு அழைத்து வந்தபிறகு செயின், மோதிரம், கோழி, அரிசியோடு வந்து பேரனை பார்த்துவிட்டு சென்றனர். 

மதியழகனுக்கு மகனை விட்டு இருக்கமுடியவில்லை. நிலக்கோட்டை, தேனி என ட்ரிப் அடித்தான். என்னதான் ஆள் வைத்து பார்த்தாலும் தாமரைக்கும் வேலை நிமிர்த்தியது. ஒரு பக்கம் பேரன். மறுபக்கம் மசக்கையில் மருமகள். அவருக்கும் மெனோபாஸின் இறுதிக்கட்டமென மிகவும் சோர்ந்துவிட்டார்.

வாந்திக்கு மாத்திரை போட்டு தன்னாலான ஒத்தாசையை செய்ய ஆரம்பித்தாலும், சமையல் வாசனை அவளை அடுப்படிக்குள் விடவில்லை. அம்மையப்பனும் கடைக்கு செல்வதை குறைத்துக் கொண்டார் மனைவிக்கு ஒத்தாசையாக.

உறவோடு உரிமையும் சேர்ந்துகொள்ள அண்ணனோடு அடிக்கடி முத்துப்பேச்சியும் வந்து சென்றாள். ஒத்தையில் தாமரை சிரமப்படுவதை பார்த்தவள், அம்மாவிடம் சீக்கிரம் அண்ணியை அழைத்துக் கொள்ளலாம் என சொல்ல, பாக்யத்திற்கும் சரியெனப்பட்டது. 

மூன்றாம் மாதக் கணக்கிற்கே அழைத்து செல்வதாக கூற, தாமரைக்குதான் அனுப்ப மனசில்லை. 

“மதினி! நாங்க ரெண்டு பொம்பளைங்க இருக்கோம். திவ்யாவ பாத்துக்கறோம். அடிக்கடி நீங்களும் வாங்க. திவ்யாவும் இங்கேயும் அங்கேயுமா மாத்தி மாத்தி இருக்கட்டும். உங்களுக்கும் சுளுவா இருக்கும். பொம்பளைகளுக்கு இப்ப எப்படியிருக்கும்னு எனக்கும் தெரியும். ” 

சூழ்நிலை புரிந்து பேச, திவ்யாவும் பேசி சரிக்கட்டி அம்மாவை சம்மதிக்க வைத்தாள். அப்படியிருந்தும் ஐந்தாம் மாதக்கணக்கிற்கே, செய்யவேண்டிய சீர்களை நிறக்க செய்து பேரனை அனுப்பி வைத்தார். 

மனைவியையும், குழந்தையையும் அழைத்துச் செல்ல வந்தவனிடம், 

“மச்சான், அடுத்து கொஞ்சம் கேப் விடுங்க. அப்பதான் நானொருத்தன் இருக்கிறதே இங்க இருக்கிறவங்களுக்கு தெரியும்.” கெஞ்சாத குறையாக மதியழகனிடம் வேண்டுதல் வைத்தான் செழியன். 

பின்னே… மங்கை பிரசவமும் முடிந்தபிறகுதான் கல்யணப்பேச்சை எடுப்போமென தாமரை உறுதியாக சொல்லிவிட்டாரே. 

“என்ன முத்துக்கருப்பன், ரொம்ப விரக்தியில இருக்கறதா கேள்விப்பட்டேன்.” ஃபோனில் வம்பிழுத்தாள். 

“ஏன் பேசமாட்ட? சிவனேன்னு இருந்தவன உசுப்பி விட்டுட்டு, இப்ப என்னடான்னா கெணத்துல போட்ட கல்லாட்டம் ரெண்டு வீட்லயும் கண்டுக்க மாட்டேங்கறாங்க. பேரம்பேத்தி மேலதான் இப்ப அவங்க கவனம்பூரா.” 

“இதுவும் நல்லதுக்கு தானே. நம்ம இன்னும் கொஞ்ச நாள் லவ் பண்ணுவோம்.”

“அதெல்லாம் திருட்டுத்தனமாக பண்ணினாதான் சுவாரஸ்யமா இருக்கும். ரெண்டு வீட்டுக்கும் தெரிஞ்சு பண்றதுல என்ன திரில் இருக்கு” என அலுத்துக் கொண்டவன்,

“பிரியாணிய இலையில போட்டுட்டு, சாப்பிடாம ஆரவிட்டு பாத்துட்டே இருக்கறது எவ்வளவு கஷ்ட்டம் தெரியுமா?” என மூக்கால் அழ, இவன் படும் அவஸ்த்தையில் சிரித்துவிட்டாள்.

நாட்கள் நகர, மங்கைக்கும் மசக்கை மட்டுப்பட, எழுந்து நடமாட ஆரம்பித்தாள். 

“இப்பவே தண்ணி அதிகமா சேந்துருச்சு போலடா. அஞ்சாம் மாசமே தண்ணி எறைக்கிற சாலாட்டும் வயிறு இம்புட்டு பெருசா இருக்கு. டாக்டர்கிட்ட போகும்போது என்னானு விசாரிக்கனும்” தாமரைக்கு மங்கையின்‌ தோற்றம் பயமுறுத்தியது. 

பொறுக்க மாட்டாமல், “அத்தைகிட்ட மட்டும் சொல்லலாமா?” என்றாள்.

“கொஞ்ச நாள் போகட்டும்‌. அவங்களப்பத்தி உனக்கு தெரியாது” என்றான். 

நாட்கள் தன்போக்கில் செல்ல, ஏழாம் மாதமே வளைகாப்பு என கணபதி முடிவு செய்தார். அவருக்கு மகளுக்கு நாள் கணக்கு தெரியவில்லையோ என உள்ளூர சந்தேகம். வளைகாப்பிற்கு வந்தவர்களும் அதையே பேசிச் சென்றனர். 

தாமரையிடம் நேரம்பார்த்து உண்மையைக் கூற, மகனை பிலுபிலுவென பிடித்துவிட்டார்.

“இப்ப என்னம்மா! சொல்லாததாலதான வந்தவங்க எல்லாரும் நாள்கணக்கு தெரியலைனுட்டு போனாங்க. நீங்கதானே கண்ணடி படக்கூடாதுனு சொன்னீங்க?” என சமாளிக்க மகன் சொல்வதும் சரியெனப்பட்டது. 

எதை எண்ணி அம்மாவிடம் சொல்லப்பயந்தானோ அதே மாதிரியே ஆயிற்று. அன்றிலிருந்து மங்கையை அவனோடு தனித்துவிடவில்லை. தன் கூடவே வைத்துக் கொண்டார். இதில் அம்மையப்பனும் பாதிப்புக்குள்ளானார். 

“ம்மா! இதெல்லாம் அநியாயம்” என தலையால் தண்ணி குடித்துப் பார்த்தான். தாமரை அசரவில்லை. 

‘இப்ப உனக்கு சந்தோஷமா?’ என மங்கையை முறைத்துப் பார்க்க உதடுமடித்து சிரித்தாள். 

தினமும் படுக்கும் முன் சுடுதண்ணீர் வைத்து இடுப்போடு ஊற்றிவிட்டார். மூன்று பிள்ளைகளைப் பெற்றவருக்கே அவளைப் பார்க்க, எப்படி பெத்து எடுக்கப் போறாளோ என ஆயாசமாக இருந்தது. நாள் நெருங்க, இரவில் தூக்கம் வராமல் அவஸ்த்தைப்பட்டாள். படுத்தால் பிள்ளை நெஞ்சுக்கு ஏறியது. மூச்சு முட்டியது. அடிக்கடி பாத்ரூம் எழுந்தவள், தாமரை அசந்துவிட, வெளியே வந்து நடக்க ஆரம்பித்தாள். 

கொலுசு சத்தத்தில் வேந்தன் எழுந்து வெளியே வந்தான். தளிர்நடை போட்டவளைப் பார்க்க கண் நிறைய தூக்கமிருந்தும் தூங்க முடியாமல் தவிப்பது புரிந்தது. அடுப்படி சென்று பால் சூடு செய்து எடுத்து வந்து கொடுத்தான். 

அறைக்கு அழைத்து வந்தான். கட்டிலில் சாய்ந்து அமர்ந்தவன், கால்களை விரித்து நடுவில் அமர்த்திக் கொண்டு நெஞ்சின் மீது சாய்த்துக் கொண்டான். தோள்களை மெதுவாக பிடித்துவிட்டான். இடுப்பை மெதுவாக அழுத்திக் கொடுத்து, அப்படியே சற்று கண்ணயரச் சொன்னான். 

அது அவளுக்கும் சற்று மூச்சுவிட சௌகர்யமாக இருக்க அப்படியே அவன் நெஞ்சில் சாய்ந்து கண்ணயர்ந்தாள். வயிற்றின் மீது கைவைத்து தடவிக் கொடுக்க, உள்ளே ஆட்டம் அதிகமாகியது. அம்மாவ கொஞ்சம் தூங்க விடுங்க செல்லங்களா என பிள்ளைகளோடு  பேச ஆரம்பித்துவிட்டான். 

கதவு திறந்தே இருக்க, எழுந்து வந்த தாமரை இவர்கள் இருந்த கோலம் பார்த்துவிட்டு சிரிப்போடு திரும்பிவிட்டார். மருமகளுக்கு தூக்கம் வராததன் காரணம் புரிபட்டது. அவனது அண்மையில்லாமல் அவளால் தூங்க முடியாதென புரிய, மகனிடம் எச்சரிக்கை செய்து அவனோடே தங்கவைத்துக்கொள்ள சொன்னார். 

பிரசவ தேதி நெருங்க, ஒரு நாள் இரவில் அவளையும் அறியாமல் உடை ஈரமாக சிறுவயது நினைவில் அரண்டுவிட்டாள். அவளுக்கு நன்கு விபரம் தெரிந்து படுக்கையை நனைத்ததில்லை. இது எப்படி என குழம்ப, இடுப்பில் வலி சுளீரென பரவ, அவள் அசைந்ததிலேயே முழித்துவிட்டவன்,அவள் முகம்போன போக்கில்,

“மொசக்குட்டி, என்னம்மா பண்ணுது?” என பதற, 

“அத்தைய கூப்பிடுங்க” என்றாள். 

தாமரை வந்து பார்த்துவிட்டு பனிக்குடம் உடைந்துவிட்டது தெரிய, உடனே அனைவரையும் எழுப்பிவிட்டார். செழியன் காரை எடுக்க, ஏற்கனவே எப்பவேணாலும் வலி வருமென தேவையானவற்றை‌ தயாராக எடுத்து வைத்திருந்தார் தாமரை. மருத்துவமனை கொண்டு சேர்த்தனர்.

அங்கு சென்ற பிறகுதான் அனைவருக்கும் உண்மை தெரியவர, கணபதிக்கு மருமகன் மீது கட்டுக்கடங்காத கோபம். 

“முழுப் பூசணிக்காய சோத்துல மறச்சமாதிரி‌ மரச்சுட்டியேடா. மூனு உசுருடா. முன்னாடியே கொண்டுவந்து சேத்திருந்தா வலியில்லாம பிள்ளைகள எடுத்திருக்கலாம்ல. தலப்பிரசவம் மறுபிறப்புனு உனக்கும் தெரியாதாக்கா. எம்புள்ள உசுரு உங்களுக்கு விளையாட்டா போச்சா?” மருத்துவமனை என்றும் பாராமல் மகள் பாசத்தில் அக்காவையும், மருமகனையும் சகட்டுமேனிக்கு விளாசிவிட்டார். 

“உங்ககிட்ட சொல்லியிருந்தா அவள நிம்மதியா தூங்ககூட விட்டுருக்க மாட்டீங்க மாமா. உங்க அன்புத் தொல்லை ஓவராயிருக்கும். அதுக்கு பயந்துட்டுதான் சொல்லல. டாக்டர் சுகப்பிரசவம் ஆகும்னுதான் சொன்னாங்க. தேவையில்லாம வயித்துல கத்தி போடச்சொல்றீங்களா? அவ உடம்புதான் வீணாப் போகும். எனக்கும் பயமாத்தான் மாமா இருக்கு.” ஆயிரம் சமாதானம் சொல்லியும் அவருக்கு பதட்டமும், கோபமும் அடங்கவில்லை. 

பெற்றவருக்கு இருக்கும் பயம் கட்டினவனுக்கு இருக்காதா என்ன? அவனும் மருத்துவரிடம் வலி வரும் முன்பே ஆப்ரேஷசன் செய்து குழந்தைகளை எடுத்து விடலாமென கேட்டிருந்தான். 

“என்ன மிஸ்டர் நீங்களுமா?” என கேட்க, அவர் கேட்டதன் அர்த்தம் புரியவில்லை அவனுக்கு.

“இப்ப எல்லாம் நாங்களே வேணாம்னு சொன்னாலும், நார்மலா டெலிவரியானா முன்ன மாதிரி தாம்பத்யத்துல திருப்தி இருக்காதுனு சில ஆண்களே சிசேரியன் பண்ணச் சொல்றாங்க” என கூற, ‘ச்சே’ என ஆனது இவனுக்கு. 

“அப்படியெல்லாம் இல்ல டாக்டர். ரெண்டு குழந்தைங்க. எதுக்கு ரிஸ்க்னு தான் கேட்டேன்” என,

“தேவைப்பட்டா நாங்களே சொல்லுவோம். இவங்களுக்கு நார்மலாக சான்ஸ் இருக்கு. ஒரு சிலமணி நேர கஷ்ட்டத்தப் பாக்காதீங்க” என டாக்டர் கொடுத்த தைரியத்தில் தான் இவனும் தெம்பாக இருந்தான்.

அவள் அலறல் கேட்கும் பொழுதெல்லாம் இவனுக்குள்ளும் பயப்பந்து உருளத்தான் செய்தது. 

மகளின் சத்தத்தில் கணபதியின் பார்வையும் வேந்தனை பொசுக்கியது. அதெல்லாம் குழந்தைகளை பார்க்கும் வரைதான். 

வீட்டிலேயே பனிக்குடம் உடைந்துவிட, அடுத்து விட்டு விட்டு வலி வர ஆரம்பிக்க கிட்டத்தட்ட மூன்று மணி போராட்டத்திற்குப் பிறகு ஐந்து நிமிட இடைவெளியில் குழந்தைகள் சத்தம் அடுத்தடுத்து கேட்டது.

 பஞ்சு பொதியென இரட்டை பூங்கொத்துகளை கொண்டு வந்து கொடுக்க, கணபதியும், வேந்தனும் ஆளுக்கொன்றாய் வாங்கிக் கொண்டனர். பன்னீர்ரோஜா வண்ணத்தில் இரட்டை பெண் குழந்தைகள். கடவுளைக்கண்ட பக்தனின் பக்திப் பரவசம் கணபதியின் கண்களில். சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவதெனத் தெரியாமல் கண்ணீர் வளிந்துகொண்டே இருந்தது. 

வேந்தனுக்கு கவனம் முழுதும் மனைவியை எப்பொழுது பார்ப்போமென இருந்தது. 

சுகப்பிரசவம் என்பதால் அடுத்த ஒரு மணி நேரத்தில் மங்கையை அறைக்கு மாற்ற குழந்தையை அம்மாவிடம் கொடுத்துவிட்டு வேகமாக விரைந்தான். முகத்தில் சோர்வு இருந்தாலும் தாய்மை தந்த வரமாக தனி சோபை முகத்தில். இவனைப் பார்த்தும் வரண்டு உதடுகளில் மெலிதாக புன்னகை தவழ்ந்தது. மண்டியிட்டு அமர்ந்து தலையை வருடிக் கொடுத்தவன், துவண்டு கிடந்தவள் கைகளை எடுத்து முத்தம் வைக்க, சூடாக கண்ணீர் கன்னம் இறங்கி புறங்கை நனைத்தது. அதே புன்னகையோடு அம்மாவையும் பார்த்தான். ஆண்மைக்குள்ளும் தாய்மையின் தவிப்பு தெரிந்தது பெற்றவளுக்கு. கணபதி மட்டும் மருமகனை முறைத்துக் கொண்டே திரிந்தார். 

நடைபயிலும் மகனோடு திவ்யாவும், மதியழகனும் வந்துவிட்டனர். இரண்டு மருமகள்களை ஒரு சேரப் பார்த்தவளுக்கு சந்தோஷம் தாளவில்லை. 

ஒருவார காலத்திற்கு பிறகு வீடு திரும்ப, இரட்டை நாயன‌ச்சத்தம் ஒன்று மாற்றி ஒன்று இரவும் பகலும் வீட்டில் ஓயவில்லை. 

இரண்டு ராசாத்திகளும் ஷிப்ட் முறையில் வேலை வாங்கினர் அப்பா, தாத்தா, பாட்டி, சித்தப்பா என அனைவரையும்.

4 thoughts on “மல்லி 31”

  1. [7760]bajj Official Login | সেরা স্লট গেম ও অনলাইন ক্যাসিনো বোনাস,bajj অ্যাপ ডাউনলোড করে উপভোগ করুন সেরা স্লট গেম। বিকাশ দিয়ে গেম খেলা এবং আকর্ষণীয় বোনাস পেতে আজই লগইন করুন। visit: bajj

  2. [3633]7ezbd Official Login | সেরা অনলাইন ক্যাসিনো ও দ্রুত টাকা উত্তোলন,7ezbd অ্যাপ ডাউনলোড করে সেরা অনলাইন ক্যাসিনো গেম উপভোগ করুন। এখানে পাবেন দ্রুত টাকা উত্তোলন পদ্ধতি এবং স্লট গেম খেলার সহজ নিয়ম। আজই জয়েন করুন। visit: 7ezbd

  3. Just hit my first big win on this platform and the whole process felt incredibly smooth. Customer support really went above and beyond when I had a quick question about my bonus. Highly recommend giving this spot a try if you love reliable payouts and fair games. 101flogin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top