மல்லி 21

“அப்பா… அப்பாஆ!”

 மங்கை அரற்றிய அரற்றலில்தான் வேந்தனே அடித்துப் பிடித்து எழுந்து ஓடி வந்தான். மசமசவென விடியத்தொடங்கிய காலைப் பொழுது. 

மகள் கையில் கொடுத்த காஃபியை வாங்கும் முன் கை துவண்டு, மயங்கி சோஃபாவிலேயே சரிந்திருந்தார். மங்கைக்கு என்ன நடக்கிறது என சிறு மூளை தொட்டு பெருமூளை உணர்வதற்குள் சரிந்த வேகத்திற்கு தலை சோஃபா கைப்பிடியில் மோதவிருக்க, அனிச்சையாக தலையை சட்டென தாங்கியவள் அவளையும் மறந்து அப்பா என அலறியிருந்தாள். தான் ஆடாவிட்டாலும் தசை ஆடத்தானே செய்யும். 

இன்று வார விடுமுறை முடிந்து கல்லூரி என்பதால் அதிகாலை எழுந்து, குளித்து, உடைமாற்றி வந்தாள். இன்னும் கணபதி எழவில்லை. வழக்கமாக இந்நேரத்திற்கு மகள் எழுந்து வருவதற்குள் சமையலை ஆரம்பித்திருப்பார். வாசல் தெளித்து, தனக்குத் தெரிந்த வகையில் கோலம் என்ற பெயரில் ரெண்டு கம்பியிழுத்துவிட்டு வந்தாள். 

அவர்களுக்கு நேற்றைய மீன் குழம்பு இருக்க, தனக்கு தயிர் தாளித்தால் போதுமென குக்கரில் அரிசியை ஊற வைத்தாள். கணபதி எழுந்து வரும் அரவம் கேட்க, முகம் கழுவி வருவதற்குள் காஃபி போட்டு வந்தாள். வந்த நாளைக்கு இன்றுதான் மகள் கையால் காஃபி குடிக்கிறார். அதற்கும் கொடுப்பினை வேண்டும் போல. முகம் மலர வாங்கியவர் சோஃபாவில் அமரும் முன் மயங்கியிருந்தார். அதற்குள் உடலெல்லாம் வியர்த்துக் கொட்டியது. 

மங்கையின் அலறலில் படுக்கை உதறி எழுந்தவன் நிதானம் பிடிபடுவதற்குள் டிசர்ட்டை எடுத்து தலையோடு மாட்டிக்கொண்டே ஓடிவந்தான். 

“என்னாச்சு?” என பதட்டமாக,

“தெரியல, மயங்கிட்டாரு” கலக்கத்துடன் தலையைப் பிடித்தவாறே கூற, உடல் வியர்வை பயமுறுத்த, வாழையிலைக்கட்டைத் தூக்குவது போல் தூக்கி தோளில் போட்டு, காருக்கு விரைந்தான். 

ஆறடியில் தாட்டியமான உருவம் துவண்டு கிடக்க, சற்று தம்கட்டித்தான் தூக்கினான். என்னவோ ஏதோ என்ற பதட்டம் தூக்க தெம்பூட்டியது. அப்பொழுதே தலை தொங்கியது. அவளிடம் பயத்தை வெளிக்காட்டாமல்,

 “சாவிய எடுத்துட்டு வா” என கத்திக்கொண்டே முன்னே செல்ல, இவள் கார் சாவியெடுத்துக் கொண்டு பின்னே ஓடினாள். காரின் பின் கதவைத் திறந்துவிட பின்சீட்டில் நெடுஞ்சாண்கிடையாக படுக்க வைக்க, மறுபுறம் விரைந்து சென்று கதவைத் திறந்து உட்கார்ந்தவள், தலையைத்தூக்கி மடியில் வைத்து தாங்கிக் கொண்டாள். வேந்தன் கைகளில் அடுத்த நொடி கார் பறந்தது. 

மருத்துவமனை கொண்டு சேர்க்க, சிறிது நேரத்திற்கெல்லாம் தேனியிலிருந்து மூவரும் வந்துவிட்டனர். 

“என்னடா சொன்னாங்க?” கண்ணீரோடு தாமரை மகனை விசாரிக்க,

“இன்னும் ஒன்னும் சொல்லலம்மா” என்றான் கலக்கத்தோடு.

மங்கை தான் பேதலித்துப் போய் அமர்ந்திருந்தாள். நல்லா எழுந்து வந்த மனுஷன் அடுத்த அரை மணி நேரத்திற்கெல்லாம் மருத்துவமனையில், அதுவும் உயிருக்கு உத்திரவாதமின்றி எனில் அவளால் நம்பக்கூட முடியவில்லை. 

“நானும் இல்லைனா எம்பிள்ளைக்கு யார்டா இருக்கா? நீயும் எம்பிள்ளையும் சந்தோஷமா வாழறதப் பாக்கணும்டா”

வேந்தனிடம் அவர் சொல்லிய வார்த்தைகளே காதில் ஒலிக்க, பயம் அப்பிக்கொண்டது. சிலர் இறுதிக்காலம் நெருங்குகையில் அசரீரியாக சொல்லும் வாக்குபோல் அவளுக்குப்பட்டது. 

யாரும் எனக்கு வேண்டாமென வீம்பாக முகம் திருப்பினாள் தான். நான் சிரமப்படும் பொழுது என்னை தவிக்கவிட்டவர்கள் யாரும் தேவையில்லை என நினைத்தவள் தான். ஆனால் இன்று அதன் நிதர்சனம் புரிகையில் உடைந்து போனாள். ஏதாவது அசம்பாவிதமாக நடந்து விடுமோ என்ற பயம் மனதை வண்டாய் குடைந்தது. எழுந்து கூட வரவேண்டாம். எப்படியாவது கண் முழித்துவிட்டால் போதும் என்றிருந்தது.‌

அடுத்த சிறிது நேரத்தில் மைல்ட் ஹார்ட் அட்டாக் எனும் ரிப்போர்ட்டோடு மருத்துவர் இவர்களை அழைத்து கூறியிருந்தார். இது முதன்முறை இல்லை என்றும் தெரிவித்தார். அவர் போதையில் இருந்ததினால் முன்பு வந்தது தெரியாமலிருந்திருக்கலாம் என்றார். மற்ற சோதனை முடிவுகள் வந்ததும் மேற்கொண்டு பேசலாம் என அனுப்பிவிட்டார். 

வழக்கம் போல மருத்துவ நேரம் இருபத்து நான்கு மணிநேரம் கணபதிக்கு வழங்கப்பட்டது. கதவின் கண்ணாடி வழியாக பார்க்க பழைய கூரை வீட்டின் மீது படர்ந்துகிடக்கும் கொடி போல அவரைச் சுற்றிலும் வயர்கள் பின்னிக்கிடந்தன.

இன்னும் யாரும் பச்சைத்தண்ணீர் கூட குடிக்கவில்லை. செழியனிடம் அம்மாவையும், அப்பாவையும் கேன்டீன் அழைத்துப் போகச் சொன்னான். மங்கை செல்ல மறுத்துவிட்டாள். தான் அழைத்துப் போவதாக, அவர்களை மட்டும் போகச் சொன்னான். அவனும் எதுவும் சாப்பிடும் மனநிலையில் இல்லை. இரவு தான் மருமகனிடம் அவ்வளவு சந்தோஷமாகப் பேசிவிட்டு படுக்கச்சென்றார்.

 வாழ்க்கையை வெறுத்து மொடாக்குடி குடித்த பொழுதெல்லாம் நன்றாகத்தான் இருந்தார். வாழவேண்டுமென ஆசைப்படும் பொழுதுதான் விதி அவரிடம் சடுகுடு ஆடுகிறது. சிலர் மட்டும் விதிக்கு செல்லப் பிள்ளைகள் போல. கண்ணீர் தொட்டு தலையெழுத்தை எழுதிவிட்டு, தோள்மீது தூக்கிவைத்து கொண்டாடுகிறது. வாழ்நாளில் பெரிதாக எந்த சந்தோஷத்தையும் அனுபவித்ததில்லை.‌

வித்யாவதிக்கும் தகவல் கொடுக்க, அண்ணனைப் பார்க்க வந்துவிட்டார். தாமரை மங்கைக்கு ஆதரவாக கையைப் பிடித்து தன் மடியில் வைத்திருந்தார். இருவரையும் ஒன்றாகப் பார்த்தபோதே காரணமேயில்லாமல் முகம் சுண்டிப்போயிற்று. 

மதிய உணவு வேளையே நெருங்கிவிட்டது. மங்கை இடத்தை விட்டு அசையவில்லை. 

“அரசி! ஏதாவது சாப்பிட்டு வரலாம் வா!” என அழைத்தான். வேண்டாமென தலையை மட்டும் ஆட்டினாள். முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அழக்கூட இல்லை. இறுகிப் போயிருந்தாள். மீண்டும் விலாசம் தொலைத்தவளாய் அநாதரவாய் ஓர் உணர்வு அவளையும் அறியாமல். 

பெரிதாக அப்பா என பாசம் கொண்டாடவில்லை தான். ஆனால் இவள் இங்கு வந்த நாளிலிருந்து மகளுக்கென ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து செய்தார். மகளுக்கெனவே அரை குறையாக என்றாலும் யூ ட்யுப் பார்த்து சமைத்தார். இத்தனை வருடங்களாக மாமன் வீட்டில் இருந்தும் அங்கே ஒரு உரிமையோடு ஒட்டமுடியவில்லை. அதை அடிக்கடி செல்வியும் நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார். 

ஆனால் இங்கு வந்தபிறகு இது என் வீடு என்ற உரிமை இயல்பாகவே வந்திருந்தது. 

அல்சர் பிரச்சினை கூட பெரிதாக அவளைப் படுத்தவில்லை. நேற்றுதான் அதுவும் பழையன கிளறப்பட தொந்தரவு பண்ணியது. 

அத்தை வீடு சென்றதும் அவள் மனதிற்கு ஒரு மாற்றமாகத்தான் இருந்தது.‌ இவளால்தான் அவர்களோடு சட்டென ஒட்ட முடியவில்லையே ஒழிய, அவர்கள் இவளிடம் வேறுபாடு காட்டாது இயல்பாக பேசியது பிடித்திருந்தது. 

இதெல்லாம் அப்பா என்ற ஒரு உறவைக் கொண்டுதானே. அவரும் தனக்கு இல்லை என்றால் என்ற நினைப்பே உள்ளம் பதற, ஒரு வேளை இதுதான் இரத்த பந்தமோ என தோன்றியது. 

“வெறும் வயிறா இருக்கக் கூடாது. நீ சாப்பிடலைனா உடனே எந்திருச்சுருவாரா? நாம தெம்பா இருந்தா தான் அவரைப் பாக்கமுடியும். உனக்கு இருக்குற பிரச்சினைக்கு நீயும் சாப்பிடாம ஏதாவது இழுத்துவிட்டுக்காத, எந்திரி” என அதட்ட, அது கொஞ்சம் அவளிடம் வேலை செய்தது. நேற்றும் சரியாக சாப்பிடாதது ஒரே நாளில் ஓய்ந்து உருக்குலைந்து போயிருந்தாள். 

மருத்துவமனை கேன்டீன் அழைத்து செல்லாமல் வெளியே அழைத்து வந்தான். அருகிலிருந்த ஹோட்டலிற்கு அழைத்துச் சென்றவன்,

“என்ன சாப்பிடுற?” என,

“ம்கூம்ம், சாப்பிட முடியும்னு தோனல. மல்லுக்கட்டி சாப்பிட முடியாது.”

“காலையிலருந்து வெறும் வயிறா இருக்குறதால அப்படி இருக்கும். ஏதாவது ஜுஸ் குடிக்கிறியா? மாதுளை ஜுஸ் சொல்லவா?” என கேட்க, இதற்கு மேல் மறுக்க முடியாமல் சரி என்றாள்.‌ அவன் சாப்பாடு வாங்கிக் கொண்டு இவளுக்கு ஜுஸ் ஆர்டர் செய்தான். ஒரு மிடறு குடிக்க தொண்டை அடைத்து வலித்தது.

“கண்ணு முழிச்சுருவார்ல” என்றவள் குரலில் மிதமிஞ்சிய பயம். அவளாகவே முதன்முறையாக அவனிடம் பேசுகிறாள். அவள் வெறுமனே கேட்க, இப்பக்கூட அப்பான்னு சொல்ல முடியலியா என சுருசுருவென உள்ளுக்குள் கோபம் பொங்கியது. ஏனோ இன்னும் இவளுக்கு சட்டென்று உறவு சொல்ல வரவில்லை. 

“யாரு?” வெடுக்கென கேட்க, பதில் சொல்லாமல் மௌனமாக ஜுஸையே ஸ்ட்ராவால் கலக்கிக் கொண்டிருக்க,

“நீ அப்பான்னு சொல்லனும்னா ஒரு மனுஷன் ஹார்ட் அட்டாக் வந்து படுக்க வேண்டியிருக்குல்ல. எத்தனை தடவ நீ அப்பான்னு கூப்பிடனும்னு எதிர்பாத்தாரு தெரியுமா? ஆனா நீ கூப்பிட்டப்ப அவருக்கு கேட்டுச்சானு கூட தெரியல. இனிமேல் எந்திரிச்சு வந்து கேப்பாரானும் தெரியல” ஆழ்ந்த குரலில் அவன் கடைசியாக சொன்ன வார்த்தைகள் நெஞ்சை அறுத்தது.

அவளும் அவனை வெறுமையாக ஒரு பார்வை பார்த்தாள். என்னுடைய எதிர்பார்ப்பும் வருடங்கள் கடந்ததாயிற்றே என்றது அந்த வெற்றுப் பார்வை. எத்தனை வருட ஏக்கம் எதிர்பார்ப்பு. 

“இன்னைக்கி என்ன நாள் தெரியுமா?” என்றவனை கண் நிமிர்த்திப் பார்த்தாள். 

“உங்க அப்பாவோட கல்யாண நாள்” என்றான்‌ ஒரு விரக்திப் புன்னகையோடு. 

“எப்பவும் இந்த நாள்னா மொதநாளே  ஆரம்பிச்சுருவாரு. நேத்து உனக்காகத்தான் மாமா குடிக்கல” என்றவன், 

“பிடிச்சு பண்ணினாரா, பிடிக்காம பண்ணினாரா, சாதிக்காக கல்யாணம் பண்ணினாரா தெரியாது. ஆனா, எனக்குத் தெரிஞ்ச வகையில அத்தைய நல்லாத்தான் பாத்துக்கிட்டாரு. அவங்களுக்குதான் இவரோட ஒட்டமுடியல. மாமியார் மருமக பிரச்சினை எல்லார் வீட்லயும் நடக்கறதுதான். இப்ப உங்க அத்தையும், அம்மாச்சியும் சண்டை போடுறதில்லையா? ஆனா இப்ப விட்டுக்கொடுக்கல பாரு” என்றான். 

அது உண்மைதான். பேரன் பேத்திகளைப் பார்க்கச் சென்ற மாரியம்மாளை, “சோறுகண்ட எடமே சொர்க்கம்னு போய் மருமகன் வீட்ல உக்காந்துக்கிட்டா உங்க மகனுக்கென்ன மரியாதை. நாங்க ஏதோ தொரத்திட்டதா பேச்சு வராது. ஏதோ போனோமா வந்தோமான்னு இருங்க. பெத்தவகளுக்கு பிள்ளையப் பாக்கத் தெரியாதா?” என அடக்கிவிட்டார். 

அவருக்கும் மகன் கௌரவம் பெரிதாக்கப்பட்டது. மகளும் அங்கில்லாத நிலையில், மகனுக்கு ஒரு சொல் வந்துவிடக் கூடாதென மாரியம்மாளும் ஃபோனில் பேத்தியிடம் ஆயிரம் கோளாறு சொல்லி அப்பப்ப வந்து பார்த்துக் கொள்வதாக சொல்லிவிட்டார். ஆயிரம் தான் என்றாலும் மருமகன் வீட்டில் தங்குவது அவருக்கும் கௌரவக் குறைச்சலாகப்பட்டது. 

“உங்க அம்மா ஓடிப்…” என சொல்ல வந்தவன், பாதியிலேயே நிறுத்திவிட்டு, “அவங்க போன பின்னாடி மாமா ரொம்ப அசிங்கப்பட்டாரு. சண்டியர் மாதிரி கெத்தா காலரத் தூக்கிவிட்டுத் திரிஞ்சவரு. இவர்‌ முன்னாடி நின்னு பேசப் பயந்தவிங்க எல்லாம் பொடணிக்குப் பின்னாடி எகத்தாளமா பேசினாங்க. ஆம்பள பொண்டாட்டிய விட்டுப் போயிட்டா பரிதாபமா பாப்பாங்க. இதுவே பொண்டாட்டி விட்டுப்போயிட்டா ஆம்பளைக்கி கிடைக்கிற பேறே வேற. குடிச்சுட்டாலே நம்மல புடிக்காத பொண்ண கட்டக்கூடாதுடா, நம்ம தகுதிக்கு மீறியும் கட்டக்கூடாதுன்னு புலம்ப ஆரம்பிச்சுருவாரு. அதனாலதான் இன்னும் உங்கிட்ட நம்ம கல்யாணத்தப் பத்தி பேசல. ஒருவேள உனக்கு விருப்பமில்லைனு சொல்லிருவியோன்னு பயம். வேற யாருக்கும் கட்டிக்கொடுக்க அவருக்கு மனசில்ல. இதெல்லாம் உனக்கு அவர் மேல பாசம் வரணும் சொல்லல” என்றவன் சற்று நிதானித்தான். 

இவ்வளவும் சொல்லியவன் ஏன் அன்று அவளிடம் பேசவில்லை என்பதை மட்டும் சொல்லவில்லை. சொன்னால் கல்யாணியைப் பார்த்தது முதற்கொண்டு சொல்லவேண்டும். விடலைப் பருவத்தில் நான் உனக்கு பொருத்தமில்லையென நினைத்தேன் என்பதை எப்படிச் சொல்வதென தன்மானம் தடுத்தது.

சாப்பாட்டுத் தட்டில் கை அலைந்து கொண்டே, “உங்கம்மா போறதுக்கு முன்னாடி நடந்த சம்பவம் உனக்கு ஞாபகம் இருக்கானு தெரியல” என அவன் பேச ஆரம்பிக்க, 

அந்த நாள் நினைவில் அவள் முகம் இருள் பூச ஆரம்பித்தது. அன்று அம்மாவை சென்றாயன் அடித்ததாகத்தானே நினைத்தாள். அதனால் தான் அம்மா கோபித்துக் கொண்டு சென்றுவிட்டதாக எண்ணியிருந்தாள். அந்த வயதில் அவ்வளவுதான் புரிந்தது. வளர்ந்த பிறகுமா என்ன நடந்தது என புரியாது. அதுவும் ஆடை கிழிந்து அன்று பெற்றவள் இருந்த கோலம் பிஞ்சு மனதில் பச்சை குத்தியது போல் பதிந்துவிட்டதே. இன்றுவரை அவளைத் துரத்தும் கெட்ட சொப்பனம் அது. 

“மாமா வர்றவரைக்கும் இருந்து உண்மையச் சொல்லியிருக்கலாம். மனசார அவன வெளக்குமாத்தால நாலு சாத்து சாத்தியிருக்கலாம். எதுடா சாக்குனு அத காரணமா வச்சு போயிட்டாங்க. உண்மை தெரிஞ்ச பின்னாடி அம்மாவும் ஏமாத்திட்டாங்கனு அம்மாச்சி சாகற வரைக்கும் மாமா, அவங்ககிட்ட பேசல” என அவன் பேசிக்கொண்டே போக, அவளுக்கு உடல் உதறலெடுக்க ஆரம்பித்தது. குடித்த ஒரு மிடறும் வெளியே வரும் போல் இருக்க, அவளது முகத்தைப் பார்த்தவன் சட்டென பேச்சை நிறுத்தினான். 

“மங்கா! என்ன பண்ணுது?” பதறி கையைப் பிடிக்க வியர்த்து சில்லிட்டது. வேகமாக எழுந்து வாஷ்பேஷின் ஓடினாள். இவ்வளவு நேரமும் இயல்பாகத்தானே இருந்தாள். இவளுக்கு என்ன பிரச்சினை என புரியாமல் குழம்பித் தவித்தான். 

முகம் கழுவி வர, அவனும் பாதி சாப்பாட்டில் எழுந்து கொண்டான். 

“நீங்க சாப்பிடுங்க” என்றாள். தன்னால் அவனும் பாதிச்சாப்பாட்டில் எழுவது பிடிக்காமல். 

“பரவாயில்ல. லேட்டானதால சாப்பிட முடியல” என எழுந்தவன், பில்லைக்கட்டி விட்டு மருத்துவமனை வந்தனர். 

செழியன் அவசர சிகிச்சை பிரிவின் முன் அமர்ந்திருக்க, அம்மையப்பன், தாமரை, வித்யாவதி மூவரும் சற்று காற்றாட வெளியே மரத்தடியில் அமர்ந்திருந்தனர். 

கண்கள் சிவந்து சோர்ந்து வந்தவளைப் பார்த்த தாமரை என்னவென்று விசாரிக்க,

“தெரியலம்மா, எது சாப்பிட்டாலும் தங்க மாட்டேங்குது. இத்தனைக்கும் ஜுஸ் தான் குடிச்சா” என நேற்று நடந்ததையும் மனதில் வைத்து அவன் பேச,

“என்னடா, மசக்கக்காரிக்கு சொன்ன மாதிரி சொல்ற? கண்ணெல்லாம் வேற கெடங்கு விழுந்து போயிருக்கு. கல்யாணம் வரைக்கும் கூட பொறுக்க முடியலியா?”

 வித்யா வாய்விட, வேந்தனுக்கும், மங்கைக்குமே அவர் கேட்டது புரியவில்லை. மசக்ககாரியா? சட்டென பிடிபடாமல் அவன் யோசிக்க,

“வித்யா! என்ன பேசுற?” திடீரென தாமரை கோபமாக குரலை உயர்த்தவும் தான் அவனுக்கு சட்டென புரிந்தது. மங்கை இன்னும் புரியாமல்தான் நின்றாள்.

அம்மையப்பன், “மொதல்ல அவள இங்கிருந்து போகச் சொல்லு. கொழுந்தியாள அடிச்சுட்டாங்கற பேரு எனக்கு வேண்டாம்” என விரல் நீட்டி எச்சரிக்க, 

“என்ன தப்பா சொல்லிட்டேன். பஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருந்தா பத்திக்காமையா போகும்? இல்ல, ஏற்கனவே அங்க வீட்டுக்கு ஒருத்தன் வந்து போய்க்கிட்டு இருந்தான்ல. எதுக்கும் நீ சூதானமா இருடா. உங்க மாமன‌ மாதிரி வெள்ளத்தோலப் பாத்து ஏமாந்துறாத. ஆத்தாள மாதிரி” என முடிக்கவில்லை, 

“சித்தீ!” என மருத்துவமனையே கிடுகிடுக்க அரற்றியவன், அவனையும் அறியாமல் கை ஓங்கிவிட, 

மகனை முந்திக்கொண்டு தாமரையே இத்தனை வயதிற்குப் பிறகு தங்கையை ஓங்கி அறைந்திருந்தார். கோபத்தில் அவருக்கு கீழ்மூச்சு மேல் மூச்சு வாங்கியது. ஏற்கனவே இரத்தக்கொதிப்பு வேறு. படபடத்து வந்தது.

“ச்ச்சே!” என கையை உதறியவன் சித்தி முகத்தைக்கூட பார்க்கப் பிடிக்காமல் வேறு புறம் திரும்பிக் கொண்டான். மங்கை விக்கித்து நின்றாள்.

இந்த மாதிரி பேச்சு வரும் என்றுதான் மகள் வந்ததிலிருந்து வேந்தனை வீட்டில் வைத்துக் கொள்ளவில்லை. நேற்றுதான் அதுவும் அடம்பிடித்து தங்கினான். தெய்வாதீனமாக  இப்படி ஏதாவது நடக்கவிருப்பதால் தான் தங்கினானோ என்னவோ? அவனும் இல்லையென்றால் ஒத்தையில் என்ன செய்திருப்பாள்.‌ 

இருபத்து நான்கு மணிநேர அவகாசம் கூட அவசியமில்லாமல் போயிருக்கும். ஆனால் இப்பொழுது வித்யா பேசியதைக் கேட்டவனுக்கு கோபம் கண்ணைக்கட்டியது.‌ கண்கள் சிவந்து முகம் கறுத்துவிட்டது. அம்மா அடிக்கவில்லை என்றால் தானே கூட நிதானம் தவறி கை நீட்டியிருப்பானோ என்னவோ? 

அம்மையப்பனும் இருக்க அவர்கள் முன் வித்யா கேட்டதில் மங்கை உடல் கூசிப்போயிற்று.‌ இதென்ன நாக்கா தேள் கொடுக்கா? அது கூட தன்னைச் சீண்டியவர்களைத்தான் கொட்டும். இப்படி பேசியேதான் கல்யாணியை வீட்டைவிட்டு அனுப்பிவிட்டனர். இப்பொழுது இவளையும்.

தன் கணவன், அண்ணன் குடும்பத்திற்கு இழைத்த தீங்கை மறந்து, “நீங்கதானே எனக்கு அவன கட்டிவச்சீங்க. நானா பாத்தா கூட்டிக்கிட்டுப் போனேன். இப்ப என்னையும் பிள்ளைகளையும் நட்டாத்துல விட்டுட்டு அவன் போய் சேந்துட்டான். எங்கெதி என்னாகறது.‌ நல்லதங்கா மாதிரி ரெண்டு பிள்ளைகளோட கெணறு தேடித்தான் போகணும்.” 

கண்ணைக் கசக்கியோ, நயந்து பேசியோ ஒண்டிக்கட்டையான அண்ணனிடம் இதுநாள் வரை சுரண்டியது, உரிமைக்காரியாக மகளென மங்கை வந்தபிறகு இனி நடக்காது எனும் ஆதங்கம் ஒருபக்கம் என்றால், அக்கா மகனுக்கே இவளைக்கட்டி, அண்ணன் சேர்த்ததெல்லாம் அக்காவுக்கே போகிறதே என்ற ஆத்திரம் மறுபக்கம். பேருக்குதான் கணபதி. உழைப்பெல்லாம் வேந்தனுடையது என்று புரியவில்லை. 

மகளை கணபதி அழைத்து வந்தது தெரிந்ததிலிருந்தே உள்ளுக்குள் பொறுமிக் கொண்டிருந்தார். சந்தர்ப்பம் கிடைக்க அள்ளி தூற்றிவிட்டார். தீட்டிய மரத்தையே வெட்டிப்பதம் பார்க்கும் கோடாறிக்காம்பு. 

தாமரை அடித்த ஆத்திரத்தில், “இனம் இனத்தோடு சேரும், பணம் பணத்தோட சேரும்கற மாதிரி இருக்கப்படவக எல்லாம் ஒன்னு சேந்துக்கிட்டீங்கள்ல. ஏன், இவனுக்கு மட்டும்தான் இவ உரிமையா? என் மகனுக்கு அந்த உரிமை இல்லையா? என்ன, ஒரு வருஷம் முன்னப்பின்ன. சொந்தத்துல அதெல்லாம் சகஜம்தான?”

 சண்டைக் கோழியாய் சிலுத்து நிற்க, வித்யா எங்கு சுத்தி எங்கு வருகிறார் என புரிந்தது. மகனுக்கு கட்டினால், பஸ் கம்பெனி, அண்ணன் சேர்த்து வைத்திருப்பது எல்லாம் தனக்கு வருமே எனும் பேராசை. அவனுக்கு இப்பொழுதுதான் பத்தொன்பது வயது. மங்கையைவிட ஒரு வயது இளையவன்.‌ 

தாமரை, வித்யாவதி இருவரையும் சரிக்கு சமமாகத்தான் கட்டிக்கொடுத்தனர். கணபதி நிலமை கூட அக்கா, தங்கைக்கு கீழ் தான். ஆனால் இப்பொழுது அக்காவோடு சேர்ந்து கணபதியின் அந்தஸ்த்தும் உயர்ந்துவிட, தான் மட்டும் அவர்களை விட தகுதியிலும், தராதரத்திலும் இறங்கிவிட பொறுக்க முடியவில்லை வித்யாவதிக்கு. இவர் குணமறிந்து புகுந்த வீட்டினரும் சுத்தமாக ஒதுக்கிவிட, கணபதிதான் உடன்‌பிறந்த கொடுமைக்கு இன்றளவும் கொடுத்து தாங்கினார். 

‘யம்மாடி! இவ லேசுப்பட்டவ இல்ல. இவ மிதிச்சுப் போற தடத்துல புல்லு கூட முளைக்காது’ என நினைத்தவர், ஒன்றிரண்டு பேர் இவர்களை நின்று பார்த்துச்செல்ல,

 “தாமரை உள்ள போகலாம். அங்க அவன் நெலமை என்னானு தெரியல. இவள இப்படியே வெளிய போகச் சொல்லு!” கோபமாக கூறிவிட்டு அம்மையப்பன் துண்டை உதறி தோளில் போட்டு உள்ளே சென்றுவிட்டார். இருந்தால் அவளுக்கிணையாக பேசி தன் மரியாதையைக் கெடுத்துக் கொள்வோம் என்று பயம்.‌ பின்னாடியே தாமரையும் சென்று விட,

அதுவரை அமைதியாக நின்றவள், “உன் நெனப்புக்குதான் இன்னும் நீ பிறந்த வீட்ல கையேந்துற நிலமையில இருக்க. நல்லவேள, உனக்கு ரெண்டும் ஆம்பளப்புள்ளையா போச்சு. இல்லைனா உம் புருஷன் அவங்களையும் விட்டு வச்சுருக்கமாட்டான். அவனாலதான் நானும் எங்க அப்பாவும் இன்னைக்கி இந்த நிலைமையில இருக்கோம். எங்க அப்பா மூஞ்சியில கூட முழிக்காத. எங்கப்பாவ பாக்கணும்னு நெனச்ச மரியாதை கெட்டுறும்.‌ வீட்டுப் பக்கம் கூட வந்துறாத. மீறி வந்தா உன் புருஷனுக்கு கிடைக்காமப் போனது உனக்கு கிடைக்கும்.”

 கோபத்தில் மூச்சுவாங்க பேசியவள் விறுவிறுவென உள்ளே சென்றுவிட்டாள். அத்தனை கோபத்திலும் பேச்சுக்கு பேச்சு எங்க அப்பா என்றுதான் சொன்னாள். கணபதியும் எம்பிள்ளை என்ற வார்த்தையைத் தவிர பெயர்கூட இதுவரை உச்சரித்ததில்லை. 

“என்னமோ இவளுக்கு மட்டும் அப்பன் வீடாட்டம் சொல்லிட்டுப் போறா. எனக்கும் அதுதான் அப்பா வீடு.” எதற்கும் அசராமல் பொறுமிக் கொண்டே வெளியேறிவிட்டார்.

இப்பொழுதுதான் வேந்தனுக்கு கணபதி ஏன் எல்லாவற்றையும் மங்கை பெயருக்கு மாற்ற வேண்டும் என அவசரப்பட்டார் எனப்புரிந்தது. 

அன்று‌ மாடியில் மங்கை இவர்களிடம் ஆதங்கத்தை கொட்டிவிட்டு இறங்கிவிட, அழுது ஆசுவாசப்பட்டவர், 

“எல்லாத்தையும் எம்பிள்ள பேருக்கு மாத்தனும்டா” என்றார்.

“இப்ப என்ன‌ மாமா அவசரம். எப்படினாலும் உங்களுக்குப் பின்னாடி எல்லாமே அரசிக்குதானே?” என,

“இந்த வீட்ட விட்டும் எம்பிள்ளைய யாரும் வெளிய போகச் சொல்லிறக் கூடாதுடா.”

“அது உங்க வீடு மாமா. யாரு அவள வெளிய போகச் சொல்லமுடியும்.”

“உங்க சித்தியப் பத்தி உனக்கு தெரியாதுடா மாப்ள. எல்லாமே பொதுன்னு வந்து நிக்கும். உங்க அம்மாவையும், சித்தியையும் கட்டிக் கொடுக்கும் போதே, காடுகரையெல்லாம் வித்துதான், கைக்கு மீறின இடத்துல உங்க தாத்தா கட்டிக் கொடுத்தாரு. ஆம்பளப் பையன் பொழச்சுக்குவான்னு எனக்கு இந்த வீடு மட்டும்தான்னு அப்ப வாய்ல சொன்னதுதான்” என்றார். 

யோசனையோடு அதே இடத்தில் அவன் நிற்க, ஃபோனில், 

“அண்ணா, டாக்டர் கூப்பிடறாங்க வா.!” செழியன் அவசரமாக அழைக்க வேகமாக உள்ளே சென்றான். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top