மாமா! மாப்ளே! 16

16

“பாஸ்!”

“பாஸ்!”

“பாஸ்! டவாலி மாதிரி மூனு தடவை கூப்பிட்டேன்!” 

“பழனி… காஃபி” என்றான் காதில் விழாதது போல். 

“பாஸ்…” சிறுபிள்ளையாய் குரல் சிணுங்கியது.

“பழனி, ஊருக்குப் போகத் தேவையானதெல்லாம் பேக் பண்ணியாச்சா?”

“இப்பவேவா… அதுக்கு இன்னும் நாளிருக்கே!” காஃபி கலந்தபடி அடுக்களையில் இருந்து பதில் கொடுத்தாள்.

இரண்டு கப்களில் எடுத்து வந்தவள் ஒன்றை ராகவனிடம் கொடுக்க வாங்கிக் கொண்டான். இருவரும் எதிரெதிர் இருக்கையில் அமர்ந்திருக்க,

“பழனி… இங்க ராகவன்னு ஒரு மானஸ்த்தன் இருந்தான் பாத்தியா?” காஃபி கொண்டு வந்தவளிடம் கேட்க, அவளும் கண்டு கொள்ளாதது போல் உள்ளே திரும்ப,

“பாஸ்… நான் மானஸ்த்தன்னு எப்போ சொன்னேன்?” அப்பாவியாய் கேட்டவனிடம்,

“அப்போ… நீ மானஸ்த்தன் இல்லையா?”

“இல்ல… நமக்குள்ள எதுக்கு பாஸ் அதெல்லாம்?”

“மானங்கெட்டவனுக்காக எல்லாம் நான் முன்னுக்குப் போக முடியாது! பொண்ணு எடுத்த இடம். நாளைக்கு என்னப்பா இப்படி பண்ணிட்டியேன்னு எனக்கு ஒரு சொல் வந்திரக்கூடாது. எனக்கு மானம், மரியாதை முக்கியம்.” என்றவன் கஃபி குடிப்பதே இப்போதைக்கு எனக்கு அதி முக்கிய வேலை போல் காஃபியை ரசித்து ருசித்து பருக, ராகவனது பொறுமை எல்லை கடந்தது.

“பாஸ்! ரொம்ப பண்ணாதீங்க” என்று குரலை உயர்த்தியவன்,

“நீங்களாவது சொல்லுங்கண்ணி!” பழனியிடம் இறைஞ்சுதலாக முறையிட்டான். விட்டால் அழுது விடுவான் போல.

“நீயாச்சு… அவராச்சு. உங்களுக்குள்ள என்னை இழுக்காதீங்க! உங்களுக்கிடையில வந்தா நான் தான் மூக்கு உடைபடணும்.” பட்டென கழன்று கொண்டாள். 

பாவமாக சீனியைப் பார்க்க, “என்னமோ கதை தொடங்கும்போது சொன்ன. நீங்க ஹீரோ இல்ல. எதுக்கும் உங்களைத் தேடி வரமாட்டேன்னு. இப்போ என்ன தேவைக்கு வந்த?” 

“அது வேற வாய் பாஸ். அன்னைக்கு ஏதோ நேரம் உச்சத்துல இருந்திருக்கு. இப்படியெல்லாம் நடக்கும்னு எதிர் பாக்கல! நீங்க தான் பாஸ் சீஃப் கெஸ்ட். நீங்க தான் வந்து எனக்காகப் பேசணும்!”

“சீஃப் கெஸ்ட்னா ரிப்பன் கட் பண்ணத்தான்டா வரணும். இதுவும் நீ தானே சொன்ன. அதனால நீ கூப்பிடற வரை இப்படி ஓரமா உக்காந்திருக்கேன்!” என்றவன் காஃபியை குடித்து முடித்து கப்பை உள்ளே எடுத்துப் போக, 

“பாஸ்…” என பின்னாலே சென்றவன்,

“கொடுங்க பாஸ். நான் கழுவி வைக்கிறேன்.” கேட்டவுடன் மறுபேச்சு பேசாமல் கொடுத்துவிட்டு மறுபடியும் சோஃபாவில் வந்து அமர்ந்து கொண்டான். 

‘கொலைகாரக் குடும்பம்டா சாமி!’ உள்ளுக்குள் நொந்து கொண்டவன் இரண்டு கப்பையும் கழுவி வைத்துவிட்டே வந்தான். 

வேற வழி! காரியம் ஆகவேண்டுமானால் கழுதை காலைக்கூட பிடிக்க வேண்டும் என சொல்லி வைத்திருக்கிறார்களே! இங்கே என்ன… பாஸோட கால் தானே. பிடிப்போம். இப்போதைக்கு வீரியமல்ல காரியம்தான் முக்கியம் ராகவா! மனசாட்சி அறிவுறுத்த, மீண்டும் வந்து சீனியின்‌ முன் அமர்ந்து கொண்டு அவன் முகத்தையே பார்த்தான். 

பழனிக்கே பாவமாகப் போயிற்று. எவ்வளவு தூரம் இருவரும் போகிறார்கள் எனப் பார்க்கலாமென அவளும் அமைதி காத்தாள். 

காலையில் இருந்து அவனை தவிக்க விட்டு வாட்டி வளவெடுத்துக் கொண்டிருக்கிறான் சீனி. இவனும் வந்ததிலிருந்து எதையோ சொல்ல முற்படுவதும், தயங்கி, மருகி நிற்பதுமாக இருக்க, எதற்கோ தன்னுடைய உதவியை எதிர்பார்க்கிறான் எனத்‌ தெரிந்த சீனியும்‌ பிடிகொடுக்காமல் நழுவிக் கொண்டிருந்தான். 

இன்னும் ஒரு வாரத்தில் தண்டபாணி, இலக்கியா பிள்ளைகளுக்கு காதணி விழா. ஆண் ஒன்று பெண் ஒன்று என மணிமணியாய் இரண்டு குழந்தைகள். (ஏம்மா… எங்க கட் பண்ணி எங்க ஓபன் பர்றேன்னு நீங்க கேக்குறது புரியுது. இப்படியே கதையை ஃபாலோ பண்ணுங்க.) 

தண்டபாணி திருமணம் முடிந்து வந்து செட்டில் ஆனது சென்னையிலேயே. பெங்களூரிலிருந்த ***கம்பெனியின் சென்னை கிளை கம்பெனிக்கு மாற்றல் வாங்கி வந்து விட்டான். 

சீனியும், ராகவனும் தங்கியிருந்த அதே எதிர்புற அபார்ட்மெண்ட்டில் தான் தண்டபாணி வாசம். எழுந்தவுடன் பால்கனி பக்கமாக வந்தால் மச்சான்ஸ் தரிசனம் தான் இருவருக்கும். ஒரு நாள் தரிசனம் கிடைக்கவில்லை என்றால் கூட, “என்ன பழனி, உங்க அண்ணன் இன்னும் எந்திரிக்கலையா?” என கேட்குமளவிற்கு இருக்க,

“வரவர உங்க கண்ணு மச்சானைத்தான் அதிகமா தேடுதுபோல” பழனியே கிண்டல் செய்யுமளவிற்கு இருந்தது அவனது மச்சான் மீதான அளப்பரிய பாசம்.. மாமா! மாப்ளே! என பிண்ணிக் கொள்ளவில்லையே ஒழிய, முன்பு போல் முட்டிக் கொள்வதில்லை. சகஜமாக முகம் கொடுத்து பேச ஆரம்பித்திருந்தனர். 

ஆனால், நாத்தனார்கள் இருவருக்குள்ளும் ட்ரென்டிங் நாத்தனார்களாக நன்றாகவே ஒத்துப் போயிற்று. ஷாப்பிங், கோவில் என எங்கு செல்வதாக இருந்தாலும் இருவரும் தான் வெளியே செல்வது. பிள்ளைகளைக் கூட இவர்களிடம் விட்டுவிட்டு இருவரும் ஜோடி போட்டு வண்டியில் கிளம்பிவிடுவர். ஆண்களை கூட பெரிதாக தங்களுடன் கூட்டு சேர்த்துக் கொள்வதில்லை. 

இலக்கியா, மசக்கை காலங்களில் பழனி தான் கவனித்துக் கொண்டாள். சுகந்தியும் வேலை பார்ப்பதால் தொடர்ந்து விடுப்பு எடுக்க முடியவில்லை. பேரு காலத்திற்கு வேண்டுமென விடுப்பை சேமித்து வைத்தார். 

முதல் ஒரு வருடம் குழந்தை இல்லாமல் நாட்கள் தள்ளிப்போயிற்று. ஐந்தாறு மாதங்கள்தான் கடந்திருக்கும். அதற்குள், “பழனி.. உங்க அண்ணிக்காரி பிள்ளைய தள்ளிப் போடுறாளா?” மெல்ல நூல் விட்டுப் பார்த்தார் கலையரசி. 

“ஏம்மா…” என்றவளுக்கு அப்பொழுதே அவரது கேள்வியின் நோக்கம் புரிந்தது.

“இல்லடீ. ப்ளே ஸ்கூல் ஆரம்பிக்கிறே… அது இதுன்னு சொல்லிட்டுருந்தா. அதனால பிள்ளைய தள்ளிப் போடுறாளோ என்னவோ. ஒரு குழந்தையப் பெத்து எங்கிட்ட கூட கொடுத்துற சொல்லு. அதுக்கப்பறம் என்ன வேணாலும் ஆரம்பிக்கட்டும். நாங்க வளத்துக்கறோம். அடுத்த பிள்ளைய வேணா  எப்போ வேணாலும் பெத்துக்கட்டும்!” சாடைமாடையாக கலையரசி மகளிடம் சொல்ல,

“ஏம்மா… நீங்க வேற. ஒவ்வொரு மாசமும் இலக்கியாவ சமாதானப் ‌படுத்தங்குள்ள நான் படுறபாடு உங்களுக்கு தெரியாது. சின்ன பிள்ளைங்க கூடவே இருந்தவங்க. அவங்களுக்கு பிள்ளைகன்னா அத்தனை ஆசைம்மா. அவங்க எதுக்கு தள்ளிப் போடணும்?”

“அப்பனா லேடி டாக்டரப் பாக்கலாமா?” அவசரமாக கேட்க,

“அம்மாஆ!” ஃபோனிலேயே கத்தியிருந்தாள் பழனி.

“ஒரு வருஷமாவது அவங்கள நிம்மதியா இருக்க விடுங்கம்மா!” கோபமும் எரிச்சலுமாக சொல்லி முடிக்க,

“உனக்கென்ன தெரியும். பார்த்தி பொண்டாட்டிக்கு ரெண்டு மாசம். இவங்களுக்கு அப்பறம் தானே அவங்களுக்கு கல்யாணம் ஆச்சு. இங்க கேக்குறவங்களுக்கு பதில் சொல்ல முடியல. நீங்க எட்டத்துல இருக்கீங்க‌. உங்க காதுக்கு எதுவும் வராது!” கலையரசி புலம்ப, இவளுக்குதான் கோபம் கண்ணைக் கட்டியது. 

தண்டபாணி திருமணம் முடிந்த அடுத்த மூன்றாம் மாதம் பார்த்தி, நான்சி திருமணம் முடிந்தது. இப்பொழுது நான்சி உண்டாகியிருக்க அடுத்த கேள்வி வழக்கம்போல கலையரசி உன் மருமக உண்டாகவில்லையா என்பதுதான். 

இவள் திருமணத்திற்கு முன்பே உண்டானதுக்கும் இதே ஊர்தான் பேசியது. இப்பொழுது இலக்கியா திருமணத்திற்கு பின்பு உண்டாகததற்கும் அதே ஊர்தான் பேசுகிறது. பேசுவதற்கு அவர்களுக்கு ஏதாவதொரு கண்டென்ட் வேண்டும். விசித்திரமான உலகம்டா சாமி என நொந்து கொண்டாள். 

அடுத்து ஓரிரு மாதங்கள் பார்த்துவிட்டு இலக்கியாவே மகப்பேரு மருத்துவரைப் பார்க்க, பழனியை துணைக்கு அழைத்தாள். அவளுக்கு சுகந்தியின் குடைச்சல். “சம்பந்தகாரவுக கேக்கறதுக்குள்ள நாமலே டாக்டரப் பாக்கலாம் இலக்கியா” என்றிருந்தார். 

இரண்டு நாட்களுக்கு முன்பு தான் தண்டபாணியை மருத்துவரைப் பார்க்க அழைத்து போதும் போதும் எனுமளவிற்கு வாங்கிக் கட்டியிருந்தாள். 

கண்கள் கலங்கியவளை, “ஒரு வருஷம் போகட்டும் லயா. ரவ்வும் பகலும் போட்ட எஃபோர்ட் என்னைக்கும் வீண் போகாதுடீ. சின்சியரா உழைச்சதுக்கு என்னைக்குனாலும் கைமேல் பலன் கிடைக்கும்.” கை வளைவில் இறுக்கி, சரசமாகவே அவளை சமாதானப்படுத்தி இருந்தான். 

அண்ணன் கூறியதையே தங்கையும் வழி மொழிந்தாள்.‌ பழனியும், “வருஷம் முடியட்டும் இலக்கியா. நானே அண்ணன்கிட்ட சொல்லி, உன்னை டாக்டர்கிட்ட கூட்டிப் போகச் சொல்றேன்! நீங்க ரெண்டு பேரும் தான் போகணும்” என்றிருந்தாள்.‌

இவர்களை இலக்கியா படுத்தியபாட்டிற்கு, ஒரு வருடம் முடிந்து முதல் திருமண நாளை கொண்டாடிய மறுமாதமே தண்டபாணி உழைப்பிற்கு பலன் கிடைத்தது.

மருத்துவர் வாழ்த்துச் சொல்லி மருந்து சீட்டை கையில் கொடுத்த பொழுது கூட நம்பாமல்தான் இலக்கியாவைப்‌ பார்த்தான். சந்தோஷத்தில் அவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது. 

வெளியே வந்து, ரெஸ்ட்டாரன்ட் அழைத்து சென்றான். இருவருக்கும் மாதுளை ஜுஸ் சொல்லியவன், ஜுஸ் வரும் வரை அவளையே தான் பார்த்திருந்தான். 

என்ன என்பது போல் பார்க்க, “நான்தான் சொன்னேன்ல. உண்மையான உழைப்பு என்னைக்கும் வீண் போகாதுன்னு” என்று கண்சிமிட்ட, வெளியிடம் என்றும் பாராமல் வெளியே தெரியாமல் கிள்ளியிருந்தால். 

அங்கிருந்தே கலையரசிக்கு ஃபோனில் தகவல் சொல்லியவன், மூனு மாசம் முடியட்டும் எல்லாருக்கும் சொல்லிக்கலாம். அதுக்குள்ள தம்பட்டம் அடிக்காதீங்க என்றிருந்தான். 

சந்தோஷமாக வீட்டிற்கு வந்து தங்கையிடமும் விஷயத்தை சொல்ல அவளுக்கு முன்பே தெரியும். வீட்டிலேயே நாத்தனார்கள் இருவரும் ப்ரெக்னென்சி கிட் வாங்கி பார்த்துவிட்டனர். உறுதிப்படுத்திக் கொள்ளத்தான் மருத்துவரை சந்தித்தது.

அங்கேயே சாப்பாட்டை முடித்துக் கொண்டு இவர்கள் அபார்ட்மெண்ட் வந்தனர். முகம் கொள்ளா புன்னகையுடன் தண்டபாணியைப் பார்க்க அவனோ உம்மென இருந்தான்.‌ இவளுக்கு தான் ஒன்றும் புரியவில்லை. இவ்வளவு நேரமும் நன்றாகத்தானே இருந்தான். ஒரு வேளை காலையில் டெஸ்ட் பண்ணி பார்த்ததை தன்னிடம் சொல்லவில்லை என்ற கோபமோ? தன்னிடம் தானே முதலில் சொல்லியிருக்க வேண்டும் என்ற அவனது எதிர்பார்ப்பும் நியாயம் தானே என்று நினைத்தவளுக்கு உள்ளுக்குள் லேசாக பயமெடுத்தது. 

“டாக்கடரப் பாத்து கன்ஃபார்ம் பண்ணிட்டு சொல்லாம்னுதாங்க…” பயத்தோடு  தயக்கமாக இழுக்க, 

“அதெல்லாம் பிரச்சினை இல்ல…” என்றவன் முகபாவனையில் எதையும் கணிக்க முடியவில்லை. 

“அப்பறம் எதுக்கு உம்முன்னு இருக்கீங்க?’’

“ப்ப்ச்ச்… ஒன்னுமில்ல..” சலிப்பாய் சொல்ல,

“இப்போ சொல்லப் போறீங்களா இல்லையா?” குரலை உயர்த்தினாள். 

“நெல்லுக்கு பாயறது புல்லுக்கும் பாயும்கற மாதிரி, குழந்தைக்காக ஃபெர்டைல் டேட்ஸ் (fertile dates) அன்னைக்கி உன்னோட கவனிப்பு போதும் போதும்கறளவுக்கு பலமா இருக்கும். நான் ஒன்னு கொடுத்தா நீ டபுளா, ட்ரிபுளா திருப்பிக் கொடுப்ப. இனிமே அதுக்கு வாய்ப்பில்லையே!” சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அப்பராணியாய் சொல்ல, 

“அடப்பாவி! நான் கூட என்னமோ ஏதோன்னு பயந்து கிடக்கே. உங்களுக்கு கவனிப்பு வேணுமா. அதுவும் பலமா வேணுமா? டபுளா வேணுமா? கவனிச்சுட்டா போச்சு.‌ உங்கள இன்னைக்கி பஞ்சாமிர்தமாக்கல…” மூச்சுவாங்க சுற்றும் முற்றும் அடிக்க ஏதாவது சிக்குமா என பார்வையை ஓட்ட, அவளை இழுத்து கைப்பிடிக்குள்‌ வைத்தவன், இறுக்கிக் கொண்டு, “தாங்க்ஸ்” என நெற்றியில் ஆழ முத்தமிட்டான். ஒற்றை முத்தம் ஓராயிரம்‌ சங்கதி சொல்லியது. 

இலக்கியா, கண்கள் கசிய அவனையே பார்த்திருந்தாள். சில கணங்கள் அமைதியாக கைப்பிடிக்குள் கரைய, “அப்போ நீங்களும் ஒவ்வொரு மாசமும் எதிர்பாத்தீங்க தானே. நான் சொன்னப்ப எல்லாம் ஆசையில்லாத மாதிரி நடிச்சிருக்கீங்க.” அவன் முகம் பார்த்து கேட்க, அவனது சிறு புன்னகை அதை ஆமோதித்தது. 

அவனுக்குள்ளும் எதிர்பார்ப்பு இருந்ததுதான். இப்பொழுது எத்தனை கேள்விப்படுகிறான். குழந்தை என்றாலே இப்பொழுது லக்ஷரி ஆகிவிட்டது. நாட்கள் நகர அவனுக்கும் ஏமாற்றம் இருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ஏற்கனவே ஒவ்வொரு மாதமும் இவளை சமாளிப்பதே பெரும்பாடாக இருக்க, இவனும் ஏமாற்றத்தை காட்டினால் அவ்வளவுதான். 

இப்பொழுது தனக்குக் கிடைத்த வெகுமதியை மனைவியின் முகமெங்கும் முத்திட்டு கொண்டாடினான். 

அடுத்து நாட்கள் ரெக்கை கட்டிப் பறந்தது. பால் குடித்தாலே இவளுக்கு வயிற்றில் ஒன்றும் தங்காதே மசக்கையை எப்படி சமாளிப்பாலோ என்றிருக்க, மார்னிங் சிக்னெஸ் தவிர வேறெதுவும் இல்லை. நன்றாக சாப்பிட்டு நன்றாகத் தூங்கி ஓய்வெடுத்து குழந்தைக்கு தான் ஓவர் வெய்ட்‌ ஏற்றி வைத்திருந்தனர் நாத்திகள் இருவரும். இந்த ஒரு காரணம் பத்தாதா… பிரசவம் சி செக்ஷன் தான். கலையரசியே அடுத்த குழந்தையைத் தள்ளிப் போட சொல்லுமளவிற்கு இலக்கியா உடம்பு படுத்தி வைத்தது. ஆனாலும், அடுத்த இரண்டு வருடத்தில் மீண்டும் ஒரு பெண் குழந்தை. 

அவர்களுக்குதான் அடுத்த வாரம் பழனியில் முடியிறக்கி காதணிவிழா. 

ராகவனுக்கு பயிற்சி காலம் முடிந்து அவனுக்கு வேலை நியமனமானது என்னவோ சொந்த மாவட்டத்திலேயே தான்‌. ஆனால் அடுத்து பணி உயர்வும் இடமாற்றம் வந்தது திண்டுக்கல்லுக்கு. அதுவா அமைந்ததா அல்லது அமைத்துக் கொண்டானா என்பது நம்ம ராகவனுக்கு தான் வெளிச்சம். இந்த ஐந்து வருடத்தில் ராகவன் இப்பொழுது வங்கி மேலாளர். 

“சாட்சிக்காரன் கால்ல விழறத விட சண்டைக்காரன்‌கால்ல விழுந்தறலாம். இந்நேரம் மாமாகிட்ட பேசியிருந்தா காரியம் ஆகியிருக்கும்.” அலுத்துக் கொள்பவன்‌ போல் எங்கோ பார்த்து சொல்ல, 

“ஹோஓ… உங்க மாமனா? அப்போ துரை போய் உங்க மாமன்கிட்டயே பேசுங்க! என்னை எதுக்கு தேடி வந்தீங்க? பேசினாத்தானே தெரியும் சங்கதி. ரெண்டு பிள்ளையப் பெத்தும் இன்னும் நேருக்கு நேரா பேச எனக்கே பயமாருக்கு. இவரு போய்‌ பேசுறாராம்!” நக்கலாய் பதில் சொல்ல, 

“ராகவா வா! டிஃபன் ரெடி!” பழனி அழைக்க எனக்கு வேண்டாம் என்பது போல் உம்மென உட்கார்ந்திருந்தான். 

“எனக்கு எடுத்து வை! இன்னைக்குன்னு பாத்து பயங்கரமா பசிக்குது. பூரி உருளைக்கிழங்கு தானே?” கேட்டுக் கொண்டே சீனி எழுந்து செல்ல, இவன்தான் கொலை வெறியோடு பார்த்திருந்தான். 

சீனிக்கு தட்டு வைத்து பழனி பரிமாற, பின்னாலே ராகவனும் எழுந்து வர, வந்த சிரிப்பை வாய்க்குள் பூரியை திணித்து அடக்கினான் சீனி. 

சாப்பிட்டு முடித்தவன், “வர்றேன் அண்ணி. கிளம்பியிருங்க. நாங்களும் கிளம்பி வர்றோம். நகைக்கடைக்கு போய்ட்டு வந்துறலாம்.” என்றவனிடம் சரியென அனுப்பி வைத்தாள். 

காது குத்திற்கு நகை எடுக்கத்தான் சென்னை வந்திருக்கிறான். அப்படியே எல்லாருக்கும் துணியும் எடுத்துவிடலாம் என கூற, முதலில் நகை எடுத்துவிட்டு, பிறகு துணிக்கடைக்கு செல்லலாம் என பேசி வைத்தனர். 

அண்ணன் பிள்ளைகளுக்கு அத்தை சீர் செய்ய பழனியும் நகை எடுப்பதாக இருக்க எல்லாரும் சேர்ந்தே போகலாம் என முடிவு ‌செய்திருந்தனர்.  

சீனி வீட்டில் சாப்பிட்டு வந்தவனை, இலக்கியா சாப்பிட அழைத்தாள். அங்கே சாப்பிட்டதாக சொல்லிவிட்டு மாமனைக் கண்டதும், சுகந்தி இடுப்பிலிருந்து தாவி வந்த ஒரு வயது மருமகளை அள்ளி மடியில் வைத்துக் கொண்டு சோஃபாவில் அமர, போட்டிக்கு வந்தான் மூன்று வயது புவனேஷ்.

மாமன் என்றால் இரண்டுக்கும் அப்படியொரு செல்லம். அதுவும் சின்னவளைத் தூக்கிவிட்டால் போதும். எங்கிருந்துதான் மூக்கு வியர்க்குமோ. புவனேஷ் ஓடி வந்து மாமன் தோளில் தொற்றிக் கொள்வான். அவர்களோடு சிறிது நேரம் சென்றது. 

சார்ஜரில் போட்டிருந்த அவனது கைபேசி அழைத்தது. இலக்கியா எடுத்துப் பார்த்தவள், “யாரோ ஜான்னு இருக்கு ராகவா! எடுத்து வரவா?” பிள்ளைகளிடம் விளையாடிக் கொண்டிருந்தவனிடம் கேட்க, 

“அப்பறம் பேசிக்கறேன் க்கா!” என்றான்‌ இயல்பு‌ போல் முகத்தில் எதையும் காட்டாமல். 

அடுத்த ஐந்து நிமிடம் கூட ஆகியிருக்காது. அம்மாவிடம் குழந்தையை கொடுத்தவன், ஃபோனை எடுத்துக் கொண்டு பால்கனி பக்கமாக வந்தான். சற்று முன் வந்த அழைப்பிற்கு மீண்டும் அழைக்க, அழைப்பை ஏற்றும் அமைதி காத்தது எதிர்முனை. 

“ஜானு” என்றதுதான் தாமதம். 

“ஜானு… மொழம்னு நீங்க பாட்டுக்கு அளந்துட்டிருங்க. காது குத்து முடிஞ்ச மறுநாள் பொண்ணு பாக்க வர்றாங்க. தெரியுமா தெரியாதா?” எதிர்முனை எகிறியதில் இங்கு இவனுக்கு காது அடைத்தது. 

ஜானகிக்கு உடன் பிறப்பு என்று ஒரே தங்கை மட்டுமே. ஆண் வாரிசு கிடையாது. அவர்களுக்கும் தண்டபாணி தான் அண்ணன் சீர் செய்யவேண்டும். 

“ஜானூ… பாஸ்கிட்ட பேசலாம்னு போனேன். அவர் என்னானு கூட கேக்கல. மாமாகிட்ட பேசவே பயமாயிருக்கும்மா!” சோகமாய் பதில் சொல்ல, 

“உனக்கெல்லாம் யாருய்யா மேனேஜர்‌ போஸ்ட்டிங் கொடுத்தது? இப்படி பயந்து சாகுற!?” என்றவள் மரியாதை காற்றில் பறந்தது.

“அது வேற. இது‌ வேற ஜானு. உனக்கு தெரியாதா?” என்றவன் குரல் இறைஞ்ச, 

“திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்லாதீங்க. இன்னும் வீடு இல்ல. கார் இல்ல. லொட்டு இல்ல. லொசுக்கு இல்லைன்னு. நான் தான் எனக்கு எதுவும் வேண்டாம்னு சொன்னேன்ல.” அவள் பேசிய விதத்தில் இவனுக்கே சிரிப்பு வந்துவிட,

“அதென்ன ஜானு… லொட்டு… லொசுக்கு” இப்பொழுது சற்றே துள்ளலாய் ஒலித்தது குரல்.

“ரொம்ப முக்கியம். நான் என்ன சொல்லிட்டிருக்கேன். கொஞ்சம் கூட சீரியஸ்னெஸ் இல்லாம நீங்க எதுக்கு மீனிங் கேக்குறீங்க. ஐயா‌ இப்போ பேங்க் மேனேஜர் வேற. எவளாவது இந்த பனியாரத்தை கொத்திட்டுப் போயிருவாளோன்னு பயமா இருக்கு. நானும் எத்தனை நாளைக்கு வீட்ல சமாளிக்கிறது. நீங்க என்னடான்னா” என்றவள் குரல் தளுதளுப்பது தெரிந்தது. ஒரு பெண்ணாக எத்தனை நாட்களுக்கு தான் வீட்டில் சமாளிக்க முடியும்.

ஆனால் இவனுக்கு தான் பெண் கொடுத்திருக்கும் வீட்டில் தன் தகுதி மறந்து பெண் கேட்க பயம். பெண் இல்லை என மரியாதையாக மறுத்துவிட்டால் கூட பரவாயில்லை. பெண்ணை மயக்கிவிட்டாய் அது இது என்று தராதரமில்லாமல் பேசிவிட்டால் என்ன செய்வது. அக்காவிற்கும்‌ பெரும் சங்கட்டம். அடுத்து சொந்த பந்தங்களுக்குள் எப்படி முகம்‌ பார்த்து பேசுவது. 

யாரிடமும்‌ வெளிப்படையாக அதிகம் பேசிப் பழகாத இன்ட்ரோவெர்ட் எனும் ரகம் நம்ம ராகவன். அவன் அதிகமாக பேசிப் பழகியதே சீனியிடம் மட்டும் தான். அவனால் இப்படி தான் யோசிக்க முடிந்தது. 

“என்னால முடிஞ்சளவுக்கு படிப்ப காரணம் காட்டி இத்தனை வருஷமா என் கல்யாணத்தை தள்ளிப் போட்டுட்டேன். உங்க தயவுல ஒரு டிகிரியோட நிக்க வேண்டியவ கெஞ்சி கூத்தாடி ரெண்டு டிகிரி முடிச்சுட்டேன். இதுக்கு மேல உங்க சாமர்த்தியம்” என்றவள் பட்டென அழைப்பை துண்டித்தாள். 

என்ன செய்வதென்று புரியாமல் ஃபோனையே வெறித்துப்‌ பார்த்திருந்தவனை,

“ராகவா கிளம்பலையா?” இலக்கியா குரல் கலைத்தது.

“இதோக்கா!” என்றவன் குரலில் சுரத்தையில்லை. 

சீனியிடம் சொல்லி தண்டபாணியிடம் பேசச் சொல்லலாம் என்று தான் எழுந்தவுடனே அவனைப் பார்க்க சென்றான். அவன்‌தான் காது கொடுத்தே கேட்கவில்லையே. தண்டபாணியிடம் பேசலாமென்றால் அவனைப்‌ பார்த்தாலே இன்னும்‌ காத்துதான் வருது. அவன் என்ன செய்ய. 

மனமேயில்லாமல் கிளம்பிச் சென்றான். 

அக்கா பிள்ளைகளுக்கு தாய்மாமனாக இவன் வாங்கிய நகையைவிட அண்ணன் பிள்ளைகளுக்கு செய்முறை‌ செய்ய பழனி எடுத்த நகை அதிகமாக இருந்தது. அங்கேயே ராகவன் மனம் சுணங்கி விட்டான். 

அவனும் இரண்டு பிள்ளைகளுக்கும் காதுக்கு தோடு, கழுத்துக்கு செயின் என எல்லாமும்‌ எடுத்திருந்தான்தான். தண்டபாணி குடும்பத்திற்கென அய்யம்மா, வேலாயுதம் முதற்கொண்டு அனைவருக்கும் துணிமணி எடுத்தான். சுகந்தி தன் சேமிப்பையும் கொடுக்க வாங்க மறுத்துவிட்டான். 

பதவி உயர்வு கிடைத்து ஒரு சில மாதங்கள் தான் ஆகிறது. திண்டுக்கல்லில் தனியே வீடு எடுத்து தங்கியிருக்கிறான். கார் ஒன்று மாத தவணையில் வாங்கியிருக்கிறான். அடிக்கடி இடமாற்றம் வரும் என்பதால் வீடு என்று எங்கும் நிரந்தரமாகக் கட்ட முடியாதென இப்போதைக்கு காலி மனை ஒன்றிற்கு முன்பணம் கொடுத்து வைத்திருக்கிறான். லோனுக்கு அப்ளை செய்திருக்கிறான் மீதி பணத்திற்கு. அவன் செலவு போக சேமித்ததில் தான் கையைக் கடிக்காமல் தாராளமாக காது குத்திற்கு செலவு செய்கிறான். 

அப்படியிருந்தும் சீனி அளவிற்கு தன்னால் எடுக்க முடியவில்லையே என்ற குறை. அதற்காக சீனியும்‌ இவனைவிட‌ குறைவாக எடுக்க முடியாது. பழனி, எங்கம்மாவுக்கு என்னால பதில் சொல்ல முடியாது என்றுவிட்டாள். இவர்கள் சொந்தங்கள் வகையில் நகையாகத்தான் அதிகமாக செய்முறை‌ வரும். அதில் அத்தை சீர் தனித்து தெரிய வேண்டும் என்பது பழனியின் எண்ணம். அவளையும் ஒன்றும்‌ சொல்ல முடியாது. இன்னைக்கி நம்ம செஞ்சா நாளைக்கி நம்ம பிள்ளைகளுக்கு என்றுவிட்டாள். அதற்கு தானே செய்முறை‌ செய்து வைப்பதெல்லாம். 

ராகவன் முகத்தைப் பார்த்தே அவனது எண்ணத்தைப் படித்தான் சீனி. அவனை‌ தனியே அழைத்துச் சென்றவன்,  “ராகவா… நீ செய்றது தாய்மாமன் சீர். நாங்க செய்றது செய்முறை. நீ செய்யறது திருப்பி செய்யணும்னு அவசியமில்ல. ஆனா நாங்க செய்றதை அதுக்கு மேல சேத்து திருப்பிச் செய்யணும். அங்க வந்து பாரு. மொய் வைக்கிறோம்கற பேர்ல அவங்கவங்க பெருமைய எப்படி‌க் காட்டுறாங்கன்னு. மெஷின் வச்சுதான் மொய்க்காசு எண்ணுவாங்க. அதனால இதை பெருசு பண்ணாதே” என்று‌ எத்தனை சொன்னாலும் அவனுக்கு தான் மனம்‌ மேவவில்லை. 

இவர்களிடம் எப்படி‌ பெண் கேட்பது என்ற ஒன்றே அவன் சிந்தையை வண்டாய்க் குடைந்தது. தனக்கே தனக்காக ஒருத்தி இத்தனை வருடமாகக் காத்திருக்கும் பொழுது எப்படி விட்டுக் கொடுக்க முடியும். இவனும் அதற்காகத்தானே‌ சுகந்தி எத்தனை முறை இவனது திருமணப் பேச்சை எடுத்தாலும் பணி உயர்வை காரணம் காட்டி தள்ளிப் போட்டான். 

பலவாறாக யோசித்து தனக்குள் குழம்பிக் கொண்டிருந்தவனை, “ராகவா இந்த சேலை எப்படியிருக்கு” என்றாள் இலக்கியா.

“இது யாருக்குக்கா… அதான் உங்களுக்கெல்லாம் எடுத்தாச்சே?” என்றவனிடம்,

“இது ஜானகிக்குடா. மறுநாள் அவள பொண்ணு பாக்க வர்றாங்கல்ல. எனக்கும் ஒரு சேலை எடுத்துட்டு வாங்கண்ணின்னு சொன்னா. இந்தக் கலர் எப்படியிருக்கு. அவளுக்கு நல்லா இருக்கும்ல” புடவையை அவன்‌ முன் நீட்டி ஆர்வமாகக் கேட்க,

 “நல்லால்ல” என்றான் பட்டென பாவக்காயைக் கடித்தவன் போல் முகத்தை வைத்துக் கொண்டு. 

“இதுக்கென்னடா.. நல்லாத் தானே‌ இருக்கு. ஜானகி கலருக்கு எடுப்பா இருக்கும்” என்று‌ புடவையை மீண்டும் மீண்டும் திருப்பி பார்த்தவளுக்கு என்ன தெரியும், நெருப்பின் மீது நிற்பவன் போல் இங்கே ஒருத்தன் தவிக்கும் தவிப்பு.  

‘பொண்ணு பாக்க புதுப்புடவை எடுத்து வரச் சொன்னாளா? வந்து கவனிச்சுக்குறேன்’ என்றவன் உள்ளம்‌ கொதித்தது.

அட, என்னடா நீ! தானும் படுக்க மாட்டே. தள்ளியும் படுக்க மாட்டேன்னா என்னடா அர்த்தம். மனசாட்சி மானவாரியாய் இடித்துரைத்தது. 

**************

மக்களே! கோவிச்சுக்காதீங்க! பத்து நாளா திருவிழான்னு ஊருக்குப் போயி, அம்மா‌ வீட்ல சொகுசு கண்டதுல உடம்பும், மூளையும் ஃபார்ம்க்கு வர கொஞ்சம் லேட்டாயிருச்சு. அதுவுமில்லாம அரசியல் செய்தியெல்லாம் நான் பாப்பேன்னு கனவுலகூட நெனச்சதில்ல. ஃபேஸ்புக் பக்கம் போனாலே ஃபோனை கீழே வைக்க முடியல. அதனால நல்ல நாளும் பொழுதுமா திட்டாம கதையப் படிச்சு கருத்த சொல்லிருங்க. இன்னும் இரண்டு எபில கதை முடிவுக்கு வந்துவிடும் மக்களே! 

Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫 

15 thoughts on “மாமா! மாப்ளே! 16”

    1. கதை முடிவுக்கு வந்துட்டதால அப்படி ம்மா.
      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

    1. ரொம்ப சுத்தினாலும் உங்களுக்கு போர் அடிக்கும்ல அதான் மா… 🫣😉
      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

  1. ஒருவேளை தணிகாவுக்கு ஜானு ,ராகவன் சங்கதி தெரியுமா ..?
    அவன் அம்மா தான் பொண்ணு பாக்க வர்றாங்களா.?
    ராகவா இந்த விடயத்தில் யார் தயவும் எதிர்பாக்க கூடாது ,உன்னை நீயே நம்பி பொண்ணு கேள் ,அதுவும் யாருகிட்ட உன் மச்சானிடம் ,அவனை உனக்கு தெரியாதா 😀

    1. மச்சானப்பத்தி தெரிஞ்சதாலதானே பயமே பாகக்லாம்மா ராகவன் சாமர்த்தியத்தை 😉😉
      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

  2. மச்சானப்பத்தி தெரிஞ்சதாலதானே பயமே பாகக்லாம்மா ராகவன் சாமர்த்தியத்தை 😉😉
    Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top