நெஞ்சம் மறப்பதில்லை 11

“மாமா… சூர்யா ஃபோன் ஏதும் பண்ணினானா?”

“இல்லைமா, உனக்கும் பண்ணலியா?”

இரவு சாப்பாட்டை மேஜையில் எடுத்து வைத்தவாறே மங்கையர்கரசி, மாமனாரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

“எல்லாம் நீங்க கொடுக்கிற இடம் மாமா. போனா போன வேலையை முடிச்சோமா வந்தோமானு இருக்கணும். அப்படியே நாடோடி மாதிரி ஊர்சுத்த கிளம்பிற வேண்டியது.”

“இந்தக் காலத்துப் பிள்ளைகளை ரொம்ப இறுக்கிப் பிடிக்க‌முடியாதும்மா. பிடிக்கவும் கூடாது. அதுவும் என் பேரன் தகப்பன் சாமி மாதிரி. சின்ன வயசுலயே அதிகப்படியான அனுபவம். எது செய்தாலும் சரியாகத்தானிருக்கும்.”

தாத்தாவிற்கு பேரனின் மீது அபார நம்பிக்கை. சிறுவயதிலேயே சூர்யாவின் சாதனைகளும் அதற்கான சான்று. தந்தையின் தொழிலோடு மட்டும் நில்லாது, தனது தனிப்பட்ட திறமைக்காகவும் பில்டிங் கட்டமைப்பில் தனிமுத்திரை பதித்தவன். 

டெக்ஸ்டைல்ஸ் தொழில் சம்பந்தமாக சூரத் சென்று இரண்டு வாரங்களாகிறது. சென்றவன் அப்படியே ஊர்சுற்றக் கிளம்பிவிட்டான். அவனுக்கும் பிடித்த ஒரே விஷயம், எங்கு போகிறோம் என்று முடிவு செய்யாமல் கால் போனபோக்கில் ஊர்சுற்றுவது. வாகனம் எதுவாகவும் இருக்கும். இரயிலாகவும், பேருந்தாகவும், சில சமயங்களில் லிஃப்ட் கேட்ட இருசக்கர வாகனமாகவும் கூட இருக்கும். அந்த சமயங்களில், அம்மாவைத் தொடர்பு கொண்டு, இத்தனை நாட்களில் வந்துவிடுவேன்‌ என்று தகவல் சொல்லிவிடுவான். மறுபடியும் திரும்பும் நாளில்தான் தொடர்பு கொள்வான். இந்த முறை அவன் வியாபார தொடர்பாக சூரத் சென்றவன், வீடு திரும்ப இரண்டு வாரங்களாகும் என்று கூறிவிட்டுத் தான் கிளம்பினான்.

கூறிச் சென்ற நாட்களைத் தாண்டியும் வீடு வந்து சேராததால், மாமனாரிடம் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

“வந்துறுவான்மா. போனவாரமே பிஸினஸ் ஆர்டர் மெயில்ஸ் எல்லாம் வந்திருச்சு. போன வேலையை முடிச்சுட்டான். எப்படியும் இந்த வாரம் வந்துறுவான்.” என்று மருமகளுக்கு ஆறுதல் கூறினார்.

மாமனாரின் பதிலால் சற்று நிம்மதியானாலும், பெற்றமனம் எதையோ உணர்ந்து தவித்தது. சீக்கிரம் மகனைக் காண வேண்டும் என்று மனம் படபடத்தது. 

 *********************

இதமான இளங்காலை நேரம். செஞ்சாந்தாய் கீழ்வானம். காதலியை துரத்தும் காதலனாய் இளங்காற்று. முந்தானை பறக்க காதலனிடம் வளைந்து நெளிந்து ஓடி போக்கு காட்டும் காதலியாய் நெல்நாற்று. இவர்களின் விளையாட்டு சிலசமயங்களில் சுழற்றியடித்து ஆக்ரோஷமாய். பல நேரங்களில் ஆனந்த தழுவலாய். ஈரவயலின் சேற்று வாடையும், நெல்மணிகளில் பால்முதிரும் பச்சை வாசனையும் சேடிப் பெண்களாய். யாருக்கு வேண்டும் விண்ணுலக சொர்க்கம். இதோ காலடியில் பூலோக சொர்க்கம் இயற்கையின் வடிவில் இறைவன் ரூபமாய்.

அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தான் வாக்கிங் ஸ்டிக் உதவியுடன் வலதுகாலை மட்டும் ஊன்றி நின்று கொண்டு வயல்வெளியைப் பார்த்துக் கொண்டிருந்தவன். ஆழ்ந்த மூச்செடுத்து அதிகாலை ஈரக்காற்று கொண்டு நுரையீரல் நிரப்பினான்.

“கண்ணா…”

லஷ்மியின் அன்பான குரல், நுரையீரல் நிரம்பிய ஈரக்காற்றுக்கு இணையாக. குரல் கேட்டவன் திரும்பிப் பார்க்க கையில் காஃபி டம்ளரோடு இவனை நோக்கி வந்து கொண்டிருந்தார். அவன் இங்கு வந்து ஒரு வாரத்திற்கு மேலாகிறது. 

அவனைப்பற்றிய தகவல் அறியும்‌ பொருட்டு காவல் நிலையம் சென்றவரை,

“என்ன சண்முகம் சார் இந்தப்பக்கம்?” என‌ அவரை அடையாளம் தெறிந்த கான்ஸ்டபிள் ஒருவர் கேட்க,

“பத்து நாளைக்கு முன்னாடி ஒரு ஆக்சிடென்ட் ஆச்சுல. அது சம்பந்தமாக விசாரிச்சுட்டுப் போக வந்தேன்.”

“எதை சொல்றீங்க. மூனு பேர் ஸ்பாட்அவுட் ஆன கேஸா?”

“ஆமாங்க. அதுல ஒரு பையன் கூட பொழச்சுக்கிட்டானே. அவனைத் தேடி யாராவது வந்தாங்களா? இல்ல… அவன் யாருங்கற தகவல் தெறிஞ்சுதானு பாத்துட்டுப் போலாம்னு தான் வந்தேன்.”

“எங்க சார்? ஆக்சிடென்ட் ஆன இடத்துலயும் அவனோட திங்க்ஸ் ஒன்னுகூட இல்ல. கூட்டத்துக்குள்ள திருட்டு பையலுக தூக்கிட்டானுகனு நினைக்கிறேன். கண்ணு முழிச்சவனும் இசகுபிசகா அடிபட்டதுல பைத்தியம் ஆயிட்டதா தகவல் வந்துச்சு.”

“சார்! அவனுக்கு பைத்தியமில்லை. ஞாபக மறதி. எங்க இருக்கோம். என்ன பண்றோம்னு தெரியாம பண்றவங்களுக்குப் பேருதான் நீங்க சொல்றது. இவனுக்கு நாளைக்கே கூட நினைவு திரும்ப வாய்ப்பிருக்கு.” என்றார் கான்ஸ்டபிள் சொன்ன வார்த்தையை பொருக்க மாட்டாதவராக.

“சரி சார். கோபப்படாதீங்க… நமக்கு தெறிஞ்சதை தான சொல்லமுடியும்.”

“அப்படியில்லை சார். பையனுக்கு சின்ன வயசு. அதுதான் அந்த வார்த்தையைக் கேட்டதும் பொறுக்க முடியல. மனிதாபிமானத்தோட யோசிக்கலாம்ல.”

“ம்ம்… பத்து நாள் ஸ்டேஷன்ல வந்து உக்காந்து பாருங்க. நாலு ஆக்ஸிடென்டு, ரெண்டு கொலைக்கேசு, நாலு அடிதடி, வெட்டு குத்து, பத்து திருட்டுப் பயலுகன்னு பாருங்க… மனிதாபிமானம் எங்க போகுதுன்னு பாக்கலாம்.” என்று கூறிவிட்டு சிறித்தார்.

இடத்திற்குத் தகுந்த மனநிலை. வாய் பேசுவதைவிட கை அதிகம் பேசுமிடம். சண்முகமும் அதற்கு மேல் பேசாமல் தான் வந்த விவரத்தைக் கூறினார். 

சண்முகம் அந்தப் பகுதியில் கொஞ்சம் பரிட்சயமானவர் என்பதால் இவரிடம் அதிக கேள்விகள் கேட்கவில்லை. காவல் நிலையத்தில் முறைப்படி எழுதிக் கொடுத்துவிட்டு, உறவுக்காரர்கள் வந்தவுடன் ஒப்படைக்க ஒப்புதல் அழித்துவிட்டு, அவனை அழைத்து வந்து விட்டார். விபத்து நடந்த சுற்றுவட்டார காவல் நிலையங்களிலும் இவனுடைய அடையாளத்துடன் எந்த புகாரும், காணவில்லை பிரிவில் பதிவாகவில்லை.

புதிய இடம். அவனை ஆர்வமாய் பார்வையிட்ட சிறு பிள்ளைகள். அவர்களோடு ஆதியாவும் அன்று அங்கிருந்தாள். அவனுக்கு பரிட்சயமான இருவரில் அவளும் ஒருத்தி என்பதால் அவளைப் பார்த்ததும் ஒரு சிநேகப்புன்னகை புரிந்தான்.

சண்முகம் லஷ்மியையும், மற்றவர்களையும் அவனுக்கு அறிமுகப்படுத்தியவர், பிள்ளைகளிடமும் அவனை அறிமுகப்படுத்தினார்.

புதிதாக ஒரு உறவு வந்ததில் அவர்களுக்கும் சந்தோஷம். 

“வாப்பா… முதல்ல வந்து குளி. அப்பதான் உடம்பும் மனசும் சுறுசுறுப்பாகும்.” என‌ லஷ்மி அழைத்தார். குளியலறையில் வெந்நீர் விளாவி வைத்தார்.

காலில் ஈரம் படாமல் நாற்காலியில் தூக்கி வைத்துவிட்டு, சங்கோஜமாக உணர்ந்தாலும் வேறுவழியில்லாமல் சண்முகம் மற்றும் சதீஷின் உதவியுடன் குளித்துவிட்டு வந்தான்.

“இப்போதைக்கு இதைப் போட்டுக்கப்பா.” என்று சண்முகத்தின் வேட்டி சட்டையை லஷ்மி கொடுத்தார். 

அவனை ஒருமுறை ஆழ்ந்து நோக்கியவர், “ஏங்க… பையனப் பாத்தா பெரிய வீட்டுப்புள்ள மாதிரி இருக்கேங்க. தாடியும், முடியுமா இருக்கறப்பவே அம்சமா இருக்கானே?” என்று சண்முகத்திடம் மெதுவாக கூற,

“நானும் அப்படிதான் நினைக்கிறேன். கூடிய சீக்கிரம் தேடி வந்துருவாங்க.” எனக் கூறினார்.

குளித்துவிட்டு வந்தவனை சூழ்ந்து கொண்டு பிள்ளைகள் ஆளுக்கொரு கேள்வியாகக் கேட்டனர். எங்கிருந்து வந்திருக்கீங்க? உங்கபேரென்ன? என்ன படிச்சிருக்கீங்க? இப்படி பட்டியல் நீண்டது. 

“பிள்ளைகளா… அண்ணாகிட்ட அப்புறமா கேள்வி கேட்டுக்கலாம். இப்ப அண்ணன் சாப்பிட்டு ரெஸ்ட்டெடுக்கட்டும்.” என்று லஷ்மி கூற,

“சரிம்மா. பேரையாவது சொல்லச்சொல்லுங்க.” என்றது விடாப்பிடியாக ஒரு சின்ன வாண்டு.

“ஆன்ட்டி! நீங்க என்ன‌ சொன்னாலும் கேக்க மாட்டாங்க. என்ன பேருன்னாவது சொல்லி அனுப்புங்க.” என்று ஆதியா கூற,

“அதானே… நமக்கும் கூட கூப்பிடறதுக்கு பேரு வேணுமில்ல. வாப்பா போப்பானேவா கூப்பிட முடியும்.” என்று லஷ்மி கூறினார்.

 பிறகு அவரே யோசித்து, “கண்ணானு கூப்பிடலாம். மறுபடியும் அவங்க குடும்பத்தோட சேருகின்ற நேரம் வரும்வரைக்கும் கண்ணனா நம்ம கூட இருக்கட்டும்.” என்று பேரும் வைத்தார்.

பிள்ளைகள்‌சூழ அமர்ந்திருந்தவனைப் பார்க்கையில் ஆதியாவிற்கும் அப்படித்தான் தோன்றியது கோகுலக் கண்ணனாக.

மருத்துவமனை சூழலில் இருந்தவனுக்கு, இயற்கையோடு சேர்ந்த புதிய‌ இடம் பெரிய மாற்றத்தை மனதளவில் ஏற்படுத்தியது. அதுவும் கள்ளங்கபடமில்லா பிள்ளைகளோடு பழக ஆரம்பித்தவனுக்கு… அனைத்தும் மறந்த நிலையில்… அவனுக்கும் புதிதாக பிறந்த உணர்வு. 

தான் இங்கு வந்து சேர்ந்த நாளின் நினைவுகளோடு லஷ்மியை எதிர் கொண்டவன், “நீங்க ஏம்மா வந்தீங்க… நானே வந்திருப்பேனே?” என்றான் காஃபி டம்ளரைக் கையில் வாங்கியவாறே.

“ரொம்ப நேரமா நின்னுட்டு இருக்கியே. கால் வலிக்கலையா?”

“வயல்வெளியப் பாத்துட்டு இருந்தா கால் வலியெல்லாம் பறந்திடுது. வலியொன்னும் முன்ன மாதிரி இல்லைமா.”

“இன்னைக்கி உன்ன டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போகணும்னு சொன்னாங்கள்ல. குளிச்சுட்டு ரெடியாகு கண்ணா. இன்னைக்கு ஞாயித்து கிழமைங்கிறதால ஆதியாவுக்கும் காலேஜ் லீவு. அதனால ஆதியாவும் கூடவர்றதா சொல்லியிருக்கு.”

“சரிங்கம்மா.” என்றவாறு காபியைக் குடித்தவன் குளிக்க சென்றான். இப்பொழுதெல்லாம் காலில் ஈரம் படாமல் தானாகவே குளிக்கப் பழகிக் கொண்டான்.

பிள்ளைகளும் எழுந்து தங்கள் காலைப்பணிகளை மேற்கொண்டனர். இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், இந்த ஒருநாள் மட்டும் பிள்ளைகளுக்கு மோட்டார் பம்ப்செட்டில் குளிக்க சண்முகம் அனுமதி கொடுத்திருந்தார். அதுவும் சற்று பெரிய பிள்ளைகளுக்குதான். சிறுபிள்ளைகளுக்கு தண்ணீர் ஓடும் வாய்க்காலில் குளிக்க தான் அனுமதி. சண்முகமும் உடனிருப்பார்.

வயல் வேலைக்கு வருபவர்களும் பார்த்துக் கொள்வர்.

ஆட்டமும் பாட்டமுமாக குளித்துவிட்டு வந்த பிள்ளைகள், சாப்பிட்டுவிட்டு விளையாட சென்றனர்.

“ஆதிக்கா வந்துட்டாங்க… எல்லோரும் வாங்க…” என்று சதீஷின் கூக்குரல்.

ஆதியா அப்பொழுதுதான் ஸ்கூட்டியில் பாப்பாத்தியோடு வந்து இறங்கினாள்.

“ஏன்டா இப்படிக் கத்துற?” என சற்று அதட்டலாகக் கேட்டவாறே லஷ்மி வந்தார்.

“அம்மா நாங்கெல்லாம் காக்கா மாதிரி. ஒரு வடையப் பாத்தாலே ஊரையே கூப்பிடுவோம். ஆதிக்கா வந்திருக்காங்கள்ல. சாக்லேட்டோட வந்திருப்பாங்க. அதுதான் எல்லோரையும் கூப்பிடுறேன்.”

தன் பெற்றோருடன் இங்கு வரும் பொழுதெல்லாம் சாக்லேட்டோடு வருவது ஆதியாவின் வழக்கம். சதீஷும் அதை எதிர்பார்த்துதான் பிள்ளைகளைக் கூப்பிடுகிறான் எனத் தெரிந்துதான் லஷ்மி, சதீஷை அதட்டியது.

பிள்ளைகளின் எதிர்பார்ப்பை அறிந்தவள் சாக்லேட்டோடு தான் வந்திருந்தாள். 

“டேய் சதீஷ்… இப்ப தான்டா நீ காக்காங்கற உண்மைய ஒத்துகிட்ட.” எனக் கூறியது அவர்களுள் ஒருத்தியான தேவி. 

அவன் கொஞ்சம் கருப்பு என்பதால் அதைக் குறிப்பிட்டு கூறினாள்.

“ஒரு வருங்கால எம்.எல்.ஏ. வைப் பாத்து என்ன வார்த்தை சொல்லிட்ட.”

“இது எப்ப இருந்துடா?” என ஆதியா கேட்க,

”நேத்து இருந்துக்கா…சோழ பரம்பரையில் ஒரு எம்.எல்.ஏ.” என மேலே‌ பார்த்தவாறே கூற,

“ஏன்டா… நேத்து டிவில அமைதிப்படை படம் பாத்தியா?” என‌ ஆதியா கேட்டாள்.

“ஆமாக்கா.”

“டேய் அதுல ஹீரோ பேரும் அமாவாசை தான்டா.” என்று தேவி மீண்டும் கூற, அதைக்கேட்டு ஆதியா சிறிது நாட்களுக்குப் பிறகு அன்று தான் சிரித்தாள்.

“ஆதிக்கா சிரிக்காதிங்க. ஒரு அக்காவா இந்த எடத்துல என்ன சொல்லணும்?”

“என்னடா சொல்லணும்?”

“சதீஷ் கருப்பா இருந்தாலும் களையா இருக்கான்னு சொல்லணுமா… இல்லையா?”

“எப்படிடா மனசறிஞ்சு பொய் சொல்லுவாங்க? அப்படி சொன்னா நம்ம மனசே நம்மைச் சுடும்னு வள்ளுவர் தாத்தா சொல்லியிருக்காருல.” என்று தேவி கூற,

“ம்ம்… அவரே தான் நன்மைக்காக பொய் சொல்லலாம்னும் சொல்லியிருக்கார்.” என்றான்.

“அப்படினா பொய்யாவாவது நீ அழகன்னு சொல்லச் சொல்றியா?” என்றாள் ஆதியா.

“ஒரு பொய்யாவது சொல் அக்கா… அழகன் நான் தானென்று… அந்தப் பொய்யில்… உயிர் வாழ்வேன்,” என்று அவன்‌ பாட ஆரம்பிக்க,

“டேய்… போதும்டா நிப்பாட்டு. வரவர உன் இம்சை தாங்கலை.” என்று தேவி கூறினாள்.

பதின்பருவத்தின் தொடக்கத்தில் இருப்பவன். ஆர்வக் கோளாறு காட்டும் பருவம். யோசிக்காமல் பேசிவிட்டு யோசிக்கும் பருவம். இப்பொழுதெல்லாம் தனது தோற்றத்தில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்திருப்பதால், நான் எப்படி இருக்கிறேன் என்று அடிக்கடி கேட்டு உடனிருப்பவர்களை தொல்லை செய்து கொண்டிருக்கிறான்.

“டேய் சதீஷ்… லார்ட் கிருஷ்ணா மாதிரி கருப்பா இருந்தாலும் நீ அழகன்டா.” என்று ஆதியா கூற

“ம்க்கும்… நம்ம வீட்டுக்கு வந்திருக்கிற கண்ணன் கலரால இருக்காரு.” என்றான்.

“என்ன… என் பேரு அடிபடுது?” என்று கேட்டவாறே சாப்பிட்டு விட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தவன் வெளியேவர,

“ஆதிக்கா… நானும் ஒரு நாளைக்கு நாலு தடவை குளிச்சு… இந்த கண்ணா அண்ணா கலருக்கு வரல, என்பேரு சதீஷ் இல்ல.” என்று தொடை தட்டி சபதம் செய்தான் சதீஷ்.

“ஏன்டா சதீஷ்? நானெல்லாம் உனக்கு போட்டியா? நீ எவ்ளோ பெரிய ஆளு. எதிர்கால எம்எல்ஏ. உன்கூட போட்டி போடுற அளவுக்கு நான் பெரிய ஆளில்லைப்பா.” என்று கண்ணன் கூற,

“அது… அந்தப்பயம் இருக்கணும்.” என்று சதீஷ் சட்டைக் காலரைத் தூங்கிவிட்டுக் கொண்டான்.

அப்பொழுது தான்‌ ஆதியாவும், கண்ணனைக் கவனித்தாள். முடிதிருத்தம் செய்து, ஷேவ் செய்யப்பட்ட முகத்துடன் பளிச்சென்று, ஒருகையில் வாக்கிங் ஸ்டிக் தாங்கிய‌ நிலையிலும் தோரணையாகவே தோற்றமளித்தான்.

இப்பொழுதுதான் சதீஷ் பேச்சின் அர்த்தம் புரிந்தது. பதின்பருவத்தில் இருப்பவனுக்கு இவனுடைய தோற்றம் ஈர்ப்பை ஏற்படுத்தியிருக்க‌ வேண்டும். அதனால் தான் இவனைப்போல ஆகவேண்டுமென ஆவல் அவன் மனதில் எழுந்துள்ளது என எண்ணினாள். அப்பருவத்திற்கே உரிய ஆசை.

“எப்படி இருக்கீங்க கண்ணன்?” என ஆதியா நலம் விசாரிக்க,

“ரொம்ப நல்லா இருக்கேங்க. அன்னைக்கு மட்டும் உங்க ரெண்டு பேரையும் ஹாஸ்பிடல் ல சந்திக்கலைனா என் நிலைமையை நினைச்சு பாக்ககூட முடியலை.” என்றான், அன்றைய நாளின் நினைவில்.

“முடியாததை செய்யாதிங்க… விட்ருங்க.”

“என்ன சொல்றீங்க?” புரியாமல் கேட்க,

“இல்ல… நினைச்சு பாக்கமுடியலைனு சொன்னீங்கள்ல. அதைச் சொன்னேன். முடியாததை செய்வானேன். முடிஞ்சதைப் பண்ணுவோம்.”

“ஆமா, ஆதிக்காகூட அதைத்தான் பண்ணுவாங்க. இங்க வந்தாலே வேர்க்கடலை பறிச்சு திங்கறது, மாங்கா அடிச்சு திங்கறதுனு. சரஸ்வதி டீச்சர் கூட உனக்கு என்ன முடியுமோ அதை மட்டும் பண்றேன்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க.” என சதீஷ் ஆதியாவை கேலி செய்ய,

பிள்ளைகளுடன் கலந்தவள் இப்பொழுதுதான் சற்று தன்னிலை மறந்தாள். சதீஷின் பேச்சு பெற்றோரை நினைவூட்ட, மீண்டும் சோர்வாய் அவள் முகம்.

அவனின் பேச்சைக் கேட்ட‌ லஷ்மி, “டேய் சதீஷ்!” என அதட்ட,

அவனுக்கும் அப்பொழுதுதான் சூழ்நிலை புரிந்தது. “சாரிக்கா நான் பழைய ஞாபகத்திலேயே பேசிட்டேன். ப்ளீஸ்க்கா சாரிக்கா… சாரிக்கா…” எனப் பலவாறாக தவிப்புடன் சிறுபையன் மன்னிப்புக் கேட்க,

“சரி விடுடா. உங்க டீச்சரோட வசவக் கேக்காம நானும் மிஸ் பண்ணினேன். அவங்களுக்குப் பதிலா நீ ஆரம்பிச்சிருக்க.” என்று சூழ்நிலையை அவளே இயல்பாக்கினாள்.

லஷ்மி ஆதியாவிடம் கவனித்த ஒன்று, அவளிடம் முன்பிருந்த சிறுபிள்ளைத் தனம் இப்பொழுது இல்லை என்பதைத்தான். 

கண்ணனும் வேதனையை உணர்ந்தான் அவள் வாடிய முகம் கண்டு.

தனது வண்டியை நோக்கி சென்றவள் ஒரு கவரை எடுத்து வந்து கண்ணனிடம் நீட்டினாள். 

“என்னங்க இது?” எனக்‌கேட்டவாறே கவரைப் பிரிக்க, அதில் டீஷர்ட்ஸ் இருப்பதைக் கண்டவன்,

“உதவிக்கு கையும் கொடுத்து, உடுக்கையும் கொடுக்கறீங்க. ரொம்ப நன்றிங்க.” என்றான்.

“இந்தக் காலோட பேண்ட் போட சிரமமா இருக்கும். லுங்கிதான் இப்போதைக்கு ஈஸியா இருக்கும். அதனால தான் டிஷர்ட் மட்டும் எடுத்துட்டு வந்தேன்.” என்றவள், “அங்கிள் புக்ஸ் நிறைய படிக்கக் கொடுத்தாரா?” என்றாள். அவன் கூறியதை கேட்டவள்.

சண்முகமும் அவனை அழைத்து வந்த மறுநாளே சில புத்தகங்களை அவனிடம் கொடுத்தவர், “எதையும் அதிகமா யோசிக்காதே. முதலில் சிந்தனை அமைதியானால் தான் எடுக்கும் முடிவுகளும் சரியா இருக்கும். நிதானமாக இந்த புத்தகங்களைப் படி.” என்று கொடுத்தார். அவனும் அவ்வாறே புத்தகங்களைப் படிக்க ஆரம்பிக்க, வெற்றுக் குடுவையாக இருந்த அவனது மூளையும் போட்டதை தன்னகத்தே நிரப்பிக் கொண்டது.

“ஆமாங்க… அதனால்தான் கொஞ்சம் மனசும் அமைதியா இருக்கு. இல்லைனா யோசிச்சே அடுத்த‌ நிலைக்குப் போயிருப்பேன்.”

“அப்படியெல்லாம் சொல்லாதிங்க கண்ணன். இதுவும் கடந்து போகும். சீக்கிரம் உங்க குடும்பத்தோட சேந்துருவீங்க.”

“ஆமா… நம்பிக்கைதானே வாழ்க்கை. அதானே எல்லாம்.” என சதீஷ் இடையில் வந்தான். அவனுக்கு இவன் நிலை முழுதும் புரியவில்லை என்றாலும்,‌ ஓரளவுக்கு புரிந்து கொண்டான்.

“இவன் ஒருத்தன் போதுங்க. எப்பவும் நம்ம கவலை நமக்குத் தெரியாம போறதுக்கு.”

இவர்கள் பேசிக் கொண்டிருக்க சண்முகம் அங்கு வந்தார். “ஆதியா சாப்பிட்டியாமா?” என்று கேட்க,

“இந்தப் பயல் பண்ணுன கூத்துல நான் கூட கேக்க மறந்துட்டேன் பாருங்க.”‘ என்று லஷ்மியும் வருத்தப்பட,

“நானும் பாப்பாத்தி ஆன்ட்டியும் சாப்பிட்டுதான் வந்தோம். நீங்க வருத்தப்படாதிங்க ஆன்ட்டி.” என்றாள்.

“அங்கிள், எப்ப கிளம்பணும்? நம்ம சாரதா டாக்டர்கிட்ட தான.”

“ஆமாம்மா! இப்பவே கிளம்பலாம்,” என்றார்.

டாக்டர் சாரதா ஒரு பொதுநல மருத்துவர். சண்முகம் குடும்பத்திற்கு நன்கு பரிட்சயமானவர். அவரிடம் முதலில் கண்ணனைக் காண்பித்து விட்டு, அவர் கருத்துப்படி அடுத்து என்ன செய்யலாம் எனத் தெறிந்து கொள்ளவே இப்பொழுது அங்கு செல்வது.

கண்ணனும், சண்முகமும் ஆட்டோவில் செல்ல, ஆதியா அவர்களை தனது ஸ்கூட்டியில் பின் தொடர்ந்தாள்.

ஏற்கனவே ஃபோனில் தகவல் சொல்லியிருந்ததால், உடனே அழைக்கப்பட்டனர்.

“வணக்கம் டாக்டர்.”

“வாங்க சண்முகம். எப்படி இருக்கீங்க.” என வரவேற்றவர், “ஆதியா எப்படிமா இருக்க?” என்று அவளையும் விசாரிக்க,

“ஃபைன் டாக்டர்.” என்றாள் ஆதியா.

“இவர் தான் நீங்க சொன்ன கண்ணனா?” எனக் கேட்க, கண்ணனும், “குட்மார்னிங் டாக்டர்.” எனக் கூறினான். சண்முகம் அனைத்து விபரங்களையும் ஏற்கனவே தொலைபேசி மூலம் தெறிவித்திருந்தார்.

“ஆமா டாக்டர். ஞாபகம் வர்றதுக்கான ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கணும்.” என்று சண்முகம் கூற,

“ஏதாவது ரிப்போர்ட்ஸ் இருக்கா. ஸ்கேன் ஏதாவது எடுத்திருக்கா?”

“இன்னும் எந்த டெஸ்ட்டும் எடுக்கல டாக்டர்.”

“ஆக்ஸிடென்ட்ல எந்த அளவுக்கு ஹெட் இன்ஜுரி ஆகியிருக்குனு பாக்கணும் சண்முகம். அதுக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேனோ, அல்லது சி.டி ஸ்கேனோ எடுக்கணும். நியூராலஜிஸ்ட்டப் பார்த்தால்தான் பாதிப்பு எந்தளவுக்கு இருக்குனு சொல்லுவாங்க.”

“நினைவு திரும்ப எந்தளவுக்கு சான்ஸ் இருக்கு டாக்டர்?” என ஆதியா கேட்க,

“அம்னீசியா பொதுவா ரெண்டு வகை, ஆதியா. ஒன்னு நியூராலஜிக்கலா எஃபெக்ட் ஆகிறது. ஆக்ஸிடென்ட், மேல இருந்து விழுகிறது அந்த மாதிரி பாதிப்பு ஒரு வகை. இன்னொன்று சைக்யாட்ரிக் டிஸ்ஸார்டர். மனநிலை பாதிப்பு, வயோதிகம், ஆல்கஹால் இதனால் வருவது. முதல் வகையில் ப்ரைன் இன்ஜூரி ஹீலாகறதைப் பொறுத்து சீக்கிரமா நினைவு திரும்ப சான்ஸஸ் இருக்கு.” என்று நீண்டதொரு விளக்கத்தை அவர்களுக்குக் கொடுத்தார்.

“ஓகே டாக்டர். ஸ்கேனிங்க்கு எழுதிக் கொடுங்க.” என்று சண்முகம் கேட்க,

“முதல்ல நீங்க போய் நியூராலஜிஸ்ட்டப் பாருங்க. அவரு என்ன சொல்றாரோ அதுப்படி டெஸ்ட் எடுக்கலாம். இப்ப கோவையில பெஸ்ட்டா டாக்டர் நாராயணன் இருக்கார். நானும் ஃபோன் பண்ணி சொல்றே.” எனக் கூறியவரிடம் மேலும் சிலபல விபரங்களைக் கேட்டுக் கொண்டு வெளியேறி வந்தனர்.

டாக்டரை சந்தித்ததில் இருந்து கண்ணனின் முகம் யோசனையைத் தத்தெடுத்து.

அதைக் கவனித்த ஆதியா, “என்ன கண்ணன்… ஏதோ பலமா யோசிக்கறிங்க போல.” நர்ஸிங்ஹோம் முன்பு போடப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்தவாறே அவனைப் பார்த்து கேட்டாள். சண்முகம் ஆட்டோ அழைக்க சென்றுவிட்டார்.

பக்கத்து இருக்கையில் அமர்ந்தவனும், “ஆமாங்க… சார் இருக்க இடம் கொடுத்திருக்கிறார். மேலும் பணச்செலவு வைக்கிறது கொஞ்சம் கஷ்டமா இருக்கு.”

“அதெல்லாம் அங்கிள் சமாளிப்பார். அப்படி இல்லைனா நான் உங்களுக்கு ஹெல்ப் பண்ணப் போறேன். இதுக்கு எதுக்கு வருத்தப்படுறிங்க?”

“நீங்களும் இப்பதான் உங்க பெத்தவங்களை இழந்திருக்கீங்க. அவங்க உங்களுக்குனு விட்டுட்டுப் போனதை ஏங்க செலவு பண்றீங்க. அதெல்லாம் வேண்டாங்க,” என்றான். அவர்களுக்கு அதிகப்படியான சுமையாகி விடுவோமோ என்ற எண்ணத்தில்.

“ஒரே ஆக்சிடென்ட் தாங்க. அதுல ரெண்டு பேருமே அவங்கவங்க குடும்பத்தை இழந்திருக்கோம். ஆனா என்னோட பேரன்ட்ஸ மீட்க முடியாது. உங்களப் பெத்தவங்களோட உங்கள சேக்க என்னாலான உதவியைப் பண்ணலாம்னு நினைக்கிறே.” என்றாள் இழப்பின் வலி அறிந்தவளாய்.

“என்னைப் பெத்தவங்க ஏதோ பெரிய புண்ணியமாப் பண்ணியிருக்காங்க போலங்க. அதுதான் உங்களை மாதிரியானவங்க கண்ணுல பட்டுருக்கேன்.”

“சரி… சரி… ரொம்ப ஃபீல் பண்ணாதீங்க. ஓவர் ஃபீலிங் உடம்புக்காகாது.”

இவர் பேசிக் கொண்டிருக்கையில், சண்முகமும் ஆட்டோ அழைத்து வந்துவிட, மூவரும் வீடு திரும்பினர்.

அங்கு தவிப்பாய் பெற்றமனம். இங்கு தகவல் சொல்ல முடியாமல் பிள்ளைமனம். 

2 thoughts on “நெஞ்சம் மறப்பதில்லை 11”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top