23
“சாப்பிட வாப்பா” மஞ்சுளா மகனை அழைக்க, தேன்மொழி வந்து பிள்ளையை வாங்கிக் கொண்டாள்.
அப்பனின் பாக்கெட்டிலிருந்த பேனாவை உருவி எடுத்துக்கொண்டே அத்தையிடம் தாவியது தத்தை. கையை ஆட்டி விளையாட கண்ணில் பட்டுவிடும் என்று வாங்க முற்பட, பேனாவையே மந்திரக்கோலாக்கி தன் போக்கிற்கு அப்பனையும் அத்தையையும் ஆட்டிவைத்து கிண்கிணியாய்ச் சிரித்தது வாழைக்குறுத்து. அதன் போக்கிற்கே சிரித்து விளையாடி பேனாவை வாங்கியவர்கள் மனமும் ஈசல் இறகாய் பறந்தது. கவலை மறக்கடிக்கும் மாயக்கோல் மழலையின் மந்திரச்சிரிப்பு அல்லவா.
தங்கையிடம், “நாளைக்கி காயத்ரிக்கு மாங்கல்யமும், உனக்கு புடவையும் எடுக்கப் போறோமே. உன் ஃப்ரெண்ட வரச் சொன்னியா?” என்றான் சாப்பிட்டு கொண்டே.
“அதென்ன இப்பவும் என் ஃப்ரெண்டு. காலையிலிருந்து உங்க கூடத்தானே இருக்குறா. நீங்களே சொல்ல வேண்டியது தான. உங்க கல்யாண முடிவு என்னாச்சு” அப்பொழுதும் அண்ணன் கல்யாணத்தில் கவனமாக,
“அதுக்குதான் அவளையும் வரச்சொல்லு. பரிசச் சேலை எடுத்தறலாம். நான் சொன்னா முறுக்கிக்குவா” என ஏதோ சாக்கு போக்கு சொல்ல,
“என்னமோ சரியில்லையே? என்னைய கூப்பிடச்சொன்னாலே ஏதோ விவகாரம்னு தானே அர்த்தம்.”
“ஒரு விவகாரமும் இல்ல. பலகாரமும் இல்ல. மொதல்ல அவளுக்கு கால்பண்ணி வரச்சொல்லு தேனு” சாப்பிட்டு முடித்தவன் பொறுப்பை தங்கையிடம் சாட்டிவிட்டு, மகளைத் தூக்கிக்கொண்டு படுக்கையறை சென்றுவிட்டான். எப்படியும் தங்கை அழைத்து வந்துவிடுவாள் எனத்தெரியும். எல்லாருக்கும் மேகம்விடு தூது, நிலாவிடு தூது என்றால் இவனுக்கு மட்டும் எப்பொழுதும் தங்கைவிடு தூது போல.
அவனின் முடிவு கேட்டு பெண்கள் இருவருக்குமே மனம் கொள்ளா சந்தோஷம். இனிமேலாவது மகனின் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க வெண்டும் என அன்னை மனம் ஆண்டவனை வேண்டிக்கொண்டது.
அப்பொழுதுதான் தூங்கி எழுந்ததால், தூங்காமல் மகள் அப்பனுக்கு ஆட்டம் காட்ட, அவனும் இன்று தூங்கும் மனநிலையில் இல்லை. படுக்கையில் பொம்மைகளை எடுத்துப்போட்டு விளையாடவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
அவனுக்கிருந்த குழப்பத்தை இறக்கி வைத்துவிட்ட நிம்மதி. இப்பொழுது புரியாவிட்டாலும் அவனது அல்லிராணி அவனைப் புரிந்து கொள்வாள், இல்லையென்றாலும் பார்த்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை இருந்தது.
அண்ணனிடம் பிள்ளையை கொடுத்துவிட்டு அறைக்கு வந்த தேன்மொழி தோழியை அழைக்க, அமிர்தாவின் குரல் அழுததில் ஙஞணநமன வாசித்தது.
“என்ன அமிர்து. குரலே சரியில்ல”
“சளிப்பிடிச்சிருக்குப்பா” என்று சமாளித்தவள், “குட்டிம்மா எப்படியிருக்கா?” என அடுத்து பிள்ளையைத்தான் முதலில் விசாரித்தாள். அவளிடமும் அண்ணன் மகள் எழுந்து நின்ற சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டவள்,
“கீழ விழுந்ததும் அண்ணன் ரொம்ப பயந்துட்டாங்க அமிர்தா. முகமே செத்துப்போச்சு” என அண்ணனின் பயத்தையும் கவலையோடு விளக்க கேட்டுக் கொண்டிருந்தவளுக்கும் அவனது மனநிலையும், பயமும் புரிந்தது.
அவன் உதிர்த்த உணர்வுகளை உதறிவிட்டு வந்தவளுக்கு, மீண்டும் ஒன்று கூட்டி அள்ளிப்பார்க்க அதன் கணம் இப்பொழுது அதிகமாகத் தெரிந்தது. எது ஒன்றும் பிள்ளையை மையப்புள்ளியாகக் கொண்டுதான் சுழலும் என்பது விளங்கியது.
படிப்பு, வேலை, திருமணம், குழந்தை என மனிதனின் ஒவ்வொரு அடுத்தகட்ட நிலையிலும் மனமெனும் சந்தோஷக் குளத்தின் அடியில் குழப்பச்சேறு படிந்தே இருக்கும். ஒவ்வொரு கட்டத்தின் அடுத்த படிநிலையிலும் சற்று கலங்கித்தான் தெளியும்.
“நாளைக்கி சேல எடுக்கப் போறோம். நீயும் வா அமிர்தா.”
“உடம்பு சரியில்ல தேனு. முடிஞ்சா வர்றேன்” எனத் தட்டிக் கழிக்கப்பார்க்க, அவளது குரலே அவளை காட்டிக்கொடுத்தது.
“உங்களுக்குள்ள என்ன பிரச்சினை அமிர்தா” என்றாள் சற்று குரலில் அதிகாரம் கூட்டி.
“எதுவுமே இல்லாம இருக்கறதுக்கு பிரச்சினையாவதும் இருந்துட்டுப் போகட்டும், விடுப்பா” என அலுத்துக் கொள்ள,
“விட்டா அமிர்தானந்தாவா மாறி தத்துவம் சொல்லுவ போலயே? உங்களுக்குள்ள எப்படியோ போங்க. நாளைக்கு என்னோட விசேஷத்துக்கு சேல எடுக்கப்போறோம். என்னோட ஃப்ரென்டாவோ, இல்ல உறவுக்காரியாவோ வரவேண்டாம். ஆதினிக்கி அம்மாவா வா!” என்றவள் அவளது பதிலைக்கூட கேட்காமல் அழைப்பைத் துண்டித்தாள். அவளது பதிலை கேட்டு நின்றால் இன்னும் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தட்டிக்கழிக்க பார்ப்பாள் எனத்தெரிந்து அவளுக்கு பேச வாய்ப்பு கொடுக்கவில்லை.
எத்தனை நாட்களாக தோழியைப் பார்க்கிறாள். அவளுக்கு அண்ணன் மீதும், அண்ணன் பிள்ளையின் மீதும் இருக்கும் அளவுகடந்த பாசம் தெரியாதா என்ன. அண்ணன் திருமணத்திற்கு சம்மதம் கூறிவிட்டான் என்றால், அங்கு ஏதோ பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது என்று தானே அர்த்தம். ஏதோ ஒரு பிணக்கு இருவருக்குள்ளும். அதை அண்ணன் பார்த்துக் கொள்வான் என அண்ணன் மீது பாரத்தைப்போட்டு விட்டு படுத்துவிட்டாள்.
தூக்கம்தான் வந்தபாட்டைக் காணோம். படுக்கையில் நெளிந்து கொண்டிருந்தவள் கண்கள் அடிக்கடி தனது கைபேசியை தொட்டு மீண்டது. நேரம் நெட்டிமுறிக்க, மாலை நேரத்து சூரியகாந்தியாய் மனம் சுணங்க ஆரம்பிக்க, சற்று நேரம் தவிக்கவிட்டே கைபேசி அழைத்தது. பார்க்காமலே யாரெனப் புரிந்தது.
இத்தனை நாட்களாக இல்லாத திருநாளாக இப்பொழுதெல்லாம் நேரங்கெட்ட நேரத்தில் அழகரிடமிருந்து அழைப்பு வருகிறது. ஆடவன் நினைப்பு மனதிற்குள் வர செவ்வந்தியாய் பூத்த முகத்தில் புன்னகை தாராளமாக விரிந்தது. இவ்வளவு நேரமாக தவிக்கவிட்டதில் வீம்புக்கென்றே மறுமுறை அழைப்பில்தான் எடுத்தாள்.
“ஏன் தேனு இவ்ளோ நேரம்.” அதட்டலோடு ஒலித்தாலும், அழகரின் குரலில் ஏக்கம் ஏகாதிபத்தியம் நடத்தியது.
“அண்ணனப்பத்தியும், அமிர்தாவப்பத்தியும் யோசிச்சுட்டு இருந்தேன் மாமா. இவ்வளவு நடந்தும் சைலன்ட்டா இருக்குற உங்க அம்மாவப் பத்தியும் யோசனை ஓடுச்சா… அப்படியே கண்ணு இழுத்துச்சா… அசந்துட்டேன் மாமா…” சாவகாசமாய் இழுத்து பதில் சொல்லியவள் உதடு மடித்து சிரித்தது அவனுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
“தூங்குமூஞ்சி… தூங்குமூஞ்சி… உன்னைய எல்லாம் பெத்தங்களா. செஞ்சாங்களாடி. எனக்குனு வந்து வாச்சுருக்க பாரு.” எரிந்து விழுந்தது எதிர்முனை.
“ஏன் மாமா…!” ஒன்றும் தெரியாதவள் போல் அப்பாவியாய் இழுக்க,
“ஒரு ஆறுதலுக்காவது உங்களைப் பத்திதான் நெனச்சிட்டுருந்தேன் மாமான்னு சொல்லியிருக்கலாம்.” நொந்து கொண்டான்
“இந்நேரத்துக்கு உங்களப்பத்தி நினைக்க என்ன மாமா இருக்கு” சிரிக்காமல் வெறுப்பேற்ற,
“அழகரு, பேசாம நீ காவி வாங்கி கட்டிட்டுப் போயிருக்கலாம்டா. இத்தனவருஷம் கன்னிகாத்து ஒரு பிரயோஜனமும் இல்லடா.” எதிர் முனை தன்னால் வாய்விட்டு புலம்ப, இங்கே இவள் வாயைப்பொத்திக் கொண்டு சிரித்தாள்
“இங்க நான்தான் கேனப்பயலாட்டம் குப்புறப் படுத்துட்டு தூக்கம் வராம தவிச்சுட்டிருக்கேன். நீ என்னடான்னா அண்ணன் நெனப்பு ஆட்டுக்குட்டி நெனப்புங்குற. உனக்கெல்லாம் யாருடி சம்மந்தமேயில்லாம தேன்மொழினு பேரு வச்சது. பேருமட்டும் தான் இனிக்குது.” எரிச்சல் எதிர்முனையில் தக்காளி விலையாய் உயர, (தக்காளி விலை கிலோ 180ரூபாங்க)
சற்று மனம் இறங்கியவளும், “மாமா… ” என சற்று குரலில் கருணை காட்டி குழைய,
“என்னடி…” ஒற்றைச்சொல்லும் சுள்ளெனச் சுட்டது.
“என் நெனப்புலயிருந்த அந்த ஆட்டுக்குட்டியே… நீங்கதான் மாமா” என மந்தாரமாய் சிரிக்க, அவனுக்கும் அச்சிரிப்பு கடத்தப்பட்டது.
“தேனூ… தூக்கம் வரலடி.”
“நீங்க என்ன பச்சப்பிள்ளையா மாமா. தூக்கம் வரலைன்னா தாலாட்டுபாட.” சுற்றி வளைத்து எங்கு வருகிறான் எனத்தெரிந்து பிடிகொடுக்காமல் பேச,
“உன் நெனப்பாவே இருக்கு. இம்சையாயிருக்குடி.” குழைந்து வந்த குரலில், தாபம் தளும்பி வழிந்தது.
“போதும் மாமா, இப்ப எல்லாம் உங்க ஃபோன் கால் பாத்தாலே பயமா இருக்கு.”
“ஏன் தேனு?”
“வர வர உங்க பேச்சே சரியில்ல. நீங்க பேசி முடிச்சபின்னாடி ஒவ்வொரு வார்த்தைக்கும் டிக்ஷ்னரி தேடவேண்டியிருக்கு மாமா. அதுலயே பாதி தூக்கம் போயிறுது.” ஆவணி மாதத்து சிறுதூரலாய் பெண்ணின் குரல் தனது தவிப்பையும் இலை மறை காயாக வெளிப்படுத்த, இங்கே கன்னியவள் கன்னம் சிவப்பது அங்கே ஆண்மகன் மனக்கண்ணில் படமாய் விரிந்தது.
“அய்யோ தேனு… இப்ப உன் முகத்தப் பாக்கணுமே. வீடியோ காலும் அட்டெண்ட் பண்ண மாட்டேங்குற. டிக்ஷ்னரி தேடுறதுக்கு பதிலா மாமாகிட்டயே விளக்கம் கேட்டிருக்கலாமே?” குரல் கும்மாளம் போட்டது.
“எதுக்கு… ஃபோன் சூடேறி வெடிக்கிற அளவுக்கு விளக்கம் சொல்லுவீங்க. வர்ற கொஞ்சநஞ்ச தூக்கமும் சுத்தமாப் போறதுக்கா?”
“தேனூ… ஃபோன் மட்டும்தான் சூடேறுதா? ஏன்டி இங்க ஒருத்தன் கொதிச்சுப்போயிருக்கேன். அதப்பத்தி கவலைப்படாம ஃபோன் சூடேறுறதப்பத்தி கவலப்படுற. கல்யாணம் முடியட்டும் தேனு. அதுக்கெல்லாம் பிராக்டிகலா விளக்கம் சொல்லித்தர்றேன்.” என்றவன் குரலில் அனலடிக்க, ஆலமரத்து விழுதில் ஊஞ்சல் கட்டி ஆடியது பெண்ணின் மனது.
“இப்படியே பேசுனீங்கனா நான் கால கட்பண்ணிருவேன் மாமா” சிறு ஊடலோடு உவகை காட்டியது பெண்குரல்.
“ஃபோன் காலவா. மாமா காலவா”
“மாமா காமெடினு நெனச்சு நீங்க சொன்னது சகிக்கல. மொக்கையா இருக்கு.”
“நமக்கு அம்புட்டுதான் வரும். இவங்களுக்கெல்லாம் நாமதான் லவ்வுல சீனியர். ஆனா பாரு, இவங்க கல்யாணமெல்லாம் முடிச்சுதான் நம்ம கல்யாணம். அதுவும் இன்னும் தேதி குறிக்கல. அதுக்குள்ள தல நரச்சு, முடிகொட்டி, வழுக்கை விழுந்துரும் போல.” சலித்து வந்த குரல் கேட்டு, கலகலத்தவள்,
“அய்யோ மாமா உங்களுக்கு தல சொட்டவிழுகுமா. ஆமா… உங்க அப்பாவுக்கும் தல வழுக்கதான. அப்ப நாளைக்கி நம்ம பிள்ளைக்கும் வழுக்கையாக வாய்ப்பிருக்கா?” என அவள் முன்னோக்கி சிந்திக்க,
“ஏன்டி… இதுதான் இப்ப உனக்கு தலையாய பிரச்சினையா. இன்னும் பொண்டாட்டியே வரல. அதுக்குள்ள பிள்ளைக்கு போய்ட்டா?”
“இல்லையா பின்ன? ஆமா… நம்ம எப்ப மாமா லவ் பண்ணோம்” என்றவள் குரல் சிற்றோடை நீராய் சில்லிட்டிருந்தது.
“உனக்கு காக்கா கடி கடிச்சு கடலமிட்டாய் கொடுத்தேன்ல அப்ப இருந்து. உப்புமூட்ட தூக்கி விளையாண்டோம்ல அப்ப இருந்து. தாவணி எடுத்துக் கொடுத்து சீர் செஞ்சோம்ல அப்ப இருந்து. நீ வயசுக்கு வந்தப்ப தாய்மாமனுக்கடுத்து, அத்த மகனா மாலை போட்டேன்ல அப்ப இருந்து” என சிறுவயதில் இருந்து தங்களோடு தங்கள் காதலும் கைகோர்த்து வளர்ந்த கதை சொல்ல, ஆனந்தப் பூ ஒன்று ஈரமாய் பூத்தது கன்னியவள் கண்களில். அத்தைமகனாய் மனதில் பதியும் முன்னே மணாளனாய் மனதில் கோலோச்சிவிட்டவன்.
இன்னார்க்கு இன்னார் என்று இவர்களுக்கு முடி போட்டிருக்க, இரண்டு சகோதரிகளின் உடன் பிறந்தவனாக இத்தனை நாட்களாக பார்வையில்கூட கன்னியம் காத்தவன் பேச்சு, நிச்சயதேதி குறித்த பின்பு கன்னியம் என்றால் வீசம் என்னவிலை என கேட்கிறான். இவளும் அவனது பேச்சில் மயங்கி கிறங்கிக்கிடக்க,
“அதான் அப்பவே மாலை போட்டீங்கள்ல மாமா. அப்பவே நமக்கு கல்யாணம் ஆயிருச்சு மாமா.” பெண்ணவள் குரல் தளுதளுக்க ஆறடி ஆண்மகனையும் அசைத்துப் பார்த்தது. அவனுக்குள்ளும் சுகமாய் சிறுவலி.
“அப்ப என் பொண்டாட்டி இந்நேரத்துக்கு என் பக்கத்துல இல்ல இருக்கணும். ஏங்கிப்போயி வெறும் தலகாணிய கட்டிப் புடிச்சுட்டு படுத்திருக்கேன்டி.” தவித்துவந்தது குரல்.
“மறுபடியும் வாங்குன விலைக்கே வந்துட்டீங்க பாத்தீங்களா?” என சலித்துக் கொண்டவள் கைவளைக்குள்ளும் இறுக்கமாய் தலையணையே. தனது ஏக்கத்தையும் ஃபோன் வழியாகக் கடத்த, இனிக்க இனிக்க பேசி, வெயில் காலத்து ஆற்றுமணலாய் இருவரும் கொதித்து, கைபேசி கதறாத குறையாக தனது உயிரை மாய்த்துக்கொண்ட பிறகுதான் கீழே வைக்கப்பட்டது.
உனக்காக பொறந்தேனே எனதழகா…
பிரியாம இருப்பேனே பகல் இரவா…
உனக்கு வாக்கப்பட்டு…
வருஷங்க போனா என்ன…
போகாது உன்னோட பாசம்…
என் உச்சி முதல் பாதம் வரை…
என் புருஷன் ஆட்சி…
ஊர் தெக்காலத்தான் நிக்கு அந்த…
முத்தாலம்மன் சாட்சி…
எனக்காக பொறந்தாயே எனதழகி…
இருப்பேனே மனசெல்லாம் உன்னை எழுதி…
*********
பாரம்பரியமான ஜவுளிக்கடை. மூன்று குடும்பமும் குழுமியிருந்தது. ஒரு புடவைக்கே தலைகீழாக கடை புரட்டியெடுக்கப்படும். இங்கோ கல்யாணப்புடவை, நிச்சய புடவை, பரிசப்புடவை என்று மூன்று புடவைகளோடு, மற்ற திருமண உடைகளும் எடுக்கவேண்டி இருந்ததால் இன்றைய பொழுது இங்கேயே ஓடிவிடும் எனத் தெரிந்து, ஹோட்டலுக்கு சென்று ஒரு பார்வை பார்த்துவிட்டு ஜவுளிக்கடை வருவதாக அம்மாவையும், தங்கையையும் காரில் அழைத்து வந்தான்.
அதற்கு முன் நல்லநேரத்தில் மாங்கல்யம் எடுத்துவிடுங்கள் என பெரியவர்களை முதலில் நகைக்கடைக்கு அனுப்பி வைத்தான். அதுவரை திருமண ஜோடிகள் சேலை பார்க்கட்டும் என ஏற்பாடு செய்திருந்தான். பரம்பரையாக எடுக்கும் நகைக்கடையில் அம்மாவையும், ஜவுளிக்கடையில் தங்கையையும் இறக்கிவிட்டு ஹோட்டல் சென்றான். அதற்குள் விக்னேஷின் பெற்றொரும், ரகுராமனும் நகைக்கடை வந்திருக்க, கனஜோறாக கல்யாணவேலை ஆரம்பமாகியது.
அகிலாண்டம் தவிர அனைவரும் வந்திருந்தனர். அழகர் அம்மாவை எவ்வளவோ மல்லுக்கட்டி அழைத்துப் பார்த்தான். ஒரேடியாக மருத்துவிட்டார்.
“ஏம்மா, சின்ன வயசுல இருந்து எது ஒன்னுனாலும் அக்கா எடுத்துட்டுதான் எனக்கு கொடுப்பா, அதே மாதிரி புருஷனையும் கட்டச்சொன்னா எப்படிம்மா. என்னயும் நீதான் பெத்தயாம்மா.” என ஆற்றமாட்டாமல் காயத்ரி கேட்க, மகளின் வார்த்தை சுருக்கென தைத்தது. இருந்தாலும் தனது வீம்பில் இருந்து சற்றும் மனம் தளரவில்லை அகிலாண்டம்.
திருமாங்கல்யமும், தாலிச்செயினும் எடுத்தவர்கள் ஜவுளிக்கடை வந்து சேரும்வரைக்குமே இரண்டு ஜோடிகளும் புடவை எடுத்தபாடில்லை. பெரியவர்களும் வந்து இவர்களோடு சேர்ந்து கொள்ள, அப்பொழுதுதான் கௌரியும், அமிர்தாவும் உள்ளே வந்தனர்.
தேன்மொழி மடியில் குழந்தையை வைத்துக் கொண்டு புடவையை ஆராய்ந்து கொண்டிருக்க, வந்தவள் குழந்தையை வாங்கிக் கொண்டாள்.
வீட்டில் வரமறுத்தவளை, “இத்தனை நாளா இல்லாத சொந்தம் இப்பமட்டும் என்ன எனக்கு வேண்டிக்கெடக்கு. எம்பிள்ளைக்கு ஆகாதுனா எனக்கும் ஆகாதுதான். இத்தன நாளா இருந்த மாதிரி நீ யாரோ நான் யாரோன்னு இருந்துட்டுப் போகவேண்டியது தானே” என கௌரி தன்பாட்டிற்கு புலம்ப ஆரம்பிக்க, அம்மாவின் தில்லாலங்கடி நன்கு புரிந்தது மகளுக்கு. வெகுநாட்கள் கழித்து ஒன்று சேர்ந்த சொந்தங்களை விட்டுக்கொடுக்க முடியவில்லை கௌரிக்கும். அம்மாவிற்கடுத்து எல்லாம் எடுத்து செய்தது சித்தி தான். மீண்டும் தம்பியோடு உறவாட ஒரு வாய்ப்பு.
“அமிர்தா நீ கெளம்புற வரைக்கும் இந்த புலம்பல் ஓயாது. எங்களாலயும் கேக்க முடியாதும்மா” மனோகரன் மகளிடம் அழாத குறையாக கூற,
வேண்டா வெறுப்பாக கிளம்ப போனவள், கிளம்பிவந்த கோலத்தைப் பார்த்து கௌரி கணவனுக்கு கண்ஜாடை காட்ட, மனோகருக்கும் மகளின் மனநிலை தெள்ளென விளங்கியது. வெங்காயசருகு கலரில் ப்ளைன் ஷிஃபான் புடவைக்கு, தங்கநிற டிசைனர் ரவிக்கையில், மென்மையான ஒப்பனையில் தயாராகி வந்தாள். வழக்கம்போல் அவளுக்குப் பிடித்த மல்லி கதம்பத்தைக் கொடுக்க, மறுக்காமல் வைத்துக்கொண்டாள்.
கௌதமை உடன் அழைக்க தீபாவளி, பொங்கல் என்றாலே இவர்களோடு படும்பாடு போதுமென்று, “இந்த ஆட்டத்திற்கு நான் வரல” என ஒதுங்கிக் கொண்டான்.
குழந்தைக்கு கைநீட்டிய தோழியை திரும்பிப் பார்த்தவள் அர்த்தத்தோடு சிரிக்க, “உனக்காகவும், உங்க நொண்ணனுக்காகவும் வரல. எம்பிள்ளைக்காக வந்தேன்” என்றவள் பிள்ளையை வாங்கிக் கொண்டு ஒதுங்கி உட்கார்ந்து கொண்டாள். நெசவுத்தறியின் ஊடுநூலாய் சிறுசஞ்சலம் மனதிற்குள் குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கோண்டிருந்தது.
ஒரே இடத்தில் உட்கார்ந்திருக்க, வீடே பரம்படிக்கும் பிள்ளைக்கு கைக்குள் அடங்க முடியவில்லை. கீழே இறக்கிவிடச்சொல்லி சிணுங்க ஆரம்பித்தது. பிள்ளைக்கு வேடிக்கை காட்டவென கடை வாசலுக்கு தூக்கி வந்தாள். சற்று நேரத்தில் காரை பார்க்கிங்கில்விட்டு ருத்ரன் கடைக்குள்வர பிள்ளையும் கையுமாக கடை வாசலில் நின்றவளே கண் நிறைத்தாள். அவளது கழுத்துச்சங்கிலி பிள்ளையின் கையில் சிக்கியிருந்தது. மனம் சிட்டுக்குருவியாய் சிறகடிக்க, கண்கள் மத்தாப்பாய் ஒளிவீசியது. காற்றில் கலைந்த முடியை கையால் கோதிவிட்டபடி வேட்டி சட்டையில் கம்பீரமாக படியேறி வந்தவன்பால் மனம் இழுத்தாலும் வலிந்து முகம் திருப்பிக் கொண்டாள்.
“ஏன் இங்க நிக்கிற?”
“உள்ள அழறா. அதான் வேடிக்கைகாட்டலாம்னு வெளிய வந்தேன்.” உப்புசப்பில்லாமல் வந்தது பதில்.
அப்பனை பார்த்தவுடன் அரிசிப்பல் காட்டி கைநீட்ட, “கொஞ்சம் பொறுடாம்மா. அப்பா உள்ள போய் பாத்துட்டு வந்து தூக்கிக்கறேன்” என கன்னம்கிள்ளி கொஞ்சிவிட்டு அவளிடமே குழந்தையை விட்டுச் சென்றான்.
அவன் உள்ளே வந்ததும் பில்கவுண்டரில் இருந்த கடைமுதலாளி எழுந்து நின்று வரவேற்றார். இவள் வாசலில் நிற்க, ருத்ரன் நின்று பேசிவிட்டு வந்ததைப் பார்த்து,
“நம்ம வீட்டு அம்மாங்களா தம்பி.” என விசாரிக்க சிரிப்போடு தலையசைத்து ஆமோதித்தான். இவளும் திரும்பிப்பார்க்க, அங்கிருந்தே “வணக்கம்மா.” என கைகுவிக்க, சட்டென அவளும் குழந்தையோடு சங்கேஜமாக கைகுவித்தாள். கடைப்பையனை அழைத்து ஒரு சேரை எடுத்து இவளுக்கு வெளியே போடச் சொன்னார். சிலகணங்கள் நின்று அவரிடம் பேசிவிட்டு உள்ளே சென்றான்.
அழகர், தேன்மொழி ஜோடி கண்ணாலே அபிப்ராயம் கேட்டு சேலை தேர்ந்தெடுக்க, காயத்ரி, விக்னேஷ் ஜோடியோ மேலே போட்டுப்பார்த்து, கட்டிப்பார்த்து என சேல்ஸ்மேனை ஒருவழியாக்கி திருமண ஜோடிகள் எடுத்துமுடிக்க, அடுத்து பரிசச்சேலைக்கு வந்தனர்.
இந்த விவரம் கௌரிக்கே புதிதாக இருக்க, ஒருபக்கம் சந்தோஷம் என்றாலும், மகள் என்ன சொல்லப்போறாளோ என மனம் அடித்துக் கொண்டது.
குழந்தை பசிக்கு அழுக, தேன்மொழியிடம் பால்பாட்டிலை வாங்க உள்ளே வந்தாள்.
“பிள்ளையக் கொடுத்துட்டு நீ இங்க உக்காரு தேனு” என அருகில் இருந்த இருக்கையைக் காட்டிவிட்டு பிள்ளையை வாங்கிக் கொண்டாள்.
“நானெதுக்கு தேனு, அதான் எடுத்துட்டீங்கள்ல. போலாமா?” என்றாள்.
“இன்னும் ஒரு சேல எடுக்கணும். அதுக்கு நீ இருந்தாதான் சரியா இருக்கும்.”
“அது யாருக்கு தேனு” என்றவளுக்கும், கௌரியின் முகம் இவளையே பார்க்க உள்ளுக்குள் குறுகுறுத்தது.
தோழியின் கையை வாஞ்சையாகப் பற்றியவள், “அது என் ஃப்ரெண்டுக்கோ, என் உறவுக்காரிக்கோ இல்ல அமிர்தா. என்னோட வருங்கால அண்ணிக்கு” என்று கூறியவள் கண்கள் பனிக்க அண்ணன் பக்கத்தில் தோள்பிடித்து அழுத்தி உட்காரவைத்தாள். வாய்திறந்து அவசரமாக ஏதோ சொல்லி எழப்போனவளை,
“மறுத்து ஏதும் சொல்லிராத அமிர்தா. எங்க எல்லாரோட சந்தோஷமும் உங்க கல்யாணத்துல தான் இருக்கு” எனக்கூற, தேன்மொழியின் இடுப்பிலிருந்த பிள்ளை அவளது பூச்சரத்தை இழுத்து சிரிக்க, மறுத்துப் பேசமுடியாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டாள். தோழியின் குணம் அறிந்தவள் அவளை பேசவே விடவில்லை. மற்றவர்களுக்காக என்றால் தன்னைப்பற்றி சிந்திக்கமாட்டள் எனத்தெரியும்.
தம்பி உடையான் மட்டுமல்ல, இந்த மாதிரி தங்கை உடையானும் படைக்கு அஞ்சத்தேவை இல்லை என தங்கையின் சாமர்த்தியம் பார்த்தவன் மனதிற்குள் மெச்சிக்கொண்டான்.
வீட்டிலிருந்து கிளம்பும்பொழுதே, “தேனு, அவள எவ்வளவுக்கெவ்வளவு பேசவிடாமப் பண்றோமோ அவ்வளவுக்கு நல்லது” என தங்கையிடம் சொல்லித்தான் அழைத்துவந்தான். அண்ணன் கூறியதை தங்கை வழிநடத்தினாள்.
“வருவாளா ண்ணா?” என சந்தேகமாகக் கேட்டவளிடம்”
“கண்டிப்பா வருவாம்மா!” என அடித்துக் கூறியிருந்தான்.
புடவைகளை எடுத்துப் போட, அவன் கைவைத்த புடவைக்கு அவள் கண்காட்டிய ஜாலம் பார்த்தே பல புடவைகளை ஒதுக்கிவிட்டு, பரிசச்சேலை என்பதால் அகலம் குறைந்த ரோஜாவண்ண பார்டர் கொண்ட பசுமஞ்சள் வண்ணத்தில் மென்பட்டு சேலை ஒன்றைத் தேர்ந்தெடுத்து அவள் முகம் பார்க்க சட்டென முகம்வெட்டித் திருப்பிக் கொள்ள, அதையே தேர்ந்தெடுத்தான்.
உணவு வேளை கடந்துவிட்டது. அதுவரை கடைக்காரர்கள் கொடுத்த குளிர்பானம், டீ, காஃபியில் வயிறு நிறைத்தவர்கள், ஜவுளி எடுத்து முடித்தவுடன் சாப்பாட்டிற்கு அவரவர் காரில் பாண்டியனது ஹோட்டலுக்கே வந்தனர். மாடி தளத்திற்கு சென்றனர். காலையில் ஹோட்டல் வந்தவன் சாப்பாட்டை ஹாட்பாக்சில் எடுத்துவைக்கச் சொல்லியிருந்தான்.
பெரியவர்கள் எல்லாரும் ஒருபக்கமாக அமர்ந்து கொள்ள, மற்ற இரு ஜோடிகளும் தனித்தனி கேபின் தேடி ஒதுங்கிக் கொண்டனர். சின்னஞ்சிறுசுக என பெரியவர்களும் கண்டுகொள்ளவில்லை.
சமையல்கட்டு சென்ற அமிர்தா, கிண்ணத்தில் அடிசாதத்தை எடுத்துப் போட்டு தயிர்விட்டு குழையப் பிசைந்து எடுத்துக்கொண்டு மேலே வந்தாள். மற்ற இருக்கைகளும் நிறைந்திருக்க, அலுவலக அறைக்கு குழந்தைக்கு ஊட்ட வந்துவிட்டாள். மேலே வெட்டவெளி என்பதால் வேடிக்கைகாட்டி ஊட்டிக்கொண்டிருக்க, சிப்பரில் தண்ணீர் எடுத்துக்கொண்டு ருத்ரனும் மேலே வந்தான்.
முன்பசிக்கு நான்கு வாய் ஆவலாக வாங்கிய பிள்ளை அடுத்து சாப்பிட மறுத்து விளையாட்டுக்காட்ட, கெஞ்சி, கொஞ்சி, மிரட்டி, அதட்டி… இடுப்பில் வைத்துக் கொண்டு பிள்ளையோடு சாப்பாடு ஊட்ட மல்லுக்கட்ட, அதை சிரித்தமுகமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.
ஊட்டிமுடிக்க, தண்ணீர் தொட்டு இவனே முகம் துடைத்துவிட்டவன், பிள்ளையை வாங்கிக்கொண்டு அவளை கைகழுவ அனுப்பினான். அவள் கருமமே கண்ணாக இருந்தாலே ஒழிய இவனை கண்டுகொள்ளவில்லை.
மென்மையான துணி கொண்டு பிள்ளையின் முகம் துடைத்துக் கொண்டே, அவளைப் பார்த்தவன், “வேற மாப்பிள்ள பாக்கச்சொன்னியாமே?” என கேட்க, அதைக் காதிலே வாங்காதவள் போல் பிள்ளையை வாங்கிக்கொண்டு கீழே இறங்க எத்தனிக்க,
“அமிர்தா நில்லு.” அதிகாரமாக ஒலிக்கவில்லை எனினும் அழுத்தமாக ஒலித்தது குரல்.
“இப்ப உங்களுக்கு என்ன வேணும். அதுதான் உங்க இஷ்டத்துக்கு பரிசத்த முடிவு பண்ணிட்டீங்கள்ல. அப்பறமென்ன?” திரும்பாமலே பதில் கூற,
“அமிர்தா… திரும்பிப்பாரு.” என தோள்தொட்டு திருப்ப, தோளைக்குலுக்கி கையை உதறிவிட்டு திரும்பினாள்.
“முதல்ல உக்காரு.” என சோஃபாவிற்கு இழுத்துவந்து அமரவைத்தவன், அருகில் அமர்ந்து கொண்டான். பிள்ளையை வாகாக மடியில் அமர்த்திக் கொள்ள, மார்பில் சாய்ந்து கொண்டது.
“ஆம்பளைங்க எப்பவுமே ஆரம்பத்துல குழம்புவோம் அமிர்தா. ஆனா முடிவு எடுத்தப்பின்னாடி நிலையா நிப்போம். பொண்ணுக எப்பவும் ஆரம்பத்துல தெளிவா இருப்பீங்க. ஆனா அதுக்கு பின்னாடி குழம்புவீங்க. நான் தான் வேணும்னு முடிவா இருந்த நீ, பின்னால வர்ற பிரச்சினையப் பத்தி சொல்லவும் நம்ம மேல குழந்தைக்கு பாசம் வராதோ, நம்மால குழந்தைய சரியா வளக்க முடியாதோன்னு பயந்து குழம்பிட்ட. ஆனா நான் நம்ம சொல்லிக்கொடுக்கறது தானே நம்ம பிள்ளைக்கு, எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்னு துணிஞ்சுட்டேன்.”
“சின்ன வயசுல ஒரு கதை படிச்சிருக்கோம். ஒரே மாதிரியான மூனு சிலைய காட்டி எந்த சிலை சிறந்ததுனு கேப்பாங்க. ஒரு குச்சிய காதுவழியா விட்டுப்பாத்தா வாய்வழியா வர்ற சிலை ஒன்னு, குச்சிய இந்தக்காதுல வாங்கி, அடுத்து காதுல விடுற சிலை ஒன்னு, எந்தப் பக்கமும் வராம உள்ளேயே வச்சுக்குற சிலை ஒன்னுனு இருக்கும். அதுல குச்சி எந்தப் பக்கமும் வெளிவராத சிலைதான் பெஸ்ட்னு சொல்லிக் கொடுத்தாங்க. ஏன்னா அதுதான் எதையும் வெளிவிடாம, மனசுக்குள்ளேயே வச்சுக்குமாம். ஆனா, என்னப் பொருத்தவரைக்கும் இந்தக்காதுல வாங்கி அந்தக்காதுல விடுற சிலைதான் பெஸ்ட்டுனு சொல்லுவேன். அகிலாண்டம் அத்தை மாதிரியான சொந்தபந்தங்களுக்குள்ள இவன் என்ன சொல்லுவான், அவன் என்ன சொல்லுவான்னு அடுத்தவனப்பத்தி யோசிக்காம யாரு எது சொன்னாலும் இந்தக்காதுல வாங்கி அந்தக்காதுல விட்டுட்டு, நமக்கு சரின்னு பட்டத செஞ்சுட்டுப் போகணும் அமிர்தா. எல்லாத்தையும் மனசுக்குள்ள வச்சு புழுங்கினா தலைவலி தான் மிஞ்சும்.”
“ஒரு நாள்ல வந்த ஞானமா இது.”
“இல்ல… இதுவரை எனக்கிருந்த அழுத்தத்த உன்கிட்ட இறக்கிவச்சப்பின்னாடி வந்த தெளிவு இது. சில விஷயங்கள இன்னொரு சிலை மாதிரி வாய்விட்டு பேசிட்டாலே குழப்பம் தீந்திரும். இதுல இப்ப மூனாவது சிலைதான் நீ. நான் சொன்னது எல்லாம் மண்டைக்குள்ள ஏத்தி வச்சுட்டு குழம்பிட்டு இருக்க. இந்தக்கதையில மூனு சிலைல எது பெஸ்ட்டுனு யோசிக்காம சில விஷயங்கள இந்தக்காதுல வாங்கி அந்தக்காதுல விட்டுறணும், சிலர்கிட்ட மனம்விட்டுப் பேசணும், நாம சொல்றத காது கொடுத்து அமைதியா கேட்கவும் நமக்குன்னு ஒருத்தர் வேணும்னு சொல்ற மாதிரியும் எடுத்துக்கலாம். இந்த சிலை கதையிலகூட பாரேன் மூனும் பொம்பளைங்க சிலைதான்.” எனக் கூறிவிட்டு புன்னகைக்க, அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தவள்,
“இன்னொரு மூனு சிலையப்பத்தி மறந்துட்டீங்களே? தீயதைப் பார்க்காதே; தீயதைப் பேசாதே; தீயதைப் கேட்காதேனு இருக்குமே. அதுல ஆம்பளப்புத்தி அடிக்கடி மாறும் குரங்கு புத்தினுதான் சிம்பாலிக்கா குரங்க வச்சுருக்காங்க” என உதடு சுழித்து கூறியதைக் கேட்டு மந்தகாசமாய் கண்சுருங்க வாய்விட்டுச் சிரித்தான்.
“ஆமா… என்ன தைரியத்துல பரிசம்போட முடிவு பண்ணீங்க? நான் அம்மாகிட்ட வேற மாப்பிள்ளை பாக்க சொன்னதுனால அவசரமா எடுத்த முடிவா இது?’
“ம்ம்கூம்ம்.”
“அப்பறம்?”
“பொம்பளைங்க பேச்சுக்கு வேற அர்த்தம் இருக்குங்குற தைரியத்துல எடுத்து முடிவு.”
“அப்படியென்ன புதுசா அர்த்தத்தை கண்டுபிடிச்சீங்களாம்.”
”வேணும்னா வேண்டாம்னு அர்த்தம். வேண்டாம்னா வேணும்னு தான் அர்த்தம். நீதான் பொண்ணு கேட்டு வரக்கூடாதுனு சொன்னியாமே. அப்ப வரணும்னு தான அர்த்தம். புடவை கூட நீ வேண்டாம்னு முகத்த திருப்பினதத்தான் செலக்ட் பண்ணினேன்.” என்றவன் புருவம் உயர்த்தி சரியா என அவளது அபிப்ராயம் கேட்டவனிடம், உதடு சுழித்து கொக்காணி காண்பிக்க, கண்ணடித்து வாய்விட்டு சிரித்தான்.
காலையிலிருந்து அலைந்த அலுப்பில், வயிறு நிறைந்த மயக்கத்தில் கண் அயர்ந்திருந்தது மடியில் இருந்த பிள்ளை.
“பிள்ளையக் கொடு. கீழ போலாம்” என பிள்ளையைத் தூக்க வர,
“வேண்டாம்… அவளே கோழித்தூக்கம் மாதிரி கொஞ்ச நேரம்தான் தூங்குவா. அரைகுறை தூக்கத்துல எழுந்தான்னா சும்மா நை நைனு அழுவா. நீங்க போய் சாப்ட்டு வாங்க. இவ எழுந்ததும் நான் சாப்ட்டுக்கறேன்.” என்றதும் கீழே சென்றவன், சாப்பாடு எடுத்து மேலே வந்தான்.
“நீ எந்திருச்சா தானே தூக்கம் கலையும். பயங்கற பசில இருக்கேனு தெரியுது” என்றவன், அவள் அருகில் அமர்ந்து தட்டிலிருந்து சோற்றைப் பிசறி வாயருகே கொண்டு போக,
“கதை சொல்லிக்கிட்டேதான ஊட்டுவாங்க. நீங்க சொல்லிமுடிச்சுட்டு ஊட்டுறீங்க” என எகத்தாளம் பேசிவிட்டு மறுக்காமல் வாய் திறந்தாள். சாப்பிட்டவாக்கிலேயே குமரியின் பார்வை அவன் முகத்திலேயே நிலைத்திருந்தது. ஒவ்வொரு வாய்க்கும் அவனது விரல்நுனி அவள் இதழ் தீண்டிவர, வீணைத்தந்தியின் மெல்லிய அதிர்வு அவன் விரல்களில். சுதிகூட்டும் மத்தளத்தின் அதிர்வு அவளது இதயத்துடிப்பில். மெதுவாக கன்னியின் காதோராம் சூடேற, முகத்தை நிமிர்ந்து பார்க்கவில்லையே ஒழிய ஆடவன் விழியோரம் செவ்வரி ஓடியது.
கண்மூடி ஒருகணம் மூச்சை இழுத்துவிட்டவன், “இப்ப நீ தான ஆம்பள மனசு குரங்கு மாதிரினு சொன்ன” என்றான் முகம்பார்த்து ஊட்டிக்கொண்டே.
“அதுக்கு.” சாப்பாட்டை வாங்கிக் கொண்டே கேட்க,
“சாப்பாட்டை மட்டும் சாப்பிடு.” என்றான் பூடகமாக.
“க்க்கும்.” என சிலிப்பிக்கொள்ள… தண்ணீர் டம்ளரை எடுத்துக் கொடுத்துவிட்டு எழுந்துகொண்டவன்,
“குட்டிம்மா சமத்தா சாப்பிட்டு முடிச்சதும் இப்படித்தான கொடுத்த?” என கேட்டுக் கொண்டே,
சட்டென்று குனிந்து இச்சென்று தனது அச்சாரத்தை குமரியின் கன்னத்தில் முதன் முறையாக அழுத்தமாகப்பதிக்க, பட்டென பருத்திக்காயாய் வெடித்து விரிந்தன வேள் விழிகள்.
மொத்த முத்தம் எட்டு வகையாம். இதில் பட்டும் படாமல் முதல்வகை முத்தம் அச்சாரம் போட்டு முகவுரை தொடங்கினான்.
