நெஞ்சம் மறப்பதில்லை 25

காத்திருந்தேன் காத்திருந்தேன்

காலடி ஓசைகள் கேக்கும் வரை

பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்

பார்வைகள் போய் வரும் தூரம் வரை

நீங்காமல் உன்னை

நான் எண்ணி வாழ்ந்தேன்

நினைவில் பாதி கனவில் பாதி

நாள்தோறும் இதே நிலை

வெளியில் சொல்ல முடியாதென்றும்

நான் கூட அதே நிலை

பார்த்திருந்தேன் பார்த்திருந்தேன்

பார்வைகள் போய் வரும் தூரம் வரை…

காரின் சத்தமும்… அதைத்தொடர்ந்து சில கணங்களில் கேட் திறக்கும் சத்தமும் கேட்டது. வருவது யாரென்றும் உள்ளம் உணர்த்தியது. பவளமல்லித் திட்டில் அமர்ந்திருந்தவளின் கைவிரல்கள் ஒன்றையொன்று இறுக்கமாகப் பிணைத்துக் கொண்டன. கால்கள் தரையோடு அழுத்திக் கொண்டன. மயங்காதே என்றது மனம். எனினும் இறக்கமற்ற இதயம் அவனுக்காக வேகமாகத் துடிக்க… மானங்கெட்ட மனமோ மயங்க முற்பட்டது.

நெருங்கி வரும் காலடி ஓசை, இவளின் இதய ஓசையை மத்தளமாய் மாற்ற… கண்களில் குளம் கட்டிய கண்ணீர் இதோ அதோ என‌ நேரம் பார்த்தது கரை உடைக்க. தன்னவன் கால்பாதம் தன் கண்முன்… எனினும் தலை நிமிரவில்லை கன்னியவள். இத்தனை நாட்களாக இருந்த தன்னவனுக்கான ஏக்கம், எதிர்பார்ப்பு, ஆவல் எல்லாம் இன்றுமுதல் கோபமாக பதவி உயர்வு பெற்று உச்சாணிக்கொம்பேறி நின்றன.

அவனது கோபமெல்லாம் காற்றில் வைத்த கற்பூரமாய் கரைந்து போயிற்று… அசோகவன சீதையென தன்னவளின் தனிமை கண்டு. 

ஆனால் இங்கு விட்டுச் சென்றதே ராமனாயிற்றே. யாருமற்று அவள் அமர்ந்திருந்த கோலம், அவனது நெஞ்சைக் கூறுபோட,

அவள் முன் கால்மடக்கி அமர்ந்தான். இந்தத் தனிமை இன்று வாய்த்ததல்லவே! தனிமையே இனிமை… தனக்கானவனுக்கான தேடல் நாட்களில். அதே தனிமையே கொடுமை… தனக்கானவனுக்கான காத்திருப்பு நாட்களில். இதுநாள் வரை அத்தனை பேர் தன்னைச் சுற்றி இருந்தும்,‌ அவள் ஏங்கியது என்னவோ தன்னவனின் தோள் சாயத்தானே!

அவனுக்கு எதுவும் நினைவில்‌ இல்லை. அவனவளுக்கோ அவனைத் தவிர வேறெதுவும் நினைவில் இல்லை. 

கிரகணம் விலகிய சூரியனாய், தனது கோபத்தை விட்டவன், தன்னவளிள் தாமரை முகத்தை, தாடை தொட்டு நிமிர்த்த, இமை பிரியாமல் வீம்பு செய்தது… உன்னைப் பார்க்க மாட்டேன் என மிட்டாய் கேட்கும் சிறுபிள்ளையாய். 

கரைகட்டிய கண்ணீர் கரை உடைக்க… மிளகாய்ப்பழமென மூக்கின் நுனி சிவந்து விடைக்க… துடித்த இதழ்களைக் கடித்து அடக்கினாள். 

மனம் தாளவில்லை தன்னவள் நிலைகண்டு மங்கையின் மணாளனுக்கு. சட்டென்று அவளை இறுக்கி அணைக்க, தொட்டவுடன் உதிரும் மணற்சிற்பமாய், தன்னவன் மார்பில் துவண்டவள், கேவலுடன் வெடித்து அழுதாள் வெகு நாட்களுக்குப் பிறகு. மடிதாங்க பெற்றோரும், தோள் அணைக்க கொண்டவனும் இல்லை என இத்தனை நாட்களாக அடக்கிய உணர்வுகள், தன்னவன் தொட்டவுடன், இருந்த வீம்பு வீராப்பு எல்லாம் அவளை கேலிக்குள்ளாக்கி, விடுதலை வாங்கிக் கொண்டது… போராட்டமின்றி.

அவனது சட்டையைப் பற்றிக்கொண்டு, மார்பில் முகம் புதைத்தவளது செய்கை, அவனுக்குள்ளயே புதைந்து விடுபவள்போல் இருக்க, அவனது கண்களிலிருந்தும் கண்ணீர் தன்னவளின், தனக்கான ஏக்கம் கண்டு. அவளது அழுகை அதிகமாக அதிகமாக, அவனது அணைப்பும் இறுகியது இனி உனை விடமாட்டேன் என்பது போல். 

அன்னையை கண்ட, விழுந்த குழந்தையென அவளது அழுகை அதிகமாக, தன்னை விட்டுப் பிரித்து நிறுத்தியவன், நொடியும் தாமதிக்காது, இதழணைத்தான் இதமாக… தன்னவளின் தனிமை ஏக்கத்திற்கு மருந்தாக. சிலகணங்களில் மென்மையில் வன்மை கூடியது, தனக்கான ஏக்கத்திற்கும் சேர்த்து. மருத்துவ முத்தம் தன் வேலையைச் சரியாக செய்து தன்னவளை ஆற்றுப்படுத்த, இதழொற்றல் நீண்டது இடைவேளை இல்லாமல்.

முதல் நீ முடிவும் நீ

மூன்று காலம் நீ

கடல் நீ கரையும் நீ

காற்று கூட நீ

மனதோரம் ஒரு காயம்

உன்னை எண்ணாத

நாள் இல்லையே

நானாக நானும் இல்லையே

வழி எங்கும் பல பிம்பம்

அதில் நான் சாய

தோள் இல்லையே

உன் போல யாரும் இல்லையே

தீரா நதி நீதானடி

நீந்தாமல் நான் மூழ்கி போனேன்

நீதானடி வானில் மதி

நீயல்ல நான்தானே தேய்ந்தேன்

பாதி கானகம்

அதில் காணாமல் போனவன்

ஒரு பாவை கால் தடம்

அதை தேடாமல் தேய்ந்தவன்

தூர தேசத்தில்

தொலைந்தாயோ கண்மணி

உனை தேடி கண்டதும்

என் கண்ணெல்லாம் மின்மினி

பின்னோக்கி காலம் போகும் எனில்

உன் மன்னிப்பை கூறுவேன்

கண்ணோக்கி நேராய் பார்க்கும் கணம்

பிழை எல்லாமே கலைவேன்

நகராத கடிகாரம்

அது போல் நானும் நின்றிருந்தேன்

நீ எங்கு சென்றாய் கண்ணம்மா

அழகான அரிதாரம்

வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்

புன்னைகைக்கு போதும் கண்ணம்மா

நீ கேட்கவே என் பாடலை

உன் ஆசை ராகத்தில் செய்தேன்

உன் புன்னகை பொன் மின்னலை

நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்

முதல் நீ… முடிவும் நீ…

பிரிந்தவர் கூடினால் பேசவும் தோணுமோ! பேசவும் வேண்டுமோ!

 **********************

“டேய்…! எங்க இருந்துடா வர்ற? உன்னொட டெக்ஸ்‌னா நீ எங்க வேணாலும் போவியா?” பெண்கள் ட்ரையல் ரூமிலிருந்து வெளிவந்தவனைப் பார்த்து அதிர்ந்தவனாக, விஷ்வா கேள்வி கேட்டுக் கொண்டிருக்க… கதவு திறந்து அவன்‌ பின்னால் வந்த ஆதியா நிமிர்ந்தும் பாராமல் வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.

“அதுசரி… நீ கண்ணமூடி நின்ன பிள்ளைக்கே தாலிய கட்டியவனாச்சே? ஒரு சின்ன சந்து கிடைச்சாலும் சிந்துபாட மாட்ட?” நக்கலாய் அவன் குரல்.

“டேய் மச்சா… தங்கச்சிக்கு அண்ணனாட்டம் பேசுடா!” நண்பனின் தோளில்தட்டி சிரிக்க,

“ஏன்டா சிரிக்க மாட்ட? வானரப்படைகள எல்லாம் என் தலைல கட்டிட்டு, நீபாட்டுக்கு கிடைச்ச இடத்துல ரொமான்ஸ் பண்ற. சிங்கிள்ஸ் வயித்தெரிச்சல் சும்மா விடாது டா!” வராத கண்ணீரைத் துடைக்க,

“தன்னோடு இனத்த எப்படி சமாளிக்கறது‌னு உனக்கு தானடா தெரியும். அதான் உன் பொறுப்புல என் மச்சான், கொழுந்தியாளுகள விட்டுறுக்கே.”

“டேய்… பேச்சுக்குக் கூட என்னைய ஆஞ்சநேயர் ஆக்காதடா. அப்புறம் கல்யாணமே நடக்காது. தூது போறது மட்டுமே வேலையா போகும்டா.”

அப்பாவியாய் அவன் சொல்ல, 

“புண்ணியம் கட்டிக்கோ டா!” என்று நண்பனை பார்த்து சிரிக்க,

“நீங்க மட்டும் பொண்டாட்டி கட்டுவீங்க… நாங்க மட்டும் உங்களுக்கு தூது போய்க்கிட்டு புண்ணியம் கட்டனுமா? நல்லா இருக்குடா உங்க நியாயம்?” என்று கேலியாய் நண்பனை கோபிக்க,

“நண்பேன்டா.” என்று சிரித்துக்கொண்டே கழுத்தில் கை போட்டு இழுத்துச் சென்றவனிடம்,

“ஏன்டா சூர்யா? அந்த ராகவனை என்னடா பண்ணின? எந்திரிக்கவே முடியாதாம்மா?” எனக்கேட்டவனை சூர்யா திரும்பிப் பார்க்க,

“அதான் டா… எந்திரிச்சு நடக்கவே பல மாசம் ஆகுமாமே?”

“அவனெல்லாம் சுண்டைக்காய் பையன்டா. அவனுக்கெல்லாம் இங்க அவ்ளோ சீன் இல்ல.”

“ஓ… அதான் தட்டி வத்தல் போட்டயாக்கும்.”

“இப்ப அவனெல்லாம் எந்திரிச்சு நடந்து என்ன ஆகப்போகுது? பூமிக்கு வேஸ்ட் லக்கேஜ். நல்ல நேரத்துல நல்ல விஷயத்தை மட்டும் பேசுடா!” என்று அழைத்துச் சென்றான்… அவன் பேச்சு இனித் தேவையில்லை என்பது போல்.

அனைவரும் வந்திருப்பது தாலிமாற்றும் சடங்கிற்காக ஜவுளி எடுக்க. பிள்ளைகளையும் உடன் அழைத்து வரவேண்டுமென லஷ்மிக்கு உத்தரவு போட்டுவிட, அவனின் எஸ்.பி. டெக்ஸ்டைல்ஸே அல்லோகலப்படுகிறது காலையில் இருந்து பிள்ளைகள் களேபரத்தில். விஷ்வா மற்றும் சதீஷ் கண்காணிப்பில் பிள்ளைகளை விட்டுவிட்டு லஷ்மியும், மங்கையர்க்கரசியும் பட்டுப் புடவைகளை ஆராய்ந்து கொண்டிருக்க,

பிள்ளைகளோடே நின்று கொண்டு தனியே வராதவளைக் கண்ணாலே கபளீகரம் செய்து கொண்டிருந்தான் சூர்யா. அடர்பச்சைநிற பார்டர் கொண்ட இளமஞ்சள் நிற சாஃப்ட் சில்க்சாரியில், அப்பொழுது தான் பறித்த பூவென பிள்ளைகளுக்கு மத்தியில் நின்றிருந்தவளை பார்வை ஊடுறுவ, அவன் பார்வை உணர்ந்தும் திரும்பியும் பார்க்கவில்லை. 

“ஆதிம்மா! அவசரமா ஜாக்கெட்லாம் தச்சா செட்டாகாது. அதான் ரெடிமேட் ப்ளவுஸ் இருக்கே? அதைப் போய் ட்ரையல் பாத்துட்டு வா. சரியாயிருந்தா அதையே எடுத்துக்கலாம்.” லஷ்மி கூற,

“சரிங்க ஆன்ட்டி.” எனக்கூறியவள்.

ட்ரையல் பார்க்க வேண்டிய சில உடைகளை எடுத்துக் கொண்டு செல்வதைக் கவனித்தவன், அவள் ட்ரையல் ரூம் உள்சென்று கதவை தாழ்போடும் முன் சட்டென்று திறந்து உள்ளே நுழைந்தான்.

“ஐயோ கண்ணன்! என்னதிது? வெளியபோங்க!” அவள் பதட்டப்பட,

“நானும் வந்ததுல இருந்து பாக்குறே. பிள்ளைகளை விட்டு நகரமாட்டேங்குற. கிட்டக்கூட வரமாட்டேங்குற?” அவளை இறுக்கி அணைத்தபடி கேட்க,

“உங்களப்பத்தி தெரியாதா? கையவச்சுகிட்டு சும்மா இருக்க மாட்டீங்க. எல்லாம் அறியா வயசுப்பிள்ளைக. அதான்.” என அவளும் நொடித்துக் கொள்ள,

“ஹேய்… நானும் இன்னும் எதுவும் அறியாப்‌பையன்‌ தான்டி!” என்றவன் அவள் கழுத்தில் இதழ்தடம் பதித்தான்.

“நம்பிட்டேன்! அறியாப்பையன் தான் இப்படி டிரையல் ரூமுக்குள்ள வருவானா கண்ணா…?” அவளது குரலும் உள்ளிறங்கியது.

“இது என்ன ரூம்… தியா?”

“ட்ரையல் ரூம்!”

“நானும் அதுக்குத்தான்டீ… வந்திருக்கே.” கிறக்கத்துடன் இதழ்கள் கழுத்திலிருந்து கன்னத்திற்கு பயணிக்க, 

“கண்ணா ப்ளீஸ்… இது லேடிஸ் டிரையல் ரூம். யாராவது வந்துட்டா கலவரம் ஆகிறும்.” இறைஞ்சியது குரல்.

“இது நம்ம டெக்ஸ்டீ. யாரு வந்து கேப்பா? இனிமேல் நம்ம வரும்போதெல்லாம் இதை கப்பிள்ஸ் ட்ரையல் ரூம்மா மாத்திரலாம். வெளியவும் போர்டு போட்டுறலாம்.”

“நம்ம‌ டெக்ஸ்னா… உங்களுக்குனு ரூம் இல்லயா? இப்படித்தான் வந்து மானத்த வாங்குவிங்களா…?” எனக் கேட்க, சட்டென்று நிமிர்ந்தவன்,

“அறியாப்பையன்னு சொன்னதும் நம்பலல்ல. இப்பப்பாரு நமக்குன்னு ரூம் இருக்கறது கூட நீ சொல்லித்தான் ஞாபகம் வருது. போலாமா?” அப்பாவியாய்க் கேட்டு கண்ஜாடை காட்ட, மயங்கியவளும்…

“மானம் போயிரும். முதல்ல வெளியே போங்க கண்ணன்.” என்றாள்.

“தியா… நான் உன் புருஷன் டீ.”

“அது இப்பதான் உங்களுக்கு ஞாபகம் வருதா கண்ணன்?” முகம் சற்று சுணங்க,

“சாரி தியா… நானும் ஒரு பெரிய மிஸ்டேக் பண்ணிட்டேன்.” அவனும் தீவிரமான குரலில் கூறிக்கொண்டிருந்தான்… முகத்தைப் பவ்யமாக வைத்துக்கொண்டு.

“என்ன மிஸ்டேக் கண்ணன்?” என்றாள் அவளும் அதீத யோசனையோடு.

“துஷ்யந்தனா… மோதிரத்த மட்டும் மஞ்சக்கயித்துல போட்டுட்டுப் போயிருக்கக் கூடாது… தியா!”

“அப்புறம்?”

“மேற்படி விஷயத்தையும் முடிச்சுட்டுப் போயிருந்தா… சகுந்தலை மாதிரி பிள்ளையைத் தூக்கிட்டு வந்திருப்பல்ல.” அவனும் சீரியஸாக சொல்லிக்கொண்டு போக,

“அடப்பாவி! நான்கூட என்னமோன்னு சீரியஸாக் கேட்டுட்டு இருக்கேன் பாரேன்.” என்றவள், “உங்களை…” என சரமாரியாக அவனது மார்பில் அடிக்கத் துவங்க, அவளது இருகைகளையும் பிடித்து சட்டென முதுகுப் பக்கமாக வளைத்தவன்,

“இப்ப எதுக்கு மாமனுக்கு ஒத்தடம் கொடுத்த?” என்றான். அவளுக்கு எங்கே பேச்சு வரும். அவளும் அவனும் நின்ற நிலையில் மூச்சுமுட்ட, படபடத்த மனதை எதைக்கொண்டு அடக்க. உணர்ச்சிகள் கொந்தளிக்க மிக அருகில் தன்னவன் முகம்… மாயக்கண்ணனாய் மயக்க… ராதையாய் மயங்கியவள்… அவனையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க…

மதிமயங்கிய மதிமுகம் அவனையும் மயக்க, துடித்த இதழ்கள் தாபத்திற்குத் தூதுவிட, அள்ளிக் கொள்ள எழுந்த ஆவலை அடக்கியவனாக… குரலைச் செறுமிக்கொண்டு,

“தியா…!”

“ம்ம்ம்…”

“ஏன்‌ என்னைத் தேடி வரல?” அவனுக்கு சிறுபிள்ளையாய் இன்னும் ஏக்கம் நெஞ்சத்தில்.

“நான் இந்த விஷயத்துல ரொம்பவே பேராசைக்காரி கண்ணன். எனக்கு மூச்சுமுட்ட காதல் வேணும். கடமைக்காக வாழமுடியாது. மூச்சுமுட்டிறும் கண்ணன்.” மயக்கம் தாண்டி அவளது கண்கள் சிவப்பேற, அவளது ஆசை மனம் புரிய மென்மையாக இதழ் ஒற்றினான் பூவிழி மீது.

“என் கண்ணன் கண்ல பாத்த அதே காதல, சூர்யப்ரகாஷ் கண்லயும் பாக்கணும்னு ஆசை.”

“தெரிஞ்சுதா…?”

“ம்ம்ம்… நல்லாவே தெரிஞ்சுது. அந்த ராகவன் பாக்கும் போதெல்லாம் மொளகாப்பொடி மூக்குல ஏறினமாதிரி ஒரு கோபம் உங்க கண்ணுல தெரியும் பாருங்க… அப்ப தெரிஞ்சுது கண்ணனோட காதல்.”

“அடிப்பாவி! அதுக்கு மிளகாய்ப்பொடி மூக்குல ஏறணுமா?” எனக்கேட்டு அவள் நெற்றிமுட்டி சிரிக்க,

“நேத்து இன்னும் நல்லாவே தெரிஞ்சுது. நீங்க வர்றது தெரிஞ்சதும் பேசவே கூடாதுனு பல்லக்கடிச்சுட்டு இருந்தேன். ஆனா நீங்க தொட்டதும் தொபுக்கடீர்னு விழுந்தே பாருங்க. அப்ப தெரிஞ்சது… இந்த மானங்கெட்ட மனசு இனி நம்ம பேச்சைக் கேக்காதுனு.” அவள் கேலியாகக் கூறிக்கொண்டாலும், தனிமை அவளை எவ்வளவு‌ வாட்டியிருக்கிறது எனத்தெரிந்தவன் மனமும் பாகாய் இளகியது. 

இந்த நாள் கூடவா நினைவில் இல்லை என அவளும் அவன் மீது எவ்வளவுதான் கோபத்தை இழுத்துப்பிடித்து வைத்தாலும், அவனது கையில் அடங்கியவுடன், அவளது பிரிவாற்றாமை ஆறுதல் தேடியது அவனிடம் தானே.

நேற்றிரவு நீண்ட இதழ்முத்தம், பாலைத்தினை கடந்து குறிஞ்சித்தினைக்குத் தாவ முற்பட, அவனுக்கு ஏனோ… ஆறுதல் தேடி நெஞ்சத்தில் சாய்ந்தவளை மஞ்சத்தில் சேர்க்க எண்ணம் வரவில்லை. 

காதலும் மோகமும் போட்டிபோட தன்னவளை ஆளவேண்டும் என எண்ணியவனாக, குமிழ் விட்டு கொதித்த உணர்ச்சிகளை அடக்கியவனாக… அவளை விடுவித்து கன்னம் துடைத்தான் அழுதது போதும் என்று. அப்பொழுதுதான் மலர ஆரம்பித்த பவளமல்லி மனம்பரப்பி உதிர்ந்து வாழ்த்த… அவளை எழுப்பி உள்ளே‌ அழைத்து சென்றான். 

எப்படியும் சாப்பிட்டு இருக்க மாட்டாள் எனத்தெரியும். அடுக்களை சென்று பாலைக் காய்ச்சி எடுத்து வந்தவன் மல்லுக்கட்டி குடிக்க வைத்தான். 

படுக்கையறை சென்று தன் கைவளைவிலேயே அவளை வைத்துக்கொள்ள, தன்னவன் முகத்தையே பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு,‌ நீண்ட நாட்களுக்குப் பிறகு அமைதியான உறக்கம் கண்களைத் தழுவ நிம்மதியாக உறங்கினால் கூடு சேர்ந்த பறவையென.

முன்தினம் நினைவில் தன்னவனையே அவள் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்க, 

“இப்படியே மாமனை சைட்டடிச்சுட்டு இருந்தா, புடவையெல்லாம் எப்ப எடுக்கறதாம்? ம்ம்ம்…” என புருவம் உயரத்தி கண்சிமிட்டியவனைப் பார்த்தவள்,‌ சுயம் உணர்ந்து சட்டென விலக முற்பட, அவளால் முடிந்தால் தானே.

“கண்ணா….” சிணுங்கிய குரல் தன்னவனைக் கிறங்கடிக்க,

“இப்படி ரொமான்டிக்கா கூப்பிட்டா நான் எப்படி விடுறதாம்?” 

“ப்ளீஸ் கண்ணா! அத்தை யாராவது தேடி வந்துறப் போறாங்க. வாங்க சேரி செக்ஷனுக்குப் போலாம்.”

அவளது கரங்களை விடுவித்தவன்,

“தாலி மாத்துற முகூர்த்தத்துக்கு மட்டும் நீங்க செலக்ட் பண்ணுங்க. அடுத்த முகூர்த்தத்துக்கு நான் செலக்ட் பண்ணிக்கறேன்.” 

“அடுத்து என்ன முகூர்த்தம்? அதைப்பத்தி லஷ்மி ஆன்ட்டி, அத்தை யாரும் எதுவும் சொல்லலியே?” அவள் யோசனையாகக் கேட்க,

“சின்னப்பிள்ளை கிட்ட சொல்லக் கூடாதுன்னு விட்டுருப்பாங்க.” விஷமப் புன்னகையோடு கூறியவனின் பார்வையில் இருந்த குறும்பில்,

“யாரு நான் சின்னப் புள்ளையா? எனக்குத் தெரியாம அப்படி என்ன முகூர்த்தம்?” சிலிப்பிக் கொண்டவள், சற்று யோசிக்க, சட்டென…

“அடப்பாவி. ஃப்ராடு.” என்றாள் முகம் சிவக்க,

“அப்பாடா! பல்பு எரிஞ்சுருச்சு.” 

“மசாலாக்காரர் மூளை வரவர மிட்நைட் மாசாலாவா யோசிக்குது. ஏதாவது ஏடாகூடமா எடுத்து வைங்க… நான் போடவே மாட்டேனாக்கும்.”

“தியா… பாத்தியா… மாமனுக்கு ரொம்ப வேலை வைக்கக் கூடாதுனு எவ்வளவு முன்யோசனையா இருக்க?” குரலில் குறும்பு கூத்தாட,

“அடச்சே… இனிமே உங்ககிட்ட எதைப்பேசுனாலும் சென்சார் பண்ணிட்டுதான் பேசணும். எல்லாத்தையும் டபுள்மீனிங் ஆக்குறீங்க. முதல்ல வெளியே போங்க.” என்று அவனைப் பிடித்து வெளியே தள்ளினாள்.

விஷ்வாவோடு தோளில் கை போட்டுக் கொண்டு வந்தவன், தன்னவளை தேட, அவளோ மீண்டும் பிள்ளைகளோடு ஐக்கியமாகி இருந்தாள். 

ஐந்து மாடிகள் கொண்ட ஜவுளிக்கடை. அந்தந்த வயதினருக்கென தனித்தனி தளம்.

“சதீஷ்! எல்லாருக்கும் கூல்ட்ரிங்க்ஸ், ஐஸ்க்ரீம் சொல்லி இருக்கே. கீழே போய் குடிக்க வச்சு பத்திரமாக் கூட்டிட்டு, சில்ரன்ஸ் செக்ஷனுக்கு வா!” எனப்‌ பணிக்க,

“சரிங்க ண்ணா.” என அழைத்துச் சென்றான்.

சற்று பெரிய பெண்பிள்ளைகள் மட்டும் லஷ்மியோடு இருந்து கொண்டனர்.

அதற்குள் ஆண்களுக்கான துணிகளை சூர்யா தேர்வு செய்ய ஆரம்பிக்க,

ஆதியாவின் அருகில் நின்று கொண்டிருந்த தேவி,

“அத்தானின் முத்தங்கள்

அத்தனையும் முத்துக்கள்

அழகான கண்ணத்தில்

அடையாளச் சின்னங்கள்

அடையாளச் சின்னங்கள்.” எனப் பாட,

“தேவி! வயசுப்பிள்ளைக்கு வெளி இடத்துல வந்து என்ன பாட்டு வேண்டிகிடக்கு? வந்த வேலையப்பாரு!” தேவியின் பாட்டைக்கேட்டு லஷ்மி தாயாகக் கண்டிக்க,

“சிச்சுவேஷன் சாங் ம்மா.” என்றாள்.

அவளது கிண்டலில் திரும்பி, ஆதியா தன்னவனை முறைத்துப் பார்வைக்கணை வீச, அவனோ அதை கண்சிமிட்டி எதிர்கொண்டான்.

‘வீட்டுக்குப் போறவரைக்கும் திரும்பியே பாக்கக்கூடாது!’ நினைக்க மட்டுமே முடிந்தது அவளால். ஒவ்வொரு உடைக்கும் ஒப்புதல் கேட்டு அவன் பக்கம்தான் பார்வை திரும்பியது.

3 thoughts on “நெஞ்சம் மறப்பதில்லை 25”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

You cannot copy content of this page

Scroll to Top