“என்னப்பா இது?”
“இது அவனுக்குமா. இன்னைக்கு சனிக்கிழமை. எண்ண தேச்சு குளிப்பான்ல.”
மகளுக்கு பதில் சொல்லிக் கொண்டே, இரும்பு குழிக்கரண்டியில் நல்லெண்ணெயை ஊற்றி அதில் இரண்டு பல் பூண்டை தட்டிப்போட்டு காய்ச்சி எடுத்தார். காய்ச்சிய நல்லெண்ணெயில் போட்ட பூண்டு வாசனை வீடே மணத்தது.
“தலதீபாவளியா கொண்டாடுறீங்க உங்க மாப்பிள்ளைக்கு? எண்ணெய் தேச்சு குளிக்க வைக்க.”
“நீ வந்ததுலருந்து பய சவலப்புள்ளயாட்டம் ரொம்ப சுணங்குறான். உங்கத்தை செழியன மாசமா இருந்தப்பக்கூட இவன் இம்புட்டு சவலபாயல. அதான், இன்னைக்கி எண்ணெய் தேச்சு குளிப்பாட்டுவோம்.”
வாயெல்லாம் பல்லாக மருமகனை பரிகாசம் பண்ண, அப்பனின் கேலியில் மங்கையும் வாய்விட்டு சிரித்துவிட்டாள். அவளிடம் சின்ன வெங்காயத்தை உரித்து வைக்கச்சொன்னார் நாட்டுக்கோழி குழம்பிற்கு.
வெட்டிய கோழிக்கறியை பாத்திரத்தில் போட்டு எடுத்துவந்தவன், “என்னப்பத்தி பொறணி பேசலைனா ரெண்டு பேருக்கும் தூக்கம் வராதே?” கேட்டுக்கொண்டே அடுக்களை வர,
“தெரியாம பேசறதுக்கு பேருதான் பொறணி. அதான் உங்களுக்கு நல்லா கேட்டுச்சே. நாங்க என்ன ஒழிச்சா பேசறோம்.” மங்கை நொடித்துக் கொள்ள,
“அதானே?” என்றவர்,
“நீ வெங்காயத்த உரிச்சு வதக்கிட்டு, தேங்காய துருவி வைம்மா. நான் வந்து கொழம்பு கூட்டிவச்சுக்கறேன்.” மகளுக்கு கை வேலை கொடுத்துவிட்டு,
“நீ வாடா மாப்ள!” என காய்ச்சிய எண்ணெயை எடுத்துக்கொண்டு கொல்லைப்புறம் வந்தனர்.
பனியனை கழற்றி கொடியில் போட்டவன், துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு ஸ்டூலில் உட்கார்ந்து கொண்டான். கணபதி உடல்நிலை சரியில்லாமல் போனதிலிருந்தே அவனே எண்ணெய் தேய்த்து குளித்துக் கொள்வான். வெகு நாட்கள் கழித்து மாமன் தேய்த்துவிடுவதாக சொல்ல மறுக்க மனமில்லை. சிறுவயதிலேயே கணபதி பழக்கிவிட்ட பழக்கம் தான். இதற்கே செழியன் சனிக்கிழமை எனில் இந்தப்பக்கம் தலைகாட்ட மாட்டான்.
வீட்டிற்கு பின்புறமிருந்த காலியிடத்தில் கணபதி இப்பொழுது கோழிகளை வளர்க்க ஆரம்பித்துவிட்டார். ஆடு, மாடு, கோழி என ஒருகாலத்தில் கட்டுத்தரை நிறைந்திருந்த வீடுதான். கனகத்தின் காலத்திற்கு பிறகு எல்லாம் விற்றுவிட்டார். திவ்யா பிள்ளை உண்டாகியிருப்பது தெரிந்தவுடன் கோழி வளர்க்க ஆரம்பித்துவிட்டார். பேரு காலத்திற்கு கோழிகள் தேவைப்படும். அடுத்தடுத்தும் தேவைப்படலாம் என்ற முன்னோக்கு சிந்தனையோடும்தான். விலைக்கு வாங்க முடியாதென்று இல்லை. வீட்டில் இருப்பது போல் வராது. அக்கா வீட்டில் வளர்க்க சௌகர்யப்படாது. இங்குதான் பின்னால் இடம் கிடக்கிறதே என வாங்கிவிட, சேவல், வெடக்கோழி, முட்டைக் கோழி, குஞ்சுத்தாய் கோழியென எல்லாவகை கோழிகளும் மொதுமொதுவென திரிகிறது. முட்டை பருவ கோழி ஒன்றை காலை எழுந்தவுடன் வெட்டி, வாட்டி, மஞ்சநீராட்டு முடித்து, மருமகனிடம் கொடுத்துவிட்டுதான் எண்ணெய் காய்ச்சவே வந்தார்.
கைகளை இடுப்பில் ஊன்றி அமர்ந்துவிட்டான் மாமன் எண்ணெய் தேய்க்கும் சுகத்தை அனுபவிக்க. கை பொறுக்கும் சூட்டில் எண்ணெயை உள்ளங்கையில் ஊற்றியவர், உச்சந்தலையில் வைத்து அரக்கித்தேய்த்தார். கழுத்து, புஜமென உருவித் தேய்த்துவிட அந்த சுகத்தில் கண்கள் மூடி அமர்ந்துவிட்டான்.
சொன்ன வேலையை முடித்தவள், அடுத்து என்ன செய்யவென கேட்க பின்னால் வந்தாள். எதிர் வெயிலில் எண்ணெய் வழிய கண்களை மூடி, குதிரையில் வீற்றிருக்கும் ஐயனார் சிலைபோல் இடுப்பில் கையூன்றி கம்பீரமாக அமர்ந்திருந்தவனைப் பார்த்தவளுக்கு கண்கள் அவன் மீதே நிலைகுத்தி நின்றது. கணபதியின் பத்து விரல்களும் தலையில் நர்த்தனமாட சுகமாக தலையைத் தூக்கி,
“போதும் மாமா, கண்ணு எரியுது.” கண் திறக்காமல் கூற,
“சூடு அமரவேண்டாமாடா? கை காலுக்கெல்லாம் நீயே தேச்சுக்கடா. குட்டிம்மா இங்க வா! முதுகுக்கு மட்டும் நீ தேச்சுவிடு! நான் கொழம்ப என்னானு பாக்குறேன். குளிச்சதும் கபகபன்னு பசிக்கும்.”
மகளை அழைக்க, கண்ணா லட்டு திங்க ஆசையா குரல் பேக்ரவுன்டில் ஒலிக்க, வேந்தன் உள்ளுக்குள் இனிமையாய் அதிர்ந்தான்.
இதை சற்றும் எதிர்பாராதவளுக்கோ, “எதே!” என இதயம் வெளியே குதித்து அடங்கியது.
“அவரே தேச்சுப்பாருப்பா. நான் குழம்பு வைக்கிறேன்” என்றவள் குரல் தொண்டை விளிம்பிலேயே தேங்கி நின்றது. அவள் சொன்னதைக் கேட்டவன்,
“ஐயோ மாமா! உங்கமக என் வயித்துல அடிக்கப்போறா. உங்களுக்கு புண்ணியமாப் போகும். லேட்டானாலும் பரவாயில்ல. நானேகூட குழம்பு வச்சுக்கறேன்” என வாய்விட்டே அலறினான்.
“எட்டாத முதுகுல தேய்க்க முடியாதும்மா. நீ தேச்சுவிடு!” என பக்கத்தில் இருந்த வாளித்தண்ணீரில் கைகழுவிக் கொண்டார். அவளுக்குதான் தொண்டையில் உருவமில்லாத பல உருண்டைகள் அடைத்துக் கொண்ட உணர்வு. மறுக்கவும் முடியாது. ஏற்கனவே மகள், மருமகனுக்கிடையில் இன்னும் உறவு சுமூகமாகவில்லையோ என்ற சந்தேகம் அவருக்குள். முன்னமாதிரி படிப்பையும் காரணம் சொல்ல முடியாது. இந்த வாரம்தான் கல்லூரி தேர்வு முடிந்தாயிற்று. இதுநாள் வரை கல்லூரி ப்ராஜெக்ட், எக்ஸாம் என ஒப்பேற்றியாகிவிட்டது.
இத்தனை நாட்களாக பட்டும்படாமல் இருந்தவன் பார்வையும் இப்பொழுதெல்லாம் அதிகமாக ஒட்டி உறவாடுகிறது. தவிர்க்க முடியவில்லை என்பதைவிட தாளமுடியவில்லை. அவளுக்குள்ளும் ஒரு இனம்புரியா தவிப்பு. உள்ளம் மட்டும் அவனைத் தேடிய காலம்போய் சொல்லத்தெரியாதொரு உணர்வுப் போராட்டம் அவளுக்குள்ளும். அந்த மாற்றத்தை விரும்பவும் ஆரம்பித்துவிட்டாள் என்றுதான் சொல்லவேண்டும்.
இருந்தாலும் உள்ளுக்குள் ஒரு தயக்கம். தன்னால் முடியுமா? நெருங்கும் பொழுது ஒவ்வாமையால் அவனை காயப்படுத்திவிடுவோமே என்ற பயம். அதற்காக காலம்பூரா தள்ளி நிற்க முடியுமா? இல்லை தள்ளிவைக்கத்தான் முடியுமா? எந்தச்சாமி புண்ணியமோ இத்தனை நாட்களாக ஒரு ஆண்மகனாக உரிமையிருந்தும் தள்ளி நிற்பது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்போது என சிந்தனைச்சுழலில் சிக்கியிருந்தவளை,
“போய் தேச்சுவிடும்மா!” என இயல்பாக சொல்லிவிட்டு உள்ளே சென்றவர் குரல் கலைக்க, அவனுக்கோ கண்களைத் திறக்க முடியவில்லை. எண்ணெயை வழித்து விட்டு, கண்களை திறக்க, துப்பட்டா நுனியை துவம்சம் செய்து கொண்டிருந்தது மங்கையவள் கைவிரல்கள். இதழ் மடித்து சிரித்தவன், அவளையே கூர்ந்து பார்க்க, அவளோ முறைத்து நின்றாள். காலில் கல்லைக் கட்டியது போல் நகர மறுத்தது.
“என்னமோ நான் சொன்னமாதிரி முறைக்கிற. முடியாதுன்னா போ! வேந்தா நீ இதுக்குக் கூட கொடுத்து வைக்கலடா. கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரியா இருக்கனும்கறது உன் தலையெழுத்து.”
தன்னால் புலம்பிக் கொண்டு எண்ணெயை கையில் ஊற்றி, முதுகில் தேய்க்க முயல, சிறுபிள்ளைபோல் எட்டாமல் எக்கிக்கொண்டிருந்தான். அவனை அப்படி பார்க்கவும் கணபதி சொன்ன சவலப்பிள்ளை நினைவுக்கு வர, அச்சோவென மனமிறங்கியது. தயங்கியே வந்தவள் கையிலிருந்த கிண்ணத்தை வெடுக்கென வாங்கினாள்.
ஏதோ ஒரு வேகத்தில் வாங்கிவிட்டாளே ஒழிய, எண்ணெயை கையில் ஊற்றியவளுக்கு முதுகில் ஊற்றித் தேய்க்க மட்டும் கை வரவில்லை. தயக்கத்தோடே பட்டும்படாமல் தேய்க்க, அவனுக்கு தான் கிச்சுகிச்சு மூட்டுவதுபோல் நெளிய ஆரம்பித்தான்.
“அசையாம இருக்க மாட்டீங்கள?” கடுப்பாக கேட்க,
“நீ எண்ணெ தேக்குறியா, கிச்சுகிச்சு மூட்றயா?”
“ஆமா, பச்சப்புள்ள பாரு. இவர கிச்சலாக்க பண்றாங்க.”
“இப்படித்தேச்சா விடிஞ்சிறும். பாப்பாரப்புள்ள நண்டு புடுச்சமாதிரினு சொல்லுவாங்க. அப்படியிருக்கு உன் வேலை. நீ ஒன்னும் வேண்டாவெறுப்பா தேய்ச்சுவிட வேண்டாம். நீ போ! கைகாலுக்கு தேச்சுட்டு நான் குளிக்கனும்.”
அவன் சலித்துக்கொண்ட விதம், மனதை என்னவோ செய்ய அலமலந்து போனது பெண்ணிற்கு. இப்படியே ஒட்டாமல் எத்தனை நாளைக்கு. கட்டியவன்தானே என யோசித்தவள், துணிந்தவளுக்கு துக்கமில்லையென துணிந்து தேய்க்க ஆரம்பித்துவிட்டாள்.
முறம் போல் படர்ந்து, இடை குறுகிய முதுகில் கைகள் மெதுவாக சுற்றி வர அவளையும் அறியாமல் மெள்ள மெள்ள கைகளின் அழுத்தம் கூட, அவனுக்குள் கிளர்ந்த புதுவித உணர்வில் இப்பொழுதும் நெளிய ஆரம்பித்தான்.
‘ஆத்தீ! வேலில போறதை எடுத்து வேட்டிக்’ என யோசனை செல்ல, ‘ச்சே’ என தலையை உலுக்கிக் கொண்டான். வேண்டாத வேலை பார்த்து விட்டோமோ என மெள்ள அவனுக்குள் அவஸ்த்தை எழும்ப, உடம்பு சூடு குறைவதற்கு பதிலாக அனலாய் கொதிக்க ஆரம்பித்தது. வேண்டாமென்று மறுக்கவும் முடியாமல் ஒருவித இன்பம் அவனை ஆட்கொள்ள, அழுத்தம் அதிகரிக்க அப்பொழுதுதான் அவளது உள்ளங்கைச் சூடும் உணர ஆரம்பித்தான்.
அவளும் தகிப்பது புரிய, அவளுக்குள் வேறுவிதமாக உணர்வதற்குள், அவளை மீட்க வேண்டி, காலில் எண்ணெய் தேய்ப்பது போல் குனிய, கை வழுக்கி முதுகின் மீதே விழுந்திருந்தால் பெண். நிலை தடுமாறும் முன் சட்டென கைகளை சேர்த்துப்பிடித்து, கழுத்தோடு இறுக்கிக் கொண்டான் தன் மொசக்குட்டியை. அவளும் விலகவும் இல்லை. அவனை விலக்கவும் இல்லை. பிடித்தமில்லாத ஏதோ ஒன்று பிடித்திருந்தது இன்று. கைகளை சேர்த்துப் பிடித்தவாறே குனிந்தவன் நிமிர, மேலுதட்டில் வியர்வை அரும்ப, கன்னத்தோடு கன்னம் இழைந்து நின்றாள் பெண். தொண்டையைச் செறுமியவன்,
“மொசக்குட்டிக்கு மாமன் மேல உப்பு மூட்டை ஏறனும்னா சொல்ல வேண்டியதுதானடி?” என்றவன் குரல் குழைந்து கரகரத்தது. சட்டென விலக முற்பட அவளால் முடியவில்லை. கைகளிரண்டும் அவனது உடும்புப் பிடியில் சிறைப்பட்டிருக்க,
“பாவம்பாத்து வந்தேன் பாருங்க. என்னச் சொல்லனும்.” வாய்க்குள்ளேயே முனுமுனுத்து குரல்.
“அப்ப, மாமனுக்கு பாவம்பாக்க ஆரம்பிச்சுட்டேனு சொல்லு.” சரசமாய் கேட்க, அதில் அவன் ஏதோ உள்ளர்த்தம் வைத்துப்பேச, புரியாமல் முழித்து நின்றாள்.
“ஆம்பள பாவம்பாத்தா கடனாளியாவான். பொம்பள பாவம்பாத்தா புள்ளத்தாச்சி ஆவான்னு சொல்லுவாங்க. நீ எப்படி, ரெடியா?” திரும்பிப் பார்த்து கண்சிமிட்டி கேட்க,
“விடுங்க ப்ளீஸ்!” என்றவள் குரல் அவளுக்கே கேட்கவில்லை.
அப்படியே முகத்தை மட்டும் திரும்பியவன், வலக்கை கொண்டு பெண்ணவள் கழுத்தோடு சுற்றி வளைத்து அருகே இழுத்தவன், மென்மையாக கன்னத்தில் இதழ் பதிக்க, மங்கையவள் இதயக்கூட்டில் சட்டென இரயிலின் தடதடப்பு. தாளமாட்டாமல் கால்கள் துவண்டிருந்தாள். உணர்வுகளின் பிரளயத்தில் சிக்கியிருந்தவனும், அவளது உணர்வுகளை மிகவும் கவனமாக அவதானித்திருந்தான். அவளிடம் ஏதாவது எதிர்மறையாகத் தெரிகிறதாவென உற்று கவனித்தான்.
கன்னத்தோடு ஒட்டியிருந்தவளது கன்னத்துச் சூடு அப்படி எதுவுமில்லை என முகாந்திரம் கூற, மெல்லிய புன்னகை அவன் முகத்தில் கீற்றாய் மின்னி மறைந்தது. அவளிடம் நடுக்கத்தை உணர்ந்தவன், மெதுவாக கைகளை விலக்கிக் கொள்ள, விட்டால் போதுமென ஓட்டம் பிடித்தாள். அவனது அமர்த்தலான சிரிப்பு அவளைப் பின்தொடர, அறைக்குள் வந்தவளுக்கு இன்னும் படபடப்பு அடங்கவில்லை. கை, காலெல்லாம் உதறலெடுக்க கட்டிலில் அமர்ந்து கொண்டு இழுத்து மூச்சுவாங்கி ஆசுவாசப்பட்டாள். எதிரில் இருந்த கண்ணாடியில் தன்னைப் பார்க்க, இத்தனை நாட்கள்போல் பயம், அருவருப்பு என்றில்லாமல் முதன் முறையாக நாணம் அறிமுகப்படலம் மேற்கொள்ள குப்பென முகம் செம்மை பூசிக்கொண்டது.
சுடிதாரின் முன்புறம் முழுவதும் படிந்திருந்த எண்ணெய்ப்படலம் அவன் முதுகின் மீது அவள் படர்ந்திருந்த நிலையை படம்போட்டு விளக்கியது. இடக்கன்னம் முழுதும் எண்ணெயின் பளபளப்பில் மேலும் மின்னிச்சிவந்தது. இன்னும் கன்னத்தில் மீசையின் குறுகுறுப்பு. எவ்வளவு நேரமாக தனைமறந்த நிலையில் அப்படியே இருந்தாளோ, உடைமாற்றாமல் வெளியே செல்ல முடியாதென குளிக்க எழுந்துகொண்டாள்.
அலமாரியைத் திறந்து உடையெடுக்க, இப்பொழுது உண்மையாகவே இதயம் குதித்து வெளியே விழும் நிலை. முதுகுக்குப் பின்னால் நின்றவனது கை, கழுத்தை ஒட்டி உரசி, எட்டி தனக்கு பனியனும், கைலியும் எடுக்க, அவனது மார்பின் ஈரம் சில்லென அவளை குளிரவிடாமல் மீண்டும் சூட்டேற்றிப் பார்த்தது. மிக நெருக்கத்தில் நின்றவனுக்கும், சற்று முன் ஆர்ப்பரித்த உணர்வுகள் மீண்டும் அவனுக்குள் பேயாட்டம் போட, கட்டுப்பாடு கரைதாண்ட கைகளை வளையவிட்டு இடையை அழுத்திப் பிடித்தவன், பின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான்.
“மொசக்குட்டி!” காதோரம் கிசுகிசுத்தவன் சூடான மூச்சுக்காற்று தவிப்பாய் கழுத்தில் உரச, பெண் ஈரத்துணியாய் துவண்டுவிட்டாள். பின்கழுத்தில் இதழ் முத்திரை பதிக்க, பட்ட இடம் நெருப்பாய் தகிக்க, கண்கள் மூடி மார்பின் மீதே சாய்ந்து கைவளைக்குள் விரும்பியே சிறைப்பட்டாள் பெண்.
அடுத்த அடி எடுத்து வைக்க அவனுக்கும் சற்று தயக்கமே. இவள் எந்தளவு தாங்குவாள் என்று உள்ளூற ஒரு கலக்கம். இவ்வளவு தூரம் அவள் இழைந்து நிற்பதே அவனால் நம்ப முடியவில்லை. அவசரப்பட்டு வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைக்கத் தயாராக இல்லை. முயன்று தன்னை மீட்டுக் கொண்டவன், கவனமாக அவளை விடுத்து விலகிக்கொண்டான். அவளுக்குதான் ஆயாசமாக வந்தது. அவளை விட்டு விலக, திரும்பியவள் கண்களில் ஏன் என்ற கேள்வி தவிப்போடு.
“குளிச்சுட்டு வா! மாமா நமக்காக சாப்பிடாம வெயிட் பண்ணிட்டிருக்கார்” என்றவன், கைலியும் பனியனும் எடுத்துக் கொண்டு வெளியேறிவிட்டான். அவளால்தான் மீட்டுக் கொள்ள முடியாமல் தவித்துப் போனாள்.
தனக்காகப் பார்க்கிறான் என புரிய, அவளுக்குள் குற்றவுணர்ச்சியே மேலோங்கியது. திருமணத்திற்கும் தன் சம்மதம்தான் முக்கியம் என வேண்டி நின்றான். அதன் பிறகும் உரிமை இருந்தும் இதுவரை எதற்கும் கட்டாயப்படுத்தியதில்லை. தன்னால் அவனுக்கு எந்தவொரு சந்தோஷமும் இல்லை என நினைக்க குபுக்கென கண்கள் நீர் பூத்துவிட்டது. அதற்காக தானா முதலடி எடுத்து வைக்க முடியும் என கழிவிரக்கமும் சேர்ந்து கொள்ள, ஆற்றாமை வேறு கண்ணீரோடு சேர்ந்து பொங்க நெஞ்சாங்கூடு வெறுமையாகிப் போயிற்று.
உடைமாற்றிவிட்டு சாப்பிட அமர்ந்தவனிடம், “குட்டிம்மா எங்கடா?” என்றவரிடம்,
“அவ இன்னைக்கு டேங்க் காலியாகாம வரமாட்டா. வாங்க நாம சாப்பிடுவோம்” என சாப்பிட அமர்ந்துவிட்டான். சூடான கோழிக்குழம்பில் நல்லெண்ணெய் ஊற்றி, கறியை அள்ளிப்போட்டு சாப்பிடும் முன் மருமகனுக்கு கொடுத்தார். தனக்கும் இட்லி வைத்துக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தார். இவர்கள் சாப்பிட்டு முடிக்க, அவளும் குளித்து உடைமாற்றி வந்துவிட்டாள்.
மகளுக்கும் அதுபோல கொடுக்க, “எனக்கு வேண்டாம்ப்பா. அவருக்கே கொடுங்க. எனக்கு இட்லி போதும்.” தட்டில் இரண்டு இட்லியை மட்டும் எடுத்துவைத்து குழம்பு ஊற்றிக் கொண்டாள்.
“வல்லுவதக்குனு திண்ணாத்தானே உடம்புல சத்து புடிக்கும். இப்படி சாப்பிட்டா எப்படிம்மா?” கறியை அள்ளி மகளுக்கு போட,
“பசிக்கலப்பா!” என்றாள்.
“ஏம்மா, மறுபடியும் அல்சர் பிரச்சினையா? டாக்டர்கிட்ட போலாமா?” எங்கே மீண்டும் மகளுக்கு வயிற்றுப் பிரச்சினையோ என அவருக்கு கவலை.
“அப்பா! அதெல்லாம் ஒன்னுமில்ல. சாப்பிட முடியலைனா உடனே அல்சரா. பசி வந்தா தன்னால சாப்பிடப்போறேன். நானா மறந்தாகூட நீங்க ஞாபகப்படுத்திட்டே இருப்பீங்க போல?” வெடுவெடுவென விழுந்தாள் அவள் மீதே அவளுக்கிருந்த கோபத்தில்.
“அரசி!” வேந்தன் குரலை உயர்த்தினான்.
“ஏன் இப்படி பேசுற. முடியலைனா பொறுமையா சொல்ல வேண்டியதுதான?” வேந்தன் கண்டிக்க,
“நான் எங்கப்பாகிட்ட பேசுறேன். நீங்க எதுக்கு ஊடால வர்றீங்க?” அவனிடமும் முகம்சுண்டப் பேசியதில்,
“குட்டிம்மா!” கணபதியும் அதட்ட,
“நீங்க எல்லாரும் ஒன்னு. உங்களச் சொன்னா அவருக்கு கோபம் வருது. அவரச்சொன்னா உங்களுக்கு கோபம் வருது.”
அத்தனை ஆதங்கம் அவளது குரலில். தன்னால் அவனுக்கு என்றும் கஷ்ட்டமே என்ற சுயபச்சாதாபமும், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு, தூண்டப்பட்ட உணர்வுகளின் தாக்கமும் அவளை வேறோர் மனநிலைக்கு இழுத்துச் சென்றது.
இரண்டு இட்லியுமே சாப்பிட முடியாமல் தொண்டை அடைத்தது. வெளியே காட்டிக்கொள்ளாமல் சாப்பிட்டு எழுந்து கொண்டாள். கணபதி கவலையாக பார்க்க, தான் பார்த்துக் கொள்வதாக ஆறுதலாக கண் காண்பித்தான்.
பின்பக்கம் சென்றவள் துவைக்கும் கல்லில் அமர்ந்திருந்தாள். பார்வை எங்கோ வெறித்துக் கொண்டிருந்தது, சற்றுமுன் அப்பாவிடமும் கோபப்பட்டதை நினைத்து. இவர்களது அதிகப்படியான இந்த அக்கறைதான் அவளை குற்றவுணர்வில் ஆழ்த்துகிறது.
“க்க்கும்ம்” தொண்டையைச் செரும,
“ம்ப்ச்ச்…” சலித்துக் கொண்டு முகத்தத்தை வேறு புறம் திருப்பினாள்.
“அரசி!”
“…”
“என்னதான்டி உன் பிரச்சினை?”
“எனக்கென்ன பிரச்சினை. என்னாலதான் உங்களுக்கெல்லாம் பிரச்சினை. நான் இங்க வந்திருக்கவே கூடாது. என்னால யாருக்குமே நிம்மதியில்ல.” அதைக் கேட்டவனுக்கு உள்ளுக்குள் சுறுசுறுவென கோபம் கனன்றாலும்,
“அப்படினு யார் சொன்னது?” என்றான் பொறுமையை இழுத்துப் பிடித்து.
“சொன்னாத்தானா? ஒரு குழம்பு கூட வாய்க்கு ருசியா வச்சுத்தரத்தெரியல. உங்களையும் கஷ்ட்டப்படுத்திட்டு எதுக்கும் லாயக்கில்லாம, தெண்டமா”
அதற்கு மேல் எப்படி வெளிப்படையாக இதைப் பற்றி பேசுவதெனத் தெரியாமல் நிறுத்த, எதையோ மறைமுகமாக சுற்றிவளைத்து சொல்ல வருவதுபோல் பட்டது அவனுக்கு. சற்றுமுன் இழைந்தது அவளை இப்படிப்பேச வைக்கிறதோ என யோசனை ஓடியது.
அருகே வந்து தோளைத்தொட, தோளைக்குலுக்கி கையை தட்டிவிட்டாள். வலிந்து அவளது கன்னம் பற்றி முகத்தைத் திருப்ப, கண்கள் சிவந்து கலங்கியிருந்தது. அழுகையை அடக்க கீழுதடு பற்களிடம் சிறைபட்டிருந்தது. அவளை அப்படி பார்க்க நெக்குருகிவிட்டது வேந்தனுக்கு.
“மொசக்குட்டி!” என்றான் ஆழ்ந்த குரலில்.
“வேற யாரையாவது கல்யாணம் பண்ணிருக்கலாம்ல. என்னை கல்யாணம் பண்ணி என்ன சுகத்தக் கண்டீங்க?” கன்னம் வளிந்த கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டே தொண்டையடைக்க கேட்டவளை என்ன செய்தால் தகும் என கண்கள் இடுங்கப் பார்த்தான்.
“இதோ, கட்டின பொண்டாட்டி கண்ண கசக்கிட்டுருக்கா. கண்குளிர வேடிக்கை பாக்குறேனே, அது பத்தாதா?” என சீறியவன்,
“இப்ப என்ன? நமக்குள்ள அது நடக்கல. அதுதான?” என நேரடியாக கேட்க,
ங்ஙே… வென முழித்து நின்றாள்.
“உன்னால முடியுமா, முடியாதாங்கறதுதான் உன் பிரச்சினை, இல்ல? இன்னைக்கி என்ன ஆனாலும் சரி. டெஸ்ட் ட்ரைவ் பண்ணிற வேண்டியதுதான்.” சட்டென சொல்லிவிட,
“ஆமா, மொசப்புடிக்குற மூஞ்சப்பாத்தா…” அத்தனை அழுகையிலும், தன்னை மறந்து சொல்லியவள், நாக்கை கடித்துக் கொள்ள,
“நக்கலு, பாவம் பாத்து தள்ளியிருக்கேன்ல? இதுவும் பேசுவ, இன்னமும் பேசுவ. மொசப்புடிக்கறப்ப தெரியும். எந்திரி! முகம் கழுவிட்டு வா! மாமா என்னமோ ஏதோன்னு பயந்துக்கப் போறாரு. ரெண்டு பேத்துக்கும் இடையில எம்பொழப்பு சிரிப்பா சிரிக்குது.” அலுத்தவன் கைபிடித்து எழுப்பினான். முகம் கழுவி துடைத்தவள் அவனோடு உள்ளே வந்தாள்.
வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டது. தாமரையும், அம்மையப்பனும் இறங்கி வந்தனர். இன்று அவர்கள் வருவதே மறந்து போயிற்று. அத்தை என்ன சொல்லப்போறாங்களோ என பதட்டமாக அவனைப் பார்த்தாள்.
உள்ளே வந்தவர்களை வரவேற்றவள், காஃபி போடும் சாக்கில் அடுக்களை விரைந்தாள். வளைகாப்பு பற்றி பேச சம்பந்தி வீடு கிளம்பியவர்கள், போகும் வழியில் மகனையும், மருமகளையும் அழைத்துச்செல்ல வந்தனர். இதன் விபரம் ஏற்கனவே பேசியதுதான் என்பதால் முன்கூட்டி தெரிவிக்கவில்லை. கணபதி வந்தவர்களை சாப்பிடச்சொல்ல,
தாமரை, “சாப்பிட்டுதான் வந்தோம்டா” என்றார்.
“என்ன மங்கா, கெளம்பலியா?”
காஃபி எடுத்து வந்தவள், இன்னும் தலை கூட காயவைக்காமல் ஈரத்துண்டோடு இருப்பதைப் பார்த்து கேட்க,
“இப்ப கெளம்பிருவாம்மா. நீங்க வரட்டும்தான் வெயிட்டிங். சேலை மட்டும்தான் மாத்தணும்.” அவளுக்கு மறைபொருள் உணர்த்த, காஃபியை கொடுத்துவிட்டு அடுத்தநொடி அறைக்குள் இருந்தாள். அவசரமாக துண்டை அவிழ்த்து, அதாலேயே முடியை இரண்டு தட்டு தட்டியவள், அப்படியே தலைசீவ முனைய,
பின்னாலே வந்தவன், “தலைய காய வைடி!” என,
“எல்லாம் உங்களாலதான். மறந்தே போய்ட்டேன். இப்ப பாருங்க. அத்தை சங்கடப்படுறாங்க.” அலுத்துக் கொண்டே அலமாரியைத் திறந்து எந்தச்சேலை என ஆராயத் தொடங்க,
“நகரு, நீ தேடினா விடிஞ்சுறும்!” அவளை விலக்கியவன், அரக்குப்பச்சையில் நான்கு விரலிடை கரையிட்ட ஆரஞ்சு வண்ண பட்டுப்புடவையை எடுத்துக் கொடுத்தான்.
“இந்த செயின் மட்டும் பத்தாது. சம்பந்தி வீட்டுக்குப் போறோம். ஆரமும், நெக்லஸும் எடுத்துப் போட்டுக்க. கண்ணாடி வளையலோட இதையும் போடு” என தங்க வளையலும் எடுத்துக் கொடுக்க,
“விசேஷத்துக்கா போறோம்? வளைகாப்புக்கு தேதி குறிக்கத்தானே போறோம்?”
“சம்பந்தி வீட்டுக்குப் போகையில இதெல்லாம் பாப்பாங்க. கேள்வி கேக்காம சொன்னதச் செய்டி!” என்றவன் எல்லாம் எடுத்து கொடுத்துவிட்டு அங்கேயே நிற்க,
“நீங்க மொதல்ல வெளியே போங்க. நான் சேலை மாத்தணும்.”
“நான் உன் புருஷன்டி. நான் ட்ரெஸ் மாத்தவேண்டாமா? நீ ஒரு பக்கம் மாத்து. நான் ஒரு பக்கம் மாத்துறேன். அப்படியே டெஸ்ட் ட்ரைவ்க்கு ஒரு டெஸ்ட் ட்ரைவ் பாத்த மாதிரியும் ஆச்சு” என கண்சிமிட்ட,
“இப்ப போறீங்களா இல்லையா? ஏற்கனவே லேட்டு” கண்களை உருட்டி மிரட்ட,
“போறேன், சீக்கிரம் வா! எப்ப கங்காவா இருக்க, எப்ப சந்திரமுகியா மாறுறனே தெரியமாட்டேங்குது” அலுத்துக் கொண்டே வெளியே வந்தான்.
அடுத்த அரைமணி நேரத்தில் புடவை மாற்றி, தலைபின்னி, நகைகளை போட்டுக்கொண்டு கிளம்பி வெளியே வந்தாள். தாமரை வாங்கி வந்த மல்லிகைப்பூவை எடுத்துக் கொடுக்க, மீண்டும் உள்ளே சென்றாள் ஹேர்பின் எடுக்க.
வேந்தனும் வேட்டிசட்டையில் கிளம்பியவன், கண்ணாடி முன் நின்று, சட்டையின் கையை மடித்துவிட்டுக் கொண்டிருந்தான். அவனுக்குப் பின் நின்று பூவை வைத்தவளுக்கு ஒதுங்கி கண்ணாடிக்கு வழிவிட, அவனுக்கு முன்னால் வந்தவளிடம்,
“என்னடியிது!” அவனது பதட்டமான குரலில், என்னவோ ஏதோவென,
“என்ன?” என்றாள் அவளும் பதறித்திரும்பி.
“பூ நெறைய தொங்கவிட்டு வைடி! இனிமேலாவது ஜாக்கெட் தைக்க துணி சேத்து எடுத்துக்கொடு. பத்தாம தச்சு வச்சுருக்காய்ங்க” என்றவனை இடுப்பில் கை வைத்து முறைத்து நின்றாள். அரக்குப்பச்சை நிறத்தில் டீப்நெக் ஜாக்கெட்டில் தாழம்பூ நிறத்தில் முதுகு பளிங்குபோல் பளீரிட்டது.
நேருக்கு நேர் நின்றவளை, மேலிருந்து கீழாக பார்வையை ஓட்டியவன், மல்லிச்சரத்தை எடுத்து முன்னால் போட்டுவிட்டு, “அசத்துரடி… மொசக்குட்டி” என்றவன் தடாலடியாக இதழ் முற்றுகை ஒன்றை நிகழ்த்திவிட்டு வெளியேறிவிட, ஆணி அடித்தது போல் பிரமை பிடித்து நின்றுவிட்டாள்.
“அரசி, டைமாச்சு!” அறைக்கு வெளியே சென்று நல்லவன் போல் குரல் கொடுக்க,
“இவர!” பல்லைக் கடித்தவள், தெளிய வச்சு, தெளியவச்சு அடிக்கிறானே என நொந்தும் கொண்டாள்.
ஒரு பாதி கதவு நீயடா…
மறு பாதி கதவு நானடா…
தாழ் திரந்தே காத்திருந்தோம்…
காற்று வீசப் பார்த்திருந்தோம்…
நீ என்பதே நான் தானடி…
நான் என்பதே நாம் தானடி…
ஒரு பாதி கதவு நீயடி…
மறு பாதி கதவு நானடி…
இரவு வரும் திருட்டு பயம்…
கதவுகளை சேர்த்து விடும்…
கதவுகளை திருடி விடும்…
அதிசயத்தை காதல் செய்யும்…
இரண்டும் கை கோர்த்து சேர்ந்தது …
இடையில் பொய் பூட்டு போனது…
வாசல் தள்ளாடுதே…
திண்டாடுதே…
கொண்டாடுதே…
