“ம்மா! நான் இந்த முடியை பாதியா கட்பண்ணிக்கவா?”
குரல் கேட்டு அடுக்களையிலிருந்து கையில் கரண்டியோடு வெளிவந்தார் சரஸ்வதி. ஈரத்தலையில் துண்டை கட்டிக்கொண்டிருந்த மகளைப் பார்த்து,
“என்ன கேட்ட? இப்ப கேளு!” எனக் கேட்க,
“இல்லம்மா… இவ்வளவு நீளமா முடிய வச்சுகிட்டு, தலைதேய்க்க கஷ்டமா இருக்குல்ல. அதான்…” என்று இழுக்க,
“ஏன்டி! அவ அவ முடிவளரலைனு அமேசான் காட்டு எண்ணெய், ஆப்பிரிக்கா காட்டு எண்ணெய்னு வாங்கி தேய்க்கிறாளுக. அதையெல்லாம் தேய்ச்சா முடிவளராதுனு, தயாரிக்கிறவனுக்கும் தெரியும். விக்கிறவனுக்கும் தெரியும். அப்படியிருந்தும் கண்டதையும் வாங்கி தேக்கிறாங்க. இவ என்னடான்னா இருக்கிற முடியை வெட்டுறாளாம்.”
அவளது அம்மா நீட்டி முழக்க,
“நீங்கதானம்மா ஒழுங்கா தலைதேய்க்க தெரியுதா? தலைசீவத் தெரியுதானு எப்பப்பாரு திட்டிகிட்டே இருக்கீங்க.”
“மாசத்துல ஒன்னு ரெண்டு நாள்தான் நீயா தலைக்குளிக்கிற. மத்த நாளெல்லாம் நாந்தானே தேய்ச்சுவிடுறே. தலையைச் சீவி என்னைக்காவது ஒழுங்கா பிண்ணிப் போட்டிருக்கியா? எப்பப்பாரு மொத்தமா சுருட்டி நட்டுவாக்காலியாட்டம் ஒன்ன தலையில மாட்டிகிட்டு திரியவேண்டியது.”
“என்ன… தலையாய பிரச்சினை ஓடிட்டு இருக்குபோல அம்மாவுக்கும் பொண்ணுக்கும் இடையில.” என்று கேட்டவாறே கேசவன் அங்கு வர,
“வந்துருவீங்களே! பொண்ண ஒன்னு சொல்றதுக்கு முன்னாடி சம்மன் இல்லாம ஆஜராகிற வேண்டியது.”
“இப்ப என்னதான்டி உன் பிரச்சினை? அங்க விட்டுட்டு இங்க பாயுற.”
“நான் என்ன சிங்கமா? புலியா? உங்க மேல பாயறதுக்கு. எல்லாம் உங்க அருமை மகளாலதான். ஒழுங்கா தலைதேய்ச்சு குளிக்க சொன்னா, தேய்க்க முடியல, முடிய வெட்டிக்கிறேங்கறா! இன்னும் ஒருவேலை ஒழுங்கா செய்யத்தெரியுதா? இல்ல…அடுக்களையில ஊடமாட வந்து ஏதாவது வேலை கத்துக்கலாம்னு இருக்காளா?”
“இப்ப… அந்தப்பிள்ளை வேலைகத்துகிட்டு என்ன ஆகப்போகுது?”
“இன்னும் உங்களுக்கு அவ சின்னப் பொண்ணுன்னு நினைப்பா? காலேஜ் முடிக்கப்போறா! கல்யாணம் பண்ணி போறவீட்ல என்ன வளத்திருக்காங்கனு கேக்க மாட்டாங்க? போறவீட்ல மாமியாரா இவளுக்கு தலைதேய்ச்சு சாம்பிராணி போடுவாங்க?”
“ஐ…! இந்த ஐடியா நல்லாயிருக்கே! அப்பா! மாப்பிள்ளை பாக்கும்போது ஒன் ஆஃப்தி கன்டிஷனா இதையும் சேத்துக்கோங்க. மாமியார் தான் தலை தேய்ச்சுவிடணும்னு,” எனக்கூறி விட்டு,
“எனக்கு லேட்டாயிருச்சு. நான் காலேஜ் கிளம்பறேன்.” எனக்கூறிச் சென்ற மகளைப் பார்த்து,
“ஹும்… அதது மாப்பிள்ளைக்கு கன்டிஷன் போட்டா, உங்க பொண்ணு மாமியாவுக்கே கன்டிஷன் போடுறா. யார் வந்து மாட்டபோறாங்களோ?’ என் அங்கலாய்த்துக் கொண்டே விட்டுவந்த வேலையைத் தொடர அடுக்களை சென்றார்.
அவர் கூடவே அடுக்களை சென்ற கேசவனும், எடுத்துவைத்த காய்கறிகளை நறுக்கியவாறே, “ஏன்டி இருக்கறது ஒரே பொண்ணு. அவளையும் எப்ப பாத்தாலும் நொய்நொய்ங்கற. அவளா ஏதாவது செய்ய வந்தாலும், ஏதாவது ஒரு குறையச்சொல்லி செய்யவிடமாட்டேங்குறே.”
“அதெல்லாம் அப்படிதான். நீங்களும் செல்லம் கொடுத்து, நானும் செல்லம் கொடுத்தா எப்படிங்க? பொம்பளப்பிள்ளையா இருந்தாலும் ரொம்ப பொத்தி பொத்தி வளக்க கூடாது. பூஞ்சையாப்போயிரும். என்னதான் படிச்சு வேலைக்கு போனாலும், கல்யாணத்துக்கு பின்னாடி அடுக்களை ராஜ்ஜியம் பொம்பளைங்க கையிலதான். கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு சுடுதண்ணி கூட வைக்கத் தெரியாததுகதான், கல்யாணத்துக்கு பின்னாடி புருஷனுக்கு அது பிடிக்கும், பிள்ளைக்கு இதுபிடிக்கும்னு சூப்பரா சமைக்க ஆரம்பிச்சுறுவாங்க. அதனால்தான் நான் எந்த வேலையும் செய்ய விடறதில்ல. அதுக்காக அப்படியே விடமுடியுமா? அப்பப்ப அவ பொறுப்பையும். செய்யவேண்டிய வேலைகளையும் சொல்லிக்கிட்டே இருக்கணும்.” நீளமாக ஒரு பிரசங்கமே நடத்தி முடிக்க,
“வாவ்! சூப்பர் டி. பயாலஜி எப்ப இருந்து சைக்காலஜி பேசுது.”
“இந்த கெமிஸ்ட்ரி எப்ப இருந்து அடுப்படி வந்து லவ்வாலஜி பேசுச்சோ அப்ப இருந்து. அப்புறம் இது சைக்காலஜி எல்லாம் ஒன்னுமில்லை. பொண்ணப்பெத்த அம்மாக்களொட பேசிக் திங்காலஜி.”
“சூப்பர்ஜி! சூப்பர்ஜி! அப்புறம்… என்ன அவ்ளோ ஈஸியா அடுப்படி, கெமிஸ்ட்ரினு சொல்லிட்ட. புருஷனும் பொண்டாட்டியும் சேந்து கிட்சன்ல வேலைபாத்தா தான்டி கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகும்.” என மனைவியிடம் தலை சாய்த்து கண்ணடிக்க,
“ஐயே! பொண்ணுக்கே மாப்பிள்ளை பாக்குற வயசு வந்தாச்சு. இன்னும் கெமிஸ்ட்ரி பயாலஜினுட்டு. இனிமே ஸ்கூல்ல பிள்ளைகளுக்கு கெமிஸ்ட்ரி நடத்தறதோட நிப்பாட்டுங்க! இப்படி கிட்சன்ல வந்து நடத்தாதீங்க!”
“என்னடி பொசுக்குனு இப்படி சொல்லிட்ட! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனாதானேடி ஃபிசிக்கலா பையாலஜி கிரியேட்டாகும்.”
“ஐயோ! அப்பவே எங்கப்பாகிட்ட சொன்னே. நானும் சயின்ஸ் டீச்சர். அவரும் சயின்ஸ் டீச்சர். கொஞ்சம் யோசிக்கலாம்ப்பா அப்படினு. அவர்தான் கேக்கலை. இப்ப பாருங்க! எனக்கு இப்பயிது கிட்சனா லேபான்னே தெரியல.”
பெற்றோரின் நினைவுகளோடு, அழகாக தலைசீவி, இடைதாண்டிய கூந்தலை தளரப்பின்னி, பின்னலின் நுனியில் ரப்பர்பேண்டைச் சுற்றினாள் ஆதியா.
பெற்றோரின் புகைப்படத்தினருகே சென்றவள், “நல்லா பாத்துக்கோங்க. ஒழுங்கா பின்னியிருக்கேனா? என் ரூம் எப்படி நீட்டாயிருக்கா? நீங்க விட்டுப்போன இந்த கொஞ்ச காலத்துக்குள்ள பொறுப்பா மாறியிருக்கேனா? நான் பொறுப்பா மாறணும்கறதுக்காக ரெண்டு பேரும் என்னைத் தனியாவிட்டுட்டு போயிருக்க வேணாம்.”
கண்களில் கண்ணீரோடும், இதழில் வெற்றுச் சிரிப்போடும் தினமும் தன்பெற்றோரின் புகைப்படத்தின் முன் நடத்தும் சம்பாஷனை இது.
பெற்றோரை இழந்த ஆரம்ப காலங்களில் இதே கேள்வியை கண்ணீரோடும், கதறலோடும் கேட்டுக் கொண்டிருந்தாள். பின் விரக்தியாகக் கேட்க ஆரம்பித்து, தற்பொழுது வெறுமையான புன்னகையோடு கேட்டுக் கொண்டிருக்கிறாள்.
காலமே சிறந்த மருந்து சில மனக்காயங்களுக்கு. ஆனால்
சிலவகையான துயரங்களுக்கு இனிமையான நினைவுகளே அருமருந்து.
தன்னால் இதெல்லாம் செய்ய முடியுமா என்று அவளே வியந்ததுண்டு.
ஆதியாவின் அறைக்கு அவளது அம்மா வரும்பொழுதெல்லாம், “துணிமணி எல்லாம் ஏன் இப்படிப் போட்டு வச்சுருக்கே? புக்ஸெல்லாம் அலங்கோலமா கிடக்குபாரு! படுக்கையை மடிச்சு வச்சுருக்கியா? எல்லாம் அப்படி அப்படியே போட்டு வச்சிருக்க! ஒதுங்க வைக்கமாட்டியா?” என வாய்பாட்டுக்குக் கேட்டுக் கொண்டேயிருக்கும். கை அவற்றையெல்லாம் செய்து கொண்டேயிருக்கும்.
இப்பொழுதும் அந்தக் குரல் அவளுக்கு கேட்டுக்கொண்டே இருக்கிறது. இவளது கை தன்னால் அவற்றை ஒதுக்க வைக்கிறது.
சமையலும் அதுபோலத்தான். கை காலைச்சுட்டுக் கொண்டு சிறுக சிறுக சமைக்க கற்றுக் கொண்டாள்.
அம்மா சொன்னது சரிதான். பிடிச்சவங்களுக்காக என்றால் எதையும் சீக்கிரம் கற்றுக் கொள்கிறோம்.
அவளும் அப்படிதானே! அவளவனுக்காக என்றுதானே சமைக்கவே ஆரம்பித்தாள்.
மனதில் எண்ணங்கள் அவை பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்க, கை தன்னால் தனக்குத் தேவையானவற்றை எடுத்து வைக்க, அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
காலையில் தோட்டத்தில் பறித்த ரோஜாப்பூவை எடுத்து தலையின் பின்னால் சொருகிக்கொண்டே மேஜைமீதிருந்த ஃபோட்டோவைப் பார்த்தாள்.
தன்னவனின் வலக்கரம் தன் தோளோடு அணைத்திருக்க… ஆதவனை நோக்கும் தாமரையாய்… அண்ணாந்து அவள்முகம்.
நிழற்படத்தை எடுத்து தன்னவனின் முகம் வருடியவள் மனம் நிஜம் உணர, எப்பொழுதும்போல் பை சொல்லி வைத்துவிட்டு தன்னறையைவிட்டு வெளியேவந்தாள்.
பிள்ளைகளெல்லாம் பள்ளிக்கு கிளம்பிவிட்டு, சாப்பிடத் தயாராகிக் கொண்டிருந்தனர்.
சதிஸோடு சேர்ந்து ஆதியாவும், அவர்களுக்கெல்லாம் தட்டு எடுத்து வைக்க, தண்ணி வைக்க என்று சிறு சிறு உதவிகளை செய்ய ஆரம்பித்தாள்.
அங்கு வந்த லஷ்மி, “ஆதியா! உனக்கு டைமாச்சு பாரு! நீ முதல்ல சாப்பிட்டுக் கிளம்பும்மா! நானும் அங்கிளும் இதெல்லாம் பாத்துக்கறோம்.” என்க,
“சரி ஆன்ட்டி!” என்றவாறு தட்டில் தனக்குத் தேவையானவற்றை எடுத்துவைத்துக் கொண்டு சாப்பிட அமர்ந்தாள்.
இட்லியைப் பிட்டு, சாம்பாரில் தோய்த்து வாயில் வைத்தவள்..
“ஆன்ட்டி! இன்னைக்கு சாம்பார் வச்சது பாப்பாத்தி ஆன்ட்டியா?” என்றாள்.
“எப்டிக்கா… ஒரு வாய் வச்சவுடனே யார் சமையல்னு கரெக்டா சொல்லிர்றே?”
“அதுவாடா சதீஷு. நம்ம மூனு ஆன்டிகளோட சமையலும் ஒவ்வொன்னும் ஒறு கைப்பக்குவம்டா… ஒன்னையொன்னு அடிச்சுக்கவே முடியாதுடா.” என்று கூறியவர், “பாப்பாத்தி ஆன்ட்டி! இன்னைக்கு சாம்பார் சூப்பர்! ரெண்டு இட்லி சேத்து உள்ள போச்சு.” என அவரது சமையலுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்க,
“என்ற ஊட்டுக்காரரு கூட இப்படி சொன்னது இல்ல கண்ணு….நீ சாப்புடறப்ப எல்லாம் சொல்ற.” என்றார் பூரிப்புடன்.
“அவரு எப்படி சொல்லுவாரு. அவருக்குத்தா உண்மை தெரியும்ல?” -இது சதிஷ்.
“டேய் சதிஷ்! சமைக்கறவங்க, நம்ம சமைக்கறத எல்லாரும் நல்லா சாப்பிடணும்னு தான்டா நினைப்பாங்க. ஏதாவது ஒன்னுரெண்டு நாள் அப்படிஇப்படி தான் இருக்கும். நல்லா இருக்கும் போதெல்லாம் கம்னு திங்க வேண்டியது. என்னைக்காவது ஒரு நாள் உப்புஉரப்பு கூடிருச்சுனா காச்மூச்சுனு கத்த வேண்டியது. ஒரு நாள் சூப்பரா இருக்குதுனு சொல்லிப்பாரு. மறு நாள் டபுள் டேஸ்ட்டா உனக்கு கிடைக்கும்.”
“சூப்பரா பேசுறக்கா. யார்கிட்டக்கா கத்துக்கிட்ட.” – சதீஷ்.
“எங்க அப்பா கிட்ட இருந்து தான். அவரு எங்கம்மா சமையல ஒரு நாள் கூட குறை சொன்னதில்லை.”
“ஆன்ட்டி அவ்ளோ சூப்பரா சமைப்பாங்களாக்கா!”
“ஆமாடா! ஆனா… அதைவிட சூப்பரா எங்கப்பா எங்கம்மாவை லவ் பண்ணினாருடா!”
பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவள்,
தனது ஸ்கூட்டி சாவியை எடுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
லஷ்மியிடமும், சண்முகத்திடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினாள்.
கேட் அருகே வந்தவுடன், தனது கைபேசி அழைப்பு விடுக்க, எடுத்துப் பார்த்தவள், தொடுதிரையில் எம்.டி.என்றிருக்க… அழைப்பை ஏற்றாள்.
“ஹலோ! குட் மார்னிங் சார்! சொல்லுங்க சார்!
“குட் மார்னிங் ஆதியா! கிளம்பிட்டியாம்மா?” எதிர்முனை கேள்வி கேட்க,
“இதோ! இப்ப தான் சார் வண்டியை ஸ்டார்ட் பண்றேன்!”
“சரிம்மா! இப்ப நீ ஆஃபிஸுக்கு போக வேண்டாம். *****;ரெஸ்டாரன்ட்க்கு வந்துருமா! சத்யப்பிரகாஷ்… அதாம்மா என் ஃபிரெண்டு நம்ம கம்பெனியப் பத்தின சில டீடெயில்ஸ் கேட்டிருந்தாரு. நீயும் கூட இருந்தா கொஞ்சம் உதவியா இருக்கும். ஒன்னும் பயப்படத் தேவையில்லம்மா. ஓபன் ரெஸ்டாரன்ட் தான்மா.”
“ஐயோ! என்ன சார்? நீங்க இருக்கும் போது எனக்கென்ன பயம். வந்துறேன் சார்.” என அழைப்பை துண்டித்தவள்,
சண்முகத்திடம் தகவலைத் தெரிவித்துவிட்டு ரெஸ்டாரன்ட் நோக்கி வண்டியை செலுத்தினாள்.
சென்றவள் மீதே பார்வையைப் பதிந்திருந்த மனைவியிடம், “என்ன லஷ்மி. கிளம்பிப் போற ஆதியாவையேப் பாத்துட்டு இருக்க?” என்ற கணவனிடம்,
“இன்னும் எத்தனை நாளைக்கு, இந்தப்பிள்ளை இப்படியே இருக்கும்?” என்றார் லஷ்மி கவலையாக.
“ஏன்! அந்தப் பிள்ளைக்கு என்ன குறைச்சல்?”
“குறைச்சல்னு ஒன்னும் இல்லீங்க. எல்லாம் அதிகப்படியா இருக்கு. அதுதான் பயமாவும் இருக்கு. குச்சிக்கு சேலை கட்டினாலே சுத்தி சுத்தி வருவானுக. விக்ரகம் மாதிரி இருக்கா. தங்கச்சிலையாட்டம், இவ வெளிய போயிட்டு வர்ர வரைக்கும் மனசு திக்திக்னு இருக்குங்க.”
“எனக்கு மட்டும் அந்த பயம் இல்லைனு நினைக்கிறியா?” எனக் கேட்டு சண்முகமும் பெருமூச்சு விட,
“பயந்தா மட்டும் போதுமா? உரியவங்ககிட்ட ஒப்படைச்சுட்டா நிம்மதியா இருக்கலாமில்ல. இன்னைக்கு வந்ததும் இதைப்பத்தி பேசணும்ங்க. இப்படியே விட்டுட்டு இருக்க முடியாது!” எனக் கூறி விட்டு உள்ளே சென்ற மனைவியைப் பார்த்தவர்,
‘இவ பயப்படுறதும் சரி தான். ஆதியா பயப்படுறதும் சரி தான். இதுல யார் பக்கம் பேசறதுனு தெரியலையே,’ என எண்ணியவாறே பிள்ளைகளை ஸ்கூலுக்கு அனுப்பும் வேலைக்கு ஆயத்தமானார்.
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்திருந்த இராமநாதன் குறிப்பிட்டிருந்த ரெஸ்டாரன்ட்டின் பார்க்கிங் ஏரியாவில் தனது ஸ்கூட்டியை நிறுத்தி விட்டு உள்ளே சென்றாள்.
குரோட்டன்ஸ் செடி வகைகளும், வெறும் நிழலுக்காகவும் அழகுக்காகவும் மட்டுமே உருவாக்கப்பட்ட நெடிதுயர்ந்த பெயரே தெரியாத மரவகைகளுடன் குளுமையாக காட்சி தந்தது. திறந்த வெளிப்பகுதியில் குடில் போன்ற அமைப்புடன் நான்கு இருக்கைகளுடன் கூடிய ஒரு மேஜை என்ற அமைப்பில் பல குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன
மற்றொரு புறம் ஒரு உயர்தர ரெஸ்டாரன்ட்டிற்கே உரிய செயற்கை அருவியுடன் கூடிய நீரூற்றுகளும் அதில் அழகாக நீந்தும் மீன்களும் ஆங்காங்கே நளினமாக அழகுற உருவாக்கப்பட்ட சிலைகளுமாக காட்சி அளித்தது
அவற்றை எல்லாம் பார்வையிட்டவாறே, ”இவங்க எந்த டேபிள்னு தெரியலியே?’ என யோசித்தவாறே தனது பார்வையை சுழற்றியவள், ராமநாதன் அமர்ந்திருந்த மேஜை கண்ணில் பட அவரை நோக்கி சென்றாள்.
“எக்ஸ்கீயுஸ்மீ சார்! குட்மார்னிங்!” என அவர் முன் நின்றவளை நிமிர்ந்து பார்த்த ராமநாதன்,
“வந்துட்டியாம்மா! வந்து உட்காரும்மா!” என ஆதியாவுக்கு ஒரு இருக்கையைக் காட்டினார்.
நன்றி சொல்லி விட்டு அமர்ந்தவள்,
“சாரி சார்! லேட்டாயிடுச்சு”என்க,
“பரவாயில்லைம்மா… நானே கிளம்பிட்டுதானே உன்னைக் கூப்பிட்டேன். சத்யா ஃபோன் பண்ணினதும், நான் மட்டும்தான் வரலாம்னு நினச்சேன். அப்புறம்தான் உன் ஞாபகம் வந்தது. உங்க ரெண்டு பேரையும் அறிமுகப்படுத்தி வச்சுட்டா, அவருக்குனு தனியா ஒரு செகரட்ரிய அப்பாயின்ட் பண்ணிக்கிற வரைக்கும் நீ அவர் கூட இருந்து பாத்துப்பேனு தான் உன்னையும் வரச்சொன்னேன்.”
“அது தானே சார், என் வேலையே நீங்க சொல்லணுமா?”
இவர்கள் பேசிக்கொண்டிருக்க, சத்யபிரகாஷ் வருவதைக் கண்ட ராமநாதன், எழுந்து சென்று சிறு பிள்ளையைப் போல் தனது நண்பனை கை பிடித்து அழைத்து வந்தார். நண்பனைக் கண்ட குதூகலம் அவர் முகத்தில். அதுக்கும் குறையாத சந்தோஷம் சத்யபிரகாஷிடமும்.
இந்த வயதிலும் தனி கம்பீரம் கொண்ட தோற்றம். முகத்தில் நான் எல்லாம் கண்டவனாக்கும் என்ற அனுபவத்தின் சாயல். அந்த அனுபவம் தந்த நிதானமான பார்வை.
இந்த சந்திப்பை சத்யபிரகாஷ், இராமநாதன் கம்பெனியிலேயே நிகழ்த்தி இருக்கலாம். ஆனால் ஏதோ ஒன்று அவரை நெருடுகிறது. இன்னும் முழுமையாக கம்பெனி பரிமாற்றம் நடைபெறாத நிலையில், அங்கு கால் வைக்க அவருக்கு விருப்பம் இல்லை. இன்னும் சின்ன சின்ன ஃபார்மாலிட்டிஸ் முடிக்க வேண்டியுள்ளது. நண்பனின் எண்ணமறிந்த ராமநாதனும், அவரை வற்புறுத்தவில்லை.
சந்தித்துக்கொண்ட நண்பர்கள் இருவரும் நலம் விசாரிப்பில் தொடங்கி, குடும்பம், பிசினஸ் என சுற்றம் மறந்து பேச ஆரம்பித்துவிட்டனர். தொழில் ரீதியாக இருவரும் பிரிந்த பிறகு சந்தித்துக்கொள்ளாமல் இல்லை.
பிசினஸ் மீட்டிங், பொது விசேஷங்கள் என சந்திக்கும் பொழுது பொதுவான நல விசாரிப்புகள் இருந்தது தான். ஆனால் தனிப்பட்ட முறையில் இவ்வாறு சந்தித்துக்கொண்டது இல்லை. சுற்றம் மறந்து பேசும் நண்பர்களையே ஆதியா பார்த்துக் கொண்டிருந்தாள்.
வயது, தகுதி, கௌரவம் என அனைத்தையும் மறந்து தனது இயல்பை வெளிக்கொணரும் சக்தி தோழமைக்கு மட்டுமே உண்டு .
ராமநாதனும், நண்பனைக் கண்ட மகிழ்ச்சியில், ஆதியா இருப்பதையே மறந்து விட்டார்.
சட்டென்று ஞாபகம் வந்தவராக… “அடடே! சத்யா! உன்னைப் பாத்த சந்தோசத்துல, இந்தப் பொண்ண மறந்துட்டேன் பாரு. இது ஆதியா. நம்ம கம்பெனில அக்கவுண்ட்டன்ட்டா இருக்கு.” என அறிமுகப்படுத்தி வைக்க,
சட்டென்று எழுந்து ஆதியா, கை குவித்து வணக்கம் வைத்தாள். அடுத்து இவர் தான் எம்.டி என்கிற பதட்டம் வேறு.
பதிலுக்கு வணக்கம் கூறிய சத்யபிரகாஷ், “உட்காரும்மா! என்ன சாப்பிடுறே?” எனக் கேட்க, சற்று சகஜமாகியவள்,
“எனக்கு காஃபி மட்டும் போதும் சார். நான் இப்ப தான் சாப்பிட்டு வந்தேன்.” என்க
“சரிம்மா!” எனக் கூறி விட்டு நண்பனின் விருப்பத்தைக் கேட்டு இருவருக்கும் உணவு வகைகளை ஆர்டர் செய்தார்.
“அப்புறம் சத்யா! எப்ப கம்பெனிக்கு வந்து பொறுப்பெடுத்துக்கபோற.”
ராமநாதனே பேச்சை ஆரம்பிக்க, “அடுத்த வாரம் ஒரு நல்ல நாள் வருது. அன்னைக்கே சின்னதா நம்ம அளவுல மட்டும் ஒரு பூஜைக்கு ஏற்பாடு பண்ணிட்டு பொருப்ப எடுத்துக்கறே ராமா! அதுக்கப்புறமா அஃபிஷியலா நம்ம பிசினஸ் வட்டாரங்களுக்கு தெறியப்படுத்திக்கலாம்!”
“சரி சத்யா! உன் இஷ்டப்படியே செய். என்னோட பிஏ மூனுமாசத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆகி போயிட்டாங்க. கொஞ்ச நாள் தானேன்னு நான் பிஏ அப்பாயின்ட் பண்ணிக்கல. அடுத்து வர்றவங்க அவங்களுக்குத் தகுந்த மாதிரி செலக்ட் பண்ணிக்கட்டும்னு விட்டுட்டேன். அந்தப் பொறுப்பையும் ஆதியா தான் பாத்துக்குது. அதனால தான் உனக்கு அறிமுகப்படுத்தலாம்னு வரச்சொன்னேன். பிஏ செலக்ட் பண்ணிக்கிற வரைக்கும் ஆதியா உனக்கு உதவியாக இருக்கும்.”
நண்பன் கூறியதைக் கேட்ட சத்யபிரகாஷ்,
“வேலைக்கு ஆள் செலக்ட் பண்றதெல்லாம் என் பேரனுடைய வேலை ராமா! அதுல நான் தலையிட மாட்டேன். பொருப்பெடுத்துக்கறது மட்டும்தான் என் வேலை. நிர்வாகப் பொருப்பு அவனோடது.”
“உன் பேரன் என்ன சொல்றான் சத்யா!” என ராமநாதன் கேட்க,
“அவனுக்கு முதல்ல இஷ்டமில்லை தான். அப்புறமா நான் எடுத்து சொல்லவும் அம்மாவும் பையனும் புரிஞ்சுகிட்டாங்க ராமா!”
“நம்மளை புரிஞ்சுக்கற உறவுகள் கிடைக்கிறது ஒரு வரம் சத்யா..!”
“அதுல நான் எப்பவுமே கொடுத்து வச்சவன் ராமா.”
“உன் அருமை என் பிள்ளைகளுக்குத் தான் தெரியலை. ஆனா நீ வெளியேறிய பிறகு தான் அவங்களுக்கும் புரிஞ்சுது. நம்ம அப்பா முதல் போட்டதால மட்டுமே இந்த கம்பெனி வளரல… உன் உழைப்பும் முக்கிய காரணம்னு. அதுவும் நல்லதுக்கு தான் சத்யா!. இல்லைனா உன் திறமை முழுசும், நன்றிக் கடன்ங்கிற பேருல இந்த ஒரு கம்பெனிக்குள்ளேயே அடங்கிப் போயிருக்கும். உன்னோட வளர்ச்சியைப் பாத்து எவ்வளவு பெருமைப்பட்டிருக்கேன் தெரியுமா?”
நண்பனைப் பார்த்த சந்தோசத்தில், தன்னை மறந்து பேசிக் கொண்டிருந்த ராமநாதனைப் பார்த்த சத்யபிரகாஷுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
நண்பனின் முன்னேற்றம் கண்டு பொறமைப்படாமல், அதுவும் தன்னால் கை கொடுத்து தூக்கி விடப்பட்டவன் என்ற எண்ணமும் சிறிதும் இல்லாமல் பேசும் நண்பனைப் பார்த்தவர்க்கு, நட்பு விஷயத்திலும் தான் கொடுத்து வைத்தவன் என்றே தோன்றியது.
தனது எம்.டி இப்படி மனம் விட்டு பேசுவதைக் கண்ட ஆதியாவிற்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்கள் பெர்சனல் விஷயம் பேசும் போது தான் அங்கிருப்பது சரியா என்ற எண்ணமும் எழுந்தது.
அதற்குள் அவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவு வகைகள் வரவும் பேச்சு சற்று மாறியது.
“அப்புறம் சத்யா! உன் பேரனைப்பத்தி சொல்லு. இப்ப பிசினஸ் வட்டாரத்துலயே அவன் தான் நம்பர் ஒன்னா இருக்காம் போல!”
“நம்பர் ஒன், நம்பர் டூ இதுல எல்லாம் எனக்கும் அவனுக்கும் நம்பிக்கை இல்லை ராமா! இன்னைக்கு நாமன்னா….நாளைக்கு இன்னொருத்தர். அதனால நாம செய்யறதை சிறப்பா செய்யணும். அவ்ளோதான்.”
“பரவாயில்ல சத்யா! உனக்கு கை கொடுக்க பேரன் வந்துட்டான். என் பேரனுக இப்பதான் காலேஜ்ஜூ, ஸ்கூலுன்னு போரானுங்க. அதுவும் வெளி நாட்டுல” என ராமநாதன் அங்கலாய்த்து கொள்ள,
“அதுக்குத்தான் காலாகாலத்துல கல்யாணம் பண்ணனும்கறது.”
“எது? நீ பண்ணினது காலாகாலத்துல பண்ணின கல்யாணமா?” என நண்பனிடம் கேட்டவர், அருகிலிருந்த ஆதியாவிடம்,
“ஆதியா! பொண்ணுக்கு கல்யாண வயசு எத்தனைன்னு கவர்மெண்ட் சொல்லுது.” என்றார்.
தீடீரென்று தன்னைப் பார்த்து கேட்கவும் ஒரு கணம் ஆதியா தயங்கினாள்.
‘ஒருவர் நிகழ்கால எம்.டி. இன்னொருவரோ வருங்கால எம்.டி. இவர்கள் சம்பாஷனையில் கலந்து கொள்ளலாமா? அஃபிஷியல்னா பரவாயில்ல. பேசத்தெரியாமல் ஏதாவது பேசி விட்டால் என்ன செய்வது.’ என யோசித்துக் கொண்டே இருபத்தி ஒன்னு சார் என்றாள்.
“பொண்ணுக்கே இருபத்தி ஒன்னு. ஆனா சத்யா கல்யாணம் பண்ணினது இருபது வயசுல.”
“பால்ய விவாகமா சார்?” சட்டென்று ஆதியா கேட்டு விட ராமநாதன் வாய்விட்டு சிரித்தார்.
‘தேவையில்லாம வாய் விட்டுட்டோமோ? என ஒரு கணம் தயங்கியவள், சத்யபிரகாஷைப் பார்த்து, “சாரி சார். தெரியாம…” என இழுக்க,
“அடடே! இதுக்கு ஏம்மா… சாரி எல்லாம் கேக்குறே? இவங்களும் இதையே சொல்லி தாம்மா கிண்டல் பண்ணுவாங்க. இப்ப என் பேரனும் இதைச் சொல்லி தான் கிண்டல் பண்ணுறான்.” என்று தன்னை இலகுவாக்கிய சத்யபிரகாஷை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
“என்னம்மா அப்படி பாக்குற?”
“இல்ல சார். புது எம்.டி. எப்படி இருப்பாரோனு ஒரு பயம் இருந்துச்சு. ஆனா இப்ப இல்ல சார்.”
“அப்ப… என்னப் பாத்தா ஒரு எம்.டி.ங்கற பயம் வரலை.” எனக்கேட்ட சத்யபிரகாஷிடம்,
“பயம் எதுக்கு சார் வரணும். மரியாதைதான் வரணும். எனக்கு உங்க மேல மரியாதை தான் வருது. பயம் வரல.”
அவள் கூறியதைக் கேட்டு சிரித்தவர்,
“ரெம்ப தெளிவா பேசுறம்மா. இந்த நடை, உடை ,வேஷம் எல்லாம் தொழில் வட்டாரத்துக்காக போடறதும்மா. இன்னும் உள்ளுக்குள்ள மக்களோட மக்களா வியாபாரம் பாத்த அதே மொளகா, வெங்காய கமிஷன் மண்டி சத்யன் தாம்மா!” என்றவரின் மீது ஆதியாவிற்கு மரியாதையும் தாண்டி பக்தியே வந்து விட்டது என்று சொல்லலாம்.
ஒருவரின் வெற்றி என்பது எவ்வளவு உயர்ந்தாலும் தன்னிலை மறவாதிருப்பது தானோ?
இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ராமநாதன்,
“தெ கிரேட் ப்ரகாஷ் அண்ட் க்ரூப்ஸ் ஆஃப் கம்பெனியோட எம்.டி க்கு ரெம்ப தான் தன்னடக்கம்.” என்று கூற, அதைக் கேட்டவளோ சட்டென்று திரும்பி சத்யபிரகாஷைப் பார்க்க அவள் உணர்வு என்னவென்று அவளுக்கே புரியவில்லை.
“சார்! அப்படினா லாஸ்ட் வீக், பிஸினஸ் மேகஸின்ல வந்தது…” என ஆதிரா இழுக்க,
“என் பேரன் சூர்யபிரகாஷ் தாம்மா!” என்றார் பெருமிதமாக.
‘என் கண்ணாவோட தாத்தாவா!?’ என எண்ணியவளுக்கு அதன் பின் அங்கு நடந்த பேச்சு வார்த்தைகள் எதுவும் அவள் கருத்தில் நினைவில்லை.
தன் கண்ணனைத் தவிர…

Nirmala vandhachu 😍😍😍
Welcome dear 🥰
Thank youuuuuu so much ma 🥰🥰🥰🥰🥰🍫🍫🍫🍫🍫