மாமா! மாப்ளே! 15

ஈரக்கூந்தலை முன் பக்கமாக வழியவிட்டபடி, உச்சி வகிட்டில் குங்குமத்தை வைத்தவள் பார்வை, கதவு திறக்கும் சப்தம் கேட்டு திரும்பியது. 

கதவைத் தாழ்போட்டு திரும்பியவனைப் பார்த்தவளது இதழ் கடையில் குறுஞ்சிரிப்பு ஒழிவதைக் கண்டு கொண்டான். அவள் பார்வை பின்னால் தேட, என்ன என்பது போல் புருவம் உயர்த்தி கேட்க,

“தோழர்கள் கூட்டம் எங்கேனு பார்த்தேன்!” என்றவள் பார்வையில் எள்ளல் தொக்கி நின்றது. 

அவன் கையில் எடுத்து வந்த பாத்திரம் அப்படி கேட்க வைத்தது. பின்னே, பால் செம்பை அவன் எடுத்து வந்ததோடு மட்டுமல்லாமல் தாழ்பாளையும் சேர்த்துப் போட, உள்ளே தள்ளி கதவடைத்து, கலுக்கிச்‌ சிரிக்கும் தோழர் கூட்டம் எங்கே என கேட்கத்தானே தோன்றும்.

“நக்கலு… நீ எடுத்து வரவேண்டியதை நான் எடுத்து வந்தேன்ல. இது பால் இல்ல. பழரசம்… உனக்கு தான் பால் ஆகாதே!” என்றவன் பார்வை அவளைத்தான் பாதாதி கேசம் அளந்தது. 

திருப்பூட்டு புடவைதான் இந்த இரவுக்கு உடுத்த வேண்டும் என்பதால் அடர் பச்சை நிறத்தில் மெல்லிய கரை வைத்த  மஞ்சள் நிற நூல் புடவையில் நிலவொளியில் குளித்த செவ்வந்தி பூவாய் பூத்திருந்தாள்‌. (இதே புடவையில் தான் குழந்தைக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்பதற்காக மஞ்சள் கலர் புடவையோ, கட்டம் போட்ட கூரைப்புடவையோ பெரும்பாலும் தாலிகட்டும் புடவை நூல் புடவையாக எடுப்பதுதான் வழமை.)

குளிக்கு முன் கழுத்து நகைகளை கலைந்திருக்க காலையில் இடம்பிடித்த தடித்த ஈர மஞ்சக் கயிறு மட்டுமே சங்கு கழுத்தில் உரிமையோடு தழுவிக் கிடந்தது. அதுவே தனி சோபை கொடுத்தது புதுப் பெண்ணிற்கு. 

அவனும் கீழே சென்றவன் குளித்து வந்திருப்பான் போல. உடலை இறுக்கிப் பிடித்த ராம்ராஜ் வெள்ளை கலர் உள் பனியனும், பட்டு வேட்டியிலுமே வந்திருந்தான். வேல் டாலரோடு கூடிய தங்கச்சங்கிலி புரளும் திண்ணென்ற மார்பும், ராஜாளியாய் அகன்று‌ விரிந்த தோள்களும், முறுக்கேறிய புஜமுமாக சட்டென அவனை அப்படி‌ப்பார்க்க பாவையவள் பார்வை தடுமாறியது. மூச்சுக்காற்று தடம் மாறியது. 

அலைப்புற்ற பார்வை மன்னவன் மீதே நிலைத்திருக்க, வேட்டியை மடித்துக் கட்டியவாக்கில் அவன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் இதயதுடிப்பு முரசு கொட்டியது. திரண்ட கெண்டைக்காலின்‌ இறுகிய தசைக்கோலத்தில் மங்கையவள் மனம் பித்தானது.

அவள் பார்வை தன்னை அளப்பதை அறிந்து சட்டென புருவத்தை உயர்த்த, பார்வையைத் தழைத்துக் கொண்டது பெண்மை.

“என்னமோ புதுசா பாக்குற மாதிரி வெக்கப்படுற‌. இது கூட இல்லாம என்னை‌ நீ பாத்துட்டதானே?” கண்களில் விஷமம் கொஞ்சியவனிடம், 

“அய்யோ… அதை விடவே மாட்டீங்களா?” லஜ்ஜையில் முகம் சிவந்தாள் பெண். 

“எப்படி விட முடியும். மூனு வயசோ முப்பது வயசோ மானம் ‌போனது போனதுதானே. இதை எப்படி சரிகட்ட!” 

“வேணும்னா என்னோட மூனு வயசு ஃபேட்டோ தர்றேன். நீங்களும் பாத்துக்கோங்க. அதுக்கும் இதுக்கும் சரியாப் போகும்!” உதடு சுழித்து சொல்ல, சுழித்த உதட்டில் ரசனையாய் பார்வை தொக்கி நின்றது.

“நிஜம் கண்ணு முன்னாடி இருக்கும் போது, நிழல் எதுக்கு?” கண்களில் குறும்போடு புருவம் தூக்கி வினவியவன் ‌பார்வை அவளை விழுங்க, இவளுக்கு தான் அச்சோ என்றானது.

 “அதுவுமில்லாம உன் ஃபோட்டோவ உங்க வீட்லயே பாத்துட்டேன். ஹால்ல மாட்டியிருந்தீங்களே. ரெட்டைக் குடுமி போட்டு… பூ வச்சு, ரோஸ் கலர் பட்டு பாவாடை சட்டையில கொழுக் மொழுக்குன்னு இருந்த. ஆனா, அதுல ஒன்னு பாத்தேன். இப்பவும் அதே இடத்துல இருக்கான்னு செக் பண்ணனும்” பேசிக்கொண்டே முதுகோடு ஒட்டி உரசி நின்றவனின் மார்பின் திண்மையும், அவனது பார்வையும் உள்ளுக்குள் கலவரமூட்ட, இவளது பார்வையும் கண்ணாடியில் பதிந்தது. 

பார்வைகள்‌ ஒன்றையொன்று‌ கவ்விக் கொள்ள, நான்கு விழிகளுக்குள் ஒரே காட்சி. வலக்கையின் ஆட்காட்டி விரல்நுனி கண்ணாடியில் தெரிந்த பெண்ணவள் பிம்பத்தின் உச்சிக் குங்குமத்தை தீண்டியது. மெல்ல கீழிறங்கி புருவ மத்தியைத் தொட்டு நிற்க… புருவ மத்தியில் மெல்லிய குறுகுறுப்பு. அதற்குள் அவளே அறியாவண்ணம் மன்னவன் இடக்கரம் மங்கையவள் சேலை இடைவெளியை அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்திருந்தது. பேதையை பின்புறமாய் மார்போடு அணைத்து நிற்க மழைக்கு முன் கிளம்பும் வெக்கையாய் அனல் மூட்டம் இருவருக்குள்ளும்.   

புருவ மத்தியில் இருந்து விரல் நுனி மெல்ல நழுவி கீழிறங்கியது. பாவையின் கவனம் முழுதும் விரல் நுனியில் குவிய, நாசி நுனி கடந்து இதழ் தொட்டு, இதழ் வடிவை அளக்க, பெண்ணவள் கீழுதடு தன்னால் கடிபட்டது. 

இடையை வளைத்திருந்த கைகளில் அழுத்தம் அதிகரிக்க, இடை பதிந்த உள்ளங்கை சூட்டில் வெக்கை குறைந்து பெண்ணுக்குள் குளிர் பரவியது. விரல்கள் பேசிய சங்கேத பாஷை சொன்ன சேதியில் உள்ளம் படபடத்தது. மன்னவனது அணைத்த கரத்தின் மீது தன் கரம் கொண்டு இறுகப் பற்றியவளது மேனியில் மெல்லிய நடுக்கம் பரவ… தனக்குள் தவித்து தத்தளித்தது பெண்மை. கர்வம் பொங்க மானசீகமாய் மீசை நீவியது ஆண்மை.

மன்னவன் இதழோரம் புன்னகை அரும்ப, காதலோடு தாபம் கலந்த மோகப்பார்வையில் கட்டுண்டது பெண் மனம். இதழ் கடந்து, தாவாய் தொட்டு விரல் நுனி கழுத்தில் இறங்கி தொண்டைக் குழி தொட்டு நிற்க, இருவர் பார்வையும் காண்ணாடியில் நிலைத்திருக்க, அவளது முதுகோடு அணைத்து நின்றவனது இதயத் துடிப்பு மத்தளம் கொட்டியது. 

அங்குலம் அங்குலமாய் விரல் நுனி கண்ணாடியில் அவளது பிம்பத்தில் பயணிக்க, இடையின் அழுத்தம் நொடிக்கு நொடி வலுத்தது. தொண்டைக் குழியை விட்டு விரல் நுனி கீழிறங்கி மார்புக் குழி தீண்ட, தொண்டைக்குள் நீர் ‌வற்றிப் போனது பெண்ணிற்கு. உள்ளுக்குள் உருகிக் குழைந்தவளின் மொத்த இரத்தமும் முகத்தை நோக்கி பயணிக்க, செங்குழம்பாய் சிவந்து நின்றவள், பட்டென கண்ணாடியில் பயணித்த கையை இறுகப் பிடித்துக் கொண்டாள் மேலும் முன்னேற விடாமல். இத்தனை தீண்டலும் கண்ணாடியில் தெரிந்த பாவையின் பிம்பத்திற்கே. 

தீண்டாமல் தீண்டிய தீண்டல் தீ மூட்டியது இருவருக்குள்ளும். 

அதற்கே அவள் தளர்ந்துவிட, மன்னவன் விழியோரம் செவ்வரி கண்டது. உணர்வுக் குவியலாய் இருந்தவளது உள்ளங்கையின் மருதாணி வட்டத்தில் இதழ் பதிக்க சூடான மூச்சுக் காற்றோடு மீசையின் ஊசித் தீண்டலில் பெண்ணிற்குள் பிரளயம் வெடிக்க, தாளாமாட்டாமல் பின் பக்கமாக சாய்ந்து கண்மூட, வாகாய் வளைந்து கொடுத்த பின் கழுத்து வளைவில் அழுத்தமாய் அச்சாரம் பதிக்க, தாலிக்கயிற்றின் ஈர மஞ்சள் வாசமும், வகிட்டு குங்குமத்தின் தாழம்பூ வாசமும், மங்கையவள் வாசமும் ஒன்றாகக் கலந்து பித்தனாக்கியது.

“லயா” செவிமடல் தீண்டிய கிறங்கிய குரலில் போதையின் உச்சம். மன்னவன் நெஞ்சத்தில் தஞ்சம் கொண்டவளது வலக்கரம் அவனது ஈரமுடிக்குள் அலைய,

சூடான மூச்சுக்காற்று‌ கூந்தல் ஈரம் உலர்த்தியது. இருவரது கண்களிலும் ஒரே போதை. பசி‌ மறந்து புதுவகை ருசி அறியும் காதல் போதை.

இத்தனை ஆண்டுகளாய் கட்டிக் காத்த இளமைப் புயல் கரை கடக்க, மேனியில் மையம் கொண்ட மோகப் புயல் இருவரையும் வாரி சுருட்டிக் கொண்டது.

சுழலுக்குள் சிக்கிய துரும்பாய் மூச்சுக்காற்று தடுமாற,

ஏதோ மோகம் ஏதோ தாகம்

நேத்து வரை நினைக்கலையே

ஆசை விதை முளைக்கலையே

சேதி என்ன வனக்கிளியே…

ஏதோ மோகம் ஏதோ தாகம்

தாழம்பூவு ஈரமாச்சு

தலையில் சூட நேரமாச்சு

தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு

சூடு கண்ட ஈர மூச்சு

தோளச்சுட்டு காயமாச்சு

பார்வையாலே நூறு பேச்சு

வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு

போதும் போதும் காம தேவனே

மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே

இருவரும் மஞ்சம் சேர்ந்தது எப்படி என இருவருக்கும் தெரியாது. கால்கள் துவண்டு கைகளில் தளர்ந்தவளை, அள்ளி வந்து கட்டில் சேத்திருந்தான். அறை நிறைந்திருந்த பூக்களின் வாசம் மதியையும், மனத்தையும் ஒரு சேர மயக்கியது. 

வாசனை மெழுகுவர்த்தியின் மெல்லிய மஞ்சள் ஒளி அறை‌‌யெங்கும் பரவி, ஒருவித மோன நிலைக்கு இட்டுச் செல்ல, விழியோடு விழி கலந்தவன், உயிரோடு உயிர் கலக்க விழி வழி சம்மதம் கேட்டு யாசிக்க, விழி மூடி உத்தரவு கொடுத்தது பெண்மை.

விழி பேசிய வார்த்தைகளை விரல்கள் மொழி பெயர்க்க, இருவருக்கு மட்டுமே புரியும் பரிபாஷை அது. 

மஞ்சத்து நிலவை மறைத்திருந்த மேகத்தை கலைத்தெடுக்க, நாணம் கொண்ட பெண்மை தடை போட, முத்தக் கணை தொடுத்து பெண்மைப் புதையலை கைப்பற்றியவன், புதையலில் எதை எடுக்க எதை விடுக்க. ஒவ்வொரு கணமும் திக்குமுக்காடி தான் போனான். பலநாள் பட்டினி கிடந்தவனுக்கு ராஜவிருந்து கண்முன் பரிமாறப்பட்டால் சித்தம் கலங்கி பித்துப் பிடிக்காத குறை. 

பெண்ணவள் நாணம் கொண்டு தடுத்தாள, தடுத்தவளை கைகளில் அள்ளி எடுத்தாண்ட மன்னவன், பெண்மையை தன் ஆளுகையின் கீழ் எடுத்துக் கொண்டான். 

அப்படித்தான் அவன் நினைத்தான். ஆனால் பெண்மையின் சின்ன சின்ன சிணுங்கலுக்கும், அசைவுகளுக்கும் அடிபணிந்தான் என்பது தான் அந்தரங்க உண்மை. 

சீண்டலும், தீண்டலுமாக தேடலைத் தொடங்கியவன் பெண்மைக்குள் தொலைவதே தெரியாமல் தொலைந்து கொண்டிருந்தான். 

ஒவ்வொரு முறையும் தேடலின் வேகமும், வேட்கையும் கூட விரும்பியே ஒருவருக்குள் ஒருவரை தேடி, தொலைத்து, களித்து, களைத்து, கூடுவிட்டு கூடுபாயும் வித்தை கற்று கண் மூடிய நேரம் பொழுது புலரத் தொடங்கியது. முத்தத்தை அச்சாரமாக்கி அவன் தொடங்கி வைக்க, முத்தத்தாலே முடிவுரை எழுதி அவள் முடித்து வைத்தாள். 

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே 

காமத்துக் காழ்இல் கனி.

தம்மால் விரும்பப்படுபவர், தம்மையும் விரும்பப் பெற்றவர், காம வாழ்க்கையின் பயனாகிய, விதை இல்லாத பழத்தைப் போன்ற பேரின்பத்தை அடைந்தவர் ஆவர்.

காலையில் கண் விழித்தவன் கண்டது கண்ணாடி முன் நின்றவளைத்தான். கையைத் தலைக்குக் கொடுத்தவாக்கில் சயன கோலத்தில் படுத்தவன், அவளையே பார்த்திருக்க, ஈரத்தலையில் துண்டைக் கட்டியபடி, உச்சி வகுட்டில் குங்குமம் வைத்துக் கொண்டிருந்தாள். 

அவனது பார்வை முதுகைத் துளைக்க, இரவின் மிச்சங்கள் அவளை உதடு கடிக்க வைத்தது. “யாரையோ இங்க ரொம்ப நல்லன்னு சொன்னாங்க” என்றாள்‌ கண்ணாடியில் பார்த்தபடி உதடு சுழித்து.

கட்டிலின்‌ அந்தக் கடைசியில் இருந்தவன் உருண்டு வந்து எட்டி கைபிடித்து இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டவனின் பிடி இடையில் வலுத்தது. 

“அப்போ என்னை மோசம்கறியா?” கண்சிமிட்டி கேட்க,

“ரொம்ப ரொம்ப மோசம்!” என்றவள் விழிகளில் கரை கடந்த காதல். 

“எல்லாத்துக்கும் உங்க ஒத்துழைப்பு தான் காரணம் மேடம். பொண்டாட்டி வாயால இந்த விஷயத்துல மோசம்னு பேர் வாங்குனாத்தான் பாஸ் ஆனதா அர்த்தம். அப்போ நான் பாஸ் தானே? நைட்டே செக் பண்ணிட்டேன். ஃபோட்டோல பாத்த மச்சம் அதே இடத்துல தான் இருக்கு!” கண் சிமிட்டிச் சொல்ல, சட்டென குனிந்து முந்தானை விலக்கிப் பார்த்துக் கொள்ள மந்தகாசமாய் வாய்விட்டு சிரித்தான்.  

“மொதல்ல எந்திரிச்சு போய் குளிங்க. நான் கீழ போறேன்! லேட்டா கீழ போனா ஒரு மாதிரியா இருக்கும்.” அவஸ்த்தையாய் அவனது கைப்பிடிக்குள் அடங்காமல் முரண்டியவளிடம், 

“நானும் ‌குளிச்சிட்டு வர்றேன். சேந்தே கீழ போலாம். நான் மட்டும் தனியா இறங்கி வரவும் ஒரு மாதிரியா‌ இருக்கும்.” சற்றே சங்கோஜம் கலந்து சொன்னவனின் முகமெங்கும் நாணத்தின் சாயல். 

“அச்சோ… அழகு” என நெட்டிமுறித்தவள், 

“பார்றா… வெக்கமாக்கும்… இந்த வெக்கமெல்லாம் நைட்டு எங்க போச்சாம்?” உதடு சுழித்து கேட்க, 

“என் வேட்டிய உருவி நீ போத்திக்கிட்டப்பவே என்‌ வெக்கமெல்லாம் பறந்து போச்சு” என்றவன் கண்களில் கள்ளத்தனம் கொஞ்ச, இவளுக்கு தான் முகத்தை எங்கு கொண்டு வைப்பது எனத் தெரியவில்லை. மார்புக்குள்   முகத்தை புதைத்துக் கொண்டாள்‌.

மேலே கிடந்த போர்வையை உதறி அப்படியே எழ முற்பட, 

“அச்சோ!” என வேகமாக கண்களை மூடிக் கொள்ள,‌ போர்வையை எடுத்து அவள் தலையோடு போட்டுவிட்டு, குளியலறை‌ புகுந்து கொண்டான்.‌

*****

“அத்தை நீங்க ஏன் மூவி பாக்க வரல. நாங்க எல்லாம் நைட் போனோமே!” 

குளித்து கீழே வந்தவளைப் பார்த்து அமிர்தா கேள்வி கேட்க, சட்டென சுற்றும் முற்றும் பார்த்தாள். அடுக்களையில் கலையரசியும், பழனியும் இருப்பது தெரிந்தது. மற்றவர்கள் பேச்சு குரல் பின் வாசலில் கேட்டது. மூன்று வீட்டினருக்கும் காலையில்‌ காஃபி டைம் பின்‌வாசலில் தான் என்பது இவள் இங்கு வந்தபோதே அறிந்த விஷயம். 

இலக்கியா பின்னால் இறங்கி வந்தவன் சிரிப்பை அடக்கிய படி, புருவம் உயர்த்தி பதில் சொல்லு என்பது போல் சாடை காட்ட,

“அம்மு… மாமாவும் தானே வரல. அவங்ககிட்ட கேளு!” சிரிக்கவா செய்றீங்க. நீங்களே பதில் சொல்லுங்க என்று அவனிடம் சாட்டி விட்டு, அமிர்தா அடுத்து ஏதாவது கேட்பதற்குள் அடுக்களை புகுந்து கொண்டாள். 

“வாம்மா… காஃபி, டீ பிடிக்காதுல்ல. காலையில வேற என்ன வேணும்?” கலையரசி மருமகளை கவனிக்க, 

“அந்த மாதிரி எதுவும் பழக்கமில்லத்தை. நேரடியா‌ டிஃபனே சாப்பிட்டுப்பேன்.” என்றவளிடம், 

“இத அவன் கிட்ட கொடும்மா! காலை சாப்பாடு முடிச்சுட்டு குலசாமி கோயிலுக்கு போகணும்!” என்றவரிடம், சரியென தலையாட்டிவிட்டு, மகனுக்கு மட்டும் காஃபி கலந்து தர, எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.

“மாமா… நீங்க ஏன் ‌வரல?” இன்னும் அமிர்தா மாமனை கேள்வி கேட்டுக் கொண்டிருக்க, இவனுக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை. 

இரண்டு நாட்களாக காரிலோ, வேனிலோ மொத்தமாக குடும்பத்தோடு சென்ற இடமெல்லாம் இவர்களும் வந்தார்கள். இரண்டு நாள் நிகழ்விலும்‌ இவர்கள் தான் முதன்மை வாய்ந்தவர்களாக இருக்க, முன் தினம் இரவு இவர்கள் மட்டும் தியேட்டர் வராதது அவளுக்கு கவனத்தில் பதிய, அப்பொழுதே மாமனைத் தேடினாள்‌ அமிர்தா. அவர்கள் வேறு படம் பார்க்கப் போனதாக ஏதோ சொல்லி சமாளித்திருந்தாள் பழனி. 

“நீங்க என்ன மூவி பாத்தீங்க?” விடாமல் கேட்க, 

மருமகளிடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கும் மாமனைப் பார்த்து, நீதான் தைரியமான ஆளாச்சே… பதில் சொல்லு என்பது போல் நக்கலாகப் பார்த்து வைத்தாள். 

பழனி, “அம்மு… இங்க வா! தம்பி எந்திரிச்சுட்டானா‌ பாத்துட்டு வா! அப்படியே உங்க அப்பாவ காஃபி குடிக்க வரச்சொல்லு!” மகளுக்கு அடுத்தடுத்து வேலை கொடுத்து அண்ணனைக் காப்பாற்றி விட்டாள். 

சற்றே ஆசுவாசப்பட்டவனிடம், “என்ன படம்னு சொல்ல வேண்டியதுதானே?” நமட்டுச் சிரிப்போடு கேட்டவளிடம்,

“சென்சார் பண்ணாத அடல்ட்ஸ் ஒன்லி படம்னு சின்ன‌ பிள்ளைகிட்ட சொல்லவா முடியும். அதுவும் அவங்க போனது ஒரு ஷோ தான். ஆனா… நாம பாத்தது…” என்றவன் முழுதாக முடிக்கும் முன், “ஷ்ஷ்ஷ்” என வலியால் முகம் சுழித்து புறங்கையைத் தேய்த்துக் கொண்டான். 

“ராட்சசி… கடிச்சதெல்லாம் பத்தாதுன்னு கிள்ள வேற செய்ற?” ரகசியமாக கேட்க, இன்ஸ்டன்டாக முகம் சிவந்தவள் அடுத்த கணம் ஓடாத குறையாக அடுக்களையில் அடைக்களமாகியிருந்தாள். முகம்  கொள்ளா சிரிப்போடு பார்த்து நிற்க,

“தங்கச்சி பயந்து ஓடுறளவுக்கு அப்படி என்னடா பண்ணி வச்ச?” பின்புறம் கேட்ட குரலில், ‘அடுத்து நீயாடா’ என்பது போல் திரும்பிப் பார்த்தான். 

சுற்றும் முற்றும் பார்த்தான். ஹாலில் யாரும் இல்லாமலிருக்க பார்த்தியை கழுத்தோடு இழுத்து அணைத்து கன்னத்தில் முத்தம் வைக்க, “அடேய்!!!” என மிரண்டு கழுத்தை உருவிக் கொண்டவன், கன்னத்தை துடைத்துக் கொள்ள, 

“நீதானே கேட்ட என்ன பண்ணேனு. அதான் உனக்கு டெமோ காட்டுனேன். வேற ஏதாவது சந்தேகம் கேக்கணுமா?” அவனை மேலும் கீழும் பார்த்து கேட்க, 

“ஆளவிடுடா சாமி. கல்யாணமாகிட்டா ஒரு மார்க்கமாத்தான் திரியறானுக” தன்னால் புலம்பியபடி பார்த்தியும் ஓடாத குறையாக பின் வாசல் செல்ல, வாய்விட்டு சிரித்தபடி பின் தொடர்ந்தான். 

காலை சாப்பாடு முடித்து அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு கிளம்ப வேன் ஏற்பாடு‌ செய்திருந்தான். அடித்துப் பிடித்து எல்லோரும் ஏற, அப்பொழுதும் சீனி, உங்க குடும்பத்துக்கு லாரிதான் சரிப்பட்டு வரும் என்பது போல் பழனியை நக்கலாகப் பார்த்து, வழக்கம்போல் அவளது முறைப்பை வெகுமதியாகப் பெற்றான்.

கடைசி இருக்கையில் வரிசையாக இளவட்டங்கள் அமர்ந்து கொள்ள, ராகவன் சன்னலோரம் உட்கார அவன் பக்கத்தில் வந்து ஜானகி அமர இவனுக்கு தான் பக்கென இருந்தது. தலை நிறைய மல்லிச்சரமும், தாவணி பாவாடையும் உடுத்தியிருந்தவளை விட்டு கண்ணை அகற்ற முடியாமல் தவித்தவன், மற்றவர்கள் பார்த்து குதர்க்கமாக ஏதாவது யோசிக்கும் முன் அமிர்தாவை அழைத்து இருவருக்கும் இடையில் அமர்த்திக் கொண்டான். 

“வெள்ளபனியாரம்… நான் இன்னைக்கு ஹாஸ்டல் கெளம்புறேன். நல்லா ஞாபகம் வச்சுக்கோங்க. இன்னும் மூனு வருஷம் தான். அதுவரைக்கும் கண்ணு அங்கிட்டு இங்கிட்டு போச்சு, இப்படி பேன்னு முழிக்க கண்ணு முழி இருக்காது!” அவள் அருகில் உட்கார்ந்ததும் விழி பிதுங்க அதிர்ந்து பார்த்தவனைத்தான் இப்படி மிரட்டி வைத்தாள். அவள் திண்டுக்கல்லில் விடுதியில் தங்கி படிக்கிறாள். அண்ணன் திருமணத்திற்கென வந்தவள் இன்று மாலை கிளம்புகிறாள். 

‘இது ஏதோ சின்னப்பிள்ள விளையாட்டு பேச்சு போல இல்லையே. பெரிய வினைய இழுத்துவிடப் போகுது!’ மனசாட்சி குறி சொல்ல, இவனுக்குதான் உள்ளுக்குள் குளிரெடுத்தது. சன்னல் பக்கம் பார்வையைப் பதித்தவன் மறந்தும் அவள் பக்கம் திரும்பவில்லை. 

குலதெய்வ கோவில் சென்று பொங்கல் வைத்து பூஜை முடிந்தது. அங்கேயே முதல்‌முறையாக குகனுக்கு சாஸ்த்திரத்திற்கு பொங்கல் ஊட்டி விட்டான் மாமன்காரன். 

கோவில் சென்று வந்துவிட்டதால் மதிய உணவு ஊர்வன, பறப்பன, நீந்துவன என அமர்க்களப்பட்டது. 

உண்டு முடித்து அவரவர் சற்று கண்ணயர்ந்து எழ, ஜானகி ஹாஸ்டல் செல்ல அப்பாவோடு கிளம்பி வந்தாள். 

அனைவரிடமும் சொல்லிக் கொண்டவள் ராகவனைப் பார்த்து மெதுவாக தலையாட்ட, அவன் தலையும் தனைமறந்து தன்னால் ஆடியது. 

*****

“ம்மா… அண்ணன் மறுவீடு போகும் போதே நாமளும் கெளம்பலாம்னு உங்க மருமகன் சொன்னார்மா!” பழனி கலையரசியிடம் தகவல் சொல்ல, 

“அது நாளைக்கு தானே பழனி. திடீர்னு எப்படி கெளம்ப முடியும்? இன்னும் வாங்க வேண்டியதெல்லாம் வாங்கல. கல்யாணத்துலேயே உங்க மாமானாரும் சொல்லிட்டு தான் போனாரு. முறைப்படி வந்து கூப்பிட முடியல. மருமகனோட அனுப்பி வைங்கனு. அஞ்சாம் மாசம் போலாம்ல?” கலையரசிக்கு மகளை அனுப்பி வைக்கும் எண்ணமில்லை. 

“…”

“ரெண்டு பேரையும் வச்சு சமாளிச்சுருவியா?”

“அம்முவ அஞ்சு வயசு வரைக்கும் தனியா தாம்மா பாத்துக்கிட்டேன்.” பழனி பதிலில் கலையரசிக்கும் சுருக்கென இருந்தது தான். அன்றைய சூழ்நிலை அப்படி. அதற்காக இப்பொழுது நொந்து பயனில்லை. 

கலையரசி முகம் மாறுவதைக் கண்டு, “உங்க மருமகனும் இப்ப இருக்காங்கம்மா… நான் சமாளிச்சுப்பேன். இன்னும் ரெண்டு மாசம் இருந்தாலும் அங்க போய்த்தானே ஆகணும். வேணும்னா உதவிக்கு ஆள் வச்சுக்கலாம்மா!” என்றவுடன்,

“அதெல்லாம் ஆள் வேண்டாம். யாரையும் நம்ப முடியாது” என அவசரமாக மறுத்தார் ஏற்கனவே நடந்த முன் அனுபவத்தில். 

“அந்தளவுக்கு தேவை இருக்காதும்மா. அம்முவும் சமத்து! என்னை தொல்லை பண்ண மாட்டா. இத்தனை நாளும் அங்கேயும் இங்கேயுமாத்தானே இருந்தா. அவ படிப்பையும் பாக்கணும்ல.” மகள் இந்தளவிற்கு விளக்கம் கொடுக்கும் பொழுதே அவளுக்கும் போக நோக்கம் தான் என்பது தெளிவாகத் தெரிந்தது. 

வெளிநாட்டில் இருக்கும் பொழுதே எந்த முன்னனுபவமும் இன்றி பிள்ளையை வளர்த்தெடுத்தவள். சமாளித்துக் கொள்வாள் என்று தோன்றியது. 

“உங்க அண்ணன் மறுவீடு போய்ட்டு திரும்பட்டும் பழனி. அவங்க சென்னை போகும் போது நீங்களும் சேந்து போகலாம். எப்படியும் நாங்களும் வந்துதானே ஆகணும். இன்னும் ரெண்டு நாள்ல இடுப்பு கொடி, கொலுசு, செயின், மோதிரமெல்லாம் வாங்கிறலாம். அம்முவுக்குதான் எதுவும் போடல. அவளுக்கும் சேத்து போட்டுர்றேன். அந்தக் குறை மட்டும் எதுக்கு?” பேத்திக்கு எதுவும் செய்யவில்லை என்ற ஆதங்கம் அவருக்கு. 

அதை இப்பொழுது சரிகட்ட எண்ணியவர், தண்டபாணி மறுவீடு சென்று வருவதற்குள் பேரனுக்கு கொடி, கொலுசு, கழுத்துக்கு செயின், புது தொட்டில் வேட்டி, தொட்டிக் கம்பு, உரை மருந்து எல்லாம் சேர்த்து எடுத்து வைத்தார். 

புதுமணத்தம்பதிகள் மறுவீடு சென்று வர அவர்களையும், பேருகாலம் முடித்து மகளையும் ஒரு சேர சென்னை சென்று குடியமர்த்தி வந்தனர். 

விருந்திற்கு அழைத்த சொந்தங்களுக்கெல்லாம் பார்த்தி நிச்சயத்திற்கு வரும்பொழுது பார்த்துக் கொள்ளலாம் என தவணை சொல்லி வந்தனர். ஒவ்வொரு வீட்டிற்கும் விருந்து என்று சென்றால் ஒரு மாதத்திற்கு கால்ஷீட் கொடுத்தாலும் பத்தாது. உள்ளூர் ஒரு நாள், வெளியூர்க்கெல்லாம் ஒவ்வொரு நாள் என சொல்லிவிட்டு வந்தனர். 

தண்டபாணி திருமணத்திற்கு வந்த நான்சி குடும்பம், பெரியவர்களை வைத்து அடுத்த மாதத்தில் ஒரு நல்ல நாள் பார்த்து நிச்சயத்திற்கு நாள் குறித்து சென்றுள்ளனர். 

பெருமாள்சாமியும் உண்ணாவிரதம், மௌன விரதம் என எல்லா வகை விரதமும் இருந்து பார்த்தார்‌. ஆனால் அவர் கட்சிதான் ஆதரவில்லா கட்சியாக டெபாசிட் கூட வாங்காது போலயே. 

9 thoughts on “மாமா! மாப்ளே! 15”

    1. அப்படியா தெரியுது…. 🫣🫣🫣🫣🫣
      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top