மல்லி 17

“ஏன்டா, ஒரு மொழம் பூ வாங்கிக் கொடுத்து கூட்டியாரக்கூடாது?” 

உள்ளே வந்ததும் வராததுமாக மங்கையின் தலை வெறுமையாக இருப்பதைப் பார்த்து, மகனிடம் குற்றம் கண்டுபிடிக்க, மாமன் மகளை திரும்பி ஒரு பார்வை பார்த்தான். வாங்கிக் கொடுத்தா சாமிக்கில்ல போடவைப்பா என்ற அர்த்தம் தொக்கி நிற்க, பார்வையின் அர்த்தம் புரிந்தவளோ வீட்டைப் பார்வையிடுவது போல் திரும்பிக் கொள்ள, 

“அவள என்னத்தடா பாக்குற? கேட்டது நானு.”

“ஏன், சாமிக்கு நீங்க வாங்கலயா?” என்றான் அவளைப் பார்த்துக் கொண்டே. 

மருமகளை ஆசையாக கன்னம் வருடி வரவேற்றவர், “டேய்! நான் சொன்னது உன் மாமன் மகளுக்கு வாங்கி கொடுக்க சொன்னேன்டா. சாமிக்கு வாங்க எனக்குத் தெரியாதா? மொத மொதன்னு வெளிய கூட்டி வந்திருக்க. பூ கூடவா வாங்கிக் கொடுக்கக் கூடாது? இது கூடவா நான் சொல்லித்தரணும்?” 

பூ வாங்கிக் கொடுக்காத மகனை வறுத்தெடுக்க, 

“எல்லாம் என் நேரம். பொறந்த வீட்லயும் நமக்கு மரியாதை இல்ல.” தனக்குத்தானே அலுத்துக் கொண்டான்.

காரில் முன்னால் வந்துகூட அமர முடியாது என்றவளிடம் பூ வேற வாங்கிக் கொடுத்து அசிங்கப்படவா. அந்தக் கோபம் அவனுக்கு உள்ளுக்குள் நீறு பூத்த நெருப்பாக கணன்று கொண்டிருந்தது. 

பாத்திரங்களை எடுத்துவிட்டு கீழே வர, செழியன் வேகமாக மங்கைக்கு அமர இருக்கை எடுத்துப் போட்டான். 

“உக்காருங்க மதினி! என்ன குடிக்கறீங்க.? இளநி, இல்லனா ஜுஸ் ஏதாவது வாங்கிட்டு வரவா?” பலத்த உபசரிப்பு வேறு. வேந்தன இருவரையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். 

“பாத்த மொத நாளே இப்படியா அலரவிடுவீங்க?” பயந்த பாவனையில் கேட்க, தன்னைவிட பெரியவன், மதினி என்றதில் மங்கைக்கும் சற்று கூச்சமாகிவிட, சங்கட்டமாக அசட்டு சிரிப்பொன்றை உதிர்க்க,

“இங்க ஒருத்தன் இருக்கேன்டா.” வாலன்டியராக இடையில் நுழைந்தான் வேந்தன். 

“ஆமா! மறந்துட்டேன். இருங்க வர்றேன்” மேலே சென்றவன், பாத்திரங்களைப் பார்த்து, பில் எழுதிக் கொண்டு வந்தான்

அம்மையப்பனும் சற்று ஓய்வெடுத்துவிட்டு வெளியே வர, மங்கை எழுந்து கொண்டாள். 

“உக்காரும்மா, எப்படிம்மா இருக்க?”

“நல்லாருக்கேன்” என முடித்துக் கொள்ள, 

“மாமான்னு வாய் நிறைய சொல்லும்மா!” என்றவரின் ஆதர்ச பேச்சும், வேட்டி சட்டையிலிருந்தவரின் பாந்தமான தோரணையும், 

“சரிங்க மாமா“ என உடனே சொல்லவைத்தது. 

வேந்தன் ஆச்சர்யமாகப் பார்த்தான். இன்னும் ஒரு நாள் கூட கணபதியை அப்பா என அழைக்கவில்லை. ஆனால் அம்மையப்பன் சொன்னதும் சட்டென அழைத்துவிட்டாள். செழியனிடமும் வாய் பேசியிருக்கிறாள் என யோசித்துக் கொண்டிருக்க,

பில்லை அண்ணனிடம் நீட்டினான் செழியன்.

“பில்ல ஏன்டா எங்கிட்ட தர்ற? நாளைக்கு டெலிவரி கொடுத்துட்டு மாமாகிட்ட வாங்கிக்க!” என்றான் கையில் வாங்காமலே. 

“அதான் எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னுனு ஆயாச்சுல. நீ கொடுத்தா என்ன. மாமா கொடுத்தா என்ன?” என்றவன் பேச்சும் பார்வையும் ஒரு மார்க்கமாக இருந்தது. 

‘இவன் எதுக்கு நம்மல இப்படி பாக்குறான்’ என நினைத்துக் கொண்டே, “எவ்வளவுடா ஆச்சு” என கேட்க,

“அது ஆச்சு அறுபதாயிரத்து சொச்சம்.”

பில்லை கொடுத்தான். ஃப்ரிட்ஜும், வாஷிங் மெஷினுமே ஐம்பதாயிரத்தை தாண்டியிருந்தது. வேந்தன் வங்கி பரிவர்த்தன பற்று அட்டையை எடுத்துக் கொடுத்தான். 

இது அம்மையப்பனின் எழுதப்படாத உத்தரவு. தாயா பிள்ளையாக இருந்தாலும் வாயும், வயிறும் வேறு. பாத்திரக்கடை சின்னவனுக்கு, பஸ் கம்பெனி பெரியவனுக்கு என பிரித்த பிறகு கணக்கு வழக்கும் தனித்தனி என சொல்லிவிட்டார். பணம்தான் பகையாக்கும். ஆரம்பத்திலேயே அதில் கவனமாக இருந்து கொண்டால் நாளை அண்ணன் தம்பிகளுக்குள் பிரச்சினை வராது. 

பில்லை கொடுத்துவிட்டு வெளியே வந்தவன், 

“அப்படி என்ன அவங்கிட்ட பேசின? எங்கிட்ட பேச மட்டும் கூலி கேக்குற?”

“அவங்க பேசினாங்க. நானும் பேசினேன். நான் கொமரியா, கெழவியாங்கறத பின்னால வர்றவர்கிட்ட கேட்டுக்கோங்கனு சொன்னேன்.” சொல்லிக் கொண்டே அவனுக்குப் பின்னால் நடந்து வர, 

‘அம்மாடியோவ்’ என சட்டென நின்று திரும்பிப் பார்த்தான். 

அவன் நின்றதில் அவன் மீதே மோதியவள், “ப்பா!” என முணங்கியதிலேயே அவன் புஜபல பராக்கிரமம் விளங்க, சட்டென விலகி நின்றாள். 

அவளை மேலும் கீழும் பார்த்தவன், “அதான் அந்தப் பய அப்படி பாத்தானா? அண்ணங்கவும் விட்டுட்டான். இதே மாமன் மச்சானா இருந்திருக்கனும், நீ சொன்னதுக்கு இன்னைக்கி கண்டம் பண்ணியிருப்பான். நீ எங்கிட்ட முகம் கொடுத்து கூட பேசறதே இல்ல. இதுல ஒரு வாசகம்னாலும் திருவாசகமா சொல்லிட்டு வந்திருக்க.”

“அப்படி என்னத்த சொல்லிட்டேன்.” புரியாமல் பார்த்து நின்றாள். 

“நீ கொமரியா, கெழவியாங்கறது எனக்கு தெரியும்னு சொல்லியிருக்கியே?” 

“இதுல என்ன இருக்கு?”

“ஓராயிரம் உள் அர்த்தம் இருக்கு.” கண்சிமிட்டி சொல்லிவிட்டு முன்னால் நடக்க ஆரம்பிக்க,

“எனக்கு ஒரு அர்த்தமும் புரியல.” என்றவள் யோசித்துக் கொண்டே நடக்க, 

“புரியாதளவுக்கு சந்தோஷம். வா” என அவளை முன்னே விட்டு பின்னே நடக்க, யோசித்துக்கொண்டே நடந்தவள்,‌

“ஆத்தி!” இப்பொழுது நெஞ்சில் கைவைத்து நிற்பது அவள் முறையாயிற்று. மோதி நிற்பது இவன் முறையாயிற்று. தள்ளாடியவளை கைபிடித்து நிறுத்தினான். விழுந்து விடுவாளோ என அவசரமாகப் பிடித்ததில்,‌ ஸ்டீயரிங் பிடித்த கையின் பிடியும் உடும்புப் பிடியாக பதிய, “ப்பா…” என மீண்டும் வலியில் முணங்க, மெதுவாக பிடியை விளக்கினான்.

“என்ன? பல்பு எறிஞ்சுறுச்சு போல?” புருவம் உயர்த்தி கேட்க, மறுப்பாக தலையை ஆட்டினாள். 

“அப்ப, புரியலையா?” 

“ம்கூம்ம், அது இல்ல.” வேகமாக மீண்டும் மறுத்து தலையாட்ட,

“அப்ப புரிஞ்சுறுச்சா, எல்லாத்துக்கும் ஒரே மாதிரி தலையாட்டினா எப்படி?” என்றவனை பாவமாகப் பார்த்தாள். கண்களில் தெரிந்த இறைஞ்சுதலில்,

“சரி, பொழச்சு போ” என வெடித்த தென்னம்பாலையாய் பளீரென சிரித்தான். மந்தகாசச் சிரிப்பு மங்கையின் மனதை பதம் பார்க்க, பாவையின் பார்வை வேந்தன் முகத்தில் நிலைத்தது. 

மாமனுடனே இருந்ததாலோ என்னவோ பெரும்பாலும் எங்கு சென்றாலும் இவனும் வேட்டிதான். முழங்கை வரை மடித்து விடப்பட்ட சட்டை. மடித்துக் கட்டிய வேட்டி. இப்போதிருக்கும் இளந்தாரிப் பயலுகளுக்கு வேட்டி மீது ஒரு தீவிரப்பற்று வந்திருப்பதாகவே தோன்றுகிறது. 

நல்ல திடகாத்திரமான உடம்பு. மிடுக்கான தோற்றம். கருப்பிலும் அழகு கருப்பு. பார்வையிலும் சுண்டியிழுக்கும் பார்வை. சிரிப்பிலும் ஆள் மயக்கும் சிரிப்பு. பளிச்சிடும் சிரிப்பிற்கு சிகரமாய், தினமும் ஆசையாய் நீவி நுனி முறுக்கி விடப்பட்ட கற்றை மீசை. ட்ரிம் செய்யப்பட்ட தாடிக்குள் ஒழிந்திருக்கும் தாவாய்ப் பள்ளம். சட்டையை மீறி தினவெடுத்து, திமிரும் புஜம். அகன்று, விரிந்து, பரந்த மார்பு. சற்று முன் தானே மோதி பலப்பரீட்சை செய்திருந்தாள். நுனி முறுக்கிய மீசையை திருகிவிட ஆசை எழ, தன் மனம் போகும் போக்கை உணர்ந்தவள் சட்டென சுதாரித்து, பார்வையை தாழ்த்திக் கொண்டாள். 

இப்படி கேட்டுருக்கோமே, இவங்க தம்பி என்ன நினைப்பாங்க என்ற குறுகுறுப்பு வேறு உள்ளுக்குள். 

அவளையே பார்த்துக் கொண்டிருந்தவன், தர்மசங்கடமாக நெளிவதைப் பார்த்து, “நான்தான் உங்கிட்ட பேசறதில்லைனு சொல்றியா?” எனக் கேட்டு அவள் சிந்தனையை மாற்றினான். 

“நானெப்ப அப்படி சொன்னேன்?” நிமிர்ந்து பார்த்து கேட்க,

“இப்பதானே செழியன் பேசினதால நீயும் பேசினதா சொன்ன?”

“ஆமா! கேள்வி கேட்டாங்க பதில் சொன்னேன். உங்கிட்டயும் நீங்க கேட்டா சொல்றேன்தான?”

“கேட்டாதானே பதில் சொல்ற. அதுவும் பத்து வார்த்தைக்கு ஒத்த வார்த்தை பேசற. அவனும் நானும் ஒன்னா?” அவள் முகத்தை ஆராய்ந்தவாறே கேட்க,

“ஆமா, ரெண்டு பேரும் அத்தை மகனுங்கதான?”

நேருக்கு நேராய் நின்று, ‘அதைத்தாண்டி எதுவும் இல்லையா’ என கண்ணோடு கண் நோக்க, பார்வையின் வீச்சில் பாவை மனம் பந்தாடத்தான் செய்தது. 

எதற்கு சுற்றி வளைத்து மூக்கைத் தொடுவானேன் என, 

“நான் உன்ன கட்டிக்கப் போறவன்” என்றான் நேரிடையாகவே.

“அதுக்கு நான் சம்மதிக்கணுமே?” என பிடி கொடுக்காமல் திரும்பி நடக்க ஆரம்பிக்க, கார் வரை பேசிக்கொண்டே வந்தவர்கள் பேச்சு காரை நெருங்கவும் தடைபட்டது. 

“அப்ப உனக்கு சம்மதமில்லையா?” வெளிப்படையாகவே கேட்க, 

“நீங்கனு இல்ல, யாரைக் கல்யாணம் பண்ணவும் எனக்கு சம்மதமில்லை.” பட்டென பதிலுறைத்தாள் பெண். 

யாரையும் கட்டிக்க சம்மதமில்லை என பொதுவாக அவனையும் பத்தோடு பதினொன்றாக குறிப்பிட்டதில் மனம் ஏமாற்றத்தை தொட்டு மீள,

“ஏன், ஔவையாரா போகப் போறீயா?” என்றான் எரிச்சல் மேலிட.

“அதே மாதிரி ஒரே நாள்ல முதுமை கிடைக்கும்னா ஔவையாரா போகவும் சம்மதம்தான்.” இதுவரை இருந்த இலகுத் தன்மை மாறி பேச்சும், முகமும் இறுகி கடினப்பட்டு போயிற்று. 

சகஜமாக பேசியவள் சட்டென இறுகிப் போன காரணம் புரியவில்லை. பறக்கும் ஆசையில் ஒரு நேரம் பட்டாம் பூச்சியாய் சிறகு விரிக்கிறாள். மறுகணமே கூட்டுப் புழுவாய் தன்னைத்தானே சிறைப்படுத்திக் கொள்கிறாள். 

சற்றுமுன் தான் அவள் கண்களில் ரசனையைக் கண்டான். சில கணங்கள் என்றாலும் அவள் பார்வையின் சுவாரஸ்யம் அவனையும் கட்டியிழுக்கத்தான் செய்தது. மறுகணமே அதே கண்களில் வெறுமையும், பேச்சில் விரக்தியும் சரிவிகிதத்தில் விரவியிருக்க, அவள் என்ன நினைக்கிறாள் என தெரியாமல் குழம்பி நின்றான். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அவளிடம் பேசினால் சரளமாக பேசவில்லை எனினும் கேட்டதற்கு பதில் வருகிறது. சில நேரங்களில் அவளையும் மறந்து மனம் திறக்கிறாள். அவளையும் மறந்த நிலையில் என்பதை அடிக்கோடிட்டுக் கொண்டான். 

முன் பக்கமாக கதவைத் திறந்துவிட, பின் பக்கமாக கதவைத் திறந்து ஏறிக் கொண்டாள். 

“நானென்ன உனக்கு ட்ரைவரா?” கண்களில் கோபம் எட்டிப் பார்க்க,

“இத்தன நாளா அப்படித்தானே இருந்தீங்க. இனிமேலும் அப்படியே இருங்க. அதுதான் உங்களுக்கு நல்லது.”

“அப்ப உனக்கு எது நல்லது?” 

“நான் இப்படியே இருக்கறதுதான் எல்லாருக்கும் நல்லது.” என்றவள் இனி பேச எதுவுமில்லை என்பது போல் முகத்தை திருப்பிக் கொண்டாள். திடீரென அவளது முகம் மாறியதில் அவனும் அவளை முன்னால் வரச்சொல்லி வற்புறுத்தவில்லை. கதவை அடித்துச் சாத்தியதிலேயே அவன் கோபம் புரிந்தது. இருந்தும் கண்டுகொள்ளவில்லை. 

வீடு வரும்வரை வேறு பேச்சில்லை. கார் நின்ற பிறகுதான் அத்தை வீட்டிற்கு அழைத்து வந்திருக்கிறான் என்ற சுரணையே வந்தது. தாமரை ஃபோனில் இவளை வீட்டிற்கு அழைத்து வரச்சொல்லியது தெரியாது. 

“இது யாரு வீடு?” என்றாள் இறங்காமலே.

“உங்க அத்தை வீடுதான்.”

“இங்க எதுக்கு கூட்டி வந்தீங்க? எனக்கு எங்க வீட்டுக்கு போகணும்.” சிறுபிள்ளையாய் அடம் அவள் கண்களில்.

“இதுவும் உங்க வீடுதான். இங்கேயும் மனுஷங்க தான் இருக்காங்க. இறங்கு” அழுத்திச் சொல்லியதில் மறுத்துப்பேச முடியாமல்தான் இறங்கினாள்.‌

இதில் வந்ததும் வராததுமாக பூ இல்லை என தாமரை மகனிடம் குற்றம் கண்டுபிடிக்க, 

“எனக்கு வயசுப் பொண்ணுக்கு பூ வாங்கிக் கொடுத்து பழக்கமில்லம்மா. எங்கம்மா எங்கள அப்படி வளக்கல. எம் பொண்டாட்டியானப் பின்னாடி பாக்கலாம்.” கோபம் இன்னும் உச்சம்பெற்றது அம்மாவின் பேச்சில். 

“இப்பவே வாங்கிக் கொடுக்காதவன் பொண்டாட்டிக்கி வாங்கி கொடுக்கிறானாம். நீ வா மங்கா!” தம்பி மகளை கைபிடித்து அழைக்க, கன்றுக்குட்டியாய் உடன் வந்தாள். வந்தவுடன் தாடை தடவி, ஆசை தீர கண்கள் கலங்க பார்த்த அத்தையை பிடித்துப் போயிற்று.

மாரியம்மாளும் பேத்தியை சீராட்டுவார் தான். அதில் ஒரு ஆதங்கம் இருக்கும். தாயில்லா பிள்ளை எனும் குறை தெரியக்கூடாதென்கிற பச்சாதாபம் தெரியும். செல்வியிடம் பேத்தியை விட்டுக் கொடுக்கக் கூடாதெனும் வீம்பு இருக்கும். 

அண்ணன், தம்பி பிள்ளைகள் என்றாலே பெண்களுக்கு அலாதி பிரியம் தான். தான் பிறந்த வீட்டில் பிறந்தவள் என்ற பிறந்த வீட்டுப் பாசம் ஒரு வீசம் அதிகம்தான் அத்தைகளுக்கெல்லாம் உடன்பிறப்பின் பிள்ளைகள் மீது. 

“அம்மா! என்னப் பெத்த தாயே! தம்பி மகள அப்பறமா கொஞ்சுங்க. பசிக்குது. சாப்பாடு எடுத்து வைங்க! முகம் கழுவிட்டு வர்றேன்.” கடுப்பாக சொல்லிவிட்டுதான் மாடியேறினான்.

“ஏன்டா! சாப்பிடவச்சும் கூட்டிட்டு வரலையா? இம்புட்டு நேரம் பட்டினி போட்டா கூட்டியாந்த? காபி, டீயாவது வாங்கிக் கொடுத்தியா அதுவும் இல்லியா?” தொடர் கேள்வியால், மாடியேறியவன் திரும்பி பார்த்து கைகட்டி நின்று கொண்டான். 

“என்னடா?”

“மொத்தமா கேட்டு முடிங்க.” 

“வெளிய தெருவ கூட்டிட்டுப் போனா பூ வாங்கி கொடுத்து, ஆசப்பட்டத சாப்புடவச்சு கூட்டியாந்தாத்தான நல்லா இருக்கும்.” 

“அவளுக்கு டீ, காஃபி பிடிக்காதும்மா.”

“நீ கேட்டுருக்கவே மாட்ட போல.”

“அங்க வீட்லயே மாமா போட்டுக் கொடுத்தா குடிக்க மாட்டாம்மா.”

“எனக்கு ஹோட்டல்ல சாப்டறது பிடிக்காது அத்த. நான் தான் வேண்டாம்னு சொல்லிட்டேன்” என அவனுக்கு பதிலாக இவள் முந்திக்கொண்டு பதில் கொடுக்க,

‘நீயா பேசியது! என் கண்ணே நீயா பேசியது!’ ரியாக்ஷன் தான் வேந்தனிடம். அவன் சாப்பாட்டு நேரம் தாண்டிச் செல்ல, கோபத்திலும் ஹோட்டல் அழைத்தான் தான். இவள் தான் மறுத்துவிட்டாள். தனக்கு ஹோட்டல் சாப்பாடு ஒத்துக் கொள்ளாது எனவும் கூறிவிட்டாள். 

“போதுமா, இப்ப நான் மேல போகவா?”

“என்ன புள்ளைகளோ” என அலுத்துக் கொண்டு, குக்கரில் சோறு வைக்க சென்றார். குழம்பு, ரசம் இருக்க, அரிசி மட்டும் குக்கரில் வைத்தால் இவர்கள் முகம் கழுவி வருவதற்குள் ரெடியாகிவிடும். 

தனித்து விடப்பட்டவள், தான் என்ன செய்வது எனத் தெரியாமல் நடு ஹாலில் முழித்துக் கொண்டு நின்றாள். கணபதியும் மதியம் சாப்பிட்டு படுத்துவிட்டார். 

“என்ன பாக்குற? மேல வா! ஃப்ரெஷ்ஷாகிட்டு போலாம்.” அழைக்க, படியேறி வந்தவளிடம்,

“இது திவ்யா ரூம். முகம் கழுவறதுனா கழுவிட்டு வா.” என்றவன் அடுத்திருந்த, அவன் அறைக்குள் புகுந்து கொண்டான். 

குளியலறை செல்ல முயல, கதவு தட்டப்பட்டது. கதவைத் திறக்க துண்டு ஒன்றை நீட்டியவன், 

“கீழயே ஒரு பாத்ரூம் இருக்கு. ஆனா, நீ அடுத்தவங்க யூஸ் பண்ணத யூஸ் பண்ண மாட்டேனு தெரியும். திவ்யா ரூம் யூஸ் பண்ணி ரொம்ப நாளானாதால தான் இங்க போகச் சொன்னேன். உனக்கேத்த மாதிரி திவி ரூம்தான் சுத்தபத்தமா இருக்கும்” என கூற, விழி விரித்து ஆச்சர்யமாகப் பார்த்தாள். இந்தளவிற்கு கவனித்திருக்கிறானா? 

வீட்டிற்கு வந்த புதிதில் அவளுக்கென்று தனியாக குளியலறை கட்டி முடிக்கும் வரை மிகவும் அவஸ்த்தை பட்டுப்போனாள். 

இவர்கள் எழுவதற்கு முன் சீக்கிரம் எழுந்து காலைக்கடன் முடித்து குளித்து விடுவாள். அங்கிருந்த நாட்களில் வேந்தன் இதை கவனித்திருக்கிறான். 

மாமன் வீட்டில் இருந்தவரைக்கும் இதே கதைதான். அதற்கே, “பாப்பார வீட்ல பொறக்க வேண்டியது இங்க வந்து பொறந்திருக்குது” என செல்வி முணங்குவார். 

***** 

“மொத்தமா முப்பது ஏக்கர்ல திராட்சை தோட்டம். நல்ல நீர்ப்பாசனம் இருக்குற கேணி. விலையெல்லாம் கட்டுபடியாகும். உங்க ரெண்டு பேருக்கும் முடியும்னா முடிச்சறலாம்.” இரவு சாப்பாட்டிற்குப் பின் வழக்கம் போல் அம்மையப்பன் குடும்ப சபையைக் கூட்டியவர் மகன்களிடம் அபிப்ராயம் கேட்டார். 

அதில் அப்பொழுதுதான் வந்திறங்கிய திவ்யாவும், மதியழகனும், உடன் கணபதியும், மங்கையும் அடக்கம். 

அவர்களும் கடையை அடைத்துவிட்டு கிளம்பி வர நேரமாகிவிட்டது. நேரங்கெட்ட நேரத்தில் வருவானேன் என பதட்டமாகவே மகளுக்காக வழி மேல் விழி வைத்து பார்த்திருந்தார் தாமரை. சம்பிரதாயமாக இல்லாமல் முதன் முறையாக மகள் தாய் வீடு வருகிறாள். அந்த ஆர்வம் பெற்றவள் முகத்தில். வந்தவுடன் மாப்பிள்ளை உபச்சாரம் தடபுடலாக குறைவில்லாமல் நடந்தது. அது தெரிந்தே கணவனை சாப்பிடவிடாமல் அழைத்து வந்தாள். அதற்கு சிறிதும் பங்கம் இல்லாமல் இருந்தது மாப்பிள்ளை விருந்து. 

சாப்பிட்டு முடித்துதான் மகன்களை அழைத்து அபிப்ராயம் கேட்டார். 

தொழில் வருமானம், கணக்கு வழக்குதான் தனித்தனி. அப்பொழுதுதான் அவர்களுக்கென்று பொறுப்பு வரும் என. ஆனால் சொத்து வாங்குவதென்றால் அண்ணன், தம்பி பொதுவில்தான் வாங்க வேண்டும். அப்பொழுதுதான் சொந்தம் விட்டுப் போகாது என. 

திராட்சைத் தோட்டம் ஒன்று விலைக்கு வர, மகன்களை அழைத்து முடிவு கேட்கிறார். 

“தொகை பெருசா இருக்கேப்பா?” வேந்தன் தயங்க,

“ஆமாப்பா” என செழியனும் மலைக்க, 

“என்னடா மாப்ள. மாமன் எதுக்கு இருக்கேன். தைரியமா வாங்கலாம்டா.” நாளைக்கு மகளுக்குதானே என கணபதி வேந்தனுக்கு கை கொடுக்க, 

செழியன், “அப்பா! உங்களுக்கே தெரியும். என்னால அவ்ளோ தொகை இப்போதைக்கி முடியாது. ஒரு வருஷம் போனா வேணா பாக்கலாம். வேணும்னா எங்கிட்ட இருக்கறதையும் தர்றேன். கூடக் குறைய மாமா பாத்துக்கட்டும். அண்ணன் பேர்லயே முடிக்கலாம்.” என முன்வர,

“அது சரிப்படாதுடா. முடிஞ்சா ரெண்டு பேர் பேர்லயும் முடிக்கலாம். இல்லைனா நம்ம கையிருப்புக்குத் தக்கன, தோதான வேற எடம் பாக்கலாம்.” 

வேந்தன் தம்பியை விட்டுக் கொடுக்காமல் பேச, அம்மையப்பனுக்கு மகன்களை நினைத்து பெருமிதம்தான். முகத்தில் காட்டிக் கொள்ளவில்லையே ஒழிய புலங்காகிதம் தான் உள்ளுக்குள். 

“செழியா! ஒனக்கும் நாந்தான்டா தாய்மாமன். மொத்தமா கையிருப்பு எவ்வளவுனு பாத்துட்டு, பத்தும் பத்தாதுக்கு லோன் போட்டுக்கலாம்டா.”

கணபதி இரு மருமகன்களுக்குள் ஊக்கம் கொடுக்க, மதியழகன் முகம் யோசனை காட்டியது. இவர்கள் பேச்சை உள்வாங்கியவன்,

“மாமா! ஏன் லோன் வாங்கணும். அதுக்கு வட்டி வேற கட்டணும். சின்ன மச்சானுக்கு நான் தர்றேன். வட்டி வேண்டாம். எப்ப முடியுமோ அப்ப தரட்டும்.” 

“அது சரிப்படாது மாப்ள. சொந்தத்துக்குள்ள அதுவும் சம்பந்தம் பண்ண வீட்ல கொடுக்கல் வாங்கல் ஒத்துவராது.” பளிச்சென சொல்லிவிட்டார் அம்மையப்பன். 

“கணபதி சித்தப்பாகிட்ட வாங்கறீங்கள்ல? அது மாதிரி நான் தர்றேன். அதான் ஒரு வருஷத்துல முடியும்னு சொல்றாப்லல்ல. அப்ப எனக்கு தரட்டும். இதுல என்ன இருக்கு?”

“கணபதி கணக்கு வேற மாப்ள. இது தோதுப்படாது” என முடித்துக் கொண்டார். கணபதி மகளை மனதில் கொண்டு கொடுக்க முன் வரலாம். அதுதான் உண்மையும் கூட. வேந்தன் திருப்பிக் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் கண்டு கொள்ளப் போவதில்லை. 

ஆனால், மருமகனிடம் வாங்குவது அப்படியில்லை. தொகையும் சின்ன தொகையில்லை. வட்டி வேண்டாமென பெருந்தன்மையாகச் சொல்லலாம். திருமணம் முடித்து இன்னும் ஒரு மாதம் கூட முழுதாக முடியவில்லை. அதற்குள் கொடுக்கல் வாங்கல் மகள் வாழ்க்கையில் பிரச்சினைக்கு வழி வகுக்கும் என பலவாக்கில் யோசித்தார் அம்மையப்பன். 

“அதெல்லாம் சரியா வரும் மாமா. நான் அப்பாகிட்ட பேசிட்டு சொல்றேன். நீங்க தோட்டத்த பேசி முடிங்க!” மதியழகன் தன் பேச்சில் உறுதியாக இருந்தான். 

மருமகனிடம் இதற்கு மேல் வாதிட முடியாமல், “சரிங்க மாப்ள! பாத்து செய்யலாம்” என முடித்துக் கொண்டு, பெரியவர்கள் எழுந்து கொண்டனர். 

தாமரை, “மங்கா! நீ எங்கூட வந்து படுத்துக்கோ. நீங்க பெரியவன் கூட படுததுக்கோங்க.” அம்மையப்பனிடம் சொல்லிவிட்டு, தம்பி மகளை உடன் அழைக்க,

“இல்லக்கா, நான் இங்க ஹால்ல படுத்துக்கறேன். குட்டிம்மா என் ரூம்ல படுத்துக்கட்டும்.”

“குட்டிம்மாவா! யாருண்ணே அது. குமரியா, கெழவியானு ஆராய்ச்சி போறது மாமாக்கு தெரியாதா?” மெதுவாக அண்ணனின் காதைக் கடிக்க,

“சும்மா இரேன்டா! நீ வேற… அவ ஏதோ தெரியாத்தனமா உங்கிட்ட வாயவிட்டுட்டா” என வாய்க்குள்ளேயே அதட்டியவன்,

“சீட்டுக்கட்டு எடுத்துட்டு வாடா” என தம்பியை இடத்தை விட்டு அப்புறப்படுத்தினான். 

“மாமா! நாங்க படுக்க நேரமாகும். உங்களால இங்க தூங்க முடியாது. நான் வந்து உங்ககூட படுத்துக்கறேன். மங்கா என் ரூம்ல படுத்துக்கட்டும்.” 

“அண்ணஞ்சொன்னா சரியாத்தான் இருக்கும். மதினி அண்ணே ரூம்ல படுக்கறதுதான் சரி.” சொல்லிக்கொண்டே செழியன் சீட்டுக் கட்டோடு வர, மதியழகன் வேந்தனைப் பார்த்த பார்வையில்,

“மொதல்ல சீட்ட கலச்சுப் போடு எரும. உனக்கு வாய் ஓவராப் போச்சு.” 

“கிளியாட்டம் ஆளுக்கொரு சீட்ட எடுங்க. சிறுசு, பெருசு பாக்க வேண்டாமா?” இவ்வளவு நேரம் பொறுப்பாக பேசிய அண்ணன் தம்பிகள் சிறு பிள்ளையாய் மல்லுக்கட்ட ஆரம்பித்தனர்.

அதற்கு பின் சிறியவர்கள் அரட்டை கச்சேரியும், சீட்டுக் கச்சேரியும் களைகட்டியது. 

மல்லிகைப்பூவே

மல்லிகைப்பூவே பார்த்தாயா

பொன் மாலை எங்கள் தோட்டத்தை

பார்க்க பூத்தாயா

பொன் மாலை எங்கள் தோட்டத்தை

பார்க்க பூத்தாயா

ஆயிரம் கோடிகள் செல்வம்

அது யாருக்கு இங்கே வேண்டும்

அரை நொடி என்றால் கூட

இந்த ஆனந்தம் ஒன்றே போதும்

பூவே எங்கள் தோட்டத்தை பார்க்க பூத்தாயா

வெண்பூவே எங்கள் தோட்டத்தை

பார்க்க பூத்தாயா…

செழியன் மாதிரி மரியாதை கொடுக்காமல், தன்னைவிட சிறியவள் என்பதால், திவ்யா மங்கையை பெயர் சொல்லியே அழைக்க, அவர்கள் இருவருக்கும் இடையில் நல்லதொரு தொடக்கமாகவே அமைந்தது. 

இவர்கள் அமர்ந்து விளையாட ஆரம்பிக்க, அவள் தனியாக எழுந்து செல்ல மனமில்லாமல், அவர்கள் அளவிற்கு பேசாமல் அமைதி காத்தாலும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவளை, பேச்சினூடே திவ்யா அடிக்கடி இழுத்துக் கொண்டாள். 

இந்தக் கூட்டோடு ஒன்றவும் முடியாமல், விலகவும் முடியாமல் சிறகொடிந்த பறவையாய் தவித்து, தனித்து நின்றாள் பெண்… சிபி மன்னனாய் மடிதாங்க மன்னவன் இருப்பது புரிந்தும் ஒட்ட மறுத்து மருகி நின்றது பெண் புறா. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top