மதன மாளிகையில் 8

8

“ஏங்க… பிள்ளையக் காணோம்!” பவித்ரா பதற, 

கதவு சாத்தியிருப்பதை தலை தூக்கிப் பார்த்தவன், 

“அப்பாவும், அம்மாவும் அம்மாப்பா விளையாட்டு விளையாடுறாங்கனு, எம்பிள்ள சமத்தா கதவைச் சாத்திட்டுப் போயிருக்கும்!” என்று பிடியை இறுக்கியவனை, முறைத்துப் பார்த்தாள்.

“குளிச்சிட்டு வெளியே வாங்க! அத்தையும், மாமாவும் வந்துட்டாங்க. இவ வேற எனக்கு முன்ன எழுந்து போயிட்டா. உங்கம்மா என்ன சொல்லப் போறாங்களோ?” கணவனின் கையை வலுக்கட்டாயமாகப் பிரித்துவிட்டு எழுந்தவளுக்கு மாமியாரை நினைத்துப் பயந்து வந்தது. அவனை எழுப்பி, குளியலறைக்குள் தள்ளி, வெளியே வர, பரிமளம் பேத்திக்கு பால் ஆற்றி கொடுத்துக் கொண்டிருந்தார். 

இவளைப் பார்த்தவுடன், “அப்பத்தா… அம்மா, அப்பா‌வ டிஷ்ஷும்… டிஷ்ஷும்” என பால் குடித்துக் கொண்டே இவள் தலையணை கொண்டு அப்பனை அடித்ததைப் போட்டுக் கொடுத்தது குட்டிவாண்டு. 

பிள்ளைய வச்சுக்கிட்டு என்ன இதெல்லாம் என்பது போல் பரிமளம் ஒரு பார்வை பார்க்க, ‘எனக்கு இவதான் சின்ன மாமியா! கரெக்டா போட்டுக் கொடுக்குறா!’ என மைன்ட்‌வாய்ஸ் ஓடியது. கண்டு கொள்ளாதது போல் அவசரமாக அடுக்களை சென்றுவிட்டாள். 

வேலைக்காரப் பெண்ணை வைத்துக் கொண்டு, பெரியநாயகி, சீதாலட்சுமி மேற்பார்வையில் காலை சமையல் தயாராகிக் கொண்டிருந்தது. 

ஒரு வாரத்திற்காவது கல்யாணத்திற்கு வரமுடியாதவர்களும், மாப்பிள்ளை மாறிப்போன செய்தியறிந்தவர்களும் வரப்போக இருப்பார்கள். டீ, காஃபி, மோர்‌ என உபசரிப்பு நடந்தமயமாகத்தான் இருக்கும். 

இவ்வளவு நேரமாக சோஃபாவில் உட்கார்ந்திருந்தவளுக்கு, ஓரளவிற்கு யார் யார் என உறவுமுறை புரிபட்டது. வாசுகி பெரிய மாமியார். சீதாலட்சுமி சின்ன மாமியார். அவங்க மகதான் பவித்ரா அண்ணி. அவங்களுக்கு பெரியநாயகி ஆத்தாவோட மகவயிற்றுப் பேரன் ஜெகன் அண்ணாவ முடிச்சிருக்காங்க. 

காலையில வந்தவங்க ஜெகன் அண்ணாவோட அம்மாவும், அப்பாவும், என கணக்கு சூத்திரம் மனப்பாடம் செய்பவள் போல் சொல்லிப்‌பார்த்துக் கொண்டிருந்தவளுக்குள், அப்போ என்னோட மாமியார், மாமனார் எங்கே? எனத் தேடியவள் பார்வை வீட்டைச் சுற்றி வந்தது. தலைக்கு மேல் தென்புறமாக வயதான தம்பதியர் புகைப்படம் ஒன்று, பெரிய அளவில் நடுநாயகமாக விளக்கு அலங்காரம், சந்தன மாலையோடு மாட்டப்பட்டிருந்தது. இந்த வீட்டுப் பெரியவங்க போல என எண்ணிக்கொண்டாள். அவள் நினைத்தது போல் அது வாசுகி, சீதாலட்சுமியின் பெற்றோர் புகைப்படம். 

அவள் வெட்டுவெட்டென உட்கார்ந்திருந்ததைப் பார்த்தவருக்கு, பேரன் மேல் கோபம் வந்தது. 

ஏற்கனவே காலையிலேயே பேரன் தன்னிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் தோப்பிற்கு கிளம்பி விட்டதில் வருத்தத்தில் இருந்தார் பெரியநாயகி.

 ‘சொன்னா நானென்ன வேண்டாம்னா சொல்லப்போறே. எனக்கு மட்டும் அவன் மனசு புரியாதா? அதுக்குன்னு வந்தவள ஒத்தையில விட்டுட்டுப் போனா, என்ன அர்த்தம்? அந்தப் பிள்ளையும் எம்புட்டு நேரம்தான் மேவாரத்தப் பாத்திட்டிருக்கும். வரட்டும்‌’ என‌‌ பொறுமிக் கொண்டிருந்தார். 

சமையல் முடிந்து அனைவரையும்‌ சாப்பிட அழைத்தாள் பவித்ரா. பவித்ராவும், சீதாலட்சுமியும் பரிமாற, உதவிக்கு எழுந்து வந்தவளையும்… சுகந்தியோடு சாப்பிட உட்காரச் சொல்லிவிட்டார் பெரியநாயகி. 

“உங்கம்மாகிட்ட சொல்லிவச்சுட்டுப் போ பரிமளா. ரொம்ப இடம் கொடுக்க வேண்டாம்னு. கேட்க மாமனார், மாமியாரும் இல்ல. நங்கையா, மச்சான், கொளுந்தன்னும் எந்தப் பிக்கல் பிடுங்கலில்லாத குடும்பம். யாருக்கு இப்படி கிடைக்கும்!” என்று வாசகி பேச்சில் நாசுக்காக ஊசியிறக்க, அவர் தன்னைத்தான் சொல்கிறார் எனப் புரியவே சில கணங்கள் பிடித்தது மாதங்கிக்கு. 

என்ன சொல்ல வருகிறார் என்றும் புரியவில்லை. இப்பொழுதுதான் யார் யார் இன்னாரென தலையைச் சுத்தி ஒரு வழியாக மூக்கைத் தொட்டிருக்கிறாள். இதில் இவர்‌ வேறு உள்குத்து வைத்துப் பேச, ஜெகதாம்பாள் புண்ணியத்தில் அவளுக்கும் கொஞ்சம்‌ சாடைப் பேச்சு பிடிபட்டது. அவரும் இப்படித்தானே உட்கார்ந்த இடத்திலேயே மருமகளை‌ கறித்துக் கொட்டுவார்.

அப்படினா அவனுக்கு யாரும் இல்லையா? அப்போ… அவனுக்கும் இந்த குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம். இவங்க பேரன்னு சொன்னதா தானே ராகினி சொன்னா. என்னங்கடா இது? விடுகதையே இல்லாம விடை தேடுற மாதிரி இருக்கு. உள்ளுக்குள் குழம்பிக் கொண்டிருந்தாள். 

அவனுக்கு என்னடான்னா கட்டினவ பேரு கூடத் தெரியல. இவளுக்கு என்னடான்னா கட்டினவனோட பெத்தவங்க, கூடப் பொறந்தவங்க யாருன்னுகூடத் தெரியல. இந்த லட்சணத்துல இருக்கு இவங்க பொழப்பு, என விதி கைகொட்டிச் சிரித்தது. 

அவன் மனைவி உட்கார்ந்து சாப்பிட, தங்கை‌ மகள் அவளுக்கு வேலை செய்வதா என்று ஆதங்கம் வாசுகிக்கு. 

நாத்தனார் எல்லாம் பிக்கல், பிடுங்கல் என்று‌ சொல்ல, அதையும்  தன்னை வைத்துக் கொண்டு தன்னிடமே சொல்ல, அப்படியென்ன இவளை நாம் படுத்தி வைத்தோம். எல்லாம் இவர்கள் இஷ்ட்டத்திற்கே விட்டாயிற்று. போதாக்குறைக்கு மகனையும் இவர்கள் போக்கிற்கே வீட்டோடு மாப்பிள்ளையாக அனுப்பி வைத்தாயிற்று. 

அங்கு இருந்த வரைக்கும் தோப்பு, வயல், வீடு என ஊரையே‌ கட்டி ஆண்ட மனுஷி எங்க அம்மா. ஆனா, அவங்கதான் மருமகளுக்கு உட்கார்ந்த இடத்திற்கு காஃபி கொண்டு வந்து தரவேண்டியிருக்கிறது. இன்னும் இவளுக்கு என்ன வேண்டும்?” பொசுபொசுவென வந்தது பரிமளத்திற்கு. இருவருக்கும் சமவயது. சொந்தம் வேறு. அதனால் அண்ணி என்ற மரியாதையெல்லாம் இல்லை இருவருக்குள்ளும்.

எதையும் உள்ளுக்குள் அடக்கிப் பழக்கமில்லாத பரிமளாவிற்கு, படபடவென வந்தது. 

“ஏன் வாசுகி! நங்கையா, கொளுந்தனோடு இருந்த உனக்கு மட்டும் என்ன பிக்கல் பிடுங்கல் வந்தது. நாங்க என்ன உன்னை அப்படிப் படுத்தி வச்சுட்டோம்!” என்றார் பட்டென அடக்கமாட்டாமல். 

இடும்பனும், “பரிமளம்!” என வந்த இடத்தில் வம்பு வேண்டாமென மனைவியை அடக்க…‌ 

“பின்ன என்னங்க? என்னையும் வச்சுக்கிட்டு நங்கையா எல்லாம் பிக்கல் பிடுங்கல்னா என்ன அர்த்தம்?” எனக்கேட்க,

“நம்ம கதை வேற பரிமளா. அத்தை மக, மாமன் மக. ஒன்னுக்குள்ள ஒன்னு. அடிச்சாலும் புடிச்சாலும், ரத்தபாசம் விட்டுப் போகுமா? ஆனா புதுசா வந்தவ அப்படியா? அவளுக்கும் உன் மருமகளுக்கும் ஒத்துப் போகணும்ல. என்ன இருந்தாலும் பவி ஒன்னுவிட்ட நங்கையா தானே?” 

“அப்போ, உன் மகன் கிரிக்கு இந்தப்பிள்ளைய கட்டியிருந்தா மட்டும் ஒத்துப் போகுமா வாசுகி? அப்பவும் என் மருமக ஒன்னுவிட்ட நாத்தனார் தானே? அதுக்கு தான் அவங்கள எங்க வீட்டுக்கு அனுப்பச் சொன்னேன். நீங்கதான் ஒத்தப்பிள்ள, நாளைக்கு என் தங்கச்சிக்கு யார் ஆதரவுன்னு எம்மகனையும் உங்க பக்கம் இழுத்துக்கிட்டீங்க! என்னமோ நான் மட்டும் ஏழெட்டுப் பெத்துவச்சிருக்க மாதிரி!” என்று பேச,

“அம்மா… என்னம்மா பேசுறீங்க? மதன் இல்லாத நேரத்துல அவன் மனைவியை வச்சுக்கிட்டு இப்படி‌ப் பேசுறது சரியில்ல. அவங்க கல்யாணம் முடிஞ்சு போச்சு. இனி கிரியையும், இந்தப் பிள்ளையையும் சேத்துவச்சுப் பேசறது சரியில்ல!” ஜெகன் அம்மாவை அதட்டினான். அது மறைமுகமாக வாசுகிக்கும் சேர்த்து தான். 

“அதில்லடா ஜெகன். இவங்களுக்கு அவங்க மகன் மேல கோபம். அத யார்மேல காமிக்கண்ணு தெரியல. சின்ன அண்ணன் மீதிருந்த வெறுப்ப மதன் மேல திருப்பின மாதிரி, இப்ப மதன் மேல உள்ள‌ வெறுப்ப இந்தப்பிள்ள மேல திருப்புறாங்க. உம் பொண்டாட்டியே பேசாம பரிமாறுரா. இவங்களுக்கு என்ன வந்தது? இவளுக ஒத்துப் போனாலும் இவங்க விட மாட்டாங்க போலயே?” என கேட்க,

நாத்தனார் பேச்சு சுருக்கென்றது வாசுகிக்கு.

“என்னப்பாத்தா குடும்பத்த பிரிக்கிறவ மாதிரி தெரியுதா பரிமளா?” 

“அப்படி பிரிஞ்சுறக் கூடாதுன்னு தான் உம்போக்குக்கே எங்க அண்ணனும், அம்மாவும் வந்துட்டாங்களே?”

“பவித்ரா இந்த வீட்டுக்கு சம உரிமைக்காரி. இப்ப யார் யாரோ வந்து உட்காரும் போது, அவ எதுக்கு அவங்களுக்கு வேலை பாக்கணும்?” பவித்ரா இந்த வீட்டிற்கு உரிமையானவள் என்பதை கோடிட்டு காட்ட, 

“அம்மா… உன் மருமக பேசுறத கேட்டீங்களா? யார் யாரோவாம். மதனைத்தான் அப்படி சொல்றாங்க.” பேச்சை அம்மாவிடம் திருப்பினார் பரிமளம். 

“இதுக்கு தான் நீங்க தோப்பு வீட்லயே இருந்திருக்கணும். பெரிய மகன்தான் பெரிசுன்னு நீங்களும் இங்க வந்துட்டீங்க.” 

பரிமளம் பெரியநாயகியிடம் படபடத்தார். இவர்கள் இங்கு வரும்பொழுதோ, மதனுக்கு பதினைந்து வயதுகூட இருக்காது. அவனை மட்டும் வைத்துக் கொண்டு அவ்வளவு பெரிய வீட்டில் தனியாக எப்படி இருப்பது என்று தான் பெரியநாயகி தனசேகரனோடு வந்துவிட்டார். 

இவர்கள் பேச்சு தலையும் புரியாமல் வாலும் புரியாமல் கேட்டுக் கொண்டு அமர்ந்திருந்தவளுக்கு, வயிற்று வலியோடு சேர்ந்து தலையும் வலித்தது. 

அங்கு வீட்டில் அம்மா நிலமை என்னவென்று தெரியாதது வேறு. எழுந்து இவ்வளவு நேரமாகியும் ஒரு ஃபோன் செய்து கூட விசாரிக்க முடியாத தன் இயலாமையை எண்ணி அவளுக்குள்ளே நொந்து கொண்டிருக்க, இவர்கள் பேச்சை கிரகிக்கும் மனநிலையில் மாதங்கி இல்லை. 

பூங்கோதையாலும் இவளை விசாரிக்க முடியாது. அதற்கு தன்னிடம் ஃபோன் வேண்டுமே?

பேச்சு காரசாரமாகப் போக, வெளியே சென்றிருந்த தனசேகரன் தலை தென்பட சட்டென பேச்சுவார்த்தை அடங்கி வீடு அமைதியாகியது. வந்தவர் தங்கையையும், தங்கை வீட்டுக்காரரையாம் வரவேற்று குளிக்க சென்றுவிட்டார். 

சாப்பிட்டு இவளைப் போய் ஓய்வெடுக்க சொல்லிவிட்டார் பெரியநாயகி. விட்டால் போதுமென இவளும் அறைக்குள் வந்துவிட்டாள். 

நேற்று திருமணத்திற்கு வரமுடியாதவர்களும், விஷயம் கேள்விப்‌பட்டவர்களும் நலம்‌ விரும்பிகளாக வந்து துக்கம் விசாரித்து விட்டுச் சென்றனர். 

பேச்சோடு பேச்சாக, “வாசுகி, உன் கொளுந்தன விட்ட‌மாதிரி, மகனையும் விட்டுறாதீங்க. இந்தக்காலத்துல இதெல்லாம் சாதாரணமாப் போச்சு. எந்தப்பிள்ள பெத்தவங்க பேச்சுக்கு மடங்குது. கூடிய சீக்கிரம் உம்மகனையும், மருமகளையும் வரவச்சு உங்க கைக்குள்ளயே வச்சுக்கப்பாருங்க. அப்புறம் உன் கொழுந்தன் குடும்பம் மாதிரி ஏதாவது ஆகிட்டா ஆத்தானாலும் வராது. அப்பானாலும் வராது!” வந்தவர்கள் பங்கிற்கு விசிறி விட்டுச் செல்ல, புகைந்து கொண்டிருந்தது கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. 

வந்தவர்களுக்கு பதில் சொல்ல முடியாமல், சாப்பிட்டு கால்வலி மாத்திரையைப் போட்டவர் தூக்கம் வருவதாக, அறைக்குள் சென்று‌ முடங்கிக் கொண்டார்.

பரிமளமும், இடும்பனும்‌ தோப்பிற்குக்‌ கிளம்ப, பெரியநாயகி மதனுக்கும் சாப்பாடு எடுத்துப் போகச் சொன்னார். 

பரிமளம் இங்கு வந்தால் கொஞ்ச நேரம் தான் இங்கிருப்பார். தோப்பு வீட்டிற்கு கிளம்பி விடுவார். அங்கு ஒரு மிதி மிதித்தால் தான் அவருக்கு பிறந்து வீட்டிற்கு வந்தது போலிருக்கும்‌. என்ன இருந்தாலும் இது மாமன் வீடு தானே. 

“உங்களுக்கும், உங்க மருமகளுக்கும் தாம்மா இது பிறந்த வீடு. எனக்கு அங்கதான். அதுதான் நான் பிறந்து, வளர்ந்த வீடு. இங்க வந்தா விருந்தாளி வந்த மாதிரிதாம்மா இருக்கு! பிறந்த வீடுங்கற உரிமை வரமாட்டேங்குது” என்பார். 

மகளின் மனம்‌புரிந்தாலும்‌ அவரால் என்ன செய்யமுடியும்? இப்பொழுதும் சாப்பிட்டவுடன் தோப்பு வீட்டிற்கு‌ கிளம்பும் மகளை பெரியநாயகி தடுக்கவில்லை. பேரனுக்கும் சாப்பாட்டை கொடுத்துவிட்டார். 

தோப்பு வீட்டிற்கு சென்ற பரிமளம் பழக்கமில்லாத இடத்தில், புதுப் பெண்ணை தனியே விட்டுவந்த அண்ணன் மகனை வெளுத்து வாங்கியதில், புது அவதாரமெடுத்து வீடு திரும்பியிருந்தான் மதன்கைலாஷ்.

“பிடிக்குதோ பிடிக்கலையோ, நீதான் அவ புருஷன், அவதான் உனக்கு பொண்டாட்டி. எல்லாரும் புடுச்சா கல்யாணம் பண்றாங்க. புடிச்சு பெத்தவங்களே வேண்டாம்னு போன உங்க அப்பா வாழ்க்கை மட்டும் என்னத்த மணப்பட்டுச்சு. பெரியவங்க பாத்து வைக்கிற கல்யாணம் முன்னபின்ன தான் இருக்கும். நீக்கு போக்கு கத்துக்கிட்டு ரெண்டு பேரும் அனுசரிச்சுதான் போகணும். அதைவிட்டுட்டு எழுந்தவுடனே தோப்புக்கு வந்தா என்னடா அர்த்தம்.” 

அத்தை பேசப்பேச அமைதியாக கேட்டுக் கொண்டான். 

*****

“ராகினி… அம்மா எப்படி இருக்காங்க?” கேட்கும் பொழுதே தொண்டையடைத்தது மாதங்கிக்கு. 

“வழக்கம் போலதான்!” சலிப்பாய் வந்து விழுந்தன தங்கையின் வார்த்தைகள்.

“என்னடீ சொல்ற?” சற்றே பதட்டம் கூடியது பெண்ணவள் கேள்வியில். சத்தமாகவும் கேட்க முடியாது. இவள் பேசுவதை யாரும் கண்டுகொள்ளவில்லை என்றாலும் யாருக்கும் கேட்காமல் தான் பேசினாள்.

இதுவே அத்தையின் கைபேசியில் இருந்து அழைத்துப் பேசுகிறாள். அத்தையிடம் ஃபோன்‌ கேட்கவே அவ்வளவு கூச்சமாக இருக்க… தயங்கித்தயங்கி தான் கேட்டாள். வேற வழியில்லை. வீட்டு நிலவரம் தெரிய வேண்டுமே. இவள் கேட்டதும் சுகந்தியும் கொடுத்துவிடவில்லை. 

யாருக்கு, எவருக்கு என ஆயிரம் கேள்வி கேட்டார். அத்தனை அவமானமாகப் போயிற்று மாதங்கிக்கு. 

ஏதோ கள்ளக்காதல் செய்து கையும் களவுமாக மாட்டிக் கொண்டவளைப் பார்ப்பது போல் பார்த்தார். அவருக்கும் தம்பியை நினைத்து தான் பயமே. 

“நீங்களே ராகினிக்கு கால் பண்ணிக் கொடுங்கத்தை” என்ற பிறகே, அவரே டயல் செய்து கொடுத்தார். 

‘என் மீது அவ்வளவு நம்பிக்கை!’ மனம் விரக்தியில் வெந்து அவிந்தது. ஆனால் வேறு வழியில்லை. மானம், ரோஷம் பார்க்கும் நேரமில்லை. அம்மாவின் நிலை தெரிய வேண்டுமே. 

அவளைத் தனியே விடாமல் பின்னாலே சுகந்தியும் வந்தார். அதுவே அவளுக்கு அவ்வளவு அவமானமாகப் போயிற்று.

“அக்கா!” என்றாள்.

“சொல்லு ராகி!” 

“வேதாளம் முருங்கை மரமேறியாச்சு. இவங்க மலையிறக்க முயற்சி பண்றாங்கக்கா.” 

“அப்பத்தா?” கேள்வியாக நிறுத்தியவளிடம், 

“அவங்களும் வழக்கம் போலத்தான். மகனுக்கு பின் பாட்டு பாடுறாங்க.” ராகினியின் குரலும் வறுத்தம்‌ சுமந்து ஒலித்தது. 

“அவங்கள விடுக்கா. நீ எப்படி இருக்க? அங்க இருக்கவங்க எல்லாம் எப்படி?” 

முன்தினம் புகுந்தவீட்டில் விட்டு வந்த அக்காவின் நலம் விசாரித்தாள் தங்கை.‌ ஏதோ துக்கம் விசாரிப்பது போல்‌ இருந்தது சகோதரிகளின் குசல விசாரிப்பு. அதை நினைத்தவளுக்கு தங்கள் நிலையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்றுகூடத் தெரியவில்லை.

“அக்கா… லைன்ல இருக்கியா? அத்தை இன்னும் அங்கேயா இருக்காங்க? இன்னும் விகாஷ் மாமா வரலியா?” வரிசையாக கேள்விகளைத் தொடுக்க,

“விகாஷ் வர்றது உனக்கு எப்படி தெரியும் ராகினி?” என்றாள்.‌

“நேத்தே பேசிக்கிட்டாங்கக்கா!” சட்டென பொய் சொல்லி சமாளித்தாள். 

இவள் தானே விகாஷிடம் சொல்லி அங்கே போகச் சொன்னாள். அக்காவின் நிலவரம் என்னவென்று அறிய‌ வேண்டுமென. அதனால் தான் அத்தையை அழைக்கப் போவது போல் சென்று அக்காவிடம் ஃபோன் ‌செய்து கொடுக்கச் சொன்னாள். அதற்குள் மாதங்கியே அத்தையிடம் ஃபோனை வாங்கி தங்கைக்கு அழைத்து விட்டாள். 

முதலில் எடுத்துப் பேசவும்‌ பயம். அப்பா என்ன சொல்வாரோ என. அவர்‌ தான் அறையைப் பூட்டிக்கொண்டு தன்னைத்தானே வீட்டுச் சிறையில் வைத்துக் கொண்டாரே? 

அதனால் அழைப்பு வரவும் தைரியமாக எடுத்துப் பேசினாள் ராகினி. 

சுகந்தியும் ஃபோனை கொடுத்துவிட்டு நகர்ந்து விடவில்லை. பக்கத்திலேயே நின்று என்ன பேசுகிறாள், யாரிடம் பேசுகிறாள்‌ என உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தாள். இன்றுதான் ஊர், உலகத்தில் என்னவெல்லாமோ நடக்கிறதே! கல்யாணம் முடிந்து விட்டதென்று நிம்மதியாகவா இருக்க முடியுது. இவர் தம்பிக்கு யார்‌ பதில் சொல்வது என்று பயம். தம்பி குணம் தான் தெரியுமே. 

அதுவும்‌தான் மாதங்கியை இவர் மகனுக்குப் பெண்ணெடுக்காததற்கு முக்கிய காரணம். இவர் கணவர்‌ பொன்னுச்சாமிக்கும், வாசுதேவனுக்கும் கடுகளவு கூட ஒத்துப் போகாது. ஆரம்பத்தில் இருந்தே முட்டிக்கொள்ளும். 

சுகந்தி இவள் பேசுவதையே கவனிக்க, மாதங்கிக்கு தான் நெருப்பு மீது நிற்பது போல் இருந்தது. 

ஒரு ஃபோன்ல ரெண்டு சிம் போட்டு மெயின்டெய்ன் பண்றவங்க எல்லாம் நிம்மதியாத்தான் இருக்காங்க. ஃபோனே இல்லாத நான்தான் இவங்ககிட்ட சிக்கிட்டு சீப்படுறேன் என்று நினைத்த மாத்திரத்தில், தொண்டையடைத்து கண்கள் சிவந்துவிட்டது. 

“இன்னும் விகாஷ் வரலடி. அத்தை எனக்கு ஃபோன் கொடுக்கவே அவ்ளோ யோசிக்கிறாங்க ராகி. நான் வேற யாருக்காவது ஃபோன் பண்ணிருவேனோன்னு சந்தேகம். இப்ப எனக்கு எப்படி இருக்கு தெரியுமா? எங்கேயாவது கண்காணாம ஓடிப் போயிரலாம்னு இருக்கு. அப்பவும் எவனோடவோ ஓடிப் போயிட்டேனு தான் சொல்வாங்க. நான் என்னடீ தப்பு பண்ணினேன். அப்பாகிட்ட பெர்மிஷன் கேட்காம ஃப்ரெண்ட்ஸ்களோடு அன்னைக்கி கோயிலுக்குப் போனது மட்டும்தான் நான் செஞ்ச ஒரே தப்பு. கேட்டாலும் விடமாட்டார்னு தெரியும். அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனை கொடுத்திருக்க வேண்டாம் ராகி” என்றவள் கண்கள், இவ்வளவு நேரமாக அடக்கி வைத்திருந்த கண்ணீருக்கு விடுதலை கொடுக்க, கரகரவென வழிந்தது.

“அக்கா… அழாதக்கா…” எதிர்‌முனையில் தங்கையின் குரலும் பிசிறடித்தது.

நேற்று திருமணம் முடிந்த அக்காவிடம், மச்சானைப் பற்றி கேட்டு கேலி, கிண்டல் செய்ய வேண்டியவளும், தங்கைக்கு பதில் சொல்ல முடியாமல் வெட்கப்பட்டு பொய்க்கோபம் காட்ட‌வேண்டியவளும் தங்கள் நிலையை நினைத்து உள்ளுக்குள் மருகி உலர்ந்து போயினர். 

“அங்க எல்லாரும் எப்படிக்கா?”

“தெரியல ராகி! ஆனா, இங்க மாமியார் தான் மருமகளுக்கு காஃபி கொண்டு வந்து தர்றாங்க. இங்கேயும் பெரிய மாகாபாரதம் நடக்குது.” என்று தங்கைக்குப் பதில் சொன்னாலும் காலையில் தன் அவசரத்தேவைக்கு உதவியவன்‌ முகம்‌ கண்முன்னால் வந்து போனது. கொசுறாக அவனுக்கு யாரும் இல்லை என்பதும். அவள் அமைதியாக இருக்க, 

“அக்கா!” என உரக்க அழைக்க, 

“சொல்லு ராகி!” என்றாள். 

இதுவே சாதாரண நேரமாக இருந்திருந்தால் அக்காவின் ராகி என்ற அழைப்பிற்கு கோபமாக சண்டைக்கு வந்திருப்பாள். அதென்ன ராகி, கோதுமைன்னு. ஒரு எழுத்த சேத்துக் கூப்பிட வாய் வலிக்குமா உனக்கு” என‌ சகோதரிகள் சண்டை வீட்டை ரெண்டாக்கும். அடுத்து ராகு என்பாள். ஆமா…‌ராகு,‌கேது எல்லாம் உனக்கு நான் தான் என்பாள். 

“எப்படி தான்டி உம்பேர சுருக்கி கூப்பிடறது?”

“அதென்ன ஒன்றரை முழத்துக்கா இருக்கு? மூனெழுத்து… அத ஏன் சுருக்குற? உம் பேர‌ மங்கினு சுருக்குனா கோபம் வருதுல்ல?” அக்கா தங்கைகளின் இதுபோன்ற ஒன்றுக்கும் ஆகாத சண்டைகள் ‌எத்தனையோ? ஆனால் இன்று அக்காவின் அழைப்பு கூட அக்கா, தங்கையின் கவனத்தில் பதியவில்லை. 

“அதெல்லாம் நம்ம வீட்ல கனவுலயும் நடக்காதுக்கா. அப்பா காலையில இருந்து கதவத்திறக்கல. அம்மா தான் கதவைத்தட்டி கூப்டுட்டே இருக்காங்க!”

“இவங்களும் எப்படியோ போகட்டும்னு விடமாட்டாங்க.” அலுத்துக் கொண்டவளுக்குத் தெரியுமே. விட்டால் அதற்கும் வெளியே வந்து சண்டை போடுவார் என்று. 

சண்டை போட்டு, அடித்து, உதைப்பது ஒரு ரகம் என்றால், அமைதியாக கதவடைத்து உட்கார்ந்து கொண்டு மற்றவர்களுக்கு பிபி ஏற்றுவது ஒரு‌ரகம். இதில் வாசுதேவன்‌ இரண்டும் செய்வார். முன்தினம் மண்டபம் என்றும் பாராமல் மனைவியை கை நீட்டியவர், இரவு வீட்டிற்கு வந்ததும் கதவைச் சாத்திக்கொண்டார். 

வெளி உலகத்தைப் ‌பொறுத்தவரை குடி, பீடி, சிகரெட் என்ற எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாத நல்ல மனிதன் வாசுதேவன். நம்ம ஜனங்களைப் பொறுத்தவரை குடிக்காதவன் நல்ல மனுஷன்தானே. வீடு வாசல், நகை நட்டு, கார் வசதி என மனைவி, பிள்ளைகளை சொகுசாக வைத்திருக்கும் சிறந்த குடும்பத் தலைவர். என்ன கொஞ்சம் முன்‌கோபி‌, அவ்வளவுதான். ஆம்பளைனா இது கூட இருக்காதா? அப்பதான் பிள்ளைகளுக்கும் பயம் இருக்கும்.

பூங்கோதை பிறந்தவீட்டிலும் மருமகனைப் பற்றிய கணிப்பு இதுதான். ஆனால் மகள் படும்பாடு அவர்களுக்கு எங்கே தெரிகிறது. பூங்கோதையும் தெரியவிட்டதில்லை. சொன்னால் மட்டும் என்ன சொல்லப் போகிறார்கள். 

வீடுன்னா நாலும்தான் இருக்கும். பொம்பளைதான் அனுசரிச்சுப் போகணும் என்பதுதான் ஆறுதல் வார்த்தையாக இருக்கும். இதையும் மீறி மூன்று பிள்ளைகளோடு அம்மா வீட்டில் போய் உட்கார முடியுமா? எத்தனை நாளைக்கு? மறுபடியும் இங்கு தானே வந்தாகணும்? அதற்கு பல்லைக் கடித்துக் கொண்டு இருந்துவிட்டால் பிறந்து வீட்டில் மரியாதையாவது மிஞ்சுமே? கோபித்துக் கொண்டு பிறந்த வீடு‌ சென்று நாத்தானாரிடம் இடிசோறு சாப்பிட முடியுமா? 

இப்படியே எண்ணியே அவரது வாழ்க்கையும் பாதி ஓடிவிட்டது. 

“ஏம்மா இப்படி இருக்கீங்க?” பிள்ளைகளின் கேள்விக்கு, “பாதிக்காலம் ஓடிருச்சு. இன்னும் சொச்ச காலம்” என்பார்.

இதோ பூட்டிய அறைக்கு முன் நின்று கொண்டு கணவரை கதவைத் திறக்கச் சொல்லி கெஞ்சிக் கொண்டிருக்கிறார். 

முன்தினம் மகளை புகுந்த வீட்டில் விட்டு வந்து உள்ளே போய் கோபமாக கதவைச் சாத்தியவர் தான். விடிந்து இவ்வளவு நேரமாகியும் கதவைத் திறக்கவில்லை. 

கதவைத் தட்டியே ஓய்ந்து போனார்‌ பூங்கோதை. 

“சம்பாதிக்கிறவனுக்கு கொஞ்சமாச்சும் மரியாதை இருக்கா? அவன் உழச்சுட்டு வந்து கொட்டப்போயிதான் சொகுசா இருக்கீங்க. ஆனா, பொட்டச்சிகளா சேந்து அவனையே கேனையனாக்கிட்டீங்க.”

ஜெகதாம்பாள் ஒரு பக்கம் எழுந்ததிலிருந்து பக்கவாத்தியம் வாசிக்க, இன்னும் அறைக்குள் இருந்தவருக்கு வீம்பு அதிகமாகியது. 

“வாசு… வெளியே வா சாமி. ஆத்தா இருக்குறேன் உனக்கு. எவ எக்கேடு கெட்டா என்ன? அதான் கட்டிக் கொடுத்து தலை முழுகியாச்சுல்ல. இனி அவ பாடு. கட்டினவன் பாடு!” என்று‌ ஜெகதாம்பாள் தூபம் போட,

“ஏன் அத்தை. பெரிய மனுஷிதானே நீங்க.நேத்து தான் கல்யாணம் முடிஞ்சிருக்கு. அதுக்குள்ள தலை முழுகியாச்சு அது இதுன்னு பேசுறீங்களே. எம்பிள்ள நல்லா இருக்க வேண்டாமா?” ஆதங்கத்தில் கண்ணீரோடு வெடித்தார் பூங்கோதை. மனம் விட்டுப் போனது. இவ்வளவும் சகித்துக் கொண்டு இருந்தது எதற்காக. பிள்ளைகளுக்காகத் தானே.

வாழவேண்டிய இளங்குறுத்தை, அதுவும் நேற்று திருமணமாகி புகுந்தவீட்டில் விட்டு வந்தவளை, தலை முழுகச் சொன்னால் பெற்றவளுக்கு பெற்றவயிறு‌ பதறாதா? அப்படி‌ என்ன தவறு‌ செய்துவிட்டாள். என்னிடம் கேட்டுத்தானே போனாள்.

 ஒரு வயதுப் பெண்ணிற்கு அந்த ஆசை கூட இருக்கக் கூடாதா? கோவிலுக்கு என்பதால் தானே‌ இவரும்‌ சரி என்றார். அதற்கே அம்மாவிடம் எவ்வளவு கெஞ்சி, கூத்தாடி, நச்சு செய்து போனாள்.‌ பூங்கோதையும் பயந்துகொண்டே தான் சம்மதித்தார். 

“யார் கண்ணிலாவது பட்டு உங்கப்பாகிட்ட சொல்லிட்டா ரெண்டு பேரும் தொலஞ்சோம் மாது!” என அத்தனை பயந்தார் மகளை அனுப்ப. அவர் பயந்த மாதிரியே தான் நடந்தது. 

அன்னைக்கு என்று பார்த்து இதே தெருவில் வசிப்பவரும், உறவினர் திருமணத்திற்கென்று அதே கோவிலுக்குச் செல்ல, அங்கே இவளை மாலையும் கழுத்துமாகப் பார்த்துவிட்டு, நடந்தது என்னவென்று தெரியாமல் வாசுதேவனிடம் சொல்ல, அவர் பேச்சை நம்பிய வாசுதேவன் மகளை நம்பவில்லை. அன்றிலிருந்து திருமணம் முடியும் வரை எத்தனை பேச்சு. 

கோவிலில் எவனோ இவள்‌ கழுத்தில் மாலையிடுவான் என கனவா கண்டார். அவனே மாப்பிள்ளையாக அமைந்தது விதி செய்த விளையாட்டு என்பதா, இல்லை… பேசி‌ முடித்த மாப்பிள்ளை வராமல், அவனே மாப்பிள்ளையாக அமைந்தது சாமிபோட்ட முடிச்சு என்பதா? 

அதற்கும் எத்தனை‌ கட்டுக்கதை. இவர் பேசாமல் கதை எழுதப் போகலாம். 

இப்படிப்பட்டவரை வைத்துக் கொண்டு நாளை‌ மறு வீடு வரும் மகளை நினைத்து தலைசுற்றியது. 

நேற்றிலிருந்து சரியாக சாப்பிடாதது, கணவர் மீதிருந்த பயம், இன்றுவரை இவர் படுத்தி வைக்கும் பாடு என பூங்கோதைக்கு கண்ணைக்கட்ட, அப்படியே தலை சுற்றி கீழே அமர்ந்துவிட்டார். 

*****

உன் கெண்டைக்காலில் இருக்கும் 

ஒற்றைப் புள்ளி போதுமடி 

என் மூச்சுக் காற்றுக்கு 

முற்றுப் புள்ளி வைக்க…

மூர்ச்சையாகி முக்தி எய்துமுன்

காப்பாற்றி‌ விடடி பெண்ணே

உன்னிடமிருந்து என்னை… 

படித்தவளுக்கு கண்ணீர் நிற்கவில்லை. கல்யாணம்‌ முடிந்து விட்டது என்பதற்காக என்னிடம் எல்லா உரிமையும் அவனுக்கு வந்துவிட்டதா? தூக்கத்தில் அவளையும் அறியாமல் ஆடை நலுங்கிக் கிடந்தது என்பதை தனக்கு வசதியாக மறந்துவிட்டாள். அவன் எப்படிப் பார்க்கலாம் என்பதே சிந்தையில் முந்தி நின்றது.

 மனது இத்திருமணத்தை ஏற்க மறுப்பதால், ஏதேச்சையாக நடந்த செய்கையையும் ஜீரணிக்க முடியவில்லை அவளால். இந்த நேரத்திற்கே உரிய மன உளைச்சல், இன்னும் மனதளவில் திருமணத்திற்கு உடன்படாத நிலை, அங்கே அம்மாவின்‌ நிலவரம், இங்கு நடந்த ஒன்றும்‌ புரியாத பேச்சு வார்த்தை என பன்முனைத்தாக்குதலில் சிக்கித் தவித்தாள் மாது. 

சத்தம் கேட்டுத் திரும்பியவள், “என்ன அர்த்தத்துல இப்படியெல்லாம் எழுதி வச்சுருக்க?” குளியலறை விட்டு வெளியே வந்தவனிடம் கோபமும், ஆத்திரமுமாகக் கேட்க, 

“ஏன், தமிழ்ல தானே எழுதியிருக்கு? நானென்ன அறுசீர் விருத்தத்துல மரபுக்கவிதையா எழுதியிருக்கேன். அர்த்தம் புரியாமப் போக. ஏதோ எனக்குத் தெரிஞ்ச வகையில நாலு வரியில ஒரு புதுக்கவிதை.” நக்கலாகச் சொல்ல இன்னும் கொஞ்சம் வெகுண்டு எழுந்தாள் பெண். 

“இது கவிதையா?”

“இப்ப என்ன உன் பிரச்சினை. கவிதையா இல்ல நான்‌ பாத்ததா?” கைகளை கட்டிக் கொண்டு, கட்டிலில் சாய்ந்தவாறு மீண்டும் ஒரு முறை நிதானமாக மேலிருந்து கீழாக அவளைப் பார்த்து நின்று கேட்க,

அனிச்சையாக கை மாராப்பையும், இடுப்பு சேலையையும் சரிசெய்ய, “என்ன தைரியத்துல நீ பாத்த?” என்றாள் முகம் சுழித்து.

“எதை?” ஒற்றைப் புருவம் தூக்கி கேட்பவனிடம் எதைச் சொல்ல என தவித்து நின்றவள்… வெறுப்போடு முகத்தைத் திருப்பிக் கொண்டாள். அதென்ன… எப்பப் பார்த்தாலும் முகத்தைத் திருப்புவது என கோபம் வர, 

“அதுக்கு மேலயும் பாக்க உரிமையிருக்கு?” என்றான் சீண்டலாக அவள் மனநிலை புரியாமல். 

அதுக்கு மேல என்றால், நினைத்துப் பார்த்தவளுக்கு உடல் கூசிப்போக, கண்களில் அனல் பறக்கப் பார்த்தாள்.‌

“ச்சே… ஒரு பொண்ணுகிட்ட எப்படி பேசறதுன்னு தெரியாதா? பொறுக்கி மாதிரி பேசுற? யார் உனக்கு அந்த உரிமையைக் கொடுத்தது?” அருவருப்பாக முகம் சுழிக்க, அது அவனை அவமானப்படுத்துவது போல் இருக்க, சட்டென நெருங்கி வந்தான். 

ஒரு நொடியில் விதிர்விதிர்த்துப் போனாள் மாது. இதயம் துடிப்பது அவளுக்கே கேட்டது. இப்பொழுதுதான் குளித்து வந்தவன் மீதிருந்து வந்த சோப்பு வாசம் நாசி நிறைத்தது. இன்னும் ஈரம் பின் கழுத்தில் வழிவதைப் பார்த்தவளுக்கு தொண்டை உலர்ந்து விட்டது. 

பனியனும், ஷார்ட்ஷும் போட்டிருந்தவன் கைகளைக் கட்டியவாறே மூச்சுக்காற்று உரசும் தூரத்தில் நெருங்கி நின்றிருந்தான். கண்கள் தெரித்து விழும் அளவிற்கு, நூலிழை இடைவெளியில் நின்றவனை ஏறிட்டுப் பரிதாபமாகப் பார்த்தவள், அவனது கரம் தன்னை‌ நோக்கி உயர, சட்டென கண்களை இறுக்க மூடிக்கொண்டாள். கண்ணீர் தன்னால் வழிந்தது‌ தன் நிலையை நினைத்து. மூச்சுக்காற்றைக் கூட வெளியிடாமல் இறுக்கிப் பிடித்து வைத்திருந்தாள். கழுத்தோரம் குறுகுறுக்க, அடுத்த நொடி நெஞ்சடைத்து மூச்சே நின்றுவிட்டது. 

மாராப்புக்குள் இருந்த மஞ்சள் கயிற்றை வெளியே உருவியெடுப்பது தெரிய, கண்களைத் திறந்து பார்த்தாள். அவளது கண் முன் ஆட்டிக் காண்பித்தான்.

“ஒரு பொண்ணுகிட்ட எப்படி பேசணும்னு தெரியும். ஆனா நான் இப்ப பேசுனது என் பொண்டாட்டிகிட்ட. பாக்குறதுக்கு மட்டும் இல்ல, அதுக்கு மேல போறதுக்கும்… எல்லா உரிமையும் இருக்கு” என்றவன் மீண்டும் தாலிக்கயிறை கழுத்தில் தழைய விட்டு அறையை விட்டு வெளியேறிவிட்டான்.  நின்ற‌ மூச்சு இப்பொழுதுதான் வந்தது அவளுக்கு. கூடவே கண்ணீரும். 

வெளியே வந்து தலை கோதியவன், படபடத்த நெஞ்சை தன்னைப்போல் நீவிக் கொண்டான். ‘வெரி டேன்ஞ்சர்… இன்னொரு தடவை இந்த விஷப்பரீட்சை வச்சுக்கக் கூடாது.’ 

கண்கள் கலங்கி, மூக்கின் நுனி சிவந்து, பரிதாபமாக ஏறிட்டுப் பார்த்தவளை அணைக்கத் துடித்த கைகளை அடக்கப்பட்ட பாடு அவனுக்கு தானே தெரியும். 

“ஊஃப்ப்” என ஊதியவன் சாப்பிட சென்று விட, 

உடை‌யிருந்த கவரை கோபத்தில் தூக்கி எறிந்தாள். வெளியே வந்து விழுந்த வயிற்றுவலிக்கான மாத்திரை அவளைப் பார்த்து சிரித்தது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top