மதன மாளிகையில் 26

26

“இதெல்லாம் அநியாயம் மாம்ஸ்!” என்ற அஜயிடம்,‌

“எதெல்லாம்?” என்று மிதப்பாகக் கேட்டான் ஜெகன்.

“திடீர்னு எங்களையெல்லாம் வெளியே போகச் சொன்னா… எங்கே போவோம். எங்க வீட்டுக்குப்போற வழிகூட மறந்துருச்சு மாம்ஸ்!” என்றான் வராத சோகத்தை வரவழைத்து.

“எங்களுக்கெல்லாம் யாரைத் தெரியும்? போகணும்னு தோன்றது… எங்க போகணும்னு தெரியலையேஏஏ!” கௌரவம் சிவாஜியாக நீட்டி முழக்கிய நரேன், முறுக்கிய ஈரத்துணியாய் கண்களை கசக்கிக் பிழிய, 

ஜெகன், “டேய், போதும்டா! பெர்ஃபாமென்ஸ் ஓவரா இருக்கு. இன்னும் ஒரு வாரத்துக்கு யாரும் இந்தப் பக்கம் தலைவச்சுக் கூட படுக்கக்கூடாது சொல்லிட்டேன்!” என்றான் மிரட்டல் தொனியில்.

“அதை எங்க பங்கு வந்து சொல்லட்டும் மாம்ஸ்!” என்றான் அஜய், அவர்களை நோக்கி வந்த மதனை கைகாட்டி.‌

இவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டே வந்தவன், “ஒரு வாரமா மாம்ஸ் சொன்னீங்க?” என்றான்.

“ஆமா… பங்கு. எங்களையெல்லாம் போகச் சொன்னா எங்க பங்கு போவோம்” வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டு கேட்க,

“விடுங்கடா! மாம்ஸ் தெரியாம சொல்லியிருப்பாரு!” என்றான்.

நரேன், “நான் சொல்லல. எங்க பங்குன்னா பங்குதான். பங்குடா!” என்று‌ மதனை தோளோடு அணைத்துப்பிடித்து, ‌நெஞ்சை நிமிர்த்திக் கூற,

“ஒரு மாசம்கறதைத்தான் ஒரு வாரம்னு மாத்தி சொல்லிட்டாருடா!” என்று‌ சொல்ல, 

பட்டென கையை‌ எடுத்தவன், “துரோகி! பச்சைத் துரோகி!” என்றான்‌ நம்பியார் பாணியில் உள்ளங்கைகளைப் பிசைந்து. 

மதியம் விருந்தும் முடித்து, சொந்தங்கள் கிளம்பிவிட்டனர். கிளம்பும் முன் தங்கையிடம், சோர்வாகத் தெரிந்த அம்மாவைக் கவனித்துக் கொள்ளச் சொல்ல, “அடிக்கடி ப்ளீடிங் ஆகுதுக்கா. இன்னும் ஹாஸ்பிடல் வரமாட்டேங்கறாங்க. வீட்டை யாரு பாப்பானு அதே பழைய புராணம்தான் இன்னமும். இந்த செமஸ்ட்டர் லீவுல எப்படியும் ஆப்ரேஷன் பண்ணனும்க்கா!” என்று சொன்ன தங்கையிடம், 

“உனக்கு எக்ஸாம் முடிஞ்சதும் சொல்லு ராகி! நானும் வந்துர்றேன். இப்படியே விட்டா அம்மா உடம்பு இன்னும் மோசமாப்போகும்!” என்றாள்.‌ 

“எப்படிக்கா? கூட்டுக் குடும்பத்துல இருக்க. விடுவாங்களா?” என்ற தங்கையின் சந்தேகத்திற்கு, “தெரியல ராகி… ஆனா, கேட்டா மறுக்க மாட்டாங்கனுதான்டி தோணுது” என்று சொல்ல,

“ஆமாக்கா… எல்லாரும் நல்ல மாதிரிதான் தெரியுது. பெரிய அத்தை தான் கொஞ்சம் உர்ருனு இருக்காங்க. மாமா… எப்படீக்கா?” என்று கேட்க, 

தங்கை மாமனைப் பற்றிக் கேட்டதும், சற்று முன் நடந்த சம்பவம் மனக்கண்ணில் விரிய, அக்கா முகம் சிவந்ததைக் கண்டு கொண்டவள்,

“யாரோ, இங்க ஐஸ் க்ரீம் ஸ்பூன்ல ஊட்டினதுக்கே கொந்தளிச்சாங்க. ஆனா… இப்படியும் ஊட்டலாம்னு இன்னைக்குதான் தெரிஞ்சுக்கிட்டேன்.” எங்கோ பார்த்தபடி உதட்டைச் சுழித்து, நீட்டி முழக்கினாள் ராகினி.

“அடிப்பாவி! ஃப்ரீ ஷோ பாத்ததுமில்லாம, கிண்டல் வேற பண்றியா?” என்று தங்கையை அடிக்க கை ஓங்க,

ஓங்கிய கையைப் பிடித்தவள், “அக்கா, ஸ்டாப்! எனக்கு நீ தாங்க்ஸ் தான் சொல்லணும்! நீ என்னடான்னா அடிக்க வர்ற. நல்லுதுக்கே காலமில்ல. நான் பாத்ததாலதான், கை கழுவ தொட்டிப் பக்கம் வந்தவங்களை எல்லாம், அங்க தண்ணியில்லைனு பொய் சொல்லி, டேக் டைவர்சன் கொடுத்து, டிராஃபிக் போலீஸ் வேலை பாத்து வேற பக்கம் அனுப்பி வெச்சேன். புருஷனும், பொண்டாட்டியும் சேந்து ஒரு பச்சப்புள்ளைய…” என்று நிறுத்த,

“பச்சைப் புள்ளையா?”

“பொய் சொல்ல வச்சுட்டீங்கனு சொல்ல வந்தேன்!” என்று பாவம்‌போல் முகத்தை வைத்துச் சொல்ல,

“ஆமாமா… என்னமோ அரிச்சந்திரினியாட்டம் பேசுற” என்று பொய்க்கோபம் காட்டினாலும், தங்கை பார்த்துவிட்டாளே என்ற லஜ்ஜையில், முகம் முழுவதும் சிவந்து, நாணம் அப்பிக்கொள்ள, 

“ஹைய்யோ! எங்க அக்கா சும்மாவே அழகு. ஒத்த முத்தத்துல இப்படி ஆக்கிட்டாரே எங்க மாம்ஸ்” என்று நெட்டி முறிக்க,

“போடீ…” என்று செல்லமாக தங்கை தோளில் தட்டினாள்.

சட்டென கைபேசி எடுத்து அந்த அழகை படம் பிடித்தவள் உடனே மாமனுக்கு அனுப்பியும்விட்டாள். 

“ஹேய்… என்னடீ பண்ற?” 

“இந்த அழக, நான் மட்டும் பாத்தா போதுமா? பாக்க வேண்டியவங்க பாக்க வேண்டாமா?” என்றாள் கண்ணடித்து. 

“உனக்கு குசும்பு கூடிப் போச்சுடீ! ஒழுங்கா படிப்புல கவனம் வை!”

“இந்தா ஆரம்பிச்சுட்டயில்ல! படிப்பு, மார்க்கு, லொட்டு, லொசுக்குனு” என்று சலித்துக் கொள்ள, 

“ராகினி!” என வெளியிலிருந்து பூங்கோதை குரல் அழைத்தது. இருவரும் வெளியே வந்தனர். 

முகத்தின்‌ சிவப்பு இன்னும்‌ மிச்சமிருக்க, அவளையே பருகியது மன்னவன் பார்வை. கையிலிருந்த கைபேசியில் ராகினி அனுப்பிய படம். 

“அக்கா, மாம்ஸ் உன்னைத்தான் பாக்குறாங்க!” அக்காவின் பக்கமாகக் குனிந்து ரகசியம் போல் சொல்ல,

“தெரியும் போடீ! பெரியவங்க எல்லாம் இருக்காங்க!” என்றாள் பல்லைக் கடித்து. 

“அது சரி… பாக்கக் கூட மாட்டீங்க. ஆனா… சைக்கிள் கேப் கிடைச்சா போதும். மாம்ஸ் ஃப்ளைட்டே ஓட்டுவாரு!”

“அடியேய்… உனக்குப்‌ புண்ணியமாப்‌ போகும். கிளம்புற வரைக்கும் வாயே திறக்காதே!” என்றாள் அழாத குறையாக. 

அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினர். 

அதற்குள் மதனின் புல்லட்டில் முன்னால் யார் உட்காருவது என்ற உரிமைப் போர்‌ மிதுனுக்கும், சஷ்ட்டிகாவிற்கும். முன்னால் உட்கார்ந்தால் தானே ஹேண்டில் பாரை பிடிக்க முடியும். அப்போதுதானே தான் ஓட்டுவது போல் பில்ட் அப் பண்ணமுடியும். இருவரும் போட்டி போட,

“இப்ப என்ன பண்ணலாம்? பாப்பா குட்டிப் பொண்ணு. யாராவது பெரியவங்க, பொறுப்பா அவள விழாம புடிச்சுக்கிட்டா நல்லா இருக்குமே. அப்ப தானே ஸ்பீடா ஓட்டமுடியும்” என்று யோசனை செய்வதுபோல் நாடியைத் தட்டி மாமன்காரன் யோசிக்க, 

“நீங்க ஸ்பீடா ஓட்டுங்க மாமா! நான் பாப்பாவை விழாமப் புடிச்சுக்கறேன்” என்று பெரிய மனிதனாய் விட்டுக் கொடுத்தான் மிதுன். சஷ்ட்டிகாவை முன்னால் அமரவைத்து, அவள்‌ பின்னால் மிதுனை உட்கார வைக்க, தன்னோடு சேர்த்து அணைத்துப் பிடித்துக்கொண்டான். 

மிதுன் வயதிற்குத் தகுந்த பிள்ளைகள் அவனது சொந்தத்தில் இல்லை. எல்லாரும் கல்யாண வயதைத் தொட்டவர்கள் என்பதால் இங்கு வந்ததில் இருந்து, சஷ்ட்டிகாவுடன் நன்றாக ஒட்டிக் கொண்டான். அவளும் அண்ணா என்று அவன் பின்னாலேயே‌ சுற்றித் திரிந்தாள். புல்லட் என வரவும் சிறு பிள்ளைகளுக்கு தன் உரிமையை விட்டுக்கொடுக்க முடியவில்லை. அதுதானே பிள்ளைகள் குணம்.‌ நீ தான் பெரியவன் என்று சொல்ல, தான்தான் அவளுக்கே பொறுப்பு என்பது போல் ஒரு பெரியமனுஷத் தோரணை மிதுனிடம். புல்லட்டில் அமர்ந்ததும் சஷ்ட்டிகா வழக்கம் போல், புர்ர்ர்ரென குரலெழுப்ப, அவளை‌ விட‌ அதிகமாக டுப்…டுப்… என மிதுன் சப்தமெழுப்ப, இருவரும் வாயாலே போட்டி போட்டு வண்டி ஓட்டினர். இருவரையும் பைக்கில் வைத்து தோப்பை சுற்றிவந்து இறக்கிவிட்டான். 

வந்தவர்கள் அனைவரும் கிளம்பிவிட வீட்டு ஆட்கள் மட்டுமே இப்பொழுது. 

இன்று இங்கேயே தங்கிக் கொள்வதாக மதன் அப்பத்தாவிடம் கூற,

“புழக்கத்துக்கு எதுவுமே இல்லையே அப்பு!” என்றார்.‌ 

“ஒரு வாரத்துக்குத் தேவையானது இருக்கு அப்பத்தா. அப்பறம் பாத்துக்கலாம்” என்றவன் பதிலில் அவன் எண்ணம் எதுவென்று சொல்லாமலே புரிந்தது அனைவருக்கும். இதுதானே அவனுக்கு உரிமைப்பட்ட வீடு. என்ன இருந்தாலும் அந்த வீடு அவனுக்கு சரணாலயம் தானே? 

இருந்தாலும் பெரியநாயகிக்குப் பேரனைத் தனித்துவிடவும் விருப்பமில்லை. அவருக்கும் மகனைப் பிரிந்து வரவும் மனமில்லாமல், இருதலைக் கொள்ளி எறும்பாக மகனா, பேரனா என தவிப்பது புரிந்தது மதனுக்கு.

“ஒரேடியா இங்க வரல அப்பத்தா. இன்னைக்குதானே மறுபடியும் இந்த வீட்ல எல்லாரும் ஒன்னு கூடியிருக்கோம். உடனே வீட்டை அடைச்சுப் போட்டு வரவேண்டாமேனு தான்? ரெண்டு நாள்‌ தங்கிட்டு வர்றோம்!” என்றான். 

இருந்தாலும் பெரியநாயகி முகம் தெளிவில்லாமல் இருக்க,

“அம்மத்தா… அவன் ஹனிமூன் செலவில்லாம தோப்புலயே 

கொண்டாடனும்னு முடிவு பண்ணிட்டான். ஃபீல் பண்ணாம‌ கெளம்புங்க. அவனைப் பத்தி எனக்குத்தான் தெரியும்!” என்று கிண்டல் பேசி, பெரியவர்களை‌க் கிளப்பி ஈரோட்டு வீட்டில் விட்டுவந்தான். பவித்ரா, மகளோடு இங்கேயே இருந்தாள்.

மாலை நெருங்க, நண்பர்களை அழைத்துக் கொண்டு ஜெகன் டவுனுக்குச் சென்றுவிட்டான். 

பவித்ரா மற்றும் சஷ்ட்டிகாவோடு அமர்ந்திருந்தவளை மதன் வந்து அழைக்க, எங்கே என்பது போல் பார்த்தாள். 

“வாங்க அம்மணி! போனா உங்களுக்கேத் தெரியும்” என்றவன், “பவி… சுப்பாத்தா இருக்காங்க. சீக்கிரம் வந்துர்றோம்” என்று சொல்ல, 

“போய்ட்டு வாங்கண்ணா… டவுனுக்குப் போனவங்க எல்லாம் இப்ப வந்துறுவாங்க” என்றாள்.  

மாதங்கியை வண்டியில் அழைத்து வந்த இடத்தைப் பார்த்ததும் சிரித்துவிட்டாள். திண்டல் முருகன் கோவில். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். 

இருவரும் படியேறிச்‌‌சென்றனர். இன்றும்‌ கிட்டத்தட்ட மணக்கோலம்தான் இருவருக்கும். ஏற்கனவே இவர்கள் குடும்ப பெயரைச் சொல்லி சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தான். 

இவர்களைப் பார்த்ததும் ஐயர், பூஜை‌ செய்து, அபிஷேகம்‌ முடித்து மாலையை‌ எடுத்து வந்தவர், ஆளுக்கொன்றாக கையில் கொடுக்க, வாங்கிய இருவருக்குமே,‌ அன்றைய நாள் நினைவில் ஆட, அவன் மாலையைப் போட்டுவிட்டு திருதிருத்ததையும், கழுத்தில் மாலை விழுந்தவுடன் அவள் முறைத்து நின்றதையும் நினைத்து சிரிப்பை அடக்கப் படாதபாடு பட்டனர். முயன்று தங்களை நிலைப்படுத்திக்கொண்டு, நிதானமாகக் கந்தனை வேண்டி, மாலையை மாற்றிக் கொண்டவர்கள், மனம் நிறைந்திருந்தது. இருவர் முகத்திலும் பக்திப் பரவசத்தை மிஞ்சிய காதல் பரவசம்.

மீண்டும் தோப்பிற்குத் திரும்ப, பேசிக் கொண்டிருந்த நண்பர்களையும், ஜெகனையும் பார்த்து மதன் வர, மாதங்கி வீட்டினுள் சென்றாள். 

இன்னும் வானம் முழுதாத இருள்‌ போர்த்தவில்லை. 

பவித்ரா அடுக்களையில் இருந்தாள். 

“வாங்க நங்கையாரே!” என்றாள் பாலைக் காய்ச்சிக் கொண்டே.‌ மகளுக்கு ஒரு டம்ப்ளர்‌ பாலை ஆற்றி எடுத்து வந்தாள். அவளிடம் கோவிலில் கொடுத்த பூவையும், திருநீற்றையும் நீட்ட, “நீயே வச்சு விடு மதி!” என தலையைத் திருப்பிக் கொடுத்தாள். பூவை வைத்துவிட்டு, விபூதியையும் பூசிவிட்டாள்.

ஆற்றிய பாலை சிப்பரில் ஊற்றி மகள் கையில் கொடுக்க, வாங்கிக் கொண்டு சோஃபாவில் படுத்துக் கொண்டு குடிக்க ஆரம்பித்தாள் சஷ்ட்டிகா. 

“காலையில கட்டின புடவை. குளிச்சிட்டு மாத்திக்கறியா மதி!” என்றாள்.‌ 

“ஆமாங்க அண்ணி! கசகசன்னு இருக்கு!” என்றவள் அறைக்குள் செல்ல, 

“அங்க இல்ல மதி! இந்த ரூம்!” என்று சொல்லும் முன்  அறைக்குள் நுழைந்தவள், நுழைந்த வேகத்தில் வெளியேறிவிட்டாள். சட்டென முகத்தில் ஒரு படபடப்பு.

அவள் வெளிவந்த வேகத்தைப் பார்த்தவள், வாய்விட்டு சிரித்தாள். “என்ன நங்கையாரே… பேய், பிசாசப் பாத்த மாதிரி இப்படி ஓடியார்ரீங்க! கல்யாணமாகி ரெண்டு மாசமாகப் போகுது. என்னமோ இன்னைக்குதான் முதன் முதலா” என்று கேலி பேசிக் கொண்டே சென்றவள், அவள் வெறித்து நின்றதைப்பார்த்து சட்டெனப் பேச்சை நிறுத்தினாள். 

“மதீஈஈ” என இரண்டு முறை அழைத்த பிறகே அவளை‌ ஏறிட்டுப் பார்த்தவள்,‌

“சொல்லுங்கண்ணி” என்றாள்.

“நீ முழிக்கறதைப் பாத்தா… இன்னும் உங்களுக்குள்ள” என்று நிறுத்த, 

இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் மாதங்கி அமைதியாக நின்றாள். இது இருவருக்குமான அந்தரங்கம்.‌ நங்கையார் என்றாலும் எப்படிப் பகிர்வது என்ற யோசனை அவளுக்குள். அவள் அமைதியின் அர்த்தம் புரிபட்டது பவித்ராவிற்கும்.‌ கணவன் மனைவி விஷயத்தில் மூக்கை நுழைப்பது அதிகப் பிரசங்கித்தனம் ‌என்றாலும், இவர்கள் திருமணம் நடந்த விதம் அவளுக்குள் அச்சத்தை விளைவித்தது. 

“மதி! உனக்கும் அண்ணனுக்கும் ஏதாவது பிரச்சினையா? திடீர்னு இவரைக் கட்டி வச்சுட்டாங்கனு ஏதும் சடவா? அண்ணன் படிக்கலைனு யோசிக்கறியா? இல்ல, நீயும் மத்தவங்க மாதிரி அண்ணனோட அம்மா வேற சாதின்னு” என்று அடுத்தடுத்து கேள்விகளை வரிசையாகத் தொடுக்க,

“அய்யோ அண்ணி! அப்படியெல்லாம் இல்ல. ஆரம்பத்துல இவர் மேல கோபம் இருந்துச்சு அண்ணி.‌ அது வேற விஷயம். ஆனா… இப்ப அப்படி எதுவும் இல்ல. உங்க அண்ணாதான் இந்த வீட்லதான் வாழ்க்கையைத் தொடங்கணும்னு, என் படிப்பும் முடியட்டும்னு…” என்று நிறுத்தினாள். இப்பொழுதுதான் பவித்ராவிற்கு மூச்சே வந்தது. ஆசுவாசமாக மூச்சு விட்டவள்,

“இம்புட்டுத்தானா… நான் கூட ரெண்டு பேருக்கும் செட்டாகலையோன்னு பயந்துட்டேன். எங்க அண்ணன்கறதுக்காக சொல்லல நங்கையாரே. மதன்‌ அண்ணாவைக் கட்டிக்கக் கொடுத்து வச்சுருக்கணும்!” என்று மிதப்பமாகச் சொல்ல,

“எம்புட்டு?” என்றாள் சற்று நேரம் பேசியதில் இயல்பு நிலைக்குத் திரும்பியவள். பவித்ரா புரியாமல் பார்க்க,

“இல்ல… கொடுத்து வச்சுருக்கணும்னு சொன்னீங்களே… எங்க கொடுக்கணும். எம்பூட்டு கொடுக்கணும்” என்றவள் பேச்சில் நக்கல் தூக்கலாக இருக்க, 

“அதை எங்க அண்ணங்கிட்டயே கேட்டுக்கோங்க. அவர் சொல்வாரு…‌ எம்புட்டுக் கொடுக்கணும், எங்க எங்க கொடுக்கணும்னு? பதிலுக்கு ஒட்டிக்கி ரெட்டியா அவரும் கொடுப்பாரு! இதுல எல்லாம் கஞ்சத்தனம் பாக்கமாட்டாரு!” என்று கண் சிமிட்டி சொல்ல, 

“நானும் பாக்கத்தானே போறேன். உங்க அண்ணன் கஞ்சனா, வள்ளலாங்கறதை!”

“நானும்தான் இப்பப் பாத்தேனே… உள்ள‌ போனதும் ஓடி வந்த வேகத்தை தான். எங்க அண்ணன் பாடு இன்னைக்குத் திண்டாட்டம்தான் போல!” என்று நொடிக்க, பெண்ணவள் முகம் குங்குமமாய்ச் சிவந்து விட்டது. 

“இப்படியே போயி குளிச்சுட்டு சேலை மாத்திட்டு வாங்க நங்கையாரே. இன்னைக்கி ஏற்பாடெல்லாம் எங்க கிஃப்ட். ரெண்டாவது தடவையா ரூம் ரெடி பண்ணியிருக்கு. ஆனா, கிஃப்ட்டப் ‌பாத்து அரண்டு ஓடி வந்த முதல் ஆள்‌ நீங்கதான்” என்று சொல்ல, 

“போங்க அண்ணி!”‌ என்றாள் சிரித்த முகமாக.

“போகத்தான் போறோம். சீக்கிரம் குளிச்சுட்டு வந்தீங்கன்னா நாங்களும்‌ சீக்கிரம் கிளம்புவோம்.‌ இப்படி சொல்ற அளவுக்கு வச்சுக்க மாட்டோம்! எங்களுக்கும் கொஞ்சம் இங்கிதம் தெரியும் நங்கையாரே” என்று சொல்லி கண்ணடிக்க, இவள் பேச்சை நிறுத்தமாட்டாள் எனத் தெரிந்து, வேகமாக இடத்தை விட்டு அகன்றால் போதுமென மாதங்கி ஓட, 

“அவ்வளவு அவசரமா?” என்று அதற்கும்‌ கேலி பேச, இதற்கு மேல் முடியாதென, “அண்ணி” என்றாள் பாவமாக முகத்தை வைத்து.

“சரி… பொழச்சுப் போ!” என்று பவித்ரா வாய்விட்டு சிரித்தாள். 

“அந்த ரூம்ல போய் குளிச்சுட்டு வா மதி! இது அப்பத்தா ரூம்.  அந்தக்காலத்து வீடுங்கறதால, அட்டாச்ட் பாத்ரூம் எல்லாம் இருக்காது. நீங்க இங்க தங்கறதா சொல்லவும் இந்த ரூம்லதான் தங்கணும்கறது அப்பத்தா உத்தரவு” என்று சொல்ல, பவித்ரா காட்டிய மற்றொரு அறைக்குள் குளிக்கச் சென்றாள். பொதுவான குளியலறைதான். அதையும் யாரும் பயன்படுத்தியது கிடையாது. பெரும்பாலும் ஆண்கள் எல்லாருக்கும் மோட்டார், அல்லது கிணற்றுக் குளியல்தான் இங்கிருந்த வரைக்கும். 

பெரியவர்களை வீட்டில் விட்டு வரும் பொழுது சீதாலட்சுமி இரவுக்குத் தோசைமாவு கொடுத்து விட்டிருந்தார். மதியம் பந்திக்கு வைத்த குழம்பு கொஞ்சம்‌ எடுத்து வைத்துக் கொண்டனர். மீதியெல்லாம் தோப்பில் வேலை பார்த்தவர்களே எடுத்துச் சென்றுவிட்டனர். அதை சூடு செய்து வைக்க, அதற்குள் மாதங்கி குளித்து சேலை மாற்றி வந்தாள். பாலைக் குடித்தபடியே சஷ்ட்டிகா சோஃபாவில் தூங்கியிருந்தாள். 

பவித்ரா, நங்கையாவுக்குத் தலை சீவி, அலங்காரம் பண்ணி, சாதி மல்லியை வைத்துவிட்டாள். 

“மாம்ஸு… தனியா விட்டுப் போனா, எங்க பங்கு பயந்துக்க மாட்டானா? நாங்க அவனை கண்ணுக்குள்ள வச்சுப் பாத்துக்கிட்டோம்.” இன்னும் அவர்கள் கிளம்பாமல் அவனை‌ வம்பிழுத்துக் கொண்டிருந்தனர். 

“டேய்… கிளம்புங்கடா!” என்று ஜெகன் பொறுமையிழந்து கடுப்பாக,

“கிளம்பிட்டோம்…‌ கிளம்பிட்டோம்… இதே மாதிரி எங்க வாழ்க்கையிலும் ஒருநாள் வரும்.‌”

“வர்றப்ப பாக்கலாம்! இப்ப கிளம்புங்கடா!”

“எதே! நீங்க பாப்பீங்களா? நாங்க என்ன சினிமாவா காட்டப் போறோம். பாப்பாராம்ல?”

“அடேய்… படுத்தாதீங்கடா. கிளம்புங்கடா. எனக்கும்‌ லேட்டாகுது!”

“உங்களுக்கு எதுக்கு லேட்டாகுது. ஆல்ரெடி ரெண்டு ஆச்சு!”

“டேய்… வீட்டுக்குப் போக லேட்டுச்சுடா!” என்று அழாத குறையாக ஜெகன் நொந்து கொள்ள, இவர்கள் கலாட்டாவைப் பார்த்து, வாய்விட்டு சிரித்தான் மதன். 

“அழகன்டா நீ” என்று மாமன் மகன் சிரிப்பை ரசித்தவன்,

“இதென்னங்கடா, இத்தனை இளநி சீவியிருக்கு?”‌ என்றான் ஓரமாக சீவி வைத்திருந்த தேங்காய்களைப் பார்த்து.

“எப்பவும் பங்கு காலையில ரெண்டு எளநி குடிப்பாப்ல. நாளைக்கு கொஞ்சம் சூடு அதிகமா இருக்கும்ல. அதான் ஒரு பத்து எளநியை மொத்தமா சீவி வச்சுருக்கோம். இன்னும் வேணுமா பங்கு!” என்று கேட்க,‌ 

“போதும் கிளம்புங்க?” என்று வாயில் கை வைத்து சைகை செய்ய,

“குடும்பமாடா இது! மரியாதை தெரியாதவங்க. அடிக்காத குறையா துறத்துறாங்க. இனிமே இந்தத் தோப்புப் பக்கம் வந்தா ஏன்டான்னு கேளுங்க!” வீராப்பாக மூவரும் கிளம்ப, 

“குளத்துக்கிட்ட கோவிச்சுக்கிட்டுப் போனா நஷ்ட்டம் குளத்துக்கில்ல. உங்களுக்கு தான்டீ மாப்பிள்ளைகளா! வீசிப்போவீங்க” 

“பரவாயில்ல மாம்ஸ்… நாங்க வெள்ளைக்காரன் பாணிய யூஸ் பண்ணிக்கிறோம்!”

“ச்சை… வீச்சமெடுத்தவிங்களா. போங்கடா!”

“போயாச்சு… போயாச்சு! சென்ட் அடிச்சுக்குவோம்னு சொல்ல வந்தோம். எப்பப்பாரு கோக்கு மாக்காவே யோசிக்கறது” என்று போற‌பேக்கில், சீவி வைத்ததில் ஒரு இளநீரை எடுத்து மதன் கையில் கொடுக்க, எதுக்கு என்பது போல் பார்த்தான். 

“உனக்குத்தான் பால் பழக்கமில்லையில பங்கு. கையில இளநீ எடுத்துட்டுப் போ!” என்று சொல்ல, கையில் வாங்கிய இளநீரை ஓங்க, மூவரும் ஓட்டம் பிடித்தனர். 

இவர்கள் அலப்பறையைப் பார்த்து மச்சான்களுக்கு சிரிப்பு அடங்கவில்லை.

அதற்குள் தூங்கும் பிள்ளையைத் தூக்கிக் கொண்டு பவித்ரா வெளியே வந்திருந்தாள்.‌ 

அவள் பின்னாலே வந்தவள்‌மீது பார்வை விழ,‌ அப்படியே அசையாமல் நின்றுவிட்டான் மதன். அவளும் இவனையே‌ பார்க்க, 

ஜெகன், ‘வா!’ என்பது போல் பவித்ராவிற்கு சைகை செய்து இருவரும் கிளம்பி விட்டனர். கார் கிளம்பியது கூட‌ இருவர் கவனத்திலும்‌ பதியவில்லை. ஆசை வெட்கம் அறியாது தான். சுற்றமும் அறியவில்லை இருவருக்கும். 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top