மாமா! மாப்ளே! 11

மாலை மயங்கும் அந்தி நேரம். மஞ்சள் வெயில் தங்கமாய் ஜொலித்தது. மண்டப வாசலில் இருபக்கம் குழை தள்ளிய வாழைமரமும், பசு மஞ்சள் நிற தென்னங்கீற்று  தோரணங்களும், பூ‌ச்சரங்களின் அலங்காரங்களும், மினுக்கும் தோரண விளக்கொளியில் மண்டபத்தையே மாயலோகம் போல் காட்டியது.

முதல் திருமணம் நின்று போனதால், இதை பெயருக்கு முடித்தார்கள் என்று சொல்லும்படி இருக்கக்கூடாதென மிகப் பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தான். அக்கா, தங்கைகள் எல்லாம் சேர்ந்து தங்கள் கை வண்ணத்தை மண்டப வாசலில் பூக்கோலமாகப் போட்டு காட்டியிருந்தனர். அன்னம் முகம் வைத்த ஆளுயர குத்துவிளக்குகள் மணமேடைக்கு‌ இருபுறமும் ஒளிர்விட்டது. 

மணமகளே மணமகளே வா வா

உன் வலதுகாலை 

எடுத்து வைத்து வா! வா!

மண்டப வாயிலில் கட்டியிருந்த ஸ்பீக்கரில் பாடல் ஒலிக்க, 

“பழனி, பொண்ணு வீட்டுக்காரவங்க வந்துட்டாங்க போல!” என்று கலையரசி குரல் கொடுக்க, ஆரத்தியோடு வாசலுக்கு வந்தாள் மணமகளை வரவேற்க. அமிர்தாவும் பட்டுப் பாவாடையில் அத்தையை வரவேற்க கையில் பூங்கொத்தோடு அம்மாவுடன் வந்தாள். 

இலக்கியாவுடன், ராகவன், சுகந்தி, மற்றும் மாமா குடும்பத்தினர் என இவர்கள் மட்டுமே. 

பூ வைக்கவே மாப்பிள்ளை வீட்டார் அத்தனை பேர் வந்தனர். இவர்கள் மட்டும் போய் இறங்கினால் நன்றாக இருக்காதே என சுகந்தி தான், அதுவும் இரண்டு முறை வலிய போய் அழைத்த பிறகுதான் மாமா குடும்பம் உடன் வரவே ஒத்துக் கொண்டது. இல்லையென்றால் ஆட்களோடு மறுநாள் காலை முகூர்த்தத்திற்குதான் வருவதாக இருந்தனர். 

இலக்கியாவிற்கு இதில் துளியும் உடன்பாடு இல்லை. அப்படி என்ன இறங்கிப் போக வேண்டும் என்று தன்மானம் தடுத்தது. இத்தனை நாள் தன்னை ஆகாது என்ற சொந்தம் இப்ப மட்டும் எதற்கு.

ஒரு வேளை… எங்க அக்கா உசுரோட இருந்திருந்தா, ஆயிரம் சடவு இருந்தாலும் கூடப் பொறந்தவன விட்டுக் கொடுத்திருக்குமா என்ற பேச்சு வந்துவிடக்கூடாது என்பதற்காகவே சுகந்தி மீண்டும் சென்று அழைத்தது. குற்றம் பார்த்தால் சுற்றம் ஏது. சபையில் தாய்மாமா வீட்டை கேட்பார்கள்  என்று மகளுக்கு பதில் சொல்லி மலுப்பிவிட்டார். 

அக்கம் பக்கத்தாரும், இலக்கியாவுடன் வேலை பார்த்த நெருங்கிய நட்புகளும் காலை முகூர்த்தத்திற்கு வருவதாகச் சொல்லிவிட, ராகவன் அவர்களுக்கு முன் கூட்டியே மொத்தமாக ட்ரெய்ன் டிக்கெட் புக் செய்து கொடுத்துவிட்டான். 

செங்கல்பட்டிலிருந்து பழனிக்கு குறைந்தது ஏழெட்டு மணிநேர கார்ப் பயணம் என்பதால் பெரிதாக அலங்காரம் எதுவும் செய்து கொள்ளவில்லை. சின்ன கரை வைத்த, இள மஞ்சள் வண்ணத்தில் பட்டுப் புடவையும், தலை நிறைய மல்லிச்சரமும், கழுத்தில் சிறிய நகைகள் என எளிய அலங்காரத்திலேயே வந்திருந்தாள். மண்டபத்திலிருந்த தண்டபாணி தங்கைகளுக்கும் அவளுக்கும் பெரிதாக வித்யாசமில்லை. இப்போ எல்லாம் மணமகள் யார், கல்யாணத்திற்கு வந்தவர்கள் யார் என்றே தெரியாத நிலையில் தான் இருக்கிறது ஒவ்வொருத்தர் அலங்காரமும். 

பழனி‌யோடு சேர்ந்து அக்கா, தங்கைகளும் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். 

இன்று இரவு உடன்பரிசமும் என்பதால் சொந்த பந்தங்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கியிருந்தனர். இவர்கள் பக்கம் எண்ணி ஒன்பது பேர் தான். அதுவும் பெண்ணழைப்பிற்கென சென்ற அத்தை, மாமாவையும் சேர்த்து. 

மணப்பெண்ணை வந்தவர்கள் ஆர்வமாகப் பார்க்க, வாயிலில் நின்றவள் பார்வையோ ஆவலாக ஒருத்தனை மட்டுமே தேடியது. மண்டபம் முழுக்க பார்வையை ஆவலாகச் சுழற்றியது. தேடிய முகம் தென்படாத ஏக்கம் கண்களில். ஆட்கள் நிறைந்திருந்த மண்டபத்தில் அதற்கு மேலும் அவளால் தேட முடியவில்லை.  

“அத்தை” சேலை பிடித்து அமிர்தா இழுக்க, குனிந்து பார்த்தாள். கையிலிருந்த பூங்கொத்தை அவளிடம் கொடுத்து, “தண்டம் மாமா கொடுக்க சொன்னாங்க!” அவன் ரகசியம் என சொல்லிவிட்டதை ஊரறிய சொன்னாள். 

“ஓஹோஓஓஓ…” தண்டபாணி தங்கைகள் கோரசாக ஓ போட சட்டென முகம் சிவந்துவிட்டது. எங்கே என கண்கள் அலைபாய்ந்தது. 

“அண்ணா கீழ இல்ல. மேல இருக்காங்க. உங்களத்தான் பாத்திட்டிருக்காங்க!” அவளது தேடலை கண்டு கொண்ட ஜானகி, கேலியாக காதோரம் கிசுகிசுக்க, அனிச்சையாய் சட்டனெ நிமிர்ந்து பார்த்தன கண்கள். பூ முகம் ஒரு நொடி மலர்ந்து விகசித்தது. 

வெள்ளை நிறத்தில் சட்டையும், சாம்பல் நிற கால்சட்டையும் அணிந்திருந்தவன் கம்பீர தோற்றம் பெண்ணவள் கண் நிறைத்தது. வீட்டை விட்டு கிளம்பும் பொழுது வீட்டு பெரியவர்கள் ஆசீர்வாதம் பண்ணி பூசிவிட்ட திருநீறு தலையிலும், நெற்றியிலும் நிறைத்திருந்தது. 

உள்ளே வந்தவுடன் அவளது பார்வை ஆர்வத்தோடு அலைபாய்வதை மேலிருந்தே கண்டுகொண்டான். இன்றும், முதல் நாள் கண்டதுபோல் அந்திசாயும் வெயில் பட்டு செம்மஞ்சள் குளித்த முகம் அவனை என்னவோ செய்தது. தன்னைத்தான் அவளது கண்கள் தேடுகிறது என்று புரிய, கண்களில் காதல் கசிய, இதழோரம் குறுநகை பூத்தது. இத்தனைபேர் கூடியிருக்கும் இடத்தில் நிமிர்ந்து பார்க்கமாட்டாள் எனத் தெரியும். 

கல்யாண சந்தோஷமும், பூரிப்பும், மலர்ச்சியும் அவள் முகத்தில் மட்டுமல்ல… மேனியிலும் பிரதிபலித்தது. பூ வைத்த அன்று இருந்தது போல் இன்று‌ இல்லை. சற்றே கன்னம் சதை பிடித்து, பளபளப்பு கூடியிருப்பது போல் தோன்றியது மன்னவன் கண்களுக்கு. இது எல்லாம் அவளது உள்ளத்தின் பூரிப்பை சொல்லாமல் சொல்ல, உரிமையோடு கண்ணகற்றாமல் பார்த்து வைத்தான்.

கைகளைக் கட்டிக் கொண்டு நின்றவன் பார்வை இவள் மீதே நிலைத்திருக்க, “போதும்… போதும்… மிச்சமெல்லாம் அப்பறம்…” தங்கைகள் கேலி பேச, சட்டென பார்வையைத் தழைத்துக் கொண்டாள். 

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்

தான்நோக்கி மெல்ல நகும்.

யான் நோக்கும் போது அவள் நிலத்தை நோக்குவாள், யான் நோக்காத போது அவள் என்னை நோக்கி மெல்லத் தனக்குள் மகிழ்வாள்.

சிரிப்போடு பழனிதான் அவர்களை மணமகள் அறைக்கு அழைத்து சென்றாள். 

“இலக்கியா… குளிக்கணும்னா குளிச்சுட்டு ரெடியாகிக்கோ. பார்லருந்து வந்துருவாங்க” என்று சொல்ல, அவளுக்கும் அதுவே சரியெனப் பட்டது. ஏ.சி கார் தான் என்றாலும் குளித்தால் தேவலாம் என்றிருந்தது பயண அலுப்பு. 

“வர்றவங்களுக்கு ரூம் எல்லாம் மேல இருக்கு ராகவா. உங்களுக்கு எத்தனை சாவி வேணும்” என்றாள்.

“இவங்களுக்கு மட்டும் ஒன்னு போதும் அண்ணி. அம்மா‌, அக்கா கூட‌ இருப்பாங்க. எனக்கு தூக்கம் வருமான்னு தெரியல. மத்தவங்க எல்லாம் காலையிலதான் வருவாங்க” என்றவனிடம்,

“பரவாயில்ல… ரெண்டு சாவி வச்சுக்கோ. நிச்சயம் முடிஞ்சதும் கொஞ்ச நேரமாவது தூங்கி எந்திரி. நாளைக்கி வர்றவங்க குளிச்சு ரெடியாகவும் ரூம் வேணும்ல”  என்று அவனிடம் இரண்டு சாவிகளை கொடுத்தாள்.

அதில் ஒன்றை மாமன் மனைவியிடம் கொடுத்தான். 

“பாஸ் எங்க அண்ணி!” என்று‌ சீனியை விசாரித்தான். 

“அவங்க சமையல்கட்டுல இருக்காங்க ராகவ். பந்தி ஏற்பாட்டைக் கவனிக்கனும்ல! கேட்டரிங் விட்டாலும் நாமலும் கூட இருக்கணும்” என்று‌ சொல்ல,

“சரி அண்ணி!” என்றவன்‌ மாமா‌ குடும்பத்தை மேலே அறைக்கு அழைத்துச் சென்றான்.

இவர்கள் படியேற, படியில் இறங்கி வந்த ஜானகி அன்ட்‌ கேங், “சாப்பிட்டு தூங்கிறாதீங்க. விடிய விடிய உங்களுக்கு வேலையிருக்கு. அவங்கள ரூம்ல விட்டுட்டு கீழ வாங்க! என்று ஆணையிட, 

“சரிங்க. வந்துர்றேன்” என்றான் அப்பாவியாய். 

வாய்மூடி சிரித்தனர் உடன் வந்த சிட்டுகள். 

“என்னக்கா எது சொன்னாலும் சரின்றாங்க!” 

“நமக்கும் இப்படியொரு ஆள்தான் தேவை!” கலகலத்தபடி படியிறங்கியது இளவட்ட கூட்டம். 

அவர்களை அறையில் விட்டுவிட்டு சீனியைத் தேடி மண்டப சமையல்கட்டிற்கு சென்றான். மகனை கையில் வைத்துக் கொண்டு மேற்பார்வை‌ பார்த்து நின்றான். உடன் பார்த்தசாரதியும். 

“ப்ரோஸ் எல்லாம் இங்கதான் இருக்கீங்களா?” கேட்டுக் கொண்டே வந்தவனை, 

சீனி, “வாடா!”  வரவேற்க, சீனி கையிலிருந்த குகனைத் தூக்கிக் கொண்டான். 

புதியவன் கைக்கு சென்றதும்  சிறியவன் சிணுங்க ஆரம்பிக்க, “சித்தப்பாடா… இங்க பாரு!” மினுக்கும் பல்புகளைக் காட்டி அவனுக்கு விளையாட்டு‌ காட்ட ஆரம்பித்தான்.‌ 

*****

“இலக்கியா… நீ குளி. நான் ஆச்சியையும், தாத்தாவையும் பாத்துட்டு வர்றேன். நிச்சயத்துக்கு இன்னும் நேரமிருக்கு.” அய்யம்மாவைப் பார்க்க செல்வதாக சுகந்தி கூற,

“நானும் வர்றேம்மா… தாத்தாவையும் பாக்கணும்!” என்று இவளும் உடன் வந்தாள். 

மாடிப்படி ஏற முடியாது என்பதால் மணமகன் அறையிலேயே தாத்தா, அம்மாச்சியை தங்க வைத்துக் கொண்டான். அந்த அறை மணமகள் அறைக்கு எதிர்புறமே இருக்க, வேலாயுதத்திற்கு உடம்பு முடியாமால் போனது தெரிந்து விசாரிக்க சென்றனர். 

அங்கே கலையரசியும் இருந்தார். இருவரும் ஏதோ பேசிக் கொண்டிருக்க இவர்கள் வந்ததும் அவர்கள் பேச்சு சட்டென தடைபட்டது. இவர்களைப் பார்த்தவுடன் தான் பேச்சை நிறுத்தியது போல் பட்டது இலக்கியாவிற்கு. 

“வாம்மா… நல்லபடியா வந்தாச்சா. எந்திரிச்சு வரமுடியல?” அய்யம்மா விசாரிக்க,

“வந்துட்டோம் ஆச்சி… தாத்தா எப்படியிருக்கீங்க?” அருகில் இருந்த வேலாயுத்ததை நலம் விசாரித்தனர்.

இலக்கியா பார்வை ஆராய்ச்சியாய் கலையரசியைத் தொட்டு மீண்டது. அவர் முகம் கலையிழந்து இருப்பதாகப்‌பட்டது. 

சற்று முன் இவர்களை வரவேற்கும் பொழுது கூட நன்றாகத்தானே இருந்தார். ஒரு வேளை தாத்தாவிற்கு தான் மீண்டும் உடம்பு ஏதும் சரியில்லையோ என வேலாயுத்ததை பார்வை ஆராய, அவர் நன்றாக இருப்பது போலத்தான் தெரிந்தது. 

“நீங்க பேசிட்டிருங்க… நான் வந்தவங்கள கவனிக்கிறேன்” என்றுவிட்டு வெளியே சென்றுவிட்டார். 

சிறிது நேரம் பேசிவிட்டு, “இலக்கியாவும் குளிச்சு ரெடியாகணும். அப்பறம் பாக்கலாம் அத்தை” என்று சுகந்தியும் கிளம்ப எத்தனிக்க, 

“இலக்கியா… நிச்சயத்துக்கு கவரிங் செட் நகை போடாதே. உங்க அம்மா உனக்கு எடுத்து வச்சுருக்கறதையே போடு!” என்று சொல்ல இருவர் நெற்றியும் சுருங்கியது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“சரி… ஆச்சி” சொல்லிவிட்டு யோசனையோடு இருவரும் வெளியே வந்தனர். 

கலையரசியிடம் யாரோ ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தனர். கலையரசியும் கடனே என விட்டு நகர முடியாதபாட்டிற்கு அவஸ்த்தையாய் நிற்பதைப் போல் இருந்தது. 

“பொறுமையா தேடியிருக்கலாம். அப்படியென்ன அவசரம் கலை. நாளைக்கு நம்ம பயலுக்குனு நாலு பேரு வேண்டாமா? மொத சம்பந்தமும் அப்படி. சம்பந்த வழி போக்குவரத்துனு பெருசா இல்லாமப் போச்சு. ஓடிப் போன பிள்ளையும் ஒழுங்கா வாழலையாம்ல. நம்ம புள்ள வயித்தெரிச்சல் சும்மா விடுமா? ஒன்னு பணக்கட்டு இருக்கணும். இல்லைனா ஜனக்கட்டு இருக்கணும். ரெண்டுமில்லாம இப்படியா போய் விழுவீங்க. உங்க சித்தப்பா மக கூட நம்ம சொந்தத்துலயே தண்டபாணிக்கேத்த சம்பந்தமெல்லாம் சொன்னாலாம்ல?” 

ஏதோ பாழும் கிணற்றில் விழுந்ததைப் போல் இவர் பேசிக் கொண்டிருக்க, அவருக்கு பதில் சொல்ல முடியாமல் கலையரசி தேங்கி நிற்க, அவர்களைக் கடந்து சென்ற இவர்களுக்கும் அவர் பேசியது தெளிவாகவே கேட்டது. இன்னும் அலங்காரம் எதுவுமில்லாமல் சாதாரணமாக இருந்த இலக்கியா தான் மணப்பெண் என்பது அவருக்கும் தெரியவில்லை. அவர் குரலில் தெரிந்த வருத்தம் முகத்தில் தெரிந்த மாதிரித் தெரியவில்லை இலக்கியாவிற்கு. 

கலையரசியின்‌ முகமாற்றததிற்கான காரணமும், அய்யம்மா அலங்கார நகைகள் வேண்டாம், தங்கமே போட்டுக்கோ என்றதற்குமான காரணமும் இப்பொழுது புரிந்தது‌. 

இவர்கள் வந்து இறங்கியவுடன் எப்படியும் பெண் வீட்டார் பற்றிய ஆராய்ச்சி நடந்திருக்கும். தெரிந்தவர்கள், தெரியாதவர்களுக்கு விபரங்களை சொல்லியிருப்பார்கள். இவரது சித்தப்பா மகள் எப்படியும் வஞ்சப்புகழ்சி செய்திருப்பார். கலையரசியிடமே வந்து ஆளுக்கொன்றாக விசாரித்தனர். (இங்கு சித்தப்பா மகளுக்கு பெயரெல்லாம் குறிப்பிடவில்லை. அது நம்முடனே இருக்கும் ஒரு பொது கதாப்பாத்திரம். அது நானாகவும் இருக்கலாம். நீங்களாகவும் இருக்கலாம்.)

அதுதான் கலையரசி மனதை கலைத்திருக்கிறது. 

யாருக்காக இருந்தாலும் தோணும்தானே. பொறுத்ததே பொறுத்தோம். இன்னும் கொஞ்சம் பொறுமையாகத் தேடியிருக்கலாமோ என்று தோன்றியது. 

‘மகனுக்குப் பிடித்தால் போதும், நம்மகிட்ட இல்லாத வசதியா, சொந்த பந்தமா.’ முதலில் அப்படித்தான் தோன்றியது கலையரசிக்கும். இப்பொழுது ஆளுக்கொன்றாக விசாரிக்க, மனம் கலங்கிய சேறாய் குழம்பியது. 

“வாங்க பெரியம்மா!” இவர்களுக்குப் பின் அழுத்திக் கேட்டது தண்டபாணி குரல். சட்டென திரும்பிப் பார்த்தவருக்கு படபடத்தது. 

“வாப்பா… இப்பதான் உன்னைப் பத்தி உங்க அம்மாகிட்ட பேசிட்டிருந்தேன். நம்ம பய பொறுப்பான பய. அவனுக்கேத்த பொண்ணுன்னு சொல்லிட்டிருந்தேன்.”  இன்னும் அவருக்கு மணப்பெண் யாரென்றே தெரியாது. அப்படியே பேச்சை மாற்றியவருக்கு, கலையரசியிடம் பேசியதைக் கேட்டிருப்பானோ என்று உள்ளுக்குள் உதரலெடுத்தது. இவன் எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராக பட்டுனு பேசிவிடுவானே என்ற அச்சம் எழாமல் இல்லை.

தண்டபாணி, “இப்ப எங்க பெரியம்மா இருக்கீங்க. பெரிய அண்ணன் கூடவா?” அவரை நலம் விசாரிப்பது போல் விசாரிக்க,

“க்க்கும்” என அலுத்துக் கொண்டே, 

“ நாளப்பின்ன நமக்கு ஆகுமேன்னு வேண்டாம்னவன வம்படியா புடுச்சு என் அண்ணே மகளக் கட்டிவச்சேன். இப்ப என்னடான்னா மகராசி பேச்சக் கேட்டுக்கிட்டு அவ கூடவே போய்ட்டான்.” வேண்டா வெறுப்பாய் சலித்துக் கொள்ள,

“அப்போ… தனியாவா இருக்கீங்க?” புருவம்‌ சுழித்து கேட்க,

“இல்லப்பா… சின்னவன் பொண்டாட்டி நல்லா பாத்துக்கறா. நம்ம அளவுக்கு இல்லைனு இவள வேண்டாம்னு தலப்பாடா அடிச்சுக்கிட்டே. ஆனா, அந்நியம்னாலும் இப்ப அவதான் என்னைப் பாத்துக்கறா!”

“உங்க மக எங்க இருக்கு?” புருவத்தைச் சுருக்கி, தாவாயைத் தடவியபடி அடுத்த கேள்வி கேட்க, அப்பொழுதுதான் அவன் ஒவ்வொன்றையும் உள்குத்து வைத்து கேக்கிறான் என்பதே புரிந்தது. 

அவர் மகள் தான் வேற்று இனத்துப் பையனை காதல் திருமணம் செய்து கொண்டு இவர்கள் வீட்டுப் பக்கமே வருவதில்லையே! இவர்களும் ஆகாதென மொத்தமாக வெட்டிவிட்டனர். நல்லது கெட்டது எதற்கும் மகளை அழைப்பதுமில்லை. இவர்கள் போவதுமில்லை.

நம்ம வீட்டு விஷேசத்திற்கு வந்தவராயிற்றே என்றுதான் நாசுக்காக கேட்டுக் கொண்டிருக்கிறான் இதுவே மற்ற நேரமாக இருந்தால் முகத்துக்கு நேராகவே கேட்டிருப்பான். 

அடுத்த நொடியே, “கலை… உனக்கு வேலையிருக்கும். நீ போய் பாரு. நான் வர்றேன்” அவசரமாக இடத்தை காலி செய்தார். 

அவர் சென்றதும் தண்டபாணி என்னம்மா இது என்பது போல்‌ கலையரசியை உறுத்துப் பார்க்க, 

“இல்லடா… அக்கா தான் வந்து பேசுனாங்க. எப்படி விலகிப் போறதுன்னு நின்னேன்” என்றார் உள்ளிறங்கிய குரலில். 

“அம்மா… அவங்க வீட்லயே ஆயிரம் ஓட்டைம்மா. நம்ம வீடு ஒழுகுதேன்னு கவலப்படுறாங்களா? அவங்க பேச நீங்க இடம் கொடுக்க கூடாதும்மா. அவங்க பழனி நாத்தனாரைப் பத்தியும்‌ பேசுறாங்க. ஆயிரம் தான் இருந்தாலும் அவருக்கு தங்கச்சிம்மா. பழனி வீட்டுக்காரருக்குத் தெரிஞ்சா சங்கட்டமில்லையா? அவங்க வாழாம இருக்கறது நம்ம சாபம்தான்ங்கற மாதிரி பேசுறாங்க. பெரிய மனுஷி பேசற பேச்சா இது?” முகம் சுழித்து மகன் கேட்க,

“இல்லடா… அது வந்து… இலக்கியா பக்கம் ஆளுக யாரும் பெருசா வரலைல்ல. இப்ப பாரு, பழனி பக்கமும் அவங்க மாமானார் மட்டும்தானே வந்திருக்காங்க. ரெண்டு சம்பந்தமும் இப்படியானு வந்தவங்க கேக்குறாங்க!” அவர் கூறிய விதமே அவருக்குள்ளும் அந்த எண்ணம் தான் ஓடுகிறது என்பது தெளிவாகத் தெரிந்தது தண்டபாணிக்கு. 

இதைத்தான் சற்று முன் அய்யம்மாவிடம் கூறி வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் இவர்கள் வரவும் சட்டென பேச்சு தடைபட்டாலும், கலையரசி முகம் ஏதோ சரியில்லை என இலக்கியாவிற்குக் காட்டிக் கொடுத்தது. 

“சரிம்மா… கேக்குறவங்க எல்லாம் இன்னைக்கு ஒரு நாள் விருந்துக்கு வந்தவங்கம்மா. இன்னைக்கிப்‌ பேசிட்டு நாளைக்கி அவங்கவங்க வேலையப்‌ பாக்க போயிறுவாங்க. சொந்த பந்தம் வேணும்னு பேசுறவங்க நாளைக்கு நமக்கு ஏதாவதொன்னுனா அவங்களா வந்து தாங்கப் போறாங்க. இப்ப பேசுனவங்க மகள மட்டும் எதுக்கு ஒதுக்கி வச்சுருக்காங்கலாம். இலக்கியா நம்ம வீட்டு மருமகளாகிட்டா நம்மோட சொந்தமெல்லாம் அவளோட சொந்தமும் தானம்மா. எங்கேயும் நம்ம சொந்தத்தை விட்டுக் கொடுக்கலாமா?” தண்டபாணி அம்மாவிடம் ஒவ்வொன்றாக கேட்க, அவருக்கு பதில் கொடுக்காமல் இருந்தது தன்னுடைய தவறுதான் எனப் புரிந்தது. அவரது முகமும் வருத்தம் தோய்வதைப் பார்த்தவன், இதற்கு மேலும் பேசி அம்மாவை சங்கடப்படுத்த விரும்பவில்லை. 

“அப்பா எங்கேனு பாருங்கம்மா!” என்று சொல்லி அனுப்பிவைத்தான். 

திரும்பியவன் பார்வை இலக்கியா மீது படிய, அவளது கண்கள் கலங்கி சிவந்திருந்தது. 

உள்ளே வரும் பொழுது ஆசையாக, ஆர்வமாக, காதலோடு அலைப்புற்ற கண்களில் கண்ணீரைப் பார்த்தவன் மனம் கனத்தது. 

இதை எல்லாம் முன்பே யோசித்து தான் தனது ஆசைகளை தனக்குள்ளே போட்டு புதைத்துக் கொண்டாள். 

எத்தனை கஷ்ட்டம் வந்தாலும் சுகந்தி அடுத்தவரிடம் ஒரு உதவி என்று சென்றதில்லை. பிள்ளைகளையும் அப்படித்தான் வளர்த்திருந்தார். அதுவும் பெண் பிள்ளை என்பதால் இலக்கியா மீது கவனிப்பு ஒரு படி அதிகம் தான். பெற்றவள் உடனிருந்து வளர்ப்பது என்பது வேறு. என்னயிருந்தாலும் சித்திதானே என்ற பேச்சு வந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். இவர்கள் பேச்சைக் கேட்ட பிறகு அவருக்கும் ஒரு மாதிரி ஆயிற்று.

ஆனால், தண்டபாணி பேசியா விதம் ஆறுதல் கொடுத்தது. யார் என்ன பேசினால் என்ன. மகளுக்கு கொண்டவன் துணை இருக்கு என்று நினைத்து மனதை தேற்றிக் கொண்டார். 

நாம் ஏதாவது பேசப்போக, இதற்கு தான் முதல்லயே வேண்டாம் என்றேன் என பழைய பல்லவியை‌ மீண்டும் ஆரம்பித்து விடுவாள் எனத் தெரியும். ஏற்கனவே வீட்டை அவள் பெயருக்கு மாற்ற ராகவன் ஏற்பாடு செய்ய, அதற்கும் ஒரு மூச்சு சண்டை போட்டாள். வீட்டை என் பெயருக்கு மாற்றுவதாக இருந்தால் எனக்கு கல்யாணமே வேண்டாம் என்றாள். அது அவள் அம்மா பெயரில் தானே இருக்கிறது. என்றைக்குனாலும் அவளுக்குதானே என விட்டுவிட்டான். 

“நீ போய் ரெடியாகு இலக்கியா. நான் உங்க அத்தை என்ன பண்றாங்கனு பாக்குறேன்” இவர்கள் பேச்சு காதில் விழாதது போல் இலக்கியாவை அறைக்கு அனுப்பி வைத்தார் சுகந்தி. 

மனம்‌ சுணங்க அறைக்கு சென்றாள். ஜானகி அவளிடம் பார்லர் பெண் வந்து கொண்டிருப்பதாகக் கூற, சரியென தலையை மட்டும் ஆட்டிச் சென்றாள். 

தன் சிந்தையின்றியே குளித்து, ஈரத்தலையில் துண்டை சுற்றியபடி குளியலறை விட்டு வெளிவர, கதவு தட்டும் சப்தம் கேட்டது. ஈரக்கூந்தலை சுற்றிய துண்டை தோளோடு வழியவிட்டவாறே கதவைத் திறந்தாள். அம்மாவோ, பார்லர் பெண்ணோ என எண்ணியபடி கதைவத் திறந்தவள் பார்வை நிலை குத்தி நின்றது.   

தண்டபாணி நின்று கொண்டிருந்தான்.‌ அவளின் கலங்கிய முகம் அவனை வரவழைத்திருந்தது‌. 

பாதி மட்டுமே திறந்திருந்த கதவு. அதற்கு பின் நின்றிருந்தாள். அப்பொழுதுதான் குளித்த வந்தவளது சுகந்தம் காற்றில் கலந்து வந்தது. இன்னும் காதோர கற்றை முடியில் ஈரம் சொட்டியது. அஞ்சனம் அலுங்கிய ஈரம் பூத்த விழிகளைப் பார்த்தவன் விழிகளில் ரசனை கசிந்தது. ஈரம் சொட்டிய கூந்தல் இடை நனைத்தது. இவனுக்குள் வெம்மை படர்ந்தது. 

சட்டென பார்வை வெளியே பார்த்தது. யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்ற கலக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் அவனை அருகில் பார்த்ததில் உள்ளூர பரவசம். நைட்டியோடு இருந்ததால் அவள் இன்னும் கதவைப் பிடித்தபடியே நிற்க, பாதி திறந்திருந்த கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே வர, மெல்லிய பதட்டம் விழிகளில். 

“அய்யோ… அக்கா!” என்றவனை இழுத்துப் பிடித்து நிறுத்தினான் சீனி. 

“பாஸ்! அக்கா! அங்கே! தனியா! மாமா! உள்ளே!” அப்பொழுதுதான் பேசும் வரம் கிடைத்த சரஸ்வதி சபதம் சிவாஜி போல, ராகவனுக்கு ஒவ்வொரு வார்த்தைகளாக திக்கித்திக்கி விழுந்தது பதட்டத்தில். 

சமையற்கட்டை விட்டு மூவரும் மண்டப வளாகத்திற்கு வர, தண்டபாணி மணமகள் அறைக்குள் செல்வதைப் பார்த்த ராகவன் தான் பதட்டத்தில் உளறிக் கொண்டிருந்தான்.

“விடு ராகவா. லைஃப்ல இதெல்லாம் கோல்டன் மொமன்ட்ஸ். கல்யாணத்துக்குப்‌ பின்னாடி இதெல்லாம் கிடைக்காது. நம்ம மச்சானும் அனுபவிக்கட்டும்!” சிரித்த முகமாக கூற, 

“ஆமாமா…சீனி ப்ரோ சொன்னா சரியாத்தான் இருக்கும்!” கண்ணைச் சிமிட்டி பார்த்தி, சீனியை கேலி செய்ய, சீனி வதனம் அந்த நாள் நினைவில் புன்னகை சிந்தியது. 

அதற்கு பின் எத்தனை இன்னல்களை அனுபவித்திருந்தாலும், அதெல்லாம் கடந்து வந்த பிறகு இன்று நினைக்கையில் அவனுக்கு அது இனிய நினைவுகள் தானே. ‘இது பழனிக்கு தெரியாம பாத்துக்கோடா சீனி’ மனசாட்சி எச்சரிக்கை செய்தது. 

“பாஸோட முன் கதைச்சுருக்கம் கேள்விப்பட்டதாலதான் எனக்கு பயமே” என்றான் பயந்த பாவனையில். 

“அவங்க ப்ரைவசிய கெடுக்க வேண்டாம். அந்தப் பக்கம் யாரும் போகாம பாத்துக்கோ” என்று சொல்ல,

“இப்ப தான் நம்ம வேலைய ஒழுங்கா பாக்குறோம்னு நினைக்கிறேன்” சிரித்தபடி பார்த்தி சொல்ல, புரியாமல் பார்த்தவனிடம், “மச்சான் வேலைய சொன்னேன்” என்றான் நமட்டுச் சிரிப்போடு. 

“உங்களுக்கு எல்லாமே விளையாட்டு தான்.” 

சீனியும், பார்த்தியும் கேலி பேசி சிரித்துக் கொண்டாலும் ராகவனுக்கு பதைபதைப்பு தான். இவர் பாட்டிற்கு அறைக்குள் போய்விட்டாரே. யாராவது பார்த்தால் என்னாவது. 

மணமக்கள் அறை மேடைக்குப் பின்புறம், அலங்காரத் திரை மறைவில், இடதும் வலதுமாக இருந்ததால் யாருடைய கவனத்திலும் படவில்லை. 

பதட்டத்தோடு அங்கேயே பார்த்துக் கொண்டிருக்க, ஜானகி அழகு நிலையப் பெண்ணோடு, மணப்பெண் அறை நோக்கி செல்வதைப் பார்த்தான். இவர்கள் போய் கதவைத் தட்டினால் அக்காவிற்கு சங்கடமாக இருக்கும் என்று எண்ணியவன் அவசரமாக அவர்களுக்கு முன் சென்று கதவைத் தட்ட எத்தனிக்க, அதற்குள் கதவு திறக்கப்பட்டது. 

படபடப்பாக தன் முன் நிற்பவனைப் பார்த்து ஒரு கணம் திகைத்தான். அடுத்த கணமே மச்சானது கன்னத்தை செல்லமாக நிமிண்டிச் சென்றவன் முகமெங்கும் மென்மை தாங்கி, புன்னகை வியாபித்திருந்தது. 

வலித்த கன்னத்தை தடவியபடியே அதிர்ந்து நின்றான் ராகவன். இதே அதிர்ச்சி தான் எட்டத்தில் நின்று இவர்களைப் பார்த்துக் கொண்டிருந்த மற்ற இரண்டு மச்சான்களுக்கும். 

தண்டபாணி, மச்சான் கன்னத்தைப் பிடித்து கொஞ்சுமளவிற்கு அப்படி என்ன உள்ளே நடந்திருக்கும் என்பது வாசகர்கள் கற்பனைக்கே🫣 உங்கள் கற்பனைக் குதிரை தாறுமாறாக ஓடினால் அதற்கு சமூகம் பொறுப்பல்ல மக்களே😉

ஏன்னா உள்ள என்ன நடந்துச்சுன்னு எனக்கும் தெரியாது🫣. ஏன்னா… கதவுதான் பூட்டியிருந்துச்சே😉. அதனால மச்சான்ஸ் நிலைமைதான் எனக்கும்.

என்ன நடந்திருக்கும்னு ஆளுக்கொரு ஐடியா கொடுத்தீங்கனா அதை வச்சே அடுத்த எபிய ஒப்பேத்திறுவேன். எப்படி நம்ம சாமர்த்தியம்🙈.

என்னடாயிது பிக்காலித்தனமா‌ இருக்குன்னு வடிவேல் மாடுலேஷன்ல மைன்ட் வாய்சுன்னு நெனச்சு சத்தமா நீங்க கேக்குறது தெரியுது மக்களே😏! 

8 thoughts on “மாமா! மாப்ளே! 11”

  1. En mudiyirnda car door kula nadakarthu sola therinjavanguluku ,room kula sola theriyalaya..nambitom…enna perusa pannirpan…kiss than…seeniya yaralum beat pana mudiyathe .dhandam ozhuka seelan..idhuve avan character ku konjam adigam…

    1. இப்படியெல்லாம் டீட்டெய்லா சொன்னா நான் என்ன பண்றது… 🤔
      அதனால்தான் அவனுக்கு சீன் வைக்கல… ரீடர்ஸ் ஜாய்ஸ்ல விட்டுட்டேன்😉😉
      Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top