“பார்த்தி… அந்தப்பிள்ள பேர் என்னடா?”
“நான்ஸி சாமுவேல்!”
“பேரே நான் சிங்கா இருக்கேடா. உங்க அப்பா பேரக் கேட்டாலே ஆடுவாறே. வேற ஸ்டேட்டுன்னு தானடா சொன்ன?” அருகில் இருந்தவனிடம் பல்லைக் கடித்தான்.
“ஏன் கேரளா வேற ஸ்டேட் இல்லையா? வேல்ச்சாமியத் திருப்பி போட்டா சாமுவேல்.” எப்படி என்பது போல் கித்தாய்ப்பாய் பார்க்க, அவனை மேலும் கீழும் ஒரு மார்க்கமாகப் பார்த்தவன்,
“காதல்னு வந்துட்டா மட்டும் மூளை கண்ணாபின்னானு யோசிக்குதுல்ல. நீ குழாப்புட்டு சாப்பிட ஆசப்பட்டு, என்னை மொத மொதன்னு என் பொண்டாட்டி கையால டீ குடிக்க வச்சுட்டியேடா பாவி!” பக்கத்தில் இருந்தவனை சகட்டுமேனிக்கு கழுவி ஊத்தினான் புது மாப்பிள்ளை. எதையும் சட்டை பண்ணாமல் முகத்தில் நிரந்தர சிரிப்போடு அமர்ந்திருந்தான் பார்த்தி.
இத்தனை நாள் மறைத்து வைத்திருந்த தனது காதல் வெளிப்பட்ட சந்தோஷம் அவனுக்கு. இனி எப்படியும் கை கூடிவிடும் என்ற நம்பிக்கை. ‘என்னைக்குனாலும் நடக்க வேண்டிய பஞ்சாயத்து. இன்று நடக்கிறது. இது எல்லாம் ஏற்கனவே எதிர்பார்த்ததுதான்’ என்பதால் அவனிடம் துளியும் பதட்டம் இல்லை.
இதெல்லாம் என் கல்யாணத்துல தான் நடக்கணுமா என்ற ஆற்றாமை நம்ம தண்டபாணிக்குதான். என்ன செய்வது அவனுக்கு வாய்த்த மாமன் மச்சானெல்லாம் அப்படி.
கலையரசி எல்லோருக்கும் டீ போட்டு எடுத்து வர, இலக்கியாதான் அவரிடமிருந்து வாங்கி எல்லாருக்கும் கொடுத்தாள்.
அவருக்கு டம்ப்ளர்களை தட்டில் வைத்து மொத்தமாக எடுத்து வந்தெல்லாம் பழக்கமில்லை. டீயைப் போட்டு குண்டானோடு ஹாலுக்கு எடுத்து வந்துவிடுவார். ஒவ்வொரு டம்ப்ளராக ஊற்றிக் கொடுப்பார். அவர் ஊற்றி வைக்க இலக்கியா எடுத்து கொடுத்தாள். ஏற்கனவே வந்து சென்ற வீடு என்பதால் சற்றே இயல்பாக இருக்க முடிந்தது.
இன்னும் கல்யாணப் பட்டிலேயே இருக்க, நகை அலங்காரங்களை மட்டும் தான் கனமாக இருப்பதாக கலைந்திருந்தாள். தலை அலங்காரமெல்லாம் செயற்கை பூக்களுடன் சற்றே வாடிய மல்லிச்சரமும் சேர்ந்து அப்படியே இருந்தது. ஜானகியும் அவளோடு சேர்ந்து கொள்ள அனைவருக்கும் டீ விநியோகம் நடந்தது. ஜானகியின் கண்கள் ஒருவனை மட்டும் காணாமல் தேடியது.
தண்டபாணியிடம் குனிந்து நீட்டும் பொழுதே புதுமாப்பிள்ளை அவளை ஏக்கமாகப் பார்த்தான். ‘டீ கொடுக்க வேண்டிய நேரமா இது. பாலும் பழமும் கைகளில் ஏந்திவர வேண்டிய வேளையில் டீ எடுத்துட்டு வர வச்சுட்டானே!’ அவனது ஏக்கம் கலந்த பார்வையே நினைப்பை பட்டவர்த்தனமாக்கியது. இதழுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு அடுத்தவருக்கு கொடுக்க சென்றாள்.
பார்வை அவளையே பின் தொடர,
பார்த்தி, “மாப்ளே! உனக்கு கல்யாணமே முடிஞ்சுறுச்சு. இன்னும் பொண்ணு பாக்குற ஃபீல்லயே பாக்குற?” குனிந்து காததோரம் கிசுகிசுக்க,
“கல்யாணம் முடிஞ்சதே நீ சொல்லித்தான்டா தெரிய வேண்டியிருக்கு. தாலி கட்டியதும் ஆரம்பிச்ச பஞ்சாயத்து. இன்னும் முடியல!” அக்னி ஜ்வாலையோடு இவன் பார்த்த பார்வையில் பார்த்தி பஸ்பமாகததுதான் பாக்கி.
வேலை சம்பந்தமாக மூன்று மாதங்கள் ஆன்சைட் போக வேண்டிய வாய்ப்பு பார்த்திக்கு வந்தது. அங்குதான் நான்ஸியைப் பார்த்தான். அவளும் அதே கம்பெனிக்கு அவளது டீமுடன் வந்திருந்தாள். சேர்ந்து பழக சந்தர்ப்பம் அமைந்தது. முதலில் ஒரே தேசம் என்ற தேசப்பற்றில் பழக ஆரம்பித்தனர்.
“இந்தியான்னா எங்க?”
“சௌத் சைட்!”
“சௌத் சைட்ல…”
“தமிழ்நாடு…”
“ஹோ… நான் கேரளா!”
“ஹோஓ…”
“ஆனா… எங்களுக்கும் பூர்வீகம் தமிழ்நாடுதான்”
“தமிழ்நாட்ல எங்க?”
“பழனி பக்கம்!”
“கேரளாவுக்கும் பழனிக்கும் நல்ல கனெக்ஷன். எப்படி சபரி மலைக்கும் தமிழ் நாட்டுக்கும் நல்ல கனெக்ஷனோ அது மாதிரி!”
“ஆமாமா… எங்க அம்மா கூட அடிக்கடி பழனி முருகன் பத்தி சொல்லுவாங்க. ஆனா நான் போனதில்ல!”
“சாமி எல்லாருக்கும் பொதுதான். ஸ்கூல் படிக்கும் போது ஃப்ரென்ட்ஸ் கூட சர்ஜ்கெல்லாம் போயிருக்கேன்.”
“அப்படியெல்லாம் எதுவுமில்ல. எங்கம்மா இந்துதான். எங்கப்பா தான் கிரிஸ்டியன். லவ் மேரேஜ்!”
“ஹோஓ… பழனில பிரபலமான பஞ்சாமிர்த கடை எங்க மாமா குடும்பத்தோடதுதான்!”
“ஹோ…” இப்பொழுது இவளது ஹோஓ…வில் ஸ்ருதி குறைந்தது. அவளது முகமாற்றம் பார்த்து காரணம் கேட்க,
“எங்கம்மாவுக்கும் அவங்க சொந்தம் தான்” என்றதில்,
அடுத்து இவனுடைய “ஹோ…” விலும் ஸ்ருதி குறைந்தது.
நதிமூலம், ரிஷி மூலம் ஆராய இருவரும் ஒரே குட்டை எனத் தெரியவர பிறகென்ன, பேச்சுப் பறிமாற்றம் எல்லை கடந்து அயல் தேசத்திலேயே ஒருவரை ஒருவர் நேசத்தைப் பறிமாறிக் கொண்டனர்.
இருவரும் சேர்ந்தே இந்தியா திரும்பினர். நேரே சென்றது நான்ஸி வீட்டிற்கு தான். பிறந்த வீட்டு சொந்தத்தைப் பார்த்ததில் பாக்யலஷ்மிக்கு பரமானந்தம்.
ஆனால் மகள் காதலிக்கிறாள் என்றதும் தான் சற்றே இடித்தது. இன்னும் தன்னையே ஏற்றுக் கொள்ளாத சொந்தபந்தம் மகளை அவர்கள் வீட்டு மருமகளாக ஏற்றுக் கொள்ளுமா? அதிலும் பெருமாள்சாமி அண்ணனா… கௌரவம் கௌரவம்னு தோள்ல சால்வை போடாதா குறையாக பாடுவாரே. இருந்தாலும் உள்ளூர ஆசைதான். இதுவே மீண்டும் உறவுகளுடன் இணைய பாலம் வகுத்துக் கெடுக்காதா என்று.
பார்த்தி தான் தண்டபாணி திருமணத்தை காரணம்காட்டி இவர்களை வருமாறு அழைத்தது. தணிகைவேல் பெயரிலேயே பத்திரிகை அனுப்பி வைக்க, மனம் கொள்ளா சந்தோஷத்தோடு இதோ வந்து இறங்கிவிட்டனர்.
“எங்களுக்கு சம்மதம்தான் பெரியம்மா. அண்ணன் தான் சம்மதிக்கணும். எங்களுக்கு எங்க பிள்ளை சந்தோஷம்தான் முக்கியம்! பெரியவங்க நீங்க பாத்து சொல்லுங்க!” பாக்யலஷ்மி நேராக வழக்கை அய்யம்மாவிடம் முன் மொழிந்தார்.
“ஏன் சம்மதிக்க மாட்டீங்க. நல்ல வசதியான, சம்பாதிக்கற ஒத்தப் பிள்ளை. கசக்குமா என்ன?” பெருமாள் சாமி குதர்க்கமாகப் பேச,
“அப்பா… நான்ஸிக்கு என்னைவிட சம்பளம் அதிகம் ப்பா! அவங்களுக்கும் கேரளாவுல ரப்பர் எஸ்டேட்டே இருக்கு!” என்றான் எல்லார் முன்னும்.
“உன்னைவிட அதிகமா சம்பாதிக்கற பொண்ணு உன்னை எப்படிடா மதிக்கும்? அப்பறம் நீ தான் வீட்ல துணி தொவச்சு, பாத்திரம் கழுவணும்!”
“செஞ்சா என்னப்பா. அதெல்லாம் அவ்ளோ கேவலமான வேலையா. அந்த கேவலமான வேலைய பொண்ணுங்க மட்டும் பாக்கலாமா? நம்ம வீட்டு வேலை நம்மதானே பாக்கணும்! ரெண்டு பேரும் வேலைக்கு போற இடத்துல இதெல்லாம் சாதாரணம்ப்பா.”
“வியாக்யானம் பேச நல்லாதான் இருக்கும். குடும்பத்துக்கு ஆகாது. அதுவுமில்லாம கும்புடுற சாமிலருந்து வேற வேற. சரிப்பட்டுவராது.” தன் பிடியில் நிலையாக நிற்க,
“அவங்க வீட்ல ரெண்டு சாமியும் கும்புடறாங்கப்பா!”
“அப்போ என்னையும் கும்புடச் சொல்றியா? நீ எப்படா வீடு வரைக்கும் போய் பாத்த. அந்தளவுக்கு போயாச்சா?” கழுத்தறுத்த கோழி போல் துள்ளினார்.
இப்படியே ஆளாளுக்கு மாற்றி மாற்றிப் பேச, பேச்சுதான் வளர்ந்ததே ஒழிய இப்போதைக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. பெருமாள்சாமி ஒரேடியாக மறுப்பு தெரிவிக்க, அதற்குள் பழனி, அய்யம்மாவை ஃபோனில் அழைத்திருந்தாள்.
“அம்மாச்சி… இன்னும் என்ன வழவழன்னு பேசிக்கிட்டு. அடுத்து நடக்க வேண்டியதப் பாருங்க. அவங்க பஞ்சாயத்து நாளைக்கி பாக்கலாம். என்ன சொன்னாலும் ரெண்டு பேரும் இறங்கிவர மாட்டாங்க!”
“என்னை என்னடீ பண்ணச் சொன்ன? உங்க மாமா முடியாதுன்னு ஒத்தக்கால்ல நிக்கிறான்!”
“அதெல்லாம் பார்த்தி மாமா முடிவு பண்ணிட்டாங்க. இதெல்லாம் சும்மா பம்மாத்து. வீடு வரைக்கும் வர வச்சவருக்கு கலியாணம் பண்ணத் தெரியாதா? மொதல்ல புதுசா கல்யாணமானவங்கள கவனிங்க. ஏதாவது பேசி பஞ்சாயத்த கலச்சு விடுங்க!” என்று பேசிவிட்டு அலைபேசியை வைக்க, சீனி கட்டை விடலை உயர்த்திக் காட்டி மணாட்டியை மெச்சிக் கொண்டான். அலங்கார வேலைகள் முடிய சீனி கீழே இறங்கி வந்தான்.
“பெருமாளு… உங்க அப்பனும் ஆத்தாளும் இப்ப இல்ல. அவங்க சார்புல கேக்குறேன்… பேரன் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லு. வீடு வரைக்கும் வர வச்சவனுக்கு கலியாணம் பண்ண எம்புட்டு நேரமாகும். உனக்கு மரியாதை கொடுத்து கேக்குறான்னா அதே மரியாதையை நாமலும் காப்பாத்திக்கணும். உனக்கு தெரியாம கல்யாணம் முடிச்சுட்டு வந்து நின்றிருந்தா என்ன பண்ணுவ? இந்தா… பாக்யாவையே ஒதுக்கி வச்சோம். அவ வாழாமப் போய்ட்டாளா என்ன. ஜம்முனு புள்ள குட்டியோட வந்து நிக்கிறா.” இதம் பதமாய் அய்யம்மா எடுத்துச் சொல்ல மேலும் முறுக்கினார் பெருமாள்சாமி.
விழுந்த புள்ளய கண்டுக்காம விட்டுட்டா அதுபாட்டுக்கு எந்திரிச்சு போயிறும். எப்போ நாம அது விழுந்ததப் பாத்தோமே அப்பதான் வீம்புக்கு அழும். சமாதானம் பண்ணப்பண்ண இன்னும் கொஞ்சம் காண்டெடுத்து கத்தும். கிட்டத்தட்ட பெருமாள்சாமியும் கீழே விழுந்த சின்னப்பிள்ளை மனநிலையில் தான் இருந்தார்.
“எனக்கு சம்மதமில்ல… வேணும்னா அவனா முடிச்சுக்கட்டும். தாலி கட்டுவானோ? மோதிரம் மாத்துவானோ? என்னை கூப்பிடக்கூடாது! என் பொண்டாட்டியும் வரமாட்டா!” அவர் பேச்சு இனி எடுபடாதென முன்பே அவருக்கு தெரிந்துவிட்டது. இருந்தாலும் வீம்பை விட்டுக்கொடுக்க மனமில்லாமல் மனைவியை தனது கட்சிக்கு கூட்டணி சேர்க்க,
“நான் எதுக்கு போகக்கூடாது. ஒத்தப் பய கலியாணம். அதக் கண்ணழகு பாக்காம இருந்து என்னத்த பண்ணப்போறேன். பாக்யா அண்ணி சொன்ன மாதிரி எனக்கு என் புள்ள சந்தோஷம்தான் முக்கியம்!”
எல்லார் முன்னும் தன் சம்மதத்தை தெரிவித்த பார்த்தியின் குடியிருந்த கோவில் பெருமாள்சாமியுடனான கூட்டணியை முறித்துக் கொள்ள, உறுப்பினர் இல்லாத கட்சியாக பெருமாள் சாமி தனித்து நின்றார்.
‘பாக்யா அண்ணியா!’ என்று மனைவியை அதிர்ந்து பார்த்தார்.
ஏதோ வட தேசத்திலிருந்தோ, இல்ல… இப்போ எல்லாம் ட்ரெண்ட் ஆகுதே கொரியன் மருமகள், சைனீஸ் மருமகள்னு அந்த மாதிரி கியா மியான்னு மைதா மாவுல செஞ்ச பொம்மை மாதிரி யாரையாவது இழுத்துட்டு வராம ஏதோ இந்த மட்டுக்கு நம்ம உறவுக்குள்ளேயே பார்த்துக் கொண்டானேங்குற ஆறுதல் தான் அவனுக்கு ஆதரவு தெரிவிக்க வைத்தது.
“பெருமாளு, அந்தக்கால மனுஷி… நானே சம்மதிக்கறே. இன்னைக்கி பொண்ணு கெடைக்காம அவனவன் அல்லாடுறான். லட்டு மாதிரி பொண்ணு கூட்டியாந்துருக்கான். உனக்கென்ன கசக்குதா?”
“எல்லாரும் ஒன்னு சேந்துட்டீங்க. எக்கேடோ கெட்டுப் போங்க.” தனது கொள்கை இனி செல்லுபடியாகாது எனத் தெரிந்து துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு சட்டசபை கலையும்முன் வெளிநடப்பு செய்தார். அவருக்கு நன்றாகத் தெரிந்து போயிற்று. எல்லார் ஆதரவும் மகனுக்குத்தான் என்று. தொண்டை கிழிய கத்தினாலும் வேலைக்கு ஆகப் போவதில்லை.
“பாத்துக்கலாம் விடுங்க… எங்க போயிறுவான். அடுத்து என்னானு கவனிங்க!” அய்யம்மா சபையைக் கலைக்க,
அதற்குள் இரவுச் சாப்பாட்டிற்கு ஹோட்டலில் சொல்லியிருந்த சாப்பாடும் வந்து இறங்கியது.
பார்த்தியும், ராகவனும் சேர்ந்து வந்த சாப்பாட்டை இறக்கி வைத்தனர்.
இரவு பந்திக்கு தயாராக… பழனி, ஜானகியை ஃபோனில் அழைத்து இலக்கியாவை மேலே அழைத்து வரச் சொன்னாள்.
இருவரும் மேலே செல்ல, “குளிச்சிட்டு சாரி மாத்திக்க இலக்கியா!” என்றாள்.
இலக்கியா அறையை சுற்றிமுற்றி பார்த்தாள். பூட்டியிருந்த அறைக்கதவைத் திறக்கப் போக, “இலக்கியா திறக்காதே!” பழனி, அவசரமாகத் தடுக்க என்னமோ ஏதோவென படக்கென கையை எடுத்துக் கொண்டாள்.
இவள் பயந்து முழிப்பதைப் பார்த்து சிரித்தவள், “என்ன வேணும் சொல்லு நான் எடுத்து தர்றேன்!” என்றாள்.
“அண்ணி… என் பேக் இங்க இல்ல. அதான் ரூமுக்குள்ள இருக்குமோன்னு…” என்று இழுக்க,
“பெட் ரூம்ல எதுவும் பாத்த மாதிரி இல்லயே!” என்றவளிடம்,
“ஒரு வேளை ராகவன் பேக்கோட இருக்கோ என்னவோ?” இலக்கியா சந்தேகமாகக் கேட்க,
“நீ குளி. ஜானகிட்ட கொடுத்துவிடுறேன். இவ வந்து தலையலங்காரம் கலைக்க உனக்கு ஹெல்ப் பண்ணுவா” என்றுவிட்டு கீழே இருவரும் செல்ல, ஜானகியிடம் இலக்கியா பேக்கை எடுத்துப் போகச் சொல்லிவிட்டு, அம்மாவிற்கு உதவ சென்றுவிட்டாள்.
ஜானகி, ராகவன் தங்கியிருந்த அறைக்கு செல்ல, அங்குதான் அமிர்தாவோடு சேர்ந்து எல்லா வாண்டுகளும் கொட்டமடித்தனர்.
“நாங்களும் இப்படித்தான்டீ உங்க அம்மா பின்னாடியே சுத்துவோம். நீயும் உனக்குனு ஒரு கேங் ரெடி பண்ணிட்ட! ஆச்சி எல்லாரையும் சாப்பிட கூப்டாங்க. ஐஸ்க்ரீமும் இருக்கு. ஓடுங்க” என்று விரட்ட, சடுதியில் வாண்டுகள் இடத்தை காலி செய்தன ஐஸ்க்ரீம் ஆசையில்.
அங்கே இரண்டு பேக் இருக்க, “இதுல அண்ணி பேக் எது?” என்று யோசித்தவள், திறந்து பாத்தா தெரியப்போகுது என்று குனிந்து ஒரு பேக்கின் ஜிப்பை இழுத்து திறக்க,
“என்ன பண்ற?” முதுகுக்குப் பின் கேட்ட குரலில் திடுக்கிட்டு, விசுக்கென நிமிர்ந்தவள் தள்ளாடி விழப்போனாள்.
“ஏய்… பாத்து” என கையைப் பிடித்து இழுத்து நிறுத்தினான்.
“வெள்ளப்பணியாரம், நீங்கதானா? இப்படியா பயமுறுத்துவீங்க!” படபடத்த நெஞ்சை நீவிக்கொண்டவளிடம்,
“என் பேக்க எதுக்கு ஓபன் பண்ற?”
“அப்படியென்ன ரகசியம் பேக்ல வச்சுருக்கீங்க?” என்றவளிடம்,
காலையில் மண்டபத்தில் குளித்து மாற்றிய ஈரத்துணியெல்லாம் உள்ளே இருக்கு என்றா சொல்லமுடியும். இங்கு வந்து காயப்போடலாம் என்றால் பஞ்சாயத்து பார்க்கவே சரியாய்ப்போயிற்று. இப்பொழுது பேக்கைத் திறந்தால் தெரியும் ஈரத்துணியின் சங்கதி.
“வெளியே அவ்ளோ பெரிய பஞ்சாயத்து போயிட்டிருந்தப்ப… உள்ள என்ன பண்ணீங்க?” என்றவளைப் பார்த்து ராகவன் புருவம் முடிச்சிட,
“எல்லாருக்கும் டீ கொடுக்கும் போது தேடினேன். நீங்க இல்ல!”
“ஹோ… அது உங்க குடும்ப விஷயம். அதான்…” என்று பாதியில் நிறுத்தினான்.
“அப்போ நீங்க யாரு? இனி இது உங்க அக்கா குடும்பம்னா உங்களுக்கும் தானே? ஒரு வேளை பொண்ணு கைவிட்டுப் போச்சேன்னு சோகத்துல தனியா வந்துட்டீங்களா?” என்றவளை புரியாமல் பார்க்க,
“அதான் உங்களுக்கு கொடுக்கறதா இருந்த பொண்ணைத்தானே, பார்த்தி அண்ணாக்கு எங்க பெரியப்பா பேசியிருந்தாரு” என்றவுடன் கலகலவென சிரித்தான்.
“உங்களுக்கு எப்படித் தெரியும்?”
“மண்டபத்துல பேசிக்கிட்டாங்க!”
“அட… நீங்க வேற… நம்ம இருக்குற நிலமைக்கு கல்யாணம் எல்லாம் இப்போதைக்கு சான்சே இல்லங்க. க்ரோர், கார், வில்லான்னு இந்தக் காலத்துப் பொண்ணுங்க எதிர்பார்ப்பெல்லாம் எங்கேயோ இருக்கு!”
“அப்போ எதிர்பார்ப்பில்லாத பொண்ணுனா ஓகே வா!”
“அப்போ அந்தப் பொண்ணு லூசாதான் இருக்கணும்!”
“எனக்கெல்லாம் எந்த எதிர்பார்ப்பும் இல்ல. அப்ப நான் லூசா?”
“சேச்சே… உங்களப் போய் யாராவது லூசுன்னு சொல்லுவாங்களா?” எதார்த்தமாக அவன் பேச்சிருக்க,
“அப்ப… நான் ஓகே வா?” பட்டெனக் கேட்டவளை அதிர்ந்து பார்த்தவன், சுற்றும் முற்றும் ஒரு முறை அறையை நோட்டம் விட்டான். நல்ல வேளை. ஒரு வாண்டு கூட இங்கில்லை.
இந்த வீட்டில் யார் காதிலாவது இது விழுந்துவிட்டாள் எவ்வளவு பெரிய அனர்த்தம்.
ஒரு வேளை எப்பொழுதும் போல் விளையாடுகிறாளோ? பூ முடிக்க வந்த பொழுது கூட காஃபி எடுத்து வந்தவனை மாப்பிள்ளை பார்ப்பதாக கேலி செய்தாள் தானே. முன்தினம் மண்டபத்தில் கூட, உங்களுக்கு விடிய விடிய வேலையிருக்கு என்றவள் தாம்பூலப் பை போட வைத்தாள் தானே. இதுவும் அதுபோல் கிண்டல் பேச்சோ என்ற சந்தேகத்தில் அவளை உற்று நோக்கினான்.
அவள் கண்களில் தெரிந்த ஏதோ ஒன்றில் இவனுக்கும் இதயம் தடம் மாறித் துடித்தது. பயத்திலா அல்லது பரவசத்திலா?
அவளைப் பார்க்க இன்னும் சிறு பெண் தோற்றம். கல்யாணத்திற்கென உடுத்திய லெஹெங்காதான் அவளை சற்றே பெரிய பெண் போல் காட்டியது.
தன்னைப் பிடித்திருக்கிறது என்று இதைவிட வெளிப்படையாக ஒரு பெண் எப்படி தெரிவிக்க முடியும். மனதிற்குள் மழைச் சாரல்தான். இருந்தும் அதை முழுமையாக அங்கீகரிக்கும் நிலையில் இவன் இல்லை. பள்ளியில் வேலை பார்த்த பக்குவத்தில் சட்டென தன்னை திடப்படுத்திக் கொண்டான்.
பெண் கொடுத்திருக்கும் வீடு. இவர்களுக்கு அக்காவைப் பிடித்திருந்தது. வசதியெல்லாம் பெரிதாகப் பார்க்கவில்லை. தனக்கு கீழ் பெண் எடுக்க வேண்டும். தனக்கு மேல் பெண் கொடுக்க வேண்டும் என்பது சொல்லப்படாத வழக்கு.
அவர்கள் வீட்டுப் பெண் வாழப்போகும் இடம் எப்படி இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெற்றவர்களுக்கு இருக்கும் தானே. வெளியில் இவ்வளவு நேரமாக நடந்த பஞ்சாயத்தை கேட்டுக் கொண்டு தானே இருந்தான். இத்தனைக்கும் சொந்தம். நல்ல வசதி. அப்படி இருந்தும் காதல் என்றவுடன் பெருமாள்சாமி மகனோடு மல்லுக்கட்டியதைத்தான் பார்த்தானே.
நேற்றுவரை தனக்கு கொடுப்பதாக இருந்த பெண் கூட இன்று பேச்சு மாறியது தன்னுடைய தகுதியை எடைபோட்டு தானே. நமக்கு தான் பேக்ரவுனட் ஸ்ட்ராங்க் இல்லயே.
ஒரு வேளை இவள் நம்மிடம், மாமா முறைமைக்கு விளையாடுகிறாளோ என்று மீண்டும் ஒரு முறை சந்தேகமாக ஊன்றிப் பார்க்க, அவளது கண்களில் தெரிந்த மயக்கமும், உடல் மொழியும் அப்படி இல்லை என்று அடித்துச் சொல்லியது.
தன்னைப் பார்த்த முதல் நாளிலிருந்து இவள் தன்னை சீண்டுவது விளையாட்டு அல்ல எனப் புரிந்தது. இல்லையென்றால் இத்தனைபேர் வெளியே கூடியிருக்கும் பொழுது, டீ கொடுக்கையில் தன்னை மட்டும் தனியாகத் தேட வேண்டிய அவசியம் என்ன வந்தது.
ஒரு வேளை நமக்குதான் அப்படி தோன்றுகிறதா? எதுவாக இருந்தாலும் இதை வளரவிடக் கூடாது என்பது மட்டும் ஊர்ஜிதமாகத் தெரிந்தது. இது நாளைக்கு அக்கா வாழ்க்கைக்குப் பிரச்சினையாகிவிடக் கூடாது.
இது வெறும் ஈர்ப்பு. இந்த வயதில் இது சாதாரணம்.
அவளது பேச்சின் உள்ளர்த்தம் புரியாதவன் போல்… “இன்னும் உனக்கு வெளி உலகம் தெரியல. இப்போதானே காலேஜ் ஃபர்ஸ்ட் இயர். இனிமேதான் வெளி உலகம் புரியும்! ரெண்டு மூனு வருஷம் போகட்டும். அப்பவும் இதையே சொல்றியான்னு பாப்போம்!”
“அப்பவும் எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லைனு சொன்னா உங்களுக்கு ஓகே வா?” அவள் மீண்டும் மீண்டும் அங்கேயே சுற்றிவர, இவனுக்குதான் தலை சுற்றியது.
ஏதடா வம்பா போச்சு என்பதுதான் ராகவனது மைன்ட் வாய்சாக இருந்தது. இதில் தண்டபாணி வேறு இடுப்பில் கை வைத்து முறைத்து பார்ப்பது போல் கண் முன் காட்சியளித்தான்.
சட்டென தலையை உலுக்கிக் கொண்டவன், “என் பேக் எதுக்கு எடுத்த?” என்று பேச்சை மாற்ற,
“அச்சோ… அண்ணிக்கு ஹெல்ப் பண்ணனும். அவங்களுக்கு பேக் எடுக்க வந்தேன். உங்களப் பாத்ததுல எல்லாமே மறந்துட்டேன்.” முன் தலையில் தட்டிக் கொண்டவள் பேக்கை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல முற்பட,
“அது என்னோட பேக். இதுதான் அக்காது!” பக்கத்தில் இருந்த பெரிய ட்ராலியை இழுத்து கொடுத்தான்.
கையில் வாங்கியவள் ஓடாத குறையாக இழுத்துச் செல்ல, இன்னும் சிறுபிள்ளைத்தனம் மாறாமல் நடந்து கொள்பவளைப் பார்த்து புன்னகை விரிந்தது. கூடவே மனதோரம் ஒரு மூலையில் சின்னதாய் பாரம் ஏற, ஆயாசமாய் பெருமூச்சொன்று வெளிப்பட்டது.
*****
“வா ஜானு… கதவு திறந்துதான் இருக்கு!”
பேக்கை எதிர்பார்த்திருந்தவள் கண்ணாடி முன் நின்று தலையலங்காரங்களை கலைத்துக் கொண்டிருந்தாள். தலையோடு ஊற்றினால் தான் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. நாள் முழுவதும் பட்டுச் சேலையில் இருந்தவளுக்கு அத்தனை கசகசப்பு.
கதவைத் திறந்து உள்ளே ஆள் வந்த அரவம் தெரிந்தது. கண்ணாடி முன் நின்றவள், “ஜானு… இந்த பின்னெல்லாம் எடுக்க ஹெல்ப் பண்றியா?” உதவி கேட்டாள்.
அவளிடமிருந்து பதில் வராமல் போக, திரும்பிப் பார்த்தாள்.
ஜானகியை எதிர் பார்த்தவள் பார்வை நிலை குத்தி நின்றது.
ட்ராலியை படியில் தூக்க முடியாமல் ஜானகி சிரமப்பட இவன் வாங்கிக் கொண்டு வந்திருந்தான். ட்ராலி கைப்பிடியை பிடித்தபடி அவளையே ரசித்து நின்றது தண்டபாணியின் மயங்கிய விழிகள்.
குளிக்க ஆயத்தமாக சேலை தலைப்பை கலைத்திருக்க, கைகளை உயர்த்தி தலை அலங்காரங்களை எடுத்துக் கொண்டிருந்தவளின் கலைந்த கோலம், இளமை வனப்பை கண்களுக்கு விருந்தாக்கியது. சேலை இடைவெளியில் வழுக்கிய பார்வை நாபிச்சுழியில் சிக்கி கிறுகிறுத்தது. மன்னவனின் மயங்கிய விழிகள் மங்கையைத் தழுவி நிற்க, பெண்ணவள் பார்வை சட்டென கதவு பக்கம் செல்ல… கதவு தாழ் போட்டிருந்தது. ஜானகி வருவாள் என இவள் வெறுமனே சாற்றியிருக்க, இப்பொழுது உள்ளே வந்தவன் தாழ் போட்டிருந்தான்.
“நீங்க… எங்க… இங்க…!” தொண்டைக்குழிக்குள் வார்த்தைகள் பல்லாங்குழி ஆட,
“உனக்கு ஹெல்ப் வேணாமா?”
“ம்ஹும்… ஜானகிய வரச்சொல்லுங்க. இப்போ அண்ணி வந்துருவாங்க! ப்ளீஸ், நீங்க கீழ போங்க!” வஞ்சியவள் பார்வையும், குரலும் கெஞ்ச,
“அதெல்லாம் யாரும் வரமாட்டாங்க. கீழ பந்தி நடக்குது!”
“நீங்க சாப்பிடலையா?”
“பசிக்கல… சேந்துதானே சாப்பிடணும்.” ஆடை நலுங்கிய நிலையில் அவளைப் பார்த்தவன் பார்வையில் அபாரப் பசி. தன்னைச் சுற்றிலும் அனல் மூட்டிய உணர்வில் அவளை நெருங்க அதற்குள் கதவு தட்டும் சப்தம் கேட்டது.
“அய்யோ போச்சு. மானம் போகப்போகுது. உங்கள யாரு மேல வரச்சொன்னது?” பதட்டத்தில் படபடக்க,
“என் ரூமுக்கு வர யாரைக் கேக்கணும்!”
“பெட்ரூம்க்குள்ள போங்க… ஜானகிதான் வந்துருப்பா! ரெண்டு பேரையும் பாத்தா வேற வினையே வேண்டாம்.”
“நமக்கு கல்யாணம் ஆயிருச்சு லயா!” சொன்னவன் முகமெங்கும் மந்தகாசம்.
“அதுக்குன்னு… பெரியவங்க நல்ல நேரம் பாத்து அனுப்பாம… அதுக்குள்ள என்ன அவசரம்னு நினைக்க மாட்டாங்களா?” அவளது அவஸ்த்தை அவனுக்கு சுவாரஸ்யமூட்ட,
“பெரியவங்க எதுக்கு நல்ல நேரம் பாத்து அனுப்பனும்!” தெரிந்து கொண்டே அவளைச் சீண்ட, இதற்கு என்ன சொல்வது என்று பெண்ணவள் விழிக்க, மன்னவன் கண்கள் சிரிப்பில் மின்ன, சத்தமில்லாமல் உதடு மடித்து சிரித்தான்.
“சொல்லு லயா… எதுக்கு பெரியவங்க பாத்து அனுப்பணும்?” புருவத்தை உயர்த்தி கேட்க,
“அதெல்லாம் எனக்கு தெரியாது. நீங்க பெட்ரூம்க்கு போங்க!” என்று வம்படியாக அவனை பிடித்து தள்ளியவள், படுக்கையறைக் கதவைத் திறக்க, சட்டென செங்குழம்பாய் சிவந்து விட்டது பாவையவள் வதனம்.
பழனி எதற்கு கதவைத் திறக்க வேண்டாம் என்றாள் என்பது இப்போது புரிந்தது. பார்த்தவனுக்கும் விழியோரம் குறும்பு கசிய, இதழோரம் குறுநகை பூக்க அவளை திரும்பி பார்க்க, பாவமாய் பார்த்து நின்றாள் பாவை.
மீண்டும் கதவு தட்டப்பட, “மாப்ள!” என்ற அழைப்பு இப்பொழுது.
“போச்சு… பார்த்தி அண்ணா!” விட்டால் அழுதுவிடுவாள் போல.
அவளது சங்கடம் உணர்ந்து, “நீ குளிக்க போ!” என்றான். பார்த்தி தான் எனத் தெரிந்து தண்டபாணியே கதவைத் திறந்தவன் மீண்டும் சாற்றிவிட்டு வெளியே வந்தான்.
பாதி திறந்திருந்த கதவு வழியாக அலங்கரிக்கப்பட்ட அறையைப் பார்த்தவளுக்கு நீருக்குள் மூழ்கிய உணர்வு. இப்பொழுதே மூச்சடைத்தது. கால்கள் நகர மறுத்தது.
*****
“என்னடா இது?” தன் முன் நீட்டியதைப் பார்த்து கேட்க,
“பாத்தா தெரியல. சினிமா டிக்கெட். உன் கல்யாணத்துக்கு என்னோட கிஃப்ட். செகன்ட் ஷோக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல கெளம்பணும்” என்றவனை தண்டபாணி பார்த்த பார்வை இருக்கிறதே. கர்ண கொடூரம் என்பதையும் விஞ்சியது.
“கொலைகாரப்பாவி… பண்ணதெல்லாம் பத்தாதா? எவனாவது இன்னைக்கி சினிமா பாக்க போவானாடா?” விட்டால் கடித்துக் குதறி விடுவான் போல. அவனது கோபம் இவனுக்கு கும்மாளமாக, வாய்விட்டு சிரித்தான்.
“ஏன் இன்னைக்கி சினிமா பாக்க கூடாதுன்னு தடை உத்தரவு எதும் போட்டிருக்காங்களா?” மேலும் அவனை கோபப்படுத்தி பார்க்க,
“இப்ப நான் தான்டா உன்னைப் போடப் போறேன்!” என்றதும் அவனுக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை.
“உன்னை யாரு மாப்ள கூப்பிட்டது?” நிதானமாகக் கேட்டவனை புரியாமல் பார்க்க,
“இது எங்களுக்கு மட்டும். மொத்தமா முப்பது டிக்கெட். எல்லாரையும் இன்னும் கொஞ்ச நேரத்துல பேக் பண்றோம்! நம்ம தாய்க்கெழவி மொதக்கொண்டு தாய்க்கெழவி படம் பாக்க போறாங்க. அதை சொல்லத்தான் வந்தேன்” என்று கண்சிமிட்டி சிரிக்க,
“இது யாரோட ஐடியா?”
“ஏன் எங்களுக்கெல்லாம் இந்த யோசனை வராதா?” என்றவனை உறுத்துப் பார்த்தவன்,
“சான்சே இல்ல!” என்றான்.
“உங்க வீட்ல எப்பப் பாத்தாலும் ஒரே கூட்டம்னு சீனி ப்ரோ கொடுத்த ஐடியாதான்! ரெண்டு நாளைக்கு முன்னாடியே போய் டிக்கெட் எடுத்துட்டோம்.
“இதுல மட்டும் சகலைங்க எல்லாம் ஒரே மாதிரி யோசிக்கறீங்கடா.”
“பின்ன… உன்ன மாதிரியா? கொஞ்சமாவது ரொமான்டிக்கா இருக்கணும்.”
“ஏன்டா பேசமாட்ட. தாலி கட்டினதுலருந்து உன் பஞ்சாயத்து தானடா போகுது! இதோ… மேல வந்து அஞ்சு நிமஷம் கூட ஆகல. கழுதைக்கு மூக்கு வேர்த்த மாதிரி பின்னாடியே வந்துட்ட! பூஜை வேள கரடி மாதிரி!”
“ஏன் சொல்ல மாட்ட. மேல ஓடி வந்த குட்டீசெல்லாம், ஐஸ்க்ரீம் ஆசைகாட்டி கீழே அனுப்பிட்டு வர்றேன். கழுதைன்னும் சொல்லுவ. கரடின்னும் சொல்லுவ. நாங்கெல்லாம் சினிமாக்கு போறோம்னு சொல்லத்தான் வந்தேன்டா. கொடைக்கானல்ல ரூம் புக் பண்ணி உங்க ரெண்டு பேரையும் பேக் பண்ணலாம்கறதுதான் என் ஐடியா. எப்படியும் நீ ஒத்துக்க மாட்டேன்னு சீனி ப்ரோ சொல்லிட்டாப்ல. அதான் நாங்க கெளம்புறோம்! வாழ்த்துக்கள்டா” என்றதில் மெய்யாலுமே கன்னம் சிவந்தான் புதுமாப்பிள்ளை.
“பார்றா… உடனே மாப்பிள்ளைக்கு கன்னம் சிவக்குது” மேலும் அவனை ஓட்டியெடுக்க, கடுப்பெல்லாம் மறைந்து முகத்தில் புன்னகை விரிந்தது.
“இதெல்லாம் சும்மா ஒன்னும் செய்யல. நாளைக்கி என் கல்யாணத்துக்கு உங்க மாமாகிட்ட அடிச்சுப் பேசுற! எங்க… நாளைக்கெல்லாம் எந்த உலகத்துல நீ இருப்பியோ? நாங்கெல்லாம் இன்னும் கொஞ்ச நாளைக்கு உன் கண்ணுக்கே தெரியமாட்டோம்!” அலுத்துக் கொண்டே கேலி பேசி மேலும் அவனை சிவக்க வைத்துவிட்டே கீழே இறங்கினான்.
பழனி படியேறி வருவதைப் பார்த்தான்.
“நீ எங்க போற? எல்லாரையும் சினிமாக்கு கிளம்பச் சொல்லு பழனி!”
“இலக்கியாவ சாப்பிட கூப்பிட வந்தேன் மாமா!”
“பசிச்சா அவங்களே வந்து சாப்புட்டுப்பாங்க!” என்றவன் சீனியைத் தேட, இவன் பார்வை உணர்ந்து வந்தவன், என்ன என தலையசைத்து கேட்க, பழனியை கண் காண்பித்து விட்டு சென்றுவிட்டான்.
“இன்னும் இலக்கியாவ ரெடி பண்ணல. அண்ணனை வேற காணோம். சாமி கும்பிட அம்மாச்சி வரச் சொன்னாங்க!” மெதுவாக கூற,
“நமக்கெல்லாம் சாமி கும்பிட்டா நடந்துச்சு” என்றவனைப் பார்த்த பார்வையில் அனலடித்தது.
‘கல்யாணம் கூடத்தான் நடக்கல. அதையும் சொல்ல வேண்டியதுதானே?’ என்ற கேள்வி தொக்கி நிற்க,
“ஃப்ரூட்டி… இப்படி பாக்காதேனு எத்தனை தடவை சொல்லியிருக்கேன். அவங்கள இப்பவாவது தனியா விடுங்கடீ. எப்பப் பாரு சந்தைக் கூட்டம் மாதிரி. எல்லாரும் சாப்டாங்கன்னா வண்டியில ஏறச் சொல்லு. ரெண்டு மூனு ட்ரிப்பாவது அடிக்கணும். வாழைக்கட்டு ஏத்தற மாதிரி எல்லாரையும் அள்ளிப்போட்டு போக உங்க குடும்பத்துக்கெல்லாம் மினி லாரிதான்டீ சரிப்பட்டு வரும்” என்று நையாண்டி பேச,
“உங்க காலடி மண்ணெடுத்து எங்க குடும்பத்துக்கே சுத்திப் போடணும். எப்பப் பாரு கூட்டம் கூட்டம்னு கண்ணு வச்சுக்கிட்டு.” அலுத்துக கொண்டே அனைவரையும் கிளப்ப சென்றாள்.
ஒரு வழியாக அய்யம்மா, வேலாயுதத்தோடு அனைவரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு சினிமாவே பார்க்காத தணிகைவேல் உட்பட தியேட்டரை முற்றுகையிட்டது தண்டபாணி குடும்பம்.

Nirmala vandhachu 😍😍😍
Welcome dear 🥰
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
👍
🥰🥰🥰🥰🥰Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
beautiful writing
😘😘😘😘😘Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Semma kallattavana epi
😍😍😍😍😍Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Ama..ivana patha ellathukum apdi theriyudo…venumte vandhu prachanai panranga…
அதென்னமோ தெரியல. ஹீரோங்கற நெனப்பு கூட இல்ல பாருங்க😞😞😂
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫
Super aa eruku eagerly waiting for nxt post🥰🥰🥰🥰💖💖💖
♥️♥️♥️♥️♥️
Thank youuuuuu so much ma 🥰 🥰 🥰 🥰 🥰 🍫 🍫 🍫 🍫 🍫