மல்லி 13

“என்னடா காக்கி ட்ரெஸ்ல வந்திருக்க?” வீட்டிற்குள் வந்தவனை அடுப்படியில் இருந்து கொண்டே கேள்வி கேட்க,

“ஏன் கேக்க மாட்டீங்க? உங்க கூட சேந்ததுக்கு காக்கி என்ன, காவி கட்டி காவடி தூக்க வேண்டியதுதான்.”

“எம் பொண்ணக் கட்டறதுனா சும்மாவா? காவடியும் தூக்கணும். காலையும் புடிக்கணும். ஏழுகடல் தாண்டி, ஏழுமலை தாண்டித்தான்டா எம் பொண்ண கட்டணும்.” 

கைலியும், கைவைத்த பனியனும், தோளில் துண்டுமாக கையை துடைத்துக் கொண்டே வெளியே வந்தார் கணபதி. காலை ஆறு மணிக்கே சமையல் முடித்து சாப்பாட்டை டிஃபன் பாக்சில் போட்டு வைத்தார். 

“யோவ் மாமா! எத்தன வருஷம் உம்மகூட குப்ப கொட்டியிருக்கே. எனக்கு ஒரு டீயாவது போட்டுக் கொடுத்திருக்கீரா?” 

வேந்தன் குரல் பொறாமையாய் உயர்ந்தது. சிறுவயதில் இருந்தே கூடவே இருந்ததால் சற்று உரிமையோடு பேச்சு எள்ளி நகையாடும் மாமனிடம். அவன் அப்படி பேசும்பொழுது அவரும் அவனுக்கு சமமாக இறங்கிவிடுவார்.

“என்னடா மரியாதை தேயுது? குப்ப கொட்டுறவனுக்கெல்லாம் டீ போட்டுக் கொடுக்கவா நானிருக்கே?”

“பொண்ணு கேட்டா, தர்றேன் தரலைனு ஏதாவது ஒன்னு சொல்லணும். அதவிட்டுட்டு மாப்பிள்ளை இவருதான், ஆனா சட்டை என்னதுங்கற மாதிரி, பொண்ணு உனக்கு தான்… ஆனா, அதுக்கு என் மக சம்மதிக்கணும்னு இக்கனா வச்சுட்டு,  மகள கூட்டியாந்து வீட்ல வச்சுக்கிட்டு என்னைய வெளிய தொரத்திட்டீரே?” சாப்பாட்டு மேஜை மீது ஒரு பக்கமாக அமர்ந்து கொண்டே கேட்க,

“வயசுப்புள்ள இருக்குற‌ வீட்ல வயசுப் பையன் இருந்தா நல்லாவா இருக்கும்? எம்புள்ளைக்கு சங்கட்டமா இருக்கும்ல?”

“உம்மக பொறக்குறதுக்கு முன்னாடியே,  இன்னும் சொல்லப்போனா உங்க கல்யாணத்துக்கு முன்னாடியே அட்வான்ஸ் புக்கிங்ல உம்ம வீட்டுல, வீட்டோட மாப்பிள்ளையா இருந்தவனாக்கும். அத மறந்துறாதீரும். தனித்தனியா பிரிச்சு வச்சா எப்படிய்யா உம்‌ம பொண்ண கரெக்ட் பண்றது?” 

“எவ்வளவு ஏத்தம்டா ஒனக்கு? எங்கிட்டயே வந்து எம்பொண்ண கரெக்ட் பண்றேன்னு சொல்லுவ?” தோளில் கிடந்த துண்டால் செல்லமாக அடிக்க,  

“நீர்தான்யா மாமா? அப்ப உம்மகிட்டதான சொல்லணும்? மருமகன்னு மரியாதை கொடும்! அடிக்கிற வேலையெல்லாம் வச்சுக்குறாதீரும்!”

“வீட்டோட மாப்பிள்ளையா இருக்கேங்கறவனுக்கு என்னடா மரியாதை வேண்டிக்கெடக்கு… வெக்கமாயில்ல?”

“இதென்ன நமக்கு புதுசா? இத்தன நாளா அப்படித்தான இருந்தேன்? இனிமே உங்க மகளுக்கு புருஷனா இருக்கப் போறேன்.” என்றவனிடம் விளையாட்டுத்தனத்தை விடுத்து, ஆழ்ந்து மூச்செடுத்தவர், 

“நான் பண்ண தப்ப நீயும் பண்ணிறக்கூடாதுடா மாப்ள. எம்புள்ளைக்கி பிடிக்கலைனா‌ பிடிக்கலதான். அது நீயா இருந்தாலும் தான். இது எனக்கு அப்ப தெரியலடா. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்க்காரம். வயசு முறுக்குல வேற சாதிக்காரனுக்கு பொண்ண விட்டுக் கொடுக்கறதான்னு ஒரு வீம்பு. அடுத்த சதிக்காரன்கிட்ட இருந்து பொண்ண ஜெயிச்சுட்டதா ஒரு மிதப்பு. தாலி கட்டிட்டா பொம்பள நம்மல விட்டு எங்க போயிருவாங்கற திமிரு.”

“ஆனா, இது எல்லாத்தையும் ஒரு பொட்டச்சி நெனச்சா ஒன்னுமில்லாம ஆக்கிருவாடா. என்னால பொண்ண மட்டும்தான் ஜெயிக்க முடிஞ்சது. அதையேதான் அந்த விமல் பயலும் நெனச்சான். உன்னைய ஜெயிக்க நெனச்சு தாலி கட்ட வந்திருக்கான். அது நடக்கலைங்கவும் அத்து மீறியிருக்கான். ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கடா மாப்ள. பொம்பள நெனச்சா மட்டும்தான்டா நீயும், நானும் ஆம்பள. ஊருல ஆயிரம் பேரு நம்மல தலையில தூக்கி வச்சு கொண்டாடுவான். ஆனா, வீட்ல பொண்டாட்டி மதிக்கலைனு வையி, அவங்க கெண்டக்கால்ல இருகிறதும், நம்ம மூக்குக் கீழ இருக்கறதும் ஒன்னுதான்டா.‌ முடிஞ்சா எம்மக மனச ஜெயிச்சுக் காட்டுறா மாப்ள!” என்ற மாமனை ஆதுரமாகப் பார்த்தான். 

பட்டறிவு பேசுகிறது. மனிதனை புடம்போட அனுபவத்திற்கு இணையான ஆசான் ஈரேழு உலகத்திலும் இல்லை. அவன்‌பார்த்த மாமான் வேட்டியை மடித்துக்கட்டி சண்டித்தனம் செய்தவர். இப்படி மேல்துண்டும் கரண்டியுமாக நிற்பவரில்லை. 

“என்ன மாமா! சவாலா?”

“ஆமாடா!” என்றார் மீசையை நீவி விட்டு. 

“பொண்ண பெத்துட்டீரு. அதனால போனாப் போகுதுனு விர்றே” என்றவன், குரலைத் தாழ்த்தி பவ்யமாக, 

“இப்ப எப்படி மாமா இருக்கா?” கேலித்தொனி மாறி, சற்று தீவிரம் காட்டியது வேந்தனின் குரல். மாமன் வீட்டுப் பக்கம் வந்து பத்து நாட்களாயிற்று. தங்கை மறு வீடு,‌ விருந்து என தேனியிலிருந்து நகர முடியவில்லை. 

“என்னடா இந்தளவுக்கு பம்முற? அப்படியேதான்டா. பேசறதே இல்ல. சாப்பிட மட்டும் வெளிய வருது.” அவரும் அவன் பக்கம் குனிந்து மெதுவாக ஆதங்கத்தோடு சொல்ல,

“என்னச் சொல்லிட்டு நீங்களே இவ்ளோ பம்முறீங்க. சரியாகும் மாமா. புது எடம்ல.“

“எம்பிள்ளைக்கி உரிமையான வீடுடா மாப்ள. புது எடமாடா? அது பொறந்து வளந்த வீடுடா இது.” வார்த்தைகள் வலியோடு குற்ற உணர்வு சுமந்து கனத்து வந்தது. 

“ஆனா, அஞ்சு வயசுக்கப்பறம் யாருமே அவள கண்டுக்கலைல மாமா. அந்தக் கோபம் இருக்கதானே செய்யும்?” வேந்தன் கேட்டதில் அவருக்கும் மனம் அறுத்தது.

மனைவி ஓடிப்போக, காதுபட‌ பேசிய கேலிப் பேச்சுக்களில் குறுகிப் போய், வீட்டிற்குள்ளேயே முடங்கிப் போனார். இதில் கனகத்தின் ஓயாத புலம்பல் வேறு. 

தன் கற்பனைக்குள் அடங்கவில்லை என கல்யாணியும், தன்னை ஒதுக்குபவளிடம் வலிந்து செல்ல மனமில்லாத கணபதியும், தங்களுக்கு துணை சரியாக அமையவில்லையென இருவரும் நினைத்தார்களே ஒழிய, தங்கள் மூலம் உலகிற்கு கொண்டு வரப்பட்ட பிள்ளையை இருவரும் நினைத்துப் பார்க்கவில்லை. 

பத்துப் பொருத்தம் பக்காவாக இருக்கா எனப் பார்க்கும் நாம், ஒத்தப் பொருத்தமான மனப்பொருத்தம் பார்க்க மறந்துவிடுகிறோம் என்பதைவிட மறுத்துவிடுகிறோம் என்பது தான் உண்மை. இப்பொழுது அழைத்துவந்து இதுதான் உன் வீடு என உரிமை கொடுத்தால், இத்தனை நாள் எங்க போனீங்க என்ற கோபம் வரத்தானே செய்யும்.‌ அவளுக்குள் இருப்பது கோபம் மட்டும்தானா என ஆராயத் தவறினர் ஆண்மக்கள் இருவரும். 

“இன்னைக்கு காலேஜ் தொறக்குதுல்ல? காலையிலேயே எந்திரிச்சு குளிச்சு கெளம்புச்சு. அதான் ஒனக்கு ஃபோன் பண்ணேன். பெரியகுளத்துக்கே காலேஜ மாத்திக்கலாம்னாலும் வேண்டாம்னுட்ட.‌ எம்புட்டு தூரம் தெனமும் போய்ட்டு வர்றது?”

“ஒரு வருஷம்தான மாமா? அவ யாருகூடயும் சட்டுனு ஒட்டுற ஆள் மாதிரி தெரியல. காலேஜ் மாத்தினா எல்லாமே புதுசா இருக்கும். நம்ம பஸ்லதான மாமா. பாத்துக்கலாம். கடைசி வருஷம். ப்ராஜக்ட், அசைன்மென்ட்னுதான் போகும்.‌ பாதி நாள் வீட்லதான் இருப்பா. அட்டென்டன்ஸ் கணக்குக்கு மட்டும் போட்டும்.” 

“அதில்லடா, அந்த ரூட்ல போகும்போது அவன் மறுபடியும் தொல்லை பண்ணான்னா?”

“என்ன மாமா! புள்ளபூச்சிக்கெல்லாம் எப்பருந்து பயப்பட ஆரம்புச்சீங்க?”

“எனக்கு அவன நெனச்சு பயமில்லடா. எம் பிள்ளைக்கு தேவையில்லாம மன ஒளச்சலக் கொடுக்கக் கூடாதுல்ல. அன்னைக்கி நீயே பாத்ததானே? குளிச்சே காய்ச்சல் வந்திருச்சு.” மகளை நினைத்து கவலைப்பட, வேந்தனுக்கும் அதே யோசனைதான். 

அன்று வாந்தி எடுத்து ஓய்ந்தவள், உடனே குளியலறை சென்று மேல் தொட்டியில் தண்ணீர் காலியாகும் வரைக்கும், அவன் தொட்ட இடமெல்லாம் தீயாய் எரிய, மேல் தோல் எரிச்சல் எடுக்கும் அளவிற்கு தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்தாள். எத்தனை தடவை குளித்தும் அவளுக்கு அருவருப்பு மட்டும் தீரவில்லை. 

பெரியவர்கள் திருமண மண்டபத்திலிருந்தவாறே பத்மா விவகாரத்தை கவனிக்க காவல் நிலையம் செல்ல, ரெங்கநாதனும், சகளையோடு காவல் நிலையம் செல்ல வேண்டியதாயிற்று. மண்டபத்திலிருந்து தமிழ்ச்செல்வியும், மாரியம்மாளும், தீபனோடு வீடு திரும்பினர். 

“அடிமட்டை விழுகுதுன்னு மேமட்டை சிரிச்சுதாம். நாமலும் ஒரு நாள் விழுவோம்னு அதுக்கு தெரியல. அக்காளும் தங்கச்சியும் சேந்துக்கிட்டு ஏங்குடும்பத்த பத்தி என்ன பேச்சு பேசுனீங்க? இன்னைக்கி உங்களுக்கே வந்து விடிஞ்சுதா?” 

வரும் வழி நெடுக மாரியம்மாள் மருமகளை இடைக்குத்து குத்த, எதுவும் பேச முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு வந்தார் செல்வி. அக்கா மகள் செய்த காரியம் அப்படி.‌ அக்கா மகன் அதற்கு மேல் செய்து வைத்திருப்பது தெரியாமல் வீடு வந்தனர். 

உள்ளே நுழைந்தவர்கள், விமல் அடிபட்டுக் கிடப்பதைப் பார்த்து செல்வி பதற, மாரியம்மாள் நடந்ததை அறிந்து கொதித்துப் போனார்.

“எம் பேத்தியத் தொட்ட கைல கட்ட மொளைக்க! திங்கிற கையி வெளங்காமப் போக!” வாய் நிறைய வசவுகளை வாரி வழங்க, செல்வியால் எதுவும் பேச முடியவில்லை. 

வேந்தனும், கணபதியும் அங்கிருக்க, இவன் செய்த காரியம் செல்விக்குமே ஒப்பவில்லை. மங்கை அவருக்கு ஆகாதவள்தான். ஆனால் அவரும் பெண்ணைப் பெற்றவராயிற்றே. கணவருக்குத் தெரிந்தால் நடக்கப்போவதை நினைத்து அடிவயிறு கலங்கியது. அக்கா வீட்டு சங்காத்தம் இத்தோடு முடிந்தது என்று கண்கூடாகக் தெரிந்தது. இன்னும் விமல் விழுந்த இடத்தைவிட்டு அசையக்கூட இல்லை. அசையும் நிலையிலும் இல்லை. ஆங்காங்கே இரத்தக் காயங்களுடன், ஊமைக் காயமும் அதிகம் எனத்தெரிந்தது.

ரெங்கநாதன் வருவதற்குள் அவனது ஃபோனை எடுத்து அவனது நண்பர்களுக்கு அழைத்து விமலை வந்து தூக்கிப்போகச் சொன்னார்.‌ அவர் வந்தால் இருக்குற கொஞ்சநஞ்ச உயிரையும் எடுத்துவிடுவார். அவர்களும் அடுத்து பத்து நிமிடத்தில் வந்து தூக்கிச் சென்றனர். அக்கா மகளும், மகனும் செய்த காரியம் தலை குனிவாய்ப் போயிற்று செல்விக்கு. 

மங்கா குளித்துமுடித்து ஈரத்தலையோடு அப்பொழுதுதான் வெளிவந்தாள். 

காவல் நிலையம் சென்ற ரெங்கநாதனும் வீடு திரும்பினார். திருமணம் செய்துகொண்ட இருவரும் மேஜர்.‌ எதுவும் பண்ணமுடியாது. அதையும் மீறி இவர்களை பிரிக்க முயற்சி செய்தால் குடும்பத்தார் மீதுதான் வழக்கு பதியப்படும் என சொல்ல, அந்தக் காலம் மாதிரி இன்று சாதியை காரணம் காட்டி எடுத்தோம் கவிழ்த்தோம் என முடிக்க முடியாதெனத் தெரிய, இனி அவர்கள் குடும்ப விவகாரமென அவரவர் கிளம்பிவிட்டனர்.

வீடு திரும்பிய ரெங்கநாதன் விஷயமறிந்து தன் வீட்டில் தன் வீட்டுப் பிள்ளைக்கே பாதுகாப்பு இல்லையென நொந்து போனார். கணபதியை முகம் கொண்டு பார்க்க முடியவில்லை. 

“எங்க அம்மா வாய்க்குப் பயந்துதான் பிள்ளைய இங்க விட்டுவச்சேன். உங்க மக மேல இருந்த வெறுப்பெல்லாம் எம்மக மேலதான் திரும்பியிருக்கும். என் தப்புதான். எங்கம்மா செத்த பின்னாடியாவது பிள்ளையைத் தேடி வந்திருக்கனும். ஊர்ப்பயலுக பேசுனதுல அப்ப எனக்கு நடந்த அவமானம் தான் பெருசா தெரிஞ்சது. போதையும் எம்புத்திய மழுங்கடிச்சுருச்சு. என் பிள்ளைய மறந்துட்டேன். என்னயவிட நீங்க எல்லாம் நல்லா பாத்துப்பீங்கனு நெனச்சுட்டேன்.” ஆதங்கமாக வெளி வந்த வார்த்தைகளில்,‌ நீங்க பொறுப்பா பாத்துக்கல என்ற அர்த்தம் தொக்கி நிற்க, 

இவ்வளவு நேரம் அமைதியாக இருந்த செல்வி, “இவ்வளவு பேசறவரு பிள்ளைய கூட்டிப் போக வேண்டியது தான?” என்றார் பட்டென.‌ 

இனி எப்படியும் தன் அக்கா மகனுக்கு கேட்க முடியாது.‌ சொத்தும் வரும் அறிகுறி தெரியவில்லை. பின்னே எதற்கு வேண்டாத சுமையைத் தூக்கிச் சுமக்க வேண்டும் என்ற எண்ணம்.‌ ‘இத்தன நாளா பாத்துக்கிட்டது நாம.‌ இன்னைக்கி வந்துட்டு குத்தம் சொல்வாரா? இனிமே அவர்களாச்சு, அவர் பிள்ளையாச்சு.’ இதை சாக்கிட்டு கை கழுவ நினைத்தார். 

“நீங்க சொன்னாலும், சொல்லலைனாலும் அதைத்தான் பண்ணப் போறோம். எங்க வீட்டு பிள்ளைய நாங்க கூப்புட்டுக்கறோம்.‌” வேந்தன் செயலை முன்னெடுக்க, 

இத்தனை நாள் இல்லாத உரிமை இப்பொழுது எங்கிருந்து வந்தது என கேட்கும் நிலையில் ரெங்கநாதனும் இல்லை. இதுதான் என் பிள்ளையை நீங்க பார்த்துக்கொண்ட லட்சணமா என கேட்டுவிட்டால் என்ன செய்வது.‌ என்னைக்கென்றாலும் அவர்கள் பிள்ளை தானே. 

என்னதான் உறவுக்காரனாக இருந்தாலும் விமலை ஆரம்பத்திலேயே தட்டி வைத்திருக்க வேண்டும். தான் கொடுத்த இடம்தானே அவனுக்கு சலுகை எடுத்துக் கொள்ள தூண்டியிருக்கிறது. எவ்வளவு துணிச்சல் இருந்தால் தாலி கட்ட வந்திருப்பான். எல்லா விபரமும் தெரிந்தவன். அவனுக்கே கட்டி கொடுத்தால் நம் கைக்குள் இருப்பான் எனத்தான் ரெங்கநாதனும் நினைத்தார்.

 வேறொரு இடத்தில் மாப்பிள்ளை தேடினால், அம்மாவைப் பற்றிய கேள்வி வரும். அப்பா உடன் இல்லை என்பது பேசு பொருள் ஆகாது. அம்மா ஓடிப் போனவள் என்பதுதான் கருப்பொருள் ஆகும். தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை என்றுதானே நமக்கே சொல்லி வைத்திருக்கிறார்கள்.‌ தகப்பனைப் போல பிள்ளை என உவமை கூறவில்லையே. 

செல்வியும் அதை வைத்துதானே இவளை கரித்துக் கொட்டினார்.

“ஆத்தாள மாதிரி பேரெடுத்தறாத. வளத்த என்னைத்தான் சொல்லுவாங்க” என்றுதானே தேளாய் கொட்டிக் கொண்டே இருப்பார். 

கணபதிக்கு இல்லை என்றாலும், வேந்தன் உரிமையோடு நிற்கிறான். மறுப்பு சொல்ல முடியாது. 

“தோட்டக்காரனுக்கு சொத்த கத்திரிக்காதாங்கறது சரியா இருக்கு.” வேந்தன் பெண் கேட்டதை வைத்து, செல்வி இடித்துரைக்க,

“நான் தான் தோட்டக்காரன்னு தெரியுதுல்ல. அந்தளவுக்கு சந்தோஷம் சித்தி.” வேந்தனும் தெனாவெட்டாக பதில் கொடுக்க,

மாரியம்மாளுக்கு பேத்தியை அனுப்பும் எண்ணம் இல்லை. பெற்றவரே அழைத்தாலும், ஒண்டிக்கட்டையான அவரை நம்பி வயசுப் பிள்ளையை எப்படி அனுப்புவது என யோசனையாக எந்த பதிலும் சொல்லாமல் மகனின் முகம் பார்த்தார். 

மங்கா அறையை விட்டு வெளியே வந்தாள். அங்கிருப்பது அப்பாவும், அத்தை மகனும். பேசியதெல்லாம் கேட்டது. அதற்கான எந்த எதிர்வினையும் அவள் முகத்தில் இல்லை. வெகு நேரம் தண்ணீரில் இருந்தாலோ என்னவோ முகம் வெளுத்து கண்கள் சிவந்திருந்தது. 

கணபதி காலைப் பிடிக்காத குறையாக மாமியாரிடம், “எம்மகள என்னோட அனுப்பி வைங்க!” என வேண்டுதல் வைக்க, மாரியம்மாள் யோசனையாக, 

அதுவரை அமைதியாக இருந்தவள், “நான் வர்றேன்” என யாரையும் எதிர்பார்க்காமல் பதில் சொன்னாள்.‌ யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. கணபதிக்கு அதிர்ச்சி கலந்த சந்தோஷம்தான். மகள் தன்னோடு வர சம்மதித்தது குறித்து. இவர்களே யோசிக்கும் பொழுது மகள் வருவாளா என சந்தேகம் ஒரு பக்கம் அறித்துக் கொண்டு இருந்தது. 

மனது மாறிவிட்டால் என்ன செய்வதென்று கையோடு உடனே கிளம்பச் சொல்லிவிட்டார். 

தம்பிக்கு அழைத்தான் வேந்தன். இன்னும் மண்டபத்தில் தான் இருந்தனர்.

“என்னடா இன்னும் நம்ம வீட்டுக்கு கெளம்பலியா? இந்நேரம் கெளம்பியிருக்கனுமே?”

“இங்க வாண்ணே பேசிக்கலாம்” என முடிக்க, வேந்தனுக்கும் அங்கு என்ன பிரச்சினை என தெரியவில்லை. 

செல்வியிடம் வந்தவள், “இனிமேலாவது நிம்மதியா இருங்கத்தை. எங்க, நான் யார்கூடயாவது ஓடிப் போவேனோங்கற டென்ஷன் இனி உங்களுக்கு இல்ல. மாமாகிட்ட என்னைய வச்சுதான உங்களுக்குள்ள சண்டையே வருது. இனிமேலாவது வீட்டுக்கு வர்ற மாமாவ நிம்மதியா இருக்கவிடுங்க” என வெறுமை கலந்த குரலில் கூறிவிட்டு, 

மாமனிடம் வந்தவள், “இனிமேயாவது நீங்களும் உங்க பிள்ளைகள செல்லம் கொஞ்சுங்க மாமா. நான் ஏங்கிப் போவேனுதான தீபனையும், கார்த்தியையும் கூட கொஞ்ச மாட்டீங்க. அந்தக் கோபம்தான் அத்தைக்கும்” என்றவள் குரலில் விரக்தி டன் கணக்கில் விரவியிருக்க, ரெங்கநாதனுக்கும், கணபதிக்குமே கண்கள் ஈரப்பசை கண்டது. 

வேந்தன் அவள் நடவடிக்கைகளை பார்த்துக் கொண்டிருந்தான். அப்பா அழைத்ததால் அவள் கிளம்பவில்லை. மாமன் குடும்பத்தின் நிம்மதிக்காக இங்கிருந்து வெளியேறுவது போல் இருந்தது அவளது ஒவ்வொரு செயலும். 

இதுவரை அவன் கவனித்த ஒன்று, விமலோடு போராடும் பொழுதும் சரி, மயக்கம் தெளிந்து எழுந்த பிறகும் சரி, நமக்கு இப்படி நடந்துவிட்டதே என ஆத்திரமாகவோ, ஆதங்கமாகவோ கூட ஒரு துளி கண்ணீர் அவள் கண்களில் இருந்து வரவில்லை. முகம் மட்டும் பாறையாய் இறுகிப் போயிருந்தது. அந்தப் பாறைக்கடியில் வருடக்கணக்கில் எரிமலை ஒன்று வெளியே தெரியாமல் ஆற்றுவாரும், தேற்றுவாருமின்றி கொதித்துக் கொண்டிருப்பது யாருக்கும் தெரியவில்லை. 

இவனையோ, கணபதியையோ ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அதே ஈரத்தலையோடும், அணிந்திருந்த உடையோடும் மட்டும்தான் கிளம்பினாள். பேத்தியை ஒத்தையில் விட மனமில்லாமல் மாரியம்மாளும் உடன் கிளம்பினார்.‌

மாமனிடம் இவர்களை அழைத்துக்கொண்டு கிளம்பச் சொல்லிவிட்டு, காரை அனுப்புவதாக, வந்த காரிலேயே வேந்தன் மண்டபம் கிளம்பினான். 

மாரியம்மாள் தன் பேத்திக்கு தேவையானதை மூட்டை கட்ட ஆரம்பிக்க, கணபதி முற்றிலுமாக மறுத்துவிட்டார்.

மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது. இந்நேரம் பெண் வீட்டிற்கு மறு வீடு சென்றிருக்க வேண்டும்.‌ அப்பொழுதுதான்‌ மீண்டும் மாப்பிள்ளை வீடு திரும்ப சரியாக இருக்கும். ஆனால் எல்லாரும் அங்குதான் இருந்தனர். 

நடந்த கலவரத்தில் எதுவும் பேசமுடியாமல், தாமரை முகம் சுரத்தையின்றி இருக்க, தங்கை முகம் அதற்கு மேல். 

“இங்க என்ன நடந்துட்டுருக்கு. நீ எங்கடா போன?” தனக்குள் இருந்த ஆதங்கத்தை தாமரை ஆத்திரமாக வந்ததும் வராததுமாக பெரிய மகனிடம் காட்ட,

“என்ன நடந்தது வேந்தா?” மகனைப் பற்றி அறிந்தவராக அம்மையப்பன் விசாரிக்க, 

“அத அப்பறம் பேசிக்கலாம்ப்பா. ஏன் இன்னும் கெளம்பல?” என, செழியனைப் பார்த்தான். அண்ணனிடம் வந்தவன், “இன்னைக்கி மறு வீடு அனுப்பமாட்டோம்கறாங்கண்ணா.” தாழ்ந்த குரலில் சொல்ல, 

“ஏன்?”

“மொத நாளே பிரச்சினை அது இதுன்னு ஆனதால அவங்க குலசாமிக்கு நாளைக்கு பொங்கல் வைக்கணுமாம். மூனாம் நாள் வந்து அழச்சுட்டு போகச் சொல்றாங்க” என்றான் மெதுவாக. 

தங்கையைப் பார்க்க கண்கள் சிவந்து ஈரப்படலம் தென்பட, அழுகை வருவதற்கான அறிக்கை வாசித்தன துடித்த உதடுகள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top