மல்லி 23

“இப்ப என்னடா சொல்லிட்டே? இப்படி வெடுவெடுனு பேசுற?”

“நீ ஒன்னும் எம்பிள்ளைக்கு பாக்க வேண்டாம்க்கா. நானே பாத்துக்கிறேன்.”

“கூறுகெட்ட மாடு ஏழுகட்டு புல்லு திண்ணுச்சாம். எதெது ஆம்பள பாக்கறது, எதெது பொம்பள பாக்கறதுனு இல்லையாடா.? நம்ம தாட்டியமா இருக்கும்போதே இதுகளுக்கு நல்லது பண்ணி பாத்துறனும்னு சொன்னா என்னமோ தரையில விழுந்த மீனாட்டம் துள்ளுற. நம்ம கண்ணடையறதுக்குள்ள பேரம் பேத்திகள பாக்க வேண்டாமா?”

“இப்ப என்ன, நான் சீக்கிரம் போய்ச் சேந்துருவேன்னு சொல்ல வர்றியா?”

“டேய், தம்பி!” என பதறியவர்,

 “மாரியாத்தா!” என கன்னத்தில் போட்டுக்கொண்டார். அக்காவிடம் இந்த மாதிரி எடுத்தெறிந்து பேசுபவர் இல்லை. எது சொன்னாலும் சரி என்பதோடு நின்று கொள்வார்.  

இன்று அரசு விடுமுறையென மங்கை மட்டும் வீட்டிலிருக்க, மற்றவர்கள் காலையிலேயே அவரவர் வேலையைப் பார்க்க வெளியே கிளம்பிவிட்டனர். அதுவும் முதல் ட்ரிப் போகவேண்டிய ஓட்டுனர் விசேஷமென விடுப்பெடுக்க, மாற்றிவிட ஆளில்லாமல் வேந்தன் விடியும் முன் பஸ் ஷெட்டிற்கு கிளம்பிவிட்டான். 

செழியனும், அம்மையப்பனும் காலை சாப்பாட்டை முடித்துக் கொண்டு, வேந்தனுக்கு எடுத்துவைத்த கேரியரை எடுத்துச் சென்றனர். எந்த பஸ்ஸில் கொடுத்துவிட்டாலும் ஆஃபிஸ் சென்று சேர்ந்துவிடும்.  

வெகுநாட்கள் கழித்து சாவகாசமாக அக்காவும் தம்பியும் சாப்பிட்டு முடித்து போன கதை, வந்தகதை, வளர்ந்த கதை எல்லாம் பேச ஆரம்பித்தனர். நேரம் போனது தெரியாமல் பேச்சு சுவாரஸ்யமாகி ஒவ்வொன்றாகத் தொட்டு வேந்தன், மங்கை கல்யாணத்தில் வந்து நின்றது. 

“தம்பி! இவங்க கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணலாம்டா!”

“ஏன்க்கா அவசரப்படுற? படிப்பு முடியட்டும். இன்னும் அஞ்சாறு மாசம்கூட இல்ல.”

“அதுக்கு இல்லடா! நீ சொல்ற அஞ்சாறு மாசத்துல திவ்யா வளைகாப்பு வந்துரும். அதுக்கு பின்னால பேருகாலம் அது இதுன்னு ஒரு வருஷம் ஓடிப்போகும்டா. இவங்களுக்கு கல்யாணத்த முடிச்சுட்டா திவ்யா பேருகாலம் முடிய, அடுத்து இவங்களுக்கும் பாக்கனும்ல. வேற பொம்பள யாரிருக்கா? அடுத்து சின்னவனுக்கு பாக்கனும். நமக்கும் வயசாகுதுல்ல?” 

அவர் நடைமுறையைக் கொண்டு எதார்த்தமாகக் கேட்டார்.‌ கல்யாணம் முடிப்பதோடு பெண்பிள்ளை கடமை முடிந்துவிடாதே. அதன் பிறகுதானே தாய்மார்களுக்கு வேலையே. அவர்களையும் தாயாக்கி, பேரன் பேத்திகளுக்கு முடியிறக்க, காதுகுத்த, பேத்தி எனில் வயதுக்கு வந்த சீர்செய்ய, நல்லது கெட்டது என அடுத்தடுத்து அனுமார் வாலுக்கு போட்டியாக செய்முறைகள் நீளுமே. 

இதற்கெல்லாம் எடுத்துசெய்ய உடம்பில் தெம்பு வேண்டுமே. அதை மனதில் கொண்டு தாமரை பேசப்போக, அது மங்கைக்கும் நான்தானே பார்க்கவேண்டும், பெத்தவளா இருக்கா? என்பது போல் கணபதிக்கு குதர்க்கமாகப்பட்டது. தன் பிள்ளைக்கு யாரும் இல்லையென சொல்லிக் காட்டுவதாகப்பட, அக்கா என்பது போய் அங்கே கணபதிக்கு சம்பந்தியாகத் தெரிந்தார்.

இத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. “எங்க இருந்தாலும் ஒரே வீட்லதானே இருக்கப் போறாங்க. அது கல்யாணத்த முடிச்சுட்டு இருந்தா என்ன? வித்யா மாதிரி ஆளுக வாயில விழ வேண்டாமே?” 

தாமரை கேட்டதில், என்ன நேரமோ அதைக் கேட்டதும் உச்சாணிக் கொம்பேறிவிட்டார்.

“உன் அவசரத்துக்கெல்லாம் கல்யாணம் முடிச்சு வைக்க முடியாதுக்கா. அப்படி அவசரமா முடிக்கணும்னா, எடுத்துச் செய்ய பொம்பளை இருக்க எடமா, சீரு தூக்க மாமன் மச்சினன் இருக்க ஒசந்த இடமாப்பாத்து உம்பையனுக்கு முடிச்சுக்கோ. நான் எம்பிள்ளைக்கு எனக்குத் தக்கன பாத்துக்கறேன்.” வெடுக்கென எழுந்து கொண்டார். 

தாமரை பதறிப்போய் வாயைத்திறக்குமுன், இருவரின் சத்தம் கேட்டு வெளியே வந்தவள், அவளையும் மீறி, “அப்பா” என அதட்டியிருந்தாள். அதன்பிறகுதான் என்ன பேசினோம் என்பதே கணபதிக்கு மண்டையில் உரைத்தது. அவருக்கே ஆகாத பேச்சாகப்பட்டது.

ஓரிடத்தில் உட்காராமல் காலில் சக்கரம் கட்டியது போல் சுற்றித்திரிந்தவரை படுக்கையில் இருக்கச் சொன்னதால் வந்த வெறுப்பு, குடியை அறவே ஒதுக்கியதன் பின்விளைவாக வரும் மன உளைச்சல், மகளைப் பற்றிய கவலை எல்லாம் ஒன்றுதிரண்டு அவரை வேறோர் மனநிலைக்கு தள்ளியிருந்தது. 

அதில் தாமரை பேசியதில் படபடவென ஆத்திரத்தில் அவசரக்காரராய் வார்த்தைகளைக் கொட்டிவிட்டார். தாமரைக்கு வருத்தமோ இல்லையோ, வேந்தனுக்கு வேறு இடம் பார்க்கச் சொன்னதும், நான் வேறு இடம் பார்த்துக் கொள்கிறேன் என்றதும் மங்கைக்கு முகம் சுண்டிப்போயிற்று.

மகளிடம் கேட்கமுடியவில்லையே என்ற ஆதங்கம், எனக்கு மட்டும் ஆசையில்லையா என ஆத்திரமாக அக்காவிடம் வெளிப்பட்டது. ஆன்ஜியோ சிகிச்சை அவசியம் என சொல்லிவிட்டனர். ஒருவாரத்தில் வந்து அட்மிட் ஆகச் சொல்லியிருக்கின்றனர். அந்த பயம் அவருக்கு. தனக்கு ஏதாவது ஒன்று என்றால் மகளைப் பார்க்க வேந்தன் இருக்கிறான்தான்‌.‌ ஆனால் அதை தான் கண்குளிர பார்க்க வேண்டுமே என்கிற ஆசை. அந்த அழுத்தம் அவரை நிலைகுலையச் செய்கிறது இடைப்பட்ட நாட்களாக.

இரவு வீடு திரும்பிய வேந்தன், குளித்து வந்தான். அறையில் கணபதி இல்லாமலிருக்க, முதலில் மாமாவைத்தான் விசாரித்தான்.

“என்னவோ தெரியலடா? காலையிலேயே சிடுசிடுனு இருந்தான். இப்பதான் சாப்பிட்டு மாடிக்குப் போனான்.”

“ஏம்மா?” என்றான் தலையைத் துவட்டிக்கொண்டே. இடுப்பில் கைலி மட்டுமே. வெற்றுடம்பில் துண்டை தோளோடு போர்த்தியவாறு தலையைத் துவட்ட,

வேந்தன் பேச்சுக் குரல் கேட்க, தண்ணீர் குடிப்பது போல் வெளியே வந்தாள். தலை துவட்டும் வேகத்திற்கிணங்க மடக்கிய கையின் புஜங்கள் ஏறியிறங்க, அடுக்களை செல்லும் வரை பாவையின் பார்வையில் மாற்றமில்லை. 

‘கோயில்காளை மாதிரி என்னையும் பாரு, என் உடம்பையும் பாருன்னு நிக்கறதப்பாரு! சட்டையப் போட்டு வெளியவந்தா யாரும் அடிக்கிறாங்களா?’ மனதிற்குள் பொறிந்தவாறே அடுக்களை சென்றாள்.

அவளும் இவன் வரும்வரை சாப்பிடாமல் காத்திருந்தாள். இன்னும் அம்மையப்பனும், செழியனும்கூட வீடு திரும்பவில்லை. 

“ஒன்னுமில்லடா, உப்பு பெறாத விஷயம்.‌ கல்யாணத்தப்பத்தி பேசுனதுக்கு அவசரம்னா வேற எடம் பாத்துக்கோ. நானும் எம்பிள்ளைக்கு வேற எடம் பாக்குறேன்னுட்டான்டா.” அங்கலாய்ப்பாய் மகனிடம் தன் மனக்குறையைச் சொல்ல,

“பாக்கறதுனா பாத்துக்கட்டும்மா.” இயல்பாக சிரித்துக்கொண்டே சொல்ல, தடாலென உள்ளே பாத்திரம் விழுந்து உருளும் சப்தம். 

தாமரை பதறி அடுப்படியை எட்டிப்பார்க்க, “கை தவறிருச்சு அத்தே” என்றவள், விழுந்த பாத்திரத்தை எடுத்து வைத்தாள். அவனை பார்த்துக் கொண்டே வெளியே வந்தாள். 

‘உனக்கு இருக்குடி மாப்ள!’ என சொல்லாமல் சொல்லியது அவளது தீய்க்கும் பார்வை. சத்தமில்லாமல் சிரித்துக் கொண்டான். 

மங்கையும் மாடிக்கு செல்வதைப் பார்த்தான்.

தனதறைக்கு உடை மாற்றச்சென்றான். பனியன் மட்டும் எடுத்து போட்டுக்கொண்டான்.‌ ஒருமாத காலத்தில் அவன் அறை அவனுக்கே அந்நியமாகப்பட்டது. அறை முழுதும் மங்கையின் வசத்தோடு, வைத்தது வைத்த இடத்தில் இருந்தது. 

அலமாரியில் அவன் உடை களைத்தெடுத்த பிறகு மீண்டும் அதை ஒழுங்குபடுத்தி வைக்கிறாள் எனத் தெரிய, மறுநாளிலிருந்து அவனும் கலையாமல் உடை எடுக்கப் பழகியிருந்தான். அப்படியே கட்டில் மீது போடப்படும் ஈர்த்துண்டு இப்பொழுதெல்லாம் உடனே கொடிநாட்டிவிடுகிறது. 

*****

“வாடாம்மா!” வாஞ்சையொடு மகளை அழைத்தார்.

கீழே அப்பாவைத் தேடியவள், காணாமல் மாடியேறி வந்தாள். ஊதக்காத்து வீசியது. மறுநாள் பௌர்ணமி என்பதால் இன்றே பால்நிலவு பகல் போல் காய்ந்தது. மழை வரும் அறிகுறியாக அடிவானம் செவ்வானம் பூத்தது. 

“ஏம்ப்பா வாடக்காத்துல நிக்குறீங்க? மருந்து குடிக்க வேண்டாமா? கீழ வாங்கப்பா!” தன்மையாக அழைத்தாலும் கண்டிப்பு இருந்தது குரலில். 

“மருந்தா குடிச்சு குடிச்சு நாக்கு செத்துப்போச்சும்மா. வேந்தன் இருந்தா இப்படி வந்து நிக்கவிடமாட்டான். உள்ளேயே அடஞ்சு கெடக்கறது ஒரு மாதிரி இருக்கும்மா.‌ காலையில நானும் வர்றேன்னு சொன்னேன். விட்டுட்டு போயிட்டான். தேவையில்லாம அக்காகிட்ட வாக்குவாதமாகிப்போச்சு.” சிறுபிள்ளை போல் தன்னை விட்டுச்சென்றதை புகார் போல் சொல்ல சிரித்துவிட்டாள். 

சிறிது நேரம் அமைதியாக கழிய, இரவின் இனிமையை கூட்டுவது போல் கணபதி கேட்டுக் கொண்டிருந்த கண்ணதாசன் பாடல்கள் தாலாட்டியது. குளிருக்கு கைகளை இறுக்கிக் கட்டிக் கொண்டாள். 

அவர் தன்னிடம் கேட்க அலைப்புறுவது அறிந்து அவளே,‌ “அத்தைக்கிருக்கிற ஆசை உங்களுக்கு இல்லையாப்பா?” என்றாள் வானத்து நிலவை பார்வையிடுவது போல். 

“என்னம்மா இப்படி கேட்டுட்ட? ம்ம்முனு  மட்டும் சொல்லுடாம்மா. நாளைக்கே பந்தக்கால் ஊனிறமாட்டேன்.‌ உங்கிட்ட கேக்கமுடியாத பாட்டுக்குதானே அக்காகிட்ட கத்திட்டேன். சொத்து எழுதி வச்சதெல்லாம் சும்மாம்மா. ஆனா உங்க கல்யாணத்த பாத்துட்டா நிம்மதியா கண்ண மூடுவேம்மா.” 

“ஏம்ப்பா இப்படி பேசறீங்க?” என அதட்டினாள். அவரைக் கவனித்த வகையில் அவர் செக்கப் சென்று வந்ததிலிருந்தே சரியில்லை எனத் தெரிய, உடம்பில் ஏதாவது பிரச்சினையா, சொல்லாமல் மறைக்கிறாரா? உள்ளுக்குள் கவலையாக யோசனை ஓடியது. 

“வந்தது சைலண்ட் ஹார்ட் அட்டாக்காம். இதுக்கு முன்னாடி வந்ததே தெரியல.”

“அதுக்கு நிதானத்துல இருந்திருக்கனும்.” கோபம் போல் சொல்ல, மகளின் செல்லக் கோபத்தில் வாய்விட்டு சிரித்தார். அப்பாவை அப்படிப் பார்க்க அவளுக்கும் முகம் மலர்ந்தது.

“மனுஷ உடம்பு அப்படித்தாம்மா. எப்ப இன்ஜின் ஆஃப்‌ ஆகும்னு சொல்ல முடியாது. ரிப்பேராச்சுனா அப்படியே விட்டுறனும். சர்வீஸ் பண்ணி ஓவராயில் போட்டு ஓட்டக்கூடாது” என்றவரை முறைத்துப் பார்த்தாள்.

“எந்த உரிமையில கேக்கச்சொல்ற? நான் கோவத்துல பேசாம இருந்தப்ப எங்கம்மா எத்தனையோ தடவ வலியவந்து பேசும். கண்டுக்கவே மாட்டேன்.‌ நீ ஜெயிலுக்கு போயிடுவேன்தாய்யா சொல்லலைனு அழுதுச்சு. அந்த வலி நீ பேசாம இருந்தப்ப புரிஞ்சுதும்மா. கெட்ட மாமியாரா இருக்கறவங்க எல்லாம் கெட்ட அம்மாவா இருக்கறதில்லைல. உனக்கும் நான் நல்ல அப்பாவா இருந்ததில்லை. அதனால உன் கோபம் நியாயம்தான்னு பட்டுச்சு. அதனாலதான் கடமையச் செய்ய முடியுது. ஆனா உரிமையா கல்யாணம் பண்ணிக்கோமானு கேக்க முடியல. அடுத்த வாரம் ஆஸ்பத்திரி போறவன் திரும்பி வருவேனா தெரியல.”

“அய்யோ! அப்பா! இது ஒன்னும் பைபாஸ் சர்ஜரி இல்ல.‌ ஆன்ஜியோதான். சின்ன ஆப்ரேஷன் தான்.”

“அது உங்களுக்கு. இதுவரைக்கும் தலைவலி காய்ச்சல்னு கூட ஆஸ்பத்திரி போனதில்ல. தலையில பத்தரைச்சுப் போடாம போயிறனும்மா. கடைசி காலத்துல யாருக்கும் இம்சையக் கூட்டக்கூடாது.” என்றவரது பயம் அவளுக்கு தெளிவாக புரிந்தது. 

தன்னிடம் உரிமை எடுத்துக் கொள்ள முடியாமல் தவிப்பதும் புரிந்தது. அதனால்தான் படிப்பு, மகள் விருப்பம், அது இது என சப்பைக்கட்டு கட்டுகிறார். 

“உங்க பிள்ளைகிட்ட அதிகாரமா எதுனாலும் கேக்கலாம்ப்பா. அந்த உரிமை உங்களுக்கு இருக்கு.” அப்பனுக்கு மகள் உரிமை வழங்க,

“ஒரே வீட்ல இருந்தும் நீ வடக்கனா, அவன் தெக்க இருக்கான். முகம் கொடுத்து பேசிக்கவே மாட்டேங்கறீங்க. இந்தக் காலத்து பையனுகெல்லாம் எப்படி இருக்கானுக. இவன் என்னடான்னா ஒரு கோயிலுக்கு கூட உன்ன கூட்டிப் போக மாட்டேங்கிறான். எதவச்சு கல்யாணம் பேசச்சொல்ற.” சடைப்பாக அலுத்துக் கொள்ள,

இந்தளவிற்கு கவனித்திருக்கிறாரா என ஆச்சர்யத்தில் விழி விரித்தாள் மகள். 

ஒரு நாள் பூ வாங்கிக் கொடுத்ததற்கே மறுத்தவள், கோவில் கூப்பிட்டால் மட்டும் சென்றிருப்பாளா என்ன? அது தெரிந்துதான் அவன் தேவைக்கு மட்டும் பேசிவிட்டு ஒதுங்கிப்போக, இவர்கள் ஒத்துப் போவார்களா என சந்தேகம் வந்தது கணபதிக்கு.‌ ஏற்கனவே அவர் கற்ற பாடம் அப்படி யோசிக்கவைத்தது.

வேந்தன், “அப்ப… மேட்ரிமோனியில பதிஞ்சு வைக்கலாமா மாமா?” கேட்டுக்கொண்டே மாடியேறி வந்தான். 

“அது என்னடா?”

“மாப்பிள்ளை பாக்க. அம்மாகிட்ட வேற இடம் பாத்துக்கறேன்னு சொன்னீங்களாம். அதான், அதுல பதிஞ்சு வச்சா நல்ல மாப்பிள்ளை அமையும்ல.”

“ஏன்டா நீ வேற? அக்கா அப்படி பேசவும் கோவத்துல கத்திட்டேன்டா.”

“நீங்க பதிஞ்சு வைங்கப்பா! நீங்க யார சொன்னாலும் கல்யாணம் பண்ணிக்கிறேன். நாளைக்கே கூட நான் ரெடி.” அம்மாவிடம் பார்த்துக்கொள்ளட்டும் என்றதில் வீம்பாக இவள் முறுக்கிக்கொள்ள. 

“இதுக்குதான் பயமா இருக்கு. பேசறதே இல்ல. பேசினா முட்டிக்குது. உங்களுக்கு பிடிச்சுருக்கா இல்லையானே தெரிய மாட்டேங்குது. எலியும் பூனையுமா இருந்தா நான் என்னானு நினைக்கிறது?”

“என்ன விட்டுட்டு வேற மாப்பிள்ள பாத்துருவாரா?” பதிலுக்கு அவனும் எகிற,

“ஏன் பாக்க மாட்டாரா?”

“எங்க பாக்கச்சொல்லு பாக்கலாம்?”

“எனக்கு மாப்பிள்ளை புடிச்சாத்தான் கல்யாணம்.”

“என்ன புடிச்சுருக்குனு நீ சொல்ற வரைக்கும் உங்கப்பா கல்யாணப் பேச்ச எடுக்கமாட்டாரு.”

“நீ எங்கிட்ட வந்து கேட்டியா, புடிச்சுருக்கானு? சட்டமா பொண்ணு மட்டும் கேட்ட?”

“எனக்குதான் தெரியுமே?”

“என்ன… என்ன தெரியும்?” என படபடக்க, இதுவரை கண்ணாமூச்சி ஆடியவர்கள், பேச்சு என வந்துவிட, தங்களையும் மீறி பேச ஆரம்பிக்க, கணபதி தான் கண்முழி பிதுங்கிப்போனார்.

“திவ்யா ரூம் காலியாத்தானே இருக்கு? இருந்தும் நீ என் ரூம்லதான தங்குற? என் ஃபேட்டோகூட ஒருநாள் தவறாம சண்டை போடுறது உங்க அப்பாவுக்குதான் தெரியாது. எனக்குமா தெரியாது? டெய்லி ராத்திரி சாப்பிடாம நான் வந்ததுக்கப்பறம்தான சாப்பிடுற. இன்னைக்கு கூட இன்னும் நீ சாப்பிடலைல. இன்னைக்கு மொத ட்ரிப்புக்கு போறேன்னு தெரிஞ்சு அலாரம் வச்சு அம்மாவுக்கு முதல்ல எந்திரிச்சு காக்கி ட்ரெஸ் அயர்ன் பண்ணிவச்சு, கிளம்புறதுக்கு முன்னாடி டீ போட்டுக் கொடுத்தது யாராம்?” 

அப்பா முன்னாடியே மகளின் குட்டு உடைக்கப்பட சங்கட்டமாக, அடப்பாவி என வாயைப்பிளந்து பார்த்து நின்றாள். அவன் கள்ளச்சிரிப்பொடு அவளை பார்த்து ஒற்றைப் புருவம் உயர்த்த, ‘நீ பாக்குறதும் தெரியும், நீ பாக்குறத நான் பாக்கறேங்கறதும் உனக்குத் தெரியும். உன்னை நானறிவேன்’ என சொல்லாமல் சொல்லியது அவன் கள்ளப் பார்வை. 

கணபதி இவர்கள் பேசிக்கொள்வதே இல்லையே என நினைத்திருக்க, இவர்கள் தங்களுக்கென தனி உலகத்தில் மௌனமாக சஞ்சரித்திருப்பது புரிய, “இந்தக் காலத்துப் புள்ளைங்கள புரிஞ்சுக்கவே முடியல” என கீழே இறங்க முற்பட, 

“மாமா! எங்க போறீரு? நீரு இருக்குற தைரியத்துலதான் பேசறேன். தனியா கோர்த்துவிட்டு போறீரே?”

“வண்டி குடை சாஞ்சது தெரியாம நாந்தான் தேவையில்லாம வெசனப்பட்டுருக்கேன்டா. நீங்களே முட்டி மோதி வாங்கடா! உங்களுக்கு இடையில வந்தா என் மூக்குதான் உடையும்.” சந்தடி சாக்கில் கழன்று கொள்ள,

“ரொம்ப நம்பிக்கை வைக்காதே. இப்பக்கூட வேற‌ மாப்ள‌ பாக்க சொல்லமுடியும். நீ ஒன்னும் ஆசையா என்னத்தேடி வரல. கல்யாணப் பேச்சும் நானா எடுத்தாதான் உண்டு.”

“என்னடி! திரும்ப திரும்ப அதையே சொல்ற?” வேகமாக ஓரெட்டு முன்னே எடுத்து வைக்க, சட்டென பின்னே நகர்ந்தாள்.‌

“என்ன டி யா?” கோபம் கண்களில் தெறிக்க, நிலவொளியில் கண்கள் கோலிக்குண்டாய் பளபளத்தது. 

“டி இல்லாமா டா வா. நீ மட்டும் மரியாதை கொடுக்குறியா? அன்னைக்கு எழவு வீட்டுக்கு வந்தவ மாதிரியாடி வந்த? ஆசையா ஓடிவந்து பேசறதுக்கு?” 

“வேற எப்படி வந்தாங்களாம்?” என மூக்கை சுழிக்க, 

“எனக்கு நல்லா ஞாபகமிருக்கு. அரக்குப்பச்சையில கரைபோட்ட, மாம்பழக்கலர் பட்டு பாவாடை சட்டையில வந்த. காதுல கல்வச்ச ஜிமிக்கி, கைநிறைய ட்ரெஸ்ஸூக்கு மேட்சா பச்சையில கண்ணாடி வளையல்,‌ உன் கலருக்கும் அதுக்கும் அடிச்சு தூக்குது. மான் டாலர் வச்ச லாங் செயின் இங்க வரைக்கும் இருந்துச்சு.” அவன் தன் நெஞ்சில் கைவைத்துக் காட்டிய இடம் அவளை கூசச்செய்தது. முகத்தை திருப்பிக் கொண்டாள்.

“மெரூன் கலர்ல குட்டியா ஒரு பொட்டு. விபூதி, குங்குமம். ரெட்டை சடை போட்டிருந்த. நல்ல வேளை பூ வைக்கல. இல்லைனா அதையும் அன்னைக்கு எல்லாரும் பேசியிருப்பாங்க. ஒன்னு மட்டும்தான் பிடிக்கல. கால்ல இருக்கிறதே தெரியாம மெல்லிசா ஒரு கொலுசு.”

அவனைப் பார்த்து திரும்பியவள், “கால் வரைக்கும் பாத்தியா?” அவன் பேச்சு அடுக்கடுக்காக ஆச்சர்யமூட்ட,

“அன்னைக்கும் பாத்தேன். நீ இங்க வந்த முதல்நாளும் பாத்தேன்” என்றான்.

மங்கை முகம் யோசனை காட்ட, “நீ கூட மொதமொதன்னு எனக்கு முந்தானை போட்டியே அன்னைக்கு பாத்தேன்” என, 

“என்னாது?” அடித்து விடுபவள் போல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு நெருங்கி வர,‌

“அட பொறுடி! என் ஃபோட்டோவுக்கு போட்டிருந்தயில்ல அதச்சொன்னேன்.” 

“வார்த்தைய பாத்து பேசு. இல்ல, நடக்கிறதே வேற.” 

“காலையில சார்ஜர் எடுக்க வந்தேன். கட்டில்ல உன்ன காணோம். சின்னபிள்ள மாதிரி உருண்டு விழுந்துட்டாளான்னு தேடுனா வெள்ள வேளேர்னு யானைத்தட்டை கலர்ல கணுக்கால் மட்டும் தெரிஞ்சது. அதுல இருக்கிறதே தெரியாம புல்லுபோல ஒரு கொலுசு” என்றவனை திரும்பி நின்று முறைத்துப் பார்க்க,

“உங்கப்புறான அத மட்டும்தான்டி பாத்தேன். அதைத்தான்டி பாக்கல” என்றான்‌ பாவம் போல் முகத்தை வைத்துக் கொண்டு. நம்பமுடியவில்லை என்றது அவளது ஆழ்ந்த பார்வை.

தலைமேல் கைவைத்து, “நம்புடி! மாமன் ரொம்ப கண்ணியவான்” என்றவன் அடுத்து சொன்னதில் அவனது கண்ணியம் வீசம் என்ன விலையென கேட்டது. 

“என்னமோ இனிமேதான் புதுசா பாக்கபோறேனாக்கும்?” என்றவன் பார்வை அவளை கள்ளூரப் பார்க்க, 

“என்ன!” என வெகுண்டாள் பெண். 

“அத்தை உன்ன குளிக்க வைக்கும் போதெல்லாம் தண்ணி ஊத்தினது நான்தானே. அந்த மச்சம் மொதக்கொண்டு மாமனுக்கு அத்துப்படி.” கண்சிமிட்டி சொல்ல, 

அது இருக்கும் இடத்தை நினைத்துப் பார்த்தவள், உச்சி முதல் உள்ளங்கால் வரை கூச, 

“அவ்வா!” என வாயைப் பொத்திக் கொண்டாள். 

“அப்ப பாத்ததும் இப்ப பாக்குறதும் ஒன்னா?” என சண்டைக்கோழியாய் சிலுப்ப, 

“அது பாத்தாதானே தெரியும்?” என்றவன்‌ பார்வை மேலிருந்த கீழாக அளவெடுக்க, பார்வை வீச்சு தாங்காமல், வேகமாக கீழே இறங்க முற்பட்டாள். 

“நில்லுடி! கதைய முழுசா கேக்காமப்போற?” 

அவசரமாக குறுக்கே கைநீட்டி தடுத்தான்.

‘பஸ் நிப்பாட்டுற மாதிரியே நிப்பாட்டுது பாரு முண்டம்’ என யோசித்து முடிப்பதற்குள், பிரேக் பிடிக்காத வண்டி மாதிரி தன்முன் நீண்ட கை மீது மோதி நிற்க, மின்சாரம் தாக்கியது போல் சட்டென கையை இறக்கினான். அவசரமாக குறுக்கே நீண்ட கரம் பெண்மையின்‌ மென்மையை அவனையும் அறியாமல் சோதித்துவிட, பெண்ணவள் மென்மையில் ஆடவனும், கையின் திண்மையில் பெண்ணவளும் தடுமாறி நிற்க, மிக நெருக்கத்தில் வெறும் பனியன் மட்டும் அணிந்திருந்தவனின் மீதிருந்து வந்த எலுமிச்சை சோப்பு வாசமும் அவளை வெகுவாக செயலிழக்க வைக்க, 

மௌத் ஃப்ரெஷ்னரையும் மீறி அவன் மீதிருந்து வந்த சிகரெட் நெடி வேண்டா விருந்தாளியாய் சிலபல நினைவுகளை அவளுக்குள் குடியேற்ற, சடுதியில் பெண்ணவள் முகம் கருத்து இருள்வது தெரிந்தது, அவளையே பார்த்திருந்தவன் அதை அறியாதவன் போல் இயல்பாக விலகிக்கொண்டான். 

மெதுவாக நடுக்கம் பரவ, படபடத்து மேலுதட்டில் நீர் பூத்துவிட்டது.  அதற்குள் மார்புக்கூட்டிற்குள் குதிரையின் குளம்படிச் சத்தம். பிடிமானத்திற்கு கைபிடி சுவற்றில் சாய்ந்து நின்று கை ஊன்றியவள், இழுத்து மூச்சுவாங்கி ஆசுவாசப்பட்டுக்கொண்டாள். 

தகிக்கும் நிலவொளியும், அவள் சூடியிருந்த குண்டுமல்லிச்சரமும். மேனி தழுவிய வாடைக்காற்றும், அவளது அண்மையும் அவனையும் மீறி நிலைகுலையச் செய்ய, கைகளைக் கட்டியவாறு விலகி நின்று கொண்டான்.‌

கணங்கள் சற்று நேரம் மௌனமாக கழிய, இருவரும் தன்னிலைக்கு வர சற்று நேரம் பிடித்தது. இழுத்து மூச்சு வாங்கியவன்,

“அன்னைக்கி உன்னைப் பாத்ததும், ஓடிப்போயி கண்ணாடியில என்னப் பாத்தேன். நீ பெரியகுளம் காசா லட்டு மாம்பழம் மாதிரி இருந்த. நான் சூம்பிப்போன மஞ்சனத்திப்பழம் மாதிரி இருந்தேன். எனக்கு உங்க அம்மாவும், அப்பாவும்தான் நினைவுக்கு வந்தாங்க. ஆத்தாடியோவ்! இவ‌ பக்கத்துல கூட நிக்க முடியாதுடானு அந்த வயசுல தோணுச்சு. சூப்பர் பொண்ணுகளப் பாத்தா இதெல்லாம் நமக்கு சரிப்பட்டு வராதுனு பசங்களே கெத்தா ஒதுங்கிருவோம்.‌ நானும் அந்த மாதிரி சீ…‌சீ… இந்தப் பழம் புளிக்கும்னு‌ ஒதுங்கிட்டேன்” என்றவன் குரலில் துளியும் விளையாட்டுத் தனம் இல்லை.

“அடப்பாவி! நம்ம பக்கம் பாக்கவே இல்லையேனு நெனச்சேனே?”

“ஏன்டி! நீ வந்து எறங்கினதும், எழவுக்கு வந்த மொத்த சனமும் ஒப்பாரி வைக்கிறது விட்டுட்டு உன்னத்தான் பாத்துச்சு. நான் பாத்துருக்க மாட்டேனா?” என அப்பாவிபோல் கேட்க சிரித்து விட்டாள். ஏனோ மனபாரம் இறங்கியது போல் சிறகடித்து பறந்தது. அந்த சந்தோஷம் முகம் முழுவதும் விகசித்தது.‌ 

“அன்னைக்கு எனக்கு பிறந்த நாள்.‌ கோயிலுக்குப் போயிட்டு வீட்டுக்கு வர, தகவல் வந்துச்சு. அனுப்பறதா வேண்டாமானு அத்தைக்கும், மாமாவுக்கும் தகராறுலயே எதையும் மாத்தல. அப்படியே கிளம்பி வந்துட்டோம். அதுவுமில்லாம உன்னப் பாக்க போறோம்கற சந்தோஷத்துல மாத்தனும்னு தோனல. இறங்கறப்பதான் அம்மாச்சி தலையில வச்சிருந்த பூவ மனசேயில்லாம எடுத்துவிட்டாங்க” என்றவள் குரலும், முகமும் கனிந்திருந்தது.

இவ்வளவும் சொல்லியவன் கல்யாணியைப் பார்த்ததை சொல்லவில்லை. தேவையில்லாத ஆணி எனப்பட்டது. இன்னும் அதன் தாக்கம் இவளைத் துறத்த, அந்தச் சுவடே இல்லாமல் அம்மா வாழ்க்கை சந்தோஷமாகத்தான் இருக்கிறது என தெரிந்தால், எப்படி எடுத்துக் கொள்வாளோ? உன் அம்மா ஒரு மகனோடு சந்தோஷமாக அவர் வாழ்க்கையை வாழ்கிறார் என எப்படிச் சொல்வது. 

விடலைப் பருவத்தில் அவளைப் பார்த்து தாழ்வுமனப்பான்மையில், ஒதுங்கிக் கொண்டவன் வளர்ந்து ஓங்குதாங்காக, கட்டுமஸ்த்தான, ஆண்மை ததும்பிய வாலிபனான பிறகுதான் வீரபாண்டி கோவில் திருவிழாவில் அவளை மீண்டும் பார்த்தான். கன்னிப்பருவத்தில் மேலும் கனிந்து மெருகேறியிருந்தாள். அவளைப் பார்த்ததும் கல்யாணி நினைப்பு வர, மீண்டும் தன் மனதிற்கு பெரிய திண்டுக்கல் பூட்டாக போட்டு பூட்டிக்கொண்டான். 

அதற்கு முன் பெங்களூர் ரூட் விஷயமாக, தனியார் பஸ் ஸ்டான்ட் எல்லாம் பார்வையிட, விசாரிக்க மாமனும், மருமகனும் பெங்களூர்‌ சென்றிருந்தனர். அங்கேதான் கல்யாணியை கணவன், மகன்‌ சகிதமாக பார்த்தனர். அவர்கள் இவர்களைப் பார்க்கவில்லை. 

அது ஒரு மெயின் பஜார். அவ்வளவு மாற்றங்கள் கல்யாணியின் நடை, உடை, பாவனைகளில்.‌ காரைவிட்டு இறங்கி, சந்தோஷமாக மகனின் கைபிடித்து நடந்து சென்றாள். அப்படியே மங்கைக்கு பேன்ட், சர்ட் போட்டால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தான் அந்தச் சிறுவன். ஒரு பத்து வயதிருக்கும். உடன் பிரசன்னாவும் டிப்டாப்பாக.

கணபதி அதிர்ச்சியில் உரைந்து நின்றுவிட்டார். பிரசன்னாவோடு தன்னை ஒப்பிட்டது மனம். “இவளோட கனவுக்கு என்னால வண்ணம் கொடுக்க முடியாதுடா மாப்ள. இப்படி வாழ வேண்டியவள என் தலையில கட்டினா எப்படிடா இருப்பா? அவங்கவங்களுக்குனு ஒரு கனவு இருக்கும்லடா?” விரக்தியோடு சொல்லியவர் குரலில் வருத்தம் தவிர வேறு எந்த உணர்ச்சியும் இல்லை. 

“உங்களுக்கு கோபம் வரலியா மாமா?” இந்த மாதிரி முன்னாள் மனைவியை இன்னாள் கணவரோடு பார்த்தால் எத்தனை ஆண்டுகளானாலும் அரிவாள் தூக்கும் கூட்டம்.

“அடுத்தவன் பொண்டாட்டி மேல எனக்கென்னடா கோபம்” என முடித்துக் கொண்டார். அதுவே எனக்கும் அவளுக்கும் சம்பந்தமில்லை என சொல்லாமல் சொல்லியது. 

அதனால்தான் இவளுக்கென்றும் ஒரு‌ கனவிருக்கும் என வேந்தன் அவளைப் பற்றி நினைப்பதையே அறவே தவிர்த்துவிட்டான்.‌ ஆனால் அரசியின் கனவுக்குள் சிம்மாசனமிட்டு அமர்ந்திருப்பது தான் தான் என தெரிந்தபின் விட்டுவிட அவன் முட்டாளா என்ன? கோட்டையேறி கொடிநாட்ட மாட்டான்.

காதல் வறுமையில் தவித்த தருமிக்கு பொற்கிழி கிடைத்தது போல் பூரித்து போனான்.  

அடுத்து மருத்துவ சோதனைக்கு செல்ல கணபதிக்கு அதிகப்படியான இரத்த அழுத்தம் இருப்பது தெரிந்தது. 

“அவர் நிம்மதி உன் சம்மதத்துலதான் இருக்கு. கண்டிப்பா மாமா உன்ன கட்டாயப்படுத்த மாட்டார்” என, 

“கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்கப்பா” தன்னால் முன்‌வந்து சொல்லிவிட்டாள்.‌ 

பிறகென்ன, கணபதிக்கு சந்தோஷத்தில் யானை பலம் கிடைத்த மகிழ்ச்சியில் ராஜ்கிரண் மாதிரி நெஞ்சை நிமிர்த்தி எழுந்துவிட்டார். முகூர்த்த நாள் குறித்துவிட்டுதான் ஆஞ்சியோ செய்து கொள்ளவே புறப்பட்டார். 

நடப்பது நடக்கட்டும் என சாமி மீது பாரத்தைப் போட்டுவிட்டு கல்யாணத்தை எதிர் நோக்கி கலக்கத்தோடு கன்னிமனம். 

அடுக்கு மல்லி எடுத்து வந்து 

தொடுத்து வெச்சேன் மாலை

மணக்கும் ஒரு மணிக்கழுத்தில் 

விழுந்ததிந்த வேளை

அடுக்கு மல்லி எடுத்து வந்து 

தொடுத்து வெச்சேன் மாலை

மணக்கும் ஒரு மணிக்கழுத்தில் 

விழுந்ததிந்த வேளை

அச்சாரம் அப்பத் தந்த முத்தாரம்

அதை அடகு வெக்காம 

காத்து வந்தேன் இந்நாளா

தள்ளி விலகி நிக்காம 

தாளம் தட்டு கண்ணாளா

வெற்றி மாலை போட்டானய்யா 

கெட்டிக்கார ராசா

முத்துப் போல கண்டானங்கே 

மொட்டுப் போல ரோசா

சொந்தம் இங்கே வந்தாளென 

சொன்னான் அவன் லேசா

காணாததை கண்டான் 

அப்ப ஆனானய்யா பாஸா

என்னாச்சு இந்த மனம் பொன்னாச்சு

அட எப்போதோ ரெண்டு மட்டும் ஒண்ணாச்சு

அட வாய்யா மச்சானே 

யோகம் இப்போ உண்டாச்சு… 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top