இந்த அறையும் புதிதல்ல. இந்த அறைக்கு அவளும் புதிதல்ல. அறை பூசியிருந்த அரிதாரம் புதிது. அவளுக்குள் கொந்தளிக்கும் உணர்வுகள் முற்றிலும் புதிது.
அடுத்து நடக்கவிருப்பது அறியாதவள் இல்லை. அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் பருவம் அறிமுகப்படுத்திய பாடத்தின் அரிச்சுவடி அறிந்தவள்தான். ஆனால் பரீட்சை எழுதத்தான் பயந்து கொண்டிருக்கிறாள்.
ஒரு பெண்ணிற்கு இந்த நேரத்தில் இயல்பாக இருக்கவேண்டிய பதட்டம், பயம், படபடப்பு, தவிப்பு எல்லாமே அவளுக்குள்ளும் இருந்தது. ஆசை, தாபம் இவற்றைத்தவிர. ஆனால் எல்லாம் எதிர்மறையாக.
நெருப்பு வளையத்திற்குள் சிக்கிக்கொண்டது போல், அமர்ந்திருந்த அலங்காரக் கட்டில் தகித்தது. தன்னைச் சுற்றிலும் பூக்களின் வாசம். துளியும் மூளை கிரகிக்கவே இல்லை. வெட்ட வெளிக்கு ஓடிச்சென்று ஓவென வெடிக்க வேண்டும் போல் அழுத்தம் அவளை மூச்சடைக்க வைத்தது.
மருத்துவமனைவிட்டு வந்தவுடன் கணபதி மகளோடு தன் வீட்டிற்கு வந்துவிட்டார். பெண் இங்கிருந்துதான் புகுந்த வீடு செல்ல வேண்டும் என்று. முறைப்படி தாய்மாமனான ரெங்கநாதன் குடும்பத்தையும் அழைத்தே, உடன்பரிசம் போட்டு முதல் நாள் நிச்சயம், மறுநாள் கல்யாணம் என முடிவு செய்தனர். பெண்வீடு, மாப்பிள்ளை வீடென்று இல்லாமல் செலவு, ஏற்பாடு எல்லாமே பொது என ஆகிப்போயிற்று.
ஒரு பக்கம் மகள். மறுபக்கம் தன் கைக்குள் வளர்ந்த மருமகன். ஒரே கல்லுல ரெண்டுமாங்கா என கணபதிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. மனுஷன் பறக்காத குறை. கையிலேயே பிடிக்க முடியவில்லை.
விநாயகம் பஸ் கம்பெனி மற்றும் அம்மையப்பன் ஹோம் அப்ளையன்சஸ் குடும்பத்தாரின் கல்யாணம். தேனியே ஒன்றுதிரண்டது போல் மண்டபம் நிரம்பி வழிந்தது.
இதில் கல்யாணத்திற்கு வந்த இடத்தில், மதியழகன் குடும்பத்தார் இருவீட்டினருக்கும் பொதுவான சொந்தம் சதாசிவம் மாமாவையே வைத்து தன் தங்கைக்கு செழியனை மாப்பிள்ளை விசாரிக்க, அம்மையப்பனும் எதிர்பார்த்ததுதான் என்பதால் மறுத்துப்பேச இடமில்லை.
ஒரு கல்யாணம் நடந்தால் தொடர்ச்சியாக இன்னொரு கல்யாணம் முடிவாக வேண்டும் போல. தங்கை திருமணத்தில் நடந்த பஞ்சாயத்தில் தானே வேந்தனும் மங்கையை பெண் கேட்டான். அடுத்து இவன் கல்யாணத்தில் தம்பிக்கு அமைகிறது. இப்போதைக்கு வெளியே தெரிய வேண்டாம் கண்ணடி படும். இவனுக்கும் இருபத்தைந்து பிறக்கட்டும். முத்துவும் படிப்பு முடிக்கட்டுமென தங்களுக்குள் பேசி வைத்துக் கொண்டனர்.
இதற்கென உருவாக்கப்பட்டது தானே திருவிழாக்களும், குடும்ப விழாக்களும். சொந்த பந்தங்கள் ஒன்று கூடும் பொழுதுதான் யார் வீட்ல கல்யாண வயசுல பொண்ணு இருக்கு, மாப்பிள்ளை இருக்கு என தெரிந்து கொள்ள முடியும். ஆனால் இன்று எல்லாம் சிவமயம் என்பது போல் எல்லாம் ஆன்லைன் மயமாகிப் போயிற்று.
ஊரைக் கூட்டி பொண்ணுக்கு சடங்கு சுற்றுவதே எங்கள் வீட்டுப் பெண் திருமணத்திற்குத் தயார் என பறைசாற்றத் தானே. பூப்படைதல் மட்டுமே பெண்ணிற்கான கல்யாணத்தகுதி என்றிருந்த காலம் அது. சுதந்திரத்திற்குப் பிறகு நம் மக்கள் சுதந்திரம் கிடைத்த சந்தோஷத்தில் தீவிரமாக இயங்கியதில், முப்பது கோடி முகமுடையவளாக இருந்த நமது பாரதமாதா அதிவிரைவாக ஐம்பது, அறுபது கோடியென விஸ்வரூபம் எடுத்து இன்று நூறுகோடியை விஞ்சி விட்டாள். விளைச்சலைக் குறைத்தால் தான் அறுவடை குறையுமென அரசாங்கம் சிவப்பு முக்கோணம் போட்டு பெண்களின் திருமண வயதை அதிகரித்து சட்டம் (1978 ஆம் ஆண்டு- 18வயது) இயற்றியது. ஆனால் இன்று… பத்து வயதுப் பெண்ணிற்கும் சேலையைச் சுற்றி பொம்மை மாதிரி நிற்கவைத்து சடங்கு சுற்றுவதுதான் அபத்தமாகப் படுகிறது.
*****
ஆடியில சேதி சொல்லி
ஆவணியில் தேதி வச்சு…
சேதி சொன்ன மன்னவருதான்…
எனக்கு சேதி சொன்ன மன்னவருதான்…
சொந்தம் சொல்லி நெத்தியில
குங்குமத்த வச்ச…
என் மன்னவரு மன்னவருதான்…
தாய்மாமனாக ரெங்கநாதன் மாலையெடுத்துப் போட, மைத்துனன் முறைக்கு மதியழகன் வேந்தனுக்கு மிஞ்சி போட, நாத்திமுறைக்கு திவ்யா, மங்கைக்கு மூன்றாம் முடிச்சுப் போட, தனக்கும் இப்படி ஒருநாள் வாய்க்குமா என ஏங்கிய கணபதி மகளின் கைபிடித்து கலங்கிய கண்களோடு தாரைவார்க்க,
“மாமா! இது எங்கப்பாதான் பண்ணனும். அவருதான் பையன உங்க வீட்டுக்கு அனுப்பறாரு.” செழியனின் நக்கல், நையாண்டியோடு, அதிகாலை குறித்த முகூர்த்தத்தில், சொந்த பந்தங்கள் புடைசூழ, மஞ்சள் அரிசி பொன் மழைதூவ, மங்கையின் கழுத்தில் மங்களநாண் பூட்டினான் மங்கையர்க்கரசியின் இளவேந்தன். ஆனபண்டம் அத்தனையும் சீராக இறக்கி மண்டபத்தை நிறைத்துவிட்டார் கணபதி.
எவ்வளவு மறுத்தும் மாரியம்மாள் தன் பேத்திக்கென சேர்த்து வைத்ததையெல்லாம் சபை நிறக்க செய்து பேத்தி திருமணத்தை கண்குளிறப் பார்த்தார். தமிழ்ச்செல்வியும், வித்யாவதியும் கடனே என வந்தனர்.
காலையிலிருந்து அத்தனை கேலி கிண்டல் இருவரைச் சுற்றியும். இதில் தோழிகளாக முத்துப்பேச்சியும், ஆர்த்தியும் கூட்டுசேர்ந்து கொள்ள கலைகட்டியது திருமண வைபவம். முத்துப்பேச்சிக்கு இவர்களுடன் அவ்வளவு நெருக்கமில்லை. ஒரே பள்ளிதான். ஆனால் ஒரே வகுப்பில் படித்ததில்லை. அடுத்த மருமகள் என்ற உரிமை இப்பொழுதே அவளுக்கும் வந்துவிட்டது.
மறுவீடு, பால் பழம் சம்பிரதாயம் முடித்து, இதோ… அதோ… என அவள் எதிர்பார்த்த புலி வந்தேவிட்டது. இனி ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது என்ற நிலைதான்.
அலங்கரித்த அறைக்குள், அலங்கரித்து அவளை தனியே விட்டுச் செல்ல, தவிப்போடு தனித்திருந்தாள் மங்கை. கணங்கள் யுகமாகக் கழிய,
கதவு திறக்கும் சப்தத்தில் விருட்டென விசைப் பந்தென எழுந்து நின்றாள். எழுந்த வேகத்தில் சிறிது தடுமாறியவள் கட்டிலை இறுகப் பிடித்துக் கொண்டாள். பட்டு வேட்டி, சட்டையில் மாப்பிள்ளை கோலத்தில் கம்பீரமாக வந்தவனை ரசிக்கும் மனநிலை துளியும் இல்லை மங்கைக்கு.
திறந்த கதவை தாழ் போட்டுக்கொண்டே, “பார்றா! எம்பொண்டாட்டி எந்திரிச்செல்லாம் மரியாதை கொடுக்குறா?” என கேட்க, பதில் கொடுக்கும் நிலையில் இல்லை.
அவள் பார்வை முழுதும் தாழிடப்படும் கதவு மீதுதான். இதுநாள் வரை அறைக்கதவு அடைக்கப்படுமே ஒழிய தாழிட்டதில்லை. வெறும் காத்துக்கு கூட வழியில்லாமல் நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டிக்கொண்டது.
தாழிட்டு திரும்பியவன், அவளையே பார்த்துக்கொண்டு இயல்பாக சட்டைப் பட்டனைக் கழற்ற, இவளுக்கு தொண்டைக்குழி ஏறியிறங்கியது. அறையே நிசப்தமாக இருப்பது போல், அவளது இதயத்துடிப்பு அவளுக்கே கேட்டது. மூளை யோசிக்க மறுத்து, மறத்து வேலை நிறுத்தம் செய்ய, காதடைத்து கண்கள் இருட்டிக்கொண்டு வர, இதோ விழப்போகிறேன் என நினைக்க,
“ஏன் அப்படியே நிக்கிற? எல்லாத்தையும் கழட்டலயா?” தீடீரென அவன் குரல் ஒலித்ததில் தண்ணீர் தெளித்தவள் போல், சட்டென சுயத்திற்கு வர,
“ஹாஆ!” என்றாள் பதறி. மிதமிஞ்சிய மிரட்சி அவள் கண்களில். சட்டையை கழற்றி ஹேங்கரில் மாட்டியவன்,
“எந்தலோகத்துல இருக்குற? மிதக்காம இறங்கி வா! சேலைய மாத்தலயா, இப்படியேவா தூங்கப்போறேனு கேட்டேன்” என்றான். நிறுத்தி நிதானமாக சற்று நீளமாக பேசியதில் சற்றே தெளிந்தவள்,
“எதையும் நேரடியா கேட்க மாட்டீங்களா? எப்ப பாரு உள்குத்து வச்சே பேசறது?” என கேட்டவள் சத்தம் வாய்க்குள்ளேயே ஒலித்தது.
கபோர்டைத் திறந்து கைலியை எடுத்தவன், இடுப்போடு சுற்றிக்கொண்டு, பட்டு வேட்டியை கழற்றி நாலாக மடித்து அதையும் ஹேங்கரில் தொங்கவிட்டவன்,
“அட! பேச்சுலயும் மரியாதை எட்டிப்பாக்குது. நான் சாதாரணமாத்தான் கேட்டேன். உனக்குதான் வேறொரு அர்த்தம் கொடுக்குது.”
பேச்சோடு பேச்சாக கேலி பேசவும் தவறவில்லை. குளியலறை சென்று வந்தவன், கட்டிலில் ஏறி படுத்துவிட்டான். அவள் நின்று கொண்டே இருக்க,
கையை தலைக்கு முட்டுக்கொடுத்து சயனித்தவன், “நைட்டிய மாத்திட்டுப்படு! விடிய விடிய நிக்கப்போறீயா?” என,
புரியாத பாஷை பேசியவனைப்போல் ஒரு கணம் அவனை யோசனையாகப் பார்த்தவள், கண்ணாடி முன் அமர்ந்து நகைகளை கழட்ட ஆரம்பித்தாள். கொக்கி வைத்த நகைகள் சடையில் சிக்கிக் கொண்டு, பூவோடு பின்னிக் கொள்ள,
“ஷ்ஷ்ஷ்” என முகம் சுளித்தாள். சயனித்தவாக்கில் கண்ணாடியில் பார்த்துக் கொண்டிருந்தவன், அவனே எழுந்து வந்து உதவி செய்ய, மறுக்காமல் அமர்ந்திருந்தாள். மறுக்கும் நிலையிலும் இல்லை.
நகைகளை ஒவ்வொன்றாகப் பிரித்தெடுத்தான். அவன் இயல்பாகத்தான் இருந்தான். அவன் கவனம் முழுதும் கொக்கியை கழட்டுவதில் தான் இருந்தது. கண்ணாடியில் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஒவ்வொரு நகையாக பிரித்தெடுக்க கை அவள் கழுத்தருகே வரும் பொழுதும், இதயம் மிருதங்கம் கொட்ட, விரல் நுனிகூடத் தீண்டாமல் கழற்றிக் கொடுத்ததில், அவள்தான் சுயம் தொலைத்துக் கொண்டிருந்தாள். தலையிலிருந்த பூவையும் எடுக்கப்போக வேண்டாமென மறுத்துவிட்டாள்.
“படுக்க கஷ்ட்டமா இருக்காதா?”
“பரவாயில்ல” என்றாள். பூவை எடுக்க மனமில்லை.
‘எனக்கு கஷ்ட்டமா இருக்குமே?’ என உள்ளுக்குள் நொந்து கொண்டவன்,
“சரி…, இருக்கட்டும். ரொம்ப டயர்டா இருக்க. சேலைய மாத்திட்டு சீக்கிரம் வந்து படு!” என்றவன் கட்டிலில் ஏறி படுத்துக் கொண்டான். எழுந்தவள் நின்று கொண்டே இருக்க, சற்று நேரம் தாமதித்தவன்,
“என்ன?” என புருவம் உயர்த்த.
“ம்ம்ஹும்” தலையை மட்டும் ஆட்ட,
“படிப்பு முடியறவரைக்கும் மனச அலைபாயவிடாதே. ஒழுங்கா வந்து படுத்து தூங்கு. ஒரு வாரம் தான் லீவு. ரெண்டு நாள்ல ஒழுங்கா காலேஜ் கிளம்பு. கண்டதையும் நெனச்சு படிப்ப கோட்டவிட்ட பிச்சுப்புடுவேன்” என மிரட்டியவன் எதிர்ப்புறம் திரும்பி படுத்துவிட்டான்.
‘அடப்பாவி! அம்புட்டு நல்லவனாடா நீ!’ என நினைத்தவள், குளியலறை சென்று நைட்டியை மாற்றிவந்தாள்.
“எம்மேல நம்பிக்கை இருந்திருந்தா இங்கேயே மாத்தியிருந்திருக்கலாம்.” திரும்பியே பார்க்காமல் கூற,
‘இப்பதானடா நல்லவன்னு நெனச்சேன்.’ மனதிற்குள் நொடித்துக் கொண்டவள், தலையணையை எடுக்க,
“நம்பிக்கை இல்லைனா படிப்பு முடியறவரைக்கும் கீழ பாய் விரிச்சு படுத்துக்கோ!” என,
இனி கீழே படுத்தால் அவனை அவமானப்படுத்துவது போலிருக்கும் என, கட்டிலின் ஓரமாக ஒடுங்கி படுத்தவள்,
“இல்ல, உங்க மேல நம்பிக்கை இருக்கு” என்றாள்.
முதலில் அவளது எண்ணமும் அதுதான். ஆனால் அவனது நடவடிக்கை தன்னையும் மீறி எதுவும் செய்துவிட மாட்டான் என நம்பிக்கை கொடுக்க நம்பி படுத்துவிட்டாள்.
தரையில் படுப்பதும் லேசுப்பட்ட காரியமில்லை. தரையின் சில்லிப்பில் குளிர் ஏற ஆரம்பித்துவிடும். வந்த புதிதில் இரண்டு நாட்கள் கூட அவளால் தரையில் தாக்குப்பிடிக்க முடியவில்லை. குளிருக்குப்பயந்து தன்னைப்போல் கட்டிலில் ஏறிவிட்டாள்.
அவள் படுத்துவிட்டாள் என தெரிந்த பிறகு,
“நான் என்னை சொல்லல. உம்மேல உனக்கு நம்பிக்கையில்லைனானு சொன்னேன்” என்றான் நமட்டு சிரிப்போடு.
சற்று முன் அவன்மீது நம்பிக்கை வைத்து மனதினுள் கொடுத்த நற்சான்றிதழை மானசீகமாகக் கிழித்தவள்,
“இப்படியே பேசுனீங்க நான் கீழ போயிருவேன்” என மிரட்ட,
“சரி…சரி… படு! லைட்டா அணைக்கட்டுமா?” எனக் கேட்க, இனி அவ்வளவுதான் மரியாதை என பட்டென எழுந்துவிட்டாள். கழுத்தை மட்டும் திருப்பி பார்த்தவன்,
“நீ எதுக்கு எந்திரிச்ச? ஸ்விட்ச் இங்கதானே இருக்கு?” என கைகாட்ட, டூ வே ஸ்விட்ச் அவன் கையெட்டும் தூரத்தில்தான் தலைமாட்டில் இருந்தது. அவன் கேட்டது லைட்டை அணைக்கட்டுமா என்றுதான், ஆனால் கேட்ட தொனிதான் வில்லங்கமாக இருந்தது. அல்லது அவளுக்கே நமக்குதான் எல்லாம் தப்பு தப்பா கேக்குதோ என நினைக்கும்படி இருக்க,
அவள் முறைத்துப் பார்த்தாள்.
“உனக்குதான் எல்லாமே விவகாரமாக கேட்குது. அதுக்கு நான் ஒன்னும் பண்ணமுடியாது.” அவன் கொடுத்த விளக்கத்திலேயே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்றான்.
அவன் கூறியதை கேட்ட பிறகு நீங்கள் நல்லவனா, கெட்டவனா மாடுலேஷனுக்கு வந்துவிட்டாள். ஆனால் அவன் உள்ளே வரும்வரை இருந்த மனநிலை இப்பொழுது முற்றிலும் இல்லை. நிம்மதியாக மூச்சுவிட முடிந்தது.
விளக்கை அணைத்து விட்டு இரவு விளக்கைப் போட்டவன் திரும்பி படுத்துக் கொண்டான்.
இது இப்படியே தொடர்ந்தால் நிம்மதியாக இருக்கும் எனத் தோன்ற, எத்தனை நாட்களுக்கு இப்படியே இருக்கமுடியும் என கேள்வியும் குடைந்தது. படிப்பு முடியும் வரை என்றாலும் முடிந்த பிறகு? இப்படியே இருக்க முடியுமா? பெரியவர்கள்தான் விட்டு விடுவார்களா? நாளை காலையிலேயே ஏதாவது சாடைமாடையாகக் கேட்டால் என்ன பதில் சொல்வதென தெரியவில்லை.
‘சுயநலமா உன்ன மட்டும் யோசிக்கறீயே. அவன நெனச்சுப் பாத்தியா?’ என மனசாட்சி குட்டு வைக்க, தன்னுடைய பிரச்சினைக்குள் அவனையும் தேவையில்லாமல் இழுத்து விட்டோமோ என உறுத்த, தூக்கமும் சதிபண்ண, புரண்டு புரண்டு படுத்தாள். சிறிது நேரத்திற்கெல்லாம் இரண்டு முறை எழுந்து பாத்ரூம் சென்று வந்தாள். இடம் புதிதல்ல. ஆனால் சூழல் புதிதல்லவா? மிதமிஞ்சிய பயம் அலைக்கழிக்க மூன்றாம் முறையும் எழுந்திரிக்க, பட்டென திரும்பினான்.
“என்ன?” கண்களில் மிரட்சியோடு பதட்டமாக,
“அமைதியா படுக்க மாட்டியா? உங்கப்பா, நீயே பார்றா மாப்ளைனு எனக்கென்னானு உக்காந்துக்கிட்டாரு. எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செஞ்சது யாரு? இத்தனைநாளா சரியா தூக்கமில்லாம இன்னைக்காவது நிம்மதியா தூங்கலாம்னு வந்தா சும்மா எந்திரிச்சு தூக்கத்த கலச்சு விடுறியே?” முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு அதட்டும் தோரணையில் கூறியதில், ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள நிம்மதியா தூங்க வந்த மவராசனை நினைத்து மனசாட்சி கமுக்கமாய் வாய் பொத்தி சிரித்தது.
“அவரே முடியாதவரு. என்னமோ நீங்களே எல்லாம் இழுத்துப் போட்டு பாத்தமாதிரி பேசறீங்க? மேற்பார்வை பாத்ததுக்கே இந்த அல்டாப்பு.” அப்பொழுதும் அப்பாவைப் பற்றி பேசியதில் ரோஷப்பட்டு எகிற,
“ஆள் வச்சாலும் நாம கூட நின்னாத்தானே வேலை நடக்கும். இப்ப நான் தூங்கறதா வேணாமா?” குரலை உயர்த்த, மறுபடியும் படுக்கப் போனவளிடம்,
“எந்திரிச்சது எந்திரிச்சுட்ட, கையோட அந்த பால எடு குடுச்சுருவோம், வீணாப் போயிரும்” என்றவனை கண்களில் தீப்பொறி பறக்க பார்த்து வைத்தாள்.
“என்ன பாக்குற? சரியா சாப்பிடல. பாதி தூக்கத்துல எழுப்பிவிட்டுட்ட. பசி வந்தா தூங்க முடியாது. அப்பறம் நீ நெனச்ச வில்லங்கமெல்லாம் நடந்துரும்.”
அலட்டாமல் கூற, அவளால் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய் விட்டே சிரித்துவிட்டாள். அவளது சிரிப்பு நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட என்பது போல் இருக்க அவனும் சிரித்து விட்டான். பாலை எடுத்துக் கொடுக்க, மொத்தமாக குடித்துவிட்டு காலி டம்ளரை கொடுக்க, முறைத்துப் பார்த்தாள்.
“படிப்பு முக்கியம். டம்ளரை வச்சுட்டு படு.” கடமை கண்ணாயிரமாக கூறிவிட்டு, முதுகு காட்டி படுத்துக் கொண்டான்.
திரும்பிப் படுத்தவன், சற்று நேரத்தில் தூங்கியும்விட, அல்லது தூங்கியது போல் பாவ்லா செய்ய, சீராக ஏறி இறங்கிய மார்பு அவன் அசந்துவிட்டான் என உணர்த்தியது. மனம் இலேசானது போல் இருக்க, அறைக்குள் வந்ததிலிருந்த அவனது ஒவ்வொரு நடவடிக்கையும் நினைத்துப் பார்த்தவளுக்கு அவளையும் அறியாமல் முகம் புன்னகை பூசிக்கொண்டது.
அவனது செய்கையில் அவள் மனநிலையும் சற்று மாற, அதன் பிறகு அவளிடம் அசைவில்லை. எந்திரிக்கவும் இல்லை. அதட்டல் வேலை செய்தது. கண்ணயர்ந்துவிட்டாள்.
வெகு நேரம் கழித்து அவள் புறம் திரும்பினான். கண்களை மூடியிருந்தவளை கண்ணிமைக்காமல் பார்த்தான். இரவு விளக்கொளியில் முகம் நிச்சலனயமாய் இருக்க, அம்மா விட்டுட்டுப் போயிருவாங்களோ என பயத்தோடு தூங்கும் பிடிவாதக் குழந்தை போல, புருவம் சுருக்கி, தாடை இறுக்கத்தோடே படுத்திருந்தாள். அப்படியே அள்ளி நெஞ்சோடு அணைத்துக் கொண்டு, “மாமன் இருக்கேன்டி” என சொல்ல மனம் பரபரத்தது.
இடக்கையை மடக்கி தலையணைக்கடியில் வைத்திருக்க, அதில் மல்லிச்சரமும், இன்று காலை அவன் அணிவித்த ஈரம் காயாத புது மஞ்சள் கயிறும், ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து துவண்டு கிடந்தது. அவனையும் அறியாமல் மூச்சுக்காற்று சூடேறியது. அவன் ஒன்றும் உணர்ச்சிகளற்ற ஜடமில்லையே. இரத்தமும் சதையுமான ஆசையும், இளமைத் துடிப்பும் கொண்ட சாராசரி ஆண்மகன். நகைகளை பிரித்தெடுக்கும் பொழுது அவள் மீது விரல் படாமல் இருக்க அவன் பட்டபாடு அவனுக்குத் தானே தெரியும்.
கலைந்த முடிகள் முகம் மீது பரவிக் கிடக்க, பட்டும்படாமல் காதோரம் ஒதுக்கிவிட்டான். அவளையே பார்த்தவன் கண்களில் கனிவு பிறக்க, உள்ளே வந்தவுடன் அவள் எழுந்த வேகத்தை நினைத்து, இதழில் சிறு புன்னகை நெளிந்தது.
‘அப்படி என்னடி பயம்? வந்தவுடனே உம்மேல பாஞ்சுற மாதிரி அடிச்சுப் புடிச்சு எந்திரிக்கிற? என்னமோ கடிச்சு குதறப்போற மாதிரி கண்ணுல அவ்ளோ பயம். ஏதோ உனக்குள்ள மனசளவுல பிரச்சினை ஓடுதுன்னு மட்டும் தெரியுது. அது என்னானு தெரியல. என்னை பாக்குறப்ப எல்லாம் உன் கண் நிறைய காதலும் தெரியுது. அதே சமயம் எங்கிட்ட நெருங்கவும் பயப்படுற. என்னவா இருக்கும்னு ஊகம் பண்ணவும் பயமா இருக்குடி. எந்த பூதம் கிளம்புமோனு இருக்கு. எதுவா இருந்தாலும் சரி பண்ணிக்கலாம். இந்த கல்யாணம் மாமாவுக்காக இல்லடி. சீக்கிரம் உன்ன என்கிட்ட கொண்டு வரனும்ங்கறதுக்காகத்தான். உனக்கு என்ன பிரச்சினைனாலும் உன் இளா மாமன் இருக்கேன்டி. நீ நிம்மதியா தூங்கினாலே போதும்.’
தன் தூக்கத்தை காவு வாங்கிக்கொண்ட தன் மொசக்குட்டியிடம் மனதோடு பேசிக் கொண்டிருந்தான் மங்கையின் மணாளன்.
மறு நாள் சம்பந்தி வீட்டினரோடு சேர்த்து மாமன் மச்சான் கறிவிருந்து. விருந்து முடித்து திவ்யா குடும்பம் கிளம்பிவிட, மூன்றாம் நாளே கணபதி வீட்டிற்கு வந்துவிட்டனர். குலசாமி கோவிலுக்கு செல்ல வேண்டுமென, சாங்கியத்திற்கு பெண்வீடு சென்றுவிட்டு தாமரை, மீண்டும் அவர்களை இங்கே வரச்சொல்ல,
“நாங்க ஒன்னும் ஏழுகடல் தாண்டி ஏழுமலை தாண்டி உங்க மருமகள கூட்டிட்டுப் போகல. எட்டி கூப்புடுற தூரத்துல இங்கன இருக்கு பெரியகுளம். என்னைக்குனு முடிவு பண்ணிட்டு சொல்லுங்கம்மா, போயிட்டு வந்துறலாம். இவ காலேஜ் போகனும்.”
முடிவாக சொல்லியவன், விடாப்பிடியாக அழைத்தும் வந்துவிட்டான். வந்த மறுநாளே அவளை கல்லூரியும் கிளம்பச் சொல்லிவிட்டான்.
“அம்மம்மா கேளடி தோழி
சொன்னானே ஆயிரம் சேதி
கண்ணால தந்தது பாதி
சொல்லாமல் வந்தது மீதி
ஓ… அம்மம்மாஆஅஆஆ
பிஞ்சாக நானிருந்தேனே
பெண்ணாக வளர்த்து விட்டானே
அஞ்சாமல் அணைத்து விட்டானே
அச்சாரம் கொடுத்து விட்டானே…”
அவசரமாக முன்னும் பின்னும் பார்த்தவள்,
“என்னடியிது பாட்டு? அதுவும் பஸ்லவச்சு” என பதற,
“சிச்சுவேஷன் சாங் மங்கா! பஸ்ஸுங்கறதாலதான் டீசன்ட் சாங். இல்லைனா நம்ம வாத்தியார் பாக்யராஜ் சாங்காத்தான் இருக்கும்” என்றவள்,
“அத்தான் என்னத்தான்
எப்படி சொல்வேனடி” என அடுத்த பாடலைத் தொடங்க,
“ஆர்த்திஈஈஈ” பல்லைக் கடித்து சத்தமில்லாமல் கத்தினாள், பஸ் என்பதால் சற்றே நாகரீகம் பார்த்து.
“இதெல்லாம் நீ பாட வேண்டியதுடி. உனக்காக நான் பாடுறேன்.”
“மண்ணாங்கட்டி.”
“அதுக்குள்ளயா? அதுக்கு நாள் இருக்குடி” என கேலி செய்ய, ஆர்த்தி கூறியதில் இருந்த உள்அர்த்தத்தில் மங்கையும் கோபம் மறந்து பக்கென சிரித்துவிட்டாள்.
“எரும! பேசாம வா! பஸ்ல வச்சு மானத்த வாங்காத!” சிரித்தவாறே கூற,
“பேசலடி, நான் பாடுறேன். அது கூடத் தெரியல. அவ்வளவு மயக்கம்.”
“பாடுறதே பேசற மாதிரித்தான் இருக்கு. கேக்க சகிக்கல.”
ஆர்த்தி நன்றாகப் பாடுவாள் எனத்தெரியும். அடிக்கடி பாடச்சொல்லி கேட்டிருக்கிறாள்.
“மத்தவங்க பேச்செல்லாம் கொஞ்ச நாளைக்கு அப்படித்தான் தெரியும். கேக்க சகிக்காது.”
“என்னமோ அனுபவப்பட்டமாதிரி பேசுற?”
“அனுபவப்பட்டவ பேச மாட்டேங்குறியே?” தோழியின் கிண்டலில் முகம் மலர்ந்து புன்னகைக்க,
“ம்ம்ம், அண்ணே ஏதோ மந்திரம் போடுறாங்க. நீ இப்படி சிரிச்சு நான் பாத்ததேயில்ல.”
ஆர்த்தி மீண்டும் அவளை சீண்ட, யாரும் அறியாமல் நறுக்கென கிள்ளி வைக்க, ஆர்த்தி அலறிவிட்டாள். தோழிகளின் பஸ் பயணம் கேலியும் கிண்டலுமாக சென்றது வெகுநாட்கள் கழித்து.
