“ஏன்டீ… எந்திரிச்சு யாருன்னு பாக்கமாட்டியா? எப்ப பாரு ஃபோனும் கையுமாவே ஒக்காந்துரு.”
அழைப்பு மணியடித்தும் இடத்தைவிட்டு அசையாமல் ஃபோன் பார்த்துக் கொண்டிருந்த மகளை காய்ந்துவிட்டு, கதவைத் திறந்தார் தாமரை.
“என்னடா இன்னைக்குமா?” இருவரும் நின்ற கோலத்தைப் பார்த்து கேட்க,
“இதென்னம்மா புதுசா. வாங்க… வந்து கதவத்திறந்து விடுங்க” என வேந்தன் அழைக்க, அவனுக்கு முன்னே சென்று, அறைக்கதவைத் திறந்துவிட, கைத்தாங்கலாக அழைத்துவந்த மாமனை கட்டிலில் உட்கார வைத்தான்.
“சாப்டானா டா?”
“அதெல்லாம் அங்கேயே சாப்பிட வச்சுத்தான் கூட்டிட்டு வந்தேம்மா” என்றவன்,
“நீங்க போங்கம்மா. நான் பாத்துக்கறேன்.”
அம்மாவை அனுப்பியவன், உள் பனியன் இருக்க, மாமனின் சட்டையைக் கழற்றினான். தன் மேல் சாய்த்துக் கொண்டு பின்பக்கமாக சட்டையை உருவி எடுக்க,
“இளா… மன்னிச்சர்ளா” நிதானமில்லாமல் குழற,
“தூங்குங்க மாமா” மெதுவாக கட்டிலில் சாய்த்துவிட்டு, வேட்டியை சரிபண்ணியவன், கால்களை நீட்டிவிட்டு நேராகப் படுக்கவைத்தான். ஏசியை போட்டுவிட்டவன், வெளியே வந்து கதவைச் சாத்தினான்.
அவர் போதையில் குழறளாக அழைத்தது, அவனது மொசக்குட்டி, காதோரம் போட்டிருந்த இரட்டைக் குடுமி துள்ள மழலையில், “எளா மாமா” என இவன்பின் சுற்றி வந்ததை நினைவூட்ட,
‘என்னடாயிது… என்னைக்குமில்லா திருநாளா இன்னைக்கினு பாத்து அவளச்சுத்தியே நெனப்பு போகுது. கண்ணில் பட்டதால் கருத்திலும் பதிகிறாள் போல’ என எண்ணிக்கொண்டான்.
மறுபடியும் எப்படி வீட்டுக்குப் போயிருப்பா. பஸ்லயா… பஸ்ஸ சரிபண்ணிருப்பானுகளா? இல்ல… மறுபடியும் அவனோட வண்டியிலயா என நினைக்க, என்னவோ மனதிற்கு அந்த இறுதி நினைப்பு ஒப்பவில்லை. காலையில் அவனோடு வண்டியில் சென்றதைப் பார்த்த பொழுதே சிறு பிள்ளையாய் மனம் முரண்டியதும் ஏனென்று புரியவில்லை.
‘அவ யார் கூட போனா உனக்கென்ன. இத்தன நாளா அவளப்பத்தி நெனச்சியா. இன்னைக்கி என்னமோ அவளப் பாத்ததும் திடீர்னு மாமன் மகமேல பாசம் பொத்துக்கிட்டு வருதோ’ என உள்ளுக்குள் யோசனை ஓடினாலும், அவளது நினைவை புறந்தள்ள முடியவில்லை.
காலையில ஒரு பாட்டு கேட்டோம்னா மோகினி ராகம் மாதிரி நம்மள விடாம புடிச்சுக்கும். அதோட பல்லவியே நாள் முழுக்க மண்டைக்குள்ள ஓடும் பாருங்க. நம்ம என்னதான் நெனச்சாலும் அத மாத்தமுடியாது. இப்ப அந்த நெலமைதான் இளவேந்தனுக்கும். அவனையறியாமலே காலையிலிருந்து அவளது நினைப்பு உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. சாதாரணமாக அவள் பஸ்ஸில் ஏறி இறங்கியிருந்தால் கூட மறந்திருப்பானோ என்னவோ. அசௌகரியத்தால் உடம்பு சரியில்லாமல் இடையில் இறங்கியதே அவனை மேலும் கவலை கொள்ளச் செய்தது. அவளது நினைவை தவிர்க்கும் வழி தெரியாமல் அவனது அறைக்குச் சென்று குளித்து உடை மாற்றிவந்தான். அதற்குள் தாமரை சாப்பாடு எடுத்துவைக்க,
“அப்பாவும், செழியனும் வந்துரட்டும்மா” என்றவன்,
டீபாய் மீது சம்மணமிட்டு அமர்ந்து ஃபோனை பார்த்துக் கொண்டிருந்த தங்கையிடம் வர,
“என்னண்ணே இன்னைக்குமா? இவருக்கு இதே பொழப்பாப் போச்சு.” தலையை நிமிர்த்தாமல் ஃபோனைப் பார்த்தவாறே சலித்துக் கொண்ட தங்கையிடம்,
“திவ்யா” என குரலை உயர்த்த, அண்ணனை நிமிர்ந்து பார்த்தவள்,
“உங்க ஆசை மாமன ஒன்னுஞ்சொல்லல. போதுமா?” என்றாள்.
“அப்ப உனக்கு யாராம். பெரியவங்கள மரியாதையா பேசு!” தங்கையை கண்டித்தவன்.
“நீ சாப்டயா? என,
“நீங்க மட்டும் அப்பாவும், உடன் பிறப்பும் வரட்டுன்றீங்க. நான் மட்டும் உங்கள விட்டுட்டு சாப்டுவேனா?” என சொல்லிக் கொண்டிருக்க, செழியனும், அம்மையப்பனும் உள்ளே வந்தனர்.
“சாயந்தரம் எதுவும் ஹெவியா மொக்கிருப்ப” என்றான்.
“அதேதான்டா… காலேஜ் விட்டு வந்ததும் சாயந்தரம் அங்கேயே உக்காந்து சாப்பிட்டா. இன்னும் எடத்தவிட்டு அசையல. எங்கருந்து செமிக்கும்.” ஒத்தாசைக்கு வராத மகளை பெரிய மகனிடம் அங்கலாய்த்துக் கொண்டே தாமரை அடுப்படிக்கும், சாப்பாட்டு மேஜைக்கும் ட்ரிப் அடித்துக் கொண்டிருந்தார்.
“பெரிய கிழக்குச்சீமை ராதிகா. சாப்பிடாம நாங்க வரட்டும்னு உக்காந்திருக்க போற. நீயாவது இவ்வளவு நேரம் சாப்பிடாம இருக்கறதாவது.” செழியன் வந்ததும் வராததுமாக தங்கையை தலையில் தட்டி வம்பிழுக்க,
“நீ கிழக்குச் சீமை விஜயகுமாரா இருந்தா, நானும் ராதிகாவா இருப்பேன்” என்றாள் தலையை தடவிக்கொண்டே.
“எதுக்கு, விட்டுக் கொடுத்துருண்ணேனு சென்டிமென்டா பேசி எல்லாத்தையும் புடுங்கிட்டுப் போறதுக்கா. அந்த ஈனாவானா நாங்க இல்ல.”
“நான் எதுக்கு உங்ககிட்ட கேக்கப்போறேன். நான் கேக்காமலே அப்பா கொடுக்கப்போறாரு. இல்லைனா வீட்டுக்கு நடுவுல கோட்டப் போட்டுறமாட்டோம்” என சட்டமாக சவடாலடிக்க,
“எந்திரிச்சு போயி அம்மாவுக்கு ஒத்தாச பண்ணுமா” என அம்மையப்பன் மகளைப் பணிக்க,
“இப்படி அன்பாச் சொன்னா கேக்கப் போறேன்” என அப்பாவிற்கு நல்ல பிள்ளையாக எழுந்து அடுக்களை சென்றாள்.
“இந்தப் பூனையும் பால் குடிக்குமாங்கற மாதிரி என்ன ஒரு லுக்கு பாருண்ணே” என்றவாறே செழியன் தனதறைக்கு சென்றான்.
அம்மையப்பன் தான் கொண்டுவந்த கைப் பையை மனைவியிடம் கொடுத்தவர் அறைக்குள் செல்ல, கணவர் பின்னாலே வந்த தாமரை, பையை இரும்புப் பெட்டிக்குள் வைத்துப் பூட்டிவிட்டு சாவியை இடுப்பில் சொருகிக் கொண்டு, அவருக்கு கைலியும், துண்டும் எடுத்து கட்டிலின் மீது வைத்துவிட்டு வெளியே வந்தார்.
அதற்குள் செழியனும் குளித்து உடை மாற்றிவந்தான்.
காலையில் ஆளுக்கொரு நேரமாக கிளம்பி விடுவதால் இரவு சாப்பாடு அனைவரும் வீடு திரும்பிய பின்னர்தான். பெரும்பாலும் இவர்கள் கடை அடைத்து வர பத்துமணியாகிவிடும்.
பலநாட்கள் வேந்தனும், கணபதியும் பெரியகுளத்திலேயே தங்கிக் கொள்வர். பெரியகுளம் தான் கணபதியின் பூர்வீகம். அம்மா இறந்தபிற்கு ஒண்டிக்கட்டையான தம்பியை ஒத்தையில் விட மனமில்லாமல் தேனிக்கு அழைத்துக் கொண்டார் தாமரை. இருந்தாலும் மாமனுக்கும், மருமகனுக்கும் காடாறு மாதம் நாடாறு மாதம்கற மாதிரி பெரியகுளம், தேனி எனத்தான் தங்கல் இருக்கும். இரவு இருவரும் பெரியகுளத்தில் தங்குவதாக இருந்தால் சாப்பாட்டை அவர்கள் பஸ்ஸிலேயே டிரைவரிடம் கொடுத்து விடுவார் தாமரை.
விநாயகம் பஸ் சர்வீஸ் கணபதியும், அம்மையப்பனும் கூட்டாக ஆரம்பித்தது. ஏற்கனவே விநாயகம் பெயரில் பஸ் பெர்மிட் கணபதியிடம் இருந்தது.
அம்மையப்பனோடு பிறந்தவர்கள் தம்பி இருவர். தம்பிகள் இருவரும் படித்து அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவிகளில் அமர்ந்துவிட, அவரின் அப்பாவிற்குப் பிறகு பாத்திரக்கடை இவர் பொறுப்பாகிவிட்டது. தம்பிகளுக்குண்டான பாகத்தை பணமாக கொடுத்துவிட்டு கடையை இவர் எடுத்துக் கொண்டார். அதுவரை வெண்கலப் பாத்திரக்கடையாக மட்டுமே இருந்தது. கால மாற்றத்திற்குத் தகுந்த மாதிரி எவர்சில்வர், ஹோம் அப்ளையன்சஸ் என வீட்டிற்குத் தேவையான அனைத்து எலக்ட்ரானிக் மற்றும் ஃபர்னிச்சர் பொருட்களோடு மூன்றுமாடிக்கு கடையை விரிவுபடுத்தினார்.
இளவேந்தனிடம் பஸ் சர்வீசை ஒப்படைத்தார். செழியன் படிப்பை முடிக்க, சின்ன மகனை தன்னோடு வைத்துக் கொண்டார்.
இளவேந்தனுக்கும் பஸ் சர்வீசில்தான் விருப்பம். பாத்திரக் கடையில் ஒரே இடத்தில் அமர்ந்து வியாபாரம் பண்ண அவனுக்கு பொறுமையில்லை. காலில் சக்கரம் கட்டியது போல் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும். சிறுவயதில் இருந்தே மாமன் கூடவே பஸ் ஆஃபிஸ் போகவர இருக்க, அங்கிருந்த லோட்மேன்கள், டிரைவர், கண்டக்டர் எல்லாம் சின்ன முதலாளி என விளையாட்டாக அழைக்க ஆரம்பித்து, இவன் வளர்ந்து பொறுப்பெடுக்க, மொதலாளி என்ற வார்த்தை அவனுக்கு நிலைத்துவிட்டது. அதில் அவனுக்கொரு தனி மயக்கம் என்றே சொல்லலாம்.
பனிரெண்டாவது முடித்ததிலிருந்தே பஸ் சர்வீசில் தனி கவனம் செலுத்த ஆரம்பித்தான். பயணிகள் சௌகர்யமும், பாதுகாப்பு மட்டுமே முக்கியம் என்பதில் முழு கவனம் வைத்தான்.
அதுவரை ரூட் பஸ் மட்டும்தான் ஓட்டிக் கொண்டிருந்தனர். வத்தலக்குண்டு தான் மையப்பகுதி என்பதால் அங்கிருந்தே மதுரை, திண்டுக்கல், உசிலம்பட்டி, தேனி, பெரியகுளம் என எல்லா வழித்தடங்களிலும் விநாயகம் பஸ் சர்வீஸ் உண்டு. இவன் வரவிற்குப் பின்தான் தேனி டூ சென்னை ஆம்னி பஸ் சர்வீஸ் தொடங்கினர்.
நேரமும் காலமும் கை கொடுக்க, கொக்குக்கு ஒன்றே குறி என்பது போல் முழுமூச்சாக இவன் காட்டிய ஈடுபாடும் கை கோர்க்க, இப்பொழுது ஸ்லீப்பர், செமி ஸ்லீப்பர், ஏசி, நான் ஏசி என பத்து ஆம்னி பஸ்கள் ஓடுகின்றன. ஐந்து பஸ்கள் குறிப்பிட்ட நேர இடை வெளியில் தேனியிலிருந்த கிளம்பினால், அதே மாதிரி சென்னையிலிருந்து ஐந்து பஸ்கள் கிளம்பும்.
பயணிகள் மட்டுமே தங்கள் விநாயகம் பஸ் கம்பெனிக்கு கொள்கை பரப்புச் செயலாளர்கள் என்ற கொள்கையில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவன். சிறு அசௌகர்யமும் தங்கள் பஸ்ஸில் வருபவர்களுக்கு ஏற்படக்கூடாதென முழு கவனம் வைத்திருப்பான்.
அடுத்து சென்னை டூ பெங்களூர், சென்னை டூ ஹைதரபாத் ரூட் பெர்மிட்டிற்கும் அப்ளை செய்திருக்கிறான். இந்த வருடத்திற்குள் வெளி மாநிலங்களில் சர்வீஸ் தொடங்குவதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்து கொண்டிருக்கிறான்.
ஆச்சி வீட்ல வளர்றது ஆடு மேய்க்கக் கூட உதவாதுன்னு ஒரு பழமொழி உண்டு. செல்லம் கொடுத்தே பேரம்பேத்திகளை வீணடித்துவிடுவர். அந்த வகையில் வேந்தன் பத்துவயதிலேயே பெற்றவர்களிடம் வந்துவிட்டதால் தப்பித்தான். என்ன ஒன்று படிப்பு சற்று அவனைப் போட்டுப்பார்த்தது.
பனிரெண்டாவது முடித்தவன் பெரியகுளத்திலேயே பேருக்கு ஒரு டிகிரி என கலைக்கல்லூரி சேர்ந்தான்.
கல்லூரி விடுமுறை நாட்களில் டிக்கெட் ஏஜென்டிலிருந்து, அனைத்து வேலைகளையும் பார்ப்பான். இருபது வயது முடிந்தால் தான் கனரக லைசென்ஸ் பெறமுடியும் என்பதால் ரூட் பஸ்களில் நடத்துனராகச் சென்றான். இருபது வயதில் கனரக லைசென்ஸ் வாங்கிக் கொண்டான். தனக்கடுத்து என் மருமகன் தான் இதற்கு முழு பொறுப்பு என கணபதியும் முழுதுமாக இளவேந்தனிடம் விட்டுவிட்டார். மகள் ஒருத்தி இருக்கிறாள் என்பதை மறந்தவராக.
அம்மையப்பனும் குளித்துவர, அனைவரும் அவரவரே பரிமாறிக்கொண்டு சாப்பிட அமர்ந்தனர். அரட்டையும் கேலியுமாக சாப்பாட்டு மேஜை அமர்க்களப்பட்டது. அம்மையப்பன் விரைவில் சாப்பிட்டு முடித்து சோஃபாவில் அமர்ந்துவிட்டார். அரட்டையடித்துக் கொண்டு பிள்ளைகள் சாப்பிட்டு முடிக்க நேரமாகும். கைபேசியிலேயே செய்தி சேனல் பக்கம் பார்வையை ஓட்டினார்.
சாப்பிட்டு முடிக்க, மகன்களை அழைத்தார்.
தாமரையும், திவ்யாவும் மேஜையை ஒதுங்க வைக்க,
“தாமரை நீயும் வா. பாப்பா எடுத்து வைக்கட்டும்” என மனைவியை அழைக்க, மூவரையும் அழைக்கிறார் என்றால் ஏதோ முக்கியமான விஷயமாகத்தான் இருக்கும் என கைகளை முந்தானையில் துடைத்துக் கொண்டே வந்தார்.
“திவிக்கு சாதகம் வந்திருக்கு. இந்த வருஷம் படிப்பு முடியுதுல. பாக்கலாம்னு இருக்கேன்” என நிறுத்திவிட்டு குடும்பத்தார் முகம் பார்த்தார் அவர்களது அபிப்ராயத்தை எதிர்பார்த்து. கை வேலை பார்த்தாலும் காதை மட்டும் திவ்யா இங்குதான் வைத்திருந்தாள்.
“அப்பா… அதுக்குள்ளயா? பாப்பா சின்னப் பொண்ணு.” என்றது சாட்சாத் சின்ன அண்ணன் செழியன் தான். இவன்தான் சற்றுமுன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது நடந்த கலாட்டாவில், “எரும மாடு மாதிரி வளந்திருக்க. இது கூடத் தெரியாதா?” என தங்கையை கடிந்தவன்.
“ஆமாடா… தொட்டில்ல போட்டு ஆட்டு. நானே எப்படா கடமைய முடிக்கலாம்னு இருக்கேன். பொண்ண கட்டிக்கொடுத்ததோடு வேல முடியாது. அதுக்கு பின்னாடிதான் எனக்கு வேலையே. ஒடம்புல ஆட ஓட தெம்பிருக்கும் போதே அம்புட்டையும் முடிக்கணும்டா. எனக்கும் வயசாகுதுல்ல.”
“ம்மோவ்… இப்பவும் அண்ணனுக்கு அக்கா மாதிரிதான் இருக்கீங்க. உங்களுக்கு வயசாகுதுன்னு சின்ன பிள்ளைக்கு கல்யாணம் பண்ண முடியாது.”
“டேய்… அவ இந்த வருஷம் காலேஜ் முடிக்கப்போறா. வயசு இருபத்தி ரெண்டு. எனக்கு இந்த வயசுல நீங்க ரெண்டு பேரும் பொறந்துட்டீங்க.”
“படிப்பு முடிக்கட்டும்மா. கொஞ்ச நாள் வேலைக்கும் போகட்டும். அப்பறம் பாக்கலாம்.”
“இவ சம்பாதிச்சு கொடுத்துதான் ஆகப் போகுதாக்கும்.”
“வேலைக்குப் போகச் சொல்றது சம்பாதிக்க இல்லம்மா. வெளி உலகம் தெரிஞ்சுக்க.”
“அவ தெரிஞ்சவரைக்கும் போதும். மீதியை கல்யாணம் பண்ணி தெரிஞ்சுக்கட்டும்” என சராசரி அன்னையாக அவர் காரியமே கண்ணாக,
“இது நல்ல எடமாத் தெரியுது செழியா. வலிய வரும்போது தட்டி கழிக்கக் கூடாது. அப்பறம் தட்டிக்கிட்டே போகும்னு சொல்லுவாங்க.”
“அப்படியெல்லாம் இல்லப்பா. இன்னைய நெலமைக்கு பொண்ணுகளுக்கு தான் கிராக்கி.”
“செழியா… இதென்ன பொருளாடா. கிராக்கி அது இதுன்னு சொல்ற.” தம்பியை அண்ணன்காரன் அதட்ட,
“அப்படி இல்லண்ணே” என செழியனுக்கு குரல் உள்வாங்க,
“நாமலே பேசினா எப்படி? மொதல்ல பாப்பாவுக்கு பிடிக்கணும். எடம் எப்படின்னு நாலு பக்கம் நாமளும் விசாரிக்கணும். அதுக்கெல்லாம் டைம் எடுக்கும் செழியா. இப்பதானே சாதகம் வர ஆரம்பிச்சிருக்கு. அதுக்குள்ள ஏன் கவலப்படுற. அப்பா அவசரப்பட மாட்டாரு.”
துள்ளிய தம்பியை சற்று அடக்கினான் வேந்தன். அப்பா சொன்னால் சரியாக இருக்கும் என்பது வேந்தனின் எண்ணம். இப்பவே தங்கைக்கு திருமணமா என இன்னும் அவளை சிறு பெண்ணாக நினைத்து வம்பிழுக்கும் சின்ன அண்ணனின் எண்ணம். பெண்பிள்ளை கடமையை தாங்கள் திடகாத்திரமாக இருக்கும் பொழுதே முடித்துவிட வேண்டும் என்பது பெற்றவர்கள் எண்ணம்.
“நம்ம சதாசிவம் மாமாதான் சொன்னாரு. அவரு சொன்னா நம்பி எறங்கலாம். மாப்பிள்ளைக்கு நிலக்கோட்டையாம். நகைக்கடை வச்சுருக்காங்களாம்” என சொல்ல தாமரை முகம் சட்டென கூம்பிப் போயிற்று. இவ்வளவு நேரமாக ஆர்வம் காட்டியவர்,
“அந்த ஊரா?” என இழுக்க,
“ஏன் ஊருக்கென்ன?”
“ஊர யார் சொன்னது. ஏற்கனவே ஒரு சம்பந்தம் பண்ணி ஓஹோன்னு போச்சு.”
“அதுக்கு ஊரு என்ன செய்யும்?”
“நமக்கும் அந்த ஊருக்கும் நல்ல ராசி. அதச் சொன்னேன்.” முகம் அதிருப்தி காட்ட,
“தாமரை, நடந்ததுல ரெண்டு பக்கமும் தப்பு இருக்கு. உண்மைய மறச்சு ஒன்னும் அவங்க பொண்ணு கொடுக்கல. எல்லாம் தெரிஞ்சுதான் நடந்துச்சு. அதுக்கு பின்னாடி நடந்ததுக்கெல்லாம் முழுக்க முழுக்க உங்க அம்மாவும், தம்பியும் மட்டும்தான் காரணம். ஆக மொத்தம் தப்பு ரெண்டு பக்கமும் தான். உன்னோட பொறந்த வீடுங்கறதுக்காக பூசி மொழுகக் கூடாது.”
“ஆனா வாழ்க்கை போனது என் தம்பிக்குதானே. நீங்களும் உங்க பங்காளி வீட்டுப் பிள்ளைனுதானே விட்டுக்கொடுக்காம பேசறீங்க?” சற்று முன் தன் தம்பியின் நிலவரம் பார்த்து உடன் பிறந்தவராக ஆற்றாமையில் தன் ஆதங்கத்தை கொட்டினார்.
“என்னடி கூறுகெட்டவளா இருக்க. அப்ப என் மச்சினன் மேல எனக்கு அக்கறயில்லயா?” அம்மையப்பன் குரல் உயர்த்த, பேச்சு எங்கோ திசை மாறுவதை உணர்ந்த வேந்தன்,
“அப்பா… பேசவேண்டியதப் பேசுங்க. மொதல்ல பாப்பாகிட்ட கேளுங்க.” பேச்சின் போக்கை திசைமாற்றிவிட்டான்.
“அவகிட்ட என்ன கேக்குறது. ஆம்பளைக நீங்க மூனு பேரும் பாத்து முடிவு பண்ணுங்க” என்றார் தாமரை.
“இதுதாம்மா தப்பு. பாப்பாவவிட ரெண்டு வருஷம்தான் மூத்தவன் செழியன். அவன முடிவெடுன்னு பொறுப்புக் கொடுக்கறீங்க. பாப்பா வாழ்க்கையில முடிவெடுக்க பாப்பாவுக்கு உரிமையிருக்குமா. அதுவுமில்லாம இது கல்யாணம். அந்தப்பிள்ள சம்மதமில்லாம பண்ணமுடியாது” என்று தங்கையின் சம்மதத்திற்கு இன்று முக்கியத்துவம் கொடுப்பவன், நாளை அவன் கல்யாணம் செய்யப் போகும் பெண்ணின் சம்மதம் கேட்பானா, இல்லை தன் உரிமையை நிலைநாட்டுவானா எனத் தெரியது.
“நீங்க ஆம்பளப் பையலுகடா. நாலு எடம் போறீங்க. வர்றீங்க. நாலு விஷயம் தெரியும்.”
“நானும் இப்ப அதுக்குதானம்மா அவ வேலைக்குப் போகட்டும்னு சொன்னேன்” என்றான் செழியன்.
“டேய்… மறுபடியும் நீங்க ரெண்டு பேரும் ஆரம்பிக்காதீங்க” என்றவன்,
“திவி இங்க வா!” என தங்கையை அழைத்தான். அவளும் வந்து அமைதியாக சின்ன அண்ணன் பக்கத்தில் அமர்ந்து கொண்டாள்.
வேந்தன் மாமன் வீட்டில் வளர்ந்ததாலோ என்னவோ, பெரியவன் என்ற பொறுப்பு வட்டத்திற்குள் இருக்க, தன்னை வம்பிழுத்து சிறு பிள்ளையாக பாவிக்கும் சின்ன அண்ணனிடம் திவ்யாவிற்கு ஒட்டுதல் அதிகம். அதுமட்டுமில்லாமல் தனக்கு விபரம் தெரிய, திடீரென எங்கிருந்தோ அண்ணன் என வந்தவன் பெற்றவர்களிடம் உரிமை கொண்டாடியது அந்த வயதில் அவளுக்குப் பிடிக்கவில்லை. வளற வளற இவனும் நம் அண்ணன் தான் என புரிய ஆரம்பித்தாலும், அவனிடம் மரியாதை தான் வந்தது.
“பேசுனதெல்லாம் கேட்டயில திவி. உன் முடிவு என்னம்மா?” என பெரியவன் நேரடியாகக் கேட்க, சிறு பெண் சங்கோஜப்பட்டாலும்,
“ண்ணா… எனக்கு நீங்க மூனுபேரும் பாத்து எது செஞ்சாலும் சம்மதம்தான்” என சொல்ல,
“அவ்ளோ தான்டா. நானும் மாமாகிட்ட நல்லா விசாரிச்சுட்டு சொல்றேன்” என அம்மையப்பன் சபை களைந்தது என எழுந்து கொண்டார். தாமரையும் உடன் சென்றுவிட்டார்.
“உனக்கு என்ன அவ்ளோ அவசரம். நா ஒனக்காக அவ்ளோ பேசுறே. நீ என்னடான்னா கேட்டதும் சரின்னு நிக்கிற. இன்னும் படிப்பு கூட முடியல.”
“டேய் அண்ணா…” பெற்றவர்கள் உள்ளே சென்றுவிட்ட தைரியத்தில் வழக்கமான மரியாதை வெளிவந்தது.
“அவசரம் எனக்கில்ல. உனக்கு.”
“எனக்கென்ன அவசரம்.”
“ஆர்டர் வைஸ் நீ செகண்ட்னாலும், கல்யாணத்துக்குனு பாத்தா சீனியாரிட்டி பிரகாரம் நீ லைன்ல லாஸ்ட்ல நிக்கிற. இப்பவே பாரு உனக்கு தலை ஏறிருச்சு” என அவனுக்கு சற்று ஏறு நெற்றி என்பதை சொல்லிக் காட்டினாள். அவனுக்கு ஏறு நெற்றி தான். ஆனால் தலை வழுக்கை கிடையாது. அதற்கே முடியை சற்று நீளமாக வளர்த்து முன்னால் விட்டிருப்பான்.
“அதுக்கு?”
“எனக்கு முடிச்சு, அதுக்கப்பறமா பெரிய அண்ணனுக்குப் பாத்து, உன் டெர்ம் வர்றதுக்குள்ள, உன் தலையை நெனச்சுப் பாத்தியா?
“என்னடி பயமுறுத்துற?” என்றான் கண்களை விரித்து.
“அப்ப… எனக்கு பொறுமையா பாக்கச் சொல்லவா. அண்ணனுக்கு முடிச்சுட்டு எனக்கு பாத்தாலும் ஓகே தான். அப்பவும் நீ கடைசிதான். எப்படி வசதி?” என புருவம் தூக்கி அண்ணனை பயமுறுத்த.
“அய்யய்யோ… இதுல இம்புட்டு வில்லங்கம் இருக்கா. மொதல்ல விடிஞ்சதும் நானே உன் சாதகத்த நாலு எடத்துல கொடுத்து வைக்கிறேன்” என அலறிய சின்ன அண்ணனைப் பார்த்து கலகலவென வாய்விட்டு சிரித்தாள்.
“அண்ணே… சின்ன வயசுலருந்து எது நமக்குப் பிடிக்கும்னு பாத்து பாத்து அப்பா செய்றாங்க. எனக்கு வச்ச கொழம்பு பிடிக்காதுனா கூட, எனக்குனு வேற சமச்சு வைக்கிற அம்மா, எனக்கு நல்லது கெட்டதுனா தாங்கிக்க தடிமாடாட்டம், சரி… சரி… மொறைக்காத, மலையாட்டம் ரெண்டு அண்ணனுங்க இருக்கீங்க. இப்ப அம்மா பேசும்போது கூட ஒன்னு கவனிச்சீங்களா? அப்பா சொன்னதும் ஆர்வம் காட்டின அதே அம்மாதான் ஊர்ப் பேரக் கேட்டதும் யோசிக்கணும்னு சொன்னாங்க. ஊருக்கே அவ்வளவு யோசிக்கிறாங்க. சீக்கிரம் கல்யாணம் முடிச்சு என்னய அனுப்பனும்னு சொல்றதும் அம்மாதான். எதாவது அவங்க மனசுக்கு ஒப்பலைனா மொதல்ல மறுப்பு தெரிவிக்கறதும் அம்மாவாத்தான் இருப்பாங்க. இத்தன பேரு என்னப் பத்தி மட்டுமே யோசிக்கும் போது, நான் எதுக்கு யோசிக்கணும். நீங்க நாலு பேரும் சேந்து யாரச் சொன்னாலும் கண்ண மூடிட்டு சரிக்கொடுப்பேன்.” என்ற தங்கையை பெருமிதமாக வேந்தன் பார்க்க,
“யாரக்கட்டிக்கச் சொன்னாலும் கட்டிக்குவேன். கைய வெட்டிக்கச் சொன்னாலும் வெட்டிக்குவேனு இப்பதான் கிழக்குச் சீமை ராதிகா மாதிரி பேசுற. நெப்போலியன் மாதிரி ஒரு ஆளப் படிச்சுட்டு வந்தா என்ன பண்ணுவ.”
“நீங்கதானே பாத்து வச்சீங்கனு சட்டமா வந்து இங்கேயே ஒக்காந்துப்பேன். அதனால யாரப் பாத்தாலும் இத மனசுல வச்சுட்டுப் பாருங்க” என அண்ணனுகளை விளையாட்டாகப் பயமுறுத்தியவள்,
“இதுல இன்னொரு வசதியும் இருக்கு. நாமெல்லாம் ஆக்கிவச்சா போட்டு சாப்புடற வகையறா. நாமலே அடுப்ப பத்தவச்சு, பொங்கி, வடிச்சு, சாப்புட்டுனு ரிஸ்க் எடுக்க விரும்பல. அதுவுமில்லாம இவங்க பிள்ளைகளைப் படிக்க வைக்கிறதே பெருமைக்காக மட்டும்தான்கறது உங்க விஷயத்திலேயே தெரிஞ்சு போச்சு. உங்களையே மத்தபக்கம் வேலைக்கு அனுப்பல. என்னை மட்டும் விட்டுருவாங்களா என்ன?” என்றாள்.
“யம்மோடியோவ். நாங்கூட என்னமோனுல்ல நெனச்சேன். என்னாண்ணே இவ்ளோ தெளிவா இருக்கா” என கன்னத்தில் கை வைத்துவிட்டான் இளையவன்.
“செழியா… பொண்ணுங்க எப்பவுமே அட்வான்சா யோசிப்பாங்கடா. நாம பத்து வயசுல யோசிக்கறத அவங்க அஞ்சு வயசுலயே யோசிச்சுருவாங்க. அஞ்சு வயசுல நடந்தது கூட அவங்களுக்கு நல்லா ஞாபகம் இருக்கும். நமக்கெல்லாம் நேத்து நடந்ததே மறந்துறும். எல்லாம் தெரியும்னு தம்பட்டமடிக்கிற முட்டாளுங்க நாம. எதுவுமே தெரியாதுன்னு மலுப்புற புத்திசாலிக அவங்க. இது மெனுஃபேக்சரிங் ஃபால்ட். ஒன்னும் பண்ண முடியாது” என்றான்.
தன்னைச் சுற்றிலும் அன்பான, அக்கறையான சொந்தங்களுக்கு மத்தியில், ஆரோக்கியமான சூழலில் வளரும் பெண்ணின் தெளிவு, தைரியம், துணிச்சல் திவ்யாவிடம் கண்டான் பெரியவன். எந்தச் சூழலையும் சமாளிக்கும் தெளிவு அவளது பேச்சில் தெரிந்தது.
“இப்பதானே தெரியுது மைக்கில்லாத குறையா நான் பேசப்பேச, நீங்க ஏன் அமைதியா இருந்தீங்கனு. அப்ப சரி… கூடிய சீக்கிரம் நம்ம வீட்ல கெட்டி மேளம் சத்தம் கேட்கும்” என செழியன் சொல்ல,
“போண்ணா” என சட்டென எழுந்து உள்ளே சென்றுவிட்டாள்.
“இதுல மட்டும் நம்ம பொண்ணுகள அடிச்சுக்க முடியாதுடா” என நாணத்தை மறைக்க எழுந்து சென்று தங்கையைப் பார்த்து வேந்தன் கூற,
“அப்படீங்கறீங்க… நம்ம தங்கச்சிகிட்ட வெட்கமா. நம்பமுடியலயே. இவ்வளோ நேரம் பேசுனதப் பாத்தீங்கள்ல. எவன் வந்து ஆப்படப்போறானோ?” என இருவருக்கும் சிரிப்பு பீறிட்டது.
“செழியா… அப்பா சொல்றதப் பாத்தா அவருக்கு நோக்கம்தான் போல. நம்பல கூப்புட்டு வச்சுப் பேசும்போதே தெரியுது. நானும் விசாரிக்கறே. நீயும் விசாரி.”
இவ்வளவு நேரமாக இருந்த விளையாட்டுத் தனத்தை விடுத்து பொறுப்பான அண்ணன்களாக கடமையை கையில் எடுத்தனர்.
“சொல்லிட்டீங்கள்ல… தம்பியுடையான் படைக்கஞ்சான்ற மாதிரி நிம்மதியா போய்த் தூங்குங்க” என எழுந்து சென்றுவிட்டான்.
ஆனால் அவன் நிம்மதியைத்தான் அவனது மொசக்குட்டி அசைத்துப் பார்க்க ஆரம்பித்துவிட்டாளே. சற்று முன் பேசியது மீண்டும் அவனுக்குள் ஊசலாடியது. பெண்களுக்கு ஐந்து வயதில் நடந்தது கூட நன்றாக நினைவிருக்கும் என தம்பியிடம் எதேச்சையாக சொல்லும் பொழுதே,
‘அப்படினா… நான் பத்து வயதில் கண்ட காட்சி எனக்கு நினைவிருக்கும் பொழுது, அவள் ஐந்து வயதில் கண்டதும் நினைவில் படிந்திருக்கும் தானே? தனக்கே அதை நினைக்கையில் இன்றும் அவ்வளவு ஆத்திரம் வருகிறது. அவளுக்கு அம்மாவாயிற்றே. அந்தக் கோலத்தில் தாயைக் கண்டவளது மனநிலை எப்படியிருக்கும். அன்று பயந்து மழையில் நனைந்த கோழிக்குஞ்சாய் வெடவெடத்தது இன்றும் அவனுக்கு நினைவிருக்கிறது. அவளுக்கும் அந்த நினைவுகள் வந்தால் அவளது நிலை’ என மீண்டும் நினைவுகள் அவளைச் சுற்றியே வந்தது.
கற்பூர பொம்மை ஒன்று
கை வீசும் தென்றல் ஒன்று
கற்பூர பொம்மை ஒன்று
கை வீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கை கோர்க்கும் நேரம்
கண்ணோரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே
சபை ஏறும் பாடல்
நீ பாடம்மா
நீ பாடம்மா

Top notch service and a very user-friendly layout. I had a few questions and the support team sorted me out quickly. Highly recommend bd39999bat.
I’ve tried many sites but this one feels different. The winning streaks are real here. Trust x777casinolink for a great time.
Really enjoying the selection of games here. Everything is well organized and the mobile version works like a charm. Check out phxgjili.
I’ve been trying a few different sites lately and this one really stands out. The interface is smooth and the payouts are quick. Definitely recommend checking out affunbet for a great experience.
[5663]dbb66 Login & Register | Trusted Online Slot Malaysia,dbb66 offers a seamless login app and easy register account process. Enjoy online slot trusted Malaysia games with casino deposit tng ewallet. Join now. visit: dbb66