“என்னடா…”
“என்ன… என்னடா?”
“கெளம்பல?”
“எங்க?”
“தேனிக்கு.”
“என்னப்பாத்தா சாப்பாடு கூடை தூக்குறவன் மாதிரியா இருக்கு?”
“என்னடா இப்படி கேக்குற” என பதற,
“பேரம்பேத்திய பாக்கணும்னு ஆசையிருக்கா, இல்லையா?”
“அடேய்!” என அலற,
“பதறாதீரும். மயிலே மயிலேனா உம்மக இறகு போட மாட்டா.”
“மல்லுக்கட்டி கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேன். எம்பிள்ளைக்கு புடிக்கணும், சம்மதிக்கணும்.”
“ஆத்தா வையும், காசு கொடுங்கற மாதிரி அதையே திரும்பத்திரும்ப சொல்லாதீரும். நேத்துதான் அவ்ளோ சொன்னாளே? விவரம் தெரிஞ்சதுலர்ந்து என் நெனப்புதான்னு. இதைவிட எப்படி உமக்கு விளக்கிச் சொல்லணும்.”
“அது ஏதோ சின்ன வயசுல தூக்கிச் சுமந்தவன்ற நெனப்புல சொல்லியிருக்கும்டா. இப்ப முகம் கொடுத்துக்கூட பேசறதில்லையே?
“அதனாலதான் ரொம்ப புடிக்குதுன்னு சொல்றேன். அவ உம்மகிட்டயும், எங்கிட்டயும் மட்டும்தான் பேசறதில்ல. ஆனா மத்தவங்ககிட்ட எல்லாம் நல்லா பேசுறா” என்றவன்
விளையாட்டுத்தனத்தை விட்டு, “அவ, இத்தன நாளா யார்கிட்டேயும் காட்டமுடியாத கோபத்தையும், வீம்பையும் நம்மகிட்ட மட்டும்தான் உரிமையா காட்டுறா மாமா. இதுலருந்து என்ன தெரியுது?” என்றான் ஆழ்ந்த குரலில்.
“நம்ம மேல கொலக்காண்டுல இருக்குன்னு தெரியுதுடா.”
“யோவ் மாமா! நல்லதா ஏதாவது சொல்லக்கூடாது? நம்ம ரெண்டு பேரையும் ரொம்ப புடிக்கும்னு தெரியுது மாமா.”
“பகல் கனவுடா மாப்ள.”
“வாய் வைக்காதீரும்.”
“இப்ப கூட பாரு. நீ இருக்கேங்கவும் எம்புள்ள உள்ள போயிருச்சு.”
“அவ அதுக்கு போகல. இதெல்லாம் உமக்கு சொன்னா புரியாது” என தலை கோதிக்கொண்டவன் முகத்தில் புன்னகை அப்பிக்கிடந்தது.
“உனக்கு என்னடா புரிஞ்சது?”
“இதெல்லாம் வயசுப் புள்ளைக வெவகாரம். கண்டுக்காதீரும்.” புன்னகை முகமாகக் கூறியவன் முகத்தில் அவளது விரல் நுனியின் ஊர்வலம் குறுகுறுப்பை மூட்டியது இப்பொழுதும்.
“டேய்! புள்ளையோட அப்பங்கிட்ட பேசுற. அந்த நெனப்பிருக்கட்டும். ஏதாவது சில்மிஷம் பண்ணினேனு தெரிஞ்சது தோல உறிச்சு தொங்கவிட்டுருவேன்.”
“நான் என் மாமங்கிட்ட பேசுறேன். உம்மகூட சேந்து நானும் சாமியார் மாதிரிதான திறியறேன். இதுல சில்மிஷம் பண்றாங்களாம்” என்றவன் பேச்சில் உறவோடும், உரிமையோடும் நக்கலும், நையாண்டியும் சரிவிகிதத்தில் விரவியிருந்தது.
கணபதிக்கும் அவனை இப்படி பார்க்க சந்தோஷமாகத்தான் இருந்தது. மகள் சீக்கிரம் கல்யாணத்திற்கு சம்மதிக்க வேண்டுமே என்ற வேண்டுதலும் மனசுக்குள் ஓடியது. அவளது மனக்காயத்திற்கு தங்கள் மீது கோபத்தைக் காட்டி மருந்திட்டுக் கொள்கிறாள் என்றால், மகளை கண்டுகொள்ளாததற்கு பிராயச்சித்தமாக எவ்வளவு கோபத்தையும் கணபதி தாங்க தயார்தான்.
மதியம் வீடு வந்தவர்கள், மகள் குளித்து உடைமாற்றி வருவதற்குள் குக்கரில் சோறு வைத்துவிட்டு தயிர் வாங்கிவந்தார். தயிர் சோற்றோடு மதிய உணவை அப்பாவும், மகளும் முடித்துக் கொண்டனர். தினமும் மாட்டுப்பாலிற்கு சொல்லியிருப்பதாகவும், வீட்டில் தயிர் ஊற்றி வைத்துக் கொள்ளலாம் என்றும் மகளிடம் சொல்லிவிட்டு, கணபதி குட்டித்தூக்கம் போட சென்றுவிட்டார்.
இவர்கள் பெரியகுளம் கிளம்பிவிட, எடுத்த பொருட்களை டெலிவரி கொடுக்கச்சொல்லி, கடைக்கு ஃபோன் செய்து செழியன் சொல்லிவிட்டான். இவர்கள் வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் பொருட்களும் வந்து இறங்கிவிட்டது. கணபதி படுக்க சென்றுவிட இவள் அடுக்களையில் எல்லாம் எடுத்து வைத்து ஒழுங்குபடுத்தினாள். ஃப்ரிட்ஜும், வாஷிங் மெஷின் மட்டும் நகர்த்த முடியாமால் கூடத்தில் இருந்தது.
பொழுதுசாய சாப்பாடு எடுத்துக் கொண்டு வேந்தனும் வந்துவிட்டான். திவ்யாவும், மதியழகனும் கிளம்ப அவர்களுடனே காரில் வந்து பெரியகுளத்தில் இறங்கிக் கொண்டான்.
வீட்டிற்கு வந்தவன், சாப்பாட்டு கேரியரை அவளிடம் கொடுத்துவிட்டு, கணபதி எழுந்துவர, இரண்டு நாட்களாக ஷெட்டிற்கு போகாததால், அவனது வண்டியில் இருவரும் பஸ் ஷெட்டிற்கு சென்றுவிட்டு இரவுதான் வீடு திரும்பினர். சாப்பாட்டை வேறு பாத்திரத்திற்கு மாற்றி குழம்பை சூடு செய்து வைத்திருந்தாள். பழைய மீன் குழம்பு தம்பிக்கு பிடிக்குமென மறுநாளுக்கும் சேர்த்தே கொடுத்துவிட்டிருந்தார் தாமரை.
வேந்தனும் இங்கேயே சாப்பாட்டை முடித்துக் கொண்டான்.
மங்கா இரவும் தயிர் சோறே சாப்பிட, “எத்தனை நாளா அல்சர் பிரச்சினை இருக்கு?” என்றான்.
“ரொம்ப நாளா இருக்கு” என்றாள் முகத்தைப் பார்க்காமல்.
“ஹாஸ்ப்பிட்டல்ல பாக்கலியா?”
“அப்பப்ப அம்மாச்சி கூட்டிப் போவாங்க. மருந்து வச்சுட்டாங்களோனு தொக்கம் கூட எடுத்தாங்க” என்றாள். அவள் சொன்னதைக் கேட்டு சிரிப்புவர,
“உனக்கு யாரு செய்வினை வைக்கப்போறா? இந்தக் காலத்துலத்துலயுமா இதெல்லாம் நீ நம்புற?” என கேட்க, முறைத்துப் பார்த்தாள்.
“அம்மாச்சி நம்புவாங்க. விமலைக் கட்டிக்க சம்மதிக்கணும்னு அத்தை செய்வினை வச்சுருப்பாங்களோனு அம்மாச்சிக்கு சந்தேகம். வயித்தவலி வந்தாலே மந்திரிக்க கூட்டிப் போயிருவாங்க.”
“டெஸ்ட் ஏதாவது எடுத்தாங்களா?”
“ம்கூம்ம், மாத்திரை சாப்பிட்டா ரெண்டுநாள்ல சரியாகும். மறுபடியும் காரம் சாப்பிட்டா வரும்.”
அடுத்தும் அவன் ஏதேதோ கேட்டு பேச்சை வளர்க்க,
“பிள்ளைய சாப்பிட விர்றா” என கணபதி அதட்ட, அவரை வெட்டும் பார்வை பார்த்தான்.
இவளும் அவசரமாக சாப்பிட்டு முடித்து, எழுந்து கொண்டாள். உடனே பாத்திரங்களை கழுவி அடுக்களையை ஒதுங்க வைக்க சென்றுவிட்டாள்.
இன்று அவன் பார்வையும், பேசும் தோரணையும் மாறியிருப்பது அப்பட்டமாக பெண்ணவளுக்குப் புரிந்தது. வேண்டுமென்றே பேச்சை வளர்த்தது போல் இருந்தது. ஆனால் அந்தப் பார்வை, அவன் கண்களில் தெரிந்த ரசனை நெஞ்சுக்குள் குறுகுறுத்தது. நாலு பாத்திரத்தை நாலு தடவை கழுவி கவிழ்த்தாள்.
ஒரு பெண் தண்ணீரை அதிகமாக செலவழித்தால் அவள் புத்தி ஒரு நிலையில் இல்லை என அர்த்தம். நீ ஒரு நிலையில இல்லைனு சொன்னா கேப்போமா. கட்டி ஏறி காத அத்துற மாட்டோம். சிறுத்துப் புழங்கு. அப்பதான் கையில காசு நிக்கும்னு சொன்னா கொஞ்சம் யோசிப்போம். ஆணைவிட பெண் பலமடங்கு சிந்தனைவசப்பட்டவள். இது மாதிரி ஏதாவது ஒன்றைச் சொல்லித்தான் அவள் சிந்தனையை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சி செய்துள்ளனர்.
கணபதி செய்தி சேனலில் மூழ்கிவிட, வேந்தன் பார்வை யோசனையோடும், ரசனையோடும் அவளையே பின் தொடர்ந்தது. முன்பெல்லாம் சகஜமாக பேசாவிட்டாலும் இயல்பாக இருப்பாள். முன்பும் முகம் பார்த்து பேசமாட்டாள். ஆனால் இன்று அவள் முகம் பார்க்காததில் இருந்த வித்யாசம் நன்றாகத் தெரிந்தது. இயல்பைத் தொலைத்திருந்தாள். அவன் கேள்வி கேட்க அவசரமாக பதில் சொல்ல, அவளது பார்வையில் தயக்கம், தடுமாற்றம் அப்பட்டமாக தெரிந்தது. அவனும் அதைத்தானே எதிர்பார்த்தான். அதைக் கண்டுகொண்டவன் பார்வையில் சுவாரஸ்யம் கூடியது.
அவளிடமிருந்த மாற்றத்தை இன்று அதிகாலையே கண்டுகொண்டான். அவள் எழுந்து வருவதற்கு முன்னரே அவனுக்கு முழிப்பு வந்துவிட்டது. ஃபோன் சார்ஜர் எடுக்க அவன் அறைக்கு வந்தான். கதவு உள்பக்கமாக தாழிடப்படாமல் வெறுமனே சாத்தியிருந்தது. சத்தமிடாமல் குமிழைத் திறந்து உள்ளே வந்தான். வயதுப் பெண் எப்படி படுத்திருப்பாளோ என முயன்று பார்வையை கட்டில் பக்கமாக திருப்பாமல் வந்தாலும், அவனையும் மீறி அனிச்சையாய் பார்வை அங்கு செல்ல, சட்டென கால்கள் நின்றது படுக்கை காலியாக இருப்பதைப் பார்த்து.
பார்வை அறையைச் சுற்றிவர, கட்டிலின் மறுபுறம் கால் மட்டும் தெரிந்தது. ‘அங்க ஏன் படுத்திருக்கா?’ என யோசனையோடு திரும்ப, சுவற்றில் தன் ஃபேட்டோ மீது அவளது துப்பட்டாவை விரித்து திரைபோடப்பட்டிருந்ததைப் பார்த்தான். கட்டிலின் இரண்டு புறமும் இடமிருக்க, ஒடுக்கமான இடத்தில் ஏன் படுக்க வேண்டும் என யோசிக்க, இந்தப் பக்கமும் நேற்று மாலை தாமரை, மருமகளுக்கு வைத்துவிட்ட மல்லி உதிர்ந்து கிடக்க, இங்கு படுத்துவிட்டு இடம் மாறியிருக்கிறாள். அந்தப் பக்கம் படுத்தால்தான் தன் ஃபோட்டோ கண்ணில் படவில்லையென புரிந்தது.
ஃபேட்டோ கூட பார்க்க பிடிக்காதளவிற்கு வெறுப்பா என்றுதான் முதலில் நினைத்தான். ஒரு வேளை தன்னைப் பிடிக்கவில்லையோ, நிறம் பார்க்கிறாளோ? என பலவிதமாக யோசனையில், அந்த நினைப்பே கசந்து வந்தது. எப்படி இவள் மனதில் இடம் பிடித்து, இவளை சரிக்கட்டுவதென சிந்தனை ஓடியது.
‘அவளே தைரியமா இத்தன நாளா உன்னைத்தான் நெனச்சுட்டுருந்தேன்னு சொன்ன பின்னாடி ஆம்பிளைக்கு என்ன வீராப்பு வேண்டிக்கெடக்கு. முடிஞ்சா பாரு. முடியலையா மானம், ரோஷம் பாக்காம கால்ல விழுந்துர்றா வேந்தா’ என தனக்குள் சொல்லிக் கொண்டு சப்தமில்லாமல் வெளியேறிவிட்டான்.
அவ்வளவெல்லாம் நீ மெனக்கெடத் தேவையில்லை என அடுத்த நிகழ்வு அவன் வயிற்றில் பால், தயிர், நெய் எல்லாம் ஒன்றாக வார்த்தது.
காஃபி குடித்துவிட்டு செழியன் கறி வாங்க கடைக்குச் சென்றுவிட, இவன் குளிக்க தனதறைக்குச் சென்றான். தாமரைக்கு உதவியாக அடுப்படியில் மங்கை கை வேலை பார்த்துக் கொண்டிருக்க, இவளது ஃபோன் அடித்தது. வேந்தன் அறைக்கு வந்தாள். அவன் குளியலறையில் இருந்தது தெரியாது. ஆர்த்தி தான் அழைத்திருந்தாள்.
ஃபோன் சார்ஜரில் இருக்க, அப்படியே எடுத்து பேசினாள்.
“என்னடி காலங்காத்தால கூப்ட்டிருக்க?”
“ஏம்ப்பா, தூக்கத்த கெடுத்துட்டேனா?” எனக் கேட்க, அவளது பார்வை எதேச்சையாக எதிரில் இருந்த ஃபோட்டோவில் படிய, மிக அருகில் போட்டோவைப் பார்த்தாள்.
மந்தகாசப் புன்னகையில் மதிமயங்கியவள் தன் தூக்கம் கெட்டது இதனால் தான் என்ற நினைப்பு வர, அவளையும் மறந்து கை தன்னால் உயர்ந்தது. விரல் தனைமறந்து தன்போக்கில் ஃபோட்டோவை அளந்து கொண்டிருந்தது. புருவம், கண் என விரல் பயணம் செய்து கன்னம் வழியாக, முன் வரிசைப்பல் லேசாகத் தெரிய சிரித்தவாறு, அவன் முறுக்கிக் கொண்டிருந்த மீசையில் வந்து நிலைத்தது. இவளும் மீசையை முறுக்க, ஆர்த்தி அங்கு கத்திக் கொண்டிருந்தாள் எதிர் முனையில்.
“அடியேய்! மங்காஆஆ!” பத்தாவது முறையாக கத்த,
“ஹான்!” என சுதாரித்தவள்,
“ஏன்டி கத்துற?” என்றாள் தன் மோனநிலை அறுபட்ட எரிச்சலில்.
“எரும, எத்தன தடவ கூப்படறது? ஃபோன காதுல வச்சுட்டு தூங்கிட்டியா?”
“இல்லப்பா, இங்க அத்தை வீட்ல இருக்கேன். வெள்ளனவே எந்திரிச்சாச்சு. என்னய தூங்கவிடாம இங்க ஒன்னு டிஸ்டர்ப் பண்ணுச்சு. இடம் மாத்தி மாத்தி படுத்ததுதான் மிச்சம்” என சோக கீதம் படிக்க,
“மாங்கா! யாருடி அது? உங்க அத்தை மகனா உன்ன தூங்கவிடாம டிஸ்டர்ப் பண்ணது? இந்த வருஷம் படிப்ப முடிப்பியா?” என ஒரு மாதிரி குரலில் கேட்க,
“எரும! லூசு! பக்கி! புத்தி போகுது பாரு. இப்ப எதுக்குடி காலங்காத்தால ஃபோன் பண்ண?” கோபத்தில் கண்டமேனிக்கு கத்த,
“அசைன்மென்ட் முடிச்சுட்டியா? முடிச்சுட்டா எனக்கு அனுப்பி வைப்பா.”
“கண்டதெல்லாம் மூளை யோசிக்குதுல்ல. அசைன்மென்ட் மட்டும் நான் அனுப்பவா? நீயே பண்ணித்தொல.”
“அடியேய்! நான் உன்ன நம்பித்தான் இருக்கேன். இன்னைக்கி ஒரு நாள் தான் இருக்கு. உங்கால்ல கூட விழறே. அனுப்பி வைடி. புண்ணியமாப் போகும்” என கெஞ்ச ஆரம்பிக்க,
“நான் அத்தை வீட்ல இருக்கேன்டி. எங்க வீட்டுக்குப் போயிட்டு அனுப்பி வைக்கிறேன்.”
“மறந்துறாத மங்கா.”
“மறந்தா அப்படியே விட்டுருவ பாரு. தொனத்தி எடுத்துறமாட்ட?” என பேசிவிட்டு வைத்தாள். மீண்டும் போட்டோவைப் பார்த்தவள்,
“பெரிய மயிலக்காளைனு நெனப்பு” ஃபோட்டோவையே தோளில் லேசாகக் தட்டிவிட்டு வாய்விட்டே சொல்லிச் சென்றாள்.
இது அத்தனையும் குளித்து வெளியே வந்தவன் மெய், வாய், கண், மூக்கு என அத்தனையும் மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். பேச்சு மும்முரத்தில் இவன் கதவு திறந்த சப்தம் கேட்கவில்லை. இவள் இருப்பதைப் பார்த்துவிட்டு இடுப்பில் கட்டிய துண்டோடு வெளியே வந்தவன் அவசரமாக மீண்டும் உள்ளே செல்ல முற்பட, ஃபோட்டோ மீது அவளது விரல் நடத்தும் ஊர்வலத்தில் முகம் குறுகுறுக்க அப்படியே நின்றுவிட்டான்.
சட்டென அவனுக்குள் ஒரு மின்னல். தன்னிடம் மட்டும் தான் முகம் திருப்புகிறாள். தன்னுடைய ஆதங்கத்தையும், கோபத்தையும் தன்னிடம் மட்டுமே காட்டுகிறாள். வீட்டில் அனைவரிடமும் சகஜமாகப் பேசுகிறாள். அவளையும் அறியாமல் தன்னிடம் அவள் உரிமை எடுத்துக் கொள்வது புரிந்தது. அவளை விட்டுவிட்டு விளையாடச் சென்றுவிட்டால் வந்ததும் பேசாமல் மூஞ்சியைத் தூக்கி பிடிவாதம் பிடிக்கும் அதே ஐந்து வயது அரசிதான் அவனுக்குத் தெரிந்தாள்.
‘அடி கள்ளி. நீ முந்தானை போட்டது அதுக்குதானா? நான் கூட ரொம்ப மெனக்கெடனுமோன்னு பயந்துட்டேன். கால்ல விழுந்தாவது சரிக்கட்டணும்னு நெனச்சேனே’ என உள்ளுக்குள் பொங்கி பூரித்துப் போனான்.
இரவு அவனிடம் கோபமாக பேசிவிட்டு கீழே வந்தவளுக்கும் உள்ளூர கலக்கம் வந்து ஒட்டிக் கொண்டது. இத்தனை நாட்களாக ஊமை கண்ட கனவாக அவளுக்குள் மட்டுமே வைத்திருந்த ரகசியத்தை, ஆத்திரத்தில் கொட்டிவிட்டாள். இப்பொழுது அள்ள முடியாமல் தவிக்கிறாள். மேடையேறாத குறையாக அல்லவா அம்பலப்படுத்தியிருக்கிறாள். எப்படி இனி நேருக்கு நேராக பார்ப்பது என்ற சங்கோஜம் அப்பொழுதே அவளை அலைக்கழித்து.
இத்தனை நாட்களில் இந்தத் தடுமாற்றம் அவளிடம் அவன் காணாதது. உள்ளூர இனம்புரியாத தவிப்பு, அவஸ்த்தை. சீக்கிரம் வேலை முடித்துவிட்டு அவளது அறையில் வந்து அடைந்து கொண்டாள். அவளது தடுமாற்றத்தை கள்ளச் சிரிப்போடு ரசித்துக் கொண்டிருந்தான்.
“நாளைக்கி ஆர்.டி.ஓ ஆபிஸ்ல வேல இருக்கு மாமா. ரெண்டு வண்டி எஃப்.சி போகுது.”
“நாளைக்கு மொத ட்ரிப்புக்கு நானே போறேன்டா. நீ ஆர்.டி.ஓ ஆஃபிஸ் போ.”
“இந்த வயசுலயா? காமெடி பண்ணாதீரும். நம்ம கதிரேசன் அண்ணன போகச் சொல்லுவோம்.”
“நான் குடிக்கறதில்லடா.”
“ஒரு நாள் விட்டுட்டா திருந்திட்டதா அர்த்தமா மாமா?” என்றான். என்ன நடந்தாலும் இரவு தீர்த்த யாத்திரை செல்லாமல் இருக்கமாட்டார். அதற்கென்றே இப்பொழுது சாமிக்கு மாலை போடுவதைக் கூட குறைத்துக் கொண்டார். ஆனால் உலக அதிசயமாக இன்று குடிக்கவில்லை.
“இல்லடா, இனிமே குடிக்கறதில்லைனு முடிவெடுத்துட்டேன்டா.”
“எந்தச்சாமி புண்ணியமோ!”
“எல்லாம் எம்பிள்ளைக்காகத்தான்டா. இருந்து என்னத்த கட்டி ஆளப்போறோம்னு அளவில்லாம குடிச்சேன். ஆனா இன்னைக்கி எம்பிள்ளைக்கு யாருடா இருக்கா? நானும் விட்டுப் போயிட்டா எம்பிள்ள நெலமை? புடி கொப்புமில்லாம, மிதி கொப்புமில்லாம அல்லாடிப்போகும்டா. அதனாலதான்டா” என்றவர் குரல் கரகரத்தது. அவனுக்கும் ஒரு மாதிரியாகிவிட்டது. இவர்கள் வெளியே பேசுவது அந்த அமைதியான வீட்டில் நன்றாக மங்கைக்கும் கேட்டது.
மாமனை ஆழ்ந்து பார்த்தான். அப்ப என் மீது நம்பிக்கை இல்லையா எனவும் கேட்க முடியாது. அவரே மகள்மீது உள்ள அக்கறையில் இப்பொழுதுதான் குடியை விட முயற்சி செய்கிறார். அவளுக்கு நான் இல்லையா, நீ குடி என்றா சொல்ல முடியும்.
இருந்தாலும், “ஏன் மாமா நாங்க எல்லாம் இல்ல?” அவரை ஆற்றுப்படுத்தவென கூற,
“அப்ப குடிச்சு சாகச் சொல்றியா?” என்றார்.
“யோவ் மாமா! நீ மட்டுமில்ல நாங்களும் உம்மகளுக்கு இருக்கோம்னு சொல்லவந்தேன். நாங்களும் தான் இத்தன வருஷமா படிச்சுப் படிச்சு சொன்னோம். குடிய விட்டீரா? இப்ப மக வந்தவுடனே விட்டாச்சு.” என சலித்துக் கொண்டான் சந்தோஷமாகத்தான்.
அவனும் எத்தனையோ தடவை சொல்லிப் பார்த்துவிட்டான். இருந்து என்னடா பண்ணப் போறேன் என விரக்தியாகத்தான் பதில் வரும். இன்றுதான் அவர் பேச்சில் வாழவேண்டும் என்ற ஆசை தெரிகிறது. மகளுக்கு யார் ஆதரவு என்ற நினைப்பே அவரை போதையிடமிருந்து தள்ளி வைத்தது.
“டேய் வேந்தா! நீயும் நான் வளத்த பிள்ளைதான்டா. எம்பிள்ளையும் நீயும் சந்தோஷமா வாழ்றத பாக்கணும்னு ஆசையா இருக்குடா” என்று கண்கள் கலங்க, இவனுக்கும் தொண்டை அடைத்தது. தொண்டையை செருமிக்கொண்டான்.
“மாமா! கவலையே படாதீரும். ஆசைதீர பேரம்பேத்திகளுக்கு அள்ளி, கழுவி, துடச்சு, சலிச்சுதான் சாவீரு!” என சொல்ல கவலை மறந்து கலகலத்து இருவரும் சிரிக்க, கேட்டுக் கொண்டிருந்தவள் இதழிலும் புன்னகை பூத்தது மென்னகையாக.
ஆனால், அதற்கு அவள் உடலும், மனமும் இணங்கி அவனோடுவாழ முற்பட, தனக்குள்ளேயே போராட வேண்டியிருக்கும் என அப்பொழுது புரியவில்லை பெண்ணிற்கு.
மாமனை படுக்கைக்கு அனுப்பி விட்டு, கதவெல்லாம் பூட்டினான். தன் அறைக்கு வந்தவன் பீரோவைத் திறந்தான். டப்பாவில் இருந்த மோதிரத்தை எடுத்துப் பார்த்தான். அன்று அப்பத்தாவிற்கு எண்ணெய் வைக்கும் பொழுது, கல்லில் எண்ணெய் இறங்கிவிடும் என யாரோ அறிவுறுத்த அவசரமாக கழற்றி பக்கத்தில் யார் என்று கூடப் பார்க்காமல் கையில் கொடுத்தவள், கோபத்தில் விட்டுச்சென்ற வங்கி மோதிரம் அது.
தன்னை மறந்து விட்டதாக அவள் நினைத்திருக்க, அன்று அவளைப் பார்த்தவன் ஒருகணம் அசந்து அப்படியே நின்றுவிட்டான். மறுகணம் அவசரமாக ஓடிச்சென்று தன்னை கண்ணாடியில் பார்த்ததை நினைத்து இன்று சிரித்துக் கொண்டான்.
கொடியிலே மல்லிகைப்பூ
மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா
துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லித் தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ளே கூச்சம்
கொடியிலே மல்லிகைப்பூ
மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா
தவிக்கிறேன் நானே
மனசு தடுமாறும்
அது நெனச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு
நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு
வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இன்பதுன்பம் யாரால
