“என்ன தேடுற?”
“….”
“சொன்னா நானும் தேடித்தருவேன்ல.”
“…”
‘இப்ப எதுக்கு மூஞ்சியத் தூக்கி மொகட்டுல வச்சுருக்காளோ தெரியலையே?’ வாய்விட்டு கேட்க முடியாமல் மனதிற்குள் தான் கேட்டுக் கொண்டார்.
“தாமரை!”
“இப்ப என்ன வேணும் ஒங்களுக்கு. ஆனிமாச நச்சுத்தூரல் மாதிரி சும்மா நசநசன்ட்டு. ஒங்க வேலையப் பாருங்க.” எரிந்து விழ,
“உம்ம சோலிக்கழுதையப் பாரும்ங்கற.” எடக்காக கேட்டாலும், யோசனையோடு கை வெற்றிலை போடுவதில் கவனமாக இருந்தது.
திரும்பிப்பார்த்து முறைத்தவர், “அதான் வெத்தலப்பொட்டிய எடுத்தாச்சுல. அதத்தடவற வேலைய மட்டும் பாருங்க.“
கோபமாக கூறிவிட்டு, மீண்டும் தேடுதல் வேட்டை நடத்த, அம்மையப்பனுக்கு சிரிப்பு வந்தது. அவர் வெற்றிலை போடுவதை எப்பொழுதும், “பொண்டாட்டியக் கூட இப்படி தடவினதில்ல” என கிண்டல் செய்பவர் தான். இன்று கோபமாகச் சொல்கிறார்.
இரவு சாப்பாட்டிற்கு பிறகு வெற்றிலை போடுவது அவரது அன்றாடப் பழக்கம். அவரது அப்பாவிடமிருந்து தொற்றிக் கொண்டது. இன்று பேச வேண்டியிருந்ததால், பேசிமுடித்து படுக்கைக்கு வந்தவர் வெற்றிலைப் பெட்டியை எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டார். பின்னாலே வந்த தாமரை வந்ததிலிருந்து எதையோ குடைந்து குடைந்து தேடுகிறார். எதை என்றுதான் தெரியவில்லை. பலமுறை கேட்டும் பதிலில்லை.
கொட்டைப்பாக்கை எடுத்து வாயில் போட்டு மென்று கொண்டே, அந்த துவர்ப்பிற்கு பல் ஈர்கள் மெதுவாக இறுக்கம் கொடுக்க, அந்த துவர்ப்பை ருசித்தபடியே, ஒவ்வொரு வெற்றிலையாக எடுத்து, செல்லப்பிராணியை தடவிக் கொடுப்பது போல, தொடை மீது வைத்து, கைலியில் முன்னும் பின்னுமாகத் துடைத்து, வெற்றிலைக்கு வலிக்குமோவென நாசுக்காக நடுநரம்பை கிழித்து எடுத்துவிட்டு, வெற்றிலையின் பின்பக்கமாக ராமர் அணிலுக்கு கோடு போட்டதுபோல சுண்ணாம்பைத்தடவி, நாதஸ்வர சீவாளி அளவிற்கு சுருட்டி வாயில் போட்டு மென்று கொண்டே, மனைவி மீதுதான் பார்வையை ஓட்டினார். இன்னும் தேடுதல் படலம் முடியவில்லை தாமரைக்கு.
“ஏன்டி… சொல்லப் போறீயா இல்லயா? கெடைக்கலைனா விடே. காலையில தேடிக்கலாம். இப்ப எதுக்குனே தெரியாம சிடுசிடுனு வேற இருக்க. அதுக்குதான் எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்யாத. பாப்பாகிட்டயும் வேலவாங்கிப் பழகுனு சொல்றே. கல்யாணம் மட்டும் பண்ணனும்கற. வேல பழக்க மாட்டேங்கிற.”
“போற வீட்ல போயி எப்படினாலும் பாத்துதானே ஆகணும். எம்பிள்ள அதெல்லாம் சூட்டிகையா இருப்பா. என்ன இருந்து என்னத்துக்கு ஆகுது. பொட்டச்சிகளுக்கு மரியாதை எங்க கெடைக்குது?”
“இப்ப ஒம்மரியாதைக்கு என்ன கொறச்சல் வந்துச்சாம். என்னதான்டி வேணும்?” குரல் சற்று எரிச்சலைக்காட்ட,
“இனிமே எனக்கு என்ன வேணும். குமரில்லாம புருஷங்கட்டியாச்சு. மலடில்லாம பிள்ளையப் பெத்தாச்சு. வெந்ததத் திண்ணுட்டு விதி வந்தா போக வேண்டியதுதான?” அலுப்பும் சலிப்புமாய் வார்த்தைகள் வந்து விழ,
“இப்ப எதுக்குடி பெரிய பேச்செல்லாம் பேசுற” சட்டென குரல் தணிந்தாலும், ‘இப்ப என்ன சொன்னோம்னு இவ வாட்டி வளவெடுக்குறானு தெரியலையே?’ புரியாமல் மண்டை காய்ந்தது அம்மையப்பனுக்கு.
“வர வர எதுக்கெடுத்தாலும் கோவப்படுற. எதுக்குன்னு தான் தெரியமாட்டேங்குது.”
“வயசாகாதுல, அப்படித்தான் தெரியும்.”
“ஏன்டீ! இப்பதான் உன் சின்னமகன் உன்னைய பெரியவனுக்கு அக்கா மாதிரி இருக்கேனு சொன்னான். பெட்ரூமுக்குள்ள வர்றதுக்குள்ள வயசாகிடுச்சா?”
மேஜை, அலமாரி என எல்லா இடமும் தேடிவிட்டு, கட்டிலில் வந்து தலையணையை எடுத்துப் பார்க்க வந்தவரை, கையைப் பிடித்துக் கொண்டார்.
“என்ன தேடுற சொல்லு” விடாப்பிடியாகக் கேட்க,
“பீரோ சாவியத்தான் தேடுறே. கெரகம் எங்க வச்சேனு தெரியல.”
“வச்ச எடத்துல தேடுனாத்தானே கெடைக்கும்” சிரித்தவாறே இடுப்பை நோக்கி கையைக் கொண்டு போக, கையைத்தட்டிவிட்டு துள்ளி விலகினார்.
“வயசாகுதுனு சொன்ன. சின்னமனூர் கெண்டையாட்டம் துள்ற.” பளிச்சென சிரிக்க,
“நெனப்பு போகுதுபாரு மனுஷனுக்கு.”
“உம்மகன் சொன்னது சரித்தான்டி. மூனு பிள்ளைகளப் பெத்தும் இன்னும் கூச்சம் போகுதா பாரு” வாய்விட்டு சிரிக்க,
“பிள்ள இல்லாத வீட்லதான் கெழவன் துள்ளணும். காளையும், கண்ணுக்குட்டியுமா பிள்ளைகள வீட்ல வச்சுக்கிட்டு துள்ளக்கூடாது. மானம் ரோஷம் தான் இல்ல. கூச்சமாவது இருந்துட்டுப் போகட்டுமே.”
“பொண்டாட்டி இப்படி சிக்குனு கட்டுக்குழையாம இருந்தா எந்த வயசுலயும் ஆம்பள துள்ளலாம். ஆனா… எதுக்கு இப்ப இந்த புலம்பல்னுதான் வெளங்கல.”
“எப்படி வெளங்கும். கூறுகெட்டவதான நானு. பிள்ளைக முன்னாடி எங்குடும்பத்த தானே ஒசத்திப் பேசுனீங்க?” என கண்கலங்க, சட்டென பல்பு எரிந்தது அம்மையப்பனுக்கு.
‘இவ அம்மாவையும், தம்பியையும் சொன்னதுக்கா இந்தக் காட்டு காட்டுறா? உண்மையத்தானே சொன்னேன். இவளே அதைத்தானே அடிக்கடி சொல்லுவா. எங்க அம்மாவாலதான் எந்தம்பி வாழ்க்கை போச்சுனு. வெளிய சொல்லும் போது சாதாரணமாத்தானே இருந்தா’ என நொந்து கொண்டவர்,
“வர வர சின்னபிள்ளையாகிட்டே போற தாமரை. இதுக்கா மூஞ்சியத் தூக்கி வச்சுக்குவ.”
“புள்ளைக முன்னாடி நீங்களே எங்குடும்பத்தப் பத்தி சொல்லிக்காட்டினா, நாளைக்கி ஏதாவது ஒன்னுனா அதுகளும் என்னை சொல்லிக் காட்டுங்கள்ல. என்ன பண்றது, எந்தலையெழுத்து. கூடப் பொறந்ததுக ரெண்டுக்கும் அமஞ்சது சரியில்லாம அலக்கழிஞ்ச பொழப்பாப் போச்சு.”
கட்டிலில் அமர்ந்து வலது காலைத்தூக்கி குத்துக்காலிட்டு, முழங்கையை ஊன்றி தலையில் கைவைத்துக் கொண்டு, இடக்கையால் முந்தானை எடுத்து கண்ணைத் துடைக்க,
‘ஆத்தாடியோவ்… எங்கேருந்து பிரச்சினைய இவ எங்க கொண்டு போறா. எப்படித்தான் இந்த பொம்பளைங்க ஈரப் பேனாக்கி, பேன பெருச்சாளி ஆக்குறாங்களோ தெரியலையே. சின்ன விஷயம். அதுக்கு இத்தன அக்கப்போரு’ என உள்ளுக்குள் ஆத்துப்போனார் அம்மையப்பன்.
இன்று தம்பி வந்த நிலமை இன்னும் தாமரைக்கு வயது வந்த பிள்ளைகள் முன் தலைகுனிவாகப் போய்விட்டது. என்றாவது தன் தம்பியை மரியாதையில்லாமல் பேசி விடுவார்களோ என்ற பயம் அவருக்குள் எப்பொழுதும் உண்டு. பிறந்த வீட்டைக் கொண்டுதானே பெண்களுக்கு வாழவந்த வீட்டில் மரியாதை.
எப்பொழுதும் ஆண்களுக்கு சின்ன விஷயமாகத் தெரியும் விஷயம், பெண்களுக்கு அதுவும் பிறந்த வீட்டைப்பற்றி பேசும்போது எப்படி திசை திரும்பும் என்பது எத்தனை வருஷமானாலும் இந்த ஆண்களுக்கு புரிவதேயில்லல.
அதுவும் தாமரையின் இரண்டு உடன் பிறப்புகளின் வாழ்க்கையும் சரியில்லாமல் போக, பிறந்த வீட்டு சொந்தம் மதிப்பாக இல்லையே என்ற ஆதங்கம் எத்தனை வயதானாலும் பெண்களுக்கு விட்டுப்போவதில்லை. குடும்பமே உலகம் என பனித்துளிக்குள் பிரபஞ்சத்தை அடக்கிப் பார்க்கும் பார்வை பெண்கள் பார்வை.
‘இப்ப இவள மலையெறக்கணுமே. இல்லைனா ஒரு வாரத்துக்காவது இதவச்சு செய்வாளே. முன்னமாதிரி இல்ல. சட்டு சட்டுனு கோவப்படுறா. முனுக்குனு எதுகெடுத்தாலும் கண்ணக் கசக்குறா’ என யோசனை ஓடியது. மனைவி மீண்டும் சிறுபிள்ளையாகிக் கொண்டிருக்கிறாள் என்பது புரிகிறது. அதனால் தான் இத்தனை சிடுசிடுப்பு, படபடப்பு.
சிறிது நாட்களாகவே பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றி அதிகமாக புலம்புகிறார். பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமையவேண்டும் என சாலையோரம் மைல் கல்லைக் கண்டால் கூட கடவுளாக கையெடுக்கிறார்.
இன்று சுய சிந்தனை, சுய சம்பாத்தியம், சுய கௌரவமென தன்னிச்சையாக இயங்கத் துடிக்கும் இன்றைய தலைமுறையினரிடையே, முப்பது நாள், ஆறுமாதம், ஒருவருடமென திருமண பந்தத்தை நாள் கணக்கில் கொண்டாடி மகிழும் தலைமுறையினரைப் பார்க்கும் பொழுது கொஞ்சமென நிறையவே பக்குனு இருக்கு.
இன்று திருமணம் சொர்க்கத்திலோ, மேட்ரிமோனியிலோ, அல்லது கல்யாண மாலையிலோ எதில் நிச்சயக்கப்பட்டாலும் சரி, ஆயிரங்காலத்துப் பயிர் வேர்விட்டு, விளைச்சல் ஆரம்பிக்கும் முன்னே அவசர அவசரமாக அறுவடை செய்யப்படுகிறது.
அதிலும் தாமரையின் தம்பி, தங்கை இருவரின் திருமண வாழ்க்கையும் சோபிக்காமல் போனதில், தாமரைக்கு உள்ளூர கலக்கமே. இன்று மகளின் திருமணப் பேச்சையெடுக்க, மகளுக்கு நல்ல துணை அமைய வேண்டுமே என்ற பதட்டத்தில்தான் இவள் இத்தனை தடுமாறுகிறாள் எனப் புரிந்தது. சல்லடைபோட்டு அலசி தேர்ந்தெடுத்து, சாதகம், நாள், நட்சத்திரம் பார்த்து, ஊர் மெச்ச கல்யாணம் செய்து வைப்பதும் இடையில் சோடை போவதும் உண்டு. கடமை முடிந்தால் போதுமென தள்ளிவிடுவது கடைசிவரை கொண்டு செலுத்துவதும் உண்டு.
மனைவியின் மனநிலை புரிய, தாமரையின் தோள் பிடித்து தன் பக்கமாகத் திருப்பியவர், இடுப்பில் கை வைக்கப் போக, சட்டென மீண்டும் தட்டிவிட,
“இருடி… இவ ஒருத்தி “ என சடைத்துக்கொண்டு, சாவியை எடுத்துக் கொடுத்தார்.
“இங்கதான் இருந்துச்சா. அதுக்குதான் கையக் கொண்டுவந்தீங்களா?” என அசடு வழிய சிரிக்க,
“இப்ப தெரியுதா யாரு துள்றதுனு. இந்த சிரிப்புலதான்டி கவுந்துட்டே. கே.ஆர்.விஜயா மாதிரி பளிச்சுன்னு சிரிக்கவும்தான் கருப்பா இருந்தாலும் அழகு கருப்புனு மயங்கிட்டே?” அம்மையப்பனின் சீண்டல் பேச்சில்,
“க்க்கும்… ஏன், எவளாவது வெள்ளத் தோலுக்காரியப் பாத்துக் கட்டவேண்டியதுதான. நானா வலியவந்து கட்டுனா என்னத்தான் கட்டணும்னு குறுக்கால விழுந்து மரிச்சேன்” நொடித்து எழுந்து கொண்டவரை, கையை விடாமல் பிடித்துக் கொண்டே,
“எதுக்கு சாவியத் தேடுன?”
“நைட்டி எடுக்கத்தான்.சேலைய மாத்த.”
“அப்பறம் மாத்திக்கலாம்.” குரலும், பார்வையும் மாற,
“வெத்தலைய தடவி முடுச்சுட்டீர்ல. அப்படியே படும்” என்றார் சற்றே மலையிறங்கி.
“ஏன்டி, அதென்ன உனக்கு சக்களாத்தியா?”
“மொத அதத்தானே தடவறீரு.”
“இப்ப என்ன உன்னையும் தடவிட்டாப் போச்சு.”
“தள்ளிப் போரும். பிள்ளைக்கி மாப்பிள்ள பேசிட்டு, பண்ற வேலையா இது?”
“பிள்ளைக்கி மாப்ள பாத்தாலும், என்னைக்கும் நான் உனக்கு மாப்ளதான்டி.”
“மீச நரச்சாலும் ஆச நரைக்குதா பாரும் உமக்கு” என்றவர் பேச்சில் மெள்ள நாணம் எட்டிப்பார்க்க, அம்மையப்பன் கைகள் தன்னால் நரைகலந்த மீசையை நீவ, வந்த சிரிப்பை உதட்டுக்குள் மறைத்தார் தாமரை.
பசுமஞ்சள் முகத்தில் மின்ன, காதோரம் நரைத்த முடிகளும் பொன்மஞ்சள்பூசி மின்ன, சிவப்புக்கல்லும் வெள்ளைக் கல்லும் கலந்த விசிறித்தோடு காதில் மின்ன, மூன்று முத்துக்கல் தொங்கிய கோசு மூக்குத்தி மூக்கில் மின்னி பேரிளம்பெண்ணின் அழகை இன்னும் தூக்கிப் பிடிக்க, தலையில் சொருகியிருந்த நாலுகண்ணி மல்லிகைப் பூ மலர்ந்து சிரிக்க, தனது கருப்பழகியின் கள்ளச்சிரிப்பை கண்டு கொண்டவர், அடுத்து அவருக்கு நைட்டி மாற்றும் அவகாசத்தைத் தரவில்லை. வெற்றிலைக்கு புகையிலையாக சுருட்டி போட்டுக்கொண்டார்.
மூனு முழம் மல்லியப்பூ…
என்னை முட்ட கண்ணால் பாக்குதடி…
முட்ட கண்ணு மல்லியப்பூ…
என்ன முட்ட சொல்லி கேக்குதடி…
மீனாட்சி பல் வரிசை…
அதுதாண்டி சீர்வரிசை…
பொண்டாட்டி முத்து முகம்…
அதுதாண்டி சொத்து சுகம்…
******
“திவிக்குட்டி.”
“எங்கிட்ட பேசாதீங்க மாமா.”
“சாரி பாப்பா. நேத்து கொஞ்சம் ஓவராயிருச்சு. இனிமே அளவோட வச்சுக்கறேன்.”
“ஒங்க பேச்ச ஓடுற தண்ணியிலதான் எழுதணும். இப்பவும் அளவோடு வச்சுக்கறேன்னு சொல்றீங்களே ஒழிய, விட்டுர்றேனு சொல்லமாட்டேங்கறீங்க. உங்க ஒடம்புதான் மாமா கெடுது.” மாமன் மீதுள்ள அக்கறையை கோபமாக வெளிக்காட்டினாள் திவ்யா.
காலையில் எழுந்து குளித்துவிட்டு வெள்ளை வேட்டி சகிதம் பளிச்சென வெளிவந்த மாமனைப் பார்த்து, திவ்யா சிறுபிள்ளையாய் முகம் திருப்ப, அக்கா மகளை சமாதானப்படுத்த முயற்சி செய்கிறார் கணபதி. பெரும்பாலும் அக்கா வீடு வருவதாக இருந்தால் அளவோடுதான் வைத்துக் கொள்வார். நேற்று சற்று நிதானம் தவறிவிட்டார்.
பெண் பிள்ளைகளுக்கு தாய்மாமன்கள் எப்பொழுதும் ஸ்பெஷல் தான். மடியிலமர்த்தி மொட்டையடித்து காது குத்துவதில் தொடங்கி, மாராப்பு வாங்கிக் கொடுத்து, குச்சுகட்டி உட்கார வைத்து, மணமேடையில் மணமாலையெடுத்துக் கொடுப்பது வரை நீளும் உறவு, அதன் பிறகும் தன் பிள்ளைகளுக்கு தாய்மாமன் உறவாக தன் அண்ணன், தம்பிகளை தேடுவதில் மீண்டும் உயிர் பெறும். தொப்புள்கொடி உறவு போல இந்த தாய்மாமன் உறவு.
“சாப்ட்டு கெளம்பு. நீ சொன்னா மட்டும் கேட்ருவானா என்ன?” தாமரையும் முகம் திருப்ப,
“அக்கா… காபி கொடு. நாம்போயி பாப்பாவ பஸ் ஏத்திட்டு வர்றே.” என்றார் எதையும் கண்டுகொள்ளாமல்.
“நம்ம சொல்றதெல்லாம் காதுல ஏறாது.” புலம்பிக் கொண்டே தம்பிக்கு காபி எடுக்கச் சென்றார்.
அதற்குள் அம்மையப்பனும், மகன்களும் வர அவர்களுக்கும் எடுத்துவந்தார்.
காஃபி குடித்துக் கொண்டே, “நேத்து பஸ்ல என்ன பிரச்சினை” என மகனிடம் கேட்க,
“உங்களுக்கு யாருப்பா சொன்னது?” என்றான்.
“பால்ராஜ்தான் தம்பிகிட்ட சொல்லுங்கண்ணே. நம்ப பஸ்னு தெரியாம நடந்துருச்சுனு ஃபோனப் போட்டு கதறுறானே.”
“அதான் வீடியோவே வந்துச்சே. நேத்து நீங்க வரும்போது அதத்தான் பாத்திட்டிருந்தேன்.” திவ்யாவும் கூற,
“என்ன வீடியோ திவ்யா. ஏன் எங்கிட்ட சொல்லல?” தாமரை உடனே பதற,
“இதுக்குதான் சொல்லல. உடனே டென்ஷன் ஆவீங்க. அண்ணனே சொல்வாங்கனு நெனச்சேம்மா.”
“தாமரை… பெருசா ஒன்னுமில்ல. உடனே பதறாத. செழியா, திவ்யாவ விட்டுட்டு வாடா” என மனைவியை சாந்தப்படுத்திவிட்டு, சின்ன மகனை அனுப்பினார். செழியன் வண்டியில் தங்கையை கல்லூரியில் விட்டுவர கிளம்பினான்.
“தருதலைய பிள்ளையாப் பெத்து வச்சுட்டு, மகனுக்கு ஏன்டுக்கிட்டு நம்ம பஸ்ஸ கல்ல விட்டு எரியறான்ப்பா.”
“அவனெல்லாம் சும்மா விடக்கூடாது மாமா.” கணபதி எகிற,
“இதோட விடுங்க, தொலஞ்சு போகட்டும். நம்ப பஸ் கம்பெனி பேருதான் கெட்டுப்போகும். அவனும் தெரியாம நடந்துருச்சு. தேர்தல் நேரத்துல பெருசு பண்ணாதீங்கனு கேட்டுக்கிட்டான்” என மகனையும், மச்சானையும் சமாதானப்படுத்தினார்.
“ஏன்டா, பொம்பளப்புள்ள வெவகாரமா?”
“ஆமாம்மா.”
“அவிங்கள எல்லாம் வெட்டுக்கட்டையில வச்சு வெட்டணும்டா.” ஏதோ பஸ்ஸில் பிள்ளையிடம் வம்பு பண்ணியிருக்கிறான் என்று மட்டும் இவர்களுக்கு புரிந்தது.
முன்தினம் இவர்களது பேருந்து வாடிப்பட்டி தாண்டி மறிக்கப்பட, தூரத்திலேயே பேருந்தை ஓட்டுனர் நிறுத்தியும், பறந்து வந்த ஒரு கல் பஸ்ஸின் இடப்பக்க கண்ணாடியைப் பதம் பார்த்தது. ஃபைபர் கண்ணாடி என்பதால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
ஆனால் பயணிகள் பதட்டமாயினர். அவசரமாக அடித்துப் பிடித்து இறங்க முற்பட, சூழ்நிலை புரிய, அவசர வழியையும் திறந்துவிட்டான் வேந்தன். அதற்குள் குழப்பமும், சலசலப்புமாக அந்த இடமே கலவரமாக, யாரோ காவல்துறைக்கும் அழைத்துவிட்டனர். வழியில் சென்ற சில வண்டிகளும் நிறுத்தி விசாரிக்க,
“டேய்… டேய்… நிறுத்துங்கடா” என ஒரு வெள்ளை வேட்டி சட்டை அவர்களுக்கு முன் ஓடிவந்து அடுத்த கல் எரிவதற்குள் இரண்டு கைவிரித்து மறித்தது.
“ஏம்ப்பா மறிக்கற. இந்த வண்டிக்காரன் தான் என்னைய அடிச்சான்” என அந்த அரைவேக்காடு துள்ள,
“இது நம்ம அம்மையப்பன் வண்டிடா. நாளைக்கு எப்படி அந்த மாப்ள மூஞ்சில முழிப்பேன். உன்னைய அடிச்சது கண்டக்டர் தானடா. அவன கவனிச்சுக்கலாம். வண்டிய எதுவும் பண்ணிறாதீங்க” என தனது உத்தமபுத்திரன் மகனிடமும் அவனது கூட்டாளிகளிடமும் சொல்லிவிட்டு பஸ்ஸை நோக்கி வந்தார்.
மகனை இரத்த காயத்துடன் பார்க்கவும் தாங்கவில்லை அந்தப் பஞ்சாயத்து தலைவருக்கு. “நம்ம மகன் மேலயே கைய வச்சுருக்காய்ங்க. அவிங்கள சும்மாவிட்டா நாளைக்கி உனக்கென்ன மரியாதை” என வீட்டம்மா வேப்பிலையடிக்க, தனது கௌரவத்தை தூக்கி நிறுத்த, பேருந்தை மறிக்க வந்துவிட்டார். விநாயகம் பஸ் எனத் தெரிய சாதிப்பாசம் குறுக்கே வந்தது.
மகனை சமாதானப்படுத்திவிட்டு, கண்டக்டரை ஒரு கை பார்க்கலாம் என வேகமாக பேருந்தை நோக்கி வந்தவர், கண்டக்டர் உடையில் இறங்கியவனைப் பார்த்தவர் நடை சட்டென நிதானித்தது.
‘வேந்தனா?’ என ஒரு நிமிடம் உள்ளுக்குள் அதிர்ந்தவர்,
“மன்னிச்சுருங்க தம்பி. நம்ப பஸ்னு சொல்லங்குள்ள எரிஞ்சுட்டாய்ங்க?” அரசியல்வாதியாய் கை குவிக்க,
“என்னண்ணே… பொடிப்பைய பேச்சக்கேட்டு, இந்த நேரத்துல இப்படி பண்றீங்க. இங்க பாருங்க எத்தனபேரு வீடியோ எடுக்குறாங்க. உங்க கட்சி பேரு கெட்டுப் போகாதா. மேலிடத்துக்கு என்ன பதில் சொல்வீங்க?” என சாடையாக மிரட்ட, அவரது அரசியல் அஸ்த்திவாரம் ஆட்டம் கண்டது அப்பட்டமாக அவர் கண்களில் தெரிந்தது. கூட்டத்தைத் திரும்பிப் பார்த்தார். எல்லோர் கையிலும் கைபேசி. அதுவரை சும்மா இருந்தவர்கள் கூட வேந்தன் சொன்னதைக் கேட்டு வீடியோ எடுக்க ஆரம்பித்தனர். அதுவும் தேர்தல் சமயத்தில் செம கண்டென்ட்டாச்சே யூ ட்யூபர்சுக்கு.
“தம்பி… நானே சரிபண்ணித் தர்றேன் தம்பி. இத பெருசு பண்ணாதீங்க.”
“அத நீங்க யோசிக்கலயேண்ணே. உங்க மகன் பண்ண காரியத்துக்கு இந்தளவோட விட்டதே பெருசு. இப்படியே போனான்னா ஒரு நாள் இல்லாட்டி ஒருநாள் போக்சோவ்ல உள்ள போயிருவான். தட்டி வைங்க. வீட்டுக்கு அடங்காத பிள்ளைய ஊருதான் அடக்கும்.”
“எங்க தம்பி… அதவிடுங்க. ரெண்டு நாள்ல நம்ம கட்சி மீட்டிங் இருக்கு. நீங்களாவது வாங்க. அப்பா என்னைக்குமே வரமாட்டாரு. நீங்கெல்லாம் வந்தாதான நம்ப சாதி ஓட்டு நமக்கு விழும். கணபதி வந்துருவாப்ள.” கிடைத்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக்க முயற்சி பண்ண,
“நீங்க பாத்து பண்ணுங்கண்ணே. அப்பாவுக்கு இதெல்லாம் பிடிக்காது.”
“நீங்களும் அம்மையப்பன் மாதிரியே பேசுறீங்களே. வரலைனா பரவாயில்ல. தேர்தல் நிதி… மாமாகிட்ட பேசிட்டே…” என இழுக்க, இவர் எங்கு சுற்றி எங்கு வருகிறார் எனப் புரிந்தது. சில சமயங்களில் இந்த மாதிரி அரசியல் முதலைகளின் தயவும் தேவைப்படுகிறதே.
இருந்தாலும் தனது பஸ் கம்பெனி மீது குறிப்பிட்ட கட்சி அடையாளமோ, சாதி சாயமோ பூசப்படுவதை இவனோ, இவன் அப்பாவோ என்றுமே விரும்பியதில்லை. கணபதிக்கு கொஞ்சம் சாதிப்பற்று அதிகம்.
“நானே கொடுத்து விடுறேண்ணே” என சொல்ல,
“சரி தம்பி… சரிதம்பி…” என கூழைக் கும்பிடு போட்டவர், “எல்லாம் ஏறுங்க. ஒன்னும் பிரச்சினை இல்ல. ஏதோ தெரியாம நடந்துருச்சு. மன்னிச்சுருங்க” என முத்திரை பதித்த அரசியல்வாதியாய் கூச்சமே இல்லாமல் எல்லோரிடமும் கையெடுத்துக் கும்பிட்டு பஸ்ஸில் அவரே அனைவரையும் ஏற்றிவிட்டார்.
அதற்குள் காவல்துறையும் வர, வேந்தனே பேசி சமாதானம் பண்ணி அனுப்பி வைத்தான்.
ஒருவழியாக வத்தலக்குண்டு வந்து சேர மதியத்திற்கு மேலாகிவிட்டது. சாப்பாட்டு நேரமும் தாண்டிவிட்டது. மதுரையில் காலையில் குடித்த டீதான். ஆட்களை இறக்கிவிட்டு ஓட்டுனரும், வேந்தனும் சாப்பிட்டு வர, அதற்குள் மாற்றிவிட ஆள்வர, அடுத்த கண்டக்டரை மாற்றிவிட்டு ஆஃபிஸ் வந்தான். இரவு வரை அங்குதான் மாமனும் அவனும் இருந்தனர்.
இரவு ஆம்னி பஸ்களின் பயண அட்டவணையை கவனித்துக் கொண்டிருக்கையில், அலைபேசி அழைத்தது.
“அண்ணே வந்து மாமாவ கூட்டிப்போங்க” என அழைக்க, ‘இவ்ளோ நேரம் இங்கதானே இருந்தாரு’ என காரை எடுத்துக் கொண்டு, டாஸ்மாக் பார் சென்றான்.
நிதானமில்லாமல் கணபதி, மேஜையில் கவிழ்ந்து கிடக்க, அவரை எழுப்பி, தோளில் போட்டு அணைத்துப் பிடித்து அழைத்து வந்தான்.
“நீங்களாவது சொல்லக் கூடாதா தம்பி. உங்கப்பா எவ்ளோ பெரிய மனுஷ. விநாயகம் பஸ்னா எப்படிப் பேரு. இப்படி குடிச்சுட்டு விழுந்து கெடந்தா நல்லாவா இருக்கு.” பார் ஓனர் அனுதாபம் தெரிவிக்க, அவரை முறைத்துப் பார்த்தான். பல்லைக் கடித்தவன்,
“நீங்க என்ன கோயிலா கட்டி வச்சுருக்கீங்க. விழுந்து சாமி கும்பிட. பார்வந்தா குடிச்சுட்டுதான் விழுவாங்க. அதுக்குதானே நடத்துறீங்க. உங்க வேலையமட்டும் பாருங்க” என அவரை கடிந்துவிட்டு, மாமனை காருக்கு அழைத்து வந்தான். தன்னால் தனது அக்கா மகனுக்கு அசிங்கம் என அந்த நிலையிலும் புரிய,
“எளா… மன்னிச்சர்ளா” என ஆரம்பித்தவர் தான் நேற்று வீடு வந்தும் விடவில்லை.
நடந்தவற்றைப் பேசிக் கொண்டிருக்க, அதற்குள் செழியனும் தங்கையை விட்டுவந்தான். சாப்பிட்டு ஆண்களும் கிளம்பினர்.
வீட்டு வேலைக்கு ஆள்வர, தாமரையும் அனைவரையும் அனுப்பிவிட்டு சற்று ஆசுவாசமாக அமர்ந்தார். எப்படியும் தானேதான் எல்லா வேலையும் இழுத்துப் போட்டு பார்ப்பாள் என மனைவியைப் பற்றி தெரிந்தவர், தாமரையைக் கேட்காமலே மேல் வேலைக்கு ஆள் ஏற்பாடு செய்துவிட்டார் அம்மையப்பன்.
******
“என்னக்கா அந்த நகைக்கடக்காரவுங்க நம்ம பத்மா சாதகம் செட்டாகலைனு சொல்லிட்டாங்களாமே?” இரண்டு தெரு தள்ளியிருக்கும் அக்கா வீட்டிற்கு வந்த தமிழ்ச்செல்வி தான் கேள்விப் பட்டதை அக்காவிடம் விசாரித்தார்.
உனக்கு யார் சொன்னது என்றெல்லாம் தங்கையிடம் செல்வராணி கேட்கவில்லை. மகன் விமல்தான் சொல்லியிருப்பான் எனத் தெரியுமே. அதை வேறு ஏன் கேட்டுக்கிட்டு என,
“ஆமா செல்வி. நாம பாத்துட்டுதான் சாதகம் கொடுத்தோம். அவங்க பாத்த எடத்துல பொருத்தமில்லைனு சொன்னாங்களாம். நமக்கென்ன வேற எடமா இல்ல. பாத்துக்கலாம்னு மாமா சொன்னாரு.” தங்கை தன் வாயைப் பிடுங்க வந்திருப்பது தெரிந்து மேலோட்டமாகவே விஷயத்தை சொன்னார் செல்வராணி.
“அதுசரி…பொம்பளப்பிள்ளைய வெளியேத்திட்டா, விமலுக்கும் அடுத்து முடிச்சர்லாம்ல.”
“பாக்கலாம் செல்வி. அவனுக்கென்ன இப்ப அவசரம்.” பட்டும் படாமல் தமிழ்ச்செல்வியின் அக்கா பேச,
“அக்கா… மங்காதான் உன் வீட்டு மருமக. விமலும் அதுல உறுதியா இருக்கான். கெழவி சேத்து வச்சுருக்கதெல்லாம் உம் மகனுக்கு தான். அதுவுமில்லாம இவள பெத்தவளப்பத்தி தெரிஞ்சு யாரு வெளிய இருந்து வருவா” என நொடிக்க,
‘அதுக்கு எம்மகன்தான் கெடச்சானா?’ மனதிற்குள் நினைத்தாலும், ‘எதற்கு இவளிடம் இதை இப்பவே பேச வேண்டும். நடக்கும் பொழுது பார்த்துக் கொள்ளலாம். முதலில் மகளுக்கு நல்ல இடம் அமைய வேண்டும். வர்ற இடமெல்லாம் இப்படியே தட்டி தட்டிப் போகுது’ என தங்கை பேச்சை கண்டு கொள்ளவில்லை. வீடு தேடிவந்த தங்கைக்கு காஃபி பலகாரம் கொடுத்து அனுப்பி வைத்தார்.
