மதன மாளிகையில் 24

24

“மேகி… கொஞ்சம் அந்தப் பக்கமும் பாருடீ… எனக்கே ஒரு‌ மாதிரியா‌ இருக்கு!”

“இதற்குத் தானே ஆசைப்பட்டாய்‌ பாலகுமாரா?” என்றவளை‌ முறைப்பது இவன் முறையாயிற்று.

“அதுக்குன்னு இப்படியா பாத்து வைப்ப? முழுங்குற மாதிரி. மாம்ஸ் பாத்து சிரிக்கிறார்டீ!”

“என்ற வூட்டுக்காரர  நாம்பாக்குறேன். யார் சிரிச்சா எனக்கென்ன?” உதடு சுழித்துச் சொன்னவளைவிட்டு பார்வையை அதற்ற முடியாமல்,‌ கண்களுக்குள் கைது செய்தான்.

“அப்போ… அம்மணி… முகத்தை… திருப்ப மாட்டீங்க!” நிறுத்தி நிதானமாக ஒவ்வொரு‌ வார்த்தையாகக் கேட்க,

“ம்ம்ஹும்…” என்று இடவலமாகத் தலையாட்டினாள்.

“எப்பவுமே…”

“ம்ஹ்ம்…” என்று தலை மேலும் கீழும் ஆடியது.

“கண்ண மூடமாட்டியே!”

“ம்ம்ஹும்…”

“பேச்சு மாறக்கூடாது!”

“மாதங்கி எப்பவும் சொன்ன சொல் மாறமாட்டா!” அரிச்சந்திரன் வீட்டிற்கு அடுத்த வீடு போல வாக்கு கொடுத்தாள்.‌

“டீல்…”

“டீல்…” 

“அப்ப ஓ.கே! நானும் பாக்கத்தானே போறேன்” என்று நமட்டுச்சிரிப்பு சிரித்தவன் முகத்தில் கள்ளத்தனம் கொட்டிக்கிடந்தது. 

“எதை?” என்றவள் புருவம் சுருக்க,

“அம்மணி மூடுறீங்களா இல்லையாங்கறதைத்தான்!”

“என்ன பேசுறீங்க?” என்றவள் பார்வை அனல் கக்கியது.

“கண்ணுங்கம்மணி கண்ணு!” என்றவன் சிரிப்பு இப்பொழுது விவகாரமாய்த் தெரிந்தது பெண்ணவளுக்கு. 

எதற்கு இந்தச் சிரிப்பென்று ஆராய்ச்சிப் பார்வை பார்க்க, அவன் உதட்டுக்குள் ஒழிந்த புன்னகை ஏதோ வில்லங்கமாகப் பட்டது. 

இருந்தும் அவனது தோரணையில் மயங்கித்தான் நின்றது மாதங்கியின் மனம். பட்டு வேட்டி, பட்டுச் சண்டையணிந்து, நெற்றியில் மெலிதாக விபூதிக்கீற்று, அத்தோடு சந்தனம், காற்றில் கலைந்தாடும் முன்னுச்சி முடி, சந்தோஷத்தில் விகசித்த முகமும், கற்றை மீசைக்கடியில் மலர்ந்த குறுஞ்சிரிப்புமாக, கழுத்தில் மாலையோடு மாப்பிள்ளை கோலத்தில் தன்னருகில் அமர்ந்திருந்தவனை அவளது பார்வை ரசணையாய் மொய்க்க, 

“அடியேய்… படுத்தாத!” என்று வாய்க்குள் முணங்கிவிட்டு இவன்தான் பார்வையை விலக்க வேண்டியதாய்ப் போயிற்று. 

இன்று… மதன்கைலாஷ், மாதங்கி திருமண வைபவம்.

மறுபடியும் முதல்ல இருந்தான்னு நீங்க கேக்குறது புரியுதுங்கோ. ஆனா பாருங்க, தாலி பிரிச்சு கோக்குறதை கல்யாணம் மாதிரியே பண்ணனும்னு, முகூர்த்த சேலை வாங்கறதுலருந்து ஆரம்பிச்சு, தோப்புல வேலை பாக்குறவங்களுக்கு துணிமணி, முன்தினம்‌ நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி, (அப்படித்தானுங்க சொல்லிக்கிட்டான்) வரை எல்லாம் திருமண ஏற்பாட்டிற்கிணையாக நடத்திக் கொண்டிருந்தான். 

“இதெதுக்கு பங்கு வாங்கியாந்திருக்க?” என்றனர் தங்கள் முன் வைக்கப்பட்ட பாட்டிலைப் பார்த்து நால்வரும்.

“கல்யாணத்துக்கு பார்ட்டி கூட வைக்கல. சரியான பிசினாரிப்பயன்னு நெனச்சுரக் கூடாதுல்ல. அதுக்கு தான்!” என்றவனை மேலும் கீழுமாகப் பார்த்தனர். 

“எது… இதுதான் நீ எங்களுக்குக் கொடுக்குற பார்ட்டியா?”

தங்கள் முன்னிருந்த ஒரு குவார்ட்டர் பாட்டிலையும், மதனையும் ஒரு மார்க்கமாகப் பார்த்துவிட்டு, தங்கள் முகத்தையும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். 

“கோவில்ல தீர்த்தம் கூட நிறைய‌ கொடுப்பாங்க பங்கு!”‌ என்றான்‌ சங்கர்.

“அப்பறம், சொல்ல மறந்துட்டேன். கோவில்னு சொல்லவும் தான் ஞாபகம் வருது. குலசாமிக்கு வச்சு பூஜை பண்ணின பின்னாடி‌தான் எடுத்துக்கணும்! குடிச்சுட்டு ஓவரா‌ சலம்பல் பண்ணக்கூடாது. நாளைக்கு‌ முழுசும் வேலையிருக்கு!” 

அதைக் கேட்ட நரேன் முகம், “அப்பவும் இது குலசாமி பூஜைக்குதான் வாங்கியிருக்க. எங்களுக்கு வாங்கல! அதுலயும் இதை நாங்க நாலுபேரும் குடிச்சுட்டு சலம்பாம வேற இருக்கணும்?” என்று கர்ண கொடூரமாக மாறியது. 

“சாமியாடா குடிக்கப் போகுது. இப்ப கெடா வெட்டுறோம். சாமியா கறிசோறு சாப்பிடுது. சாமி பேரைச் சொல்லி நாமதானே சாப்பிடறோம். இதுவும் அது மாதிரிதான். பூஜை முடிஞ்சதும் உங்களுக்குதானடா!” பெருந்தன்மையாகச் சொல்லிவிட்டுத் திரும்பிச் செல்ல,

“நான் கூட ஒரு நிமிஷம் நம்ம பங்கானு ஆச்சர்யப்பட்டுப் போனேன்டா.‌ இவனுக்குப் பொறக்குறதெல்லாம்‌ பொம்பளப் பிள்ளையாத்தான்டா பொறக்கும். கஞ்சப்பைய!” என்று முதுக்குப் பின்னால் பொறுமித் தள்ள,

நின்று என்னவென்று திரும்பிப்‌பார்த்தான்.

“நீ ரொம்ப நல்லவன்னு சொன்னோம் பங்கு!” என்றனர் அசட்டுச் சிரிப்போடு. 

“நல்லவன்னு குடை புடிக்கிறவங்களைத்தான்டா நம்பவே கூடாது!”

“ஆமாமா… அப்படியே நம்பி ஏமாந்துட்டாலும். தூங்கும் போது கூட காலாட்டிட்டே தூங்குற ஆளாச்சே. உன்னைய ஏமாத்த முடியுமா? எங்க மொதலாளி தங்க மொதலாளி!” என்றனர் பல்லெல்லாம் காட்டி. 

“வேலையப் பாருங்கடா!” என்றுவிட்டு சிரிப்போடு கிளம்பினான். 

நால்வர் பார்வையும்‌ தங்கள் முன்னிருந்த ஒற்றை‌ குவார்ட்டர் பாட்டிலை கொலைவெறியோடு வெறித்தது. இதை நாளை பூஜை வரை பத்திரப்படுத்தி வேற வைக்கவேண்டும்.  

“காலக்கொடுமை சரவணா!” நால்வர் மைன்ட் வாய்ஸ்.

அன்றிரவு மாடியில்…

கிரியுடன் பேசிவிட்டு மச்சான்கள் இருவரும் கீழே இறங்கும்‌ முன், கிரியை ஒரு‌ கணம் திரும்பிப் பார்த்தவன்,

 “இன்னைக்கி முற்போக்குனு நெனச்சுட்டு நீங்க ரெண்டு பேரும் அடிக்கிற கூத்துக்குப் பேரு லிவிங் இன் ரிலேஷன்ஷிப்னு நீங்க வேணா இங்கிலீஷ்ல டீசன்ட்டா சொல்லிக்கலாம். ஆனா, கல்யாணம் பண்ணாம ஒரு ஆணும் பொண்ணும் சேந்திருந்தா நம்ம ஊர்ல அதுக்குப் பேரு வேற. இவன், இவள கூத்தியாளா‌ வச்சுருக்கானாம்னு தான் பச்சையா சொல்லுவாங்க” என்று‌ நிறுத்தியவன், 

தாடையைத் தடவிக் கொண்டே, “எனக்கென்னமோ, அவங்கதான் உன்னை வச்சிருக்குற மாதிரி இருக்கு! நீ பாக்குற வேலைக்கும் இன்னொரு பேரு இருக்கு. டீசன்ட்டா‌… உனக்குப் புரியற மாதிரி இங்கிலீஷ்ல சொல்லணும்னா மேல் எஸ்கார்ட் (male escort)” என்று சொல்ல, சட்டென முகம் கருத்துவிட்டது கிரிக்கு. எதையோ எதிலோ முக்கி அடித்தாற்போலிருந்தது. 

“நல்லா யோசிச்சுக்கோ. காதல்ல தோக்கலாம். ஆனா கல்யாண வாழ்க்கையில தோத்துறாதே! பெரியம்மா, பெரியப்பாவை நீ சொன்ன மாதிரி லக்சரி சீனியர் சிட்டிசன் ஹோம்ல சேக்கணும்னு மட்டும் ஒருநாளும் நினைச்சுப்பாத்துறாதே! அவங்களுக்கு நீ ஒருத்தன் மட்டும் தான் மகனில்ல. இந்த உசுரே அருண் அண்ணா வாழ்நாள் காலண்டர்லருந்த கிழிச்சு எடுத்துக்கிட்டதுதான். உடம்புதான் என்னோடது. உசுரு அருண் அண்ணாது” என்றவன் குரலில் உக்கிரம் ஏறியிருந்தது.

இருளில், விண்மீன் வெளிச்சத்தில் மின்னிய அவன் கண்களின் தீட்சண்யம் கிரியைச் சுட்டது. ஒரு கணம் அருணகிரிதான் தன் முன் நிற்கிறானோ என்றுகூட மனம் துணுக்குற்றது. சின்ன வயதில் மதனைச் சீண்டும் பொழுதெல்லாம் கண்டிக்கும் அதே பார்வை‌. 

ஜெகனுக்கு கிரியின் முகம் பார்க்கக்கூட விருப்பமில்லை. மதன் தோளில் கை போட்டு ஆதரவாக இறுக்கிக் கொண்டான்.

லிவ் இன் என்பதென்ன… ஆணுக்கு‌ நான் கட்டுப்பட மாட்டேன் என பெண்ணும், பெண்ணுக்கு நான் கட்டுப்பட மாட்டேன் என ஆணும் தட்டுக்கெட்டுத் திரிவதுதானே. உன் இச்சைக்கு நான். என் இச்சைக்கு நீ. அந்தக் கோட்டைத் தான்டி நீயும் வராதே. நானும் வரமாட்டேன் என்று எழுதப்படாத ஒப்பந்தம். கேட்டால் இதற்குப் பெயர் தனிமனித சுதந்திரம் என்ற பிணாத்தல் வேறு. லிவ் இன் என்பது குடும்ப அமைப்பையே சீர்குலைத்துவிடாதா? குடும்ப அமைப்பு சீர்கெட்டால் சமுதாயக் கட்டமைப்பு, சீட்டுக் கட்டுக் கோபுரம் போல் சரிந்துவிடுமே.

மனிதன் இயற்கை போட்டுவைத்த வட்டத்தைவிட்டு விலக ஆரம்பித்து விட்டான். அதென்ன நண்பனுக்கு மேல. கணவனுக்குக் கீழ. மஞ்சள் கயிற்றுக்குக் கட்டுப்படாத நூலிழை இடைவெளியாம். இந்த உறவு முறையை எப்படி வகைப்படுத்துவது. 

இன்றைய தலைமுறைக்குப் பெரிதாகத் திருமண வாழ்க்கையில் நாட்டமில்லை. அப்படியே முதல் தலைமுறை ஆட்களை சமாளிக்க முடியாமல் கல்யாணம் செய்து கொண்டாலும் குழந்தை பெற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. குழந்தை பற்றி கேட்டால் இன்னும் எங்களையே புரிந்து கொள்ளவில்லை. குழந்தைக்கு டைம் எடுக்கும் என்று காரணம் வேறு. டீ விளம்பரம் கூட அப்படித்தாங்க சொல்லுது. (டீ போடுறதுக்கும் குழந்தை பெத்துக்கறதுக்கும் என்ன சம்பந்தம்னு தெரியல) 

இதற்கு என்ன அர்த்தம்? நாங்க எப்ப‌ வேணாலும் பிச்சிக்கிட்டுப் போயிருவோம். அதனால் அவசரப்பட வேண்டாம் என்பதன் உட்பொருள். இதெல்லாம் பொருளாதாரத் தன்னிறைவு பெற்ற இளைய சமுதாயத்தினரிடம் தான். நடுத்தர வர்க்கம் இன்னும் ஓடு ராஜா‌ ஓடு என ஓடிக் கொண்டுதானிருக்கிறது. 

கீழே இறங்கி அறைக்கு வந்தவன் லைட்டைக் கூடப் போடவில்லை. மெல்லிய விடிவிளக்கின் வெளிச்சத்திலேயே சட்டையைக் கழற்றி ஹேங்கரில் மாட்டிவிட்டு, குளியலறை சென்று வந்தவன், பனியன், கால் சட்டையோடு படுத்துவிட்டான். நெற்றி மீது கைமடக்கிப் வைத்துப் படுத்தவனிடமிருந்து எந்த அசைவும் இல்லை. அவனுக்குள் கலவையான சிந்தனை முடிச்சுக்கள். விட்டத்தை வெறித்தபடியே சற்று நேரம் அமைதியாகக் கரைந்தது.

பக்கத்தில் படுத்திருந்தவளுக்கு தான் மூச்சை இழுத்துப் பிடிப்பதே பெரும்பாடாய்‌ப் போயிற்று. அவனிடம் சிறு‌ அசைவு தெரிந்தாலும் உடல் விரைத்து, மூச்சுக்காற்று தடைபட்டது. இன்று காலையில் அவன் காட்டிய அதிகப்படியான நெருக்கம் அவள் தூக்கத்தை காவு வாங்கியிருந்தது. 

செவியோரம் அவன் மூச்சுக் காற்று குறுகுறுக்குமோ? இடையில் கை விழுந்து இழுத்து அணைக்குமோ, முதுகோடு அவன் மார்பு கதகதப்பாக இழையுமோ என்ற கற்பனையிலேயே நொடிக்கு நொடி படபடப்பு எகிறியது. அடிவயிறு குழைந்து கால்கள் இறுகியது. அசையாமல் படுத்திருந்தாள். மல்லாந்து படுத்திருந்தவன் இவள் பக்கமாகப் புரண்டு படுக்க, சட்டென அவள் உடல் விரைப்பது அந்த இருட்டிலும் நன்றாகத் தெரிய இவ்வளவு நேரமாக இறுகியிருந்த முகம் சட்டென கனிந்தது. அவனுக்குள்ளும் காலையின் நினைவுகள்.

முகத்தில் புன்முறுவல் பூக்க, “நீ தூங்கலைனு தெரியுது மேகி!” என்றான். திடீரென அமைதியை உடைத்து அவன் குரல் ஒலிக்க, விலுக்கென உடல் குலுங்கி இதயம் நின்று துடித்தது அவளுக்கு. 

“எப்படி… எப்படித் தெரியும்” படபடத்து வேகமாகத் திரும்ப, 

“நீ‌ தூங்கியிருந்தா, இவ்வளவு நேரமா ஒரே எடத்துல படுத்திருக்க மாட்ட. இந்நேரம் தலகாணி உதை பட்டு‌ பறந்திருக்கும். எம்மேல ஏறிப்‌ படுத்திருப்ப!” என்றதும் அவளுக்கு தான் லஜ்ஜையாகப் போயிற்று.   

அவனுக்கும் இன்று‌ தூக்கம் வரும் வழியைக் காணோம். எழுந்து கட்டிலில் சாய்ந்து அமர்ந்து கொண்டான்.‌ குறுக்கே கிடந்த தலையணை எடுத்து மடியில் வைத்துக் கொண்டான்.‌

படுத்தவாக்கில் அவனை அண்ணார்ந்து பார்த்தவள், “தலை வலிக்குதா?” என்றாள். 

அதுவும் தான். முன்தினம் பெற்றோர் நினைவு. இப்பொழுது கிரியுடன் பேசிய பிறகு அருணின் நினைவு எல்லாம் ஒன்று சேர்ந்து மனதை அழுத்தியது. 

“தலையைப் புடிச்சு விடவா” என்று கேட்க, வேண்டாமென  தலையாட்டினான். 

அவளுக்கும் பரீட்சை முடிய இன்னும் ஒரு வாரமிருக்க, 

“மேகி, உனக்கு எப்படி கல்யாணம் பண்ணனும்னு ஆசை” என்றான் திடீரென. 

விளையாடுகிறானா என்பது போல் அவனைப் பார்க்க, “இல்ல… உனக்குன்னு ஒரு ஆசை இருந்திருக்கும்ல. மாப்பிள்ளை, படிப்பு, வேலை இந்த மாதிரி” என்றவன் மெல்லிய வெளிச்சத்தில் அவள் முகத்தையே ஆழ்ந்து பார்த்தான். அவளுக்குள் இருக்கும் விருப்பம் என்னவாக இருக்கும் என்ற ஆவலில். 

“எதுக்கு கேக்குறீங்க?”

“கேட்டா‌ பதில் சொல்லு. அதென்ன எதிர் கேள்வி கேக்குறது?” 

“இதென்ன அடக்கு முறை. எதிர்க்கேள்வி கேக்கக்கூடாதுன்ன?”

“இதுல எங்கெங்க அம்மணி அடக்குமுறை வந்தது. இப்படி அவசர அவசரமா கல்யணம் பன்னலைனா, எப்படியெல்லாம் கல்யாணம் பண்ணனும்னு உனக்குள்ள ஒரு ஆசை இருந்திருக்கும்ல.”

“ம்ம்ஹ்ம்… இருந்துச்சே!” என்றவுடன்‌ அவன் முகம் சத்திழந்தது. அவளது ஆசை என்னவாக இருந்திருக்கும்.‌ நன்கு படித்த… என அவசரமாக அவனுக்குள் ஒரு கற்பனை ஓட,

அதற்குள், “யாரையாவது லவ் பண்ணி, வீட்டுக்குத் தெரியாம ஓடிப் போயி, மாலையும் கழுத்துமா, எங்க அப்பா ரெஜிஸ்டர் ஆஃபிஸ்ல, அவர் முன்னாடியே போய் நிக்கணும்.‌ அப்ப அவர் முகம் எப்படி மாறுதுன்னு பாக்கணும்னு ஆசை” என்று சொல்லி முடிக்க, சட்டென எல்லாம் மறந்து கண்களில் நீர்வர வாய்விட்டுச் சிரித்தான். அவனையே‌ முறைத்துப் பார்க்க, 

“யாரையாவது லவ் பண்ணுனியா?” என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு. 

“எங்கே… எங்க தெருவுலயே ஒருத்தனும் எங்கள நிமுந்து கூடப் பாக்க மாட்டானுங்க. வாசுதேவன் பொண்ணுன்னா தலை தெறிக்க ஓடுவானுங்க!” சலிப்பாய் சொல்ல,

“அவ்வளவு மோசம் ஒன்னும் இல்லையே!” என்றான் படுத்திருந்தவள் மீது முழுவதுமாக பார்வையை ஓட்டி. அவனது நக்கல் தொணியில் கோபம் வரவில்லை. சிரிப்புதான் வந்தது. அவளும் எழுந்து அமர்ந்து கொண்டாள்.

“இதெல்லாம் எங்கப்பா மேல இருந்த கோபத்துல சொன்னது. எனக்கு கல்யாணத்துல எல்லாம் பெருசா இன்ட்ரஸ்ட் இல்ல. படிக்கணும். வேலைக்குப் போகணும். எங்கம்மா மாதிரி வீட்டுக்குள்ளேயே எங்க அப்பாவை மட்டும் சார்ந்து அடங்கிறக் கூடாதுன்னு தோணிச்சு.” 

“ஃபெமினிசமா?”

“இதுல எங்க ஃபெமினிசம் வருது. ஒருத்தர சார்ந்தில்லாம தனிச்சு நிக்கணும்கறது ஃபெமினிசமா?” 

“இங்க யாரும் ஒருத்தரை ஒருத்தர் சார்ந்தில்லாம தனிச்சு இயங்க முடியாது மதி. படிக்கும் போது உணவுச் சங்கிலி படிச்சதில்ல. இந்த உலகத்துல ஒன்றைச் சார்ந்து தான் மற்றொன்று. இந்தக் கண்ணி அறுபட்டுப்போனா இயற்கையே முரண்பட்டுப் போகும். எலிக்கும் பாம்பிற்குமான கண்ணி விடுபட்டுப் போகுதுனு வை. எலிகள் பெருத்துப் போகும்? விவசாயம் கெட்டுப் போகும். பாம்பிற்கும் கழுகுக்குமான தொடர்பு அற்றுப் போனால் பாம்புகள் பெருத்துப் போகுமே!”

“இங்க உணவுக்காக ஒன்றையொன்று சார்ந்திருக்கிறது தப்பில்ல. ஆனா, ஒட்டுண்ணி மாதிரி ஒருத்தரோட உழைப்ப உறிஞ்சி எடுக்கறது என்ன நியாயம்?” 

“அப்போ ஆண்கள் உழைக்கலியா?”

“நான் அப்படி சொல்லல. ஆண்களோட உழைப்புக்கு அங்கீகாரம்‌ கிடைக்குது. அவங்க உழைப்பு‌ பணமா மாறும்போது அவங்க உழைப்புக்கு மரியாதை கிடைக்குதே. அதைவிட அதிகமா வீட்ல பொம்பளைங்க உழைச்சாலும் அதுக்கு வேல்யூ இல்ல! உழைப்பு இங்க பணமா மாறணும். அப்பத்தான் அதுக்கு மதிப்பு!” 

“அப்படியில்ல மதி, ஆண் ஒரு ரூபா சம்பாதிச்சாலும் பெண்ணுக்கும் அதுல பங்கிருக்கு. அவன் நிம்மதியா வெளியே போயி சம்பாதிக்கணும்னா வீடு அமைதியா இருந்தாதான் முடியும். அந்தப் பொறுப்பு‌ வீட்டுப் பொம்பளைங்க கையிலதான் இருக்கு! அப்போ அவன் சம்பாதிக்கறதுல மனைவிக்கும் பங்கிருக்குதானே?” 

“ஆனா… எல்லா ஆண்களும் இதை உணர்ரது இல்லையே. எங்க வீட்ல ஆல் இன் ஆல் எங்கம்மாதான். தி கிரேட் இன்டியன் கிட்சன்னு ஒரு படம் வந்ததே. அது மாதிரிதான் எங்க வீட்லயும். அந்தப்படத்துல கிட்சன்‌ மட்டும்தான் காட்டினாங்க. இன்டியன்ஸ் வீட்டு பாத்ரூமையும்‌ காட்டியிருக்கணும். அங்கேயும் பொம்பளைங்க தானே. எத்தனைபேர் யூஸ் பண்ணினாலும் பொம்பளைங்கதானே கழுவணும். அக்ஷய்குமார், அப்பாஸ்னு விளம்பரத்துக்கு வாந்தாக்கூட, பாத்ரூம் சுத்தமா இருக்கானு வீட்டுப் பொம்பளைகிட்டதானே கேக்குறாங்க. விருந்தாளி வந்துட்டா சமையல்கட்டுலருந்து, பாத்ரூம் வரைக்கும் சுத்தமா இருக்கணும்ங்கற கவலை எங்களுக்கு தானே?” என்றவளை ஒரு‌ கணம் ஆழ்ந்து பார்த்தான். அவள் வார்த்தைகளின் வலி புரிந்தது. மூத்த தலைமுறை அம்மாக்களைப் பார்த்து நொந்து போனவளின் வலி. 

“இங்க மாறவேண்டியது ஆண்கள் இல்ல மதி. அன்னைக்கு உனக்கு சொன்னதுதான் இன்னைக்கும். உங்களுக்காக யாராவது வரணும்னு எதிர்பார்க்கக் கூடாது.‌ நீங்கதான் மாறணும். இப்போ, ஒரே வீட்ல ஒன்னா வளர்ற‌ பிள்ளைகளையே எடுத்துக்கோ. பெரியவங்க சொல்றதை என்ன ஏதுன்னு கேக்காம செய்ற‌ பிள்ளைகிட்டத்தான் அடிக்கடி வேலை சொல்லுவாங்க. மாட்டேன்னு எதிர்த்துப் பேசுற பிள்ளைகிட்ட சொல்ல மாட்டாங்க. அவ அடங்காதவ… நீ வாம்மான்னு‌ வேலை செய்ற பிள்ளைதான் திரும்பத் திரும்பச் செய்யும். இவ போற எடத்துல எல்லாத்தையும் அனுசரிச்சுப் போவான்னு‌ அப்பவே மண்டையக் கழுவ ஆரம்புச்சுருவாங்க. அதுவும் நாம அப்படித்தான் போலன்னு அதுக்கேத்த மாதிரிதான் வளரும்.‌ நல்லா படிப்பா… துணிச்சலா பேசுவா… எந்தப் பிரச்சினையும் சமாளிப்பானு சொல்லி பிள்ளைய வளத்தா, அதுக்கேத்த மாதிரி துணிச்சலா வளரும்.”

“உங்கம்மாவும் ஆரம்பத்துலயே உங்கப்பாவோட பொறுப்பு என்னன்னு உணர்த்தியிருக்கணும். சம்பாதிக்கிறது மட்டும் உங்க வேலையில்லைனு புரிய வச்சுருக்கணும். ஆண்களுக்குள்ள‌ எப்படி பலகாலமா சில விஷயங்கள் ஊறிப்போச்சோ, அதே மாதிரி பெண்களுக்குள்ளும் சில விஷயங்கள் ஊறிப்‌போயிருக்கு. உங்க அப்பா மட்டுமில்ல பெரும்பாலான ஆண்கள், ஆம்பளைன்னா இப்படித்தான். ஆளுமையோட இருக்கணும். அதிகாரம் பண்ணணும். ஆனா, அன்றைய காலகட்டம் மாதிரி இன்னைக்கு அதை வெளில பண்ணமுடியாது. அவர்களுக்கான ஒரே‌ சோர்ஸ் வீட்ல இருக்குற பெண்கள் தான்.‌” 

“உங்க அம்மாவுக்கும் கல்யாணம் முடிச்ச புதுசுல அந்த கெத்து தேவைப்பட்டிருக்கும். அவங்க பொறந்த வீட்லயும் அவரு கோபக்காரர்மா. எதுத்துப் பேசினா பிடிக்காது. எல்லாம் நேரத்துக்கு நடக்கணும். நைட்டு சப்பாத்திதான் சாப்பிடுவாரு. சாதம் சாப்பிட மாட்டாரு. யார்கிட்டேயும் அதிகம் பேசமாட்டாருன்னு அம்மா வீட்ல, தன் புருஷனுக்கு பில்டப் கொடுத்து ஹைப் ஏத்தி வச்சுருப்பாங்க. ஓடி, ஓடி தன் புருஷனுக்கு அண்ணனுங்க, அப்பா எல்லாம்  பணிவிடை செய்றது புடிச்சிருக்கும். பிறந்த வீட்ல தன் புருஷனுக்கு கிடைக்கிற மரியாதையில அவங்களும் குளுந்து போயிருப்பாங்க. உங்க பாட்டி வீட்லயும் மருமகனாச்சேனு அதையே ஃபாலோவ் பண்ணியிருப்பாங்க. அது அங்க மருமகள் வர்ற வரைக்கும் ஓகேவா‌ இருந்திருக்கும். அதையே உங்க அத்தையும் வீட்டு மருமகனுக்கு காவடி தூக்கணும்னு எதிர்பாக்கும் போதுதான் பிரச்சினை தலை தூக்கியிருக்கும். அப்படியென்ன சீமையிலில்லாத மருமகன்னு. கரெக்டா?”

“எப்படீங்க… நேர்ல பாத்த மாதிரியே சொல்றீங்க?”

“இது தான் உலக நடைமுறை. அது அவங்களச் சொல்லியும் குத்தமில்ல. பொதுவாகவே திட்டினாலும், அடிச்சாலும் ஆன்டி ஹீரோஸ்தானே பெண்களுக்குப் புடிக்கும். அதே ஆன்டி ஹீரோஸ் வில்லனாத் தெரிஞ்சாங்கனா அவங்களுக்கு வயசாரிச்சுன்னு அர்த்தம். ஆரம்பத்துல ஆம்பளைகளுக்கு கொம்பு சீவி விட்டுட்டு, காலம் கொஞ்சம் மாறவும் இப்ப குத்துது குடையுதுன்னு, புலம்பினா எப்படி? 

“பல நூறு வருஷமா ஊறிப்போன சமூகக் கோட்பாடு. ஆண்பிள்ளை பிறந்ததும் நீ பையன்கற கிரீடம் அவன் தலைக்கு தன்னால ஏறிடுது. ஊர் தன்னை மெச்சணும்னு, அடக்குமுறையை பொண்டாட்டி, பிள்ளைக மேல காமிக்க வேண்டியது. இதெல்லாம் பத்து இருபது வருஷத்துக்குள்ள சுவிட்ச் போட்ட மாதிரி டக்குனு மாறணும்னா எப்படி? சினிமாவா என்ன, க்ளைமாக்ஸ்ல திருந்தறதுக்கு? இப்பல்லாம் சினிமால கூட வில்லன்‌ஸ் திருந்தறமாதிரி காட்டுறதில்ல. கொஞ்சம் கொஞ்சமாத்தான் மாறும்.”

“முதல்ல பொண்ணுங்கள படிக்கவே கூடாதுன்னாங்க. அப்பறம் எழுதப் படிக்கத் தெரிஞ்சா போதும்னாங்க. கொஞ்ச காலம் கழிச்சு படிக்கட்டும்… ஆனா, வேலைக்கெல்லாம் போக்கூடாதுன்னாங்க. அப்பறம், வேலைக்குப் போகட்டும் டீச்சர், ஆஃபிஸ், பேங்க் உத்யோகம் இந்தமாதிரி 9 டூ 5 வேலை ஓகேன்னாங்க. ஆனா, இப்ப காலம் எவ்வளவு மாறியிருக்கு. நைட் சிஃப்ட் போறாங்க. கேப் புக் பண்ணி தனியா வர்றாங்க. நாடு விட்டு நாடு போறாங்க. தனியா பிஸ்னஸ் தொடங்குறாங்க. இந்த மாற்றம் எல்லாம் ஒரே நாள்ல வந்ததில்ல.”

“இன்னைக்கி நாம தார் ரோடு போட்டு கார்ல வழுக்கிட்டு‌ சௌகர்யமாப் போறோம்னா, ஏதோ ஒரு காலத்துல அது கல்லும் முள்ளுமா இருந்த காடா இருந்திருக்கும். யாரோ ஒருத்தர் சிரமம் பாக்காம கல்லையும், முள்ளையும் ஒதுக்கிவிட்டு நடந்துருப்பாங்க. அவங்க பின்னாடி இன்னொருத்தர் போயிருப்பாங்க. ரெண்டு, மூனாகி… அஞ்சு… பத்தாகி, பத்து… அம்பது பேராகி, கல்லும் முள்ளுமா இருந்த பாதை ஒத்தையடிப் பாதையா மாறியிருக்கும். ஒத்தையடிப்பாதை காலப்போக்குல வண்டிப்பாதையாயிருக்கும். வண்டிப் பாதை தார்ச்சாலை ஆகியிருக்கும். அதுலதான் நாம இப்ப சௌகர்யமா ட்ராவல் பண்றோம். இப்ப நீ கேள்வி கேக்குற. அதைப்‌பாத்து உன் தம்பி மாறுவானே ஒழிய, உங்க அப்பா மாறணும்னு எதிர்பார்க்க முடியாது. ஏன்னா அவரு, பாட்டன், முப்பாட்டன்னு இப்படியான ஆண்களைப்‌ பார்த்து வளர்ந்தவரு. ஆம்பளைனா இப்படித்தான் இருக்கணும்கற சமுதாயத்தால வளர்க்கப்பட்டவரு. மாறலாம். மாறாமலும் போகலாம். மாறினா நல்லது தானே.”

“நம்ம ரொம்ப தூரம் நீளம்‌ தாண்டனும்னா, அதுக்கு முதல்ல ரொம்ப தூரம் ஓடணும் மதி! என்றவனை கண்ணகலாமல் பார்த்திருந்தாள் மாதங்கி. 

“இதெல்லாம் எங்க படிச்சீங்க?” என்றாள் ஆச்சர்யம் நிறைந்த விழிகளில். 

“நீ ஸ்கூல், காலேஜ்னு போன. பாஸ் ஆகணும்ன்னு சிலபஸ் மட்டும் படிச்சிருப்ப. நான் அங்கெல்லாம் போகல. அதனால கண்ல பட்டதெல்லாம் படிச்சேன்!” என்று சொல்ல கலகலத்தது சிரித்தாள்.

“ரொம்ப வித்யாசமாப் பேசுறீங்க!”

“வேற வழியில்ல. புதுப் பொண்டாட்டிய இம்ப்ரஸ் பண்ண இப்படி ஏதாவதா நாலு பிட்டுப் போடவேண்டாமா? இன்னும் பாரு. இப்படியொரு பொண்டாட்டிய பக்கத்துல வச்சுக்கிட்டு தலகாணிய மடியில வச்சு உக்காந்திருக்கேன். என்னை மாதிரி கேனையன எங்கேயாவது பாத்திருக்க?” என்று கண் சிமிட்ட, வாய்விட்டு சிரித்தவள் தலையணையை எடுத்து மொத்த ஆரம்பித்தாள். 

தலையணையைப் பிடுங்கியவன், அவளை இழுத்து தோளோடு‌ அணைத்துக் கொண்டான். அவளும் மார்போடு இயல்பாக ஒன்றிக் கொண்டாள். அவனது பேச்சு தோழமை கூட்டியது.

“இப்ப நீங்க சொல்லுங்க! உங்க கல்யாணம் எப்படியெல்லாம் நடக்கணும்னு ஆசைப்பட்டீங்க?” என்று அண்ணார்ந்து முகம் பார்த்துக் கேட்டாள். 

“சொன்னா சிரிக்க மாட்டியே?”

“சொல்லுங்க மொதல்ல.‌ சிரிக்குற மாதிரி இருக்கானு பொறவு பாக்கலாம்!”

“எனக்குப் பெருசா கல்யாணம் பத்தின நெனப்பு கூட அப்போ இல்ல. இப்பதான் பிஸ்னஸ் தொடங்கியிருக்கு. முதல்ல அதுல கால் ஊனனும். அப்பறம்‌ தான் பந்தக்கால் பத்தி யோசிக்கணும்னு இருந்தேன். ஆனா, பெரியவங்க பாத்து சொல்ற பொண்ணுதான்னு உறுதியா இருந்தேன். அதனாலதான் அப்பத்தா உன்னை கை காட்டவும் பொண்ணு எப்படியிருப்பானு யோசிக்காமக் கூட சம்மதிச்சேன்” என்றவனை அண்ணார்ந்து பார்த்தாள்.

“அவனுக்குப் பாத்த பொண்ணுங்கற உறுத்தல் மட்டுமே இருந்துச்சு. அவனை சம்மதிச்சு மணமேடை வரைக்கும் வந்த பொண்ணாச்சேனு கொஞ்சம் வருத்தம் தான். அதுவும், நீ அவன் ஃபோட்டோ கூடப் பாக்கலைங்கவும் அந்த வருத்தமும் போயே போச்சு” என்றவனை‌ பெண்ணவள் கண்கள்‌ ஆதுரமாகத் தழுவிக் கொண்டன.‌

“நம்பலும் பெரியவங்க கூட பொண்ணுப் பாக்க போகணும். பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிடணும். பொண்ணு காஃபி கொண்டு வந்தா, முகம் பாத்துட்டே காஃபி எடுக்கணும். அப்பறம்… பாத்து, நிச்சயம் பண்ண பொண்ண, அவளுக்கே தெரியாம அவங்க ஊருக்குப் போயி சைட் அடிக்கணும். திடீர் சர்ப்ரைஸ் பண்ணனும். தாலி கட்டும் போது ஆசையா பொண்ணு என்னையேப் பாக்கணும்” இந்த மாதிரி நிறைய என்று சொல்லியவன் முகத்தில் மெல்லிய நாணப்பூச்சு. 

“அச்சோ… என்ன அழகு” என முகம் வழித்து நெட்டி முறித்தவள் முகத்தில் புன்னகை விரிந்தது.  

“ஆனா… நீ என்னை மொறச்சுதான் பாத்த!” என்று சொல்ல, அவள் முகமும் சட்டென வாடியது. 

“அது அப்போங்க அம்மணி… உங்க கதை எனக்குத் தெரியாதுல்ல. அதனால ஃப்ரியா விடுங்ங. ஃபீல் பண்ணாதீங்க! இப்ப நம்ம கதைக்கு வாங்க! அப்பறம்… தாத்தா, அப்பத்தாவோட கல்யாண ஆல்பம் பாத்திருக்கேன்… ப்ளாக் அன்ட் ஒய்ட்ல. அந்தக்காலத்துல அவ்வளவு கிரான்டா பண்ணிருப்பாங்க. ராஜா வீட்டுக் கல்யாணம் மாதிரி ஒரு மாசம் விருந்து நடந்துச்சுனு அப்பத்தா சொல்லியிருக்காங்க. பெரிய பெரிய அரசியல் தலைவர்கள் எல்லாம் வந்திருக்காங்க. என் கல்யாணமும் அந்தத் தோப்பு வீட்லதான் நடக்கணும்னு அப்போ முடிவு பண்ணினேன். தாத்தா, அப்பத்தா கல்யாணம் அந்தக் காலத்துல அந்த மாளிகையிலதான் நடந்திருக்கு. 

பெரியம்மா, பெரியப்பா கல்யாண ஆல்பத்துலயும் அவ்வளவு‌ கிரான்ட். பவி, ஜெகன் மாம்ஸ் கல்யாணம் நேர்லயே பாத்தேன். அவ்வளவு ஆடம்பரம். இடும்பன் மாமா ஒத்த மகன்னு காசை வாரி இறைச்சாரு. நமக்கு யாரு இப்படி எடுத்துப் பண்ணுவாங்கனு அப்போ நெனச்சுப்பேன். நம்ம கல்யாணமும் அப்படித்தான் நடந்தது. ஆனா, அது கிரி‌ கல்யாணத்துக்குனு பெரியம்மா சொல்லச் சொல்ல பெரியப்பா பாத்துப் பாத்துப் பண்ணது” என்றவன் திரும்பி அவள் முகம் பார்த்தான். அண்ணார்ந்து பார்த்தவள் கண்கள் பனித்திருந்தது. 

அய்யோ அம்மணி… இன்னைக்கு நான் எந்த ஃப்ளாஷ் பேக்கும் சொல்லல. விடிய விடிய கச்சேரி வச்சுறாதே!” என்று அலறியடித்துப் பதற, அவன் முகம் பார்த்தவள், பாறையில் உருட்டிவிட்ட சோழியாய் கலகலவெனச் சிரித்தாள்.‌ 

“இப்படி சிரிக்காதீங்க அம்மணி. நம்ம வாழ்க்கை நம்மோட தோப்பு வீட்லதான் தொடங்கணும்னு கட்டுப்படுத்திட்டு இருக்கேன். பரீட்சை முடியவும் தாலி பிரிச்சுக் கோக்குற ஃபங்ஷன். வீட்ட மராமத்து பண்ணிட்டுத்தான் கல்யாணமே பண்ணனும்னு நெனச்சேன். இப்போதைக்கு முடியாது. அதனால ஆள் விட்டு  சுத்தம் பண்ணி, பெய்ன்ட் மட்டும் அடிக்கச் சொல்லிட்டேன்.”

“அப்போ… மதன்கைலாஷ், மாதங்கி கல்யாண வைபவம் கூடிய சீக்கிரம்னு சொல்லுங்க” என்றவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்.  

அவள் அண்ணாந்து பார்க்க, “இதுவும் நல்லாதான்டீ இருக்கு. பிரிக்காத கிஃப்ட் பார்சல, உள்ள என்ன இருக்குமோனு சுவாரஸ்யமா பாக்குற மாதிரி.” விஷமமாய்க் கண்சிமிட்ட, 

“கேடீ…” என்று செல்லமாக மார்பில் அடித்தவள்‌ முகம் செவ்வானமாய் சிவந்துவிட்டது. 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top