25
வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவோடு நிமிர்ந்து நின்ற மதனின் மாளிகையில், நடுக்கூடத்தில், மனைப்பலகை மேடையிட்டு, இரு வீட்டாரோடும், நெருங்கிய சொந்த பந்தங்களும் கூடியிருக்க, தோப்பில் வேலை பார்ப்பவர்களோடு நண்பர்கள் சூழ, மதன்கைலாஷ், மாதங்கியின் கழுத்தில் பொன்தாலிச்சரடை அணிவித்து, மீண்டும் ஒரு முறை மனைவி என்ற உறவை, வலுவாகப் பிணைத்துக் கொண்டான். மன்னவன் விருப்பப்படியே அவன் வதனத்தைவிட்டுப் பார்வையை விளக்கவே இல்லை மாதரசி.
முகம் புன்னகையில் திளைத்திருக்க, கண்ணாடி போல் கண்களில் மெல்லிய நீர்ப்படலம். மூக்கை உறிஞ்சி, கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள். எதற்கு இந்த உணர்ச்சி மேலிடல் என்று கேட்டால் அவளுக்கே காரணம் தெரியாது. இது வெறும் வெளிப்பூச்சல்ல. அகமும், புறமும் ஒரு சேர மகிழ்ச்சியில் திளைத்திருக்க, உயிரின் அடி ஆழத்திலிருந்து கிளர்ந்த அகத்தின் பூரிப்பு, ஆயிரங்கள் கொட்டிக் கொடுக்கும் ஒப்பனை இதற்கு ஈடாகாது.
திருமணத்தன்று அவள் கவனம் எதிலுமே பதியாமல் வெறுமையை மட்டுமே மனம் கனமாய் சுமந்திருந்தது. ஆனால், அதற்கு நேர் எதிராக இன்று உள்ளம் முழுதும் மத்தாப்பூச் சிதறல். மதனுக்குமே அன்று எதுவும் மனதில் பதியவில்லை. ஐயர் சொல்லியதை திருப்பிச் செய்தான். அவ்வளவே. ஆனால், இன்று ஒவ்வொரு கணத்தையும் கவனமாய் நினைவில் படிமமாகப் பதியவைத்தான்.
தங்கக் கலரில், மென் பட்டுப் புடவை தென்னம்பாலை நிறத்து தளிர் மேனியை பாந்தமாய்த் தழுவியிருக்க, தங்கச்சிலை போல் வந்தருகில் அமர்ந்திருந்தவளை, மன்னவன் பார்வை நொடிக்கொரு தரம் தழுவி மீண்டது. இதில் சிக்கனம் பார்க்காமல் கொஞ்சம் தாராள குணம் காட்டியிருந்தான். வாழ்நாளில் ஒரு நாள்தான் என்றாலும் வாழ் நாள் முழுமைக்கும் நினைவில் நிற்கவேண்டிய நாள் என்பதில் கவனம் வைத்து, புடவையைத் தேர்ந்தெடுத்திருந்தான்.
தலை நிறைய குண்டு மல்லிச்சரம், காதோரம் ரகசியம் பேசும் குடை ஜிமிக்கி, கழுத்தில்… பெரியநாயகி, அடுத்த தலைமுறை மருமகளுக்கெனக் கொடுத்த சிவப்புக் கல் அட்டிகையும், அதற்கு பொருத்தமாக சிவப்புக் கல்லில் இரண்டு விரல்கடை அளவிற்கு முகப்பு வைத்த இரட்டைச் சரம் சங்கிலி, நட்சத்திர மின்னலாய் ஒற்றைக்கல் வைர மூக்குத்தி, கை நிறைய கண்ணாடி வளையலோடு தோழமை சேர்த்த தங்க வளையல்கள், செம்பவளமாய் சிவந்த மருதாணி விரல்கள் என பழமையும், புதுமையும் கலந்து, பக்கத்தில் இருந்தவனை கிரங்கடித்தாள்.
குடும்ப வழக்கத்தில் ஐந்து பவுன் தாலிச்சரடு என்பது இல்லவேயில்லை, குறைந்தது பத்துப் பவுனாவது போட வேண்டுமென பெரியநாயகி எவ்வளவோ வாதாடிப் பார்த்தார். இன்னும் ஐந்து பவுனிற்கு தான் கொடுப்பதாகச் சொல்லியும் மதன் மறுத்துவிட்டான். நீங்க எது செய்வதானாலும் உங்க கொள்ளுப் பேரன், பேத்திக்கு செஞ்சு அழகு பாருங்க என்று சொல்லி அப்பத்தாவின் வாயடைத்துவிட்டான். அவன் மறுத்துவிட அவர் ஆசைக்கு அவரது நகைகளை மாதங்கிக்கு போட்டு அழகு பார்த்தார்.
பிறந்த வீட்டு சார்பில், தாலிக்குண்டு, காசு, வாழைப்பூ, லட்சுமி பொட்டு, மாம்பிஞ்சு, அன்னாசிப்பூ என தாலி உருக்கள் அத்தனையும் எடுத்து வந்திருந்தார் பூங்கோதை. கௌரவத்திற்காகவேணும் சீர்வரிசையில் விட்டுக் கொடுத்ததில்லை வாசுதேவன்.
பரிமளமும், பவித்ராவும் சேர்ந்து தாலி பிரித்துக் கோர்த்து முடிய, பெரியவர்களிடம் ஆசி வாங்கிக் கொண்டனர். அப்பொழுதே பூஜையறை அழைத்துச் சென்று விளக்கேற்ற வைத்தான். தான் உரிமையாகப் புழங்கிய வீடு என மனதில் ஒரு ஓரம் முனுமுனுக்காமல் இல்லை வாசுகிக்கு.
வீடு, மதன் பங்கில் வந்தபொழுதே வீடு பொதுவில் இருக்கட்டும் என்றுதான் மதனும் தன் பெரியப்பாவிடம் கூறினான். அவர்தான், நிலம் உன் பேரிலும், வீடு பொதுவிலும் இருப்பது இந்த தலைமுறைக்கு வேண்டுமானால் சரியெனப்படும். நாளைய சந்ததி எப்படியென சொல்லமுடியாது. அதனால் எல்லாம் உனக்கே சொந்தமாக இருக்கட்டும் என்றுவிட்டார்.
தனது பெற்றோர் படத்தையும், அருணகிரி படத்தையும் மட்டும் எடுத்துவிட்டான். வாசுகிக்கு ஒன்று ஆத்திரமூட்டும். மற்றொன்று பழைய நினைவுகளைத் தூண்டிவிடும். இரண்டுமே அவரது உடல் நிலைக்கு நல்லதல்ல என்று தற்போதைக்கு எடுத்து பரணில் போட்டுவிட்டான்.
வீட்டாரிடம் வெளிநாடு செல்லும் தகவலை தெரியப்படுத்திய கிரிதரன், வந்த வேலை முடிந்ததென மறுநாளே, சுபாஷினியோடு பெங்களூர் கிளம்பிவிட்டான். சின்ன மகனின் செயல் மேலும் மனதளவிலும், உடலளவிலும் முடக்கியது வாசுகியை.
தாலிபிரித்துக் கோர்க்கும் விசேஷம், தோப்பு வீட்டில் ஏற்பாடு செய்வதாக மதன், வீட்டாரிடம் கூற… அனைவருக்கும் சந்தோஷமே. வெகு நாட்கள் கழித்து பூர்வீக வீட்டில் அனைவரும் ஒரு விசேஷத்தை முன்னிட்டு ஒன்று கூட ஒரு வாய்ப்பு.
வாசுகிக்கு தான் அங்கு செல்ல மனம் முரண்டியது. அது மதனுக்கு சொந்தமான வீடு என்பதையும் தாண்டி, மகன் அருணின் நினைவுகள் அந்த வீடு முழுவதும் நிரம்பியிருக்கிறது. அவன் பிறந்து, தவழ்ந்து, வளர்ந்ததெல்லாம் அந்த மாளிகையில் தான். இறுதியில் அவனைக் கிடத்தியிருந்ததும் அந்த வீட்டின் வெளி முற்றத்தில்தான். எதுவோ மனதைப் பிடித்து பின்னுக்கு இழுத்தது.
“பெரியம்மா… இந்த உசுரு அருண் அண்ணாதுனு நெனச்சா நீங்க தோப்பு வீட்டுக்கு வாங்க. நான் உங்களை கட்டாயப் படுத்தல!” என்று மட்டும்தான் வாசுகியிடம் கூறினான். ஆனால், அவன் வார்த்தைகளில் இருந்த அழுத்தம் நான்தான் உங்க மகன் அருணகிரி என்பது போல் தோற்றமளித்தது வாசுகிக்கும்.
“பெத்தவங்க இல்லாதவன் வாசுகி. அவன் அப்பன் செஞ்சதுக்கு இவனை எதுக்கு இன்னும் தண்டிக்கிற. பெரியவன் விதி முடிஞ்சது. அவன் போயிட்டான். எனக்கடுத்து வீட்டுக்கு மூத்தவ நீதானே. சின்னஞ்சிறுசுக சந்தோஷமா இருக்க வேண்டாமா. நீதானே முன்னுக்கு நிக்கோணும்!” மதன் இல்லாத சமயம், பெரியநாயகியும், வாசுகியிடம் தன்மையாய் அவரது பொறுப்பை புரியவைக்க, சின்ன மகனின் செய்கையில் மனம் வெறுத்து இருந்தவருக்கு, இவ்வளவு செய்தும் தன்னை எதிர்பார்க்கும் மதனின் உள்ளம் புரிந்தது.
இதைக் கேட்டுக் கொண்டிருந்தவள், “ஏன் அம்மத்தா… அவரோட பெத்தவங்க இருந்தா இதையெல்லாம் நீங்க செய்ய மாட்டீங்களா?” என்றாள் மாதங்கி.
“எம் பேரனுக்கு நாஞ்செய்யாம வேற யார் செய்வா?” என்றார் உரிமையோடு.
“அப்பறம் ஏன் ஒவ்வொரு தடவையும் பெத்தவங்க இல்லாதவன்னு சொல்லிக் காட்டியே ஒவ்வொன்னும் செய்றீங்க?” என்று கேட்க,
“அந்தக் குறை தெரியக் கூடாதுன்னு தானே கண்ணு அவனை கண்ணுக்குள்ள வச்சு பாத்துக்குறோம்!” என்றவர் கண்கள் கலங்கியது.
“குறை தெரியக்கூடாதுன்னு, அதையே சொல்லிக் காட்டலாமா? அவங்க ஒன்னும் வயசாகியோ, விபத்துலயோ அவரைப் பிரிஞ்சு போகல. அவரே மறக்க நினைக்கறதை நீங்க எல்லாரும் அடிக்கடி அவருக்கு ஞாபகப்படுத்தறீங்க அம்மத்தா! ஏன், பெத்தவங்க இல்லைனா என்ன? நீங்க எல்லாம் அவருக்கு இல்லையா?” என்று கேட்க, மாதங்கி கேட்பது பெரியநாயகிக்கும், மற்றவர்களுக்கும் நன்கு விளங்கியது. பெற்றவர்கள் பேச்சை இனிமேல் அவன்முன் எடுப்பதில்லை என முடிவெடுத்தார்.
வீட்டில் சிறு விசேஷம் என்றாலும் மதன் பொறுப்பில் விட்டுத்தான் தனசேகருக்குப் பழக்கம். அவனிடம் ஒப்படைத்து விட்டாலே போதும். கவலைப்படத் தேவையில்லை. ஆனால் இம்முறை, எல்லா ஏற்பாடுகளையும், அவன் நண்பர்களை உடன் வைத்துக் கொண்டு ஜெகனே முன்னெடுத்து, இன்டிமேட் வெட்டிங் (intimate wedding) லெவலுக்கு ஏற்பாடு செய்திருந்தான். காலை விருந்து தோப்பிலேயே, வெட்டவெளியில் பந்தி டேபிள், சேர் போட்டு பரிமாறப்பட்டது.
மாதங்கி, பந்தியில் எதிர்புறம் அமர்ந்திருந்த தங்கையைப் பார்க்கும் பொழுதெல்லாம் முறைத்துக் கொண்டே இருந்தாள். அவளது அத்தை குடும்பமும் வந்திருந்தனர். உடன் விகாஸும் தான்!
ராகினி மாமனைப் பாவமாகப் பார்த்தாள். “மாமா!” என்றாள் கெஞ்சும் குரலில்.
“உங்க அக்காவுக்கு யாரையாவது முறைச்சுக்கிட்டே இருக்கணும். இப்ப உன்னோட டார்ன். விடு பாத்துக்கலாம்!” என்று கொழுந்தியாளுக்கு தைரியம் சொன்னவன் பந்தியில் பக்கத்தில் அமர்ந்து சாப்பிட்டவளை, ‘விடேன்’ என்பதுபோல் பார்க்க,
“நீங்க அவளுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க! என்ன வயசாகுது அவளுக்கு. இப்பதான் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர். ஒழுங்கா படிச்சோமா, சொந்தக் கால்ல நின்னோமான்னு இல்லாம இப்பவே அவளுக்கென்ன அவசரம்?” என்றாள் படபடவென பல்லைக் கடித்துக் கொண்டு யார் காதிலும் விழாதவாறு.
“மேகி… எல்லாரும் உன்னை மாதிரியே இருக்க மாட்டாங்கடீ. அன்னைக்கி உன்னோட புக்செல்லாம் கேட்டப்ப ராகினி என்ன சொன்னா தெரியுமா? அக்காதான் படிப்பு படிப்புனு இருக்கும் மாமா. நம்ம எல்லாம் பேருக்கு ஒரு டிகிரி வாங்கினோமா. நல்லா படிச்சு, வேலைக்குப் போற மாப்பிள்ளையப் பாத்து, கல்யாணம் பண்ணி, வாழ்க்கையில செட்டில் ஆனோமான்னு இருக்கணும்னு சொன்னா. ஆனா… ஆல்ரெடி மாப்பிள்ளை பாத்துட்டாங்கறது அன்னைக்கு எனக்குத் தெரியல!” என்று சொல்லி சிரித்தவன், அவள் முறைத்துப் பார்க்க,
“மேகி… இன்னைக்குதான் நமக்குக் கல்யாணம் நடந்திருக்கறதா நெனச்சு, வெட்டிங் டே ஆஃபரா அவளை மன்னிச்சு விட்ரு!” என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.
தாலி பிரித்து கோர்க்கும் வைபவத்திற்கு அனைவருக்கும் ஜவுளி எடுத்துவிட்டு, சாப்பிட இருவரும் ஹோட்டலுக்கு வந்தனர்.
அங்கு வைத்துதான் ராகினியும், விகாஸும் கையும், களவுமாக மாட்டிக் கொண்டனர்.
ஏதோ குரல் பரிட்சயமானது போலிருக்க, இருவர் பார்வையும் ஒரு சேரத் திரும்பியது. அடுத்த வரிசையில் மூலையோரம் ஒதுங்கி இருந்த டேபிள் மீது படிந்தது. மாதங்கி கோபமாகப் பார்க்க, மதன் சுவாரஸ்யமாகப் பார்த்தான். தன் முன்னிருந்த ஐஸ் க்ரீமை, ஸ்பூனில் எடுத்து விகாஸுக்கு ஊட்டிவிட்டாள் ராகினி. அதைப் பார்த்தவன் மெலிதாக விசிலடித்து சிரித்தான்.
மாதங்கி, “விகாஸ் மாமா!” என்றாள் அவளையும் அறியாமல்.
“மாமாவா?” என்றான் ஆச்சர்யமாக.
“ம்ம்… எங்க அத்தை மகன். கல்யாணத்தன்னைக்கு உங்க அண்ணன் வரலைங்கவும், லிஸ்ட்டுல உங்களுக்கு முதல்ல இருந்தது இவங்க தான்” என்று தகவலறிக்தை வாசிக்க,
‘நான் கேட்டேனா? இப்ப இதுவா முக்கியம்’ என்பது போல் பார்த்தான்.
“ஆனா… ராகினி கூட எப்படி?” என யோசிக்க,
“இதென்ன கேள்வி. பாத்தாத் தெரியல? இன்னைக்கு அவளுக்கு காலேஜ் தானே? கால் பண்ணு!” என்றான்.
இவளும் தங்கைக்கு அழைக்க, கையிலிருந்த ஃபோனைப் பார்த்த ராகினி, “அக்கா!” என எதிரில் இருந்தவனுக்கு, வாயில் கை வைத்து சைகை காட்டிவிட்டு, அழைப்பை ஏற்று, “சொல்லுக்கா!” என்றாள்.
“எங்க இருக்க ராகி?”
“இதென்ன கேள்வி. காலேஜ்லக்கா. ஏன்க்கா?” என்றாள்.
“ப்ரேக் டைமா… எப்படி கால் அட்டென்ட் பண்ற?” என்றவுடன், சற்று தடுமாறியவள்,
“அதுவந்து… ஃப்ரி பீரியட்க்கா. அதான் அட்டென்ட் பண்ணே?”
“ஹோஓ… சரி… சரி… ஐஸ் கிரீம் உருகிடப் போகுது. சீக்கிரமா ஊட்டிவிடு!” என்று சொல்ல, சட்டென கண்கள் பயத்தில் விரிய, தலையைத் திருப்பி இடவலமாகப் பார்த்தவள், அக்காவையும், மாமனையும் பார்த்துவிட்டு படக்கென எழுந்து நின்றுவிட்டாள். விகாஸும் தான்.
அவர்களை நோக்கி வந்தவள், “என்னடீ இது… என்ன மாமா நீங்களும்? அவளுக்கு என்ன வயசாகுது?” என்று எகிற,
மதனுக்கு அவளது கோபத்தை விட, விகாஸை மாமா என்றதுதான் உள்ளுக்குள் பொசபொசத்தது. அத்தை மகனை மாமான்னு சொல்லாம வேற எப்படி சொல்லுவாங்க. தனக்குத்தானே ஆறுதலும் சொல்லிக் கொண்டான்.
“அக்கா… ப்ளீஸ் கத்தாதே. இது ஸ்கூல் படிக்குறப்ப இருந்துக்கா” என்று கெஞ்சும் குரலில் கேட்டவள் பார்வை பக்கத்தில் நின்ற மாமனை சப்போர்ட்டுக்கு அழைத்தது.
“மதி… எதுனாலும் உக்காந்து பேசு. எல்லாரும் பாக்குறாங்க பாரு!” என்று அதட்ட, கோபத்தை அடக்கிக் கொண்டு தங்கை பக்கத்தில் அமர்ந்து கொள்ள, விகாஸ் பக்கத்தில் மதன் அமர்ந்துகொண்டான்.
“அப்பாவைப் பத்தி தெரிஞ்சும் எப்படிடீ, இவ்ளோ தைரியம் உனக்கு?” என்றாள் அதே கோபத்தோடு.
“சம்மதிச்சா பாப்போம். இல்லைனா ரெஜிஸ்டர் மேரேஜ் தான்!” என்று இப்பொழுது சற்று பயம் நீங்கியதில் கித்தாய்ப்பாய் சொல்ல, மாதங்கியைப் பார்த்த மதன் அவனையும் மீறி சிரித்துவிட்டான். நீ வெறும் வெத்து வேட்டுடீ என்றது அவன் சிரிப்பு.
மாதங்கி அவனை கோபமாகப் பார்க்க, “நீ நினைக்க மட்டும் தான் செஞ்ச. உன் தங்கச்சி செயல்லயே காட்டிட்டா. வெல்டன் ராகினி!” என கொழுப்தியாளுக்கு கை நீட்ட, பட்டென கையில் அடித்தாள் அவன் மணாட்டி.
“ஹேய்… அத்தை பையன்தானே?” என்றான் மதன்.
“நீங்க வேற… இவங்க அப்பாவுக்கும், எங்க அப்பாவுக்கும் சுத்தமா ஆகாது. ரெண்டு பேரும் ரெண்டு துருவம்! ஈகோ… அடிக்கடி முட்டிக்கும்.”
“ஆமா… உங்கப்பாவுக்கு யார் கூடத்தான் முட்டிக்காது. அப்போ, ரெண்டாவது மருமகனையும் லவ்வாங்கியாத்தான் பாப்பாரா?” என்றான் நக்கலாக.
“என்ன மாமா இது? இப்பத்தான் காலேஜே ஃபர்ஸ்ட் இயரே போறா. அதுக்குள்ள லவ்வுனு இப்படி சுத்தறீங்க. அதுவும் காலேஜ் கட்டடிச்சுட்டு!”
“டிகிரி முடிச்சுட்டு தான் லவ் பண்ணனும்னா, இதென்ன ஜாப்பா(job) மதி. ஸ்கூல் டேஸ்லயே ஸ்டார்ட் ஆகிடுச்சு!” விகாஸ் அசடுவழியச் சொல்ல,
“பப்பி லவ்வா?” என்று மதன் சிரிக்க,
ராகினி, “யெஸ்… மாம்ஸ்! இவங்க எங்க வீட்டுக்கு லீவுக்கு வந்தப்பவே!” என்றாள் கன்னம் சிவக்க.
“எப்படி டீ… எனக்கே தெரியாம?”
“நீ புக்ஸ் தவிர எதைப் பாத்த. அக்கா… இன்னைக்கு மாமாக்கு பேர்த் டே. அதை செலப்ரேட் பண்ணத்தான், இவ்ளோ அவுட்டர்ல இருக்குற ஹோட்டலுக்கு வந்தோம். அப்படியிருந்தும் உங்க கண்ல பட்டுட்டோம்” என்று சொல்ல, மாதங்கிக்கும் இன்று விகாஸ் பிறந்த நாள் என்பது நினைவிற்கு வந்தது.
மதன், “ஹேப்பி பெர்த் டே…” என்று இழுக்க,
“விகாஸ்” என தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு அவனும் கை கொடுத்தான்.
“அடிக்கடியெல்லாம் இப்படி வந்ததில்லக்கா. மன்த்லி ஒன்ஸ் தான்க்கா” என்று சொல்ல, பக்கென மதன் சிரித்து விட்டான். மாதங்கி தங்கையைப் பார்த்த பார்வையில் அனலடித்தது.
“உங்க அப்பாவுக்குத் தப்பாத வாரிசுதான்டி நீ. லவ் பண்றவங்களப் பாத்து இப்படி முறைக்கிற” என்றான் மதன்.
அன்றைய நாளை நினைத்து சிரித்தவன்,
“மேகி… இன்னைக்கு நாள் நமக்குரிய நாள்டீ. அதை என்ஜாய் பண்ண விடுடீ. இப்பவும் அவமேல கோபத்தை காமிக்கிற. இந்த மாமனையும் கொஞ்சம் கவனி! இன்னைக்கு இளநீர் பாயாசம் ஸ்பெஷல். உனக்காக!” என்று சொல்லி சிறிய பேப்பர் கப்பில் ஊற்றியிருந்த பாயாசத்தை அவள் பக்கமாக நகர்த்தி வைத்து கண்சிமிட்டிச் சொல்ல, அவள் கோபம் சட்டென வடிந்தது. இதழில் மென்னகை நெளிய, கண்களில் குறும்பு கொப்பளிக்க,
“எனக்கு இளநீர், பாயாசமா வேண்டாம். இதைக் குடிச்சா சிந்தாதே…” வாய்க்குள்ளே முணங்கியவள், கன்னத்துள் நாக்கைச் சுழற்றி அவனை ஒரு மார்க்கமாகப் பார்த்தாள். கீழ்ப் பற்களால், மேலுதட்டை மெலிதாக கடித்து, அவனைப் பார்த்த பார்வையில், அந்தப் பார்வை சொல்லிய சேதியில், சடுதியில் அவனுக்குள்ளும் சிலபல வேதியியல் மாற்றங்கள்.
அவள் பக்கமாக இலேசாகத் தலையைமட்டும் சாய்த்து, “மேகி… எங்க உக்காந்து என்ன பார்வையிது? படுத்தாதடீ. ராத்திரி வரைக்கும் என்னால கன்ட்ரோல் பண்ணமுடியாது. நீ ஒரு மார்க்கமாத்தான்டீ இருக்க… இன்னைக்கு குறுக்க தலையணைக்கு வேலையில்ல. நல்லா ஞாபகம் வச்சுக்கோ!” முகம் பார்க்காமலே கூறியவன் குரலின் தெரிந்த தாபத்திலேயே, பெண்ணவளுக்கு கன்னத்தோரம், சிவந்து, சிலிர்த்து, உள்ளங்கை சில்லிட்டுப் போனது. சடுதியில் காய்ச்சல் கண்ட உணர்வு மேனியெங்கும்.
மதனின் கள்ளப்பார்வை அவளையே பார்த்திருக்க, பந்தி பறிமாறிக் கொண்டே, “நானெல்லாம் விரதத்துல இருக்கேன்டா. கொஞ்சம் அக்கம் பக்கம் பாத்து பண்ணுங்கடா!” யாருக்கோ சொல்வது போல் ஜெகன் சொல்லிச் செல்ல,
“இவர் கண்ல வேற மாட்னோமா. வச்சு செய்வாரே!” என்றவன் முகமும் நொடியில் சிவந்துவிட்டது.
அவன் சாப்பிட்டு முடித்து, இவள் முடிக்கட்டும் எனக் காத்திருக்க, அதன் பிறகு ஒரு வாய் இறங்கவில்லை மாதங்கிக்கு. எப்படி இறங்கும். அவன் தான் இலையை மூடி வைத்துவிட்டு இவளை கண்ணாலே விழுங்க ஆரம்பித்துவிட்டானே. அவளும் இலையை மூடி வைத்து விட்டு எழுந்து கொள்ள, வாய்க்குள் சிரித்துக் கொண்டான்.
அவள் எழுந்து செல்ல, பாயாசமிருந்த கப்பை கையில் எடுத்துக் கொண்டான்.
கை கழுவ தொட்டிப் பக்கம் இருவரும் வர, சுற்றும் முற்றும் பார்த்தவன், கையோடு எடுத்த வந்த இளநீர் பாயாசத்தை அவளிடம் நீட்ட, “நான்தான் வேண்டாம்னு…” என்று முடிக்கவில்லை. சடுதியில் அவள் வாயில் சரித்தவன், சரித்த வேகத்தில், கழுத்தோடு சேர்த்தணைத்து, இதழ் வழிந்த பாயாசத்தை, கண்சிமிட்டும் நேரத்தில் இதழ் மாற்றிக் கொண்டான். என்ன நடந்தது என்பதை மூளை கிரகிக்கக் கூட அவளுக்கு நேரம் கொடுக்கவில்லை. விரல் சொடுக்கும் நேரத்தில் அத்தனையும் நிகழ்த்திக் கொண்டான்.
கழுவிய கையின் ஈரத்தை. விரல் நுனியில் அவள் முகத்தில் தெளிக்க, பாரதிராஜா படம் போல் அண்டசராசரமும் அசையாமல் நின்றவளுக்கு, அப்பொழுதுதான் சுமரணையே வந்தது.
“கை காயுது பாரு. பாயாசத்துல ஸ்வீட் ஓவர்” என்று சொல்லி கண்சிமிட்ட, கை மட்டுமா… தொண்டைக் குழியும் சேர்ந்துதான் காய்ந்துவிட்டது பெண்ணவளுக்கு.
முத்தம் போதாதே
சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே
நாணமே நாணுதே
இதழ் முத்தம் தரும்
அதில் பித்தம் வரும்
இதழ் முத்தம் தரும்
அதில் பித்தம் வரும்
என்னையே உன்னிலே
தேடினேன் அழகே
முத்தம் போதாதே
சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே
நாணமே நாணுதே
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.
மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய தூய பற்களில் ஊறிய நீர் பாலுடன் தேனைக் கலந்தாற் போன்றதாகும். நம்ம ஐயன் எதையும் ஆழ்ந்து, அனுபவிச்சு தான்யா எழுதியிருக்காரு மனுஷன்.

I just finished setting up my account and the process was super smooth. Can’t wait to start winning big here. Check out jili95register for a quick start!
Everything feels very professional here. The customer support responded to my query in minutes. Solid choice at in007bet